Skip to Content

01. பகவான் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள்

ஸ்ரீ அரவிந்தர்

கண்ணனைச் சீடனாகப் பெற்ற குரு பட்டது பாரதம் என்கிறார் பாரதி. மகான்கள், மேதைகள், ஆரம்பக் காலத்தில் மாணவனாகவும், உத்தியோகத்திலும் இருப்பதுண்டு. அவர்களது வாழ்வு விதிக்கு விலக்காக அமைவதே அதிகம்.

பரோடா மகாராஜா லண்டனுக்கு வந்த பொழுது ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்தார். ஸ்ரீ அரவிந்தர் ICS பாஸ் செய்யவில்லை. அதனால் தம் சமஸ்தானத்தில் வேலைக்கு அழைத்தார். ஆரம்பத்தில் ரூ. 250 சம்பளமும், பின்னர் பேராசிரியரான பொழுது ரூ. 500 சம்பளமும் கொடுத்தார்.

நேருவைத் தொண்டராகப் பெற்ற காந்திஜி நேருவை ஒட்டிப் போக வேண்டியதாயிற்றே தவிர தலைவரைத் தொண்டர் பின்பற்றியது குறைவு. விவேகானந்தரை சிஷ்யராகப் பெற்ற பரமஹம்ஸரை சிஷ்யர் தேடி வந்ததை விட சிஷ்யரை காலேஜ்க்கு தேடிப் போய், குரு பார்த்தது அதிகம்.

ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஆபீசர்கள் வேலைக்கு வரவேண்டுமென மகாராஜா உத்தரவிட்டார். எல்லா ஆபீசர்களும் வந்தனர். ஸ்ரீ அரவிந்தர் வரவில்லை. ஏன் வரவில்லை எனச் செய்தியும் அனுப்பவில்லை. மகாராஜாவுக்குத் தம் உத்தரவை மீறுபவரைத் தண்டிக்க முடியும். அந்தச் சட்டம் அவதாரப் புருஷரைக் கட்டுப்படுத்தவில்லை. மகாராஜா ஓர் ஆள் அனுப்பி ஸ்ரீ அரவிந்தரைக் கூப்பிட்டனுப்பினால் ஸ்ரீ அரவிந்தர் போக வேண்டும். மகாராஜா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தாமே நேரில் போய் ஸ்ரீ அரவிந்தரை அழைத்து வர முடிவு செய்தார். போனார். அரவிந்தர் தூங்கிக் கொண்டிருந்தார். மகாராஜா தயங்கினார். எழுப்பவில்லை. திரும்பினார். "என்ன தண்டனை கொடுத்தாலும் நான் வரப் போவதில்லை" என ஸ்ரீ அரவிந்தர் பிரகடனப்படுத்தினார்!

ஸ்ரீ அரவிந்தருக்கு மகாராஜாவின் மீது அதிக மரியாதையுண்டு. "இந்த நாட்டையே ஆளும் திறமை படைத்தவர் பரோடா மகாராஜா" என்றும் ஒரு சமயம் கூறியுள்ளார். புதுவை வந்த பின் பரோடா மகாராஜாவைப் பற்றி அடிக்கடி சீடர்கள் பேச நேரும். அவர் திறமையைப் பாராட்டி ஒரு சாதகர், "மகாராஜா ஓர் எக்ஸிபிஷனில் பேசியபொழுது கூட்டம் ஆரவாரமாகக் கை தட்டிப் பேச்சைப் பாராட்டினர்" என்று கூறினார். தாமே அச்சொற்பொழிவை எழுதிக் கொடுத்ததாக ஸ்ரீ அரவிந்தர் கூறியபொழுது அத்தனைச் சாதகர்களும் அளவு கடந்து சிரித்தனர். அந்தச் சொற்பொழிவை இப்பொழுது வெளியிட்டுள்ளார்கள்.

அதேபோல் ஸ்ரீ அரவிந்தரிடம் மகாராஜாவுக்கு அளவு கடந்த மரியாதையுண்டு. புதுவை வந்த பின்னும் அத்தொடர்பு நீடித்தது. பகவான் பிறந்தது வங்காளத்தில். அவர் வேலை செய்தது குஜராத்தில். அவர் புதுவையில் தங்கிய பின் ஆயிரம் சாதகர்கள் அவரைத் தேடிவந்து தங்கினார்கள் என்றாலும், வங்காளத்திலிருந்தும், குஜராத்திலிருந்தும் வந்தவர்களே அதிகம்.

ஒரு வகையில் பகவான் எல்லாச் சட்டதிட்டங்களுக்கும் தம்மை முழுமையாகக் கட்டுப்படுத்திக் கொள்வார். அவருக்கு மருத்துவம் செய்த டாக்டர்கள் இவரைப் போன்று டாக்டர் சொல்வதை அப்படியே பின்பற்றும் வியாதிஸ்தரைக் காண முடியாது என்று கூறியுள்ளனர். உறவினர், நண்பர்கள், தம் வக்கீல், தம் டாக்டர் போன்றவர்களிடம் பகவான் முறைப்படி பழகுவார்.

அதே சமயம் தம் ஆன்மீக அம்சம் முன்னெழும்பொழுது எந்த சட்டத்திற்கும் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள மாட்டார். ஊர், உலகம், நட்பு, சமூகம், சட்டம், சர்க்கார் அத்தனையும் அவர் போக்குக்கு விலக்கு. பாரதி அவரை அல்ஜீரியா போகலாம் எனத் தீவிரமாக அழைத்தபொழுது சுமார் 5 நிமிஷம் பகவான் அவரைத் திரும்பிப் பார்க்காமல், பின், "நான் நகரப் போவதில்லை" என அடித்துக் கூறினார்.

ஸ்ரீ அரவிந்தர் கண்ட தரிசனம்

மகான்களை, பக்தர்கள் கனவிலும், தியானத்திலும் காண்கின்றனர். மகான்களும் அதுபோல் காண்பதுண்டு. விவேகானந்தர் கன்னியாகுமரியில் பலிப் பாறையில் அமர்ந்து தியானம் செய்தபொழுது இந்தியா பாரத மாதாவாகக் காட்சியளித்தது. மக்கள் இருண்டு, கரிய உருவாகத் திரளாக தாயின் காலடியில் இருந்தனர். அவர் மனம் பதைத்தது. இறைவனை வேண்டினார். காட்சி மாறி ஒளி பொருந்திய உருவமாக, பாரத மாதா காட்சியளித்தாள். அவள் பெற்ற குழந்தைகள் பிரகாசமாக விவேகானந்தருக்குத் தெரிந்தனர்.

ஸ்ரீ அரவிந்தர் இந்திய அரசியலில் பங்கு கொண்டது 4 ஆண்டுகளே. 1906 முதல் 1910 வரை அரசியலிலிருந்தார். அக்குறுகிய காலத்தில் அவர் பிரபலமானார். சென்ற இடமெல்லாம் கூட்டம் அவரை வரவேற்றது. ரயில்வே ஸ்டேஷனிலும் கூட்டம். அவரைக் காண இளைஞர்கள் அருகிலுள்ள மரங்களில் ஏறுவார்கள். யாரைப் பார்த்தாலும் ஸ்ரீ அரவிந்தர் குனிந்து வணக்கம் செய்வார். அவர் மனம் அப்பொழுது யோகத்தை நாடவில்லை. பாரதமாதாவே அவர் நினைவு, செயல் எல்லாம்.

பாரதமாதா அவருக்குப் பவானியாகக் காட்சியளித்தார்.

துர்கையாகவும் ஸ்ரீ அரவிந்தர் பாரதமாதாவைக் கண்டதுண்டு.

பாரதியாகவும் 1905இல் அவர் பாரதமாதாவைக் கண்டார்.

அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் அவதாரப் புருஷர்கள். நாம் தசாவதாரத்தை அறிவோம். உலகப் பெரு நிகழ்ச்சிகளை நடத்தியவர்கள் அவர்கள். தம்மைப்பற்றி அன்னை அதுபோல் கூறியுள்ளார். பூமியின் சரித்திரத்தில் எந்தெந்த நேரத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டாலும் தாம் அங்கே இருந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

ஸ்ரீ அரவிந்தர் பூமி உற்பத்தியானதிலிருந்து எல்லாப் பெரிய மாறுதல்களையும் வழி நடத்தியுள்ளார். ஏதோ ஒரு வகையில் ஏதோ ஓர் பேருடன் ஸ்ரீ அரவிந்தர் இந்நேரங்களில் அங்கு வந்து தலைமை தாங்கியுள்ளார் என அன்னை கூறுகிறார்.

நிவேதிதா

இவர் விவேகானந்தரின் மேல் நாட்டு சிஷ்யர். ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். ஸ்ரீ அரவிந்தர் நடத்திய "கர்மயோகின்" என்ற பத்திரிகையில் அவருக்கு உதவியாக இருந்துள்ளார். பாரதி இவரைப்பற்றி ஒரு பாடல் எழுதியுள்ளார்.

இங்கிலாந்து போய் மீண்டும் நிவேதிதா இந்தியா வந்தார். வந்தவர் ஸ்ரீ அரவிந்தரைக் காண வந்தார். தாம் முன்பு பார்த்ததிலிருந்து ஸ்ரீ அரவிந்தரின் தோற்றம் மாறி பொலிவு மிகக் காணப்பட்டதைக் கண்டு வியந்தார். தம் பள்ளியில் ஒரு விழா ஏற்பாடு செய்தார்.

யோகம் பகவானை மாற்றியது. அவர் கரிய உருவம் கருமையை இழந்தது. ஏற்கனவே அவர் கண்கள் ஒளி பொருந்தியவை. இப்பொழுது முகமெல்லாம் கண்களானது போல் பொலிவு பிரகாசமாக மாறியிருந்தது. சிறைவாசத்தில் யோகம் பூர்த்தியானது தெரிந்தது. மலை போன்ற சாந்தியும், மகத்தான நம்பிக்கையை ஊட்டும் அவரது உருவமும், "இவர் அரசியல்வாதியல்ல, தீர்க்கதரிசி, யோகி" என நிவேதிதாவை நினைக்கச் செய்தது. ரிஷி பரம்பரை இவரில் தொடர்கிறது என நினைத்தார் நிவேதிதா.

காலத்தைக் கடந்த அமைதி

சுமார் 20, 000 கடிதங்கள் பகவான் சாதகர்கட்கு எழுதினார். அவை 3 வால்யூம்களாக வெளிவந்துள்ளன. கடிதங்களில் சாதகர்கள் தங்கள் யோகானுபவங்களை எழுதி சந்தேகம் கேட்பார்கள். தங்களுக்கிட்ட வேலையில் உள்ள பிரச்சினைகளை எழுதுவார்கள். தரிசனத்தன்று அனுபவித்தவற்றை விளக்குவார்கள். தங்கள் தேவைகளைக் கேட்டு எழுதுவார்கள். மேலும்,

  • (inner visions) தியானத்தில் கண்ட காட்சிகள்,
     
  • அவர்கள் பிறந்த பகுதியிலுள்ள மகான்களைப் பற்றியும்,
     
  • தாங்கள் எழுதிய கவிதைகளைப் பற்றியும்,
     
  • யோகம் தமக்கு ஒத்து வரவில்லை என்பதையும்,
     
  • வீடு மாற்ற வேண்டும் என்றும்,
     
  • வந்த நோயை யோக சக்தி எப்படித் தீர்க்குமெனவும்,
     
  • டாக்டர்கள் தங்கள் தொழிலைப் பற்றியும்,
     
  • ஏன் உடற்பயிற்சி செய்ய வேண்டுமெனவும்,
     
  • குடும்பத்துடன் தங்கள் உறவை விவரித்தும்,
     
  • செய்யும் வேலையை மாற்றிக் கேட்டும்,
     
  • மனப்போராட்டங்களை விவரித்தும்,
     
  • கனவு விளக்கம் கேட்டும்,
     
  • பாரதம், இராமாயணத்தைப் பற்றியும், கடிதங்கள் எழுதியுள்ளார்கள்.

இள வயதில் ஆசிரமத்தில் சேர்ந்த ஒருவர் தமக்குப் படுக்க மெத்தை வேண்டுமெனக் கேட்டிருந்தார். உடல் வளர்ந்து உருவம் பெறும் நேரமிது. அப்பொழுது தரையில் படுத்தால் உடல் வசீகரமாக அமையும். மெத்தையில் படுத்தால் (shapeless) உருவத்தை இழந்துவிடும் என எழுதினார்.

மற்றொருவர் தமக்கு time piece கடிகாரம் வேண்டும் எனக் கேட்டிருந்தார். கடிகாரம் வேண்டுமென்றால் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால் time piece, time peace தருமா? காலத்தைக் கடந்த அமைதியைத் தரும் யோகத்தை ஏற்ற பின் ஏன் காலத்தைக் காட்டும் கடிகாரத்தைத் தேடுகிறீர்கள் என எழுதினார்.

பகவான் நகைச்சுவை பெரியது. Life Divineஇல் அவருடைய மனத்தைத் தெரிந்தவர்கள் ஒரு பக்கம் தவறாமல் அச்சுவையைக் காணலாம். பதிலிலும், நகைச்சுவையிலும், ஆத்மாவுக்கு வேண்டியதை அளிப்பது அவர் பதில்.

உயர்ந்த ஆத்மாவுக்கு இப்படிப்பட்ட பதில் பகவான் எழுதுவார். பேரமைதியைப் பெற்ற சாதகர் என்பதால் பகவான் நகைச்சுவை அச்சொல்லைப் பற்றி அமைந்தது.

தாகூர் செலுத்திய அஞ்சலி

தாகூர் 1913இல் நோபல் பரிசு பெற்று உலகப் புகழ் எய்தினார். ஜாலியன்வாலாபாக்கில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து சர்க்கார் தமக்கு வழங்கியிருந்த சர் பட்டத்தைத் துறந்தார். அப்பொழுது நோபல் பரிசுடன் ஒரு இலட்ச ரூபாய் கொடுப்பதுண்டு. இப்பொழுது 3 கோடி ரூபாய் தருகிறார்கள். அப்பணத்தைத் தாம் நடத்தும் விஸ்வபாரதி என்ற பல்கலைக்கழக நிர்வாகியை அழைத்து (sanitary works) அங்குக் கால்வாய் கட்ட உதவும் என அளித்தார். பிறகு உலகத்தைச் சுற்றிப் பயணம் வந்தார். அப்பொழுது ஜப்பானில் அன்னையைச் சந்தித்தார். 30 ஆண்டுகட்குப் பின் புதுவை வந்து ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்தார்.

1907இல் தாகூர் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி ஒரு செய்யுள் எழுதினார்.

ஓ! அரவிந்தா!
ரவிந்திரன் வணங்குகிறார் உன்னை.
அடிமைத்தளையும், வேதனையும் உள்ளபொழுது
உங்கள் திருமுகத்தைக் கண்டால், ஆத்ம கீதம் கேட்கிறது.
பாரதத்தின் ஆத்மாவே!
எல்லையற்ற இனிமையே!

என ஸ்ரீ அரவிந்தரை வர்ணித்தார்.

21 ஆண்டு கழித்து புதுவையில் பகவானைத் தரிசித்தவர்,

ஆத்மாவைத் தேடியவர் கண்டு கொண்டார்
எனப் பார்த்த மாத்திரம் உணர்ந்தேன்.
யோக சக்தியால் மௌனம் குடி கொண்டதைக் கண்டேன்.
ஆத்ம ஜோதி முகத்தில் தெரிகிறது.
பண்டை ரிஷிகளை ஸ்ரீ அரவிந்தரில் கண்டேன்

என்றார்.

தாகூர் ஸ்ரீ அரவிந்தரிடம் கூறியது:

"உத்தரவு உங்கள் கையிலுள்ளது.
அதைப் பெற நாங்கள் காத்திருக்கிறோம்.
பாரத மாதாவின் குரல் உங்கள் மூலம் எழும்.
இது சத்தியம்."

"1907இல் அவரைக் கண்டு என் வணக்கத்தைத் தெரிவித்தேன். இன்று மீண்டும் ரவிந்திரருடைய வணக்கத்தை ஏற்குமாறு கேட்டுக் கொண்டேன்."

'அரவிந்தர்' தரிசனத்திற்குக் கேட்ட அனுமதி

அமெரிக்கர் ஒருவர் யோகத்தை மேற்கொண்டு அதன் மூலம் செய்யக் கூடியவற்றை அறிந்தார். அவர் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டார். கடிதம் எழுதினார். "I am a Yoga. I hear you are a Yoga.... " "நான் யோகம். நீங்களும் யோகம் என அறிந்தேன்..."

ஸ்ரீ அரவிந்தர் எழுத்து நகைச்சுவையால் நிரம்பியது. நம் நகைச்சுவை என்பதும், ஆங்கிலேயர் நகைச்சுவை என்பதும் வேறு வேறு. ஸ்ரீ அரவிந்தர் நகைச்சுவை ஆங்கிலேயர் பாணியில் அமையும். அவருடைய தத்துவ நூலிலும் நகைச்சுவை மிகுதி.

ஆசி வேண்டும் என்று கல்கத்தாவிலிருந்து வந்த தந்தி "Please send ashes" ஆசியை ஆங்கிலத்தில் ashis என்று எழுதப் போய் தந்தியில் எழுத்து மாறி ashes (சாம்பல்) என்றாயிற்று. ஸ்ரீ அரவிந்தருக்குப் புரியவில்லை, சாம்பல் ஏன் கேட்கிறார்? என்றபொழுது உடனிருந்தவர்கள் ஆசி கேட்கிறார் என்று சொன்னார்கள்.

பம்பாயிலிருந்து தரிசனத்திற்கு அனுமதி கேட்டு ஒருவர் தந்தி அனுப்பினார். தமக்கு ஆசிரமத்தில் வசிக்கும் திலீப் குமார் ராய் என்பவரைத் தெரியும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தந்தியில் கையெழுத்து Aurobindo என்றிருந்தது. கையெழுத்து ஆசிரமத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. Aravind என்றிருந்தாலும் புரியும். Aurobindo என்ற கையெழுத்து அனைவரையும் சிந்திக்க வைத்தது. பக்தர் தம்மை  Aurobindo என்று வைத்துக் கொண்டாரா? அல்லது  Aurobindo என்று பெயர் வைத்துக் கொண்டாரா? என்று புரியவில்லை. இந்த வினோதமான நிகழ்ச்சி திலீப் குமாரை வங்காளியில் ஒரு பாடல் எழுதத் தூண்டியது. பாடல் நான்கு காரணங்களைத் தந்திக்குக் கற்பித்தது.

பாடலை, திலீப் பகவானுக்கு அனுப்பினார். பதில், விளக்கமாகவும், ஒளிமயமாகவும், புல்லரிப்பதாகவும் பாடல் அமைந்துள்ளது என வந்தது. திலீப் எழுதிய நான்கு விளக்கங்களில் ஒன்று "அரவிந்தர் பயங்கரவாதி" என்றது. பகவான் அவ்விளக்கத்தையே தான் பெரிதும் ஏற்பதாகச் சொல்லி எழுதினார்.

வரச் சொல்லி தந்தி அனுப்பவும் என்று பகவான் திலீப்புக்கு எழுதி தாமும் 4 வகைகளாகப் பதிலை அமைத்தார். திலீப் பாடல் நான்கு காரணங்களுடையதால் பகவான் பதிலும் 4 ஆக அமைந்தது. அவை:

  1. பெருங்கருணையுடன் வரச் சொல்லி தந்தி அனுப்பவும்.
     
  2. பக்தரை இறைவனிடம் அல்லது நரகத்திற்குப் போக அனுமதியுங்கள்.
     
  3. இந்த 'அரவிந்தருக்கு' என்ன பதில் அனுப்புவது என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.
     
  4. அவர் பெயர் கொண்ட என்னை நிம்மதியாக விடுங்கள்!

ஒரு மொழியிலுள்ள நகைச்சுவையை அடுத்த மொழியில் பெயர்த்தால் நகை போய்விடும், சுவையிருக்காது. தம்மையே  Aurobindo என விவரித்துக் கொண்டார் ஒருவர் என்பது மட்டுமே நமக்கு விளங்கும்.

போட்டோ

1926இல் சித்தி தினத்தன்று பகவான் தனிமையை நாடியதிலிருந்து 24 வருஷம் அவரை போட்டோ எடுக்கவில்லை. அன்னை அதற்கு அனுமதிக்கவில்லை. இதே காலத்தில் அன்னையும் தம்மை போட்டோ எடுக்கப் பிரியப்படவில்லை.

சிறு வயதிலும், உத்தியோகத்திற்கு வந்தபொழுதும் சுமார் 10, 12 போட்டோக்கள் எடுக்கப்பட்டன.

பகவான் அரசியலில் இருந்தது குறுகிய காலமாகிய நான்கு ஆண்டுகள். அப்பொழுதும் சுமார் 10, 12 போட்டோக்கள் எடுக்கப்பட்டன.

  1. 1906ஆம் ஆண்டு தம் மாணவர்கள் 8 பேருடன் எடுத்த போட்டோ ஒன்றுளது.
     
  2. மனைவி மிருணாளினியும் ஸ்ரீ அரவிந்தரும் உள்ள போட்டோ ஒன்று.
     
  3. 1901இல் மிருணாளினி தனியே எடுத்த போட்டோவில் நின்று கொண்டிருக்கிறார்.
     
  4. 1909இல் மாடர்ன் ரெவ்யூ என்ற பத்திரிகையில் அவர் புகைப்படம் (bust) வெளியானது நமக்கு இன்று கிடைத்துள்ளது.
     
  5. பிரபலமான உத்தரபரா பிரசங்கம் 1908இல் நடந்தது. அப்பொழுது தலைவர் பிபின் சந்திரபாலும் வேறு 16 பேர்களும் சேர்ந்து ஸ்ரீ அரவிந்தருடன் போட்டோ எடுத்தனர்.
     
  6. 1906இல் லாலா லஜபதிராய். பாலகங்காதர திலக் ஆகியோருடன் கல்கத்தாவில் பகவான் போட்டோ எடுத்ததுண்டு. அதில் மொத்தம் 8 பேர் உள்ளனர்.
     
  7. 1907இல் சூரத் காங்கிரஸில் ஸ்ரீ அரவிந்தர் பேசும் புகைப்படம் உள்ளது.
     
  8. தேசீயத் தலைவர்கள் 9 பேர் உள்ள போட்டோ சூரத்தில் எடுக்கப்பட்டது. அதில் பகவான் உள்ளார்.
     
  9. பள்ளி செல்லும்பொழுது எடுத்த போட்டோ ஒன்றுளது.
     
  10. நாற்காலியில் உட்கார்ந்து எழுதும் போட்டோ ஒன்று.
     
  11. நீண்ட முடியுடனும், தாடியுடனும், மேலே போட்ட துண்டுடனும் எடுக்கப்பட்ட போட்டோ பிரசித்தமானது. அதுவே இன்று ரிஸப்ஷன் அறையில் 3 போட்டோக்களுக்கு மையமாக உள்ளது. இதிலிருந்து பகவான் எழுந்து வெளி வருவதைப் பலர் கண்டுள்ளனர்.

இதுபோன்று தற்செயலாக எடுத்த போட்டோக்கள் மொத்தம் 20 அல்லது 25 ஆகும். புதுவையில் தனிமையை நாடுமுன் (1910-'26) சுமார் 10 படங்கள் எடுக்கப்பட்டன. 1926 முதல் 1950 வரை அவர் உடலும் தோற்றமும் அளவு கடந்து மாறின. வயதால் ஏற்பட்ட மாறுதலுடன், யோகத்தால் அவர் உடல் பருத்து பொன்னிறமாக மாறியது. சாதகர்கள் தாம் காணும் ஸ்ரீ அரவிந்தரும், போட்டோவிலிருப்பவரும் வெகுவாக வித்தியாசப்படுவதால், தற்சமயம் போட்டோ வேண்டும் என்று கருதினர். பகவான் இசையவில்லை.

பகவான் சமாதியடைந்தபொழுது ஆஸ்ரமப் போட்டோகிராபர்கள் உடலை போட்டோ எடுத்தனர். இப்படங்கள் அவருடைய ராஜ கம்பீரத்தையும், பொன்னொளிப் பொலிவையும் கொண்டுள்ளன. ரிசப்ஷனில் இச்சமாதிப் படங்கள் இளம் பிராயப் படத்திற்கு இருபுறமும் வைக்கப்பட்டுள்ளன.

இவை தவிர 1950இல் பகவான் சமாதியடைய 6 மாதம் முன்பு எடுத்த படத்தில் அவர் சோபாவில் உட்கார்ந்திருக்கிறார். இதுவே அவருடைய முக்கியமான படமாக அன்னையால் கருதப்பட்டது. பக்தர்களுக்கு இது முக்கியம்.

கார்ட்டே பிரெசின்

இவர் ஒரு பிரெஞ்சுக்காரர். புத்த மதத் தியானத்தை மேற்கொண்ட கலைஞர். இவர் குடும்பத்திற்குப் பாரிசில் அன்னையின் குடும்பம் பரிச்சியமானது. போட்டோ எடுப்பதைக் கலையாக்க வேண்டும். ஒரு நிகழ்ச்சியை எழுத்தால் விவரிப்பது போல் போட்டோவால் விவரிக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர். அமெரிக்கா சென்று ஒரு போட்டோ கம்பெனி ஆரம்பித்தார்.

ஸ்ரீ அரவிந்தருடைய சில நூல்களை இவர் பிரெஞ்சில் படித்துள்ளார். 1950இல் இவர் புகழ் பரவ ஆரம்பித்தது. 1950இல் இவர் இந்தியா வந்து பல மாதங்கள் தங்கியிருந்தபொழுது ஏப்ரல் 24 தரிசனத்திற்கு வரவேண்டி அனுமதி கேட்டு எழுதினார். அனுமதி பெற்றவர் வந்து அன்னையைச் சந்தித்து ஆசிரம வாழ்வைப் புகைப்பட ரிப்போர்ட்டாக எடுக்க வேண்டினார். அன்னை அனுமதித்தார். ஆனால் எந்த போட்டோவிலும் அன்னையைப் பிடிக்க அனுமதிக்கவில்லை. அவரெடுத்த பழைய போட்டோ ஆல்பத்தைப் பார்த்த அன்னை தம் கருத்தை மாற்றிக்கொண்டு போட்டோவில் தம்மையும் எடுக்கலாம் என்றார். ஆசிரம வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் கார்ட்டே பிரெசின் படமாக பல நாளிருந்து எடுத்தார்.

1948இல் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபொழுது கார்ட்டே பிரெசின் அந்நிகழ்ச்சிகளைப் போட்டோவாக எடுத்ததைப் பாராட்டி Overseas Press Club Award உலகப் பத்திரிகாசிரியர் விருதை அவருக்கு அளித்தனர்.

சென்னையிலிருந்து ஆசிரமத் தரிசனத்திற்கு வர அனுமதி பெற்றவர் வரும் வழியில் திருவண்ணாமலை சென்று மகரிஷி ரமணரை போட்டோ எடுத்தார். அன்றைய தினம் மாலை ரமணர் சமாதியானார். புதுவை வந்த போட்டோகிராபரை பிரெஞ்சு கவர்னர் அன்னைக்கு அறிமுகப்படுத்தினார்.

ஏப்ரல் 24ஆம் தேதி காலை பால்கனி தரிசனத்தைக் கார்ட்டே பிரெசின் படமாக எடுத்தார். அன்று தரிசனம் முடியும் நேரத்தில் அன்னையையும் ஸ்ரீ அரவிந்தரையும் சேர்த்து படமாக எடுக்க அனுமதி கேட்டார். அனுமதி அளித்த அன்னை அங்குள்ளபடியே படம் எடுக்க வேண்டும் என்றதால், போட்டோகிராபர் "நான் கும்மிருட்டில் படம் எடுத்தேன்" என்றார். 10 படங்கள் எடுத்தார். இன்று தரிசனப் படம் என நாம் கருதுவது அவற்றுள் ஒன்று. போதுமான வெளிச்சமில்லாததால் படங்கள் சரியாக விழவில்லை.

மறுநாள் ஏப்ரல் 25 அன்று காலை அவர் அன்னையைச் சந்தித்து "நான் சக்தியை மட்டும் எடுத்தேன். சிவனை எடுக்க வேண்டும்" எனக் கேட்டு ஸ்ரீ அரவிந்தரைப் படம் எடுக்க அனுமதி பெற்றார். இங்கும் பல்ப்களைப் போட்டு வெளிச்சமாக்க அனுமதிக்கவில்லை. ஸ்ரீ அரவிந்தரை 17 முறை பிடித்தார். அநேகமாக எல்லாப் படங்களும் சரியாக விழுந்தன.

இதைப்பற்றி அன்னை பேசும்பொழுது போட்டோகிராபர் கைகள் வெடவெட என நடுங்கின என்றார். பகவான் முன் போட்டோகிராபர் அதிக நேரம் இருக்க வேண்டியதால் அவர் உடல் நடுங்கியது. வெளியில் வந்தபொழுது அவருக்கு வேர்த்து விறுவிறுத்தது. "இதுபோன்ற மனிதரை நான் கண்டதில்லை. ஆடாமல் அசையாமல் இருந்தார்" என்றார் போட்டோகிராபர்.

போட்டோகிராபர் நெகட்டிவ்களைப் பாம்பேக்கு எடுத்துப்போய் டெவலப் செய்தார்.

போட்டோ நெகட்டிவ் எடுத்தவர்க்குரியது. போட்டோ கம்பனிகள் தங்கள் நெகட்டிவ்களை விற்பதில்லை. ஜுன் மாதம் எடுத்த போட்டோ நியூயார்க் கம்பெனியால் வினியோகம் செய்யப்பட்டது. இந்தியாவில் Illustrated Weekly of India-வும் அப்படங்களைப் பிரசுரம் செய்தது. டிசம்பரில் பகவான் சமாதி அடைந்து விட்டதால் அன்னை கார்ட்டே பிரெசினிடமிருந்து எல்லா நெகட்டிவ்களையும் விலைக்கு வாங்க விரும்பினார். போட்டோகிராபர் முலம் வினியோகிக்கப்பட்ட படங்களைப் பிரசுரித்தவர்கள் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி எழுதியவற்றை அன்னையிடம் காண்பித்தனர். அவை அன்னைக்குச் சம்மதமில்லை.

நியூயார்க் கம்பனி நெகட்டிவ்களை அன்னைக்கு விற்க (as a special case) ஒத்துக் கொண்டனர். நியூயார்க்கில் தாத்தாச்சாரி என்ற பக்தர் ஸ்ரீ அரவிந்தர் நூல்களைப் பிரசுரிக்க உதவினார். அவர் மூலம் இவை நடந்தன. அவர் போட்டோ கம்பனி கேட்ட விலையைக் குறைத்துப் பேச நினைத்தார். அன்னை "பேரம் கூடாது. கேட்ட விலைக்கு வாங்குவோம்" என சுமார் 20,000 ரூபாய் கொடுத்து நெகட்டிவ்களை வாங்கிவிட்டார்.

கார்ட்டே பிரெசினிடமிருந்து நெகட்டிவ்கள் வந்தபொழுது ஆசிரமப் போட்டோகிராபர் சென்னையிலிருந்தார். அவர் தங்கியிருந்த வீட்டிற்குப் போன் செய்து அவசரமாக அவரைப் புறப்பட்டு வரச் சொன்னார் அன்னை. அந்த நாளில் சென்னைக்கு பஸ் கிடையாது. ரயிலில்தான் வரவேண்டும். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து குளிக்காமல் அன்னையைப் பார்க்கும்படி உத்தரவு. அன்னை "உடனே ½ மணியில் இந்த நெகட்டிவ்களை பிரின்ட் செய்து வாருங்கள்" என உத்தரவிட்டார்.

கார்ட்டே பிரெசின் ஆசிரம வாழ்வைப் பிரதிபலிக்கும்படி 300 போட்டோக்கள் எடுத்தார்.

சுமார் 400க்கு மேற்பட்ட படங்களை கார்ட்டே பிரெசின் அன்னைக்கு அனுப்பி வைத்தார்.

அன்னை 40 ஆல்பம் தயார் செய்யச் சொன்னார். ஒவ்வொரு ஆல்பத்திலுள்ள ஒவ்வொரு படமும் அன்னையால் ஆசீர்வதிக்கப்பட்டது. ஓர் ஆல்பம் ரூ. 1000 வீதம் விற்றதால் அன்னை செய்த செலவுக்கு மேல் பணம் வந்துவிட்டது. பலரும் இந்த ஆல்பங்களைக் கேட்டதால் 500 ஆல்பம் தயார் செய்து ரூ. 500/-க்கு ஒன்றை விற்றனர். எல்லா ஆல்பங்களும் அன்னையால் ஆசீர்வதிக்கப்பட்டன.

பகவான் சமாதி அடைந்தபொழுது எடுத்த படங்கள்

டிசம்பர் 5ஆம் தேதி இரவு பகவான் சமாதி அடைந்தவுடன் அன்னை ஆசிரமத்திலுள்ள 5 போட்டோகிராபர்களை அழைத்து பகவான் திருவுடலைப் போட்டோ எடுக்கச் சொன்னார். 1:26க்கு காலையில் பகவான் சமாதியானார். 2½ மணிக்குப் போட்டோகிராபர்களுக்குச் சொல்லி அனுப்பினார். Flood Iamps பிரகாசமான விளக்குகளை அமைத்துப் போட்டோவை எடுத்தனர். படங்களை உடனே பிரின்ட் செய்து அன்னையிடம் அன்று காலையில் காண்பித்தனர். ஒரு படத்தை அன்னை பார்த்து மிகப் பரவசப்பட்டு அதற்கு Beatitude ஆனந்தம் எனப் பெயரிட்டார். 5000 பிரதிகள் எடுக்க உத்தரவிட்டார். ஸ்ரீ அரவிந்தர் உடல் அடக்கம் செய்யப்பட்ட அன்று அன்னை அப்போட்டோக்களை பக்தர்களுக்குத் தரிசனத்தின்போது பிரசாதமாகக் கொடுத்தார்.

Automatic writing - தானே எழுதும் கை

இதை நான் செய்யவில்லை, அன்னை தான் செய்தார் என நடக்க முடியாத பெரிய காரியம் நடந்தபொழுது நாம் நினைக்கின்றோம், பேசுகின்றோம்.

மனிதனுள் தெய்வசக்தி புகுந்து வேலை செய்வதுண்டு.

தன்னலமற்ற உணர்வு எழும்பொழுது, உலகம் துச்சம் தெய்வமே உண்மை என நம்பிக்கை எழும்பொழுது, எல்லாம் கைவிட்ட பின் உள்ளிருந்து தைரியம் உற்பத்தியாகும்பொழுது, அபார சக்தி நம்முள் பாய்ந்து செயல்படுவதுண்டு.

வறுமை மிகுந்த வீட்டில் திருமண வயது கடந்து நாளானபின் முதன்முறையாக வரன் என வீட்டிற்கு பம்பாயிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் வந்தபொழுது அப்பெண்ணிற்குத் தன்னை அழித்துத் தன் தங்கையை வாழ வைக்கும் எண்ணம் எழுந்தது; செயல்படுத்தினாள். அடுத்த சில மணி நேரத்தில் தங்கைக்கும், தனக்கும் திருமணமும், தம்பிக்கு உபநயனமும் நிச்சயமாயின. "அதன்பின் நடந்தவை ஒரு கனவு போலிருந்தது" என்றாள் அப்பெண்.

தெய்வசக்தி உடலின் எல்லாப் பகுதிகளிலும் உண்டு. உடல், உயிர், மனம், ஆத்மா என்று அவை கீழிருந்து மேலே போகும். தாழ்ந்தது ஆவி எனப்படும், உயர்ந்தது ஆத்மா எனப்படும். ஒருவர் இறந்தபின் உயிருக்குரிய ஆவி 7 நாள்வரை உடலிலிருக்கும். அதனால் உடலைத் தகனம் செய்யக்கூடாது என்கிறார் அன்னை. ஆத்மா தெய்வீகமானது. ஆவி கொடுமையானது. உயர்ந்த மனிதனுக்கும் ஆவி கடுமையாக இருக்கும்.

குறி சொல்பவர்கள் மனதுள் இவை புகுந்து பேசும். பேசுவது ஆவியா, ஆத்மாவா எனத் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது.

ஸ்ரீ அரவிந்தர் தம்பி பரீன் ஓர் அட்டையை வைத்துக் கொண்டு தானே கை எழுதுகிறதா எனப் பரிசோதித்தபொழுது, அவர் கை தானே எழுதியது. மனத்தில் எண்ணமில்லாமல், கையை வேறொரு சக்தி அசைத்து எழுத வைப்பது தெரியும். இதை automatic writing என்பதுண்டு.

ஸ்ரீ அரவிந்தர் இதைப் பரிசோதனை செய்துள்ளார்.

இச்சக்தியின் மூலம் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அப்புத்தகத்திற்கு 'யோக சாதனை' எனப் பெயர். ஸ்ரீரங்கத்திலிருந்த ரங்கசாமி அய்யங்கார் அதை வெளியிட்டார். பல முறையும் இந்நூல் வெளியிடப்பட்டது. மேலும் வாசகர்கள் இதை நாடியும், இந்நூல் வெளியிடப்படவில்லை.

தம் 'கை' எழுதிய நூல் என்றாலும் ஸ்ரீ அரவிந்தர் இந்நூலுக்கு தாம் ஆசிரியர் இல்லை என அறுதியிட்டுக் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்ட இரு முக்கியக் கருத்துகள்:

  1. ஆழ் மனத்திலிருந்து (subconscious) வரும் எண்ணங்கள் அர்த்தமற்றவை.
     
  2. அடி மனத்திலிருந்து (subliminal) வரும் எண்ணங்கள் எதிர்காலத்தைக் குறிக்கும் திறனுள்ளவை. இவற்றைப் பிரித்துப் பார்ப்பது சிரமம்.

1914இல் ஸ்ரீ அரவிந்தர் இம்முறையைப் பயின்றபொழுது எதிர்கால நிகழ்ச்சிகள் பல இங்கு தீர்க்க தரிசனமாகக் காணப்படுகின்றன. அவற்றுள் தலையானது "1956 - 57இல் ஸ்ரீ அரவிந்தர் சேவை பூர்த்தியடையும்" என்பது. 42 வருஷங்களுக்கு முன் சத்திய ஜீவியம் எங்க்ஷ 29, 1956இல் உலகில் வந்ததை இவ்வெழுத்து குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

1956இல் அன்னைக்கு இப்பழைய செய்தி நினைவில்லை போலும்.

தனிமையும், தவமும்

புதுவையில் ஸ்ரீ அரவிந்தர் 1910 முதல் 1950 வரை தங்கியிருந்தார். அதை இரு பிரிவுகளாகக் கருதலாம். 1926 வரை முதற் பகுதியாகவும், அடுத்ததை இரண்டாம் பகுதியாகவும் கருதலாம்.

முதற் பகுதியில் அவர் சங்கர செட்டி வீடு, Guest house போன்ற 4 வீடுகளில் தங்கியிருந்து தற்போது ஆசிரமக் கட்டடத்தில் உள்ள ரிசப்ஷன் அறைக்கு முடிவாக வந்தார். இதன் பின் வேறு கட்டடத்திற்குப் போகவில்லை. இதே கட்டடத்தில் இன்று ஸ்ரீ அரவிந்தர் அறை என்ற இடத்திற்கு வந்தார். அங்கு 24 வருஷம் தவமிருந்தார்.

புதுவையில் இருந்தபொழுது அவர் சுதந்திரமாக இல்லை. பிரிட்டிஷ் போலீஸ் கவனத்திற்கு உள்ளாகி இருந்தமையாலும், அவர்கள் பிரெஞ்சு சர்க்காரை அணுகி ஸ்ரீ அரவிந்தரை நாடு கடத்த முயன்றதாலும், உள்ளூர்ப் பெரிய மனிதர் ஆதரவு அவருக்கு அவசியமாக இருந்தது. ஸ்ரீ அரவிந்தருடைய சிஷ்யர்கள் கால்பந்து விளையாடுவதன் மூலம் சில உள்ளூர்ப் பிரமுகர்கள் அறிமுகமாகியிருந்தனர். அவருள் டேவிட் என்பவர் பிற்காலத்தில் புதுவை மேயரானார். இவர் பெண்ணுக்கு ஞானஸ்நானம் செய்தபொழுது ஸ்ரீ அரவிந்தர் அவ்விழாவிற்குப் போனார். திரும்பி வரும்பொழுது பார்க்கில் குதிரை வண்டியை நிறுத்தி உள்ளே போய் கொஞ்சநேரம் உட்கார்ந்திருந்தார்.

ஸ்ரீ அரவிந்தர் வீட்டை விட்டு வெளியே போனதில்லை என்பதுடன் அவர் அறையை விட்டு வெளியே வந்ததேயில்லை. ஒரு நிகழ்ச்சி அவரை அப்படி அறையிலிருந்து வெளியே வரச் செய்தது. அது ரூ. 5/- திருடிய ரொட்டிக்காரப் பையனை சாதகர்கள் அடித்தபொழுது சத்தம் கேட்டு வெளியே வந்தார்.

அன்னை புதுவையில் 10 மாதம் நேரு வீதியில் தங்கியிருந்தபொழுதும் ஸ்ரீ அரவிந்தர் அங்கு போனதாகத் தெரியவில்லை. பகவான் வெளியே வந்தவை ஒரு சில நேரங்களே. அவை:

  1. ஒரு கல்யாணத்திற்குப் போனபொழுது வெளியே போக வேண்டியிருந்தது,
     
  2. தம் தம்பியை வழி அனுப்ப ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனார்.
     
  3. மேற்சொன்ன ஞானஸ்நானத்திற்குப் போனார்.

தனித்துத் தவமிருந்தார். அவர் வேலை அட்டவணையில் தியானம் 1 மணி நேரமே குறிக்கப்பட்டுள்ளது. "நாட்டுப் பிரச்சினை, உலகப் பிரச்சினை எதையாவது தீர்க்க முனைந்தால், அவற்றிற்கு 3, 4 நாட்கள் தியானம் செய்ய வேண்டும்" என்று கூறுகிறார்.

தவம் கடுமையானது என்பதால், அதனினின்று மாற்று வேண்டும் என (as a relaxation) கடிதங்களை நிறுத்திய பின்னும் இரு சாதகர்கட்குத் தினமும் கடிதம் எழுத அனுமதி கொடுத்திருந்தார்.

கால் முறிவு ஏற்பட்ட பின் டாக்டர் சிஷ்யர்கள் அவருடன் 12 பேர் இருந்தனர். அவர்களுடன் பல சமயங்களில் உரையாடியிருக்கின்றார். அவர் எழுதிய காவியம் சாவித்திரியை அவரைத் தவிர எவரும் பார்த்ததில்லை. ஆசிரமத்தில் கவியாக இருந்தவர் ஒருவருக்கு மட்டும் எழுதிய பகுதியை அனுப்பிக் கொண்டிருந்தார். தனிமையும் தவமும் கடுமையானது. கடுமையை, பகவான் இவ்வாறு இனிமையாக மாற்றிக் கொண்டார்.

பிரிட்டிஷ் போலீஸ்

ஸ்ரீ அரவிந்தர் யோகத்தை மேற்கொண்டு, அரசியலிலிருந்து விலகி விட்டாலும், பிரிட்டிஷ் போலீஸ் அதை நம்பவில்லை. பாரதி, சீனுவாசாச்சாரி, அய்யர் போன்ற தேச பக்தர்களை ஏதாவது சாக்குச் சொல்லி பிரெஞ்ச் சர்க்கார் அரெஸ்ட் செய்ய அவர்கள் பல விதங்களிலும் பெரும்பாடு பட்டனர்.

பகவான் வெறும் மனிதரில்லை. அவர் அவதாரம். அவருக்கு ஊறு செய்ய முனைந்தால் அதன் பலன் என்ன ஆகும் என்பதை போலீஸ் எப்படி அறிய முடியும்?

சுமார் 5 முறை அவரைக் கடத்த பிரிட்டிஷ் போலீஸ் முயன்றது. முதலில் குண்டர்கள் மூலமும், பின்னர் ஊரில் பெரிய மனிதர்கள் மூலமும், இறுதியாக புதுவை மேயர் மூலமும் முயன்றது. புதுவையில் மேயர் போலீஸ் இலாக்காவுக்குத் தலைவர். ஸ்ரீ அரவிந்தரைக் கடத்த ஒத்துக்கொண்ட குண்டர்கள் அவர்கள் பெற்ற பணத்தைப் பிரித்துக் கொள்ள சண்டையிட்டு ஒருவரை ஒருவர் தாக்கி அதனால் ஏற்பட்ட கொலை பகவானை அம்முறை மீட்டது. பெரிய மனிதர் ஆரம்பித்த சிறிய காரியம் அவர் மீது திரும்பியது. மேயர் அவர் உறவினரால் அவர் வீட்டிற்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டார். பிற்காலத்தில் இம் மேயரின் மகன் அன்னைக்கு ஆதரவாக இருந்தான்.

ஒரு ஜாடியில் பொய்க் கடிதங்களை வைத்து நன்றாக மூடி வ. வே. சு. அய்யர் வீட்டுக் கிணற்றில் போலீஸ், அவர்கள் ஆட்கள் மூலம் போட்டு விட்டது. கிணற்றில் தண்ணீர் இறைத்த வேலைக்காரியின் பக்கட்டில் அது தட்டுப்பட்டது. அவள் அது குழந்தையென நினைத்து பயந்து போனாள். அதைக் கிணற்றில் மூழ்கி எடுத்து, சீனுவாசாச்சாரியும், பாரதியும் கவர்னரிடம் கொண்டு போய்க் காட்டினர். கவர்னர் போலீஸை விசாரிக்கச் சொன்னார். பாரதிக்குக் கவர்னர் மீது சற்று சந்தேகம். கவர்னருக்கு ஏற்கனவே ஏதோ விஷயம் தெரியும் போலிருக்கிறது என நினைத்தார்.

போலீஸ், அய்யர், பாரதி, சீனுவாசாச்சாரி, ஸ்ரீ அரவிந்தர் வீடுகளைச் சோதனை செய்தது. எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்தது வேறு. எந்த மயூரிசன் இந்தப் பாதகத்திற்கு அஸ்திவாரமாக இருந்தானோ, அவன் 'இந்தியா' பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் சீனுவாசாச்சாரிக்கு வெகு நாள் முன்னர் எழுதிய கடிதம் கிடைத்தது. பிரெஞ்சு போலீஸ் இக்கடிதத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டது. இக்கடிதம் சீனுவாசாச்சாரியை பிரிட்டிஷ் போலீஸ் செய்யும் தவறுகளைக் கண்டித்து எழுதும்படிக் கேட்டுக் கொள்கிறது.

அத்துடன் ஸ்ரீ அரவிந்தர் அறையைச் சோதனை செய்ய வந்த பிரெஞ்சு போலீஸ், லத்தின் புத்தகங்களை அவர் மேஜை மீது கண்டார். லத்தின் மொழி பிரெஞ்சுக்காரர்களுக்குத் தேவபாஷை. அதைக் கண்டவர் மனம் மாறினார். இந்தியர் ஒருவர் ஐரோப்பிய தேவ பாஷையைப் பயில்கின்றார் எனில் அவர் சர்க்காருக்கு எதிரியாக இருக்க முடியாது என்று கூறினார்.

கேஸ் துரோகிகள் மீது திரும்பியது. பொய் கேஸ் போட்டதால் போலீஸ் அவர்களைத் தேடியது. இந்திய மண்ணை விட்டு பிரெஞ்சு நாட்டில் புகலிடம் தேடிய பகவான் மீது போட்ட பொய் கேஸ், அவர்களையே புதுவையை விட்டு ஓடி பிரிட்டிஷ் நாட்டில் புகலிடம் தேடச் செய்தது.

பிரிட்டிஷ் சாக்கார் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க ஓராண்டு சிங்கப்பூருக்கு அனுப்பியது!

அடிப்படையில் தமக்குப் பாதுகாப்பு (physical security) இல்லை என்று அதை ஏற்படுத்த பகவான் செய்த ஆன்மீக முயற்சி 1938 வரை தொடர்ந்தது. ராஜாஜி மந்திரி சபை வந்த பின் தொந்தரவு நீங்கியது.

Archives and Research Library
கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்கும் ஆராய்ச்சி நிலையம்

சுமார் 10, 15 வருஷங்களுக்கு முன் வந்த கடிதங்கள், எழுதிய நோட்டுப் புத்தகங்கள், ரசீதுகள் ஆகியவற்றை நாம் பார்க்க நேரும்பொழுது, அதில் எழுத்து மங்கி கலைந்திருக்கும், பேர் தெரியாது, பேப்பர் கிழிந்திருக்கும். நாம் சொத்து வாங்கும்பொழுது எழுதுவதை 'பத்திரம்' என்கிறோம். அதை எழுதுவது ஸ்பெஷல் ஸ்டாம்பு பேப்பரில். அதனுள்ளும் 40 வருஷமானால் இங்க் மங்கி கலைந்திருப்பதைக் காணலாம்.

ஸ்ரீ அரவிந்தர் எழுதியவை 1910 முதல் 1914 வரை பெரும்பகுதி, இன்று 80, 90 ஆண்டுகளாகிவிட்டன. அதற்குமுன் 15, 20 வருஷமாக எழுதியவையும் உண்டு. 1914க்குப் பின் எழுதியவை குறைவு. பேப்பர் செய்யும்பொழுது அதில் ஆசிட் (acid) கலப்பதால் நாளாவட்டத்தில் வெள்ளைப் பேப்பர் மஞ்சளாகிவிடும். சில சமயங்களில் மஞ்சள் புள்ளிகள் எழுந்து பேப்பர் தூளாகிவிடும். எழுத்து தெரியாது. இங்க் மங்குவது சகஜம். இந்த மாற்றங்களுடன் எழுத்தைக் கண்டுபிடிப்பது கஷ்டம். இன்று fax message வரும் பொழுது அவற்றை எடுத்துப் பத்திரமாக வைத்தால் 6 மாதம் கழித்து எல்லா எழுத்தும் மறைந்து பேப்பர் வெள்ளையாகும். Faxக்குப் பயன்படும் இங்க் கொஞ்ச நாள்தானிருக்கும்.

இத்துறை ஒரு சயின்ஸ், ஒரு கலையும் கூட. அவசரமாக அல்லது கவனமின்றி பேப்பரை எடுத்தால் கிழிந்துவிடும். ஏற்கனவே கிழிந்த பேப்பர்கள் அதிகம். ஆசிரமக் கட்டிடத்திற்கு அருகில் அன்னை 1914 - 15 பல மாதம் தங்கியிருந்த கட்டடம் ஒன்றுளது. 1973இல் இக்கட்டிடத்தை இந்நிலையத்திற்குப் பயன்படுத்த அன்னை அனுமதித்தார். இக்கட்டிடத்தின் பகுதியான அன்னை வாழ்ந்த அறையை அப்படியே பாதுகாக்கின்றனர்.

ஸ்ரீ அரவிந்தர் தாம் எழுதியவற்றை நோட்டுப் புத்தகங்களில் எழுதினார். அவை 100க்கு மேற்பட்டவை.

பொதுவான நோட்டுகள்            66
வேதம் எழுதப்பட்டவை            53
நாடகங்கள் எழுதப்பட்டவை    21
மற்றவை                                        32
                                                          ------
                                                          172
                                                          ------

1950இல் Future poetry என்ற நூலைத் திருப்பி எழுதியபோது பகவானுக்குப் பார்வை சரியில்லை. அவர் கூற சாதகர் ஒருவரால் அது எழுதப்பட்டது. சாவித்திரி மட்டுமே அவரால் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை எழுதப்பட்ட நூல். முதலில் தாமே எழுதினார். பின்னால் அவர் கூற சாதகர் எழுதினார். தாம் சமாதியடையுமுன் - சுமார் 6 மாதத்திற்கு முன் - "நான் சாவித்திரியை முடிக்க வேண்டும்' என்று வழக்கத்திற்கு மாறாக ஒருவகை அவசரத்தை வெளியிட்டது காவியத்தை எழுதும் சாதகருக்கு வியப்பாக இருந்தது. 1950இல் அதன் அர்த்தம் அவருக்குப் புரிந்தது. சுமார் 100 ஆண்டு காலத்தில் அவரும், அன்னையும் எழுதிய கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாப்பது, பயன்படுத்துவது என்பது ஒரு பெரு முயற்சி. அதை இந்நிலையம் மேற்கொண்டுள்ளது.

ஸ்ரீ அரவிந்தருடைய குடும்பம்

தகப்பனார் கிருஷ்ணதன் கோஷ், தாயார் சுவர்ணலதா, சகோதரர்கள் மன்மோகன், பரீன், சகோதரி சரோஜினி, மனைவி மிருணாளினி ஆகியோர் கொண்டது அவர் குடும்பம்.

தகப்பனார்

இங்கிலாந்து சென்று டாக்டர் பட்டம் பெற்றவர் தகப்பனார். கோஷ் என்ற சொல்லுக்குப் புகழ் எனப் பெயர். ஆதிநாளில் கோஷ் வம்சத்தார் பஞ்சாபைச் சேர்ந்த வீரர்கள். வங்காளத்திற்கு வந்து தங்கியவர்கள் எனக் கூறப்படுகிறது. ஸ்ரீ அரவிந்தர் க்ஷத்திரியருடைய வீரத்தைப் போற்றிப் பேசும்பொழுது ஆன்மீக வெற்றியை வேதரிஷிகள் எட்டியதில் க்ஷத்திரியர் பங்கைக் குறிப்பிட்டு க்ஷத்திரியனுடைய வீரம், தைரியம் அவ்வெற்றிக்குத் தேவையாக இருந்தது என்கிறார். ஆன்மீகத் துறையிலும் வீரனுக்குரிய பங்கை விளக்கும் கருத்து இது. விஸ்வாமித்திரரைப் பற்றிப் பேசும்பொழுது இங்ஙனம் ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார்.

தாயார்

இவரைப்பற்றிய அதிக விவரங்கள் தெரியவில்லை. ஸ்ரீ அரவிந்தர் பிறந்தபொழுது இவருக்கு மனம் பேதலித்துவிட்டது. "நான் அன்போடுள்ள சூழ்நிலையில் வளர்க்கப்படவில்லை" என்று பகவான் கூறுகிறார். 7 வயதில் டார்ஜிலிங்குக்கும், இலண்டனுக்கும் அனுப்பப்பட்டதால் குடும்பம், தாய்ப்பாசம், அரவணைப்பு இல்லாமல் போய்விட்டது. ஸ்ரீ அரவிந்தருடைய புன்னகையைக் காண்பதரிது. ஏன் சிரிக்கமாட்டேன் என்கிறீர்கள்? உங்கள் சிரித்த முகத்தைப் பார்க்க நாங்கள் விரும்புகிறோம் என்று சாதகர்கள் கேட்டபொழுது தாம் வளர்க்கப்பட்ட விதத்தைக் கூறினார். வாய்விட்டு அதிர்ந்து அவர் சிரிப்பதுண்டு. ஒருவரைக் கேலிசெய்ய அப்படிச் சிரித்தால், கேலி செய்யப் படுபவருடைய மனமும் புண்படாத அளவுக்கு அச்சிரிப்பு மென்மையாக இருக்கும்.

மன்மோகன்

இவர் ஒரு கவி. சகோதரர்களைப் பற்றிக் கூறும்பொழுது "நாங்கள் பேர் போன சகோதரர்கள் இல்லை" என்கிறார். இவர்கள் ஒருவருக்கொருவர் சேர்ந்து பெரிய அளவில் செயல்படும்படி வாழ்வோ, உணர்வோ அமையவில்லை. இந்தியா திரும்பிய பின் இவர் கல்லூரிப் பேராசிரியராக இருந்தார். ஆங்கிலப் பேராசிரியர் இவர். இந்தியாவில் ஸ்ரீ அரவிந்தருடன் அதிக நெருக்கமான தொடர்பிருந்ததாகத் தெரியவில்லை.

பரீன்

இவர் புரட்சிவாதி. அரசியலில் பயங்கர வாதத்தை மேற்கொண்டவர். ஸ்ரீ அரவிந்தருடன் வங்காளத்தில் அரசியலில் வேலை செய்தவர். பாண்டியில் வந்திருந்தார். அலிப்பூர் வெடிகுண்டு கேசில் முதல் எதிரி. பெருமிதத்துடன் தாம் செய்தவற்றைப் போலீஸுக்குச் சொன்னவர். கட்டுக்கடங்காத காளை. திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் நாட்டின் பல பகுதிகளில் அலைந்து திரிந்தவர். பாட்னாவில் டீ கடை கொஞ்சநாள் வைத்திருந்தார். புதுவையிலிருக்கும்பொழுது அன்னையை, ஸ்ரீ அரவிந்தருடைய சிஷ்யையாகக் கருதி அவர் ஆன்மீகப் பெருமையை உணரத் தவறிவிட்டேன் என பிற்காலத்தில் வருந்தியவர். இவர் வங்காளத்திற்குத் திரும்பிப் போகும்பொழுதுதான் ஸ்ரீ அரவிந்தர் இவரை வழியனுப்ப ஸ்டேஷனுக்குப் போனார். பயங்கரவாத கேஸ்களில் இவருக்கு அந்தமான் சிறைத் தண்டனையும், தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

சரோஜினி

சகோதரி. அலிப்பூர் கேஸ் நடத்த ஏராளமான செலவானதால் 2½ லட்ச நிதி திரட்ட இவர் முயன்றார். 60,000 ரூபாய் வரை சேர்ந்தது என்ற விபரம் மட்டும் இவரைப் பற்றிக் கிடைத்தது.

மிருணாளினி :

மெட்ரிகுலேஷன் படித்தவர். ஸ்ரீ அரவிந்தருக்குப் பெண் வேண்டும் எனப் பத்திரிகையில் விளம்பரம் செய்ததன் மூலம் இப்பெண் அமைந்தது. அரசியல் வாழ்வில் கணவன் மனைவி அதிக நாள் சேர்ந்திருக்க முடியவில்லை. இவருக்கு பகவான் எழுதிய கடிதங்கள் பல வெளியிடப்பட்டுள்ளன. சில கேஸில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒரு கடிதத்தில் பகவான் தம் 3 இலட்சியங்களைக் குறிப்பிடுகிறார். குறிப்பிட்டவர் தாம் செய்யும் காரியங்கள் பலிக்க வேண்டும் என மனைவியைப் பிரார்த்திக்கச் சொல்கிறார். திருச்சியில் இருந்த ஓர் ஐயங்கார் ஜமீன்தாருடைய குரு ஒருவர், வடக்கேயிருந்து ஒரு யோகி வரப் போகிறார் அவரால் உலகம் மாறும். அவர் பிரகடனப்படுத்தும் 3 லட்சியங்களால் அவரை அறியலாம் எனக் கூறி அவரை உத்தரயோகி என்கிறார். ஸ்ரீ அரவிந்தர் புதுவை வந்ததைக் கேள்வியுற்ற ஐயங்கார் ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்து இவரே உத்தரயோகி என அறிகிறார். மிருணாளினி புதுவை புறப்பட்ட நேரம் இன்புளுவன்சா வந்து மரணமடைந்தார். ஸ்ரீ அரவிந்தர் புதுவையிலிருந்து மாதம் ரூ. 15/- கைச் செலவுக்காக அனுப்புவார். சுவரில் மாட்டியிருந்த மிருணாளினி படம் தரையில் விழுந்து உடைந்ததைக் கண்டு மனம் வருந்தியபொழுது இவர் மரணமடைந்த செய்தி தந்தியாக வந்தது.

ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும்

அன்னையை ஸ்ரீ அரவிந்தரின் பிரதம சிஷ்யையாகக் கருதிய நாள் உண்டு. அதனால் அன்னையை, அன்னையாக ஏற்க தயங்கியவர்களும், மறுத்தவர்களும் உண்டு. 1929வரை ஸ்ரீ அரவிந்தர் அன்னையை மீரா என்றே குறிப்பிடுவார். அன்றிருந்தவர் - பாரதி போன்றவர்கள் - அவரை மீரா என்றே அறிவர். அப்படியே பலரும் அவரை அழைத்தனர்.

இந்த ஐயத்தைப் போக்கவே 'The Mother' என்ற நூல் எழுதப்பட்டது. அந்நூல் ஆசிரமத்திலுள்ள அன்னையைக் குறிப்பிடுமா எனக் கேட்டதற்கு "ஆம்'' என ஸ்ரீ அரவிந்தர் அளித்த பதில் ஐயங்களை முழுவதுமாக அழிக்கவில்லை.

1926இல் பகவான் தனிமையை நாடும்முன் அன்னையை Mother எனக் குறிப்பிட ஆரம்பித்து M... என்றால் அது Miraவாகவே முடியும், Mother ஆனதில்லை. சாதகர்கள் மனம் விரும்பி முழுமையாக ஏற்காத ஒன்றை பகவான், 1926வரை அவர்கள் மீது திணிக்கவில்லை.

1926இல் "இன்றிலிருந்து நான் தனிமையை நாடுகிறேன். அன்னை ஆசிரமப் பொறுப்பை ஏற்பார்'' என்ற பொழுதுதான் பகவான் Mother என்று குறிப்பிட்டார். எனினும் 1941இல் ஒரு சாதகர் மீண்டும் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலாக பகவான் கீழ்க்கண்டவற்றை எழுதினார். வேறொரு சந்தர்ப்பத்தில் "நான் சத்திய ஜீவியத்தினுள் கொல்லைப்புறமாக நுழைந்தேன். அன்னை தெரு வாசல் வழியாக வந்தார்" எனக் கூறுகிறார். சாதகர் பெற்ற கடிதம் கூறுவது:

அன்னை ஸ்ரீ அரவிந்தரின் சிஷ்யை அல்லர்.
நான் பெற்ற அதே சித்தியை அன்னையும் பெற்றுள்ளார்.
அன்னைக்குச் சாதனை சிறு வயதிலேயே ஆரம்பித்து விட்டது.
சிறுபிராயத்தில் மாலையில் அவர் தியானம் செய்தபொழுது
பல குருமார்கள் அவருக்கு ஆன்மீக வழியைக் காட்டினர்.
அதில் கரிய நிறமுடைய ஆசியர் ஒருவர் உண்டு.
அன்னை அவரைக் கிருஷ்ணா எனக் கூறுவதுண்டு.
என்னைப் பார்த்தவுடன் நானே அவர் என அன்னை அறிந்தார்.
இங்கு வந்து என்னுடன் வேலை செய்வது ஆண்டவனின் சித்தம்.
புத்தமத யோகத்தை அன்னை சிறப்பாகப் பயின்றவர்.
கீதையின் யோகத்தை மிக நுணுக்கமாக அறிவார்.
இவையெல்லாம் முடிந்தபின் அவர் இந்தியா வந்தார்.
பல யோகங்கள் அன்னையில் சங்கமிக்க ஆரம்பித்தன.
இந்த சித்தி பெற்றவர், இங்கு வந்து சேர்வது இயற்கையே.
என் யோகத்திற்கு அவர் செய்த உதவி பெரியது.
தொடர்ந்தும் அதை அன்னை செய்கிறார்.
அன்னையின்றி என் யோகம் பலித்திருக்க முடியாது.
யோகத்திற்குரிய நிபந்தனைகள் இரண்டு :
அவற்றுள் ஒன்று அன்னையிடம் புகலடைதல்.

கடிதம் எழுதியவர் அடுத்த நிபந்தனை என்ன என்றார்.

பதில்: அடுத்த நிபந்தனை தெய்வீக வாழ்வை ஆர்வமாக நாடும் இதயம்.

ஒரு சமயம் அன்னை, "எனக்குப் பின் என் குழந்தைகள் என் இலட்சியத்தை உலகில் பூர்த்தி செய்வார்கள்'' என்றார்.

நண்பன் என அழைத்த தெய்வம்

கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த காலத்தில் அவரைத் தெய்வ சக்தியுள்ளவர் என அறிந்தாலும், அவரைச் சாதாரண மனிதனாகவே கருதி நடத்தினார்கள். பீமனுக்கு, கிருஷ்ணன் வயதில் சிறியவர் என்பதால், பீமனுக்குக் கிருஷ்ணன் நமஸ்காரம் செய்வார்.

ஸ்ரீ அரவிந்தர் புதுவை வருமுன்னும், வந்து ஆசிரமம் பெரியதாக வளர்ந்த பின்னும், தம்மை ஒரு மகானாகவோ, அவதார புருஷராகவோ கருதவில்லை. சாதகர்கட்கு தம்மை, குரு என்று கொண்டபோதிலும், நம் நாட்டுப் பரம்பரையில் குருவுக்குள்ள ஸ்தானத்தை அவர் ஏற்கவில்லை.

சாதகர்களை உடனுறையும் நண்பராகவே நடத்தினார். இன்று நம்மால் அதை நினைத்தும் பார்க்க முடியாது. அவருக்கு இயல்பான செயலாக அமைந்தது. அவர் இட்ட வேலையைச் செய்ய பலர் காத்திருந்தும், எவரையும் அவர் வேலையிடுவதில்லை. தாமே முன் வந்து அவருக்குரிய வேலைகளை ஒருவர் செய்தால் ஏன் நானே செய்து கொள்கிறேனே, எனக்கு வயோதிகம் வரவில்லையே என மென்மையாக உதவியை மறுத்துவிடுவார்.

அனைவர் நெஞ்சிலும் அவர் காண்பது கிருஷ்ணன். ஜெயிலில் இருந்தபோது எவரையும் கிருஷ்ணா என்றே அழைப்பாராம். எப்படி கிருஷ்ணனை வேலையிடுவது என நினைத்தாரா? கிருஷ்ணனை அப்படி நண்பனாகக் கருத முடியாது.

அவருடைய தேவைகளைக் கவனிக்க உடனிருந்தவர்கள் ஒருவரை நியமித்தார்கள். அவர் இளைஞர். இளைஞர் அப்பொறுப்பைப் பெருமிதத்துடன் ஏற்றார். ஸ்ரீ அரவிந்தர் சித்திபெற்ற மகான் எனினும், இவ்விளைஞர் பகவானை அறிஞராகவே கருதினார். வயதில் மூத்தவர். அறிவில் அளவுகடந்த பெரியவர். நாட்டுத் தலைவர். நாடே போற்றும் தலைவர். அவருக்குப் பணிவிடை செய்யக் கிடைத்த சந்தர்ப்பம் பெரியது எனக் கருதினார்.

ஒரு சமயம் ஸ்ரீ அரவிந்தர் மற்றொருவருக்கு எழுதிய கடிதத்தில் இவ்விளைஞரைக் குறிப்பிட வேண்டி "என் நண்பர்'' எனக் குறிப்பிட்டார். இளைஞருக்கு இது பொறுக்கவில்லை. மறுக்க நினைத்தார்.

நானோ சிறுவன். வயதில் நீங்கள் பெரியவர். அத்துடன் ஆன்மீகத்திலும், அறிவிலும், தேசபக்தியிலும் மிக உயர்ந்தவர். என்னை உங்கள் நண்பன் எனக் குறிப்பிடுவது பொருத்தமா எனக் கேட்டார்.

அடக்கமே உருவானவர் ஸ்ரீ அரவிந்தர். தமக்கு ஒரே ஒரு அடக்கமானவரைத் தெரியும் என்று அன்னை பகவானைக் குறிப்பிடுகிறார்.

இளைஞரைச் சமாதானப்படுத்த வேண்டி நீண்ட விளக்கம் கொடுத்தார். வயதிற்கு மரியாதை என்பது இந்தியப் பண்பு, அதுவும் தற்சமயம் மாறுகிறது. நம் இலட்சியம் உயர்ந்தது. இருவருக்கும் உள்ளது ஒரே இலட்சியம். நம் கொள்கை ஒன்று. செயலும் ஒன்று. எனவே நண்பர்கள் என்பது தவறன்று என்று இளைஞரிடம் கூறினார்.

கருடா சௌக்கியமா என்ற மனப்பான்மையுள்ள நாட்டில் தமக்குப் பணிவிடை செய்ய வந்த சிறுவனை நண்பன் எனும் அவதாரப் புருஷர் அடக்கவுணர்வுக்கு அற்புதமான எடுத்துக்காட்டு. அவரைப் போன்று வேறொருவரை அன்னை கண்டதில்லை என்பதில் வியப்பில்லை.

இரண்டு போட்டோக்கள்

ஒருவரைப்பற்றி அபிப்பிராயம் கேட்டால், அன்னை அவர் போட்டோவைப் பார்க்க வேண்டும் என்பார். போட்டோமூலம் முழு மனிதனை அன்னை அறிவார். முக்கியமாகக் கண்ணொளி ஆத்மாவின் நிலையை அறிவுறுத்தும், முகத்தின் அமைதி ஜீவனைச் சுட்டிக் காட்டும்.

ஸ்ரீ அரவிந்தர் உட்காரும்பொழுது இரண்டு பாதங்களும் முன்பின்னாக இருப்பதை அன்னை குறிப்பிடுவதுண்டு. ஒரு காலை முன்வைப்பது பகவான் பழக்கம் என்கிறார் அன்னை. ரமண மகரிஷி எப்பொழுதும் தலையை வலப் பக்கம் சாய்த்து உட்காருவார். வலப் பக்கத்திற்கு அர்த்தமுண்டு.

1907, 1908இல் எடுத்த இரு படங்களைப் பத்திரிகையாசிரியர் ஒருவர் வர்ணித்து எழுதுகிறார்.

அளவு கடந்த சக்தியுள்ள அமைதியான தோற்றம்.
அமைதி புனிதம் பெற்றுள்ளது.
அமைதியான உடல் ஆர்வம் நிறைந்த ஜாக்கிரதையுடனுள்ளது.
ஓர் கால் முன்னும், அடுத்தது பின்னுமாக இருக்கின்றன.
அழகொழுகும் விரல்கள்.
அழகு, பிடியில் வலிமை பெற்றுள்ளது. உறுதியை வெளிப்படுத்தும் உதடுகள்.
உறுதியை வெளிப்படுத்துவது உதடுகளின் அமைதி !
உணர்ச்சி வசப்பட்ட நாசி.
பார்வை காலத்தை அளக்கும் திறனுடையது.
காலத்தைக் கடந்த கண்கள்.
செறிந்த புருவமும், நிறைந்த மீசையும் முகத்தைப் பொலிவுபடுத்துகின்றன.
ஜுவாலை வீசும் சக்தி கட்டுப்பட்டுள்ள தோற்றம்.
எத்துறையாயினும் அத்துறைத் தலைவனாகும் அமைப்பு.
பெருஞ் செயல் வீரன்.
கற்பனைக் களஞ்சியம்.
உலகை ஆளும் உத்தம புருஷன்.

அடுத்த படம் சூரத் காங்கிரஸில் எடுக்கப்பட்டது. ஸ்ரீ அரவிந்தர் இதில் நிற்கிறார்.

இடக்கையில் தடி.
உலகை ஆட்டுவிக்கும் மந்திரக்கோல்போலுள்ளது.
பெரிய மாலை கழுத்தை அலங்கரிக்கிறது.
மார்பைப் போர்வை பாதி மறைக்கின்றது.
மாலையும் போர்வையும் ஆடையாகவும், அணிகலனாகவுமுள்ளன.
எதையும் பொருட்படுத்தாத பாங்கு.
ஆனால் எல்லாவற்றிலும் தீவிரமுள்ள உள்ளப்பாங்கு.
மேல் நோக்கிய பார்வை.
எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பார்வை.
உலக அபிலாஷைகள் உன்னில் பூர்த்தியடையும் என்ற மனித உருவம்.

April 24 தரிசனம்

குரு குலவாசம் என்பது நம் மரபு. சத் சங்கம் என்பது குருவைச் சுற்றி சிஷ்யர்கள் வாழும் உலகம். அரசியல் தலைவரான மகாத்மா காந்திஜி இந்தியா வந்தவுடன் சபர்மதியில் ஆசிரமம் ஆரம்பித்தார். ராமகிருஷ்ணர் அது போன்ற ஸ்தாபனம் எதையும் ஆரம்பிக்கவில்லை. தரித்திர நாராயணனுக்குச் சேவை செய்ய விவேகானந்தர் ஆரம்பித்தவை இன்றுள்ள ராமகிருஷ்ணா ஆசிரமங்கள்.

புதுவைக்குப் போ என்ற அசரீரியின் குரலுக்குப் பணிந்து பகவான் புதுவைக்கு வந்தவர் 5, 6 நண்பர்களுடன் 4, 5 வீடுகள் மாறி மாறி குடியிருந்தார். அவர்கள் வாழ்க்கையை பகவான் எந்தச் சட்டத்திற்கும் உட்படுத்தவில்லை. அனைவரும் ஆடவர்கள் என்பதால் வீட்டைப் பெருக்கிச் சுத்தமாகவும் வைப்பதில்லை. 1937இல் ராஜாஜி மந்திரி சபை சென்னையில் ஏற்பட்டவரை ஆசிரம வாயிலில் CID உட்கார்ந்திருப்பான். அவனது ரிஜஸ்டரில் கையெழுத்து போட்டு விட்டுத்தான் புதியதாக வருபவர் எவரும் உள்ளே போகலாம். ராஜாஜி இந்த அவமானத்தைச் சட்டம் போட்டு விலக்கினார். 1938இல் செல்வராஜு செட்டியார் - மேயர் - சுட்டுக் கொல்லப்படும்வரை குண்டர்கள் மூலம் பகவான் கடத்தப்படும் ஆபத்திருந்தது. அன்னை வரும்வரை பணத்திற்குச் சிரமம். அன்னை வந்த பிறகும் மந்திரவாதி பகவான் மீது கல் எறிய மந்திரம் செய்ததையும், அதனால் அவன் உயிருக்கு வந்த ஆபத்தை பகவானே விலக்கியதையும் நாமறிவோம்.

1914இல் அன்னை பகவானை முதலில் சந்தித்தது மார்ச் 29இல். ஆயிரம் ஜீவன்கள் அந்தகாரத்தில் மூழ்கியிருந்தாலும் ஸ்ரீ அரவிந்தர் உலகில் உள்ளவரை சத்தியம் ஜெயிக்கும் என்று மறுநாள் மார்ச் 30இல் அன்னை தம் டைரியில் எழுதினார்.

ஸ்ரீ அரவிந்தர் யோகம் கடுமையானது. கடுமையான தவத்தை எளிமையாக்கக் கூடியது. இறைவனின் அழைப்பின்றி ஏற்க முடியாதது. அன்னைக்கு மட்டும் அவ்வழைப்பு இருந்தது. ஒரு மகான் உள்ள இடத்தில் சிஷ்யர்கள் கூடுவது இயற்கை. சிஷ்யனுக்குத் தகுந்த குரு அமைவது பூர்வ ஜென்ம புண்ணியம். குருவுக்குத் தகுந்த சிஷ்யன் அமைவதும் அப்படியே. திருமணங்கள் தெய்வலோகத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன. திருமணங்கள் மட்டுமல்ல. குரு சிஷ்ய உறவும் அப்படியே. 12 வயது முதல் அன்னை தினமும் தம் தியானத்தில் கண்ட கிருஷ்ணா ஸ்ரீ அரவிந்தர். அதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து யோகம் செய்ய முடிந்தது.

உலகம் உற்பத்தியானதிலிருந்து ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் எல்லா முக்கியக் கட்டங்களிலும் உலகில் அவதரித்துள்ளனர். ஸ்ரீ அரவிந்தரே கிருஷ்ண பரமாத்மா. அன்னை ராதையாக இருந்தவர். முற்பிறப்புகளில் அவர்களோடிருந்து திருவுள்ளம் பூர்த்தியாகும்பொழுது தாங்களும் அவதாரப் புருஷர்களுடனிருக்க வேண்டும் என்று இடைவிடாமல் பிரார்த்தித்ததால் இன்று சாதகர்கள் எனப்படுபவர்கள் அவர்களைச் சுற்றி வாழ்ந்தனர். அந்தக் கட்டமும் முடிந்து விட்டது. இனி ஆசிரமத்தில் சேர்ந்தால் உள்ளே புதைந்துள்ள சிரமங்கள் கட்டுக்கடங்காமல் மேலெழும். உங்களால் அவற்றைச் சமாளிக்க முடியாது. இருக்குமிடத்திலேயே யோகம் செய்ய வேண்டும் என்றார் அன்னை.

ஸ்ரீ அரவிந்தருக்கு ஆசிரமம் ஆரம்பிக்க விருப்பமில்லை. அன்னை விரும்பினார். ஸ்ரீ அரவிந்தர் சம்மதித்தார். இப்பின்னணியில் ஸ்ரீ அரவிந்தர் நிலை இக்கட்டானது. 1926இல் தனிமையை நாடிய பகவான் தம் பிறந்த நாளிலும், அன்னை ஜென்ம தினத்திலும், தாம் சித்தி பெற்ற நாளிலும் தரிசனம் தந்தார். அவற்றுள் நவம்பர் 24க்குப் பின் பிப்ரவரி 21உம், அடுத்து ஆகஸ்ட் 15உம் அமைந்தன. பிப்ரவரி 21க்கும், ஆகஸ்ட் 15க்கும் இடையே வெகுநாளிருப்பதால் சாதகர்கள் பொறுமையிழந்து நடுவில் தரிசனம் கேட்டனர்

தரிசனம் தந்தாலும் பகவான் மீது மற்ற நேரங்களில்
சாதகர் பார்வை படாமல் காத்து வந்தார் அன்னை.

1938இல் ஏற்பட்ட விபத்தால் 12 சிஷ்யர்கள் பகவானுக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தபொழுது, இதர சாதகர்கள் பிப்ரவரி 21க்கும், ஆகஸ்ட் 15க்கும் இடையில் தரிசனம் தேவை என்று விரும்பினர். அன்னையும், பகவானும் ஹிட்லரைத் தோற்கடிக்க யோக சக்தியைப் பயன்படுத்தியபொழுது பல சாதகர்கள் ஹிட்லர் ஜெயிக்க விரும்பினார்கள். பகவான் இக்கட்டான நிலையில் இருந்தபொழுது அன்னை முடிவாக புதுவை புகுந்த நாளான

April 24ஐத் தரிசன நாளாகக் குறிப்பிட்டார்.

ஸ்ரீ அரவிந்தர் தங்கிய இடங்கள்

கப்பலிலிருந்து இறங்கி வந்த ஸ்ரீ அரவிந்தர் சங்கரச் செட்டியார் வீட்டில் தங்கினார். ஆறு மாதம் இங்கிருந்தார். இங்கிருந்தபொழுதுதான் 23 நாள் உண்ணாவிரதமிருந்தார். சாப்பிடவில்லை எனினும் தெம்பு குறையவில்லை. எழுதவும், நடக்கவும் முடிந்தது என்கிறார். அத்துடன் உண்ணாவிரதம் முடிந்து சிறிது சிறிதாகச் சாப்பாட்டை அதிகரிப்பது முறை. அப்படியின்றி என்றும்போல் வழக்கமாக முதற் சாப்பாட்டை சாப்பிட்டார்.

யோகத்தால் விரதம் ஸ்ரீ அரவிந்தரைப் பாதிக்கவில்லை. எலும்பினுள் உள்ள சத்தை உடல் விரதத்தின்போது எடுத்துக் கொண்டது. அதைச் சரி செய்ய முடியவில்லை என்றார். சங்கர செட்டியார் வீட்டில் ஸ்ரீ அரவிந்தர் வாடகை தரவில்லை.

இங்கிருந்து மாறி சிறிய வாடகை வீட்டிற்குப் போனார். இது சுந்தரச் செட்டி வீடு. உடனிருந்தவர்கள் சமையலை மாறி மாறிச் செய்தார்கள். நளினி, மோனி, பிஜய் ஆகியவர் இருந்தனர். பிஜய் சமையலில் தேர்ந்தவர் என்பதால் காய்கறிகளை அவர் சமைப்பார். ஒருவர் சாதம் வடிப்பார். அடுத்தவர் பருப்பு சமைப்பார்.

புதுவை வந்து ஒரு வருஷமாயிற்று. மீண்டும் வீடு மாறினார்கள். இதுவும் செட்டியார் வீடு. ராகவ செட்டியார் வீட்டுக்காரர். சுமார் இரண்டு வருஷம் இங்கிருந்தார்கள். இந்த வீட்டிலிருந்தபொழுதுதான் குண்டர்கள் ஸ்ரீ அரவிந்தரைக் கடத்த முயன்றார்கள். அது முடியவில்லை. அவர்களுக்குள் சண்டை வந்து கொலை நடந்தது.

சந்திரநாகூரிலிருந்து மோதிலால்ராய் பணம் அனுப்புவார். அதுவே இவர்களுக்கு உதவி. சில சமயங்களில் ஸ்ரீ அரவிந்தருடைய வீடு Garden House பணம் தரும். ஒரு முறை அப்பணம் வராதபொழுது, "என்ன ஆயிற்று?'' என்று ஸ்ரீ அரவிந்தர் விசாரித்தார். ராகவ செட்டியார் வீட்டிலிருக்கும் பொழுது வாழ்க்கை மிகச் சிரமமாக இருந்தது. வறுமையின் சின்னங்கள் வெளிப்பட்டன.

  • ஒரே துண்டை 5 பேர் துவட்டிக்கொள்ளப் பயன்படுத்தினர்.
     
  • ஒரு மெழுகுவர்த்தியும், ஒரு மண்ணெண்ணெய் விளக்குமே இருந்தன.
     
  • இரண்டு கப் டீ போடுவார்கள். ஒரு கப் ஸ்ரீ அரவிந்தருக்கு. அடுத்த ஒரு கப்பை 4 பேர் சாப்பிட வேண்டும்.
     
  • வெறும் சாதத்தில் மிளகாயைப் பிசைந்து ஒரு நாள் சாப்பிட்டனர்.

ஆனால் ஸ்ரீ அரவிந்தருடன் இருந்தவர்கள் அளவு கடந்து சந்தோஷமாக, சொர்க்கத்திலிருப்பது போலிருந்தனர். கிரேக்க மொழி, லத்தீன், பிரெஞ்சு, இத்தாலியன் ஆகிய மொழிகளை ஸ்ரீ அரவிந்தர் மற்றவர்க்குப் பயிற்றுவித்தார். சிரமம் இருப்பதை எவரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை.

திடீரென கொஞ்சம் பணம் வந்தது. அதில் புத்தகம் வாங்க ரூ. 10/- ஒதுக்கப்பட்டு இரண்டு வால்யூம் ரிக் வேதம் வாங்கினார்கள். ஆங்கில இலக்கிய நூல்களையும் வாங்கினார்கள்.

இதைவிடச் சிறிய வீட்டிற்கு இங்கிருந்து சென்றார்கள். அதற்கு மிஷன் வீடு எனப் பெயர். முதன்முதலாகப் பெரிய வீட்டிற்குப் போனது அடுத்த வீடு. அதை Guest house என்பார்கள். அதை இன்றும் நன்றாகப் பாதுகாக்கின்றார்கள். பாரதி, ஸ்ரீ அரவிந்தரை அடிக்கடி வந்து சந்தித்தது இந்த வீட்டில் தான்.

C.I.D தன் இரகஸ்யத்தை வெளியிட்டு மன்னிப்புக் கேட்டதும் இந்த வீட்டில்தான். 5 பெரிய மனிதர்கள் கையெழுத்து பிரெஞ்சு சர்க்கார் கேட்டபொழுது அது கிடைத்து, பாரதி "ஜெயமுண்டு பயமில்லை மனமே'' என்று பாடியதும் இவ்வீட்டில் தான்.

முடிவாக இன்று ஆசிரமம் என நாம் அறியும் வீட்டிற்கு ஸ்ரீ அரவிந்தர் வந்து சேர்ந்தார்.

கிருஷ்ணா

சிவ, சிவா, ராம, ராமா என நாம் பேச்சோடு சொல்வது போல் Jesus என கிருஸ்துவர்கள் சொல்வதுண்டு. நம்மிடம் ஒருவர் பேசும்பொழுது, ஆமாம், சரி, நல்லது என்று கூறுவதற்குப் பதிலாக வீரசைவர்கள் சிவா எனவும், தீவிர வைஷ்ணவர்கள் ராமா எனவும் கூறுவார்கள். நாளடைவில் இந்த நல்ல பழக்கம் நடைமுறைப் பழக்கமாகி, பிறர் தவறாகப் பேசும்பொழுது அதற்கு மாற்றாக சிவசிவா என்று சொல்லும் பழக்கம் ஏற்பட்டு, நல்லது குறைந்தும் மற்றது பரவியும் உள்ளது.

இரு தீவிர வைஷ்ணவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசும்பொழுது சரி என்பதற்குப் பதிலாக "அடியேன்'' என்பார்கள். வைஷ்ணவ மத சரணாகதி தத்துவம் முதிர்ந்து நான் "அடியார்க்கும் அடியேன்'' என்றாகி நடைமுறைப்படுத்தியதாகும்.

நம் நாட்டுப் பழக்கம் அயல் நாட்டுக்குப் பரவியது. கிருஷ்ணா Consciousness என்ற இயக்கம் இதை ஏற்றுப் பின்பற்றுகிறது. இருவர் சந்தித்தால் ஹரே கிருஷ்ணா என்பதும், பேசும் பொழுது ஆமாம் என்பதற்குப் பதிலாக கிருஷ்ணா என்பதும் இவ்வியக்கத்தைச் சேர்ந்த அயல் நாட்டாரிடம் காணப்படுகிறது.

அப்பூதி அடிகள் அப்பரைத் தெய்வமாக வணங்க ஆரம்பித்து அவர் பெயரான திருநாவுக்கரசு என்பதைத் தம் மகனுக்குச் சூட்டினார். அடுத்த பிள்ளை பிறந்தபொழுது அவரால் வேறு பெயரை நினைக்க முடியவில்லை. அவனையும் திருநாவுக்கரசு என்றார். மூன்றாம் பிள்ளைக்கும் திருநாவுக்கரசு என்றே பெயரிட்டார். மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என அவை வழங்கின. மனம் ஒன்றிப் போனால், வேறெதையும் அதனால் நினைக்க முடியாது என்பதின் சின்னங்கள் இவை.

பக்தர் ஒருவர் விபத்தில் மாட்டி பலத்த அடிபட்டு ஆஸ்பத்திரியிலிருந்து வந்து வீட்டில் தங்கினார். அவருக்குப் பணிவிடை செய்ய ஒரு வேலைக்காரி அமர்ந்தாள். உடல் குணமாகி பக்தர் போனபின் வேலைக்காரி எதற்கெடுத்தாலும் மதர் என்பாள். உட்கார்ந்தால், "ஓ மதர்'' என்று உட்காருவாள். யாராவது கூப்பிட்டால், "மதர், வரேன்'', என்பாள். ஒரு மாதம் பக்தருக்கு வேலை செய்த பொழுது பக்தர் அடிக்கடி "மதர்'' என்பதைக் கேட்டவள் தானும், "மதர் மதர்'' என ஆரம்பித்துவிட்டாள். வலி அதிகமானால் முனகுவதற்குப் பதிலாக பக்தர் "மதர்' என்பார். தாங்க முடியவில்லை என்ற பொழுது "ஐய்யோ' என அலறுவதற்குப் பதிலாக "மதர்' என உரக்கச் சொல்லுவார். புரண்டு படுத்தால் "மதர்' என்பார். அப்பழக்கம் பக்தருக்கு வேலை செய்தவளுக்கு வந்துவிட்டது. நாட்டில் பக்தியும், பண்பும் பரவும் வகை இது.

ஸ்ரீ அரவிந்தர் ஜெயிலில் கைதிகள் நெஞ்சில் கிருஷ்ணனைக் கண்டார். பிறகு கைதியையே கிருஷ்ணனாக உணர்ந்தார். அப்படியே அவருக்கு அனைவரும் காட்சியளித்தனர்.

பார்ப்பவரை எல்லாம் ஸ்ரீ அரவிந்தர் கிருஷ்ணா என அழைக்க ஆரம்பித்தார்.

பெர்னார்ட்ஷா எதைப்பற்றிப் பேசினாலும் மறக்க முடியாதபடி பேசுவார். மகாத்மா காந்தியைச் சுட்ட பொழுது, "நல்லவனாக இருப்பது ஆபத்து'' என்று இச்செய்தி கூறுகிறது என்றார். ஒருவருக்குப் பல்வலியிருந்தால் அவர் பார்ப்பவரையெல்லாம், "இவருக்குப் பல்வலி இல்லை'' போலிருக்கிறது என்று பல்வலி கோணத்தில் பார்ப்பார் என்கிறார் ஷா.

பொதுமக்கள் சிவா, ராமா என்பது கடவுளின் நாமத்தை உச்சரிப்பதாகும்.

ஸ்ரீ அரவிந்தர் கிருஷ்ணா என்பது அவர் அந்நேரம் எதிரேயுள்ளவரை கிருஷ்ணனாகக் காண்பதாகும்.

வாயிற்படிகள்

தீலீப்குமார் உயரமானவர். அவர் தலை வாசற்படியில் இடித்துக் கொண்டது. அது பற்றி ஸ்ரீ அரவிந்தருக்கு எழுதினார். ஆசிரம இன்ஜினீயர் குள்ளமானவர். இக்கடிதத்திற்குப் பதில் எழுதிய ஸ்ரீ அரவிந்தர் தத்துவத்தையும் இன்ஜினீயரின் உயரத்தையும் நகைச்சுவையுடன் கலந்து எழுதினார்.

குள்ளமான இன்ஜினீயர் தம் உயரத்திற்கேற்பக் கட்டிவிட்டார் போலும். அதை விட உயர்ந்த தலைகளை மறந்து விட்டாரோ? எனக் குறிப்பிட்டார்.

வலியை வலியாகவும் அனுபவிக்கலாம், ஆனந்தமாகவும் மாற்றலாம் என்பது ஆன்மீகத் தத்துவம். தாம் ஜெயிலிலிருந்தபொழுது பயங்கரச் சிவந்த எறும்புகள் அவருடலில் படை எடுத்துக் கடித்த வேதனையைச் சொல்லி, அதைத் தம்மால் ஆனந்தமாக மாற்ற முடிந்ததெனவும், அப்பொழுதுதான் வலியை ஆனந்தமாக மாற்ற முடியும் என்று தாம் கண்டதாகவும் கூறுகிறார்.

ஆண்டவன் அன்புடன் அளிக்கும் ஆனந்தத்தை மனிதன் அறியாமையால் வலியாக மாற்றுகிறான் என்ற தத்துவத்தைக் குறிப்பிட்டு ஆனந்தத்தை வலியாகவும் மாற்றலாம் என்று மிருதுவாகக் கூறுகிறார்.

"தரிசனம் வரை நான் மேலே வந்து உங்களைத் தரிசிக்க முடியாதல்லவா? இந்தக் கற்றுக்குட்டியை ஏன் நீங்கள் என் இருப்பிடம் வந்து என் மனச்சுமைகளினின்று காப்பாற்றக் கூடாது?'' என்று உரிமையும் நகைச்சுவையும் கலந்து கேட்கிறார், அவருக்கு தினமும் கடிதம் எழுத உரிமையுள்ள சாதகர். நம் நாட்டு மரபுப்படி எந்த சிஷ்யரும் குருவுக்கு இது போல் எழுத நினைப்பதில்லை. ஸ்ரீ அரவிந்தர் சாதகர்களைப் பணியும் சிஷ்யர்களாக நடத்தவில்லை. சம உரிமையுள்ள நண்பர்களாக நடத்தினார்.

பதிலாக ஸ்ரீ அரவிந்தர் எழுதுகிறார்,

ஏன் காரணமில்லாமல் சோக தேவதையைத் தழுவ வேண்டும்? என்றும்போல் சந்தோஷமாக இருக்கக் கூடாதா? சிரித்தால் உடல் பருக்கும். நாட்டியமாடினால் உடல் மெலியும். சிரித்துப் பருமனாவதும், நடனமாடி இளைப்பதும் நீங்கள் எதிர்பார்ப்பதை விட உயர்ந்த முறை.

கனவில் தரிசனம்

வடநாட்டு பக்தர் ஒருவருக்கு நெடுநாளைய விருப்பம் ஆசிரமம் வர வேண்டும் என்பது. அது பூர்த்தியாகாதபொழுது ஒரு நாள் கனவில் கடலிலிருந்து ஸ்ரீ அரவிந்தர் தேஜோமயமாய் எழுவதைக் கண்டார். கனவில் தரிசனம் பூர்த்தியானதாக அவர் நினைத்தார். அன்று பகவான் சமாதியானதைப் பிறகு பேப்பரில் கண்டார்.

கனவில் காணும் தரிசனம் சூட்சும உலகுக்குரிய தரிசனமாகும். பழம்பெருந் தேசபக்தர் ஒருவர். அவருக்கும் ஸ்ரீ அரவிந்தருக்கும் தொடர்பில்லை. நினைவிலும் அவர் வருவதில்லை. இவர் சேலத்தைச் சார்ந்த எளியவர். கனவில் ஸ்ரீ அரவிந்தர் தோன்றியபொழுது அவருக்கு விந்தையாக இருந்தது. காட்சி ஜோதிமயமாக இருந்ததால், உடனே பாண்டி சென்று கனவைப் பூர்த்தி செய்யலாம் எனக் கருதினார். கனவுக்குரிய சக்தி அவரை உந்துவதை உணர்ந்தார். மனம் பிரயாணத்தை ஏற்றது. காலையில் ரேடியோ செய்தி அவர் கனவின் கருத்தை அவருக்கு வெளிப்படுத்தியது. ஸ்ரீ அரவிந்தர் சமாதியான செய்தி ஒலிபரப்பப்பட்டது. இவர் வந்து உடலைத் தரிசனம் செய்து திரும்பினார். அடுத்த முறையாக 1973இல் வந்தார். தற்செயலாகப் புதுவை வந்ததாகக் கூறினார். பரவசப்பட்டார். ஏதும் அறியார். அவரால் எதையும் பேசமுடியவில்லை; கேட்க முடியவில்லை. அவர் நிலையைப் பார்த்தால் அவரால் எதையும் நினைக்கவும் முடியவில்லை எனத் தேன்றியது.

ஸ்ரீ அரவிந்தர் உடல் பார்வைக்கிருந்தபொழுது ஒரு சாதகி அவர் ஆசிரமத்தின் நடுவேயுள்ள மரத்தில் சாய்ந்திருப்பதாகக் காட்சியில் கண்டார். புதுவை கவர்னர் ஸ்ரீ அரவிந்தரைக் கனவில் பார்த்தார். ரமண மகரிஷி கனவில் வந்து ஒருவருக்குத் தீட்சை அளித்தார்.

பட்டினத்தார் கனவில் ஒரு குழந்தை மரத்தில் ஏணைகட்டி தூங்க வைப்பதைப் பார்த்தார். பட்டினத்தாருக்குப் பிள்ளை வரம் கனவில் இப்படித்தான் என்று கருதி அக்குழந்தையைத் தேடிப் போனார். கனவில் கண்டதை நிஜத்தில் கண்டு பிள்ளையைக் கேட்டுப் பெற்று வளர்த்தார். இப்பிள்ளைதான் அவருக்கு ஞானோதயம் அளித்தது. தங்கமும், தவிடும் ஒன்று என உணர்த்தவே இறைவன் இப்பிள்ளை உருவாய் வந்தான் என அறிந்து பட்டினத்தார் துறவறம் பூண்டார்.

அன்னை சத்திய ஜீவியக் கப்பலைத் தம் காட்சியில் கண்டதை மிக விரிவாக எழுதியுள்ளார். அக்கப்பலுக்கு அன்னையே தலைவி! அதில் உள்ளவர்கள் மிக உயரமாகவும், இளம் சிவப்பாகவுமிருந்தார்கள். அவர்கள் நினைத்தது நினைத்த மாத்திரத்தில் நடந்தது என்கிறார் அன்னை.

மனம் மாறுவது நல்லது

சாதகர்களும், ஆசிரமத்தை அறிந்தவர்களும் பணம் பாழாகிறது, கண்கொண்டு பார்க்க முடியவில்லை, இப்படி அழிச்சாட்டியம் செய்வது சரியில்லை என அடிக்கடி சொல்வார்கள். அவர்களை நோக்கி அன்னை, நான் அருளை மழையாகப் பொழிகிறேன். அத்தனையும் விரயமாவது யார் கண்ணுக்கும் தெரியவில்லையே எனக் குறைப்படுவார்.

பணத்தை விரயம் செய்தால் வருவது நின்றுவிடும்.
பணத்தைத் தாராளமாக நல்ல செலவு செய்தால்
அபரிமிதமாக வரும்,

என்றவற்றை அன்னை கூறியுள்ளார். 1972இல் ஸ்ரீ அரவிந்தர் நூற்றாண்டு வந்தது. அப்பொழுது ஸ்ரீ அரவிந்தர் அறையில் தரையைப் புதுப்பிக்கலாம் என ஆசிரம இன்ஜினீயரிங் டிபார்ட்மெண்ட் கூறியது. அதற்குரிய செலவை டிபார்ட்மெண்ட் தம் பட்ஜெட்டிலிருந்து செய்யலாம். முடியவில்லை எனில் அன்னையைக் கேட்கலாம். அன்னை எஸ்ட்டிமேட் போடச் சொன்னார்கள். ரூ.45,000 என எஸ்ட்டிமேட் வந்தது. டிபார்ட்மெண்ட், அன்னை அந்தச் செலவை ஏற்கவேண்டுமென எதிர்பார்த்தனர்.

ஓர் அறைக்கு அச்செலவு அந்த வருஷம் மிக அதிகம் என அன்னை கருதினார். சற்று அதிர்ச்சியும் அடைந்தார். தரையைப் புதுப்பிப்பதற்குப் பதிலாக மனதைப் புதுப்பிப்பது நல்லது என்று அவ்வெண்ணத்தைக் கைவிட்டார். அன்னை அனாவசிய செலவை ஏற்கமாட்டார்.

ஜனவரி 1ஆம் தேதி அவரை நாடி ஒரு பக்தர் வந்தார். இவர் தொழில் அதிபர். பெரும் பணம் படைத்தவர். அன்னையை ஒரு வருஷமாக அறிவார். பொதுவாகக் கருமி. அன்னைக்குக் காணிக்கை என அவர் கொடுப்பதில்லை. அவரிடம் எல்லாச் சலுகைகளையும் கேட்டுப் பெறுவார். புது வருஷம் பிறந்தது. 6 இலட்சம் ரூபாய் காணிக்கையாகக் கொண்டு வந்தார். அதே வருஷம் ஆகஸ்ட்டில் மீண்டும் 9 இலட்சம் காணிக்கை அளித்தார். விரயமான செலவை அன்னை தவிர்த்ததால், கருமியும் கர்ணனாகிறார்.

ஆடம்பரமாகவோ, அதிகபட்சமாகவோ செலவு செய்வதைவிட மனம் மாறுதல் அன்னைக்குகந்தது.

அன்னை நேரடியாக ஏற்கும் செலவை அதிகம் என நாம் நினைப்பது நம் அறியாமை.

கல்யாணச் சிரத்தை

சிரத்தை எனில் நம்பிக்கை. அடுத்த கட்டத்தில் கண்ணுக்குத் தெரிந்த நஷ்டம், கஷ்டத்தை மீறி எதிர்காலத்தில் வர இருக்கும் - கண்ணுக்குத் தெரியாத - நல்லதை நம்பும் மனம் கல்யாணச் சிரத்தையுடையது என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

இக்கண்ணோட்டத்துடன் அன்பர்கள் தங்கள் வாழ்க்கையைக் கவனித்தால் இதன் தத்துவம் விளங்கும். அதற்கு உதவியாக, பகவான் வாழ்வில் ஏற்பட்ட இன்னல்களையும், பிற்காலத்தில் அதனால் ஏற்பட்ட நல்லவற்றையும் கருதினால், நம் கடந்தகால வாழ்வு கல்யாணச் சிரத்தையின் மூலம் விளங்கும். இவை அன்னையின் கருத்தை விளக்கும்.

குப்புற வீழ்ந்தாலும், அதுவும் அருளேயாகும்,

என அன்னை கூறுவதன் ஆன்மீக அர்த்தம் விளங்கும்.

தம் ஒரு மாத வருமானம், 3 ஆண்டுகட்குமுன் ஒரு நாளைய வருமானமாகியபொழுது பக்தர் தாம் பட்ட அவதிகளை நினைத்து அன்று பொறாமையால் என்னை அநியாயமாக தொந்தரவு செய்திராவிட்டால், இன்று நான் இதைப் பெற்றிருக்க முடியாது என்று நினைத்தபொழுதும் மனம் அவதியை நினைத்துப் பொருமுகிறது. கல்யாணச் சிரத்தையை நினைத்துப் பூரிக்கவில்லை. அன்று எதிரிகள் செய்த வேலைக்கு அவர்கள் பட்ட அவதி, தமக்குக் கிடைத்த வெற்றியே என மனத்திற்கு இன்றும் திருப்தியாக இருக்கிறது. மனம் அத்தகையது.

பலனைப் பெற்ற பிறகு, ஞானத்தை - கல்யாணச் சிரத்தையின் சிறப்பை - அடைய மனம் எதிரியின் தோல்வியில் பெருமை அடையக் கூடாது என்பது சட்டம்.

இந்தச் சட்டப்படி, பகவான் வாழ்வை நினைக்கவே பயமாக இருக்கிறது. எப்படி நம் சொந்த வாழ்வில் நடந்ததைப் புரிந்து கொள்வது? அலிப்பூர் கேசில் வக்கீலிடம் பேசாதே என அசரீரி கூறியது, குடிப்பதற்கும் கால் கழுவுவதற்கும் ஒரே பாத்திரம் ஜெயிலில் கொடுத்தது; சிவப்பு எறும்புகள் உடலெல்லாம் கடித்தது; புதுவைக்குப் போ எனக் குரல் கேட்டது; சுதந்திரம் வந்துவிட்டது என்ற குரல்; எலும்பு முறிந்தது; ஆப்பிரிக்காவுக்கு அனுப்ப சர்க்கார் முயன்றது; மிளகாய்வற்றலைச் சாப்பிட்டது; கல் விழுந்தது; காங்கிரஸ் அவர் ஆலோசனையை மறுத்தது; கல்கத்தா பஞ்சத்தாலும், கலவரத்தாலும் லட்சக்கணக்கான உயிரை இழந்தது; சாதகர்கள் ஹிட்லர் வெற்றியை நாடியது; தியானக் கூட்டத்தில் CID வந்து மறைந்திருந்தது; உடல் வெந்தது ஆகியவற்றை எப்படி கல்யாணச் சிரத்தையுடன் மனிதன் ஏற்பது?

பகவான் அவற்றைப் பொறுத்துக் கொண்டார். அதன் பலனாக அவர் வாழ்வில் பல விளைவுகளைக் காண முடிந்தது. வக்கீலுக்கு, கேஸ் விஷயங்களைச் சொல்ல வேண்டாம் என்பதை ஏற்றதன் விளைவு கேஸ் ஜெயித்தது. ஒரே பாத்திரத்தை உபயோகப்படுத்துவது கஷ்டம், மனம் ஏற்காது. அதை அப்பொழுது ஏற்றுக் கொண்டார். அவருடைய யோகம் மனம் ஏற்காததில் பிரம்மத்தைக் காண்பது. அது சித்திப்பதற்காக ஜெயில் கொடுத்த அனுபவம் அது. சிவந்த எறும்புகள் கடித்தால் நெருப்பால் சுட்டது போலிருக்கும், அதை அவர் ஆனந்தமாக மாற்றினார். ஆனந்தத்தை வலியாக மாற்றுபவன் மனிதன். வலியை ஆனந்தமாக மாற்றுவது யோகம்.

பேயன் பழம்

ஒரு சாதகர் ஸ்ரீ அரவிந்தருக்கு எழுதி என் நெஞ்சில் உங்கள் கரிய உருவத்தைக் கண்டேன், அதன் பொருள் என்ன? எனக் கேட்டார்.

"நீங்கள் கண்டது என்னுள் உள்ள சிவபெருமான்'' என ஸ்ரீ அரவிந்தர் பதிலுரைத்தார்.

சிவனையும், கிருஷ்ணனையும் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் உடலில் வந்து தங்கி சத்திய ஜீவியத்தை அழைக்குமாறு வேண்டினார். சிவன் மறுத்துவிட்டார். சத்திய ஜீவியம் வந்தபின் தாம் வருவதாகக் கூறினார். கிருஷ்ணபரமாத்மா ஒத்துக்கொண்டார். ஸ்ரீ அரவிந்தர் உடலில் அவர் நுழைந்து கரைவதை தாம் கண்டதாக அன்னை கூறினார். ஸ்ரீ அரவிந்தரிடம் இதைக் கூறியபொழுது, "கடவுள்கள் என் வேலைக்குத் தடை" என்றார்.

ஆசிரமம் புண்ணியஸ்தலம், அம்மண்ணின் விசேஷம் சூட்சுமப் பார்வையுள்ளவர்க்குத் தெரியும். தரையிலிருந்து கொஞ்சம் மண் எடுத்து வலிக்கும் தலையில் பூசினால் தலைவலி போகும். சமாதிக்கு அடியே நீருற்றுள்ளது. அங்கு தக்காளியும், பேயன் வாழைப்பழமும் பயிரிட்டனர். அன்னை பேயன் பழங்களைப் பார்த்து, இது உடலுக்கு நல்லது என்றதுடன் அவற்றை

"இவை ஸ்ரீ அரவிந்தர் வாழைப்பழம்"

எனப் பெயரிட்டார். ஆசிரமத்திற்குக் காய்கறி வாங்குபவர் அங்கு பயிரிட்ட தக்காளிப் பழங்களைக் கண்டு, "இவை போன்ற சுவையான தக்காளிகளை நான் கண்டதில்லை'' என்றார்.

வாழைப்பழத்தை நாம் மொந்தன், பேயன், பூவன் பழங்கள் எனக் கூறுகிறோம். இம்மூன்று பழங்களும் திருமூர்த்திகளைச் சார்ந்தவை.

  • முகந்தனை நாம் மொந்தன் எனவும்
     
  • சிவனைப் பேயன் எனவும்
     
  • பூவில் (தாமரையில்) உள்ள பிரம்மாவை பூவன் எனவும் கூறுகிறோம்.

அன்னை, ஸ்ரீ அரவிந்தர் வாழைப்பழம் என்று பேயன் பழத்தைக் குறிப்பிட்டது நம் பரம்பரைக் கருத்தை ஒட்டியுள்ளது.

ஏன் அன்னை வரவில்லை?

வங்காளவிரிகுடா, அரபிக்கடல், இந்துமகா சமுத்திரம் என நாம் மூன்று பிரிவாகச் சொன்னாலும், கடல் ஒன்றே, பெயர்கள் வேறு. நாமிட்டது பெயர். இயற்கையில் அப்பிரிவு இல்லை.

அன்னை, ஸ்ரீ அரவிந்தர் என நாம் பிரித்துக் கூறுகிறோம். அவர்கள் இரு வேறு நபர்கள் என்பது உண்மையானாலும் அவர்களிருவரும் ஒரே சக்தியைத் தாங்கியுள்ளனர் என்பதைப் பலமுறை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஸ்ரீ அரவிந்தர் சமாதியான சமயம் ஒரு குடும்பம் வந்தது. ஒரு சிறு குழந்தையும் அவர்களுடனிருந்தது. அக்குழந்தையை ஆசிரமப் பள்ளியில் சேர்த்தனர். ஸ்ரீ அரவிந்தரைத் தரிசிக்கும் பாக்கியத்தை இழந்துவிட்டதை அக்குழந்தையால் மறக்கமுடியவில்லை. தம் 15ஆம் வயதில் அன்னை தரிசனத்திற்கு அப்பெண் கூட்டத்தில் வந்து நின்றாள். அன்னை உள்ளிருந்து terrace balcony பால்கனிக்கு வந்தார். தரிசனம் தந்தார். தரிசனம் முடிந்தது. உடனிருந்த பெற்றோரை அச்சிறுமி, "ஏன் அன்னை தரிசனத்திற்கு இன்று வரவில்லை?'' எனக் கேட்டாள். மேலும், "நான் தரிசனத்தில் ஸ்ரீ அரவிந்தரைத் தாடியில்லாமல் பார்த்தேன்'' எனவும் கூறினாள். பெற்றோர் இவ்விவரத்தை அன்னைக்கு எழுதிக் கேட்டனர்.

தரிசனத்தின்போது ஸ்ரீ அரவிந்தர் என் பக்கத்தில் வந்து நின்றார் என அன்னை பதில் எழுதினார். அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும் ஒருவரே, வேறில்லை. ஈருடலும் ஒரு சக்தியுமாவர் அவர். கீழ்க்கண்டவை அன்பர் அனுபவங்கள்.

  • தரிசனத்தில் அன்னை முகம் மாறி ஸ்ரீ அரவிந்தரானது.
     
  • தரிசனச் சமயம் அவர்கள் இருவர் இருந்த இடத்தில் பேரொளி மட்டுமே தெரிந்தது. அவர்கள் உருவங்கள் பக்தர் கண்ணுக்குப் புலப்படவில்லை.
     
  • அன்னைக்கு 90 வயது ஆனபொழுது தரிசனத்திற்கு முதல்தரம் வந்தவருக்கு அன்னை 30 வயதாகத் தெரிந்தார். 90 வயது அன்னையை அவர் காணவேயில்லை. போட்டோ கேட்டார். போட்டோவில் 90 வயதான அன்னையைக் கண்டு அவர் நம்ப மறுத்து, தம்மால் ஆசிரமத்தில் எதையும் நம்பமுடியவில்லை என்றார்.

30 வயது படத்தைப் பார்த்தபின், "இதுதான் நேற்று நான் பார்த்த அன்னை" என்றார்.

ஆன்மீகப் பண்பு

ஸ்ரீ அரவிந்தர் புதுவையிலிருந்தபொழுது அவர் உயிருக்கு எந்த நிமிஷமும் ஆபத்திருந்தது. அவருக்கு வரும் தபால்கள், செய்திகள், அவரைச் சந்திக்கும் நபர்கள், வரும் பணம், அனுப்புபவர் பெயர் ஆகியவை எவருக்கும் தெரிவது ஆபத்து.

பணம் அனுப்புபவர் யாரெனத் தெரிந்தால் இனி பணம் வாராது. அனுப்புபவருக்குப் போலீஸ் தொந்தரவு. அவருடைய சாதகர் கூட்டத்திலேயே ஒரு CID மறைந்திருக்கிறான். வருபவர் யார் எனத் தெரிந்தால் போலீஸ் அவரைப் பின் தொடரும். உயிருக்கும், உரிமைக்கும், உடலுக்கும் எந்த நேரமும் எந்த ஆபத்தும் வரும் என்ற நிலையில் உள்ள புரட்சிக் குழுக்கள் முதல் வேலையாக பிரமாணம் செய்து கொள்வார்கள். ரத்தத்தால் தங்கள் பிரமாணத்தை எழுதுவார்கள். வங்காளத்தில் ஸ்ரீ அரவிந்தர் இருந்தபொழுது பயங்கரவாதிகளின் குழுக்கள் அவர் வீட்டிலேயே வெடிகுண்டு செய்தார்கள். அவர்கள் சந்தித்துப் பிரமாணம் செய்து கொள்வதும், புதியவரைச் சேர்க்கும்பொழுது இரகசிய பிரமாணம் செய்து கொள்வதும் உண்டு.

ஸ்ரீ அரவிந்தர் யாரையும் பிரமாணம் செய்யும்படி கேட்பதில்லை. யாரையும், அவர் எதையும் செய்யும்படி வற்புறுத்துவதில்லை. அங்கேயுள்ள செய்தி வெளியே போனால் உயிர் போகுமா, நாடு கடத்துவார்களா, ஜெயிலுக்குப் போக வேண்டுமா, வீட்டைக் காலி செய்வார்களா, வரும் பணத்தைப் பறிமுதல் செய்வார்களா என்ற நிலையில்

எவரையும் இரகஸ்யமாக இருக்க வேண்டும் என்று கேட்காமலிருக்க  ஆன்மீகப் பண்பு தேவை.

  • அவருடைய யோகத்திற்கு முறைகள் (ஆசனம் போன்றவை) கிடையா.
     
  • அவர் ஆசிரமத்தில் உறுப்பினர் என்பதற்கு விண்ணப்பம், கார்டு போன்றவை இல்லை.
     
  • எதையும் எவரையும் வற்புறுத்துவதில்லை.
     
  • தாமே விரும்பி தம்மைக் கட்டுப்படுத்தியவரையே ஸ்ரீ அரவிந்தர் விரும்புவார்.
     
  • சுயக் கட்டுப்பாடு மட்டும் இருப்பது ஆன்மீகப் பண்பாகும்
     
  • நடைமுறையில் தானே நம்மைத் தேடி வருவதை மட்டும் ஏற்பதே ஆன்மீகப் பண்பிற்கு அடையாளம்.

அனந்தனின் அபரிமிதம் – Touch of Infinity

வாழ்வை யோகம் என்று ஸ்ரீ அரவிந்தர் ஏற்றுக் கொண்டார். மகான்கள் உள்ள இடம் சுபீட்சமாக இருக்கும் என்பது நம் மரபு. ஸ்ரீ அரவிந்தருடைய பார்வைபட்டவர்கள், அவர் அன்புக்குரியவர்கள், அவரருளைப் பெற்றவர், அவருக்குரியவர் என்பவர்கள் வாழ்வில் நடந்தவை அவர் யோக முத்திரையைப் பெற்றிருக்கும். அதன் அடையாளங்கள்,

  • ஸ்தாபன தலைமையை எட்டுவது,
     
  • அதிர்ஷ்டம் தேடி வருவது,
     
  • நாடெங்கும் புகழ் பரவுவது,
     
  • இல்லாதது நடப்பது,
     
  • முடிவில்லாத முன்னேற்றம்.

அகில இந்திய காங்கிரஸில் தமிழ்நாட்டின் பங்கைப் பெரும்பாலும் பெற்றவர் ராஜாஜி. அதன் தலைமை எந்தத் தமிழனுக்காவது உண்டு எனில் அத்தகுதியைப் பெற்றவர் அவரே. இப்பதவியைப் பெரும்பாலும் வடநாட்டினரே வகித்தனர். ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்தவர் தங்கள் தங்கள் ஸ்தாபனத்தில் தலைவராக வருவதும் அல்லது மிக உயர்ந்த நிலையை அடைவதும் அன்பர்கள் அனுபவம்.

புதுவையில் சீனுவாசாச்சாரி, பாரதி, வ.வே.சு. அய்யர் ஆகியவர்கள் ஸ்ரீ அரவிந்தரை அடிக்கடிச் சந்தித்தனர். பிற்காலத்தில் பாரதி தவிர இவர்கள் வாழ்க்கை விபரங்கள் அதிகமாகத் தெரியவில்லை. நேருவுடன் அன்னையைத் தரிசித்த காமராஜ் ஸ்ரீ அரவிந்தத்தின் அணைப்பில் வந்தார். அவர் தம் ஸ்தாபனத்தில் தலைமையை வகித்தார். சாஸ்திரியும், இந்திராவும் பிரதமரானார்கள்.

ஒரு பாங்க் ஆபீசர்கள் பலர் அன்னையை தரிசித்தனர். சிலர் அவர் சேவையில் ஈடுபட்டனர். அவர்களில் நால்வர் 4 அகில இந்திய பாங்குகளுக்குத் தலைவர்களானார்கள்.

அன்னை ஆசிரமத்தின் சேவையில் கலந்துள்ள விவசாயிகள் வருமானம் 20 ஆண்டுகளில் 1000 மடங்கு உயர்ந்தது.

ஸ்ரீ அரவிந்தரைத் தரிசித்துப் போன தொழிலதிபர் ஒருவரை 40 ஆண்டுக்கு முன் சர்க்கார் அழைத்து வற்புறுத்தி 30 கோடி பணம் கடன் கொடுத்து நாட்டிலேயே உள்ள இரண்டு கம்பனிகளில் ஒன்றை ஆரம்பிக்கச் சொன்னார்கள்.

இந்திய சுதந்திரம் 15 ஆகஸ்ட். அதை சூட்சும உலகிலிருந்து, கடைசிவரை நிறைவேற்றியவர் ஸ்ரீ அரவிந்தர். அதைப்பற்றி ‘Freedom at midnight’ "நடுநிசியில் சுதந்திரம்' என எழுதப்பட்ட புத்தகம் 6 கோடி பிரதிகள் (60 millions) விற்றதாக எழுதியுள்ளார்கள். இது சரியா எனத் தெரியவில்லை. 60 லட்சம் பிரதியானாலும் ஸ்ரீ அரவிந்தர் சக்தியை நாம் இதில் காண முடிகிறது.

Garden house - தோட்டம்

70 வருஷத்திற்கு முன் சென்னை என்பது சைனாபஜார், மைலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை போன்ற முக்கிய இடங்களைக் கொண்டது. அன்று பெரிய வசதியுள்ளவர்கள் பெரிய வீடு கட்டவேண்டுமானால், நகரத்திலிருந்து 5,6 மைல் தள்ளி பெரிய மனைகளை வாங்கி பங்களா கட்டி அதைச் சுற்றி மரங்களை நடுவார்கள். கல்கத்தாவில் 100 ஆண்டுக்கு முன் இது போன்ற பழக்கம் பரவலாக இருந்தது. அப்படிக் கட்டப்பட்ட வீடுகளை Garden House தோட்டமும் வீடும் என அழைத்தனர். ஸ்ரீ அரவிந்தரின் தகப்பனார் 2½ ஏக்கர் மனையில் மணிக்கோலா என்ற இடத்தில் இது போன்ற பங்களா ஒன்றைக் கட்டினார். ஸ்ரீ அரவிந்தரின் பழைய நாட்களை ஆராய்ச்சி செய்பவர்கள் இந்த வீட்டை போட்டோ எடுத்து வந்துள்ளனர்.

பணம் மிகவும் சிரமமானபொழுது ஒரு சமயம் ஸ்ரீ அரவிந்தர் Garden House பணம் என்னாயிற்று? ஏன் வரவில்லை? என்று கேட்கிறார். இந்த வீட்டிலிருந்து வருமானம் அவர் புதுவையிலிருந்தபொழுது வந்திருப்பதை இவர் சொல் காண்பிக்கின்றது.

ஸ்ரீ அரவிந்தர் எப்பொழுதோ ஒரு முறை இவ்வீட்டிற்கு வந்திருக்கின்றாராம். சில முறை வந்திருக்கலாம் என்கின்றனர்.

ஸ்ரீ அரவிந்தரின் தம்பி பரீன் பயங்கரவாதிகளின் தலைவர். அலிப்பூர் கேசில் முதல் எதிரி. இவர் இளைஞர்கள் பலரை - 10, 12 பேரை – இவ்வீட்டில் சேர்த்து துப்பாக்கிப் பயிற்சியையும், வெடிகுண்டு செய்வதையும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

வருபவர்களை விசாரித்து உள்ளே அனுமதிப்பது பரீன் வேலை. சமையலை மண் பாண்டங்களில் செய்தனர். கீதைபற்றி உரையாற்றினர். அங்குள்ள மாமரத்தில் துப்பாக்கிப் பயிற்சி செய்தவர்கள் ஏராளம். கடிதங்களில் இவ்வீட்டைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது அங்குள்ள "குரங்குகளைப்' பற்றி எழுதுவார்கள். குரங்கு என்பது வெடிகுண்டிற்கு சங்கேதச் சொல்.

போலீஸ்காரன் ஒருத்தன் இவ்வீட்டைக் கண்டுபிடித்து விட்டான். போலீஸுக்குச் செய்தி போய் படை எடுத்தனர். ஸ்ரீ அரவிந்தரையே அவர்கள் கண்கள் தேடின. அவரில்லை என்று ஏமாந்தனர். மற்ற அனைவரும், அவர்கள் ஆயுதங்களும், வெடிகுண்டு மருந்துகளும் பிடிபட்டன.



book | by Dr. Radut