Skip to Content

பகுதி 5

 1. நாம் கேட்பதை, தாங்கள் மகிழ்ந்தபொழுது தெய்வங்கள் நமக்கு வரமாக அளிக்கின்றன. பிரம்மம் தன்னிடமிருந்து எதையும் மனிதன் தன் திறமையால் பெறுவதை அனுமதிக்கின்றது. அன்னை நம்மால் பெற்றுக்கொள்ள முடியும் அத்தனையையும் நமக்களிக்க ஆர்வமாக இருக்கிறார்.

கேட்டதைக் கொடுக்கும் தெய்வம். எதையும் பெறவும் அனுமதிக்கும் பிரம்மம். பெறும் அளவுக்குத் தரும் அன்னை.

ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவற்றிற்குரிய தெய்வங்களுண்டு என்பது நம் மரபு. தெய்வலோகத்துத் தெய்வங்களுக்கில்லாத சக்தியில்லை. அவர்களுடைய சக்தி அளவில்லாதது. தெய்வங்கள் பூமியின் அளவுடையவர்கள் என்கிறார் அன்னை. பிறப்பாலும், அமைப்பாலும் தெய்வங்களுக்குப் பூமியுடன் தொடர்போ, அக்கறையோ இல்லை என்கிறார் அன்னை. அதனால் மனிதன் தெய்வத்தோடு தொடர்பு கொண்டு ஏதாவது பெற வேண்டுமானால், அவர்கள் மனதை எட்டும் மார்க்கத்தை பூஜை, ஸ்தோத்திரம், திருவிழா, தவம், யோகம், மந்திரம் போன்றவற்றால் எட்ட முடியும் என்று கண்டு கொண்டுள்ளான். அப்படி எட்டினால், எட்டும்பொழுது தெய்வம் மகிழ்ந்தால், மனிதன் கேட்பதைக் கொடுக்கிறது என்று நாம் புராணங்கள், இதிகாசங்கள் மூலமாக அறிவோம். தெய்வத்தையும், சத்தியஜீவியத்தையும், சச்சிதானந்தத்தையும் கடந்துள்ளது பிரம்மம். பிரம்மமே அனைத்திற்கும் ஆதி. தானே பிரம்மம் எவருடனும் தொடர்பு கொள்ளவில்லை என்றாலும்,

தன்னையடைந்தவர் எதைக் கேட்டாலும் கொடுக்கவல்லது. பிரம்மத்தை அடைபவர்கள் எதையும் பொன், பொருள் கேட்கும் நிலையிலிருப்பதில்லை. பிரம்மத்துடன் கலப்பதை விழைபவர்களே பிரம்மத்தை எட்டுவதால் கேட்பது, கேட்டுப் பெறுவது என்பது அங்கிருப்பதில்லை.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் இறைவனிடம் கேட்டது பற்றிச் சொல்கிறார். பூவுலகத்தில் இறைவன் வந்து, இறைவனின் திருவுருவம் பூர்த்தியாகி, மனிதன் இறைவனாகி, மனிதனுக்கடுத்த சத்தியஜீவன் பிறந்து சத்தியத்தின் ஆட்சி நிலவி, பொய்ம்மையும், இருளும், அறியாமையும், மரணமும் அழிந்து மனிதவாழ்வு தெய்வீக வாழ்வாக மாறவேண்டும் என பகவான் இறைவனைக் கேட்டார். அதை இறைவன் ஏற்றுக் கொண்டார். முதற்படியாக அதை நிறைவேற்ற இன்று உலகில் ஒரு சக்தியில்லாததால், சத்தியஜீவிய சக்தி அதைப் பூர்த்தி செய்யும் என்பதால், இறைவன் சத்தியஜீவியத்தை உலகுக்கு அனுப்ப, பொன்னொளியை அனுப்ப பகவான் ஸ்ரீ அரவிந்தர் இறைவனானார், அன்னை இறைவனானார். பொன்னொளி பூவுலகத்தை எட்டியது. நின்று நிலவுகிறது. மனிதன் அதிகபட்சம் பூவுலகுக்காக கேட்கக் கூடியதை, உச்சகட்ட தெய்வீக சக்தியை நாம் கேட்டோம் என்கிறார் பகவான். இதுவரை ஆன்மா விடுதலை பெறவேண்டும் எனக் கேட்டனர். பூமியில் நோய், மூப்பு, துயரம், பாவம் அழியவேண்டும் எனக் கேட்ட மகாபுருஷர்கள் உண்டு. அதற்குரிய சக்தி வரவேண்டும் என நினைக்கவில்லை. மனிதன் இறைவனை நாட வேண்டும், அடையவேண்டும் எனக் கேட்டனர். மனிதவாழ்வு துயரத்திலிருந்து விடுபடவேண்டும் எனக் கேட்டனர். பகவான், மனித வாழ்வு தெய்வீக வாழ்வாக வேண்டும் எனக் கேட்டார். அந்த வாழ்வு பூவுலகில் மலரும்பொழுது, இன்றுள்ள தெய்வீக வாழ்வைவிடச் சிறப்பானதாக இருக்கும் என்கிறார். தெய்வங்கள் சூட்சுமமானவை. நம்மைப் போன்ற உடலைப் பெற்றவையல்ல. உடலில்லாவிட்டால் bliss ஆனந்தம் பெறலாம், அதற்கடுத்த கட்டமான சிருஷ்டியின் ஆனந்தம்( delight)

பெறமுடியாது. உயர்ந்த கீர்த்தனையை அறிவது, அதற்குரிய சாகித்தியத்தை அறிவது போன்றது bliss ஆனந்தம். அதைப் பாடுவது, பாடி இன்பம் பெறுவது போன்றது delight சிருஷ்டியின் ஆனந்தம். உடலில்லாததால் கடைசி கட்ட ஆனந்தம் தெய்வலோகத்திற்கில்லை. அது உடலுள்ள மனிதனுக்குண்டு. அதைப் பெற அவன் இருளில் இருந்து விடுபட வேண்டும். இதைப் பெற்றுத் தர இறைவன் பகவானாகவும், அன்னையாகவும் மனிதனைத் தேடி வந்துள்ளனர். நிலத்தின் தன்மையறிந்து, அதில் விளையக்கூடியதை அறிந்து, அதைப் பயிரிட்டுப் பாதுகாத்தால், நிலம் மகிழ்ந்து அறுவடையாகப் பயன் தருவதுபோல் தெய்வங்கள் ஸ்தோத்திரத்தால் மகிழ்ந்து நாம் கேட்பதைக் கொடுப்பார்கள். கடையில் எல்லாம் விற்கின்றன. பணம் கொடுத்து எதையும் வாங்கலாம் என்பது நம் நிலை. ஒரு பெரிய இடத்தில் உன்னை cheif guestமுக்கிய விருந்தினராக அழைத்தால், 100 வகைப் பலகாரம் செய்து வைத்திருந்தால், நம்மால் முடிந்த அளவு கொடுக்க அவர்கள் பிரியப்படுகின்றனர். தெய்வம் நிலம் போலவும், பிரம்மம் கடை போலவும், அன்னை விருந்தாகவும் செயல்படுகின்றனர்.

*********

 1. இறைவன் திருவுள்ளம் நிறைவேறட்டும், என் விருப்பம் வேண்டாம், என்பது மேல் மனத்திலிருந்து ஆழத்திற்குப் போக உதவும் சக்தி வாய்ந்த மந்திரம். நமக்கு ஒரு பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்றால், அதைத் தவிர்த்து, இதை மேற்கொண்டால், இம்மந்திரம் சக்தி வாய்ந்ததாக அமையும்.

திருவுள்ளம் திருப்தியானால், பிரச்சினை தீரும்.

நமது விருப்பம் என்பதும், இறைவனின் திருவுள்ளம் என்பதும், அளவுகடந்து மாறியவை. வீடு கட்ட நினைப்பவன் மனதில் தனக்கு

ஒரு வீடு கட்டிக் கொள்ளும் விருப்பம் மட்டுமே இருக்கும். இறைவன் திருவுள்ளம் என்பதில் விருப்பம் இல்லை, தான் என்பதில்லை. அகந்தை இல்லை. அளவு என்பதில்லை. நாம் கேட்கும் மனநிலையைப் பொறுத்து, இறைவன் அவ்விருப்பத்தை நம் சௌகரியத்தின் மூலம் நிறைவேற்றினால் நமக்கு வீடு கிடைக்கிறது. நாமுள்ள கோவாப்பரேட்டிவ் சொஸைட்டி மூலம் நிறைவேற்றினால், அதன் உறுப்பினர் அனைவருக்கும் வீடுண்டு. நம் மனம், நம்மை விலக்கி, இருளிலிருந்து அகன்று ஜோதியிலிருந்து கேட்டால், வீடு கிடைக்கும். அனைவருக்கும் மனதில் இருளற்று ஜோதி நிரம்பும். ஜோதியான நானோ, விரும்பும் நானோ வேண்டியதில்லை, என் விருப்பம் வேண்டியதில்லை, இறைவன் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்றால், இறைவன் அந்தவுள்ளம் மூலம் செயல்படும்பொழுது, நம் மனதிலுள்ள அதிகபட்ச இலட்சியத்தை இறைவனால் பூர்த்தி செய்ய முடியும். இந்த நாட்டில் எவரும் வீடில்லாமலிருக்கக் கூடாது என நான் ஆழ்ந்து விருப்பப்பட்டிருந்தால், என் விருப்பம் வேண்டாம் என்ற பொழுது எனது மேலெழுந்த விருப்பம் வீடு கட்ட வேண்டும் விலகுகிறது. இறைவன் திருவுள்ளம் நேரடியாகச் செயல்படாமல், என் மனதில் ஆழத்திலுள்ள விருப்பம் நாட்டில் அனைவரும் வீடு பெற வேண்டும் இறைவன் திருவுள்ளமாகப் பூர்த்தியாகிறது. அந்த ஆழ்ந்த விருப்பமும் இல்லாமலிருக்க, விருப்பமே இல்லாமலிருக்க வேண்டும். அது மனிதனுக்கு மட்டுமன்று, தவசிக்கும் சிரமம். என் விருப்பம் வேண்டும் என்றால் என் சிறிய விருப்பம் வேண்டும் என்று முடிகிறது.

நாம் மோட்சத்தை நாடலாம், செல்வத்தை நாடலாம், உலகம் உய்ய வேண்டும் எனலாம். இவை மேல் மனத்தின் எண்ணமாக இருப்பதால், நாம் நாடுவதால் நடக்கப் போவதில்லை. இவற்றிற்கு சக்தியில்லை. தடையாகச் செயல்படுவதே இவற்றின் கடமை. இவற்றை விலக்க என் விருப்பம் வேண்டாம் என்கிறோம். இறைவனால் உள்மனத்தில் (inner mind) நாம் தயார் செய்யப்பட்டு இருக்கிறோம். நாம் தயாராகியிருந்தாலும், இறைவன் நம்மைத் தயார் செய்திருப்பதால் - ஊரில் அனைவருக்கும் வீடு கட்ட, உலகில் அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்க - அதுவே இறைவன்

திருவுள்ளம். நம் உள்மனத்தில் (inner mind), ஆழ்மனத்தில் ( subconscious) உள்ள நம் எண்ணம், இறைவனின் திருவுள்ளமாகிறது. நம்மைப் பொறுத்தவரை நம் ஆழ்ந்த பகுதிகளே நமக்கு இறைவனாகும். மேற்சொன்னவை சாதாரண மனிதனுக்குரியவை. யோகியின் நிலை என்ன? யோகியும் ஆரம்பகாலத்தில் சாதாரணமாக ஆரம்பிக்க வேண்டும். பெரும்பாலும் அந்நிலையோடு யோகம் முடிந்துவிடும். எளிய நிலைகளை யோகி கடந்தால், 'என் விருப்பம்', திருவுள்ளம் என்பவை எப்படியிருக்கும்? எளிய நிலைகள் occupation, preoccupation  மனத்தை நிரப்பிக் கொண்டுள்ளவை, பேயாகப் பிடித்துக் கொண்டிருப்பவையாகும். என் மனதில் எதுவும் இல்லை என்றால், என் மனதிலுள்ளதை நான் அறியேன் என்று பொருள். அறையில் காற்றேயில்லை எனில் காற்றில்லை என்று பொருளில்லை, காற்று வீசவில்லை என்று பொருள். காற்றில்லாமல் அறையிலிருக்க முடியாததுபோல், மனத்தில் எண்ணமற்று மனமிருக்க முடியாது. எண்ணம் உயர்ந்திருக்கலாம், எண்ணமில்லாமலிருக்க நம்மால் முடியாது. எண்ணமற்ற மனம் முனிவருடைய மௌனம் நிறைந்த மனம். நம் போன்றவர்க்கு அது இல்லை. நம் மனம் எக்காலத்திலும் எண்ணங்களால் நிறைந்திருக்கும். உள்ளபடி என் விருப்பம் வேண்டாம் என்றால் மேல்மனத்தின் விருப்பம் விலகி, உள்மனத்திற்கு நம்மை இம்மந்திரம் கொண்டு செல்லும். உள்மனத்திற்கு போவது பெரிய நிலை. தவத்தை மேற்கொண்டவர்க்கு 1) ஆசை அழிதல் 2) மௌனம் பலிப்பது 3) அசைவு அழிவது 4) நிதானம் வருவது 5) பக்குவம் பெறுவது 6) புலன் அடங்குதல் 7) புலன் அவிழ்தல் 8) புலன் செயலின்றி பார்க்க, கேட்க முடிவது 9) வார்த்தை பலிப்பது 10) உள்மனத்தை அடைவது போன்றவை பெரிய கட்டங்கள். முதற் கட்டங்களே ஆனாலும் பெரிய முதற் கட்டங்களாகும்.

Let Thy will be done,not my will என்பதை உருக்கமாகச் சொல்லிக் கொண்டேயிருந்தால் அகந்தை கரையும் என்கிறார் அன்னை. அதை நிறைவேற்ற ஓர் உபாயமும் சொல்கிறார். (அன்னை முன்பு) இறைவன் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதாக ஒவ்வொரு

முறை இதைச் சொல்லும்பொழுதும் கற்பனை செய்ய வேண்டும் என்கிறார். தம்மை வழிபடவேண்டும் என்று சொல்வது அன்னையின் பழக்கமன்று. அதனால் இறைவன் முன் என்கிறார். நமக்கு அன்னையே இறைவன் என்பதால் அன்னைமுன் நமஸ்காரம் செய்வதாக நினைப்பது சரி. சூட்சுமமானவர்க்கு, இதை நினைக்கும்பொழுதே அக்கற்பனை மனதிலெழுந்து, உள்ளேயுள்ள வேகம் அடங்கி, அமைதியுறுவதைக் காணலாம். அக்காட்சி தானே எழுவதும் உண்டு. தானே எழும் காட்சி பக்குவத்திற்குரியது.

**********

 1. ஒருவன் தன் தாழ்ந்த விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளும் முறை அவன் சாதிப்பதை நிர்ணயிக்கும். உடல் கடைசி நிலையிலுள்ளது. அதன் தேவையைத் திருமணத்தால் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறோம். அதனால் திருமண வாழ்வின் தரம், ஒருவன் தன் வாழ்வில் சாதிப்பதைக் குறிக்கும்.

உன் நிலை உன் திருமணத்தின் நிலை.

உயர்ந்த இலட்சியங்கள் உச்சியிலும், தாழ்ந்த விருப்பங்கள் அடியிலும் உள்ள அளவுகோல் மனிதனையும் அவன் உணர்வுகளையும் நிர்ணயிக்கும் அளவுகோலாகும், இந்த அளவு கோல் 10 நிலைகளை ஏற்படுத்தலாம். மனித முயற்சியை, அவன் சாதனையை இவ்வளவுகோலால் நிர்ணயிக்கலாம். மனிதனுடைய உயர்வையும், தாழ்வையும் அவன் செயல்கள் மூலம் அறியலாம். ஒரு வீட்டில் முன்ஹாலே குப்பையாக இருந்தால், பிறகு அவர்கள் சுத்தத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. பாத்ரூம் சுத்தமாகவும், வாடையின்றியும் இருந்தால் அவர்கள் அதிக சுத்தமானவர்கள் என எளிதில் அறியமுடியும்.

பெற்றோர், பிள்ளைகள் ஆகியவரைப் புறக்கணிப்பவர் கடமையிலிருந்து முழுவதும் விலகியவர் எனவும், ஒரு வாரம் தமக்கு

வேலை செய்தவருக்கு உடல்நலமில்லை என்றபொழுது வீட்டு நபர் போல் அவரைக் கவனித்தவர் உச்சகட்டப் பொறுப்புள்ளவர் என்றும் நாம் எளிதில் அறிகிறோம்.

மனமும், ஆன்மாவும் உயர்ந்தவை. உடல் நம் ஜீவனின் கடைசி பகுதி, அதனால் மிகவும் தாழ்ந்ததாகும். உடலுக்குப் பசி, தாகம், உறக்கம் தேவை. மனத்தின் அறிவுத் தாகத்தைப் புறக்கணித்தால், மனம் அதை நாடியபடியிருக்கும். உடலின் பசியைப் புறக்கணிக்க முடியாது. புறக்கணித்தால் மனிதனை வெறியனாக்கும். பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும். யுத்த காலத்தில் கப்பல்கள் அங்கங்கு கடலில், உணவின்றி, பெட்ரோலின்றி நின்றுவிட்டபொழுது அவர்கட்கு யுத்த சந்தர்ப்பத்தில் உதவி அனுப்ப முடியவில்லை. கப்பலிலிருந்த மாலுமிகள் பட்டினியால் இறந்தனர். இறப்பதற்கு முன் அவர்கள் ஒருவரையொருவர் சாப்பிட்டிருந்தனர். பசியின் தீவிரம் மனிதனை விலங்குக்கும் கீழாக்கக்கூடியது.

பசி, தாகம், உறக்கம் தவிர்க்க முடியாதன. அதேபோல் உடலுணர்ச்சி, மனிதனை நிலையிழக்கச் செய்யும். காலத்தில் திருமணமானால் மனிதன் நிதானமாகச் செயல்படுகிறான். திருமணமாகாவிட்டால், பூர்த்தியாகாத தேவை அவனை நிலை குலையச் செய்யும். எனவே, அதை எப்படி அவன் பூர்த்தி செய்து கொள்கிறானோ அது அவன் யார் என்பதை அறிவிக்கும். அத்துடன் திருமணம் குடும்பத்தை அளிக்கிறது. குடும்பத்தில் பெற்றோர், தாம் பெற்ற குழந்தைகள் உள்ளனர். தன் வாழ்வு வளம் பெறும் கருவியான குடும்பத்தை, அதன் அடிப்படையான திருமணத்தை எப்படி நடத்துகிறான் என்பது முக்கியம். நுட்பமான இடம் என்பதால் ஆழ்ந்த சுபாவத்தைக் காட்டும்.

திருமணத்தில் முடிந்தவற்றையெல்லாம் கேட்கலாம், எந்தத் துரோகத்தையும் விரும்பிச் செய்யலாம் என்றவர் வாழ்வில் உள்ள அத்தனைச் சந்தர்ப்பங்களும் அவருக்கு உதவாமற் போயின. ஆரம்பக்கட்டத்திலேயே ஓய்வு பெறும்வரை இருக்க வேண்டியதாயிற்று.

ஒரு பெரிய ஆபீசருக்கு நூற்றுக்கணக்கான நண்பர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மிக உயர்ந்த பதவியிலுள்ளார்கள். எவராலும் அவர் எந்தச் சிறு உதவியையும் பெற முடியவில்லை. தாம் திருமணமானவுடன் குடும்பத்தை மறந்து எட்ட வந்ததுபோல், நண்பர் குழாம் இவருக்கு உதவவில்லை.

நினைக்க முடியாத சம்பந்தம் தேடி வந்து, விரும்பி, போற்றி ஏற்றுக்கொண்டதை, கிராக்கி செய்து, மட்டமாக நடந்து கொண்டவருக்கு, வாழ்வில் அளவுகடந்த உயர்வு வந்தபொழுது அதன் பெருமையையோ, சிறப்பையோ அனுபவிக்க முடியாத நிலைக்குத் தாமே தம்மை ஒதுக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

*********

 1. நம்மால் பயன்படுத்தும் அளவை மீறிய சக்தி எழுந்தால், அதைத் தீவிரம் என்கிறோம். அதையே இறைவனை நோக்கிச் செலுத்தினால் அது பக்தி, ஆர்வமாகிறது.

ஆண்டவனை நோக்கிச் செல்லும் அளவு மீறிய சக்தி பக்தியாகும்.

மனிதர்கள் பல வகையினர். சாதிக்கப் பிறந்தவர் சிலர். அனுபவிக்கப் பிறந்தவர் பலர். அவையின்றி வாழப் பிறந்தவர் பெரும்பாலோர். எதுவுமின்றி வாழ முடியாமல் தவிக்கப் பிறந்தவர் ஏனையோர்.

தீவிரம் சாதிக்கப் பிறந்தவருக்குடையது. தீவிரமின்றி சாதனையில்லை. தீவிரத்தின் அடிப்படை சக்தி. வாழ முடியாதவன் சக்தியற்றவனாகவும், வாழ்பவன் அளவோடுள்ள சக்தியையும், அனுபவிக்கப் பிறந்தவன் சற்று அதிகமான சக்தியையும் உடையவனாக இருப்பான். சாதிப்பவனுக்கு அடக்க முடியாத சக்தியிருக்கும். சோர்ந்து உட்காரும் மனிதர் சாதித்ததை உலகம் அறிந்ததில்லை.

அளவு கடந்து பீறிட்டெழும் சக்தியைச் சாதனையாக அனைவரும் மாற்றுவதில்லை. அனுபவித்து வீணாக்குபவருண்டு. அறிவில்லாமல் சிதற விடுபவருண்டு. முறைப்படுத்தாமல் (without organising) சக்தி சாதனையாக மாறாமல் போவதுண்டு. இவர்கள் சொல்ல நாம் கேட்பது, எவ்வளவோ வேலை செய்தேன். பட்டபாடு பெரியது. கடைசி நேரத்தில் ஒருவன் வந்தான். பலனை எல்லாம் அவன் கொண்டு போய்விட்டான், என்பது போன்றது. சக்தி சாதனைக்கு அஸ்திவாரமாகும். அதுவே பலனை முழுவதும் பெற்றுத் தாராது.

Energy               Force                          Power                                        Results

                        Direction                     Organisation                                  Skill

                 நேர்ப்படுத்துதல்          முறைப்படுத்துதல்                  திறமை

சக்தி      செயலாற்றும் சக்தி        பலன் தரும் சக்தி                  பலன்

பீறிட்டெழும் சக்தியை நேர்ப்படுத்தினால் செயலாற்றும்; முறைப்படுத்தினால் பலன் தரும். திறமை பலனைப் பயன்படுத்தும் வகையாக மாற்றித் தரும். தானே வளரும் குழந்தையைப் படிக்கச் சொன்னால் அதன் சக்தி படிப்பை நோக்கிப் போகிறது. எல்லாப் புத்தகங்களையும் படித்தால் பொது அறிவு வளரும். குறிப்பாக எதுவும் செய்ய முடியாது. முறையாகச் செயல்படும் பள்ளியில் போட்டால் பட்டம் என்ற பலன் தரும் வகையில் அதன் சக்தி உருவாகும். பையன் தன் திறமையைப் பயன்படுத்திப் பட்டம் என்ற பலனைப் பெறலாம்.

பக்தி, ஆர்வம் (aspiration) என்பதற்கு மனித சக்தி அளவுகடந்து தேவைப்படுகிறது. வாழ்க்கைப் பலன் பெற அதைப் பயன்படுத்தாமல், இறைவனை அடைய அதைத் திருப்பினால் அது ஆர்வமாக மாறி, எந்நேரமும் மனம் இறைவனை நினைக்கும். ஆர்வம் முதிர்ந்தால், உடலெல்லாம் உள்ள சக்தி உள்ளத்தில் சேர்ந்து பக்தியாகி ஆர்வம் கனலாக மாறும். பக்தி சிறந்தால் நெஞ்சம் திறந்து,

அதன் பின்னுள்ள சைத்தியம் வெளிப்படும். சைத்தியம் இறைவனை மட்டும் நோக்கிப் போவது என்பதால், நம் ஜீவன், வெளிப்பட்ட சைத்தியத்தால் வழி நடத்தப்பட்டு இறைவனை நோக்கிச் செல்லும். பக்தி யோகம் பக்க லயம் தேவை. லயித்துவிட்டால் நெஞ்சில் கனலெழுந்து நெஞ்சமே சிவந்துவிடும். ஞானியின் முகம் தேஜஸ் நிரம்பியுள்ளதுபோல், பக்தன் நெஞ்சம் சிவந்து காணப்படும்.

************

 1. ஆர்வம் ஒரு பகுதியிலிருந்தாலும், அடுத்த பகுதிக்கு அதைக் கொண்டு போக முனைந்தால் அது பாதியில் தீர்ந்துவிடும். மனத்தின் ஆர்வத்தை உடன் ஆர்வமாக்க முனைந்தால் முதலிலேயே தீர்ந்துவிடும்.

உடல் பெரியது, மனம் சிறியது.

ஓடியாடி வேலை செய்பவர் சுறுசுறுப்பாக இருப்பவர். இவருடைய சக்தி உடலின் சக்தி, உணர்வின் சக்தி. 8மணி, 10 மணி என சளைக்காமல் அதுபோல் வேலை செய்பவரை, நாற்காலியில் உட்கார்ந்து எழுத்து வேலை செய்யச் சொன்னால், இரண்டு மணி நேரத்தில் களைத்துவிடுவார். கொட்டாவி வரும், தூக்கம் வரும். மாலை வேலை செய்ய தெம்பிருக்காது. செய்தால் வேலையில் அதிகத் தவறு வரும். உடலால் சுறுசுறுப்பாக வேலை செய்பவர், அதே சக்தியை மனதால் பயன்படுத்தினால் (physical energy converts into mental energy  ) மனம் அதிக சக்தியைக் கேட்பதால், சீக்கிரம் களைப்பு வரும். 5 ரூபாய் நோட்டுக் கற்றையை 50 ரூபாய் நோட்டாக மாற்றினால், கற்றை சிறியதாகும். செயலைப் பொறுத்தவரை மனம் பெரிய கருவி, உடல் சிறிய கருவி.

ஆர்வத்தைப் பொறுத்தவரை மனம் சிறியது, உடல் பெரிய கருவி என்பதால் மனத்தின் ஆர்வம் உணர்வின் ஆர்வமாகவோ, உடலின் ஆர்வமாகவோ மாறினால் அது அளவில் குறைந்து சீக்கிரம் தீர்ந்துவிடும்.

உடல் இருளின் கருவி. காயம் பொய்யடா என்று முன்னோர்கள் சொல்லியதை ஏற்றுக்கொண்ட ஸ்ரீ அரவிந்தர், பொய் நிறைந்த காயம் இருள் நிறைந்ததானாலும், மனத்தைவிடப் பெரிய கருவிஎனக் கண்டு, உடல் புறக்கணிக்கப்பட வேண்டியதன்று, திருவுருமாற்றமடைய வேண்டியதுஎன முடிவு செய்தார். மேலே சொல்லியதை வேறு வகையாக விளக்கினால், ஒளி நிறைந்த மனம் சிறிதளவு ஆன்மீக சக்தியால் திருவுருமாற்றமடையும், இருள் நிறைந்த உடல் திருவுருமாற்றமடைய அதிக ஆன்மீக சக்தி வேண்டும் என்றாகும்.

பூரண யோகத்தின் அடிப்படைகளில் ஒன்று உடலின் முக்கியத்துவம். தனக்குப்பின் வெளியிட வேண்டும் என அன்னை கூறியவை 13 வால்யூம்களாக வந்துள்ளன. அவற்றில் அன்னை உடலின் யோகம் Yoga of the body, உடல் திருவுருமாற்றத்தைத் தாம் மேற்கொண்டதை விவரிக்கின்றார்.

நோய் மூலமாகவே உடல் திருவுருமாற்றமடையும் என்ற அன்னை உடல் திருவுருமாற்றத்தை நாடினால் தான் கற்றதை எல்லாம் மறந்து புதியதாகக் கற்கவேண்டும் என்கிறார். சாப்பிட, நடக்க, பேச, எழுத, பார்க்க, கேட்க நாம் கற்றவற்றை உடல் மறந்து, மீண்டும் புதிய ஜீவியத்தின் மூலம் அவற்றைப் புதியதாக கற்ற வகையை அன்னை விளக்குகிறார்.

உடல் திருவுருமாற்றமடைந்த பின்னரே பூரண யோகம் பூர்த்தியாகும். அதை ஸ்ரீ அரவிந்தர் மேற்கொள்ளவில்லை. அன்னையை மேற்கொள்ளச் சொன்னார். அன்னையின் திருவுடல் மட்டுமே உலகில் அதற்குத் தயாராக உள்ளது என்றார். அதை மேற்கொண்ட அன்னை உடல் வேதனையால் ஓலமிடுகிறது. இந்தத் திருவுருமாற்றத்தை நான் பிறருக்குச் சொல்லமாட்டேன். என்னால் அடுத்தவரை இதை மேற்கொள்ளச் சொல்ல முடியாது என்றார்.

*******

 1. தீர்ந்தபின் ஆர்வத்தை உற்பத்தி செய்வது பெரும்பாடு. மனம் மறந்துவிடும். வற்புறுத்தினால் வற்புறுத்துவது தவறு என மனம் பதில் சொல்லும். அல்லது புரியவில்லை என்று சொல்லும்.

ஆர்வம் தீர்ந்தால் செய்வதொன்றில்லை. மனம் வற்புறுத்த அனுமதிக்காது.

ஒரு புத்தகத்தை இரண்டு மூன்று முறை படித்தபின் புரியாவிட்டால், மீண்டும் ஆர்வமாக அதைப் படிப்பது சிரமம். புத்தகமே மறந்துபோகும். மீண்டும் நம்மை நாமே வற்புறுத்திப் படிக்கச் சொன்னால், இப்படி வற்புறுத்துவது தவறு என்று தோன்றும்.

நம் உடல் சக்தி தீர்ந்த பிறகு உடலும் மனமும் செயல்படும் வகை இது. 30 மைல் நடந்து ஓர் இடத்தை அடைந்தபின் கால் கெஞ்சும். ஆயாசமாக உட்கார்ந்தபொழுது நாம் பார்க்க வந்தவர் வேறு இடத்திலிருக்கிறார், அது இங்கிருந்து அரை கிலோ மீட்டர் இருக்கும் என்றால், 30 மைல் நடந்தது சிரமமாகத் தோன்றாது. இந்தச் சிறிய தூரம் மலைப்பாகத் தோன்றும். உடல் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராது. 4 முறை பெயிலானவன் ஐந்தாம் முறை பரீட்சைக்குப் படிக்க, 52 வரன் மறுத்துவிட்ட பின் 53வது வரனைப் பார்க்கத் தயார் செய்ய, போன எலக்ஷனில் 36 ஓட்டு வாங்கியவர் அடுத்த எலக்ஷனில் நிற்க முயலும்பொழுது உடலும், மனமும் துவண்டு நிற்கும்.

உடல் சக்தியைத் திருவுருமாற்றத்திற்காக ஏற்கும்பொழுது கடல் போலிருக்கும். அகண்ட ஜீவநதியைக் கடல் சலனமின்றி விழுங்குகிறது. NGO வாகப் பணம் சம்பாதித்து 5 ஸ்டார் ஹோட்டல் பில் கொடுக்க சில நாள் இசைந்தாலும், மாதத்து வருமானம் மணிக்கணக்கில் செலவானதைப் பார்த்துப் பொறுத்துக்கொள்ள முடியாது.

உடல் பிரபஞ்சம் முழுவதும் பரவி நிற்பதால், நாம் கொடுக்கும் சக்தி பிரபஞ்சத்தை நிரப்பிய பின்னரே தெளிவடையும் என்பதால்,

நாம் மனத்தால் உற்பத்தி செய்யும் சக்தி மேல் மனத்தில் எழுவதால், பிரவாகமாக நாம் காண்பது உடலை அடைந்தவுடன் சிறு துளியாகிறது. அதைக் கண்டபின் மனம் சலித்து, சோர்வடையும். அன்னை 13,000 பக்கங்களில் தாம் பெற்ற யோகானுபவத்தில் உடலின் விந்தைகளை விளக்கமாக, விபரமாக எழுதியிருக்கிறார். உடலின் பெருமைகளைப் புகழ்மாலையாக உடலுக்குச் சூட்டியுள்ளார்.

உடல் பொறுமையே உருவானது,

எதையும் கேட்காதது,

எதையும் கேட்க விரும்பாதது,

வேலை செய்வதற்கு மட்டும் இசைவது,

தன்னை வலியுறுத்தாதது,

என்று உடலையும், குறிப்பாக தம்முடலையும் அன்னை குறிக்கின்றார். மனம் இதற்கு மாறானது. வீம்பாகப் பேசும், மறுத்துப் பேசும், செயல்படும் எதையும் சந்தேகப்படும், எதையும் கேள்வியுடன் எடுத்துக் கொள்ளும். உடலுக்குரிய இசைவு (docile submission) மனத்திற்கில்லை என்கிறார் அன்னை.

*******

 1. பிராணனை அதன் ஆர்வம் தீர்ந்தபின் வற்புறுத்தினால், அதற்கு அளவுகடந்த கோபம் வரும். முதல் அது சோர்ந்துவிடும். அல்லது சூழ்நிலை பலனற்றதாகவோ, எதிராகவோ அமையும். கோபம் அதிகமானால், பிராணன் வேலையைக் கெடுக்கும். அல்லது நோயை உற்பத்தி செய்யும்.

பிராணனும் வற்புறுத்த அனுமதிக்காது.

பிராணன் (vital) என்பது உயிர். உணர்வுக்கு உறைவிடமானது. இதன் சூட்சுமச் சக்கரம் நாபியில் மையமாக இருக்கிறது. உடல்

முழுவதும் உணர்வாகப் பரவும் தன்மையுடையது. சக்தியை உடலுக்கு இதுவே தருகிறது. சக்தி மனத்திலோ, உடலோ இல்லை. பிராணனில்தானிருக்கிறது. க்ஷத்திரியனுக்கு வீரம் அளிப்பது பிராணன். தைரியம், வீரம், ஆவேசம் ஆகியவற்றையுடையது இது. எரிச்சல், பொறாமை, போட்டி மனப்பான்மை, தீவிரம், வேகம் ஆகியவற்றிற்கு இதுவே உறைவிடமாகும். நரம்பு இதன் அஸ்திவாரம். பிராணனுடைய உணர்வை (vital consciousness) ஜீவியம் எனவும், அதன் (substance) உறைவிடமான பொருளை நரம்பு எனவும் நாம் அறிய வேண்டும்.

Adventure of Consciousness ஜீவியத்தின் தீரம் என்ற பொருள்பட அன்னை சத்பிரேம் என்றவரை ஒரு புத்தகம் எழுதச் சொன்னார். இதை 15, 20 மொழிகளில் பெயர்த்துப் பிரசுரித்துள்ளனர். ஆசிரமத்தை வெளியுலகுக்குத் தெரிய வைத்த புத்தகம் இது. வெளிநாட்டிலிருந்து வருபவரிடம் எப்படி ஆசிரமத்தை அறிவீர்கள் என்றால், இப்புத்தகத்தைப் படித்ததால் என்பார்கள். இதில் மனமும், பிராணனும் வேறானவை என்பதைப் படித்த வெளிநாட்டார் அனைவரும் ஞானோதயம் பெற்றதுபோல் நினைத்தார்கள். நாம் மனம் என்று பிராணனை நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவை வேறானவை என்பது முதல் அறியப்பட வேண்டியதாகும். யோகத்தில் ஏற்படும் தெளிவு வாழ்வில் உள்ள மேதைகட்கும் பெரியதாகத் தெரியும்.

பிராணனைக் கட்டுக்கடங்காத பிடாரி என அன்னை வர்ணிக்கிறார். அதற்கும் நியாயம், பகுத்தறிவு, முறை என்பவற்றிற்கும் தூரம் அதிகம். கோபம் அதன் கருவி பிறப்புரிமை. அது சோர்ந்தபின் அதை வற்புறுத்த முடியாது. வற்புறுத்தினால் அதிகமாகச் சோர்ந்துவிடும், அல்லது நேர் எதிராகச் செயல்பட விழைந்து கோபப்படும். இது சூட்சுமமானதால், சூழலுடன் எளிதில் கலந்து கொண்டு சூழலையே நமக்கு எதிராக வேலை செய்யும்படித் தூண்டும். சூழல் உடனே பலனற்றதாகிவிடும் அல்லது எதிர்க்கும். எதுவும் முடியாவிட்டால் பிராணன் ஸ்டிரைக் செய்ய உடலைத் துணைக்கு

அழைத்து இல்லாத வியாதி இருப்பதாக நடிக்கும். திடீரென வாந்தி வரும், உடன் பல பகுதிகளில் கொப்புளம் எழும். சூட்சுமமானவர்கள் இப்படிப்பட்டவர்களைப் பார்த்து 'அத்தனையும் வேஷம்' என்பர். அது உண்மையாகும்.

*******

 1. உடலை வற்புறுத்தவே முடியாது. அது கல்லாகச் சமைந்து நிமிஷத்தை மணியாக மாற்றும். நமக்கு வெற்றியை உடன் ஜீவியம் கொடுத்தாலும், உடன் பொருள் substance அறவே மறுக்கும்.

உடலை வற்புறுத்தினால் நிமிஷம் மணியாகும்.

சிவராத்திரி, ஏகாதசிக்கு நாம் கண் விழிக்கின்றோம், உபவாசமிருக்கிறோம். விரதம் என்றால் சாப்பிடாமலிருப்பது, தூங்காமலிருப்பது எனப் பொருள். 14 வருஷம் சாப்பிடாமலும், தூங்காமலுமிருப்பவனே சாதிக்கக் கூடியதுண்டு என்றால் அதை ஏற்க வருபவரைப் பெரிய ஆத்மா என்பதெல்லாம் நாம் பரம்பரையாகக் கேட்டதுண்டு. உடன் அடிப்படை இயல்பின்படி அதை வற்புறுத்த முடியாது. வற்புறுத்தலுக்கு அது இசைந்தால், பிறகு தன் இச்சையைப் பூர்த்தி செய்யவல்லது என்கிறார் பகவான். உண்ணாவிரதம் என்றவுடன் முதல் நாளே உடல் அதிகம் சாப்பிடும், விரதம் முடிந்தவுடன், மீதியைச் சேர்த்துச் சாப்பிட்டுவிடும் தன்மையுடையது உடல். 3 மாதம் கண்விழித்து வேலை செய்ய உடல் இசைந்தால், அடுத்த 3 மாதம் அதைச் சேர்த்துத் தூங்கிவிடக்கூடியது உடல் என்பது பகவான் விளக்கம்.

மனம் உடலைத் தன் இஷ்டத்திற்குப் பேரளவுக்குக் கொண்டு வந்துள்ளது என்பது உண்மை. உடல் பணிந்து ஏற்றுக் கொண்டாலும், முடிவாக ஏற்றுக் கொள்ளவில்லை. உடலை மாற்ற வேண்டுமானால், அதன் பழக்கங்கள் மாற வேண்டும். உடல் திருவுருமாற்றமடைய

வேண்டுமெனில் நோய்வாய்ப்பட வேண்டும். உடல் அதன் போக்கிலேயே போகும். எளிதில் மாற இசையாது. வற்புறுத்தினால் அப்படியே கல்லாய்ச் சமைந்துவிடும்.

உடன் இருளைப் போக்கி ஒளியாக மாற்றுவதே திருவுருமாற்றம். அதைச் சாதிக்க வேண்டுமானால், உதாரணமாக நாம் சாப்பிடுவதை உடல் பழக்கமாக ஏற்றுக்கொண்டுள்ளது. முதல் உடல் சாப்பிடும் பழக்கத்தை மறக்க வேண்டும். பிறகு சாப்பிடப் புதியதாகக் கற்றுக் கொள்ளவேண்டும். இருளாலான உடலின் பழக்கம் இருளில் அமைந்தது. தானாக உடல் இம்மாற்றத்தை ஏற்காது. ஒளியால் உடலை நிரப்பினால், இருள் கரைந்து ஒளியாக மாறும் பொழுது, இம்மாற்றம் நடைபெற உடல் இப்பொழுதுள்ள structure அமைப்பை விட்டு மாற, அது நோய்வாய்ப்படுகிறது. நோயால் உடன் structure அமைப்பு பாதிக்கப்பட்டு, ஒளியை அமைப்பு ஏற்று, பழைய அமைப்பைக் கரைத்து, புதிய ஒளியால் புதிய அமைப்பு ஏற்படுகிறது. புதிய அமைப்பு புதியதாகச் சாப்பிடக் கற்றுக் கொள்ளவேண்டும். அன்னைக்கு வந்த அனைத்து நோயும் திருவுருமாற்றத்திற்காக அன்னை ஏற்றுக்கொண்டவையே தவிர நோயன்று.

110 வோல்ட்டில் வேலை செய்யும் மோட்டார் 220 வோல்டில் வேலை செய்ய வேண்டுமானால் அதனுள் உள்ள பல சாமான்களை மாற்ற வேண்டும். அதேபோல் உடல் உள்ள உறுப்புகள் மாற வேண்டும். உறுப்புகளை அகற்றி வேறு வைக்க முடியாது என்பதால், அவற்றின் அமைப்பை மாற்றி, பழைய வேலையை, புது முறையில் செய்ய அவற்றைப் பயிற்றுவிக்கவேண்டும்.

உடலை வற்புறுத்தினால் அது ஸ்டிரைக் செய்யும். அன்னை உடன் ஜீவியத்தைத் திருவுருமாற்றம் செய்தபின் அதன் அஸ்திவாரமான உடன் பொருள் மாற மறுத்ததால், அவருக்கு அளவுகடந்த வேதனை ஏற்பட்டது.

******

 1. தீவிரமான ஆசை தீவிரத்தையும், ஆசையின் திறனையும் இழந்தபின் உயிரற்ற ஜடமான வாழ்வாகிறது. ஆனால் அது வாழ்வு முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. நம் போக்கை நிர்ணயிக்கும் திறனுள்ளது. உன் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்ற மந்திரம் நம்மை அதன் பிடியிலிருந்து விடுவித்து, ஆனந்தத்தை உற்பத்தி செய்கிறது. ஜடத்தைத் திருவுருமாற்றம் செய்ய (ஜடத்தின் ஜீவியமன்று) அன்னை எடுத்த முயற்சிக்கு உன் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்ற மந்திரத்தைப் பயன்படுத்திய விவரங்களை அஜெண்டா 12, 13இல் விளக்குகிறார்.

உயிரற்ற ஜடம் மாறுவது திருவுள்ளம்.

மனிதன் இலட்சியத்தால் வாழ்பவனில்லை. பெரும்பாலானவர் வாழ்வு 40க்கு முன் முடிந்துவிடும். அதற்கு முன்னும் முடிவதுண்டு. அதுவரை வாழ்வு என்பது அவர்களுக்குக் கடமை, இலட்சியம், அற்புதம், உன்னதம், ஆச்சரியமன்று. அதுவரை ஆசை உயிரோடிருக்கும். ஆசையை அனுபவிப்பதை வாழ்வு எனக் கொண்டவர்கள் இவர்கள். வயதால் ஆசைத் திறனையும், தீவிரத்தையும் இழந்தால் இவர்கள் நடைப்பிணமாகிவிடுவார்கள். உயிரற்ற ஆசை, மரம் போன்ற மண்டை, சக்தியற்ற உடலுடன் வாழ்வைப் பாரமாக்கி நாளை எண்ணிக்கொண்டு இருப்பார்கள். ஆசை செயலற்றுப் போனாலும், வாழ்வு முழுவதையும் ஜீவனற்ற ஆசை ஆக்கிரமித்துக் கொள்ளும். அதுவே மனிதன் எனப்படுவது. எந்த நல்ல காரியத்தையும் இவர்கள், ஏம்பா, இதெல்லாம் எதற்கு, சும்மா இருக்கக் கூடாதா? என்று எதிர்ப்பார்கள். இவர்களை நினைத்து ஏற்பட்ட பழமொழி நாற்பதிற்கு மேல் நாய்க்குணம். மிகவும் பொருத்தமாக இவர்களை வர்ணிக்கும் பழமொழி இது. இந்த நாய்க்குணம் ஓரளவு எல்லோரிடமும் இருக்கும். அதுவே நம் தவமுயற்சிக்கு எதிரி. எதிர்க்கும். ஆங்கிலத்தில் அதை preoccupation,

occupation என்கிறார்கள். மனதை நிரப்பிக் கொண்டுள்ள ஜடமான வாழ்வு எனப் பொருள்படும்.

தியானம் செய்தால் இது தூங்க ஆரம்பிக்கும். நல்லதைப் பேசினால் எதிர்க்கும், சும்மா இருந்தால் அசை போடும். இதை மீற முடியாதவருக்கு வாழ்வில் எந்த நல்லதுமில்லை. இதை மீறுவது எளிதன்று. மௌனம் கரைக்கும். ஆனால் இதுவே மௌனத்தைக் தடுக்கும். நாம் என்பது இதுவாகும். முயன்று இதிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டு, உன் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்றால் மயிரிழை ஜீவன் வருவது தெரியும். இதைச் சொல்ல ஆரம்பித்தால் 3, 4 நிமிஷங்களுக்கு மேல் தொடர முடியாது. நிதானமாக, விடா யற்சியுடன் இழை இழையாக இதை வெல்ல முயன்றால் ஆனந்தம் எழுவது தெரியும்.

ஜடம் பொருளாலும் ஜீவியத்தாலும் ஆனது. ஜடத்தின் ஜீவியத்தையும் திருவுருமாற்றம் செய்வதை பகவான் மேற்கொள்ளவில்லை. அன்னை அதை முடித்துவிட்டார். அதற்கடுத்தாற்போல் ஜடத்தின் பொருள் கல்லாக, பாறையாக எதிர்த்தபொழுது உன் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்ற மந்திரம் பூவுலக இருட்டைக் கரைக்க உதவியதை அன்னை விளக்கமாக எழுதியிருக்கிறார்கள். தீராத எந்தப் பிரச்சினையும் இம்மந்திரத்தால் தீரும். இது பலிக்க நாம் ஜடம் என மனம் முதலில் ஏற்றுக்கொண்டு, பின்னர் அதிலிருந்து விலகி, சொல்ல ஆரம்பிக்க வேண்டும், அவையிரண்டும் பூர்த்தியான பின்னர் சொல்லும் மந்திரமே பலிக்கும்.

******

 1. உங்கள் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்று சொல் பரவசமடைதல் சரணாகதியின் உச்சகட்டம்.

சரணாகதி பலித்தால் திருவுள்ளம் நிறைவேறும்.

ஆசையை அடக்க முயல்பவர்கள் குறைவு. பூர்த்தி செய்ய விழைபவர்கள் அதிகம். ஆசையை அடக்க முயல்வது வாழ்விலுள்ள முயற்சிகளில் பெருமுயற்சி. அதற்கடுத்த நிலையில் ஆசையை வென்று, கரைத்து, அது எழாவண்ணம் செய்வது திருவுருமாற்றத்தின் தன் நிலை. ஆசையை, பக்தியாக அன்பாக மாற்றுவது திருவுருமாற்றம். ஒரு நிலையில் ஆசையை அடக்கினால் அடுத்த உருவத்தில் அது எழும். புகையிலையை ஓர் உருவத்தில் விட்டுவிடுபவன் அடுத்த உருவத்தில் அதை நாடுவான். குழந்தைகளை அடிப்பதை நிறுத்த முயல்பவன், (sublimates) அடிப்பதில் உள்ள தீவிரத்தை நல்லதாக மாற்றிக் கடுமையான கட்டுப்பாடாக மாற்றிப் பாடம் சொல்க் கொடுப்பான்.

வாழ்வு நதியின் ஓட்டத்தை ஒத்தது. ஓடும் நதியைத் தடுக்க முடியாது, தடுப்பது அணை கட்டுவதைப் போன்றது. தனி மனிதன் செய்யக் கூடியது அன்று. வாழ்வின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தாமல் யோகம் இல்லை. மனத்தில் எண்ணங்களாகவும், உயிரில் உணர்வாகவும், உடல் செயலாகவும் சக்தி இடையறாது வெளிப்பட்டபடி இருக்கிறது. இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் தடுத்து, சமர்ப்பணம் செய்யலாம். மனித சுபாவத்தைப் பூர்த்தி செய்ய ஓடும் வாழ்வு சமர்ப்பணத்தால் தெய்வத் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்யும். சமர்ப்பணம் யோகத்தின் முதற்படி. இதைச் சரியாகச் செய்தால் ஜீவனில் பெரும்பலம் சேரும். ஓடும் ரயிலைக் கைகளால் தூக்கி நிறுத்தும் பலம் வரும். சேர்ந்த பலத்தை நம் ஆசைக்குப் பயன்படுத்தாமல் இறைவன் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்யக் கொடுப்பது சமர்ப்பணம். ஓர் அகலமான நதி இருகரை நிரம்பி ஓடி வந்து கடல் சங்கமித்தவுடன் ஆயிரம் மைல் அகலமான நீர்ப்பரப்பாக அகன்று விரிகிறது. ஜீவாத்மாவை நதிக்கும் பரமாத்மாவைக் கடலுக்கும் பகவான் ஒப்பிடுகிறார். நதி போன்ற ஜீவன் கடல் போன்ற தெய்வத்தைத் தொட்டவுடன், கடலளவுக்குப் பரந்து விரிகிறது. அகந்தையை இழந்த ஜீவன் பிரபஞ்சம் முழுவதும் பரவுகின்றது என்கிறார் அன்னை. கண்டமான சிறு பகுதி தன்னுள்

உள்ள பிரம்மத்தை அறிந்தவுடன் அகண்டமாக அனந்தனை அடைகிறது. (The finite becomes the infinite). ஒரு ரூபாய் லாட்டரிச் சீட்டு வாங்கினால் இலட்சம் பேரில் ஒருவருக்கு இலட்ச ரூபாய் விழுகிறது என்பது வாழ்விலுள்ள லாட்டரி அமைப்பு. இலட்சம் பேருக்கும் தலைக்கு இலட்ச ரூபாய் பரிசு விழும் லாட்டரி இறைவன் என்ற கருத்தை உபநிஷதம் complete - complete = complete ழுமையிலிருந்து முழுமையை எடுத்தால் முழுமை மீதியாகும் என்கிறது. அம்முழுமையை எத்தனை முறை எடுத்தாலும் மீதி ழுமையாகவே இருக்கும் என்பது உபநிஷதம். அதுவே அக்ஷயபாத்திரம்.

நாம் ஆசையைப் பூர்த்தி செய்ய முயன்றால் ஆசை பூர்த்தியாகலாம், அல்லது பூர்த்தியாகாமலிருக்கலாம். ஆசையை வென்றால், அல்லது திருவுருமாற்றம் செய்தால், மனிதன் கண்டமான சிறியதிலிருந்து அகண்டமான பெரியதாகிறான். கண்டம் தன்னை அகண்டமாக அறிவது, சிருஷ்டி தன்னை இறைவனாகக் காண்பதாகும். A vast surrender is his greatest strength என்பது பகவான் சொல். கண்டமான சிறிய மனித ஆசை, தன்னையறிந்து, தன்னுள் புதைந்துள்ள பிரம்மத்தை அறிந்தால், அகண்டமான பெரிய தெய்வீக அன்பாக மாறி அளவையிழந்து நிற்கிறது. அது நடக்க மனித ஜீவன் தான் எனும் உரிமையை, தன் ஆசையை, தன் சிறுமையை, அழியும் தன்மையைச் சமர்ப்பணம் செய்ய முன்வர வேண்டும். சமர்ப்பணம் சரணாகதியானால் மனிதன் தெய்வமாகிறான். அழியும் சிறியது, அழியாத பெரியதாகிறது.

இந்த ஞானம் பூரணயோக ஞானம். யோகங்களில் பெறும் ஞானம் மோட்சம் பெற்றுத் தருகிறது. பூரணயோக ஞானம் சிருஷ்டியில் இறைவனை வெளிப்படுத்தி அவன் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்கிறது. அதுவே அவன் திருவுள்ளம். 'உன் திருவுள்ளம் நிறைவேறட்டும் ' என்று ஞான உணர்வோடு சொன்னால் மனிதனுக்குரிய வரையறை, அளவு, மறைந்து, பிரபஞ்சத்துடன் கலந்து, பிரம்மாண்டமான திருவுருவம் பெறுகிறது மனித ஜீவன். அது

அளிக்கும் பரவசம் அனந்தத்தை உற்பத்தி செய்யும். மனித வாழ்வு தெய்வீக வாழ்வாகும். கல்லும், மரமும், புல்லும், பூண்டும் உயிர் பெற்றெழும். மனிதனுள் புதைந்துள்ள சைத்தியம் வெளிவரும், வாழ்வில் அவலங்கள் தாங்களாகவே கரைய ஆரம்பிக்கும்.

பரவசம் பரமனின் பாதத்தில் நம்மைச் சேர்க்கும்.

******

 1. ஆசைக்குப் பின்னால் ஆண்டவனிருப்பதாக அன்னை கூறுகிறார்.

மனித முயற்சிக்குப் பின்னால் இறைவனிருக்கிறான். பிராணமயப்புருஷனுக்குப் பின்னால் அன்னையும், அன்னமயப்புருஷனுக்குப் பின்னால் வேத ரிஷிகளும் இறைவனைக் கண்டார்கள். சைத்தியப்புருஷனுக்குப் பின்னால் இறைவனைக் காண்பது பூரணயோகம். கண்டு, கண்டதை விலக்காமல், சைத்தியப்புருஷனை சத்தியஜீவனாக மாற்றுவது பூரண யோகம்.

ஆண்டவன் ஆசைக்குப் பின்னாலிருக்கிறான். சைத்தியப்புருஷனுக்குப் பின்னால் பூரணயோகம் இறைவனைக் காண்கிறது.

ஆன்மா உலகில் பிறந்து வாழ்வை மேற்கொள்ள உடலை ஏற்றது. உடலுக்கு உணர்வும், மனமும் ஏற்பட்டன. உடல், உணர்வு, மனம் ஆகியவை (பிரகிருதி) இயற்கையைச் சேர்ந்தவை. இவற்றிற்கும் ஆன்மீக நிலைகளுண்டு. உடன் ஆன்மா அன்னமயப்புருஷன் எனப்படும், உணர்வின் ஆன்மா பிராணமயப்புருஷன் எனப்படும்,

மனத்தின் ஆன்மா மனோமயப்புருஷனாகும், ஜீவனுக்குரிய ஆன்மா ஜீவாத்மாவாகும். அன்னமயப்புருஷன் மூலாதாரத்திலும், பிராணமயப் புருஷன் நாபியிலும், மனோமயப்புருஷன் புருவ மையத்திலும் இருக்கிறார்கள். இவை அனைத்தும் ஜீவாத்மாவின் பகுதிகள். அதனால் இவை வழியே ஜீவாத்மாவை அடையலாம். ஜீவாத்மா பரமாத்மாவின் பகுதி என்பதால் அதன் மூலம் பரமாத்மாவை அடையலாம். அதுவே மோட்சம்.

ஆசையழிந்தால் பிராணமயப்புருஷன் வெளிப்படுவான். அதுவே ஆண்டவன். எல்லாப் புருஷர்களும் ஆண்டவனே. அன்னையின் பிராணமயப்புருஷன் 14 அடி உயரம் என்கிறார். வேத ரிஷிகள் ஆண்டவனை அன்னமயப்புருஷன் பின்னால் கண்டார்கள். ஞானி, மனோமயப்புருஷன் பின்னால் ஆண்டவனைக் காண்கிறான். தெய்வாம்சம் உள்ள அனைத்தையும் நாம் ஆண்டவனாகக் கருதுகிறோம். மேற்சொன்ன புருஷர்கள் பகுதிக்குரியவர்கள். சைத்தியப்புருஷனும் எல்லாப் பகுதிகளிலும் உண்டு என்றாலும் சைத்தியப்புருஷன் முழுமைக்குரியவன். அவன் பின்னாலுள்ளது ஜீவாத்மா. இதை பகவான் ஜீவா, ஜீவாத்மா, central being  என்றெல்லாம் குறிக்கிறார். சைத்தியப்புருஷனை ஆன்மா என்றும் சொல்வதுண்டு. அது நெஞ்சின் பின்னால் குகையின் அடியிலிருக்கிறது. ஜீவாத்மா தலைக்குமேல் சகஸ்ர தளத்தில் இருக்கிறது. யோகம் முதிர்ந்தால் மனமும், உணர்வும் ஜீவாத்மாவும், சைத்தியப்புருஷனும் ஒன்றாகக் கலந்துவிடுவார்கள்.

ஜீவாத்மா அசைவற்ற, அழிவற்ற பரமாத்மாவின் பகுதி. சைத்தியப்புருஷன் ஜீவாத்மாவின் பிரதிநிதி. வாழ்வின் அனுபவச் சாரத்தைச் சேர்த்து வளர்ந்து, பிறவிக்குப் பிறவி மனிதனைத் தொடர்வது சைத்தியப்புருஷன். மனிதனின் சாதனையின் உச்சகட்டம் உணர்ச்சியிலிருப்பதால், சைத்தியப்புருஷன் சாதனையின் சாரத்தைச் சேர்ப்பவனானதால், சைத்தியம் உணர்வு மையத்திற்குப் பின் உள்ளது. சைத்தியப்புருஷன் மூலமாகவும் ஜீவாத்மாவை அடைந்து மோட்சம் பெறலாம். பக்தி யோகப்பாதை அது. சைத்தியப்புருஷன் கவி, மேதை,

வீரன், தலைவன் போன்ற மகாபுருஷர்கட்கே வளர்ந்த நிலையிருக்கும். பக்தி நிறைந்த மகான்களுக்கு சைத்தியப் புருஷனுண்டு. சைத்தியப்புருஷன் மூலம் மோட்சத்தை நாடுபவர்கட்கு சைத்தியத்தின் பக்தி அம்சம் மட்டுமே தெரியும். சைத்திய வாழ்வின் அனுபவச் சாரத்தைச் சேர்த்து, பரிணாம வளர்ச்சியடையவல்லது. அந்த அம்சமே பூரணயோகத்திற்குரியது. பூரணயோகத்தை மேற்கொண்டால், ஆசையை அழித்து பிராணமயப்புருஷனையும், அகந்தையை அழித்து சைத்தியப்புருஷனையும் விடுதலை செய்து, மோட்சம் பெறும் தகுதி பெற்று, அதை விலக்கி, சைத்தியப்புருஷன் மூலம் ஜீவாத்மாவை, ஜீவனைத் திருவுருமாற்றம் செய்ய அழைக்க வேண்டும். முதல் நிலையில் சைத்தியம் ஜீவியமாக இருக்கிறது. ஜீவாத்மா சைத்தியத்தின் மூலம் ஜீவனைத் திருவுருமாற்றம் செய்யும்பொழுது, சைத்தியஜீவியம் செறிந்து, அடர்ந்து, முதிர்ச்சியடைகிறது. ஜீவாத்மாவால் ஜீவியம் பெறக்கூடிய அனைத்தையும் பெற்றபின், அதன் மூலம் சத்தியஜீவனை அடைந்து அதன் திருவுருமாற்றத்தை ஜீவனில் கொண்டுவந்தால், அடர்ந்து செறிந்து முதிர்ந்த சைத்தியம் ஜீவியம் என்ற நிலையிலிருந்து (substance) பொருளாகத் திடம் பெற்று திண்மையுறுகிறது. சைத்திய ஜீவனுக்குப் பொருள் அடிப்படை ஏற்பட்டால் அது சத்தியஜீவனாகும். சத்தியஜீவனுக்கு மூன்று நிலைகளுண்டு. முதல் நிலையை எட்டிவிட்டால் பிறகு அடுத்த நிலைகளை எட்டலாம். இந்நிலைகளை வரிசையாக எழுதினால்,

 1. ஆசை அழிதல்
 2. பிராணமயப்புருஷன் வெளிப்படுதல்
 3. அகந்தை அழிதல்
 4. சைத்தியம் வெளிப்படுதல்
 5. ஜீவாத்மாவை அடைதல்
 6. மோட்சத்தைத் துறத்தல்
 7. ஜீவன் (ஜீவாத்மாவின்) திருவுருமாற்றமடைதல்
 8. சைத்தியம் அஸ்திவாரமான பொருளைப் பெறுதல்
 9. சைத்தியஜீவியம், சைத்தியப்பொருளாக மாறுதல்
 10. சத்தியஜீவனை எட்டித் தொடுதல்
 11. சத்தியஜீவியத் திருவுருமாற்றம்
 12. சத்தியஜீவன் ஜனித்தல்

         அவை இது போலிருக்கும்.

*****

 1. பிரம்மத்தைக் காணும் யாத்திரையில் முன்னேற்றம் பெறுவது உண்மை. ஆனால் முக்கிய நோக்கம் அகங்காரமாக இருப்பதால், முன்னேறுவது அகந்தையாகும். முன்னேற்றமிருந்தாலும், அது எதிர்த்திசையிலிருக்கிறது.

பிரம்ம ஞானத்தைத் தேடினாலும், அகந்தை ஆட்சி செய்யும்.

சுதந்திரம் வந்தவுடன் கிராமப்புறங்களுக்கு, ஏழைகள் வசதி பெற சர்க்கார் பல திட்டங்களைக் கொண்டு வந்தது. பல ஆண்டுகட்குப்பின் ஏழைகள் நிலை மாறவில்லை. அத்துடன் கிராமப்புறத்து மிராசுதாரர் அதிக வசதியாகிவிட்டார்கள். ஏழைக்கு எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும், அது பணக்காரனுக்குப் பலன் தருவது எப்படி? பரம்பரையாகக் கிராமத்தில் ஏழைகள், வேலை செய்வதென்றாலும், அவசரமாகக் கடன் பெறுவதென்றாலும், ஜாதி சம்பந்தமான காரியங்களென்றாலும், கோயில் திருவிழா என்றாலும், கிராமத்திலுள்ள எந்தக் காரியமானாலும் நேரடியாக அங்குள்ள பணக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருக்கிறார்கள். அவர்களை மீறி ஏழைகள் எதுவுமே செய்யமுடியாது. ஏழைகளுக்கு மாடு வாங்கிக்

கொடுத்தால் முன்னுக்கு வருவார்கள் எனில் பணக்காரன் பல ஏழைகள் பேரில் கடன் வாங்கி மாடு வாங்காமல் தான் எடுத்துக் கொள்கிறான். கிணறு வெட்ட பணம் கொடுத்தாலும் அதுவே நிலை. கோவாப்ரேடிவ் சொஸைட்டி மூலம் பணம் கொடுத்தாலும் நிலை அதுவே. பணம் ஏழைகளைப் போய்ச் சேருவதில்லை. ஏழை பணக்காரனுக்குக் கட்டுப்படும்வரை அவனுக்கு உதவ முடியாதுஎன்று சர்க்கார் கண்டது.

சச்சிதானந்தத்தில் உள்ள சித்தில் சிருஷ்டி உற்பத்தியாகிறது. அகந்தை சச்சிதானந்தம், அதற்கடுத்த சத்தியஜீவியத்திலில்லை. அதற்கும் அடுத்த தெய்வலோகத்திலிருந்து அகந்தை ஆரம்பிக்கிறது. பிரபஞ்சம் முழுவதும் அகந்தையின் சக்தி பரவியுள்ளது. அதன் சாயல் சிருஷ்டியின் ஆரம்பம்வரை தொடர்கிறது. அகந்தை வாழ்வில் முழு ஆதிக்கம் செலுத்துவதால், வாழ்வில் தவம் உள்பட அனைத்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அகந்தைக்கே பயன்படும். அதனால்தான் தெய்வங்களும் சில சமயங்களில் இதற்குப் பலியாகிவிடுவதுண்டு.

தவம் உயர உயர அகந்தை கரையும். அகந்தை கரையாமல் க்தியில்லை என்பது உண்மை. ஞானிக்கு மனத்தின் அகங்காரம் கரையாமல் மோட்சமில்லை. ஆனால் உணர்வின் அகந்தை, உடன் அகந்தை கரைய வேண்டிய அவசியமில்லை. எந்த மார்க்கத்தைத் தேர்ந்தெடுக்கிறோமோ அதற்குரிய மனம் அல்லது உணர்வு அல்லது உடல் அகந்தை அவசியம் கரைய வேண்டும். மற்றவை பற்றி மோட்சத்தை நாடுபவர்க்குப் பிரச்சினையில்லை.

கிராமத்துச் சலுகைகளை எல்லாம் பணக்காரன் பெறுவதுபோல் ஜீவனின் உயர்வுகளை எல்லாம் தவம் உள்பட அகந்தை பெற்றுப் பயன் அடைகிறது. பிரம்மத்தை நாடி வரும் வாழ்வில் உள்ள அகந்தையின் பகுதி கரைந்தாலும், மற்ற பகுதிகளின் அகந்தையிலிருப்பதால், அகந்தை ஜீவனுக்கு வரும் முன்னேற்றத்தைத் தன் முன்னேற்றமாக்கிக் கொள்ளும்.

சக்தியை அடையும் மார்க்கங்களிலே, அகந்தையை அழிக்காமல் சக்தியைப் பெறலாம். ஈஸ்வரனுடைய சக்தியைப் பெற்ற பின்னும் அங்கு ஆட்சி செய்வது சக்தியில்லை, அகந்தையே என்கிறார் பகவான். பகவான் அதற்கு மாற்று வழி சொல்கிறார். நாம் சக்தியை நாடுவதற்குப் பதிலாக, அகந்தையை அழிக்க முன்வந்தால், அகந்தை அழிவதால் சக்தி நம்மை நாடிவரும். நம்மை வந்து சக்தியடையும் பொழுது ஆட்சி செய்ய நம்மில் அகந்தை இருக்காது. இம்முறையே சிறந்தது என்கிறார்.

பிரம்மத்தை நாடும் பாதையில் அகந்தை பலப்பட்டால் முன்னேற்றம் தலைகீழாக, எதிர்த்திசையிலிருப்பதாகப் பொருள்.

******book | by Dr. Radut