Skip to Content

பகுதி 8

 1. வலிமை பிறப்போடு வருவது. அல்லது அனுபவத்தால் வருவது. அவ்வலிமையை வேறு வகையாகவும் பெறலாம். அடிப்படையில் வலிமையும், எளிமையும் ஒன்றே என்றறிந்தால், இரண்டும் பிரம்மம் என அறிந்தால், வலிமை வரும்.

வலிமையான பிரம்மம் எளிமையாகவுமிருக்கும்.

ஒரு பிறப்பில் பெறும் அனுபவம், அடுத்த பிறப்பில் பலன் தரும். அனுபவத்தில் அதன் சாரம் (essence) சூட்சுமமாகக் கலந்துள்ளது. அனுபவம் இப்பிறப்போடு முடிந்துவிடுகிறது. அடுத்த பிறப்பில் தொடர்வதில்லை. அனுபவத்தின் நினைவுகள் அடுத்த பிறப்பில் வருவதில்லை. அனுபவத்தின் சாரம் மட்டும் அடுத்த பிறப்பில் வரும். ஒரு வீரன் போர்க்களத்தில் பெறும் அனுபவங்கள், விவரங்கள், எதிரியை மடக்கும் யுக்திகள், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் தந்திரங்கள் அனைத்தும் சேர்ந்து, அவனுக்குச் சாமர்த்தியம் நிறைந்த தைரியத்தைக் கொடுக்கின்றன. சென்ற பிறவியில் போரிட்ட இடங்கள், தலைமை வகித்த படைகள், முறியடித்த எதிரிகள் இந்தப் பிறவியில் நினைவு வருவதில்லை. அதன் சாரமான தைரியமும், யுக்திகளும் இப்பிறவியில் வருகின்றன. பூர்வஜென்ம ஞானம்என நாம் கேள்விப்படுகிறோம். அது சென்ற பிறவியின் நிகழ்ச்சிகளை விவரமாக நினைவு வைத்திருப்பதாகும். பூர்வஜென்ம அனுபவச் சாரத்தை சைத்தியப்புருஷன் தாங்கி வருகிறான். நினைவை vital being ஆவி பெறுகிறது. ஆனால் சென்ற பிறவியின் உடல் அழிந்தவுடன் அழிந்துவிடுகிறது. தவறி ஒரு துளி ஆவி இப்பிறவியிலும் ஒட்டிக் கொண்டிருந்தால், நிகழ்ச்சிகள் நினைவிருக்கும். அப்படிப்பட்ட பூர்வஜென்ம நினைவுக்கு ஆன்மீகப் பலனில்லை.

பூர்வஜென்ம ஞானத்தை ஆன்மாவிற்குடையதாக்குவது சைத்தியப்புருஷன். அவன் வெளி வந்தால் இதே ஞானம் பூரணமாகக் கிடைக்கும். அதற்கு ஆன்மீக அர்த்தமுண்டு. செல்வத்தை ஆர்வமாக நாடும் ஒருவன் பெருஞ்செல்வம் பெறும் நேரம், இதனால் என்ன பலன் என்ற எண்ணம் எழுந்தபடியிருக்கும். ஓரளவுக்குமேல் தேவையைப் பூர்த்தி செய்ய செல்வம் தேவை. அந்நிலையைக் கடந்தபின், செல்வம், செல்வாக்கை அளிக்கிறது. செல்வாக்கை செல்வம் முனைந்து பெற்றபின், பிறர் அதே செல்வாக்கை பதவியின் மூலம் பெறுவதைக் கண்டு ஆச்சரியப்படுகின்றனர். செல்வத்தை நாடாத இலட்சிய வாழ்க்கை நடத்துபவர்கள் அரிபொருள். அவர்களில் சிலருக்கும் செல்வத்தால் ஏற்படும் செல்வாக்கு வருவதைக் காணலாம். ஒன்றை - வலிமை, செல்வம் - பெற பல வழிகளுண்டு. நாம் எந்த முறையை வெற்றிகரமாகப் பின்பற்றினோமோ, அதற்கு எதிரான முறையிலும் அதைப் பெறுபவருண்டு. மேலும், நாம்

பெற்றதும், அதற்கு எதிரானதும் ஒன்றே எனவும் அறியும் நேரம் உண்டு. சர்வம் பிரம்மம் என்ற வேத ஞானத்தை வாழ்வில் பெறுவதாகும் இஞ்ஞானம்.

இந்த ஞானம் - வலிமையும், எளிமையும் ஒன்றே - பெற்றால் எளியவனுக்கு வலிமை வரும். செல்வம் பெறுவதும், பெறாததும் ஒன்றே என்ற ஞானம் வரும்பொழுது செல்வமில்லாதவனுக்குச் செல்வம் பெறும் தகுதி ஏற்படும். பெறுவதும், பெறாததும் அவன் விருப்பம். இவை ஆன்மீகஞானம்.

அன்னையை ஏற்றுக் கொண்டவர்க்கு ஆன்மீகஞானம் வரும். ஆன்மீகஞானமுள்ளவர்க்கு அன்னை மீது நம்பிக்கை ஏற்பட்டால், அன்னை அதிகமாகப் பலிப்பார். பகவானுடைய அடிப்படைத் தத்துவம் அறியாமையும், அறிவும் ஒன்றே என்பது. அறிவே தன்னை அறியாமையாக மாற்றிக் கொண்டது என்பது ஸ்ரீ அரவிந்தம்.

பிறப்பால் வலிமையைப் பெற்றாலும், அனுபவத்தால் வலிமையைப் பெற்றாலும், ஆன்மீகஞானத்தால் வலிமையை அடைந்தாலும், அன்னை மீதுள்ள நம்பிக்கையால் வலிமை உள்ளிருந்து எழுந்தாலும், சர்வம் பிரம்மம் என்ற ஞானம் எதிரெதிரானவற்றில் ஒருமையைக் காட்டினாலும்,

எளியவன் வலியவனின் வலிமையைப் பெறலாம்.

எளியவன், வலிமையைப் பெற முடியும் எனில், வறுமையில் வாடுபவன் செல்வம் பெறும் வழியும் அதுவே. சோகத்தில் திளைத்து தன்னை இழந்தவன் பொங்கி எழும் சந்தோஷத்தைப் பொக்கிஷமாகப் பெற முடியும் என்று உணர்த்தும் முறையிது. அறியாமையால் மடையன் எனப் பிறந்தவன், மேதையாகும் யோகம் பூரணயோகம். இதன் கருவான ஆன்மீகஞானம் உபநிஷதத்தின் சர்வம் பிரம்மம் என்பதாகும்.

*******

 1. செயல் பூரணச் செயலானால், அது பூர்த்தியாகும். தன் அதிகபட்சத் திறமையைவிட உயர்ந்த இடத்தில் ஒரு காரியத்தைப் பூரணச் செயலாக ஆரம்பிக்க முடியுமானால், அதிக வெற்றி பெறலாம். ஆரம்பிக்கும் குணத்தை நாம் விட்டுவிட்டால், இறைவன் அங்குத் தன்னை அதிகமாகப் பூர்த்தி செய்துகொள்வான்.

நம்மை மறந்தபின் இறைவன் நம்மில் சாதிப்பதே பெரிய சாதனை.

செய்யும் காரியம் கூடிவரவேண்டும்என அனைவரும் விரும்புகிறோம். பொதுவாகத் திறமை குறைவானால், தேவையானவை ஒன்றில்லையானால், நேரம் வரவில்லைஎனில், தடையாக ஒன்றிருந்தால் காரியம் பூர்த்தி பெறாது. அன்றாடக் காரியங்கள், வழக்கமான காரியங்கள், பழக்கமான செயல்கள் தடையாக இருப்பதில்லை. ஏனெனில் நம் சமூகமும், நாம் வாழும் சூழ்நிலையும், காரியங்கள் பூர்த்தியாகும் சூழலை அனைவருக்கும் ஏற்படுத்தி இருப்பதால், அச்சூழலுள் நாம் செயல்படும்பொழுது, தடையின்றி காரியம் பூர்த்தியாகிறது. சமூகத்தில் சராசரிக்கும் குறைந்த மனிதனால் இந்தச் சாதகமான சூழ்நிலையிலும் வெற்றியாகச் செயல்பட முடிவதில்லை. அப்படி வெற்றி பெற தனக்குச் சராசரிக்குக் குறையும் திறமைகளை அவன் பெற்றுக் கொள்ள வேண்டும்.complete act பூரணச் செயல் என்பது, சூழலாலும், தன் நிறைவாலும், பூர்த்தியான செயலாகும். அன்றாடம் நாம் காணும் பூர்த்தியாகும் செயல்கள் அனைத்தும் பூரணச் செயல்களாகும்.

மனிதன் சராசரியாகச் செயல்பட்டு வெற்றியடைகிறான். அதிகபட்ச முயற்சி செய்து அதிக வெற்றி பெறுகிறான். அதற்கு மேற்பட்ட பலன் வாழ்வில்லை. அன்னையிடம் உண்டு. அதற்கு மேற்பட்ட பலனை வாழ்வில் நாடினால், அகலக்கால் வைத்ததாகும். தன்னால் முடியாததைப் பேராசையால் அணுகி இருப்பதையும் அழித்துக் கொண்டதாகும். பேராசையில்லாமல், முழு முயற்சியுடன் தன் அதிகபட்சத் திறமையை மீறியதைச் செய்ய ஒருவர் முனைந்தால்,

அவர் எந்த வேலைக்குப் போகிறாரோ அங்குக் கீழ்க்கண்டதுபோல் நடக்கும்.

 • புதிய சட்டம் தடையாக எழும்.
 • அந்த வேலைக்குள்ள மனையைச் சர்க்கார் எடுத்துக்கொள்ளும்.
 • அது போன்ற வேலைக்குத் தண்ணீர் அதிகமாகத் தேவைப்பட்டால் நாம் ஆரம்பித்த இடத்தில் நீர் வற்றிப் போகும்.
 • வெளிநாட்டு மெஷின் அற்புதமாக வேலை செய்தது திடீரென நின்று வெளிநாட்டு இன்ஜீனியர் தேவை என்ற நிலை ஏற்படும்.
 • இன்ஜீனியர் வந்தால் உடைந்த பார்ட், இனி உற்பத்தியில்லை என்பதால் எதுவும் செய்ய முடியாது என்பார்.
 • பார்ட்னர்களுடன் உரிமைப் பிரச்சினை எழுந்து வேலை நின்றுவிடும்.
 • அங்கே போனால் வீட்டில் ஆபத்தான காரியம் நிகழும்.

இதுபோன்ற நிலையில் ஜாதகம் பார்த்தால், இந்த வேலை கூடிவாராது என்பார். சாஸ்திரம், சகுனம், குறி, வாய்ச்சொல், நாடி ஜோஸ்யம் எதைப் பார்த்தாலும் இது உன்னால் முடியாது என்று அவரவர் அவர்கள் பாணியில் விளக்கம் சொல்வார்கள். அன்னை பக்தர்களுக்கு வழியுண்டு. வழியுண்டு என்பதால் வேலையில் குறையுடன் ஆரம்பித்தால் வழிவிடாது. மேற்சொன்ன தடைகள் இருந்தால், ஒன்றானாலும், பல ஆனாலும் அவை தாமே விலகும். பக்தர் ஆரம்பிப்பது complete act பூரணச் செயலாக இருக்க வேண்டும். செயலுக்குத் தேவையானவை, அறிவால் செய்யக் கூடியவை, முன்யோசனையால் செய்யக்கூடியவை, அனுபவத்தால் அறியக் கூடியவை, உணர்வுநிலை, ஆகியவை குறைவற இருந்தால், சட்டம் தடையாக எழுவதற்குப் பதிலாக, சாதகமானச் சட்டம் புதியதாக வரும். சர்க்கார் அது போன்ற தொழிலுக்கு மனை போன்ற

வசதிகளை அளிக்க முன்வரும். தண்ணீர் வசதி ஏதோ காரணத்தால் பெருகும். வெளிநாட்டு இன்ஜீனியர் உள்ளூரில் இருப்பதாகச் சேதி வரும். தேவைப்பட்ட (part) பார்ட் தற்செயலாகக் கிடைக்கும். பார்ட்னர்கள், உடன் பிறந்தவர் போலாவார்கள். வேலைக்குப் போனால், வீட்டில் நல்லது நடக்கும். இதையும் தாண்டிய பலன் ஒன்றுண்டு.

நாமே முயன்று பெரிய காரியத்தை அன்னையை நம்பி ஆரம்பித்தால் தடையின்றி பலிக்கும் என்றேன். அந்தத் திறமையும், பக்குவமும் வந்தபின், ஆரம்பிக்காமல் அன்னையை மட்டும் நம்பியிருந்தால், தானே அக்காரியம் பூர்த்தியாவதை நம் ஊனக்கண்ணால் பார்க்கலாம்.

******

 1. விழிப்பு ஏற்பட்டபோதெல்லாம், நிரந்தர அருள் தடையின்றிச் செயல்படுகிறது. அருள் நம்மை நாடி வருவது திருவுருமாற்றத்திற்கு வழிசெய்யும். ஆர்வம் திருவுருமாற்றத்தைப் பூர்த்திசெய்யும்.

நிரந்தர விழிப்பின் ஆர்வம் அருளின் நிரந்தரத் திருவுருமாற்றம்.

நம் அன்றாட வாழ்வில் தெய்வம் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஏதோ ஓர் ஆபத்திலிருந்து தப்பினால், தெய்வச்செயல் என நாம் அறிகிறோம். வாழ்வில் ஒரு முறை நடக்காதது ஒன்று நடந்து விடுகிறது. அதை ஆச்சரியமாக நினைக்கிறோம். தெய்வம் என்பது பொய்யன்று என அந்த நேரம் நினைக்கிறோம். பேராபத்து விலகினாலும், நடக்க முடியாதது நல்லதாக நடந்தாலும் நம் கண்ணுக்குத் தெய்வம் புலப்படுகிறது. அத்துடன் அதை நாம் மறந்து விடுகிறோம்.

அருள் என்றும் நின்று நிலைத்துள்ளது. மழையாகப் பொழிந்தபடி இருக்கின்றது. காற்று எப்படி நம்மை எந்நேரமும்

சூழ்ந்துள்ளதோ அதுபோல் அருள் நம்மைச் சூழ்ந்துள்ளது. ஒரு நிமிஷம் மூச்சுவிடாமல் நம்மாலிருக்க முடியாது என்பதை நாம் அறிவோம், ஆனால் பொருட்படுத்துவதில்லை. அதேபோல் ஒரு நிமிஷம் அருளில்லை எனில் உலகம் இருக்காது என்பதை மகான்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் பொருட்படுத்துவதில்லை. தியானம் அமைந்தால் அருள் பிரவாகமாகத் தலைவழியே உடலுள் நுழைவதைக் காணலாம். தியானம் கலைந்த சிறிது நேரத்தில் பாயும் சக்தி குறைந்து மறைவதும் தெரியும். ஆபத்தில் 'தெய்வமே காப்பாற்று' என்று அலறும்பொழுது பட்டுப்போன மரப்பட்டைபோல் உலர்ந்து காய்ந்த உடலின் உள்ளேயிருந்து விழிப்பெழுகிறது. விழிப்பு இருப்பதால், தியானத்தில் வரும் அருள்மழை, அந்த நேரம் வருகிறது. ஆபத்து விலகுகிறது. வீட்டில் ஒரு முக்கியமான காரியம் செய்ய பல நாள் முயன்றால், முயற்சி முதிரும்பொழுது ஜீவன் விழிப்புற்று, சூழ்நிலை மாறி, பல நல்ல காரியங்கள் ஒரே சமயத்திலும், தொடர்ந்தும் நடந்து, நாம் மேற்கொண்ட முயற்சியைப் பூர்த்தி செய்து தருகிறது.

நாம் செய்யும் காரியங்களே நமக்கு முக்கியமாக இருப்பதால், அவற்றில் மட்டுமே நம்மால் எதையும் விளங்கிக் கொள்ளமுடிகிறது. அதைவிட முக்கியமாக நாம் எதையும் கருதுவதில்லை. மாநில விளையாட்டுப் போட்டியில் ஜெயிப்பது, பேச்சுப் போட்டியில் வெல்வது, மகன் வெளிநாட்டிற்குப் போவது, மகளுக்கு உயர்ந்த மாப்பிள்ளை வருவதைவிட உலகில் ஒரு பெரியதுண்டுஎன நாம் நினைப்பதில்லை. நம் மனதிலுள்ள குழப்பம் தெளிவதை இதைவிட உயர்வாக நாம் கருதுவதில்லை. மனம் குழம்பிய நிலையிலுள்ளவர், குழப்பத்தைவிட்டு வெளிவருவது திருவுருமாற்றமாகும். மனம் இதுபோல் திருவுரு மாற்றமடைந்தால் அவர் நிலை பல மடங்கு உயரும் என்பதை அவர் அறியார். அது நடந்தபின்னும் அவரால் அறிய முடியாது. உடல் கடைசி நிலை. உணர்வு மனத்திற்கு அடுத்தது. சோகமே உருவானவரை உற்றாரும், நண்பர்களும் ஒதுக்கிவிடுவார்கள். சோகம் சந்தோஷமாக மாறுவது உணர்வின் திருவுருமாற்றம். இது யோக முயற்சியில் பெரியது. இது நடந்தாலும் எவரும் இதைப் பொருட்படுத்த

மாட்டார்கள். இது நடந்தால் இவர் வாழ்வு மாறும். அதை அனைவரும் தவறாமல் கவனிப்பார்கள். நம்ம ஊரில் அட்டெண்டராக இருந்தான், கிளப்பில் பெரிய அதிகாரிகட்கு ஆளாக வேலை செய்வான், என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. எங்கோ போய் பெரிய இடத்தில் புகுந்துவிட்டான். காரில் போகிறான். கவர்னர், மந்திரி இவன் இடத்திற்கு வந்தால் இவனே அவர்களை வரவேற்கிறான். அதிர்ஷ்டம் என்பார்கள். உணர்வு திருவுருமாற்றமடைந்தால் பலனிது போலிருக்கும். உடல் திருவுருமாற்றம் கடைசி நிலை.

அருள் பொழிந்தபடியிருக்கிறது. விழிப்பாக இருந்தால் பெற்று திருவுருமாற்றமடையலாம்.

*******

 1. இறைவன் நம்மை நாடி வரும் பொழுது decent ஆர்வம் இருப்பதில்லை. ஆர்வம் எழும்பொழுது மனிதன் எப்படியிருக்கிறான் என்பதை பகவான் விவரித்து இருக்கின்றார். எல்லாப் பழக்கங்களிலிருந்தும் விலகினால் ஆர்வம் எழும்.

பழக்கம் விலகினால் ஆர்வம் எழும்.

இடையறாது இறைவன் அருளாக நம்மை நாடிவருவதை நாம் அறிவதில்லை. அவன் வரும்வேளையில் நமக்கு அவன் மீது ஆர்வமிருப்பதில்லை. மரத்தில் அடிமரம் காய்ந்து பட்டை உலர்ந்து போயிருக்கும். அதனினின்று துளிர்த்தது இப்பொழுது கிளையாக இருக்கும். கிளை சிறு கிளைகளாகவும், குச்சிகளாகவும் மாறி, முடிவில் இலையாகி ஒரே ஓர் இடத்தில் துளிர்க்கும். ஒவ்வொரு கிளை முனையிலும் சில துளிர்கள் எழும். அதுவே பூத்துக் காய்க்கும். மற்ற இடங்கள் காய்ந்து சருகாக இருக்கும். பூத்துக் காய்க்குமிடம் மட்டும் ஜீவனோடிருக்கும். ஆர்வத்தைப் பொறுத்தவரை நம்வாழ்வு மரத்தைப் போலிருக்கும். நமது அத்தியாவசியமான தேவைகளைத்

தேடுவதில் மட்டும் ஆர்வமிருக்கும். வாழ்வின் மற்ற இடங்கள் காய்ந்து பட்டை உரிந்துபோய் அடிமரமாக இருக்கும்.

பெரும்பாலான மனிதனுடைய தேவைகள் பசி, தாகம், உறக்கத்தைப் பூர்த்தி செய்யும் உடலுக்குரியவை. உணர்ச்சிக்குரிய ஆசையின் தேவைகள் அடுத்தாற்போல். மனத்தின் எண்ண வளர்ச்சிக்குரிய தேவைகள் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்க்கே அமையும். ஆன்மாவின் தேவை இறைவன். அதை நாடுவதையே இங்கு ஆர்வம், இறைஆர்வம் (aspiration) என்கிறோம். இது பக்திமான்கட்கு மட்டும் இருப்பது. ஆன்மா விழித்தெழுந்து ஆர்வமாக வெளிவந்தால் இருண்ட குகையில் ஒளி நுழைந்தாற்போல், ஜீவனற்ற மனத்தின் ஆழத்தில் உயிருள்ள நிகழ்கால எண்ணங்களைத் தந்தியாக மீட்டும். மண்ணான உடல், ஆர்வம்எனும் அமிர்தத்தால் நனைந்து பொன்னான ஒளியை எழுப்பிப் பரப்பும். அகந்தை கரைந்து அகண்டவெளியாகும். சுயநலம் சுறு சுறுப்பான பரநலமாகும். ஆர்வம் எழுகிறது அம்மா! என்னை ஆட் கொள்ள வேண்டும்என பகவான் ஆர்வம் எழுவதை வர்ணிக்கின்றார்.

இறைவன் நம்மை நாடி வருவதை decent கீழிறங்கி வருவதாகச் சொல்கிறார். அவர் வரும்தருணம் அற்புதமான ஆனந்தம் எழும்தருணம் என்பதால், ஆர்வம் எழுந்து அவரை வரவேற்றால், யுகங்கள் நாட்களாகச் சுருங்கும் என்பதை இறைவன் வரும் தருணம் Hour of God என்ற கட்டுரையில் எழுதுகிறார்.

மனிதன் சுயநலத்தால் சூழப்பட்டுள்ளான். பழக்கத்தால் செயல்படுகிறான். சமூகத்தால் வெளிவாழ்வில் இயக்கப்படுகிறான். மனச்சாட்சியால் உள்ளொளியை நிர்ணயிக்கின்றான். அபிப்பிராயத்தை ஏற்படுத்தி அதையே அறிவெனக் கொண்டு அதன் அதிகாரத்திற்கு உட்பட்டிருக்கிறான். உணர்ச்சியால் உந்தப்படுகிறான். அகந்தை எனும் கூட்டை ஆன்மாவின் அரண்மனையாக்கி அதனுள் அரசாட்சி செய்கிறான்.

ஆர்வம் எழுந்து இறங்கிவரும் இறைவனை எதிர்கொண்டு அழைத்து இம்மையில் மறுமையின் மலர்ச்சியைக் காணும் புதுயுகம் எழுவதால், சுயநலம், பழக்கம், சமூகக் கட்டுப்பாடு, மனச்சாட்சி என்னும் பொன்விலங்கு, அபிப்பிராயம் என்ற அர்த்தமற்ற உருவம், உணர்ச்சி, அகந்தையெனும்கூடு ஆகிய அனைத்தையும் சரணாகதி மூலம் நிர்மூலமாக்கி, குறுகிய மனித வாழ்விலிருந்து விடுபட்டுப் பரந்த பிரபஞ்ச வாழ்வான தெய்வீக வாழ்வை அவன் ஏற்பது நல்லது என்று பகவானும், அன்னையும் சுமார் ஒரு நூற்றாண்டு காலம் நமக்கு உணர்த்தினர்.

*******

 1. அன்னை, ஸ்ரீ அரவிந்தர் அவதாரங்கள் மனிதனுக்கு எடுத்துக்காட்டாக மட்டும் அமையவில்லை. மனிதன் செய்ய வேண்டிய வேலைகளைத் தாங்களே செய்தார்கள். விவசாயம், வியாபாரம், பாங்க், மானேஜ்மெண்ட் ஆகிய இடங்களில் நாம் விஷயத்தைச் சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது. நாமே செயல்படுத்திக் காண்பிக்க வேண்டும்.

யோகத்தைச் செய்ய வந்த அவதாரங்கள் அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும்.

உலகம் தடம் மாறிப் போகும் என்ற நேரத்தில், எப்படிப் போகக் கூடாது, எப்படிப் போகவேண்டும் என்று எடுத்துக்காட்டாக இருக்க அவதாரங்கள் உலகத்தில் எழுந்தன. தாங்கள் பிறருக்குச் சொல்லியதைத் தங்கள் வாழ்வில் வாழ்ந்து காட்டினார்கள். அதுவே இதுவரை அவதாரங்கள் நிலை. விஞ்ஞானி புதிய கருவியொன்றைக் கண்டுபிடித்தால் அது பெரிய சேவை, ஆச்சரியம். அவர் கண்டு பிடித்ததை உலகம் பெற்று அனுபவிக்க வியாபார ஸ்தாபனங்கள் (commercial product) விற்பனைக்குரிய பொருளாக அதை மாற்றி உலகுக்கு வழங்குகிறார்கள். விஞ்ஞானியே அதைச் செய்வதில்லை.

அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் உலகம் பொய்மையிலிருந்து விடுபட்டு, மரணத்தை வென்று, மனிதன் சத்தியஜீவனாகலாம் என்றனர். அதை மனிதன் ஏற்றுச் செய்ய வேண்டும். அவர்களே மனிதன் செய்ய வேண்டியதைச் செய்ய முன் வந்தனர். தாங்களே யோகத்தை மேற்கொண்டனர். அவதாரமாக எழுந்த புருஷனுக்குத் தவம், யோகமில்லை. ஆனால் அவர்கள் அதை ஏற்றனர். இறைவன் எங்களைப் பணித்திருக்கிறான் என்றனர். இது அவதாரங்களுடைய நிலைக்கே புதியது என்றார் அன்னை.

அரசனுக்கும், அரசனின் நிர்வாகத்திற்கும் கடமைகள் உண்டு. முக்கியமாக எதிரியைத் தோற்கடித்து விரட்ட வேண்டும். நாட்டில் நீதியை நிலை நிறுத்த வேண்டும். இதுவே அரசனின் கடமை. அரசுக்கு அதற்கடுத்தாற்போல் தர்மம் உண்டு, கடமையில்லை. 1967ருந்து உலக அரசுகள் சத்தியஜீவியத்தின் ஆட்சிக்குள் இருப்பதாக அன்னை சொல்கிறார். அதுவும் தாம் சொல்வதாகச் சொல்லவில்லை. பகவான் அன்னையை சூட்சும உலகில் சந்தித்து இதைச் சொன்னார் என்றார். சேர சோழ பாண்டியர் நாட்டிலும், இராம இராஜ்ஜியத்திலும், தர்மர் ஆண்ட நாளிலும், அசோக சாம்ராஜ்யத்திலும், டெல்லியில் சக்ரவர்த்திகள் ஆட்சி செய்த நாட்களிலும், ரோமாபுரியிலும், விக்டோரிய மகாராணியின் ஆட்சியிலும், நம் குழந்தைகட்குப் பாடம் கற்பிப்பது நம் கடமை. நம் வாழ்வைச் செப்பனிடுவது நம் பொறுப்பு. நாம் ஒரு தொழில் செய்ய தலைத் தேடுவது நம் குடும்பப் பொறுப்பு. எந்த அரசாங்கமும் அதை உலகில் 1950வரை ஏற்றுக் கொண்டதில்லை.

பிள்ளைகள் படிப்பிலிருந்து, வீடு கட்டுவதுவரை, வேலை தேடுவது முதல், தொழில் நடத்துவதுவரை இன்றைய இந்திய அரசாங்கம், குடிமகன் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொண்டு செயல்படுகிறது. அதைப் பின்பற்றி ஏராளமான நாடுகள் அதேபோல் செயல்படுகின்றன. இது சத்தியஜீவிய சக்தி செயல்படும் வகை.

அன்னை பக்தர்கள் விவசாயத்தில் புதுமுறையைக் கண்டாலும், புதிய மானேஜ்மெண்ட் முறைகளை வகுத்தாலும், அவற்றை உலகுக்குத் தெரிவிப்பதுடன் நிறுத்த முடியாது. நாமே செயல்படுத்தி நடைமுறையில் அவற்றுள் அன்னை சக்தி வெளிப்படுவதைக் காட்ட வேண்டும்.

அவதாரப் புருஷன் யோகத்தை ஏற்றதுபோல், அரசாங்கம் குடிமகனின் பொறுப்பை ஏற்றதுபோல், புதுமுறைளைக் காணும் பக்தர்கள், அவற்றைச் செயல்படுத்தும் கடமையையும் ஏற்க வேண்டியது முறை. இதுவே அவர்கள் பாதையில் நாம் செல்வதை ஊர்ஜிதப்படுத்தும்.

*******

 1. பிரபஞ்சம் மனிதனில் தன்னைச் செறித்துக் காண்பதுபோல், யோகத்தை மேற்கொண்டவர் தம் ஆன்மாவில் நிலைப்பட வேண்டும். வாழ்வு பிரபஞ்சமாகிறது. ஆன்மா அதன் மையமாகிறது.

உடலே பிரபஞ்சம், ஆன்மாவே ஜீவாத்மா.

ஆன்மா உலகில் பிறப்பெடுக்க உடலை உற்பத்தி செய்து ஏற்று அதனுள் தன்னைப் பொதித்தது என்பது மரபு. அதேபோல் சச்சிதானந்தம் தன் உடலாகப் பூமியை உற்பத்தி செய்தது என்கிறார் பகவான்.

பிரபஞ்சம் என்பது பிரகிருதி (இயற்கை). தான் உயர்ந்து பரமாத்மாவையடைய பிரபஞ்சம் விழைகிறது. பிரகிருதியின் பிரபஞ்சம் ஆன்மாவான பரமாத்மாவை நேரடியாக அடையமுடியாது. எனவே தன்னுள் உள்ள ஆன்மாவைக் கண்டு, அதன் நிலையை அளவுகடந்து உயர்த்தி அதன்மூலம் பரமாத்மாவை அடையவேண்டும் என்று பிரபஞ்சம் முடிவு செய்தது. அதற்காக ( individual soul) ஆன்மாக்களை ஆயிரக்கணக்கில் பிரபஞ்சம் உற்பத்தி செய்தது.

தன்னை செறிவடையச் செய்த புள்ளிகளே ஆன்மாக்கள். இப்படி உற்பத்தியான ஆன்மா, தனக்கென ஒரு சாதனையைச் செய்து ஒரு சிறு கூட்டுக்குள் தன்னை அமைத்துக் கொள்கிறது. கூட்டுக்குள் வளர்ந்து, வளர்ச்சி முடிந்தபின் கூட்டை அழித்து, பிரபஞ்சம்வரை வியாபித்து, பிரபஞ்சத்தை ஆன்மீக வலுவடையச் செய்கிறது. ஆயிரக்கணக்கான ஆன்மாக்கள் வளர்ந்து கூடுகளை அழித்து பிரபஞ்சம் முழுவதும் பரவி பிரபஞ்சத்தின் ஆன்மீக நிலையை உயர்த்தினால், உயர்வு ஒரு கட்டத்தைத் தாண்டும்பொழுது பிரபஞ்சத்தின் ஆத்மா, பரமாத்மாவை எட்டும். ஆன்மா உள்ள கூடே அகந்தையாகும்.

மனிதன் பிரபஞ்சத்தின் சிறு உருவம் (miniature). மனிதன் பிரபஞ்சம்போல் வளர, அவனது ஜீவனுடைய கரணங்களில் ஆன்மா உற்பத்தியாகவேண்டும். கரணங்களின் ஆன்மாவுக்கு சைத்தியப் புருஷன் எனப் பெயர். மனம், உணர்வு, உடல் ஆகியவற்றில் சைத்தியப் புருஷன் உற்பத்தியாகி அவற்றிற்குள்ள கூடுகளை அழித்து வெளிவந்து, கரணங்களின் ஆத்மா, ஜீவனின் ஆத்மாவாகி ஜீவாத்மா, தான் மாற்றமற்றது என்ற நிலையிலிருந்து மாறி, வளர ஆரம்பித்து, பிரபஞ்சத்தின் ஆத்மாவுடன் ஐக்கியமாக வேண்டும்.

பிரபஞ்சத்தின் பரிணாமமும், மனிதனுடைய பரிணாமமும் ஒரே வகையானவை. மனிதனுடைய பிரபஞ்சம் அவன் உடல். அவன் உடல் திருவுருமாற்றமடைந்தால், பிரபஞ்சம் திருவுருமாற்றமடையும். உடன் திருவுருமாற்றத்தை உலகில் அன்னையின்உடல் தவிர வேறெதுவும் ஏற்கும் திறனுடையதன்று என்ற  பகவான் சொல்லியதன் பொருள், அன்னையின்உடல் பூமியையும், பிரபஞ்சத்தையும் நேரடியாகக் குறிப்பிடுகிறது என்றாகிறது. ஆரம்ப நாட்களில் அன்னை தம்முடல் பூமியுடன் இரண்டறக் கலந்ததைக் குறிப்பிடுகிறார். அதை, பகவான், vedic experience என்றார். அன்னைக்குப் பிறகு வெளிவந்த அவருடைய பேச்சுகளில், தம்முடல் பிரபஞ்சம் முழுவதும் (physically expanded] பரவித் தழுவியதாக எழுதியுள்ளார். அன்னையின்உடல் பிரபஞ்சத்தின் பிரகிருதி. கடைசி

நாட்களில் தாம் இறைவனாக சில நிமிஷம் மாறியதை விவரிக்கின்றார். பிறகு அந்நிலை பல மணி நீடித்ததையும் எழுதுகிறார். அன்னையே இறைவனானபின், அவருடல் இறைவனின் திருவுடலான பிரபஞ்சம். மேலும் சொன்னால் பிரபஞ்சத்தையும் தம்முட் கொண்ட சிருஷ்டியை அன்னையுடல் குறிக்கிறது.

பூரணயோகம், பூமாதேவியைத் திருவுருமாற்றி, பிரபஞ்சத்தையும் திருவுருமாற்ற, இறைவனை பூவுலகுக்குக் கொண்டுவர முயல்கிறது. அதுவே அதன் இலட்சியம். இறைவனின் சக்தி - சத்தியஜீவிய சக்தி - பூமியில் 1956இல் இறங்கி வந்து அன்றிலிருந்து செயல்படுகிறது.

*****

 1. நாலு பேர் எதிரில் மனிதன் முறையற்று நடப்பதில்லை. மனச்சாட்சிக்குட்பட்டவன் எண்ணத்தால் ஊறு செய்வதில்லை. யோகி தன் ஆழ்ந்த மனத்தினின்று தவற்றையும், தீமையையும் அகற்ற வேண்டும்.
 • மனிதன் செயல் தூய்மையானவன்,
 • மனச்சாட்சி எண்ணத்தின் தூய்மை,
 • யோகம் ஜீவியத்தின் தூய்மை.

மனித வாழ்வு கெட்டதைவிட்டகன்று, நல்லதை நாடுகிறது. தீமையை அழித்து நன்மையை ஆதரிக்கிறது. முறைகெட்டதைத் தவிர்த்து முறையை ஏற்கிறது. இதை விவரிக்கும் நிலைக்கு மனிதனை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

 1. சமூகம் தன் தோற்றத்தை ஏற்றுக் கொண்டால் போதும் என்பவன் சாமானிய மனிதன். இவன் மேல்மனத்தின் மேற்புறத்தில் வாழ்பவன்.

 1. தன் நெஞ்சம் தன்னை ஏற்க வேண்டும் என்ற நெறியான மனச்சாட்சிக்குட்பட்ட மனிதன். இவன் மேல்மனத்தின் ஆழத்தில் உணர்வால் வாழ்பவன்.
 2. தான் ஏற்ற ஆன்மீகக் கொள்கையின் உறைவிடமான ஆழ்மனம் தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்பவன் யோகி. இவன் உள்மனத்தில் வாழ்பவன்.

வீட்டில் பழைய கந்தலை உடுத்தினாலும், வெளியில் நல்ல உடையோடு காணப்பட வேண்டும்என எல்லா வசதிகளுக்குமுரிய பணத்தையும் உடைக்குச் செலவிடுவது வழக்கம். தோற்றம் முக்கியம், படிப்பில்லாவிட்டாலும் பட்டம் முக்கியம், பவுனில்லாவிட்டாலும் பவுன் போன்ற தோற்றமுள்ள நகை முக்கியம், நல்ல சாப்பாடில்லாவிட்டாலும், வீட்டில் T.V. இருப்பதாக அனைவரும் நினைக்க வேண்டும் என்று மனிதன் எல்லா நிலைகளிலும் பாடுபடுகிறான். வசதியில்லாதவன் வசதியான தோற்றத்தையும், வசதியிருந்து குடும்பச் சுமுகமில்லாதவன் சுமுகமான தோற்றத்தையும், செல்வமிருந்து புகழில்லாதவன் தோற்றத்தில் புகழும்நாட நாள்தோறும் முயல்கிறான். இவர்கள் சாமானியர்கள். பிறர் பொருளைத் தீண்டக்கூடாது, உதவி கேட்கக் கூடாது, பொறாமைப்படக் கூடாது, உதவி செய்யத் தவறக்கூடாது, மனத்தாலும் ஒரு தவற்றைச் செய்தல் கூடாது என்று மனச்சாட்சியை தெய்வமாக்கி வாழ்பவர் சதவீதக் கணக்கில் குறைவாக இருந்தாலும் ஓர் ஊரில் பல நூறு நல்ல மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்குத் தோற்றம், நாலு பேர் சொல்வது இரண்டாம்பட்சம். தம் நெஞ்சம் சுடக் கூடாது, பதற்றப்படக் கூடாது, நெஞ்சில் எழும் உணர்வு உத்தரவு அளிக்காவிட்டால் அவர்களால் செயல்படமுடியாது. இவர்களை மனிதத் தன்மையுடைய நல்ல மனிதர்கள் என்போம்.

யோகியின் இலக்கு மோட்சம். அவனுடைய பாதையில் தோற்றத்திற்கு வேலையில்லை. மனச்சாட்சி ஏற்றால் போதாது. மனம் அறியாத நிலையில் ஆழ்மனம் அவன் ஏற்ற பாதைக்கு ஊறு செய்வதை ஏற்றல் கூடாது. ஆழ்மனம் ஏற்பதை சூழலும், கனவும், தியானமும், சகுனமும், புறநிகழ்ச்சிகளும், அகவுணர்வுகளும்,

அவனுக்கு உணர்த்தியபடியிருக்கும். ஆழ்மனம் தூய்மையாக இல்லாமல், யோகப்பாதையில் யாத்திரையில்லை. கதவை அணுகலாம். திறக்காது. மனச்சாட்சி திறனற்றுப் போகும் சொர்க்க வாயில் அது.

*******

 1. ஆன்மாவைப் பொறுத்தவரை தவறில்லை. மனச்சாட்சி தீமையைக் கண்டதும் விலகுகிறது. சமூகம் பொது இடத்தில் தவறிழைக்க அனுமதியில்லை.
 • ஆன்மாவுக்கு அனைத்தும் சரி.
 • மனச்சாட்சி தவற்றை அனுமதிக்காது.
 • சமூகம் தவறான நடத்தையை அனுமதிக்காது.

சமூகத்தில் வெளித்தோற்றம் முக்கியம். உள்ளே எப்படியிருந்தாலும் கேள்வியில்லை. மனச்சாட்சிக்கு உள்ளேயுள்ள மனநிலை முக்கியம், தோற்றமன்று. ஆன்மாவுக்குத் தோற்றம் இல்லை. உள்ளேயுள்ள மனநிலையும் முக்கியமில்லை. ஏனெனில் ஆன்மாவுக்குத் தீமை என்பதில்லை, தவறு என்பதில்லை, குற்றம் கிடையாது அதனால் மன்னிப்பு கிடையாது. பாவம் என்பதை மனிதன் உணர்கிறான். ஆன்மா பாவ, புண்ணியங்கட்கு அப்பாற்பட்டது. கோதுமை மாவைப் பூரியாகத் திரட்டினால், பூரி உருவாகும் பொழுது சில சமயங்களில் கொஞ்சம் மாவை எடுக்க வேண்டியிருக்கிறது. அது விரயமன்று. புத்தகத்திற்கு அட்டை போட அட்டைப் பேப்பரை வெட்டினால் துண்டுகள் விரயமாகின்றன. பூரிபோக மீதி மாவு விரயமாவதில்லை. அடுத்த பூரியாகிறது. இயற்கை (nature) என்பதன் செயல் அட்டை போடும் பேப்பர் போன்ற நிலையில்லை, பூரி மாவு போன்ற நிலையுண்டு. நமக்கு விரயமாகத் தெரிவது, இயற்கைக்கு விரயமன்று. வேறொரு காரியத்திற்குப் பயன்படுகிறது. வாழை குலை தள்ளியபின் மரத்தை வெட்டினால் அதை வீசுகிறோம். குளித்தால் தண்ணீர் சிதறுகிறது. சிதறிய நீர்

விரயமாகிச் சாய்க்கடையில் போகிறது. சமையல் செய்தால் உபயோகமாகாத காய்கறியின் பகுதிகள் வீணாகின்றன. இன்று படித்த பேப்பர் நாளைக்குப் பயனில்லை. அது நமக்கு விரயம். இயற்கை எனும் தொழிற்கூடத்தில் துண்டான பேப்பர் மண்ணோடு மட்கி அது புதுப்பொருள் உற்பத்தியாக உதவுகிறது. குலைதள்ளிய வாழை நிலத்திற்கு உரமாகிறது. குளித்துச் சாய்க்கடையில் போகும் நீர் பூமிக்கடியில் சேருகிறது. இயற்கையின் செயல்கள் பல்லாயிரம். மனிதனுக்குத் தேவையான செயல்கள் ஆயிரம். நமக்குப் பயன்படாதவை நமக்கு விரயம். அவை இயற்கைக்கு விரயமல்ல. நாம் செயல்படாத இடங்களில் நம் கண்ணுக்குத் தெரியாத வகையில் இயற்கை செயல்பட்டுக் கொண்டேயிருப்பதால் எதுவும் இயற்கைக்கு உதவும். அதேபோல் சமூக வாழ்வில் ஏற்கக் கூடியது, ஏற்க முடியாதது என இரு பிரிவுகளுண்டு. மனச்சாட்சி நன்மை, தீமைஎன, செயல்களைப் பிரிக்கிறது. ஆன்மாவுக்கு இதுபோன்ற பாகுபாடுகள் இல்லை. அனைத்தையும் செயல்எனக் கருதுகிறது. அவற்றை ஆண்டவனின் செயல் என அறிகிறது. ஆண்டவனின் செயலை பாவம்என்று சொல்ல முடியுமா? ஏற்கக் கூடாததுஎன்று சொல்லலாமா? தீமைஎன்று பாகுபாடுசெய்ய முடியுமா? முடியாதல்லவா?

நாம் மனத்திலிருந்து நினைக்கிறோம். உணர்விலிருந்து செயல்படுகிறோம். ஆன்மா நினைப்பதில்லை, உணர்வதில்லை, செயல்படுவதில்லை, பாகுபாடு செய்வதில்லை. சாட்சியாகச் செயல்களை தன் ஆன்மீகத் திருஷ்டியால் பார்க்கிறது. நாம் கண்ணால் பார்த்து மனத்தால் அறிகிறோம். ஆன்மா கண்ணும், மனமும் தேவைப்படாமல், சூட்சுமப் பார்வையால் - திருஷ்டியால் - பார்க்கிறது.

********

 1. அருளை அடையாளம் காண்பது நன்றியறிதல்.

இறைவனைச் செயல் காண்பது நன்றியறிதல்.

கிராமத்திலிருந்து நகரத்திற்குவர தூரம் 5 மைலானாலும், 10 மைலானாலும் நடந்துதான் வரவேண்டும். 1950இல் பஸ்ஸில் போகும் பொழுது நெடுஞ்சாலையில் தலைச்சுமையுடன் சாரி சாரியாக மக்கள் போவதைக் காணலாம். பஸ்ஸில்போக வசதியுள்ள ஊருக்கும், ஊரிலிருந்து ரோட்டிற்கு 2 மைல், 5 மைல்என நடந்து வரவேண்டும். அந்த இரண்டு மைலுக்குப் பஸ் வேண்டும்என புதுத்தலைமுறைகள் கேட்டபொழுது டவுனுக்கு 12 மைலும் நடந்தே போய்ப் பழக்கமானவன், என்ன வேடிக்கை இது வீட்டு வாயிற்படிக்கும் பஸ் வேண்டுமா உனக்கு எனக்கேட்டான். அதுபோன்ற கிராமத்தில் பஸ் வரும்பொழுது திருவிழாபோல் கொண்டாடி பஸ்ஸை வரவேற்றார்கள். புதியதாக வருவதை - போன், பஸ், பள்ளி, துணி, பேனா, விளக்கு, விவசாயம், லாரி, சாக்கு - முதல் ஆரவாரமாக நாம் வரவேற்கிறோம். இன்று கம்ப்யூட்டருக்கு அதுபோன்ற வரவேற்புண்டு. speed post, டெலிபோன்பூத், மிக்ஸி, காஸ், கிரைண்டர், மொப்பெட், ஸெராக்ஸ் போன்றவற்றை வரவேற்கிறோம். பழையவற்றை நாம் இருப்பதாக வைத்துக் கொண்டு (take for granted) அவற்றைக் கவனிப்பதில்லை.

இவையெல்லாம் 50 வருஷங்களாக வந்தவை. இதற்குமுன் 500 வருஷமாக, 5000 வருஷமாகவந்த நிலம், வீடு, கிணறு, ஏரி ஆகியவற்றை இன்று நாம் நினைப்பதேயில்லை. ஆண்டவன் ஆதி நாளிலிருந்திருக்கிறான். மனிதன் உற்பத்தியாகி 31 இலட்சம் வருஷமாகிறது என்று acuurate துல்யமாகக் கணக்கிட்டு இருக்கிறார்கள். ஆண்டவன் அதற்கு முன்னிருந்து பூவுலகில் ஆட்சி செலுத்துகிறான். அவன் அளித்ததே சூரியன், சந்திரன், மரம், மழை ஆகியவை. பஸ்ஸில் போகும்பொழுது இந்தபஸ்ஸை அருள் தாங்குகிறது என நாம் அறியமுடிவதில்லை. நாம் சும்மா உட்கார்ந்திருக்கும்பொழுது மூச்சுவிடுவது அருளால்எனத் தெரிவதில்லை. சுவாசம் சிரமமாகி, டாக்டர் மருந்து பலிக்காதபின், டாக்டர் கைவிட்ட பிறகு, பிரார்த்தனையால் சுவாசம் எழுந்தால் அருள் செயல்படுவதை அறிகிறோம். ஆன்மாவுக்கு நன்றி சொல்கிறோம்.

அதுவே சும்மா சுவாசம் வந்தால் அருளின் செயல்என அறிவதில்லை. அறிந்தால் அது நன்றியறிதல்.

சினிமாவை நாம் பார்ப்பதற்கும், அதை டைரக்ட் செய்தவர் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் அது. டைரக்டருக்கு ஒவ்வொரு சீனும், அதிலுள்ள பொருள்களும், மனிதர்களும், சொற்களும் தாமியற்றியவை எனத் தெரியும். சினிமாவை டைரக்டர் பார்ப்பதைப் போல், நாம் பார்ப்பது அறிவு, தெளிவு.

இன்று ஆண்டவன் மனித உருவில் உலவினால் அத்தனைச் செயல்களும் அவன் செயலே என அவன் அறிவான். அதுபோல் நாம் அறிந்தால் அது அருளை அடையாளம் காண்பதாகும். அதனால் நன்றியுணர்வு எழும். அது பலிக்க நாம் ஆண்டவனாகும் பாதையில் அடி எடுத்து வைக்கவேண்டும். பூரணயோகம் வகுத்த பாதை அதுவேயாகும்.

*********

 1. ஜீவனற்ற செயல் அருளைக் கண்டால் செயல் உயிர் பெறுகிறது. தரித்திரத்தில் அருளைக் கண்டால் அருள் பேரருளாகிறது.

ஜீவனற்ற செயலுக்கு ஜீவனைத்தரும் அருள் தரித்திரத்தை பேரருளாக்கும்.

ஒரு தச்சன் கடமைக்காக ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை இரண்டு மணி நேரமாகச் செய்வதை நாம் கண்டால், எரிச்சல் வருகிறது. ஏன் இறைவன் இந்தத் தச்சனில் இதுபோல் செயல்படுகிறான்என்று நினைத்தால் பதில் தெரிவதில்லை. தச்சனுடைய கண்ணோட்டத்தில் இதைக் காண முயலலாம். இறைவன் கண்ணோட்டத்தில் இதைப் புரிந்துகொள்ள முயன்றால் அருள் வெளிப்படும். தச்சனை ஏன் இதுபோல் வேலை செய்கிறாய்

என்று விசாரித்தால் அவன் காலையில் சாப்பிடவில்லை, வீட்டில் சண்டை போட்டுவிட்டு வேலைக்குப் போகாமலிருக்கலாம்என நினைத்தவன் மனம் மாறி வேலைக்கு வந்திருக்கிறான்என்று தெரிந்ததும், எப்படி இந்த அளவு அந்த மனநிலையில் பசியுடன் வேலை செய்ய முடிகிறதுஎன்று நமக்குத் தோன்றும். மேலும் விசாரித்தால் இந்த முதலாளி எப்பொழுது வேலை செய்தாலும் 40 நாள் வேலையில் 30 நாள் கூலி கொடுத்துவிட்டு மீதி பாக்கி வைப்பார். பிறகு அது வாராது என்றும் தெரியும். நானாக இருந்தால் நீ செய்வதில் பாதியும் செய்யமாட்டேன். நீ நல்ல மனிதனாகத் தெரிகிறது என்று சொல்லத் தோன்றும். இறைவன் கண்ணோட்டத்தில் இத்தச்சனுடைய ஆன்மா போனஜென்மத்தில் சுமுகமான குடும்பத்தில் பிறந்து, இந்த ஜன்மத்தில் சண்டை சச்சரவு எப்படியிருக்கும் என அனுபவிக்கும் இக்குடும்பத்தில் பிறந்து சச்சரவின் ஆன்மீகத் தன்மையை வேலையில் காண முனைகிறது என்றறிந்தால், அக்கண்ணோட்டத்தில் தச்சனின் மனப்போராட்டம் ஆன்மீக அனுபவமாகத் தெரியும். அதுவே அருளின் செயல். நம் பார்வை தச்சனை மாற்றிச் சுறுசுறுப்பாக்கும். சூழல் மாறும். செயல் உயிர் பெறும்.

பரம தரித்திரனை இக்கண்ணோட்டத்தில் காண ஆன்மீக சூட்சுமப்பார்வை (Spiritual subtle vision) வேண்டும். அதுபோல் கவனித்தால் தரித்திரத்தின் பூர்வோத்திரம் நமக்கு விளங்கும். நமக்கு விளங்குவதால் நம் மூலம் அருள் தரித்திரனைத் தொடும். தரித்திரன் தனி நபர். தரித்திரம் பொது (impersonal vibration). அருளால் தனிநபர் (personal) குணம் (impersonal) பொதுகுணமாக மாறினால், தரித்திரத்திற்கு பிரபஞ்சத்தில் முடிவுகாலம் வந்துவிடும். இனி தரித்திரம் உலகைவிட்டுப் போகத் தயாராகும். அன்னையின் உடலைத் தீண்டிய எந்தக் குணமும் திருவுருமாற்றமடைந்து தன் நிலை கரைந்து எதிரானதாக மாறுகிறது. தரித்திரம் அருளின் தீண்டலால் சுபிட்சமாகிறது. இது திருவுருமாற்றம். இதை அருள் செய்வதில்லை. அருள் கர்மத்தைக் கரைக்கும். திருவுருமாற்றத்தைக் கொணர்வது

பேரருள் super grace. நம் பார்வையால் புறநிலை மாறும். நம் பார்வை மாறினால் ஜடமும் திருவுருமாறி சச்சிதானந்தமாகும் என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

*******

 1. ஆன்மாவுக்கு அருளை அடையாளம் தெரியும் என்பதால், அருள் புரியும் நேரம் ஆன்மா வெளிப்படும் நேரம். வெளிவரும் ஆன்மா சைத்தியப்புருஷன். ஜீவாத்மாவால் மேலே வர முடியாது.

அருள் செயல்படும் நேரம் ஆன்மா வெளிப்படும் நேரம்.

சட்டம் எந்த நேரமும் அமுலிலிருக்கிறது. ஆனால் நாம் அதைச் செயல் சில சமயங்களில்தான் பார்க்கிறோம். ஊரில் அராஜகம் தலை எடுப்பதை போலீஸ் அடக்கும்பொழுது சட்டம் செயல்படுவதை நாம் பார்க்கிறோம். நம் நிம்மதியான நாகரீகமான வாழ்வு ஆயிரம் சட்டங்கள் அமுல் இருப்பதால். ஏதாவது ஒரு சட்டம் அமுலிலில்லை எனில் அராஜகம் தலை விரித்தாடுவதை உடனே காணலாம். எந்த பஸ் எந்த ரூட்டில் எத்தனை மணிக்குப் புறப்பட்டுப் போகவேண்டும் என சட்டமும், உத்தரவும் உண்டு. நாளை காலை அந்த உத்தரவு அமுலில் இல்லை எனில் பஸ் ஸ்டாண்ட் எப்படியிருக்கும் என நினைக்கவே பயமாக இருக்கிறது. அதேபோல் அருள்தான் உலகைத் தாங்கிப் பிடிக்கிறது. நமக்கு அது தெரிவதில்லை. அருள் ஒரு நிமிஷம் செயல்படாவிட்டால் உலகம் தவிடு பொடியாகும் என்கிறார் அன்னை.

பொதுவான அருள் அனைத்துச் செயலையும் ஆதரித்தாலும் அருளுக்குக் குறிப்பான செயலும் உண்டு. அருள் செயல்படும் பொழுது ஆன்மா வெளிப்பட்டு அதை ஏற்றுக்கொள்கிறது. ஆன்மா (சைத்தியப்புருஷன்) செயல்பட்டால், செயல்பட்டு மேலெழுந்து வந்தால், அருள் செயல்படும். MLA, MP நம் ஜில்லா தலைநகருக்கு வந்தால் அவர்கள் கலெக்டரைக் போய்ப் பார்ப்பார்கள். மந்திரி வந்தால்

கலெக்டர் பங்களாவில் தங்கி, கலெக்டரைக் கூப்பிட்டனுப்புவார். அல்லது கலெக்டர் போய்ப் பார்ப்பார். முதன் மந்திரி வந்தால், கலெக்டர் அவர் நுழையும்பொழுது வெளியே வந்து வரவேற்பார். கவர்னர் வந்தால், ஜில்லா எல்லைக்குப் போய் கலெக்டர் அவரை வரவேற்று உடனிருந்து ஜில்லாவைவிட்டு வெளியே போகும்வரை எல்லையைக் கடக்கும்வரை இருப்பார். அதேபோல் எண்ணத்தை மனம் ஏற்கிறது. செயலை உடல் ஏற்கிறது. அருள் வந்தால் சைத்தியப்புருஷன் எனும் ஆன்மா உள்மனமாகிய தன்னிடத்திலிருந்து மேல்மனத்திற்கு வந்து அருளை வரவேற்கிறது.

ஜீவாத்மா அசைவதில்லை. அது வெளிவருவதில்லை. அதுவே அருளை உற்பத்தி செய்யவும் வல்லது. அதை grace of the spirit ஜீவனின் அருள் என்கிறார் பகவான். அது மேல் மனத்திற்கு வருவதில்லை. அருளுக்காகக் காத்திருப்பதில்லை. அசைவற்ற, அழிவற்ற, வளர்ச்சியோ, மாற்றமோ இல்லாதது ஜீவாத்மா. சைத்தியப் புருஷன் உள்மனத்தில் உள்ளது. இது ஜீவாத்மாவின் பிரதிநிதி, இதற்கு வளர்ச்சியுண்டு, மாற்றமுண்டு. வாழ்வின் அனுபவசாரத்தைச் சேர்த்து அதனால் வளர்வது சைத்தியப்புருஷன். அடுத்த பிறவியை நிர்ணயிப்பது சைத்தியப்புருஷன். அங்கும் தொடர்ந்து வருவது இதுவேயாகும்.

*****

 

 1. ஆன்மா இயற்கையில் வெளிவருவது ஆண்டவன் செயல். மனிதனுடைய ஆன்மா மேலே வருவது பரிணாம முயற்சி. அது நன்றியறிதல், பரிணாம முயற்சியை மேற்கொண்ட மனிதனுடைய ஆன்மா பரிணாம முயற்சியை மேற்கொண்ட இறைவனின் ஆன்மாவைக் கண்டுகொள்ளுதல், நன்றியறிதலாகும்.

ஜீவன் ஜீவாத்மாவை அறிதல் நன்றியறிதலாகும்.

நாம் இயல்பாகச் செயல்படும்பொழுது உடலால் செயல்படுகிறோம். ஒரு நேரம் உணர்ச்சியால் செயல்படுகிறோம். ஏதோ ஒரு சமயம் அறிவால் செயல்படுகிறோம். இதுவே மனிதநிலை. உயிர் பிரிவதற்கு முன் ஆன்மா மேலே வந்து இவ்வாழ்வை நினைவுபடுத்தி, அடுத்த பிறவிக்குள்ள இடத்தை முடிவு செய்து மீண்டும் உள்ளே போகிறது. அது தவிர அன்றாட வாழ்வில் ஆன்மா வெளிவருவதில்லை. தபஸ்விக்கு தியானத்தில், சமாதியில், பக்தனுக்கு லயத்தில் ஆன்மா மேலெழும்! தவமுயற்சியால் ஆன்மா தபஸ்விக்குத்தான் மேலேவரும்.

பூரணயோகம் என்பது அழிவும், வளர்ச்சியும், மாற்றமுமில்லாத ஆன்மா மாறி, வளர்வதாகும். (Yoga of spiritual evolution). சமர்ப்பணத்தால் ஒவ்வொரு செயலையும் ஆன்மாவுடன் ஈடுபடுத்துவதால், ஆன்மா செயலை ஏற்று வளர ஆரம்பிக்கிறது. இந்த ஆன்மா சாட்சிப்புருஷனான ஜீவாத்மா அன்று, சைத்தியப் புருஷனான பிரகிருதியிலுள்ள வளரும்ஆன்மா. பரம்பரையாக இறைவன் அழிவற்றவன், மாற்றமற்றவன்என அறிவோம். பகவான் இறைவனுக்கு மாற்றமும், வளர்ச்சியும் உண்டு என்கிறார். மாற்றத்தையும், அதன் மூலம் வளர்ச்சியையும் இறைவன் ஏற்று லீலையை மேற்கொண்டு, அதனால் (bliss) பேரானந்தத்தைவிட உயர்ந்ததான (delight) சிருஷ்டியின் ஆனந்தத்தை நாடுகிறான்என்று பகவான் லீலையை வர்ணிக்கின்றார்.

குழந்தையிடம் பொம்மை, சட்டை கொடுத்தால் வாங்கிக் கொள்ளும். மகனுக்குத் தொழிலுக்கு முதல் கொடுத்தால், தகப்பனார் அம்முதலை எழுப்பிய வகைகளை மகன் அறிவான். எவ்வளவு சேமிப்பு, நிலத்துக்கடன் எவ்வளவு, நகை விற்றது எவ்வளவுஎன அறிவதால் பொம்மை பெறும் குழந்தையைவிட விவரமாக மகன் தந்தையின் முயற்சியைப் பாராட்டுகிறான். மோட்டார் பைக் வாங்கப் போனால் மார்க்கெட்டில் விற்கிறது, வாங்கிக் கொள்கிறான். 1940, 1950இல் இளைஞர்களாக இருந்தவர்கள் நம் நாட்டில் குண்டூசியும் உற்பத்தியாகவில்லை என மனம் புழுங்கியவர்கள், நாட்டில்

மோட்டார்பைக் வந்தால் அதை நாட்டு முன்னேற்றமாக, சர்க்கார் முயற்சியாக, சமூக வளர்ச்சியாக அறிந்து மகிழ்வார்கள். தன் வளர்ச்சியை அறிபவனே, நாட்டு வளர்ச்சியை அறிய முடியும். நம் ஆன்மா வளர முயன்றால், மனிதன் விழிப்புடனிருப்பான். அவன் கண்ணுக்குத்தான் இறைவனுடைய ஆன்மா - பிரபஞ்சத்தின் ஆத்மா வளர்வது தெரியும். அதைத் தெரிந்து உணர்ந்து மகிழ்வதே நன்றியறிதலாகும். வளரும் ஆன்மா மேலேஎழுந்து வந்தால் வெளியில் நிகழும் நிகழ்ச்சிகளை, இறைவன் செயலாக, இறைவனின் ஆன்மா வளர முயலும் வெளிப்பாடாகக் காண முடியும். அந்த உணர்வு நன்றியறிதலாகும். அது எழுந்தால் உடல் புளகாங்கிதமடையும்.

*****

 1. மனிதனுடைய ஆன்மா பிரபஞ்சம் முழுவதும் பரவ முயல்வது நன்றியறிதல் எனப்படும்.

ஜீவாத்மா பிரபஞ்ச ஆத்மாவாவது இறைவனுக்கு நன்றியறிதலாகும்.

நன்றியறிதல் எனில் பெரியது சிறியதற்குக் கடமையில்லாத நேரத்தில் தானே முன்வந்து உவந்து செய்யும் உதவி அல்லது சேவையின் உண்மையை உளமார அறிந்து உணர்வால் ஏற்று மலர்வதாகும். அவனருளன்றி அவன் தாள் வணங்க முடியாது என்பதுபோல், பரமாத்மாவின் அருளின்றி ஜீவாத்மா அவனை அடைய முடியாது. ஜீவாத்மா, பரமாத்மாவை அடையும்முன் இடைப்பட்ட நிலையான பிரபஞ்சத்தின் ஆத்மா ஆகவேண்டும். இதை எய்தத் தடையாக இருப்பது ஜீவாத்மாமீது கரையாகப் படிந்து கடலாகச் சூழ்ந்துள்ள அகங்காரம் எனப்படும் ஆணவ மலமாகும். அகங்காரம் அழிந்தால் ஆன்மாவாகிய சைத்தியப்புருஷன் விடுதலை பெற்று வெளிவருவான்.

சைத்தியப்புருஷனுக்கு பிரபஞ்சத்தைத் தழுவும் வீச்சுண்டு. பிரபஞ்சம் ழுவதும் பரவ முயலும் ஆன்மா சிறைப்பட்ட தன் சிறுகூடான அகந்தையிலிருந்து விடுபட்டு, தன் பிறப்பிடமான பரமாத்மாவை அடைய முன்நிலையான பிரபஞ்சத்தின் ஆத்மாவோடு கலக்க முயல்கிறது. இது ஜீவாத்மாவின் முயற்சியால் மட்டும் முடியாது. இதைப் பூர்த்தி செய்ய பரமாத்மாவின் அனுக்கிரஹம் தேவை. பரமாத்மாவின் அனுக்கிரஹத்தை அறிந்து உணர்வது நன்றி உணர்வாகும்.

சைத்தியப்புருஷன் வெளிப்படுமுன் பிராணமயப்புருஷன் வெளிப்படுகிறான். ஆசையால் பிராணமயப்புருஷன் சிறைப் பட்டிருக்கிறான். இச்சிறை விலகி பிராணமயப்புருஷன் வெளிப்படுகிறான். இது யோகத்தில் ஒரு கட்டம். இந்நிலை விடுதலையாகும். ஆசையினின்று பெற்ற விடுதலையாகும். அகந்தையினின்று விடுதலை பெற்றால் எழுவதும் உணர்வே. அவ்வுணர்வுக்கு நன்றியறிதல் எனப் பெயர். அதற்கு முன்நிலை ஆசையடங்கியிருப்பது. ஆசையை அடக்க முடியாதவன் தன் ஆசை பூர்த்தியாவதன் மூலம் அழிகிறான். அடக்க முடிந்தவன் கட்டுப்பாடுடையவன். கட்டுப்பாட்டில் வாழ்வில் முன்னேறுகிறான்.

ஆசை எழுவதற்கு முன்நிலை உணர்வற்ற உழைப்பு. இந்த உழைப்பு உடல் உழைப்பு. ஆயுள் பரியந்தம் உழைத்தாலும் கடைசி காலத்திற்கு எதுவும் மீதியில்லாத உழைப்பு.

உழைப்பின் அடுத்த கட்ட ஆசை எழுந்து தன்னைக் கட்டுப்படுத்தி வாழ்வை உயர்த்தி, பின் ஆசையெனும் சிறையிலிருந்து பிராணமயப்புருஷனை விடுவித்து, அதன் பலனாக அகந்தை எனும் கூட்டை உடைத்து சைத்தியப்புருஷனை வெளிப்படுத்தினால், அது பிரபஞ்சம் முழுவதும் நன்றியறிதலாகப் பரவுகிறது.

********book | by Dr. Radut