Skip to Content

பகுதி 2

17. செயலற்றிருப்பதே சிறந்த செயல் என அறிவது.

வாழ்வு செயலாலானது.

வாழ்வை, செயல் எனவே கூறலாம்.

செயல் என்பது உழைப்பு.

உடல் உழைக்கிறது.

உடலால் உழைப்பவனை உழைப்பாளி என்கிறோம்.

அவனுக்குரியது கூலி

கம்பெனி எவ்வளவு சம்பாதித்தாலும், அவனுக்குரிய கூலி உயர்ந்தால் நிலை உயராது, கூலி உயரும்.

கூலி வேலை செய்தவன் திறமை பெற்றால் மேஸ்த்திரியாவான்.

மேஸ்த்திரி வேலை செய்வதில்லை.

வேலை செய்பவரை மேய்ப்பான்.

இது ஒரு படி உயருவது.

இன்று தொழிலாளி சூப்பர்வைசராகிறான்.

அன்று - 10,000 ஆண்டுகட்கு முன் - அனைவரும் தொழிலாளி.

உலகம் முன்னேறி, கொஞ்சம் பேர் சூப்பர்வைசரானார்கள்.

சூப்பர்வைசர் உடலால் உழைப்பவனைக் கண்காணித்தால், மேனேஜர் அறிவால் உழைப்பவனை நிர்வாகம் செய்கிறார்.

கம்பனியை ஆரம்பித்த முதலாளி அடியிலிருந்து ஒவ்வொரு படியாக உயர்ந்து மேனேஜரிடம் நிர்வாகத்தை அளித்து, அதற்குரிய policies சட்டங்களை இயற்றுபவராகிறார்.

சட்டங்களை ஏற்படுத்தி, பொறுப்பேற்று, உழைப்பையும், வேலையையும்,

நிர்வாகத்தையும் முதலாளி கடந்துவருகிறார்.

பொறுப்பு பாரம்.

பாரத்தை rules சட்டங்களிடம் ஒப்படைக்கலாம்.

பொறுப்பின் பாரத்தை (faith) நம்பிக்கையிடம் தரலாம்.

எப்படிச் செய்தாலும் உழைப்பு, வேலையாகி, நிர்வாகமாக உயர்ந்து,

 

பொறுப்பாகி, நம்பிக்கையாக மாறுவது தொழிலாளி மனத்தால் முதலாளி ஆவது.

டாட்டா நிர்வாகத்தில் 93 கம்பனிகள் உண்டு.

அவை இப்படி நிர்வாகம் செய்யப்படுகின்றன.

பொறுப்பு பாரமில்லாமலிருக்க பர்சனாலிட்டி பெரியதாக இருக்க வேண்டும். பொறுப்பு பாரம் தாராமலிருக்க நிர்வாகம் சிறப்பாகவோ, நம்பிக்கை அன்னை மீதோ இருக்க வேண்டும்.

அந்நிலையில் அவர் செய்யக்கூடியது ஒன்றுமில்லை.

அது அவரைப்பொருத்தவரை செயலற்ற நிலை.

செயலற்ற நிலையில் செயலுக்குரியச் சக்தி அபாரமாக உள்ளிருந்து எழும்.

அப்படியிருப்பது ஒரு செயல்.

அது சிறந்த செயல்.

அவரது நிர்வாகம் அப்பழுக்கற்றிருக்கும்.

நம் மனநிலை இக்கட்டங்களைக் கடந்து செயலற்றிருப்பது சிறந்த நிலை.

சிறந்த நிலை உயர்ந்த செயல்.

இம்முறை ஒருவருக்கு முடியுமானால், அவர் எண்ணம் சிறப்பாக நிறைவேறும்.

சிறு செயல் பெரும்பலன் தரும்.

செயலேயின்றியும் பலன் தரும் வாய்ப்புண்டு.

செயல் உயர்ந்து, சிறந்து, செறிந்து தானே பலிக்கும் முறை இது.

18. செயலின் பின்னாலுள்ள மௌனத்தை எட்டுவது.

மௌனமே இறைவன்.

சாந்தியே இறைவன்.

ஜோதியே இறைவன் என நாம் கூறுகிறோம்.

ஏனெனில் நமக்கு இறைவன் என்பது பரமாத்மா - ஆத்மாவாகும்.

அனந்தம், காலத்தைக் கடந்த நிலை, ஐக்கியம், சத்தியம், நன்மை, ஞானம், சக்தி, அழகு, அன்பு, சந்தோஷம், மௌனம், சாந்தி ஆகியவை ஆத்மாவின் அம்சங்கள்.

நாம் மனத்தால் அல்லது உணர்வால் அல்லது உடலால் செயல்படுகிறோம்.

ஆத்மாவால் செயல்படுவது சிறப்பு.

எப்படி ஆத்மாவால் செயல்படுவது?

ஒருவரைச் சந்தித்தால், அவரைப் பற்றிச் சிந்தித்தால் அவர் புரிவார்.

இவர் உயரமானவர், நல்லவர், அடக்கமானவர், அந்தஸ்துள்ளவர்எனப் புரிவது மனத்தால் அவரை அறிவதாகும்.

அவரைக் கண்டவுடன் பிடித்துவிட்டால் உணர்வால் செயல்படுவதாகும்.

சிந்திக்காமல், உணராமலிருந்தால் மௌனம் எழும். அவர் முகம் பிரகாசமாகத் தெரியும். அவர் உள்ளத்தில் ஆத்மாவின் அம்சம் ஒன்று தெரியும். மௌனமாகப் பார்த்தால் அவரிடம் உள்ள மௌனம் தெரியும்.

பார்த்தவுடன் சிரிக்கிறோம், விசாரிக்கிறோம், சந்தோஷப்படுகிறோம் என்றால் அது உறவு. உறவில் நாம் மௌனத்தை மறந்துவிடுகிறோம்.

மீண்டும் அவரைச் சந்திக்கும் பொழுது மௌனமாக இருந்தால் அவரிடம் மௌனம் உண்டு, இல்லைஎனத் தெரியும்.

அல்லது அவர் போனபின் அவரைச் சந்தித்ததை நினைவுகூர்ந்தால் நம் சந்திப்பின் பின்னால் உள்ள மௌனம் தெரியும்.

நாம் எந்த வேலை செய்தாலும், அந்த வேலையில் நாம் நம்மை மறந்து விடுகிறோம்.

அப்பொழுது வேலை தெரிகிறது; வேலையை எப்படிச் செய்தோம், அதன் நிறைவு என்ன, குறைவு என்னஎன நாம் அறிவோம்.

வேலையை மறந்து உள்ளே போனால் வேலை தானே நடக்கும்.

வேலையின் பின்னால் உள்ள மௌனம் தெரியும்.

மௌனம் தெரிவதுபோல் மேலே சொன்ன 12 அம்சங்களில் ஒன்று தெரியும்.

மனம் குவிந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட அம்சங்கள் தெரியும்.

மனம் உள்ளேயுள்ள ஆத்மாவில் குவிந்து அடங்கினால் வெளியில் வேலையில் உள்ள ஆத்மா தெரியும்.

உள்ளே போய் ஆத்மாவைக் கடந்த அன்னை தெரிந்தால் வேலையில் உள்ள அன்னை தெரியும்.

The Life Divine படிக்கும் பொழுது இதைப் பயின்றால் புத்தகத்தில் பகவான் உருவம் பவித்திரமாகத் தெரியும்.

Blessing packet தபாலில் வந்தது. வயதானவர் ஆப்பரேஷனுக்காக Blessing packetஐக் கேட்டிருந்தார்.

பாக்கட்டைப் பிரித்து உள்ளேயுள்ள புஷ்பத்தை எடுத்தால், அதன் மீது ஒரு துளி ரத்தம் குதத்தில் தெரிந்தது. பௌத்திரம் (piles) ஆப்பரேஷன். அன்பர் கண்டது patient க்குரிய அன்னை.

19. மௌனத்தின் பின்னால் உள்ள மௌனத்தைக் காண்பது.

Silence behind Silence. உலகில் ஆன்மீகம் மௌனமாக வெளிப்படும். மௌனத்தின் பின்னாலுள்ள மௌனம் சிருஷ்டியில் ஆன்மீகம் செயல்படும் வகை. சிந்தனையற்ற நிலை மௌனம் மனத்தில் எழும் நிலை. உலகை அறியும் அவா மனத்தினுடையது. உலகை அறிவால் தழுவி உணர விரும்பாதவன் மனம் மௌனமாகும். ஓடும் எண்ணம் நிற்பதும், சிந்தனையழிவதும், மனம் புரிய விழைவது மறைவதும் மனத்தில் மௌனத்தின் பல நிலைகள். ஜடம், உணர்வு பெற்று, அறிவு பெற்றதால் மனம் என்ற கருவி ஏற்பட்டது. அதற்குமுன் மனம் சிருஷ்டிக்கப்படவில்லை. மனம் யோகத்தால் பகவானுக்கும், அன்னைக்கும் அழிந்தது. மனம் அழிவது என்றால் மனம் ஏற்படுமுன் இருந்தநிலை மனம் ஏற்பட்டு செயல்படாமலிருக்கும் நிலையை எய்துவது.

பதவி வருமுன் அதிகாரமில்லை.

பதவி வந்தபின் அதிகாரம் உண்டு.

பதவி அதிகாரத்தை அளித்தபின் அதிகாரத்தைச் செலுத்தாவிட்டால் ஏற்படுவது அடக்கம்.

உள்ள திறமையைச் செயல்படுத்தாத அடக்கம் மௌனத்தை உற்பத்தி செய்யும்.

கருவியிலிருந்து திறமையைச் செயல்படுத்தாதது முதல் நிலை.

கருவியில்லாததுபோன்ற நிலை ஏற்படுவது இரண்டாம் நிலை.

முதல் நிலைக்குரியது மௌனம்.

இரண்டாம் நிலைக்குரிய மௌனம், மௌனத்தின் பின்னுள்ள மௌனம்.

மௌனம் சக்தியை எழுப்பும்.

உலகில் செயல்படத் தேவையான சக்தியது.

அது பகுதியான செயல் என்பதால் அந்த மௌனம் பகுதியானது.

முழுமையான செயல் காலத்தைக் கடந்தது.

காலத்தையும், கடந்ததையும் கடந்துள்ள நிலைக்குரியது மௌனத்தின்

பின்னுள்ள மௌனம்.

செயலற்றுப் போகும் நிலையில் எழுவது மௌனம்.

அம்மௌனம் செயலால் கலையும்.

மௌனம் கலையாமல் செய்யும் செயல் மௌனத்தின் பின்னுள்ள

மௌனத்தை எழுப்பும்.

மௌனம் உற்பத்தியைப் பெருக்கும் (productivity).

உலகில் அதிக உற்பத்தியுள்ள நாடுகளில் மௌனம் (physicsl silence ) உண்டு.

மௌனத்தின் பின்னாலுள்ள மௌனம் சிருஷ்டிக்கும் (creative).

உலகில் புதியது எது எழவேண்டுமானாலும் அது மௌனம் உள்ள நாடுகளில் எழும்.

ஆன்மீகத்தில் புதியது எழவேண்டுமானால் அது மௌனத்தின்

பின்னாலுள்ள மௌனத்தில் எழும். இந்திய விடுதலைப் போராட்டமின்றி எழுந்து, 45 நாடுகட்கு விடுதலையளித்த வினோதம் அம்மௌனத்திற்கு உரியது.

20. எட்டுத் தலைகீழ் (reversal) மாற்றங்களை அறிவது. தோல்வியே வெற்றி; வலி ஆனந்தம்; எதிரி ஏற்றமிகு நண்பன்; அநியாயம் ஆண்டவனின் நியாயம்; நடப்பவை இறைவன் செயல் என்ற கருத்துகளை ஏற்பது.

21. துர்அதிர்ஷ்டம், பேராபத்து கொண்டுவருபவை வாய்ப்பு என அறிந்து மகிழ்தல்.

  1.  

மேல்மனம்

கணவன் மனைவி பூசல். அன்பே வெறுப்பு.

முரண்பாடு உடன்பாடு. தடை வாய்ப்பாகும்

  1.  

மேல்மனம் பொருள்

தோல்வி வெற்றிக்கு ஆரம்பம்.நஷ்டமடையாமல் செல்வம் சம்பாதிக்க முடியாது. டைபாய்டிலிருந்து பிழைத்து ஊனம் மாறும்.

லிங்கன் மனைவி கணவனை துடைப்பத்தால் அடித்து விரட்டினாள். சாக்ரடீஸ் மனைவி மலம் நிறைந்த பானையைத் தலையில் போட்டு உடைத்தாள்.

  1.  

உள்மனம்

உணர்ச்சி சூட்சுமமாகும். மனிதன் பேசுவதும் நினைப்பதும் வேறு

வேறு.

அகல்யா இந்திரனை விரும்பினாள். பஞ்சகன்னிகைகளில் அவளொருத்தி.

  1.  

உள்மனம் பொருள்

அகந்தை மனோமயப்புருஷனாகும். சிந்தனை மௌனமாகும். காலம் தன்னைக் கடக்கும்

நளாயினி சூரியனை நிறுத்தினாள்

  1.  

அடிமனம்

உலகம் பிரபஞ்சமாகும். காலத்தைக் கடந்தது. மூன்றாம் நிலைக் காலமாகும்

அனுசுயா திருமூர்த்திகளை சிசுவாக்கினாள்.

  1.  

அடிமனம் பொருள்

வலி ஆனந்தமாகிறது

கிருஷ்ணன் பீஷ்மருடைய வலியை விலக்கினார்.

  1.  

வளரும் ஆன்மா

ஆனந்தம் நிரந்தரமாவது. அகந்தையும், மனோமயப்புருஷனும் (சைத்தியப்புருஷனாக) வளரும் ஆன்மாவாவது

கோபிகைகள் கிருஷ்ணனுடன் செய்த லீலை.

  1.  

வளரும் ஆன்மா பொருள்

தீமையும், வலியும் திருவுருமாறி அற்புதமாவது. பாதாளமும், பரமாத்மாவும் மனத்தில் சந்திக்கின்றன.

புலி தன்னைச் சாப்பிட விழைந்தது

  • நஷ்டப்படாதவன் கோடீஸ்வரனானதில்லை.
  • அடிக்கும் கையே அணைக்கும்.
  • காய்க்கும் மரம் கல்லடி படும்.
  • கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
  • ஆகாதவன் ஆபத்தில் உதவுவான்.
  • கொலை செய்வாள் பத்தினி.
  • அரிச்சந்திரன் பொய் சொல்ல மறுத்ததால் பட்டபாடு பெரியது.

ஆகியவை உலக வழக்கு. இந்த 8 தலைகீழ் மாற்றங்களை அடுக்கடுக்காக வரிசைப்படுத்திக் கூறுவது சிரமம். ஏனெனில் 4, 5 நிலைகளில் உள்ளவை 1, 2 நிலைகட்கும் வரும். மரபு ஏற்கும் கருத்து இதுஎன அறிவது போதும். செயல்படுத்தத் தெளிவு வேண்டும். ஏதாவது ஒரு நிலையில் ஒரு விஷயம் தெளிவுபட்டால் மற்றவை புரியும். இரண்டு அரசியல் தலைவர்கட்கிடையேயுண்டான போட்டிக்குப் பலியானவருக்கு வாரண்ட் வந்தது. அதிலிருந்துத் தப்ப முடியாது என்ற நிலையில் "நான் செய்த தப்புக்குத் தண்டனையை ஏற்கிறேன்'' என்றார் பலியானவர். தவற்றை மனம் ஏற்றதால், வாரண்ட் இரத்தாயிற்று. வாரண்ட்டைப் பிறப்பித்தவர் நண்பரானார். நண்பர் பலியானவரை உச்சிக்குத் தூக்கி வைத்துவிட்டார். நம் சொந்த வாழ்வில் ஏற்பட்ட நிகழ்ச்சி தெளிவாகப் புரியும். அதை மனம் உண்மையாக ஆராய்ந்து ஏற்றால் தெளிவு வரும்.

  • பங்காளி சவால் விட்டிருக்காவிட்டால் நான் M.P.யாகியிருக்க மாட்டேன்.
  • என் பங்காளி மானேஜராக இருந்து என்கண்களில் விரலைவிட்டு ஆட்டினான். அதனால் M.L.A. ஆனேன்; மந்திரியுமானேன்.
  •  நாத்தனார் உயிரை எடுத்தாள். அதனால் அமெரிக்கா வர முடிந்தது.
  • என்கல்யாணத்தன்று என்நாத்தனார், வேறு பெண்ணைத் தம்பிக்கு மணம் முடிக்க ஆர்ப்பாட்டம் செய்திராவிட்டால், என்கணவர் இவ்வளவு ஆதரவு தந்திருக்கமாட்டார். அதனால் மாமியார், தாயார் போல நடந்தாள். 60 ஆண்டுகட்குப்பின் என்மகன் பேராசிரியராக இருக்கிறான். கங்கணம் கட்டியவர் பிள்ளைகள் ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள்.

  • என்உடன்பிறந்தவர் செய்த கேலியால் நான் பல நூறு கோடி வியாபாரம் செய்கிறேன். என்னைப் பாசமாக நடத்தியிருந்தால் நானும் அவர்களைப்போலத் திவாலாகியிருப்பேன்.
  • தாயாரும், உடன்பிறந்தவரும் செய்தக் கொடுமையால் திருமணம் ஆகாதுஎன்று தெளிவாகத் தெரிந்தது. ஆனால் வெளிநாட்டு வரன் வந்து நானே நாட்டைவிட்டு வந்துவிட்டேன்.
  • எனக்கு விசாவை மறுத்தார்கள். பட்ட சிரமம் ஏராளம். இன்று 10 வருஷத்திற்கு விசா கிடைத்துள்ளது. Visa on demand விசா ஏர்போர்ட்டில் டிக்கட் வாங்குவதுபோல் கொடுக்க சட்டம் பிறப்பிக்க யோசனை பிறந்துள்ளது.
  • அமெரிக்கா என்றால் கேலி செய்த உலகம் அமெரிக்காவைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளது.
  • சிஷ்யனைக் கொலை செய்ய முயன்ற குரு அவனுக்கே சிஷ்யனானார்.

நிலைமை மாறி, நமக்கு நல்லது நடக்க நாளாகும். மனம் மாறினால் நிலைமை மாறும். மனம் மாற க்ஷணம் போதும். மாற நாம் முடிவு எடுக்க நாளாவது அறியாமை. மேற்சொன்னவற்றைக் கருதினால், பகவான் கூறுவதை ஏற்றால், அறியாமை விலகும்; நாளாவது குறையும். எந்தப் பிரச்சினைக்கும் உரிய மனநிலை எது, அது எந்தச் செயல் வெளிப்படுகிறதுஎன அறிவது சிரமமில்லை. அச்செயலைத் தவிர்த்து, மனத்தை மாற்ற வேண்டும்.

22. முக்கியமான சிறிய நிகழ்ச்சிகளில் சிருஷ்டிச் சிறப்பை அறிவது (small significant acts). சிறிய நிகழ்ச்சிகள் பெரிய காரியத்தைப் பூர்த்தி செய்வது உண்டு. அவை சொர்க்க வாயில். அவற்றைக் காணும் சூட்சுமம் தேவை.

  • 1956-58இல் ஆசிரியர் தம் வீட்டில் வாழும் மாணவனை "நீ

தொழிலதிபராக வேண்டும்'' என்பார். 1975இல் மாணவன் ஒரு கம்பனி முதலாளியானான். இன்று அவனது கம்பனியில் 15 அல்லது 20 பாக்டரிகள் உள்ளன. ஆசிரியர் கூறியது மாணவனுக்கு நினைவிருக்கிறது; ஆசிரியருக்கு நினைவிலும் இல்லை. நிகழ்ச்சி நிதர்சனமாவதை அவர் 2 ஆண்டாக அடிக்கடி கூறியது காட்டுகிறது.

  • ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். எல்லா நிகழ்ச்சிகளையும்

அறிவு புரிந்துகொள்ள முடியாது. அதனால் அனைவரும் புரிந்து கொள்ளும் நிகழ்ச்சிகளைச் சகுனம் என்றனர். நிறைகுடம், வாய்ச்சொல், சுமங்கலி, தேவடியாள், அழுக்கைச் சுமக்கும் வண்ணான், கழுதை கத்துவது ஆகியவை சுபசகுனங்கள். சுபசகுனங்களை ஏற்று, அபசகுனங்களை எச்சரிக்கையாகக் கொள்கிறோம். அன்பர் நிலை அதுவன்று. அபசகுனங்களை சுபசகுனமாக்கும் திறனும், சுபசகுனங்களை உயர்த்தும் திறனும் சமர்ப்பணத்திற்குண்டு. சூழலை அறிய முயல்வது நல்லது.

  • விவசாயம் செய்யும் அன்பருக்குப் பெரிய புத்தகக்கடை நண்பர் 15

அல்லது 20 குழந்தைப் புத்தகங்களை அன்பளிப்பாக அனுப்பினார். நன்றியுடன் பெற்றுக்கொண்டார். அவற்றுள் விவசாயக் கையேடு' என்ற சர்க்கார் பிரசுரமிருந்தது. என்னைத் தேடி இது வரக் காரணம் என்ன' என்று கருதி அதைப் புரட்டிப் பார்த்தார். அவர் செய்யும் விவசாயத்திற்கு அரசு பண உதவி செய்யக்கூடிய பார்லிமெண்ட் சட்டம் நிறைவேறியதைப் புத்தகம் கூறிற்று. அது 1968. பாங்க் விவசாயத்தில் பங்குகொள்ளாத காலமிது.

  • காமராஜ் அரசியலில் 1930இல் நுழைந்தார். 1960இல் அகில இந்தியப்

பிரசித்திப் பெற்றார். காந்திஜீ 1915இல் இந்தியா வந்தார். இந்தியா புகழ்மாலை சூட்டி வரவேற்றது. 1919இல் அகில இந்தியாவும் அவரை ஏற்றது.

  • ஒரு காரியம் 50 ஆண்டில் பூர்த்தியாகும்.

சூட்சுமம் தெரிந்தால் 5 ஆண்டிலும் பூர்த்தியாகும்.

- நம் வாழ்வு அனைத்தும் சூட்சுமமானது.

சிறு விஷயங்களை அலட்சியம் செய்யாமல் கவனித்தால் புரியும்.

சூட்சுமம் புரிந்தால், சூட்சுமத்திற்கேற்ப நடக்க மனம் மாற வேண்டும்.

சூட்சுமம் சொர்க்க வாயில், மனமாற்றம் கருவி.

சத்தியம் மனமாற்றத்தை நிலைபெறச் செய்யும்.

எதிர்காலத்தை இன்று நடப்பவை தவறாது காட்டும்.

அதை அறிய முயல்வது ஆபத்தை விலக்க உதவும்; அதிர்ஷ்டத்தை ஏற்படுத்த உதவும்.

நம் விருப்பத்தை ஒதுக்கி, நடப்பவற்றை அன்னைச் செயலாக ஏற்பது சரியான மனநிலை.

5 அல்லது 10 ஆண்டாக அரைகுறையாக உள்ள பெருங் காரியத்தை அதுபோல் இன்று கவனித்து, மனம் மாறி, சத்தியமாகப் பின்பற்றினால் வளரும் தாமதம் விலகி, முடிவு உடனே நம்மை எதிர்கொள்ளும்.

எரிச்சலைத் தவிர்த்து, நம்மை வலியுறுத்தாதப் பொறுமையைக் கைக்கொள்ள வேண்டும்.

23. நீ பாடும் சிறப்பானப் பாட்டை மேலும் சிறப்பாகப் பாட முயலுதல்.

  • ஆண்டவனை நோக்கி ஓர் அடி வைத்தால் ஆண்டவன் நம்மை நோக்கி 10 அடி எடுத்துவைப்பான்.
  • ஆண்டவனை நோக்கி ஓர் அடி எடுப்பது என்றால் என்ன?
  • வாழ்வு புனிதமானது, அதனால் வாழ்வு ஆண்டவன். வாழ்வு செயலாலானது, அதனால் செயல் ஆண்டவன். சிறப்பு இறைவன். அதனால் சிறப்பை நாடுவது ஆண்டவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைப்பதாகும்.

  • இவையெல்லாம் என்னால் முடியாதுஎன எவரும் கூற முடியாது என்பது ஸ்ரீ அரவிந்தம்.

பாட்டுப் பாடுவதும், நாட்டை ஆள்வதும் இறைவனுக்குச் சமம்.

பாட்டின் தரம் உயர்வது எவரும் செய்யக்கூடியது.

(செயலின் தரம் உயர்வது இறைவனை நாடுவது).

பாட்டு உதாரணம். எந்தச் செயலுக்கும் இது பொருந்தும்.

மேலும் சிறப்பாக நாம் பாடும் பாட்டைப்பாட எவரும் விரும்புவர்.

ஆண்டவனை நாடுவது ஆனந்தமான செயல்; கடுமையான விரதமன்று.

கடுமையான விரதத்தைத் தவிர்த்து இனிமையான சிறப்பை நாடுவது ஸ்ரீ அரவிந்தம்.

அம்முயற்சிக்கு முடிவில்லை.

தானே ஓரளவுக்குச் செய்யலாம்.

மீதியுள்ளதை அடுத்தவர் உதவியால் சாதிக்கலாம்.

பிறர் உதவியை நாடும்பொழுது பிறரை இறைவனாகக் கொள்வதால் அதுவே பெருமுயற்சியாகும்.

சங்கீதத்தில் குரல் ஒரு பகுதி, பாட்டு அடுத்த பகுதி, சாகித்தியம் அடுத்தது, பயிற்சி பெரும் பகுதி, நமக்கு இனிப்பது ஒன்று, அடுத்தவர் ரசிப்பது அடுத்தது, பலரும் பாராட்டுவது முடிவானது.

குரல் இனிக்க நாம் செய்யக்கூடியதுண்டு.

குரலை அன்னையாக உருவகப்படுத்தினால் குரல் இனிமை கூடும்.

பாட்டின் கருத்தை அறியாமல் பாடுவதுண்டு.

அர்த்தம் புரிந்து பாடினால், கருத்து கண்டத்து ஒலியாகக் கணீரென ஒலிக்கும்.

சாகித்தியம் பெரிய சாஸ்த்திரம்.

அதை அறிவதற்கு முடிவில்லை.

ராகம் ஒரு சமுத்திரம்.

பயிற்சியை விரும்பி ஏற்க வாழ்க்கையில் கட்டுப்பாடு வேண்டும்.

பயிற்சிக்கும் பல மணி நேரம் தேவை. அதற்கு வாழ்க்கை ஒத்து வர வேண்டும்.

வாழ்வு ஒத்துழைக்க மனம் இசைவது அன்னையை ஏற்பது.

பாடுவது வேறு, இனிப்பது வேறு.

பாட்டு இனித்தால் முடிவாக உடல் புல்லரிக்கும்.

நமக்கு இனிப்பது வேறு, அடுத்தவர் ரசிப்பது வேறு.

(ஐன்ஸ்டீன் கண்டது அவருக்கு மட்டும் புரிந்தது.

பகவான் வகுத்தது அவர் மட்டும் விளங்கிக் கொண்டது).

அடுத்தவர் ரசிக்க நாம் அடுத்தவர் மனம்மூலம் சிந்திக்க வேண்டும்.

உலகம் பாராட்ட உள்ளம் தூய்மையாக இருக்க வேண்டும்.

 

எந்தக் காரியத்தையும் ஒரு படி உயர்த்த முடியும். அதன் முடிவு

ஆண்டவன்.

24. சிறப்பாகச் செய்யும் சமையலை, மேலும் இனிப்பாக, சுவையாகச் செய்வது.

சமையல் வேலை எளிமையானது. பாத்திரம் தேய்ப்பதற்குச் சற்று மேலானது.

சமையலுக்குச் சிறப்புண்டு.

ருசியான சமையலை இனிமையாகப் பரிமாற மனம் உயர்ந்திருக்க வேண்டும்.

சமையல் ருசி திறமையைப்பொருத்தது; இனிமை குணத்தைப் பொருத்தது.

நம்மவர் அதை இராசி என்பர்.

சமையல் நல்ல பேர் வாங்கியவருண்டு.

அதன் தரத்தையும் உயர்த்த முடியும். அது ஒரு நுணுக்கமான கலை.

பதமாகப் பழகுபவர்', சமையல் பதம்' என்பவை உயர்ந்த தமிழ்ச் சொற்கள் (excellent Tamil idioms).

சாம்பார் செய்யும்பொழுது தண்ணீர் மாறினால் ருசி மாறும்.

Gas நின்று 5 நிமிஷம் கழித்து மீண்டும் ஏற்றினால் அது சாம்பாரின் ருசியை மாற்றவல்லது.

உப்பு சற்றுக் குறைவாக இருப்பதால் இரண்டாம் முறை சேர்த்து சரி செய்தால் சாம்பாரில் (original taste, ரஸா) மணம் மாறும்.

சாம்பாருக்குரிய பருப்பின் தரம் எவ்வளவு நாள் பழகியது, செய்யும் பாத்திரம், எரியும் அடுப்பு, துழாவும் பாணிஎன ஒவ்வோர் அம்சமும் ருசியை நிர்ணயிக்கவல்லது.

அவை அனைத்தையும் சிறப்பாக உயர்த்த ஒரு பட்டமளிப்பு விழாவை நடத்த எடுக்கும் முயற்சியை மனத்தால் எடுக்க வேண்டும். அது கலையின் சிகரம்.

இதுவரை பொருள்; அடுத்தது மனம்.

சமையல் ருசிக்க மனம் இனிக்க வேண்டும்.

வீட்டில் 5 பேர் சாப்பிட்டால் 5 பேருடைய தேவைகளும் மாறுபட்டிருக்கும்.

சாப்பிடுபவர் விரும்பும் உப்பு, காரம், சூடு, பதம் செய்பவருக்குத் தானே தெரிவது psychic quality ஆன்மாவின் சுவை.

செய்தவர் வயிறு, சாப்பிடுபவர் சாப்பிடும்பொழுது குளிர்வது நல்ல சமையலுக்கு அடையாளம்.

பொருள் சிறப்பாக இருந்து, மனம் மணமாக இருந்தால் அன்றாடச் சாப்பாடு அமிர்தமான விருந்தாகும்.

சமையல் செய்ய விரும்புகிறவர்க்கு உரிய யோகப் பயிற்சியிது.

சமையல் தரத்தை இழைஇழையாக உயர்த்துவது அப்பயிற்சி.

சமையல் உச்சியைத் தொட்டால், எடுத்துக்கொண்ட காரியம் முழுவதும் குறைவற நிறைந்து பூர்த்தியாகும்.

எந்த வேலையையும் சிறப்பாகச் செய்தால் சிறப்பு நிறையும்பொழுது நம் வாழ்வில் உள்ள திட்டம் project அபரிமிதமாகப் பூர்த்தியாகும் என்பது சட்டம்.

சமையல் நாட்டம் உள்ளவர்க்குரிய பயிற்சி இது.

சமையல் உண்மையிலேயே ஒரு சிறந்தக் கலை.

சிறந்தக் கலையை உன்னதமாக்கி உயர்த்துவது வாழ்வை யோகம் ஆக்குவதாகும்.

25. மனம் எழுப்பும் தவறுகளை, தவறாது நேர்படுத்துதல்.

மனிதனுக்குப் பிரச்சினையில்லை; அவனே விரும்பி ஏற்படுத்துவதே பிரச்சினை என்பது ஆன்மீகச் சட்டம்.

சுமார் 100 ஆண்டுகட்குமுன் நியூயார்க்கில் கூலிக்காரர் சில மாதங்களில் மத்தியதரக் குடும்பமானார். அங்கு கூலி 10 மடங்கு அதிகம். வரலாற்று ஆசிரியர் ஒருவர் "இன்று ஒருவர் இங்கு பட்டினியிருந்தால், அதற்கு அவரே பொறுப்பு'' என்றார். சாதாரண மனிதனுக்கு வாழ்வில் ஒரு முறையும் வாராத வாய்ப்புகளை அன்னை பல முறையும் அடுக்கடுக்காக வழங்கும்பொழுது, மனிதன் அவ்வாய்ப்பை இழந்தால் எவரும் அவருக்குத் துணைப்போக முடியாதுஎன நான் கூற விரும்புகிறேன்.

பெரிய வாய்ப்பு வரும்பொழுது மனம் தவறாது இதுவரை இல்லாத

தவற்றைச் செய்யத் துடிக்கும்.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்த- வரைப் பட்டமளிப்பு விழாவில் பேச அழைத்தால், அந்த நேரம் அவருக்கு எதிர்வீட்டு மனிதனின் அல்பத்தனத்தைப் பற்றிப் பேசத் தோன்றும். சொல் வாயைவிட்டு வெளிவந்த நேரம் அழைப்பு ரத்தாகும்.

அன்பர்கட்கு வாராத வாய்ப்பில்லை; அவர்கள் தவறவிடாதவையுமில்லை.

  • 11/2 இலட்சத்திற்கு மேல் ஆர்டர் வாராத கம்பனிக்கு 21/2 கோடி ஆர்டர் வருவது.
  • முனிசிபல் கௌன்சிலராக நிற்க முடியாதவருக்கு M.P. சீட் வருவது.
  • எந்தப் பத்திரிகையிலும் ஓய்வு பெறும்வரை எழுதியறியாதவர்க்கு புத்தகம் எழுதும் வாய்ப்பு வருவது.

  • கலெக்டர் ஆபீசிற்குப் போய் வரும்பொழுது தாசில்தாருக்குக் கும்பிடு போடுபவர்க்கு முதல்மந்திரியிடம் அணுகும் நேரம் வருவது.
  • டெல்லிவரை போகாதவர் அமெரிக்கா போவது. அதை 20 முறையும் ஏற்பது.

இதுபோன்ற நேரங்களில், அதே நேரம், குணம் எழுந்து நேர்எதிராகச் செயல்படும். அப்பொழுது,

  • டிரைவரைக் காரமாகத் திட்டத் தோன்றும்.
  • காபியில் சர்க்கரை சரியில்லையெனத் தூக்கி எறிவார்.
  • தனக்குப் பேருதவி செய்பவருக்கு ஒரு (motive) காரணம் கற்பிப்பார்.
  • டஜன் 85 ரூபாய்க்கு வழக்கமாக வாங்கும் பழத்தை 5 ரூபாய் குறைத்து அதிக பேரம் செய்வார்.
  • பையன் சினிமாவுக்குப் போக பணம் கேட்டால் பெருமை பிடிபடாமல் 1000 ரூபாய் எடுத்துக்கொடுப்பார்.
  • இதுவரை வாயில் வாராத மட்டமான சொல் தானே வெளிவரும்.

மனம் அவசரப்படும், பொறாமைப்படும், குதர்க்கமாகப் பேசும், பேராசைப்படும், நமக்கு உரிமையில்லாததைக் கேட்கும், பிறர் உரிமையைப் பறிக்கத் துடிக்கும், கேலியாக நினைக்கும். self-awareness தன்னை அறிவது மனத்தை நமக்கு விளக்கும். இவை பிறவியுடன் வந்ததால் நம்மைமீறிச் செயல்படுபவை. இவற்றை மனத்தால் கட்டுப்படுத்த முடியாது. அன்னையிடம் விட்டுவிட்டால் அன்னை கட்டுப்படுத்துவார். கடைத்தெருவில் சிறுகுழந்தையை கன்ட்ரோல் செய்வதைப் போன்ற கடுமையான காரியம். பல சிறுகுழந்தைகள் அடக்கமாக இருப்பதையும் நாம் காண்கிறோம். அதுபோல் மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். அதை அன்னையால் செய்தால் நம் முயற்சியின்றி மனம் தானே அடங்கும். அதைச் செய்தபின்,

1) இன்றுள்ள எந்தப் பிரச்சினையும் இருக்காது. 2) இன்றில்லாத அத்தனை வாய்ப்புகளும் ஒரே நேரம் வரும்.

26. அதிகபட்சம் நல்லெண்ணத்தை உற்பத்தி செய்வது.

நல்லெண்ணமுள்ளவர் முகம் பிரகாசமாக இருக்கும்; புன்னகை தவழும்; கலகலப்பாக இருப்பார்.

  • எல்லோருக்கும் நல்லெண்ணமுண்டு. அது எல்லோரிடத்திலும் இருப்பது அரிது.
  • வேண்டியவர் மீது நல்லெண்ணம் அனைவருக்கும் உண்டு.
  • வேண்டாதவர் நினைவு வாராது.
  • வேண்டாதவரும் வாழ நினைப்பவர் உண்டு; அதிகமில்லை.
  • எவரும் கஷ்டப்படக்கூடாதுஎன்ற எண்ணமுள்ளவர் நல்ல அன்புள்ளம் உள்ளவர்.
  • எவரும் வாழக்கூடாதுஎன்று நினைப்பவரை அநேகம் பேர் பார்த்திருக்க மாட்டார்கள்.
  • வேண்டியவர் மீதும் கெட்ட எண்ணம் உள்ளவர் அரிபொருள். அப்படிப்பட்டவர் தவிர்க்க முடியாத உறவானால் (பெற்றோர், பிள்ளைகள், குரு, சிஷ்யன், பார்ட்னர், தம்பதி) வாழ்க்கை நரகமாகும். அதற்கு உலகில் பரிகாரமில்லை. அவர் உன்தகப்பனார், ஆனால் அவர் வாழ நினைத்தால் கார் நேரே மோத வரும்.
  • ஆன்மீகச் சட்டப்படி அனைவருக்கும் நல்லெண்ணம் உண்டு. அதற்கெதிரானதும் உண்மை. அனைவருக்கும் கெட்ட எண்ணம் உண்டு. அவை பொதுச் சட்டம்.
  • நமக்குப் பிறரைவிட நாமே முக்கியம்; நம் மனமே முக்கியம்.
  • நாம் ஏற்றுக்கொண்ட method முறை பிறர் மீது அதிகபட்ச நல்லெண்ணம் உற்பத்தியானால் இதுவரை நடக்காத பெரிய காரியம் உற்பத்தியாகி நடக்கும்.
  • நம் மனத்தில் பலர் மீது நல்லெண்ணம் உண்டு. அதை அனைவருக்கும் தரமுயலலாம்.

ஒருவர் மீதுள்ள நல்லெண்ணத்தை சற்று உயர்த்த முயலலாம்.

தங்கைக்கு வசதி வேண்டும், அண்ணன் எலக்ஷனில் ஜெயிக்க வேண்டும், நண்பன் வியாபாரம் பெருக வேண்டும், நாடு செழிப்படைய வேண்டும், எதிர்வீட்டுப் பையன் IAS பாஸ் செய்ய வேண்டும் என்பன நல்லெண்ணங்கள்.

அவற்றை நினைக்க முயன்றால் சில சமயங்களில் மறந்துபோகும்; மற்ற சமயங்களில் சலிப்பு ஏற்படும்.

இதற்கு மேல் அவருக்கு எதற்குஎனத் தோன்றும்.

தம்பி உயர்ந்தால் எனக்கு மரியாதையிருக்காதுஎன்று மனம் நினைக்கும்.

எதிர்வீட்டுப் பையன் IAS பாஸ் செய்தால் அவர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள்என மனம் நினைக்கும்.

அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒருவர் மீதுள்ள நல்லெண்ணத்தை அதிகபட்சம் உயர்த்தினால், அது நம்மனம் மகிழும் செயலானால் நம்பாதை சரியானது.

நினைவாலும் பிறர் வாழ மனம் பொறுக்காதுஎன்பது மனத்தின் சட்டம்.

நாம் நல்லெண்ணத்தை எல்லையைக் கடந்து உயர்த்தினால் மனத்தைக் கடக்கிறோம்எனப் பொருள்.

மனத்தைக் கடந்தால் எட்டுவது சத்தியஜீவியம்.

அதன் பொன்னொளி ஒரு சிறிது நம்மீதுப் பட்டால் நம் எண்ணம் நிறைவேறும்.

தடையின்றி எழும் நல்லெண்ணத்திற்கு அத்திறனுண்டு.

அந்த எண்ணத்தால் மனம் மகிழ்வது எண்ணம் பலிக்கும் எனப் பொருள்.

எவரும் பின்பற்றக்கூடிய எளிய உயர்ந்த முறை. இது என்னால்

முடியாதுஎன எவரும் கூறமுடியாத முறை. இதைக் கேட்ட ஒரு புண்ணிய ஆத்மா' "ஏன் அவர் வாழ நான் நினைக்க வேண்டும்?'' என்றார். அடுத்தவர் "நான் அப்படி நினைப்பதால் அவர் வாழ்ந்து விட்டால் என்ன செய்வது?'' என ஆத்திரப்பட்டார்.

27. நாட்டைப் பற்றிய உன் சிறந்த நோக்கத்தை மேலும் உயர்த்துவது.

தேசபக்தி என்பது மிகஉயர்ந்த குணம்.

நாட்டிற்காக உயிரையும், உரிமையையும் தியாகம் செய்ய எவரும் விரும்புவர்.

நாடு என்பது பிறந்த மண்.

ஊர் நாம் பிறந்த இடம்.

வெளிநாட்டில் போய் நெடுங்காலம் தங்கியவர் கடைசி நேரம் சொந்த ஊருக்கு வர ஆசைப்படுவர்.

போர் வந்தபிறகு போர்முனையில் நாட்டிற்காக உயிர் விடும் சந்தர்ப்பத்தைத் தவற மனம் வாராது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்தத் திருப்பூர்க் குமரன், பகத்சிங் வரலாற்றில் பொன்னான பகுதிகள்.

இன்று தேவைப்படுவது சுபிட்சம், சுதந்திரமில்லை.

சுபிட்சத்தின் உருவங்கள் ஏராளம்.

அதேபோல் நாடு முன்னேற சுதந்திரம், சுபிட்சம் தவிர ஆயிரம் முறைகளுண்டு.

அவற்றுள் நாமறிந்த சில:

  • பசி, பட்டினி அறவே அழிய வேண்டும்.
  • அனைவரும் நல்ல அளவுக்குக் கல்விபெற வேண்டும்.
  • எந்த இளைஞனும் அவன் விழையும் படிப்பைத் தடையின்றிபெற வேண்டும்.
  • அமெரிக்கா போனவுடன் நம் நாடு எப்பொழுது இதுபோலாகும் என மனம் ஏங்குகிறது.

  • அங்கு சுத்தமான வீதிகள், அலங்காரமான கடைகள், அழகொழுகும் வீடுகளைக் கண்டு இந்தியா இப்படியிருக்க வேண்டும்என நினைக்கிறோம்.
  • பிற நாட்டில் Qவரிசை நம் நாட்டில் கூட்டமாய் இடித்துக்கொள்வதை நினைவுபடுத்தும்.
  • அங்கு எந்த ஜட்ஜுக்கும் இலஞ்சம் கொடுக்க முடியாது.
  • நிலம் விளைநிலமாகப் பொன் விளைகிறது.
  • கல்லூரி மாணவன் நம் நாட்டுப் பேராசிரியர் போலிருக்கிறான்.
  • இலஞ்சம் அழிய வேண்டும்' என நினைப்பவர் ஏராளம்.
  • இந்தியன் என்றால் வெளியில் மரியாதை வேண்டும்என்பது ஒன்று.
  • இந்தியர் நோபல் பரிசு பெறவேண்டும்.
  • உலகத் தலைவர் இங்குப் பிறக்க வேண்டும்.
  • இந்தியர் என்றால் உத்தமர்எனப் பெயர் வாங்க வேண்டும்.
  • இந்தியா ஜகத்குருவாக வேண்டும்.
  • காரில்லாமல், வீடில்லாமல் எங்கும் இருக்கக்கூடாது.
  • வயதானபின் கேட்பாரில்லாமல் அனாதையாக மக்களிருப்பது கொடுமை.
  • மாமியார் கொடுமை, மருமகள் கொடுமை, கொடுமை.
  • இந்தியா உலகுக்கு நல்லது செய்ய வேண்டும்.

இந்தப் பட்டியலுக்கு முடிவில்லை.

இது உயர்ந்த கருத்து. நான் இங்கு கருதுவது "நாட்டைப் பற்றிய என் நல்லெண்ணம் எப்படி என்வாழ்வுப் பிரச்சினைகளைத் தீர்த்து, வாழ்க்கை வாய்ப்புமயமானது'' என்ற தத்துவம்.

இது சம்பந்தமான ஆன்மீகச் சட்டத்தை நான் அடிக்கடி எழுதுகிறேன். மீண்டும் கூறினால், "வேலை எதுவானாலும் பொறுப்போடு சிறப்பாக, நம் சக்தி முழுவதும் செலவாகும்படிச் (exhaust our energies) செய்தால்

மேற்சொன்னபடி பிரச்சினைகள் வாய்ப்பாக மாறும்''. எப்படி இச்செயல் அந்த இலட்சியத்தைப் பூர்த்தி செய்யும்?

  • நம்சக்தி முழுவதும் செலவானால் நாம் நம்சுபாவத்தைக் கடந்து

அதன் எல்லையில் நிற்போம்.

சுபாவத்தைக் கடக்குமிடத்தில் அன்னை காத்திருக்கிறார்.

சிருஷ்டிஎன்பது சுயரூபம் சுபாவம் பெறுவது.

சுபாவத்தைக் கடந்தால் சுயரூபம் எழும்.

அது வீரியமான விஸ்வரூபம் எடுக்கவல்லது.

சுயரூபம் - சொரூபம் - அழிவது யோகம்.

சுபாவம் அழிந்து எழும் சுயரூபம் பக்தர்கட்கு அவர்களை ஓரளவு அன்னையின் காலடியில் கொண்டுவிடும்.

அது பிரச்சினையை வாய்ப்பாக்கும்.

  • ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.

கிராமத்தில் சிறுவர்கள் பள்ளிக்குவர முடியவில்லை என்ற ஏக்கம் காமராஜருக்குப் பெரியது.

மதிய உணவுத் திட்டத்தை ஆரம்பித்தார்.

ஒருவனைப் படிக்க வைத்துவிட்டால் அவன் முன்னேறிவிடுவான் என்பது காமராஜ் தம்அனுபவத்தில் கண்டது.

S.S.L.C வரைக்கும் இலவசப் படிப்புஎன்று கூறினார்.

அவர் பதவியிலிருந்தார்; நாம் பதவியில்லை.

அவருக்கு அந்த எண்ணம் என்ன செய்தது?

தமிழ்நாட்டுத் தலைவர், அகில இந்திய தலைவரானார்.

10 ஆண்டு அரசியல் அவருக்குப் பிரச்சினையேயில்லை என Shanker's weekly cartoon  போட்டது.

நாம் பதவியில்லாவிட்டாலும் அன்பர்கள் என்பதால் பதவியில்

உள்ளவருக்குள்ள சக்தி நம்எண்ணத்திற்கு உண்டு.

  • இலஞ்சம் அழிய வேண்டும் என்பது உங்கள் இலட்சியமானால்,

மனம் எந்தெந்த வழியில் அதை ஒழிக்கலாம் எனக் கருதினால், அந்த எண்ணம் ஏதாவது ஒரு வகையில் நாட்டில் அமுலாவதைக் காணலாம்.

நாம் இலஞ்சம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய சட்டங்கள் இலஞ்சம் வாங்க முடியாதபடி வரும். கம்ப்யூட்டர் வந்து பெரும் அளவுக்கு இலஞ்சத்தைத் தடுக்கும்.

  • இந்த எண்ணத்தை இதேபோல் தொடர்வது ஒரு நிலை.

சற்று உயர்த்த "மனிதனுக்குத் தன்மானம் வேண்டும்'' என்று கூறலாம்.

உங்கள்மனம் அந்த எண்ணத்தைத் தீவிரமாக ஏற்கும்பொழுது ஊழியர், ஆபீசர், தொண்டர்கள் தன்மானமுடையவராக ஓரளவு செயல்படுவது, பேசுவது, நினைப்பது காதில் விழும்; கண்ணில் படும்; அதற்குரிய சட்டம் எழும்.

  • அதையும் உயர்த்தலாம்.

தன்மானமுள்ளவரே அரசியல் பதவிக்கு வரலாம்என்பது அடுத்த கட்டம்.

எந்த இலட்சியத்தையும் சற்று உயர்த்தலாம்.

உயர்த்தினால் உயர்வதைக் காணலாம்.

எண்ணம் உயரும்பொழுது மனநிலை உயர்வதைக் காணலாம்.

உயர்வுக்கு முடிவில்லை.

முயற்சிக்கும் முடிவில்லை.

சக்தி தீருமிடத்தில், தானே எதுவும் முடியும்.

அது நம்இலக்கு.

நம்வாழ்வு உயரும்.

நம்வாழ்வு உயர்வதுபோல் நாடு உயர வேண்டும் என்பது நல்லது.

மனம் நம்மை விட்டகன்று மதரில் நிலைக்கும்.

நிலைப்பது திளைப்பது.

நாடுஎன்பது பாரதமாதா.

பாரதமாதா இன்று பிளவுபட்டிருக்கிறாள்.

அவள் ஒன்றுபட விழைவது உயர்ந்த இலட்சியம்.

நாடு ஒன்றுபட்டால் இந்தியா ஜகத்குருவாகும்என பகவான் கூறியுள்ளார்.

அவர் முதலிரண்டு கனவுகள் - இந்திய விடுதலை, ஆசிய விடுதலை - 1950இல் பலித்தது.

உலகம் ஒன்றுபடுவது அடுத்த கனவு.

ஜகத்குரு அடுத்தது.

சத்தியஜீவன் ஜனிப்பது முடிவான இலட்சியம்.

28. பெற்றோர் குறைகளை நம் வாழ்வில் விலக்குவது.

கல்லூரியைவிட்டு வந்தவுடன் ஓர் இளைஞர் தம்மைக் கூர்மையாகக் கவனித்தார். அவர் கண்டது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. மற்றவர்களைக் கவனித்தார். ஆச்சரியம் மாறி அனுபவமாயிற்று. ஒரு முறை அவர் நண்பரிடையே ஆணித்தரமாக,

"நாம் படிக்கலாம், அரசியல் பேசலாம், இலட்சியமாக இருக்கக் கங்கணம் கட்டிக்கொள்ளலாம். ஆனால் விஷயம் பெரியதாகி நாமே சொந்த முடிவெடுக்கும் நேரம் வந்தால், எல்லாம் மறந்துபோகும். மனம் குழம்பும். அந்த நேரம் தகப்பனார் செய்ததை அப்படியே செய்வோம்'' என்றார்.

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஓராண்டு ஆசிரியராக வேலை செய்துவிட்டு வக்கீலாகப் போனார். ஊரில் பெரிய வக்கீலுக்கு ஜூனியரானார். இது நடந்தது 1960ல். அவர் கூறியதை நான் கேட்டுக்

கொண்டிருந்தேன். சுமார் 10 ஆண்டுகளாக நான் psychology புத்தகங்களில் படித்ததை அவர் அனுபவரீதியாகக் கேட்டேன். அன்று முதல் இன்று வரை நான் இது சம்பந்தமாகக் கண்டவை இந்த இளைஞர் கூறியதை ஆழ்ந்து ஊர்ஜிதப்படுத்துகின்றன. என்அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அன்னையின் சொற்கள் இவ்விஷயத்தில் எப்படிச் செயல்படுகின்றனஎன்று கண்டு மேற்சொன்னக் கருத்தை எழுதினேன்.

  • பெற்றோர் குறையை விலக்குவது நம் நிறத்தை மாற்றுவதுபோல.

அது நடவாத காரியம். அன்னையை ஏற்றவர் அக்குறையைச் சற்று மாற்ற முயன்றால், முடிவு செய்தால், அன்னை வாழ்வின் போக்கையே மாற்றி நம் முடிவைப் பூர்த்தி செய்கிறார்.

கடன் ஏராளமாக வாங்கி வட்டியும் கட்டியறியாதவர் பேரன் ஒருவர் அன்னையை ஏற்றார். அவர் கடனே வாங்க நினைக்காதபொழுது பெருந்தொகையை அடுத்தவர் வலிvயக் கடனாகக் கொடுத்தனர். இது தாத்தாவின் செயல், நான் கடனைத் திருப்பித்தர வேண்டும்எனச் செய்த முடிவை அன்னை நிறைவேற்றிய அற்புதத்தை அன்னையை அறியாதவரால் நம்பமுடியாது. அடுத்த பேரன் வாழ்விலும், அவர் தகப்பனார் வாழ்விலும் கடன் முன்தலைமுறையில் செய்த அதே வேலையை, அதே பாணியில், ஆனால் - மாறிய உலகில் - அளவுகடந்து பெருக்கி அத்தனையையும் அழித்தது.

கர்மம் கனத்தது. எவராலும் மீறமுடியாது. அன்னை அதையும்

அழிப்பார்.

தகப்பனாரைக் காப்பாற்றாதவரும் தாயைக் காப்பாற்றத் தவறுவதில்லை. பல பிள்ளைகளிருந்தும் எவரும் தாயைக் கவனிக்க மறுப்பது உலகில் காணமுடியாத ஒன்று. அவர்களைப் பிள்ளைகள் காப்பாற்றுவார்என நினைப்பது கனவு. பெற்றோர்குறை ஏராளம். அவை நம்மிடம் அதிகமாக இருக்கும். அதிலிருந்து விலக முடிவு செய்வதே கடினம். அந்த முடிவுக்கே பெரும்பலன் உண்டு. சற்று விலகினால் அளவுகடந்த பலன் காத்திருக்கும்.

நடத்தைத் தவறான பெற்றோர் தங்கள் பிள்ளைகள் அதையே அதிகமாகச் செய்வதைக் காண்பர். அப்பிள்ளைகள் சரியாக நடக்க முடிவு செய்வது மலையை நகர்த்துவதுபோலாகும். அன்னை சக்தி வருமுன் அதைச் செய்யும் சக்தியொன்றில்லை. இது பெரிய முறை. பின்பற்றினால் பலன் ஏராளம்.

29. வாழ்வைச் செயல்படச் செய்வது (Evoke a Life Response).

கன்று போட்ட மாட்டை விலைக்கு வாங்கியவன் அதை பிடித்துக் கொண்டு போக முயன்றால், மாடு முட்டும், வாராது. கன்றை பிடித்துக் கொண்டு போனால் மாடு தானே பின்னே வரும். அறிவு மாட்டை இழுக்கிறது. அனுபவம் கன்றை இழுத்துப் போகிறது.

மகனுக்கு மெடிக்கல் கல்லூரியில் இடம் தேடி அலைபவர் பணம் புரட்டுகிறார், சிபாரிசு தேடுகிறார், அலைகிறார். அது மாட்டை இழுத்துப் போவது போன்றது. அவரது அண்ணன் மகன் அவர் தங்கைப் பெண்ணை மணக்க விரும்புவதை இவர் முனைந்து தடை செய்கிறார். இவருக்கு அத்திருமணத்தால் இலாபமோ, நஷ்டமோ இல்லை என்றாலும், அதைத் தடை செய்வது ருசியாக இருக்கிறது. அந்த இடத்தில் இவர் மனம் மாறினால் அட்மிஷன் சுலபமாகக் கிடைக்கும்; அநேகமாகப் பணமும் தர வேண்டியிருக்காதுஎன்று இவர் அறியமாட்டார். வேறு காரணத்தால் அத்திருமணம் பையன் விருப்பப்படி நடக்கும் அன்று இவருக்கு அட்மிஷன் கிடைக்கும்.

  • இந்தச் சட்டம் நாமறியாதது. நம் மரபில் இதன் உட்பொருளை அறிவர். ஆனால் நடைமுறையில் அது இல்லை.
  • இதுவரை நம்அனுபவத்தை நினைவுகூர்ந்தால், அன்று விளங்காதது இன்று விளங்கும்.
  • கடமையைச் செய்ய மனம் வருவதில்லை. ஆசையை அளவுகடந்து பூர்த்தி செய்ய ஆர்வம் அதிகமாக இருக்கும்.
  • வாழ்வு நீர்ப்பரப்புப்போல் மட்டமாக இருக்கிறது (maintains an equilibrium). ஒரு குடம் நீரை எடுத்துவிட்டால் மட்டம் 1/2 அங்குலம்

இறங்குகிறது என்பது நாம் தினமும் காண்பது என்றாலும், மனதைத் தொட முடியாது.

  • நான் செய்யாதது எனக்கு வாராது.

என்மனத்திலோ, செயலோ இல்லாதது எனக்கு வாழ்வில் நடக்காது. என்மருமகளை நான் கொடுமைப்படுத்தும் அதே நேரம் என்மகளை அவள் மாமியார் கொடுமைப்படுத்துவதை ஆயிரம் முறை கண்டாலும், காரணம் புரியவில்லை.

என்மருமகள் எனக்கு அடங்க வேண்டும், என்சம்பந்தியும் எனக்கு அடங்க வேண்டும் என்பது அகந்தை. அதுவே மனம் விழைவது. எனக்கு மருமகளேயில்லையே என்றாலும் எனக்குக் கொடுமைப்- படுத்தும் மனம் உண்டுஎன எவரும் ஏற்கமாட்டார்கள். அதற்கு Sincerity உண்மைஎனப் பெயர்.

நான் எனக்கு உட்பட்டவரைப் பட்டினி போட்டால், என்மருமகள் என்னைப் பட்டினி போடுகிறாள் என்பதை அறிய ஆத்ம விழிப்புத் தேவை.

இதையறிய அறிவு தேவையில்லை; அடக்கம் தேவை. 4 இலட்சம் ரூபாய் ஒரு கருமியிடம் பாக்கி நின்றது. வரவேண்டியவர் தவிக்கிறார். "நான் எவருக்கும் பாக்கியில்லையே'' என நினைக்கிறார். பாக்கியில்லைஎன்பது உண்மை. ஆனால் மனத்தில் அடுத்த கட்டத்தில் முடிந்தால் என்னிடம் எவரும், எதையும் பெற்றுக் கொள்ள முடியாது என்பதே என்சுபாவம்என்பதை அவர் அறியவில்லை. அறிந்து, 10 நாள் பிரார்த்தனையில் 60,000 ரூபாய் வந்தது.

பிரார்த்தனை மனம் ஏற்காமல் செய்வதுஎன்று அறிந்து 1 வருஷம் கழித்து, 3 நாள் பிரார்த்தனைக்கு மீதிப்பணம் முழுவதும் கேட்காமல் தானே வந்துவிட்டது.

இவை பிறர் நமக்குச் சொல்வதில்லை; சொல்லக்கூடாது.



book | by Dr. Radut