Skip to Content

10 . பாகம் - 10

  1. "மனம், திருட்டு ஆசையை நாடும்" என்பது ஆங்கில வாக்கு. லீலை என்ற உயர்ந்த கருத்தை இது தாழ்ந்த நிலையில் வெளிப்படுத்துகிறது. தானே மறைந்து, மறந்து, மீண்டும் காண்பதே சிருஷ்டியில் பெரிய ஆனந்தம் என்பதே அடிப்படை உண்மை.
     
  2. தீமை மாறுதலுக்கு அவசியம். தீமை என்ன என்பதை அறிந்தால் தீமை மறையும். தெளிவு குறையும் வரை, தீமையால் கஷ்டப்பட வேண்டும்.
     
  3. அனுபவிப்பதையே அறிய முடியும். அதனால் உணர்வு அறிகிறது. எனவே அது உணர்வின் சித்தி. மற்றவை சொல்லின் தெளிவு. மனம் கண்டது, அறிவுக்குரிய உண்மை; தத்துவம். நமக்கு லீலை விளங்க நாம் பரம்பொருளை உணர்வில் அறிய வேண்டும். இப்பொழுது பரம்பொருள் பரம்பொருளுக்கே விளங்கும் நிலையிலுள்ளது.

    இன்று லீலை, பரம்பொருளுக்குத் தெளிவு.

    நமக்குத் தெளிவானது உணர்வு மட்டுமே.

    பரம்பொருள் உணர்வைத் தொட்டால், லீலை உணர்வுக்கு - நமக்கு - தெளிவாகும்.
     
  4. சத்தியஜீவிய சக்தி ஒரே ஒரு முறையும் செய்ததைத் திரும்பச் செய்யாது. வெற்றியாகப் பயன்படுத்திய முறைகள், உபாயங்கள் அடுத்த முறை பயனில்லாமலிருப்பதை நாம் பார்க்கலாம். மறுமுறையும் பயன்பட்டால் அது சத்தியஜீவிய சக்தியாகாது.
     
  5. தன்னையே ஒளித்து, மீண்டும் காண்பதே இருப்பதில் பேரின்பம் என்கிறார் பகவான். தடங்கலைத் தாண்டி வருவது இன்பம் துய்க்க, பெரிய வாய்ப்புகளை அளிக்கிறது. இதை, தெரிந்தும் செய்யலாம்; தெரியாமலும் செய்யலாம். நம் உரிமைகளை, குழந்தைகள், மனைவி, கீழுள்ளவர்களுக்குக் கொடுத்து, அதை ஒரு கொள்கையாகப் பின்பற்றி, அவர்கள் செயலை அனுபவிப்பது இம்முறையின் சிகரம். அதைவிட உயர்ந்தது, அவர்கள் தவறாக அவ்வுரிமையைப் பயன்படுத்துவதை நாம் ரசிப்பது. அதன் ஆன்மீக உச்சம் ஈஸ்வரன் சக்திக்குச் சரணடைவதாகும். பிரச்சினைகளும், சிரமங்களும் நாம் கண்மூடித்தனமான லீலையில் ஈடுபட்டதைக் குறிக்கும்.
     
  6. மனிதன் நாடகத்தில் தன் பங்கை நிறைவேற்றுகிறான்.அதைத் தன்னை அறியாமல் செய்கிறான். இறைவன் தன் நாடகத்தை, தன்னையுணர்ந்து நடிக்கிறான். மனிதனைப் பொருத்தவரை மனிதனும், வாழ்வும் கண்மூடியுள்ளனர். இறைவன் விஷயத்தில் மனிதன் தன்னை அறியவில்லை என்றால் இறைவன் தன்னை அறிவான். இருவரும் தம்மை அறிந்தால் நாடகம் முடியும்.
     
  7. நம் வாழ்வையும், பண்புகளையும் அன்னை நோக்கில் அளந்து பார்க்க வேண்டும். அன்னையை நோக்கிச் செல்ல, அது உதவும். பதிலாக அன்னையை நாம் நம் வாழ்வின் கோணத்தில் அளந்து பார்க்கிறோம். அதன் மூலம் மனிதனுக்குரிய அதிகபட்ச வளர்ச்சிக்கு மேல் நாம் உயர முடியாது.
     
  8. மகாபுருஷர்கள் அவ்வப்பொழுது உலகுக்கு அறிவித்ததை மனிதன் முழுவதும் பெற்றுப் பலனடைய இன்னும் பல நூற்றாண்டுகளாகும். ஆன்மாவில் அவர்கள் பெரியவர்கள் என்பதால், நாட்கள் அதிகமாகும். அவர்களுடைய அன்றாட வாழ்வில் அவர்கள் அக்காலத்து மனிதர்களாகவே இருந்தார்கள். இன்று எளிய மனிதன், அவன், அன்றாட வாழ்வில், மகாபுருஷர்களைத் தாண்டியவனாக இருக்கிறான்.
     
  9. அநியாயம், பாரபட்சம், கோணல், தீமை, தவறு, குறை, தோல்வி ஆகியவை வாழ்வின் பகுதிகள். சாதாரணத் திறமையைவிட அதிகத் திறமையுள்ளவன் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவையும் அவனை பாதிப்பதில்லை. சராசரிக்குக் கீழுள்ளவன் வேலை செய்ய ஆரம்பித்தால் இவை அவனைப் பாதிக்கின்றன. (Not self) புறம், அகத்தைவிடப் பெரியது என அவன் காண்கிறான்.
     
  10. பரிணாமத்தை மேற்கொண்டவன் தீமையால் மனம் விட்டுப்போவதில்லை. வாழத் தகுதியற்றவனுக்குத் தீமையின் கொடுமை தாங்குவதில்லை.
     
  11. உலகத்தை அற்புதமாகக் காண, பரிணாமத்தைவிட உயர்ந்த நிலையிருக்க வேண்டும்.
     
  12. ஆழ்ந்த உணர்வையும், எண்ணங்களையும், அன்னைக்கு நன்றி சொல்லும் முன் கருத வேண்டும். இல்லாவிட்டால் நன்றி, மேல் மட்டத்திலிருந்து எழும். ஆழ்ந்த நன்றி எழ ஆழ்ந்த உணர்வும், நன்றியும் உதவும்.
     
  13. இனி அருளை ஏற்க முடியாது என்ற நிலை வந்தவுடன் வலக் கையில் வலி எழும். எழுதுவது தொழிலானவர்க்கு அவ்வலி உள்ளங்கையிலும், விரல்களிலும் தெரியும்.
     
  14. அடுத்த உயர்ந்த தீவிரத்திற்கு நன்றியறிதல் நகர்ந்தால், முன்னிலையில் நன்றியறிதல் பூர்த்தியாகும்.
     
  15. இலட்சிய உணர்வு, சேவை, உழைப்பு ஆகியவை பத்து வருஷ காலத்தில் முதிர்ந்து, அடுத்த பத்து வருஷத்திற்கு, கடின உடலுழைப்பைத் தருகிறது. முதல் பத்து வருஷம் உணர்வில் எழுந்த உருவங்கள், அடுத்த பத்து வருஷ உழைப்பால் வலியுறுத்தப்பட்டு உறுதி செய்யப்படுகின்றன.
     
  16. அது போன்ற பத்து வருஷ உழைப்பு, அடுத்த பத்து வருஷச் சிந்தனைக்கு ஜீவனைத் தயார் செய்கிறது.
     
  17. வாழ்வைப் பற்றிய சிந்தனை முற்றி, அன்னையின் கோட்பாடுகளைச் சிந்திக்க உதவுகின்றது.
     
  18. இலட்சியப் போராட்டம், கடின உழைப்பு, சீரிய சிந்தனை, உள்ளத்தின் உருவகங்கள் முடிந்தபின் சிந்திக்காமல் விளங்கும், உணர்வெழாமல் இன்பம் ஊறும், அசையாமல் சாதிக்கலாம்.
     
  19. எதிர்கால இலட்சியங்களை - சொத்துரிமையை அழிப்பது, பெண் விடுதலை - மனம் ஏற்றுக்கொண்டாலும், உணர்வு தயங்கும். உடல் உணர்வு எதிர்த்து, புரட்சி செய்யும்.
     
  20. ஜீவியம் மாறி, தயக்கம் மறைந்தாலும், உடலுணர்வின் எதிர்ப்பு சமூகச் சூழ்நிலை மாறும் வரை இருக்கும். அது போன்ற தயக்கத்தை விட, மனிதன் சில சமயங்களில் தன் இலட்சியங்களை அளவுகடந்து (over doing) பின்பற்றுகிறான்.
     
  21. அதிகமாகப் பின்பற்றுவதும், உடலின் எதிர்ப்பும் - ராகு காலம், சிறு வயது திருமணத்தை அழிப்பது - எதிர்பாராத அசம்பாவிதமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த விஷயத்தைப் பொருத்தவரை உள்ளுணர்வு உடல் அளவில் திருவுருமாற்றமடையும் வரை அவை இருக்கும்.
     
  22. காலத்தால் சமூகம் சாதிப்பதை, யோகம், ஆன்ம விழிப்பின் தன்னறிவால் சாதிக்கும். ஒரு சிறு அளவில் நாம் இதன் மூலம் காலத்தைக் கடக்கிறோம்.
     
  23. உடமைகளை இழப்பதை மட்டும் மனிதன் கண்டு வருத்தப்படுவதில்லை. தன்னைப் பிடித்த துரதிர்ஷ்டங்கள் போனாலும் வருந்துவான். அடுத்த கட்டமடைந்த பின்னும், முன் கட்டத்தின் உணர்வுகளிலிருந்து விடுதலை பெறாவிட்டால், முன் கட்ட திறமைகள் போனதால் வருத்தம் எழும்.
     
  24. வீண் பெருமைக்கு, தீவிர உணர்வில்லை. பெற்ற வெற்றியைப் பொருளாகப் பெறுதலுக்குத் தீவிரமுண்டு. சாதனைக்குத் தீவிர நிறைவு உண்டு.
     
  25. சில்லறைச் சந்தோஷத்தைத் தேடுபவரை நிதானமான மனிதன் குறைவாக நினைக்கிறான். பக்குவமான நிதானமுள்ளவனுடைய மனம் புண்பட்டபொழுது, உள்ளேயுள்ள கருணை அதைக் கரைக்கும் என்று அறியாது, ரணத்தை ஆற்றும் மனிதாபிமானத்தை நாடி, மனிதாபிமானத்தையே நிலைநிறுத்துகிறான்.
     
  26. மனிதத் திறமைக்கு முழுப்பலன், சந்தோஷம் பொங்கி வழியும் பொழுதுதான் கிடைக்கும். மனச்சாட்சியின் தயக்கமிருக்கும் வரை பொங்கி வழியும் சந்தோஷத்திற்கு அது தடை செய்யும்.
     
  27. பஞ்சத்தைப் பற்றிய கருத்துக்கு A.K.சென்னுக்கு உலகப் புகழ் கிடைத்தது. மானேஜ்மெண்ட் தத்துவத்தில் ஒன்றை உணவு வினியோகத்திற்குப் பயன்படுத்தியதின் பலன், அது பரம்பரைக் கருத்தை அடுத்த துறைக்குப் பயன்படுத்துவதை உயர்ந்த சிருஷ்டி ஞானம் (creativity) என்று உலகம் கருதுகிறது. பல ஆயிரம் கருத்துகள் அது போன்றுள்ளன.
     
  28. ஒரு புது விஷயத்தை - நமக்கு ஏற்கனவே தெரிந்ததைக் - கொண்டு புரிந்துகொள்வதை "அறிவு" என்கிறோம். புது விஷயத்தை அதன் கோணத்தில் புரிந்துகொள்வது சிந்தனையாகும்.
     
  29. ஆண், பெண் கவர்ச்சி இயற்கைக்குரியது. மனைவி தன்னைப் பாராட்டி அன்பு செலுத்துவாள் என கணவன் எதிர்பார்ப்பது உணர்வு. மனைவியின் ஆன்மாவுடன் கணவன் ஆன்மா கலப்பது ஆன்மீகம்.
     
  30. பல்வேறு புருஷர்கள் - அன்னம், பிராணன், etc. - அவற்றின் பிரகிருதிக்குட்பட்டுள்ளார்கள். புருஷப் பிரகிருதிக்குள்ள தொடர்பால் இது சாத்தியமாகிறது. பிராணனில் ஆசையும், மனத்தில் அகந்தையும் புருஷனை, பிரகிருதி ஆளப் பயன்படுகிறது. இத்தொடர்பை அறுத்தால் புருஷனுக்கு விடுதலை; கரைத்தால், புருஷனுக்கு பிரகிருதி அடங்கும்.
     
  31. மனம் சத்தியஜீவியத்தினின்று பிரிவது அறியாமை எனும் பிரிவினைக்குரிய தீவிரம். அதை அடுத்த நிலையில் உறுதிப்படுத்துவது அகந்தை.
     
  32. முழு ஆத்ம சமர்ப்பணம் எழ, சிறு காரியங்களை முழுமையாக, சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
     
  33. ஞானம் பெரியதானாலும், பலன் நடைமுறையில் சிறியதாகவுள்ளது - பிரம்மத்தின் மௌனத்தை அறிந்தாலும், எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை - என்பதால் முட்டுக்கட்டை போட்டு நெடுநாள் அப்படியே இருக்க வேண்டியுள்ளது. அதற்குள்ள வழிகளில் ஒன்று, சிறு காரியங்களில் சிறு குறையிருந்தால் அதை நீக்குவது. அதைக் கவனித்து, நீக்கினால், அங்குலம் அங்குலமாக வழிவிடும்.
     
  34. தெரிந்ததைக் கொண்டு தெரியாததை நம்புவது, நம்பிக்கை எனப்படும். தெரியாததைக் கொண்டு தெரிந்ததை மறுப்பது சந்தேகம்.
     
  35. "இலட்சியவாதிகள், தீவிரவாதிகள் அரசியலிலும், போரிலும் ஒரே குறியாக, தங்களை மறந்து சாதிக்கின்றார்கள். அவர்கள் சாதனை அறியாமையின் சாதனை" என்கிறார் பகவான்.
     
  36. தெரிய வேண்டியது தெரியாதது அறியாமை. "நாம் யார்" என்று தெரிந்து கொள்ள விருப்பப்படாமல், "தான்" - அது - யார் என்பதை மறக்கும் அளவுக்குப் போவது, பகவான் விளக்கப்படி "அறியாமை" ஆகும்.
     
  37. மனத்தில் நெறியின்றி திருமணமாகாமலிருப்பது உணர்வை விஷமாக்கி, வக்ரமாக்கும். தூய்மையான மனம் உடலில் தன் நெறியை கற்பாகவோ, பிரம்மச்சரியமாகவோ வெளிப்படுத்தினால், உணர்வின் நிறைவு உடலின் சுவையாகி, அன்னை ஜீவியத்தை வெளிப்படுத்தும்.
     
  38. வாழ்வெனும் கடலில் தன்னை ஒரு தூசியாக அறிவது உடலின் அடக்கமாகும்.
     
  39. கொலை, தீவிர எதிர்ப்பு, பரமவைரியாவது, ஆழ்ந்த வெறுப்பு, மானம் போகும் சொரணை, ஆழ்ந்த சோகம், மரியாதை போவது, மனம் புண்படுதல், பிடிக்காதது, ஏற்காதது, உறுத்தாத நினைவு இருப்பது, ஜீவனற்ற செயல் மறைய மறுப்பது ஆகியவை அகந்தை அழியும் நிலைகள்.
     
  40. பெருமையை நாடும் வீறாப்பும், புண்படும் அன்புள்ளமும் ஒரே நாணயத்தின் இரு புறங்களாகும். ஒன்றை அழித்தால், அடுத்ததும் மறையும்.
     
  41. கொடுங்கோலனை அழித்து தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணாவதாரம் வந்தது. அதனால் இன்றும் பகவத் கீதையைப் படிப்பவர்கள், கிருஷ்ணன் ஜெயிலில் பிறந்து, வெளியேறி, பட்ட கஷ்டங்களுக்கொப்பானவற்றை அனுபவிக்க நேரிடுகிறது. தங்கள் ஜீவியத்தில் அதைக் கடந்தவர்கள் கீதையைப் படிக்கும்போது, அக்கஷ்டங்களை அனுபவிக்கத் தேவை இல்லை.
     
  42. பொதுமக்களிடமிருந்து எவ்வளவு விலகியிருக்கிறோமோ அந்த அளவுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
     
  43. உன் சேவையின் பலன், தரம், மக்கள் மனநிலையை நிர்ணயிப்பதில்லை. உன் ஆன்ம வலிமை, வதந்தியைக் கடந்து வந்த அளவுக்கு, நல்ல பெயர் எழுகிறது.
     
  44. "உலகமே என்னுள்ளிருக்கும் பொழுது, தனிமை ஏது?" என்றார் பகவான். உடல் தனித்திருக்கலாம். ஜீவன் எப்பொழுதும் தனித்தில்லை. தனிமை, ஆன்மீக நெருக்கத்தை அதிகப்படுத்தும்.
     
  45. எந்தக் கட்டுப்பாடும் அதனளவில் நிறைவு பெறாவிட்டால், பலன் தராது. "யோகம்" என்பது உயர்ந்த வாழ்வு. கட்டுப்பாடு, அதன் ஆரம்பம்.
     
  46. சரித்திரத்திலும், குடும்பத்திலும் பெருஞ்சாதனைகட்குப் பின் பெருங் கொடுமைகளும், அவற்றைப் பொறுத்துக்கொண்ட தியாகங்களும் நிறைந்துள்ளன. கஷ்டங்களைப்பட்டவர் அவற்றைப் பொருட்படுத்தாமல், அந்தச் சாதனைகளைப் போற்றுவதே வாழ்வின் சூட்சும இரகஸ்யம். இதை, மக்களின் ஒத்துழைப்பு, தியாகம் என்கிறோம். எந்தக் குடும்பம் அல்லது நாடு இந்த நோக்கத்தை விரும்பி ஏற்கிறதோ, அவர்கள் எந்த உயர்வையும் எட்டலாம்.
     
  47. அருள் நிர்ப்பந்தப்படுத்தாது, நிச்சயமாகச் சுட்டிக்காட்டும். நிர்ப்பந்தப்படும் அருள், உள்ளிருந்து எழுவது; அதை ஆன்மாவின் அருள் என்கிறார்.
     
  48. ( Physical organisation) வாழ்வின் அமைப்பு மனிதனுடைய மையம். மௌனமான ஆழ்மனத்தின் செயல், உயிரைக் காப்பாற்றக்கூடியது அல்லது வாழ்வுள்ள நிலையில் அனுபவிப்பது. கலையுணர்வும், அறிவின் ஆராய்ச்சியும்கூட அதனால் ஒதுக்கப்படுகிறது. தன் போக்கை (occupation) அனுபவிக்க மனிதன் ஒதுக்கிய செயல்கள் திடீரென முளைத்து, குறுக்கிட்டு, அவனுடைய முக்கிய வேலையில் எழும். அதுவும் அவ்வேலை அவனுக்குப் பிடிக்காத நேரத்தில் எழும். இதுபோல் பேரிலக்கியமும் எழுவதுண்டு.
     
  49. செயல் பல நிலைகளிலுண்டு. அங்கு திறமை பூரணமானால் செயல் பூர்த்தியாகும். திறனாலான வாழ்வின் அமைப்பு (physical organisation), சக்தியாலான உணர்வின் அமைப்பு (vital organisation), எண்ணத்தாலான மனத்தின் அமைப்பு (mental organisation), ஆன்மீகக் கருத்தின் (real idea) சத்தியஜீவிய அமைப்பு போன்றவையாகும்.
     
  50. ஒரு நிலையில் அமைப்பு செறிவடைந்தால், அடுத்த நிலைக்குப் போகும்.
     
  51. திறமைகளை முறையோடு பெற்றவன், (decisions) முடிவுகளை முறைப்படுத்த முன்வந்தால், அது முடிந்து செறிவடையும் தருணம், உடலுழைப்பிலிருந்து, மனத்தின் திறனுக்கு நிலையாக வருவான்.
     
  52. பக்தர் அடிக்கடி பெறும் திடீர் உயர்வின் இரகஸ்யம் இதுவே. சத்தியஜீவிய சக்தியை, அன்னை அவர்க்களிக்கிறார். அதற்குரிய செயல்திறனை, பக்தர்களால் பெற முடிவதில்லை. அதை எட்ட மேதையின் எண்ணம், வீரனின் செயல், சிகரமான கருத்து, அற்புதத்தை அன்றாட நிகழ்ச்சியாக்கும் பிரார்த்தனை, மனிதனை, சத்திய ஜீவியத்துடன் இணைக்கும்.
     
  53. நீ ஒரு திட்டத்தில் நெடுநாளிலிருந்தால், உன் எண்ணம், நோக்கம், முடிவு ஆகியவற்றை முறைப்பத்தினால், வெளியிலிருந்து அது போன்ற எண்ணம், நோக்கம், முடிவு உன்னை நோக்கி வருவதைக் காணலாம். அது சூட்சுமமான அமைப்பு. ஆனால் தவறாது செயல்படும். நடைமுறையில் நாடும், உலகமும், உள்ளூரிலுள்ள உன் செயலுக்கும் எண்ணத்திற்கும் பதில் கூறும் வகையில் செயல்படும்.

    எண்ணம் சக்தி வாய்ந்தது;
    முடிவு கனமானது.


     
  54. அவ்வமைப்புகள் (organisations) திறமை, எண்ணம், நோக்கம், முடிவு, பண்பு, சூட்சுமத் தெளிவு ஆகியவற்றால் அமைந்தது. அந்தந்த நிலைக்குரியன ஆங்காங்கு செயல்படும். தேவைப்பட்டவை எல்லாம் நிறைந்தபொழுது அவை பூர்த்தியாகும். அதற்கு, சற்று முன்னும் பலன் தெரியாது.
     
  55. நிலைக்குரிய தரமுண்டு. தார்மீக எண்ணங்கள் மனத்திற்குரியவை; மற்ற நிலைக்குப் பொருந்தா.
     
  56. செயல்கள் போன்ற இவ்வமைப்புகள் கருவிகள். பண்புக்கும், தார்மீக எண்ணத்திற்கும் இவற்றிற்கும் தொடர்பில்லை. அதுவும் அவை வேறு நிலையைச் சேர்ந்தவையானால், தொடர்பேயிருக்காது.
     
  57. ஒரு காலத்தில் புனித உணர்வுகள் வேறொரு காலத்தில் கேலிக்குரியவை. உணர்வுகள், குறிப்பிட்ட காலத் தேவைகளால் நிர்ணயிக்கப்படுபவை. யுகாந்தர காலப் பண்புகள் அல்ல.
     
  58. சுபாவத்தைக் கட்டுப்படுத்துவது பலன் தராது.சுபாவம் முழுமையானது. அதைக் கட்டாயப்படுத்தும் எண்ணம் அதன் சிறு பகுதி. பகுதிகளின் நிர்ப்பந்தத்தை மீறி முழுமை தன்னைத் தன் நிலைக்குக் கொண்டு வரும்.
     
  59. அழைப்பை மீறிய பயம், பெரும் முயற்சியை மீறும் எண்ணம் ஆகியவை நம் அடிப்படை நம்பிக்கையை விரிவுபடுத்த வேண்டும் என்று அறிவிக்கின்றன. அதைச் செய்தால் பயம் மறைகிறது. சரணாகதியை எதிர்க்கும் எண்ணம் சரணடைகிறது.
     
  60. சாதனைக்குரிய வேலை தயாரான பின், முன்னிலையின் அனுபவத்தால் அது நிர்ணயிக்கப்படும். சாதனைக்குத் தயாராகும் முன், அனுபவம் வேலையைக் கெடுக்கும். தயாரான பின் அனுபவிக்க மறுத்தால், சாதனையைத் தடை செய்யும்.
     
  61. நகைச்சுவை, வாழ்வின் வளமான நயம். அறியாமை தன் மடமையை இனிமையாக உணர்ந்து மகிழ்ந்து பெருகுதல் நகைச்சுவையாகும்.
     
  62. சாதனைக்குரியவை முறையாக (1) வலிமை (2) அமைப்பான முறை (3) செயல் திறன் (skill).
     
  63. வேலையின் இரு பகுதிகள் இணைந்து செயல்பட ஒவ்வொன்றும் தன்னுள் முறையான அமைப்பை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும்.
     
  64. தனி மனிதனுடைய திறமைகள் சமூகத்தின் திறமைகளுடன் இணைந்து இழையும்பொழுது, பண்புகள் செயல்பட்டு காரியம் பூர்த்தியாகிறது. தனி மனிதனுடைய பண்புகள், சமூகத்தின் பண்புகளுடன் இணையும் இடம் எல்லாம் (reversal) ஜீவியம் புரட்சிகரமான மாறுதலையடைகிறது.
     
  65. விஸ்வாசம் உயர்ந்த மனித இலட்சியம். கடந்த கால விஷயங்களுக்கு விஸ்வாசமாக இருப்பது, குறிப்பாக அவற்றின் தோற்றத்திற்கு விஸ்வாசமாக இருப்பது, எதிர்கால முன்னேற்றத்திற்கு விலங்காகும். முடிவில் அதற்குத் துரோகமாகும்.
     
  66. ஒரு நிலை (level) முறையால் (organisation) செறிவாக நிறையும் பொழுது, அதை மேலும் உயர்த்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் (தவறு இழைத்தாலும்) வாழ்வு எதிரொலிக்கும்.
     
  67. வாழ்வு எதிரொலிக்க ஒரு வாழ்வு நிலையை அமைப்பால் செறிந்த நிறைவு செய்ய வேண்டும்.
     
  68. நெடுநாளாக நீ அறிந்ததை, பேப்பரில் எழுதினால், உடனே அவ்வறிவைப் பெற்று, காரியத்தை நிகழ்த்தும் திறன் பெறுகிறது.
     
  69. ஜபத்திற்குப் பலனிருப்பதற்கு முக்கிய காரணம் அது உடலின் ஜீவியத்தை, திரும்பத் திரும்பச் சொல்வதால் செறிந்த நிறைவு செய்வதாலாகும்.
     
  70. பரிசுத்தமானவனை, சுத்தம் குறைந்தவன் துரோகம் செய்கிறான் என நாம் நம்புவது உண்மையல்ல. உண்மையில் ஒரு வகையான குறைவை, அடுத்த வகையான குறைவு சந்திக்கிறது. நிலைமை தெளிவாக உள்ளது. குருட்டு அகங்காரம் தன் பெருமையை இவ்வகையில் நிலைநிறுத்த முயல்கிறது.
     
  71. குறைவே, குறைவைச் சந்திக்கும். பரிசுத்தம், குறைவைச் சந்திக்க இயலாது. ஒன்றை அடுத்தது தொடும் இடமில்லை.
     
  72. அறிவின் குறை, அறியாமையின் குறையைச் சந்திப்பதுண்டு.
     
  73. கட்டுப்பாடான முறைகள், உள்ளுறை அர்த்தமின்றியிருந்தால், கடுமை ஏற்படும்.
     
  74. போட்டிக்கு நிற்கும் எதிரிகள் உதாசீனம் செய்தால் அல்லது எதிர்த்தால், வெற்றி நிச்சயம்.
     
  75. எதுவும் அருளின் செயலே. நாமுள்ள நிலை சில சமயங்களில் அருளை ஆபத்தாகப் பெறுகிறது.
     
  76. நம் நிலை, காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. நிலையை மாற்றவோ, காலத்தைச் சுருக்கவோ, நாம் காலத்தைக் கடக்க வேண்டும். மனத்தையே கடப்பது சிறந்தது.
     
  77. நம் பார்வையை நிர்ணயிப்பது நம் நோக்கம். பிரபஞ்சத்தின் ஆத்மா தன் பரிணாம வளர்ச்சியை, தனி மனிதனின் நோக்கமாக வெளிப்படுத்துகிறது.
     
  78. பரிபூரணத் திறமையும், முறையும், நல்லச் செயலை சூழுமானால், சூழல் ஜடத்திலிருந்து தொடர்ந்து உயர்ந்து சத்தியஜீவியத்தை எட்டும்.
     
  79. நற்செயல் எனில் பழைய நோக்கங்கள் விலக்கப்பட வேண்டும்.
     
  80. பொறுப்பற்றதாகத் தெரியும் அளவுக்கு, பற்றற்றிருப்பது எதையும் ஆரம்பிக்க மறுக்கும் சர்வாரம்பப்பரித்தியாகியின் நிலை.
     
  81. தனக்கே அகத்துள் பலனடையாதவன், புறத்தில் பிறருக்கு உதவி செய்ய முன்வருவது வழக்கம். மகாபுருஷர்கள் மற்ற ஆத்மா மீது கருணை கொள்வது, தங்கள் நிறைந்த அகவெளியின் செறிவை அடுத்தவர்க்கு அகவெளிப்பாடாக அளிக்க முன்வருவதாகும்.
     
  82. உதவி செய்ய பெரும்பாடுபட்டாலும், பெறுபவர் சிறு குழந்தையாகச் சொல்லிய ஒரு சொல் அதிர்ஷ்டத்தையும், அன்னை அதிர்ஷ்டத்தையும் தடை செய்யவல்லது.
     
  83. நோக்கம் உள்ளவரை பலன் முழுவதையும் நிர்ணயிக்கும். தரும். ஆழ்ந்த நோக்கம் வாழ்வு
     
  84. செயலின் புறம் காலத்தால் அழியும். அதன் சூட்சுமப் பலன் அழியாது. எண்ணம், நோக்கம் அழிவதைப் போல் செயலை எளிதில் அழிக்க முடியாது.
     
  85. உயர்ந்த அறிவு வந்தால் எண்ணம் (reverses) மாறிக்கொள்ளும். உணர்வு உயர்ந்து தன் நோக்கத்திற்கெதிரான உயர்ந்ததைக் கண்டால் தலைகீழாக மாறும். காலம் கனிந்து செயலை அது போல் மாற்றவல்லது. உடல், தனக்கேயுரிய வாழ்வாக ஆழ்ந்துயர்ந்த தீவிரமான பரந்த நிலையைக் கண்ணுற்றால், தன் செயலை, தலைகீழாக மாற்றும்.
     
  86. நெருங்கி வாழ்ந்தால் ஜீவனற்று விரக்தி ஏற்படும். நிலை உயர்ந்தால் நெருக்கமான வாழ்வு நெருக்கத்தின் இனிமையையும், நிறைவையும் தரும். ஆதாயம் முதல் நிலை. அர்ப்பணம் அடுத்தது.
     
  87. இறைவனோடு வாழும் பொழுது அதிகமாகப் பெற்றுக்கொள்ளும் நிலை அதிக நெருக்கத்தை அளிக்கிறது. தன்னை அர்ப்பணம் செய்வதே பெறும் திறனை நிர்ணயிக்கும்.
     
  88. நீ அழிக்க விரும்புபவரிடமிருந்து மேலும் மேலும் பெற விழைவதன் காரணங்கள் பல:-

    1. வெட்கம் கெட்ட அல்ப புத்தி,
       
    2. பலமில்லாத நேரத்தில் பிறரை ஆள நினைப்பது,
       
    3. நற்பண்பில்லாத நிலை,
       
    4. பிறரை இறைவனின் கருவியாக்க, தன்னையறியாத உத்வேகம்.

     
  89. பகவான் வாழ்வு, அவருடைய தத்துவத்தைவிட வலுவான சூழலுடையது.
     
  90. ஆழ்மனத்தில் விரும்பிச் சேர்த்து இன்று மறந்தவை, பின்னர் (original ideas) புதிய கருத்துக்களாக எழும்.
     
  91. தாழ்ந்த பிறப்பும், சமூகம் விரும்பிப் புறக்கணித்ததும் பின்னர் பிரபலத்தையும் வெற்றியையும் நாடச் செய்யும்.
     
  92. வாழ்நாள் முழுவதும் தேடிய புனிதம் பூர்த்தியடையும் பொழுது அது அமிர்தமான அற்புதமாகி வாயால் பேசினால் அழியும் இனிமையாக மாறுகிறது.
     
  93. ஆழ்ந்து மறைக்க வேண்டிய இரகஸ்யம் உயர்ந்தோர்க்கும், தாழ்ந்தோர்க்கும் உரிய சட்டமாக எதிரெதிரான காரணத்தால் ஏற்படுகிறது.
     
  94. அன்னையின் சக்தியை ஒரு நிலையில் எழுப்பினால், அதைப் பெறத் தயாரான நிலை அதைப் பெற்றுக்கொள்கிறது.
     
  95. அவதார புருஷர், குரு, தலைவர்கள், மேதை ஆகியவர்கள் தங்களை நெருங்கியுள்ள சிஷ்யர்கட்கு, புதியதாக வருபவர்களுடைய சந்தேகம் எழுவதைக் காண முடியும்.
     
  96. தங்கள் நிலையைக் கடக்காத பெரிய மனிதர்கள், சவாலை விரும்புகிறார்கள். நிலையைக் கடந்தவர் சவாலைக் கண்டுகொள்ள முடிவதில்லை.
     
  97. சில சமயங்களில் அன்னை ஆத்மாவின் பலனுக்காக அதன் குறைகள் மூலமே செயல்பட முடிகிறது.
     
  98. அற்புதம் நிகழ வேண்டுமானால் அச்சக்தி அதற்குரிய பொருளை (substance) உற்பத்தி செய்யக்கூடிய நிலையிலிருக்க வேண்டும்.
     
  99. பரம்பரைச் சுபாவத்தையும், மனச்சாட்சியையும் மீறத் தயங்குவதை, அன்னை ஏற்று, அவற்றை மீறாமல் அனுபவிக்கும் சந்தர்ப்பத்தையும் அன்னை அளிக்கிறார்.
     
  100. நம் பூரணம் குறையானது என்ற ஞானம் பூரணமான பூரணத்தையறிய உதவும்.

*****



book | by Dr. Radut