Skip to Content

07 . பாகம் - 7

  1. ஆதாயம், இலாபம், பொருள் நம் இலட்சியத்தை இன்று நிர்ணயிக்கின்றன. இது மாறி, இலட்சியம் இவற்றை நிர்ணயிக்கும் நிலைமை ஏற்பட்டால், அன்னையை நாம் வாழ்வில் ஏற்றுக் கொள்வதாகும். இதற்கு முதற்படியாக இலாபத்தைக் கொண்டு இலட்சியத்தை நிர்ணயிப்பதை விட்டுவிட வேண்டும்.
     
  2. ஆன்மா, ஜடப் பொருளை நிர்ணயிப்பது முடிவு.அதற்கு முன் ஆன்மா, மனத்தை நிர்ணயிக்க வேண்டும். ஆன்மா வாழ்வின் செயலை நிர்ணயிக்கும் இலட்சியத்தையடைய, ஆன்மா எண்ணத்தை நிர்ணயிப்பதும், செயல் ஆன்மாவைக் கட்டுப்படுத்தாததும், முதற்படிகள் ஆகும்.
     
  3. இந்தத் தத்துவம் வாழ்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டுமானால்,

    மனைவி, கணவனை அதிகாரம் செய்யக்கூடாது,

    மேலதிகாரியைத் தன் கைக்குள் வைக்க நினைக்கக்கூடாது,

    உரிமையில்லாததை மனம் விழையக்கூடாது,

    அடுத்தவர் கண்ணோட்டத்தில் பிரச்சினையைப் புரிந்துகொள்ள வேண்டும்,

    தந்திர யுக்திகளைப் பயன்படுத்தக் கூடாது.
     
  4. பிறர் வாழ்வு மலர, தன்னை விட்டுக் கொடுப்பது அர்ப்பணம். தன் அதிகாரமும் செல்வாக்கும் அதிகப்படுவதை மனிதன், முன்னேற்றம் என இன்று கருதுகிறான்.

    இறைவன் மனித வாழ்வில் மலர்ந்து வெளிப்படுதல் அவசியம் என மனிதன் உணர வேண்டுமானால், தன்னுடைய சொந்த அபிப்பிராயங்களை ரசிக்கும் பழக்கத்தைத் தான் விட்டுவிட வேண்டும் என அவன் அறிய வேண்டும்.
     
  5. எந்தக் கட்டத்தில் மேற்சொன்னது இன்பமாக இருக்கிறதோ அங்கு மனிதனுடைய செயல் அர்ப்பணமாகிறது. அதுவரை மனிதன் அதைத் தியாகம் என நினைக்கின்றான்.
     
  6. அன்னையை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளம், மனிதன் தன் புனித எண்ணங்களையும், தான் போற்றும் பண்புகளையும் அர்த்தமற்றவை எனவும், தடை எனவும் உணர்தலாகும். பிரியம், விஸ்வாசம், நேர்மை ஆகியவை சிறிய மனித எல்லைக்குள் இருக்கும் குணங்கள் என அறிவது, அன்னையை நாம் நெருங்குவதாகும். மிகவுயர்ந்த பண்புகளும், மனிதன் அன்னையை முழுவதும் அடைவதைத் தடுக்கும் என்பதே உண்மை என்றாலும், இன்றுள்ள மனிதன் தன் சிறு ஆசைகள் முழுவதையும் திருப்தி செய்வதிலேயே முனைந்துள்ளான்.
     
  7. குழப்பம், சந்தேகம், பூர்த்தியாகாத ஆசை, வர்மம், அறிவுத்தாகம் ஆகியவை மௌனம் நிரந்தரமாவதைத் தடுக்கும். அவற்றை அனுபவித்துத் தீர்த்துவிட வேண்டும், அல்லது மன உறுதியால் விலக்கிக் கரைக்க வேண்டும்.
     
  8. சிறு வயதிலும் பெரும்பாலோர்க்கு ஆர்வமிருப்பதில்லை. உயர்ந்த ஆசையை இலட்சியமென பலர் கருதுகின்றனர். இளமை தாண்டினால் பலருக்கு ஆசையும் இருப்பதில்லை. நடுத்தர வயது அடைந்தபின், மனம் அசை போடுவதை மட்டும் மேற்கொள்ளும். அது வளர்ந்து வயது முதிர்ந்தபின் மனிதனைப் பிடித்து உலுக்கும்.
     
  9. அப்படிப்பட்ட மனிதனுக்கு ஆர்வம் உண்டாக்குவது இறந்தவனைப் பிழைக்க வைப்பது போன்றதாகும். வாழ்க்கை வாழ்வதற்கு ஆர்வம் தேவையில்லை. நம்பிக்கை, பொறுமை, நேர்மை, ஒருநிலைப்படுதல், பக்தி ஆகியவை பட்டியலில் வருவது ஆர்வம். சாதாரண மனிதன் வாழ்வில் இவையிருப்பதில்லை.
     
  10. நாலு பேர் வெட்கப்படுதலுக்குரிய காரியத்தை, மீறிச் செய்பவர்கள் உண்டு. வெட்கத்தை மீறும் அளவுக்கு அக்காரியத்தை அனுபவிப்பதில் சந்தோஷமும், மனதிற்குள் பெருமையும் ஏற்படுவதால் மனிதன் அது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறான். இது சிற்றின்பம். தெய்வத்தை மனம் நாடும் பொழுது, அது போல் வெட்கத்தை மீறி மனிதன் செயல்படுவதுண்டு. அந்த வெட்கமே அவனுக்குப் பெருமையளிக்கக் கூடியதாகவும் இருக்கும். வெட்கத்தை, ஆனந்தமான பெருமையாக்கும் திறன், பக்தியின் உச்சகட்டத்தில் ஏற்படும்.
     
  11. பெரிய மகான்களை அண்டியிருந்தவர்கள் தங்கள் குறைகளைப் பற்றி "நான் பெரியவர் திருவடியிலிருந்தேன். ஒன்றிரண்டு கறுப்புப் புள்ளி இருக்கலாம்" என்பார்கள். உண்மை வேறு. அருகிலிருப்பதால் மனிதன் மாறுவதில்லை. அதையே வேறு வகையாகச் சொல்லலாம். "பெரியவர் பாதத்திலேயே இருந்ததால், ஓரிரு துளி ஒளி உற்பத்தியாகியுள்ளது" எனலாம்.
     
  12. புதுமை உள்ளே எழுவதால், புத்துணர்ச்சி பொங்கி எழுகிறது.
     
  13. நோக்கம் என்பதே மனிதன். ஞானம், பக்தி, செயல் சேருமிடத்தில் மனிதனுக்கு நோக்கம் பிறக்கின்றது என்பதால் பகவத் கீதை நோக்கத்தைச் சரணம் செய்யச் சொல்கிறது.
     
  14. மனத்தைப் பிடித்து உலுக்கும் எண்ணத்தை (preoccupation) விடாமல், ஒருநிலைப்படுதல், சமர்ப்பணம், சரணாகதி, ஆர்வம் ஆகியவை நிரந்தரமாக நிற்காது. நாமே உவந்து அதை விடுவது கடினம். உயர்ந்த எண்ணத்தை ஏற்று, அங்கு மனம் நிலைத்தால், உலுக்கும் பேயின் ஆட்டம் குறையும்.
     
  15. இறைவனின் செயலை ஸ்பர்சிக்கும் சைத்திய புருஷனின் உணர்வு, நன்றியாகும்.
     
  16. புதுமை பொங்கி, உணர்வைக் கடந்தால் நிறைவு ஏற்படும். வெளியிலிருந்து அது வந்தால் தற்காலிகமாகவும், உள்ளிருந்து எழுந்தால் நிரந்தரமாகவுமிருக்கும்.
     
  17. வெளியிலிருந்து ஒரு நிகழ்ச்சி மூலம் வரும். உள்ளிருந்து வரும்பொழுது ஓர் இலட்சியம் அல்லது தெய்வீக ஆர்வத்திலிருந்து வரும்.
     
  18. நிறைவு செறிந்து வளமான உணர்வு தோன்றும்.
     
  19. ஆன்மாவை வாழ்வில் அறிந்தாலும், வாழ்வை உள்ளே கண்டாலும் அது பரம்பொருள் வெளிப்படும் தருணம். அதுவே ஆன்மீக நிறைவு.
     
  20. வளர்ச்சிக்குத் தேவையானது போக அதிக சக்தி குழந்தைகளுக்கும், வாலிபர்களுக்கும் உள்ளிருந்து உற்பத்தியாவதால், அவர்கள் உடல் அளவில் ஒரு நிறைவு பெறுகிறார்கள். தொடர்ந்து வெற்றி பெறுபவர் ஒருவர், தமக்குத் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளிலிருந்து தமக்குத் தேவைக்கு மேல் பெறுவதால், மனநிறைவு பெறுகிறார். புதிய கருத்து மனதில் தொடர்ந்தேற்பட்டால், பழைய மனநிலைகள் அதில் மூழ்கி, புத்துணர்ச்சி எழுகிறது.
     
  21. மனிதனின் நிலைகள் பல. மேலெழுந்த மனத்திலும், ஆழ்ந்த உணர்விலும், சூட்சும உடலிலும், உணர்விலும், உடலிலும், காரண தேகத்திலும், அகந்தையிலும், சைத்திய புருஷனிலும், புருஷனிலும், ஈஸ்வரனிலும் மனிதன் நிலைபெற்றிருக்கிறான். இந்த எல்லா நிலைகளிலும், அன்னை இருக்கின்றார். நம் அழைப்பின் திறனுக்கேற்ற நிலையிலிருந்து அன்னை பதிலளிக்கின்றார். ஆழ்ந்த நிலைக்குப் போன பின்னும், மேல்மனத்தின் பழக்கம் அங்கும் வருமானால் அந்தக் குறையால், அழைப்பின் திறன் குறையும்.
     
  22. தெய்வம் உலகை நாடி வரும் பொழுது, ஞானம் அஞ்ஞானமாகிறது. மனிதன் தன்னை உணர்ந்து இறைவனை நோக்கிச் செல்லும் பொழுது, அஞ்ஞானம் ஞானமாகிறது.
     
  23. தன்னையறிந்த நிலையில் இவையிரண்டையும் புரிந்து கொள்ள முடியும். மனோமய புருஷனை அறிந்தாலும், ஜீவாத்மா சித்தித்தாலும், இந்நிலைகளை அறிய முடியாது. அவை சலனமற்றிருப்பதால், இவற்றை வெளிப்படுத்துவதில்லை. நம் அனுபவத்தின் சாரத்தை சேர்க்கும் சைத்திய புருஷனே இவற்றை அறிவான்.
     
  24. துக்கமான சூழ்நிலையில் சந்தோஷமாக இருப்பது மனத்தைப் புண்படுத்தும். துக்கமும், சுகமும் எதிரெதிரான உணர்வுகள், மனிதனுக்கு மட்டும் உரியவை. மனித சூழ்நிலை ஒன்றை அனுமதிக்கும், அடுத்ததை அனுமதிக்காது. சைத்திய புருஷனுக்குத் துக்கமில்லை; உடல் உணர்வின் சந்தோஷமும் அதற்கில்லை. துக்கமான சூழ்நிலையில் சைத்திய புருஷன் அமைதியாகவும் இனிமையாகவுமிருப்பான். பொருத்தமற்ற சந்தோஷத்தை வெளிப்படுத்தமாட்டான்.
     
  25. மேலெழுந்தவாரியான மனம் :

    எண்ணம், உணர்வு, செயலனைத்தும் மேல்மனத்தைச் சார்ந்தவை. நாம் மேலெழுந்தே வாழ்கிறோம். உடலும் அதற்குரியதே.
     
  26. எண்ணம், உணர்வுக்குரிய சூட்சுமப் பகுதியுண்டு. அவை சூட்சும வாழ்வுக்குரியவை. சூட்சும வாழ்வு, ஆழ்ந்த வாழ்விலிருந்து வேறுபட்டது. எண்ணம் சூட்சுமமானதானாலும், அதற்கு ஸ்தூலமான பகுதி, சூட்சுமமான பகுதி என இரண்டுண்டு.
     
  27. கரணங்களுக்குரிய நிறைவு, பூரண நிறைவாகாது.பரம்பொருள் மட்டுமே சிருஷ்டிக்கு முன் நிறைவுடையவன். நாம் தேடும் நிறைவு அதைவிடப் பெரியது. அது சிருஷ்டியிலுள்ள நிறைவு.
     
  28. தெய்வீக அன்பாலும், சரணாகதியாலும் பெறக்கூடியது அது.
     
  29. ஜபம் வாயால் உச்சரிக்கப்படுவது. ஜபத்தை மேற்கொள்பவர்கள் உடலின் நிலையிலேயே இருக்க வேண்டும். மந்திர சக்தி உணர்ச்சியைத் தொட்டால் அது ஆர்வமாகும். மந்திரத்தின் உட்பொருளை மனம் உணர்ந்தால், உலகை ஆளும் ஜடசக்தியை மனம் எட்டும். அதனால் சொல்லால் சொல்லப்பட்டது உடனே நிகழும். ஜடத்தின் பிடியிலிருந்து மனத்தை விடுவிக்கும் முறை இது. (மனமும், உணர்வும் திருவுருமாற்றம் அடைந்தபின், உடலை மாற்ற, அன்னை, மந்திரத்தை மேற்கொண்டார்).
     
  30. "பராமுகமாக இருக்கும் தன்மையை வாழ்வு இழக்க ஆரம்பித்துவிட்டது'' என்கிறார் அன்னை. சிறு நல்ல காரியம் பெரும் பலனையும், சிறு தவறுகள் பெரிய விபத்துகளையும் உற்பத்தி செய்கின்றன. முன்னே செல்லாவிட்டால் நாம் உள்ளதை இழக்க நேரிடும் என்று அறிவோம். ஒரு நிலையின் (plane) ஆரம்ப கட்டத்தில் நல்லது, கெட்டது, இடைப்பட்டது என மூன்று பிரிவுகள் இருக்க முடியும். கடைசிக் கட்டத்தில் நல்லதாகவோ, அல்லது கெட்டதாகவோ மட்டும் இருக்கலாம். இடைப்பட்ட நிலை என்பதில்லை. திருமணம் செய்து குடும்பத்தை நடத்தி சமூகத்தின் பகுதியாக இருக்க வேண்டும், அல்லது ஒதுக்கப்பட வேண்டும். இடைப்பட்ட நிலையில்லை.
     
  31. இறைவனே கதி என்பவர்கள் சில நிமிஷம் அழைத்தாலும் பெரும் பலனுண்டு. அந்நிலையை அடைய தன்னுள் உள்ள இறைவனை அடைய வேண்டும். மேலெழுந்த நிலையில் அது போன்ற அழைப்பு எழாது. இறைவனே கதி எனவும் தோன்றாது.
     
  32. ஜடப்பொருளைவிட, பொருள் (substance) திண்மை வாய்ந்துள்ளது. வாழ்வுக்குப் பராமுகமாக இருக்க முடிவதில்லை. சத்தியஜீவியம் செயல்படுவதன் அறிகுறிகள் இவை. சாந்தி பொன்னிறம் பெற்றது. தனித்தன்மை நிர்வாணம் எய்தியது.
     
  33. கட்டுக்கடங்காதது கட்டுப்பட்டால் நிறைவேற்றப்படும். சிறிய ஆசைகளை நாடிச் செல்வதை விட்டொழித்தால் நிறைவு தேடி வரும். அடியிலுள்ள துவாரத்தை அடைத்தால், நம் நிலை நிறைகிறது. பின் நிறைவுக்குச் செறிவும் வேகமும் வரும்.
     
  34. புலன் வழி செல்லும் சக்தியை நிறுத்தி, சுத்தம் செய்து ஞான யோகமும், ராஜ யோகமும் செயல்படுகின்றன. அப்படிக் குவியும் ஏராளமான சக்தி, தூய மனத்தை, தூய ஆன்மாவை நாடச் செய்கிறது.

    பூரணமான தியான நிலை, முழுமையான விழிப்பு, அகந்தை அழிதல், பூரணயோகத்தின் அடிப்படை இவையனைத்துக்கும் பூரணம் உண்டு.

    நமக்கு முன்னுள்ள நிலையில் செயல்படாவிட்டால், விரயம் தவிர்க்கப்படும். இதனால் நாம் உள்ள நிலையில் நிறைவு சேரும். அது போல் சேர்ந்த சக்தியை தூய்மைப்படுத்தினால் நிறைவு வளம் பெறும். அதற்கு, சமர்ப்பணமும், சரணாகதியும் உதவும். நிறைவு செறிந்து வளம் பெற்றால் அடுத்த நிலையை எய்த உதவும். எனவே நிறைவு, வளம், தீவிர ஆர்வம் ஆகியவை பூரண யோகத்தின் பகுதிகள்.
     
  35. இதுவே மனிதனின் பங்கு.அதை அவன் செய்வதில்லை; செய்ய முன்வந்தால் திணறுகிறான். அன்னை இங்கும் உதவுகிறார். அன்னையை அழைத்தால், அழைப்பில் நிறைவு, வளம், தீவிரம் கலந்து உள்ளன. அழைப்பு யோகத்தைத் தன்னுள் அடக்கியது. இது மேலெழுந்த மனத்திலிருந்து எழுவது. அகந்தையை மீறி எழ வேண்டியிருப்பதால் முயற்சி தேவைப்படுகிறது. அழைப்பு கனிந்து, உள்ளே ஆழத்திற்குச் சென்று, அங்கிருந்து தானே மெதுவாக எழும். அது முழுமையான அழைப்பு, உயர்ந்த சமர்ப்பணம். அதன் தீவிரத்தால் அது சத்தியஜீவியம் ஆகிறது. தீவிரம் அதிகமாகும் பொழுது உள்மனம், சூட்சும மனம், அடிமனம், ஆழ்ந்த மனம் ஆகியவற்றை அது எட்டுகிறது.

    வேறு வகையாகச் சொன்னால், மேலிருந்து, உள்ளே சைத்திய புருஷனை நாடிச் சென்று, அங்கிருந்து உயர்ந்து ஆன்மீக நிலைகளை எட்டுகிறது.

    அதையே மனம், உணர்வு, உடல் எனவும் சொல்லலாம். ஒவ்வொரு நிலைக்குரிய ஜீவியத்திற்கும் பொருள் உண்டு. எனவே, உடலின் பொருள் (substance) கடைசி நிலையாகும்.

    ஒவ்வொரு நிலையிலும் முதல் நிலையின் சிரமம் சற்று அதிகமாகும். Agendaவில் அன்னை உடலின் ஜீவியத்திலிருந்து, உடலின் பொருளைத் தாம் அடைந்ததை விவரிக்கின்றார்.
     
  36. சக்தியை விரயம் செய்வது எல்லா நிலைகளுக்கும் உண்டு. உடலில் உணர்வு என்பது போல் மனத்திற்கு எண்ணமுண்டு. எதிர்பார்க்கும் எண்ணமும், அவசரமும் அதற்குச் சமமானவை. உடல் உணர்வைக் கட்டுப்படுத்த, எண்ணத்தின் பொறுமையின்மையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
     
  37. "திறமையான வேலை  யோகமாகும்''  
    திறம்பட வேலை செய்தால் செயலில் நேரடியாக ஞானம் பிறக்கும்.
    "நேரடியான ஞானம் செயலில் மறைந்துள்ளது''
    அறிவைச் சரியாகப் புரிந்து  
    கொண்டால், ஜோதி, நேரடி
    ஞானமாக மாறும்.
     
    புலன்களால் சிதைக்கப்படாத
    பகுத்தறிவு நேரடி ஞானமாகிறது.
    "பூரணனுக்குரிய சொல்
    ஜோதி. நேரடியான ஞானம்
    ஜோதிமயமானது''
    பகுத்தறிவு, புலன்களிலிருந்து
    விடுபட்டால் அதன் மூலம் பூரணத்
    திறமை பூரண ஞானமாகும்.

     
  38. வேதாந்தம் செயலின் நேரடி ஞானத்தையும் பூரணனின் ஞானத்தையும் இணைக்க முயல்கிறது.
     
  39. மனம் அழிந்துவிட்டது. பழைய பழக்கம் வந்தால் மனம் மீண்டும் வருகிறது என்கிறார் அன்னை.

    நாம் செய்வது நாமுள்ள நிலையை நிர்ணயிக்கும்.

    சிந்தித்தால் மனத்தால் செயல்படுகிறோம்.

    உணர்ந்தால், பிராணன் நமது மையம்.

    சிந்தனை நின்றால், நாம் மனத்தைத் தாண்டுகிறோம். எல்லா வகையான எண்ணங்களும் அழிய வேண்டும், திருஷ்டி உள்பட அழிதல் அவசியம்.
     
  40. எண்ணத்தை அழித்தால், மனம் அழியும். மனம் அழிந்தால் ஜீவியம் முன்வரும். பரப்பிரம்மத்தை அடைய முயல்பவர் தோற்றம், அதனுள் உறையும் சக்தி ஆகியவற்றைக் கடந்து செல்ல வேண்டும். அவற்றின் அடிப்படையான பொருளை (substance) அதன் அமைப்பிலிருந்து (structure) விடுவிக்க வேண்டும். இதை மனம், ஆன்மா மூலம் செய்தால் சிருஷ்டிக்கு முன்னுள்ள பரம்பொருளை அடையலாம். சத்தியஜீவியம், ஈஸ்வரன் மூலம் இதையே செய்தால் சிருஷ்டியிலுள்ள பரம்பொருளை அடையலாம்.
     
  41. சிருஷ்டியிலுள்ள பரம்பொருளும், அதற்கு முந்தைய நிலைக்குரிய பரம்பொருளும் வேறல்ல. காலத்தால் அவை பிரிக்கப்பட்டவையல்ல. ஒன்றில் மற்றதுள்ளது. வெவ்வேறு பார்வைக்கு வேவ்வேறாகக் காட்சி அளிக்கிறது. அதனால்தான் நம் பார்வையை மாற்றினால், ஜடம் திருவுருமாறும் என்கிறார்.
     
  42. மனத்திலிருந்து சைத்திய புருஷனுக்குப் போவது என்பது, ஆசையால் பீடிக்கப்பட்டவன் அதை மீறி வந்து அதன் பலனைச் சிந்திப்பது போலாகும்.
     
  43. நாம் கேட்பதை, தாங்கள் மகிழ்ந்த பொழுது தெய்வங்கள் நமக்கு வரமாக அளிக்கின்றன. பிரம்மம் தன்னிடமிருந்து எதையும் மனிதன் தன் திறமையால் பெறுவதை அனுமதிக்கிறது. அன்னை, நம்மால் பெற்றுக் கொள்ள முடிந்த அத்தனையையும் நமக்களிக்க ஆர்வமாக இருக்கிறார்.
     
  44. "இறைவன் திருவுள்ளம் நிறைவேறட்டும்; என் விருப்பம் வேண்டாம்'' என்பது மேல்மனத்தை ஆழத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் சக்தி வாய்ந்த மந்திரம். நமக்கு ஒரு பிரார்த்தனை நிறைவேற வேண்டும் எனும் பொழுது, அதைத் தவிர்த்து, இதை மேற்கொண்டால், இம்மந்திரம் மிகச்சக்தி வாய்ந்ததாகப் பயன்படும்.
     
  45. ஒருவன் தன் தாழ்ந்த விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளும் முறை, அவன் சாதிப்பதை நிர்ணயிக்கும். உடல் கடைசி நிலையிலுள்ளது. அதன் தேவையைத் திருமணத்தால் பூர்த்தி செய்கிறோம். அதனால் திருமண வாழ்வின் தரம், ஒருவன் தன் வாழ்வில் சாதிப்பதைக் குறிக்கும்.
     
  46. நம்மால் பயன்படுத்தும் அளவை மீறிய சக்தி எழுந்தால் அதைத் தீவிரம் என்கிறோம். அதையே இறைவனை நோக்கிச் செலுத்தினால், அது பக்தி, ஆர்வமாகிறது.
     
  47. ஆர்வம் ஒரு பகுதியிலிருந்தாலும், அடுத்த பகுதிக்கு அதைக் கொண்டு போக முயன்றால், அது பாதியில் தீர்ந்துவிடும். மனத்தின் ஆர்வத்தை உடலின் ஆர்வமாக்க முனைந்தால் முதலிலேயே தீர்ந்துவிடும்.
     
  48. தீர்ந்தபின், ஆர்வத்தை உற்பத்தி செய்வது பெரும்பாடு, மனம் மறந்து விடும். வற்புறுத்தினால் "வற்புறுத்துவது தவறு" என்று மனம் பதில் சொல்லும், அல்லது "புரியவில்லை" என்று சொல்லும்.
     
  49. பிராணனை அதன் ஆர்வம் தீர்ந்தபின் வற்புறுத்தினால், அதற்கு அளவுகடந்த கோபம் வரும். முதலில் அது சோர்ந்துவிடும், அல்லது சூழ்நிலை பலனற்றதாகவோ, எதிராகவோ அமையும். கோபம் அதிகமானால், பிராணன் வேலையைக் கெடுக்கும் அல்லது நோயை உற்பத்தி செய்யும்.
     
  50. உடலை வற்புறுத்தவே முடியாது.அது கல்லாகச் சமைந்து நிமிஷத்தை, மணியாக மாற்றும். நமக்கு வெற்றியை ஓரளவு உடலின் ஜீவியம் கொடுத்தாலும், உடலின் பொருள் (substance) அறவே மறுக்கும்.
     
  51. தீவிரமான ஆசை, தீவிரத்தையும், ஆசையின் திறனையும் இழந்தபின், உயிரற்ற - ஜடமான வாழ்வாகிறது. ஆனால் அது வாழ்வை முழுவதும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. நம் போக்கை நிர்ணயிக்கும் திறனுள்ளது. "உன் திருவுள்ளம் நிறைவேறட்டும்'' என்ற மந்திரம், நம்மை அதன் பிடியிலிருந்து விடுவித்து, ஆனந்தத்தை உற்பத்தி செய்கிறது. அதனால் "உன் திருவுள்ளம் நிறைவேறட்டும்'' என Agenda 12, 13இல் அன்னை, ஜடத்தைத் திருவுருமாற்றம் செய்ய (ஜடத்தின் ஜீவியமல்ல) எடுத்த முயற்சிகளை விவரித்திருக்கிறார்.
     
  52. "உங்கள் திருவுள்ளம் நிறைவேறட்டும்'' எனச் சொல்லி பரவசமடைந்தால் சரணாகதியின் உச்சகட்டம்.
     
  53. ஆசைக்குப் பின்னால் ஆண்டவனிருப்பதாக அன்னை கூறுகிறார். மனித முயற்சியின் சிகரத்திற்குப் பின்னால் இறைவன் இருக்கிறார்.

    பிராணமய புருஷனுக்குப் பின்னால் அன்னையும், அன்னமய புருஷனுக்குப் பின்னால் வேத ரிஷிகளும் இறைவனைக் கண்டார்கள்.

    சைத்திய புருஷனுக்குப் பின்னால், இறைவனைக் காண்பது பூரண யோகம். கண்டு, கண்டதை விலக்காமல், சைத்திய புருஷனைச் சத்தியஜீவனாக மாற்றுவது பூரணயோக இலட்சியம்.
     
  54. பிரம்மத்தைக் காணும் யாத்திரையில், மனிதன் முன்னேற்றமடைவது உண்மை. ஆனால் முக்கிய நோக்கம் அகங்காரமாக இருப்பதால், முன்னேறுவது அகந்தையாகும். முன்னேற்றமிருந்தாலும், அது எதிர் திசையிலிருக்கிறது.
     
  55. சரியாகச் செய்தால், "திருவுள்ளம் நிறைவேறட்டும்" என்பது அகந்தையைக் கரைக்கும் என்கிறார் அன்னை. எது சரி? பேச்சு, நோக்கம் போன்றவற்றிற்கு நோக்கம் இருப்பதைப் போல், "திருவுள்ளம் நிறைவேறட்டும்" என்பதற்கும் ஓர் உண்மையுண்டு. வாயால் சொன்னால், அது சப்தமாகி, சீக்கிரம் அலுத்துவிடுகிறது. ஆழத்திலிருந்து, உண்மை இல்லாமல் சொன்னால் சீக்கிரம் எரிச்சல் வரும். ஒவ்வொரு சமயத்திலும் நம் இச்சை (will) ஓர் அபிப்பிராயம், பிரியம், வேகம், உந்துதலாக வெளிப்படுவதைப் பார்க்கலாம். இறைவனை அழைப்பதன் முன், நம்மை ரத்து செய்ய வேண்டும். ஆழ்ந்த இடத்தில் திருவுள்ளத்தை நாட வேண்டும். அது சரி. அப்படி உச்சரித்தால், அது உள்ளுறை பிரம்மத்தைத் தொடும். அதற்கு மேல்உலகம் குரல் எழுப்பும்.
     
  56. கையால் வேலை செய்கிறோம். அறிவால் புரிந்துகொள்கிறோம். அறிவு, செயலைவிட உயர்ந்ததைப் போல், ஆன்மாவால் செயல்படக் கற்றுக் கொள்ள வேண்டும். புற நிகழ்ச்சிகளின் பலனை நாடுவதற்குப் பதிலாக, அகவுணர்வின் பலனை நாடினால், அளவுகடந்த ஆன்மீக வாய்ப்பு எழும்.
     
  57. "திருவுள்ளம் நிறைவேறட்டும்'' என்று மந்திரமாக உச்சரித்தால் ஆன்மா நம்மையறியாமல் விழித்துக்கொள்ளும். அதற்கும் பலனுண்டு. சூட்சும தரிசனம், மனம் அடங்குதல், ஆசையின் வேகம் அழிவது, செயலும் இரண்டாகப் பிரிந்து நல்லது நம்மை நாடியும், மற்றது விலகியும் போவது ஆகிய பலன் தெரியும். ஆசைக்குரியது அகன்று போய், அது நம்மிடம் வக்கிரமாக நடந்துகொண்டு, நமக்கு மனிதர்களைப் பற்றி அதிகமாகப் புரிய ஆரம்பித்து, சூழ்நிலை மாறும். விடாமுயற்சி, ஆர்வம், ஞானத்தேடல் அவற்றைப் புது உலகமாக நமக்களிக்கும்.
     
  58. அறியாமை விழிப்படைந்து அறிவுடைமையாக மாறும் பொழுது, அது செயலிலும், நிகழ்ச்சிகளிலும், எண்ணத்திலும், உணர்ச்சியிலும் பிரதிபலிப்பது, உள்ளுணர்வை கண்ணாடியாக வாழ்வு பிரதிபலிப்பதாகும்.
     
  59. பகுத்தறிவு வெற்றிக்குத் தடை. சக்தி பிராணனை நிரப்பினால் காரியம் பூர்த்தியாகிறது. அறிவு, சக்தியின் ஒரு பகுதியைச் செலவிடுகிறது. காரியம் முடிந்தபின் விளக்கத்தைத் தேடி அறிவு வரலாம். முதலிலேயே அறிவு செயல்பட்டால் காரியம் தடையாகும்.
     
  60. ஆன்மாவின் பரிணாம வளர்ச்சி, அதன் தத்துவம்.

    பரிணாமம் முடிவானால் அதன் ஆரம்பம், உயிர் பிழைத்து வாழ்தலாகும்.

    பிழைப்பு - வளர்ச்சி - அடுத்த நிலைக்குரிய வளர்ச்சி - பரிணாமம் என்பவை முழு அளவுகோலாகும். இந்த அளவுகோல் நம் ஒவ்வொரு கரணத்திற்கும் பொருந்தும்.

    இன்று நாம் இந்த அளவுகோலில் எந்த நிலையிலிருக்கிறோம்?

    முதல் நிலையான உயிர் பிழைத்தல் புரிகிறது.

    வளர்ச்சி நமக்குத் தெரிவதில்லை. உடல் வளர்வதாலும், அது நம் கண்ணுக்குத் தெரியாததாலும் அது புரிவதில்லை. உடலின் வளர்ச்சியை அறிய முடியாததிலிருந்து, முயன்று ஆன்மீகப் பரிணாம வளர்ச்சிக்குப் போவது யோகம்.
     
  61. இந்த நான்கு நிலைகளையும் நம் ஒரு கரணத்திலாவது புரிந்து கொள்ள வேண்டும். இதைச் சமூக வளர்ச்சியில் எளிதில் புரிந்து கொள்ளலாம். அதுவே ஆரம்பிப்பதற்கு நல்ல முறை.
     
  62. சமுதாயம் சட்டத்திற்குட்பட்டது; மனித சுபாவத்தால் கட்டுப்பட்டது என்பதை அறிவுடைய ஒருவன் புரிந்து கொள்ளலாம்; தெளிவில்லாதவன் கண்ணில் இது படுவதில்லை.

    மனித சமுதாயம் அதன் தெளிவுடை முன்னோடிகளால் நடத்தப்படுகிறது என்பதை அறிய அதிக தீட்சண்யம் தேவை. முதல் இரு நிலைகளையும் தத்துவஞானி விளக்கலாம். மூன்றாவதை விளக்க ஒரு கவிஞன் தேவை. அவன் யுகதர்மத்தை நாடும் கவிஞனாக இருந்தால் மனித சமுதாயத்தின் இலட்சியக் குறிக்கோள், தனி மனிதனின் அந்தரங்க அபிலாஷைகளாக வெளிப்படுவதைக் காண்பான்.

    தன்னையறிந்த யோகி, தன் ஆன்மாவின் அசைவுகளை அறிவான். அதைப் போலவே மற்ற ஆன்மாக்கள் ஆன்மாவின் தாயாரை நோக்கிப் போவதையும் அறிவான். இதை உலகத்தின் ஆன்மீகப் பரிணாம திருஷ்டி என்போம்.

    அந்தக் காட்சி ஆசையைத் தொட்டால் ஆர்வமாகிறது. அங்கு ஆரம்பித்து சரணாகதி மூலம் தன்னைப் பூரணமாக அர்ப்பணிக்கிறது.
     
  63. இந்தப் பெரிய ஆன்மீக அனுபவத்தைச் சமாதி நிலையில் காண்பது ஆன்மீகக் காட்சி. அதை ஒரு சிறு வேலை மூலமாகப் பெறலாம். நடைமுறையில் அவ்வேலை நமக்குக் கட்டுப்பட வேண்டுமானால் பூரணயோக திருஷ்டி தேவை.
     
  64. பெண்மையே ஆண்மையை எல்லா இடங்களிலும் பூர்த்தி செய்கிறது. முதல் நிலையில் அவள், அவனது உடலின் அடுத்த பகுதி. பிள்ளைபேறு, அதன் விளைவு. கடைசி நிலையில் அவள் ஈஸ்வரனான மனிதனுக்கு, சக்தி.
     
  65. தன்னை மனிதன் தயார் செய்து கொள்ளும் காலங்களில் பெண்ணை விலக்குவது அவசியமாக இருக்கலாம். ஆனால் மனித முயற்சி அவளை விலக்கி முழுமை பெறாது.
     
  66. அறிவுடை விளக்கத்தை வகுக்க, பகுத்தறிவு பயன்படும். அறிவு ஒரு பிரகாசம். அதன் ஒளி தெளிவைக் கொடுக்கக்கூடியது, தெளிவை மட்டுமே கொடுக்கக்கூடியது. அடுத்தவரை ஏற்றுக்கொள்ள வைக்கும் சக்தி அதற்கில்லை. அதிகபட்சம் அதன் உண்மையை மற்றவர்க்குத் தெளிவுபடுத்த முடியும். அடுத்தவர் மனம் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர் தமக்குப் புரியவில்லை என்பார்.
     
  67. அகங்காரம் ஆழ்ந்த மனித மையம். இறைவனை நோக்கி மனிதன் வரும்பொழுது, மையம் வலுப்பெற்று சிக்கல் பலமாகிறது. சூழ்நிலை அதனால் பாதிக்கப்படாமலிருக்காது. பாதிக்கப்படுவது சட்டம். அதன் மூலம் பலன் பெற ஒரே வழி, முடிச்சை அவிழ்ப்பதாகும்.
     
  68. தாழ்ந்த மனிதரிடையே உயர்ந்த முறை பலன் தருவதில்லை. நம்மவரை உயர்ந்தவராகக் கொள்வதாலேயே, நம் பிரச்சினைகள் உருவாகின்றன.
     
  69. தன் திறமையால் ஒருவன் பெறுவதைப் பொறுக்காதது பொறாமை. ஒருவருடைய அதிகபட்சத் திறமையால் அவன் பெற முடியாததை அவனுக்களிக்க முன்வருவது உதாரகுணம். பொறாமை திருவுருமாற்றம் அடைந்து உதாரகுணமாகிறது.
     
  70. நெருங்கிய நண்பனுக்கும், விரோதிக்கும் ஒரே குணம் இருப்பதுண்டு. நம்மைப் பொருத்தவரை அவர்கள் போக்கு எதிரானது.
     
  71. சில்லறை ஆசைக்குரிய எந்தச் செயலும், ஆனந்தத்தின் பிறப்பிடமாக இருக்க முடியும். ஜீவியத்தை உயர்த்தி, போக்கை மாற்றினால் போதும்.
     
  72. சிறிய விஷயங்களில் இம்மாற்றத்தைச் செய்வது கடினம். பெரும்பாலான செயல்களை மாற்றிவிட முடியும். சில மாறுதல்களுக்கு இடம் கொடுக்காமல் நிற்கும். அவை அழிக்கப்பட வேண்டியவை.
     
  73. எவ்வளவுக்கெவ்வளவு மட்டமானதாகவும், சிறியதாகவுமிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அச்செயல் அதிக ஆனந்தத்தை உற்பத்தி செய்யும்.
     
  74. தாழ்ந்த பண்புகளை விட்டொழித்த பின்னரே உயர்ந்த பண்புகள் பலிக்கும். உயர்ந்தவற்றை ஏற்றுக்கொண்ட பின்னரும், தாழ்ந்தவற்றின் மீதும் ஆசையும், பெருமையும் மனிதனை விடாது. ஜனநாயகம் வந்த பின்னும் போருக்கு மரியாதையிருக்கிறது. சன்னியாசத்தை மேற்கொண்ட பின்னும் பணத்திற்குரிய மரியாதை போவதில்லை.
     
  75. (Systems) முறைகள் முதலில் அதிக பலன் தரும். பிறகு ஜீவனிழந்து பயனற்றதாகும். முறைகள் நம்மால் ஏற்படுத்தப்பட்டவை என்பதால், அவை செயல்படும் வகையைச் சற்று விரிவுபடுத்தி மீண்டும் அதற்கு ஜீவனளிக்க முடியும். கொடுமையும், அதிகாரமும் தங்கள் செல்வாக்கை இழந்துவிட்டபோதிலும், அவற்றிலுள்ள தீவிர பணிவை வளர்த்து மீண்டும் அவற்றைப் பயனுள்ளதாகச் செய்ய முடியும்.
     
  76. தலைவன், தொண்டன் இருவர் செய்யும் வேலையின் கரு, ஒன்றே என்பதை அவர்களுடனிருப்பவர்கள் அறிவார்கள். ஆனால் தொண்டன் தலைவனானால் அதற்குரிய வலிமையில்லாத காலத்து அவன் தோல்வி அடைகிறான்.
     
  77. வலிமை பிறப்போடு வருகிறது, அல்லது அனுபவத்தால் வருகிறது. அவ்வலிமையை வேறு வகையாகவும் பெறலாம். அடிப்படையில் வலிமையும், எளிமையும் ஒன்றே என்றறிந்தால், இரண்டும் ‘பிரம்மம்' என்று உணர்ந்தால், வலிமை வரும்.
     
  78. செயல் பூரணச் செயலானால் அது பூர்த்தியாகும்.தன் அதிகபட்சத் திறமையைவிட உயர்ந்த இடத்தில் ஒரு காரியத்தை பூரணச் செயலாக ஆரம்பிக்க முடியுமானால், அதிக வெற்றி பெறலாம். ஆரம்பிக்கும் குணத்தை நாம் விட்டுவிட முன்வந்தால், இறைவன் அங்கு அதிகமாகப் பூர்த்தி செய்வான்.
     
  79. விழிப்பு ஏற்பட்டபோதெல்லாம், நிரந்தர அருள் தடையின்றி வயப்படுகிறது. அருள் நம்மை நாடி வருவது திருவுருமாற்றத்திற்கு வழி செய்யும். ஆர்வம் திருவுருமாற்றத்தைப் பூர்த்தி செய்யும்.
     
  80. இறைவன் நம்மை நாடி வரும்பொழுது (descent) ஆர்வம் இருப்பது இல்லை. ஆர்வம் எழும்பொழுது மனிதன் எப்படியிருக்கிறான் என்பதை, பகவான் விவரித்திருக்கிறார். எல்லாப் பழக்கங்களிலிருந்தும் விலகினால் ஆர்வம் எழும்.
     
  81. அன்னை, ஸ்ரீ அரவிந்தர் அவதாரங்கள் மனிதனுக்கு எடுத்துக்காட்டாக மட்டும் அமையவில்லை. மனிதன் செய்ய வேண்டிய வேலைகளைத் தாங்களே செய்தார்கள். விவசாயம், வியாபாரம், பாங்க், மேனேஜ்மெண்ட் ஆகிய இடங்களில் நாம் விஷயத்தைச் சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது, நாமே செயல்படுத்திக் காண்பிக்க வேண்டும்.
     
  82. பிரபஞ்சம் மனிதனில் தன்னைச் செறிந்து காண்பது போல், யோகத்தை மேற்கொண்டவர் தம் ஆன்மாவில் குவிய வேண்டும். வாழ்வு, பிரபஞ்சமாகிறது; ஆன்மா, அதன் மையமாகிறது.
     
  83. நாலு பேர் எதிரில், மனிதன் முறையற்று நடந்துகொள்வதில்லை. மனச்சாட்சிக்கு உட்பட்டவன், எண்ணத்தால் ஊறு செய்வதில்லை. யோகி, தன் ஆழ்ந்த மனத்திலிருந்து தீமையையும், தவற்றையும் அகற்ற வேண்டும்.
     
  84. ஆன்மாவைப் பொருத்தவரை, தவறு என்பதில்லை. மனச்சாட்சி தீமையைக் கண்டதும் விலகுகிறது. சமூகம் பொது இடத்தில் தவறு நடக்க அனுமதிப்பதில்லை.
     
  85. அருளை, அடையாளம் காண்பது நன்றியறிதல்.
     
  86. ஜீவனற்ற செயலில் அருளைக் கண்டால், செயல் உயிர் பெறுகிறது. தரித்திரத்தில் அருளைக் கண்டால், அருள் பேரருளாகிறது.
     
  87. ஆன்மாவுக்கு அருளை அடையாளம் தெரியும் என்பதால், அருள் புரியும் நேரம், ஆன்மா வெளிப்படும் நேரமாகும். வெளிவரும் ஆன்மா, சைத்திய புருஷன். ஜீவாத்மாவால் மேலே வர முடியாது.
     
  88. ஆன்மா இயற்கையில் வெளிவருவது ஆண்டவன் செயல்.மனிதனுடைய ஆன்மா மேலே வருவது மனிதப் பரிணாம முயற்சி. அது நன்றியறிதல். பரிணாம முயற்சியை மேற்கொண்ட மனிதனுடைய ஆன்மா, பரிணாம முயற்சியை இறைவனின் ஆன்மாவைக் கண்டுகொள்ளுதல், நன்றியறிதல் ஆகும்.
     
  89. மனிதனுடைய ஆத்மா, பிரபஞ்சம் முழுவதும் பரவ முயற்சி செய்வது ‘நன்றியறிதல்' எனப்படும்.
     
  90. பிரபஞ்சம், மனிதனில் குவிந்து சேருவது, கருணையாகும்.
     
  91. ஜீவன் முழுவதும் ஆர்வமாகிப் பெற்ற ஞானமே, தன்னையறிதல் என்பது. தன்னையறிந்தவன், தான் விருப்பப்படும் எதுவாகவும் ஆவான்.
     
  92. இந்த ஞானமும், மனமும், உணர்வும் உடலில் இருக்கின்றன.
     
  93. தான் எதுவாகவும் ஆகலாம் என மனம் அறிந்தால், அது நம்பிக்கை ஊட்டும். அதன் அடிப்படையில் ஆர்வத்தை எழுப்பலாம்.
     
  94. பிராணனில் இந்த ஞானமிருந்தால், சக்தி பெருகும். அதைச் செயலாற்றும் சக்தியாக மாற்றுவதே நம் கடமை.
     
  95. உடல் இந்த ஞானத்தைப் பெற்றால், அது உடனே செயல்படும்.
     
  96. இருள் நிறைந்த கருமையான வாழ்வின் உண்மைகளைத் திருவுருமாற்றம் செய்தால் சச்சிதானந்தத்தின் ஆனந்தத்தைவிடச் செறிவான ஆனந்தத்தைத் தாங்கும் கனமான பொருளாக மாறும்.
     
  97. பணிவு, உடலின் பரிணாமம்.
     
  98. வழிபாடு, பிராணனின் பரிணாமம்.
     
  99. நம்பிக்கை, மனத்தின் பரிணாமம்.
     
  100. பிரம்ம ஞானம், ஆன்மீகப் பரிணாமம்.

*****



book | by Dr. Radut