Skip to Content

04 . பாகம் - 4

  1. இறைவனின் கருணை மனப்பான்மையுடன் மனிதன் போட்டியிடும் முயற்சியே பரோபகாரம்.
     
  2. நீண்ட - நெடிய - கடினமான பாதையாக நாம் அறிவதே சுருக்கமான வழி.
     
  3. கை மேல் கிடைத்த பலன் என்ன என்று ஆராய்ந்தால் அதை நிர்ணயித்தவை நம் உறவும், உள் நோக்கமுமாகும், என்று தெரியும்.
     
  4. மனம் அலைபாய்வதுண்டு.உணர்ச்சி வசப்பட்டாலும், சைத்திய புருஷன் நிலைத்தாலும், அலைபாய்வது நின்றுவிடும்.
     
  5. தன் மனம் ஆழ்ந்து ஈடுபட்டுத் தேடாத ஒன்றின் இரகசியத்தை மனிதன் கண்டுபிடிக்கப் போவதில்லை. ஆழ்ந்த ஈடுபாடு உள்ள பொழுது இரகசியம் கிடைக்கும் என்பது நிலையில்லை. இரகசியம் கிடைப்பது அருளின் செயலாகும்.
     
  6. இறைவனைத் தவிர வேறொன்றில் முடிவைக் காண்பது அறியாமை.

    பணம், பதவி அது போன்று முடிவாகத் தோன்றுவது உணர்ச்சியின் மாயை.

    திருமணத்தையே முடிவாக நினைப்பது சமூக மாயையை ஏற்றுக் கொள்ளும் மனிதச் செயல்.

    நட்பில் முடிவைக் காண முயல்வது உணர்ச்சியின் மாயையாகும்.
     
  7. ஆயிரம் முறை திரும்பத் திரும்ப எழும் உந்துதலானாலும், இடைவிடாது சமர்ப்பணம் செய்தால் அது மாறும்.
     
  8. மனம் இருப்பதில் செயல்படுவது. திருப்தி நிலையானது, முழுமையானது. இருப்பது நிலையில்லாதது, ஒரு பகுதியாகும். நிலையான முழுமையான திருப்தியை நிலையில்லாத பகுதியான இருப்பதில் தேடும் மனம், என்றும் அதை அடைய முடியாது.
     
  9. முழுமையான வளர்ந்த திறமை (skill) பெருஞ்சக்தி (energy) பெற்றால் திருப்தி ஏற்படும்.
     
  10. மிக உயர்ந்த பண்பு, செயலால் நிறைவு பெறும்பொழுது முழுமை ஏற்படும்.
     
  11. ஞானத்தைப் பெற்றபொழுது "ஞானோதயம்" என்ற உணர்வு ஏற்படுவது போல் கண்மூடியாக வாழ்வை நடத்துபவன் கண்ணைத் திறந்தவுடன் ஆச்சரியப்படுகிறான்.
     
  12. உடல் தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்வது அபாரத் திறனால். அது, முதல் நிலையாகும். சத்தியஜீவியம் ஏற்பட்டபொழுது உடலில் திறன் வெளிப்படுவது ஒன்பதாம் நிலை.
     
  13. இன்றுள்ள திறமைகள் எந்த அளவு தடையாக இருக்கின்றன என்றறிவதே புதிய வாய்ப்பைப் பெறும் திறனாகும்.
     
  14. உடல் ஜடமானது; உடல் அசையும் பொழுது வெளிப்படுவது உணர்வு. உடலின் செயல் திறன் (skill) என்பது உடலில் மனம் வெளிப்படுவது ஆகும். தேஜஸ், உடலில் ஆன்மா வெளிப்படுவதாகும். அசையாமல் காரியத்தை முடிக்கும் திறமை உடலுக்கு ஏற்பட்டால், அது, சத்தியஜீவியமாகும்.
     
  15. நட்பு - குடும்பம் - வாழ்வு - கூட்டு - மனிதனுடைய சிறப்பு (personality).

    கூட்டாளியைவிட, பணம் முக்கியம் என்று நினைத்தவுடன் கூட்டு முறிந்துபோகும்.

    ஆதாயமான நினைவு நட்பைப் பொசுக்கும்.

    சோகம் எழுந்தால், வாழ்வு நலியும்.

    தயக்கம் ஏற்பட்டால் மனிதனுடைய சிறப்பு இறக்கும்.

    அடுத்தவரை மனம் ஆழ்ந்து நாடினால், திருமணம் முடிகிறது.
     
  16. ஜீவனின் ஆழ்ந்த நிலையும், மேலெழுந்தவாரியான நிலையும், மனம், உணர்வு, உடல் ஆகியவை இரு நிலைகளிலும் உள்ளன.
    வீட்டைச் சுத்தப்படுத்துவதை ஜீவனுக்கு உதாரணமாகச் சொல்லலாம். மனத்தின் மேல் இருந்து ஆழ்ந்த நிலைக்குப் போவது வீட்டைப் பெருக்கிச் சுத்தப்படுத்துவதாகும். உணர்வில் ஆழ்ந்த நிலைக்குப் போவது வீட்டிற்கு பூச்சுவேலை செய்வதைப் போன்றது. உடலின் ஆழத்திற்குப் போக சுவர்களைப் புதுப்பிக்க வேண்டும்.
     
  17. "உலகத்துடன் ஒன்றி ஆனந்தம் பெறுவது மனிதனுக்கு ஆன்மாவில் ஜடத்தை ஆளும் திறனையளிக்கும்'' என்கிறார் பகவான்.

    இதையே வாழ்வில் பொருத்திப் பார்க்கலாம்.

    தன் சூழ்நிலையைப் பூரணமாக அறிந்து அதனுடன் ஒன்றிப் போக முடிந்தால், மனிதனுக்கு அச்சூழ்நிலை கட்டுப்படும். (i.e. பணம் அவனை நோக்கி வரும்; மார்க்கட் அவனை நாடும்; எல்லாச் செயல்களும் பூரணச் செயல்களாகும்; வெற்றியை மட்டும் தருவனவாகும்.)
     
  18. அது போன்ற திறனைப் பெற, பண்பு உதவும். செய்யும் காரியத்தின் முழுமையை அறிவது, மனத்திற்குரிய செயல் பண்பு (work value of the mind).

    செய்வதில் திளைப்பது உணர்வின் பண்பு.

    காரியத்திற்குரிய எல்லாத் திறமைகளையும் பெறுவது செயலுக்குரிய பண்பு.

    தானே நடக்கட்டும் என இருப்பது ஆன்மாவுக்குரிய பண்பு.

     
  19. சத்தியம் தெரியும்;
    (Reality not the process)
    அதன் வழிவகை தெரியாது.
    (essence)
    வழிவகை தெரியும்;
    (Process not the essence of reality)
    அதன் சாரம் தெரியாது.

     
  20. சத்தியம் தெரிந்தால் கண்ணை மூடிக்கொண்டு அதை நாடலாம்.

    வழிவகை தெரிந்தால், சந்தர்ப்பங்களை மாற்றிப் பலன் பெற முயலலாம்.

    சாரம் தெரிந்தால், அதை முழுவதும் ஆள முடியும்.
     
  21. ஹாஸ்யத்துடன் பேசினால் அது ஒரு நபரையோ, நிகழ்ச்சியையோ கண்டு நகைப்பதாக அமையும். அதன் உச்சகட்டத்தில் ஹாஸ்யம், சிந்திக்கும் திறனை, சந்தோஷத்தால் அளிக்க முடியும். எனவே ஹாஸ்யம், கற்பனைக்கு, சிருஷ்டிக்கும் திறனை அளிக்க வல்லது.
     
  22. ஆசையை மறுத்ததால் - கிடைத்த பலனை அனுபவிக்கும் ஆசை, மனித மனத்தின் போராட்டத்தின் முக்கிய கட்டம்.
     
  23. தோல்வியின் காரணத்தைத் தன்னிடம் காண்பது, பூரண யோகம். ஒரு செயலில் பலர் கலந்திருப்பதால், காரணத்தை மற்றவர் மீது சுமத்துவது எளிது.
     
  24. தோல்வியின் காரணத்தைப் புற நிகழ்ச்சிகளில் காண்பது தன்னைத் திருத்த மறுப்பதாகும்.
     
  25. அதே காரணத்தை பிறர் மீது சுமத்துவது, அகந்தை தன்னை வளர்ப்பது ஆகும்.
     
  26. ஆசை பூர்த்தியானால் திருப்தி ஏற்படும்.

    ஆசையின் தரம் திருப்தியின் தரத்தை நிர்ணயிக்கும்.

    ஆசையில்லாவிட்டால் நிறைவு ஏற்படும். அதனால் (consciousness) ஜீவியம் மலர்ந்து இனிமையடையும்.
     
  27. மனம் ஒருநிலைப்படுதல்

    மனத்தின் நம்பிக்கை, உணர்ச்சியின் வேகம், உடலின் நிதானம் ஆகியவை, மனம் நிலைப்படுதலை நிர்ணயிக்கும்.

    அலைபாயும் மனமுடையவன் ஓடும் எண்ணங்களில் வாழ்பவன்.

    ஓடும் எண்ணம் நின்று, பயன் கருதி செயல்படுவதை விட்டு, பகுத்தறிவைத் தீட்டாமலிருந்தால்தான் மனம் தூய்மையடையும்.

    மனம் தூய்மையடைந்தால், தூய்மையான ஆன்மாவுக்கு வழி செய்து மோட்சத்தைக் கொடுக்கும்.

    சமர்ப்பணம் என்பது பிரகிருதியைப் புருஷனுடன் இணைப்பது, மனத்திட்பம் முழுவதும் ஆத்ம சமர்ப்பணத்திற்காகச் செலவிடப்படுதல் சைத்திய புருஷனில் மனம் நிலைப்பதாகும்.

    ஒரு கரணத்திற்குரிய புருஷன் வெளிப்பட்டால்தான், தீட்சண்யமாக மனம் நிலைப்படும். பேசும் பொழுது மனம் நிலைப்பட வேண்டுமானாலும், உணர்ச்சி வசப்பட்டபொழுது அங்கு உணர்வு நிலைப்பட வேண்டுமானாலும், அதற்குரிய புருஷன் வெளிப்பட வேண்டும்.
     
  28. உலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்தும் உயர் நிலைகளில் ஜனிக்கும் தருணம், அன்னையின் ஜென்மதினம்.
     
  29. மனம் திறந்து பேசுவது பல நிலைகளில் அமையும். - செய்திகளைப் பகிர்ந்து கொள்வது. - நாமறிந்ததை மற்றவர்க்குச் சொல்வது. - நம் நோக்கங்களை வெளியிடுவது. - சூட்சுமமான செய்திகள், எண்ணங்கள், நோக்கங்களைச் சொல்வது.
     
  30. நல்லது-கெட்டதைத் தாண்டி வந்தால், சைத்திய உலகை அடைகிறான். இது மனிதனுக்குச் சிரமமான காரியம். சமூகத்தின் கடந்த காலத் தீமையைக் கடந்து வந்தவன் மனிதன். கடந்த காலக் கொடுமையை இன்று விலக்கி நல்லதைப் பின்பற்றுகிறான். அதனால் நல்லது எது, கெட்டது எது என்ற பாகுபாடு போய்விடுகிறது. சமூகம் ஏற்பதையே நல்லதென நினைக்க முடிகிறது.
     
  31. ஒரு திட்டத்தை அதற்குரிய நிலையில்தான் ஆரம்பிக்க முடியும்.வேறு ஒரு நிலையில் நிச்சயமாக அதை ஆரம்பிக்க முடியாது. (E.g.) உணர்ச்சிக்குரிய சேவையை மனத்திற்குரிய திட்டத்தால் ஆரம்பிக்க முடியாது. ஆன்மீக தியானத்தைச் சிந்தனையால் செய்ய முடியாது. யோகம் ஆன்மீகமானது. அதைச் சமர்ப்பணத்தாலோ, மனதை ஒருநிலைப்படுத்துவதாலோ ஆரம்பிக்கலாம். விவாதத்தாலோ, படிப்பாலோ, பூஜையாலோ யோகத்தை ஆரம்பிக்க முடியாது.
     
  32. ஒரு விஷயத்தைப் பற்றியோ அல்லது ஒருவரைப் பற்றியோ மனம் நினைப்பது, மனதில் அவர் மீது ஆசையிருப்பதைக் குறிக்கும். தாமே அவை நம்மை நோக்கி வருவது ஆசையில்லாததைக் குறிக்கும்.
     
  33. விஷய ஞானம் (Conceptual understanding) என்பது ஞானத்தின் ஒரு பகுதி. சொற்களின் ஆதியைத் தெளிவாக அறிவதால் பெறக் கூடியது. சொற்களின் ஆதியை அறிவதுபோல், கருத்தின் ஆதியையும் அறிந்தால் விஷய ஞானம் பூர்த்தியாகும்.
     
  34. ஞானம் என்பதைப் பல வகைகளாகப் பிரிக்கலாம். அறிவு பெறும் ஞானம்.

    உணர்வு பெறும் ஞானம்.

    ஜடம் பெறும் ஞானம்.

    ஆத்ம ஞானம்.

    இவை அனைத்தும் ஜீவனின் பகுதிகள். ஆதலால், இவை ஜீவன் பெறும் ஞானத்தின் பகுதிகள். ஜீவன் பரம்பொருளோடு ஐக்கியமாகும் பொழுது ஞானம் பெறுகிறது.
     
  35. பிறரைக் கொடுமைப்படுத்தும் உரிமையை, மனிதன், நியாயம் எனக் கருதுகிறான்.
     
  36. விழாக்களில் மகிழ்வது பொதுமக்கள். சொந்த உணர்வில் திளைப்பது சாதாரண மனிதன். இறைவன் மீது எழும் உணர்வு, பக்தி. உணர்வு உயரும் பொழுது, ஞானத்தைப் போல் (intuition) சகஜ ஞானமாகிறது.
     
  37. எதையும் நினைக்காமல் நம்முள் இருக்கும் நம்பிக்கையை, பூமாதேவி ஏற்றுக் கொள்கிறாள். தெளிவுள்ள நம்பிக்கைக்கு வாழ்வு பரிசளிக்கிறது. ஆன்மீக நம்பிக்கைக்கு அதுவே பரிசு.
     
  38. மனம், அகந்தை, ஆசை, நோக்கம், உந்துதல் ஆகியவற்றைப் பூரணமாக அறிவது, யோக ஞானம்.
     
  39. பேரத்தில் வெற்றி பெறுவது வலிமை. தோல்வியடைவது வலிமை யற்றவனின் நியாயம்.
     
  40. பெரிய பலன், பெரிய இலாபம், பெரிய வருமானம் போன்றவை பெருந்திறனால் மட்டும் பெறக்கூடியவையில்லை. நல்ல பெரிய சூழ்நிலையில் ஒரு சிறு சாதகத்தாலும் வரலாம்.
     
  41. எனவே அதிர்ஷ்டத்தைப் பெறும் முக்கிய இரகஸ்யம், எப்படி சூழலைச் சாதகமாகப் பயன்படுத்துவது என்பதில் உள்ளது.
     
  42. தங்கள் திறமைக்கேற்ற பலன் பெறுபவர்கள், பலன் கருதாமல் சூழலை வளர்க்கப் பாடுபடுபவர்கள். அவர்கள் தேசீயத் தலைவர்கள் போன்று செயல்படுவார்கள்.
     
  43. நூறு முறையும் சொன்னதைத் திருப்பிச் சொல்ல வெட்கப்படுபவர்கள் அதே எண்ணம் மனதில் ஆயிரம் முறை வருவதால் வெட்கப்படுவது இல்லை; பெருமையும்படுவார்கள். மேலெழுந்த மனத்தின் அறியாமை இது.
     
  44. இறைவனைக் காணும்வரை, மனிதன் பல முறைகள் அவன் மீது இடறி விழுவதை மனதிலுள்ள அழைப்பு குறிக்கும்.
     
  45. தன்னை அறிதல்: பரிணாமத்தில் நம் நிலையை அறிய நாம் பரிணாமத்தின் முறையை (process) அறிய வேண்டும். அதை அறிவதற்கு முன் உணர்ச்சியின் முறையையும், அதன்முன் சமூகத்தின் முறையையும் அறிய வேண்டும்.
     
  46. உறவை விடாமல் சமர்ப்பணத்தை மேற்கொண்டால், பெரும்பாலோர் விலகுவது தெரியும். அவர்கள் விலக்கப்பட வேண்டியவர்கள். மீதி இருப்பவர்கள் மூன்று வகையினர்,

    1. யோகத்திற்குரியவர்கள்,
       
    2. யோகத்தின் எதிரிகள்,
       
    3. உன்னால் விட முடியாதவர்கள்.

     
  47. உரிமை பாராட்டுவது ஆசையைக் குறிக்கின்றது. விருப்பு, வெறுப்பு அகந்தையைக் குறிக்கிறது. காட்சி ஏற்பட்டு திருஷ்டியாக முதிராமல் இருப்பது மனதைக் குறிக்கிறது.
     
  48. நாணயம், விஸ்வாசம், கற்பு, போன்ற குணங்களுக்கு நிறைவுள்ளபோது மட்டுமே மதிப்புண்டு. ஓரிழை குறையானால் அவை தம் நிலையை இழந்துவிடும். இது பூரண யோகமென்பதால் இதை ஆரம்பிக்க, பூரணமான முறையான சமர்ப்பணத்தால்தான் முடியும். அதில் குறை உள்ளவரையில் ஆரம்பிக்க முடியாது.
     
  49. தவிர்க்க முடியாதது முதன்முறை சமர்ப்பணம்.ஆனால் அதை ஆரம்பிக்க, பூரணமாக மனம் ஒருநிலைப்படுதல் தேவை. மனம் பூரணமாக ஒருநிலைப்பட்டால், ஜீவன் முழுவதும் இறைவனை நோக்கி விழிப்புறும்.
     
  50. ஒருநிலைப்பட, மூன்று நிலைகளுண்டு. செயல், எண்ணம், உந்துதல்.
     
  51. எண்ணம், மனத்தின் ஆசை.

    தனக்குக் கிடைக்காததை உணர்வு ஆசையால் எட்டுவது போல், தனக்குப் புரியாததை மனம் எண்ணத்தால் எட்டித் தொட முனைகிறது.
     
  52. பிரகிருதியை விட்டு, புருஷனை நோக்கிச் செல்வதையே யோகங்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. பூரண யோகம், பிரகிருதியின் ஆன்மாவை முக்கியமாகக் கருதி அது விழிப்பு அடைந்து, ஆன்மீக பலத்தால் முன்னேற வேண்டும் என்று கருதுகிறது. சைத்திய புருஷன் ஆன்மீகத் திருவுருமாற்றத்தால் சத்தியஜீவியத்தை அடையும் பாதை அது.
     
  53. ஒவ்வொரு நிலையும் (plane) அடுத்த நிலையை உற்பத்தி செய்கிறது. கடைசி நிலையை (true physical) சூட்சுமமான உண்மை ஜடம் என்கிறார். (E.g.) ஜடமான ஸ்தூல உடலுக்கு, சூட்சும சரீரம் உண்டு. ஒவ்வொரு நிலைக்கும் சூட்சும நிலையுண்டு. ஜடம் உயர்ந்து பிராணன், மனம், ஆன்மா உண்டாகின்றன. உடல் முதலில் பிராணனாலும், பின்னர் புத்தியாலும் ஆளப்படுகிறது. அடுத்த நிலையில் ஆன்மாவில் ஆளப்படுவதை உண்மையான ஸ்தூல உடல் என்கிறார். அதற்கும் சூட்சுமப் பகுதியுண்டு. அதுவே (true physical) உண்மையான சூட்சும ஜடம். இதுவும் சூட்சுமம் உடையதென்றாலும் இதன் சூட்சுமம் உயர்ந்தது.
     
  54. ஒரு நேரம் பிரார்த்தனை சாதிப்பதை, வாழ்வையும், செயலையும் முறைப்படுத்தினால் பிரார்த்தனையின்றி தாமே அது போன்ற காரியங்கள் நடக்கும்.
     
  55. உணர்வையும், எண்ணத்தையும் மீறிய சக்தியுடைய (will) திறன் இருந்தால்தான் சமர்ப்பணத்தை ஆரம்பிக்க முடியும்.
     
  56. உடனுள்ளவருடன் உணர்ச்சிபூர்வமாகச் செயல்படுவதற்கே (responding and reacting) நம் சக்தி முழுவதும் செலவாகிறது. அவர்கள் அர்த்தமற்றவர்கள். அவர்களை மறந்து செயல்படுவதே எதையும் சாதிக்கும் திறன் அளிக்கும்.
     
  57. எதை அதிகபட்சம் நுகர முடிகிறதோ அதுவே மனிதன் அதிகபட்சம் சாதிக்கக்கூடியதை நிர்ணயிக்கும்.
     
  58. சுதந்திரமான சூழ்நிலையில்தான் மனிதன் வளருவான்.

    ஒருவன் வளரும் சூழநிலை, சுதந்திரம் என்பதற்கு ஓர் அடையாளம் உண்டு. அவனைச் சுற்றியுள்ளவர்களும் வளர்ந்தால், அவனுடைய சூழ்நிலை, சுதந்திரம் என்பது உறுதி. அவர் மற்றவர்களோடு கொண்டுள்ள தொடர்பு, அந்தச் சூழ்நிலையை நிர்ணயிக்கும். மற்றவர்களைச் சுதந்திரமாகச் செயல்படத் தூண்டும் உறவு சுதந்திரமான உறவு. கேட்பவர் விருப்பமாகக் கேட்டுக் கொள்வார் எனில் பேசுபவருக்கு உற்சாகம் எழும். கேட்பவர் பேசுபவரிடமிருந்து கற்றுக் கொள்ளக்கூடியது உண்டு என்று கருதினால், பேசுபவருக்கு உண்மையான உற்சாகம் எழும். அம்மனநிலைக்கு "அடக்கம்" என்று பெயர்.
     
  59. பிறர் அறியாமை மூலம் இறைவன் உனக்குத் தெளிவேற்படுத்த விரும்புவதைக் கண்டுகொள்வது அடக்கம். நம் அறிவுக்குப் பின்னுள்ள அறியாமையையும், பிறர் அறியாமையைச் சூழ்ந்துள்ள அறிவையும் காண்பது அடக்கம்.
     
  60. காட்டமான ஹாஸ்யம், சொல், உரையாடல் மற்றவரைச் சுடும். அது அடக்கத்திற்கு எதிரான அகந்தை. தன் காரமான சுபாவத்தை அறியாமல் இருப்பது கண்மூடித்தனமான அகந்தை.
     
  61. ஸ்ரீ அரவிந்தர் எழுதியவை, சிருஷ்டியைத் தழுவியவை.அந்த அளவு விசாலமான புத்திக்கே அது விளங்கும்.
     
  62. ஆன்மீக மக்கள் விலக்கும் பணத்தை அசுரர்கள் ஆட்கொள்வதைப் போல், மனித நட்பில் இருவரிடையேயுள்ள தூரம் சத்தியத்தால் நிரப்பப்படாவிட்டால், பொய்மை அதை நிரப்பும். சத்தியமானவன் மரியாதை காரணமாகத் தன்னை வலியுறுத்தாவிட்டால், பொய்யானவன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வான்.
     
  63. சத்தியமானவன் பொய்யானவனுடைய உறவில் தன்னை வலியுறுத்துவது பொய்மையைத் தடுப்பதற்காக.
     
  64. உடைந்து போன பொருளை ரிப்பேர் செய்ய, தேவையான கருவிகளுடனும், திறமையுடனும் ஒருவர் வருவதைப் போல் பிரச்சினையுள், அன்னை வருகிறார்.
     
  65. கையால், ஒரு சமயம், ஒரு காரியத்தைத்தான் செய்ய முடியும். ஏனெனில் பொருள்களைப் பயன்படுத்த வேண்டிய தேவையிருப்பதால் ஒரே சமயத்தில் பல காரியங்களைச் செய்ய முடியாது. மனத்தால் ஒரே சமயத்தில் பல விஷயங்களைச் சிந்திக்க முடியும்.
     
  66. ஜீவன் மலர்ந்து, உணர்ச்சி வயப்பட்டு, செயலோடு ஒன்றிய நேரம், மனிதனால் உச்சகட்டச் சாதனையை எட்ட முடிகிறது. உலகத் தலைவர்கள் சிலரிடம் ஓரளவு இக்குணம் காணப்படுகிறது.
     
  67. மனிதன் அதிகபட்சம் சாதிப்பது, பக்தனுக்குக் குறைந்தபட்ச சாதனை ஆகும்.
     
  68. பக்தன் தன் உச்சகட்டத்தில் அன்னையுடன் வாழ்வில் ஒன்றிவிட்டால், அவனுக்குரிய அதிகபட்ச பலன் உண்டு.
     
  69. பக்தனுடைய உச்சகட்டம் சாதகனுக்குக் குறைந்தபட்சம்.
     
  70. பக்தன் வாழ்வில் தன் முன்னேற்றத்திற்காக இருக்கின்றான். சாதகனின் வாழ்வே யோகம். அவனுக்கு வாழ்வென்று ஒன்றில்லை. அன்னைக்காக, அன்னையுடன் யோகத்தில் ஒன்றியவன் சாதகன்.
     
  71. சாதகனின் உச்சகட்டம் அன்னை.
     
  72. ஒரு விஷயத்தில் உந்தப்பட்டு மனிதனுடைய சக்தி அவனை மீறிய அளவில் செயல்படும் பொழுது அவனுக்கு நிறைவுண்டு. இறைவனையடைய மனிதன் தன்வயமிழந்தால் ஆன்மீகப் பூரணம் ஏற்படும்.
     
  73. சிலருக்கு ஒரு நல்லது செய்தவுடன் வாழ்வு நமக்குப் பல நல்லவற்றைச் செய்யும். வேறு சிலருக்குக் கெடுதல் செய்தால் வாழ்வு முன் போலவே தொடர்ந்து பல நல்லவற்றைச் செய்யும். நெருங்கியவர்களும், தூரத்து நண்பர்களும் இதற்குட்பட்டவர்கள். இதற்கு முடிவான கட்டம் நம்முள் உள்ளது. நம்மிடம் உள்ள சில நல்ல அம்சங்களுக்கு நல்லது செய்தாலும், சில கெட்ட அம்சங்களுக்கு கெட்டதைச் செய்தாலும் உடனே பல நல்ல காரியங்கள் நடைபெறும்.
     
  74. (Constitutional ignorance) கரணங்கள் பிரிந்து உள்ளதால் ஏற்படும் அறியாமை சைத்திய புருஷனை அடைந்தவுடன் மறையும்.
     
  75. ஆண்டவன் இன்று இங்கு நடமாடினால் தன் லீலையைப் பார்ப்பான். தான் கண்ட எதையும் கண்டிக்கமாட்டான். தற்சமயம் உள்ளுறை இறைவன் லீலையை நடத்துகிறான். அவன் மனத்துள் உறைவதால் வெளி நிகழ்ச்சிகள் முறையாக நடக்கின்றன. இறைவனே உலகில் நடமாடினால், நல்லதும் பரிணாமமும் சக்தி பெறுகின்றன. எனவே சூழல் அவனால் உயருகிறது. அவனே நல்லதையும் ஆதரிக்கலாம் அல்லது சூழல் ஆதரிக்கும்.
     
  76. மனம் முழுவதும் சமர்ப்பணத்திற்குத் தயாராகும் வரை, ஒரு தனிச் செயலைப் பூரணமாகச் சமர்ப்பணம் செய்ய முடியாது.
     
  77. மனிதன் உணர்வால் செயல்படுகிறான்.முன்னேற வேண்டுமானால் அவன் மனத்தால் செயல்பட வேண்டும். இதே போல் மனத்தை சகஜ ஞானத்திற்கோ (intuition) அல்லது சத்தியஜீவியத்திற்கோ உயர்த்த முடியுமா?
     
  78. மனிதன் உயர வேண்டுமானால் எண்ணம் இல்லாம் சிந்தித்து முனிவர் நிலையை அடைவதே முடியக்கூடிய அடுத்த கட்டம்.
     
  79. அன்னை தம் மீது நம்பிக்கையுள்ளவர் தாமுயர வேண்டி அன்னையை அழைத்தால், அன்னை அவர்கள் நேரடியாக ஒரு செயலில் சத்திய ஜீவியத்தை அடையும் வகை செய்கிறார். சில க்ஷணங்களேயாயினும், அன்னை அதைச் செயல்படுத்துகிறார்.
     
  80. தன் பழக்கங்களையும், உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் விடுவதே சிரமம், அன்னையை அழைப்பது அத்தனை சிரமம் இல்லை என்பதை அவர் காண்பார்.
     
  81. முன்னேற்றத்திற்குரிய கட்டங்கள்:

    • ஒரு குறிப்பிட்ட காரியத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
       
    • நம் சொந்த உணர்வுகள் தடை என்பதை அறிய வேண்டும்.
       
    • அவற்றை விட முடிவு தேவை.
       
    • அன்னையை அழைக்க மனம் விழைய வேண்டும்.
       
    • சர்வாரம்பப்பரித்தியாகியாக வேண்டும்.
       
    • எவ்வளவு நாள் இம்முடிவு நீடிக்கின்றதோ அதுவே முன்னேற்றத்தின் அளவு.

     
  82. நடைமுறைக்குகந்த ஆரம்பம்

    பகவான் சிருஷ்டியைப் பற்றிப் பேசும் பொழுது அதிகபட்ச ஆனந்தம் தானே மறைந்து கொண்டு பின்னர் கண்டுபிடிப்பதில் உள்ளது என்கிறார். ஒரு புதிய வேலையைக் கற்றுக்கொள்ளுதல் போன்ற அன்றாட வாழ்வில் "தானே மறைந்து கொள்ளுதல்'' என்றால் என்ன என்று நாம் காண வேண்டும். இன்று "தானே மறைந்து கொள்ளுதல்'' மறைவாக உள்ளது.
     
  83. 'தானே மறைந்து கொள்வதை', சிறு சிக்கல்களில் காண முயல்வதே தன்னையறிதலின் முதற்படி.
     
  84. மறைவான செயலை (self concealing) வெளிப்படையாக்குவதே தன்னை அறிவதைப் பூர்த்தி செய்யும்.
     
  85. உச்சகட்டத்தில் இதை ஆரம்பிக்க அன்னை உதவுகிறார். அது தொடராது. கீழ்மட்டத்தில் ஆரம்பித்தால் தொடர்ந்து வரும். ‘தானே மறைந்து கொள்வதை' அறிவதே முதற்கட்டம். அதுவே முக்கியம்.
     
  86. தன்னையறிதலுக்கு அறிகுறிகள் :

    எரிச்சல்
    இன்றைய பழக்கங்களை விட, பிரியம் இல்லை.
    சந்தோஷம்
    தன்னையறியும் நிலைக்குரியது.
    தன்னை மீறிய மலர்ந்த உணர்வால் பெருமகிழ்ச்சி
    தன்னையறிதல்
    நடப்பதை அறியும் தெளிவு
    எல்லையைத் தாண்டிய நிலை.

     
  87. எல்லையில் செய்யும் சோதனைகளே சிறந்தவை. பழைய பழக்கம் தடையாக இல்லாவிட்டால் அது எல்லைக்கோடாகும்.
     
  88. எல்லையில் உள்ள எல்லா நிகழ்ச்சிகளையும் இது போல் முடித்து விட்டால், அது யோகத்திற்குரிய - தன்னையறியும் நிலை.
     
  89. ’யோயஸ்சிரத்தகா' என்பதை அறிய இன்றுள்ள நிலைக்கு எப்படி வந்து சேர்ந்தோம் என்பதை அறிய வேண்டும்.
     
  90. எதைத் தேட வேண்டும் என்பது ஞானம்.ஆன்மாவை எப்படித் தேட வேண்டும் என்பது யோகம். ஆன்மா நம்மை அறிவது ஆத்ம ஞானம். சமர்ப்பணத்தால் ஆனந்தத்தைத் தேடுவது பூரண ஞானம்.
     
  91. தவற்றால், சரியானதைப் பூர்த்தி செய்யும் முயற்சி, ஞானம் சித்திக்கும் நேரம்.
     
  92. வலியை ஆனந்தமாக்கும் திறன், மனத்திற்கு இல்லை; ஜீவியத்திற்கு உண்டு.
     
  93. மனிதன் ஆனந்தத்தை அவனுடைய ஜீவியத்தில் ஆழ்ந்து ஏற்றுக் கொண்ட நோக்கங்களால் வலியாக மாற்றுவதை நாம் காண்கிறோம்.
     
  94. தானுள்ள நிலையில் (plane) தாழ்ந்து உள்ளவர்கள் மனிதனுக்குத் தொந்தரவு செய்வது இல்லை. தன் நிலைக்குப் புறம்பானவர்கள் தொந்தரவு செய்வார்கள்.
     
  95. நாம் மௌனத்தைத் தேடிப் போவது எல்லா யோகங்களுக்கும் உள்ள நிலை. மௌனம் நம்மைத் தேடி வருவது பூரணயோக நிலை.
     
  96. அறிவேயில்லாதவன், தன் விவேகத்தை வியந்து கொள்வது போல், யோகத்திற்கு எதிரான குணத்தை நாம் நம் உயர்ந்த யோகத் தகுதி என்று நினைக்கிறோம்.
     
  97. (Luck) அதிர்ஷ்டம் நன்றியறிதலாகும்.
     
  98. அன்னைக்கு முழுவதும் அடிபணிவது அவர்களுக்குரிய நல்ல செயல்களுக்கும், குணங்களுக்கும் அடிபணிவதாகும்.
     
  99. அடிக்கடி யோகத்திற்கு முரணானதைச் செய்பவன், யோகத்தை ஆழ்ந்து பின்பற்றுகிறான் எனப் பொருள்.
     
  100. சுயநலம் நிறைந்தவனுக்கு, தான் தன்னலமற்ற குணம் நிறைந்தவன் என்பது தெளிவாக ஏற்றுக் கொள்ளும் உணர்வாகும்.

*****



book | by Dr. Radut