Skip to Content

பகுதி 12

 

 1. அகம் என்பது மனம். மனம் இரு பகுதிகளாலானது. ஒன்று அறிவு. அடுத்தது உறுதி will.மனம் புரிந்துகொண்டதை உறுதி ஏற்றால் அது முடிவாகும். மனம் மட்டும் புரிந்துகொண்டால் அது opinion கருத்தாகும்.உறுதியும் அதை ஏற்றால் அது முடிவு ஆகும்.    முடிவு மேல் மனத்திற்குரியது. மேல்மனம் ஏற்ற முடிவை, ஆழ்ந்து மனம் ஏற்றால் அது தீர்மானமாகும் (determination).  இவ்விரு நிலைகளை பகவான் consciousness,substance என்கிறார். Consciousness ஜீவியம் சூட்சுமமானது.அது திடமானதன்று.   Substance என்பது உடல்.  . இங்கு மூளையாகும். மூளை சூட்சுமமானதன்று, ஜடமானது. சூட்சுமமான மேல்மனம் ஏற்ற முடிவை, திடமான மூளையும் ஆமோதித்தால் முடிவு, தீர்மானமாகும். அது நிறைவேற்றப்படும்.
 2. புறம் என்பது சமூகம், ஸ்தாபனம். ஸ்தாபனம் சட்டம் போட்டால் நாம் அதற்கு உட்படுவோம்.

உதாரணமாக, குறித்த நேரத்தில் செயல்படுவதை நாம் ஏற்க வேண்டும்எனப் பல ஆண்டுகளாகக் காலம் கடத்தியிருக்கும் நிலையில், நம் மனம் தீர்மானம் செய்தாலும், ஆபீஸ் சட்டம் போட்டாலும், உடனே அது நிறைவேற்றப்படும். Opinion, decision,determination, கருத்து, முடிவு, தீர்மானம் ஆகிய நிலைகளைச் செயல் கடந்து வந்தால் எண்ணம் செயல்களாக மாறும்.

அண்ணன் உழைப்பாளி, தொடர்ந்து முன்னேறுகிறான். தம்பி உழைக்கக் கூடியவன், ஆனால் உழைப்பதில்லை, முன்னேறுவதில்லை என்றால் தம்பி என்ன நினைக்கின்றான், உழைக்காமல் முன்னேற முடியும்என்று நினைக்கிறானாஎனில், உழைப்பு அவசியம் என்பதை நான் அறிவேன். உழைக்காமல் முன்னேற முடியாது என்பது தெரியும், ஆனால் உழைப்பை என்னால் ஏற்க முடிவதில்லைஎன்று நினைக்கிறான்என்று நாம் காண்பதுண்டு.

தாய் மொழியே பிரதானம் என்பதை அறிவு ஏற்கிறது. உணர்வு ஆங்கிலத்திற்கு முதன்மை கொடுக்கிறது. அறிவு ஏற்றதை உணர்வு

உடனே ஏற்பதில்லை. இதுபோல் நம் மனநிலைளைச் சோதனை செய்தால், அறிவு ஏற்றதை, உணர்வு ஏற்காத இடங்கள் பல காண முடியும்.

Compelling ideas புறக்கணிக்கப்பட முடியாத அறிவுஎன 30 ஆண்டுகட்கு முன் நான் (ideas) எண்ணமாகப் பெற்றதை, என் உணர்வு ஏற்க 30 ஆண்டுகளாயின. அவற்றுள் சில:

 • இலட்சியத்தை ஏற்பவர்மட்டுமே அன்னையிடம் நெருங்க முடியும்.
 • சுயநலமான மனிதன், தன் சுயநலம் பாதிக்கப்படும்பொழுது தயங்காமல் துரோகம் செய்வான்.
 • ஒருவரைத் தகுதிக்குமேல் உயர்த்தினால், முதற் காரியமாக உயர்த்தியவருக்குத் தீங்கு செய்வார்.
 • தான் நாடும் காரியம் முடிந்தபின் நன்றி என்பதைச் சொல்ல 36 பேரில் 6 பேரே முன்வந்தனர்.
 • தகுதிக்கு மீறிய பலனைப் பெற்றவர், பலனை அடைய உதவி செய்தவரைத் தவிர மற்ற அனைவரையும் நினைவு வைத்திருப்பார். உதவி செய்தவரையும், உதவியையும் மனம் நினைவில் வைத்திருப்பதில்லை.
 • சுயநலத்தில் சுய உருவமானவர் தம் பரந்த மனப்பான்மையைப் பறைசாற்றாமலிருக்கமாட்டார்.
 • அளவுக்கு மீறிப் பலனைப் பெற்றவரால் துரோகம் செய்யாமலிருக்க முடியாது.

அறிவு தெளிவு பெறுவது குறைவு. ஏற்ற அறிவை உணர்வேற்று அதன்படி நடப்பது என்பதைக் காண்பது அரிது. அதையும் தாண்டி உடலும் ஏற்று, அதை வாழ்க்கைப் பாணியாக்குவது என்பது அடுத்த பிறவியில்தான். இதே பிறவியில் அது நடக்கும் நேரம், புனர்ஜென்மமெடுக்கும் நேரமாகும். அன்னையின் சிறப்பு அதுவேயாகும்.

எந்த விஷயத்தை அன்னையின் உணர்வு எவ்வளவு ஆழத்தில் ஏற்றுக்கொள்கிறதோ, அவ்விஷயத்தை அந்நிலை பூரணமாக ஏற்கும். அன்னையை எந்த அளவு நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பதற்கு இது ஓர் அளவுகோலாகும்.

********

724. ஒரு நிலையில் அன்னையை ஏற்றுக்கொண்டால் அந்நிலையிலுள்ள அறிவு பூரணம் பெற்று ஞானமாகும். அடுத்த நிலைகளில் (உயர்ந்தது, தாழ்ந்தது) உனக்குள்ள அறிவையும் இந்நிலையில் தெளிவு படுத்தும்.

 • எங்கு அன்னையைப் பூரணமாக ஏற்றாலும், அங்கு அன்னை எல்லா ஞானத்தையும் பூர்த்தி செய்வார்.
 • பூரணமாக அன்னையை நாடினால், ஞானம் அந்நிலையில் பூரணம் பெறும்.
 • ஞானத்தையும் பூர்த்தி செய்வார்.

நமக்கு அறிவு, அனுபவம் பல திறத்தவை. வீட்டு நிர்வாகம், ஆபீஸ் வேலை, நண்பர்களுடன் உறவு, இவை எல்லாம் போக சொந்த வேலை எனப் பலப் பகுதிகளாக வாழ்வு அமைந்துள்ளது. யாருக்கும் இவற்றுள் ஒன்றில் அதிகத் திறமையிருக்கும், மற்றதைப் பொதுவாக கவனிப்பார்கள். இதையே வேறு வகையாகவும் உடல், உணர்வு, அறிவு என்ற நிலைகளில் நாம் வாழ்வின் திறமை வேறுபட்டிருக்கும் எனவும் கூறலாம். அன்னையை ஒருவர் ஏற்றால் அது அவர் சிறப்பு என்பது.

நாம் எந்த நிலையில் அன்னையை ஏற்றாலும் நமக்கு எல்லா நிலைகளிலும் உள்ள அறிவைச் சேர்த்து, நாம் அன்னையை ஏற்ற நிலையில் ஞானமாக மாற்றுவார்.

அன்னையை ஏற்ற அன்பர், தம் ஆபீஸ் வேலையில் மட்டும் அன்னையை ஏற்றார்என்று கொள்வோம். அப்படிச் செய்தவுடன் அவர் வீட்டு அனுபவம், நட்பில் உள்ள அறிவு, இதர சொந்த வேலையின் திறமைகளையும் ஆபீஸ் வேலையில் அன்னை பலிக்கச் செய்கிறார். அதன் விளைவாக ஆபீஸ் வேலை,

 • அபரிமிதமாகப் பலிக்கும்.
 • இதர பகுதிகளில் வாழ்வு நிலை கணிசமாக உயரும்.

உதாரணமாக ஆபீஸில் அன்னையை ஏற்றவுடன், இன்க்ரிமெண்ட், பிரமோஷன், சர்வீஸ் ரிஜிஸ்டரில் பாராட்டு, ஆபீஸ் எலக்ஷனில் தேர்ந்தெடுக்கப்படுவது போன்றவை எழும். இதுபோல் என் ஆபீஸ் வேலையிருந்ததில்லைஎனும்படி ஆபீஸ் வாழ்வு மாறும். அத்துடன் நண்பர்களில் ஒருவருக்கு ஒரு பரிட்சை விஷயமாக உதவி செய்தால், ஆபீஸ் பரிட்சையில் பாஸ் எதிர்பார்த்திருந்த நேரம் I class பாஸ் வரும். வீட்டை வெள்ளையடிக்க முயன்று சுத்தம் செய்தால், ஆபீஸில் ஸ்பெஷலாக வெள்ளையடிக்க, பெயிண்ட் அடிக்க பணம் சாங்ஷனாகி, உத்தரவு வரும். சுருக்கமாக எங்கு எந்த வேலை செய்தாலும், அவையெல்லாம் ஆபீஸில் செய்யப்பட்டதுபோல் ஆபீஸிலிருந்து பலன் அபரிமிதமாக வரும். இது அன்னையின் அம்சம். எந்த முனையில் மனம் தீவிரமாக ஈடுபட்டாலும், எல்லாப் பகுதிகளின் திறனும் சேர்ந்து அம்முனையில் பலன் தருவது அன்னைக்குரிய அம்சம். அதே சமயம் எல்லாப் பகுதிகளும் பொதுவாக உயர்ந்திருக்கும்.

 • வாழ்வில் செய்த வேலைக்கு, செய்த இடத்தில் செய்த அளவில் பலன் தரும்.
 • அன்னையிடம் எங்கு வேலை செய்தாலும், தேவைப்பட்ட இடத்தில் அப்பலன் நம்மைத் தேடி வரும்.

அன்னை என்பது சக்தி. சக்தி என்பதுடன் தானுள்ள நிலையில் எதையும் பூர்த்தி செய்யும் திறனுடைய சக்தி. கிளார்க், (P.A.) பர்சனல் அஸிஸ்டண்ட், டைப்பிஸ்ட், ஸ்டெனோ, டெபுடி போன்ற உத்தியோகம்

எல்லா நிலைகளிலும் உண்டு. பஞ்சாயத்துச் சேர்மனுக்கு மேற்சொன்னவர்கள் உண்டு. இலாக்கா டைரக்டருக்கும் உண்டு. மந்திரி முதன்மந்திரி, மத்தியமந்திரி, கம்பனிடைரக்டர் ஆகியவருக்கும் இது போன்ற உதவியாளர்கள் உண்டு. எந்த இடத்தில் வேலை செய்தாலும் கிளார்க்குக்குச் சம்பளம், வேலை, பொறுப்பு ஒன்றேதான். அதே போலவே மற்ற உத்தியோகங்கட்கும் அடிப்படைச் சம்பளம், வேலை போன்றவை எல்லா நிலைகளிலும் ஒன்றேதான். ஆனாலும் நிலையுயர உயர செல்வாக்கு உயரும். முனிசிபல் சேர்மன் ஆபீஸ் கிளார்க்கும், கலெக்டர் ஆபீஸ் கிளார்க்கும், டைரக்டர் ஆபீஸ் கிளார்க்கும், பிரதமமந்திரி ஆபீஸ் கிளார்க்கும் பேரளவுக்கு அவர்கள் உள்ள ஆபீஸின் அந்தஸ்தால் பயன் பெறுவர்.

நாம் எந்த நிலையிலிருந்தாலும் அன்னை சக்தி, நாமுள்ள நிலைக்கு அன்னையின் சூழலை - "செல்வாக்கை'' - அளிக்கவல்லது. பேப்பர், பேனா, புத்தகம், நோட்டு ஆகியவற்றை நாம் அறிவோம். வெளிநாட்டில் அதே பேப்பர், பேனா, புத்தகம், நோட்டு ஆகியவற்றின் தரம் மிக உயர்ந்ததாக இருப்பதைக் காணலாம். அன்னையை ஏற்றுக்கொண்டால், அன்னையின் தரம் நம்மை வந்தடையும். அறிவு ஞானமாவதைப்போல் அன்னையை ஏற்றுக் கொண்டபின், உணர்வு கவலையை இழந்து சந்தோஷமாகும், செயல் தோல்வியை அறியாத தொடர்ந்த வெற்றியாகும், ஆரோக்கியம் வியாதியை அறியாததாகும். குடும்பம் பிணக்கொழிந்த ஸ்தாபனமாகும், கருத்து பிறர் மறுக்காமல் ஏற்றுக் கொள்வதாகும், வாழ்வு குறை நீங்கிய நிறைவுடையதாகும், உறவு வளரும் இனிமையுள்ளதாகும், ஸ்தாபனம் வாய்ப்புகளைப் பெறும் சந்தர்ப்பமாகும், பிரயாணம் - விபத்து நீங்கிய - இனிமையையும் உறவையும் வளர்க்கும் இயல்புடையதாகும், வயோதிகம் - தளர்ச்சி - விலகி, அதற்குள்ள நிறைவை நிரம்பப் பெற்ற சாதனமாக அமைவது அன்னை சக்தியின் இயல்பு.

**********

 1. பிறர் சுயநலத்தை வளர்ப்பது பலஹீனம், பாவம். அதைச் செய்தால் பிறகு உன் சுயநலத்தை அழிக்க அது உதவும். முடிவாக உலகத்தின் சுயநலத்தையும் அழிக்க உதவும். அகந்தை உள்ளவரை இந்தச் சட்டங்கள் செல்லும். அகந்தை அழிந்தபின் சுயநலம் என்பதும், பரநலம் என்பதும் மற்ற குணங்களைப்போல் ஒரு குணமாகும்.
 • சொந்தச் சுயநலம் குற்றம்.
 • பிறர் சுயநலத்தை வளர்ப்பது பாவம்.
 • அகந்தை அழிந்தால் சுயநலம் பரநலமாகும்.

சுயநலம் குறுகியது, வளர்ந்தால் இறுகும். திறமை மிக்கவருக்குச் சுயநலம் திறமையை வளர்க்கவும் உதவும். சுயநலம் நம்மைமட்டும் அறியும், பிறரைப் புரிந்துகொள்ள மறுக்கும். புரிய முனையாது, முனைந்தால் தவறாகப் புரிந்துகொள்ளும். சுயநலம் ஜீவனற்றது. கடுமை, கொடுமையை உற்பத்தி செய்யவல்லது. சுயநலத்தை வளர்ப்பது தவறு, பாவம், அதுவும் பிறர் சுயநலத்தை வளர்க்க உதவுவது மேலும் தவறு. ஏன்?

நம்மிடம் உள்ள தவற்றை வளர்ப்பது தவறு எனில், பிறர் தவற்றை வளர்க்க முயன்றால், சுயநலத்தை நல்லதாகக் கருதுவதாக அர்த்தம்.

 • சுயநலத்தைக் களைய முயலாவிடில் தவற்றை விலக்கவில்லை என்றும்,
 • சுயநலத்தை வளர்க்க முயன்றால், அதைச் சரிஎன நினைப்பதாகவும் பொருள்.

பெற்றோர் பிள்ளைகள் சுயநலத்தை வளர்க்க முயல்வதுண்டு. இதைச் செய்தவர்களில் ஒருவர் தவறாமல், பிள்ளைகளால் பழி வாங்கப்பட்டது உண்மை. அரசியல்வாதி, பொதுமக்கள் சுய- நலத்திற்குத் துணை போனால், குப்புற வீழ்வதைக் காண்கிறோம்.

சுயநலம் என்பது அகந்தையின் மறு உருவம். அகந்தை அழிந்தபின் சுயநலமிருக்காது என்பதுடன், அதன் இலட்சிய உருவமான பரநலமும் இருக்காது. பரநலம் பாராட்டும் மனிதர் இருவகையினர்.

 • 1. பரந்த மனமுடையவர் இயல்பாகப் பரநலமுள்ளவர்.
 • 2. சுயநலமான குணமுள்ளவர்கள், நல்லது செய்யக் கருதி பரநலத்தை மேற்கொள்வதுண்டு.

முதல் வகையைச் சார்ந்தவர்கள் இயல்பையொட்டி செயல்படுவதால், அங்குத் தவறு எழாது. அடுத்தவர்கள் சுயநலத்திற்கு எதிராக பரநலத்தை மேற்கொள்கிறார்கள். அது நல்ல பலனை ஆரம்பத்தில் தரும். பின்னர், பரநலத்தின் பேரால் தங்களை அறியாமல் சுயநலத்தை வளர்க்க முயல்வார்கள். இது நடந்தால், பரநலம் சுயநலத்தைவிடத் தீங்கு விளைவிக்கும். அகந்தையே சுயநலத்திற்குரிய மண் என்பதால், சுயநலத்தை அழிக்க விரும்புபவர் அதற்காகப் பரநலத்தை மேற்கொள்வதைவிட, அகந்தையைக் களைய முயல்வதே முறை.

குழந்தையைச் செல்லமாக வளர்ப்பதோ, தலைவருக்கு அதிகமாகப் பணிவதோ, நண்பனுடன் ஒத்துப்போக விரும்பி அவன் வழி செல்வதையே ஒரு பழக்கமாகக் கொள்வதோ, பிறர் சுயநலத்தை வளர்க்க உதவும். பிறர் சுயநலத்தை வளர்ப்பது, நம் சுயநலத்தை வளர்ப்பதைவிட அதிகத் தவறு. அதை ( polite behaviour) நாகரீகத்திற்காகவோ, நயத்திற்காகவோ செய்வதாக நினைப்பவர்கள், நிலைமையைச் சீர்தூக்கிப் பார்த்தால், பலஹீனத்தால் செய்கிறோம் என அறியலாம். சுயநலம் பல தீயகுணங்களுக்கு அடிப்படை என்பதால், அதை வளர்ப்பது பாவம்.

அன்னையை ஏற்றுக் கொண்டவர்க்கு இதுபோன்ற நிலையிலும் முடிவாகத் தாழ்வு வாராது, நல்லது வரும். பிறர் சுயநலத்தை வளர்த்தால், அதன் பலனாக வளர்த்தவருடைய சுயநலம் ழுவதும் அழியும் சந்தர்ப்பங்கள் எழுந்தபடியிருக்கும். பலஹீனத்தால்

செய்தாலும் இது நடக்கும். பலஹீனமன்றி பிறர் சுயநலத்தை வளர்த்தால் அது அறிவீனமாகும். பலஹீனமும், அறிவீனமும் இல்லாவிட்டால் பிறர் சுயநலத்தை வளர்க்கும்நிலை எழாது. இதன் முதற்பலன் தன் சுயநலம் அழியும். முடிவான பலன் உலகத்தில் சுயநலம் அழிய இதைச் செய்தவர் ஒரு கருவியாக அமைவார். அகந்தை உள்ளவரைதான் இந்தச் சட்டங்கள். அகந்தை அழிந்தால் சட்டம் வேறு. எந்தக் குணமும் திருவுருமாறினால், முதலில் வெறும் குணமாகும், பிறகு குணத்தின் சுவடு இல்லாமல் போகும்.

சுயநலம்என்பது செறிவான குணம். இது திருவுருமாறி ஆழ்ந்த அறிவுடைய முயற்சியாகும் தன்மையுடையது. சுயநலம் (organised) சிறந்த திறமையுடையது. சுயநலம் அழிந்தால் அதன் திறமையழியாது. பொதுவாகத் திருவுருமாற்றம் சுயநலத்தைப் பரநலமாக்கும். பரநலத்திற்கு அத்திறமை ஏற்படும்.

*******

 1. சிந்தனை எழுமிடத்து அதைச் சரண் செய்தால் எண்ணம் அழியும். எண்ணத்தின் அமைப்பைக் கண்டு (structure) அதிலிருந்து மன எழுச்சியின் சக்தியை அகற்றினால், அமைப்பு கரையும். அடுத்த நிலையில் அதேபோல் மனம் கரையும்.

சிந்தனையை அழித்து, அமைப்பையும் அழித்து, மனத்தை அழிக்க வேண்டும்.

செயல் ஆசையால் தீவிரப்படுதல்போல் எண்ணம், மன எழுச்சியால் சக்தி பெறுகிறது. எண்ணம் அழியாது. அதை விலக்கினால் மௌனம் எழும். அதற்குரிய முறைகள் பல. பூரண யோகத்திற்குரிய முறை சரணாகதி. தகப்பனாருக்குக் கடிதம் எழுத வேண்டும் என்பது ஓர் எண்ணம். இதை அகற்ற நாம் அதைச் சரணம் செய்ய முயல்கிறோம். கடிதம் எழுத வேண்டும் என்ற

வேகத்தைவிடச் சரணம் செய்வது தீவிரமானால், எண்ணம் சரணமாகும். இல்லையெனில் சரணம் செய்ய முடியாது. சரணம் செய்தால் மனம் மௌனத்தால் நிறையும். இது பெருநிலை எனினும், முதல்நிலை. அடுத்தநிலை மௌனம் பெற எண்ணத்தின் அமைப்பைக் கரைக்க வேண்டும்.

எண்ணத்தின் அமைப்புஎனில் என்ன? நாற்காலியின் அமைப்பு நான்கு கால்கள். மனித உடலின் அமைப்பு எலும்பு, நரம்பு, தசை, உறுப்புகளாகும். எண்ணத்திற்கு அவைபோன்ற அங்கங்கள் எவை? மொழி மேலெழுந்தவாரியான அமைப்பு. தகப்பனாருக்குச் செய்தி அனுப்ப நினைக்கும் உணர்வு உள்ளுறை அமைப்பு. இவை இணைவது எண்ணத்திற்கே உரிய அமைப்பு. இவற்றை நாம் காண முடியும். மொழி, உணர்வு, அவை இணையும் பாணி ஆகியவற்றை நினைத்து ஒவ்வொன்றாய் அவற்றைச் சரணம் செய்ய முனைந்தால், பலிப்பது கடினம். பலித்தால், முதலில் எழுந்த மௌனம் கனத்து மனத்தைக் கனமாக நிரப்புவதைக் காணலாம். பேரமைதி குடி கொள்ளும். ஓர் எண்ணம் கரைந்ததால் எழுந்த அமைதி இது.

மனம் என்பதில் எண்ணம் ஒரு பகுதி. தகப்பனாருக்குக் கடிதம் எழுதுவது என்பது ஓர் எண்ணம். மனத்தின் எண்ணங்கள் ஓர் ஆயிரம். அத்தனை எண்ணங்களையும் உருவாக்கும் திறன் மனத்தினுடையது. எண்ணத்தைச் சரண் செய்ததுபோல் அத்திறனைச் சரண் செய்யலாம். அது பெரியது. அது மனத்தின் முக்கியத்திறன் என்றாலும் ஓரு திறனாகும். சிந்தனை, கற்பனை, முடிவு, நினைவு, விருப்பு, வெறுப்பு, பாகுபாடு, நடுவுநிலைஎன மனம் பெற்ற திறன் பல. அத்தனைத் திறன்களையும் சரண் செய்தபின் மனம் எஞ்சி நிற்கும். மனம் ஜீவனின் கருவி.

கருவியை அதன் திறனிலிருந்து பிரித்துச் சரண் செய்தால், மனம் அழியும். அது பிரபஞ்சத்தின் மனமாகும். பிறர் எண்ணம் நம் எண்ணம்போல் தெரியும்.

மனம் கரைவதுபோல் உணர்வும், உடலும் கரைவது பூரண யோகத்திற்குரிய முன்னிலைச் சித்திகளாகும்.

கர்மத்தை முறைப்படுத்தினால் அபரிமிதமான சக்தி எழும். அதன் மூலம் கர்மயோகம் பலிக்கும்; ஞானத்தின் அடிப்படையான எண்ணத்தில் நாம் நிலைத்தால் எண்ணம் சிறந்து ஞானயோகம் பலிக்கும். முழுமனத்தின் சக்தியில் நாம் நிலைத்துத் திளைத்தால் ராஜயோகமாகும் அது. ராஜயோகம் யோகங்களில் சிறந்தது. அதை மேற்கொள்ளும் தகுதியுள்ளவர் அரிது என்கிறார் பகவான்.

பூரணயோகம் எண்ணம், உணர்வு, (கர்மம்) செயல் ஆகியவற்றில் நிலைத்து அவற்றின் திறனை யோகத்திற்காகப் பயன்படுத்துவதை மாற்றி அவற்றைத் திருவுருமாற்றம் செய்கிறது. எண்ணம் ஜோதியாகவும், உணர்வு அன்பாகவும், திருவுருமாற்றம் அடைகின்றன. எண்ணம் அழிந்து ஜோதியாக அரவிந்தர் திருவுருமாற்றம் என்கிறார். மாறுவதை ஸ்ரீ அன்னை தம் யோகானுபவங்களாக எழுதியுள்ளவற்றில்,

 • என் மனம் அழிந்துவிட்டது.
 • என் உணர்வு (vital) அழிந்துவிட்டது.
 • என் உடலே சிந்திக்கின்றது.
 • என் உடலே உணர்கிறது.
 • நான் ஆன்மாமூலம் அருளைப் பெறவில்லை.
 • என் உடல் அருளை ஆன்மாமூலம் பெறாமல் நேரடியாகப் பெறுகிறது.
 • என் உடல் அருளை (inner being) உள்மன ஜீவனாலும் பெறவில்லை.
 • என் உடல் அருளை சைத்தியப்புருஷனாலும் பெறவில்லை, நேரடியாகப் பெறுகிறது,

என்றெல்லாம் எழுதியுள்ளார். சிந்தனை சிறந்தது. அதில் லயித்து (concentrate) அதன்மூலம் யோகப்பலனைப் பெறலாம் என்பதற்குப்

பதிலாகச் சிந்தனையை அழித்து யோகப்பலனைப் பெறுதல் சிறந்தது என்பதே அன்னை மேற்கொண்ட தவம்.

சட்டத்தை கோர்ட் அமுல் செய்கிறது. எனவே நியாயம் தேடி கோர்ட்டுக்குப் போய் சட்டத்தைச் செயல்பட வைப்பது ஒரு முறை. அது பலிக்கும். சட்டத்தை நாடாமல் நியாயம் தேடி, கோர்ட்டுக்கு வெளியில், கோர்ட் அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் நியாயத்தை எடுத்து எதிரியிடம் சொல்லி ஜயிப்பது. சட்டத்தை நாடுவதைவிட உயர்ந்த முறை என்பதுபோல், எண்ணத்தை அழித்து யோகப் பலனைத் தேடுவது.

எண்ணத்தைச் சட்டத்திற்கு உதாரணமாகச் சொன்னால், மனத்தை கோர்ட்டிற்கு உதாரணமாகச் சொல்லலாம். கோர்ட் என்றும் உண்டு. நாம் சட்டத்தைத் தேடி கோர்ட்டுக்குப் போகாமலிருந்தாலும் கோர்ட் செயல்பட்டுக்கொண்டிருக்கும். சமூகம் நாகரீகமடைந்து சட்டமும், கோர்ட்டும் தேவையில்லைஎன பண்பட்டு கோர்ட்டை எடுத்துவிடுதல் (abolish) மனத்தை அழிப்பது போலாகும். அன்னை மனத்தையும், உணர்வையும் அதுபோல் அழித்தார்.

*********

 1. மனம் விழிப்பானது என்பதால் இதைச் செய்வது முடியும். உணர்வும் உடலும் விழிப்பற்றவை என்பதால் அங்கு இதுபோல் எளிமையாகச் செயல்பட முடியாது.

மனம் அழிய இசையும், உடல் மறுக்கும்.

சரணாகதியைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் பேசும்பொழுது "இது கடினம்'' என்கிறார். மௌனம் எத்தனைச் சிரமமானது என்றறிந்து அதைச் சாதித்தவர்கள் எண்ணத்தைச் சரணம் செய்தால் அதன் சிரமம் தெரியும். மௌனம் என்பது எலக்ஷனில் ஜெயித்து, மெஜாரிட்டி பெற்று முதன் மந்திரியாவதுஎன்றால், எலக்ஷனில் நிற்காமல் ஒருவரை

அரசியல் கட்சிகள் அழைத்து ஏகமனதாக முதன் மந்திரியாக்குவது சரணாகதிக்கு ஒப்பாகும்.

அதுவே அடுத்த கட்டத்தில் உணர்வில் பலிப்பது என்பது அதேபோல் பிரதமராவதாகும். உடல் அசைவுகளை, பகவான், அன்னைக்குமுன் எவரும் சமர்ப்பணம் செய்ய முயன்றதில்லை. இன்று உலகில் ஒரு சர்க்கார் உலகை ஆட்சி செய்யவில்லை. அது ஏற்பட்டு, அதன் தலைமை மேற்சொன்னதுபோல் அழைத்து அமைப்பது, உடலைச் சமர்ப்பணம் செய்வதாகும்.

பொதுவாக இவை நம் வாழ்வுக்கு அப்பாற்பட்டவை. இவற்றை அறிய ஒருவர் விரும்பினால் அவர் ஓர் எண்ணத்தை சமர்ப்பணம் செய்து பார்க்கலாம். சமர்ப்பணம் பலித்துவிட்டால், உலகமே நமக்கு அடங்கியது போலிருக்கும். இதுவரை அதைச் செய்தவர்களை நான் சந்தித்ததில்லை. சமர்ப்பணம் செய்ய முயன்றவர்களை அறிவேன்.

எண்ணம் சமர்ப்பணமானவர், எல்லா எண்ணங்களையும் சமர்ப்பணம் செய்தால் உணர்வைச் சமர்ப்பணம் செய்ய முன்வரலாம். அடுத்த கட்டத்திற்கும் அதே சட்டம்.

சோதனையாக ஓர் உணர்வைச் சமர்ப்பணம் செய்தால் அதன் அம்சங்கள் - சிரமம், வலிமை, கடுமை - தெரியவரும். பலிப்பது அரிது. பலிக்கும்போலிருந்தால் யானை பலம் வரும். சில சமயங்களில் உடல் சில்லிடும். உலகமே அசைவற்று நின்றது போலிருக்கும்.

உடல் அசைவுகளைச் சமர்ப்பணம் செய்ய முயல்பவர்கள் subconscious movement தன்னையறியாமல் செய்பவற்றை - தலையைச் சொரிவது, கைகளை ஆட்டிப் பேசுவது, வலக்காலை முன்வைத்து நடப்பது - போன்ற எளிய செயல்களைக் கவனித்து மாற்ற முயன்றால், அதன் முக்கியத்துவம் புரியும்.

தினமும் தலையில் வாகு எடுத்துத் தலை சீவுவதைச் சற்று மாற்றிப் பார்த்தால், கை, நினைவு, சுபாவம், உணர்வு எப்படி "ஒத்துழைக்கின்றன'' என அறியலாம்.

உடல் இதயம், நாடித்துடிப்பு, ஜீரணம், ரத்த ஓட்டம் போன்றவற்றை நாம் அறிந்து "சமர்ப்பணம்'' செய்யும் செயல்களாகும் நிலை உடலைச் சமர்ப்பணம் செய்வதாகும். அது அரியநிலை.

Punctuality குறித்த நேரத்தில் செயல்படுவது நல்லது, அழகு, பயன் தரும் என்று மனம் பூரணமாக ஏற்றுக் கொள்கிறது. அதை உடலோ, உணர்வோ செயல்படுத்துவதில்லை. மனம் விழிப்பானது என்பதால் இதன் உட்கருத்தை அறிகிறது. யோகத்தில் முதிர்ச்சியடைந்து வேதகாலத்திலிருந்து இன்றுவரை முன்னோடிகளான முனிவர்கள், தபஸ்விகளைப்பற்றி அன்னை, அவர்கள் ஜோதிமயமானவர்கள், அவர்கள் உடலைத் தாங்கி அன்று இந்தியாவில் வாழ்ந்ததால், இன்று அனைத்து இந்தியருடல்களும் ஒளி பெற்றுள்ளன என்கிறார். இவர்கள் உலகத்தில் மகா புருஷர்கள். அவர்கள் பெற்றது ஆத்ம ஞானம், அடைந்தது சச்சிதானந்தம், பரப்பிரம்மம். அவர்களுள் பலர் கோபமுற்று சபித்துள்ளனர். பரப்பிரம்மத்தை ஆன்மா எட்டினாலும், அதற்குரிய சித்தியைப் பெற்றபொழுதும், அதன் ஜோதியின்சாயல் அவருடல் மூலம் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் நாட்டு மக்களுடலுள் ஒளியைப் பொதித்து வைத்தாலும், ஆன்மாவுக்கு அடுத்த மனம் பக்குவப்படுவதில்லை. அதன் கீழுள்ள உணர்ச்சி கோபத்தால் பொங்கி எழத் தவறியதில்லை. இது முனிவர்களின் குறைபாடில்லை. கோபத்தின் வேகம், உணர்வின் இருண்ட தன்மையை விளக்குவதாகும்.

கோபப்படாத சாந்த சொரூபியாக இருந்தவர் அநேகர். விஸ்வாமித்திரர், துர்வாசர்போல் கோபத்திற்குப் பேர் போனவர்களும் உண்டு. உணர்வு கட்டுப்பட பரப்பிரம்ம சித்தியை ஆன்மா பெற்றால் போதாது. உணர்வு திருவுரு மாறுவது மேலும் சிரமம். பூரணயோகம் உடலைத் திருவுருமாற்ற முனைகிறது. பகவான் ஸ்ரீ அரவிந்தர் கோபப்பட்டதில்லை. ஒரே ஒரு முறை He was annoyed பகவான் முகத்தைச் சுளிக்கும்படியாயிற்று. அதையும் அவர் உடனே மாற்றிக்கொண்டார்என அன்னை கூறுகிறார்.

பகவான் அன்னை விரும்பியது எதையும் மறுத்ததில்லை. ஆனால் அன்னை அவரை உடற்பயிற்சியை மேற்கொள்ளும்படிக் கேட்டுக்கொண்டதை மறுத்துவிட்டார். உடல் வேறு ஒரு சித்திக்காக - உத்தாப்பானா - தினமும் 7 மணி நேரம் நடந்ததாக ஒரு குறிப்பு வெளியாகியுள்ளது. உடல் திருவுருமாற்றத்தை அவர் மேற்கொள்ளவில்லை. அன்னை அதை மேற்கொண்டார். முதல்நிலை பலித்து பூர்த்தியாயிற்று. உடன் ஜீவியம், சத்திய ஜீவியமாகத் திருவுருமாறியது.

அடுத்த நிலையில் (substance) உடன்பொருள் திருவுருமாற வேண்டும். அது அன்னைக்கு மரண வேதனையைக் கொடுத்தது. "இந்த யோகத்தை நான் எவர்க்கும் சிபார்சு செய்யமாட்டேன்'' என்று அன்னை கூறினார்.

*******

 1. இதுபோன்ற தவமுயற்சியை மேற்கொள்ளும் முன் அந்நிலைக்குரிய அகந்தையை அழிப்பது அவசியம்.
 • அழியும் கரணங்கள் தவம் சித்திப்பது.
 • அகந்தையை அழித்து, கரணங்களை அழிப்பது தவப்பயன்.

அகந்தை என்பது மனத்திலும், உணர்விலும், உடலும் உள்ளது. இந்த யோகத்தின் அடிப்படை அகந்தை அழிவது. அகந்தையின் வேர் மனதிலும், சிக்கல் உணர்விலும் உள்ளதாக பகவான் கூறுகிறார்.

மோட்சம் அடைவதை வேதரிஷிகள் அகந்தையை அழித்து சரணாகதிமூலம் செய்தனர். அகந்தையை அழித்தாலும், அழிக்காவிட்டாலும், மோட்சம் பெற முடியும் என்பது அனுபவம். நல்லவன், கெட்டவன், உயர்ந்தவன், உன்னதமானவன், தறுதலை, சூதாடி, திருடன் ஆகியவர் பட்டம் எடுக்க முயன்றால்,

கல்லூரி நல்லவனுக்கு மட்டும் அனுமதி தருவேன் என்று கூறுவதில்லை. கல்லூரிப் படிப்பை நாடுபவன் பொதுவாக நல்லவனாகவும், சில சமயங்களில் உயர்ந்தவனாகவும், ஓரிருவர் உன்னதமானவராகவும், உத்தமராகவும் அமைவதும் உண்டு. அதனால் பட்டம் பெற்றால் அவர் உன்னதமானவர்என்று கூற முடியாது. குணம் எப்படியிருந்தாலும், அறிவிருந்தால் பட்டம் பெறலாம் என்பது உண்மை. தவம் நிஷ்டையின் வலிமையைப் பொருத்தது. நிஷ்டை பலித்தால் தவம் பலிக்கும். தவம் பலித்தால் மோட்சம் கிட்டும். தவம் பலிப்பதற்கும் அகந்தை அழிவதற்கும் நேரடியான தொடர்பில்லை.

 • பூரணயோகத்தின் அடிப்படை அகந்தை அழிவது.
 • அதன் கருவி சரணாகதி.
 • சரணாகதி அகந்தைக்கு நேர் எதிரானது.

Mental ego,vital ego,physical ego, மனம், உணர்வு, உடலின் அகந்தைகள் கரையும்பொழுது தலையே அகன்று விரிவது போலிருக்கும். Vital ego உணர்வின் அகந்தை கரையும்பொழுது இனிமையான உணர்வு நம்மிலிருந்து எழுந்து பரவும்.

உடலின் அகந்தை அசைய ஆரம்பித்தால் துணி கிழிவது போன்ற சப்தம் கேட்பது சாதர்களுடைய அனுபவம். எந்த நிலையில் பூரணயோகத்தை மேற்கொள்ள விரும்பினாலும், அந்நிலைக்குரிய அகந்தை அழியாமல் அதை ஆரம்பிக்க முடியாது. சிந்தனையை அழிப்பது, மனத்தைக் கரைப்பது, உணர்வை உருவில்லாமல் செய்வது, உடலின் இருளை அழிப்பது ஆகியவை தவத்தின் உயர்ந்த நிலைகள். இதுவரை தவசிகள் மேற்கொள்ளாதவை.

அன்னையை அறிந்து தீவிரமாக அவர் எழுதியவற்றைப் படித்த பரம்பரை ஆசாரச்சீலர் சொன்னதாவது : "இதுவரை அன்னை

யாருமே சொல்லாததைச் சொல்லியிருக்கிறார். மனிதன் மாற வேண்டும்என்று எவருமே சொல்லவில்லை. என்ன மந்திரம், பூஜை, யக்ஞம் செய்யவேண்டும், எப்படிச் செய்யவேண்டும்என்று சொன்னார்களே தவிர, நாமே மாற வேண்டும் என்பதை எந்த புத்தகத்திலும் சொல்லவில்லை.''

மனிதனுடைய அகந்தை கரையவேண்டும், மனிதன் மாற வேண்டும் என்று சொல்லாத பெரியவர்களே இல்லை. எல்லா மதங்களும், எல்லா சாஸ்திரங்களும் அதைத் தவறாமல் சொல்கின்றன. நடைமுறையில் நாம் புரிந்து கொள்வதில்லை. பூஜை செய்தால் போதும்என்று நினைக்கக் கூடாது. அது தவறு. உண்மையான உணர்வையே கடவுள் ஏற்கிறார் என்பதை விளக்க ஏராளமான கதைகளும் உண்டு.

மனிதன் எப்படி மாற வேண்டும் என்பதை, கீதை எல்லா இடங்களிலும் சொல்கிறது. அன்னை அகந்தைக்குக் கொடுக்கும் விளக்கம் அவர்கள் எல்லாம் சொல்லியதைக் கடந்தது. அன்னை முதலிடம் கொடுப்பது அகந்தையை அழிப்பது. அகந்தையின் ஆதி, இன்றைய உருவம், ஆதிக்கம், வெளிப்பாடு, அமைப்பு ஆகியவற்றை அன்னை விளக்கமாகக் கூறுகிறார். அன்னையின் விளக்கத்தைக் கேட்டபின், நம்மை நாம் சோதனை செய்தால், அகந்தை தவிர நம்மிடம் என்ன இருக்கிறது என்ற கேள்வி எழும்.

ஆன்மாவும், பிரகிருதியும் தவிர அனைத்தும் அகந்தை என்பது அன்னை நிலை. உடலுறுப்புகள், அவற்றின் செயல்கள் பிரகிருதியைச் சேர்ந்தவை. நாமே விரும்பி செய்வன அனைத்தும் அகந்தையின் செயல்கள் என்பது அன்னையின் விளக்கம்.

சிந்தனையை அழித்து மௌனத்தை நிலைநாட்டுவது, மனத்தை அழித்து அதன் கடமையை உணர்வைச் செய்ய வைப்பது, உடலின் இருளைப் போக்கி ஒளிமயமாக்குதல் ஆகியவை அகந்தையைக் கடந்த நிலையில் உள்ள செயல்கள். சிந்தனை

அழிந்தால் பிரபஞ்சத்தின் சிந்தனை மனத்தைத் தழுவும். மனம் அழிந்தால் பிரபஞ்சத்தின் மனம் நம்மை ஆட்கொள்ளும். இயல்பாக அகந்தை அழிந்தபின் மேற்கொள்ளும் விரதங்கள் இவை. எனவே இவற்றை மேற்கொண்டால், முதல் அகந்தையை அழிப்பது அவசியம். அகந்தை ஒரு கூடு, தடை. இம்முயற்சிகள் பரந்து விரியும் தன்மையுடையன. அதற்குத் தடையும், கூடும் இருத்தல் கூடாது.

*******

 1. நாம் கண்மூடியாக விழிப்பற்ற நிலையில் இருந்தாலும் ஜீவியம் வளர்ந்தபடியிருக்கிறது. நாம் அறியாத நிலையிலும் பின்னணியில் ஆன்மீக அனுபவங்கள் நிகழும். மேல் மனம் அறியாத நிலையில் சைத்தியப் புருஷன் வளரும். அனுபவம் சேரும். ஜீவியம் மலரும். அதற்கெல்லாம் ஓரு வரையறையுண்டு. இதுவே பொதுவான முடிவான சட்டமாகாது.

விழிப்பற்ற நிலையிலும் ஜீவியம் விழிப்பாக வளரும்.

மனிதனுக்கு அவன் குறை தெரிவதில்லைஎன அனைவரும் கூறுகிறோம். மனிதனுக்கு அவன் நிறைவு தெரிவதில்லை என்பது ஆன்மீகத்துறையில் முக்கியக் கருத்து. இவையிரண்டையும் சேர்த்து,

மனிதன் தன்னையறியவில்லை

என்று நாம் கொள்ளலாம். பெருநகரங்களில் உள்ள மாணவர்கட்கு வாய்ப்பு அதிகம். மற்ற நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் உள்ள மாணவர்களை அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்பவே புரிந்துகொள்வார்கள். பெரிய தொழிற்சாலைகளில் நிபுணராகப் பேர் வாங்கியவர்கள் expert workers முக்கால்வாசிப் பேருக்குமேல் கிராமத்து இளைஞர்கள். இவர்கள் பாக்டரியில் வந்து சேரும்வரை எவருக்கும் இவர்களுடைய திறமை தெரியாது. இவர்கட்கே தெரிய வழியில்லை. Aptitude test மூலம் இதை கண்டு பிடிப்பது வழக்கம் .சிறந்த மொழிஅறிவுள்ள மாணவனுக்கு கட்டை குரலிருந்தால் அனைவரும் அவனை அவன் குரல் போல் கருதுவார்களே தவிர அதை கடந்து அவனுக்கு மொழியில் சிறப்பான திறமையுள்ளது எனக்காணமாட்டார்கள்.Mechanical ability,linguistic tune மெஷின் அறிவு மொழிப்பயிற்சி துபோல்எனில் ,பையனுடைய புத்திசாலித்தனம் பலசமயங்களில் வெளிவருவதில்லை.நல்ல சிறந்த புத்திசாலிகளை மக்கு எனவும் கருதுவதுண்டு. 

மேலழுந்தவாரியான திறமைகளை நாம் அறியமுடியவில்லை என்றால் ஆத்மா மறைந்துள்ளது ,புதைந்துள்ளது அதை பிறர் அறியவில்லை ,நாமே அறியவில்லை என்பது ஆச்சரியமில்லை

மேதை,அவதாரப் புருஷன்,புத்திசாலி,திறமைசாலி,ஆன்ம விளக்கம் பெற்றவர்கள் சிலசமயங்களில் முளையிலே தெரிவதுண்டு.பல சமயங்களில் தெரிவதில்லை அன்னை பக்தர்கள் அதுபோல் தங்களுள் வளரும் ஆன்மிகப்பலனைப் பொதுவாக அறிந்தாலும் ,விவரமாக அறிவதில்லை.சமூக அந்தஸ்து உயர்வது ,மனநிம்மதி வளர்வது, குணம் சிறப்படைவது ,மனிதன் உயர்ந்த மனிதனாக மாறுவது ,ஆன்மா விழிப்படைவது ,வச்தி பெருகுவது, இல்லாத வாய்ப்பு வந்து பலிப்பது ,ஆபத்தான கண்டங்கள் நம்மையறியாமல் விலகுவது,நம் சூழ்நிலையில் உள்ள விரோதிகள் தாங்களாகவே வெளியூர் போவது,புதிய நல்ல சூழலுக்கு நாம் போய் சேர்வது,ஆரோக்கியம் பெருகுவது அன்பர்கள் தவறாது பெறுவது. பெரும்பாலும் "எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை"என்பவர் பலர். நினைத்துப் பார்த்தால் பெற்றது பேர் அளவு ,முடிவற்றது எனத் தெரியும்.

குழந்தை பள்ளியில் சேர்ந்து. படிக்கும் பொழுது தினமும் தான் எதை கற்றுக்கொள்கிறது எனப் புரிந்துக் கொள்கிறது .அது பெற்றோருக்குப் புரியும் .ஆனால் மூன்று வயதுக்குமுன் குழந்தை ஒவ்வொரு நிமிஷமும் கற்றுக்கொண்டே இருப்பதை நாமும் அறிவதில்லை

குழந்தையும் கவனிப்பதில்லை. சிறு வயதில் குழந்தை பேசக் கற்றுக் கொள்வதுபோல் பல ஆயிரம் விஷயங்களைப் பெற்றோர் மூலம் கற்றுக்கொண்டாலும், பல ஆயிரம் விஷயங்களைத் தன்னை அறியாமல் கற்றுக்கொள்கிறது. அதேபோல் ஆன்மா ஒவ்வொரு நிமிஷமும் ஓர் அனுபவத்தைப் பெறுகிறது. நாமே முயன்று அறிவதை மட்டுமே நாம் அறிகிறோம். மற்றதை நாம் அறிவதில்லை. இவ்விஷயத்தில் நாமும் குழந்தை போலிருக்கிறோம்என்று அன்னை அடிக்கடி சொல்வார்கள்.

ஆசிரமத்தில் வந்து சேர்ந்து பல ஆண்டுகளாகியும் தாம் யோகம் செய்யவில்லை, தமக்கு யோகஅனுபவங்களில்லை, யோகம் பக்கவில்லைஎன்று அன்னையிடம் முறையிட்டும், அதனால் ஆசிரமத்தை விட்டுப்போகவேண்டும்என்று சிலர் கேட்டதுண்டு. அவர்களுக்கு அன்னை மேற்சொன்னது போன்ற பதிலைச் சொல்வதுண்டு. இதில் உள்ள முறையையும், உண்மையையும் நம் மரபு அறியும்.

கணவனுக்குப் பணிவிடை செய்யும் மனைவிக்குக் கணவனுடைய சாதனையின் புண்ணியத்தில் பங்குண்டு. சிஷ்யன் குருவிடமிருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் யோகச் சாதனையைப் பெறுகிறான். நேரடியாக அவர் கூறும் மந்திர உபதேசங்களாலும், மறைமுகமாக அவர் ஆன்மாவோடு அவர் இணைந்திருப்பதாலும் சிஷ்யன் பலன் பெறுகிறான்.

அன்னை பக்தர்கள் மற்றோர் அம்சத்தையும் காணலாம். அதுவும் நம் மரபில் உண்டு. ஒரு பக்தர் யோகமுன்னேற்றம் அடைந்தாலும், வாழ்வில் முன்னேற்றமடைந்தாலும், சில சமயங்களில் அவர் எதிரிக்கு அதே பலன் ஏற்படுவதுண்டு. ஏனெனில் எதிரி என்பதால் எந்த நேரமும் பக்தரை அவர் வெறுப்பாக நினைத்துக் கொண்டிருப்பதால் மனத்தளவில் தொடர்பு ஏற்பட்டு, அதன் மூலம் இவர் செய்யும் யோகப்பலன் எதிரிக்குப் போகிறது. இது பொது விதியாகாது. விலக்காகச் செயல்படுவதாகும்.

தான் வளர்த்து ஆளாக்கிய சிறுவன் தன்னைவிட்டுப் போய் எதிரியாகி பக்தரின் எதிரிக் கூட்டத்தில் ஒருவனானதை மனம் பொறுக்காமல் ஒரு மாதம் தொடர்ந்து அவனை மனதால் கரித்துக் கொட்டியவர், ஒரு நாள் அவன் தெருவில் போகும்பொழுது அவன் முகம் அளவு கடந்து பிரகாசமாக இருப்பதைக் கண்டு வியந்தார். வெறுப்பால் கடிந்ததால் இவர்மூலம் அவன் பெறுவது இவ்விஷயத்தில் அன்னையின்சக்தி என்பதால், அவன் முகம் ஒளி வீசியது.

*******

 1. சமூக மாறுதல், மனநிலை மாறுதல், ஜீவியம் மாறுதல் ஆகியவற்றை மேல்மனம் ஏற்றுக்கொள்ள விரும்பினால், உடனே ஏற்றுக்கொள்ளும். ஆழ்ந்த மனம் அதுபோல் ஏற்றுக்கொள்ளாது.

மேல்மனம் ஏற்பதை ஆழ்மனம் மறுக்கும்.

வெளிநாட்டில் போய் விரும்பித் தங்கியவர்கள் அநேகர். வயதானபின் உடல் தான் பிறந்த மண்ணுக்குப் போக விரும்பும். அதைத் தடுக்க முடியாது. J.R.D டாட்டாவின் தாயார் பிரான்சில் பிறந்தவர், பிரெஞ்சுக்காரர். அவர் இறந்தபின் அவருடல் பிரான்சில் அடக்கம் செய்யப்பட்டது.

நேருவுக்கு ஆங்கிலமே தாய்மொழி' என்ற அளவில் அவர் வாழ்விருந்தது. தாம் கனவு காண்பதும் ஆங்கிலத்தில்என்று ஒரு சமயம் கூறினார். ஆனால் அவர் ஹிந்தியில் பேசும்பொழுது எழும் ஆர்வம், வேகம், உணர்ச்சி ஆங்கிலத்திலிருக்காது. குழந்தைகள் மம்மி, டாடி என்று இன்று பெற்றோரை அழைக்கின்றனர். அம்மா என்றழைக்கும்பொழுதுதான் தாய்க்கு அது தன் குழந்தை போலிருக்கும். பழைய நாள் கதை ஒன்று;

வடநாட்டிலிருந்து சென்னை வந்தவர் பல மொழிகளைச் சரளமாகப் பேசுகிறார். தமிழ் கொச்சையாகப் பேசுவதுபோல், பெங்காலியும் கொச்சையாகவும், தெளிவாகவும் பேசுகிறார். அவருடைய சொந்த ஊர் எது என்று கேட்க தைரியமில்லாத சில சிறுவர்கள் அதை அறிய முடியாமல் தவித்தபொழுது ஒருவன் மட்டும் "இரண்டு நாளில் கண்டுபிடிப்பேன்'' என்றான். 2 நாள் கழித்து வந்து அவர் தமிழர் என்றான். எப்படிக் கண்டுபிடித்தான் என சிறுவர்கள் அறிய விரும்பினர். அவர் பகல் தூங்கும்பொழுது வெந்நீரைக் கைதவறி கொட்டியதுபோல் பையன் கொட்டினான். "யார்ரா அவன்'' என்று அலறினார். இயல்பாக எழுவது தாய்மொழி, அது ஆழ்மனத்திற்குரியது.

30 ஆண்டு அமெரிக்காவிலிருந்து வீடு திரும்பியவர் வத்த குழம்பும், சுட்ட அப்பளமும் சாப்பிட்ட பிறகு "இன்றுதான் சாப்பிட்டது போலிருக்கிறது'' என்றாராம்.

தகப்பனாரைப் பார்க்கமாட்டேன்எனச் சிறு வயதில் சபதம் செய்தவர், மனைவி முகத்தில் விழிக்க மாட்டேன் என்று அதுபோல் பலகாலம் சொல்லியவர்கள் மரணப்படுக்கையில் விழைவது "அப்பா வரமாட்டாரா?'', "அவள் எங்கே?'' என்பது. ஆழ்மனம் உடலுக்குரியது. உடல் தன்ஆயுள் முடிந்தபின் மேல்மனம் வைராக்கியமாகக் கருதியவற்றை எல்லாம் மறந்து ஆதிநாளில் தான் முதல் கற்றதை, ஆழ்ந்து விரும்பியதை, ரத்த பாசத்தை விழையும். அது ஆழ்மனத்தின் தன்மை.

 • ஆழ்மனம் எளிதில் ஏற்றுக்கொள்ளாது.
 • ஏற்றுக்கொண்டதை எளிதில் மறக்காது.

சுபாவம் ஆழ் மனத்திற்குரியது. பாஷன்என நாம் கற்பது மேல்மனத்திற்குரியது. Blood is thicker than water.ரத்தபாசம் ஆழ்ந்தது என்பது ஆங்கிலப் பழமொழி. ஆங்கிலக் கவியான சரோஜினி நாயுடுவுக்கும், அதுபோன்ற மற்றவர்க்கும் உணர்வு

எழும்பொழுது தாய்மொழியில் ஏற்படும் செறிவு அந்நியமொழியில் வாராது.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் அழியா இலக்கியமாக எழுதிய உலகப் பெருங்காப்பியம், காவிய வடிவம் பெற்றது அவரது தாய்மொழியில் அன்று, ஆங்கிலத்தில்.

அரசியலும், யோகத்திலும் விதிவிலக்காக இருந்ததைப்போல் அமரகாவியம் இயற்றியதிலும் பகவான் விதிக்கு விலக்கானவர்.

Fashion பாஷன் மாறினால் சிறுவர்கள் உடனே அதைப் பிடித்துக்கொள்வதைப்போல் பெரியவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அறிவு ஏற்பதைப்போல் உணர்வு எளிமையாக ஏற்றுக்கொள்ளாது. புதிய கருத்துகளை நாட்டில் உயர்ந்த படிப்பாளிகள், தலைவர்கள், செல்வர்கள் ஏற்பதைப்போல் பொதுமக்கள் சீக்கிரம் ஏற்க முன்வருவதில்லை. மாற்றம் ஏற்படுவதுண்டு. எல்லா நிலைகளும் மாற்றத்தை ஒரே அளவில் ஏற்பதில்லை. ஆண்கள் நாட்டின் புதிய நிலைக்கேற்ப மாறுவதைப்போல் பெண்கள் மாறுவதில்லை. நகரம் மாறுவதைப்போல் கிராமம் மாறுவதில்லை. அதேபோல் மேல்மனம் சீக்கிரமும், ஆழ்ந்தமனம் மெதுவாகவும் மாறுவது மனித இயல்பு.

இராகு காலத்தை இனி நம்ப வேண்டியதில்லைஎன முடிவாக நாம் அதை விட்டுவிட்டபின், பல ஆண்டுகட்குப்பின் ஒரு முக்கியமான காரியம் இராகுகாலத்தில் அமைந்துவிட்டால், எங்கிருந்தோ உள்ளிருந்து ஒரு கேள்வி, சந்தேகம், பயம் எழுவதுண்டு. அந்த பயத்தை எழுப்புவது ஆழ்ந்த மனம்.

வேறு ஜாதியில் ஆர்வமாகத் திருமணம் செய்துகொண்டவர், பிள்ளைகட்குத் திருமணம் செய்யும் நிலையில் தம் ஆழ்ந்த மனம் எழுப்பும் கேள்விகளை அறிவார். எத்தனை முறை ஒதுக்கினாலும், எங்கிருந்து இக்கேள்விகள் எழுகின்றன, எப்படி எழுகின்றன என்று தெரியவில்லையேஎன்று நினைப்பார். விதவையானபின் திருமணம் செய்துகொண்டவருக்கு இதுபோன்ற கேள்விகள் எழுவதுண்டு.

எல்லோரும் பணம் வாங்கும் ஆபீசில் கடைசியாகத் தாமும் பணம் வாங்கலாம்என முடிவு செய்தவருக்குப் பல ஆண்டுகள் கழித்து ஆழ்ந்த மனம் பல பிரச்சினைகளை எழுப்பும். அதே ஆபீசில் பணத்தைத் தொடக்கூடாதுஎன முடிவு செய்தவருக்கும் ஓய்வு பெறும் நிலையில் நாம் செய்தது சரியாஎன உள்ளிருந்து குழலோசைபோல் குரல் எழும்.

1920இல் ஆசிரமம் வந்து பகவானைத் தரிசித்தவருக்கு பகவானைவிட அவர் வசித்த அறை மனதில் ஆழமாகப்பட்டது. பலமுறை தம் கனவில் யாரோ தம்மைத் தூக்கி ஓர் அறையில் வீசுவதைக் கண்டிருக்கிறார் அவர். பகவானைத் தரிசிக்க வந்தபொழுது அவர் வசித்த அறையே தான் கனவில் கண்ட அறை என்று பார்த்தவுடன், இனி நமக்குரிய இடம் ஆசிரமம்என இங்கு வந்து மனைவியுடன் சேர்ந்துவிட்டார். 30 வருஷங்களுக்குமேல் இங்கிருந்து காலமானார். காலையில் எழுந்து சிவானந்தலகரி சொல்வதையோ, மாலையில் இராமாயணம் படிப்பதையோ அவரால் விடமுடியவில்லை. தாம் காலமாகுமுன், அன்னையின் கோட்பாட்டுக்கு நேர் எதிராகத் தம் பரம்பரைப் பழக்கப்படித் தம் உடலைத் தகனம் செய்யச் சொன்னார். மேலும் அஸ்தியைக் கங்கையில் கரைக்கச் சொன்னார். அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட பகவானும், அன்னையும், அவர் மேல்மனம் ஏற்றுக்கொண்டவை. ஆழ்ந்த மனத்தில் அவரால் பழைய பழக்கங்களை விடமுடியவில்லை. ஒரு சமயம் இவர் அன்னையிடம் சென்று, "நீங்கள் சொல்வதையெல்லாம் நான் செய்கிறேன். ஏன் எனக்கு யோகம் பலிக்கவில்லை'' என்றார். அன்னை தமக்குத் தெரியாதுஎன்று கூறினார். யோகம் பலிக்க ஆழ்ந்த மனம் மேல்மனம் ஏற்பதை ஏற்க வேண்டும்.

*******

 1. சமூகப் பழக்கங்கள் ஒரே தலைமுறையில் மாறும். சமூகத்தின் நம்பிக்கைகள் மாற ஒரு நூற்றாண்டாகும். சமூகத்தின் அமைப்பு மாற அதன் ஆரம்பநிலை அமைப்புகள் (units) அழிந்து புதுப்பிக்கப்பட வேண்டும். குடும்பம் இன்று அது போன்ற மாற்றத்தைப் பெற்று வருகிறது.

பழக்கமும், நம்பிக்கையும் மாறிய பின்னும் அமைப்பு மாறாது.

உடை, சாப்பாடு, படிப்பு, சட்டம் போன்றவை பழக்கங்களால் நிர்ணயிக்கப்பட்டவை. கர்மம், நேர்மை, கடமை, நாணயம் போன்றவை நம்பிக்கைகளாகும். குடும்பம், பணம், மார்க்கட், சர்க்கார், நிர்வாகம், நீதி, போக்குவரத்து, தபால் போன்றவை அமைப்பால் ஏற்படுபவை.

உடை, உணவு, படிப்பு, சட்டம் ஆகியவை நம் தலைமுறையில் மாறியதை நாம் அறிவோம். ஆங்கிலப் படிப்பு வந்தவுடன் திண்ணைப் பள்ளிக்கூடம் மறைந்துவிட்டது. வேஷ்டியும், ஷர்ட்டும் மாறி பேண்ட்டும், slack shirt சிலாக்குமாயிற்று. புடவை மாறி சுரிதார் வருகிறது. B.A.,M.A.,போய் B.E.,M.B.B.S.,M.Com.,C.A. வருகிறது. முதலாளிக்குச் சாதகமான சட்டம் போய் கோர்ட் தொழிலாளிக்கு சாதகமாயிற்று. விவாகரத்துக்குச் சட்டமில்லாமல் இருந்து ஏற்பட்டுவிட்டது. தீண்டாமை ஒழிக்கப்பட்டது. பெண்களுக்குச் சொத்துரிமை வந்தது. தொழிலாளிக்குப் பென்ஷன் வருகிறது. பழக்கங்களால் ஏற்பட்டவற்றை சமூகம் மாற்ற நினைத்தால் எளிதில் ஏற்றுக் கொள்கிறது. ஒரு தலைமுறையில் மாற்றம் தெரிகிறது. ஓரிரு தலைமுறைகளில் மாற்றம் முழுமை பெறுகிறது.

இராகுகாலத்தில் நம்பிக்கை மதம் மாறிய பிறகும் போவதில்லை. 5, 6 தலைமுறைகளுக்குப்பின் போகிறது. சுமார் 70, 80, 100 வருஷமாகிறது, இப்படிப்பட்ட நம்பிக்கைகள் மாறுவதற்கு. வெள்ளாழன் வீட்டில் வந்தவரை சாப்பிடாமல் அனுப்பப்பமாட்டான். அனுப்பினால் தலை வெடித்துவிடும். நிலத்தைக் கரம்பாகப் போடமாட்டான். செட்டியாரால் கணக்குப் பார்க்காமலிருக்க முடியாது. வாங்கிய கடனைக் கொடுக்காவிட்டால் குடும்பம் சர்வநாசமாகும் என நம்பும் செட்டியாரால், கடனைக் கொடுக்காமலிருக்க முடியாது.

மந்திரம் ஓதும் பிராமணன் சந்தியாவந்தனத்தை விடமாட்டான். அதை விட்டாலும் பித்ருக்களுக்குரிய சிரார்த்தம், தர்ப்பணம் இவற்றை புறக்கணித்தால் பெரிய பாவத்தைச் செய்ததாகக் கருதுவான். மாறுகிற இடங்களைப் பார்த்தால் மாற்றம் நெடுநாளையதாக இருக்கும்.

பண்டமாற்றுப் போய் பணம் வந்தது. Nomads ஊர் ஊராகத் திரிந்த கூட்டம் ஓர் ஊரில் நிலைத்து ஊர் சுருங்கி குடும்பமாயிற்று. ஜாதி ஏற்பட்டது. அமெரிக்கா போய் இரண்டு தலைமுறையானாலும் தன் ஜாதியையே திருமணத்தில் மனம் நாடுகிறது. இன்று முடியாட்சி போய் மக்களாட்சி வந்துள்ளது. 70 ஆண்டாக ரஷியாவில் மக்களாட்சியைக் கொண்டுவர முயன்றார்கள். முடிவில் முடியாட்சி வேறு உருவத்தில் வந்தது. மக்களாட்சிஎன்று பெயரிட ஒன்று ஏற்பட 70 ஆண்டு அனுபவம் போதவில்லை. குடும்பம் தேவையில்லைஎன்று நினைத்துக் கூட்டுக் குடும்பம் போய் தனிக்குடும்பம் ஏற்பட்ட வீட்டில் 9 பேர் உடன்பிறந்தவர்கள். மனைவியுடன்பிறந்தவர் 7 பேர். அத்தனை பேரும் தனிக்குடும்பமாக வாழ்பவர்கள். கூட்டுக் குடும்பத்தை அழித்துத் தனிக்குடும்பத்தை நிலைநாட்டியதாக நினைப்பவர்கள். ஏதோ காரணத்தால் இந்த 16 தனிக்குடும்பங்களும் பல்வேறு ஊர்களிலிருந்து ஒரே ஊருக்கு வந்துவிட்டனர். அழிக்கப்பட்ட கூட்டுக் குடும்பம், வேறு உருவில் இன்று ஒன்று சேர்ந்துவிட்டது. குடும்பம், சர்க்கார் போன்ற அமைப்புகளும், மார்க்கட், கல்வித்திட்டம் போன்ற பொது அமைப்புகளும் எளிதாக மாறுவதில்லை. அவை மாற வேண்டுமானால், பழைய அமைப்பை அஸ்திவாரத்தில் கலைத்து புதிய அமைப்பை அஸ்திவாரத்தில் ஏற்படுத்த வேண்டும்.

'ஆமிஷ்' என்ற பேரில் அமெரிக்காவில் ஒரு சிறு வகுப்பு மெஷின் பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கையைப் பின்பற்றி டிராக்டர், கார், T.V., போன் போன்றவற்றை விலக்கி வாழ்கின்றனர். அடுத்த தலைமுறையில் இக்கொள்கை வலுவிழந்தது. மகாத்மா காந்தி கதர் உடுத்த வேண்டும், மெஷின் பயன்படுத்தக் கூடாது என்பதைப் போன்ற கொள்கை இது. கி.பி. 2000த்தில் சுமார் சில ஆயிரம்

அமெரிக்கர்கள் ஆமிஷ் கலாச்சாரத்தைப் பின்பற்றுவது பழக்கங்களை மனிதன் விடமுடியவில்லைஎன்று காட்டுகிறது.

நம்பிக்கைகள் பழக்கங்களைவிட ஆழ்ந்தவை. மூடநம்பிக்கைகளையே விடமுடியாத மனிதன் நம்பிக்கைகளை எப்படி கைவிடப் போகிறான்? கர்மம் என்பதே ஒரு நம்பிக்கை என்கிறார் அன்னை.

மதம் நமக்கு அளித்த நம்பிக்கைகள் பல. கலாச்சாரம், பண்பு அளித்தவை வேறு. நாட்டின் சீதோஷ்ணநிலை - தட்ப வெட்ப நிலை - நமக்குப் பல்வேறு நம்பிக்கைகளை அளித்துள்ளது. உதாரணமாக இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா போன்ற பூமத்தியரேகை நாடுகளில் உழைப்பது அவசியமில்லை என்ற நம்பிக்கையுண்டு. உஷ்ணப்பிரதேசமாதலால் 12 மாதமும் பயிர் விளையும். மரம் காய்க்கும். பனி, குளிர்காலம், செடி கொடிகள் வதங்கும் winter நமக்கில்லை. ஐரோப்பாவில் 3 மாதம் குளிர்காலம். மரத்தில் இலைகளே இருக்கா. பனி, ஐஸ், snow மழைபோல் பெய்யும். வீட்டுக் கூரைமீது பனி மலைபோல் குவியும். 3 மாதம் எதுவும் பயிராகாது. 6 மாதம்தான் சூரியனைப் பார்க்கலாம். இந்த 6 மாதத்தில் 12 மாத உணவைச் சேகரம்செய்ய மனிதன் இரண்டு மடங்கு வேலை செய்ய வேண்டும். அத்துடன் குளிரிலிருந்து பாதுகாக்க கல்வீடு தேவை. குடிசையில் வாழ முடியாது. 3 மாத குளிரில் இரவும் பகலும் வீட்டில் குளிரில்லாமலிருக்க விறகு எரிய வேண்டும். அதை வெய்யிற் காலத்தில் சேகரம் செய்யாதவன் குளிரில் இறந்துவிடுவான். இரவும் பகலும் உழைத்தால்தான் உயிரோடு இருக்க முடியும் என்ற மேல்நாட்டுப் பழக்கம் அவர்கள் பனிக்காலத்தால் வந்தது.

நமக்குக் குளிரில்லை. பனி, ice, snow, fog, frost இல்லை. மரம் காய்க்கிறது. பயிர் விளைகிறது. அதனால் கடின உழைப்பு அவசியமாக இல்லை. நமக்குச் சோம்பேறித்தனம் வளர்கிறது. இதுவும் நம் சீதோஷ்ணநிலைக்குரிய பழக்கம். மேல்நாட்டாரால் 1/2 மணி அமைதியாக உட்கார முடியாது. அமெரிக்கர்கள் 10 நிமிஷம் சும்மா உட்கார மாட்டார்கள். நம்மால் அவர்கள்போல 1/2மணி வேலை செய்ய முடியாது.

சமூகம் எளிதில் மாறுவதில்லை. ஆனால் மாறுகிறது. மனித சுபாவம் மாறாது என்றாலும் மாறும் என்கிறார் அன்னை. 1950 தல் 2000 வரை உலகம் பெருமாற்றங்களைக் கண்டது. அவை மேலெழுந்தவாரியான மாற்றங்களே. மாற்றம் கடினம், ஆனால் அவசியம்.

*******

 

 

 

 

 

 

 book | by Dr. Radut