Skip to Content

03. பகவான் ஸ்ரீ அரவிந்தரின் யோக வாழ்வில்

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் என்று நாம் இன்றறிவது 4 வீடுகளைச் சேர்த்து ஒன்றாக்கப்பட்ட இடம். மேல் பக்கத்தில் லைப்ரரி வீடும், கீழ்ப்குதியில் தியான வீடும் அமைந்துள்ளன. 1927இல் பகவான் தியான வீட்டின் மாடிக்கு வந்து சேர்ந்தார். கடைசிவரை அங்கேயே தங்கியிருந்தார். 1938இல் அவர் இடறி விழுந்து வலக்கால் தொடை எலும்பு முறிந்தது. அதன் பின் 12 பேர்களும், டாக்டர்களும், மற்றவர்களும், பகவானுக்கு மருத்துவம் செய்யவும், துணை செய்யவும் வந்தனர். அதுவரை தம் காரியங்களை, பகவான் தாமே செய்து கொள்வார். பிறரை அனுமதிப்பதில்லை. அமிர்தா என்ற சாதகர் பகவானுக்குப் புத்தகங்கள் எடுத்துப் போனபொழுது, "ஏன் எனக்கு வயதாகவில்லையே, நானே வந்து எடுத்துக் கொள்வேன் அல்லவா? உங்களுக்கேன் இந்த வேலை?'' என்று வினவினார். படுக்கப் போகுமுன் அறையின் நான்கு மூலைகளிலும் mosquito coils கொசு மருந்துவத்தியைத் தானே கொளுத்தி வைப்பார். தினமும் 7 மணி அவர் நடக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னபொழுது, தன் அறையில் கீழ்ப்பகுதியிலிருந்து garage கார் விடும் இடத்தின் மேற்பகுதி வரைக்கும் தினமும் நடப்பார். நான்கு இடங்களில் கடிகாரம் வைத்திருந்தார், அவர் நடக்கும் பாதையில். அவற்றிற்கு தாமே தினமும் சாவி கொடுப்பார். இரவு வெகுநேரம்வரை வேலை செய்வார். மேஜையின் எதிரே உட்கார்ந்து, பகவான் எழுதும் படம் ஒன்றுண்டு. அதில் அவர் கையெழுத்திட்டு உள்ளார். அவர் அறையில் கிழக்குப் பகுதியில் உள்ள நாற்காலி மேஜையில்தான் அவர் எழுதுவது வழக்கம். அவர் இங்கிலாந்தில் பயின்றவர். தரையில் சம்மணம் போட்டு பகவான் உட்கார்ந்ததேயில்லை என அன்னை கூறியிருக்கிறார். அவர் எழுதும்பொழுது அவரை விவரிக்கும் நிகழ்ச்சிகள் இரண்டு நாம் எதிர்பாராதன:-

 1. கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டு காலை நீட்டிப் போட்டுக் கொண்டு மடியில் அட்டையை வைத்து எழுதும் பழக்கம் உண்டு. அது சமயம் அன்னை இளநீர் கொண்டு வந்தால், அவர் அதை வாங்கிச் சாப்பிட்டுவிட்டுத் தொடர்ந்து எழுதுவது கண்கொள்ளாக் காட்சி என ஒரு சாதகர் கூறுகிறார்.
 2. இரவு நெடுநேரம்வரை நாற்காலியின் கையை மேஜையாகப் பயன்படுத்தி பகவான் எழுதுவதுண்டு என்பார் இன்னொருவர். 

அமெரிக்காவில் ஹார்வேர்ட், பிரௌன், யேல், ஸ்டான்போர்ட், பெர்க்லீ பல்கலைக்கழகங்கள் முதன்மையானவை. அமெரிக்காவில் படித்தவர்க்கே அங்குள்ள பழக்கங்கள் புரியும். நம்மால் அவற்றை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. பலவற்றை கற்பனை செய்யவும் முடியாது. ஒரு பிரபல பல்கலைக்கழகத்தில் ஸ்ரீ அரவிந்தர் நூலை பாடமாக எடுத்துக் கொண்டபொழுது பேராசிரியர் மாணவர்களிடையே பெரும் மாற்றத்தைக் கண்டார். அவர் கண்டது,

பாடம் நகர்ந்து ஸ்ரீ அரவிந்தருக்கு வரும் பொழுது வகுப்பறையில் அமைதி, மௌனம் ஏற்பட்டு, அங்கு இருக்கும் படபடப்பு, சுறுசுறுப்பு, கிளுகிளுப்பு மறையும். குறிப்பெடுக்கும் மாணவர்களால் தொடர்ந்து எழுத முடியவில்லை. அடுத்த மாணவனுடன் பேச முடிவதில்லை, கிண்டல் செய்ய முடிவதில்லை, தங்களையும், தங்கள் நிலையையும் மறந்து, மெய் மறந்த நிலையில் பாடத்தை உற்றுக் கேட்கிறார்கள். இது அமெரிக்க வகுப்புகளில் காணாத ஒரு பழக்கம். தங்கள் வாழ்வு காத்துக் கொண்டிருந்த நேரம் வந்ததுபோலவும், புதிய சகாப்தம் தங்களுக்கு உதயமாவது போலவும் வகுப்பிருக்கும். ஸ்ரீ அரவிந்தர் வாக்கியம் ஒன்றைப் படித்தால் வகுப்பில் இம்மாற்றம் உடன் தோன்றும்.

சத்திய ஜீவியம் Supermind என்பது each in all, all in each நாம் அனைவருடைய பகுதி, அனைவரும் நம் ஜீவனின் பகுதி என்ற தத்துவம். அலிப்பூர் ஜெயிலில் பகவான் கைதிகளையும், வழக்கில் வக்கீல், ஜட்ஜ் ஆகியவரை நாராயணனாகக் கண்டது என்ன சித்தி என்று அன்னையை ஒரு சாதகர் கேட்கிறார்.

அது சத்திய ஜீவிய ஆன்மீக அனுபவம்

என்ற பதில் கூறுகிறார் அன்னை. அந்த ஆன்மிக அனுபவம் அதற்கு முன் எவரும் பெற்றதாகத் தெரியவில்லை. சத்திய ஜீவியம் என்பது சச்சிதானந்தத்தின் முந்தைய நிலை. சச்சிதானந்தம் துரிய நிலை (4ஆம் நிலை) எனப்படும். சத்திய ஜீவியத்தை, விஞ்ஞானம், சுஷுப்தி என்றும் கூறுவார்கள். இராமலிங்க சுவாமி பாடலை மொழிபெயர்த்து அன்னையிடம் கேட்டபொழுது, இவர் சத்திய ஜீவியத்தைப் பெற்றுள்ளார் என அன்னை கூறினார். அநேகம் பேர் அந்த நிலையை எய்தியதாக, பகவானும், அன்னையும் கூறியுள்ளனர். கலெக்டர், முதன் மந்திரி, போன்றவர்களைப் போய்ப்பார்க்க சிலரால்தான் முடியும். ஆன்மீக அனுபவம் என்பது நிஷ்டையில் நம் ஆன்மாவின் நிலையை உயர்த்தி மேலே சென்று பெரிய நிலைகளைத் தொடுவதாகும். அது தொட்டவருக்குப் பலன் தரும். அப்பலனை உலகுக்குக் கொண்டு வரும் திறன் அவருக்கில்லை. அது முதன் மந்திரியை நம் ஸ்தாபனத்திற்கு வேலை செய்ய அழைத்து வருவதாகும். பகவான் சத்திய ஜீவியத்தை அடைந்தபொழுது அவரால் உலகுக்கு அச்சக்தியைக் கொண்டு வர முடியும் நிலை இருந்தது. பகவான் பேசும்பொழுது,

சத்திய ஜீவியம் தரையைத் தொடுவதை நான் காண்பதுண்டு,

என அன்னை கூறுகிறார். வாய் திறந்து, பகவான் பேசும்பொழுது, அவர் குரல் பூமியில் எதிரொலித்தால், பூமியைத் தொட்டால், சத்திய ஜீவியம் பூமியைத் தொடுவது என்பது அன்னை கண்ணால் கண்ட ஒன்றாகும். இன்றும் பக்தர்கள் ஆழ்ந்த தியானத்திலிருக்கும்பொழுது, அதிலிருந்து வெளிவந்து பிறரிடம் பேசினால், பக்தர் குரல் அவர்கள் மீது படும்பொழுது நீல ஒளி (overmental light). புள்ளியாய்ப் படுவதைக் காணலாம். சிலருக்கு அன்னையிடம் அதுபோன்ற ஈடுபாடுண்டு. அவர்கள் அதேபோல் வெள்ளொளியைக் காணலாம்.

பகவான் குரல் சத்திய ஜீவியத்தை ஒலியாக வெளிப்படுத்திற்று.

ஆரம்ப நாட்களில் ஆசிரமம் என்று ஒன்று உருவாகாத நேரத்தில் அன்னையையும், அவரது ஆன்மீகச் சிறப்பையும் பகவானுடனிருந்தவர்கள் அறியவில்லை. 1926இல் தான் பகவான் மீராவை "அன்னை" என அறிவித்தார். அந்த வருஷங்களில் ஒருவர் அன்னையைப் பற்றிப் பகவானைக் கேட்டபொழுது, அன்னை வரும்வரை நான் எனக்கு மட்டும் பயன்பட்டேன். அன்னை வந்த பின் என் சக்தி அனைவருக்கும் பயன்படுகிறது என்றார்.

வேறொருவர் பகவானை யோகத்தில் உதவ வேண்டும் என்றபொழுது பகவான் அவரை அன்னையிடம் அனுப்பினார். திரும்பி வந்து அவர், "அன்னை என்னுடன் சிறிது நேரம் தியானம் செய்ய சம்மதித்தார். அவரிடம் எதுவும் என்னால் பேச முடியவில்லை" என்றார். பகவான் கை அலம்ப இவர் தண்ணீர் ஊற்றும்பொழுது அவரிடம் பகவான் அன்னையைப் பற்றி,

"நான் சத்திய ஜீவிய உலகினுள் தோட்டத்துப்புறமாக நுழைந்தேன். அன்னை தெருவாசல் வழியாக உள்ளே வந்தார்,"

என்றார்.

கல்கத்தாவிலிருந்து ராமேஸ்வரம் போகப் புறப்பட்ட அண்ணனும், தங்கையும் பாண்டிச்சேரிக்குப் போய் அரவிந்த கோஷைப் பார்க்க எண்ணினர். ஆசிரமம் என்ற நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கும் வருஷம் அது. அவர்கள் வரும்பொழுது, ஆசிரமம் நிறுவப்படவில்லை.

அந்த அம்மையார் இயல்பான இனிமையுடன், மென்மையானவர். பகவானை அப்பொழுதெல்லாம் A.G. என்று மற்றவர்கள் குறிப்பிடுவார்கள். அப்பொழுதிருந்தவர்கள் சுமார் 30 பேர் அல்லது 40 பேர்கள். அண்ணனுக்குப் பகவானைப் பற்றித் தெரியும். தங்கை எதுவுமறியாதவர்.

வந்த பின் பகவானைத் தரிசனம் செய்ய ஏற்பாடாயிற்று. கையில் நியூஸ் பேப்பருடன் உட்கார்ந்திருந்தவரைக் கண்டவர் அவரைக் காணவில்லை. அறை முழுவதும் ஒளி அலை வீசுவதைக் கண்டார். அளவு கடந்த அமைதியையும் உணர்ந்தார். பகவான் காலடியில் உட்கார்ந்து அவரது இரு கால்களையும் பிடித்துக் கொண்டார். ஆங்கிலம் அறியாத பெண்மணி. வங்காளம் மட்டுமே தெரியும்.

"ஏன் புதுவைக்கு வந்தீர்கள்? என்ன விசேஷம்?" என்றார் பகவான்.

"இராமேஸ்வரம் போகப் புறப்பட்டோம். வழியில் உங்களைக் காண வந்தேன்" என்றார்.

"எப்பொழுது இராமேஸ்வரம் புறப்படுகிறீர்கள்?"

"நான் இனி இராமேஸ்வரம் போவதாக இல்லை."

"ஏன் உங்கள் திட்டத்தை மாற்றிக் கொண்டீர்கள்?"

"மகாபுருஷரைப் பார்த்து விட்டேன். இனி ஏன் எங்காவது போக வேண்டும். நான் தேடிய இராமேஸ்வரம் தத்ரூபமாக இங்கேயிருக்கிறதே" என்றார்.

அடுத்த நாள் அந்த அம்மையார் பகவானை மீண்டும் தரிசிக்கும்பொழுது, அவரெதிரில் உள்ள பல நாற்காலிகளைப் பார்த்து, "ஏன் அவை அங்கிருக்கின்றன" என்றார். "என்னுடன் பேசுபவர்கள் உட்கார அவை போடப்பட்டுள்ளன" என்று பகவான் பதில் கூறினார்.

உங்கள் முன்னால் நாற்காலியில் எப்படி உட்காருவது என்று என்னால் நினைக்கக் கூட முடியவில்லை என்றார் அப்பெண்மணி.

இச்செய்தி அன்னைக்கு எட்டியது போலும். இரு நாட்களுக்குப் பின் அந்த அம்மையார் வந்தபொழுது அந்நாற்காலிகள் அங்கில்லை. தரையில் உட்கார சிறுபாய் போன்ற தடுக்குகள் அவ்விடமிருந்தன!

சத்திய ஜீவிய அனுபவம்

பகவான் ஜெயிலிலிருந்த நேரம் சத்திய ஜீவிய அனுபவம், சர்வம் பிரம்மம், அனைத்தும் வாசுதேவன் என்ற அனுபவம் பெற்றார்:

ஜீவனின் கதவு திறந்தது. இறைவன் ஜீவனுள் நுழைந்தான். உடல் அசைவுகளில் இறைவன் அசைந்தான். சிறைச்சாலை என்ன செய்யும்? சிறைக்கதவு ஒரு தடையாகும். இறைவன் ஜீவனுள் எழும் நேரம் பரந்த உலகம் நம்முடையதல்லவா? காற்றும், வெளியும் நாராயணனே. அவன் ஸ்பர்சம் காற்றாக வீசியது. திருடர்கள், கொலைகாரர்கள், சூதாடிகள், என்னைச் சூழ்ந்த கைதிகள். திருடன் கிருஷ்ணனாகவும், கொலையாளி வாசுதேவனாகவும், சூதாடி நாராயணனாகவுமிருந்தனர். அவர்கள் உள்ளத்தில் கருணையும், அன்பும் இருந்ததை நான் காண முடிந்தது. தரையின் மீது விரிக்கப்பட்டுள்ள அழுக்கான மட்ட கம்பளம், மரத்தின் கிளை, ஜெயில் கம்பி, மர நிழல் அனைத்தும் அனந்தனாக காட்சியளித்தன. நான் பெற்ற பெரிய ஆன்மிக அனுபவம் இதுவே. கொள்ளை நடத்தியதால் 10 ஆண்டு தண்டனை பெற்ற கைதி பகவானுக்கு மகானாகக் காட்சியளித்தான்.

நீதிபதி, சர்க்கார் வக்கீல் நாராயணனாகக் காட்சியளித்தது இன்னும் உனக்குப் பயமாக இருக்கிறதா? எல்லா மனிதருள்ளும் இருந்து அவர் செயல்களை என் வழி நடத்துவதே என் வழி. பகவானே மரத்தடியில் நிற்பது ஸ்ரீ அரவிந்தருக்குத் தெரிந்தது. மரத்தடியில் நின்ற கிருஷ்ண பகவானின் வேய்ங்குழல் ஸ்ரீ அரவிந்தரின் ஆத்மாவைத் தொட்டிழுத்தது. ஜடப்பொருள்கட்கு உயிர் வந்ததுபோல் தோன்றியது. அவ்வுயிர் அன்புடன் என்னைத் தொட்டதில் உடலும், உள்ளமும் பூரித்தன.

இந்திய ஆன்மீகச் சரித்திரத்தில் இதுபோன்ற அனுபவம் விஸ்வரூப தரிசனம். அகந்தை அழிந்த நிலையில் ஆண்டவன் தரும் தரிசனம் விஸ்வரூப தரிசனம். அகந்தை அழிந்த நிலையைப் பிரம்ம நிர்வாணம் என்பர். உலகத்தைக் குழந்தை கிருஷ்ணன் வாயில் காண்பது, அர்ஜுனன் கண்ட விஸ்வரூபம், பீஷ்மன் பெற்ற தரிசனம் நாம் அறிவோம். பிரபஞ்சத்தில் இறைவனை வெளிப்படுத்துபவை அவை (universal experience). அன்னை மேற்கூறிய பகவான் அனுபவத்தை Supramental experience சத்திய ஜீவிய அனுபவம் என்கிறார். சத்திய ஜீவியத்தின் தத்துவம் ஒவ்வோர் ஆத்மாவும், மற்ற ஆத்மாவிலுள்ளது. மற்ற ஆத்மாவெல்லாம் ஒவ்வோர் ஆத்மாவிலுள்ளன. அதன் வெளிப்பாடாக, பகவான் பெற்ற cosmic experience சிருஷ்டியில் இறைவனின் அனுபவம் அவர் ஜெயிலில் பெற்ற வாசுதேவன் காட்சி. பாரதத்தில் எழுதியவற்றையெல்லாம் அப்படியே நம்ப முடியுமா? என்றொருவர் கேட்டபொழுது பகவான் மனிதன் இழந்த சூட்சுமப் பார்வையை நினைவுபடுத்துகிறார். "சென்ற யுகங்களில் மனிதனுக்குச் சூட்சுமப் பார்வை இருந்தது. அவனுக்கு மலையும், நதியும் நாம் வணங்கும் கடவுள்களாகக் காட்சியளித்தன. இன்று அப்பார்வையை நாம் இழந்து விட்டோம். நாம் உயிரோடிருப்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை அன்று அவர்கள் கண்டது. பாம்பு என்பது சக்தி. சக்தியால் பூமி தாங்கப்படுவது உண்மை. இன்று நமக்கு அவை தெரிவதில்லை. பாம்பும், பல்லியும், புலியும் நம்முள்ளிருப்பதால் அவைகள் நம் உறவினங்கள். அன்றைய நம்பிக்கை உண்மை. அது வெறும் உருவகமில்லை. ஜடமான உடலின் பின் சூட்சுமச் சரீரம் உண்டு. சூட்சுமச் சரீரத்திற்கு சூட்சுமப் பார்வையுண்டு.இன்று அப்பார்வை மனிதனுக்குத் திரும்பி வருகிறது'', என்று பகவான் பதில் கூறினார்.

அத்வைதம், நிர்வாணம் என்ற தலைப்புகளில் பகவான் செய்யுள்கள் எழுதியுள்ளார். சங்கராச்சாரியார் குன்றில் பகவான் நடந்தபொழுது அத்துவைத அனுபவம் அவருக்குக் கிட்டியது என்று பகவான் எழுதியுள்ளார். காஷ்மீருக்குப் போன பக்தர் ஒருவர் அம்மலைக்குப் போனார். பகவான் பெற்ற அனுபவம் நினைவுக்கு வந்ததால், அங்கிருந்து கூழாங்கற்களைப் பொறுக்கித் தம்முடன் எடுத்து வந்தார். ஆசிரமம் வந்தபொழுது அவற்றை அன்னையின் பார்வைக்கு அனுப்பினார். அன்னை சந்தோஷப்பட்டு அவற்றுள் சில கற்களை எடுத்துக் கொண்டார். கல்கத்தாவுக்கு அன்னை வர வேண்டும் என்று ஓர் பக்தர் வேண்டுகோள் விடுத்தபொழுது, பகவான் நடந்த இடத்தை எல்லாம் எனக்கே சொந்தமாகக் கொடுப்பதானால், நான் வருவேன் என அன்னை அந்த பக்தரின் கேள்விக்குப் பதிலிறுத்தார். பகவான் வீட்டை அடையாளம் காட்டியவர், அன்னைக்கு முக்கியம். பகவான் ஊரில் பிறந்தவர்கள் அன்னையின் அன்புக்குரியவர்கள். பகவான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற புராணி என்ற சாதகர் அன்றைய ரிஜிஸ்டர்களைப் பார்த்து பகவான் கையெழுத்து, அவர் பெற்ற மார்க்குகள், அவரைப் பற்றி அன்றைய ஆசிரியர்கள் சொல்லியவை போன்றவற்றைச் சேகரித்து வந்தார். கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலையில் ஸ்ரீ அரவிந்தர் அதை விட்டு வந்ததிலிருந்து, அப்பல்கலைக்கழக வழக்கப்படி, வருஷாவருஷம் அவர் இருந்த இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அது 1910இல் முடிந்தது. அந்த ஆண்டுதான் பகவான் புதுவை வந்து சேர்ந்தது. அதன் பிறகு அந்த ரிஜிஸ்டரில் குறிப்பில்லை.

அன்னை சிரிப்பதைக் கண்டவர்கள், அன்னையிடம்தான் அப்படிப்பட்ட சிரிப்பைப் பார்க்க முடியும். மற்றவர்களால் முடியாது, மனிதனால் அதுபோல் சிரிக்க முடியாது. சந்தோஷம் நிரம்பி வழியும்பொழுது அது சிரிப்பாக வெளி வருகிறது. பிறருக்கு அன்னை தம் புன்னகை வழியே சந்தோஷத்தைத் தருகிறார். மோனாலிசா என்ற ஓவியம் உலகத்தில் பிரபலமான சிரிப்பைக் காண்பிக்கிறது என்பார்கள். முன் ஜன்மத்தில் அன்னை மோனாலிசாவாக இருந்ததாகவும் அவ்வோவியத்தை வரைந்த லியனார்டோவாக ஸ்ரீ அரவிந்தர் இருந்ததாகவும் அன்னை கூறியுள்ளார்.

பகவான் சிரித்துப் பார்க்க முடியாது. 1926க்கு முன்னால் அவரை தினமும் சந்திக்கும் சாதகர்கள் அவர் சிரிப்பைப் பார்க்க விரும்பியபொழுது பகவான்:-

"நான் சிறு வயதிலேயே வீட்டிலிருந்து பிரிக்கப்பட்டேன். நான் வளர்ந்த சந்தர்ப்பங்களில் நான் சிரிக்கக் கற்றுக் கொள்ளவில்லை. இயல்பாக எனக்கது அமையவில்லை" என்று கூறியுள்ளார்.

சாதகர்கள் ஆயிரம் வகையினர். அடம் பிடிப்பவர்கள் ஒரு வகையினர். மௌனமாக அடம் பிடிப்பவர்களும் உண்டு, ஆர்ப்பாட்டமாக அடம் பிடிப்பவர்களும் உண்டு. ஒருவர் பகவான் சிரிப்பதைப் பார்க்க வேண்டும் என பகவானிடமே பிரார்த்தித்துக் கொண்டார். நாட்கள் வருஷங்களாயின. ஒரு தரிசனத்திற்காக அந்தச் சாதகர் பகவான் முன்னே வரும்பொழுது அவர் பின்னால் வரிசையில் 10, 20 பேர்கள் நின்றிருந்தனர். பல ஆண்டுகட்கு முன் ஆரம்பித்த பிரார்த்தனையைச் சாதகர் மௌனமாகத் தொடர்ந்தார். இன்று தரிசனத்திற்காக பகவான் முன் நிற்கும்பொழுது அப்பிரார்த்தனை மனதில் எழுமுன், பகவான் முகத்தில் புன்னகை எழுந்தது. பிரார்த்தனை செய்த பக்தர் கண்டு திகைத்ததைப்போல் அவர் பின்னால் நின்றிருந்த அத்தனை பேரும் பிரார்த்தனை செய்யாமல் அந்த அற்புதக் காட்சியைக் கண்டனர். பகவான் தரிசனம் பாப விமோசனம் மட்டுமல்ல, புனர் ஜன்மம். ஆன்மா மலர்ந்து வெளி வந்து அன்னையைத் தொட்டு மகிழ்ந்து அவர் ஸ்பர்சம்பட்டு புனிதப்பட்டு, மீண்டும் தன்னிடம் திரும்பும் சமயம் தரிசனம். இன்று அந்நிகழ்ச்சிக்கு மற்றோர் உயர்ந்த புனிதமும் சேர்ந்து காத்திருந்தது. தம் தியானத்தில் பகவான் கருமையாகத் தெரிந்ததாகக் கூறிய சாதகருக்கு, "அது என்னுள் உள்ள சிவபெருமான் நிறம்'' என்று பதில் கூறினார். கிருஷ்ண பரமாத்மா பகவான் உடலில் இறங்கி தங்கியிருந்தபொழுதும் பகவான் சிரித்ததில்லை.

வெடிகுண்டு

ஜெயில் பல தலைவர்கட்குப் பெரிய அதிர்ஷ்டமாகி விட்டது என்பது சரித்திரம். Pilgrim’s Progress யாத்திரையின் முன்னேற்றம் என்று பொருள்பட எழுதப்பட்ட நூல் உலகம் அறிந்தது. அதை எழுதியவர் ஜான்பனியன் என்ற பாதிரியார். அவரை ஜெயிலில் அடைத்தார்கள். ஜெயில் அவருக்கு ஆன்மீக உத்சாகம் அளித்தது. திருட்டுத்தனமாக எழுத வேண்டிய அவசியம். பேப்பர், பேனா இல்லை. அவருக்குக் கொடுத்த சோப் மீதிருந்த wrapper பேப்பர்களைச் சேர்த்து அதில் எழுதினார். இன்று உலகம் போற்றும் நூலாக விளங்குகிறது. பகவானுக்கு வாசுதேவ தரிசனம் கொடுத்தது ஜெயில்.

"இறைவா, என்னால் விட முடியாத பற்றை நான் உடைத்தெறிய என்னை ஜெயிலுக்கு அனுப்பினாய்" என்று இறைவனை பகவான் விளிக்கின்றார்.

அலிப்பூர் ஜெயில்வாசம் பற்றிப் பல கட்டுரைகள் எழுதலாம். ஒரு புத்தகமே போடலாம். இரவில் ஜெயில் வார்டர்கள் வராந்தாவில் வந்து கைதிகள் பெயரைச் சொல்லி உரக்கக் கூப்பிடுவார்கள். கைதி இருக்கின்றானா, தப்பித்துக் கொண்டு போய்விட்டானா எனப் பார்ப்பதற்குச் செய்த யுக்தி இது. சாக்ரடீஸுக்குப் போர்க்களத்தில் தியானம் வந்தது. அவர் சிப்பாயாக இராணுவத்தில் சேர்ந்தார். ஆத்மா பக்குவப்பட்டு விட்டதால் தியானம் அவரைத் தேடி வந்தது. போர் முடிந்து அனைவரும் வீடு திரும்பினர். சாக்ரடீஸ் தன்னிலை இழந்ததால் அனைவரும் போய் விட்டதைக் கவனிக்கவில்லை. தியானம் தம்மை ஆட்கொண்டதால், தான் நின்ற இடத்திலேயே நின்றிருந்தார். ஓரிரவெல்லாம் அப்படியே நின்றிருந்தார் என்று அவர் வரலாறு கூறுகிறது. பகவான் இரவில் எழுந்து ஜெயில் அறையில் நிற்பார். நின்றவர் நின்றபடியே தியானம் செய்வார். இதையெல்லாம் அவர்கள் பாணியில் புரிந்து கொண்ட வார்டர்களும் வழக்கம்போல் கைதிகள் பெயரைச் சொல்லிக் கூப்பிடும்பொழுது, அவர் அறை முன் வந்தால் அவரைக் கூப்பிடுவதை நிறுத்தி விட்டார்கள். தம்மை எப்பொழுதும் பகவான் கவனித்துக் கொண்டதில்லை. குளிப்பதுவும் கவனமாகச் செய்வதில்லை என்பதால் அவருடனிருந்தவர்கள் ஒருவரை அதைக் கவனிக்கச் சொன்னார்கள். வெகுநாள்வரை இவரே அக்கடமையைச் செய்து வந்தார்.

வெடிகுண்டு என்ற தலைப்பில் பகவான் மூன்று கட்டுரைகள் எழுதினார். அதன் கெள்கையைப் பற்றியது ஒன்று, அடுத்தது எந்த மனநிலையில் வெடிகுண்டு செய்கிறார்கள் என்பது, மூன்றாவது வெடிகுண்டின் தர்மம் என்ற தலைப்பு. போலீஸ் இவற்றைப் பறிமுதல் செய்து விடுவார்கள் என ஜெயிலுக்கு வெளியே அவற்றை அனுப்பினார். பெற்றவர் போலீஸிடமிருந்து அதை மறைக்க ஒரு மூங்கில் குழலில் போட்டுத் தரையில் புதைத்து வைத்தார். கொஞ்ச நாள்கள் கழித்து அதைத் தோண்டி எடுத்துப் பார்த்தபொழுது, போலீஸிடமிருந்து காப்பாற்ற எண்ணி செல்லுக்கு இரையாகக் கொடுத்து விட்டதை அவர் கண்டார்.

ஜெயில் கொடுமை

இந்தியச் சுதந்திரம் அஹிம்சா போராட்டம். அதிலும் ஜெயிலில் கொடுமைகள் பல சமயங்களில் இருந்தன. ஜெயப்பிரகாஷ் நாராயணனை ஐஸ்கட்டியை முள்ளு முள்ளாகச் சீவி அதன் மீது உட்காரச் சொன்னார்கள். ரயில்வே தொழிலாளர் தலைவர் சாத்வீகமானவர் என்பதால் அவரை ரயில்வே காந்தி என்று அழைத்தார்கள். அவரைப் போலீஸ் அடித்துத் துன்புறுத்தியதால் அவர் இதயம் கெட்டுப் போய், கடைசிவரை இதய நோயாளியாக இருந்தார்.

ஸ்ரீ அரவிந்தர் சர்க்காரைப் பொருத்தவரையில் பயங்கரவாதி. ஜெயிலிலிருந்து கோர்ட்டுக்கு அவரைக் கூண்டில் போட்டு அழைத்து வந்தனர். கோர்ட்டிலும் மிருகத்தைக் கூண்டில் அடைப்பதைப்போல் கூண்டில் அடைத்துக் கேள்வி கேட்டனர்.

ஜட்ஜ் இவருடன் கேம்பிரிட்ஜில் படித்தவர். படிக்கும்பொழுது ஜட்ஜ் கிரேக்க மொழியில் இரண்டாவதாக வந்தார். முதல் மார்க் வாங்கியவர் ஸ்ரீ அரவிந்தர். இந்த சதித் திட்டத்தில் 200க்கு மேற்பட்ட சாட்சிகளை விசாரித்தனர். ஸ்ரீ அரவிந்தருடன் படித்த வேறொருவர் மலேயாவில் வக்கீலாக இருந்தார். அவர் கல்கத்தா வழியாகப் போகும்பொழுது ஸ்ரீ அரவிந்தர் நிலைமையை அறிந்து மிகவும் வருத்தப்பட்டு, எதுவும் செய்ய முடியவில்லை எனினும் கூண்டு, பூட்டு, கம்பி வலையிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என அவர் எடுத்த முயற்சி பலன் தரவில்லை.

கூண்டும், வலையும் போதாது என்று சர்க்கார் தரப்பு வக்கீல் அவர் கேஸ் கட்டு மீது 5 குண்டுள்ள ரிவால்வர் ஒன்றைத் தயாராக வைத்திருந்தார். ஸ்ரீ அரவிந்தருடைய நண்பர் இறந்து விட்டார். சித்ரரஞ்சன் என்ற பேர் போன இளம் வக்கீல் கனவில், இறந்தவர் ஆவி தோன்றி இந்தக் கேஸை அவர் எடுத்து நடத்த வேண்டும் என்று கேட்டதாகச் செய்தி. இக்கேஸுக்கு ஆதரவாக சர்க்கார் தரப்பில் தஸ்தாவேஜுகள் தாக்கல் செய்யப்பட்டது ஏராளம். அவை 4000.

ஸ்ரீ அரவிந்தர் சகோதரி கேஸ் செலவுக்காக நிதி திரட்டினார். கல்கத்தாவில் பிரபல வக்கீல்கள் கேட்கும் பீஸ் கொடுக்க முடியவில்லை என்பதால் கேஸ் எடுத்தவர் கட்டைத் திருப்பிக் கொடுத்து விட்டார். 60,000 ரூபாய் நிதி வேண்டுமெனக் கேட்ட பொழுது, ரூ. 28,000 வசூலாயிற்று. ஜெயிலில் பகவான் ஆத்மாவில் அமைதி பெற்றார். அவர் பெற்ற அமைதி பேரமைதி. எல்லாக் கடும் சோதனைகளையும் கடந்து செல்ல அது உதவியது. இறைவன் திருவுள்ளத்தை நாம் புரிந்து கொள்வதில்லை. ஒரு நிகழ்ச்சி மூலம் 3 அல்லது 4 காரியங்களை இறைவன் சாதிக்கின்றான். மனித அறிவுக்கு அது புலப்படாது. இயற்கை விரயம் செய்கிறது என நாம் நினைக்கிறோம்.

மழை பெய்யும்பொழுது நகரத்திலுள்ளோர் குடிநீர் கிடைத்தது என நினைக்கின்றனர். விவசாயி பயிர் விளையும் என்கிறான். மழை சாதிக்கும் காரியங்களில் இவை இரண்டுதான். மீதிச் செயல்கள் நம் கண்ணில் படுவதில்லை, அறிவுக்குப் புலப்படுவதில்லை. பூமி குளிரவும், வெய்யிலால் எழும் வியாதிகள் தணியவும் மழை பயன்படுவதை மழையில்லாத சமயத்தில் மட்டுமே நாம் நினைக்கின்றோம்.

நீரூற்றுகள்

பாசனத்திற்குக் கிணறு தோண்டும்பொழுது ஊற்றிருக்கிறதா என்று தெரிவது அவசியம். இல்லையேல் முயற்சி விரயமாகும். இதைக் கண்டுபிடிப்பவர்களை water diviner தண்ணீர் கண்டு பிடிப்பவர் என்பார்கள்.

அன்னையைத் தரிசிக்க வந்த water diviner அவருடன் இருந்த சம்பக் லால் அதைத் தமக்குக் காட்டும்படிக் கேட்டார். வந்தவர் ஒரு வேப்பமரத்திலிருந்து கவை ஒன்றைப் பறித்தார். பூமிக்கடியில் நீர் ஊற்று உள்ள இடத்திற்குப் போகலாம் என அழைத்தபொழுது, "ஆசிரமக் கட்டிடத்தைத் தாண்டி வெளியில் நான் வர முடியாது. இதற்குள்ளேயே அதைக் காண்பிக்க வேண்டும்" என்றார். நீர் ஊற்று இருந்தால் முடியும் என்று கையில் கவையுடன் நடந்தார். சமாதி அருகில் வந்தவுடன் கவை மெதுவாக சுழல ஆரம்பித்தது. பூமிக்கடியில் ஊற்றிருந்தால் கவை சுழலும். கவை சுழன்றால் பூமிக்கடியில் ஊற்றிருக்கும். அவர் குறிப்பிட்ட நீரோட்டத்தில் ஒரு சிறு பம்ப் பல வருஷங்கட்குப் பின் போடப்பட்டு ஆசிரமக் கட்டிடத்தினுள் உள்ள செடிகளுக்குத் தண்ணீர் சப்ளை செய்கிறது.

இது எப்படிச் செயல்படுகிறது என்று அன்னையைக் கேட்டபொழுது, நீரூற்றின் மீது வந்தவுடன் subconscious ஆழ்ந்த உணர்வு நீரை அறிகிறது. அதை நாம் surface mind அறிய முடிவதில்லை. வேப்பங்கவைக்கு அதை அறிய முடிகிறது. கவை நீரோட்டத்தினால் பாதிக்கப்பட்டுச் சுழல ஆரம்பிக்கிறது என்றார். கவையை சம்பக்லால் கையில் கொடுத்தார். சம்பக்லால் தாம் அதைச் சோதனை செய்ய விரும்பினார். கவை நகரவில்லை. தன் கையைப் பிடித்துக் கொள்ளச் சொன்னார். சம்பக்லால் வாட்டர் டிவைனர் கையைப் பிடித்துக் கொண்டவுடன் மறு கையிலுள்ள கவை சுழல ஆரம்பித்தது.

உலக யுத்தம் நடந்தபொழுது ஓர் ஆங்கிலேயர் இத்திறமை பெற்றிருந்ததால் அவரை இராணுவத்திற்கு உதவ அழைத்தனர். அவரால் நீரூற்று உள்ள இடங்களைக் கண்டுபிடிக்க முடியும். கடலில் கப்பல்கள் மூழ்கி விடுகின்றன, தடம் மாறி நிலை இழந்து விடுகின்றன. யுத்தம் நடப்பதால் சாதாரண காலத்தில்போல் தேட முடிவதில்லை. ஒரு கடல் பூகோளப் படத்தை அவரிடம் கொடுத்தால் அவர் ஊசி ஒன்றை வைத்துக் கொண்டு, கப்பல் இருக்குமிடத்தைக் கூறுவார்.

இவர் இரண்டு ஊசிகளை நூலில் கோர்த்து அதில் ஒரு பந்தைக் கட்டித் தொங்க விடுவார். அப்பந்து நீரூற்றுள்ள இடத்தின் மீது வந்தால், நகரும். மேல்மாடியில் நூலையும், பந்தையும் எடுத்துப் போனவர் மூக்கின் மீது பந்து வந்து அடித்தது. அவ்விடத்திற்குக் கீழே தண்ணீர்க் குழாயிருப்பதை அது காட்டியுள்ளது.

இவர் ஆசிரமம் வந்தார். இவரைப் பற்றி பகவானைக் கேட்டார்கள். "இவருக்குள்ள திறமை உண்மை என்றார். இவருக்கு நூலோ, ஊசியோ, பந்தோ தேவையில்லை. அவற்றின் உதவியின்றி, நீரோட்டத்தை இவரால் கண்டுபிடிக்க முடியும். பந்து நகர்ந்தால், அது மனத்திற்குத் தெம்பாக இருப்பதால் பந்தை உபயோகப்படுத்துகிறார்" என்றார்.

திருமணமாகாத பெண் தரிசனத்திற்கு வந்தார். சமாதியில் அவருக்குத் தம் நண்பர்கள், "எழுந்து வா" என்று நினைத்தது குரலாகக் கேட்டது. மாலையில் தரிசனத்தில் அன்னையின் முகம் ஸ்ரீ அரவிந்தர் முகமாக மாறியதைக் கண்டார். இதைப் போன்றதை அன்னையிடம் போய்ச் சொன்னால், ஸ்ரீ அரவிந்தர் என்னுள் இருப்பது உங்கள் சூட்சுமப் பார்வைக்குத் தெரிந்தது என்பார்.

நூற்றுக்கணக்கான குருமார்கள் ஆசிரமம் வந்துள்ளனர். ஒரிசாவிலிருந்து ஒரு பெரியவர் இலட்சக்கணக்கான சிஷ்யர்களை உடையவர் வந்து சாப்பாட்டறையில் வேலை செய்தார். தினமும் அவருக்கு சுமார் 10 தந்திகள் வரும். இவர் எங்குப் போனாலும் எந்த சிஷ்யரும் உடன் வருவதில்லை.

பெரும்பாலோர் குரு ஸ்தானத்திலிருந்ததால் சிஷ்யர்கள் புடைசூழ வருவார்கள். ஒருவர் அதுபோல் பல சிஷ்யர்களுடன் வந்து தரிசனத்திற்காகக் காத்திருந்தபொழுது, அவர் சிஷ்யர் அன்னையைப் பால்கனியில் சுட்டிக்காட்டி அவர்கள் பக்கத்திலுள்ள வயதான பெண்மணி யார் என்றார். குருவுக்குத் தெரியவில்லை. சிஷ்யர் மேலும் விவரித்தார், "வெண்மையான தாடியுடன் ஒருவர் அன்னை பக்கத்தில் நிற்கிறார்" என்றார். சிஷ்யர் கண்டது ஸ்ரீ அரவிந்தருடைய தாடி. ஸ்ரீ அரவிந்தர் சிஷ்யருக்குப் பெண்ணாகத் தெரிந்துள்ளார்.

மற்றொரு குரு தமக்கு அன்னை, ஸ்ரீ அரவிந்தரை விட அதிக ஆன்மிக பலம் உண்டு என்று பேசுவார். இவர் பேச்சு அதிகமாகி, பல வயதான சாதகர்கட்குச் சந்தேகமே வந்துவிட்டது. இந்தக் குரு அப்பொழுது 25 வருஷமாக ஆசிரமம் வருகிறார். ஒரு வயதான ஆசிரியர் (editor) அன்னையிடம் போய், "இந்த மனுஷனைப் பற்றி இப்படி பேசுகிறார்களே, இதில் என்ன உண்மை?'' என்று கேட்டபொழுது, அன்னைக்கு அவர் யார் என்று தெரியவில்லை. அவர் தொழில், தோற்றம், சிஷ்யர்கள் பெயரெல்லாம் சொல்லி அன்னைக்கு அடையாளம் சொன்னார் பெரியவர். அன்னைக்கு, சிஷ்யர்களைத் தெரிகிறது, குருவைத் தெரியவில்லை. "சரி, நாளை தரிசனத்தில் நீ போய் அவர் பக்கத்தில் நில், நான் பால்கனியிலிருந்து பார்த்து, இந்தக் குருவை அடையாளம் கண்டு கொள்கிறேன்" என்றார் அன்னை. மறுநாள் தரிசனத்தன்று, நான் காலையில் அன்னையை அவர் அறையில் தரிசனம் செய்தேன். அவர் கொடுத்த ரோஜாவைப் பாக்கட்டில் வைத்துக் கொண்டு தரிசனத்தில் கூட்டமில்லாத இடத்தில் ஒதுக்குப்புறமாகத் தனியாக நின்றேன். இந்தக் குரு, "உங்களைத்தான் தேடுகிறேன்" என்று என் பக்கத்தில் வந்து நின்றார். சில நாழிகைக்குள் அந்த வயதான ஆசிரியர் ரிக்க்ஷாவில் வந்து என் பக்கத்தில் இறங்கி, என் பையைக் காட்டி, "இது ஏது?' என்றார். நான் கைக்குட்டையைப் பார்த்து கடையில் வாங்கினேன் என்றேன். அவர் ரோஜாவைக் காட்டினார். "அன்னையை காலையில் தரிசித்தேன்" என்றேன். "குரு" ஒருபுறமும், பத்திரிகை ஆசிரியர் மறுபுறமுமாக, நான் நடுவில் நின்றேன். ஆசிரியர் அன்னையுடன் பேசியது எனக்கு அடுத்த வருஷம்தான் தெரியும். ஆசிரியரையும், குருவையும் கவனித்த அன்னையின் பார்வை என் மீதும் பட்டிருக்கும். மறுநாள் ஆசிரியர் அன்னையைப் பார்த்தார். அன்னை வாய்விட்டுச் சிரித்து, கையால் பெரிய வட்டம் போட்டு, அவரிடம் ஆன்மீகம் பூஜ்யம் என்று கூறினார். அத்தோடு அந்தக் குருவின் ஆர்ப்பாட்டம் ஓய்ந்தது.

மகாத்மாவைப் பின்பற்ற விரும்பிய இலட்சக்கணக்கானவர்கள் அவரைப் போல் சத்தியச் சோதனையை மேற்கொள்ள முடியவில்லை. கீதையைப் பின்பற்ற முடியவில்லை. அஹிம்சா விரதத்தை அனுஷ்டிக்கவில்லை. தீண்டாமை ஒழிப்பையும் அனைவரும் அவர்போல் பின்பற்ற முடியவில்லை.

மகாத்மாவை மனதால் ஏற்றது உண்மை. ஆனால் அவர்போல் ஆட்டுப்பால் குடிக்கவோ, மருந்து சாப்பிடாமலிருக்கவோ, ஸ்தாபன சேவையை மட்டும் மேற்கொண்டு ஸ்தாபனப் பதவியை மறுக்கவோ, உண்ணாவிரதத்தை மேற்கொண்டு ஆத்மாவைச் சுத்தம் செய்யவோ முடியாதவர்கள், தங்களால் முடிந்தவரைப் பின்பற்ற வேண்டி அவர் செய்தவற்றை ஏற்றுக் கொண்டார்கள்.

ஒரு சிலர் தொழிலை விட்டுத் தேசசேவையை மேற்கொண்டனர். வக்கீல் தொழிலை விட்டவர் பலர்.

எதுவும் முடியாதவர் தலைவர்போல் ஏதாவது செய்யப் பிரியப்பட்டு, கதர் உடுத்தினார்கள், சட்டை போடுவதைக் கைவிட்டனர், காந்தி குல்லாய் அணிந்தனர்.

1940 - 50இல் காந்தி குல்லாய்ப் பரவலாக இருந்தபொழுது வெளியில் போய் உள்ளே வந்தால் காந்தி குல்லாய் கண்ணில் படாமல் இருக்காது. ஸ்ரீ அரவிந்தர் தனித்திருந்தபொழுது அவருக்குச் சாப்பாடு ஒரு பக்கட்டில் கயிறு வழியாக உள்ளே போகும், அவரை எவரும் பார்க்க முடியாது என்று வதந்தி எழுந்தது. தலைவர் செய்யும் சாதனையை அனைவரும் செய்ய முடியாவிட்டாலும், அவர்போல் நடக்க ஆசைப்படுவது சிஷ்யபாவம்.

ஸ்ரீ அரவிந்தர் எழுதாத விஷயமில்லை. வேதம், உபநிஷதம், விஞ்ஞானம், கலை, சிற்பம், காவியம், செய்யுள், அரசியல், தத்துவம் ஆகியவற்றைப் பற்றி அவர் எழுதியவற்றைத் தொகுத்து 30 வால்யூம்களாக வெளியிட்டுள்ளார்கள்.

தம் யோகத்தைப் பற்றி, தாம் என்ன செய்கிறார், எப்பொழுது தியானம் செய்கிறார், என்ன சாப்பிடுகிறார், எதைச் சாப்பிட விரும்புகிறார், அவருக்குப் பிடித்தது என்ன என்ற விவரங்கள் ஏன் எழுதப்படவில்லை? சிஷ்யர்களாகிய எங்களுக்கு அது முக்கியமில்லையா என்று அடிக்கடி கேள்வி எழுகிறது. இதற்கு யார் பதில் சொல்வார்கள்?

குரு செய்வதைப் போலவே செய்வதில் எந்தப் பலனும் இல்லை. பகவான் அவற்றை எழுதியிருந்தால் சிஷ்யர்கள் அவர் சாப்பிடும் நேரத்தில் சாப்பிடுவார்கள், அவருக்குப் பிரியப்பட்டதைத் தாங்களும் சாப்பிடுவார்கள். அவர் தியானம் செய்யும் நேரத்தில் தியானம் செய்வார்கள். அவர் குளிக்கும் நேரமே தாங்கள் குளிக்கும் நேரமாக இருக்க வேண்டும் என்பார்கள்.

ஸ்ரீ அரவிந்தர் அதை விரும்பவில்லை.

அதனால் அவ்விவரங்கள் எழுதப்படவில்லை என அவருடனிருந்த பிரெஞ்சு சாதகர் சொன்னார்.

எத்தனையோ வியாதிகளை ஆயுர்வேத வைத்தியர்கள் எடுத்துக் கொள்ளும் முன் ஜாதகம் பார்ப்பார்கள். பார்த்தபின், சில வியாதிகளை "இது கர்ம வியாதி, குணமாகாது" என்பார்கள். மூளை வளர்ச்சியில்லாத குழந்தைகளைப் பெற்றவர்கள் டாக்டர்களிடம், கோயில் குளங்களுக்கு அழைத்துப் போய்ப் பாவம் தீராதா எனப் பார்ப்பார்கள். அதுபோல் அன்னை ஸ்ரீ அரவிந்தரிடம் வந்தவை ஏராளம்.

கர்ம வியாதியை அழிக்க அன்னை மீது முழு நம்பிக்கை இருந்தால் போதும், வியாதி குணமாகும். மூளை வளர்ச்சியில்லாதவர் தாமே பிரார்த்தனை செய்தால் முழுப் பலன் வரும். அவனுக்குத்தான் மூளை வளரவில்லையே, அவன் எப்படி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்வான் என்றால், பெற்றோர் பிரார்த்தனையால் நல்ல குணம் தெரியும். ஓரளவு குணமான பின், தானே பிரார்த்தனை செய்ய வேண்டும்.

நடைமுறையில் பெற்றோரும் அக்கறையாகப் பிரார்த்திப்பதில்லை. குணம் தெரிந்த பின் தானே பிரார்த்தனையும் செய்வதில்லை. தானே, எவரும் எதுவும் செய்யாமல் நடப்பது மட்டுமே நடக்கும்.

15 வயதில் பெண் தெருவில் சில் விளையாடுவாள். சிறிய குழந்தைபோல் கொல்லைக்குப் போவதற்குப் பதிலாகத் தெருவில் போய் உட்காருவாள். சிறுவயதிலிருந்த ஓட்டமும் நாளாக நாளாகக் குறைந்தது. 18ஆம் வயதில் எதிரில் உட்கார்ந்திருக்கும் பெண்ணை 10 முறை "மணி" "மணி" என்று கூப்பிட்டால் அவளால் பதில் சொல்ல முடியாது. ஒரு சில வேளை 10ஆம் குரலுக்கு ஏன் என்பாள். 7, 8 முறை ஆசிரமம் வந்த பின் குணம் தெரிகிறது. திருமணம் செய்யலாம் என்றனர். பேசிப் பழகினாலொழிய பழைய பெண் என்பது தெரியாது என்றும், எல்லா வீட்டு வேலைகளையும் செய்கிறாள் எனவும் திருமணமும் செய்தனர்.

இத்தனைக்கும் பெற்றோரோ, குழந்தையோ தானே பிரார்த்திக்கவில்லை. ஒரு வருடம் கழித்து, கணவன் பெண்ணைத் தாய்வீட்டிற்குக் கொண்டுவந்து விட்டுவிட்டான்.

மூளை வளர்ச்சியில்லாத பையனைப் பற்றி ஸ்ரீ அரவிந்தருக்கு எழுதினார்கள். "இவன் நிலைமை மாறாது. ஆனால் அமைதியாக உயிர் பிரியும்" என்று பதில் எழுதினார்.

கான்சர் வந்தால் வலி, துடிப்பது வழக்கம். கான்சர் வந்தபின் அன்னைக்குப் பிரார்த்தனை செய்து முழுக் குணம் பெற்றவர் பலர். மற்றவர்களுக்கு முதலில் குணம் தெரிந்தவுடன், பிரார்த்தனையை விட்டுவிடுகிறார்கள். மீண்டும் வருகிறது. ஆனால் பிரார்த்தனை செய்பவர்கட்கும், செய்யாதவருக்கும், குணமாகாதவர்க்கும் கான்சர் தனக்கேயுரிய குணமான வலியைக் கொடுப்பதில்லை. ரமண மஹரிஷியையும், பரமஹம்சரையும் விட்டு வைக்காத வலி, அன்னை பக்தர்களை விட்டு விலகுகிறது.

6 நாளாகத் தூங்க முடியவில்லை, அவள் படும் வேதனையைப் பார்க்க முடியவில்லை என்று இலண்டனிலிருந்து போனில் சொன்னவுடன் அவர் காதில் விழுந்த செய்தி "அன்னை பலிக்கும்" என்பது. அடுத்த நாள் போன் செய்து, "என் மனைவி அமைதியாகத் தூங்கினாள்" என்றார். கான்சரிலிருந்து பிழைக்காதவர்களும், கடைசி நேரம் அமைதியாக இருந்தது, வலியோ, வேதனையோ இல்லை என்பது அன்னையின் சாந்தி அளிப்பதாகும். பகவான் அதை இவருக்கு முன் கூட்டி எழுதியுள்ளார்.

சோமர்ஸெட்மாம் என்பவர் உலகப் பிரசித்தி பெற்ற நாவலாசிரியர். ஸ்ரீ அரவிந்தரைப் பார்க்க வந்தார். ஆசிரமக் கேட்டில் உங்களுக்குப் பாஸ் இருக்கிறதா? என்று கேட்டனர். அவரிடம் பாஸ் இல்லை. உள்ளே அனுமதிக்கவில்லை. இலண்டன் போய் அவர் தபால் எழுதியிருந்தார். தபாலைப் பார்த்த ஸ்ரீ அரவிந்தர் என்ன நடந்தது என்று விசாரித்துத் தெரிந்து கொண்டார். அவரை உள்ளே அனுமதித்திருந்தால் ஸ்ரீ அரவிந்தர் அவரைச் சந்தித்திருப்பார்.

உலகப்புகழ் பெற்ற ஆர்னால்ட் டாயன்பீ என்பவர் சரித்திர ஆசிரியர். அவர் எழுதிய Study of History ஸ்டடி ஆப் ஹிஸ்டரி உலகில் புகழ்பெற்ற 10 வால்யூம் புத்தகம். அமெரிக்காவில் Ford Foundation அவருக்குக் கிராண்ட் கொடுத்து, "நீங்கள் எந்த எந்த நாட்டைப்பற்றி எழுதினீர்களோ அவற்றைப் போய்ப் பார்த்து விட்டு வாருங்கள்" என அவரை உலகம் சுற்ற அனுப்பிய பொழுது, அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்றினார். ஸ்ரீ அரவிந்தர் எழுதிய முக்கியக் கருத்தை மேற்கோளாக எடுத்து அவருக்கு அனுப்பியபொழுது, அவர் நானும் இதையே சொல்கிறேன், நான் ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் வந்திருக்கிறேன், அப்பொழுது ஸ்ரீ அரவிந்தர் உயிருடனில்லை என்று எழுதியிருந்தார். ஆசிரமத்தில் விசாரித்தபொழுது அவர் இங்கு வந்து தங்கியிருந்ததை எவரும் அறியவில்லை.

பெரிய மனிதர்கள் வருவது உண்மை. அவர்களுக்குக் கேட்டில் தடை ஏற்படுவதும் உண்மை. உலகப்புகழ் பெற்றவர்களும் கேட்டில் சிரமப்படுவது தெரிந்தால் சாதாரண பக்தர்கட்கு அது ஆறுதலாக இருக்கும்! நிர்வாகரீதியாகப் பார்த்தால் அது சரியில்லை.

சூட்சுமக்கருத்தைக் கவனித்தால், பகவானே பார்க்கத் தயாராக இருந்தாலும் வருபவர் சூழல் பகவானுக்கு ஒத்து வராததாக இருந்தால் அது கேட்டில் தடையாக எழும். மகாத்மா 1934இல் வந்தபொழுது ஸ்ரீ அரவிந்தர் அவரை 4 மணிக்கு மாலையில் சந்திக்க ஒத்துக் கொண்டார். மகாத்மா தாம் சிதம்பரம் கூட்டத்திற்குப் போக வேண்டும், அதனால் காலை 10 மணிக்குப் பார்க்க வேண்டுமென்றார். அவர்கள் சந்திக்க முடியவில்லை.

நேரு '34, '35இல் வந்தபொழுது ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க முடியவில்லை. அவர் நண்பர் திலீப்குமார் என்பவர் ஆசிரமத்திலிருந்தார். அவரை மட்டும் சந்திக்க நேரு விரும்பினார். பகவான் அனுமதிக்கவில்லை.

தாகூர் வந்தபொழுது பகவான் அவரைச் சந்தித்துப் பேசினார். உலகம் உங்கள் வார்த்தைக்காகக் காத்திருக்கிறது என்றார். பகவான் புதுவை வருமுன் தாகூர் "ஸ்ரீ அரவிந்தருக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்" என்றார். பகவானையோ அன்னையையோ தரிசனம் செய்ய பேரும், புகழும் போதாது. முன் கூட்டியே சூட்சும உலகில் உத்தரவு இருந்தால்தான் பார்க்கலாம், தரிசிக்கலாம்.

அப்பல்லோ பந்தர்

மரணத்தில் உடல் அழிந்து மண்ணோடு மண்ணாகிறது. எந்த மண்ணிலிருந்து உடல் எழுந்ததோ அந்த மண்ணிற்கே உடல் திரும்பப் போகிறது. கொஞ்சநாள் அந்த மண் உயிர் பெற்று, உருவம் பெற்று நடமாடியது, பேசிற்று, சாப்பிட்டது, உடலுள் உயிர் வந்ததால் நடமாட்டம் பேச்சு, சாப்பாடெல்லாம். உயிரில் மனம் உற்பத்தியானதால் மண் யோசனை செய்தது. அம்மனத்திற்கு ஓர் ஆன்மா உண்டு. அந்த ஆன்மா இறக்கும் தருணத்தில் முகத்தில் ஒளியாய் வீசுகிறது. ஆன்மா உடலைத் தாங்கி, உயிரால், மனத்தால் செயல்பட்டு, நேரம் வந்தபொழுது அவ்வுடலை விட்டுப் போகிறது. ரிஷிகள் அதுபோல் தாங்கியவுடலில் ஒளியிருந்தது. அவர்கள் நீத்தவுடல்கள் மீண்டும் இந்திய மண்ணுக்குப் போய், அதிலிருந்து எழும் புது உடல்களாகின்றன. அதனால் ரிஷிகள் அன்று உடலில் தாங்கிய ஒளி இன்று இந்தியருடலுள்ளிருக்கிறது.

இந்தியர்கள் உடலில் ஒளி தங்கியிருக்கிறது என அன்னை கூறுகிறார். Guest House என்று இன்று குறிப்பிட்ட வீட்டில் அன்னை முதலில் தங்கியிருந்தார். அதைவிட்டு அன்னை வந்த பல ஆண்டுகட்குப்பின் ஒரு சாதகரிடம் நீ அங்கு போனால் என் ஜீவியச் சூழல், நான் இருந்த அடையாளம் இன்னும் அங்கிருக்கிறது எனக் காண்பாய் என்றார். மகான்கள் வசித்த இடம், அவருடல் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் அவர் சூழல் நெடுங்காலம் இருப்பதுண்டு.

இந்திய மண்ணுக்கே அந்த ஆன்மிகச் சூழல்

உண்டு என்கிறார் அன்னை. இங்கிலாந்திலிருந்து பகவான் தம் 21ஆம் வயதில் படிப்பை முடித்துக் கொண்டு திரும்பி வந்தபொழுது கப்பல் பம்பாய் துறைமுகத்தில் அப்பல்லோ பந்தர் என்ற இடத்திற்கு வந்தது. கப்பலிலிருந்து இறங்கி இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தவுடன் பேரமைதி என்னுள் புகுந்தது. கடைசிவரை அது என்னுள்ளிருந்தது என்கிறார் பகவான். 7 வயதில் டார்ஜிலிங் பள்ளியில் ஆங்கிலப் படிப்புக்காக குழந்தை அரவிந்தன் சேர்க்கப்பட்டபொழுது, தம்முள் இருள் புகுவதைத் தாம் கண்டதாகவும், அப்பல்லோ பந்தரில் 14 வருஷம் கழிந்து வந்து இறங்கும்வரை அவ்விருள் தம்மை விட்டகலவேயில்லை எனவும் கூறினார்.

இந்திய மண்ணுக்கு மட்டுமல்ல. விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்ததும் அவ்வமைதியைக் கண்ட வெளிநாட்டார் பலர். அவ்வமைதி ஆன்மாவைத் தொட்டபின் அவர்கள் எங்கு போனாலும், வருஷம் எத்தனையானாலும், இந்தியா அவர்களை மறப்பதில்லை. அமைதியால் தீண்டப்பட்ட ஆன்மா, அவ்வமைதியை மறப்பதில்லை. அமைதிக்குரிய ஆன்மாவை அமைதி தீண்டினால், அது கடைசிவரை நீடிக்கும். பகவான் அன்னைக்கு முதல் சந்திப்பில் கொடுத்த மௌனம் இறுதிவரை தம்மை விட்டகலவில்லை என்கிறார் அன்னை.

பொன் நிறமான நிலா

யோகத்தை மேற்கொண்டவர்க்குக் காட்சி தெரியும். பகவான் ஸ்ரீ அரவிந்தர் நூற்றாண்டு (30 volumes) வெளியீட்டில் 22, 23, 24 நம்பர் வால்யூம்கள் Letters on Yoga யோகத்தைப் பற்றிய கடிதங்கள் என்ற தலைப்பில் உள்ளது. அவற்றுள் Visions and Experiences காட்சிகளும் அனுபவங்களும் என்று ஒரு வால்யூமில் ஓர் அத்தியாயம் உண்டு. ஸ்ரீ அரவிந்த அன்னை வெளியான பொழுது அவ்விதழ்களில் "அகக் காட்சிகள்' என்ற தலைப்புகளில் இக்காட்சிகளையும், அவற்றிற்குப் பகவான் தரும் விளக்கங்களையும் எழுதியுள்ளேன்.

சாதகர்கட்குக் காட்சிகள் எழும் வகைகள் ஆயிரம். கண் திறந்துள்ள போதும், தியானத்திலும், கனவிலும் காட்சிகள் வரும். பொதுவாக அவற்றை நம்ப முடிவதில்லை. பகவான், "அவை உண்மை. நம்ப மறுக்கக் கூடாது", என்று தெளிவாகக் கூறியுள்ளார். மயில் வெற்றியையும், தண்ணீர்ப் பரப்பு உணர்ச்சியையும், மலை நம்பிக்கையையும், கட்டிடங்கள் எண்ணத்தின் அமைப்பையும், ரயில், பஸ் போன்றவை யோக வளர்ச்சியையும் குறிக்கின்றன. அதேபோல் ஒளி, ஒலி, நிறம் ஆகியவற்றைப் பற்றியும் விவரமாக எழுதியுள்ளார்.

மலை மீது ஒரு வாகனம் ஏறுவதாகவும் தாம் அதில் உட்கார்ந்து போவதாகவும் கண்ட சாதகர், காட்சியில் தானிறங்கி வாகனத்தைத் தள்ளிச் சிரமப்படும் குதிரைகட்கு உதவி செய்தார். மலை யோக சாதனை; சாதனையில் ஏற்படும் சிரமத்தை அன்னையால் மட்டுமே சமாளிக்க முடியும். நான் அந்த வாகனத்தைத் தள்ள உதவுவேன் என்பது அகந்தை. சரணாகதி பூரணமாகவில்லை என்பதைக் காட்சி விளக்குகிறது என்று பகவான் விளக்குகிறார்.

மற்றொரு சாதகருக்குக் காட்சியில் நட்சத்திரம் தெரிந்து மறைந்தது. பிறகு பச்சை நிற நிலா தெரிந்தது. அது மறைந்து நீல நிலாவும், அதுவும் மறைந்து பொன் நிலாவும் தெரிந்தன என்பதை ஸ்ரீ அரவிந்தருக்கு எழுதினார். பதிலாக பகவான் அளித்த விளக்கம்.

நட்சத்திரம்    -  லோகமாதாவையும்,
பச்சை நிலா  -  ஸ்ரீ ராமச்சந்திரனையும்,
நீல நிலா        -   கிருஷ்ணபரமாத்மாவையும்,
பொன் நிலா   -  எதிர்கால அவதாரத்தையும்,

குறிக்கின்றன என்றார். எதிர்கால அவதாரம் ஸ்ரீ அரவிந்த அவதாரமா எனக் கேட்ட மறுகேள்விக்கு, "எதிர்கால அவதாரம்...'' என்று பகவான் பதிலை முடிக்கவில்லை. தாமே அவ்வவதாரம் என அவரால் சொல்ல முடியவில்லை.

சூட்சும லோகங்கள்

1959இல் அன்னை முதன் முதலில் ஸ்ரீ அரவிந்தரைச் சூட்சும உலகில் சந்தித்ததாக எழுதியிருக்கிறார். இரவில் அன்னை (subtle world) சூட்சும உலகுக்குப் போவார். ஒரு சமயம் சத்திய ஜீவியலோகத்திற்கும் போய் வந்தார். சூட்சும உலகில் ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்கும் வழக்கம் தினமும் அன்னைக்கு நீடித்தது. பகவானுக்குக் காலை டிபன் கொடுப்பதாகவும், காரில் உட்கார்ந்து பகவான் கார் ஓட்டுவதாகவும், அன்னையின் புடவையை உடுத்து வந்ததாகவும், எதுவும் உடுக்காமல் நடந்ததாகவும், பெரிய பெரிய அறைகளில் பகவான் வசித்ததாகவும், அந்த அறைகளுக்குக் கூரையில்லாமலிருந்த தாகவும், இடுப்பெல்லாம் காயம் பட்டதுபோல் கட்டு கட்டிக் கொண்டு வந்ததாகவும் அன்னை கூறுகிறார்.

சூட்சும உலகில் பகவானுக்கு இடம் உண்டு. வேண்டுமானால் அங்கே போய்ப் பார்க்கலாம் என அன்னை கூறியிருக்கிறார். சூட்சுமத்தில் பகவான் சமாதி மீது பொன்னிறமாகப் படுத்திருப்பதைக் கண்டவர், வானளாவ உயர்ந்து நின்றதைக் கண்டவர், பாண்டிச்சேரி மீது முழுவதும் பரவி நிற்பதாகக் கண்ட பக்தர்கள் உண்டு.

ஒரு பக்தருக்கு, பகவானை சூட்சும உலகுக்குப் போய்ப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகரித்துக் கொண்டே வந்தது. இது போன்ற ஆவலுள்ள பக்தர்கள் தரிசனத்தில் பகவானைக் காணாமல் ஒளியை மட்டும் கண்டுள்ளனர். ஒரு தியான மையத்தில் பகவான் படம் அதிலிருந்து வரும் ஒளியால் மறைக்கப்பட்டது. போட்டோவாக எடுத்தபொழுதும் பகவான் உருவமுள்ள இடம் ஒளியாகவே இருந்தது.

பகவானைச் சூட்சுமத்தில் தரிசிக்க விரும்பியவர் தியானத்தில் ஆழ்ந்தபொழுது இது சூட்சும லோகம் என்ற குரலைக் கேட்டார். பகவான் இருப்பிடத்தைப், பக்தர் அங்குத் தேடியபொழுது கிழக்கே பொன்மயமான ஆற்றின் ஆரம்பத்தில் பகவானிருக்கிறார் என்று பதில் வந்தது. கீழ்ப்பக்கம் போனார். பொன்மயமான ஆற்றைக் கண்டார். மலையிலிருந்து உற்பத்தியாகி ஆறு ஓடுகிறது. மலை மீதேறி வெகுதூரம் சென்றார். உற்பத்தி ஸ்தானத்தில் ஒளிமயமான நட்சத்திரத்தைக் கண்டார்.

பகவான் யோக வரலாறு

பகவான் இந்தியா வந்தபொழுது யோகத்திலோ, தெய்வ வழிபாட்டிலோ ஈடுபடவில்லை. அவர் ஒரு தேசீயவாதி. இந்திய மண்ணில் காலெடுத்து வைத்தவுடன் அவரை ஓர் ஆன்மீக அமைதி சூழ்ந்தது. அப்பொழுது அவருக்கு வயது 21. ஏழாம் வயதில் வீட்டிலிருந்து பிரிக்கப்பட்டு டார்ஜிலிங் ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கப்பட்டபொழுது, தம்முள் ஓர் இருள் சூழ்ந்ததாகச் சொல்கிறார். அவ்விருள் அவரை 14 ஆண்டு பீடித்திருந்தது. அமைதி உள்ளே நுழைந்தபொழுது அவ்விருள் அவரை விட்டகன்றது. அமைதியாக அவருள் பாய்ந்த அது மனத்தைக் கண்டது, உணர்வைத் தொட்டுப் பேரமைதியாயிற்று. அதையும் கடந்த நிலையில் அவர் உடலையே ஆட்கொண்டு அவரை அமைதிக்குள்ளாக்கியது. பரோடா மகாராஜா ஞாயிறன்று கல்லூரிக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தபொழுது அவர் படுத்துத் தூங்கினார். பதிலளிக்கவும் நினைக்கவில்லை. ஓர் அறையில் பல இளைஞர்கள் கூச்சல் போடும்பொழுது இவ்வமைதி அவரை, கூச்சலைப் பொருட்படுத்தாமல் படிக்கச் செய்தது. எப்படிப்பட்ட கலவரமானாலும், எந்தக் களேபரம் ஆனாலும் ஸ்ரீ அரவிந்தர் அசையமாட்டார். அசையாமல் மலைபோல் ஸ்தம்பித்து இருக்க உதவியது அப்பல்லோ பந்தரில் அவருள் நுழைந்த பேரமைதி.

சுதந்திரம் பெற யோகசக்தியைப் பயன்படுத்தலாம் என யோகத்தை நாடினார். லீலீ என்ற யோகியை அணுகினார். யோகம் செய்பவர் அரசியலில் பங்குகொள்ளக் கூடாது என்று எச்சரித்தார். அதை ஸ்ரீ அரவிந்தர் ஏற்கமாட்டார் என்று நினைத்தாரோ தெரியவில்லை "பயிற்சிக்காலம் வரையாவது அரசியலில் சம்பந்தப்படக் கூடாது" என்றார்.

"உட்கார், கண்ணை மூடி கவனி, எண்ணங்கள் வெளியிலிருந்து உன் தலையுள்ளே நுழைவதைப் பார்ப்பாய். அவற்றைத் தூக்கி எறி" என்று லீலீ உபதேசம் செய்தார். பகவான் குரு சொல்லியபடியே செய்தார். எண்ணம் வெளியிலிருந்து உள்ளே வரும் விந்தையைக் கண்டார். தூக்கி எறிய முயன்றார். வெற்றி கிடைத்தது. தொடர்ந்து 3 நாட்கள் செய்தார். முதல் நாளிலேயே பெரும் பலன் பெற்றார். எண்ணம் அற்றுப் போயிற்று. எண்ணம் போனபின் அவர் மனம் universal mind பிரபஞ்சத்தின் மனமாயிற்று. அதாவது மற்றவர் எண்ணங்களெல்லாம் அறிய முடிந்தது. "நிர்வாணம்'' என்ற செய்யுளில் தான் அன்று பெற்ற அனுபவத்தை விவரிக்கிறார். இதை மௌனப் பிரம்மம் என்பார்கள். இது அத்வைத சித்தியாகும். நிர்வாணச் சித்தியும் இதுவே. மனம் எண்ணமற்ற நிலையில் பிரபஞ்சத்தின் மனமாகும். அடுத்த நிலையில் உணர்வற்றுப் போனால் பிரபஞ்சத்தின் உணர்வு மையமாக யோகி மாறுவான். முடிவான நிலை உடல். உடல் தன் பழக்கங்களை விட்டுவிட்டால், பிரபஞ்சத்தின் உடலாகும். அதாவது ஒருவரைச் சந்தித்தால் அவர் உடலும், யோகியின் உடலும் இணையும். அவருக்குப் பசியிருந்தால் யோகிக்குத் தெரியும். அவருக்குக் காலில் வலியிருந்தால் யோகி அதை அறிவார். சூட்சுமமாக யோகியின் உடல் உலகம் முழுவதும் பரவித் தொட்டு அச்செய்தியை யோகிக்குக் கொண்டு வரும். பகவான் இந்த யோக நிலையைப் பிற்காலத்தில் பெற்றார்.

உலகம் அவனால் இயங்குகிறது என்பதை இந்தியர்கள் அறிவார்கள். நம் காபியில் எத்தனை சர்க்கரை மணிகள் இன்று போடுகிறோம் என்பதை நிர்ணயிப்பவன் அவனே என அன்னை கூறுகிறார். அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதை உபநிஷதங்கள் பாஷையில் அணுவும் அவனே, அசைவும் அவனே, அசைப்பதும் அவனே என்கிறார்கள். நான் மாம்பழம் சாப்பிட்டேன் என்பதில் நான் பிரம்மம் என்பதால் பிரம்மம் மாம்பழம் சாப்பிட்டார் என்றாகிறது. மாம்பழம் பிரம்மம் ஆகையால் பிரம்மம் பிரம்மம் சாப்பிட்டார் என்று மாறுகிறது. சாப்பிடுதல் என்பது பிரம்மமாதலால் நான் மாம்பழம் சாப்பிட்டேன் என்பது "பிரம்மம் பிரம்மத்தைப் பிரம்மமாக்கினார்" என்று உபநிஷத வேதாந்தம் மாற்றிக் கூறுகிறது. எல்லாம் இறைவன் செயல் எனினும் நாம், "பழம் விற்கிறது, நான் கடைக்குப் போனேன், நீ சரியில்லை", என்று கூறும்பொழுது பழத்தை, கடையை, உன்னைப் பார்க்கிறோம், இறைவனைப் பார்ப்பதில்லை. யோகம் முதிர்ந்து பிரம்ம சித்தி பெற்றவர்க்குப் பழம் விற்கிறது என்பது இறைவன் ரோட்டில் கூடையில் இறைவனைத் தூக்கிக்கொண்டு சப்த பிரம்மத்தை எழுப்பி என்னுள் உள்ள இறைவனை அழைக்கின்றான் என்பது தெரியும். அவதாரப் புருஷர்கட்கு ஆகாயத்தில் பார்வதி பரமசிவன் போவது தெரியும், அவர் பசிக்கு பார்வதி பாலூட்டுவாள்.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் யோகம் பயில ஆரம்பிக்குமுன் குதிரைவண்டியில் போகும்பொழுது அது கவிழப் போகும் நிலையில் அவர் உள்ளேயிருந்த இறைவன் வெளிவந்து விபத்தைத் தடுத்ததைக் கண்டார். விபத்து என்றவுடன் அது நடக்கக் கூடாது என ஆழ்ந்து நினைத்தார். நடந்ததை 40 வருஷங்களுக்குப் பின் காவியமாக எழுதியுள்ளார். "இறைவன்'' என்ற தலைப்பில் எழுதிய செய்யுளில்,

ஆபத்தின் பின்னால் நான் அமர்ந்தேன்...
தெருக் கூச்சல் அதிகமாக இருந்தது...
இயற்கை விதிக்கு மாறாக இறைவன்...
எழுந்து அவனுடலாகி என்னைச் சூழ்வதைக் கண்டேன்...
என் தலைக்கு மேலே இறைவன் தலை தெரிந்தது
காலனை வென்றது அவன் திருமுகம்...
அவன் பார்வைக்குக் காலம் உட்பட்டது...
வெற்றிப் பார்வைக்கு விபத்து அடங்கியது...
வந்தது போயிற்று...
இறைவன் எழுந்த நினைவு அழியவில்லை.

என்ற கருத்துகளை எழுதியுள்ளார்.

பகவானே இறைவன். அவர் அதை அவ்வயதில் அறியவில்லை. அவர் அறியாததை அவருக்கு உணர்த்த இறைவன் செயல்பட்ட விதம் அது. புத்தர் சிறு குழந்தையாக இருக்கும்பொழுது ஒரு விழாவிற்குக் குழந்தையைத் தூக்கிச் சென்றார்கள். குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டிய தாதியர் குழந்தையை விட்டு விட்டு வேடிக்கை பார்க்கப் போனார்கள். இரண்டு வயது குழந்தை எழுந்து சம்மணம் போட்டு நிஷ்டையில் இருந்தது. அவதாரப் புருஷர்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள் இவை.

பல ஆண்டில் கிடைக்கும் மௌனம் 3 நாளில் கிடைத்தபொழுதும், விபத்து தவிர்க்கப்பட்டபொழுதும், அத்வைத சித்தி அவரை நாடியபொழுதும், நிர்வாணம் தானே அவரை வந்தடைந்தபொழுதும், உன்னால் உள்ளூர இறைவனுக்குச் சரணடைய முடியுமானால், உனக்கு இனி குரு தேவையில்லை என்று லீலீ சொல்லியபொழுதும் பகவான் தம் பிறவியின் இரகஸ்யத்தை உணர்ந்தார்.

அன்னையைப் பார்த்தவுடன் இவர் தெய்வம் என அறிபவர்க்குத் தெய்வாம்சம் உண்டு என்று பகவான் கூறியுள்ளார். சிலை தெய்வமாகத் தெரிவது ஆத்ம தரிசனம். ஆன்ம விழிப்புள்ளவர்க்கும், சூட்சுமப் பார்வையுடையவர்க்கும், அவதாரப்புருஷர்கட்கும், சிலை உயிருடன் தெரிவதுண்டு.

நர்மதை நதிக்கரையில் கங்கை மடத்து சுவாமி பிரம்மாநந்தரின் சிஷ்யர் ஒருவரை, பகவான் பார்க்கப் போனார். தம்பியின் ஜுரத்தைக் குணம் செய்த நாகசன்னியாசியோ, பிரம்மாநந்தரோ அவருக்குக் குருவாக அமையவில்லை. மனிதன் 200 ஆண்டுகட்கு மேல் வாழ்ந்ததில்லை. அப்படி வாழ்ந்த ஒருவரை நர்மதை நதிக்கரையில் ஸ்ரீ அரவிந்தர் சந்தித்தார். இவர் 200ஆம் வயதில் காலில் துருப்பிடித்த ஆணி குத்தி காலமானார்.

சந்தோத் என்ற நர்மதா தீரத்தின் அருகில் உள்ள நகரையொட்டி கர்னுலி என்ற இடத்தில் காளி கோயில் ஒன்றுள்ளது. அங்கு பகவான் சென்றபொழுது சிலை உயிருடன் காட்சி அளித்தது. இறைவன் இருப்பது உண்மை என பகவான் ஏற்றுக் கொண்டதற்குத் துணையான நிகழ்ச்சியாக அமைந்தது இது. சிலையிலிருந்து அம்பாள் உயிர்பெற்று வெளிவந்து தரிசனம் அளித்தது. பகவான் தன்னையுணரவும், இறைவனை அறியவும் துணை நின்றது. "உயிர் பெற்ற தெய்வச் சிலை" The Stone Goddess என்று பகவான் இதைச் செய்யுளாக வடித்தார்.

ஜடத்துள் உறையும் ஆன்மா விழித்தெழுந்து
கல்லினுள் உறையும் தெய்வத்தைக் கண்டது.
எல்லாம்வல்ல இறைவனை அறிய முடியாது.
உயிரற்ற சிலையுள் உயிருள்ள தெய்வம் உறைகிறது.
உயிருள்ள தெய்வமும் வாய் திறந்து பேசுவதில்லை.
அனந்தத்தின் அரூபம், ரூபம் பெற்றது சிலை.
சிலையின் ரூபம் தெய்வத்தின் சொரூபமாகும்.
பூமாதேவியின் ஆத்ம நிஷ்டை அகண்டமானது.
உலகை ஆளும் உறுதி நித்திரை பூண்டது.
அழியாத அமரத்வம் அழியும் சிலையில் தெரிந்தது.
சிற்பமான சிலை சித்த சக்தியைத் தன்னுட் கொண்டது,

என்பன போன்ற ஆன்மீக உண்மைகளை அழியா இலக்கியத்தின் பகுதியாக ஸ்ரீ அரவிந்தர் எழுதினார். அவதாரப் புருஷர்கள் ஒரு கட்டத்தில் இறைவனை அறிகிறார்கள். மற்றொரு கட்டத்தில் தம்மையுணர்கிறார்கள். மனித உடலில் வாழ்வதால் இரண்டையும் அறிந்த பின்னும் தன் சொந்த விருப்பத்தையே பின்பற்ற முனைவது அவதாரத்திற்கும் உரியது.

பகவான் யோகம் பலித்த பின்னும், வாசுதேவ தரிசனம் பெற்ற பின்னும், அசரீரி சொற்கேட்டுப் புதுவை வந்த பின்னும், அன்னை அவருடன் சேர்ந்த பின்னும், தம் மனம் சுதந்திரப் போராட்டத்தை நாடியதைக் கண்டார். அவற்றை அறவே விட்டு யோகத்தை ஒரே இலட்சியமாக ஏற்பது பகவானுக்கு எளிதாக இல்லை. அவ்வாழ்வின் பல கட்டங்களிலும் காளி தரிசனம் முக்கியமானது.

சங்கராச்சாரியார் குன்று

அவதாரப் புருஷர் என்பவரை இறைவனின் பகுதி எனவும், விபூதி (vibhuti) என்பது மின்னல்போல் அச்சக்தியின் ஓரிழை எனவும், அதற்கடுத்த நிலையில் நாட்டுத் தலைவர்களையும், genius மேதைகளையும் ஸ்ரீ அரவிந்தர் சொல்கிறார்.

தன் முயற்சியின்றி ஆன்மீக அனுபவம் பெறுபவர் அவதாரம். சிறு முயற்சிக்குப் பெரும் பலன் பெறுபவர் விபூதி.

காஷ்மீரில் தக்தி - சுலைமான் என்ற மலை மீது பகவான் நடந்து கொண்டிருந்தார். இந்த இடம் Seat of Solomon, சங்கராச்சாரியார் கோவில் உள்ள இடம் ஆகியவை அடுத்தடுத்துள்ளன.

Infinite என்பது அனந்தம். அனந்தம் அனந்தமான செயலாகவுமிருக்கும். நாம் காணும் காட்சிகள், மரம், செடி, காற்று, வெளி, மனிதர், வாகனம், புயல், மலை என ஆயிரம் செயல்களாக அனந்தன் வெளிப்படுகிறான். அதே அனந்தன் சூனியமாகவும் vacant உள்ளான். சூன்ய நிலையை Vacant Infinite என்று கூறுகிறார்கள். நாம் காணும் அத்தனை செயல்களும் சூன்யத்தில் சூட்சுமமாக உள்ளன. அங்கு மறைந்திருந்து பிறகு வெளிப்படுகின்றன என்பது தத்துவம். Infinite என்பது Space முடிவில்லாத இடம், "வெளி" யாகும். Eternity என்பது முடிவற்ற காலம். Infinite space, spaceless vast, formless vast என்பவை அனந்தனுக்குரிய சொரூபங்களில் சில. அதன் அடுத்த அம்சம், eternity காலத்தைக் கடந்த நிலை. அதையும் Time eternity, Timeless eternityஎன்று பல நிலைகளில் கூறுவர். Active Brahman, Passive Brahman என்பவைப் பிரம்மத்தின் வெளிப்பாடுகள். Vacant Infinity என்ற நிலை இவற்றுள் ஒன்று. அந்நிலை பகவான் நடந்து கொண்டிருக்கும்பொழுது அவருள் தானே, அவர் முயற்சியின்றி எழுந்தது. "அத்துவைதம்" என்ற தலைப்பில் எழுதிய செய்யுளில் இதை பகவான் விளக்குகிறார்.

காலத்தின் விளிம்பிலிருந்து அனந்தனைக் கண்டேன். வாழ்வின் வண்ணம் மறைந்தபின் அரூபமான தன்மை என்னைச் சூழ்ந்தது. பெயர் தெரியாத சத்தியம், சிருஷ்டிக்கு அப்பாற்பட்ட நிலையில் உலகின் சுவடின்றி ஆதியும், அந்தமுமின்றி சாந்தியான சூன்யமாக, அமைதியாகச் சொல்லிழந்த இயற்கையின் இரகஸ்யமாக என்னை வந்தடைந்தது.

அத்துவைதம், நிர்வாணம், மௌனம், உயிர்பெற்ற நிலை, உயிரைக் காத்த இறைவன் ஆகியவை ஸ்ரீ அரவிந்தருடைய ஆன்மீக அனுபவங்களாகும்.

உத்தரபரா பிரசங்கம்

அலிப்பூர் ஜெயிலிலிருந்து விடுதலையானபின் இதுவே அவர் முதல் சொற்பொழிவு. அப்பிரசங்கத்தைக் கேட்டவர் ஒருவர், தற்சமயம் ஆசிரமத்திற்கு வந்தார். அப்பொழுது பள்ளி மாணவராக இருந்த ஹரதன் பக்ஷ் என்பவர் சொற்பொழிவைக் கேட்கப் பிரியப்பட்டார். அன்று ஸ்ரீ அரவிந்தரை வரவேற்க ஸ்டேஷன் நிரம்பிய கூட்டம். பள்ளிக்கூடங்கள் விடுமுறை அளிக்கப்பட்டன, ஹரதன் ஸ்டேஷனில் மரத்தில் உட்கார்ந்து ஸ்ரீ அரவிந்த தரிசனம் பெற்றார். இவர் பிற்பாடு யாரைக் கண்டாலும் கைகுவித்து, உடலைத் தாழ்த்தி வணங்குவார். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்றபொழுது, "நான் இதை ஸ்ரீ அரவிந்தரிடமிருந்து கற்றேன், உத்தரபரா ஸ்டேஷனில் அவருக்கு வரவேற்பளிக்க வந்த அத்தனை பெயருக்கும் ஸ்ரீ அரவிந்தர் இதுபோன்று நமஸ்காரம் செய்தார். அதனால் நான் அப்படிச் செய்கிறேன்' என்றார்.

சொற்பொழிவை ஏற்றபொழுது அவர் மனத்தில் எண்ணம் எதுவும் இல்லை. எப்படிப் பேசுவது என்று நினைத்தபொழுது உள்ளிருந்து நீ பேசு, பேச்சு தானே எழும் என்று குரல் எழுந்தது. கூட்டத்தின் முன் நின்றார். தலையில் ஓர் எண்ணமும் இல்லை. கை கூப்பி வணங்கினார். சிரம் தாழ்ந்தபொழுது தலையினுள் எண்ண அலைகள் பிரவாகமாக நுழைந்தன. அதுவே உத்தரபரா சொற்பொழிவாகும்.

"நான் ஞானியில்லை, பக்தனில்லை, இந்த நாட்டு மக்கட் செல்வத்தைப் போற்றுபவன். எனக்கு தெய்வத்தின் மீது அசையாத நம்பிக்கையும் இல்லை. நான் நாத்திகன். எதையும் நம்ப மறுப்பவன். கண்ணால் கண்டதையும் ஏற்க மனமில்லாதவன், எனினும் வேதமும், கீதையும் என்னைக் கவர்ந்தன. இந்து மதம் என்பது சனாதனதர்மம். வேதாந்தம் பெரியது. அதன் சத்தியம் உலகுக் குரியது. நான் எதையும் கேட்கவில்லை. பிறர்போல் எதையும் கேட்க எனக்குத் தோன்றாது. இந்த நாட்டு மக்களுக்குச் சேவை செய்ய நான் வாழவேண்டும். நாடு விடுதலை பெற்று, சுபிட்சமடைய வேண்டும்,"

என்ற பொருள்பட சொற்பொழிவை முடித்தார். உலக இலக்கியத்தில் இடம்பெறும் சொற்பொழிவு இது.

பிராணாயாமம்

யோகத்தைப் பயிலும்படி ஸ்ரீ அரவிந்தருக்குப் பிறர் சொல்லியபொழுது, அவர் அதை ஏற்கவில்லை. ஓர் இன்ஜினீயர் அவரை நர்மதைக் கரையிலுள்ள பிரம்மாநந்தா சுவாமியிடம் அழைத்துச் சென்றார். பகவான் இவரைப்பற்றி ரொம்ப உயர்வாகக் கருதினார். ஆனால் குருவாக ஏற்கவில்லை. இந்தச் சமயம் ஸ்ரீ அரவிந்தர் பிராணாயாமம் செய்ய ஆரம்பித்தார். அது அவருக்கு மனத்தெளிவை (பிரகாசமயம்) கொடுத்தது. தினமும் 10 வரி செய்யுள் எழுதச் சிரமப்படும் நிலையில் பிராணாயாமம் 200 வரி செய்யுள் எழுதச் செய்தது. உடல்நிலை உயர்ந்தது. ஞாபகசக்தி கூர்மையாயிற்று.

குந்தளினி என்பது உடலின் சூட்சுமச் சக்திகள் சேர்ந்து உறைவது. இது மூலாதாரம் எனப்படும். முதுகெலும்புக்கு அடியிலுள்ள சக்கரத்திலுள்ளது. யோகம் குந்தளினியை அசைத்தால் அது பாம்பு சீறுவதைப்போல் எழும், எழுந்து அடுத்தடுத்த சக்கரங்கள் வழியாக உயர்ந்து சகஸ்ரதளம் (ஆயிரம் தாமரை) வந்தால் யோகி மோட்சம் அடைவார் என்பது யோகமரபு.

பூரணயோகத்தில் முதலில் விழித்தெழும் சக்கரம் சகஸ்ரதளம். அது வழியே தெய்வ சக்தி இறங்கி உடல் முழுவதும் பரவி திருவுருமாற்றம் ஏற்படும். ஸ்ரீ அரவிந்தருக்குக் குந்தளினி விழித்தெழுந்தபொழுது பிற யோகிகட்கு ஏற்படுவதுபோல் மோட்சம் - மரணத்தின் மூலம் - கிடைக்கவில்லை. குந்தளினி எழுந்தபின் யோகி அதிகநாள் உயிரோடு இருக்க மாட்டார் என்ற வழக்கம் மாறி ஸ்ரீ அரவிந்தர் நெடுநாளிருந்தார். இதுவே அன்னைக்கும் ஏற்பட்டது.

தவத்தின் மரபிலில்லாத ஒன்று ஸ்ரீ அரவிந்தருக்கும், அன்னைக்கும் இவர்கள் யோகத்தில் நிகழ்ந்தது. கபாலவாயில் திறந்து அதன் மூலம் அவர்கள் மூச்சுவிட்டனர்! இது ஒரு புதிய யோக அனுபவம்.

பிற யோகங்களில் மோட்சம் இறுதியானது என்பதால் குந்தளினி மோட்சத்தில் முடிகிறது. அதாவது யோகி சமாதியாகிறார். பூரணயோகத்தில் அகந்தை அழிந்து மோட்சம் பெறுவதால், அந்நிலை ஸ்ரீ அரவிந்தருக்கு முதலிலேயே ஏற்பட்டு விட்டதால், குந்தளினி மோட்சம் கொடுப்பதோ, அல்லது ஆயுளை முடிப்பதோ இல்லாமல் போய்விட்டது.

பூரணயோகம் மற்ற யோக அம்சங்களை தன்னுட்கொண்டாலும், அடிப்படையில் மற்ற யோக அம்சங்களிலிருந்து மாறுபட்டிருக்கும். அந்த மாறுதல்களை இந்நிகழ்ச்சிகள் குறிக்கின்றன.

விவேகானந்தர்

விவேகானந்தர் மோட்சத்தை மறுத்தவர். எல்லா ஆத்மாக்களும் மோட்சம் பெறும்வரை, தமக்கு அது தேவையில்லை என்றவர். உலகம் இருளிலிருந்து விடுபட விவேகானந்தர் சூட்சும உலகிலிருந்து செயல்படுகிறார்.

ஸ்ரீ அரவிந்தரை அவர் சிஷ்யர்கள் supermind சத்திய ஜீவியம் உங்கள் சொந்தமான கருத்தா என்று கேட்டபொழுது, இல்லை சத்திய ஜீவியம் என்ற கருத்து என்னுடையதன்று என்றார். தாம் நிர்வாணம் எய்தியபின் மனம் சிந்தனையற்றிருந்ததால், "நான் சிந்தனையே செய்யவில்லை'' என்றார். ஆனால் அதுவே முடிவானதன்று என்ற உள்ளுணர்விலிருந்தபொழுது அவர் ஜெயிலுக்குப் போனார்.

ஜெயிலில் தம் அருகில் விவேகானந்தர் நிற்பதைக் கண்டார். விவேகானந்தர் ஸ்ரீ அரவிந்தருக்கு ஏதோ ஒன்றைக் குறிப்பால் உணர்த்த விரும்பி அதைச் சுட்டிக்காட்டினார். Supermind என்பது ஸ்ரீ அரவிந்தரே பயன்படுத்திய சொல். அச்சொல் அவருக்கோ, அன்னைக்கோ திருப்தி தரவில்லை. விவேகானந்தர் "இதுவே அது, இதுதான் அது'' என எதையோ குறிப்பிட்டுக் காட்டினார். 15 நாள் மீண்டும் மீண்டும் வந்தார். ஸ்ரீ அரவிந்தர் புரிந்துகொள்ளும்வரை விவேகானந்தர் அவரை விடுவதாக இல்லை. 1902இல் விவேகானந்தர் சமாதியானார். பகவானுக்கு உபதேசம் செய்தது 1910இல்.

நிர்வாணம் ஸ்ரீ அரவிந்தருக்குத் தேவையான அஸ்திவாரத்தைக் கொடுத்தது. பகவான் விரும்பியது வேறு. விவேகானந்தரும் அதுபோன்ற ஒரு முயற்சியை மேற்கொண்டதால், உலகம் உய்ய விரும்பிச் செயல்பட்டார். அது நிர்வாணத்தால் முடியாது. நிர்வாணம் அமைதியை அளிக்கும். கடந்த காலத்தை நேர் செய்து எதிர்காலத்திற்கு அஸ்திவாரமிட்டு மனிதகுலம் ஆன்மீக முன்னேற்றம் பெறுவதே விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் ஆகிய இருவருக்குமுள்ள குறிக்கோள். அதற்குரிய சக்தியை அத்துவைதம், நிர்வாணம், மௌனம் தாராது. "இதோ இதைப் பார்'' என விவேகானந்தர் சத்திய ஜீவியத்தைச் சுட்டிக்காட்டினார். திரும்பத்திரும்ப அதையே 15 நாள் சுட்டிக்காட்டினார். ஸ்ரீ அரவிந்தர் புரிந்துகொண்டபின் விவேகானந்தர் வருவதை நிறுத்தினார்.

மனித சுபாவம்

தம் யோக சக்தியால் உலகை மாற்றவேண்டும், மனித சுபாவத்தை அடிப்படையில் மாற்றவேண்டும், உலகின் தீமைகளை அழிக்க வேண்டும், என்ற நோக்கத்துடன் தாம் யோகத்தை ஆரம்பித்ததாகவும், அதற்காகப் புதுவைக்கு வந்ததாகவும் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

மகான்கள் உலகை மாற்ற முயன்றனர். ஸ்ரீ அரவிந்தர் கூறுவதற்கும் அதற்கு முன் சொல்லியதற்கும் உள்ள வித்தியாசம் ஒன்று. உலகை மாற்றக்கூடிய சக்தியை இதுவரை எவரும் பெறவில்லை. அது எங்குள்ளது எனவும் அவர்கள் அறியவில்லை. ஏசு அன்பைக் கொண்டு வந்தார். Power சக்தியில்லாமல் அன்பு உலகுக்கு வந்தால் அது அழிக்கப்படும் என்ற சட்டப்படி அவர் சிலுவையில் அறையப்பட்டார். புத்தர் ஞானத்தைக் கொண்டுவந்தார். ஞானம் தெளிவு தரும். புத்தர் அளித்த ஞானம் இந்திய எல்லையைக் கடந்து ஆசியா முழுவதும் பரவிற்று என்பது உண்மை. ஞானத்திற்குத் தெளிவுண்டு, திறனில்லை. ஸ்ரீ அரவிந்தர் உலகை மாற்றும் சக்தி சத்திய ஜீவியம் எனக் கண்டு கொண்டார். அதை விவேகானந்தர் அவருக்குக் கற்பித்தார். சக்தியைக் கண்டு கொண்டதுடன், அதைத் தான் பெற்றார். உலகை மாற்றக்கூடிய சக்தி சத்திய ஜீவியம். அதைத் தம் ஆன்மாவிலும், உடலிலும் பெற்றார். பெற்ற பின் உலகை மாற்ற விரும்பினார். உலகை மாற்றக்கூடிய சக்தியைக் கையில் வைத்துக்கொண்டு, உலகை மாற்ற விரும்பியவர் ஸ்ரீ அரவிந்தர். அதை உலகம் நேரடியாகப் பெறத் தயாராக இல்லை என்பதால் மறைமுகமாக, சூட்சுமமாக உலகுக்குக் கொடுத்தார். உலக யுத்தத்தை வென்று, அடுத்த யுத்தத்தைத் தடுத்து, ஆயுத தளவாடங்கள் உலகை அழிப்பதைத் தடுத்து, வறுமையைப் போக்க உலக அரசுகள் மூலம் செயல்பட்டு, இதற்கெல்லாம் மூல காரணமாக விளங்கும் இந்தியாவும் விடுதலை அடைய (இந்தியாவுக்கு விடுதலை தந்து) தம் சக்தியை பகவான் வெளிப்படுத்தினார்.

துப்பாக்கிப் பயிற்சி

அன்னைக்கு occult training சூட்சும உலகில் பயிற்சியுண்டு. பாரிஸில் அப்பயிற்சி செய்பவர்களை அணுகி, அவர்களுடன் ஆப்பிரிக்கா போய் அவர் பயிற்சி பெற்றார். ஸ்ரீ அரவிந்தருக்கு அதுபோன்ற பயிற்சியோ, அனுபவமோ, ஆர்வமோ இல்லை. உடலை விட்டு வெளியேறுவது அவற்றுள் முதற் பயிற்சி. தியோனும், அவர் மனைவியும் அன்னைக்கு அப்பயிற்சியை அளித்தனர். நம் உடலை விட்டு வெளியில் போனபின், அந்தச் சூட்சும உடலைவிட்டும் வெளிவரலாம். அன்னை அதுபோல் 12 முறை ஒவ்வோர் உடலையும் விட்டு வெளிவரும் பயிற்சியைப் பெற்றவர். மேகமண்டலச் சஞ்சாரம், ஆவி உலகத் தொடர்பு, automatic writing தானே கை எழுதுவது போன்ற ஏராளமானவை அவற்றுள் உண்டு. அப்படி உடலை விட்டு வெளியில் வந்து பல்வேறு லோகங்களுக்குப் போனபொழுதுதான் அன்னை வாழ்வின் மந்திரத்தைக் கண்டார்கள். மூழ்கவிருந்த கப்பலைக் காப்பாற்ற ஒரு முறை உடலை விட்டு வெளிவந்தார் அன்னை.

ஸ்ரீ அரவிந்தர் இவற்றில் ஆர்வம் காண்பிக்கவில்லை. ஆனால் அவர் யோக முதிர்ச்சியால் சில சக்திகள் தாமே அவரை வந்தடைந்தன. விவேகானந்தர் ஒரு.புத்தகத்தின் முதல் வரியைப் படித்தால், அப்புத்தகம் முழுவதும் தன்னுள் வருவதைக் காண்பார். அந்தச் சக்தியும் ஸ்ரீ அரவிந்தருக்குத் தானே வந்தவற்றுள் ஒன்று. தானே கை எழுதுவதை அவருடனிருந்தவர்கள் அறிந்து அவரை அடிக்கடி எழுதச் சொல்லியிருக்கிறார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சரை அழைத்து அவரை ஒரு முறை எழுதச் சொன்னார்கள். அப்பொழுது காலமான தேசீயத் தலைவர்களையும் அழைத்து ஸ்ரீ அரவிந்தரை எழுதும்படிக் கேட்டுக் கொண்டார்கள். சிறிது காலத்திற்குப் பின் பகவான் அதைச் செய்யவில்லை.

N.C.Cஇல் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு துப்பாக்கிப் பயிற்சி கொடுத்தார்கள். வெகுதூரத்தில் பெரிய பலகையில் வட்டங்கள் போட்டு, வட்டத்துள் வட்டம் போட்டு மையத்தில் புள்ளி வைத்திருந்தார்கள். புள்ளியே இலக்கு. முதலில் துப்பாக்கிப் பிடிக்க, பின் சுட கற்றுக்கொள்ள வேண்டும். பலகையில் குண்டுபட்டால் முன்னேற்றம். பலநாள் பயிற்சியின் பின் குண்டு வட்டத்தினுள்ளும் சிறுவட்டத்தினுள்ளும் விழும். புள்ளியில் வீழ்ந்தால் குறியை எட்டியதாகப் பொருள். முதல்நாள் துப்பாக்கி பிடித்து 5 முறை சுட அனுமதித்த N.C.C மாணவர் 5 முறையும் புள்ளியில் சுட்டார். அவருக்கும் அவரைக் கண்டவர்கட்கும் வியப்பான செய்தி. உடல் சூட்சுமமாக இருந்தால் இது பலிக்கும்.

ஓர் ICS ஆபீசர் வீட்டிற்குப் பகவான் போனபொழுது துப்பாக்கிச் சுடும் விளையாட்டை ஆரம்பித்தனர். மற்றவர்கள் பயந்தனர். பகவானை அழைத்தனர். அவருக்குப் பழக்கமில்லை. மறுத்தார், வற்புறுத்தலால் ஒப்புக் கொண்டார். ஒரு தீக்குச்சியின் மருந்து முனையை இலக்காக தூரத்தில் வைத்தனர். மூன்று முறையும் பகவான் குண்டு இலக்கை எட்டியது அனைவருக்கும் ஆச்சரியம், யோகத்தால் ஏற்பட்ட சூட்சுமச் சக்தி அது, அவர் பயிலாமல் அவரை வந்து சேர்ந்தது. ஒரு புத்தகத்தை அரை மணி படித்து விட்டு வைத்துவிட்டார். அவர் உடனிருந்தவர்கள் கேட்டதற்கெல்லாம் அப்புத்தகத்தை மனப்பாடம் செய்தவர்போல் பதிலிறுத்தார். லகிமா என்ற சித்தும் அவருக்கு அதேபோல் வந்தது. திரிகாலத் திருஷ்டியும் தானே பெற்றார் பகவான். மனம் மௌனமானபின் நான் எதையும் நினைப்பதில்லை, நினைக்க முடிவதில்லை என்று ஒரு முறை கூறினார்.

மேதைகள்

ஐரோப்பிய நாகரீகம் என்று சரித்திரம் கூறுவது கிரீஸில் உற்பத்தியானது. ஏதென்ஸ் மாநகரம் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்களையும் அவர்களைத் தொடர்ந்து ஏராளமான கணித நிபுணர்களையும், வான சாத்திர வல்லுநர்களையும், பெருங்கவிகளையும் அந்தச் சமயத்தில் உற்பத்தி செய்தது. ஐரோப்பியரைக் காட்டுமிராண்டிகள் என்று இத்தாலி கிரீஸிடமிருந்து நாகரீகத்தைப் பெற்ற பின் வர்ணித்தார்கள். வடக்கேயிருந்து வரும் காட்டுமிராண்டிகள் என ஐரோப்பியரை நாகரீகம் பெற்ற இத்தாலி மக்கள் அழைத்தனர். அவர்கள் பெற்ற நாகரீகம் அவர்கட்கு கிரீஸ் கொடுத்தது. ஆர்கிமிடீஸ், லியோனார்டோ, கலிலியோ, கோபர்னிகஸ், நியூடன், டாண்டே, கர்த்தே, வால்டேர், ரூஸோ ஆகிய மேதைகளை ஐரோப்பா பல நூற்றாண்டுகளில் உற்பத்தி செய்தது. ஆனால் கிரீஸ் ஒரு நாடு மட்டும் அத்தனை மேதைகளையும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் எழுப்பியது. உலகத்தில் மனம் பிறந்த நாடு கிரீஸ் என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். அறிவு வளர்ந்து, முதிர்ந்து மனம் பிறந்ததால் அடுத்தடுத்து பல மேதைகள் அன்று அந்த நாட்டில் பிறந்தனர், என்பது விளக்கம்.

இந்தியாவுக்கு லண்டனிலிருந்து திரும்பி வந்தவுடன் ஸ்ரீ அரவிந்தர் நம் மக்கள் நம் கலாச்சாரத்தைப் புறக்கணித்து அன்னிய கலாச்சாரம் கொடுத்த அர்த்தமற்ற கல்வியை ஆர்வமாகப் படித்து, மனத்தை அடிமைப்படுத்திக் கொண்டதைக் கண்டு வருத்தப்பட்டார். ஒரு சமுதாயம் வளரும்பொழுது அதன் சிறப்பு வெளிப்படாது. வளர்ச்சி, முடிந்து முதிர்ந்தவுடன் பலன் வெளிவரும். அது சாம்ராஜ்ஜியங்களை நிறுவுவதாகவோ, இலக்கியங்களை உற்பத்தி செய்வதாகவோ, புதிய ஞானத்தைக் காண்பதாகவோ, மகான்களை உற்பத்தி செய்வதாகவோ அமையும்.

எதைச் செய்தாலும் அது தொடர்ந்து வெற்றியாக அமையும். எலிசபெத் ராணியின் காலத்தில் ஷேக்ஸ்பியர் வந்தார். பிறகு மில்டன் எழுந்தார். அவரைத் தொடர்ந்து பெருங்கவிகள் பலர் வந்தபடியிருந்தனர். இது எந்த நாட்டிலும் காணப்படுவது.

இந்தியாவுக்கு அந்தத் தகுதியுண்டு. அதன் தகுதி கிரீஸ் நாட்டைவிட, இங்கிலாந்தைவிட, ஐரோப்பாவைவிட உயர்ந்தது. கிரீஸில் உற்பத்தியானது மனம், இங்கிலாந்தில் எழுந்தது இலக்கியம், ஐரோப்பாவில் வந்தது விஞ்ஞானம், இவையெல்லாம் மனமும் அறிவும் உற்பத்தி செய்பவை. இந்தியாவின் திறன் ஆன்மீகம். மனம் அந்நிய கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டதிலிருந்து விடுபட்டு, நாட்டின் பொக்கிஷமான ஆன்மீக அடிப்படையில் கல்வியைப் பாராட்டினால், தொடர்ந்து மேதைகள் வரிசையாக எழுவர் என பகவான் கூறுகிறார்.

உண்ணாவிரதம்

கண் விழித்தல், உண்ணாவிரதம், ஒருபொழுது என்பவை நம் சம்பிரதாயத்தில் உண்டு. இவை சாதாரண மனிதனுக்கு. இவற்றுள் கடுமையான முறைகளுண்டு. அவை யோகிகட்கு. ஆணியால் படுக்கை செய்து அதன் மீது படுப்பது, சாட்டையால் அடித்துக் கொள்வது, சாப்பாட்டில் சாம்பலைக் கலந்து சாப்பிடுவது போன்றவை அவை.

பகவான் செய்த யோகத்திற்கு அவை புறம்பானவை. லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபொழுது, உணவுப் பற்றாக்குறையை ஓரளவு சரிக்கட்ட திங்கள் கிழமை இரவுச் சாப்பாட்டை அனைவரும் விட்டுவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஒரு வேளை சாப்பிடப் போவதில்லை எனில் அதற்கு முன் வேளையிலும், அடுத்து வரும் சாப்பாட்டிலும் வயிறுதானே சரி செய்து கொண்டு அந்த இழந்த சாப்பாட்டைச் சாப்பிடும் என அன்னை கூறினார். கண் விழித்தாலும், தினமும் தூக்கத்தைக் குறைத்தாலும் உடல் தானே இழந்த தூக்கத்தைப் பின்னால் சரி செய்யும் என்கிறார் பகவான்.

அவர் புதுவையில் 23 நாள் உண்ணாவிரதமிருந்தார். ஜெயிலில் உண்ணாவிரதமிருந்தார். அவர் உண்ணாவிரதமிருந்தபொழுது தமக்கு உடலில் தெம்பு குறையவில்லை. வெளியிலிருந்து சக்தி உள்ளே நுழைவதைக் கண்டேன் என்கிறார். 23 நாள் சாப்பிடவில்லை எனினும் தினமும் பல மணி நேரம் எழுதவும், நடக்கவும் முடிந்தது. விரதம் முடிந்த பின் உணவைச் சிறிது சிறிதாக அதிகப்படுத்த வேண்டும் என்ற சட்டத்தை விட்டு முதற் சாப்பாட்டையே வழக்கம்போல் சாப்பிட்டதாகவும் எழுதுகிறார்.

உண்ணாவிரத்தால் உடல் நலிவு ஏற்படவில்லை. தெம்பு குறையவில்லை என்றாலும், எலும்பினுள்ளிருந்து சேகரம் செய்து வைக்கப்பட்ட சக்தியை உடல் அவ்விருபத்து மூன்று நாட்களும் பயன்படுத்தியது. அக்குறையை தன்னால் நிவர்த்தி செய்ய முடியவில்லை என்றார்.

மகான்களின் மகிமை என்பதை நாம் அறிவோம். மகிமை, லகிமை, கரிமை என மூன்று சித்திகள் உண்டு. லகிமை என்பது உடல் தன் கனத்தை இழப்பது. கடப்பையிலிருந்து ஒரு சாமியார் தமிழ்நாடு வந்து பல ஊர்களில் நீரில் பத்மாசனம் போட்டுப் படுத்து மிதந்து சொற்பொழிவாற்றினார். உடல் கனத்தை இழந்து தரையிலிருந்து தானே எழுவதை லகிமை என்பார்கள். ஸ்ரீ அரவிந்தர் யோகத்தில் இவற்றிற்கெல்லாம் இடம் இல்லை. இந்தச் சித்துகள் அவரைத் தேடி வந்தன.

ஜெயிலில் இருக்கும்பொழுது தம்முடல் தானே தரையிலிருந்து எழுவதைக் கண்டார். சுவரோரம் இருந்ததால் ஒரு பகுதி மட்டும் தரையிலும், மற்றவை காற்றில் எழுந்து சுவரைச் சார்ந்துமிருந்தன எனவும் கூறுகிறார்.

யோகம் முதிர்ச்சியடையும்பொழுது சில சித்துக்கள் தாமே வருவதுண்டு, அதுபோல் பகவான் பெற்றவை இவை.

கவர்னர்

கல்கத்தா கவர்னர் ஜெயிலில் வந்து ஸ்ரீ அரவிந்தரைக் கண்டார். அவரது கண்கள் யோக தேஜஸ் பெற்றிருந்தன. சாதாரண மனிதனுடைய கண்களாக அவையில்லை. பிறருடைய ஆன்மாவைக் காணும் கண்கள் அவை. கொலைகாரன் நெஞ்சில் வாசுதேவனைக் கண்டவை. இந்தக் கவர்னரைக் கிருஷ்ணனாகக் கண்டிருப்பார் ஸ்ரீ அரவிந்தர். கல்லும், மண்ணும், மரமும் உயிருள்ளவை எனக் கண்ட ஸ்ரீ அரவிந்தரின் கண்கள் கவர்னருக்கு இது சாதாரணக் கண்ணில்லை என்று தோன்றியதுடன், இவை பைத்தியத்தின் கண்கள் என முடிவாகத் தோன்றின. உடன் வந்த அதிகாரியிடம் தம் கருத்தை அவர் வெளியிட்டார்.

பாண்டிச்சேரியில் பாரோன் என்றொரு கவர்னரிருந்தார். அவரை அன்னை போய்ச் சந்திப்பதுண்டு. .பிற்காலத்தில் அவர் அன்னை பக்தரானார். ஸ்ரீ அரவிந்தரிடம் ஒரு பிரெஞ்சுப் பேராசிரியரை அழைத்து வந்தார். வந்தவர் ஸ்ரீ அரவிந்தரின் அறிவு மகத்தானது, இருநாடுகளும் அவர் தலைமையில் ஓர் ஆராய்ச்சிக் கூடம் நிறுவ வேண்டும் என்றார். பாரோன் பகவான் முன் மண்டியிட்டு வணங்கினார்.

ஜட்டி என்பவர் கவர்னராக இருந்தபொழுது வாரம் ஒரு முறை அன்னையைத் தரிசிக்க வருவார். தரிசனம் முடிந்தபின் அன்னை அறையில் சற்று நேரம் உட்கார்ந்திருப்பதும் உண்டு. இங்கிருந்து ஒரிசாவுக்குக் கவர்னராகப் போனார். பிறகு அவர் உப ஜனாதிபதியானார். 6 மாதம் ஜனாதிபதியாகவுமிருந்தார்.

கோவாவிலிருந்து சபாநாயகராக இருந்த மற்றொருவர் கவர்னராக இருந்தார். பொதுவாக எந்தப் புதுவை கவர்னரும் அன்னையை வந்து தரிசிப்பார்கள். இவர் ஆசிரமம் இருப்பதைக் கண்டு கொள்ளவில்லை. கொஞ்சநாள் கழித்து ஞாயிறுதோறும் சமாதிக்கு வர ஆரம்பித்தார். அவர் நண்பர்கள் ஏன் இந்த மாற்றம் என்று கேட்டார்கள், "கனவில் ஸ்ரீ அரவிந்தர் தோன்றினார். இவ்வளவு அருகிலிருந்தும் என்னை வந்து பார்க்கவில்லையே? என்று கேட்டார்" என்று கூறினார்.

அன்னையின் சகோதரர் மடகாஸ்கர் தீவில் கவர்னராக இருந்தார். பிரிட்டிஷ் சர்க்கார் பிரெஞ்சுச் சர்க்காரை அணுகி ஸ்ரீ அரவிந்தரைப் புதுவையை விட்டு ஆப்பிரிக்காவில் ஒரு பிரெஞ்சுக் காலனிக்கு அனுப்பவேண்டும் என்று கேட்டது. இது அன்னைக்குத் தெரிந்தது. தம் சகோதரரிடம் சொன்னார். சகோதரர் பாரிஸில் அந்த ஆபீசில் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிய பேப்பரை அடியில் போட்டு வைக்கச் சொன்னார். எக்காரணத்தை முன்னிட்டும் நான் புதுவையை விட்டு அகலமாட்டேன் என்ற ஸ்ரீ அரவிந்தரின் உறுதி பூர்த்தியாகியது. பாரதியும் ஸ்ரீ அரவிந்தரை ஆப்பிரிக்காவுக்குப் போகலாம் என்றார். ஸ்ரீ அரவிந்தர் மறுத்துவிட்டார்.

யோகம் செய்பவர்கள் முகம் பிரகாசமாக இருக்கும். அதைத் தேஜஸ் என அறிவோம். உடலில் இரத்தத்தில் ஊறும் பிராண சக்தி பிரம்மச்சரியத்தால் சேகரம் செய்யப்பட்டு மீண்டும் இரத்தத்தில் சேருவதால் உடல் வெப்பமாக இருக்கும். அது உள்ளங்கையில் அதிகமாக இருக்கும். தன்னுடைய வியாதியையே போக்கும் தன்மையுடையது அந்த அக்னி.

ஸ்ரீ அரவிந்தர் கரிய நிறம். யோகத்தால் அவர் நிறம் மாற ஆரம்பித்து முடிவில் கருமையே காணோம் என்ற நிலை ஏற்பட்டது, சமாதியடைந்த பின்னர் பொன்னிறமாகச் சில நாளிருந்தது.

யோகம் உடலை வேறு வகையாகவும் மாற்றும். அன்னையில் உடல் நடுவில் கொஞ்ச நாள் கருத்திருந்தது. தாகூர் அவரை ஜப்பானில் சந்தித்திருக்கிறார். பகவானைத் தரிசிக்க வந்தவருக்கு அன்னையின் தோற்றம் நிறமாற்றத்தால் புரியவில்லை. யார் அது எனக் கேட்க வேண்டியதாயிற்று.

புராணி என்பவர் குஜராத்திலிருந்து பகவானைச் சந்தித்து மீண்டும் குஜராத் போய்த் திரும்பி வருவதற்குள் பகவான் தோற்றம் அடையாளம் தெரியாததுபோல் தோல் நிறம் creamy white வெண்மையான கிரீம் கலராயிற்று, "என்ன ஆயிற்று?" என ஆச்சர்யமாக அவர் கேட்ட கேள்விக்கு, பகவான் பதில் சொல்லாமல் புராணி புதியதாகத் தாடி வைத்திருப்பதைக் காட்டி "என்ன ஆயிற்று?" என்று கேட்டார்.

உபநிஷத ரிஷிகளுக்குச் சித்தியடைந்த பின்னர் மலத்தின் அளவு பெருவாரியாக குறைந்து விடும் என்று ஒருவர் பகவானிடம் கூறினார். "அப்படியானால் எனக்கும் அந்தச் சித்தியுண்டு போலிருக்கிறதே" எனக் கேலியாகக் கூறினார். ஒரு முறைதான் பகவான் ஒரு நாளில் சிறுநீர் கழிப்பார். அது இரண்டாம் முறை ஏற்பட்டால் "இன்று ஜலவிருஷ்டி தவறிவிட்டது" என டைரியில் குறிப்பு எழுதுவார்.

கபாலத்தின் வழியே மூச்சு விடுவதும், உடல் தானே எழுவதும், கழிவுப் பொருள்கள் குறைவதும், உடல் நிறம் மாறுவதும், தலை முடி எண்ணெய் தடவாமல் கறுத்திருப்பதும், வியர்வை வராததும், பேச்சு கிணற்றடியிலிருந்து பேசுவதுபோல் உள்ளே போய் மறைவதும், முறிந்த எலும்பு தானே கூடுவதும், உடலில் ஏறிய விஷம் யோகப் பார்வையால் கரைவதும், பயிலாத சாஸ்திரங்கள் (துப்பாக்கிச் சுடுவது) தெரிவதும், ஞாபகச் சக்தி அபாரமாக வளர்வதும், முகத்தில் தேஜஸ், கண்ணில் ஒளி எழுவதும் யோக சக்தியின் அம்சங்களாகும்.

C.I.D மொட்டை

பெரியவர்களைப் பார்க்கப் போகும்பொழுது அவர்கள் யாரிடமாவது சொல்லும் சொல் நமக்கே உரியதுபோல் தோன்றும். சில சமயங்களில் எதைக் கேட்கப் போகிறோமோ அதையே சொல்வதும் உண்டு.

பிரிட்டிஷ் சர்க்காருக்கு ஸ்ரீ அரவிந்தர் ஓர் பயங்கரவாதி. அதனால் C.I.D அவரைத் தொடர்வான். 1937 வரை ஸ்ரீ அரவிந்தாசிரம வாயிலில் ஒரு C.I.D உட்கார்ந்திருப்பான். அவன் சென்னை சர்க்காரால் அனுப்பப்பட்டவன். அவனிடம் உள்ள ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டுவிட்டுத்தான் உள்ளே போக முடியும். '37 இல் ராஜாஜி மந்திரிசபை வந்த பின் அந்த C.I.D யை எடுத்து விட்டார்கள்.

பகவானைக் கடத்த முயன்றவர்கள் அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் கொலை செய்ய முயன்றார்கள். புதுவை மேயர் பகவானைக் கடத்த ஏற்றுக் கொண்டபொழுது அவரை வீட்டிலேயே சுட்டுக் கொன்றார்கள். மகான், சக்திவாய்ந்தவர் என்பதால் அரசியல் சக்திகள் அவரை ஏதும் செய்ய முடிவதில்லை.

தினமும் பகவான் சாதகர்களைச் சந்தித்த காலம். அவர்களில் ஒருவர் மொட்டை அடித்துக் கொண்டார். ஆசிரமம் போன்ற உயர்ந்த இடங்களில் எல்லாம் உயர்ந்தது என்று எடுத்துக்கொண்டு பல்வேறு வகையான விநோதங்கள் நடப்பதுண்டு. 50 ஆண்டுகட்கு முன்னால் அரசியல் பிரமுகராகத் தயாரான ஒருவருக்கு முகத்தில் பருக்கள் ஏற்பட்டு விகாரமாயிற்று. எதுவும் செய்ய முடியாமல் அதை மறைக்க அவர் தாடி வளர்த்தார். அவர் கட்சியில் அவரைப் பின்பற்றி பல இளைஞர்கள் தாடி வளர்க்க ஆரம்பித்தனர். ஒருவர் மொட்டை அடித்துக் கொண்டதும், அதில் ஏதோ விசேஷமிருப்பதாக எண்ணி மற்றொருவரும் மொட்டை அடித்துக் கொண்டார்.

பகவான் முன் அன்று மாலையில் இருவரும் மொட்டையாகப் பல சாதகர்களுடன் உட்கார்ந்தபொழுது, முதலில் மொட்டை அடித்தவர் எழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு அழுதார், "இனி இந்தக் கேவலமான வேலையைச் செய்யமாட்டேன்" என்று விம்மினார். யாருக்கும் எதுவும் புரியவில்லை. பிறகு அவரே தன் நிலையை எடுத்துக் கூறினார்.

"நான் C.I.D ஆல் இங்கு நடப்பவற்றைச் சர்க்காருக்குச் சொல்ல அமர்த்தப்பட்டேன். இன்று என்னைச் சந்திக்க அதிகாரி ஒருவர் வருகிறார். என்னை அவர் அடையாளம் கண்டு கொள்ள நான் மொட்டையடித்துக் கொண்டிருப்பேன் என எழுதினேன். பகவானுக்குச் சூட்சுமமாக எல்லாம் தெரிந்து விட்டது. அதனால் என் திட்டம் நடக்காதவாறு வேறொருவரையும் மொட்டை அடித்துக் கொள்ளச் சொல்லி விட்டீர்கள். என் திட்டம் வெளியாகிவிட்டது. மன்னிக்கவும்'' என்று கூறி முடித்தார்.

பகவானுக்கு என்ன தெரியுமோ என்னவோ, மொட்டை அடித்துக் கொண்ட சாதகருக்கு எதுவும் தெரியாது. ஏதோ பெரிய விஷயம் நடக்கிறது. நாம் விட்டுவிடக் கூடாது என்று அவர் மொட்டை அடித்ததால் குட்டு வெளிப்பட்டது.

மிளகாய்

ஒரு சமயம் அரிசியும், மிளகாயும் தவிர வேறெதுவும் இல்லை. அது போன்று பல்வேறு சிரமங்கள் வந்ததுண்டு. மோதிலால் ராய் என்று ஒரு நண்பர் ஸ்ரீ அரவிந்தருக்கு உதவி செய்து கொண்டிருந்தார். பணம் வந்து சேர நாளாகிவிட்டால் எதுவும் செய்ய முடியாது. அந்த நாளில் புதுவையில் அதிகபட்ச வாடகை ரூ. 30/- மிகப் பெரிய வீட்டின் விலை 300/- அந்த வீட்டில் ஒரு ரூம் இன்று 3000/- வாடகைக்குக் கிடைக்காது. ரங்கசாமி அய்யங்கார் என்றொருவர் 2000/- பகவானுக்கு அனுப்பினார். 35 ரூபாய் வாடகை கொடுத்து ஸ்ரீ அரவிந்தர் குடியிருந்தார். பணத்திற்குக் கஷ்டம் என்பதும் உண்மை. ஏராளமாகச் செலவாயிற்று என்பதும் உண்மை. 4 வீடுகளில் பகவான் குடியிருந்தார். அந்த வீடுகள் எல்லாம் இன்று ஆசிரமம் வாங்கிவிட்டது. அவற்றைப் பார்த்து இந்த வீட்டில் குடியிருப்பவருக்கு பணக்கஷ்டம் என்றால் எப்படி புரிந்து கொள்வது? ரூ. 250/- சம்பளத்திற்கு வந்த பகவான் பரோடாவில் 500 ரூபாயும் பிறகு ரூ. 710/- ம் சம்பளமாகப் பெற்றார்.

மிளகாய் தவிர வேறெதுவும் இல்லை என்றால், அதுவே போதும் என்றார் பகவான். மிளகாயை எண்ணெய் விட்டு வறுத்து சாதத்தில் போட்டுப் பிசைந்து அனைவரும் சாப்பிட்டனர். அதுவே அன்றைய சாப்பாடு. அன்றே பணம் வந்தது. நம்மிடம் உள்ள கடைசி பைசாவை செலவு செய்த பின் பணம் வரும் என்று பகவான் கூறுவதை நிரூபிப்பது போலிருக்கிறது இந்நிகழ்ச்சி.

சென்னையிலிருந்து வந்த ஒருவரை பகவானுக்கு அறிமுகப்படுத்தினர். பிறகு அவரைப் பற்றி பகவான் அபிப்பிராயம் கேட்டார்கள். பகவான் எந்த அபிப்பிராயமும் சொல்லாமல் அவர் முகம் bulldog போலிருந்தது என்றார். கேட்டவர் திகைத்தனர். அவர் முகம் அப்படியில்லை. அவர் இவர்களுடன் தங்கினார். ஓராண்டு ஆயிற்று. அவர் முகம் மாறி பகவான் கூறியது போலவே மாறியது. ஓராண்டுக்குப் பின் அவர் முகம் எப்படியிருக்கும் என்று பகவான் கண்டார் போலும்.

5 பேர் குளிக்க ஒரு துண்டும், ஒரு கப் டீ யை 4 பேர் சாப்பிடுவதும் அந்த நாள் வழக்கமாக இருந்தது. இந்தச் சமயத்தில்தான் ரூ. 5 திருடியவனைச் சாதகர்கள் அடிப்பதைக் கேட்டு வெளியே வந்த ஸ்ரீ அரவிந்தர் அவனை அடிக்க வேண்டாம் என்று கூறி, அந்த 5 ரூபாயை அவனிடமே கொடுக்கச் சொன்னார்.

அன்னை 1920இல் வந்து பகவான் பொறுப்பை ஏற்கும்வரை 1910 முதல் அடிக்கடி பணக்கஷ்டம் கடைசி நிலைக்குப் போய்விடும். அன்னை பகவான் புத்தகங்களைத் துடைத்து வைக்கும்பொழுது அதில் வைத்திருந்த நோட்டுகளை எடுத்து ரூ. 3000/- சேர்த்து அவரிடம் காட்டினார். வேறு எங்கும் பணத்தை மறைத்து வைக்கமுடியாது என்றார் அவர். நானே பத்திரமாக வைத்துக் கொள்கிறேன் என்று அன்னை பொறுப்பை ஏற்றார். பகவான் சமாதியான பின் "அவரிருந்தவரை பணம் பிரவாகமாக வந்து குவிந்தது" என்றார்.

தீர்க்க தரிசனம்

சித்து விளையாடுவதைப் பற்றி பல அபிப்பிராயங்களுண்டு. சித்து என்பதும் பல வகைப்படும். உஜ்ஜயினி அரசன் பட்டினத்தாரை கழுவேற்ற உத்தரவிட்ட பொழுது கழுமரம் பற்றி எரிந்தது. ஸ்ரீரங்கம் கோவில் நகைகள் ஆழ்வார் வீட்டில் மாயமாய் வந்தது. கொலையாளி அவர் கழுத்தை வெட்ட ஓங்கிய கத்தி மறைந்தது. மந்திரம் சொல்லி கையைத் தூக்கினால் மஞ்சள், விபூதி, லிங்கம் வருகிறது. சித்து பல விதம், செய்பவர்கள் பல விதத்தினர். ஸ்ரீ அரவிந்தர் சித்து விளையாடுவதைப் பற்றிக் கூறியது:-

மகான்கள் சித்து விளையாடுவதில்லை.
பெரிய மகான்கள் அவற்றைச் செய்திருக்கிறார்கள்.

மேலும் பெரியவர்கள் சித்து விளையாடிய பின், அதைச் செய்யக் கூடாது என்று சொல்கிறார்கள். மேல் கூறியதிலிருந்து நாம் அறிவது என்ன? சித்து பெரிய விஷயம். விளையாடுவது சரியா தவறா என்பது பேச்சில்லை. விளையாடுபவர்களைப் பொருத்து பலன் நல்லதாகவோ, தவறாகவோ அமையும்.

தீர்க்க தரிசனம், எதிர்காலத்தை அறிந்து பேசுவது, அதுபோன்ற சித்துக்களில் ஒன்று. நேருவை உலகம் அறியாத காலத்தில் அவர் எதிர்காலத்தில் தலைவராவார் என்றார் அன்னை. இந்தியாவுக்குச் சுதந்திரம் நிச்சயம் என்று அன்னையும், பகவானும் கூறினர்.

உலகம் 1960க்கு மேல் அறிந்து கொண்ட உண்மையை ஸ்ரீ அரவிந்தர் 1950இல் கூறினார். சைனா உலக ஆதிக்கத்தை நோக்கிச் செல்ல முயல்வதை இந்தியா அமெரிக்காவின் உதவியால் தடுக்க வேண்டும் என்றார்.

சுதிர் கோஷ் என்பவர் கென்னடியைச் சந்தித்தார். ஸ்ரீ அரவிந்தர் 1950இல் எழுதியதைக் காண்பித்தார். கென்னடி அதை இரு முறை படித்தார். "எழுதியது சரி, 1960 என்பதற்குப் பதிலாக 1950 என்று தவறாக டைப் செய்திருக்கிறது'' என்றார். பகவான் 1950இல் சமாதியானார் என்று சுதிர் கோஷ் சொன்னதும் கென்னடியால் நம்ப முடியவில்லை.

எங்கோ இந்தியாவில் ஒரு மூலையில் தவமிருக்கும் ஒருவர் 10 ஆண்டுகட்டுப் பின் நடக்கப் போவதை சொன்னார் என்பது நம்ப முடியவில்லை. அடுத்த முறை வாஷிங்டன் வந்தால் என்னை வந்து பாருங்கள் என்று கென்னடி சுதிர் கோஷிடம் சொல்லி விடை பெற்றார்.

கென்னடியின் நண்பர் ஒருவர் அன்னையைத் தரிசித்து கென்னடி அன்னையைத் தரிசிக்க வேண்டும் எனப் பிரியப்பட்டு அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து முடித்தவுடன் கென்னடி சுட்டுச் கொல்லப்பட்டார்.

1939இல் மோட்டார் மன்னர் Henry Ford ஹென்றி போர்ட், "எனக்கு யாராவது கடவுளைக் காட்ட முடியுமா?" எனக் கேட்டார். செய்தி அன்னையிடம் வந்தது. அன்னை ஆமோதித்தார். போர்ட்.புறப்படத் தயாரான பின் இரண்டாம் யுத்தம் ஆரம்பமாயிற்று. பிரயாணம் தடைப்பட்டது. அத்துடன் அது முடிந்து விட்டது.

குருஷேவ் ஆரோவில் நகரத்தில் அதிக அக்கறை காட்டினார். அவர் விலக்கப்பட்டார்.

பகவானும், அன்னையும் உலக யுத்தம் உலகத்தை அழிக்காமல் தடுத்தனர். அதன் பின் தளவாடங்கள் குவிந்து மனித சமுதாயம் அழியக் கூடாது என்று சூட்சும உலகில் செயல்பட்டனர். கென்னடியும், குருஷேவும் தங்களை அறியாமல் அதற்குத் துணை நின்றனர். அதனால் hostile forces தீய சக்திகள், அவர்கள் அன்னையிடம் வருவதைத் தடுத்துவிட்டன. இன்று அன்னை விரும்பியதுபோல் மூன்றாம் யுத்தம் தடுக்கப்பட்டது. தளவாடங்கள் தங்கள் சக்தியை இழந்தன. கென்னடியும் குருஷேவும் அன்னையைத் தரிசித்துச் செய்யும் சேவை உலகத்திற்கு நடந்து விட்டது.

ஜெயமுண்டு பயமில்லை மனமே

கோர்ட், சட்டம் என்பவை ஏற்படுமுன் உள்ளுர் நாட்டாண்மைக்காரனின் அராஜகமே நியாயம் என வழங்கியது. கோர்ட் வந்த பின்னும், நீ கோர்ட்டுக்கு எப்படிப் போகலாம்? ஊரில் குடியிருக்க முடியுமா? என விரட்டுவான். கோர்ட்டுக்கே போனாலும் நியாயத்திற்குச் சாட்சி கிடைக்காது. நடந்ததை எடுத்துச் சொல்ல எந்த நல்லவரும் முன் வரமாட்டார்கள். அதற்குரிய தைரியம் எவருக்கும் இல்லை என்பது இன்று நம் நிலை. 80 ஆண்டுகட்கு முன் உள்ள நிலையில் நியாயத்தை ஆதரிக்க முன் வருபவர்கள் மனிதர்களில்லை. தெய்வம்.

நியாயத்தை எடுத்துச் சொல்ல சட்டம் வந்தது 150 ஆண்டுகட்கு முன். அதற்குரிய தைரியம் ஏதோ ஒரு சிறு அளவில்தான் வந்துள்ளது. மாநில முந்திரி அபிவிருத்தி ஆபீசர் முந்திரிக்கு என்ன உரமிட வேண்டும், எப்படிப் பயிரிட்டால் என்ன பலன் கொடுக்கும் என என்னை சந்தித்துப் பேசினார். அவர் சொல்லியதையெல்லாம் நான் திட்டமாக எழுதி அதனடிப்படையில் பாங்கில் கடன் வாங்க அவரிடம் சர்ட்டிபிகேட் கேட்டேன். "எப்படி எழுதிக் கொடுப்பது", என மறுத்துவிட்டார். அவர் சொன்னதையே அவர் எழுதப் பயப்பட்டார். "நீங்கள் கடன் வாங்கப் போகிறீர்கள். நான் எப்படி அதற்கு ஈடுபட முடியும்?" என்று மறுத்து விட்டார்.

மேலதிகாரி வந்து, நடக்காத காரியத்தை எல்லாம் நடக்க வேண்டும் என்று பேசினால் எல்லோரும் ஆமோதிப்பார்கள். அதெல்லாம் நடத்த இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என எவரும் எழுந்து சொல்ல முன் வரமாட்டார்கள்.

பிரிட்டிஷ் சர்க்கார் பிரெஞ்சு சர்க்காரை அணுகி, புதுவையில் உள்ள தேசீயவாதிகளை வெளியேற்றும்படிக் கேட்டது. அன்னியர் தங்கியிருந்தால் அவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது சட்டம். பதிவு செய்ய 5 கௌரவ மாஜிஸ்ட்ரேட் கையெழுத்திட வேண்டும். இது போன்ற நேரங்களில் யார் நண்பர், எவர் உண்மையானவர் என்பது வெளிவந்துவிடும்.

நியாயம் நிலைக்காது.
நல்லவர் என்பதனால் ஆதரவு கிடைக்காது.
நாலுபேர்போல் நம்மவரும் நடந்து கொள்வார்கள்.
நாலுபேர் பயந்தால் நண்பரும் பயந்து ஒதுங்குவார்கள்.

ஸ்ரீ அரவிந்தர் புதுவைக்கு வந்தபொழுது சங்கர செட்டியார் வீட்டில் பல மாதம் தங்கினார். அவர் ஒரு மாஜிஸ்ட்ரேட். பாரதிக்கும், ஸ்ரீ அரவிந்தருக்கும் அவருடன் இருந்த மற்ற தேசீயவாதிகட்கும் இந்நிலை. பாரதி "நான் போய் செட்டியாரைக் கேட்கிறேன்" என்றார். போய்க் கேட்டார். செட்டியார் தாம் கையெழுத்திட்டதுடன், மற்ற நான்கு பேர் கையெழுத்துகளையும் 2 மணி நேரத்தில் பெற்றுக் கொடுத்தார். செட்டியார் பாரதியிடம் உங்கள் புதிய பாட்டைப் பாடுங்கள் என்றார். அப்பொழுது எழுதிய பாட்டுத்தான்,

ஜெயமுண்டு, பயமில்லை மனமே

என்ற பாரதியின் பாட்டு. ஸ்ரீ அரவிந்தம் பொய்ம்மையை மீறிச் சத்தியம் ஜெயிக்கும் என்று கூறியதன் வெற்றிக்கு அறிகுறியாக இந்த ஐந்து பெரிய மனிதர்கள் அவரை ஆதரித்தனர்.

பூர்வ ஜென்மப் புண்ணியம்

"முன் ஜென்மங்களில் நீங்கள் எல்லோரும் என்னோடிருந்தவர்கள். இலட்சியம் பூர்த்தியாகும் நேரம் மீண்டும் என்னுடன் இருக்க, அப்பொழுது நீங்கள் பிரார்த்தனை செய்ததால், இப்பொழுது என்னுடன் இருக்கிறீர்கள். சில நாள் வந்து தங்கியவருக்கும் இது பொருந்தும் எனப் பொருள்படும்படி அன்னை அடிக்கடி பேசுவார்.

அன்னை, ஸ்ரீ அரவிந்தரைப் பார்க்காதவர்கள் "பார்க்கவில்லையே'' என்று குறைப்படுகிறார்கள். இது தவிர்க்க முடியாதது. அது பூர்வ ஜென்மப் புண்ணியம் செய்தவருக்கேயுண்டு. அன்னையுடன் பேசியவர்கள், ஸ்ரீ அரவிந்தருடனிருந்து சேவை செய்தவர்கள், அவர் உடலைத் தொடும் பாக்கியம் பெற்றவர்கள், தலையில் அவர் கை வைத்து ஆசீர்வாதம் பெற்றவர்கள் பூர்வ ஜென்மப் புண்ணியம் செய்தவர்கள். இனி அது கிடைக்கப் போவதில்லை.

இதற்கு மறுபுறம் உண்டு. அது நாம் பெறக்கூடியது. நம்மில் பலர் பெற்றிருக்கின்றனர். 1974இல் ஆசிரமம் வந்தவர் ஒருவர் அதுபோல் தான் தரிசனம் பெறவில்லையே என உருகினார். தரிசனத்தன்று மாலையில் விளையாட்டு மைதான விழாவுக்குப் போனார். அங்கிருந்த நேரம் முழுவதும் 1962க்கு முன் இங்கு அன்னை தினமும் வீற்றிருந்தாரல்லவா? என நினைத்துக் கொண்டிருந்தபொழுது, அவர் முன் அன்னை அங்குள்ள இந்தியா படத்தின் முன் தத்ரூபமாக, உயிருடன், பொலிவுடன் காட்சியளித்தார். கண் திறந்துள்ளது. அவரால் நம்ப முடியவில்லை. அவர் ஆத்மா இந்தத் தரிசனத்தால் சாந்தியடைந்தது. ஒவ்வொரு முறை ஆசிரமம் வரும்பொழுதும் அவருக்கு அந்தத் தரிசனம் கிடைத்தது.

ஸ்ரீ அரவிந்தர் கையெழுத்து (autograph) பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டவர் ஒருவர். அதே ஆசை நினைவில் வளர்ந்து கொண்டிருந்தது. ஆசிரமத்தில் பல பகுதிகட்கும் அவர் போவதால் அவருக்குப் பலரையும் தெரியும். யாரையும் இதுபற்றி அவர் கேட்கவில்லை. நண்பர்களாகச் சிலர், பெரியவர்களாகச் சிலர், தாயார்போல், தந்தைபோல் அன்பு செலுத்துபவர் சிலர், சாக்கலேட் கொடுப்பவர் சிலர் எனப் பலரை அறிந்தவர் அவர். ஒரு நாள் ஒரு பெரியவர் என்னுடன் வா என அழைத்துப் போய் தன் அறையில் உட்கார வைத்துப் பேசினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்பொழுது புத்தகங்களையும், போட்டோக்களையும் புரட்டிக் கொண்டிருந்தவர் பகவான் கையெழுத்தைக் கண்டு, "இதைப் பார்" என்று கொடுத்தார். வாங்கியவருக்கு தன் வாழ்வே பூர்த்தியானதைப் போலிருந்ததைக் கண்டு "நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். நெடுநாளைய ஆசை தற்செயலாய்ப் பூர்த்தியாயிற்று.

தியானத்தில், அழைப்பின்பொழுது, தரிசன சமயங்களில் பக்தர்கள் தங்கள் அபூர்வ அனுபவங்களைக் கேட்டால் மெய்சிலிர்க்கும். ஆசிரமப் பள்ளியில் 1940 வாக்கில் படித்தவர், பல முறை தரிசனம் செய்தவர்கள், ஓரிரு ஆண்டு இங்கேயே இருந்தவர்கள் நாங்கள் எல்லாம் அன்னைக்கு இது போன்ற சக்தியிருப்பதாகக் கேள்விப்பட்டதில்லையே என்பதும் உண்டு.

பூர்வ ஜென்மப் புண்ணியம் உடலுக்குரியது,
பக்தி உணர்வுக்குரியது,
ஞானம் அறிவுக்குரியது.

ஹரதன் பக்ஷ்

1958இல் நான் முதலில் ஆசிரமம் வந்தபொழுது ஒருவர் வத்தி விநியோகம் செய்வார். நான் ஆசிரமம் போகிறேன் என்று கேள்விப்பட்ட அன்பர்கள் என்னை வந்து பார்த்து, "நளினிகாந்த குப்தா இருக்கிறாரா?" என்றும் "ஹரதனைப் பார்த்தீர்களா?" என்றும் விசாரித்தனர். வத்தி விநியோகம் செய்பவர்தான் ஹரதன் என்று அறிந்தேன். அதற்கு 20 வருஷத்திற்கு முன் ஹரதன் கடலூரில் சிறிது காலம் இருந்ததாகவும், புரட்சி மனப்பான்மையுள்ள இளைஞர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு எப்படி வெடிகுண்டு செய்வது என விசாரித்தார்கள்.

பகவான் உத்தரபராவில் சொற்பொழிவு செய்தபொழுது ஹரதன் ரயில்வே ஸ்டேஷன் மரத்திலேறி தரிசனம் செய்தார். ஸ்ரீ அரவிந்தர் சந்தித்தவருக்கெல்லாம் உடலால் வளைந்து நமஸ்காரம் செய்வதைக் கண்டு, அது முதல் அதேபோல் தாமும் நமஸ்காரம் செய்ய ஆரம்பித்தார் ஹரதன்.

வருஷத்தில் 4 முறை பகவான் தரிசனம் தந்து 1000 அல்லது 2000 சாதகர்கள், பக்தர்களைச் சந்தித்தார். அதற்கு முன் வருஷத்திற்கு 3 தரிசனம். பகவான், அன்னை பிறந்த நாட்களும், சித்தி நாளுமே தரிசனம். பிப்ரவரியிலிருந்து ஆகஸ்ட் வரை நீண்ட இடைவெளியிருப்பது சாதகர்கள் பொறுமையைச் சோதிக்கின்றது என்பதால் April 24 தரிசனம் நான்காம் தரிசனமாக சேர்க்கப்பட்டது.

தரிசனங்களில் பகவானைச் சாதகர்கள் கண்டாலும், மற்ற நேரங்களில் அவர் அறைக்கு அருகில் வேலை நிமித்தமாக வருபவர்களையும், மாலை 4 மணிக்கு அன்னை அறைக்கு, பகவான் அங்கு வரும்பொழுது, அங்குள்ள சாதகர்களையும் பகவானைப் பார்க்கக்கூடாது என உத்தரவிட்டிருந்தார்கள். ஸ்ரீ அரவிந்தர் அன்னை அறையில் நுழைந்தால் அங்குள்ளவர்கள் அவரைப் பார்க்காமல் வெளியேற வேண்டும் என்பது உத்தரவு.

ஹரதன் பகவான் பாத்ரூமைச் சுத்தம் செய்பவர். அவருக்கும் அதேபோல் உத்தரவு. கல்கத்தாவிலிருந்து ஒரு சமயம் sweets வாங்கி வந்து பகவானுக்கு ஹரதன் அனுப்பியிருந்தார். ஒரு நாள் ஹரதன் பாத்ரூமை அலம்பிக் கொண்டிருக்கும் பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது. என்ன செய்வது என ஹரதனுக்குப் புரியவில்லை. திறந்தால் பகவான் கண்ணில் பட்டுவிட்டால் உத்தரவை மீறியதாகும்.

திகைத்தவர் கதவைத் திறந்தார். ஸ்ரீ அரவிந்தர் கதவைத் தட்டியிருக்கிறார். எதிரில் தட்டு நிறைய பழங்களுடன் நிற்கிறார், "இப்பழங்கள் உனக்காகவும், சம்பக்லாலுக்காகவும் எடுத்துக் கொள்" என்றார் பகவான்.

அருளை நாடினால் அவசியம் கிடைக்கும்

போர்பந்தரில் வேலைக்காகப் போனவர், "இது காந்திஜி பிறந்த ஊர். ஆனால் இங்கு சத்தியம் ஆட்சி செய்யவில்லை'' என்றார். மகான்கள், தலைவர்கள் பிறந்த ஊர், அவர் பரம்பரையில் வந்தவர்கள் அவர்கள் இலட்சியத்தைப் போற்றி பின்பற்றுவதை நாம் காண்கிறோம். பரமஹம்ஸர் இருந்த தட்சிணேஸ்வரருக்குப் போனால், அவரிருந்த இடம் என்பது தெரிகிறது என்கிறார்கள். ராஜவம்சத்தில் பிறந்தவர்கள் அதற்குரிய பெருந்தன்மையுடனிருப்பதைக் காணலாம். டெல்லியில் கடைசியாக ஆண்ட பகதூர் ஷாவின் வாரிசாக ஒரு வயதான பெண்மணி இன்னும் இருக்கிறார். எளிய வீட்டில் குடியிருக்கிறார். அவர் சில சமயங்களில் வீட்டை விட்டு வெளி வந்து கடைத்தெரு வழியாகப் போனால், அங்குள்ளவர்கள் அவருக்கு பழைய மரியாதையைச் செலுத்துகிறார்கள்.

இதற்கு எதிரான நிலையும் உண்டு. பெரிய மகான்கள் உலகம் முழுவதும் பிரபலமானாலும் அவர்களுடைய ஊரில் அவரை யாரும் பொருட்படுத்துவது இல்லை என்பதும் உண்டு. அவருடைய குடும்பத்தினர் அவர் இலட்சியங்களை ஏற்காமலிருப்பதுண்டு. செக்கிழுத்த செம்மல் குடும்பத்தினர் தேசீயத்தை விட்டு எதிரான மனநிலையுடன் காணப்படுவதுண்டு.

இந்தியாவில் பஞ்சம் வந்தது வங்காளத்தில்தான். வங்காளம் பிரிக்கப்பட்டு பாக்கிஸ்தானின் பகுதியாயிற்று. இந்து முஸ்லீம் கலவரத்தின்போது அளவு கடந்து பாதிக்கப்பட்டது வங்காளம்.

கல்கத்தாவிலிருந்து வந்த டாக்டர் ஒருவர் பகவான் காலைப் பிடித்து அமுக்கிக் கொண்டிருந்தார் (massaging). அப்பொழுது அகதிப் பிரச்சினை தலையாய பிரச்சினையாக இருந்தது.

டாக்டர், "எப்படியிருக்கிறீர்கள்" என்றார். "நான் நன்றாக இருக்கிறேன்" என்று பதில் கூறிய பகவான், "வங்காளம் எப்படியிருக்கிறது?" என்றார்.

"அகதிகள் அவதிப்படுகிறார்கள். பகவான் அருள் புரியலாம்" என்றார் டாக்டர்.

"கேட்டால் கிடைக்கும்" என்று பகவான் சுருக்கமாகப் பதில் சொன்னார். கேட்காமலே கொடுக்கும் தெய்வம் கொடுப்பதற்கும் அளவுண்டு. அந்த அளவைக் கடந்தபொழுது, கேட்டால் கிடைக்கும் என்ற நிலை ஏற்படுகிறது.

ஸ்ரீ அரவிந்தருடைய ஆயுள்

கல்கத்தா ஜோஸ்யர் ஒருவர் ஸ்ரீ அரவிந்தரின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, "நீங்கள் மிலேச்ச எதிரிகளுடன் போரிட வேண்டியிருக்கும். நீண்ட ஆயுளுண்டு" என்றார். தாம் தீய சக்திகளுடன் சூட்சும உலகில் போராடியதை ஜோஸ்யர் குறிப்பிட்டுள்ளார் என்றார் பகவான்.

சத்திய ஜீவியம் எப்பொழுது வரும்? உங்கள் ஆயுள் எப்படி? போன்ற கேள்விகளைச் சாதகர்கள் அடிக்கடி எழுப்புவது வழக்கம். சத்திய ஜீவியத்தைப்பற்றி பகவான், "எதிர்காலத்தைப் பற்றி என்னை தீர்க்க தரிசனமாகப் பேசச் சொல்கிறீர்களா? அது எப்பொழுது வரும் என்பது என்னை மட்டும் பொருத்ததில்லை. காலம் எவருக்கும் கட்டுப்பட்டதில்லை. நாள் குறிப்பிட்டால், சத்திய ஜீவியம் வருவது தள்ளிப் போகும்" என்றார்.

நம் ஆன்மீகப் பரம்பரையில் ரிஷிகளைப் பற்றி பல கருத்துகள் உள்ளன.

 • ரிஷிகள் காலத்திற்குக் கட்டுப்பட்டவரில்லை.
 • ரிஷிகளால் காலத்தையும் கட்டுப்படுத்த முடியும்.
 • கர்மத்திற்கு ரிஷிகள் விலக்கு.
 • ரிஷிகளும் கர்மத்திற்குக் கட்டுப்பட வேண்டும்.
 • இச்சாமிருத்துயு என்பது தன் மரணத்தை தானே நிர்ணயித்துக் கொள்வது.
 • இச்சாமிருத்துயு பெற்றவர் பலர். 

இதுபோன்ற எதிரெதிரான கருத்துகள் இருப்பதற்குக் காரணம் ரிஷிகளுக்கு ஆன்மீக வலிமை பல நிலைகளில் இருந்தது என்று காட்டுகிறது.

ஸ்ரீ அரவிந்தர் ரிஷியல்லர். அவதாரப்புருஷர். காலம் அவரைக் கட்டுப்படுத்தாது. 30,000 வருஷத்தை 300, 30 வருஷமாகச் சுருக்க வந்தவர் பகவான். காலம் எப்படி அவரைக் கட்டுப்படுத்தும்? கேட்பவர் மனநிலைக்கும், கேள்விக்கும் பொருத்தமான பதிலை பகவான் கொடுப்பது வழக்கம். தம் ஆயுளைப்பற்றி அவர் கூறியவை:

 1. எதிர்பாராமல், விபத்து மூலம் மரணம் சம்பவிக்கலாம்.
 2. வயது முதிர்ந்து உடல் தளரலாம்.
 3. இம்முறையில் சத்திய ஜீவியத்தைச் சாதிக்க முடியாது எனக் கண்டால், நானே முடிவு செய்து உலகை விட்டகலலாம். அல்லது ஒரு நிகழ்ச்சி மூலம் சத்திய ஜீவியம் இப்பிறப்பிலில்லை என எனக்கு அறிவிக்கப்படலாம். 

ஸ்ரீ அரவிந்தர் 78 ஆண்டுகளிருந்தார். சமாதியடையுமுன் ஓரிரு ஆண்டுகட்கு முன் "நம்மிருவரில் ஒருவர் போக வேண்டும்" என்று அன்னையிடம் கூறியிருந்தார். தாம் போக முடிவு என்றும் கூறினார். கடைசி நாட்களில் அவர் (coma) நினைவிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். ஆனால் அவர் எழுந்து நாற்காலியில் உட்கார்ந்தார். தண்ணீர் வேண்டும் எனக் கேட்டு அருந்தினார். நினைவிழந்தவர் அப்படி செயல்பட்டதில்லை. "உங்கள் சக்தியை வியாதிக்கு எதிராகப் பயன்படுத்தவில்லையா?" எனக் கேட்டதற்கு இல்லை என்று பதிலளித்தார்.

ஜாதகப்படி முடிந்த ஆயுளை 20; 30; 50 வருஷம் கூட பலருக்கு நீட்டியவர் பகவான். காலத்திற்கும், கர்மத்திற்கும் கட்டுப்பட்டதில்லை அவர் வாழ்வு. தாமே அவற்றிற்குத் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வது பெரியவர்கள் பழக்கம். ஸ்ரீ அரவிந்தர் இறைவனின் பகுதி என அன்னை கூறியுள்ளார்.

பூர்வ ஜென்மத் தொடர்பு

திலிப்குமார் ராய் என்பவர் கல்கத்தாவில் பிரபலமானவர். புகழ் பெற்ற பாடகர். M.S. சுப்புலட்சுமி இவரிடம் மீரா பஜன் கற்றுக் கொள்ள வந்தார். திலீப் நேருவின் நண்பர்.

1924இல் திலீப் ஸ்ரீ அரவிந்தரை வந்து தரிசனம் செய்தபொழுது, "உங்களைப் பார்க்கும் முன்னே எனக்குப் புரிந்து விட்டது. பல ஜென்மத் தொடர்பு நம்முள் இருக்கின்றது" என்றார்.

ஆசிரமத்தில் தங்கியுள்ளவர்கள், கொஞ்ச நாள் தங்கியிருந்து போய்விட்டவர் உள்பட அனைவரும் பூர்வ ஜென்மங்களில் என்னுடன் இருந்தவர்கள் என அன்னை கூறியுள்ளார். பூர்வஜென்மத் தொடர்பால் இங்கு வந்தவர்கள் அதிகம்.

ஸ்ரீ அரவிந்தர் திலீப்பைப் பார்த்து "உங்கள் மனம் விழிப்பாக இருக்கிறது. இந்த யோகம் செய்ய ஆன்ம விழிப்பு வேண்டும்" என்றார். திலீப்புக்கு மனம் சங்கடம் அடைந்தது. மேலும் நான்கு வருஷங்கள் பல்வேறு இடங்களை நாடினார். வங்காளக் கிராமம் ஒன்றில் யோகி ஒருவரிருப்பதாகக் கேள்விப்பட்டு அவரை அடைந்து அவருடன் தியானம் செய்தார். அவர், "ஸ்ரீ அரவிந்தர் உங்களை ஏற்றபின் ஏன் வேறு குருவைத் தேடுகிறீர்கள்? நீங்கள் அழைக்கப்பட்டது மட்டுமன்று, ஏற்றுக் கொள்ளப்பட்டீர்கள்" என்றார். ஸ்ரீ அரவிந்தர் ஏற்றுக் கொண்டதாக சொல்வது அவருக்குப் புரியவில்லை.

மேலும் ஒரு நண்பரைச் சந்தித்து திலீப் தம் மனப் போராட்டத்தைக் கூறினார். அவர், "நீங்கள் இறைவனுடன் பேரம் பேசுகிறீர்கள்" என்றார். திலீப் பிரார்த்தனையை மேற்கொண்டார். மனமும், நிலைமையும் மாறின. இம்முறை பகவான் என்னைத் தேடி வந்தார் என திலீப் அறிந்தார். மேலும் நாள் கடத்தாமல் புதுவை வந்து ஆசிரமத்தில் சேர்ந்தார்.

பகவான் சமாதியான பின் திலீப் ஆசிரமத்தை விட்டுப் போய்விட்டார். அவர் எழுதிய புத்தகம் “ How Sri Aurobindo came to me?” எப்படி ஸ்ரீ அரவிந்தர் என்னிடம் வந்தார் என்பதாகும்.

பகவானின் மறுப்பு அவர் அழைப்பு என திலீப் அறியவில்லை.

1934இல் நேரு புதுவை வந்தபொழுது திலீப்பைச் சந்திக்க விரும்பினார். ஸ்ரீ அரவிந்தர் அனுமதி தரவில்லை. ஆசிரமத்தைப்பற்றி நேரு பேசும்பொழுது "என் நண்பனை நான் சந்திக்க விரும்பியபொழுது என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை" என்று குறைபட்டுப் பேசினார்.

1938இல் பகவான் தொடை எலும்பு முறிந்தபொழுது சாதகர் கடிதம் அறவே நிறுத்தப்பட்டது. அப்பொழுது நிரோத்பரனுக்கும், திலீப்புக்கும் தினமும் கடிதம் எழுதும் அனுமதி கொடுத்தார் ஸ்ரீ அரவிந்தர்.

நிரோத்பரனையும், திலீப்பையும் பகவான் சகோதரனாகவும், மகனாகவும் கருதியதாக நிரோத்பரன் கூறுகிறார்.

அழைப்பை மறுப்பாக அளிக்கும் கருணை ஆண்டவனுக்கேயுரியது.

“The Mother” - "அன்னை" என்ற நூல்

1985வரை ஆசிரமம் சுமார் ஆயிரம் நூல்களை எல்லா இந்திய மொழிகளிலும் வெளியிட்டுள்ளது. பிரெஞ்சுப் புத்தகங்கள் பல. சைனா மொழியிலும் 12 நூல்கள் வெளியிட்டுள்ளனர். இவற்றுள் அதிகபட்சமாக விற்ற புத்தகம் "அன்னை" எனும் நூலாகும். புள்ளிவிவரம் தெரியவில்லை. அதிகபட்ச முக்கியத்துவம் பெற்றதும் இந்நூலேயாகும்.

இந்நூல் முழுவதும் ஒரே நாளில், அதாவது ஒரே இரவில் எழுதப்பட்டதெனவும் கூறுவர். ஸ்ரீ அரவிந்தர் ஆங்கில நடை மிகச் சிறந்தது. ஆங்கில இலக்கியத்தில் உயர்ந்த உரைநடை எழுத்தாளர்களான கோல்ட்ஸ்மீத், அர்னால்ட், அடிசன், ஸ்டீல், மெக்காலே, ஜான்ஸன், ஜான் பன்யன், கிப்பன் போன்றவர்களின் சிறந்த பகுதிகளை எடுத்து ஸ்ரீ அரவிந்தருடைய உரைநடைப் பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சங்க இலக்கியத்தை அடுத்த காலத்து இலக்கியத்துடன் ஒப்பிடுதல் போலாகும். ஸ்ரீ அரவிந்தருடைய உரைநடை எழுத்தில்

தலை சிறந்த பகுதி "அன்னை" எனும் நூலாகும்.

சப் - இன்ஸ்பெக்டர் செலக்க்ஷன்

ஸ்ரீ அரவிந்தர் ஒருமுறை கடிதம் ஏதாவது வந்ததா எனத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். சில நாள் கழித்து கடிதம் வந்தது. ஒரு வாரம் கழித்து மீண்டும் அதேபோல் கடிதத்தை பகவான் எதிர்பார்த்தார். அதுவும் வந்தது. மூன்றாம் முறையும் அது நடந்தது. நான்காம் முறை பகவான் கடிதத்தை எதிர் நோக்கியிருந்தார். ஒவ்வொரு முறையும் அவர் தம்பி பரீந்திராவிடம் அதைக் கேட்டார்.

பகவான் வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஒரு கடிதத்தை எதிர்பார்ப்பது தம்பிக்கு ஆச்சரியமாயிருந்தது. எனவே அதை அறிய அவரிடமே கேட்டார். பகவான் பதிலிறுத்தார்.

ஆந்திராவில் ஒரு பட்வாரி (கிராம முன்சீப் போன்றவர்) தம் மகன் சப்-இன்ஸ்பெக்டராக ஆக வேண்டும் எனவும், அந்த செலக்ஷனை, கலைக்டரே நேரடியாகச் செய்வதாகவும், வழக்கமாக, சிபார்சால் மட்டும் இது நடப்பதாலும், தமக்கு பகவான் தவிர வேறு சிபார்சு இல்லை எனவும் எழுதியிருந்தார். என்னையே அவர் முழுவதும் நம்பினார். அதனால் அவருக்கு உதவ முனைந்தேன். என்ன ஆயிற்று என்று அறிய கடிதத்தை ஆவலுடன் எதிர்பார்த்தேன். அவனை, கலைக்டர் செலக்ட் பண்ணிவிட்டார் என்று முதல் கடிதம் வந்தது. என்றாலும் மீண்டும் போலீஸ் கமிஷனர் செலக்ஷன் உண்டு. இங்கும் சிபார்சு முக்கியம் என இரண்டாம் கடிதம் கூறியது. அங்கும் அவர் மகன் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆனால் அவனுக்கு உடற்கோளாறு இருந்ததால் மெடிகல் பரிசோதனையில் தேற வேண்டும் என்ற கவலையுடன் மூன்றாம் கடிதம் வந்தது. அதுவும் நல்லபடியாக முடிந்தது என நான்காம் கடிதம் விளக்கியது. டாக்டர் இப்பையன் முறை வந்தபொழுது அவனைக் கவனமாகக் சோதிக்காமல் சர்ட்டிபிகேட் கொடுத்து விட்டார். பட்வாரியின் கவலை தீர்ந்தது.

தம்மையே முழுவதும் நம்புபவரை பகவான் போன்றவர்கள் அதிகமாகச் சந்திப்பதில்லை. தம்மையே முழுவதும் நம்புபவரைக் கடைசிவரை விவரமாக, கவனமாகப் பொறுப்போடு தெய்வம் கவனிக்கும் என்பதை இதுபோன்ற நிகழ்ச்சிகள் விளக்குகின்றன. பிரார்த்தனைக் கடிதங்கள் முழுமையாக அன்னையை நம்பி எழுதப்படும்பொழுது அக்கடிதம் எழுதி முடிந்தவுடன் பிரச்சினை தீர்வது தெய்வம் நம்மீது இப்பூரண அக்கறை கொண்டுள்ளதால் தான். பகவான் எழுதுகிறார்,

அகண்ட பிரம்மம் முன் மனிதன் துரும்பு. ஆனால் அப்பிரம்மத்திற்கு நாம் மிகவும் முக்கியம். நமக்குப் பிரம்மம் முக்கியமாக இல்லை. நமக்கு நாமே முக்கியம், பிரம்மமில்லை.

ஆண்டவனுக்கு நாம் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவு ஆண்டவன் நமக்கு முக்கியமானால் யோகம் சித்தியாகும்.

துரோணா

அலிப்பூர் ஜெயிலில் ஸ்ரீ அரவிந்தர் இருந்தபொழுது அவர் மீது சாட்டப்பட்ட கேஸுக்காக, கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுவார். அவரை ஒரு கூண்டில் அடைத்து, கூண்டுடன் கோர்ட்டுக்குக் கொண்டு வருவார்கள். அவரைப் பயங்கரவாதி எனக் கருதியதால் கூண்டு போதாது என்று, ஒரு ரிவால்வரை அவர் பக்கத்திலுள்ள மேஜை மீது தயாராக வைத்திருப்பார்கள். ஸ்ரீ அரவிந்தர் தரப்பில் கேஸை நடத்தியவர் சித்தரஞ்சன்தாஸ், இன்று கல்கத்தாவில் ரயில் இன்ஜின் செய்யும் தொழிற்சாலைக்கு அவர் பெயரை இட்டனர். பிற்காலத்தில் அவர் பெரிய காங்கிரஸ்வாதியானார். மகாத்மா காந்தி அவரைப் பற்றிப் பேசும்பொழுது, "சித்தரஞ்சன் அரசனைப்போல் வாழ்கிறார்" என்று கூறியுள்ளார்.

சர்க்கார் தரப்பில் சித்தரஞ்சனுக்குச் சமமாக வக்கீல் வேண்டுமென்று நாட்டில் பல இடங்களிலும் தேடி, சென்னையில் அப்பொழுது பிரபலமான அட்வகேட் ஜெனரலாக இருந்த நார்ட்டன் என்ற ஆங்கிலேயரைத் தேர்ந்தெடுத்தனர்.

தெய்வத்தின் செயலாக அக்கோர்ட் ஜட்ஜ் பீச்கிராப்ட் என்பவர் ஸ்ரீ அரவிந்தருடன் கேம்பிரிட்ஜில் படித்தவர். ஸ்ரீ அரவிந்தர் குற்றவாளியல்லர் என்று நம்பியவர். சித்தரஞ்சன் தாஸுக்கு அடிக்கடி, கேஸ் நடக்கும்பொழுது, கையெழுத்தில்லாத கடிதங்கள் கேஸில் முக்கிய விஷயங்களைக் குறிப்பிட்டு அவற்றைக் கோட்டில் எழுப்பும்படி வரும். அவை கேஸுக்கு முக்கியமாக இருந்தன. அச்சமயம் இந்த ஜட்ஜ் தான் ஸ்ரீ அரவிந்தருக்குச் சாதகமாக மறைமுகமாக அப்படி எழுதினார் என வதந்தியிருந்தது. புதுவை வந்தபின் அதை ஒரு சாதகர் எழுப்பினார். அதற்குள் பீச்கிராப்ட் இறந்துவிட்டார். "என் ஆங்கில நடையை ஜட்ஜ் விரும்பியிருக்கலாம். அவர் இறந்த பின் ஏன் அவரைப் பாரபட்சமானவர் என்கிறீர்கள்" என்று பகவான் பதில் எழுதினார். பகவானை விடுதலை செய்து எழுதிய தீர்ப்பில் ஜட்ஜ் அவருடைய ஆங்கில நடை உயர்ந்தது எனக் குறிப்பிடுகிறார்.

நார்ட்டன் விசேஷமாகக் கல்கத்தாவுக்கு அழைக்கப்பட்டதால் அவர் கேஸைக் காரசாரமாக நடத்தினார். இவர் ஆங்கிலேயர். நம் நாட்டு பழக்கவழக்கம் அறியாதவர். கேஸ் பிரபலமானது. அத்தனைத் தஸ்தாவேஜுகள் - ஆயிரக்கணக்கானவை - அத்தனை சாட்சிகள், நூற்றக்கணக்கானவர் கேஸில் சம்பந்தப்பட்டதாலும், அகில இந்திய முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது.

சித்தரஞ்சன் பேசும்பொழுது மகாபாரதத்தில் துரோணாச்சாரியாரை உபமானமாகக் குறிப்பிட்டார். நார்ட்டனுக்கு அது பழங்கதை எனத் தெரியாது. துரோணா என்பவர் கேஸில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதி என நினைத்துவிட்டார். ஆவேசம் வந்துவிட்டது. எழுந்தார்,

"இத்தனை பயங்கரத்திற்கும் அந்த துரோணனே காரணம்!
பின்னணியிலிருந்து அவ்வளவையும் நடத்தியிருக்கிறான்!"
"அவன் மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட வேண்டும்!
கூண்டிலேற்றி நான் குறுக்கு விசாரணை செய்வேன்!"

என்று பதட்டத்துடன் பேசினார், கூடியிருந்தவர் அனைவரும் அடக்கமுடியாத சிரிப்பை அடக்கமுடியாமல் கொல் எனச் சிரித்தனர்.

பகவான் எழுதிய கடிதங்கள்

பிரச்சினையுள்ளவர்கள், தங்கள் மனத்தை ஒருநிலைப்படுத்தி, ஆத்திரம் அவசரத்தைப் புறக்கணித்து, அன்னைக்குத் தங்கள் பிரச்சினையின் விவரத்தை உணர்ச்சி வசப்படாமல் தெளிவாக எழுதி முடித்தால் கடிதம் தபாலில் சேரும் முன் பிரச்சினை தீரும்.

தம் வாழ்நாளில் சுமார் 20,000 கடிதங்களுக்கு, பகவான் பதில் எழுதினார். தியான மண்டபத்திற்கு அருகில் உள்ள படிக்கட்டின் உச்சியில் உள்ள சிறு மேஜை மீது வைக்கப்பட்ட தட்டில் இரவு 11 மணி வரை சாதகர்கள் தங்கள் கடிதங்களைக் கொண்டு வைப்பார்கள். மறுநாள் காலையில் பகவான் பதில் எழுதி முடித்து விடுவார். பொதுவாக அன்னையுடன் கலந்து பதிலை அவரே எழுதுவார். சில சமயங்களில் கடிதத்தின் முடிவில் அன்னையும் ஓரிரு வரிகள் எழுதுவதுண்டு. அழகான கவர்களில் பதிலைப் போட்டு அன்னை சாதகரின் பெயரை எழுதுவார். மறுநாள் காலை ஆசிரமக் காரியதரிசி அக்கடிதங்களை வினியோகம் செய்வார். அவருக்கு Divine postman தெய்வத்தின் தபால்காரர் எனப் பெயராயிற்று.

ஸ்ரீ அரவிந்தர் வேலை அட்டவணை

4 to 6.30 p.m. மாலை வந்த தபால், சாப்பாடு, தினசரி பேப்பர் படிப்பது.

7 or 7.30 to 9 p.m. அதன் பின் வந்த கடிதங்களைப் பார்ப்பது

9 to 10 a.m. தியானம்

10 to நள்ளிரவு பதில் எழுதுவது

நள்ளிரவு to 2.30 a.m.குளிப்பது, சாப்பிடுவது, ஓய்வு

2.30 to 5 or 6 a.m. மீண்டும் பதில் எழுதுவது

எனக்கு அதிர்ஷ்டமிருந்தால் காலை 5 to 6 a.m. வேலையிருக்காது என்கிறார்! அதாவது மேலும் கடிதங்களில்லாவிட்டால், பதிலெழுதவேண்டிய வேலையிருக்காது என்று குறிப்பிடுகிறார்.

இது ஒரு பயங்கரமான வேலை அட்டவணை.

ஏன் இப்படி இரவெல்லாம் கண்விழித்து அவர்களிருவரும் வேலை செய்தார்கள் என்ற கேள்விக்கு அவர்கள் பதில் தரவில்லை. எவரும் கேட்கவுமில்லை. நாமே பல்வேறு வகையாக யூகம் செய்யலாம். அவற்றுள் முதலில் கூறியதுபோல் பகவான் எழுதியுள்ளது ஒரு காரணம்.

யோகத்தை மேற்கொண்டவர்கள் அதனால் எழும் பிரச்சினைகளை மனத்தில் குறுக்கீடு, உணர்ச்சி வசப்படுதலின்றி நிதானமாக அன்னைக்கு எழுதினால் யோகத்தில் உள்ள தடை விலகும்.

யோகத்தால் சேகரமான ஆனந்தம் சக்தியாக உள்ளே சேருவதால் அது வெளிப்பட முனைகிறது. சாதகர்கட்கு எழுதுவதால் சக்தி அருளாக அவர்களைப் போய்ச் சேரும். அப்படி வெளிப்படாவிட்டால் சக்தி அளவுக்கு மீறி உள்ளே சேகரமானால், அது வலியாக மாறுகிறது என்று அன்னை கூறியுள்ளார். அதுவும் காரணமாக இருக்கலாம்.

தாங்களே முன்வந்து சாதகர்கள் எழுதுவதைக் குறைக்க வேண்டும் என எதிர்பார்த்ததாகவும் நாம் அறிவோம்.

******book | by Dr. Radut