Skip to Content

பகுதி 1

வாழ்வு முழுவதும் யோகம் என்பதால் வாழ்வுக்குரிய எந்த முறையும் யோகத்திற்குரிய முறையாகும். நேர்மை, திறமை, கடமை, உழைப்பு, நட்புணர்வு போன்ற பல வாழ்வு முறைகளை நாம் அறிவோம். அவை நேரடியாக யோக முறைகளாகாவிட்டாலும், அவை பூரணம் பெறும்பொழுது யோக சக்தி அதன்மூலம் வாழ்வினுள் நுழையும். யோகத்திற்குரிய முறையாக பகவான் கூறுவது ஒரே முறை. அது சரணாகதி. அதை வாழ்வுக்குரியபடி மாற்றி அமைத்தால், பணியவேண்டியவற்றிற்குப் பணிவது என்றாகும். அதை வாழ்வில் சரணாகதி எனக் கொள்ளலாம். மேலும் பொதுவான மொழியில் கூறவேண்டுமானால் வாழ்வில் அடக்கம் என்பது, யோகத்தில் சரணாகதியாகும். அடக்கம் அர்த்தபுஷ்டியுடையதானால் யோகத்தில் சரணாகதி பெறுவதை, வாழ்வில் அடக்கம் பெறும். கீழே பல முறைகளை எழுதியுள்ளேன். அவை யோக முறை, வாழ்வு முறை, குறிப்பிட்ட சுபாவமுள்ளவர்க்குப் பொருந்தும் முறை எனப் பிரிகின்றன. முறை எதுவானாலும், அது நமக்குப் பொருத்தமானதாக இருக்கவேண்டும். நம் சுபாவத்திற்குப் பொருத்தமானதாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட முறையைத் தேர்ந்தெடுத்தால் அது பலன் தரும். முறை முழுவதும் பொருத்தமாக அமைந்தால் பலன் 3 நாளில் உண்டு. அன்பர்கள் அனுபவத்தில் பல ஆண்டுப் பிரச்சினை சில நாட்களில் தீர்ந்ததுண்டு. சில நிமிஷங்களிலும் முடிவு தெரியும். இதற்குரிய நிபந்தனைகள்:

  • முறை பொருத்தமாக இருக்க வேண்டும்.
  • பின்பற்றுவது பூரணமாக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறையை விவரமாகப் படித்து அறிந்து, அல்லது கேட்டறிந்து மனம் தெளிவுபட்டு, தயக்கமின்றி, குதூகலமாக ஏற்க வேண்டும். அவசரமாகப் பயில ஆரம்பிப்பதைவிட மனத்தைக் கொஞ்ச காலம் கலந்து தயார் செய்து, அது தயாராகும்வரைப் பொறுத்திருக்க வேண்டும்.

  • பயில ஆரம்பித்தால் முன் வைத்த காலைப் பின்வைக்கக்கூடாது.
  • சரிவு ஏற்பட்டால், முதலிலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.
  • வெற்றி பெற்றுத் தருவது பொறுமை, நிதானம். அவை குறைவற நிறைவு பெறவேண்டும்.
  • முறையைச் சரிவரப் பின்பற்றுவது நம் உண்மை Sincerity.
  • பிரச்சினை எதுவானாலும் தீரும்.
  • பிரச்சினையற்றவர்க்கு வாய்ப்பு எழும்.
  • எழும் வாய்ப்பு அவரவர் பர்சனாலிட்டியைப் பொருத்தது.
  • பர்சனாலிட்டியின் அளவைப் பெரியதாக்கவும் முறையுண்டு. பிரச்சினை தீர்ந்தபின் முறையைத் தொடர்ந்தால் பர்சனாலிட்டி வளரும்.
  • எந்தப் பிரச்சினைக்கும் வழியுண்டு. கற்பனைக்கெட்டாததற்கும் வழியுண்டு. உயர்ந்த அம்சம் ஒன்றாவது பூரணமாக இருத்தல் அவசியம்.
  • மௌனம், சாந்தி, தூய்மை, சத்தியம், நல்லெண்ணம், திறமை போன்றவை உயர்ந்த அம்சங்கள். அவற்றுள் சிறப்பானது sincerity உண்மையாகும்.

இந்த முறைகள் அனைத்தும் ஏற்கனவே பல இடங்களில் விவரமாக எழுதப்பட்டவை என்பதால், அவற்றை இங்கு விவரிக்கவில்லை. சில குறிப்புகளை மட்டும் எழுதுகிறேன்.

1. காரியம் கூடிவரும்பொழுது மேலே போக வேண்டும். Raise the rising aspiration. காரியம் கூடிவந்தவுடன் நாம் அனைத்தையும் மறந்து காரியத்தைப் பார்க்கிறோம். அந்த நேரம் நெஞ்சு ஆர்வமாக இருப்பது தெரியும். அந்த ஆர்வம் உயரும்படி உள்ளே மனம் செயல்பட வேண்டும்.

  1. எது உனக்குச் சிறந்த முறையோ அதை அளவுகடந்து பின்பற்று.  Give the most to your best. .
  2. சைத்தியப்புருஷன் செயல்படும்படி நடப்பது சரி. இது பலிக்க சமர்ப்பணம் மறக்கக்கூடாது.
  3. மௌனம் சேர்ந்து மனம் கனத்தால், அதைப் பேச அனுமதிக்க வேண்டும்.
  4. உனக்குத் தெரிந்த அத்தனைக் கட்டுப்பாடுகளையும் (disciplines) மொத்தமாகப் பின்பற்ற வேண்டும்.
  5. கூறும் குறையை நிறைவான நினைவாக மாற்றுதல்.
  6. வெறுப்பின் பின் இறைவன் உள்ளதைக் கவனி.
  7. உள்ளம் அடங்கினால் உலகை உள்ளே நாடு.
  8. மௌனம் சிறந்து காட்சியாகும்.
  9. காட்சியைக் கருதாதே - அதை ஞானமாக அனுமதி.
  10. நீ ஜபிக்கும் மந்திரங்களின் மறைபொருளை அறிவது நல்லது.
  11. அன்னையே உன் சரணாகதியை ஏற்றபின், அடுத்தது இல்லை.
  12. அன்பரில் உள்ள அன்னைக்குச் சரணம் செய்வது.
  13. எதைச் செய்தாலும், எவரும் அதை மேலும் உயர்த்த முடியாத அளவு செய்ய வேண்டும்.
  14. உள்ளே போ; உலகம் உள்ளே தெரியும்வரை உள்ளே போ. உலகை வெளியில் காண்பதற்குப்பதிலாக, உள்ளே காண்பது உண்மையை அறிவது.
  15. எதைச் செய்தாலும் அதில் நம் நல்ல அம்சங்கள் முழுவதும் வெளிப்படும்படிச் செய்வது (to positive exhaust yourself).
  16. செயலற்றிருப்பதே சிறந்த செயல் என அறிவது.
  17. செயலின் பின்னுள்ள மௌனத்தை எட்டுவது.

  1. மௌனத்திற்குப் பின்னாலுள்ள மௌனத்தை அடைவது.
  2. எட்டுத் தலைகீழ் (reversal) மாற்றங்களை அறிவது. தோல்வியே வெற்றி; வலி ஆனந்தம்; எதிரி ஏற்றமிகு நண்பன்; அநியாயம் ஆண்டவனின் நியாயம்; நடப்பவை இறைவன் செயல் என்ற கருத்துகளை ஏற்பது.
  3. துர்அதிர்ஷ்டம், பேராபத்து கொண்டுவருபவை வாய்ப்பு என அறிந்து மகிழ்தல்.
  4. முக்கியமான சிறிய நிகழ்ச்சிகளில் சிருஷ்டிச் சிறப்பை அறிவது (small significant acts). சிறிய நிகழ்ச்சிகள் பெரிய காரியத்தைப் பூர்த்தி செய்வது உண்டு. அவை சொர்க்க வாயில். அவற்றைக் காணும் சூட்சுமம் தேவை.
  5. நீ பாடும் சிறப்பான பாட்டை மேலும் சிறப்பாகப் பாட முயலுதல்.
  6. சிறப்பாகச் செய்யும் சமையலை, மேலும் இனிப்பாக, சுவையாகச் செய்வது.
  7. மனம் எழுப்பும் தவறுகளை, தவறாது நேர்ப்படுத்துதல்.
  8. அதிகபட்சம் நல்லெண்ணத்தை உற்பத்தி செய்வது.
  9. நாட்டைப் பற்றிய உன் சிறந்த நோக்கத்தை மேலும் உயர்த்துவது.
  10. பெற்றோர் குறைகளை நம் வாழ்வில் விலக்குவது.
  11. வாழ்வைச் செயல்படச் செய்வது (Evoke a Life Response).
  12. மனம் களைத்துப்போகும்வரை The Life Divineஐப் படிப்பது.
  13. மரணபயத்தை விலக்குவது.
  14. சமர்ப்பணத்தை ஜீவனின் சிகரத்தில் ஏற்பது.
  15. எதையும் செய்ய முயல்வதைத் தவிர்ப்பது.
  16. எரிச்சலைத் தவிர்ப்பது.
  17. ஆழத்தில் ஜீவன் விழைவது கிடைக்கும்.
  18. நினைவைக் கடந்து செல்வது.
  19. ஆழ்ந்த உறுத்தலை ஆராய்ச்சியால் கரைப்பது அல்லது எரிச்சல்படாமல்இருந்து அழிப்பது.

  1. உயர்ந்த வலிமையை உயர்த்துவது.
  2. நடக்கும் என்பதால் நடத்திக் கொள்ளாதே.
  3. மனத்தை அடிமையிலிருந்து விடுதலை செய். (உ.ம்.) பணத்திற்கு அடிமையாகாதே.
  4. பிடி கொடுக்காமல் பேசுவதைத் தவிர்.
  5. வெட்கப்படக்கூடிய காரியங்கள் மீது ஆசைப்படாதே.
  6. ஆபத்தை அறைகூவி அழைக்காதே.
  7. உள்ளத்தின் உண்மையை ஓரிழை உயர்த்து.
  8. தவறு சரியென மாறும்பொழுது செய்ய மறுக்காதே. கோபம், ரௌத்திரமாகும்பொழுது தடை செய்யாதே.
  9. அனைவரும் அர்த்தமில்லாமல் போற்றுவதை நீயும் போற்றாதே.
  10. உன் சுபாவத்தைச் சுட்டிக்காட்டும் உடற்குறை சிறியதானாலும் அதை அகற்ற முயல வேண்டும்.
  11. வெட்கத்தைக் கடந்த மனநிலையை நாடு.
  12. விரயத்தை விலக்கு.
  13. அளவுகடந்த அர்த்தமற்ற விரயத்திற்கு அர்த்தம் உண்டென அறியலாம்.
  14. நமக்குள்ளத் திறமையை நாம் மறக்கும் அளவுக்குப் பாராட்டக் கூடாது.
  15. சுயநலமிக்குச் சேவை செய்யாதே.
  16. முழுச்சுயநலமிக்கு முழுமையாக ஆதரவு கொடு.
  17. பெருமை தரும் அடக்கம் பெரியது.
  18. எதைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறோமோ, அதை விட்டுக்கொடுக்க வேண்டும்.
  19. பரம எதிரியின் வாயால் நல்ல பெயர் வாங்க வேண்டும்.
  20. துரோகத்தைப் போற்று.
  21. பேயான மனிதனுக்கு அடிமையாகச் சேவகம் செய்.
  22. நல்லவரையும், பொல்லாதவரையும் சமமாக மனத்தில் பாராட்டு.

  1. நன்றியறிதல் உடல் புல்லரிக்க வேண்டும்.
  2. வளரும் ஆன்மாவை வளர்க்க முயல வேண்டும்.
  3. அவமானத்தைப் பிரியமாக ஏற்க வேண்டும்.
  4. முறையென எதையும் தேடாதே.
  5. பரபரப்பாக வேலை செய்யும்பொழுது அமைதியாக இரு.
  6. ஒரு சட்டத்தை (discipline) எடுத்துப் பூரணமாகப் பின்பற்று.
  7. சக்தி, வீர்யம், தெய்வப் பிரகிருதியைக் கடந்த சிரத்தையை (நம்பிக்கை) நாடு.
  8. வாழ்வின் அறிகுறிகள் கூறுவதைக் கவனி.
  9. தவறு எனத் தெரிந்ததைச் செய்யத் துடிக்காதே.
  10. கடந்ததை வலியுறுத்தும் பழக்கம் ஒன்றைக் கைவிடு.
  11. அபிப்பிராயம் என்பதை அழிக்க முயல வேண்டும்.
  12. சரி என பலமாக நீ அறிவதை ஆழத்திற்குக் கொண்டு போ.
  13. யாரால் உனக்கு அழிவு வருமோ அவரிடமிருந்து வரும் பெரும்பரிசை மறுத்துவிடு.
  14. பிறருக்குச் செய்த தவறுகளில் ஒன்றைப் பூரணமாகப் பாதிக்கப்பட்டவர் முழு திருப்தியடையும்வரை செய்.
  15. செல்லம் கொடுப்பதைச் செல்லமாக வளர்த்துக்கொள்.
  16. மன்னிக்க முடியாதக் குற்றத்தை ஏற்றுப் போற்று.
  17. அன்று மயங்கிய கவர்ச்சியில் ஜீவனில்லை என இன்று உணர முடியுமா?
  18. அழைப்பு ஆனந்தம் தரவேண்டும் - அது ஆன்மீக நன்றியறிதல். நினைவுக்கும் அழைப்பின் மகத்துவமுண்டு.
  19. யாருக்கு என்ன வேலை செய்தால் தடை விலகி வாயில் திறக்கும் எனப் பார். அச்செயலுக்குரிய நேரத்தைக் கண்டுபிடி.
  20. உனக்குத் தாங்காதவற்றை (sensitivity) அறிவதுபோல் வாழ்வை அறிய வேண்டும்.

  1. அழைப்பு ஆழத்தில் ஆனந்த உணர்வு கொடுப்பதைக் கவனி.
  2. எவரையும் அவருக்குத் தாங்காத இடத்தில் (sensitivity) தொடும்படிப் பேசாதே.
  3. சிறு தவறு, குறை ஏற்படாவண்ணம் 24 மணி நேரம் (3 நாள் நல்லது) போக வேண்டும்.
  4. 3 மணி நேரம் மனத்தில் ஒரு குறையும் (complaint) வாராதபடித் தடுத்து விடு.
  5. பிறர் கர்மத்திற்குக் கருவியாகக் கூடாது. 1 வாரம் அல்லது 1 மாதம் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  6. முடிவைத் திட்டவட்டமாக எடு (1 வாரம்).
  7. கடன் பெறுவதைச் சில காலம் தள்ளி வை.
  8. முனைந்து உதவி செய்யப் போவதைச் சில காலம் ஒத்திப்போடு.
  9.  என்ன விஷயம் என அறியும் ஆவலை (curiosity மறுத்துவிடு (1 மாதம்).
  10. பிறருக்கு நல்லது செய்ய நினைப்பது ஆனந்தம் தரவேண்டும்
  11. அளவுக்கு மீறிச் சாப்பிடாதே.
  12. பொங்கிவரும் சந்தோஷம் இயல்பாக வேண்டும்.
  13. கோள் சொல்லக் கூடாது.
  14. காணிக்கை.

இந்த 93 முறைகளையும் விவரித்து எழுதினால் கட்டுரை நீளும். எல்லாம் ஏற்கனவே எழுதப்பட்டவை என்பதால், கேள்வி எழும் இடங்களுக்கு மட்டும் விளக்கம் எழுதுகிறேன். மீண்டும் மையக் கருத்தைக் கூறுகிறேன். நாம் ஓரளவு அன்னையை அறிந்துள்ளோம். அவரைப் பற்றி முழுமையாக அறிவது கடினம். யோகம் பயின்றால் தெரியும். ஏதோ காரணத்தால் விவரமாகத் தெரியும் பொழுது "இவையெல்லாம் நமக்கில்லை" என மலைப்பாகத் தோன்றும். அது உண்மை இல்லை. 30 ஆண்டுகட்கு முன் கனவு காணமுடியாதவை இன்று ஏராளமான பேருக்குப் பலிக்கிறது.

அன்னையின் சிறப்பை உச்சக்கட்டத்தில் அறிந்தவர் மலைத்துப் போவதற்குப் பதிலாக அதுவும் நமக்கு முடியும் எனக் கூறும் வாயிலாக இக்கட்டுரை எழுதுகிறேன். பேராசையால் பெரிய விஷயத்தைக் கருதுபவர் வேறு. அவர் என் பிரச்சினையில்லை. நம்மைப் போன்றவர் எட்டிய பெரிய நிலையை நாமும் எட்டவேண்டும் என்பது நியாயமான எண்ணம். அதற்குரிய முயற்சி பலிக்கும் என்பதை இக்கட்டுரை கூறும். அதற்குரிய முறை எது என்ற கேள்விக்கு - எதுவும் முறை என்பது பதில்.

முறை எதுவானாலும், பூரணமாகச் செய்தால் பலிக்கும் என்பதே

                                                               கருத்து.

 

 

வாழ்வில் அனைவரும் விரும்புபவற்றை இலட்சியம் கருதி நினைக்க, பேச மனம் கூசும். இந்தியர் பணம் சம்பாதிக்க முழுவதும் விரும்பினாலும் அதை இலட்சியமாகப் பேச கூச்சப்படுகின்றனர். நான் கூறுவது வேறு. சுபிட்சம், சௌபாக்கியம், வசதி, செல்வம் (prosperity) என்பவை தெய்வ அம்சமுடையவை. நாம் அவற்றை லக்ஷ்மிகரமானவை என்கிறோம். அன்னையைப் பின்பற்றிச் சம்பாதிக்கும் செல்வம் அருட்பிரசாதம், அவரையடைய உதவும். அதற்குப் பெருமைப்படுவது ஞானம்; கூச்சப்படுவது அஞ்ஞானம். எளிய மனிதர் மனத்தில் உள்ள நேர்மையான அபிலாஷைகளைக் கீழ்க்கண்டவாறு கூறலாம். இவற்றுள் எந்த ஒரு முறையையும் (perfect) சிறப்பாகப் பின்பற்றினால் கீழேயுள்ள எண்ணங்கள் பலிக்கும். கீழே கூறியவர் பலர் கடைப்பிடித்த முறைகள் நமக்கு உதவா. அவர் எய்திய லட்சியங்களை நாம் அன்னை முறைகளால் எய்துவது யோக இலட்சியம்.

  • வர்கீஸ் குரியன் என் பால்ய நண்பன், நான் அவர்போலாக முடியுமா? குரியனுக்கும் எனக்கும் சந்தர்ப்பம் ஒன்றே. அவர் சாதித்ததை நான் சாதிக்க வேண்டும்.
  • நான் ஹோட்டல் நடத்துகிறேன். அது சரவண பவன் ஆகமுடியுமா? பம்பாயில் பியூன் மந்திரியானார். வேறொரு பியூன் உபஜனாதிபதியானார்.
  • நான் பியூன் வேலை செய்கிறேன். நான் அதுபோல் உயரவேண்டும்.

  • நானும் நாராயணமூர்த்திபோலக் கம்பெனி ஆரம்பித்தேன். அவர் சாதித்ததை நான் சாதிக்க வேண்டும்.
  • என்னுடன் படித்தவர் I.A.S ஆனார். நான் ஆக முடியுமா?
  • என்போன்றவர்போல நான் உயர முடியும் என்று படிக்கிறேன். அதை நான் சாதிக்கும் முறையை அறிய விரும்புகிறேன்.

1. காரியம் கூடிவரும்பொழுது மேலே போக வேண்டும். Raise the rising aspiration.  காரியம் கூடிவந்தவுடன் நாம் அனைத்தையும் மறந்து காரியத்தைப் பார்க்கிறோம். அந்த நேரம் நெஞ்சு ஆர்வமாக இருப்பது தெரியும். அந்த ஆர்வம் உயரும்படி உள்ளே மனம் செயல்பட வேண்டும்.

காரியம் கூடிவரும் நேரம் பெரிய நேரம். பெரிய நேரம் வந்தது பெரிய மனநிலை எழுந்ததால். பெரிய நேரம் தொடர நாம் பிரியப்படுகிறோம். அது தொடர பெரிய மனநிலைத் தொடர வேண்டும். காரியம் கூடிவரும் அதே க்ஷணம் மனம் பழைய நிலைக்குப் போகும்.

நாத்திகவாதி உள்பட காரியம் நடக்க வேண்டியபொழுது தங்கள் பழக்கங்களைக் கைவிட்டு, காரியத்திற்குரிய முறையை நாடுவது, அது நம்மை மறந்து ஆண்டவனை நம்புவது. நமக்குத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அது தெய்வ நம்பிக்கை. இது பெரிய ஆன்மீக உண்மை. பொதுவாக நாம் அறியாதது. அவனின்றி அணுவும் அசையாது என்பதை விளக்குவது இது. எதுவும் அவனிச்சையால்தான் நடக்கிறது. ஆண்டவனை நிந்திப்பவர்களும் அவனால் மட்டுமே செயல்படுகிறார்கள் என்பது உண்மை. காரியம் நடக்கும்வரை நாம் காரியத்திலிருக்கிறோம். அது முடிந்தவுடன் பழைய மனநிலைக்கு வருவோம். பழைய மனநிலையில் வாழ்வை நடத்தலாம். ஆண்டவனையடைய முடியாது. வாழ்வில் சாதனை என்பது ஆண்டவனையடைவது. வாழ்க்கையில் சாதிக்க முடியாதவன் ஆண்டவனை அடைய முடியாது; நினைக்கவும் முடியாது. அவனால் வாழ்வை மட்டுமே நினைக்க முடியும். அன்னையை அறிவது பாக்கியம் என்பதின் பொருள் அதுவே. அருகிலேயே இருந்தாலும் அறிய முடியாது.

காரியம் கூடி வருவது,

திருமணம்போல ஒரு விசேஷம் குறையின்றி நடப்பது,

திருமணம் ஆயுள் முடிய அற்புதமாக அமைவதாகும்.

காரியம் முடியும் நேரம், கடவுள் வரும் நேரம்.

காரியம் முடிந்தபின் அதே மனநிலை (concentration) இருக்க முயன்றால் அது நமக்கு மறந்துபோவதுத் தெரியும்.

2. எது உனக்குச் சிறந்த முறையோ அதை அளவுகடந்துப் பின்பற்று.

இங்கு 90க்கும் மேற்பட்ட முறைகளைக் கூறினேன். இதுபோல் மேலும் பல முறைகளை நாம் நினைவுகூர முடியும். நாம் எதிர்பார்க்கும் அளவுகடந்த பெரிய பலன்பெற ஒரு முறை போதும். அம்முறையைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதே நிபந்தனை. முறை சுத்தம் செய்வதாக இருக்கலாம். பெருக்கித் துடைப்பது நமக்குச் சுத்தம். சுத்தமான இடங்களை இன்று ஏராளமாகப் பார்க்கலாம். அந்தச் சுத்தமும் அடுத்த கட்டம் போக முடியும். தரையைச் சுத்தம் செய்வது; மேஜை, நாற்காலியைத் துடைப்பது; அவற்றிற்கு அடியில் துடைப்பது; வெள்ளையடிப்பது; சீப்பு, சோப்புப் பெட்டியைக் கழுவுவது; பல் விளக்கும் பிரஷ்ஷை சர்ஃப் போட்டு கழுவுவது என 10 முதல் 20 கட்டங்களை ஏற்படுத்தி, அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

எரிச்சல் படக்கூடாது என்பது முறையானால், எரிச்சல் மனத்திலும் எழக் கூடாது; ஒரு முறையும் உள்ளே தவறக் கூடாது.

(உ.ம்.): நம்மால் முடிந்ததை 100% செய்து முடித்தால், அன்னை செயல்படுவார்.

மனிதச் சுபாவம் சிருஷ்டியின் இரகஸ்யத்துள் ஒன்று. அடுத்தது சொரூபம். இன்று பேச்சுவழக்கில் என்னைக் கிளறாதே, என்சொரூபம் வெளிவரும்' என்று நெகட்டிவ் பொருளில் பேசுகிறோம். ஜீவாத்மா, பரமாத்மாவிலிருந்து எழுந்த ரகஸ்யம் பெரியது. அதை Theory of evolution சிருஷ்டியின் இரகஸ்யமாக பகவான் விளக்கும்பொழுது சொரூபம், சுபாவம் இரண்டின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறார். P.313 The Life Divineஇல் இதுவே சிருஷ்டியின் முழுமுறை (This is the complete process of creation) என்கிறார். அதற்குமுன் இவையிரண்டையும் குறிப்பிடுகிறார். சுபாவத்தை மாற்ற முடியாது, மாற்றக்கூடாதுஎன்று மரபு கூறும்பொழுது,

பகவான் அதை தெய்வீகச் சுபாவமாக மாற்ற வேண்டும், ஆனால் அதை எதிர்க்கக்கூடாது. அதையொட்டியே யோகம் செய்ய வேண்டும் என்கிறார். அதனால் இது பெரிய கருத்து. பெரியக் கருத்தைப் பெரியதாக அறிந்து, பெரியதாகப் பின்பற்றும் முறையை இப்படிக் கூறினேன். முறை முக்கியம். அதைவிட அதைப் பின்பற்றும் மனநிலை முக்கியம். மனநிலை சரியாக இருக்க, மனம் அதை அறிய வேண்டும். அறிவது, புரிவது; புரிவது, சாதிப்பது.

 3. சைத்தியப்புருஷன் செயல்படும்படி நடப்பது சரி.

இதை விளக்குவது எளிது. எந்த நேரமானாலும், எந்த இடமானாலும், எந்த வேலையாக இருந்தாலும், பிரச்சினை நினைவுக்கு வந்தவுடன், க்ஷணம் தாமதிக்காமல் அன்னையிடம் கூறுவதே இம்முறை. சைத்தியப்புருஷன் வெளிவர, சமர்ப்பணம் அவசியம் என்பது எளிமையான விளக்கம். சமர்ப்பணம், சரணாகதியாகும். அன்னை நினைவிருப்பதே சமர்ப்பணம் செய்ய உதவும். காரியம் என்றவுடன் காரியம் நினைவு வரும். அன்னை நினைவு வாராது என்பதேயுண்மை. பெண்கள் பலர் tour போகும்பொழுது தானும் போக நினைத்தால் உடனே அப்பெண்மணி கணவனை அனுமதி கேட்க நினைப்பாள். வீட்டிற்கு வந்து அனுமதி கேட்பாள். நண்பர்களிடம் என்கணவரைக் கேட்டுச் சொல்கிறேன் என்பாள். கணவன் அந்நிலையில் வருகிறேன்என்று தன் முடிவைக் கூறிவிட்டு, வீட்டில் மனைவியிடம் தன் முடிவைத் தெரிவிப்பான். அதே நிலையில் ஓர் அமெரிக்கப்பெண் தான் வருவதாக நண்பர்களிடையே கூறுவாள். வீட்டிற்கு வந்தால் கணவனிடம் கூறினாலும் கூறுவாள், இல்லையென்றாலும் இல்லை. அமெரிக்கப் பெண்கள் அங்கு இந்தியப் பெண்கள் கணவன் உத்தரவுத் தேவை என்று கூறுவதைக் கேட்டு வாய்விட்டுச் சிரிப்பார்கள். 1000 ஆண்டு பழக்கத்தில் இந்தியப்பெண் கணவனை அனுமதி கேட்கிறாள். சமர்ப்பணம் செய்ய 1000 ஆண்டு பழக்கம் தேவை. வேலையென வந்தால் அன்னை நினைவு வாராது. அப்படி வந்தால் சொல்லாக வரும். செயல் சொல்லுக்குப் பின்னாலுள்ள சூட்சும லோகத்தில் நடக்கிறது.

நினைத்தால் நடக்கிறது என்பது சமர்ப்பணம் நினைவுள்ளவருக்கு.

 மனம் ஓடும் எண்ணங்களால் நிரம்பியது. இதன்பின் சிந்தனையுண்டு. மனம் இதற்குப் பின்னாலுண்டு. அதன்பின் சூட்சுமமனம் உண்டு. நாம் சூட்சும மனத்தை மையமாக்கினால்தான் சமர்ப்பணம் மனத்தில் நினைவு வரும். இது யோகப் பயிற்சி. மகன் கல்லூரியிலிருக்கிறான். பார்த்தால் தேவலை போலிருக்கிறது எனில் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைவான். மகன் மனத்தின் சூட்சுமத்திலிருப்பதால் நினைத்தவுடன் நடக்கிறது. அன்னையும் வேலையும் அதுபோல் மனத்தில் தன்மைப்பெற வேண்டும். ஓரிரு நாள் பயின்றால் இதன் பெருமை, ஆழம், யோக நறுமணம் தேனருவியாய் ஜீவனில் பாய்வது தெரியும். மனம் கட்டைபோட்டதுபோல் ஜீவனற்றிருக்கும். சூட்சுமம் அன்றலர்ந்த மலராகும்.

4. மௌனம் சேர்ந்து மனம் கனத்தால், அதைப் பேச அனுமதிக்க வேண்டும்.

மௌனம் சேர்ந்தால் பேச முடியாது. பேசினால் மௌனம் கலையும். ஆனால் மௌனம் முழுவதும் சேர்ந்தால் ஜீவன் ஆழ்ந்து, அகன்று, செறிவு பெற்றுக் கனக்கும். அப்பொழுது பேசலாம். அது மௌனத்தைக் கலைக்காது. மௌனத்தின் பெருஞ்சக்தி சொல்மூலம் வெளிப்படுவது தெரியும். அடுத்த கட்டத்தில் அப்படிப் பேசுவதால் மௌனம் வளர்ந்து, மௌனத்தின் பின்னுள்ள மௌனமாகும்.

நாமே முயன்றுபெறுவது மௌனம். தானே நம்மைத் தேடிவருவது மௌனத்தின் பின்னுள்ள மௌனம். முதல் கூறியது நம்பிக்கையால் பெறுவது; அடுத்தது அருள். பேரருளில் செயல் மௌனத்தின் பின்னாலுள்ள மௌனத்திலிருந்து எழுவதைக் காணலாம். The Life Divine படித்தால் மனம் மௌனமாகும்; சாவித்ரி படித்தால் உணர்ச்சி மௌனமாகும்; சமர்ப்பணம் செய்தால் ஜீவன் மௌனமாகும். ஜீவன் மௌனமானபின் நடக்கும் வேலை நாம் செய்வதில்லை. அன்னையே எழுப்பி, அன்னையே செய்வதாகும். புதுவைக்குப் போ' என பகவான் கேட்ட குரல் அதுபோன்றது. அது குரலாகவும், எண்ணமாகவும், வேணுகானமாகவும், ஆகாச லிபி (எழுத்து)யாகவும் எழும். இது

யோகத்திற்கேயுரிய பவித்திரமான உயர்ந்த நிலை.

வாய் பேசாத மௌனம் முதல்நிலை மௌனம்.

மனம் பேசாமலிருப்பது அடுத்த நிலை.

ஜீவன் மௌனமாவது பெரியது.

ஜீவன் மௌனத்திலிருந்து செயல்படுவது நாம் அன்னைக்குக் கருவியாவது.

இந்த நிலைகளைக் கட்டம், கட்டமாக நாம் கடந்து போகும்பொழுது கை தானே எழுதும், வாய் தானே பேசும், நாம் கேட்காத கேள்விக்குப் பிறர் பதில் கூறுவர். வாழ்க்கை பதில் கூறும்வாயிலாகச் செயல்படும். நினைப்பது நடக்கும்.

நினைவே வழிபாடு;

நினைவே செயல்.

5. உனக்குத் தெரிந்த அத்தனைக் கட்டுப்பாடுகளையும் (disciplines) மொத்தமாகப் பின்பற்ற வேண்டும்.

இங்கு 93 முறைகளைக் காண்கிறோம். ஆனால் ஒருவருக்கு 8 அல்லது 10 முறை பழக்கமாக இருக்கும். அவையனைத்தையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். கணக்கெழுதுவது, சுத்தம் செய்வது, மெதுவாகப் பேசுவது, அடுக்கி வைப்பது போன்றவை நாம் பின்பற்றும் முறைகளானால், அவற்றை முழுமையாகப் பின்பற்றுவது இம்முறை. நாம் பேசுவது அடுத்தவருக்குக் கேட்டால் போதும்எனில் குரல் 20 மடங்கு குறையும். அது பலிக்க நாம் அவர் கவனத்தை ஈர்த்துப் பிறகு பேசவேண்டும். நாம் வாயால் பேசுகிறோம்; பிறர் காதால் கேட்கின்றனர். இம்முறையில் அவர் மனத்துடன் தொடர்புகொண்டு, மனம் பேசவேண்டும். மனம் மனத்தோடு பேசுவது மெதுவாகப் பேசுவது. இது போன்றவற்றைப் பின்பற்றினால் 24 மணி நேரமும் மனம் இதையே நினைத்துக் கொண்டிருக்கும். அதற்குரியது நல்லபலன். அது முறையின் சிறுபகுதி. மனம் முறையை விட்டகன்று செயல்படுவது பெரும்பலன் தரும். சுத்தம், சத்தம் இரண்டும் பயிலும்பொழுது அவை மனத்தில் இருமுறைகளாக இருக்கும். அவை இரண்டும் இணைவது சரி. நாம் பின்பற்றும் 8 அல்லது 10 முறைகளுக்கு

உள்ளே ஒரு மையம் உண்டு. அவையனைத்தும் ஒரு மையத்தில் சேர்கின்றன. அந்த மையத்திலிருந்து அமைதியாகச் செயல்படுவது உயர்ந்த முறை.

6. கூறும் குறையை நிறைவான நினைவாக மாற்றுதல்.

ஒருவர் மீது குறை மனத்தில் எழுகிறது. இவரை நம்ப முடியாதுஎன நினைக்கிறோம். மனம் அதையே 10 நிமிஷம் கருதும். அத்துடன் வேறு வேலைக்குப் போகிறோம். அதற்குப் பதிலாகச் சற்று பாஸிட்டிவாக நினைத்துப் பார்த்தால், அவர் எந்த விஷயங்களில் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நம்மிடம், பிறரிடம் நடந்து கொண்டார் என்ற நினைவு வரும். குறையைப் புறக்கணித்து, இந்த நிறைவைப் பாராட்டலாம். அடுத்த நிலையும் உண்டு. அவர் நம்மிடம் நம்பிக்கைக் குறைவாக நடப்பது நம்முள் உள்ள நம்பிக்கைக் குறைவின் பிரதிபலிப்புஎன ஏற்க வேண்டும். அது நிறைவு.

மேட்டிலிருந்து தண்ணீர் பள்ளத்திற்குப் போவதுபோல் மனம் குறை கூறும். குறைஎனில் நாம் பிறரை நினைப்பது. ஒருவரை நினைக்கும் பொழுது அவர் மோட்டர்பைக் நினைவு வரும்; அல்லது அவர் பச்சை சட்டை நினைவு வரும்; அவர் சிரிப்பு நினைவு வரும். நம்மை எது தொட்டதோ அது நினைவு வரும். நமக்கு எது முக்கியமோ அதைப் பிறரில் காண்கிறோம். குறை கூறுகிறோம் எனில் நம்முள் குறை மட்டும் இருக்கிறது. அது பிறர் குறையைக் காண்கிறது. இதையறிவதே இம்முறையின் முக்கியத்துவம். தகப்பனார் பெண்ணைப் பார்த்து, "ஏம்மா, கண்ணனையே கட்டிக்கொள்வேன்என நிற்கிறாய். அப்படி என்ன அவனிடமிருக்கிறது'' எனக் கேட்கிறார். "அவனிடம் ஒரு ஸ்கூட்டர் இருக்கிறது'' என்கிறாள் மகள். இது ஆனந்தவிகடனில் அட்டைப்படமாக ஸ்கூட்டர் வந்த புதிதில் வந்தது. அவள் கண்ணுக்குத் தெரிவது ஸ்கூட்டர். குறை சொல்பவர் கண்ணுக்குத் தெரிவது குறை.

7. வெறுப்பின்பின் இறைவன் உள்ளதைக் கவனி.

வெறுப்பு அன்பின் தலைகீழ் உருவம் என்பது தத்துவம். அன்பு

மேலுலகினின்று பொய்யான நம் உலகுக்கு வந்ததால் வெறுப்பாகத் தெரிகிறது. வெறுப்பு வெறுப்பன்று, அன்பேயாகும். நம் மனத்தில் வெறுப்பு இல்லாவிட்டால் நமக்கு வெளியில் வெறுப்புத் தெரியாது. சர்வம் பிரம்மம் எனில் வெறுப்பும் பிரம்மம். பிரம்மம் வெறுப்பின்பின் உள்ளது; அதனுள் கருவாக இருக்கிறது எனலாம். வெறுப்பே பிரம்மம் எனவும் கூறலாம். இது தத்துவம். நடைமுறையில் மூன்று நிலைகள்: (1) அறிவது, (2) உணர்வது, (3) உணர்வது செயல் இனிப்பது. கிருஷ்ண பரமாத்மாவின் உபதேசப்படி அர்ஜூனன் சண்டையிட்டான். பீஷ்மரையும் தாக்கினான். ஆனால் அபிமன்யூ இறந்தபொழுது அவனுக்குத் தாங்கவில்லை. கிருஷ்ண பரமாத்மா தெய்வீக மனத்தைச் சார்ந்தவர் என்பதால் அவரால் அறிவையும், உணர்வையும் தர முடிந்தது. உடலை கிருஷ்ணனுடைய சக்தி தொடமுடியாது. சத்தியஜீவியம் தொடும். அது யோகத்தின் முடிவான நிலை. அந்த நிலையில் வெறுப்பால் செய்யும் காரியங்கள் உடல் இனிக்கும்; அன்பாகத் தெரியும்.

8. உள்ளம் அடங்கினால் உலகை உள்ளே நாடு. 15. உள்ளே போ. உலகம் உள்ளே தெரியும்வரை உள்ளே போ. உலகை வெளியில் காண்பதற்குப் பதிலாக உள்ளே காண்பது உண்மையை அறிவது.

இவை பெரிய யோகப் பயிற்சிகள். பொதுவாக மனம் அடங்கவில்லை, உள்ளே போக முடியவில்லை என்பார்கள். ஆனால் பக்குவமுள்ளவர் பலர் என்பதால், அவர்கட்கு இது பலிக்கும். பலிப்பது பெரியது. ஒருவருக்கு இது பலித்தால், இதன் மூலம் எதுவும் பலிக்கும். பெரியது, சாமானியர்கட்கு இல்லை என்பது உண்மை. சாமானியர்கட்குப் பெரியது பலிப்பது அன்னையிடம் பலரும் கண்டது.

புறம் உலகம்; அகம் மனம். அகமே புறம். புறத்தில் பல ஆண்டுகளில் நடப்பது அகத்தில் சில நாட்களில் நடக்கும். இதன் உச்சகட்டம் புறம் அகமானால் யுகம் க்ஷணமாகும். அகத்தில் ஜகத்தைக் காணலாம். அதற்கு மனம் அடங்கி, சலனமிழந்து, மௌனம் சிறந்து, அதன் பின்னுள்ள மௌனம் வெளிப்பட்டு, அதிலிருந்து செயல் எழுந்துப்

புறத்தை அடைய வேண்டும். இது பிரபஞ்ச வாழ்வில் ஒரு மைல்களில். இதுவரை ஜடம் உலகை ஆண்டது. இனி ஆத்மா ஜடமான உலகை ஆளும். ஒரு யோகி நாற்காலியில் உட்கார்ந்தபடி உலகில் எந்த இடத்திற்கும் தம் சக்தியை அனுப்பலாம் என்றார் பகவான். அதுபோல் அவர் உலக யுத்தத்தை வென்றார்.

  1. மௌனம் சிறந்து காட்சியாகும்.

உணர்ச்சியால் காட்சி பெறுபவர் அநேகர். அவர்கட்கு அக்காட்சி பலிக்கும். மனம் உணர்ச்சியைக் கடந்தது. முனிவர் மனத்தின் மௌனம் மனத்தையும் கடந்தது. காட்சி ரிஷியைச் சேர்ந்தது. ஓர் ஆபீசில் கிளார்க் மூலம் ஒரு காரியத்தை நிறைவேற்றுவதற்கும், ஆபீசர்மூலம் நிறைவேற்றுவதற்கும் உள்ள வித்தியாசம், இந்த இரண்டு காட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம். மனம் மௌனமாகும்பொழுது சில சமயம் தானே கலையும். சில சமயம் உயரும். உயரும்பொழுது நாம் அதைக் கலைக்காமருந்தால் அது காட்சியாக மாறும்.

யோகி - ஞானம் பெற்றவர். ரிஷி - மௌனம் சிறந்து எழும் காட்சி முனிவர் - மௌனத்திற்குரியவர். மனிதன் - சிந்தனைக்குரிய மனம் உடையவன். உணர்ச்சி - பெரும்பாலோர் காணும் காட்சி.

தியானத்தில் மனம் அமைதிப்படுபவருக்கு உரிய பயிற்சி முறையிது. யார் எதை நாடுகிறார்களோ அவர்கட்கு இறைவன் அதாக இருந்து மறைகிறான் என்பது பகவான் சொல். சச்சிதானந்தம் சத் பிரம்மம், சித் பிரம்மம், ஆனந்த பிரம்மமானால், மனிதன் ஜடப் பிரம்மம், பிராணப் பிரம்மம், மனோ பிரம்மம் என்பது தத்துவம்.

  • சத்திலிருந்து ஜடம் வரை அனைத்தும் பிரம்மமே.
  • உருவமும், தோற்றமும் வேறு; உள்ளுறை ஜீவன் ஒன்றே.

மௌனம் காட்சியை நாடுபவர்க்குக் காட்சியாகிறது. அதே மௌனம்

ஞானத்தை நாடுபவர்க்கு ஞானமாகும். பிரம்மத்தை நாடினால் மௌனம், மௌனப் பிரம்மமாகும்.

10. காட்சியைக் கருதாதே - அதை ஞானமாக அனுமதி.

நமக்கு எட்டாதவை தோன்றுவதுண்டு. நாம் ஆசைப்படுவது வேறு, தானே தோன்றுவது வேறு. தானே தோன்றுவது ஞானம் (intution). அவை பிறகு பெரியதாகும், தடையின்றி வளரும். தானே தோன்றும்பொழுது மனத்தின் அமைதி இது ஞானமா, ஆசையாஎனக் கூறும். ஞானம் யோகிக்குரியது. யோகி ரிஷியைக் கடந்தவர். காட்சி பலிக்கும்பொழுது, அது பெரியதானால் காட்சியோடு நின்றுவிடும். அதைக் கருதாது அமைதியாக இருந்தால், காட்சி முதிர்ச்சியடைந்து ஞானம் உதயமாகும். ஞானம் வாழ்வில் உதயமாவது அதிர்ஷ்டத்தின் எல்லைக்கு வருவதாகும். காட்சி பெரியதாகத் தோன்றினால் காட்சியுண்டு.

அதை முடிவாகக் கருதாவிட்டால் அது ஞானமாகும்.

அதையும் முடிவாகக் கருதாவிட்டால் அதுவே சத்தியஜீவியமாகும்;

சச்சிதானந்தமுமாகும்.

11. நீ ஜபிக்கும் மந்திரங்களின் மறைபொருளை அறிவது நல்லது.

பக்தர்கள் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் எழுதிய பல மந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். அதற்குப் பலன் உண்டு. புரியாத விஷயத்தை இது என்ன மந்திரமாக இருக்கிறது?' என்போம். மந்திரம் என்றால் புரியாதது. அதனால் அதை மறை' என்றனர். இந்த மந்திரங்களுக்கெல்லாம் உரிய அர்த்தம் விளக்கமாக அன்னை எழுதியவற்றுள் உள்ளன. மந்திரத்தின் உட்பொருளை அறிந்து, உணர்ந்து, ஜபித்தால், மந்திரத்தை எழுதியவர் பெற்ற பலன் பெறலாம். இவை பகவான், அன்னை எழுதியவை. ஞானம் சித்தியாகித் தானே சொல்லாக வெளிவருவது மந்திரம்.

மந்திரம் சக்திவாய்ந்த சொல்.

அதன் அர்த்தம் அச்சக்தியைப் பெற்றுத்தரும்.

ஒரு ரிஷிக்கு சித்தி கிடைத்து, சித்தி சொல்லாக மாறி எழுவது மந்திரம் எனப்படும்.

அதன் முழுப்பலன் அவருக்குண்டு.

அவரை ஏற்கும் அளவுக்கு அம்மந்திரம் பிறருக்குப் பலிக்கும்.

அன்னை கூறும் முறை:

உள்ளே போய், தன்னையிழந்து, இழந்த நிலையினின்று தெளிவு பெற்று, பெற்ற நிலை செறிந்து நிறைந்த நேரம் எழும் சொல் நமக்குரிய மந்திரம்.

அப்படி அன்னை பெற்ற மந்திரத்தை என் மந்திரம்' என்கிறார்.

ஓர் அன்பர் அதுபோல் பெற்றது 'Divine Mother,Sri Aurobindo'.

வாழ்நாளில் அம்மந்திரம் அவருக்குத் தவறியதில்லை.

12. அன்னையே உன் சரணாகதியை ஏற்றபின், அடுத்தது இல்லை.

இந்த யோகம் மனிதனுக்கில்லை. அவன் பங்கு சரணாகதி. யோகம் இறைவனுக்கு என்றார் பகவான். சரணாகதி கீதை கூறுவது. அது ஆத்மா சரணடைவது. மோட்சம் கிட்டும். பகவான் கூறும் சரணாகதி வளரும் ஆன்மாவையும், நம் சுபாவத்தையும் சரணடைவது.

குடும்பத்தைத் துறந்து மேற்கொள்வது சன்னியாசம். அது பெரியது. தன் சொத்து முழுவதையும் கொடுத்து, குடும்பத்தையும் துறந்து ஏற்பது யோகம்.

ஆத்மாவைச் சரணடைவதற்கும், சொத்தையும் ஆத்மாவையும் சரணடைவதற்கும் இந்த வித்தியாசம் உண்டு.

இதற்கும் அடுத்த கட்டம் சுபாவத்தைச் சரணம் செய்வது.

சரணாகதி என்ற சொல் நம் பரம்பரையாக வந்தது என்பதால் நாம் பகவான் கூறும் சரணாகதியை அப்படி எடுத்துக் கொள்கிறோம். அது இல்லை.

ஆத்மாவை அறிந்தவன் ஜீவன் முக்தன்.

அதைப் பரம்பரையாக ஜீவாத்மா என்கிறோம்.

வளரும் ஆன்மாஎன்பது மனத்திலும், உணர்விலும், உடலும் வெளிப்படும் ஆன்மா.

மனம் அமைதியானால் வெளிப்படுவது ஆன்மா.

மனத்தில் சொல்லெழுந்தால் அமைதி கலையும், ஆன்மா மறையும்.

சொல் சிறப்பாக எழும்பொழுது ஆன்மா சொல்லைத் தாங்கி வருகிறது.

கவிகட்கும், மேதைகட்கும் அது வெளிப்படும்.

சொல்லை மனம் சொல்வதற்குப் பதிலாக மனத்தின் ஆன்மா சொல்வது மேதையின் சொல்லாகும்.

மேதையின் சொல்லைச் சொல்வது மனத்தில் வளரும் ஆன்மா.

மாவீரனின் செயலைச் செய்வது உயிரில் வளரும் ஆன்மா.

செயலையும், சொல்லையும், உணர்வையும் இறைவனின் ஸ்பர்சமாக உடல் ஏற்றுப் புல்லரிப்பது உடல் வெளிப்படும் வளரும் ஆன்மா.

சுபாவம் சரணடையாவிட்டால் சுபாவம் வெளிப்படும். மனத்தில் சுபாவம் வெளிப்பட்டால் மௌனம் கலையும்; சொல் எழும்.

உணர்வில் சுபாவம் வெளிப்பட்டால் கோபம், பயம் எழும்.

உடல் சுபாவம் வெளிப்பட்டால் உடல் ஜடமாக இருக்கும்; புல்லரிக்காது.

நம் சரணாகதியை அன்னை ஏற்பது எனில் மனத்திலும், உணர்விலும், உடலும் சைத்தியப்புருஷன்எனும் வளரும்ஆன்மா செயல்பட வேண்டும்.

அதைக் கடந்த மனிதநிலை வாழ்வில் இல்லை.

சரணாகதியை அன்னை ஏற்றபின் உனக்கு வேறென்ன வேண்டும் என்று பகவான் கேட்கிறார்.

சரணாகதி சமர்ப்பணம் பூர்த்தியாகும் நிலை.

பிரச்சினைத் தீர அன்னையிடம் கூறுவது சமர்ப்பணம்.

கூறினால் பிரச்சினை தீர்ந்துவிடும்.

யோகம் செய்ய அந்தச் சமர்ப்பணம் போதாது.

ஜீவனையும், சுபாவத்தையும் சரணம் செய்ய வேண்டும்.

சரணாகதியை அன்னை ஏற்றதற்கு அடையாளம் மனம் மௌனத்தால் சிறந்து, உணர்வு ஆனந்தமடைந்து, உடல் புல்லரிப்பதாகும்.

பக்குவமான பக்தருக்கு இதுவும் பலிக்கும்.

இது யோக முறை, சிறந்த முறை.

13. அன்பரில் உள்ள அன்னைக்குச் சரணம் செய்வது.

மனிதன் என்பவன் அகந்தையாலானவன். நாம் டெல்லியில் குடியிருந்தாலோ, அமெரிக்காவிலிருப்பதாலோ, தமிழ் மறந்து போவதில்லை. இங்கிலீஷில் பேசினாலும் சிந்தனை தமிழில்தானிருக்கும். 12 x 8 = 96 என்பதை மனம் தமிழில்தான் சொல்லும். தமிழ் பிறந்த பிறகு கற்றது. அகந்தை ஏற்பட்டதால்தான் பிறந்தோம். அகந்தை இல்லாவிட்டால், பிறப்பில்லை. நான் சமர்ப்பணம் செய்வதால், சரணம் செய்வதால் பெரியவன் என நினைப்பது அகந்தை. அது அடுத்தவர்க்குச் சரணம் செய்ய அனுமதிக்காது. அன்னையிடம் உள்ள பணிவு அன்பரிடம் கர்வமாக மாறும். எல்லா ஜீவாத்மாக்களும் என்னுள் இருக்கின்றன, நான் அவர்கள் அனைவர் உள்ளும் இருக்கிறேன் என்பது உபநிஷதம். அன்பரில் உள்ள அன்னைக்குச் சரணம் செய்தால், அந்தத் தத்துவத்தை ஏற்பதாகும். அது ரிஷிகள் நிலை. சிவபெருமான் சண்டாளனாக வந்தபொழுது சங்கரர் சண்டாளனைக் கண்டார். நம்மால் அன்பரில் அன்னையைக் காண முடியுமா?

பல சமயங்களில் புதிதாக ஓர் அன்பரைக் கண்டால், அன்னையைக் கண்டதுபோல் மனம் நெகிழ்கிறது. அது அப்படிப்பட்டத் தருணம்.

  • எவர் சொல்வதும் அன்னை பேசுவதாகும் என்பது பலிப்பதைக் காண்கிறோம்.
  • எவருக்குத் தவறு செய்தாலும் அன்னைக்குத் தவறு செய்ததாகும் என்பது மனிதருள் அன்னையைக் காண்பதாகும். காண்பது பல நிலைகளில் உள்ளது:
  • மனம் காண்பது உருவம்.

உணர்வு காண்பது குணம்.

உடல் அறிவது செயல்.

ஆத்மா விழிப்பற்ற நிலையிலிருப்பதால் காண்பதில்லை.

அது விழிப்புற்றுக் கண்டால் ஜோதியைக் காணும்.

அன்னைபக்தி அன்பரில் அன்னையைக் காணும்.

நமக்கு அன்பர் அன்னையாகத் தெரியவில்லை, அன்பராகவே தெரிகிறார் என்றால், அவர் கூறுவதை அன்னை கூறுவதாக ஏற்றுச் செயல்பட்டால், அவர் சொல் அன்னைசொல்போல் பலிப்பதைக் காணலாம்.

  • அன்பரில் அன்னையைக் கண்டால்

அடுத்த கட்டத்தில் அனைத்திலும் அன்னையைக் காணலாம்.

அது அலிப்பூரில் பகவான் பெற்ற தரிசனம் தரும்.

அவர் பெற்றது நாராயண தரிசனம்.

நாம் பெறுவது ஸ்ரீ அரவிந்த தரிசனம்.

அன்பர் நெஞ்சில் அன்னை தெரிவது சூட்சுமத் தரிசனம்.

அது தெரிந்த பிறகு நமது திட்டங்கள் மறந்து போகும்.

மறந்து போனவை கேட்காமல், நினைக்காமல் பலிக்கும்.

பலித்தபின் திட்டம் பலித்த உணர்விருக்காது.

அன்னை பலித்த நெகிழ்வு இருக்கும்.

அன்னையைக் கண்டபின் அடுத்தது நினைவு வாராது.

அது பெரிய நிலை.

அந்நிலையில் அனைத்தும் அழகாகத் தெரியும்; விகாரமும், கோரமும் வினோதமான அழகு; அவை அழகின் சிறந்த அம்சம் எனத் தெரியும்.

14. எதைச் செய்தாலும் எவரும் அதை மேலும் உயர்த்த முடியாத அளவு செய்ய வேண்டும்.

கேட்க மேலே ஒருவர் இல்லையெனில், நாம் வேலை செய்ய சோம்பேறித் தனப்படுவோம். முடிந்தவரை வேலையைத் தட்டிக்கழிப்போம். இது சுபாவம்.

  • என்னால் முடிந்தவரை செய்தேன்.
  • இதைவிட என்ன செய்வது?
  • இதற்குமேல் யார் செய்ய முடியும்? யாராவது இதற்குமேல் செய்ததுண்டா?
  • இதற்குமேல் என்னைச் செய்யச் சொல்லி வற்புறுத்தாதே, என்று நாம் கேள்விப்படுகிறோம். இவர்கள் எவரும் 20%க்குமேல் வேலை செய்வதில்லை. தினமும் 4, 5 கடிதம் வந்தால், அதற்கு 4, 5 நாட்கள் பதில் எழுதாமலிருப்பது தவறு; 30 நாட்கள் தாமதம் மன்னிக்க முடியாது. 3 மாதங்கள் தாமதம் செய்பவர் தம்மை முதல் தரமான ஊழியர்என வர்ணிக்கிறார். இவர்கள் என்கணக்கில் வரமாட்டார்கள்.
  • மேற்பார்வையின்றித் தானே தன் வேலையைச் செய்பவனே ஊழியன். 100 பேர் உள்ள ஸ்தாபனத்தில் அப்படிப்பட்டவர் 3, 4 பேரே இருப்பார்கள். அவர்கள் வேலையை 70, 80% செய்வார்கள். 100% செய்பவரிருக்க மாட்டார்கள். 100% வேலையைச் செய்பவர் வேலையும் தரத்தால் 50 அல்லது 60% தானிருக்கும்.
  • மேற்பார்வைக்குட்பட்டுச் செய்யும் வேலைக்கு அன்னை பலன் வாராது; சம்பளம் வரும். செய்யும் வேலை IAS ஆபீசர் வேலையாகவோ, சமையல் வேலையாகவோ, எந்த வேலையாகவுமிருக்கலாம். அது,
  • அளவிலும்,

  • தரத்திலும் முழுமையாக இருக்க வேண்டும்.
  • முழுமையிலும் இரு வகைகளுண்டு.
  • இதற்கு மேல் செய்ய உடலில் தெம்போ, மனத்தில் அறிவோ இல்லை என்பது நம் திறன் செலவாகிவிட்டதுஎனப் பொருள்.

மனிதன் முடியுமிடத்தில் அன்னை செயல்படுவார்.

பாஸ் பண்ண முடியாது என்று வந்த பையன் அதுபோல் வேலை செய்து முதல் மார்க் வாங்கினான்.

அது குறைந்தபட்சம்.

  • அதிகபட்சம் ஒன்றுண்டு.

முனைந்தால் முடியாததில்லை என்பது அதற்குரிய சட்டம்.

எதை எதைச் செய்ய முடியுமோ, அவற்றுள் எது நமக்கு இப்பொழுது தெரியாதோ, அதைக் கற்க முயன்று, கற்று, வெற்றிகரமாகச் செய்தால், (No one can improve it) இதை யாரும் மேலும் உயர்த்த முடியாது என்பதுபோல் முடியும்.

அவர்கட்குப் பலன் அவர்கள் தொழில் வாராது.

அவர்கள் எந்தத் தொழில் முன்னேற முடியுமோ, அத்தொழிலுக்கு அவர்கள் வந்து, தொடர்ந்த முன்னேற்றம் பெறுவர்.

செய்வன திருந்தச் செய் என்பதை இது விளக்கும்.

  • நமக்கு அதிகபட்சம், வேலைக்குக் குறைந்தபட்சம்.

வேலைக்கு அதிகபட்சம், வாழ்வுக்குக் குறைந்தபட்சம்.

 

வாழ்வுக்கு அதிகபட்சம், அன்னைக்குக் குறைந்தபட்சம்.

அன்னையின் அதிகபட்சம் இரு வகைகள்:

(1) நாம் பெறக்கூடிய அதிகபட்சம்.

(2) அன்னை கொடுக்கக்கூடிய அதிகபட்சம்.

16. எதைச் செய்தாலும் அதில் நம் நல்ல அம்சங்கள் முழுவதும் வெளிப்படும்படிச் செய்வது (to positively exhaust yourself).

வேலையைக் கடமையாகச் செய்யலாம்.

அதையே தலையாய கடனாக ஏற்றுச் செய்யலாம்.

ஆர்வமாக வேலையை ஏற்று, அற்புதமாகப் பூர்த்தி செய்யலாம்.

 

நாம் செய்யும் வேலை நம் ஸ்தாபனத்திற்கு நல்ல பலன் தரவேண்டும் என்று நினைத்துச் செய்யலாம்.

நமது நல்லெண்ணம் ஸ்தாபனத்திற்குப் பலிக்கும்படியும், வேலைக்குப் பலிக்கும்படியும், அன்னைக்குத் திருப்தி ஏற்படும்படியும் செய்யலாம்.

(Thoughtfulness) யோசனையாக வேலையை ஏற்றுப் பொறுப்பாகச் செய்யலாம்.

(Resourcefulness) இந்த வேலையை எவ்வளவு சாதுர்யமாகவும், சாமர்த்தியமாகவும் செய்ய முடியுமோ அப்படிச் செய்யலாம்.

நமக்குத் திறமை, பொறுப்பு, ஆர்வம், நல்லெண்ணம், தீவிர யோசனை, சாமர்த்தியம், சாதுர்யம், சமயோசிதம் எனப் பல நல்ல அம்சங்கள் உள்ளன. இதுபோன்ற நல்ல அம்சங்கள் முழுவதும் செயல்படும்படி வேலையைச் செய்தால், அங்கு அன்னை நிதர்சனமாவார்.

  • பசுமைப்புரட்சி என்பது உலகில் முதல் இந்தியாவில் ஏற்பட்டது.

நாடு உணவு உற்பத்தியைத் தானே செய்ய வேண்டும் என எவரும்

அதுவரை கூறவில்லை.

அந்தக் கருத்தை முன்வைக்க சுப்ரமணியம் முன்வந்தார்.

உணவு தானியம் விலை குறையக்கூடாது என்று நினைக்க எவருக்கும் தோன்றவில்லை.

அதையும் அவர் செய்தார்.

உரம், விதை, பூச்சிமருந்து ஆகியத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முனைந்தார்.

அதுவரை ராஜேந்திரப் பிரசாத், ராஜாஜி, ஜகஜீவன்ராம் உணவு

மந்திரியாக இருந்தனர். இவை அவர்களெல்லாம் செய்யாதன.

கடமைஎனக் கருதினால், இவை கடமையாகா.

அறிவு, ஆர்வம், தேசபக்தி, பொறுப்பு, முன்யோசனை ஆகியவை

வெளிப்பட சுப்ரமணியம் செய்தது பசுமைப்புரட்சி.

  • குரியன் அதே போன்ற வேலையை மந்திரி பதவியின்றி, ஒரு

இன்ஜினீயராக இருந்து செய்தார்.

ஆனந்த் வெற்றி பெற்றது.

அவருக்கு வெளியில் 5 இலட்சம் ரூபாய் மாதச் சம்பளம் பெறும் நிலையிலிருந்த பொழுது, தியாக மனப்பான்மையால் 5 ஆயிரம் ரூபாய் பெற்றுச் சேவை செய்தார்.

இன்று அவர் 168 விருதுகள் பெற்றுள்ளார்.

உலகப் பிரசித்தி பெற்றார்.

இதைச் செய்யும் பொழுது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொது மக்கள் எதிர்ப்பை ஏற்றுச் செய்தார்.

மேற்சொன்னக் கருத்தை இது போன்ற விஷயங்கள் விளக்கும்.

நல்ல அம்சங்கள் ஏராளம்.

அவற்றின் எல்லைக்கு அளவில்லை.

அவை தீரும்படி வேலை செய்யப் பரந்த மனம் தேவை.

அதைப் பூர்த்தி செய்ய ஆர்வம் மிகுந்த உறுதி தேவை.

தளராத நெஞ்சம் தாராளமாகத் தேவை.

அவை மனிதச் சுபாவத்தின் எல்லைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

எல்லையைக் கடந்தால் தெய்வ தரிசனம் உண்டு.

செய்யும் செயலைவிடச் செய்யும் மனப்பான்மை முக்கியம்.

நல்ல அம்சம் தீர்ந்தால், தெய்வ அம்சம் செயல்படும்.



book | by Dr. Radut