Skip to Content

05 . பாகம் - 5

  1. சுதந்திரமானவன், தனக்கென வகுத்துக் கொள்ளும் செயல்முறையைக் கட்டுப்பாடு என்கிறோம். அது போன்ற கட்டுப்பாடு, பண்பின் அடிப்படையில் உருவான சுபாவம் ஆகும்.
     
  2. விஸ்வாசம், துரோகம் என்பவை நம்மை ஒத்தவருடன் உள்ள தொடர்புகளாகும். உன் தகுதிக்குக் கீழ்ப்பட்டவரால் உனக்குத் துரோகம் செய்ய முடியாது. அவர்களால் உன்னிடம் விஸ்வாசமாகவுமிருக்க முடியாது.

    நம் வீட்டு மாடு நம் பயிரை மேய்வது துரோகமல்ல. அதன் இயல்போடு மாடு செயல்படுகிறது என்று அர்த்தம்.
     
  3. நாலு பேர் முன்னிலையில் தன் தகுதியைக் காப்பாற்றவும், தன் உள்ளுணர்ச்சிகளைப் புண்படாமலும் காக்க முனைவதைப் போல் மனிதன் விஷயத்தை அறிவால் புரிந்து கொள்ள முனைவதில்லை.
     
  4. எது இல்லாமல் முடியாது என்று நேற்று நாம் நினைத்தது, இன்று பொறுக்க முடியாததாகிவிடுதல், முன்னேற்றத்திற்கு அறிகுறி.
     
  5. இந்த நோக்கில் திருமணம் முன்னேற்றத்தை அளிக்கும் கருவியாகும்.
     
  6. சமூகத்திலுள்ளவரை, திருமணத்தைப் புறக்கணிக்க, சமூகம் மனிதனை அனுமதிக்காது, என்பது உண்மையானாலும், மனம் மனைவியை நாடுவதை மனிதனால் தவிர்க்க முடியாது என்பதால் திருமணம் முன்னேற்றத்தைத் தரும் கருவியாகிறது.
     
  7. எதை ஒரு க்ஷணம்கூடப் பொறுக்க முடியாதோ, அதை மனிதன் விரும்பி நாடுவான் என்பதற்குத் திருமணம் சிறந்த உதாரணம்.
     
  8. மற்றவற்றைவிட, திருமணமே மனித முன்னேற்றத்திற்கு எதிரான சந்தர்ப்பங்களைத் தவறாது தருவதால், திருமணம் மேற்சொன்ன உதாரணமாக முடிகிறது.
     
  9. தன்னுடைய ஆசைகளையும், கசப்பான அவற்றின் எதிர்நிலைகளையும் அறிவதும், அவை தன்னுள் சந்திக்கும் பாணியையும் அறிவது முக்கியமான ஞானமாகும். உணர்வைத் தெளிவுப்படுத்தும் திறனுடையது ஆகும்.
     
  10. மற்றவர் சொல்வதின் உண்மையை அறிவது பெருந்தன்மை. ஆனால் அது மனத்தைக் கடந்து செல்ல உதவாது. அடுத்தவர் சொல்வதின் உண்மையையும், தவற்றையும் கண்டு, அவை எதன் பாகங்களென அறிந்து, அந்த முழுமையைக் காண முனைந்தால், மனத்தைக் கடந்து செல்ல முடியும்.
     
  11. ஒருவர் மீது அளவு கடந்து பிரியம் செலுத்தும் பொழுது, அவருடைய நல்ல குணத்தால் நாம் பிரியமாக இருப்பதாக நினைக்கிறோம். உண்மை அது அல்ல. அளவு கடந்த பிரியத்தைத் தடையில்லாமல் பெற்றுக் கொள்ளும் பாங்கு இருப்பதால் மட்டுமே நம்மால் அவர் மீது பிரியமாக இருக்க முடிகிறது.
     
  12. மனப்பான்மை (mentality) என்பது பொது; நல்லதாகவுமிருக்கலாம் அல்லது கெட்டதாகவுமிருக்கலாம். கெட்ட எண்ணம் என்பது கெட்டது. பார்க்கப் போனால் இரண்டும் ஒரே தன்மையையுடையவை, நிலை வேறு. பிறர் நலன் கருதும் இனிமையும் (benevolence), கெட்ட எண்ணமும் ஒரே அளவுகோலின் இரு முனைகள். மனப்பான்மை அக்கோ-ன் மையமாகும்.
     
  13. இதே சட்டம் ஆனந்தத்திற்கும் பொருந்தும். தீயசக்தியும், ஆனந்தமும் ஒரே அளவுகோலைச் சார்ந்தவை. உளப்பாங்கு (vitality) அதன் மையம் என்று சொல்லலாம். சத்தியம், அசத்தியம் என்பவை உடல்நிலையை மையமாகக் கொண்ட இரு முனைகள் எனலாம் (Existence - Physicality – Non existence).
     
  14. நாம் பிறரைப் பற்றிச் சொல்லும் குறைகள் அனைத்தும் ஏதோ ஓர் அளவில் நம்முள் வேறு நிலையில் உற்பத்தியாவதாகும்.
     
  15. தாழ்ந்தது, உயர்ந்தது என்பவை அடிப்படையில் ஒரே செயல்களாகும். நம் தாழ்ந்த உணர்ச்சியை, உயர்ந்த ஆர்வமாக நாம் கருதும் பொழுது மனம் பொய்மையை மேற்கொண்டு வக்கிரமாகப் போகிறது.
     
  16. ஞானம் சம்பந்தப்பட்ட அறிவின் தெளிவை, உள்ளம் அறியும் உணர்வாக்கும் திறன், யோகமாகும். கற்பனைக்கும், உண்மைக்கும் உள்ள வித்தியாசம் இது.
     
  17. சலனம் சபலமாகும் வாழ்வு மனிதனுடையது. சலனமற்ற ஜீவனின் நிஷ்டை யோகிக்குரியது. சலனத்தின் ஜீவனில் சபலமற்ற நிலையில் நிலைத்திருப்பது பூரண யோகம்.
     
  18. சலனத்தில் அசைவை ஜீவனின் நிஷ்டையோடு இணைப்பது ஆத்ம சமர்ப்பணம்.
     
  19. விளையாட்டில் தன்னை மறந்தவன் ஆசையால் உந்தப்படுபவன், அந்நிலைக்குரிய அளவுகடந்த சக்தியைப் பெற்றவனாவான். சக்தி முழுவதும் இறைவனை நோக்கி அது போல் சென்றால், மனித சந்தோஷம், பிரம்மத்தின் ஆனந்தமாகும்.
     
  20. தொடர்ந்த ஆன்மீக முன்னேற்றம் பெற உதவுபவை:

    1. நம் பிரச்சினைகள் அனைத்தையும் அன்னை மூலமாக மட்டும் தீர்த்துக் கொள்வது.
       
    2. மறைந்துள்ள குறைகளை எடுத்து மலர்ந்த பூரணமாக்குதல்.
       
    3. நம் செயலின் திறத்தைத் தொடர்ந்து உயர்த்துதல்.
       
    4. ஞானத் தெளிவைத் தொடர்ந்து உயர்த்துதல்.
       
    5. செயலின் நிலையை ஒரு படி உயர்த்துவது. மனத்திலிருந்து ஆன்மாவுக்கும், உணர்விலிருந்து மனத்திற்கும் உயர்த்துவது.
       
    6. ஆத்ம சமர்ப்பணத்தை உயர்த்துவது.
       
    7. புதிய குறைகளுக்கு மனத்தில் இடம் அளிப்பதில்லை.
       
    8. புறச்செயலை, அகவுணர்வாக்குவது.

     
  21. சலனம் மேல்நிலையில் நம்மை நிறுத்துகிறது. எண்ணமோ, உணர்வோ அசைந்தால் அது சலனம். சலனமற்ற நிலை ஆழத்திற்கு நம்மை இட்டுச் செல்லும்.
     
  22. பிரகிருதியின் அசைவுகள் சமர்ப்பணமானால் சைத்திய புருஷன் வளர ஆரம்பிப்பான்.
     
  23. வாழ்வு என்பது தடையின்றி, தானே இயங்கும் அமைப்பு. க்ஷணம் தவறாமல் இயங்க வல்லது. அதன் மீது ஒரு திரை படிந்துள்ளதைப் போல் நம்மில் அது அமைந்துள்ளது. பிரார்த்தனை, சமர்ப்பணம், அழைப்பு ஆகியவை, திரையை விலக்கிச் செயல்படும் திறனுடையவை. அங்கு (life response) வாழ்வின் எதிரொலி கேட்கிறது. அதாவது செயல்கள் தடையின்றி நடக்கின்றன. அதே நிலையில் நாமிருந்தால், தடையற்ற முன்னேற்றம் தொடர்ந்திருக்கும்.
     
  24. சமூகத்தின் அடியில் இருப்பவன் ஒரு காரியத்தைச் செய்ய படிப்படியாக நகர வேண்டும். மேல் மட்டத்திலுள்ளவர்கள் நேரடியாகச் செயல்படுகிறார்கள். காரியம் உடனே நடக்கிறது. வாழ்வின் அமைப்பை நமக்குட்படும்படிச் செய்யவல்லது சமர்ப்பணம். ஆர்வம் அதிதீவிரமானால், சத்தியஜீவிய அமைப்பு நமக்கு எட்டும்.
     
  25. தான் சொல்லியதையே மறுத்துப் பேசுபவர்களை நாம் பார்க்கிறோம். சிந்தனை ஆரம்பித்த முதல் நிலையில் ஒரு கருத்து தோன்றுவதும், பின்னால் அதைவிடத் தெளிந்த கருத்து தோன்றுவதும் இயற்கை. அதுவே இந்த முரண்பாட்டுக்குக் காரணம்.
     
  26. வாழ்விலிருந்து யோகத்திற்குப் போனதற்குச் சில அறிகுறிகளுண்டு:

    1. இறைவனை நினைப்பது இன்பமாக இருக்க வேண்டும். இதுவரை வாழ்வில் அனுபவித்த இன்பங்களைவிட அதிகமானதாக இருக்க வேண்டும்.
       
    2. ஆர்வம் இறைவன் நினைவை தானே நாட வேண்டும்.
       
    3. வாழ்வின் நிகழ்ச்சிகளை மனம் யோகத்தின்படி அறிய முனைய வேண்டும்.
       
    4. பழக்கத்தால் செயல்பட உடல் தயங்க வேண்டும்.

     
  27. சைத்திய புருஷனை அடைய நாம் இதயத்தின் பின்னால் மனத்தை ஒருநிலைப்படுத்த வேண்டும். வெளி நோக்கிச் செல்லும் சக்திகள் ஓரிடமாகச் சேர்ந்தால்தான் அது முடியும்.
     
  28. கிடைக்காத உரிமையை நினைத்து மனம் ஏங்கும் பொழுது, அன்னையை நோக்கிச் செல்லும் உயர்ந்த உரிமை காத்திருப்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
     
  29. (Organisation) அமைப்பு என்று நாம் அறிவதில், அது செயல்படும் இடத்தில், சிறு பிழையும் வராது. (உ.ம்.) மாடு வரும் இடத்தில் பயிரிட முடியாது.
     
  30. இடைவிடாத அழைப்பு, எண்ணத்தை விலக்கி, நம்மை மேலிருந்து, உள்ளே அழைத்துச் செல்ல வல்லது.
     
  31. ஆர்வம், தன்னைப் பூர்த்தி செய்துகொள்வது உண்மையானால் நம் நிலை உயர்ந்ததாகும். அது உண்மையாக இருப்பதில்லை. ஓடும் எண்ணங்கள் அளிக்கும் திருப்தியை நாம் நாடுவதே உண்மை.
     
  32. நம் செயலின் குறைகளை, நாம் பொருட்படுத்துவதில்லை. பிறர் கண்ணோட்டத்தில் விஷயங்களைப் புரிந்துகொள்ள குறைந்தபட்சம் நாம் பிறர் குறைகளை நம் குறைகளைப் பொருட்படுத்தாததுபோல் பொருட்படுத்தக்கூடாது.
     
  33. உயர்ந்த நிலையை அடைந்தபின்னும், நம் பழைய பழக்கம் பின்னணியில் இருப்பதைக் காணலாம்.
     
  34. (Perfection) எந்த நிலையிலும் சிறப்பு, பிரம்மத்தைக் குறிக்கும். அனைவரும் தாறுமாறான வாழ்வை நடத்தும் பொழுது நாணயம், கற்பு, பிரம்மத்தை உணர்த்தும். அந்நிலையில் (perfect) சிறப்பாக இருப்பது கடினம். முயற்சியும், பலனும் பூரணமாக இல்லாவிட்டாலும், அந்நிலையில் அது பூரண முயற்சி என்பதால் அது பிரம்மமாகும்.
     
  35. (Perfection) பூரணச் சிறப்பு நாமுள்ள நிலையில் பிரம்மத்தை வெளிப்படுத்தும். அத்துடன் அடுத்த நிலைக்கு நம்மை அழைத்துச் செல்ல வல்லது.
     
  36. தம் கடமைகளைத் தெய்வத்தின் கடமைகளாக ஒருவர் செய்தால், பரோபகாரம் செய்ய அவருக்குச் சக்தியிருக்காது.
     
  37. நம் சொந்த கடமைகளைச் சிறப்பாகச் செய்தால், ஏற்படும் சூழலுக்குப் பரோபகாரத்தின் திறன் உண்டு. பரோபகாரத்தால் விளையும் குறை அதற்கிருக்காது.
     
  38. சரணாகதியே பகவான் கண்டுபிடித்த பெரிய சூட்சுமம். சிருஷ்டியிலும், மனித வாழ்விலும் தன்னையே முதன்மையாகக் கருதுவதே வழக்கம். இயலாமை வந்தபின் மனிதன் சரணடைகிறான். குழவிப்பருவத்திலும், தன் வலிமையை இழந்த நேரத்திலும் தவிர மனிதன் தன்னையே முதன்மையாகக் கருதுகிறான்.
     
  39. இதற்கெதிரானது சரணாகதி. தான், இறைவனின் பகுதி என்பதை வலியுறுத்துவது சரணாகதி.
     
  40. தன் முக்கியத்துவத்தை விட்டுக்கொடுத்து, சரணாகதியை ஏற்பது மனிதனுக்குப் பெரிய முன்னேற்றம். அதை ஒரு முறையாகக் கண்டுபிடித்தவர், பகவான். பூரண யோகத்திற்கு அது முக்கியம்.
     
  41. அழைப்பு:

    எந்த நேரமும் நாம் உச்சகட்ட உணர்வோடு செயல்படத் தேவையான அறிவும், உணர்வும், திறமையும், அவற்றின் சாரமும் அழைப்பின் மூலம் நாம் அன்னையிடமிருந்து பெறலாம்.
     
  42. பண்பு:

    நாம் ஏற்றுக்கொண்ட பண்புகளே நம் உலகம், நமக்கு அதுவே பிரபஞ்சம். அன்னையும் பண்புகளாகவே நம்மிடம் வருகிறார். அன்னையின் பண்புகளை முழுவதும் ஏற்றுக்கொண்டால், அன்னை முழுமையாக நம்மிடம் வருவார்.

    பார்க்கப்போனால், எதையும் நாம் பண்பு மூலமாகவே அடைகிறோம். மனிதன் உருவாவது, பண்பின் உருவகத்தால்.
     
  43. நியாயம் என்பதைச் சட்டத்தின் மூலம் மட்டுமே பெற முடியும். இதைவிட அதிகமாக நியாயத்தைப் பெற வழியில்லை. சட்டம் என்பது வரையறுக்கப்பட்ட முறை. இதன் அஸ்திவாரமும் அமைப்பும் உண்மைக்குப் புறம்பானவை. (நிர்வாகம், கோர்ட், ஸ்தாபனம், சமூகம், ஆகியவை அநீதியின் கருவிகளாக அடிக்கடிப் பயன்படுத்தப்படுகின்றன. அவையே நியாயத்திற்கு இன்று சிறந்த கருவிகள்).
     
  44. இறைவனைப் பெண்ணாகவும், தானே பெண்ணாக மாறி இறைவனைக் காந்தனாகவும் வரிப்பதே ஆன்மீக அனுபவத்தின் உச்சகட்டம் என்கிறார்.

    ஆத்மா இறைவனையடைவது மோட்சம், விடுதலை, அனுபவமில்லை. சக்திக்குச் சரணடையும் மனிதன் தன்னுள் புதைந்துள்ள ஆன்மீக பலத்தைக் கண்டு, ஆன்மீக அனுபவத்தைப் பெறுகிறான். முடிவில் உலகத்தை அற்புதக் காட்சியாகக் காண்கிறான்.

    மனிதன் தன்னைப் பெண்ணாகக் காண்பது, பிரகிருதியின் சரணாகதி, அதுவே பூரணயோக முடிவு. அது அனுபவத்தின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது. அத்துடன் evolution பரிணாமத்தைப் பூர்த்தி செய்கிறது.
     
  45. பெரிய இலட்சியம் என நாம் பின்பற்றுவதை ஆராய்ந்து பார்த்தால், அர்த்தமற்றவர்களுடைய போக்கிலிருந்து அது சற்றே மாறுபட்டு இருப்பது தெரியும். முழுவதும் அர்த்தமற்ற செயலின் பின், திருவுள்ளம் செயல்படுவதைப் பார்க்கலாம்.
     
  46. நாம் ஏற்கனவே செய்ததை இன்று வேறொருவர் செய்யும் பொழுது அதிக கோபம் வருவது, அகந்தை தீவிரமாகச் செயல்படுவதைக் குறிக்கும்.
     
  47. ஐந்தாண்டுத் திட்டங்களை இராஜாஜியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்குரிய (strategy) சூட்சுமத்தை நேருவால் கண்டு கொள்ள முடியவில்லை.

    அது அவர்களுடைய அறிவின் குறையல்ல. சுயமாகச் சிந்திக்க முடியாதவர் எனவும் கொள்ள முடியாது. அவர்களுடைய சிந்தனையாற்றல் அவர்கள் வளர்ந்த சமுதாயத்தால் நிர்ணயிக்கப்பட்டது என்றே பொருள்.

    தான் பிறந்த சமுதாயத்தைத் தாண்டி வருவது அன்னையை ஏற்றுக் கொள்வதற்கு அவசியம். அத்துடன் தான் பிறந்துள்ள பரிணாம நிலையையும் (evolutionary plane) கடந்து வருதல் அவசியம். குறைந்தபட்சம் சிந்தனையிலாவது அதைத் தாண்டி வர வேண்டும்.
     
  48. அன்னையிடம் வந்தபின் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும், நாம் பழைய பழக்கத்தை நாடியதால் வந்தது என்பதைக் காணலாம்.
     
  49. உன்னைவிடப் பெரிய மனிதனையோ, அல்லது இலட்சியத்தையோ சந்தித்தால், நாம் இரு வகைகளாக நினைக்கிறோம். அவருக்குச் சேவை செய்ய விழைவது ஒன்று; அவரை மிஞ்ச விரும்புவது அடுத்தது. முதல் வகை சாதகனுக்குரியது; அடுத்தது அகந்தையின் செயல்.
     
  50. நிறைவும், குறைவும் மாறி மாறி வருகின்றன. இது இயற்கையின் வழி. நிறைவிலிருந்து பெருநிறைவுக்கு இயற்கையால் நேரடியாகப் போக முடியாது. நிறைவிலிருந்து குறையை நாடி, பிறகே பெரு நிறைவுக்குப் போகலாம்.
     
  51. பெரிய வாய்ப்புகள் வளர்ந்து அருளாக மாறும். மனிதனுடைய சிறுபிள்ளைத்தனமான கௌரவம் அதைத் தடுப்பதுண்டு. (தினமும் பிரசாதம் கிடைப்பது அருள். அந்த வாய்ப்பையும் உதறுபவர் உண்டு).
     
  52. புறத்தோற்றம் வாழ்வை நிர்ணயிக்கும். அகவுணர்வு அன்னையின் அருளைப் பெறும். சிறிய மனிதன் மன மாற்றத்தால் உயர முடியாது என்று கருதுவது தன் நிலையின் மீதுள்ள பற்றை, விட முடியவில்லை என்பதால்தான்.
     
  53. தன் மனத்தை மாற்ற விரும்பவில்லை என்பதை, உயர்வது கடினம் என்று கூறுகிறான்.
     
  54. சத்தியஜீவியம் பரமனின் இயற்கை என்கிறார். சாரம் (essence) சந்தர்ப்பமாவது (occasion) இயற்கையாகும்.
     
  55. தனித்தன்மையைச் சிருஷ்டிப்பது இயற்கைக்கு முன்னேற்றம். தனித்தன்மை, பொதுத்தன்மையாவது, தனித்தன்மைக்கு முன்னேற்றம். அதற்குத் தனித்தன்மை, தன்னை இழந்து மற்றதுடன் கலக்க வேண்டும். இயற்கை, முரண்பாடுகளால் முன்னேறும் முறை இது.
     
  56. கேட்ட செய்திகளை "அவனே" என ஏற்பது சத்தியம். உண்மை (sincerity). செய்தியை அறிவுபூர்வமாகக் கொள்வது வாழ்வு.
     
  57. மனிதன் தன் நலம் மட்டும் கருதுவதால், அவனது உண்மை, பொய் ஆகும்.
     
  58. அன்பு, அனுதாபம், பிறர் மீது நம்பிக்கை, ஆகியவை உயர்ந்த குணங்கள். ஆனால் நீடிக்கும் தன்மை பெற்றவையல்ல அவை.
     
  59. மனிதன் தன் பண்பைப் பொதுவான அளவுக்கு உயர்த்தினால், மனிதன் கரைந்துவிடுவான். தனி மனிதனுடைய ஆசைகளுக்கு இறைவனுடைய நோக்கில் என்ன அர்த்தம் என்று புரிந்துகொள்வது உலகத்தை "அற்புதம்'' என்று அறிவதாகும்.
     
  60. ஆசை மனிதனைத் தீவிரப்படுத்தும். அதுவே இறைவனிடமிருந்து மனிதனை எட்ட வைத்து உள்ளது. நம் ஆசையை விட்டு, இறைவன் மீது ஆசைப்படுவது, மனித சுபாவத்தைத் தெய்வ சுபாவமாக்குவது ஆகும்; vital பிராணனில் இருந்து சைத்திய புருஷனை நோக்கிச் செல்வதாகும்.
     
  61. வாழ்வு பல நிலைகளிலுள்ளது.ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்ல உதவுவது சரணாகதி. அதுவே மனிதன் தெய்வமாகும் பாதை.
     
  62. நம்மைவிடத் தாழ்ந்தவர்களுடைய ஆதரவு பயன் தராது. நம்மைத் தாழ்த்தக்கூடியது அது.
     
  63. உலக நிகழ்ச்சிகளை நிர்ணயிப்பது சத்தியஜீவியம். அது சுமுகமானது. மனிதன் பழக்கங்களாலும், நோக்கங்களாலும், அபிப்பிராயங்களாலும் செயல்படுகிறான். சூழ்நிலையைவிட அவை வலுவாக இருந்தால், அவற்றால் காரியம் சுமுகமாக முடியும். பெரிய பழக்கம், சிறந்த நோக்கம், உயர்ந்த அபிப்பிராயத்தை மேற்கொண்டால் தீராத பிரச்சினை தீரும். அது சத்தியஜீவியத்தை நோக்கிச் செல்வது ஆகும்.
     
  64. தெரிந்த வழியில் பிரச்சினை தீர்வது, நம்பிக்கையின் பலன். தெரியாத வழியில் தீர்வது அருளின் செயல்.
     
  65. சக்தியை முறைப்படுத்துதல் ஒருநிலைப்படுத்தலாகும். அப்படிக் கிடைத்த சக்தியால் உருவான செயலை, இறைவனை நோக்கி அனுப்புதல் சமர்ப்பணம்.
     
  66. பிழையற்ற செயல் முறையால் (physical organisation) உலகம் இயங்குகிறது. அதற்கு மனிதனில் இரு நிலைகள் உள்ளன.

    மேலெழுந்த நிலை, ஆழம்.
     
  67. மேல்நிலையை விண்டு செயல்படுத்துவது ஆழம். ஆனால் அவை எதிரெதிராக அமைந்துள்ளன.
     
  68. ஆழத்தில் பலன் க்ஷணத்திலும், மேலே பலன் மெதுவாகவும், நிலை இல்லாமலும், எதிராகவும் வரும்.
     
  69. இரு நிலைகளிலும் பெரிய மனிதர் பிறப்பது உண்டு. ஆழத்திலிருந்து மேலே செயல்படுவதும் உண்டு.
     
  70. சாக்ரடீஸும், நியூட்டனும் ஆழத்தைச் சேர்ந்தவர்கள். இன்றும் அவர்கள் சொல்லியதை உலகம் முழுவதும் அறியப் பாடுபடுகிறது.
     
  71. ஏசு, புத்தர், சங்கரர் ஆழத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் மேலே பெரிய காரியங்களைச் செய்தவர்கள். முடிவானவற்றைச் செய்தவரல்லர்.
     
  72. ஷேக்ஸ்பியர், வால்மீகி, வியாஸர் ஆழத்தில் பிறந்து, மேலே பூரண பலனைப் பெருமளவுக்குப் பெற்றவர்கள்.
     
  73. எடிசனும், மார்க்கோனியும் ஆழத்தில் பிறந்து, மேலே வந்து பூரண பலனை உலகுக்களித்தவர்கள்.
     
  74. மனம் தன் பலனைப் பெற நெடுநாளாகிறது. பிராணனுடைய ஆசை, உடன் பலன் தருகிறது. செயல் உடனே பூரண பலனை அளிக்கிறது.
     
  75. முழுப் பலன் உடனே கிடைக்க, நாம் பெற்ற ஞானம், பயன்படுத்தும் பொருளாக மாற்றப்பட வேண்டும். இலக்கிய வடிவம் பெறுவது போதாது.
     
  76. 10 கோடி வேலை சமூகத்திற்குப் பயன்படும். அதற்குப் பொதுவான பெரும்பலனுண்டு.
     
  77. கம்ப்யூட்டர், பல்ப், போன், நகப்பாலீஷ், ஆகியவை தனி மனிதன் பயன்படுத்தக்கூடியவை. சிருஷ்டியின் முறையை வாழ்வில் பயன்படும் விற்பனைப் பொருளிலும் கொண்டு வர முடியும். அவனே முறையாக வெளிப்படுவான். அது உலகெங்கும் உடனே பரவும்.
     
  78. அது போல் இன்று உலகெல்லாம் பரவியுள்ள பொருள்கள் பிரம்மத்தைக் குறிப்பதில்லை. சமூகத்தையும், தொழில் நுணுக்கத்தையும் குறிப்பவை அவை.
     
  79. சமூகமோ, நுணுக்கமோ (technology) வெளிப்பட்டால், அப்பொருள்கள் சமூகத்தையோ, (atmosphere) பூமியின் சூழலையோ பாதிக்கலாம்; பாதிக்காமலிருக்கலாம்.
     
  80. விற்பனைக்குரிய, பலரும் பயன்படுத்தும் ஒரு பொருளை, பிரம்மத்தை வெளிப்படுத்தும் பொருளாகக் கண்டுபிடிக்க முடியும். உலகம் அதை உடனே ஏற்கும். அன்னையை உலகுக்கு அளிக்கும் முறை அது.
     
  81. எவனொருவன் தன் வாழ்க்கையில் அது போன்ற முறையைக் கண்டுகொண்டானோ, அவனே அப்பொருளைக் கண்டுபிடிக்க முடியும். தன் வாழ்வில் உச்சகட்ட ஆன்மீக உயர்வை வெளிப்படுத்தும் முறை அல்லது செயலாக இது இருக்கும். மனப்பக்குவம் உடையவர்களாலேயே அதைச் செய்ய முடியும். அப்பொருள் சமூகத்தையோ, பூமியின் சூழலையோ பாதிக்காத ஒன்றாக இருக்க வேண்டும்.
     
  82. தன் வாழ்வில் தான் விரும்பியதைச் செய்யும் சக்தி படைத்தவனாக அவனிருக்க வேண்டும்.
     
  83. தன்னால் கட்டுப்படுத்த முடியாத உணர்வைக் கட்டுப்படுத்த முன்வருபவனால் அது முடியும்.
     
  84. அவனுடைய தகுதியை மேலும் பல வகைகளாகவும் அறியலாம்.

    1. உடற்குறை, உணர்வின் பாதிப்பால் ஏற்பட்டிருந்தால், குறை நீங்கி, நிறைவு பெற்று, இதுவரை முடியாதது, இனி முடியும்.
       
    2. மனப்புழுக்கம் மறைந்து, சமூகம் உன்னை எதிரான முறையில் நடத்தும். (E.g.) இதுவரை உன் மரியாதையை எடுத்த சமூகம், இன்று உனக்கதை அளிக்க முன்வரும்.
       
    3. மனப்பாரம் மறைந்து பரந்து விரியும் சுதந்திரம் பிறக்கும்.
       
    4. கம்பனியில் இதுவரை ஒரு சிறிதும் முடியாத காரியம் இனி நடக்கும், கிடைக்காத ஆர்டர் தேடிவரும்.
       
    5. எந்தத் துறையிலானாலும் வருவது திடீரென, தலைகீழாக, சுதந்திரத்தைத் தாங்கி வந்து, பாரத்தை நீக்கி, சந்தோஷத்தை அளிக்க வல்லது ஆகும். கார் ஓட்டும் டிரைவருக்குச் சொந்த கார் கிடைத்தது போல் இருக்கும். வெறுத்து ஒதுக்கிய பெண், விரும்பி நாடுவது போலிருக்கும். புதிய திறமை உடலைத் தொட்டு, மெய்சிலிர்க்கும்.

     
  85. ஒரு முறை பலித்தால் அது போதும். எல்லா இடங்களிலும் சோதனை செய்ய முடியுமென்றாலும் அது தேவையில்லை.
     
  86. எலக்ஷனில் ஜயிப்பதற்கும், அடங்காத மனைவியை அடக்குவதற்கும், முறையைப் பொருத்தவரை வித்தியாசமில்லை.
     
  87. உடலின் அகந்தையே மிக வலுவானது. அதன் வேர், சிந்தனையில் உள்ளது. பகுத்தறிவாக அகந்தை ஆரம்பிப்பதால் அதன் வேர் சிந்தனையில் இருக்கிறது. பின்னர் பிராணனுக்கும், உடலுக்கும் அகந்தை பரவுகிறது. உடல் இருள் நிறைந்ததாதலால் உடலில் எளிதில் சிக்கிக் கொள்கிறது. விலங்கினத்தில் எந்த அளவு மனம் உற்பத்தியாகிறதோ, அந்த அளவுக்கு அகந்தையும் எழும்.
     
  88. சரணாகதி ஆத்மாவின் வெளிப்பாடு. அதனால் அதைப் பெறுவது சிரமம். கொஞ்சம் பெற்றாலும், அதன் பார்வை பட்டவுடன் அகந்தை கரையும். மனிதன் அகந்தையைக் கரைக்க எடுக்கும் முயற்சி அகந்தையினுடையது.
     
  89. அகந்தையை அழிக்க, அது முதலில் உற்பத்தியான திறனுக்குச் சமமான திறன் தேவை.
     
  90. அகந்தையைத் தாண்டி தூய்மையான மனத்தை அடைதல் வேண்டும். சோம்பேறி மனிதன் அதை ஏற்றுக்கொள்வதில்லை.
     
  91. உனக்கில்லாத விஸ்வாசம், பிறருக்கு உன்னிடமிருக்கும் என நினைப்பது அறியாமையோ, பெருந்தன்மையோ ஆகாது. அகந்தையின் பெருமை கண்ணை மறைப்பதாகும்.
     
  92. கட்டுப்பாடு அளவு கடந்துபோனால், அன்னையின் சேவையில், அது செயலற்று, பயனற்றுப்போகும். அந்நிலையில் கட்டுப்பாட்டை உடைப்பது நல்லது. (கோபப்பட்டால் பிரச்சினை தீருவது உதாரணம்).
     
  93. பக்தர்களில் சூழல் சூட்சுமமாக இருப்பதால், சிறு தவறும் பெரிய நஷ்டத்தை உடன் தருகிறது. நல்ல காரியமும், அதே தீவிரம் இருந்தால், உடன் பெரும்பலன் தரும்.
     
  94. தற்சமயம் நிறைவுகள் நாமே ஆரம்பித்தால்தான் செயல்படுகின்றன. குறை, தீமை, தீயசக்திகள் தாமே செயல்படுகின்றன.
     
  95. தீவிர ஆர்வம், அன்னையின் தருணத்தை அளிக்க வல்லது. எந்தத் துறையிலும் அது சிகரத்திற்குப் போகக்கூடியது.
     
  96. எழுத்தாளன் தன் புத்தகம் அபரிமிதமாக விற்பனையாவதைக் காண்பான்.
     
  97. அரசியலில், அன்னையின் தருணம், உச்சிக்கு உன்னை எடுத்துச் செல்ல வல்லது.
     
  98. இதுவரை உள்ள அறிவைக் கடந்த நிலையில் அறிவு தெளிவு பெறும்.
     
  99. அன்னையின் தருணம், அகண்ட பிரபஞ்சத்தின் அளவில் வருகிறது. நாம் அதை உலகத்தினளவுக்குச் சுருக்கிவிடுகிறோம். மேலும் முயன்று நம் அளவுக்கும் அதைச் சுருக்குவதே நம் வழி.
     
  100. நம் கூட்டிலிருந்து வெளிவந்து, அன்னையின் தருணத்தை, அன்னையின் தருணமாக ஏற்றுக்கொண்டால், அதன் ஆன்மீக மணம், அற்புத மலராக மலரும்.

*****



book | by Dr. Radut