Skip to Content

02. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரம வாழ்வில்

அன்னை பக்தர்கட்கும், அவர் யோகத்தைச் செய்பவர்கட்கும் ஆயுள் அதிகம். 75, 80 வயதானவர்கள் 65, 55 வயதாகத் தோன்றுவர். நடையும், செயலும், குரலும், சுறுசுறுப்பும் அங்ஙனமிருக்கும்.

உணர்ச்சிப் பூர்வமானவர்களுக்குச் சூட்சுமமுமிருந்தால் சிறுவயதிலிருந்தே அவர்கட்கு நடக்கப் போவது தெரியும். நாளைக்கு சித்தப்பா வரப் போவது, இன்றே தெரியும். சென்ற மாதம் எனக்கு ஓர் ஆங்கிலேயரை நினைவு வந்தது. 25 ஆண்டுகட்கு முன் இவர் என்னைச் சந்தித்தார். சுமார் 1 மாதம் ஆசிரமத்தில் தங்கியிருந்தபொழுது தினமும் என்னை வந்து சந்திப்பார். இவர் பெயர் தஹப்ல்ட் - ரால்ப். சென்ற மாதம் இவர் நினைவு வந்தது. நேற்று அவர் போன் செய்து என்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தார் என எனக்குச் செய்தி வந்தது. தற்சமயம் நான் அவர் வேண்டுகோளை ஏற்க முடியவில்லை. இதுபோன்ற அனுபவம் அனைவருக்கும் உண்டு. சூட்சுமமும், உணர்வும் உள்ளவர்க்கு இது அதிகம். அவர்கள் வழிபடும் கடவுள் அவர்கட்கு நிதர்சனமாக, தத்ரூபமாகத் தெரிவதுண்டு.

அப்படிப்பட்ட ஒருவர் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் காலத்திற்குப் பின் ஆசிரமம் வந்தார். புதுவை வந்தபின், சமாதிக்குப் போகும் முன்னிரவு அவரால் தூங்க முடியவில்லை. இவரை நன்கு அறிந்த இவர் குடும்பத்தார், இவர் புதுவை வந்து சமாதி தரிசனம் செய்யவிரும்பியும், நெடுநாள் அவர் அவ்வேண்டுகோளை ஏற்கவில்லை. நடுநிசிவரை தூக்கம் வராமற் புரண்டவர் சுமார் ½ மணி தூங்கி எழுந்தபின் தெளிவாகவும், தெம்பாகவும் உணர்ந்தார். இதயத்தில் ஓர் ஒளி தெரிந்தது. அது எழுந்து புருவமத்திக்குப் போயிற்று. ஆனந்தம் பெருக்கெடுத்தது. இது அன்னை தரிசனம்.

சாந்தம் தம்முள் நுழைந்து சந்தோஷம் பொங்குவது ஒரு நாள் தெரிந்தது. இவர் சரிவர ஆங்கிலம் கற்காதவர். இவர் "சாவித்திரி" படிக்க வேண்டுமென்று மற்றவர் கூறினர். சாவித்திரியைப் பிரித்துப் படிக்க அவர் முயன்றபொழுது தம் கண்கள் ஸ்ரீ அரவிந்தர் கண்களாக மாறி படிப்பதை அவர் உணர்ந்தார். உடல் ஆனந்தத்தால் பதறியது. தொடர்ந்து பல பக்கங்கள் படித்து வியந்தார்.

ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும் பக்தர்களுடன் ஐக்கியமாகி விடுகிறார்கள். சூட்சுமம் உள்ளவர்கள் அதை உருவமாக உணர்கிறார்கள். அப்பார்வை அனைவருக்கும் இல்லாததால், மற்றவர்கள் கனவில் அதைக் காட்சியாகக் காண்கிறார்கள். அந்த நேரம் ஸ்ரீ அரவிந்தர் மற்றவர்கள் வாயிலாகச் சொல்லாகவோ, படமாகவோ, புத்தக ரூபமாகவோ வருகிறார். அருள் அனைவருக்கும் ஒன்றே. தெரிவது பல்வேறு நிலைகளில் உள்ளது. தெரியாததால், அருளில்லை எனப் பொருளில்லை. ஆப்பரேஷன் செய்வதை நாம் அறிவதில்லை. ஆனால் டாக்டர் சொல்வது மட்டுமே நமக்குத் தெரியும். நமக்குத் தெரியாவிட்டாலும் அத்தனையும் நடப்பதுபோல், அருள் நம்மை அறியாமல் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

இந்த பக்தர் அதிகாலையில் எழுந்து தியானம் செய்வார். தியானம் meditation, concentration என இருவகைப்படும். எது என இவர் அறிய விரும்பினார். அன்னையுடன் மானசீகமாகப் பேசுவார். அன்னையின் குரல் பதில் கூறும்.

"நீ எதுவும் செய்யவில்லை.
உன் சரணாகதியை ஏற்ற இறைவன் தியானம்
செய்கிறான். உன் மனத்தால் நீ குறுக்கிடுவது
அவசியமில்லை" என அன்னை உள்ளிருந்து பேசினார்.

புன்முறுவல்

ஸ்ரீ அரவிந்தர் எப்பொழுதும் சிரிப்பதில்லை. அன்னை எந்நேரமும் வாய் நிறைய சிரிப்பார். எப்பொழுதும் புன்னகையால் மலரும் அன்னை பல சமயங்களில் சிரிக்காமலேயிருப்பதைப்பற்றிச் சாதகர்கள் பகவானுக்கு எழுதி, ‘ஏன் அன்னை என்னைப் பார்த்தவர் சிரிக்கவில்லை, என் மீது கோபமா’ எனவும் கேட்பதுண்டு. மலர்ந்த முகம் இனிய நிலை. தன் முன்னால் நிற்கும் பக்தனுடைய ஆத்மாவுக்கு அருள் செய்யச் சிரிக்கும் அன்னை, பேரருள் செய்ய வேண்டியபொழுது தம் உள்ளே சென்று (concentrate) தியானநிலையிலிருந்து அதிகபட்ச சக்தியை பக்தனுக்குத் தர முயல்கிறார் என்ற ஒரு விளக்கத்தை பகவான் சாதகருக்கு எழுதினார்.

அன்னையை ஆர்வமாக நினைத்து, நினைவில் லயித்தால் நம் முகத்தில் நம்மை அறியாமல் புன்னகை தோன்றும், காண்பவருக்கு அது beatific smile தெய்வீக மலர்ச்சியாகத் தெரியும். நம்முள் அன்னையிருக்கிறார். நாம் சாப்பிடும் சாப்பாட்டை அவரே சாப்பிடுகிறார் என்பது சமர்ப்பணம். அச்சமர்ப்பணம் பலித்தால் வாயில் விழுந்த சாதம் அமிர்தமாக இனிக்கும். அன்னை சூப் வாங்கும் நாள்களில் தாமே சூப்பை அருந்தி, மீதத்தை பக்தருக்கு அளித்தவற்றை பெற்றவர் பெற்ற இன்பம் அதுவே.

இன்று வரவேற்பறை எனப்படும் இடத்தில் 1926க்கு முன் சூப் வழங்கப்பட்டது. சிறுவன் ஒருவன் ஆசிரமம் வந்தான். அவன் தகப்பனார் இங்கிருந்தார். அன்னையைத் தரிசிக்க அவன் விழைந்தபொழுது இன்று reading room உள்ள இடத்தில் அன்னை தரிசனம் தந்தார். 60 ஆண்டுகட்குப் பின்னும் அத்தரிசனம், அன்னையிருந்த சூழல், அவர் உடை அவருக்குத் தெளிவாக நினைவுள்ளது. சிறுவன் அன்னையை வணங்கி எழுந்தவன், "நான் திரும்பிப் போக விரும்பவில்லை" என அன்னையிடம் கூறினான். அன்னை ஸ்ரீ அரவிந்தரைக் கேட்டுச் சொல்வதாகக் கூறினார்.

அடுத்த வாரம் தரிசனம் வந்தது. அந்த நாட்களில் தரிசனம் பெறுபவர்கள் பெயர்ப் பட்டியல் நோட்டீஸ் போர்டில் வரும். பையன் ஆர்வமாகத் தரிசனத்திற்குத் தன் தகப்பனார்பின் போனான். திரும்பப் போக மறுத்த பையன் என ஸ்ரீ அரவிந்தர் அறிய உதவும் என நினைத்தான். தகப்பனார் தரையில் விழுந்து நமஸ்காரம் செய்தார். ஸ்ரீ அரவிந்தர் பாதங்களில் தலை வைத்து, தம்மை மறந்திருந்தார். அந்நேரம் ஸ்ரீ அரவிந்தர் பார்வை சிறுவன் மீது பட்டது.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் சிறுவனைக் கண்டு புன்முறுவல் செய்தார்.

மறுநாள் இச்செய்தியை அறிந்த அன்னை பையனுக்குச் சொல்லி அனுப்பினார், "ஸ்ரீ அரவிந்தர் உன் மீது சந்தோஷப்பட்டார்" என செய்தி வந்தது.

பவித்ரா

பிலிப் சென்ட் ஹிலேர் என்ற பிரெஞ்சுக்காரர் ஆசிரமத்தில் சேர்ந்தார். இவருடைய ஆசிரமப் பெயர் பவித்ரா. பவித்திரம் எனில் தூய்மை. இவர் ஒரு இன்ஜீனியர். ஆன்மாவைத் தேடி, ஜப்பான், சைனா, திபேத் போன்ற இடங்களுக்கெல்லாம் போய் முடிவாக ஸ்ரீ அரவிந்தரைச் சரண் அடைந்தார்.

ஆசிரமம் ஆரம்பிக்கும்முன் என்பதால் பவித்ரா தினமும் ஸ்ரீ அரவிந்தரைக் காண்பார். இவருடைய கேள்விகட்கு பகவான் பதில் கூறுவார். அப்படி பகவான் கூறியவற்றில் சிலவற்றை இங்கு சுருக்கமாகத் தருகிறேன். 

 • பிரான்சுக்குத் திரும்பப் போக நினைப்பது பலன் தாராது.
   
 • இங்கு வந்து நீங்கள் புதியதாய் கண்ணுற்ற ஆன்மீகச் சக்தியைத் திரும்பப் போனால் இழந்து விடுவீர்கள்.
   
 • இது தோல்வியாகும்.
   
 • புதிய ஆன்மீகச் சக்தி உங்களில் வெளிப்பட முயல்கிறது.
   
 • அறிவும், திறனும், அந்தரங்க உண்மையுமிருப்பதால் இது பலிக்கும்.
   
 • சொந்தக் கருத்து முன் வருவதை மறுத்தால் உங்கள் அறிவின் திறன் ஆன்மீகப் பலன் தரும்.
   
 • அதைப் பெற மனம் மௌனம் பெற வேண்டும்.
   
 • உங்களுக்கு உதவக் கூடிய யோகிகள் பலர் இந்தியாவில் இருக்கிறார்கள்.
   
 • அவர்கள் பாஷை நீங்கள் அறியாதது.
   
 • புதியவர்களை எளிதில் அவர்கள் ஏற்பதில்லை எனினும் அவர்களை நீங்கள் நாடலாம்.
   
 • மோட்சம் கிடைப்பது முதல் நிலை,
   
 • ஜோதி எல்லாக் கரணங்களிலும் நுழைவது அடுத்த நிலை.
   
 • மனிதனைப் பரிசுத்தப்படுத்துவது ஆயுள்கால வேலை.
   
 • இந்த இலட்சியத்தை உங்கள் முன் வைக்கின்றேன்.
   
 • இங்கேயே தங்க நீங்கள் முடிவு செய்தால் என்னால் உதவ முடியும். 

இவற்றைக் கேட்டபின் பவித்ரா ஆசிரமத்தில் தங்கிவிட்டார். இவர் காலமானபின் இவர் ஆத்மா அன்னை நெஞ்சில் குடிகொண்டது. ஒரு க்ஷணம் கூட அதை விட்டு அகலவில்லை என அன்னை கூறினார். ஆசிரமப்பள்ளிக்குப் பவித்ரா டைரக்டராக இருந்து ஆரம்பித்து நடத்தினார்.

அநாமா

நாம் குருவுடனிருக்கும்பொழுது எல்லாக் காரியங்களையும் அவரிஷ்டப்படிச் செய்ய வேண்டும் என நினைக்கின்றோம். இது இயல்பு. ஆனால் இயல்புக்கும் அளவுண்டு.

குரு நம் சுபாவப்படியே நமக்கு ஆலோசனை சொல்வார். நமக்கு எது உயர்ந்ததோ அதை எந்தக் குருவும் சிஷ்யரிடம் தடையின்றிக் கூறுவதில்லை. பல விஷயங்களுக்கு வாழ்வு அனுமதியளிக்கும், பல விஷயங்கட்கு வாழ்வு தடையாக இருக்கும்.

நமக்கு இரு எண்ணங்களுண்டு. ஒன்று நாம் பேசப் பிரியப்படுவது. அடுத்தது நம் உள்ளுணர்வு ஏற்பது. இவை இரண்டும் ஒன்று போலிருந்தால் சூழ்நிலை சாதகமாக இருக்கும். குரு தடையின்றி ஆலோசனை சொல்வார். குருமார் என்பவர்கள் பல வகையினர். சிஷ்யர்களும் பல வகையினர்.  

 • குரு சொல்லாவிட்டாலும் எது அவருக்குத் திருப்தி தருமோ அதைச் செய்ய விரும்பும் சிஷ்யன்.
   
 • நமக்குப் பிடிக்காவிட்டாலும், குரு சொல்லியதில் உண்மையிருக்கும் என்பதால் உளமாற ஏற்று, செய்து, பயன் பெறுபவர்.
   
 • குரு சொல்வதை, சௌகரியமானதை ஏற்று, மற்றதைப் புறக்கணிப்பவர்.
   
 • தனக்குப் பிரியமானதைக் குரு சொல்ல வேண்டும் என விரும்புபவர். 

குருவின் மனநிலை 

 • சிஷ்யனுக்குப் பிடித்த நல்லதைச் சொல்பவர்.
   
 • சிஷ்யனுக்குத் தவறு நேரும் என்றபொழுது கண்டித்து அதனின்று விலக்குபவர்.
   
 • தன் இஷ்டப்படி சிஷ்யன் நடக்க வேண்டும் என வற்புறுத்துபவர்.
   
 • கேட்டதற்கேற்ப பதில் சொல்பவர்.  

வீடு, குழந்தைகள், தொழிலுக்குப் பெயர் கேட்பது சிஷ்யர் வழக்கம். அப்படி அன்னையிடம் கேட்டவர்கட்கெல்லாம் அவர் ஸ்ரீ அரவிந்தர் பெயரை வைத்தார். அன்னை தம் பெயரை வைக்க மாட்டார். அன்னை பெயரை வைத்து அதற்கு ஆசி கேட்பதுண்டு. கேட்பவர் முழுமனதுடன் கேட்பது முறை. தமக்கோ, வீட்டில் மற்றவர்க்கோ குருவிடம் பெயர் கேட்க இஷ்டமில்லாவிட்டால், கேட்காமலிருப்பது நன்று.

ஸ்ரீ அரவிந்தரிடம் பிறந்த குழந்தைக்குப் பெயர் கேட்டார்கள். அவரிடமிருந்து பதில் வரவில்லை. அடுத்த ஆண்டு குழந்தைக்கு ஆசி பெறப் போனபொழுது பகவான் பெயரென்ன என்றார். ஓராண்டாக பெயருக்காகக் காத்திருக்கிறோம். இன்னும் பெயர் வைக்கவில்லை என்றனர். பகவான் பேப்பரில் அநாமா என எழுதிக் கொடுத்தார். அதுவே குழந்தைக்குப் பெயராயிற்று.

குரு பெயர் கொடுக்கும் வரை பொறுத்திருப்பது சிஷ்யனின் உயர்ந்த மன நிலையைக் காண்பிக்கின்றது. பெயரிட குரு தயங்கியதால், தம் மனத் தயக்கத்தை உணர்வது ஒரு முறை.

எது சரி என்பது குழந்தையின் எதிர்காலம் காட்டும். பெயரையும் மறந்து ஈஸ்வர தியானத்திலிருந்தால் சிஷ்யன் உயர்ந்த மன நிலையுடன் காத்திருந்தான் எனப் பொருள். ஊர் பேர் தெரியாதவனாகிவிட்டிருந்தால், ஆழ்மனம் அடம் பிடித்து குருவை வற்புறுத்தியதாகப் பொருள்.

முக்கியமானவர் வந்திருக்கிறார்

ஆசிரமம் ஆரம்பிக்கும் முன் ஒருவர் வந்து கேட்டில் உள்ளவரிடம் ஸ்ரீ அரவிந்தரிடம் போய் ஒரு முக்கியமான மனிதர் வந்திருக்கிறார் எனக் கூறவும் என்றார். அவரும் அப்படியே பகவானிடம் போய் a very important man has come என்று கூறச் சொன்னதாகச் சொன்னார். Tell him to come and see us, unimportant people, முக்கியமில்லாத நம்மை வந்து அவரைப் பார்க்கச் சொல் என்று பகவான் கூறினார்.

மனிதன் முன்னேற திறமை, பொறுமை, அடக்கம், நினைப்பு ஆகியவை தேவை. ஒருவன் தன்னைப்பற்றி என்ன நினைக்கின்றானோ, அது அவன் முன்னேற்றத்தை நிர்ணயிக்கும். பொய்யாக, பெருமைக்காகப் பேசுபவர்கள் வேறு. உண்மையிலேயே தம்மைப்பற்றி தவறாக நினைத்து, நினைப்பை நம்புபவர்கள் பல வகையினர். மேற்சொன்ன மனிதர் அவருள் ஒரு வகையினர். 

 • ஒரு கட்சியில் பேச்சாளராக இருப்பவர் கட்சி தன்னால் தானிருக்கிறது என நம்புவதுண்டு. கட்சிக்கு முக்கியமான நேரத்தில் இவர் அழைக்கப்படவில்லை. எவரும் இவர் அவசியம் எனக் கருதவில்லை. அதன் பின்னும் அவர் தாமில்லாவிட்டால், கட்சியிருக்காது என நம்புகிறார்.
   
 • 70 வருஷத்திற்கு முன் அண்ணன் ரூ. 150 சம்பாதிக்கின்றார். தம்பி வேலையில்லாமல் 12 ஆண்டாக இருப்பதுடன் தறுதலையாக இருக்கிறான். வீட்டில் எவரும் இவரை எதுவும் கேட்பதில்லை. நண்பரொருவர் ஏன் இப்படிச் சம்பாதிக்காமலிருக்கிறாய் என்ற பொழுது, "ஏன் நான் மட்டும் சம்பாதிக்கவில்லையா? மாதாமாதம் சொளையாக ரூ. 10/- வருகிறது என்னால்" என்றார். ரூ. 10 ஒரு வருமானமில்லை. அச்செய்தியை ஆராய்ந்தால் இவருக்கு பாதி உரிமையுள்ள மனையில் உள்ள குடிசை வீட்டு வாடகையை அவர் குறிப்பிட்டார். அதன் மொத்த வாடகை ரூ. 3 3/4, இவருக்கு உரிமையானது ரூ. 1 1/8, அந்த வீட்டில் ஏழை உறவினர்களிருப்பதால் வருஷத்தில் 6 மாதமே வாடகை வரும். அதாவது இவர் குறிப்பிட்ட ரூ. 10/- என்பதன் உண்மை ரூ. 1க்கும் சற்றுக் குறைவு.
   
 • 30 பேர் வேலை செய்யும் ஆபீசில் ஆபீசர், மேனேஜர், தலைமைக் குமாஸ்தா, குமாஸ்தா எனப் பலருண்டு. அவருள் ஒரு குமாஸ்தா தம்மைப் பற்றி அதிக நினைப்புள்ளவர். அவருக்கு மாற்றம் வரும் போலிருந்தது. என்னை மாற்றிவிட்டால், இங்கு என்ன இருக்கும்? என அவர் வாய்விட்டுக் கேட்டுவிட்டார். 

பூரணயோகம் அகந்தையை அழித்து பிறகு ஆரம்பிக்கும் யோகம். அடக்கம் பொதுவாக இருப்பது கஷ்டம். இந்த யோகத்திற்கு அவை அடக்கம் போதாது. மனம் அடங்கியிருக்க வேண்டும்.

Self awareness தன்னையறிதல் என்று ஒருவர் தம் நிலையையும், நினைப்பையும் ஒப்பிட்டுப்பார்த்தால், பிறர் நம் தலைக்குப்பின் நம்மைப் பற்றிப் பேசுவது நம் நிலையைப் பெரும்பாலும் உண்மையாகப் பிரதிபலிக்கிறது என அறியலாம்.

கனவில் தரிசனம்

கனவே அதிகமாக வராதவருண்டு. பகவானைக் கனவில் காண விழைபவர் அநேகருக்கு அது பலிப்பதில்லை. அநேகருக்கு அன்னையும், பகவானும் அடிக்கடி கனவில் தோன்றுவார்கள்.

கனவு ஏற்கனவே பகவானுடன் உள்ள தொடர்பைப் புதுப்பிக்கும் முறைகளில் ஒன்றாகும். இதுவரை இல்லாத உறவை ஏற்படுத்த கனவு பயன்படும்.

தொடர்ந்து பகவான் புத்தகங்களைப் படிப்பவர் சிலர் பகவானைக் கனவில் காண்பதுண்டு. அவர்களில் சிலர் பின்னால் ஸ்ரீ அரவிந்தரை வந்து சேர்பவர்களாக இருந்தால், பகவானுடன் சம்பந்தப்பட்ட பொருள்கள் கனவில் வரும். அப்படி ஆசிரமம் வந்தபின் அப்பொருள்கள் அவர்களுக்குக் கனவில் கண்டதை நினைவுபடுத்தும்.

உணர்வில் விழிப்புள்ளவர்கள் தங்களை அறிந்தோ, அறியாமலோ, தியானமையம், அன்பர்கள், நூல்கள், relics சின்னங்களுள்ள இடங்கள் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டால், கனவில் பகவான் சம்பந்தப்பட்டவை தோன்றும்.

ஆத்மா, ஏதோ காரணத்தால் ஸ்ரீ அரவிந்தர் சக்தியை அறிந்திருந்தால், அல்லது அதனால் தீண்டப்பட்டால், அது கலக்கமடையும்பொழுது கனவில் பகவான் ஏதோ ஒர் உருவத்தில் எழுந்து கலக்கத்தைப் போக்குவார்.

கனவில் காணும் தரிசனம் சூட்சும தரிசனம்.

திருமணமான புதிதில் பெண் கனவு கண்டாள். தெய்வீகமான நந்தவனம். ஜோதி பொறியாய் தவழ்கிறது. இக்கனவிற்குப் பின் அவள் கருவுற்றாள். பொதுவாக சோகம் நிறைந்தவள் இப்பெண். சில மாதங்கட்குப் பின் கனவு வந்தது. கனவில் சோகம் தொடர்ந்தது.

திடீரென வெண்மையான தெய்வம் ஒன்று தோன்றியது. அதைக் கண்ணுற்ற பின் அவளை அமைதி சூழ்ந்தது. அவ்வமைதி இத்தெய்வப் பிறவியிடமிருந்து தான் வருகிறது என நினைத்தவள், கனவில் அதைத் தொடருகிறாள். அத்தெய்வம் மறைந்து விடுகிறது. பல மாதம் கழித்து பெண் குழந்தை பிறந்தது. 

 • பல ஆண்டுகட்குப் பின் அவர் ஸ்ரீ அரவிந்தர் படத்தைக் கண்டார்.
   
 • தாம் கனவில் கண்ட தெய்வம் ஸ்ரீ அரவிந்தர் என அறிந்தார்.

ஆத்மா எக்காரணத்தாலோ பகவான் சூழலால் தீண்டப்பட்டிருந்ததால், சோகம் எழுந்தவுடன் அதைக் கரைக்க பகவான் கனவில் தோன்றியுள்ளார். 

அரசியலும், ஸ்ரீ அரவிந்தமும்

இன்று உலகை ஆளும் கொள்கைகள் இரண்டு. ஒன்று கத்தோலிக்க மதம். அடுத்தது கம்யூனிசம் என அன்னை கூறினார். இலட்சியவாதிகள் உலகைத் தழுவும் இலட்சியங்களை நாடுகிறார்கள். நாடு அடிமையாக இருந்ததால், இந்திய இளைஞர்கள் சுதந்திரத்தை நாடினர். முன்னோடிகள் உலகத்தின் சுபீட்சத்தைக் கருதினர்.

ஸ்ரீ அரவிந்தர் சுதந்திர வேட்கை கொண்டபொழுது வேறெதையும் கருதவில்லை. யோகத்தையும் சுதந்திரத்திற்காகவே நாடினார். அவருடைய குரு தீட்சையால் பக்தி, ஞானம் தர விரும்பியபொழுது அப்பாதையின் உச்சகட்டமாகிய மௌனப் பிரம்மத்தை ஸ்ரீ அரவிந்தர் மூன்று நாளில் அடைந்தார். அலிப்பூர் வழக்கில் சிறையிலிருந்தபொழுது நாள் முழுவதும் தியானத்திலிருப்பார் ஸ்ரீ அரவிந்தர். ஆனால் அவர் மனம் சுதந்திரத்தால் ஆட்கொள்ளப்பட்டது. அந்நிலையில் சூட்சும உலகில் விவேகாநந்தர் தோன்றினார். தோன்றியவர் சுதந்திரத்தைப்பற்றியோ, மௌனத்தைப்பற்றியோ பேசவில்லை. ஸ்ரீ அரவிந்தருடைய காட்சியில் விவேகாநந்தர் தோன்றி,

இதுவன்று உண்மை, அதுவே உண்மை

என ஸ்ரீ அரவிந்தர் ஏற்கும்வரை பதினைந்து நாள் வலியுறுத்தி சத்திய ஜீவியத்தைச் சுட்டிக்காட்டினார். சத்திய ஜீவியச் சித்தியால் ஸ்ரீ அரவிந்தர் எல்லோர் உள்ளத்திலும் வாசுதேவனைக் கண்டார்.

புதுவை வந்து ஆர்யா பத்திரிகை நடத்தியபொழுது எழுதிய 5 நூல்களில் தலையானது Life Divine. சத்திய ஜீவியச் சித்தியை விளக்கும் நூல் Life Divine. கம்யூனிசத்திற்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட பரோடா இளைஞர் ஒருவர் குருஷேவ் வந்து ஸ்டாலினை மறுத்தபொழுது, பல ஆண்டுகளாக அவர் ஏற்ற தத்துவமும், கனவும் இடிந்ததைக் கண்டு, திகைத்து நின்றபொழுது Life Divine அவருக்குக் கிடைத்தது.

கம்யூனிசம் சமத்துவத்தைப் பேசுகிறது. Life Divine ஆன்மீகச் சமத்துவத்தை உலகுக்கு அறிவிக்கிறது. இந்நூல் இளைஞரைக் கவர்ந்தது. பல ஆண்டுகட்குப் பின் புதுவை வந்து பால்கனி தரிசனம் செய்து திரும்பியவர் வேலையை விட்டுச் சேவையை மேற்கொண்டு பள்ளி நடத்த இடம் தேடினார்.

இவருடைய நண்பர்களுடன் ரோட்டில் நின்று பேசிக்கொண்டிருந்ததைத் தற்செயலாகக் கேட்ட ஒருவர் 2 ஏக்கர் நிலம் தர முன்வந்து தந்தார். அதுவே அவர் கண்ட முதல் அற்புதம்.

அன்றிலிருந்து அவர் சேவையில் அற்புதங்கள் தோன்றியபடியிருந்தன.

பணம் வசூல் செய்ய பலரை அணுகியபொழுது அன்னையை அறிந்து அவரிடமிருந்து இரு ஜோடி மிதியடிகளைப் பெற்ற பெண்மணியைச் சந்தித்தார். அப்பெண்மணி இரு ஜோடி மிதியடிகளில் ஒரு ஜோடியை தம் பூஜை அறையில் வைத்துவிட்டு, சேவை செய்பவருக்கு அடுத்ததைத் தர நினைத்திருந்தார்.

இந்த இளைஞர் அந்த மிதியடிகளைப் பெற்றார்.
ஸ்ரீ அரவிந்தரின் (relics) சின்னங்களுடன் அவர் சேவை
இன்று பொலிவு பெறுகிறது.

பொன்னொளி

ஸ்ரீ அரவிந்தரை, காட்சியாகக் கனவில், தியானத்தில், மனதில், நினைவில், சமாதியில் கண்டவர் பலர். அவருள் வெள்ளொளியாகவும், இளஞ்சிவப்பாகவும், கரியநிறத்திலும், நீலநிறத்திலும், பொன்னொளியாகவும் காண்பவருண்டு.

ஸ்ரீ அரவிந்தர் நூற்களைப் பயிலுவது மட்டுமே சிலருக்கு இலட்சியமாக இருந்தது. வேறு சிலர் சேவையை மட்டும் ஏற்று படிப்பு, தியானத்தைப் புறக்கணிப்பார்கள். முடிவாக எதை ஏற்றாலும், முதலில் மனம் பலவற்றையும் நாடுவதுண்டு.

கத்தோலிக்க மதத்தில் போப் தலைவர். அவருக்கு அடுத்தபடியாக சுமார் 32 கார்டினல்கள் உண்டு. பொதுவாக, போப் இவர்களிலிருந்துதான் தேர்ந்தெடுக்கப்படுவார். இதற்கடுத்த பதவி ஆர்ச் பிஷப். இவருக்குக் கீழ் ஒரு நாடோ, பல நாடுகளோ இருப்பதுண்டு. அப்படிப்பட்டவர் ஒருவர் I have seen God என்று கூறுகிறார். இத்தாலியில் சூரிய உதயத்திற்கு முன் அவர் சர்ச்சுக்குப் புறப்பட்டு மனித நடமாட்டமில்லாத வீதிகளில் போய்க் கொண்டிருக்கிறார். டெம்ப்பரேச்சர் 0ºC, பனி உறையும் குளிர். நம் நாட்டவர் அக்குளிரில் உறைந்து மாய்ந்துவிடுவர். அவர்கள் நாட்டில் அது ஆனந்தத் தென்றலாக (air was crisp) உணரும் நேரம். அதுபோன்ற வீதிகளில் உலவி சர்ச்சுக்கு வந்தபொழுது அவ்வளவு அதிகாலையில் சர்ச் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்றார். நிசப்தம், நிச்சலனம் என்ற அமைதியில், "நான் கடவுளைக் கண்டேன்'' என்று பக்தி மேலிட்டு எழுதுகிறார். ஆன்ம விழிப்பு பெற்றவர் என்பதால், இறைவன் உலவும் தருணம் அவரை வீதி வழியேயும், சர்ச்சுக்கும் அழைத்துள்ளது. அவர் தம் இந்த ஆன்மீக அனுபவத்தை எழுதிய நூல் பிரபலமாயிற்று.

காலையிலும், மாலையிலும், சந்தடியான நேரத்திலும், கூட்டமான சந்தர்ப்பங்களிலும் மேற்சொன்ன அமைதியின் உச்சகட்டத்தை நாம் சமாதியில் காண்கிறோம். மனம் இறைவனின் ஸ்பர்சத்தால் பூரிக்கிறது. இது போன்ற இடம் உலகில் இது ஒன்றே என அன்னை கூறுகிறார்.

வட நாட்டு அன்பர் சென்னைக்கு, பயிற்சிக்காக வந்தவர், தற்செயலாய் சமாதி வந்து தம்மைப் பறிகொடுத்து ஆசிரமத்தில் சேர விழைந்து அவர் மனமும், உணர்வும் பட்ட பாட்டை உருக்கமாக விவரிக்கின்றார். ஆசிரமத்தில் சேர அன்னையிடம் அனுமதி கேட்டு பதிலுக்காகக் காத்திருக்கிறார். பதிலில்லை.

Life Divine & Synthesis of Yoga படிக்கின்றார். மீண்டும் புதுவை வந்து அன்னையைத் தரிசிக்கிறார். அன்னை, "ஆசிரமத்தில் உங்களால் தங்க முடியுமா என ஒரு முடிவுக்கு வரவேண்டும்'' என்கிறார். ஆறு மாதம் இருந்து ஆசிரமத்தை ஏற்பதாக முடிவு செய்து வேலையை இராஜிநாமா செய்கிறார். வேலையை இராஜிநாமா செய்யத் துடித்தபொழுது அன்னை வழக்கம்போல் இப்பொழுது வேண்டாம் என்று முதலில் கூறினார்கள்.

சூட்சும உலகைப் பற்றிப் படித்தவர் தாம் அங்கு போக விழைகிறார். 

 • ஓரிரவு அதைச் செய்து பார்க்க முடிவு செய்கிறார்.
   
 • "இதுதான் சூட்சும உலகம்'' என்ற குரல் கேட்கிறது.
   
 • எங்கு ஸ்ரீ அரவிந்தர் குடி கொண்டுள்ளார் எனவும் குரல் கூறியது.
   
 • பொன்மயமான நதியும், பொன்னொளியுமே அவருக்குத் தெரிந்தன. 

ஸ்ரீ அரவிந்தர் தெரியவில்லை.

சக்தியும், பக்தியும்

Water diviner நீரூற்று கண்டுபிடிப்பவர், அன்னைக்கு வலிய வந்து சேவை செய்து பெற்ற பெரும் பலனை நான் பல முறையும் எழுதுவதுண்டு. இவரை ஆரோவில்லுக்கும், அன்னைக்கும் அறிமுகப்படுத்தியவர் ஒரு பக்தர். அன்னை தரிசனத்தால் பெரும் பலன் பெற்றபின் இவர் அன்னையின் சக்தியை அறிந்தார். என்றாலும் அன்னையை ஏற்று, அன்பராகவில்லை. இவர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஸ்ரீ அரவிந்தர் சக்தியை வெளிப்படுத்துகிறது.

நிலம் வாங்கும்பொழுது அங்கு நீரூற்றுள்ளதா என அறிய முடியாது. நீரூற்று உள்ளது என அறிந்தபின் நிலத்தை வாங்கப் போனால் நிலத்தின் சொந்தக்காரர் விலையை உயர்த்தி விடுவார். தம் சொந்த நிலத்தில் நீரூற்று காண முயன்ற பக்தர், பக்கத்து நிலங்களில் ஊற்று இருக்கிறதா எனச் சோதனை செய்தபொழுது பெரிய ஊற்று உள்ளது எனத் தெரியவந்தது. தெரிந்தபின் பக்தர் அந்நிலங்களை வாங்கி விட்டார். வாங்கிய பின் நீரூற்று உள்ள இடத்தை குறிப்பிட Water divinerஐ பக்தர் அழைத்துப் போக ஏற்பாடு செய்து இருவரும் பஸ் ஸ்டாண்டில் சந்திக்க முடிவு செய்தனர். பஸ் ஸ்டாண்டில் சந்தித்தனர். Water divinerஐ போர் முதலியார் என்பது வழக்கம். பக்தரைப் பார்த்தவுடன் முதலியார், பக்தருக்கு நண்பர்களான டாக்டர், எஸ்டேட் முதலாளிகளைப் பற்றி விசாரித்தார். முதலியாருக்குத் தம் திறமையை அவர்கள் பார்க்க வேண்டும் என்ற ஆசை. அவர்கள் வாழ்வு அமைந்த விதம் வேறு. அது அன்னைக்கு ஒவ்வாது. சொல்லப்போனால் முதலியாரின் பெருந்திறனுக்கும் ஒத்து வாராது. முதலியாருக்குப் பணம் கண்ணுக்குத் தெரிகிறது. அவர்களை அழைத்துப் போக விரும்பி, அவர்களைத் தேடிச் சென்று அழைத்துப் போனார்கள்.

உச்சிவேளை. காட்டு நிலப்பரப்பு. காடானாலும் நிழல் தரும் மரங்களில்லை. ஊற்று உள்ள இடத்திற்கு வேப்பங் கவையை எடுத்துக் கொண்டு முதலியார் கம்பீரமாக வந்தார். பெருமிதமாக நடந்தார். ஊற்றைக் கடந்து சென்றார். மீண்டும் திரும்ப வந்தார். கவை சுற்றவில்லை. பல முறையும் முயன்றார். வேப்பங் கவை சுற்றவேயில்லை. ஏற்கனவே நீரூற்றுள்ள இடத்தில் போர் போட்டு இறைக்கும் இடத்திற்கும் சென்று கவையைச் சோதித்தார். சுற்றவில்லை.

30 ஆண்டுகளாக பிழைக்க உதவிய திறமை தம்மை விட்டகன்றது என முதலியார் அறிந்தார்.

இனி எதிர்காலம் என்ன ஆவது? முதலியார் பீதி அடைந்தார். செய்வது என்ன எனத் தெரியவில்லை. பக்தருக்கு இரகஸ்யம் தெரியும். அவல வாழ்வு வாழும் பணக்காரர் சூழல் வேலையைத் தடுத்தது. முதலியார் வாழ்வு முடிந்துவிட்டது. ஒரு மரத்தடியில் போய் கண்ணை மூடி நின்று அன்னையை அழைத்தார். ஆராய்ச்சி நிலையத்தின் ஆபீசர்கள் வந்தனர். வந்தவர்களை - டாக்டரும் மற்றவரும் - அழைத்துக்கொண்டு போயினர். பக்தர் முதலியார் நெஞ்சில் அன்னையை பிரதிஷ்டை செய்தார். முகம் முதலியாருக்கு மலர்ந்தது. மீண்டும் ஊற்றின் மீது கவையுடன் நடந்தார்.

என்றும் போல் கவை நீரூற்றைக் காட்டிச் சுழன்றது.

குள்ளச்சாமி

புதுவையில் பாரதி வாழ்ந்த நாளில் இருந்தவர் குள்ளச்சாமி. பாரதி இவரைப்பற்றி ஒரு பாடல் எழுதியுள்ளார். இவர் ஒரு நாள் ஒரு வீட்டில் விரைந்து நுழைந்தார். பையன் ஒருவன் ஓடி வந்தான். வேஷ்டியை விலக்கி, காயத்தைக் காண்பித்து, "சொறிநாய் கடித்துவிட்டது பிளாஸ்திரி கொடு", எனக் கேட்டார். பையன் திரும்பி வந்தபொழுது அவர் அங்கில்லை. ஓடிவிட்டார். எப்பொழுதும் தெருவில் ஓடிக்கொண்டேயிருப்பார். பையன் அவர் பின்னே போனான். திரும்ப வந்தார். காயத்தைக் காட்டினார். அங்குக் காயமில்லை!

அழுக்கை மூட்டையாக முதுகில் சுமந்து சென்றார் குள்ளச்சாமி. "ஏன் சாமி இதைச் செய்கிறீர்கள்", என பாரதி கேட்டபொழுது "நீ மனதில் அழுக்கைச் சுமக்கிறாய்" என்றார்.

ரமண மகரிஷியையும், ஸ்ரீ அரவிந்தரையும் மகா புருஷர்களாக இவர் கூறினார். அதனால் ஒரு பிரமாணம் எடுத்துக் கொண்டார். புண்ய ஆத்மா உள்ள இடத்தை நோக்கி நடப்பது தீர்த்த யாத்திரைக்கு ஒப்பாகும் என்பது மரபு. குள்ளச்சாமி ரமண மகரிஷி குகைவரைக்கும் நடந்து போவார். வழியில் பிச்சை எடுப்பார். மூன்று வீடுகட்கு மேல் பிச்சை கேட்கமாட்டார். இவரை அறிந்தவர்கள் இவருக்குச் சிஷ்யராக விரும்பினார்கள். அவர் அதை விரும்பவில்லை.

தம்மை எவரும் விரும்பி நெருங்கக்கூடாது என்பதற்காகத் தரையில் புழுதியில் புரண்டு எழுவார். ரமணர் குகைவரை சென்றவர், உள்ளே போய் மகரிஷியைத் தரிசிக்க மாட்டார். மீண்டும் யாத்திரையைத் தொடங்கி ஸ்ரீ அரவிந்தர் வீடுவரை வருவார். அங்கும் உள்ளே நுழைய மாட்டார். மீண்டும் அதே யாத்திரையை ரமணர் குகை நோக்கி ஆரம்பிப்பார்.

ஒரு நாள் ஸ்ரீ அரவிந்தர் வீட்டுக்கு வந்தபொழுது கதவு திறந்திருந்தது. உள்ளே நுழைந்தார். மாடிக்கு வந்தார். ஸ்ரீ அரவிந்தர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். சில சிஷ்யர்கள் அருகே நின்றனர். ஒரு நாற்காலி காலியாக இருந்தது. குள்ளச்சாமி அந்நாற்காலியில் போய் உட்கார்ந்தார். அவரருகில் ஸ்ரீ அரவிந்தர் டீ அருந்தும் எனாமல் ஜாடியிருந்தது. அதனுள் டீ இருந்தது. சாமி டீயை எடுத்துத் தரையில் ஊற்றினார். ஜாடியையும் மாறி மாறிப் பார்த்தார். எழுந்து விரைவாக வெளியேறினார்.

அவர் போனபின் ஸ்ரீ அரவிந்தர், "ஏற்கனவே பெற்ற சித்திகளை தூர எறிந்தால்தான் புதிய பெரிய சித்தி கிட்டும் எனக் குள்ளச்சாமி, ஜாடியைக் காலி செய்து கவிழ்த்து அறிவிக்கிறார்" என்றார்.

நான் ஒரேயொரு அடக்கமான மனிதனை அறிவேன். அது ஸ்ரீ அரவிந்தர் என அன்னை கூறுவதன் உண்மை புலனாகிறது. எவரிடமிருந்தும் தமக்குத் தேவையானவற்றைத் தயக்கமின்றி ஸ்ரீ அரவிந்தர் ஏற்றுக்கொள்ளும் அடக்கமுள்ளவர்.

ஆசீர்வாதம்

"உங்களிடம் எதைக் கேட்கலாம்" என்ற கேள்விக்கு அன்னை
"என்னிடம் எதையும் கேட்கலாம்" என்று பதிலளித்தார்.

நாம் நம் மதவழிபாட்டு மரபுப்படி, குருவைத் தரிசிக்கப் போகும்பொழுது காணிக்கை, பழம் எடுத்துப் போகிறோம். வீட்டில் திருமணமானால் குருவுக்கு வேஷ்டி, அவர் மனைவிக்குப் புடவை எடுத்து அளிப்பது வழக்கம். எதைக் கொடுத்தாலும் அன்னை ஏற்றுக் கொள்வார். எதையும் அன்னையிடம் கேட்கலாம் என்பதற்கு அன்னை வற்புறுத்தாத நிபந்தனை ஒன்று உண்டு. அது, நம் மனம் அன்னை விரும்பும் நிலையிலிருக்க வேண்டும் என்பது. பொதுவாக நமக்கு அது இருப்பதில்லை. அதனால் "அன்னை தாமே அளிப்பார்", அந்த நேரம் நமக்குகந்தது. அதை மீறி எது கேட்டால் கிடைக்கும் என்று கேட்பதே பக்தர்கள் பாங்கு. அதற்குரிய பலனையே நாம் பெறுவோம். 

 • ஒருவர் தம்முடன் சமாதிக்கு வருபவர்கட்கெல்லாம் வத்தியைப் பெற்றுத் தருவார். சமாதியில் தம்முடன் வருபவர்கள் வத்தி ஏற்ற வேண்டும் என்பது சிறந்த எண்ணம். ஆனால் அவர் வீட்டிற்கு நிறைய கடையிலிருந்து ஆசிரமவத்தி வாங்கிப் போனால், அதை ஓரிரு நாட்களுக்குள் வருபவர்கட்குக் கொடுக்க வேண்டியிருக்கும். இதை ஒரு சேவையாகக் கருதி மகிழ்ந்தார். ஆனால் அன்று தம் ரூ. 120/- சம்பளத்தில் ஒவ்வொரு வாரமும் ரூ. 3.40க்கு வத்தி வாங்கி விநியோகம் செய்ய அவரால் முடியவில்லை. அவர் தம் பழக்கத்தை நிறுத்தவில்லை. தம் செயலுக்கும், தமக்கு நடக்கும் நிகழ்ச்சிக்குமுள்ள தொடர்பைப் பிற்காலத்தில் அவர் புரிந்து கொண்டார். 

நெடுநாளாக ஆசிரமம் வரப் பிரியப்பட்ட கல்கத்தா பக்தரின் பிரியம் பிரியமாகவே இருந்தது. திருமணமாயிற்று. குழந்தைகள் பிறந்தன. புதுவையில் World Union மகாநாட்டிற்கு 1967இல் பிரதிநிதியாக வந்தார்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்னை அறையில் சென்று தரிசிக்க விரும்பினார். அன்று அன்னை எவரையும் அனுமதிப்பதில்லை. அது ஸ்ரீ அரவிந்தர் தினம். தரிசனத்திற்கு 2, 3 நாள் முன்னதாக அன்னையை concentrationஇல் இருக்கும்படி ஸ்ரீ அரவிந்தர் கூறியுள்ளார். மகாநாட்டிற்கு வந்த 15 பிரதிநிதிகளும் அன்னையைத் தரிசிக்க விரும்பினர். ஆனால் ஒருவருக்கு மட்டும் அனுமதி கிடைத்தது. அவர் இவர். இவர் பிறந்த நாள் ஆகஸ்ட் 20. அன்று தரிசன அனுமதி கிடைத்தது. அன்னையுடன் பேச அனுமதியில்லை.

எனவே மௌனமாக இவர் தமக்குப் பாதுகாப்பு வேண்டினார். மௌனமாக உன் பிரார்த்தனையை ஏற்றேன். பாதுகாப்புத் தருகிறேன் என்றார் அன்னை.

அன்னையின் ஸ்பரிசம் மனிதனைத் திருவுருமாற்றும் என்று கேள்விப்பட்டிருந்ததால், தாம் தம் நெஞ்சைத் தொடும்படிக் கேட்டார். அவரும் இசைந்தார்.

பக்தர்கட்குத் தரிசனம் தரும்பொழுது அன்னை உள்ளே சென்று ஸ்ரீ அரவிந்தரை ஆசீர்வதிக்கச் சொல்லுவார். பக்தர் மௌனமாக இருந்தால் ஸ்ரீ அரவிந்த தரிசனம் அன்னை மூலம் கிடைக்கும். பக்தர் தம் விருப்பத்தை வெளியிட்டால், அதற்கேற்ற பலன் ஏற்படும். அன்னையே தாம் விரும்பிக் கொடுக்க நினைத்ததற்குத் தடையாகும். அத்துடன் ஊருக்குப் போனால், அனைவரும் தங்களுக்குத் வேண்டியதைச் செய்யச் சொல்வார்கள். நாம் செய்ய வேண்டிவரும். அதுவும் சேவையே. எது வேண்டும் என நாமே நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.

ஆசிரமம் ஆரம்பிக்கும் முன்

1911 முதல் 1925 வரை அடிக்கடி ஸ்ரீ அரவிந்தரை, சிறுபிள்ளையாய்த் தரிசித்தும், சில சமயங்களில் தினசரி பணிவிடை செய்தும், அவருடனிருந்தவர் எழுதும் செய்திகள்.

 • கட்டில் என ஸ்ரீ அரவிந்தர் அறையிலிருந்தது ஒரு camp cot. கான்வஸாலானது. ஒரு மூலையில் கிழிந்தது. ஸ்ரீ அரவிந்தருக்குரிய படுக்கை அதுவே. மற்றவர்கள் தரையில் பாயில் படுத்துக் கொள்வார்கள்.
   
 • 1920இல் புதுவை வந்த அன்னை, முதலில் ஸ்ரீ அரவிந்தருடன் தங்கவில்லை. இப்பொழுது நேரு வீதி எனப்படும் தெருவில் தங்கியிருந்தார்.
   
 • தரையில் உட்கார்ந்து யோகப் பயிற்சிக்காக பகவான் பத்மாசனமிட்டோ வேறு வகையாகவோ பயின்றதில்லை.
   
 • எப்பொழுதும் நடப்பார், இல்லை எனில் எழுதுவார்.
   
 • வெளியில் போவது வழக்கமில்லை.
   
 • அன்னை வீட்டிற்கு இரவில் சில சமயங்களில் அவருடன் சாப்பிடப் போவதுண்டு.
   
 • எனக்கும், ஸ்ரீ அரவிந்தருக்கும் தகப்பனார் - மகன் உறவுண்டு.
   
 • நான் தினமும் ஸ்ரீ அரவிந்தரை 11ஆம் வயதிலிருந்து பார்க்கப் போவேன்.
   
 • என் சகோதரி என்னுடன் வந்து, ஸ்ரீ அரவிந்தருக்கு டீ போட்டுக் கொடுப்பதுண்டு.
   
 • எங்கு பார்த்தாலும் சுருட்டுத் துண்டுகளும், குப்பையுமாக அவர் அறையிருக்கும்.
   
 • ஒரு முறை சி.ஆர்.தாஸ் வருகிறார், அவரைத் திண்டிவனம் போய் அழைத்து வா என்றார் பகவான்.
   
 • லாலா லஜபதிராஜ், முன்ஜி போன்ற பெரிய தலைவர்கள் பகவானைப் பார்க்க வருவார்கள்.
   
 • சிஷ்யர்கள் ஹாக்கி விளையாடுவதாகக் கூழாங்கல்லை அடித்த பொழுது என்மீது பட்டு இரத்தம் ஒரு முறை பீறிட்டது.
   
 • மாடியில் நடமாடிக் கொண்டிருந்த ஸ்ரீ அரவிந்தர் அவர் வீட்டை நோக்கிவரும் என்னைத் தம்மிடம் வரும்படிச் சைகை செய்தார்.
   
 • "ஏன் என்னைத் தினமும் பார்க்க வருகிறாய்'' என்று ஸ்ரீ அரவிந்தர் கேட்டார்.
   
 • "உங்களுடனேயே இருக்க விருப்பம்'' என்றேன்.
   
 • "அதற்கு நாளாகும், இப்பொழுது முடியாது'' என்று பதில் கூறினார். 

குழவிப்பருவம்

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை ஸ்ரீ அரவிந்தர் வாழ்வும் பல நிகழ்ச்சிகளால் கூறுகிறது. டார்ஜிலிங் கான்வென்டில் பயின்ற ஸ்ரீ அரவிந்தரையும், அவர் உடன் பிறந்தவர்களையும் சந்திக்கப் போனவர் அங்குள்ள sister கூறியதைத் தம் டைரியில் எழுதியுள்ளார். அவருக்குக் கிடைத்த செய்தியும் அது போன்றதேயாகும். முதிர்ந்த ஆன்மாவுள்ளவர்களின் முகக் குறியை ஸ்ரீ அரவிந்தரில் காண்பதாக sister கூறியுள்ளார். அவர் சொற்கள் பையன் வளர்ந்துவிட்டான், உயரமாக இருக்கிறான் என்று கூறும்பொழுது அவன் உடல் வளர்ச்சியைக் குறிப்பிடுவதாகவே அமைகிறது. சிஸ்டர் தெரிந்தோ தெரியாமலோ ஸ்ரீ அரவிந்தர் உள்ளே முதிர்ச்சி அடைந்தவர் எனக் கூறிவிட்டார்.

சிஸ்டர் மேலும் கூறியதாவது: 

 • சிறுவர்களை வரச் சொன்னோம். அதிக நாட்களாக வந்து சேரவில்லை.
   
 • அவர்கள் வீடு மலையில் உயரத்திலுள்ளது.
   
 • அனைவரும் நல்ல பிள்ளைகள். கடின உழைப்பாளிகள்.
   
 • ஸ்ரீ அரவிந்தருக்கு அப்பொழுது வயது 5. இளையவன் குறிப்பாக சந்தோஷமாக இருக்கிறான். இளையவன் என்பது ஸ்ரீ அரவிந்தராகும்.
   
 • அவர்கள் மலைச்சரிவில் ஏறி வரும்பொழுது நான் அவர்களைச் சந்தித்தேன்.
   
 • அனைவரும் நன்றாக வளர்ந்துள்ளனர்.
   
 • நீல உடையுடனும், ஊதா ஸ்டாக்கிங்கும் அணிந்து மிக அழகாக இருக்கின்றனர்.
   
 • இளையவன் (ஸ்ரீ அரவிந்தர்) நன்றாக வளர்ந்துள்ளான். அவனுடை மிகப் பொருந்தியுள்ளது.
   
 • பரந்த முகம் என்னைக் கவர்ந்தது.
   
 • என்னைக் கண்டவுடன் அனைவரும் மகிழ்ச்சியால் பூரித்தனர்.
   
 • எவரும் பேசவில்லை. Yes அல்லது No என்பதை நான் வரவழைக்க வேண்டியிருந்தது. பரந்த நெற்றி, முதிர்ந்த தோற்றம், பேச்சற்ற அமைதி ஆகியவை பிற்கால ஞானியை அறிவுறுத்துகிறது. 

கல்லூரி ஆசிரியர் ஸ்ரீ அரவிந்தர்

ஸ்ரீ அரவிந்தர் வகுப்பில் பரோடா கல்லூரியில் படித்த மாணவர் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிக் கூறுவது:

ஏதோ ஒரு பெரிய காரியத்திற்காக ஸ்ரீ அரவிந்தர் தம்மைத் தயார் செய்வதாக நாங்கள் கருதினோம்.

நான் அவரைக் கடவுளாகக் கருதினேன். மனத்தால் புகழ்ந்தேன். மற்றவர்கள் தெய்வ நாமத்தை ஜபிக்கும்பொழுது நான் அரபிந்தோ, அரபிந்தோ எனக் கூறினேன். அவரைக் கண்டு நான் எப்படித் தழலானேன் என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை.

ஒரு நாள் என் மூன்றாம் மாடிக்கு மாணவர்களுடன் டீ சாப்பிட அழைத்தேன். நான் எழுந்து ஸ்ரீ அரவிந்தரை அறிமுகப்படுத்த ஆரம்பித்தேன். என்னை உட்காரும்படிச் சைகை செய்து "நாம் அனைவரும் அன்னையின் குழந்தைகள்" என்றார். அன்று அவர் அன்னை என்று குறிப்பிட்டது பாரத மாதாவையேயாகும்.

பொதுவாக மௌனமாகவே ஸ்ரீ அரவிந்தர் இருப்பார். நாலுபேர்போல் பழக கூச்சப்படுவார். மாணவர்கள் அதிக மரியாதை வைத்திருந்தனர். வகுப்பில் மற்ற ஆசிரியர்களைப்போல் கேலியாகப் பேச மாட்டார்.

கட்டை விரலை ஆள்காட்டி விரலால் தொட்டபடி மேஜைமுன் உட்கார்ந்திருப்பார். பொதுவாக, தரையை நோக்கியபடி அரை தியானத்திலிருப்பதைப்போலவே எப்பொழுதும் இருப்பார்.

எனக்கு அவர் பாடம் நடத்துவது பிடிக்கும். மற்ற பலரும் புரியவில்லை என்பார்கள். கேள்விகளை எவரும் கேட்பதில்லை. புரியாதவர்கள் புரியவில்லை என்பதால் கேட்பதில்லை. ஒரு சமயம் Reflections on the French Revolution என்ற புத்தகத்தைப் பற்றிப் பேசினார்.

அச்சொற்பொழிவின் போது 

 • ஸ்ரீஅரவிந்தர் புத்தகத்தைத் தொடவேயில்லை,
   
 • புத்தகத்தை எடுத்துப் படிக்கவேயில்லை,
   
 • பாரா, பாராவாக விளக்கம் தரவில்லை,
   
 • ஆழ்ந்து அதன் கருத்தைப் பொதுவாக விளக்குவார்,
   
 • மாணவர்கள் தாங்களே படித்துப் பயன் பெறும் வகையில் பேசினார். 

நான் இன்டர்மீடியட் வகுப்பை I கிளாசில் பாஸ் செய்தேன். அந்த நாளில் I கிளாஸ் கொடுப்பது அரிது. எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. மாணவர்கள் கூடுமிடங்களுக்கும் ஸ்ரீ அரவிந்தர் வந்து கலந்து கொள்வார்".

உத்தரபரா பிரசங்கம்

ஸ்ரீ அரவிந்தரை அறிந்தவர்கள் உத்தரபரா பிரசங்கம் பற்றி அறிவார்கள். அது ஓர் ஆன்மீகப் பொக்கிஷம், பெரும் புதையல், தோண்டத் தோண்ட கிடைத்தபடியிருக்கும்.

"உலக இலக்கியங்களில் முதன்மையான இடம் பெறுவது"
என்பதை, "ஆத்மாவின் குரல்" என்பதை
"மௌனம் பேச்சைவிடச் சக்தி வாய்ந்தது",

என்பதை நிரூபிப்பது ஆகும். வங்காளத் தேசீயக் கல்லூரியில் ஸ்ரீ அரவிந்தர் பிரின்சிபாலானபொழுது அங்குப் பேராசிரியராக நியமிக்கப்பட்டவர், உத்தரபரா சொற்பொழிவைக் கேட்டுக் கூறுபவை: 

 • 1905இல் வங்காள மாகாணம் பிரிக்கப்பட்டதை எதிர்த்து நாடு புரட்சி செய்து அமளியாக இருந்த நேரம் அது.
   
 • போராட்டத்திற்கு ஸ்ரீ அரவிந்தர் நேரடிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு தலைமை வகித்தார்.
   
 • பின்னர் நாடு முழுவதும் எழும்பும் புரட்சிக்கு அதுவே வித்தாயிற்று.
   
 • கூட்டங்களுக்கு வரும் மேதைகள் பிரெஞ்சுப் புரட்சிக்கர்த்தர்கள் போன்றிருந்தனர்.
   
 • நான் அவரருகில் அமர்ந்தபொழுது உத்தரபராவிலிருந்து வந்த அழைப்பை ஏற்கலாமா என என்னைக் கேட்டார்.
   
 • நான் அதை ஏற்கும்படி மன்றாடினேன்.
   
 • அச்சொற்பொழிவை எழுதி பேப்பருக்கு அளிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டால், அவர் பேசுவதாக வாக்களித்தார். 

இந்தச் சொற்பொழிவின் முக்கிய விசேஷம் இது மௌனத்தில் உற்பத்தியானது. உலகத்தின் அனைத்துச் செயல்களும் மௌனத்திலிருந்து ஆரம்பிப்பது என்ற ஆன்மீகக் கருத்தை நிரூபிப்பது.

மனம் சொல்லற்று, எண்ணமற்றுள்ள நிலையில் அவை முன் நிற்க ஆன்மீகத் தைரியம் வேண்டும். ஸ்ரீ அரவிந்தர் அதுபோல் அவை முன் எழுந்து கரம் கூப்பி வணக்கம் செய்தவுடன், பிரவாகமாக ஒரு சொற்பொழிவு அவருள் பாய்ந்து வெளிப்பட்டது.

இந்திய மக்கள் ஒளியிழந்து, புழுப்போல் வாடுவதைக் காணச் சகிக்காமல், "திலகர் பர்மா சிறையில் அவதிப்படுவதைச் சுட்டிக்காட்டி, எங்கே பாரதம்? நான் சிறை செல்லுமுன் இருந்த துடிப்பு எங்கே?" என மனம் நொந்து ஸ்ரீ அரவிந்தர் மக்களைத் தட்டி எழுப்பினார். ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மீக முயற்சி, இந்திய சுதந்திரத்தைச் சூட்சும உலகில் நிறைவேற்றியதை அவர் அப்பொழுது அறியார். இறைவன் அசரீரியாகக் கூறிய பின்னரே ஸ்ரீ அரவிந்தர் அதை அறிந்தார்.

Automatic writing - தானே எழுதும் கை

ஆவி உலகம் என்பது ஆத்மா உறையும் உலகினின்று வேறுபட்டது. சித்தி பெற்றவர்கள் பிரியப்பட்டால் இவ்வுலகுடன் தொடர்பு கொள்ளலாம். குறி சொல்பவர்களுக்கும் சில சமயங்களில் இத்திறனிருப்பதுண்டு.

ஸ்ரீ அரவிந்தருக்கு இத்திறன் இருப்பதை உடன் உறையும் சாதகர்கள் அறிவார்கள். அப்படி சிஷ்யர்கள் விருப்பத்திற்கிணங்கி ஸ்ரீ அரவிந்தர் எழுதியதுண்டு. கொடியாலம் ராமசாமி அய்யங்கார் ஒரு சமயம் வெளியிட்ட புத்தகம் முழுவதும் ஸ்ரீ அரவிந்தரால் அதுபோல் எழுதப்பட்டது. அதற்கு ஸ்ரீ அரவிந்தர் பெயரை ஆசிரியர் என வெளியிட்டபோது, ஸ்ரீ அரவிந்தர் மேற்கூறிய செய்தியை வெளியிட்டு தம் பெயரை ஆசிரியர் எனப் போடுவது சரியில்லை என்றார்.

உத்தரபராப் பிரசங்கத்தைப் பற்றி எழுதிய பேராசிரியர் இதுபோன்ற தகவல் ஒன்று எழுதுகிறார். "வந்தே மாதரம்" என்ற பத்திரிகை நடந்த காலம் அது.

ஒரு நாள் ஸ்ரீ அரவிந்தர் தம்மை ஓர் ஆவி ஆட்கொண்டுள்ளதாகவும் அது தன் பெயரையும் அவரிடம் கூறியதாகவும் என்னிடம் கூறினார். அவ்வாவி ஸ்ரீ அரவிந்தர் பேனாவைப் பிடித்து எழுத ஆவல் மீறித் துடிக்கின்றது. ஆவியுலகத்தில் தான் கொண்டுள்ள ஆர்வத்தை மனித லோகத்தில் வெளியிட ஸ்ரீ அரவிந்தரையும், அவர் பேனாவையும் கருவியாக்க ஆவி விழைகின்றது.

இதுபோன்ற நேரங்களில் குரு சிஷ்யர்களை அபிப்பிராயம் கேட்பது வழக்கம். பெரும்பாலும் சிஷ்யன் விருப்பப்படி நடப்பதும் உண்டு, அப்பேராசிரியர் மேலும் கூறுகிறார்.

"ஒரு சில நிமிஷம் அந்த ஆவிக்கு அனுமதியளித்தால், என்ன எழுதுகின்றது எனப் பார்க்கலாம்" என்று கூறினேன். ஸ்ரீ அரவிந்தர் சம்மதித்தார்.

ஆவி அவர் கை மூலமும், தீக்கக்கும் கட்டுரை ஒன்றை பிரிட்டிஷாரைத் தாக்கி எழுதிற்று. அதன் கடுமையை விலக்கி "வந்தே மாதரம்'' பத்திரிகையில் அதை வெளியிட முடிவு செய்தோம்.

மறுநாள் கட்டுரை வெளியாகியது. ஆவி உலகம் அவதாரப் புருஷர்கட்கும், ரிஷிகட்கும், எட்டும் உலகமானாலும், அவர்கள் ஆவி உலகத்திற்குத் தங்கள் தவ முயற்சியில் இடம் தந்ததில்லை.

Life Divine படிப்பது

பக்தர்கள் அன்னையை நாடி வருவது ஆயிரம் வகைகளில், பக்தன் சாதகனாவதும் பல வகையின. பக்தி மறந்து அன்னை மறந்து போவது ஆயிரம் வகைகள். சாதனையைத் தீவிரமாக மேற்கொண்டு, வெகு சீக்கிரத்தில் சாதனை தேவையில்லை, வெறும் பக்தி போதும் என்பதும் ஏராளம்.

பக்தர்கள் அன்னையை நாடி வந்ததை விவரமாக எழுதுவது ஆன்மீக இலக்கியச் சேவை. அதைப் படிப்பது Life Divine படிப்பதற்குச் சமம். Life Divine புரியவில்லை என்பது பொதுவான உண்மை. ஆர்வமுள்ள பக்தர் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, ஸ்ரீ அரவிந்தர் படத்தின் எதிரில் உட்கார்ந்து,

"பிரபோ இது கடினமான புத்தகம் என அனைவரும் கூறுகிறார்கள், என் பேராசிரியர் ஆங்கிலேயர். அவர் இப்புத்தகத்தை அளவு கடந்து புகழ்ந்து இப்படியும் ஆன்மீகத்தைப் பற்றி எழுத முடியுமா எனக் கேட்டவர், கேட்டதுடன் புத்தகம் புரியவில்லை எனவும் கூறினார். கடையில் புத்தகம் வாங்கப்போனால், கடைக்காரன் தத்துவப் பேராசிரியர் இப்புத்தகத்தை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு புரியவில்லை எனத் திருப்பிக் கொடுத்ததாகக் கூறுகிறான். யாருக்குப் புரியவில்லை என்பது எனக்குப் பொருட்டன்று, உங்களை நான் வேண்டிக் கொள்கிறேன். நான் மாணவனேயானாலும் இப்புத்தகம் எனக்குப் புரிய அருள் புரியுங்கள்"

என்று வேண்டினார். அதன்பின் படித்தால் புத்தகம் புரிகிறது. மேலும் தொடர்ந்து படித்தாலும் தொடர்ந்து புரிகிறது. முழுவதும் படித்தபின் ஆசிரமம் வந்து அன்னை தரிசனம் செய்து, ஸ்ரீ அரவிந்தர் எழுதிய மற்ற புத்தகங்களையும் படித்து முடித்தார் ஒருவர்.

பக்தியுடனும், நம்பிக்கையுடனும் பகவானை வேண்டிக்கொண்டால் Life Divine புரியும் என்றும் இவர் அனுபவம் கூறுகிறது. டிசம்பர் மாதத்தில் இரண்டு நாள் பாண்டியில் Garry Jacobs இப்புத்தகக் கருத்துகளில் முக்கியமான 100 கருத்துகளை வாழ்க்கை உதாரணங்களால் சொற்பொழிவாற்றினார். அதைக் கேட்ட சிலர் பெரும்பாலும் கருத்துகள் புரிகின்றன என்றனர். 

 • புரியாத Life Divineஉம் புரியும்.
   
 • புரிய உதவுபவை பக்தி, நம்பிக்கை, வாழ்க்கைக்குரிய உதாரணங்கள். 

"இந்தியா" என்றொரு பத்திரிகை சென்னையிலிருந்து இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியாயிற்று. இது தேசபக்த இதழ். பழம்பெரும் தேசபக்தர்கள் இப்பத்திரிகையில் எழுதுவார்கள்.

அலிப்பூர் ஜெயிலில் ஸ்ரீ அரவிந்தர் வாசுதேவ தரிசனம் கண்டதை இவர்கள் கேட்டறிந்தனர். ஸ்ரீ அரவிந்தரை அரவிந்தபாபு என்று அப்பொழுது அழைப்பார்கள். இந்தியாவை விடுவிக்க வந்த மகான் என ஸ்ரீ அரவிந்தரை, தேசபக்த உலகம் அறியும். இருந்தாலும் தெய்வதரிசனம் கண்டார் என்பதை நம்புவது எளிதன்று. ஒரு வேளை கனவில் கண்ட காட்சியா என நினக்கத் தோன்றியது. "இந்தியா" பத்திரிகை தன் நிருபரைக் கல்கத்தாவுக்கு அனுப்பி, ஸ்ரீ அரவிந்தரைப் பேட்டி காண ஏற்பாடு செய்தது.

பேட்டி கண்டவர் மனத்திலிருந்து எழும் ஐயத்தை ஸ்ரீ அரவிந்தர் தெரிந்து கொண்டதுபோல்,

"நான் வாசுதேவ தரிசனத்தை விழிப்போடு இருக்கும் பொழுது கண்டேன். கனவிலில்லை" என்றார்.

நிருபர் ஸ்ரீ அரவிந்தரைக் கண்டதும் அவரிடமிருந்து பிரவாகமாக பொங்கி எழும் அமைதியைக் கண்டு பிரமித்து, அதில் மூழ்கித் திளைத்து, தம் கேள்விகளை மறந்துவிட்டார். தாம் வந்த காரியத்தை நினைவு கூற அவருக்குச் சற்று நேரமாயிற்று. ஸ்ரீ அரவிந்தருடைய தம்பி பரீன், தூக்கு மேடையை எதிர்நோக்கி நிற்கிறார். ஸ்ரீ அரவிந்தரோ, இந்நிலையில் இந்தியா பத்திரிகை நிருபர் முன் அமர்ந்து அமைதியாக அவர் எழுப்பும் கேள்விகட்குப் பதில் கூறுவது நிருபரால் நம்புவதாக அமையவில்லை.

சர்க்கார் ஸ்ரீ அரவிந்தரை நாடு கடத்த முயல்வதாக நாடெங்கும் புரளியாக இருப்பதை நிருபர் எடுத்துக் கூறி கேட்டார்.

நாடு கடத்தும் யோசனையை வைஸ்ராய் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைதியாகப் பதில் வந்தது. நிருபர் செய்தியால் கலங்கிப் போனார். அமைதியான பதிலால் ஆச்சரியப்பட்டார்.

உங்களுக்குத் தெய்வ அனுக்கிரஹம் இருக்கிறது. தெய்வம் உங்களை எங்களிடமிருந்து பிரிப்பதை தடுக்கும் அன்றோ? என நிருபர் வினவியபோது ஸ்ரீ அரவிந்தர் பதில் கூறாமல் தமக்கே உரிய பாணியில் மென்மையாகப் புன்னகை செய்தார்.

தெய்வம் ஒரு காரியத்தைப் பூர்த்தி செய்ய முனையும்பொழுது மனிதன் அதை மறுத்துப் பேசுவதால் காரியம் கெடும். மனிதன் காரியத்தை ஏற்றுப் பேசினாலும், பேச்சு வடிவில் கருத்து வெளியிடப்பட்டால் தெய்வச் செயலுக்கு அது இடைஞ்சல் என்பதால், இதுபோன்ற நேரங்களில் பேசுவது சரியில்லை. மனத்தால் அவ்வெண்ணத்தை அனுமதிப்பதும் இடைஞ்சலாகும்.

பரோடாவில் பகவான் ஸ்ரீ அரவிந்தர்

பகவான் ஸ்ரீ அரவிந்தர் இந்தியாவில் வந்து இறங்கியவுடன் தம் தகப்பனார் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அறிந்தார். பம்பாயிலிருந்து அவர் கல்கத்தா சென்றாரா எனத் தெரியவில்லை. ஸ்ரீ அரவிந்தர் எந்தக் கப்பலில் வருகிறார் என அவர் தகப்பனாருக்குத் தந்தி வந்தது. ஆனால் ஸ்ரீ அரவிந்தர் அந்தக் கப்பலில் வரவில்லை. அடுத்த கப்பலில் வந்தார். அவர் வரவிருந்த கப்பல் மூழ்கிவிட்டது. அச்செய்தி தகப்பனாருக்கு எட்டியவுடன் தம் 3 பிள்ளைகளும் இறந்ததாகத் தவறாக நினைத்தார். அதனால் மாரடைப்பால் இறந்துவிட்டார்.

ஸ்ரீ அரவிந்தருக்குப் பரோடாவில் வேலை. பம்பாயிலிருந்து பரோடாவுக்குப் போய் வேலையில் அமர்ந்தது தெரியும். கல்கத்தாவுக்குப் போய் தம் குடும்பத்தைக் கண்டதாகத் தெரியவில்லை. தகப்பனார் மறைவுக்குப்பின் போக விரும்பவில்லை போலும்.

பரோடாவில் ஆங்கில ஆசிரியராக இருந்தபொழுது அவர் கவிகள், இலக்கியம் பற்றிப் பேசியது, சாப்பாட்டுப் பழக்கம், கடமையுணர்வு, பணத்திற்காகவோ, பதவிக்காகவோ ஒருவரை உயர்வாகக் கருதாத மனநிலை ஆகியவற்றைப் பற்றிய சில செய்திகள்:

 1. ஹோமர் எழுதிய இலியட் என்ற காப்பியத்தைப் படித்து நான் வெகுவாக ரசித்தேன். கிரேக்க கவி ஹோமர்.
   
 2. "இத்தாலியக் கவி டான்டேயின் கவிவன்மை என்னை அளவுகடந்து கவர்ந்தது." தான் விரும்பிய பெண் அடுத்தவனை மணந்து பல பிள்ளைகள் பெற்றபின் அவளை மனதால் வழிபட்டு பெருங்காவியம் எழுதினார் டான்டே. இது உலகப்பேர் இலக்கியத்தில் இடம் பெறுவது.
   
 3. ஆனால் கவி நயத்தில் வால்மீகிக்கு ஈடில்லை. உலக இலக்கியத்தில் ராமாயணத்திற்கு இணையான காவியமில்லை.
   
 4. உலக வழக்கை ஸ்ரீ அரவிந்தர் அறியாதவர் என்பதால் அவரை எவரும் சுலபமாக ஏமாற்றுவதுண்டு.
   
 5. கல்லூரியின் ஆங்கிலேயப் பிரின்சிபாலை விட ஸ்ரீ அரவிந்தருக்குப் பரோடாவில் புகழ் அதிகம். ஸ்ரீ அரவிந்தரைக் கடவுளாகக் கருதியவரும் உண்டு.
   
 6. பரோடா மகாராஜா பேட்டி என்பது அரிது. பல சமயங்களில் ஸ்ரீ அரவிந்தருக்கு அரண்மனையிலிருந்து விருந்துக்கு அழைப்பு வரும். 

சில சமயங்களில் அழைப்பை ஏற்று அரண்மனைக்குப் போவார். கடமைகள் இருந்தால் அவற்றை ஒதுக்கிவிட்டு அரண்மனைக்குப் போக மாட்டார். கடமைகளையே முதன்மையாகக் கருதி அரண்மனை அழைப்பை மறுத்துவிடுவதும் உண்டு.

பரோடா மகாராஜா

நாடு சுமார் 1000 ஆண்டுகளாக ஆங்கிலேயருக்கும் அதற்கு முன் மொகலாயர்கட்கும் அடிமையாக இருந்ததால் மக்கள் தைரியமிழந்தனர். சிற்றரசர்களும் வீரம் இழந்தனர். பெருங்காய டப்பாவின் வாசனை என இங்குமங்குமாகத் தைரியம், தீரம், வீரம், கட்டபொம்மன் போன்றவர்களிடமும் நின்று நிலைத்திருந்தது.

உலகத்தின் குருவாக வேண்டிய நாடு இந்தியா என்பது ஆண்டவனுடைய முடிவு. அதற்குரிய ஆன்மீக உயர்வும் தகுதியும் பெற்றபின் அரசியல், சமூக நிலைகளில் அத்தகுதிக்குரிய ஆதரவு இல்லை என்பதால், காலம் கைக்கொண்ட முறை அந்நிய படையெடுப்பு என்கிறார் பகவான். 1947இல் சுமார் 560 சிற்றரசர்களிருந்தனர். ஒரிசாவில் ஒரு மன்னரிடம் 78 கிராமங்களிருந்தன. இவை ஒன்றுபடாமல் இந்தியா உலகத்தின் குரு ஆக முடியாது. அந்நியன் வந்தால் நாடு ஒன்றுபடும் என்ற யுக்தியைக் காலம் கையாண்டது என்கிறார் பகவான்.

இந்தச் சிற்றரசர்களில் எத்தனையோ பேர் எதற்கும் உதவாதவர்களாக, ஆங்கிலேயருக்கு துதிபாடியும், அந்தப்புரத்தில் காலத்தைக் கழித்தவருமாக இருந்தனர் என்பது உண்மை. ஒரு சிலர் நாட்டின் பரம்பரை வீரத்தைப் பிரதிபலிக்கும் தலைவர்களாகவுமிருந்தனர் என்பதும் உண்மை.

சுமார் 130 ஆண்டுகட்குமுன் தஞ்சாவூர் சரபோஜி மகாராஜா ஆங்கில ஆட்சிக்குள் வந்துவிட்டார். அவர் நாட்டில் பிரிட்டிஷ் resident ஆட்சி நடைபெறுகிறது. தனக்குப்பின் வாரிசை நிர்ணயிப்பவர் கல்கத்தாவிலுள்ள வைஸ்ராய். தம் மகனையே அரசனாக நிர்ணயிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை எடுத்துக்கொண்டு சரபோஜி கல்கத்தா வைஸ்ராய் மாளிகையுள் நுழைந்தார்.

சரபோஜியின் தேஜஸ், கம்பீரம், நடை, உடை, பாவனை வைஸ்ராயையும், சபையோரையும் ஆட்கொண்டது. வைஸ்ராய் உள்பட அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். வைஸ்ராய் சரபோஜியைத் தழுவி மகிழ்ந்தார்.

சரபோஜியின் வாழ்வு ஜீவனற்றது. அதிகாரம் அவர் கையிலில்லை. உதவி கேட்கப் போயிருக்கிறார். அப்படியும் இந்த வரவேற்பு. அது நாட்டின் பரம்பரை வீரத்தைக் காட்டுகிறது.

ஒரு சமயம் பகவான், வங்காளி உணர்ச்சி வசப்பட்டவன். இந்திய நாட்டையே ஆளும் திறன் படைத்தவன் எனக் கூறியுள்ளார்.

பரோடா மகாராஜா ஸ்ரீ அரவிந்தருக்கு முதலில் ரூ.250/- உம், பிறகு ரூ.500உம் சம்பளம் தரும்பொழுது அரண்மனையில் ரூ.2000/-, ரூ.3000 சம்பளம் பெற்றவருண்டு. இருப்பினும் மகாராஜாவுக்கு ஸ்ரீ அரவிந்தரின் திறமை தெரியும். பரோடா மகாராஜாவைப் பற்றிப் பேசும்பொழுது பகவான் ஸ்ரீ அரவிந்தர், "மகாராஜா திறமைசாலி. அதிகத் திறமை வாய்ந்தவர், இன்றைய அரசியலில், அவருக்கு நிகரான அரசியல்வாதியில்லை" எனக் கூறியுள்ளார். வேறொரு சமயம் "மகாராஜா இந்தியாவை ஆளும் திறனுள்ளவர்" எனவும் கூறியுள்ளார்.

அலிப்பூர் ஜெயில்

அலிப்பூர் ஜெயிலில் ஸ்ரீ அரவிந்தருடனிருந்தவர்கள் இளைஞர்கள். புரட்சிவாதிகள். பாம் செய்து ஜெயிலுக்குப் போனவர்கள். ஸ்ரீ அரவிந்தர் அவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்.

இந்த இளைஞர்கள் ஸ்ரீ அரவிந்தர் செய்கைகளைக் கவனித்துப் பிரமித்தனர். அவரை மிக மரியாதையுடன் நடத்தினர். இளைஞர்களுக்குள்ள கொண்டாட்டமும், ஆரவாரமும், சச்சரவும் அவர்களைச் சூழ்ந்திருந்தன. பொதுவாக அவரை எவரும் நெருங்கிப் பேசுவதில்லை, கேள்வி கேட்பதில்லை.

அவர் பார்வை தூரத்தில் பதிந்திருந்தது. அவர் யோகப் பயிற்சிகளை மேற்கொண்டவர் என்பதையும் இளைஞர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். இருப்பினும் அவர் பழக்கங்கள் வினோதமாக இருப்பதால் மனதில் கேள்விகள் எழுந்தன. ஒருவர் மட்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஸ்ரீ அரவிந்தரை அணுகி

"இந்த யோகப் பயிற்சிகளால் நீங்கள் இதுவரை என்ன பெற்றீர்கள்?" எனக் கேட்டார்.

அன்புடன் அவ்விளைஞரை நெருங்கி வந்து ஸ்ரீ அரவிந்தர், "நான் தேடியதைக் கண்டுகொண்டேன்'' எனப் பதிலளித்தார்.

இந்த அளவு ஸ்ரீ அரவிந்தர் பேசியதில்லை என்பதால் சற்று துணிவு ஏற்பட்டு அவரை இளைஞர்கள் சூழ்ந்தனர்.

அவர் பேசுவது முழுவதும் புரியவில்லை என்றாலும், மனிதர் பெரியவர், பெரிய ஆத்மா என்பது மட்டும் புரிந்தது.

யோகமுறைகளில் தீட்சை முக்கிய இடம் பெறும். சில யோகங்களில் சாஸ்த்ரோக்தமாக ஒரு ceremony சாங்கியம் நடத்தி தீட்சை அளிப்பார்கள். உபநயனம் என்பது அதுபோல் தகப்பனார் மகனுக்குப் பிரம்மோபதேசம் அளிப்பது. அன்னை கண்களை உற்று நோக்கி தீட்சை தருகிறார்.

தியானத்திலும், கனவிலும் குரு வந்து தீட்சை அளிப்பது சிறப்பான சிஷ்யர்கள் பெற்ற பேறு.

ஸ்ரீ அரவிந்தர் தாம் பெற்ற யோகானுபவங்களை விவரித்துச் சொன்னார். இளைஞர்கள் ஆர்வமாகக் கேட்டனர். தம் தியானத்தில் ஒரு யோகி வந்து தமக்குத் தந்திரயோகத்தில் தீட்சை தந்ததாகக் கூறினார்.

பேசப் பேச துணிவு ஏற்பட்டது.

"நாம் இப்பொழுது கேஸில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதன் முடிவு என்ன ஆகும் என்று சொல்ல முடியுமா?" என்று அனைவரும் தெரிந்து கொள்ள விரும்பினர்.

"நான் விடுதலை செய்யப்படுவேன்" என்று பகவானிடமிருந்து பதில் அமிர்தமாக வந்தது.

அவர் வாக்கு பலித்தது.

அமெரிக்க சிஷ்யர்

தரிசனத்திற்காக வெளிநாட்டார் வருவதுண்டு. யோகத்தை ஏற்று வெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்கு 70 ஆண்டுகட்கு முன் வருதல் அரிது. அப்படி அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் தேடி வந்தவர்கள் அதிகம். அவர்களுள் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவரின் மகள். இவர் முதலில் ராமகிருஷ்ணா மடத்துடன் தொடர்பு கொண்டிருந்தார். பிறகு புதுவை வந்தவர் நெடுநாள் இங்கேயே இருந்து, இங்கேயே காலமானார்.

ஸ்ரீ அரவிந்தர் இவருக்கு ஒரு சமஸ்கிருதப் பெயர் அளித்தார். நிலையான நிஷ்டையும், பக்தியும், நம்பிக்கையுமே ஒரே குறிக்கோளாக உடையவர் என்று அச்சொல் பொருள்படும். "நிஷ்டா" என்பது அவரிட்ட பெயர்.

வெளிநாட்டை விரும்பிச் சென்றவர்கள், அங்கேயே பல ஆண்டுகள் தங்கியவர்கள் வயதான பின் பிறந்த நாட்டிற்குச் செல்ல விரும்புவார்கள். பிறந்த மண், உடலாகிய மண்ணை ஈர்க்கும். இதுவே பொது விதி. உடலின் சட்டத்தை மனமோ, ஆன்மாவோ மீறுவது அரிது.

நிஷ்டாவுக்கு வயதாயிற்று. உடல் தளர்ந்தது. நோய்வாய்ப்பட்டார். நாம் அன்னையை அனுசரித்துப் போவதை விட அன்னை நம்மை அனுசரித்துப் போவதே அதிகம். உடலைத் தகனம் செய்வது பெரிய தவறு. ஆவி - ஆத்மா அன்று - 7 நாள் வரை உடலை விட்டு அகல்வதில்லை. அதற்குள் தகனம் செய்தால் ஆவி துடித்துப்போய் தன்னிடம் வந்து முறையிடுகிறது எனவும் அன்னை கூறியுள்ளார். என்றாலும் இது விஷயத்தில் அன்னை பக்தர்கள் இஷ்டப்படியே நடப்பார். அநேகமாக அனைவரும் உடலைத் தகனம் செய்யவே விரும்புகின்றனர்.

நிஷ்டாவிடம் அன்னை "உங்களுக்கு மாமிசம் சாப்பிட்டுப் பழக்கமல்லவா? மாமிசச் சாப்பாட்டுக்கு நான் ஏற்பாடு செய்கிறேன்" எனக் கேட்டார். நிஷ்டாவுக்கு அன்னை கொள்கைகள் தெரியும். மாமிச உணவுக்கும் யோகத்திற்கும் சம்பந்தமில்லை எனவும் அறிவார். ஆனால் அன்னை ஆசிரம வழக்கத்தை மீறி தமக்காக குறிப்பாக எந்த ஏற்பாடும் செய்வதை அவர் விரும்பவில்லை. தமக்குச் சாப்பாட்டில் எந்த மாற்றமும் தேவையில்லை என்று மறுத்துவிட்டார்.

அந்த நாட்களில் வைத்திய வசதி இந்தியாவில் மிகக் குறைவு. நிஷ்டா நோய்வாய்ப்பட்டபொழுது உடனிருந்தவர்கள் "உங்கள் நாட்டில் வைத்திய வசதி அதிகமாயிற்றே. அங்கே போய் நோயைக் குணப்படுத்திக்கொள்ளக் கூடாதா?" எனக் கேட்டனர்.

அன்னையை நன்கு அறிந்தவர் நிஷ்டா. யோக நுணுக்கங்களையும் அறிந்தவர். அமெரிக்காவில் வைத்தியம் சிறப்பாக இருக்கலாம். அன்னைச் சூழல் அங்கிருக்காது. இச்சூழலை விட வைத்தியம் குணப்படுத்தாது எனவும் அறிவார். ஆத்ம விளக்கம் தேடி வந்தவரில்லையா?

"அமெரிக்காவில் என் உடலை நன்றாகக் கவனிக்கலாம். என் ஆத்மாவின் பொறுப்பை அங்கு ஏற்பவர் யார்?" என்று கேட்டார்.

Sri Aurobindo`s relics - ஸ்ரீ அரவிந்தருடைய உடலின் சின்னம்

ஒரு நாள் பகல் 3 மணிக்கு நான் ஆசிரமத்துள் நுழைந்தேன். வழக்கத்தைவிட அமைதி அதிகமாக இருந்தது என் கவனத்தைக் கவர்ந்தது. சமாதியைச் சுற்றி எவரும் இல்லை. The peace was becoming richer and more intense. அமைதி நிமிடத்திற்கு நிமிடம் கனத்தது. அத்துடன் ஒரு தெய்வீக மணம் கமழ்ந்தது.

சற்று நேரத்திற்கெல்லாம் சுமார் 40 அல்லது 50 பேர் தியான மண்டபத்திலிருந்து வந்தனர். கடைசியில் ஒருவர் தட்டில் ஒரு பெட்டியைத் துணியால் மூடி எடுத்து வந்தார். அது ஸ்ரீ அரவிந்தரின் சின்னம். ஸ்ரீ அரவிந்தறையிலிருந்து சின்னம் வெளியே எடுத்து வரப்பட்டபொழுது சமாதியருகே நிலவும் சாந்தி உயர்ந்தது.

வடநாட்டு பக்தர் ஒருவருடைய மனைவிக்கு உடல் நலம் குன்றியது. இப்பெண்மணி ஆசிரமம் வர வெகு ஆவலாக இருந்தார். உடலில் என்ன நோய் என டாக்டர்களால் கண்டுகொள்ள முடியவில்லை. இடமாற்றம் தேவை என்றனர்.

உடல் நலிந்தது. மெலிந்தது. புரண்டு படுக்கும் அளவுக்கும் தெம்பில்லை. இனி ஆசிரமப் பயணம் தானா பலிக்கப் போகிறது. மலையடிவாரத்தில் ஒரு சிற்றூருக்குப் போய் தங்க ஏற்பாடு. கல்லூரியில் படித்த மகன் படிப்பை விட்டு, தாயைக் கவனித்துக் கொள்ள வந்தான்.

கணவர் ஸ்ரீ அரவிந்தர் சின்னம் அருகிலுள்ள ஊருக்கு வரப்போகிறது என அறிந்து அங்குப் போனார். சின்னம் வரப்போகிறது. அதற்கு டவுன் ஹாலில் வரவேற்பு ஏற்பாடாகியிருந்தது. மையத்தின் நிர்வாகி பக்தரை அவர் மனைவியின் உடல் நலம் பற்றி விசாரித்தார். "உங்கள் மனைவி வந்து சின்னத்தைத் தரிசனம் செய்தால் ஒருவேளை ஏதேனும் அற்புதம் நடக்கலாம்" என்று பக்தரிடம் கூறினார்.

புரண்டு படுக்க முடியாத நிலையிலுள்ளவர்கள் பிரயாணம் செய்வது முடியாது என பக்தர் திட்டவட்டமாகக் கூறினார். நிர்வாகி வற்புறுத்தினார். "முடியுமா என முயல்வது தவறில்லை" என்றார்.

சின்னம் வந்தது. நோயாளியின் மகன் அங்கிருந்ததைக் கண்ட நிர்வாகி ஆச்சரியப்பட்டார். நோயாளியும் காரில் அங்கு வந்தார். சின்னம் உள்ள பெட்டியை அவரிடம் சிறிது நேரம் கொடுத்தார். சற்றுத் தெம்பாக இருந்ததாகச் சொன்னார். அன்று தூக்கத்தில் கனவு கண்டார். "தலையை உடைத்துத் திறந்து பூச்சி, புழு, விஷ ஜந்துக்களை அப்புறப்படுத்துவதைக் கனவில் கண்டேன்" என்றார்.

உடல் சிறிது சிறிதாகத் தேறியது.
சின்னம் ஸ்ரீ அரவிந்தரை நோயாளியிடம் கொண்டு வந்து
நோயைக் குணப்படுத்தியது.

எமதூதர்கள்

"சாவித்திரி" என்ற காவியத்தில், சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்து அவனுடன் வாதாடும் பகுதிகள் 100 பக்கங்களுக்கு மேல் விவரிக்கப்படுகிறது. சாவித்திரி சக்தியவானை மீட்டதுடன் எமனையே திருவுரு மாற்றினாள். 

 • இருண்ட எமதர்மன் ஒளிமயமான ஜீவனாகி விட்டான்.
   
 • ஒளிமயமான பின்னும் எமன் தன் வாதத்தையே பேசினான்.
   
 • அன்னை எமனைக் குறிப்பிடும்பொழுது This gentleman... என்பார்.
   
 • எமன் சாவித்திரியிடம் கூறும் வாதங்கள் அனைத்தும் மனிதன் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் வாதங்களாகும். 

அன்னையின் blessing packetஐக் கையில் வைத்துக் கொண்டு மகளுக்கு ஆப்ரேஷன் நடக்கும்பொழுது வெளியிலிருந்தவர் கண்ணில் கருப்பு பூட்ஸுடன் தோன்றிய கால்களை எமதூதர் என அறிந்து அன்னையை அழைத்தபொழுது, அவை மறைந்தன, பையன் பிழைத்துக் கொண்டான் என்ற நிகழ்ச்சி அன்பர்கள் அறிந்தது.

ஒரு சாதகி உயிர் பிரிந்த பின் அவர் ஆத்மா அன்னையிடம் வந்து அவருடனேயே இருக்கும்பொழுது ஒரு எமதூதன் அந்த ஆத்மாவுக்காகக் காத்திருப்பதை அன்னை கண்டார். ஆத்மா அன்னையுடனிருப்பதால் எமதூதன் செயல்படவில்லை என அன்னை அறிந்தார். அன்னை எமதூதனை நிமிர்ந்து பார்த்தபொழுது அன்னை உத்தரவு கிடைத்துவிட்டது என அவன் ஆத்மாவை அதே நிமிஷம் அழைத்துப்போன நிகழ்ச்சியையும் அன்பர்கள் அறிவார்கள்.

"எந்த உலகத்திலும், எந்த தேவதையும், ஜீவனும் என் உத்தரவுக்குக் கட்டுப்படுவதுண்டு" என அன்னை கூறுகிறார்.

ஒரு பிரபலமான கவிஞர். அன்னை, ஸ்ரீ அரவிந்தரை அவர் அறிவார். வணங்குவார். அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவர் பின் ஒருவராய் இருவரும் அகால மரணமடைந்தனர். இது போன்ற நிகழ்ச்சிகளை மனிதன், 

 • ஆயுள் முடிந்துவிட்டது,
   
 • விதி வலியது,
   
 • எமனை எவரால் வெல்லமுடியும்?
   
 • ஜாதகப்படி நடக்கிறது, 

என்றெல்லாம் கூறி ஏற்றுக்கொள்வார்கள். இரண்டு பேர் காலமான பின் அவர் மனைவி நோய்வாய்ப்பட்டார். அவருக்கு சூட்சுமப் பார்வையுண்டு. கணவர் மனைவியருகே அமர்ந்துள்ளார். மனைவி கண்ணுக்கு வாயிற்படியில் மனித உருவங்கள் தென்பட்டன. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என எண்ணுவதைக் கணவர் கண்டார். மனைவி "அவர்கள் என்னைக் கூப்பிடுகிறார்கள். அவர்களுடன் வரச் சொல்கிறார்கள்" என்று கணவரிடம் கூறினார். கணவர் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. மனைவிக்கு ஆறுதலாக ஏதாவது கூற நினைத்து "நாங்கள் அன்னை, ஸ்ரீ அரவிந்தரை வணங்குபவர்கள், அவர்களைக் கேட்காமல் எதுவும் செய்ய மாட்டோம்" என அவர்களிடம் கூறும்படி கணவர் மனைவியிடம் கூறினார்.

அன்னை, ஸ்ரீ அரவிந்தர் பெயர்களைக் கேட்ட மாத்திரம் அந்நான்கு பேரும் மறைந்தனர்.

ரௌத்திர பாவம்

ஆசை அனைவருக்கும் உண்டு. தவம், யோகம், நிஷ்டையை மேற்கொள்பவருக்குக் கிடையாது எனக் கூற முடியாது. ஆசைக்கும் யோகத்திற்கும் சம்பந்தமில்லை.

ஆசை அடியோடு அழியும்வரை ஆனந்தம் தலையெடுக்காது என்கிறார் அன்னை. ஆசையை அழிக்கலாம், அழிக்க முடியும். ஆன்மீகத்தை ஏற்றவர் அனைவரும் அதை அழித்துள்ளனர்.

கோபம் பொல்லாதது. ஆசையை அழிப்பவராலும் கோபத்தை அழிப்பது கடினம். கோபம் அழியாதவரை பூரண யோகமில்லை. முனிவர், தவசி, சாமியார், மகான், ரிஷி, யோகி ஆகியோரைக் கண்டு வணங்குபவர்கள் "அவருக்குக் கோபம் வந்துவிடப் போகிறது" என்று பயப்படுவார்கள். கோபம் வந்தால் சபித்து விடுவார் என்பது நாமறிந்தது.

"நியாயமான கோபம் சரியானது'' என்று ஒரு மகான் கூறியதை ஸ்ரீ அரவிந்தர் கேள்வியுற்று மனிதன் தன் சொந்தப் பழக்கத்தைச் சரி என்று வாதாட அதிகத் திறமையுள்ளவன் என்று கேலியாகச் சொன்னார்.

எழுத்தாளர்கள், நடிகர்கள், பாடகர்கள், மேடைப் பிரசங்கிகள் சிறப்பாக நடிக்கும்பொழுது, பாடும்பொழுது, "இன்று நன்றாக அமைந்துவிட்டது I was in form' என்பார்கள். திறமையும் உணர்வும் இணையும்பொழுது form, mood வந்து செயல் சிறப்படையும்.

அதேபோல் ஆத்மா முன்வந்து செயல்படும்பொழுது உலகப் பிரசித்தி பெற்ற பேச்செழும். உத்தரபராவில் ஸ்ரீ அரவிந்தர் பேசியது, ஆப்ரஹாம் லிங்கன் (Gettysberg address) கெட்டிஸ்பர்க் என்ற இடத்தில் போர் முடிந்தவுடன் பேசிய பேச்சு உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது.

ஆத்மா பேச்சு வழியாக வருவதுபோல், இசை வழியாக வெளிவரும். Beethovans ninth symphony உலகப் புகழ் வாய்ந்த பீத்தாவன் சிம்பனி, பெரிய இலக்கியங்கள், தியாகய்யர் பாடல்கள் ஆகியவை மூலம் ஆத்மா வெளிவருவதால் அவை அழியா இலக்கியங்களாகி விடுகின்றன.

ஆத்மா காவியத்தின் மூலமாக வெளிவருவதுபோல் அன்னையின் புன்னகை வழியாக தவறாது வெளிவரும். அன்னையின் புன்னகை தெய்வலோகப் புன்னகையாகும்.

அதேபோல் கோபம் மூலமும் வெளிவரும்.

அதை ரௌத்திர பாவம் என்பதுண்டு.

தன்னிலை இழந்த முனிவர் கோபப்பட்டு சபிப்பது வேறு. ரௌத்திர பாவம் தானே எழுந்து வெளிப்பட்டு எதிரியை அடக்குவது வேறு. ரௌத்திர பாவம் வெளிவரும்பொழுது தன்னிலை இழப்பதில்லை.

அன்னையிடம் கோபப்பட்டு சண்டையிட்டவர் பலர். கொத்து வேலை செய்பவன் ஒருவன் காலை 6 மணிக்கு அன்னையிடம் சத்தம் போட்டதை அடுத்த அறையிலிருந்த ஸ்ரீ அரவிந்தர் கேட்டு ரௌத்திர பாவத்துடன் வெளிவந்து "யாரங்கே அன்னையிடம் சத்தம் போடுவது" என்று குரலை உயர்த்திக் கேட்டார். சத்தம் அடங்கிற்று.

ஜோதி தரிசனம்

தங்கள் போட்டோக்களைப் பற்றி அன்னை 

 • இவை போட்டோ இல்லை.
   
 • இந்தப் போட்டோக்களில் நாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்று கூறுகிறார். 

போட்டோக்களைப்பற்றிய கீழ்க்கண்ட அனுபவங்களை அன்பர்கள் கூறியது வாசகர்கட்கு நினைவிருக்கலாம்.

 1. வரவேற்பறை போட்டோவிலிருந்து ஸ்ரீ அரவிந்தர் வெளிவருவதை அன்பர்கள் கண்டார்கள்.
   
 2. தியான மையப் போட்டோவில் ஒளி அதிகமாகி ஸ்ரீ அரவிந்தர் உருவம் பாதி மறைந்தது. அதைப் போட்டோ எடுத்தபொழுதும் ஒளிப்பிழம்பு ஸ்ரீ அரவிந்தர் உருவத்தை மறைத்தது. அதாவது சூட்சுமமான ஒளி ஸ்தூலமான ஒளியாகிவிட்டது (The subtle light on the photo has become real light).
   
 3. பகவான் ஸ்ரீ அரவிந்தர் அறையில் உள்ள போட்டோவை எதுவும் தெரியாத அமெரிக்கர் பார்த்து காலில் கறுப்பாக இருப்பதாகச் சொன்னார். முறிவு ஏற்பட்டது அவருக்குத் தெரியாது. ஆனால் அவ்விடம் கறுப்பாக அவருக்குத் தெரிந்தது.
   
 4. வீட்டில் அனைவருக்கும் நம்பிக்கை அதிகமாகி அழைப்பை மேற்கொண்டபொழுது வீட்டிலுள்ள போட்டோக்களில் அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் கம்பீரமாகத் தோன்றினர்.
   
 5. நம்பியவரைத் துரோகம் செய்தவர் வீட்டிலுள்ள பெரிய போட்டோக்கள் இருளடைந்திருந்தன. 

முதன் முதலாக 1949இல் அன்னை, பகவானைத் தரிசிக்க வந்தவர்கள் ஏதோ அற்புதம் நடக்கவிருக்கிறது என்ற உணர்வோடு வந்தனர். படிக்கட்டின் உச்சிக்கு வந்தவுடன் தூரத்தில் அவர்கள் வீற்றிருப்பதைக் கண்டு பிரமித்தனர். ஸ்ரீ அரவிந்தர் அறை வழியாக வந்து அன்னை, ஸ்ரீ அரவிந்தர் முன்னிலையில் நின்றபொழுது, அவர்கள்

 • சோபாவில் அவர்களைக் காணவில்லை.
   
 • அவர்கள் வீற்றிருந்த இடத்தில் ஒரு பெரிய ஜோதியைக் கண்டனர்.
   
 • அவர்களைத் "தரிசனம்" செய்ய முடியாமலே திரும்பினர். 

காதுவலியும் ஸ்ரீ அரவிந்தரருளும்

வாடாமல்லிகையைப் போன்று இருக்கும் மற்றொரு மலருக்கு அன்னை ஸ்ரீ அரவிந்தரின் கருணை எனப் பெயரிட்டுள்ளார். விபரம் தெரியாதபொழுது ஆபத்து என்று நாம் கருதுவது விபரம் தெரிந்தவுடன் சுலபமான பிரச்சினை என அறிகிறோம். இது அன்றாட அனுபவம்.

5 வருடமாக மார்க்கட் மாறுவதால் தொழில் சுருங்கி வரும் நிலையில் சென்ற ஜுன் மாதம் அவர் கடையை மூடும் நிலை வந்துவிட்டது. மூட முடிவு செய்தார். இவர் அன்னை அன்பர். ஆனால் அருள் செயல்படும் அளவுக்கு இவருக்கு நம்பிக்கையில்லை. ஜுன் மாதம் செய்தி புதுவை வந்தது. அவரை நன்கு அறியும் சில அன்பர்கள் சேர்ந்து, "உங்கள் முயற்சிக்கு நாங்கள் துணையிருப்போம். கடையை மூடவேண்டும் என்ற முடிவை மாற்றினால் அருள் செயல்படும்" என்றனர். ஜூலை 1ஆம் தேதி மூட வேண்டிய கடையின் நிலை மாறியது. வியாபாரம் பாங்க் எதிர்பார்த்த அளவு இருந்ததால் கடையை மூடவில்லை.

புதுவையில் கூடிய பல நாட்டு அன்பர்கள் பிரிந்தனர். புதுவை அன்பர் மட்டும் முதலில் 10 நாள் பிரார்த்தனை செய்தார். பின்னர் கடையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மாதா மாதம் கடை சரிவதும் 25 தேதிக்கு மேல் உயிர் பிழைப்பதுமாக ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் கடந்தன. ஜனவரியிலும் அதே வியாபாரம் தொடர்ந்தது. ஜனவரியில் தம் வியாபாரத்தை விரிவுபடுத்தப் போகிறேன் என்று கடை முதலாளி அறிவித்தார்!

5 ஆண்டுகளாக நிலையில்லாமலிருந்ததை மறந்து அடுத்த வியாபாரம் துவங்க விரும்புவது மனித மனநிலை. அன்னையை அறிந்தும் அருளை அறியாதவர் இவர். அருள் பலன் தந்ததும் அடுத்த கட்டம் போக விரும்புகிறார்.

ஆசிரமப் பள்ளியில் படிக்கும் பெண் கடலில் நீந்தும்பொழுது காதில் மணல் புகுந்து வலிக்க ஆரம்பித்து காது வீங்கியது. குழந்தைக்கோ, பெற்றோருக்கோ அன்னை நினைவு வரவில்லை. டாக்டர் நினைவு வந்தது. டாக்டர் காதைச் சுத்தம் செய்து மருந்து கொடுத்தார். மருந்தை அதிகமாகப் பயன்படுத்தியதில் வீக்கமும் வலியும் அதிகமாயின.

பெண்ணின் கேப்டன் அன்னையிடம் விவரம் கூறினார். அன்னை குழந்தையை அழைத்து, "மருந்து வேண்டாம், டாக்டர் வேண்டாம்'' என கனிவுடன் கூறி

ஸ்ரீ அரவிந்தர் கருணை

என்ற மலரைக் கையில் கொடுத்தார். பெண் நிம்மதியாகத் தூங்கி எழுந்தாள். வலியையும், வீக்கத்தையும் காணோம். இருந்ததாக நினைவு வரவில்லை. 

 • எவ்வளவு நெருங்கியிருந்தாலும் பெறுவது குறைவு.
   
 • இருக்கும் வசதிகளை மனிதன் அறிவதில்லை.
   
 • அறிந்தால் பயன்படுத்துவதில்லை. 

அன்னையின் அருளும், கருணையும் நம்மைச் சூழ்ந்திருப்பதை நாம் அறிவதில்லை. அறிந்தால் பயன்படுத்த நினைவு வருவதில்லை.

தவறிய தரிசனம்

திபேத்திலிருந்து வந்து ஆசிரமத்தில் தங்கி கம்பள வேலையை மேற்கொண்டவர் ஒருவர். ஒரு நாள் காலை 10 மணிக்கு அவருடைய ஆசிரம நண்பரைத் தேடிப் போனார். நண்பர் வீட்டில் ஒருவரும் இல்லை. வேலைக்காரர்களிடம்" ஏன் வீட்டில் ஒருவரும் இல்லை, எங்கே போனார்கள், எப்பொழுது வருவார்கள்" என விசாரித்தார்.

"இன்று தரிசனமல்லவா? எல்லோரும் தரிசனத்திற்குப் போயிருக்கிறார்கள்" என்று பதில் வந்தது.

வந்தவருக்கு அன்று தரிசனம் என்றும் தெரியவில்லை!

வெளியூர் பக்தர் ஒருவர். அவருக்கு ஆசிரமம் அறிமுகமாயிற்று. அந்த நாளில் தமிழர்கள் எவரையும் இங்குக் காண முடியாது. முதல் முறை அவர் வந்தபொழுது அடுத்த தரிசன நாளை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டார். வருஷத்தில் பல தரிசனங்களிருப்பதும் அந்த நாட்களை அவருக்குச் சொல்பவர் எவரும் இல்லை. அந்த வருஷங்களில் ஆண்டுக்கு 22 முறை அன்னை தரிசனம் உண்டு. பக்தருக்குப் பாண்டி வரும் வேலைகள் உண்டு. பாண்டி வந்தால் ஆசிரமம் வருவார். அடுத்த முறை அவர் வந்தபொழுது அன்று தரிசன நாள் எனக் கண்டு தரிசனம் பெற்றார். அதற்கடுத்த முறையும் அதே போன்று அமைந்தது. அந்த ஆண்டு முழுவதும் அவர் வரும் நாளெல்லாம் தரிசன நாட்களாக அமைந்தன.

 • ஆத்மா விழிப்பானதானால் தானாக தரிசனத்திற்கு நம்மை ஆத்மா கொண்டு வரும்.

ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும் தரிசனம் தரும் நாட்களில் ஒருவர் முக்கியமான ஆசிரமவாசியைப் பார்க்கப் போனார். அன்று தரிசன நாள், இவரைப் பார்த்துவிட்டு தரிசனத்திற்குப் போக எண்ணினார். வந்தவர் முக்கியஸ்தரைப் பார்த்தார். பேசினார். விஷயம் முடிந்து விட்டது. முக்கியஸ்தர் எழுந்து போனார். அவரிடம் விடை பெற்றுப்போக வந்தவர் காத்திருந்தார். நெடு நேரமாயிற்று. போனவர் வரவில்லை. "இன்று தரிசன நாளாயிற்றே. நேரமானால் தரிசனம் தவறி விடும் என்ற எண்ணம் எழுந்தது. எழுந்து வெளியே போகலாம்'' எனக் கருதி வந்தால் வாயிற்கதவு வெளியே பூட்டப்பட்டுள்ளது. யாரிடம் இவர் விடைபெறக் காத்திருக்கிறாரோ அவர் ஞாபக மறதியாக இவரை உள்ளே வைத்துப் பூட்டி விட்டு தாம் தரிசனத்திற்குப் போய்விட்டார் எனப் புரிந்ததும், இவர் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். தோட்டப்பக்கம் போய் சுவர் ஏறிக் குதித்து தரிசனத்திற்காக ஓடி வந்தார். அழுகை நிற்கவில்லை.

தரிசனம் முடிந்து அன்னை எழுந்து உள்ளே போய்விட்டார். ஸ்ரீ அரவிந்தர் எழுந்திருக்கும் சமயம். அழுதுகொண்டே ஓடி வந்தவரைக் கண்ட ஸ்ரீ அரவிந்தர் "ஏன் அவர் அழுகிறார்" எனக் கேட்கச் சொன்னார். விபரமறிந்து "சரி, அன்னையைக் கூப்பிடு, தரிசனம் தருவோம், எல்லோரும் சேர்ந்து சிரிக்கலாம்" என்றார் ஸ்ரீ அரவிந்தர்.

சூட்சும திருஷ்டி - Subtle Vison

ஒரு சிறு கிராமம். அங்குள்ள பக்தர் தம் காட்சியில் ஸ்ரீ அரவிந்தர் பல பேருடன் அவ்வூர் நிலங்களுக்கு வருவதாகவும், அங்கு ஒரு கோயிலிருப்பதாகவும் கண்டார்.

சூட்சுமத்தில் கண்டது உண்மையாகப் பலிக்க நெடுநாளாகும் என்பது அனுபவம். ஆனால் உடனேயும் பலிக்கும் என்பது சட்டம். காட்சியைக் காண்பவர் எவ்வளவு தூரம் தம் ஜீவனில் விழிப்புடனிருக்கிறார் என்பதைப் பொருத்தது.

இரவு கனவில் அன்னை பரிசு கொடுப்பதாகக் கண்டவர், மறுநாள் சாதகர் ஒருவர் தம்மைத் தேடி வந்து கனவில் கண்ட பரிசைக் கொடுத்ததைக் கண்டார். வானில் ஸ்ரீ அரவிந்தரையும், அன்னையையும் கண்டவர் சில ஆண்டுகட்குப் பின் அங்கு ஆரோவில் நகரம் உற்பத்தியானதைக் கண்டார்.

பக்தர் ஒருவர் தம் பூஜை அறையில் ஸ்ரீ அரவிந்தர் படத்துள் வெளியிலிருந்து ஒளி புகுவதைக் கண்டார். தமக்குத் தெரிந்த ஆசிரமவாசி அங்கிருப்பதாகவும் கண்டார். 2 நாள் கழித்து தாம் கண்டவர் வீட்டிலிருந்து Sri Aurobindo's symbol ஸ்ரீ அரவிந்தரின் சின்னம் அவர் வீட்டிற்கு வந்தபொழுது தாம் கண்டதன் உண்மையை அறிந்தார்.

கோர்ட் பக்கமே போகாதவர் கனவில் ஜில்லா கோர்ட் வந்தது. 3 ஆண்டுகட்குப் பின் அந்தக் கோர்ட்டில் அவர் மீது கேஸ் நடந்தபொழுது கனவு புரிந்தது.

முதலில் சொன்ன கிராமம் ஸ்ரீ அரவிந்தர் பெயரைத் தாங்கிய ஊர். தாம் காட்சி கண்ட 17ஆம் ஆண்டு அக்கிராமத்திற்கு ஸ்ரீ அரவிந்தர் சின்னம் வந்தது. ஊரில் அன்னைக்குக் கோயில் கட்டினர். கண்டது நனவாயிற்று. இதற்கிடையில் அவ்வூர் பஞ்சத்தாலும், பட்டினியாலும் பட்டது ஒரு பாரதம்.

ஒரு பக்தர் கனவில் ஆசிரமம் வரும். வருஷத்தில் ஓரிரு முறையும் வரும். ஆசிரமத்தில் சமாதியை வேறிடத்தில் அமைப்பதாக அதில் தெரியும். இதன் பொருளை அவர் அறியார்.

சிறுவன் பள்ளியில் படிக்கும்பொழுது அவனைப் பார்த்து, "நீ தொழிலதிபராக வர வேண்டும்" என்றொருவர் அடிக்கடி கூறுவார். சிறுவன் அதைப் பொருட்படுத்துவதில்லை. பட்டம் பெற்று வேலைக்கும் போனான். ஒரு நாள் நண்பர் ஒருவர் வந்து அவரூரில் உள்ள கம்பனியில் ஷேர் விலைக்கு வருவதாகச் சொன்னார். வேலையை விட்டு விட்டு கம்பனியில் சேர்ந்தான் பையன். சில ஆண்டுகளுக்குள் கம்பனியை விலைக்கு வாங்கிவிட்டான். தொழிலதிபராகி விட்டான்.

சிறுவயதில் தொழிலதிபராக வேண்டும் என்றவரைச் சந்தித்து "நீங்கள் அப்பொழுதெல்லாம் சொல்வதுண்டு. இப்பொழுது புரிகிறது" என்று நன்றியுடன் கூறினார். அவர் சொல் பலிக்க 16 வருஷங்கள் ஆயின. 

 • கனவு, வாக்கு, காட்சி பலிப்பதுண்டு.
   
 • பூர்த்தியாகும் நேரமும், அளவும் மற்றவைகளைப் பொருத்தது. 

ஸ்ரீ அரவிந்த சரணம் மம

மந்திரங்கள் சக்தி வாய்ந்தவை. அறுவடை நடக்கும்பொழுது கழனியில் ஏராளமான வைக்கோல் உள்ள இடத்தில் நெருப்பு பற்றிக் கொண்டது. காற்று வீசும் திசையில் வைக்கோலிருப்பதால் வைக்கோல், நெல்லைக் காப்பாற்ற வழியில்லை. மிராசுதாரருக்கு மந்திரம் தெரியும். அது காற்றுக்குரிய மந்திரம். மந்திரத்தை அவர் ஜபிக்க ஆரம்பித்தவுடன். காற்று திசை எதிராக மாறியது. அறுவடையைக் காப்பாற்றினார்கள்.

கடித்த பாம்பை வரவழைத்து கடிவாயில் பல்லை வைத்து விஷத்தை உறிஞ்ச வைக்கக் கூடியது மந்திரம். அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும் கேட்டவர்களுக்குப் பல மந்திரங்களை எழுதிக் கொடுத்துள்ளனர். ஆனால் அவற்றை எல்லாம் விட சக்திவாய்ந்தது,

"அன்னை" எனும் மந்திரம்.
"ஸ்ரீ அரவிந்தர்" என்ற சொல்லும் மந்திர சக்தியுடையது.

அன்னை, ஸ்ரீ அரவிந்தருடைய எந்த வாக்கியத்திற்கும் மந்திர சக்தியுண்டு.

ஹோட்டலில் போய் சாப்பிட்ட பக்தர் ரூமுக்கு வந்து வாந்தி எடுக்கத் தொடங்கினார். வயிற்றுப்போக்கு ஆரம்பித்து விட்டது. கையில் மருந்து இருந்ததால், சாப்பிட்டார். போக்கு நிற்கவில்லை. உடனிருந்தவரும் பக்தர். நேரம் ஆக ஆக போக்கு அதிகமாயிற்று. கண்கள் சொருகின. மயக்கமாக இருக்கிறதென்றார். ஓர் ஓய்வு பெற்ற டாக்டர் அருகிலிருந்தார். அவரும் பக்தர். அங்கு கொண்டு போனார்கள்.

"நீங்களெல்லாம் பக்தர்கள், படித்தவர்கள், நிலைமை இவ்வளவு மோசமாகும்வரை காத்திருந்து பிறகு வருவது சரியா? தன்னிலை இழந்திருக்கிறார் (coma). இவருக்கு குளூகோஸ் ஏற்றும் வசதி என்னிடமில்லையே" என்றார் டாக்டர்.

ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போகிறேன் என்றார் உடனிருந்தவர். போகும் வரை உயிரிருக்குமா என்றார் டாக்டர். உடனே, "ஸ்ரீ அரவிந்த சரணம் மம' என்ற மந்திரம் நினைவுக்கு வந்தது. அன்னையே இவருக்கு இம்மந்திரத்தைக் கொடுத்திருந்தார். வாயில் தண்ணீர் விடலாமா என டாக்டரைக் கேட்டார். அதை விழுங்கும் நிலையில் உன் நண்பரில்லை, என்றார் டாக்டர்.

ஒரு ஸ்பூனில் தண்ணீர் எடுத்து மந்திரத்தை உச்சரித்து வாயில் விட்டார். விழுங்கிவிட்டார். மேலும் மேலும் 1 டம்ளர் தண்ணீர் உள்ளே போயிற்று, கண் திறந்தார். மேலும் 1 டம்ளர் தண்ணீர் மந்திரத்துடன் உள்ளே போயிற்று.

ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனார்கள், பிழைத்துக் கொண்டார். 

 • மந்திரம் சக்தி வாய்ந்தது.
   
 • பக்தருக்கு மருந்து நினைவு வந்தது, அன்னை நினைவு வரவில்லை, வந்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்காது.
   
 • பிரச்சினை என வந்தவுடன் அன்னை நினைவு வருவது அருள். 

தங்கக் கொலுசு

காணிக்கையைப் பொருளாகத் தருவது நம் பழக்கம். குருவுக்குத் தேவையான பொருள்களைத் தந்தால் அவர் பயன்படுத்த முடியும், அவருக்குத் தேவையில்லாத பொருள்களைக் காணிக்கையாகக் கொடுத்தால் குரு எப்படிப் பயன்படுத்த முடியும்?

குரு பயன்படுத்தினால் அப்பொருள்
அபரிமிதமாகும் என்பது நம் அனுபவம்.
குரு பயன்படுத்தினால் அப்பொருள்கள்
மூலமாக நாம் அவர்கள் அருளைப் பெறுகிறோம்.

அன்னைக்கு எழுதும் கடிதங்களில் குண்டூசி குத்தி வருவதும் உண்டு. சில சமயங்களில் ஊசி அன்னை கையில் குத்திவிடும். அன்னை கையால் நடக்கும் எந்தக் காரியமும் தொடர்ந்து அதிகமாகப் பலமுறை நடக்கும். அன்னை கையை ஊசி குத்தினால் அனுப்பியவர் கையில் தினமும் ஊசி குத்தியபடியிருக்கும். இவற்றையெல்லாம் நாம் அறிவதில்லை. அனுபவத்தில் தெரிந்து கொள்ள வேண்டும்.

இலண்டனில் மது கம்பனி வைத்திருப்பவர் அன்னையைத் தரிசிக்க வந்த பொழுது தம் கம்பெனி சரக்கான ஒரு பாட்டிலைக் கொண்டு வந்து கொடுத்தார்! அன்னை அதை என்ன செய்வது?

மது அருந்துபவர் தம்மைத் தரிசிக்க வந்தவுடன் அன்னை அவரிடம் அப்பாட்டிலைக் கொடுத்தார்!

பாதாம் அல்வா செய்தவர் அன்னைக்கு அதை அனுப்பினார். அன்னை சாப்பிடும் பொருளன்று அது. வந்த பொருளைக் கையால் தீண்டி பிரசாதமாக்கி, அன்னை அதை விநியோகம் செய்யச் சொன்னார். பெற்றவர்கட்கெல்லாம் அருள் போய்ச் சேர்ந்தது. தம் பெரிய சொத்தை, காலையில் இழந்தவர் சாப்பாட்டறைக்கு அன்று வந்தபொழுது அவருக்குப் பாதாம் அல்வா கிடைத்தது. பாதி சொத்து பறிமுதலானது பத்தாம் நாள் முழுச் சொத்தாகத் திரும்பி வந்தது. அன்னையின் பிறந்த நாளுக்குப் பரிசு கொடுத்தவர் காணிக்கையான பரிசை எடுத்து வந்த பெட்டியை Mother's Storeஇல் வைக்கச் சொன்னார் அன்னை. அப்பெட்டியைச் செய்து கொடுத்த நகை கடைக்காரர் பெட்டி அன்னை ஸ்டோருக்குப் போன பின் ஜில்லாவிலேயே பெரிய நகைக் கடைக்காரரானார். 

 • குருவுக்குப் பயன்படும் பொருளைக் காணிக்கையாகச் செலுத்துகிறோம்.
   
 • அவருக்குப் பயனில்லாததைக் காணிக்கையாக்கினாலும், சிஷ்யனுக்கு அருள் போய்ச் சேர குரு அதைப் பயன்படுத்த முனைகிறார். 

தங்கக் கொலுசை அன்னைக்கு காணிக்கையாக்கினார். அன்னை ஸ்ரீ அரவிந்தரிடம் போய்ச் சொன்னார். ஸ்ரீ அரவிந்தர் பிரச்சினையை பக்தர் நோக்கத்தில் பார்ப்பார். அதனால் கொலுசைப் போட்டுக் கொள் என அன்னையிடம் கூறினார். ஹரதன் பக்ஷ் என்று உத்தரபரா பிரசங்கத்தால் ஸ்ரீ அரவிந்தரை அறிந்த சாதகர் ஒருவர் ஆசிரமத்திலிருந்தார். தினமும் கொலுசை அவர் அன்னைக்கு அணிவிப்பார்.

சாவித்திரி

ஸ்ரீ அரவிந்தர் எழுத்துக்கு மந்திர சக்தியுண்டு என்றாலும் சாவித்திரி வாக்கியங்களுக்கு அது அதிகமாக உண்டு. அன்பர்களிடையே Life Divine புரியாது என்பது அபிப்பிராயமானால், சாவித்திரி புரியவே புரியாது எனப் பெயர் வாங்கியது.

Life Divine புரியாது எனப் பெயர் பெற்றாலும் அதன் முக்கியக் கருத்துகளை, பக்தியும், நம்பிக்கையும் உள்ளவர்க்குப் புரியுமாறு சொல்ல முடியும் என்பது அனுபவம். சென்ற ஆண்டு சுமார் 100 அன்பர்கள் கூடி அப்படிப்பட்ட விளக்கங்களைக் கேட்டுப் பேரளவுக்குப் புரிகிறது என்றனர். இதுவரை சாவித்திரி எனில் ஒருவர் படிக்க பிறர் கேட்கலாம். விளக்க முடியாது என்பது அபிப்பிராயம். ஆழ்ந்த பக்தியுள்ள பெண் ஆங்கில அறிவில்லாதவர் சாவித்திரியை உருக்கமாகப் படிக்க ஆரம்பித்து "புரிகிறது" எனக் கண்டு பல பக்கங்களைப் படித்ததை அன்பர்கள் அறிவார்கள்.

Life Divine - தத்துவம்
Synthesis of Yoga - யோகப் பயிற்சி முறைகள்
சாவித்திரி - Divine MESSAGE that touches the soul.

மூன்றும் சொல்வன ஒன்றேயானாலும், சொல்லும் பாங்கு வெவ்வேறு. நாம் பிறருக்கு அடிமையாக இருக்கக் கூடாது என்பது விளக்கம், தத்துவம் போன்றது. வெளிநாட்டுப் பொருள்களை வாங்கக் கூடாது என்பது சுதந்திரப் போராட்ட முறை.

பூரணச் சுதந்திரம் - அடைந்தே தீருவோம்

என்பது கோஷம். நம்மைத் தட்டி எழுப்பும். இதை message என்கிறோம். .புதியதாக ஆசிரமம் வந்தவர்கள் சாவித்திரியைப் பற்றிக் கேள்விப்பட்டு வாங்கினார்கள். அதிக ஆங்கில அறிவில்லாதவர்கள். அவர்கள் ஊரில் ஆசிரம centre உண்டு. தரிசன நாள் வந்தது. சென்டருக்குப் போகுமுன் பூஜை அறையில் தியானம் செய்ய விரும்பினர். 

 • சிறு பெண்ணிடம் சாவித்திரி படிக்கச் சொன்னார்கள்.
   
 • முதல் பக்கத்தைப் பெண் படித்தாள் (காவியத்தில் முதல் காண்டம் மிகக் கடினமானது).
   
 • பாரதக் கதையான சாவித்திரியையே அறியாத பெண் ஸ்ரீ அரவிந்தர் காவியம் விளங்குவதாக நினைத்தாள்.
   
 • உள்ளிருந்து ஏதோ ஒன்று, புறப்பட்டு வெளிவந்து புத்தகத்தைத் தொடுவதாக அறிந்தாள்.
   
 • இனிமையும், மென்மையும் சிறுமியைச் சூழ்ந்தன.
   
 • அன்னையைப் பெண் நிதர்சனமாக உணர்ந்தாள். 

பெண் சாவித்திரி படித்த நேரம் ஆசிரமத்தில் அன்னை தரிசனம் தந்த நேரமென பிறகு அறிந்தனர்.

சாப்பாட்டு அறை

பால்ய நண்பர்கள் ஓய்வு பெற்ற பின் தங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் சிலர் மிக உயர்ந்தும், சிலர் மிகத் தாழ்ந்துமிருப்பார்கள். உயர்ந்தவர்கள் செல்வத்தாலும், பரம்பரையானக் குடும்ப செல்வாக்காலும், ஜாதகப்படி அதிர்ஷ்டத்தாலும், அபார உழைப்பாலும், புத்திசாலித்தனத்தாலும் உயர்ந்திருப்பார்கள், மற்றவர்கள் இருந்த நிலையிலேயே இருந்திருப்பார்கள். ஸ்ரீ அரவிந்த தரிசனம் ஆத்மாவின் நிலையை உயர்த்துகிறது. 10 அல்லது 50 பிறவிகளில் பெறும் பயனைத் தருகிறது. சுமார் 20 அல்லது 30 வருஷத்திற்கு முன் தரிசனம் பெற்றவர்கள் இன்று தங்களை அன்று உடனிருந்தவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை தெரியும். இதிலும்,

 • தரிசனம் தரும் ஆத்மானுபவம் ஒன்று.
   
 • அன்பர் அதை ஏற்றுப் போற்றிப் பெறும் பலன் இரண்டாவது. 
 1. 1947இல் ஸ்ரீ அரவிந்த தரிசனம் பெற முயன்றவர் பெற முடியவில்லை. இவருக்கு 1970இல் அன்பர் ஒருவர் தொடர்பு கிடைத்து ஸ்ரீ அரவிந்தரருள் கிடைத்தது.

அத்தொடர்பு கிடைத்த நாளிலிருந்து இவர் வாழ்வு மலர்ந்தது. இவருடன் இருந்தவர்கள் பெயர் வெளியில் தெரியாதபொழுது இவர் அகில இந்திய ஸ்தாபனத்தின் தலைவரானார். அடுத்தாற்போல் அகில உலக ஸ்தாபனத்தின் தலைவரானார். ஆசியப் பரிசு பெற்றார். உலகப் பரிசு பெற்றார். இன்று உலகப் புகழ் பெற்று விளங்குகிறார். 

 1. 1933இல் 3 நண்பர்கள் M.A. பெற்று வேலையில்லாமலிருந்தார்கள். அதே சமயம் மற்ற இரு நண்பர்கள் SSLC முடித்திருந்தனர். M.A. பெற்றவர்களில் ஒருவரும், SSLC படித்தவர்களில் ஒருவரும் ஸ்ரீ அரவிந்த தரிசனம் பெற்றனர். 

உடனிருந்த M.A.யில் ஒருவர் கடைசிவரை வேலையில்லாமலிருந்தார். அடுத்தவர் சர்க்கார் குமாஸ்தாவானார். தரிசனம் பெற்றவர் பல்கலைக்கழக ஆசிரியராகி, பேராசிரியராகி, தமிழ்நாட்டில் பெரும் புகழ் பெற்றார்.

ஒரிசாவில் ஒருவருக்கு ஸ்ரீ அரவிந்த தரிசனம் பெற ஆவல். வசதியில்லை. காதில் மட்டும் ஒரு குரல் நம்பிக்கையை விடாதே என ஒலித்தபடியிருக்கும். 1948இல் தரிசன சமயத்தில் புதுவை வந்து சேர்ந்தார். அவர் பெற்ற பேறுகள், 

 • அன்னை தரிசனம் பெற்றார்.
   
 • சாப்பாட்டறையில் சாப்பிட்டார், அது சாப்பாடாக இல்லை. அவர் மனத்தில் ஐயங்களை அது அழித்தது. பெருந்திறன் அவருள் நுழைந்தது. புனர்ஜென்மம் அடைந்தார்.
   
 • இனிமையான தூய்மை இதயத்துள் பிறந்தது.
   
 • தரிசனத்தன்று ஸ்ரீ அரவிந்தரையும், அன்னையையும் தரிசித்தார்.
   
 • மனம் சரணாகதியை விழைந்தது. அவருடைய பொருளாதார நெருக்கடிகள் வீடு திரும்பியபொழுது மறைந்தன. 

பாக்கிஸ்தான்

சுதந்திரம் வந்தபொழுது ஸ்ரீ அரவிந்தரிடம் பாக்கிஸ்தானைப் பற்றிக் கேட்டார்கள். பாக்கிஸ்தான் இந்தியாவுடன் சேரும் என்றார். எப்பொழுது எனக் கேட்டார்கள். சுமார் 10 ஆண்டுகளில் என்றார். 1957இல் பாக்கிஸ்தான் இந்தியாவுடன் சேரவில்லை. தெய்வமும் தவறு செய்யும் என அதைப் புரிந்து கொண்டார்கள்.

சத்திய ஜீவியம் வரும் என்று ஸ்ரீ அரவிந்தர் கூறியபொழுது அவரை அனைவரும் சத்திய ஜீவியத்தைப் பற்றிப் பல கேள்விகள் கேட்டதுடன் சத்திய ஜீவியம் வரும் நாளைக் குறிப்பிடச் சொன்னார்கள். 1934 எனக் குறிப்பிட்டார். 1934இல் அது பலிக்கவில்லை. 22 ஆண்டுகள் கழித்து 1956இல் பலித்தது.

"பெருஞ் சாதனைகளைப் பறை அறைவிப்பதில்லை'' என்று அன்னை கூறுகிறார். ஒரு விஷயம் உருவாகும்பொழுது அதை நாம் பலரிடமும் சொல்லாமலிருப்பது நல்லது. சொன்னால் விஷயம் கூடி வராது என நாம் அறிவோம். விவசாயி மகசூலைக் கணக்கு போடமாட்டான். அதே பொருளில் ஆங்கிலப் பழமொழி உண்டு. பிறரிடம் சொல்லக்கூடாது என்பதுடன் மனம் கணக்குப் போடக்கூடாது என்பது நம் பரம்பரை. நம் மனத்தைவிட்டு ஒரு விஷயம் விலகிவிட்டால் அது கூடிவரும் என்பது சூட்சும உண்மை.

இதற்கு எதிரானதும் உண்மை. நம் முன்னேற்றத்திற்கு நல்லெண்ணத்தால் பூரண உற்சாகமுள்ளவர்களிடம் இதுபோன்ற விஷயங்களைச் சொல்வதாலேயே அது கூடிவரும் என்பது உண்மை. குருவிடம் நடப்பவற்றையெல்லாம் சொல்வது அக்காரணத்தால்தான். கணவனும் மனைவியும் அன்னியோன்யமானவர்களானால் கணவன் மனைவியிடம் கூறுபவை, கூறுவதால் நடக்கும். இவை வாழ்வுக்குரிய உண்மைகள்.

அருளால் பெறுபவை சூட்சும உலகைக் கடந்து காரண தேகத்தில் நடப்பவை. அவற்றின் மீது நம் மனப்பார்வை பட்டாலே விஷயம் கெட்டுவிடும். பிறர் எவரிடமும் சொல்ல முடியாது.

Prophesy எதிர்காலத்தில் நடக்கப் போவதைச் சொல்வது ஞான திருஷ்டியாகும் என்பதால் நாம் அதைப் போற்றுகிறோம். உலக வழக்கிற்கு அது சரி. இராமலிங்க சுவாமி வடலூர் கடலூர் ஆகும் என்றது பலித்தது. சத்திய ஜீவியம் வருவது உலக வழக்கிற்குரியதன்று. அதைக் கடந்தது. மனத்தைக் கடந்த நிலையில் எழுவது. மனத்தின் பார்வை அதன் மீது பட்டால், பலிக்காமற் போகும்.

இந்தியச் சுதந்திரத்திற்குப் பின் கிழக்கு வங்காளத்தில் இந்து முஸ்லீம் கலவரம் ஏற்பட்டபொழுது ஸ்ரீ அரவிந்தர் "இந்திய ராணுவம் அங்கே போக வேண்டும்'' என்றார். சற்று நேரம் கழித்து "பொறு, அன்னை சமாதான முறையில் பாக்கிஸ்தானை இந்தியாவுடன் சேர்க்க முயல்கிறார்" என்றார். இவற்றிற்குரிய சட்டங்கள் பல. 

 • மனம் தொடர்ந்து ஈடுபடுவதால் காரியம் கூடிவரும்.
   
 • கேள்வி எழுப்புவதால் காரியம் கெடும்.
   
 • இப்படியெல்லாம் கெட்டுப் போன காரியம் வேறு வகையில் கூடி வரும்.
   
 • காரியம் கெட்டு விட்டால், நாள் கழித்துப் பலிக்கும். 

நம் மனநிலை, சூழ்நிலை, ஆன்மீகச் சூழ்நிலை, காரியத்தின் தரம் ஆகியவற்றைப் பொருத்து விஷயம் மாறும். இந்திய மரபில் எந்தக் குருவிடமும் சிஷ்யர்கள் கேள்வி எழுப்ப முடியாது. ஸ்ரீ அரவிந்தர் இந்திய யோகத்தை மேல்நாட்டுச் சுதந்திரப் பாணியில் நடத்தினார்.

120 வயதான மகான்

இந்தியாவில் உள்ள எந்தச் சித்த புருஷருக்கும் ஸ்ரீ அரவிந்தரை அந்த நாட்களிலேயே தெரியும். அவர்கள் ஒருவரையொருவர் சூட்சுமத்திலேயே அறிவர். ராஜபுதனத்தில் 120 வயதான மகான் ஒருவர் உண்டு.

"ஸ்ரீ அரவிந்தரை உலகம் இன்றும் அறியவில்லை.
அவரை உலகமே பின்பற்றும் நாள் வரும்.
அடுத்த நூற்றாண்டில் மேல்நாட்டார் அவரைப் பின்பற்றுவார்கள்"

என்று இந்த மகான் ஒரு முறை கூறினார். இமயமலையில் நிர்வாணமாக உட்கார்ந்திருந்த ஒரு சாமியார்,

"இந்த ஆசிரமம் கடலோரத்திலுள்ளது.
இவர்கள் செய்யும் யோகம் கடினமானது.

இதுவரை எவரும் செய்யாததை இங்குச் செய்கிறார்கள்"

எனக் கூறினார்.

ஆசிரமச் சாதகர் ஒருவர் அங்குள்ள மகானையும் பார்க்க விரும்புபவர். மகான்கள் பல வகையினர். ஞானமுள்ளவர், அதற்குரிய சாந்தத்துடன் பேசுவார்கள். பெரிய ஞானமிருந்தாலும் சாதாரண மனிதனுக்குள்ள நிதானமில்லாமல் பேசுவதும் உண்டு. சிலர் கோரமாகக் கூத்தாடுவார்கள். எந்தச் சாமியாருக்கு எந்த ஞானமிருக்கும், எந்த வகையில் கோணலாக இருப்பார் என்று நிர்ணயமாகக் கூறமுடியாது.

சாதகர் பல பேரையும் சேர்த்துக் கொண்டு இந்த ராஜபுதனச் சாமியாரைப் பார்க்க வந்தார். இவர் 10 நாய்களைத் தம்முடன் வைத்திருந்தார். தம்மைப் பார்க்க வருபவர்களைக் கல்லால் அடிப்பார். ஆத்திரமாகத் திட்டுவார். அதனால் சாதகரை அழைத்துப் போனவர் பயந்துபோய் பாதி வழியில் நின்று விட்டார். சாதகர் சாமியாரைக் காணச் சென்றார். அவரை பாபா என்பர்.

பாபா வெளியே எழுந்து வந்து சாதகருக்குச் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.

"ஏன் எனக்கு நமஸ்காரம் செய்கிறீர்கள்" எனக் கேட்டதற்கு

நான் ஸ்ரீ அரவிந்தரை நமஸ்கரிக்கிறேன். கல்கத்தாவில் அவரை தரிசனம் செய்தேன். இப்பொழுது அவர் ரிஷியாகி விட்டார்.

என்று பதில் கூறினார்.

"நான் அரவிந்த ஆசிரமத்தைச் சேர்ந்தவன்" எனக் கூறவில்லையே என்றார் சாதகர்.

"அதைக் கூற வேண்டிய அவசியமில்லை" என்றார் பாபா.

நாம் நம்மை அறிவதில்லை

நாம் அன்னையிடம் வந்து அன்னையை வணங்கினாலும், அன்னையை நாம் அறிவதில்லை. அனைவரும் வணங்கும் வகையில் நாமும் வணங்குகிறோம். எப்படி குழந்தைகள் தாங்கள் பயன்படுத்தும் பொருள்களை அறிய முடிவதில்லையோ அதுபோல் நாம் நம்மை அறிவதில்லை. நாம் வணங்கும் தெய்வத்தை அறிவதில்லை.

மதுராவில் ஒரு மகான். பிரபலமானவர். இவர் காலைத் தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெற அனைவரும் அவரைத் தேடி வருவதுண்டு. இவர் பரணை மீதிருப்பார். காலைத் தொங்கப் போட்டால் அதைத் தொட்டு வணங்கலாம். பலர் தங்கள் தலையால் அதைத் தொட்டு மகிழ்வதுண்டு

ஆசிரமச் சாதகர் பல்வேறு மகான்களைக் காணச் சென்றவர், இவரையும் காண வேண்டி வந்தார். சற்றுத் தொலைவில் வரும்பொழுது ஒருவர் மகானிடமிருந்து வந்தார். சாதகர் பலர் சூழ வந்து கொண்டிருந்தார். சாதகர் ஒருவர் தவிர மற்ற அனைவரும் உள்ளூர்வாசிகள். மகானிடமிருந்து வந்தவர்,

"ஸ்ரீ அரவிந்தாசிரமத்திலிருந்து வந்தது யார்?" என வினவினார்.

சாதகருக்குத் திடுக்கிட்டது. இப்பொழுதுதான் வருகிறார். இவர் வந்திருப்பது யாருக்கும் தெரிய நியாயமில்லை. எனவே வேறு யாரையோ தேடுகிறார்கள் என நினைத்து மௌனமாக இருந்தார். மீண்டும்,

"யார் ஸ்ரீ அரவிந்தாசிரமத்திலிருந்து வந்திருக்கிறார்கள்" என்று கேட்க சாதகர் தம்மை அடையாளம் காட்டினார்.

"பாபா, உங்களைக் கூப்பிடுகிறார்" எனக் கூறி சாதகரை உள்ளே அழைத்துப் போனார்கள். பாபா பேச ஆரம்பித்தார்.

"எங்கிருந்து நீங்கள் வருகிறீர்கள்?" எனக் கேட்டார்.

"நான் ஸ்ரீ அரவிந்தாசிரமத்திலிருந்து வருகிறேன்" என்று பதில் கூறினார் சாதகர்.

பாபா - ஸ்ரீ அரவிந்தர் யார் என நீங்கள் அறிவீர்களா?

சாதகர் - ஓரளவு தெரியும்.

பாபா - இல்லை, உங்களுக்கு ஸ்ரீ அரவிந்தரைத் தெரியாது.

சாதகருக்கு ஏராளமான பிரசாதம் கொடுத்தனுப்பினார்.

நாம் நம்மையும் அறிவதில்லை,

நாம் வணங்கும் தெய்வத்தையும் அறிவதில்லை.book | by Dr. Radut