Skip to Content

பகுதி 9

 1. பிரபஞ்சம் மனிதனில் குவிந்து சேருவது கருணையாகும்.

பிரபஞ்சம் கருணையால் ஜீவாத்மாவாகிறது.

அருள், கருணை, அனுதாபம், பரிதாபம் ஆகியவற்றை அன்னை பிரித்துக் காட்டியிருக்கிறார். நம்மால் பொறுக்கமுடியாமல் பரிதாபப்படுகிறோம். வேண்டியவர் வேதனை அனுதாபம் தருகிறது. எவரும் துன்பப்படக் கூடாது என்பது கருணை, துன்பம் இருக்கக் கூடாது என்பது அருள் என்பது அன்னை விளக்கம்.

துன்பம் என்பதை ஆன்மீகரீதியில் ஆண்டவனைவிட்டு விலகியிருப்பது என்பார்கள். ஆண்டவனை அடைவது இன்பம், அவரைவிட்டுப் பிரிந்துள்ளது துன்பம் என்பது தத்துவம். பிரபஞ்சம் இறைவனிலிருந்து பிரிந்து வந்து செயல்படுகிறது. இது மீண்டும் ஆண்டவனையடைய வழியுண்டா? வழியிருந்தால் பிரபஞ்சம் இன்பம் பெறும். இதைச் சாதிப்பது கருணை. பிரபஞ்சம் மீண்டும் இறைவனை அடைய தன்னுள் செறிந்த புள்ளிகளை ( dense points) ஏற்படுத்துகிறது. அவை ஆன்மாக்களாகும். அந்த ஆன்மாவைச் சுற்றி மனித ஜீவன் எழுகிறான்.

இறைவனிலிருந்து பிரிந்து துன்பநிலையில் உள்ள பிரபஞ்சத்தின் துன்பம் அழிய கருணை செயல்பட்டு, மீண்டும் பிரபஞ்சம் இறைவனையடைய, தன்னுள் பல்லாயிரம் செறிந்த புள்ளிகளாக ஆன்மாக்களை உற்பத்தி செய்து, அவ்வான்மாக்களைச் சுற்றி ஜீவன்களை எழுப்புகிறது. இச்செயல் கருணையால் நடந்ததாகும்.

செறிந்த புள்ளிகளான ஆன்மா முதல்நிலை வளர்ச்சியைப் பெற தன்னைச் சுற்றி அரண் அமைத்து அதனுள் வளர்கிறது. தான் பெறவேண்டிய அனுபவங்களை எல்லாம் பெற்று, வளர்ச்சி முடிந்த நிலையில் தன்னைச் சுற்றி ஆதரவாக முதலமைந்த அரண், இன்று சிறையாகிவிட்டதை அறிந்து, அரணைத் தகர்க்கும் வழியை நாடுகிறது. அரண் தகர்ந்தால் ஆன்மாவுக்கு விடுதலையுண்டு.

அரணான அகந்தையிலிருந்து விடுதலை பெற்ற ஆன்மா, தன் பிறப்பிடமான பரமாத்மாவையோ, அது உறையும் சச்சிதானந்தத்தையோ, அதற்கு முன்னுள்ள பிரம்மத்தையோ நாட விரும்பினால் ஆன்மா மோட்சப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறது என்று பொருள். மோட்சத்தைத் தேடும் ஆன்மா மோட்சம் பெறும். தான் பெற்ற விடுதலை கனிந்திருந்தால், மோட்சம் உடனே கிட்டும். கனியாவிட்டால், கனியும்வரை உலகில் ஜீவன் முக்தனாக வாழ வேண்டும்.

மோட்சப் பாதையை நாடாமல், பூரணயோகக் குறிக்கோளான சத்தியஜீவனை நாடினால் விடுதலை பெற்ற ஆன்மா பிரபஞ்சம் ழுவதும் பரவி, பிரபஞ்சத்தின் ஆத்மாவாகி, அந்நிலை முதிர்ந்த பின், பரமாத்மாவை எட்டித் தொட்டு, சத்தியஜீவிய உலகில் வந்து, தன்னை சத்தியஜீவனாகத் திருவுருமாற்றம் செய்துகொள்கிறது. இதன் முதற்படி பிரபஞ்சம் மனிதனில் குவிந்து சேருவது. எனவே இது கருணையாகும்.

*******

 • 691. ஜீவன் முழுவதும் ஆர்வமாகிப் பெற்ற ஞானமே தன்னையறிதல் என்பது. தன்னையறிந்தவன், தான் விருப்பப்படும் எதுவாகவுமாவான்.

இன்று தன் நிலையை அறிந்தவன் எதையும் சாதிப்பான்.

பகவத்கீதை நீ எதுவாக வேண்டும்என ஆர்வமாக விரும்புகிறாயோ, நீ அதுவாக மாறுவாய் என்கிறது. பூரண யோகத்தின் அடிப்படைக் கருத்தாக பகவான் வேதாந்த ஞானத்திலிருந்து ஏற்றுக் கொண்டதில் இதுவும் ஒன்று. முக்கியமானது. Synthesis of Yoga சின்தஸிஸில் 4ஆம் பாகத்தில் மூன்றாம் அத்தியாயம் முழுவதும் இக்கருத்தை விளக்குகின்றது. இக்கருத்து சிருஷ்டியின் ஆதியைத் தொடுகிறது. பரம்பொருள், பிரம்மம் (Absolute) என்பது பூவுலகை சிருஷ்டித்தது. அதன்

அடிப்படை 'அது எதுவாகவுமாக முடியும்'. உலகத்தை சிருஷ்டித்த பிரம்மம் (omnipotent) தான் எதுவாகவுமாக முடியும் என்பதால், மனிதன் தன்னுள் உள்ள பிரம்மத்தை எட்டினால் அவனாலும் அது முடியும். பூரண யோகத்தின் கருவி சரணாகதி. சரணாகதி மூலமே தன்னுள் புதைந்துள்ள பிரம்மத்தை எட்ட முடியும். திருவுருமாற்றத்திற்காக நாம் சரணாகதியைப் பின்பற்றுகிறோம். பகவத் கீதை மோட்சம் பெறுவதற்காக சரணாகதியைப் பின்பற்றச் சொல்கிறது. இந்தத் தத்துவத்திற்கு மறுபுறம் உண்டு.

ஜீவன் முழுவதும் ஆர்வமாகப் பெற்ற ஞானத்தால், தான் விருப்பப்படுவதை அடைய முடியும்என்றால், இன்று நாமுள்ள நிலையை நாம் எப்படி எய்தினோம்? இதுவரை நமக்கு நடந்த நல்லவை எப்படிக் கிடைத்தனஎனில், அதுவும் நாம் நம் ஆர்வத்தால் பெற்றதே என்றாகும். இதுவரை நாம் பெற்ற அதிர்ஷ்டம், வெற்றி, பேறு, சிறப்பு, புகழ் ஆகியவை நாம் நம் ஜீவனின் முழுமையால் ஆர்வமாக முயன்று பெற்றதென அறிவோம். அது உண்மையானால் நமக்கு வந்த தரித்திரம், தோல்வி, துர்அதிர்ஷ்டம், கெட்டபெயர் ஆகியவை எப்படி வந்தன? அதுவும் நாம் ஆர்வமாக விழைந்து பெற்றவையே என்பது ஆன்மீக உண்மை. மனிதன் நல்லதை விரும்புகிறான், கெட்டதை விலக்குகிறான். அதனால் அவன் முயன்று பெற்ற நல்லதை அவன் அறிவான், ஏற்றுக்கொள்வான். அவனது ஆன்மா முயன்று ஆர்வமாக தரித்திரத்தை நாடும், தற்கொலையைத் தேடும்என அவன் அறிவதில்லை. நாம் கெட்டதுஎன விலக்குவதை நம் ஆன்மா தேவைப்பட்டதுஎனத் தேடுகிறது என்பதை நாம் அறிய ஆன்ம விளக்கம் தேவை.

ஆன்மாவில் விழிப்பு ஏற்பட்டால், நாம் எதையும் முழு ஆர்வத்தால் பெற முடியும் என்பதும், இன்று பெற்றது அத்தனையும் ஏற்கனவே நாம் முழு ஆர்வத்தோடு தேடியவை என்றும் விளங்கும். இது ஆத்ம ஞானம். ஆத்மா இறைவனானபின் செய்யக் கூடிய யோகம் இது என்பதால், இறைவன் நம் ஆத்மாவைக் கருவியாக்கி பூரணயோகத்தைச் செய்கிறான் என்ற தெளிவு பூரணயோகத்தை

ஆரம்பிக்கத் தேவை. மனிதன் தன் மனத்தைக் கருவியாக்கிப் பூவுலகில் வாழ்கிறான். விலங்கு தன் உணர்ச்சியைக் கருவியாக்கி உயிர் வாழ்கிறது. இறைவன் மனித ஆன்மாவைக் கருவியாக்கி சத்திய ஜீவனாக முயல்கிறான். அதுவே பூரணயோகம்.

*******

 • 692.இந்த ஞானம் மனம், உணர்வு, உடல் இருக்கின்றது.

கீதையின் சாரத்தைக் கரணங்கள் அறியும்.

இந்த ஞானம்என இங்குச் சொல்வது இரு பாகங்களாக உள்ளது.

 1. மனம், உணர்வு, உடல் எதைப் பெற முயன்றாலும் அது கிடைக்கும்.
 2. மனம், உணர்வு, உடல் இன்று பெற்றுள்ளதை இதுவரை ஆர்வமாக நாடின.

எனக்கு இந்தக் கணக்கு வரவில்லை, கணக்கு வாராது என்ற பையன் கணிதத்தை விலக்குகிறான். வாராது என்று நினைத்தால் வாராது. வரும்என முயன்றால் வரும். எனக்குப் பயமாக இருக்கிறது. அதனால் என்னால் தனியாகப் பிரயாணம் செய்ய முடியாதுஎனில், இந்தப் பயத்தை ஒரு காலத்தில் நான் வேண்டும்என விரும்பினேன். அதனால் எனக்குப் பயம் வந்துள்ளது. இனி தைரியம் வேண்டும் என்று விரும்பினால் அது வரும்எனப் புரிய வேண்டும். நான் எவ்வளவு காலம் வாழவேண்டும்என விரும்பினாலும், என் உடல் வாழும் எனவும், இந்தத் தீராத வியாதியை ஒரு சமயம் விரும்பி வேண்டினேன், அதனால் வந்துள்ளது, இன்று இது போகவேண்டும் என மீண்டும் அதேபோல் விரும்பினால் அது போய்விடும்என அறிந்து கொள்ள வேண்டும். எனக்குக் கணக்கு வரக்கூடாது, பயம் வேண்டும், வியாதி தேவைஎன யாராவது கேட்பார்களாஎனில், கேட்பவர்களை நாம்

பார்க்கலாம். அடிப்படையில் பயமும், தைரியமும் ஒன்றே, வியாதியும், ஆரோக்கியமும் ஒன்றே. ஆன்மா முழுஅனுபவம் பெற தைரியம் மட்டும் போதாது. பயம்என்ற அனுபவமும் வேண்டும். அதனால் ஆன்மா ஓர் அனுபவம் பெற்று முடிந்தபின் அதற்கெதிரான அனுபவத்தை நாடுகிறது. அது தத்துவம்.

மாற்றாம் தாயிடம் காலையிலிருந்து இரவுவரை செக்குமாடாய் உழைக்கும் ஆதரவற்ற பையனுக்கு ஓய்வு கிடையாது. படுக்கையாகப் படுத்தால்தான் ஓய்வுண்டு என்பதால், அவனது ஆழ்மனம் 1 மாதம் படுக்க வேண்டும்என விரும்பும். அது நடக்கும். தைரியமானவனைப் போர்க்களத்திற்கு அனுப்புவதுபோல் எதிரிகளைச் சமாளிக்க அனுப்பினால், அதை விரும்பாதவன் எனக்குத் தைரியம் போய் பயம் வேண்டும்என விரும்பி கடைசி காலத்திலாவது, அடுத்த ஜன்மத்திலாவது அதைப் பெறுவான். அனுபவத்தில், காதால் கேட்டவை, கண்ணால் கண்ட உண்மைகளில் சில:-

திருமணத்தன்று காலையில், எந்தப் பிரச்சினையும் இல்லாதவர், இது நின்றுவிட்டால் தேவலை என்று வாய்விட்டுக் கூறுவது.

அபரிமிதமான வெற்றி திட்டத்தில் கிடைத்தபின், முதலாளி இந்தச் சரக்கு இல்லாவிட்டால் நிம்மதியாக இருக்கும்என்று அறிவிப்பது.

15 பாக்டரி உள்ள தொழில் அதிபர் 2 கோடி இலாபம் பெறும் தொழிலை மூடவேண்டும் என அடிக்கடி அறிவிப்பது. 8 மாதத்தில் 10 லட்சம் சம்பாதித்தவர், தன் முந்தையத் தொழிலில் வருஷம் ஒரு இலட்சம் சம்பாதித்தவர் என்றதை மறந்து, இத்தொழிலை மூடினால் நல்லதுஎன நினைப்பது.

வருமானம் என்பதே 15 வருஷமாக இல்லை, 'பசியும் பட்டினியும் பழக்கமாய்விட்டது' என்பவருக்கு மாதம் 3500 பரிசாக வந்தபொழுது இனி இது வேண்டாம்என்று மறுத்தவர் ஒருவர்.

100 ரூபாய் கடன் பெற முடியாதவருக்கு வலிய 10,000 ரூபாய் கடன் பெறும் அமைப்பைத் திட்டமாக அனைவருக்கும் உள்ள உரிமையாக ஏற்படுத்தியபொழுது, அனைவரும் இதை ரத்து செய்யக் கேட்டது.

*****

 • 693. தான் எதுவாகவுமாகலாம் என மனம் அறிந்தால், அது நம்பிக்கையை ஊட்டும். அதன் அடிப்படையில் ஆர்வத்தை எழுப்பலாம்.

இன்று மனம் அறிந்ததை நாளை ஜீவன் சாதிக்கும்.

விஷயம் புரியாத மனம் குழம்பும். சந்தேகப்படும். நம்பிக்கை ஏற்படாது. அது ஒரு வேலை செய்ய வேண்டுமானால், இந்நிலையில் ஆர்வம் எழாது. விஷயம் புரிந்தால், சந்தேகம் விலகும், நம்பிக்கை ஏற்படும், அதன்வழியே ஆர்வத்தை ஏற்படுத்திக் காரியத்தை முடிக்கலாம்.

1966இல் 34 வயதான இளைஞருக்குத் திருமணம் செய்ய முனைந்தபொழுது, அவருக்கு இரு தம்பிகளும், தங்கையும் இருந்ததால், தமக்குத் திருமணம் வேண்டாம், அடுத்தவர்கட்குச் செய்யுங்கள் என்றார். அதை எப்படிச் செய்வது? காரணம் சொல்ல மறுப்பதால் 30 வயதைத் தாண்டிய இரு தம்பிகளும் 25தைக் கடந்த தங்கையும் செய்வதறியாமலிருந்தனர். இவர் ஜாதகத்தை முழுமையாக நம்புபவர். 34இல் சகடை முடிகிறது. எனவே அதன்பின்தான் திருமணமாகும் என்று ஜோஸ்யர் சொல்கிறார். 34ஆம் வயதில் 17 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு எப்படி நல்ல குடும்பம் நடத்த முடியும் என்று குழப்பமடைந்து திருமணம் வேண்டாம் என்றார். அவர் மனதிலுள்ளதை எவரிடமும் சொல்லவில்லை. தம் வீட்டில் 25 வயதைக் கடந்த பெண்ணிருப்பதும் அவர் மனத்தைத் தொடவில்லை. அப்பெண்ணுக்குச் சிறு உடற்குறையிருப்பதால்

நாளாகியது என்று வைத்துக் கொண்டார். இவரை வற்புறுத்திய நண்பரிடம் தன் அபிப்பிராயத்தைச் சொன்னார். 17 வயதுப் பெண்ணை ஏன் திருமணம் செய்யவேண்டும்? 30 வயதுப் பெண்ணை பண்ணிக் கொள்ளகூடாதாஎனக் கேட்ட நண்பருக்கு, அவருடைய பதில் வேடிக்கையாக இருந்தது. 17 வயதிற்கு மேற்பட்டு பெண் திருமணமாகாமலிருக்காது என்றார்!

நண்பர் அனுபவசாலி, சகடையை நம்புபவரை அவர் சமீபத்தில் அறிந்த திருமணங்களைச் சுட்டிக்காட்டி பெண்களின் வயதென்ன? என்றார். 17, 18, 19 என்றார் பதிலிறுக்கும் வழியாக. அதெல்லாம் சொல்லும் வயதல்லவா? 30 வயதுப் பெண்ணிருந்தால் திருமணம் செய்து கொள்ளலாமல்லவா? என்று கேட்டபின், சிந்தனை விளக்கம் பெற்றது. 25வயதிலும் அதற்கு மேலும் பெண்கள் திருமணத்திற்கு காத்திருக்கிறார்கள் என்ற உண்மை அவருக்குப் புரிந்தது. ஒரே மாதத்தில் 30 வயதுப் பெண்ணை மணந்தார். இது வாழ்க்கை. கீதை கூறுவது ஆன்மீகம்.

நாம் எதுவுமாகலாம் என்பதை மனம் அறிந்து கொள்ளாமல், இதெல்லாம் நமக்கில்லைஎன நம்பிக்கையிழக்கிறது. கீதை சொல்கிறது. ஸ்ரீ அரவிந்தர் அதற்கு விளக்கம் தருகிறார். விளக்கம் துல்யமானது. அது மனத்தில் புரிந்தால், நம் நிலை வேறு. புரிந்த பின் ஆர்வம் எழும். செயல் சித்திக்கும். மலையைப் பார்த்து வா, எனில் வரும் என்பது விளக்கம். அதற்கு நம்பிக்கைஎனப் பெயர். அந்த நம்பிக்கை பூரணயோகத்திற்கு அவசியம். அதைப் பெற மனம் தெளிவுபெறுதல் அவசியம். மனம் பெற்ற தெளிவு, நம்பிக்கை மூலம், ஆர்வத்தை எழுப்பி, காரியத்தைப் பூர்த்தி செய்யும்.

********

 • 694.பிராணனில் இந்த ஞானமிருந்தால் சக்தி பெருகும். அதைச் செயலாற்றும் சக்தியாக மாற்றுவதே நம் கடமை.

பிராணன் ஞானம் பெற்றால், சாதனை எளிது.

தான் எதுவாக மாற விரும்பினாலும், மாற முடியும் என்ற ஞானத்தை vital (பிராணன்) உயிர் பெற்றிருந்தால், நேரடியாகப் பெரிய சக்தி உற்பத்தியாகும். சக்தி (energy) உற்பத்தியானால் அதைப் பயன்படுத்தி காரியத்தை முடிப்பது நம் பங்கு.

வாழ்வில் ஏதோ ஒரு சமயம், சந்தர்ப்ப விசேஷத்தால் இது போன்ற தெளிவு திடீரென ஏற்பட்டு பலிப்பதுண்டு. பெருஞ்செல்வம் பெற்றவர் ஆரம்ப நாளில் தம் வாழ்வில் பெருமாற்றம் ஏற்பட்டது எப்படிஎன எழுதுவதில் இதுபோன்ற செய்திகளிருப்பதுண்டு. ஒரு சிறு தொழிலதிபர் தம் கடந்தகால முயற்சியை மற்றொருவருடன் ஆராய்ச்சி செய்தபொழுது பல சுவையான கருத்துகள் எழுவதைக் கண்டார். அது சமயம், கடந்த நாட்களில் அவர் அதிகபட்சம் இலாபம் பெற்ற வருஷத்தைக் கவனிக்கும்பொழுது, அந்த ஆண்டு தற்செயலாக பாங்குக் கடன், இதர கடன்கள் அடைபட்டிருந்தன. அதைக் கண்டதும் மற்றவர் பிறர் முதலின்றி, தொழில் நடக்கும்பொழுது, அதிகபட்ச இலாபம் வரும் என்பது சூட்சும விதி என்றார். இது தொழிலதிபர் மனத்தில்பட்டு, செயல்பட்டு, தொழில் 5 மடங்கு பெருக உதவியது.

அன்னை பக்தர்கள், கூட்டாக ஏற்றவர் நிலையை எய்துவார்கள் என்ற ஞானம் தம் அனுபவத்திலேயே ஏற்கனவே பத்ததை கண்ணுற்ற ஒருவர், அப்படியானால் என் கூட்டாளி 100 கோடி வியாபாரம் செய்கிறார், நான் 3 கோடியிலிருக்கிறேன், என்று ஆழ்ந்து கருதிய நேரம் இந்த உண்மை அவர் பிராணனைத் தொட்டு அவரும் கூட்டாளி போலானார்.

செகண்டரி கிரேட் ஆசிரியர்கட்கு எலிமெண்டரி ஸ்கூலும் வேலை கிடைக்காத நாளில் பயிற்சியை முடிப்பவரிடம், நீங்கள் பெறும் வேலை உங்கள் மனநிலையைப் பொறுத்தது என்றபொழுது, தான் ஹைஸ்கூல் வேலை கிடைக்காவிட்டால், வேலைக்குப் போகப்

போவதில்லை என்றார். இவ்வுண்மை மனதைத் தொட்டு பிராணனை எட்டியது. அடுத்த மாதம் உயர்நிலைப் பள்ளியில் வேலைக்குப் போனார்.

பிராணனை இஞ்ஞானம் தொட்டவுடன், அபரிமிதமான சக்தி பெருகும். சக்தி தானே பலன் தாராது. சக்தியைச் சேகரம் செய்து, முறைப்படுத்தி, நேர்ப்படுத்தி, பலனாக மாற்றுவது நம் கடமை. சக்தியை உற்பத்தி செய்வது சிரமம். அதிலிருந்து பலனைப் பெறுவது சிரமமாக இருக்கக்கூடாது.

******

 • 695.உடல் இந்த ஞானத்தைப் பெற்றால் அது உடனே செயல்படும்.

உடல் பெறும் ஞானம் சாதனையாகும்.

உடல் எளிதில் செயல்படாது, அசையாது, நாம் சொல்வதைக் காதில் வாங்காது. வாங்கினாலும் தன்னிஷ்டப்படியே நடக்கும். உடல் அதன் கட்டுப்பாட்டிலேயே செயல்படும். நம் கட்டுப்பாட்டிலோ, மனத்தின் ஆதிக்கத்திலோ இயங்குவதில்லை.

தான் செயல்படத் தயாரான க்ஷணம் உடல் புரிந்து கொள்ளும் என்கிறார் அன்னை. மனம் புரிந்துகொண்டு செயல்பட்டாலும் படும், இல்லாவிட்டாலும் இல்லை. உடலால் புரிந்துகொண்டு செயல்படாமலிருக்க முடியாது. முதலில் ஒரு விஷயத்தை - ஒரு மெஷினை ஓட்டுவது போன்ற விஷயத்தை - கற்றுக் கொண்டபின், உடலால் தாமதிக்கவே முடியாது. உடனே செய்யத் துடிக்கும். மனம் போல் பொறுமையாக இருக்காது.

பூரணயோகத்தை எவரும் புரிந்துகொள்ளவில்லை. புரிந்து கொண்டவர் செய்ய முன்வரவில்லை. செய்ய முன்வந்தவர்கள்

செய்வதில்லை என அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும் பேசிய காலத்து பகவான், மனிதனுக்கு யோகம் என்ன தரும் என்று புரியவில்லை. புரிந்தால் அவனால் தாமதிக்க முடியாது என்றார்.

கடையில் ரொக்க வியாபாரம், கடனுக்கு வியாபாரம் உண்டு. கடைச் சரக்கு வாங்குபவர் மொத்த வியாபாரியிடம் கடன் பெறுவது உண்டு. சில்லரை வியாபாரிக்கு இவர் மொத்த வியாபாரியிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தருவதற்கும், இவர் வாடிக்கைக் காரர்களிடம் இருந்து வசூலாவதற்கும் உள்ள தொடர்பைக் காண்பித்தவுடன், மொத்த வியாபாரிக்கு பாக்கி வைப்பதையே அவர் மறந்துவிட்டார். 30 நாள் தவணைக்கு மொத்த வியாபாரி கடன் கொடுத்ததை எந்தச் சில்லரை வியாபாரியும் 20 நாளில், 10 நாளில் கொடுக்க முன்வருவதில்லை. தான் பெற்ற கடனைத் திருப்பிக் கொடுத்தால், தனக்கு வசூல் சுலபமாக ஆகிறது என்று கண்டு கொண்டவுடன், பரம்பரைப் பழக்கத்தை மாற்ற மனிதன் முன் வருகிறான்.

அதற்குரிய சக்தி பிராணனில் எழ, அதற்குரிய ஞானம் தேவை. உடலுக்கு அந்த ஞானம் வந்துவிட்டால் பலன் அன்றே ஏற்படும். எந்த ஞானத்தை உடல் பெற்றாலும், அதற்குரிய பலனை அது உடனே பெறும் தன்மையுடையது.

*****

 • 696. இருள் நிறைந்த கடுமையான வாழ்வின் உண்மைகளை திருவுருமாற்றம் செய்தால் சச்சிதானந்தத்தின் ஆனந்தத்தைவிட தெளிவான ஆனந்தத்தைத் தாங்கும் கனமான பொருளாக மாறும்.

சிருஷ்டியில் ஆனந்தம் பேரின்பத்தைவிடப் பெரியது.

பணத்தைப் பெட்டியில் வைத்திருப்பது ஒரு சந்தோஷம். அதைச் செலவு செய்வது அதைவிடப் பெரிய சந்தோஷம். சச்சிதானந்தம்

என்பதில் ஆனந்தத்தை bliss எனும் ஆங்கிலச் சொல்லால் பகவான் குறிக்கின்றார். இதையே தபஸ்விகளின் உலகம் ஆனந்தம் என அறியும் அதன் வகைகள் பல. எனினும் உயர்வு ஒன்றே. இது செறிவுள்ள தீவிர ஆனந்தம். இது சத்தியஜீவிய லோகத்திற்கும் மேல் உள்ளது. ஆனந்தமே சிருஷ்டி செய்வது என, ஆனந்த இரகஸ்யம் எழுதினார்கள். பூவுலகில் ஆனந்தமில்லை. அதிகபட்சம் (joys) சந்தோஷமுண்டு. நரம்பு உணரும் சந்தோஷத்தை pleasure எனவும் இதயத்தில் பொங்கும் சந்தோஷத்தை joy எனவும் ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். தமிழில் இரண்டையும் மகிழ்ச்சி, சந்தோஷம் என்கிறோம். பிரித்துச் சொல்வது இலக்கியத்திலிருக்கலாம், வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை.

சச்சிதானந்த ஆனந்தம் நம் நரம்பிலும், இதயத்திலும் ஆன்மீகப் பக்குவம் பெற்றவர்க்கு வெளிப்படும். இது பூரணயோகத்திற்குரிய உணர்வு. இதை பகவான் bliss என்பதிலிருந்து வேறுபடுத்தி delight என்கிறார். இது சிருஷ்டியிலுள்ள ஆனந்தம். ஆனந்தம், சிருஷ்டியிலுள்ள ஆனந்தமாக மாறுவது பூரணயோகத்தின் திருவுருமாற்றத்தால்தான். அப்படி மாற வாழ்வின் இருளான அடிப்படைகள் ஒளியாக மாறவேண்டும். கொடுமையை அனுபவிப்பவன் இருள் நிறைந்தவன். பிறரைக் கொடுமை செய்து அதில் இன்பம் காண்பவன் மனதால் திருவுருமாறி பிறருக்கு அன்பு செலுத்தி ஆனந்தம் பெற முயன்றால், அவ்வானந்தம் கனத்த பொருளாகும். அது அடர்த்தியும், செறிவும் உள்ளதாகும். அதன் ஆனந்தம் (delight) அளவிடற்கரியது என்பதுபோல் அடர்த்தியானதாகவும் மாறும்.

உடல் திருவுருமாறினால் கனக்கும். பகவான் கைகால்களைப் பிறர் அசைக்க நேர்ந்தபொழுது அவை மிக கனமாக இருந்ததாகக் கூறுகிறார்கள்.

********

 • 697.பணிவு உடலின் பரிணாமம்.

கரணங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி இயல்புண்டு. மனம் அறிவால் செயல்படுகிறது. உணர்வு சக்தியால் செயல்படுகிறது. உடல் பழக்கத்தால் செயல்படுகிறது. ஆன்மா அகந்தையால் சூழப்பட்டு, சாட்சியாய் இயங்குகிறது. பரிணாமம்என்பது கரணம் தானுள்ள நிலையிலிருந்து உயர்ந்து அடுத்த நிலையில் செயல்படுவதாகும். குடும்பத்தில் தலைவர் பொறுப்புடையவர், சிறுவர்கள் அனுபவமோ, அறிவோ, பொறுப்போ இல்லாதவர்கள். தலைவர் உத்தரவிட்டால் மற்றவர்கள் பணிந்து செயல்பட்டால் அது நல்ல குடும்பம். பணிய மறுத்தால் அது நல்ல குடும்பமில்லை. சீக்கிரம் சீரழியும். உயர்ந்த குடும்பம் என்பதென்ன? தலைவருக்குள்ள அனுபவம் மற்றவர்க்கிருந்தால், அதே அறிவை தலைவர் தவிர பிறர் பெற்றிருப்பதால், சிறுவர்கள் தாமே பொறுப்புடையவரானால், அதை உயர்ந்த குடும்பம் என்கிறோம். இக்குடும்பம் வளர்ச்சியால் கீழுள்ளவர்க்கு மேலிருப்பவர்களுடைய அனுபவத்தையும், தீட்சண்யத்தால் பெரியவர்களுடைய அறிவை சிறியவர்க்கும், பண்பால் அடிமட்டத்திலுள்ளவர்க்கு உச்சியில் உள்ளவர் பொறுப்பையும் கொடுத்துள்ளது.

ஒரு கம்பனியில் உள்ளே நுழைய வாட்ச்மேனைக் கேட்டால், அவன் உள்ளே சென்று ஆபீசரைக் கேட்பான். அவர் உத்தரவு கொடுத்தால் உள்ளே விடுவான். உத்தரவு கொடுக்காவிட்டால், உள்ளே விடமாட்டான். பெரிய கம்பனிகளில் வாட்ச்மேனுக்கே அந்த அதிகாரத்தைக் கொடுத்திருப்பார்கள். அங்கு வாட்ச்மேனுக்கே, ஆபீசருடைய திறமை இருக்கும். இது வளர்ந்த உயர்ந்த கம்பனி. இதை evolution பரிணாமம் என்கிறோம்.

கீழேயுள்ள கரணம் - உடல் - தன் வேலையைத் தான் செய்வதில் திறமையாக இருப்பது பெரியது, வளர்ச்சி, போற்றுதற்குரியது. வாட்ச்மேன் திறமையாகக் காவல் காப்பது

அவனுடைய உயர்வு. அதற்கு மேல் அவனிடம் எதிர்பார்ப்பதில்லை. அதிகாரியின் திறமையும் பொறுப்பும் வாட்ச்மேனிடம் நாம் எதிர்பார்ப்பதில்லை. அப்படியிருந்தால் அது வெறும்வளர்ச்சியில்லை. பரிணாம வளர்ச்சி (evolutionary growth). உடல் காரியங்களைச் செய்யக் கற்றுக் கொள்ளும். கற்றுக் கொண்டால் அது பெறுவது (skill) திறமை. அனுபவத்தால் உடல் திறமையைப் பெறுவது போற்றற்குரியது. சக்தி உடலைவிட உயர்ந்த பிராணனுக்குரியது (Vital, உயிர்). உயிருக்குரிய சக்தியைப் பெற உடல் சக்திக்குப் பணிய வேண்டும். இது பரிணாம வளர்ச்சி, உடலுக்குப் பணியத் தெரியாது. பணிவுள்ள உடல் பரிணாம வளர்ச்சி பெற்றதாகும்.

******

 • 698.வழிபாடு பிராணனின் பரிணாமம்.

 

 • 699.நம்பிக்கை மனத்தின் பரிணாமம்.
 • 700.பிரம்ம ஞானம் ஆன்மீகப் பரிணாமம்.

ஆன்மாவாகிய புருஷன் சாட்சியாக இருப்பது அதன் பரம்பரைப் பழக்கம். அதனால் அதற்கு சாட்சிப் புருஷன்எனப் பெயர். இயற்கையில் ஆன்மா அகந்தை எனும் கூட்டுக்குள் அடைபட்டு தன்னையறியாமல் (unconscious) இருக்கிறது. தான் பிரம்மம் என்பதை உணர முடியாத நிலையிலிருப்பதால்தான் ஆன்மா பிறவிச் சூழலிலிருக்கிறது. தானே பிரம்மம்என உணர்ந்த ஆன்மா தன்னையறியும் ஆன்மா (conscious soul). தன்னையறியும் ஆன்மா சாட்சியாக இருப்பதில்லை. பிரகிருதி செய்வதை சாட்சியாக மட்டும் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. பிரகிருதியின் செயலை நிர்ணயிக்கும் ஈஸ்வரனாக, பிரகிருதிக்கு உத்தரவிடும் தெளிவோடு இருக்கும். சாட்சிப் புருஷன் நிலைமாறி

ஈஸ்வர நிலையை எட்டுவது ஆன்மாவுக்குப் பரிணாம வளர்ச்சி. பிரம்ம ஞானத்தால் வருவது அது.

மனம் அறிவால் செயல்படுகிறது. அறிவு அனுபவத்தால் வருகிறது. இத்தனைநாள் நான் செய்த காரியம், அதனால் இதை நம்புகிறேன் என்பது மனத்திற்குரிய தெளிவு. பிறந்ததிலிருந்து சாப்பிடுகிறோம். சாப்பிட்டால் பசியடங்குகிறது. அது அனுபவம். அனுபவத்தால் வந்த அறிவு. அவ்வறிவால் செயல்படுவது மனம். அந்த அனுபவமோ, அதன் அடிப்படையில் ஏற்பட்ட அறிவோ இல்லாமல் செயல்படச் சொன்னால் மனத்தால் முடியாது. அதற்குக் குழப்பம் வரும். பாங்கில் பணம் போட்டால் பத்திரமாக இருக்கும் என கிராமத்திலுள்ளவர்க்குச் சொன்னால் அந்த நாளில் நம்பிக்கைப்படாது. பணத்தைப் பெட்டியில் வைத்தால் பத்திரமாக இருக்கும். பிறரிடம் கொடுத்தால் போய்விடும் என்பதே கிராமத்தார் அனுபவம். பாங்கில் பணத்தைப் போட கிராமத்தாருக்கு அப்பொழுது நம்பிக்கை வருவதில்லை. நம்பிக்கை ஆன்மாவுக்குரியது. ஆன்மாவுக்குரிய நம்பிக்கையின்பேரில் மனம் செயல்படுவது, மனத்திற்கு பரிணாம வளர்ச்சி. ஆன்மாவின் (அறிவு) ஞானம் மனத்தில் பிரதிபலிப்பதே நம்பிக்கை என பகவான் விளக்கம் கூறுகிறார்.

பிராணன் என்பது உயிர். இது ஆசையின் இருப்பிடம். vital என ஆங்கிலத்தில் பகவான் எழுதும் கரணம். இதற்குரியது சக்தி. ஆசையுள்ள மனிதனிடம் பணம் கிடைத்தால், பதவி கிடைத்தால், ஆசையைப் பூர்த்தி செய்துகொள்வான். ஆசை நிறைந்தவனுக்கு பணம் கிடைத்தபின் அந்த ஆசையைப் பூர்த்தி செய்யாமலிருக்கும் பாங்கில்லை. இருந்தால் அது கட்டுப்பாடு (discipline). கட்டுப்பட ஆசையால் முடியாது. எவரும் தமக்கே கட்டுப்படுவது (self discipline) சிரமம். மேலேயுள்ளவர் கட்டுப்படுத்தினால் கட்டுப்படலாம். தானே கட்டுப்படுவது இயல்பன்று. பிராணனுக்கு ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். சந்தர்ப்பமில்லை எனில் சும்மா இருக்கும். சந்தர்ப்பம் இருந்து, ஆசையைப் பூர்த்தி செய்யக்கூடாது என்ற கட்டுப்பாட்டைப் பெற, மனம் அதை அடக்க வேண்டும். மனத்திற்குப் பிராணன்

அடங்க வேண்டும். அடங்க மனத்தை பிராணன் உயர்வாகக் கருத வேண்டும். பிராணன் மனத்தின் அறிவை உயர்வாகக் கருதி, போற்றி வழிபட முன்வந்தால், மனத்திற்குக் கட்டுப்பட்டு, தன்னால் முடியாததைச் செய்கிறது. இது பிராணனுக்குரிய பரிணாம வளர்ச்சி. எந்தக் கரணமும், தன்னைவிட உயர்ந்த கரணத்திற்கு அடங்குவதோ, அல்லது அதன் திறமையைப் பெறுவதோ, பரிணாம வளர்ச்சியாகும்.

******

 • 701.யோகத்தை மேற்கொள்ளலாம் அல்லது குடும்பத்தை நடத்தலாம். குடும்பத்திலிருந்து யோகத்தை மேற்கொள்வது சிரமம். யோகி ஒரு கரணத்தால் - மனம் அல்லது உடல் - செயல்படுவதுபோல், கிருகஸ்தனும் ஒரு கரணத்தால் - பிராணனால் - செயல்படுகிறான். ஆனால் குடும்பத்திலிருந்து யோகம் செய்ய சைத்தியப்புருஷனிலிருந்து செயல்பட வேண்டும். அதனால் அது சிரமமானது.

யோகத்தையும், வாழ்வையும் பூரணயோகம் சைத்தியப்புருஷனில் இணைக்கிறது.

ஒரு கரணத்தால் உழைப்பது எல்லாக் கரணங்களாலும் உழைப்பதைவிட எளிது. உழைப்பாளி, தலைவன், அறிவாளி, தபஸ்வி ஆகியவர்கள் உடல், உயிர், மனம், ஆன்மா போன்ற ஒரு கரணத்தால் செயல்படுபவர்கள். உழைப்பாளியைவிடத் தலைவனும், அவனைவிட அறிவாளியும் உயர்ந்தவர்கள். உயர்ந்த கரணத்தால் செயல்படுவது உயர்வு. அவ்வகையில் தபஸ்வி, யோகி ஆன்மாவால் செயல்படுவதால், ஆன்மா சிகரம் என்பதால், அவர்கள் முந்தையவர்களைவிட உயர்ந்தவர்கள். ஆன்மாவால் செயல்படும் முனிவர், ரிஷி போன்றவர்கள் ஆன்மாவை எட்ட ஒரு கரணத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

உடலைக் கருவியாகக் கொண்டு அதன்மூலம் அதன் ஆன்மீக அம்சமான அன்னமயப்புருஷனை அடைந்து, ஆன்மாவை எட்டுபவன் ஹடயோகி.

உயிரில் உள்ள (will) செயல்திறனால் கர்மயோகம் செய்து பிராணமயப்புருஷன்மூலம் ஆன்மாவைத் தீண்டுவது கர்மயோகம்.

உணர்வால் சைத்தியப்புருஷனை விடுதலை செய்து, ஆன்மாவை அடைதல் பக்தியோகம்.

சிந்தனையால் ஞானம் பெற்று மனோமயப்புருஷனையும், ஆன்மாவையும் அடைவது ஞானயோகம். மனத்தால் மனோமயப்புருஷனையும், ஆன்மாவையும் பெறுதல் ராஜயோகம். சைத்தியப்புருஷன் மனிதனை ஆன்மாவுக்கு அனுப்பி, மோட்சத்தையும் கொடுக்கும்; அல்லது திருவுருமாற்றத்திற்காக உலகிலிருக்கவும் உதவும்.

குடும்பஸ்தன் உயிரில் தங்கி, உணர்வால் செயல்பட்டு, ஆன்மாவைத் தேடாமல் வாழ்கிறான்.

குடும்பத்திலிருந்து யோகம் செய்ய சைத்தியப்புருஷனை எட்டி, மோட்சத்தை விலக்கி, திருவுருமாற்றத்தை நாடவேண்டும். முனிவர், ரிஷி, யோகி ஆகியவர்களுக்கு ஆன்மாவைத் தேடி, ஜீவாத்மாவை அடைவது இலட்சியம். குடும்பத்தில் யோகத்தை மேற்கொள்பவர் ஆன்மாவைத் தேடி, குடும்பத்தை ஆன்மாவால் நடத்த வேண்டும். உணர்வால் குடும்பத்தை நடத்துவது எளிது. ஆன்மாவால் குடும்பத்தை நடத்துவது சிரமம். உணர்வு கட்டுப்பாட்டை அமுல் செய்யும். அதனால் குடும்பத்தார் கட்டுப்படுவர். ஆன்மா கட்டுப்பாட்டை மேற்கொள்ளாமல், சுதந்திரத்தை மேற்கொள்ளும். அத்துடன் உள்ள கட்டுப்பாட்டையும் உடைக்கும். கட்டுப்பாட்டை தளர்த்தினால், குடும்பம் எதற்கும் கட்டுப்படாது. அதன்பின் குடும்பத்தை நடத்த உயர்ந்த

சுயக்கட்டுப்பாடும், திறமையும் தேவை. அது பூரணயோகத்திற்குரியது. மிகச் சிரமமானது.

********

 • 702. ஸ்ரீ அரவிந்தர் நெப்போலியனாக இருந்தார். அன்னை எலிசபெத் மகாராணி, என்பதை அன்னை விவரிக்கின்றார். அவர்கள் தாங்கி வரும் சக்தி நெப்போலியனில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கிருந்தது, வாழ்நாள் முழுவதும் அன்று என்கிறார் அன்னை. காதரீன், லூஸி, எலிசபெத் இவர்களிடம் ஒரு குறுகிய காலமே அன்னை சக்தியிருந்தது. சக்தி தன் காரியத்திற்குரியவரைத் தேர்ந்தெடுத்து, அவர்மூலம், வந்த வேலையைப் பூர்த்திசெய்து விலகுகிறது. அந்த சக்தியுள்ள காலம் அவர்கள் வாழ்வில் பொற்காலமாகும்.

கருவியின் வாழ்வில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்படுவதை சமூகக் கண்ணோட்டத்தினாலோ, மனத்தின் பார்வையாலோ நாம் கணிக்க முடியாது. பொதுவாக அவற்றிற்கு எதிராகவும் இருக்கும். பரிணாம வளர்ச்சிக்குதவும் காரியங்கள் அவை.

நெப்போலியன், எலிசபெத், லூயிபோல் செயல்பட மனத்தால் சமூகத்தைக் கடக்க வேண்டும்.

நேரு பிரதமராக இருந்தார் எனில், சுதந்திரம் வந்ததிலிருந்து ஆயுள் முடியும்வரை அவர் பிரதமராக இருந்தார். ஆனால் கொஞ்ச நாள் பிரதமராகச் சிலர் இருந்தனர். அவர்கள் பிரதமராக இருந்தனர் எனில் வாழ்நாள் முழுவதும் இருந்தனர் என நாம் அறியக் கூடாது.

ரஷ்யாவில் ( Peter the Great) பீட்டர் சக்ரவர்த்தியாக இருந்தபொழுது காதரீன் ராணி. பீட்டருக்கு அளவுகடந்த கோபம்

வரும். அது சில நாளிருக்கும். அந்நேரம் அவர் எடுக்கும் முடிவுகள் விபரீதமாக இருக்கும். கோபம் வரும் ஓரிரு நாளைக்குமுன் காதரீனுக்கு அதன் அறிகுறிகள் தெரியும். பீட்டர் தலையைத் தன் மார்பில் அணைத்து தடவிக்கொடுக்கும் வழக்கம் காதரீனுக்குண்டு. கோபம் அத்துடன் அணைந்துவிடும். பீட்டருடைய சாதனைகட்குக் காதரீனே காரணம் என்பார்கள்.

எலிசபெத்தின் கடைசி நேரத்தில் அவரைப் பார்க்க (foreign delegation) வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வந்தனர். டாக்டர்கள் ராணியைத் தடுத்தனர். வந்தவர்களைச் சந்தித்துப் பேசினால் ஆபத்தென்றனர். we shall die afterwards நான் அவர்களிடம் பேசிவிட்டு இறக்கிறேன் என்றதாக வரலாறு. இந்நிகழ்ச்சியைப் பற்றி அன்னை பேசும்பொழுது அச்சொற்களை இப்பொழுது பேசியது போலவே எனக்குத் தோன்றுகிறது என்றார். லூசி என்பவர் படம் பாரிஸ் மாளிகையிலுள்ளது. அன்னை தம் குடும்பத்தாருடன் மாளிகைக்குச் சென்றபொழுது, இது என் படம்' என்றார். பதினான்காம் லூயி சரித்திரப் பிரசித்திப் பெற்றவர். அவர் வாழ்வில் லூசி என்ற பெண் சிறிது காலம் மின்னினாள். அவளுக்காகப் பிரசித்தி பெற்ற வார்சே மாளிகை கட்டப்பட்டது. லூயியின் சாதனைகட்கு லூசியே காரணம் என்றும் சொல்வார் உண்டு.

அகஸ்டஸ், சீசர்,லியனார்டோ, நெப்போலியனாக ஸ்ரீ அரவிந்தர் முற்பிறவிகளிலிருந்ததாக நாம் கேள்விப்பட்டுள்ளோம். அவருடனிருந்த சீடர் ஒருவருக்கு சந்தேகம் வந்து, "ஷேக்ஸ்பியராகவும் நீங்கள் பிறந்ததுண்டா?''எனப் பகவானைக் கேட்டார். பகவான் பதிலிறுக்கவில்லை. பூமி சிருஷ்டிக்கப்பட்டதிலிருந்து அன்னையும், பகவானும் இங்கிருந்தனர் என்று அன்னை குறிப்பிடுகிறார். ஜோன் ஆப் ஆர்க்காக அன்னையிருந்தார். அவரைக் கொளுத்தினார்கள்

என்பது செய்தி. இப்பிறவியிலும் தீ' எனில், என்னுடல் துடிக்கிறது என அன்னை கூறுகிறார்.

*******

 • 703.நம் ஜீவனின் பகுதிகள் வளரும்பொழுது, அடியிலிருந்து ஆரம்பித்து நுனிவரை செல்கின்றன. ஒரு பகுதியின் வளர்ச்சி முடிந்தபிறகே அதைத் தாண்ட முடியும். மனம், உடல் உதவியால் வளர்ந்து, அது தீர்ந்தபின் உணர்வால் வளர்கிறது.

ஒரு நிலை பூரணமாகாமல் அடுத்த நிலைக்குப் போக முடியாது.

நெடுநாள்முன் மனிதன் விலங்காக இருந்தபொழுது, வெறும் உடலாக இருந்தான். பிறகு நாகரீகம் வளர்ந்ததால் குடும்பம், உறவு, நட்பு ஏற்பட்டு, உணர்ச்சி ஏற்பட்டது. அதன்பிறகே மொழி, அறிவு, விஞ்ஞானம், கலை, இலக்கியம் ஆகியவை மன வளர்ச்சியால் ஏற்பட்டன. உணர்வுக்கும், மனத்திற்கும் உடலே அஸ்திவாரம். மனம் ஏற்பட்டபின் அதற்கு வளர்ச்சியுண்டு. வளர்ச்சிக்குப் பல நிலைகளுண்டு. முதல் நிலை மனம் ஏற்பட்டு உடலுதவியால் வளர்வது. அதாவது மனத்தின் அறிவை உடல் ஏற்றுச் செயல்படுவது. மனம் படிக்கக் கற்றுக்கொண்டால், உடல் ஒத்துழைத்து, உட்கார்ந்து படிக்கச் சம்மதிக்க வேண்டும். அதுவே உடலின் உதவி. முதல் தலைமுறையில் பள்ளிக்குச் செல்லும் பையன் படிக்க உட்கார்ந்தால் கொட்டாவி விடுவான், அல்லது தூங்கிவிடுவான். உடல் அவன் மனத்தோடு ஒத்துழைக்க ஒரு தலைமுறையாகும்.

அடுத்த தலைமுறையில் பையன் மணிக்கணக்காகப் படிப்பான், மனப்பாடம் செய்வான். ஆனால் ஆர்வம் அவனுக்குப் படிப்பிருக்காது. விளையாட்டிலோ, வீண் பேச்சிலோ இருக்கும். விளையாட்டிலுள்ள ஆர்வம் மாறி, படிப்பில் ஆர்வம் ஏற்படுவது உணர்வு மனத்தோடு ஒத்துழைப்பதாகும். உணர்வு மனத்தோடு

ஒத்துழைக்க உடலின் ஒத்துழைப்பு பூர்த்தியாக வேண்டும். பல தலைமுறைகளாகப் படித்த குடும்பங்களில் பையன் பள்ளிக்குப் போவதில், உட்கார்ந்து பொறுமையாகப் படிப்பதில் பிரச்சினை வாராது. வீட்டில் பல குழந்தைகளிருந்தால், அவற்றில் சில படிப்பில் ஆர்வம் காட்டும். ஒரு நாளைக்குப் பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்றால் பையன் முகம் சுளிப்பான். பள்ளிக்குப் போவதில், படிப்பில் ஆர்வமிருக்கும். படிப்பை முடித்தபின்னே விளையாடப் போவான். படிப்புக் குறையாக இருக்கும்வரை விளையாட்டுக்கு மனம் வாராது.

அடுத்த நிலை மனம். அதற்கடுத்தது ஆன்மா. இதற்கு அடுத்தாற்போல் மூன்று நிலைகள் உள்ளன. அவை ஆன்மா மனத்தில் வெளிப்படுவது, உணர்வில் வெளிப்படுவது, முடிவாக உடலில் வெளிப்படுவது. கடைசிக் கட்டம் சத்தியஜீவியத்திற்குரியது. உணர்வின் உதவி முடிந்தபின் மனம் வளர்வது என்றால், பள்ளியில் திருக்குறள் படித்த மாணவன் அத்துடனில்லாமல், திருக்குறள் மூலத்தை எடுத்துப் படிப்பதாகும். பள்ளியில் 10 குறள் பாடத்திற்கு இருந்தால், படிப்பில் மனம் காட்டும் ஆர்வம் மூலத்தை நாடுகிறது. இம்மாணவனைத் தலைமாணவனாகக் கருதுவோம்.

ஒரு கரணம் செயல்படுவது முடிந்தபின்னரே (exhaust) அடுத்த கரணம் செயல்பட முடியும். நாட்டில் விவசாயம் முதல் நிலையாகவும், தொழில் (industry) இரண்டாம் நிலையாகவும், பணம் மூன்றாம் நிலையாகவும் பொருளாதாரத்தில் அமைந்துள்ளது. விவசாயம் பெருகி அபரிமிதமான உபரி இலாபம் வந்தால், அந்த நாட்டில் தொழில் வளம் பெருகும் என்பது பொருளாதாரச் சட்டம். முதல் நிலை நிரம்பி வழிந்தால்தான் அடுத்த நிலை ஏற்படும் என்பது சட்டம். இந்தச் சட்டம் வளர்ச்சிக்குப் பொதுவானது.

தேவை, ஆசை என்பவை பண்புக்கு முன் நிலைகள். தேவை பூர்த்தியான பின்னரே ஆசை. ஆசை பூர்த்தியானால்தான் பண்பு எழும். ஆசையைப் பூர்த்தி செய்தும் அல்லது அடக்கி வென்றும்

பண்புக்கு உயரலாம். ஆனால் ஆசையை ஏதோ ஒரு வழியில் கடக்காமல், பண்பை எட்ட முடியாது. ஆன்மீக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, பண்பின் வளர்ச்சி, ஏனைய பிற வளர்ச்சிகளுக்கும் உரிய பொதுவான சட்டம் இதுவே. ஒரு நிலை பூர்த்தியான பின்னரே, அடுத்த நிலை எழும் என்பது சட்டம்.

********

 • 704. ஆன்மா உடல், உணர்வு, மனத்தின் உதவியால் வளர்ந்து, அவை தீர்ந்தபின் சொந்தமாக வளர ஆரம்பிக்கிறது. இதை பகவான், ஆன்மா தன் பிரச்சினைகளை மறப்பது என வர்ணிக்கின்றார்.

மனத்தைக் கடந்தபொழுது ஆன்மா தன் பிரச்சினையை மறக்கின்றது.

நாம் ஒரு பிரச்சினையை நினைத்துக்கொண்டிருந்தால் அது தீருவதில்லை. நாம் மறந்தவுடன் அது தீர்ந்துவிடும் என்பது ஆன்மீக உண்மை. இறைவன் ஆன்மாவின் அறிவீனத்தைக் கண்டு சிரிக்கும் நிலையை இதுபோல் பகவான் விளக்குகிறார். ஆன்மா தன் கஷ்டங்களை மறந்தவுடன் அவை மறைந்துவிடுவதைக் கண்டு திகைப்பது இறைவனுக்குச் சிரிப்பு மூட்டுகிறதாக எழுதுகிறார்.

நாம் பல காரியங்களை நெடுநாளாகச் செய்கிறோம். அவற்றை செவ்வனே நிறைவேற்றுகிறோம். அவை நினைவிருப்பதில்லை. எந்தக் காரியத்தைக் குறைவற நாம் செய்து முடிக்கும் திறமை பெற்றுள்ளோமோ, அக்காரியம் நம் நினைவிலிருந்து அகல்வதை நாம் காணலாம். வெளியில் போகும்பொழுது வீட்டைப் பூட்டுவது, கடிதத்தில் விலாசம் எழுதுவது, கையெழுத்துப் போடுவது, சாப்பிடும்முன் கையலம்புவது போன்ற ஆயிரம் காரியங்களில் நாம் குறை வைப்பதில்லை. தவறாமல் செய்கிறோம். அதிக நாள் பழக்கமானதால் மனத்தின் கடமை உடல் ஊறி, உடலே (subconscious) அக்காரியங்களைச் செய்ய ஆரம்பிப்பதால், அவை

நினைவிலிருப்பதில்லை. நினைவில்லாமலிருப்பதால், அவை குறையின்றி அமையும். இன்னும் நினைவிருந்தால் குறை மறையவில்லைஎனப் பொருள். எழுதி கவருக்குள் போட்டுவிட்ட கடிதத்தில் தேதி போட்டிருக்கிறோமா, கையெழுத்திட்டிருக்கிறோமா என எடுத்துப் பார்த்தால், போட்டிருப்போம். போட்டிருக்கிறோம் என்ற நினைவிருப்பதில்லை. இவற்றிலுள்ள கருத்துகள் சில,

 • அனுபவம் அதிகமானால் மனத்தின் செயலை உடல் ஏற்றுக்கொள்கிறது.
 • குறையற்ற நிறைவு ஏற்பட்டபின்னரே உடல் ஏற்கும்.
 • உடல் ஏற்றால் குறைவுக்கு வழியில்லை.
 • உடல் (subconscious) காரியத்தைச் செய்தபின் மறந்துவிடும்.
 • நடந்த காரியம் மறந்துவிட்டால் அதில் பிரச்சினை இருக்காது.
 • நடந்த காரியம் நினைவிருந்தால் அதில் குறை எழலாம்.
 • குறை, பிரச்சினை ஆகியவற்றை முழுவதும் அழிக்கும் வழி நாம் அதை முழுவதும் மறப்பதாகும்.
 • ஆணவமலம் உள்ளவரை ஆன்மாவுக்கு இக்குறையுண்டு.
 • ஆணவமலம் கரைந்தால் இக்குறை விலகுகிறது.

மனதை அரித்துக்கொண்டுள்ள விஷயத்தில் ஒன்றுபோனால் அடுத்தது எழுவதைக் காண்கிறோம். வேறு வேலையாக ஈடுபட்டுள்ள நேரம், அதை மறந்துவிடுகிறோம். மறந்த நிலையில் அப்பிரச்சினை தீர்ந்த செய்தி வருவதை நாம் கண்டுள்ளோம். "ஏன் அதையே நினைத்துக்கொண்டிருக்கிறாய். அதை மறந்து வேறு வேலை செய், நல்லது'' என புத்திமதி சொல்வதில் உள்ள கருத்து இதுவேயாகும். ஒரு நிலை வளர்ச்சி பூர்த்தியானால், அடுத்த நிலை வளர்ச்சி எழுகிறது. அந்நிலை மறந்துபோகிறது. மனம், உடல் நிலைகளைக் கடந்து ஆன்மாவை எட்டியபின் மனம், உடலுக்குப் பிரச்சினையில்லை.

********

 • 705.ஒவ்வொரு பகுதியின் வளர்ச்சிக்கும் இருபிரிவுகளுண்டு. ஒன்று ஜீவாத்மாவின் வளர்ச்சி, மற்றது பிரபஞ்சத்தைச் சேர்ந்தது.

வளர்ச்சிக்கு இரு பகுதிகளுண்டு. தனித்தது, பொதுவானது என இரண்டு.

நாம் வளரும்பொழுது தாய்மொழியைக் கற்றுக்கொள்கிறோம். பிறர் அறிந்து, நாம் அறியாததைத் தாய்மொழிஎனப் பயில்கிறோம். தாய்மொழி பயின்றபின் இதுவரை பிறர் அறியாத சொற்கள் நம் மனதில் எழுவதுண்டு. முதற்பாகம் நாம் சமூகத்தால் வளர்வது. இரண்டாம் நிலை நம்மால் சமூகம் வளர்வது. இந்நிலை செயல், உணர்வு, எண்ணம் ஆகிய அனைத்திற்கும் உண்டு. சங்கீதம் பயில்பவன், டென்னீஸ் கற்றுக்கொள்பவன், ஆபீசில் வேலை செய்பவர், வீட்டை நிர்வாகம் செய்யும் பெண்மணி ஆகிய அனைவரும் முதலில் பிறரிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். பிறகு அனைவரும் கற்றுக்கொள்ளும் வகையில் தாம் வளர்கிறார்கள். முதல் நிலை அனைவருக்கும் உண்டு. இரண்டாம் நிலை சிலருக்கே உரியது.

உலகில் உலவும் எண்ணமெல்லாம் பிரபஞ்சத்திற்குரியது. அது மனிதர்கள் மனதில் புகுந்து வெளிவருகிறது. அதுபோல் நம் மனத்துள் பிரபஞ்சத்தின் எண்ணம் நுழைந்தபொழுது நாம் அதை நம் எண்ணம் என நினைக்கிறோம். நம் மனதுள் ஆயிரம் எண்ணங்கள் நுழைந்தாலும் நாம் சிலவற்றை ஏற்றுக்கொள்கிறோம். மற்றதை ஏற்பதில்லை. ஏற்ற எண்ணங்களை நம் எண்ணமாகக் கருதுகிறோம். இவை உலகிலிருந்து நம்முள் நுழைபவைஎன நாம் அறிவதில்லை. நம் நிலையிலுள்ளவர் பெற்ற அளவுக்கு நாம் பெறும்வரை உள்ள வளர்ச்சி, நமக்குரிய வளர்ச்சி. அதற்கு மேற்பட்ட நிலையில் சமூகத்தின் வளர்ச்சியும், முடிவான நிலையில் பிரபஞ்சத்தின் வளர்ச்சியும் உண்டு.

நாம் மனிதனாய்ப் பிறந்து வளரும்பொழுது, பிரபஞ்சத்தின் எண்ணங்களை நம் முன்னோர் ஏற்ற அளவுக்கு நாம் ஏற்பது, தனி மனித வளர்ச்சி. அதற்குமேல் எண்ணம் நம் மனதில் வளர்ந்தால், அது இதுவரை பிரபஞ்சத்திலில்லாத வளர்ச்சியாகும். நம் மனம் வளர்ந்ததால், பிரபஞ்சம் வளர்வதாகும்.

நியூட்டன் சிறுவனாக இருக்கும்பொழுது, இதுவரை கண்டுபிடித்தவற்றை மாணவனாகவும், ஆராய்ச்சியாளராகவும் அறிந்தார். படிப்பு முடிந்தபின் அவர் மனம் வளர்ந்ததால், புதியதை அவர் கண்டுபிடித்தார். அதனால் உலகம் வளர்ந்தது. அதுவே பிரபஞ்சத்தின் வளர்ச்சி.

எண்ணத்தைப் பற்றிச் சொல்லியவை உணர்ச்சிக்கும், செயலுக்கும் பொருந்தும். தெய்வங்கள் கலந்துகொள்ளும் விழா அன்னைக்குக் (vision) காட்சியளித்தபொழுது, இளவயதில் தூய்மையான வெண்ணிற ஆடையிருப்பவரை அன்னையால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. யாரோ ஒருவர் அத்தெய்வத்தை அணுகி விசாரித்தபொழுது, "தான், நன்றி எனும் தெய்வம், உலகுக்குப் புதியவர்'' என்று சொன்னார். உலகில் நன்றி பிறப்பதானால், முதலில் யாராவது ஒருவர் உள்ளத்தில் பிறக்க வேண்டும். அப்படிப் பிறந்தபொழுது, அவர்மூலம் பிரபஞ்சம் வளர்கிறது.

*******

 • 706.ஆன்மா ( soul) வளரும்பொழுது ( The Soul) பரமாத்மாவின் துணையை நாடுகிறது. இதிலும் இரு பகுதிகள் உள்ளன. (Immutable soul, involved soul) அழிவற்ற ஆத்மா, வளரும் ஆத்மாஎன அவை இரண்டாக இருக்கின்றன.

ஆத்மாவுக்கும் இரு பகுதிகள் உண்டு. அழியாத ஆத்மா, வளரும் ஆத்மா என இரண்டாகும்.

இதுவரை இந்திய யோகமரபு அறிந்தது உலகம் அறியாதவை. அவற்றின் அடிப்படைக் கருத்துகளாவன:

 • சர்வம் பிரம்மம்.
 • ஜீவாத்மா, பரமாத்மாவை அடைந்து மோட்சம் பெறுகிறது.
 • மனிதன் என்பவன் ஜீவாத்மா.
 • ஜீவாத்மா பரமாத்மாவின் பகுதி.
 • ஜடம் என்பது ஆன்மாவின் ஆடை.
 • ஆன்மா அழிவற்றது; மாற்றமில்லாதது; பிறப்பும், இறப்பும் இல்லாதது.

ஸ்ரீ அரவிந்தருடைய பூரணயோகம் வேத, உபநிஷத, கீதை அடிப்படையில் அமைந்தது. இந்திய மரபை ஏற்கும் பகவான், ஆன்மா வளராதது' என்பதை மாற்றி அமைத்து, தன் யோகத்திற்கு Yoga of Spiritual Evolution ஆன்மாவின் பரிணாம வளர்ச்சிக்குரிய யோகம் என்றார். இக்கருத்து மரபில் இல்லாதது. அழிவற்ற ஆத்மா என்பது மரபுக்குரியது. வளரும் ஆத்மா என்பது பூரணயோகத்திற்குரியது.

ஆதியில்லாமல், அனாதி என நாம் அறியும் புருஷன், பிரம்மம், ஈஸ்வரன், அழிவற்றது. உலகம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஈஸ்வரனுக்கழிவில்லை. பூரணயோகம் - "ஜடத்திலிருந்து வாழ்வும், வாழ்விலிருந்து மனமும் உற்பத்தியாகிறது'' என்ற வேதாந்தக் கருத்தில் - அன்னமயப்புருஷன் பரிணாம வளர்ச்சியால் பிராணமயப் புருஷனாகவும், மேலும் மனோமயப்புருஷனாகவும் வளர்ந்தது தொக்கியிருப்பதைக் காட்டுகிறது. எனவே, பரிணாம வளர்ச்சியைத் தொடர்ந்து விஞ்ஞானமயப்புருஷன் (சத்தியஜீவன்) பிறப்பான், அதுவும் முடிவில்லை. உபநிஷதக் கூற்றுப்படி அடுத்த கோசம் ஆனந்தமய கோசமாதலால், ஆனந்தமயப்புருஷனும் ஜனிப்பான் என்று பகவான் கூறுகிறார்.

மனோமயப்புருஷனே இன்றுவரை பிரபஞ்சம் சாதித்தது.

அது முடிவன்று.

அடுத்த கட்டம் சத்தியஜீவன் (விஞ்ஞானமயப்புருஷன்)

அவன் சைத்தியப்புருஷனுடைய வளர்ச்சியால் எழுபவன்.

சைத்தியப்புருஷன் வளரும் ஆன்மா. ஏனெனில் சைத்தியம் பிரபஞ்ச சாரத்தைத் தன்னுள் தாங்கிவருகிறது. சைத்தியப்புருஷன் என்பது அகந்தை அழிந்த ஜீவாத்மா. அகந்தை அழிந்தபின் சைத்தியப்புருஷன் தனி மனித எல்லையைத் தாண்டி பிரபஞ்சத்தை நோக்கி வளர்கிறான். வளர்ச்சி முடிந்த நிலையில் பிரபஞ்சத்தைத் தழுவுகிறான். மேலும் வளர்ந்து, பரமாத்மாவுடன் ஐக்கியமாகும் முன் சத்தியஜீவனாகிறான்.

சைத்தியப்புருஷன் -> பிரபஞ்சத்தின் ஆத்மா -> சத்தியஜீவன் -> பரமாத்மா

என்பது வளரும் ஆத்மா. ஆத்ம வளர்ச்சியை spiritual evolution என்கிறார். இந்த யோகத்தை அப்பெயரிட்டழைக்கிறார்.

*******book | by Dr. Radut