Skip to Content

பகுதி 1

அன்னையை 15 ஆண்டுகளாக வழிபடும் அன்பரை அவர் ஆன்மீக அனுபவத்தைப் பற்றிக் கேட்ட பொழுது அகமும் புறமும் அர்த்தபுஷ்டியாக நிறைவு பெற்றுள்ளது என்றதுடன் இங்கு அன்னையிடம் பெறுவது எங்கும் பெற இயலாது என்றார். அன்னையைப் பற்றி அறிந்தவர் வாழ்வின் பிரச்சினைகள் பிரார்த்தனையின்றிக் கரைகிறது. புதுவாழ்வு பிறக்கிறது. பிரார்த்தனையெனச் செய்தால் பலிக்கத் தவறுவதில்லை. 10 பிரார்த்தனைகளில் 9 தவறாது பலிக்கிறது. பலிக்காத பிரார்த்தனையின் பின்னால் குணமிருக்கும். மனமாற்றத்தால் அது வழிவிடும். The Life Divine படித்துப் புரிந்து கொண்டால் மனம் மாற்றமடைந்தது போன்ற பலனிருக்கும். இது கடினமான நூல் எனப் பெயர் பெற்றது. அதற்குள்ள காரணங்களில் முக்கியமானது ஒன்றுண்டு. பகவானுடைய எல்லாக் கருத்துகளும் புதியவை. அவற்றைப் பழைய சொற்களால் எழுதும் பொழுது படிப்பவருக்குப் பழைய கருத்து மனதில் எழும். அது தடம் மாறும். அனாதை ஆசிரமத்தில் வேலை செய்பவர் ஆசிரமம் என்ற சொல்லை அனாதைகளுக்குரிய இடம்எனப் புரிந்து கொள்வது போலிருக்கும். மாயை, பிரம்மம், ஜீவாத்மா என்ற முக்கியச் சொற்களே அப்படி மாறுபடுகின்றன. இதுவரை இல்லாத கருத்துகளைப் பகவான் கூறுவதால் அவை தெளிவாக இருந்தாலும் மனத்தில் நிற்பதில்லை. பகுதி முழுமையைவிடப் பெரியது என்பது புரிந்து கொள்ள

முடியாததில்லை. ஆனால் வழக்கிலில்லாததால் மனத்தில் கருத்து நிலை பெறுவதில்லை.The Life Divineககு அறிமுகமாக அதன் எல்லா முக்கியக் கருத்துகளையும், இக்குறையெழாதவாறு நூலின் சுருக்கத்தை எழுதுவது இக்கட்டுரையின் நோக்கம். பகுதி, முழுமை என்பவை எளிமையானவை. முழுமையுடைய பகுதி, முழுமையை விடப் பெரியதான பகுதி என்பவை இதுவரை உலகிலில்லாத எண்ணச் சிறப்புகள். இச்சொற்களும், இது போன்று 30 வண்ணமுடையவையும் நூலில் எங்கும் எழுவதால், நூல் புரியவில்லை என்று பலரும் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரணக் கம்மலில் ஒரு கல் வைரமானால், அக்கல்லின் விலை கம்மலின் விலையை விட அதிகமாகும். கல்லூரி ஸ்தாபகர் மகன் வகுப்பில் மாணவனானால், அவன் வெறும் மாணவன் மட்டுமல்லன், வகுப்பை விட முக்கியமானவன். எதிர்காலத்தில் கல்லூரிக்கு முதல்வராக வருபவன். பகவான் கூறும் கருத்தில் ஒரு பகுதியை இந்த உதாரணங்கள் விளக்கும். ஒரு மெஷின் முழுமை. அதனுள் உள்ள ஒரு பாகம் பகுதி. இந்தப் பகுதி எப்படி முழுமையாகும், முழுமையைவிடப் பெரியதாகும்? உடலில் கண், காது, மூக்கு, மூளைஎனப் பலப் பகுதிகள் உண்டு. பல இலட்சம் செல்கள் உள்ளன. ஆத்மா நம்முள் புதைந்து விழிப்பற்றுள்ளது. நம் எல்லாப் பகுதிகளிலும், எல்லாச் செல்களிலும் ஆத்மா புதைந்துள்ளது. ஆத்மா கண்ணில் விழித்தால் ஞானதிருஷ்டி ஏற்படும். நெஞ்சில் ஆத்மா விழித்தால் அசரீரி கேட்கும், வேணுகானம் கேட்கும். எந்தப் பகுதியில் ஆத்மா விழித்தாலும், அப்பகுதி நம் முழுவுடலுக்குச் சமமாகும், அதைவிடப் பெரியதாகவுமாகும். ஒரு செல்லில் ஆத்மா விழித்தாலும் அப்படியே. அதுவே பகவான் பகுதி; முழுமையைவிடப் பெரியது என்பது. இதுவும் முழுவதும் விளக்கும் உதாரணமில்லை. இதுவரை உலகம் அனுபவிக்காததைப் பகவான் கூறுவதால் உதாரணம் எழுத முடியவில்லை. இது போன்றவை கீழ்க்கண்டவை. அவை வருமிடங்களில் "புரியவில்லை" என்ற நிலை ஏபடுகிறது. அவை,

மௌனமான சப்தம்

பகுதியான முழுமை

அரூபமான ரூபம்

அநேகனான ஏகன்

நிலையான சலனம்

அகண்டமான கண்டம்

புறமான அகம்

ஜடமான ஆன்மா

ஆனந்தமான வலி

அமிர்தமான விஷம்

பரமாத்மாவான ஜீவாத்மா

வலுவான பலஹீனம்

கோரமான அழகு

சந்தோஷமான வருத்தம்

ஞானமான அஞ்ஞானம்

மனிதனான பிரபஞ்சம்

பிரபஞ்சமான பிரம்மம்

காலத்தைக் கடந்த காலம்

மரணமான அமரவாழ்வு

புருஷனான பிரகிருதி.

ஸ்ரீ அரவிந்தம் மோட்சத்தைக் கடந்த நிலை; மோட்சத்தைத் துறந்த நிலை. மோட்சம் உலகைத் துறந்தது எனில் மோட்சம் உலகை விலக்குகிறது; எதிரியாகக் கருதுகிறது. ஸ்ரீ அரவிந்தம் என்பதைத் திருவுருமாற்றம் என்றும் கூறலாம். மோட்சத்தை ஏற்றால் திருவுருமாற்றமில்லை. உலகைத் துறந்து பெறும் மோட்சத்தைத் துறந்து பெறுவது திருவுருமாற்றம். இங்கு துறப்பது, கடப்பது, விலக்குவதில்லை. திருவுருமாற்றம்எனில் ஆத்மா நம் பகுதிகளுள் விழிப்பது. உடல் உதாரணமாக தெய்வீக உடலாக, ஆன்மீக உடலாகச் செயல்படுவது திருவுருமாற்றம். நாம் இல்லறம், துறவறம்என இரண்டை அறிவோம். ஸ்ரீ அரவிந்தம் அவற்றைக் கடந்த நிலையில் உயர்ந்த இல்லறம் உண்டு என்கிறது. அந்த இல்லறம் துறவறத்தை உட்கொண்டது என்கிறது. தூய்மையான துறவற நெறிப்படி நடத்தும் இல்லறம் அது. அது இல்லறமாகவும்,

துறவறமாகவும் உள்ள உயர்ந்த தெய்வீக வாழ்வு. இக் கண்ணோட்டம் ஸ்ரீ அரவிந்தத்திற்கு ஆன்மீக அடிப்படை. இவ்வடிப்படையில் மேற்சொன்ன 20 கருத்துகளையும் விளக்கினால் அது போதுமான அளவு எல்லாக் கருத்துகளையும் ஸ்ரீ அரவிந்த கண்ணோட்டத்திற்குள் கொண்டு வந்து விடும். ஒரு பெருந் தடை இவ்விதம் நீக்கப்படும். ஆன்மீகத்திகேயுரிய Self,Soul,being பிரம்மம், ஆத்மா, ஜீவன் என்ற கருத்துகள் ஆன்மீக இலக்கியத்துடன் பரிச்சியமற்றவருக்கிருக்காது. அவை மூன்றும் ஒன்றாகத் தெரிவதால் பிரித்துக் கூறுமிடத்தில் குழப்பம் ஏற்படும். விவரம் தெரியாத மக்கள் பிரதம மந்திரிக்கும் ஜனாதிபதிக்கும் உள்ள வித்தியாசத்தைப் புறக்கணித்து நாட்டின் தலைவர் என்றெடுத்துக் கொள்வார்கள். நாட்டின் அரசியல் அதிகாரத்தை எடுத்துரைக்கும் பொழுது அது குழப்பத்தை விளைவிக்கும்.

  • Soul என்பது சிருஷ்டியுள் ஜீவனில் உள்ள ஆத்மா.
  • Spirit என்பது சிருஷ்டியைக் கடந்த நிலையில் உள்ள ஆத்மா.
  • Spirit என்ற சொல் Soul,Self என்ற இரண்டையும் உட்கொண்டது. மேலும் பிரகிருதிக்கும் உடையது.
  • Being  என்பது உருவம் உள்ள எந்த ஜீவனுக்கும் உள்ள உயிர்.

Spirit உருவம் பெறாத பிரம்மம். Soul,Self, உருவம் பெற பிரம்மம். ஜீவன் (being) என்பது உருவம் பெற்றது, பெறாதது அனைத்திற்குள்ளும் புதைந்துள்ள உயிர்.

திருடனுடைய அடி திருவடி எனவும், விபசாரியின் கற்பு விலைமதிக்க முடியாதது என்பதும் உலகம் கேள்விப்படாத கருத்துகள். இவற்றைக் கேட்டு ஏற்பது ஒரு நிலை. அவற்றைப் புரிந்து கொண்டு ஏற்பது முடிவான நிலை.

திருடன் என்பவன் சமூகச் சட்டத்திற்கு எதிரி. கற்பு சமூக வாழ்வின் சிகரமான பண்பு. சமூகம் என்பது சிருஷ்டியில் ஒரு குறுகிய கருத்து. அதனால் ஓர் இலட்சிய அம்சமில்லை. சாதாரண மனிதனால் அதை ஏற்க முடியாது. அவனுக்குச் சமூகமே முடிவான இலட்சியம். சமூகத்தைக் கடந்துள்ள மனச்சாட்சியும் அவனுக்கு

 

இரண்டாம்பட்சம். மனச்சாட்சி பெரும்பாலும் சமூக இலட்சியத்துடன் மோதுவதை அவனறிவான். இரண்டும் மோதினாலும், அவன் மனச்சாட்சியைவிட சமூகத்தை முக்கியமாகக் கருதுவான். சமூகம் முக்கியமானால் அவனைக் குடிமகன், (citizen,social individual) எனக் கூறுகிறோம். மனச்சாட்சிப்படி வாழ்பவன் உயர்ந்தவன். அவனைச் சான்றோன், ஆன்றோன் எனக் கூறுவோம். (He is a Psychological individual.) உலகைப் பொருத்தவரை இதுவே முடிவானது. ஸ்ரீ அரவிந்தம் அதைக் கடந்து ஆன்மீகப் பரிணாமத்தை இலட்சியமாகக் கொள்கிறது. அதன் பிரதிநிதி பரிணாம மனிதன் (evolutionary individual). அது இன்று உலகம் அறியாதது. அவன் உருவாக வேண்டுமானால், சமூகச் சட்டங்களையும், மனச்சாட்சியையும் கடந்து மனிதனுடைய ஆத்மா வளரும் வண்ணம் மனிதனுடைய வாழ்வு அமைய வேண்டும். திருடன் உலகுக்கு எதிரியானாலும், சாக்கிய முனி கல்லெறிந்து கடவுளை வணங்கியது போல, திருடன் தன் ஆன்மா பரிணாம வளர்ச்சியடைய வேண்டி தன் செயலை ஆன்மீகச் சூழலுக்குப் பொருந்துமாறு அமைக்கும் பொழுது, உலகத்து மக்கள் உஷாரின்றி வாழ்வதைச் சிதைக்க வேண்டித் திருடுகிறான்.

  • உஷாராக இல்லாமல் உள்ளே உலகம் வளராது. அனைவரையும் உஷாராக வாழ நிர்ப்பந்திப்பது திருடன் கடமை.
  • ஆன்மீகப் பரிணாம வாழ்வின் குடிமகன் என்பதால் அவனடி திருவடி.

கற்புக்கரசி கணவனுடைய வாழ்வையும், உடல் வேகத்திற்குரிய தேவையையும் தன்னை மறந்து அழித்துப் பூர்த்தி செய்கிறாள். அதனால் அவள் கொழுநன் தொழுதெழுவாள். அவள் பெய்யெனப் பெய்யும் மழை. அவள் இலட்சியம் உன்னதமானது. ஓர் ஆண்மகனுக்குச் செய்யும் சேவை. விபச்சாரி அச்சேவையில் உடற்பகுதியை உலகுக்குச் செய்பவள். உடலால் சேவை செய்தாலும், உயிரால் உண்மைக்கு எதிராக இருந்தாலும், அனைவருக்கும் செய்வது என்பதால் அவள் சேவை பரந்தது. அவள் கற்பு விலை மதிக்க முடியாதது என்பது பகவான் கூறுவது. இதுபோல் சமூகத்தையும், மனத்தையும் கடந்த இலட்சியங்களின் தத்துவம்

அடங்கிய நூல் The Life Divine என்பதால் "புரியவில்லை" என்று அது பெயர் வாங்கியது.

காலம், காலத்தைக் கடந்த நிலைகளை நாம் அறிவோம். நம் வாழ்வு காலத்தால் கட்டுண்டது, காலத்திற்குக் கட்டுப்பட்டது. எதற்கும் காலம் தேவை. மரம் வளரவும், மனம் கனியவும், செயல் பலன் தரவும் உரிய காலம் தேவை. கல்லூரியில் சேர்ந்தவுடன் பட்டம் கிடைக்காது. 4 வருஷமாகும். விதை மரமாகிப் பலன் தரப் பல வருஷமாகும். இவை நாம் காலத்தால் ஆளப்படுவதைக் காட்டும். ரிஷி காலத்தைக் கடந்தவர். நாம் காலத்தில் வாழ்வதால், ஒரு காலத்தில் செய்த காரியம் இப்பொழுது நம்மைப் பாதிக்கும். அதைக் கர்மம் என்கிறோம். ரிஷி காலத்தில் வாழவில்லை என்பதால் அவருக்குக் கர்மமில்லை. காலத்தில் நாம் மனத்தால் வாழ்கிறோம். காலத்தைக் கடந்த நிலை ஆத்மாவுக்குரியது. ரிஷி ஆத்மாவில் வாழ்கிறார். ரிஷி ஆத்மாவில் உள்ள பொழுது விதையை நட்டால் அது உடனே மரமாகும். இதை நாம் மந்திரம், மாயம் என்கிறோம். ரிஷியின் சக்தி பெரியது. எதையும் உடனே சாதிக்க அவர் ஆத்ம சக்தி பயன்படும். அவரால் 10 வருஷத்திற்கு முன் இறந்தவரை உயிர்ப்பிக்க முடியும். ஆனால் வழக்கமாக அவர்கள் அப்படிச் செயல்படுவதில்லை. அவரும் மனத்தால் செயல்படும் பொழுது, கர்மத்திற்கும், காலத்திற்கும் ஓரளவு கட்டுப்பட்டவர். உலகமும், தத்துவமும், யோகமும் அறிந்தவை இவ்விரண்டு நிலைகள். பகவான் காலத்திற்கு மூன்றாம் நிலையுண்டு என்கிறார். இது ஆன்மீகத்திற்குப் புதிய சித்தி. மனிதன் வாழ்வது பூலோகம். தெய்வம் வாழ்வது மேல் உலகம், சொர்க்கம். தெய்வம் பூலோகத்தில் வந்து வாழ்ந்தால் பூலோகம், சுவர்க்கமாகும். மனிதன் தெய்வமாகி வாழ்வை நடத்துவது தெய்வீக வாழ்வு. அது பூலோகச் சுவர்க்கம். அதகுரிய காலம் மூன்றாம் நிலையையுடையது. அங்கு காலமும், காலத்தைக் கடந்ததும் இணைந்து செயல்படும். பகவான் இதை Simultaneous integrality of Time-eternity and Timeless etrnity என்கிறார். நாம் இதை மூன்றாம் நிலைக் காலம் எனலாம்.

  • இவ்வுலகில் எச்செயலுக்கும் காலம் தேவையில்லை. நினைத்தவுடன் நடக்கும்.
  • இவ்வுலகில் யுகம் க்ஷணமாகும்.

இன்று இது உலகில் செயல்படவில்லை என்பதால் உதாரணம் கூற முடியாது. இது போன்ற செயல்களைக் கூறலாம். நாம் ஒரு காரியம் செய்ய வேண்டுமானால் - அட்மிஷன், லைசன்ஸ் பெறுதல் - அதற்கு முறையுண்டு, காலம் தேவை. பிரின்ஸ்பால் அதை உடனே செய்ய முடியும். மந்திரி 3 மாத வேலையை 3 நாளில் முடிப்பார். இவ்வுலகில் 3 வினாடியும் தேவைப்படாமல் முடியும். மேலே குறிப்பிட்ட 20 கருத்துகளையும் இந்த மூன்றாம் நிலை காலத்திற்குரியவாறு புரிந்து கொண்டால் The Life Divine புரியும். நம் மனம் காலத்திலுள்ள பொழுது, விளக்கம் மூன்றாம் நிலையிலிருப்பதால், நூல் விளங்கவில்லை எனக் கூற வேண்டியுள்ளது. ஐன்ஸ்டீன் காலம் நிலையானதன்று, நிலை மாறினால் காலம் மாறும் என்ற பொழுது விஞ்ஞான உலகத்தின் மனத்தில் ஒரு புரட்சி எழுந்தது. அவர் 1913 இல் அதை எழுதினார். பகவான் இக் கருத்தை 1914 இல் ஆரம்பித்து 1920இல் எழுதி முடித்தார்.

மௌனமான சப்தம்

அன்பர்கட்கு மனம் நிலைப்படும் நேரம் உண்டு. அப்பொழுது சாந்தி, ஜோதி, அமைதி தெரியும். மௌனமும் அதுபோல் தெரியும். மௌனம் சிறப்பாக இருந்தால் சூழல் கனக்கும். அப்பொழுது ஒரு ரீங்காரம் எழும். மௌனம் பேசுகிறது என்று கூறுவார்கள். சுமார் 40 வருஷத்திகு முன் Silence Speaks என்றொரு புத்தகம் வெளி வந்தது. ஓம் மௌனத்தின் உற்பத்தி ஸ்தானம். ஓம் என்ற மந்திரத்தை ஒரு கோடி முறை உச்சரிக்கச் சொல்வார்கள். அதை முறைப்படி செய்தால் ஆண்டவன் தரிசனம் கிடைக்கும். அது சப்த பிரம்மம். அன்னை 1970 வாக்கில் ஒரு நாள் "ஓம்" என்ற பிரம்மாண்ட ஒலியைக் கேட்டு மேற்கொண்டு விசாரித்ததில் நடுக்கடலில் கப்பல் நிலையிலிருந்து புறப்பட்ட பொழுது "ஓம்" என ஒலித்தது என்றார்.

மௌனம் ஒலிக்கும்.

மௌனமும் சப்தமும் எதிரானவை. ஆன்மீகச் சட்டப்படி சப்தம் மௌனத்துள்ளிருந்து எழுகிறது. உலகமே ஓம் என்ற ஒலியிலிருந்து எழுவதால், ஓம் மௌனத்தின் உறைவிடம் என்பதால், சப்தம் ஒலியிலிருந்து எழுவது ஆச்சரியமில்லை. மௌனமும், சப்தமும் எதிரானவை என்பதை ஏற்கலாம். மௌனத்திலிருந்து சப்தம் எழுகிறது என எப்படிச் சொல்வது? யோகத்தில் ஓரளவு முன்னேற்றம் பெற எவரும் உள்ளே மௌனம் சேர்வதைக் காண்பர். அந்த மௌனம் சக்தி வாய்ந்தது. நம் செயலை சக்தியால் நிரப்புவதை அறிவர்என பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது பழமொழி. கட்டுப்படாத பிள்ளைகள், தொண்டர்கள் உண்டு. அவர்களை முயன்று அதிகாரம் செய்து கட்டுப்படுத்துவார்கள். தலைவர் அதிகாரத்திகு, தகப்பனார் கோபத்திகுப் பயப்படுவார்கள். பயம் கட்டுப்படுத்தும். அதிகாரத்தைச் செலுத்தாத இடத்தில் ஆர்ப்பாட்டமிருக்கும். அதிகாரம் அளவு கடந்திருந்து செலுத்த மறுக்கும் இடத்தில் வழக்கத்திற்கு அதிகமாக அமைதியும் கட்டுப்பாடும் இயல்பாக இருக்கும் இடங்கள் உண்டு. அன்பான தலைவர், பண்பான தகப்பனார் அதிகாரத்தைச் செலுத்துவதில்லை, செலுத்த நினைப்பதில்லை, செலுத்துவது பண்பற்ற செயல்என உணருமிடத்தில் அமைதி, மௌனம், ஒழுங்கு, கட்டுப்பாடு அளவு கடந்திருக்கும்.

  • அந்த அதிகாரம் மௌனத்திலிருந்து எழுகிறது.
  • அதிகாரம் சப்தமானது, சப்தம் போன்றது.
  • சப்தம் மௌனத்திலிருந்து எழும். அது மௌனமான சப்தம்.
  • The Life Divineஇல் Silence sustains activity என்ற வரியுண்டு.
  • மௌனம் கனத்தால் செயல் சிறக்கும்.
  • ஒலி பேரொலியாக மௌனம் கனக்க வேண்டும்.

நம் ஊரில் கடைத்தெருவில் சப்தம் அதிகம். மேல்நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடும் தெருவிலும், நூறுக்கணக்கான கார்கள் ஓடும் ரோட்டிலும் மௌனம் சிறப்பாக உண்டு. அந்நாட்டுச் செல்வம் அவர்கள் அதிகமான உற்பத்தித் திறனால் ஏபடுத்தப்பட்டது. இந்த அதிகபட்ச செல்வத்தின் அஸ்திவாரம் மௌனம், physical silence, ஜட மௌனமாகும். நாடு சுபிட்சமானால் ஒலி அடங்கி மௌனம் நிலவும்.

பகுதியான முழுமை

இதற்கு உதாரணமாக எழுதியவை ஓர் அம்சத்தில் பொருந்தும். முழுவதும் பொருந்தாது. நம் உடல் செல்களாலானது. ஒவ்வொரு செல்லுக்கும் உடலின் அமைப்புண்டு. ஒரு செல்லை எடுத்து வளர்த்தால் அதன் முழுப்பகுதியாகும் என்று இன்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எந்தப் பகுதியின் செல்லும் - உதாரணமாக கண் - வளர்ந்து (கண்ணாகும்) அப்பகுதியாகும். இதுவும் முழுவதும் பொருத்தமான உதாரணமாகாது. அணு அப்பொருளின் சிறு உருவம். அணுவைப் பிளந்தால் பிரம்மாண்டமான சக்தி வெளி வருகிறது. இங்கும் பகுதியின் முழுமையில் ஓர் அம்சம் வெளிப்படுகிறது. இந்த சக்தி அழிக்கப் பயன்படுவது போல், ஆக்கவும் பயன்படும். தத்துவப்படி

  • அணுவில் உலகம் உள்ளது.
  • அதன் சக்தி வெளிப்பட்டால் அனந்தமான சக்தி எழும்.
  • ஆத்மா வளரும் பொழுது ஒரு பகுதியில் அது வெளி வந்தால் அதன் முழுமையைவிடப் பெரியதாகும்.

மக்களாட்சியில் எல்லோரும் இந்நாட்டு மன்னராகலாம் என்பதால் எந்த ஒரு மனிதனும் தன் அரசியல் உரிமைக்குத் திறனளிக்க முடியுமானால், அவன் நாட்டின் தலைவனாகிறான். நாடு ஒருவனில் தலைவனாக உருவாகிறது. பகுதியான மனிதன் தன் அரசியல் ஆத்மாவைக் கண்டு வெளிப்படுத்துவதில் நாட்டின் முழுமை பெறுகிறான்.

அரூபமான ரூபம்

ரூபம் அரூபத்திற்கு எதிரான கருத்து. களிமண்ணுக்கு ரூபமில்லை. அதிலிருந்து செய்யப்படும் பானைக்கு ரூபமுண்டு. பானையின் ரூபம் களிமண்ணின் ரூபமற்ற நிலை - அரூபத்துக்கு எதிரானது. ஆனால் பானையின் ரூபம் களிமண்ணின் ரூபமற்ற நிலையிலிருந்து எழுவதால்,

அரூபம் ரூபத்தை வெளிப்படுத்துகிறது என்றாகும்.

நாட்டில் சர்க்கார் உண்டு. சமூகம் உண்டு. சமூகப்பண்பை ஏற்று முறையாகக் குடும்பம் செய்பவர் சமூகத்தைச் சார்ந்தவர். சர்க்காரும், குடும்பமும், சமூகப்பண்பும் சமூகத்தின் ரூபங்கள். இவற்றிற்கெல்லாம் புறம்பானவையும் சமூகத்தில் உண்டு. அது ரூபத்திற்கு எதிரானது. குடும்பமில்லாமல், சமூகக் கட்டுப்பாட்டை ஏற்காமல் உள்ள மக்களும் சமூகத்தில் உண்டு. நாம் அவர்களை பதர்என நினைத்து விலக்குகிறோம். ரூபத்திற்கு ஜீவன் உண்டு. ரூபமற்றதகும் ஜீவன் உண்டு. ஜீவன் உண்டு என்றால் ஆத்மா விழித்துச் செயல்படும் நேரம். சமூகம் முன்னேறும்வரை ஆத்மா சமூகத்தின் ரூபம் மூலம் செயல்படும். சமூகம் முன்னேற மறுத்தாலும், முன்னேற்றத்திகுத் தடையாக இருந்தாலும் ஆத்மா அதை விட்டு நகரும். அரூபத்துள் ஆத்மா விழிக்கும். அரூபம் ஜீவன் பெறும். அதகுச் சமூகத்தைவிட அதிகப் பலம் வரும். சமூகத்தையே அழித்துப் புதிய சமூகம் ஏற்படுத்தும். நாம் இதைப் புரட்சி என்கிறோம். அரூபமான, ஒதுக்கப்பட்ட பகுதிகள் சமூகத்தின் ஒரு தாழ்ந்த பகுதி. சமூகம் மலை. இது கடுகு. ஆத்மா இப்பகுதியில் விழித்துச் செயல்பட்டால், சமூகத்தைவிடப் பெரிய பலம் பெறும். இதைப் பகுதி முழுமையைவிடப் பெரியது என்கிறோம்.

One and the Many ஏகன் - அநேகன்

சிருஷ்டி ஆனந்தத்திற்காக ஏற்பட்டது. ஆனந்தம் எழ லீலை வேண்டும். ஜீவனில், ஜீவியத்தில், ஆனந்தத்தில் லீலையுண்டு. ஊரில் அநேக விசேஷங்கள் தேர்தல், திருமணம், விழா, வெளியூர் சுற்றுலா அதிகமாக இருந்தால் வாழ்க்கை சுறுசுறுப்பாக இருக்கும். லீலை அதிகமானால் ஆனந்தம் அதிகமாகும், பரமாத்மா பரமாத்மாவாகவே இருந்தால் லீலையில்லை. ஆனந்தம் குறைவு. பரமாத்மா, ஏராளமான ஜீவாத்மாக்களானால், பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் ஜீவன் பரிமாறிக் கொள்கிறது. ஜீவாத்மாக்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்கின்றனர். அது ஜீவியத்திலும் உண்டு, ஆனந்தத்திலும் உண்டு. ஒரு மரத்துண்டை இரண்டாக்கலாம், 4 ஆக்கலாம். அவை மீண்டும் கூடாது. இது பிரிவினை.

ஒருவர் பல கடமைகளை ஏற்றால் - தகப்பனார், தலைவர், முதலாளி - அவர் பிரிவதில்லை. அம்சம் பிரிகிறது, அங்கம் பிரிவதில்லை. நமக்குப் பல திறமைகள் எழுகின்றன. அவை 10 ஆக இருக்கலாம், 100 ஆக இருக்கலாம். திறமைகள் அதிகப்படுவதால், மனிதன் பல பாகங்களாகப் பிரிக்கப்படுவதில்லை. அதிகமான திறமைகள் வாழ்வை அதிகமாக அனுபவிக்கப் பயன்படும்.

  • இதைப் பிரியாத பிரிவினை எனலாம் (differentiation and not division).
  • பிரிந்த பகுதிகள் அடிப்படையில் ஒன்றானவை. 50 திறமைகள் பிரிந்து தோன்றினாலும், அடிப்படை மனிதன் ஒருவனே.
  • திறமைகள் பிரிந்தால் மனிதனும் அதுபோல் பிரிந்து விடுகிறான்எனப் புரிந்து கொண்டால், நூல் புரியவில்லை எனத் தோன்றும்.
  • மனம் பிரிக்கிறது ( divides). சத்தியஜீவியம் பிரிப்பது differentiation.
  • சத்தியஜீவியச் செயலை மனத்தால் புரிந்து கொள்ள முயன்றால் குழப்பம் எழும்.

நிலையான சலனம்

இதை ஸ்தாணுஎனக் கூறுவர். ஓடும் ரயிலில் நாம் தந்திக் கம்பங்களைக் காணும் பொழுது, நிலையாகத் தோன்றுவது போல் உலகம் நிலையாக இருக்கிறது. நிலையானது சத். அசைவது சக்தி. சலனமாக நாம் காண்பது நிலையானது. நிலையானதாக உள்ள சத் சலனமான சக்தியாக இருக்கிறது. சலனம் காலத்துள்ளும், நிலையானது காலத்தைக் கடந்தும் உள்ளது. மூன்றாம் நிலை காலத்துள் இவை இணைந்துள்ளன. மௌனத்துள் உள்ள சப்தம் போல் ஸ்தாணுவில் சலனம் உள்ளது. ஸ்ரீ அரவிந்தம் உலகில் மலர்ந்தால் இரண்டும் இணைந்து செயல்படும் அற்புதம் தெரியும்.

அகண்டமான கண்டம் INFINITY IN THE FINITE.

தத்துவத்தில் good,evil,Good,என ஒரு கருத்துண்டு. Good என்பது Self-existing good எனப்படும். நமக்கு நல்லது, கெட்டது என இரண்டுண்டு. கெட்டதற்ற நல்லது ஒன்றுண்டுஎன நம் அறிவுக்கெட்டாது. ஒளியும், இருளும் நாமறிவோம். இருளற்ற ஒளியென ஒன்றுண்டுஎன நாம் நினைப்பதில்லை. குறையும், நிறையும் உண்டு. குறையற்ற நிறை என்பது நம் அனுபவத்தைக் கடந்தது. கண்டம் சிறியது, அகண்டம் பெரியது. அகண்டம் கண்டத்துள் உண்டு. கண்டத்தையறியாத அகண்டமுண்டு என்பது ஸ்ரீ அரவிந்தத்திற்கேயுரிய கருத்துகள். உலகில் infinity என்பது finiteக்கு எதிரானது. பிரம்மத்திற்குரிய infinityக்கு எதிரான finite இல்லை என்பதால் அதை self-existing infinity என்கிறார் பகவான். மனிதனும் தெய்வமும் எதிரானவை. தெய்வம் மனிதனில் வெளி வந்தால் அது மனித தெய்வமாகும். அதுவே ஸ்ரீ அரவிந்த இலட்சியம். இதுவரை உலகம் காணாதது என்பதால் உதாரணம் தர இயலவில்லை. பகவான் அலிப்பூரில் கண்ட நாராயணத் தரிசனம் அகண்டமான கண்டம், மௌனமான சப்தம் வரிசைக்குரியது.

புறமான அகம்

அகம் ஒரு பகுதி, புறம் அடுத்த பகுதி. அகம், புறத்தை உட்கொள்ளக் கூடியது. அப்படி உட்கொண்டால் அது உயரும். ஜடம் வேறு, ஆன்மா வேறு என்பது நம் கருத்து. மனம் பிரபஞ்ச ஜீவியத்திற்கு உயர்ந்தால் ஜடம் சக்தியலையாகத் தெரியும். ஆன்மாவும் சக்தியலையாகத் தெரியும். மனமும், உயிரும் சக்தியலைகளாகத் தெரியும். ஜடமும், ஆன்மாவும் சக்தியலைகளாக இருப்பதால் பிரபஞ்ச ஜீவியத்தில் அவை இணைகின்றன, அவை ஒன்றேஎன அறியலாம். அதற்கும் அடுத்த கட்டம் உண்டு. அது கடந்த நிலை, காலத்தையும், சிருஷ்டியையும் கடந்த நிலை. பிரம்மம் சிருஷ்டியில் சத்தாக மாறியது. சத் ஏற்பட்டவுடன் எதிரான அசத் ஏற்பட்டது. சத் சித்தித்த ரிஷிகள் உண்டு. அசத் சித்தித்த ரிஷிகள் உண்டு. சத் சித்தித்தபின் அதைவிட்டு அசத்தையடைந்தவர் அசத் என்ற சித்தி பெற்றவர். பகவான் சொல்வது வேறு. சத்திலிருந்து

அசத்திற்குப் போக சத்தை விடவேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை. சத்தை விடாமல் அசத்தை அடைவது முழுமையை நாடுவது. சத் பகுதி, அசத் பகுதி. இரண்டில் எது சித்திப்பதும் பகுதியான சித்தி. சத் சித்தித்தபின் சத்தில் ஊன்றிய காலை எடுக்காமல் அசத்தை எட்டினால், அது சித்தித்து விட்டால், சத்தும், அசத்தும் சித்தித்ததாகும். அது முழுமை சித்தித்ததாகும். அதனால் சத் உயர்கிறது, அசத்தும் உயர்கிறது. இரண்டும் இணைகின்றன. அவை பிரம்மத்தில் இணைகின்றன. அதே போல் அகமும், புறமும், உயர்ந்து உயர்ந்த அகமாகிறது. அதுவே அகமான புறம்.

ஆனந்தமான வலி

ஆனந்தம் அறியாமையால் வலியாகிறது. வலியை உணர்வது மனம், அதுவும் மேல் மனம். மனம் வலியைப் பொறுத்துக் கொள்ள முடிவு செய்தால் எந்த அளவு வலியையும் பொறுத்துக் கொள்ளலாம் என்று அன்னை கூறுகிறார். மயக்கமருந்து வருமுன் காயம்பட்ட கை, காலை வெட்டி எடுத்தனர். அவற்றை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடிந்தது? வலி அளவுகடந்து அதிகரித்தால் அது ஆனந்தமாகும் என்கிறார் அன்னை. வலிக்கு அனந்தமில்லை. பொய், தீமை, குறை, இருள் போன்றவை பெரியதாகலாம், அனந்தத்தை எட்ட முடியாது (can reach immensity never touch infinity). வலியும், ஆனந்தமும் எதிரானவை. அந்த ஆனந்தத்தை பகவான் Bliss என்கிறார். இரண்டையும் கடந்த ஆனந்தம், இரண்டையும் உட்கொண்ட ஆனந்தத்தை delight என்கிறார். ரிஷிகள் கண்டது அக்ஷரப் பிரம்மம். அது பகுதியான பிரம்மம். அசைவற்றது. பிரம்மம் அசையும், அசையாமலுமிருக்கும். அது முழுமையான பிரம்மம் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

அமிர்தமான விஷம்

அமிர்தம் அமர வாழ்வு தரும். விஷம் உயிரை எடுக்கும். இவை எதிரான கருத்துகள். உயிர் தரும் விஷமோ, உயிரை எடுக்கும் அமிர்தமோ உண்டா? இருள் அடர்ந்த ஒளி என்பது போல் விஷம் உயர்ந்த அமிர்தம் என்ற நிலை தத்துவத்திற்குண்டு,

 வாழ்க்கைக்கு ஒத்து வாராது. ஒளி அடர்ந்து, செறிந்தால் இருளாகிறது என்பது தத்துவம். விஞ்ஞானம் அதை ஆமோதிக்கும். பச்சை என்பது வெண்மையான ஒளியைப் பெற இடம் பச்சை நிறத்தை மட்டும் பிரதிபலித்து மற நிறங்களைக் கிரகித்துக் கொள்கிறது. அதையும் கிரகித்துக் கொண்டால் கறுப்பாகிறது. அதனால் கறுப்பான இருள் அடர்ந்த ஒளியாகும்.

பரமாத்மாவான ஜீவாத்மா

நாம் அகந்தையை ஜீவன், அல்லது ஜீவாத்மா எனத் தவறாகப் புரிந்து கொள்கிறோம். அகந்தை அழிந்தால் அல்லது கரைந்தால் அங்கு புருஷன் வெளிப்படுகிறான். அது World Purusha பிரபஞ்ச ஆத்மா. இதைப் புறத்தில் காணலாம். அகத்திலும் காணலாம். அகத்தில் பிரபஞ்சத்தைக் கண்டால், அதனுள் ஆத்மா தெரியும். புறத்தில் பிரபஞ்ச ஆத்மாவாகத் தெரியும் புருஷன் அகத்தில் பிரபஞ்ச அனுபவத்துள் பிரம்மத்தின் ஆத்மாவாகத் Transcendent Purusha  தெரிகிறது. அது பரமாத்மா. எனவே ஜீவாத்மாஎன நாம் அறிந்தது பரமாத்மாவாகும்.

வலுவான பலஹீனம்

வலிமை, எளிமையுண்டு. எதிரானவை. வலிமையுயர்ந்து பண்பால் எதிரியைத் தாக்க மனம் வாராவிட்டால் அது பலஹீனமாகக் கருதப்படும். அது பலஹீனமன்று. அதன் எதிரில் அதன் வலிமையை ஏற்று உலகம் அடங்கியிருப்பதும் உண்டு.

கோரமான அழகு

அழகு என்பது ஆனந்தத்தின் பகுதி. மனம் ஆனந்தத்தை அழகாக அறிகிறது. உயிர் ஆனந்தத்தைச் சந்தோஷமாக உணர்கிறது. ஆத்மா ஆனந்தத்தை அன்பாக அறியும். ஆனந்தம் அகம். அதன் புறம் அனந்தம். மனம், உயிர், ஆத்மா அனந்தத்தை அழகு, சந்தோஷம், அன்பாக உணர்கின்றன. அழகு என்பது ரூபம்.

சிறப்பான ரூபம் அழகு. (Perfect form is beauty). அழகில்லாமல் இருக்கலாம். அழகு எப்படிச் சிறப்பான ரூபமோ அதற்கெதிரான ரூபம் விகாரம், கோரம்.

                   அழகும் கோரமும் எதிரானவை.

  • அழகு எப்படிக் கோரமாக இருக்க முடியும்?

நிலைக்கேற்ப ரூபம் மாறும். நிலைகள் பல. ரூபங்களும் பல. ஒவ்வொரு நிலைக்குரிய அழகுண்டு. நாம் பேசும் பாஷை அழகாக இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். நாம் மழலை பேசினால் அது அசிங்கமாக இருக்கும். குழந்தை பேசும் மழலை அழகு. எது நமக்கு அசிங்கமோ, அது குழந்தைக்கு அழகு. பேச்சுக்குரிய ரூபம் மழலை. தோற்றத்திகுரிய ரூபம் அழகு. கார் டிசைன் போட கம்பனி டிசைன் என்ஜீனியர் படும்பாடு பெரியது. தோற்றம் அழகாக அமைந்து விட்டால், அதனால் கார் அதிகமாக விற்கும். Luggage stand கார் மீது வைக்க வேண்டிய அவசியம் ஒரு சிலருக்குண்டு. அதனால் தோற்றம் விகாரமாவதைப் பொருட்படுத்தாமல் அதை வைத்தனர். அது விகாரம் எனப் புரிந்து கொள்ளாமல், அதை அழகாக நினைத்துப் பலரும் அதை வைத்தனர். மனவளர்ச்சியற்றவர்க்கு அது அழகாகத் தோன்றும்.

  • மனவளர்ச்சியற்றவர்க்குப் பிறருக்குரிய விகாரம் அழகாகும்.
  • ஒருவருக்கு அழகு, அடுத்தவர்க்கு விகாரம்.
  • அழகு நிலைக்குத் தகுந்தாற் போல் மாறும்.
  • கோரம் அழகிற்குட்பட்டது, அழகு கோரத்திற்குட்பட்டது.

சந்தோஷமான வருத்தம்

பகவான் ஸ்ரீ அரவிந்தர் சந்தோஷத்தின் உறைவிடம். அவரை தரிசித்தவர்கள் பல மாதம்வரை அதை உணர்வார்கள். ஆயுள் முழுவதும் அவர் வருத்தமாக இருந்தார். அதை Psychic sadness ஆத்மாவின் வருத்தம் என்கிறார். அவர் தாங்கி வந்த அருளை உலகம் ஏற்காததால், சந்தோஷத்தின் சாகரமான அவர் வருத்தப்பட்டார். ஒருவர் சந்தோஷப்படும் காரியம் அடுத்தவர்க்கு

வருத்தம் தரும். ஜெயித்த கட்சி சந்தோஷப்படும் பொழுது தோற்ற கட்சி வருத்தப்படுகிறது. ஒரே நிகழ்ச்சி ஒருவருக்கு சந்தோஷத்தையும், அடுத்தவர்க்கு வருத்தத்தையும் தருகிறது. இரண்டும் ஒரேயிடத்தில் உற்பத்தியாகின்றன. சந்தோஷம், வருத்தம் என்பது மனநிலையைப் பொருத்தது. நிகழ்ச்சியைப் பொருத்தது.

ஞானமான அஞ்ஞானம்

ஞானமும், அஞ்ஞானமும் எதிரானவை. இரண்டையும் உட்கொண்ட பெரிய நிலை ஜோதி.

மனிதனான பிரபஞ்சம்

பிரபஞ்சம் மனிதனுள் உள்ளது. மனிதன் பிரபஞ்சத்துள் உள்ளான். பிரம்மம் இரண்டையும் கடந்தது, இரண்டையும் உட்கொண்டது.

மரணமான அமரவாழ்வு

மரணமற்றது அமரவாழ்வு. மரணம் உடலையழித்துப் புது உடல் பிறக்க வழி செய்கிறது. மரணத்தால் உடல் அழிவதால் ஆத்மா மீண்டும் புது உடலில் பிறக்கிறது. உடல் அழிந்தாலும், அழிவது குறிப்பிட்ட ஓர் உடல். உடல் என்பதை நிலைநிறுத்துவது மரணம், பிறப்பு. மரணம் வாழ்விற்கு நித்தியமளிக்கிறது என்பது பகவான் வாக்கு.

புருஷனான பிரகிருதி

புருஷனும் பிரகிருதியும் எதிரானவை. பிரகிருதியுள் புருஷன் உண்டு. அப் புருஷன் பரிணாம வளர்ச்சி பெறுகிறான். அது சைத்தியப்புருஷன். அவனுள் புருஷனும் பிரகிருதியும் அடங்கியவை.

பகுதி,முழுமை,  இரண்டையும்  உட்கொண்ட   பூரண   முழுமை   என்ற   தத்துவம் ஸ்ரீ அரவிந்தத்திற்கு அடிக்கல். அது தெளிவாகப் புரிந்தால், பெருந்தடை விலகும். இதுபோன்ற மற்ற கருத்துகளையும் எடுத்து ஆராய்ந்து விளக்கினால் மற்ற தடைகள் விலகும்.

பகுதி, முழுமை என்பதிலுள்ள அடுத்த அம்சம்

முழுமை பகுதியாகப் பிரிகிறது. பகுதிகளைச் சேர்த்தால் மீண்டும் முழுமை வரும் என்பது அறிவு ஏற்கும் கருத்து. அது சில சமயங்களில் சரி. சரியில்லாத சமயங்கள் உண்டு. ஒரு கடிகாரம் முழுமை. அதன் பாகங்களைப் பிரிக்கிறோம். மீண்டும் அவற்றை ஒரு கூடையில் ஒன்று விடாமல் எடுத்துக் கொண்டால், அது கடிகாரமாகாது. அது கடிகாரத்தின் பகுதிகளேயாகும். கடிகாரம் என்ற முழுமைக்கும், அதன் பகுதிகள் சேர்ந்த தொகுப்பிற்கும் இடையே ஒரு வெளியுண்டு. அது சூட்சுமமானது. பகுதிகள் எப்படிச் சேர வேண்டும் என்பது பகுதிகளில் இல்லை. அது நம் மனத்திலுள்ளது. சூட்சும ஞானம். அதன்படி பகுதிகள் சேர்ந்தால் பகுதிகள் கடிகாரமாகும். எனவே முழுமை பகுதிகளின் தொகுப்பை விடப் பெரியது என்ற கருத்து நூலின் பல இடங்களில் வருகிறது. அதன் சூட்சுமம் புரிய வேண்டும்.

REVERSAL , தலைகீழான மாற்றம்

- நண்பர்கள் எதிரிகளாவது, எதிரிகள் நண்பர்களாவது தலைகீழ் மாற்றம். - ஜனத்தொகை பெருகுவது நாம் பெற்ற சாபம் என்று 50 வருஷமாகப் பேசியவர் ஜனத்தொகை பெருக்கம் நமக்குச் சாதகமானது என்கிறார்.

மேல் மனம், உள் மனம், அடி மனம், சைத்தியப்புருஷன் என்பவை படிப்படியாக உள்ள நிலைகள்.

1) மேல் மனம்

நாமறிந்தது, நாம் வாழ்வது மேல் மனத்தில். மனிதனுடைய மனம் சுருங்கி, குறுகி, காலத்திற்குக் கட்டுப்பட்டு, அகந்தையும் செயல்படச் சம்மதித்து, சிறியதாக (finite) ஆவது மேல் மனத்தில்.

இதன் குணங்கள்:-

நம் மனம் தலைகீழாகச் செயல்படும் இடம். ஆனந்தம் வலியாக மாறித் தோன்றும். Infinite இங்கு finite ஆகத் தோன்றும். Eternity காலத்தைக் கடந்த நிலை Time காலமாகத் தலைகீழே மாறும். ஜீவாத்மா சுருங்கி, அஞ்ஞானத்திற்குட்பட்டு அகந்தையாக இங்குக் காட்சியளிக்கும். தெய்வீக மனம், divine mind இங்கு மனித மனமாகிறது creature mind. தெய்வீக மனம் சத்தியஜீவியத்திலிருந்து உற்பத்தியாகிறது. சத்தியஜீவியம் முழுப்பார்வையுடையது. அதன் ஒரு பார்வையில் உலகம் முழுவதும் தெரியும். தெய்வீக மனம் சிறியது. சிறியதானாலும் அந்த அளவில் முழுமையுடையது. அதகு சத்தியஜீவியம்போல் முழுப்பார்வையில்லை. ஒரு புறம் மட்டும் பார்க்க வல்லது. ஆனால் இருபுறமும் மாறி மாறிப் பார்க்கக் கூடியது. தெய்வீக மனம் இருபுறமும் பார்க்க மறுத்து ஒரு புறம் மட்டும் பார்க்க ஆரம்பிப்பது,

  • தெய்வீக மனம் மனித மனமாவது.
  • அது சத்தியஜீவியத்தை மனம் மறப்பது.
  • அறியாமை ஆரம்பிக்கும் இடம் இது.
  • திறமையை, கடமையை மறந்து பயன்படுத்த மறுப்பது அறியாமை.
  • இப்படி மறப்பதன் ஏழு கட்டங்கள் ஏழு அஞ்ஞானமாகும்.

- பிரம்மத்தை மறப்பது ஆதியின் அஞ்ஞானம். - பிரபஞ்சப் பிரம்மத்தை மறப்பது பிரபஞ்ச அஞ்ஞானம். - உலகை மறந்து அகந்தையை ஏற்பது அகந்தையின் அஞ்ஞானம்.

- காலத்தின் உயர்ந்த நிலைகளை மறப்பது காலத்தின் அஞ்ஞானம். - ஜீவனின் பெருநிலைகளை மறப்பது மனத்தின் அஞ்ஞானம். - ஒரு பகுதி மற பகுதிகளை மறப்பது அமைப்பின் அஞ்ஞானம். - செய்வதறியாத நிலை நடைமுறை அஞ்ஞானம்.

  • மேல் மனம் அடிமனம் தலைகீழே மாறுவதால் உற்பத்தியானது.
  • அறியாமையை உற்பத்தி செய்த ஆண்டவன் அது பூரணம் பெற (perfect) மேல் மனத்தை ஏற்படுத்தி அங்கு அதைப் பூரணமாக்கினான். அதற்காக அதைத் தலைகீழே மாற்றினான். படிப்பு முடியும்வரை பையன் உலகை மறக்க உலகைத் துறப்பது அவன் வாழ்வைத் தலைகீழே மாறுவதாகக் கொள்ளலாம்.

2) உள் மனம் INNER MIND

இது மேல் மனத்தின் ஆழ்ந்த பகுதி.

இங்கு காலம் காலத்தைக் கடந்த நிலையாகத் தலைகீழாக மாறுகிறது.

அகந்தை மனோமயப்புருஷனாகிறது.

புலன்களால் அறியும் மனம் சூட்சுமமாக அறியும் மனமாக விரிவடைகிறது.

மேல்மனத்திற்கில்லாத சூட்சுமம் பெறுகிறது. சூட்சுமம் ஆன்மீகமில்லை.

Finite கண்டம் infinite அதற்கெதிரான அகண்டமாகிறது.

வலியாக மேல்மனம் ஆனந்தத்தை உணரும். உள் மனத்திற்கு வலியைக் கடக்கும் திறனுண்டு. வலியை ஆனந்தமாக மாறும் திருவுருமாறும் திறனில்லை.

இங்குள்ள ஒரு நிலை நிர்வாணத்தையடைய உதவும்.

அடுத்த நிலை சைத்தியப்புருஷனைத் தேடிச் செல்லும் வாயிலாக அமையும்.

விரும்பினால் உலகையறியும் திறனுடையது.

உள்ளே போக அனுமதியளித்த உள்மனம் உயர்ந்து (தலை கீழே மாறி) மேலே போக உதவும் லோகமாகும்.

3) அடி மனம் SUBLIMINAL MIND

பாதாளமும் பரமாத்மாவும் சேருமிடம் இது.

இது பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளது.

இதில் மறைந்துள்ள குகையில் சைத்தியப்புருஷன் உறைகிறது.

பூரணயோகத்தை மேற்கொள்ளும் லோகம் இது.

வலியை ஆனந்தமாக்கும் திறனுடையது.

இதுவரை செய்த யோகங்கள் உள்மனத்துடன் முடிந்து விடுகின்றன.

அங்கு அதிகபட்சம் தெரிவது அக்ஷரப்பிரம்மம்.

அடிமனம் அக்ஷரப்பிரம்மம், க்ஷரப்பிரம்மம் சேர்ந்த முழு பிரம்மத்தையறிய வல்லது.

மேல்மனம் தலைகீழே மாறிய லோகம் அடிமனம்.

மேல்மனம், உள்மனம், அடிமனம், சைத்தியப்புருஷன் என்ற நான்கு நிலைகளும் இரண்டாகப் பிரிகின்றன. மேலேயுள்ளது ஜீவியம், அடியிலுள்ளது பொருள். எனவே 8 நிலைகள் உள்ளன.

ஒவ்வொரு நிலையும் விஷயத்தைத் தலைகீழே மாறித் தோற்றமாக்குகின்றன.

இந்த 8 தலைகீழ் மாற்றத்திகும் உதாரணம் தெரிவது நல்லது.

எந்த ஒரு செயலிலும் இந்த 8 தலைகீழ் மாற்றமும் உண்டு. அவை ஒரே செயலில் தெரிவது விவேகம்பெறும் தகுதி தரும். அவற்றுள் சில:

  1.  

முரண்பாடு உடன்பாடு. தடை முன்னேற்றக் கருவி.

மேல்மனம் - ஜீவியம்

  1.  

தோல்வி வெற்றிக்குரிய பாதைநஷ்டமடையாதவன் செல்வம் பெற முடியாது.

டைபாய்டு வந்து பிழைத்தவர்

உடலில் உள்ள ஊனம் ஒன்று மாறுவதுண்டு.

மேல்மனம் - பொருள்

  1.  

ஜடமான புலனறிவு சூட்சுமமாகிறது.

மனிதன் பேசுவதும் நினைப்பதும் எதிரானவை.

உள் மனம் - ஜீவியம்

 

  1.  

அகந்தை மனோமயப்புருஷனாகிறான்.

சிந்தனை அழிந்து மௌனமாகி நிர்வாணம் எழுகிறது.

காலம் மாறிக் காலத்தைக் கடந்ததாகிறது.

உள் மனம் - பொருள்

  1.  

பூவுலகம் பிரபஞ்சமாகிறது.

காலம் மாறி மூன்றாம் நிலையை எய்துகிறது.

அடி மனம் - ஜீவியம்

 

  1.  

வலி ஆனந்தமாகிறது.

பாதாளம் பரமாத்மாவாகிறது.

அடி மனம் - பொருள்

 

  1.  

ஆனந்தம் பிரம்மானந்தமாகிறது.

அகந்தையும், மனோமயப்புருஷனும் சைத்தியப்புருஷனாகின்றனர்.

சைத்தியப்புருஷன் - ஜீவியம்

 

  1.  

வேதனையான உலகம் அற்புதமாகிறது.

உலகினின்று தீமையழிகிறது.

பாதாளமும், பரமாத்மாவும் மனத்தில் சந்திக்கின்றன.

சைத்தியப்புருஷன் - பொருள்

 

இந்நிலைகள்   மாற   உதவுவன   I) அறிவு   II) விவேகம்   III) நிஷ்டை IV) நிஷ்டை பலித்த தவம்     V) சமர்ப்பணம்    VI) சரணாகதி   VII) உடலுணர்வின் சமர்ப்பணம்   VIII) பூரணச் சரணாகதி.

நம் வாழ்வை விமர்சனம் செய்து இந்த எட்டு நிலைகட்குரிய நிகழ்ச்சிகளைக் காண்பது விவேகம், ஆன்மீகப் பொறுமை, நிதானம் தரும். ஒரே நிகழ்ச்சியில் இவ்வெட்டு நிலைகளைக் காணச் சமர்ப்பணம் உயர்ந்து சரணாகதியாகி பூரணம் பெற வேண்டும். அது யோக வாழ்வுக்குரிய ஞானம். இந்த எட்டு நிலைகட்கும் நமக்குத் தெரிந்த உதாரணங்களை ஓரளவு கூறலாம்

  1.  

முரண்பாடு, உடன்பாடு.

கணவன் மனைவி பிணக்கு

அன்பின் அடையாளம்.

  1.  

தோல்வி வெற்றிக்குரிய பாதை.

லிங்கன், சாக்ரடீஸ் மனைவிகளின் அன்பு வெளிப்படுதல்.ஒருவர் துடைப்பத்தால் லிங்கனை  அடித்து விரட்டினார் அடுத்தவர் மலம் நிறைந்த பானையை தலையில் போட்டு உடைத்தார் . 

  1.  

நினைவும் செயலும் எதிரானவை.

அகல்யா இந்திரனை அனுபவித்துக் கல்லானது.

  1.  

காலம் மாறி காலத்தைக் கடந்தது.

நளாயினி சூரியனை

நிறுத்தியது.

  1.  

பூவுலகம் பிரபசமாகிறது.

காலம் மூன்றாம் நிலைக் காலமாகிறது.

அனுசூயா திருமூர்த்திகளைக்

குழந்தையாக மாற்றியது.

 

  1.  

வலி ஆனந்தமாகிறது

பீஷ்மர் அம்புப் படுக்கையில் உள்ளபொழுது கிருஷ்ணன்

வலியை எடுத்தது.

  1.  

ஆனந்தம் பிரம்மானந்தமாகிறது.

பிருந்தாவனத்தில் கிருஷ்ணலீலை.

  1.  

வேதனையான உலகம் அற்புதமாவது.

கொல்ல வந்த புலி தன்னைத் தின்ன வேண்டும்என உடல் விழைந்தது.

 

நம் வாழ்வில் இந்த எட்டு நிகழ்ச்சிகளும் ஒரே செயலில் மனத்திற்கு விளக்குவது ஞானம். அதை ஏற்பது ஞான சித்தி. அதைச் செயல்படுத்துவது சத்தியஜீவிய சித்தி. மேற்சொன்ன 8 உதாரணங்கள் not precisely exact மிகவும் பொருத்தமானவை இல்லை. They indicate. அவை சுட்டிக்காட்ட உதவும். சொந்த அனுபவம் சொர்க்கம். சொந்த அனுபவம் சுட்டிக் காட்டுபவற்றை ஐயம் திரிபு அறத் தெளிவுபடுத்தும்.

இவற்றை ஒருவர் பின்பற்றிப் பலனடைய வேண்டுமானால்

I) பிணக்கு எழுந்தபொழுது அதை வளர்க்காமல், அதில் அன்பு வெளிப்பட வழியிருக்கிறதாஎன ஆராய்வது,

II) கடந்த காலத் தோல்விகள் பிறகு நமக்கு வெற்றிக்கு வழி செய்தவற்றை யோசனை செய்து அறிவது,

III) தவற்றை ரசித்து அனுபவித்த நிகழ்ச்சி பின்னால் வேதனை தந்ததையும், வேதனை முடிந்தபின் அதுவே பண்பானதையும் நம் வாழ்வில் இருந்ததை அல்லது பிறர் வாழ்வில் காண முயல்வது,

IV) நெறி பிறழாத நேரம் வாழ்வில் காலம் கட்டுப்படுவதை நம் வாழ்வில் சோதனையாகச் செய்து அறியலாம்,

V) எதிரி மட்டமாக நம்மை அவமானப்படுத்த முயலும் பொழுது பொறுமையும், அன்னை மீது நம்பிக்கையும் அவர்களே அவமானப்படுவதைக் காட்டும்,

VI) பொறுக்க முடியாத வேதனைக்குக் காரணம் புரிந்து விளங்கியவுடன் அகலும்,

VII) பக்தியும், நம்பிக்கையும் மனிதகட்டத்தைத் தாண்டும் பொழுது தவறான செய்கை ஆனந்தம் தருவதைக் காணலாம்,

VIII) கொல்ல வருபவனை - நம்மை அழிக்க வருபவனை - இறைவனாகக் கருதிய நேரம் வேதனை பூரிப்பான இன்பமாகும்..

PROCESS OF CREATION

சிருஷ்டியின் சூட்சுமம் இரகஸ்யமானது

- ஸ்ரீ அரவிந்தர் முழுப் பிரம்மத்தைக் கண்டார். அவரே முழுப் பிரம்மமானார்.

அது இறைவன் வரும் தருணம்.

நெடுநாள் பாடுபடும் பொழுது பலன் தெரியாது. பாடு தெரியும். பலன் தெரியும் பொழுது ஆயிரமாண்டில் நடப்பது அரை க்ஷணத்தில் நடக்கும்.

அந்த நேரம் வந்தபொழுது பகவான் உலகில் அவதரித்தார். (அதன்பின் 7ஆம் வயதில் டார்ஜிலிங் பள்ளியில் சேர்ந்த பொழுது காரிருள் அவருள் நுழைந்தது. அவர் பிறந்தவுடன் தாயார் சித்த ஸ்வாதீனமிழந்தார்.

7ஆம் ஆண்டு முதல் 21ஆம் ஆண்டுவரை பணமில்லாமல், சாப்பாடின்றி, குளிரில், கோட்டில்லாமல் சித்ரவதைப்பட்டார்.

உடன் பிறந்தவருடன் இந்தியா திரும்பும் பொழுது தவறான செய்தி தகப்பனார் உயிரை எடுத்தது. பகவான் புறப்பட்ட கப்பல் பெயரைத் தந்தி மூலம் தகப்பனார் அறிந்தார். பகவான் வேறொரு கப்பலுக்கு மாறியது தகப்பனாருக்கு அறிவிக்கப்படவில்லை. பேப்பரில் தகப்பனார் முதல் கப்பல் மூழ்கியதாகப் பார்த்து மாரடைத்து இறந்தார். 1910இல் பகவான் தம்பி பரீன் தூக்குத் தண்டனை பெற்றார். பிறகு அது ஆயுள் தண்டனையாக மாறி விடுதலை பெற்று 1959 வரை உயிரோடிருந்தார். இது அவர் வாழ்வு).

- முழுப் பிரம்மத்தில் அசைவற்ற அக்ஷரப் பிரம்மம் பகுதி. (ரிஷிகளும் கீதையும் அதுவரை சாதித்தனர்.) முழுபிரம்மம்

சத்தாகி - சச்சிதானந்தமாகி - சத்தியஜீவியமாகி, மனம், உயிர், உடலாகி சிருஷ்டி முடிந்து, பரிணாமம் ஆரம்பித்து ஜடம் வாழ்வாக மலர்ந்து மனமாகப் பூரித்து மனிதனாக நாமிருக்கிறோம். இத்தனை மாறுதல்களும் மேல் மனத்தில். உள்ளே முழுப் பிரம்மம், பிரம்மமாகவேயுள்ளது. அதில் எந்த மாற்றமுமில்லை. மாற்றம் தோற்றத்திலுள்ளது. அது நம் மேல் மனத்திற்குரியது.

- பூரணப் பிரம்மம் சிருஷ்டியின் முதற் கட்டமாக சத் ஆயிற்று. அதை நாம் சச்சிதானந்தம் என்கிறோம். பிரம்மம் (Self-conception) தன் இச்சையால் ஆனந்தத்தைத் தேடி சத் ஆனவுடன், பிரம்ம ஜீவியம் ( the consciousness of the Absolute) வெளிப்படுகிறது. அதை தெய்வீக மாயை என்கிறோம். அது சத்தை மூன்று பாகமாகப் பிரித்து - பிரிக்காமல் பிரித்து - சச்சிதானந்தமாக்கியது.

- சிருஷ்டியின் சூட்சும இரகஸ்யம் அகம் புறமாவது ( objectifying) என்கிறார் பகவான். அகமான பிரம்மம் இரண்டாகப் பிரிந்து புறமான சிருஷ்டியாகிறது. சச்சிதானந்தம் புறமானால் அது சத்தியஜீவியமாகும். (சத், அகம், புறம்எனப் பிரிந்தால் அகம் ஆத்மாவாகவும், புறம் சத்தியமாகவுமாகிறது. ஜீவியம் அகம், புறமாகப் பிரிவது அகத்தில் காலமாகவும், புறத்தில் இடமாகவுமாகிறது. சத்தியஜீவியம் அகமான இறைவனாகவும் புறமான பிரபஞ்சமாகவுமாயிற்று.)

- சத்தியஜீவியம் அகம் சிருஷ்டி புறம்எனப் பிரியும் பொழுது அகத்திற்கும், புறத்திற்குமிடையில் காலம் உற்பத்தியாகி மனமாக மாறுகிறது. மனம் கருவி காலம் அதன் செயல். அது தெய்வீக மனமாக ஆரம்பித்து மனித மனமாக மாறி, வாழ்வையும், ஜடத்தையும் சிருஷ்டிக்கிறது.

- மனம் இரு பகுதிகள் கொண்டது. ஒன்று ஞானம். அடுத்தது செயலாற்றும் மனோ உறுதி. இதைச் செயல் எனவோ, ஆற்றலெனவோ, உறுதியெனவோ கூறலாம். ஞானத்திற்குத் திறனில்லை. உறுதிக்கு ஞானமில்லை. ஞானம் உறுதியை

 



book | by Dr. Radut