Skip to Content

இந்திய ஆன்மீக வரலாறு

The History of Spirituality in India

Life Divine இந்திய ஆன்மீக வரலாறு

இந்தியா ரிஷிகள் பிறந்த நாடு. உலகின் ஜகத்குருவாகும் தேசம். ஆன்மீகம் வேத காலத்தில் பிறந்தது. உபநிஷதம் வேதத்தை மனத்தின் உச்சிக்குக் கொண்டு போயிற்று. புத்தர் உலகை வென்றார். தீமையை வென்றார். ஆன்மாவே இல்லை, தேவையில்லை என்றார். அகந்தைக்கு வாழும் வழியில்லாத வாழ்வை வகுத்துக் கொடுத்தார். பக்தி பிறந்தது. கிருஷ்ண பரமாத்மா அவதரித்தார். சைத்தியப் புருஷன் பிறந்தான். தீமையை உலகில் வென்று யுகதர்மத்தை கிருஷ்ணன் நிலை நாட்டினார். கீதோபதேசம் சரணாகதியை கனிந்த ஆத்மாவுக்கு அருளியது. உலகின் குரு ஆகவும் உடலே பிரதானம். நாட்டின் உடல் 56 குறுநில மன்னரால் ஆளப்படுகிறது. உடல் ஒன்றுபட வேண்டும். எல்லா முறைகளையும் கடைப்பிடித்துப் பலன் காணாத இயற்கை அன்னிய படையெடுப்பை நாடியது. ஆயிரம் ஆண்டில் நாடு உடல் ஒன்றுபட்டது. பர்மாவும், இலங்கையும், மலேயாவும் உடலால் ஒன்றின. சூட்சுமத்தில் நாடு விடுதலை பெற்றது. அது ஸ்ரீஅரவிந்தர் பெற்ற வரம். ஒரு லட்சம் ஆங்கிலேயரால் முப்பது கோடி இந்தியரை புரட்சியில் சமாளிக்க முடியுமா? ஆயுதம் ஏந்தி நாடு விடுதலைக்குப் போராட வேண்டும் என ஸ்ரீ அரவிந்தர் கருதினார். நாடு அஹிம்சையை நாடியது. இருப்பினும் 1942இல் கிரிப்ஸ் திட்டம் வந்தபொழுது முழுச் சுதந்திர வாய்ப்பு இருந்தது. நாட்டின் தலைமை ஆன்மீகத் தீர்க்க தரிசனத்தை ஏற்க மறுத்தது. மீண்டும் உடல் பிளவுபட்டது. அஹிம்சை நாட்டிற்கும், தலைவருக்கும் ஹிம்சையைக் கொண்டு வந்தது. ஸ்ரீ அரவிந்தரின் முதல் இலட்சியம் 45 நாடுகட்கு விடுதலை அளித்தது. அவரது அடுத்த இலட்சியங்கள் கீழ்வருமாறு,

  • உலகம் ஒன்றுபட வேண்டும்.
  • இந்தியா உலகின் குருவாகும்.
  • சத்திய ஜீவன் பிறப்பான்.

மனிதன் என்பவன் பல பாகங்களாலானவன். ஆன்மா அதனுள் முதன்மையானது. உடல் முதல் ஆன்மாவரை எல்லாக் கரணங்கட்கும் மற்ற எல்லாக் கரணங்களும் உண்டு என்பது கவனிக்கத்தக்கது. உதாரணமாக மனம் என்ற கருவிக்கு உணர்ச்சியுண்டு. மூளை என்பது மனத்தின் உடல், மனத்தில் ஆன்மாவுண்டு. மேலும் ஒரு விஷயம் மனத்திற்கு சைத்தியப் புருஷனுண்டு. உடலுக்கு அறிவுண்டு, உணர்ச்சியுண்டு. உடலின் ஆன்மா அன்னமயப் புருஷன் எனப்படும். உடலுக்கு சைத்தியப் புருஷனுண்டு. சைத்தியப் புருஷன் மனத்திலிருந்து வளர்ந்து உணர்வின் மூலம் உடலின் சைத்தியப் புருஷனானால், அது சத்திய ஜீவனாகும்.

உடல் உணர்வு மனம் ஆன்மா சைத்தியப் புருஷன் என்பவை நம் கரணங்கள். மனிதன் ஆதி நாளில் உடலாலேயே வாழ்ந்தான். அவன் பெற்ற அறிவு உடலின் அனுபவத்தால் பெறப்பட்டது. அன்று அவன் உடலின் ஆன்மாவின் பகுதியாக அன்னமயப் புருஷனிருந்தது. பிறகு உணர்ச்சியும், அறிவும் வளர்ந்தன. உணர்வின் உடல் நரம்பாகும். அதன் ஆன்மீகப் பகுதிக்குப் பிராணமயப் புருஷன் எனப் பெயர். மனத்தின் ஆன்மாவின் பகுதிக்கு மனோமயப் புருஷன் எனப் பெயர். கிருஷ்ணாவதாரம் தெய்வீக மனத்தின் அவதாரம். இராமாவதாரம் (Higher Mind ) முனிவர் மனத்தின் அவதாரம். கிருஷ்ணாவதாரத்திற்கு முன் பக்தி யோகமில்லை. பக்தி யோகத்திற்குரிய ஆன்மா சைத்தியப் புருஷன். இதன் பகுதிகள் எல்லாக் கரணங்களிலும் உண்டு. பூரணயோகம் ஆன்மாவில் ஆரம்பிக்கவில்லை. மனத்தில் உள்ள சைத்திய புருஷனில் ஆரம்பித்து,

  • மேல்நோக்கி அந்த சைத்தியப் புருஷன் முனிவர், ரிஷி, யோகி, தெய்வ மனங்களைத் தாண்டி சத்திய ஜீவியத்தில் ஈஸ்வரனாகிறது.
  • அதே சமயம் மனத்தின் சைத்தியப் புருஷனில் ஆரம்பித்து கீழ்நோக்கிச் சென்று உணர்வின் சைத்தியப் புருஷனாகவும், உடலின் சைத்தியப் புருஷனாகும்பொழுது சத்திய ஜீவனாகிறது.

வேதம் ஆரம்பம். அன்று அன்னமயப் புருஷன் உடல் விழிப்பாக இருந்ததால், இயற்கையோடு மக்கள் இணைந்து வாழ்ந்தனர். தெய்வலோகக் கடவுள்கள் மூலம் சச்சிதானந்தத்தை அடைந்தனர். அகந்தை ஆட்சி செலுத்தாத நேரம். அகந்தையைக் களைந்து அமரத்துவத்தை அவர்கள் ஆத்மா நாடியது. அடுத்தபடி உபநிஷதம் ஆட்சி செலுத்தியது. இது மனத்திற்குரிய காலம். மனத்திற்கு முழுப் பார்வையில்லை. இது மனோமயப் புருஷன் மூலம் செயல்பட்டது. பிரம்மத்தைக் காணமுயன்று சச்சிதானந்தமாகப் பிரம்மத்தைக் கண்டது. சச்சிதானந்தத்தின் மூன்று அம்சங்கள் மனத்திற்குத் தனித்தனியே தெரிந்தன. சத்தை மட்டும் கண்டவர்கள் அதையே சச்சிதானந்தமாகக் கருதினர். அவர்கட்கு உலகம் மாயையாகத் தெரிந்தது. தான் கண்டதை நம்பினர். பிறர் கண்டதை ஏற்கவில்லை. சித்தை மட்டும் கண்டு அதையே சச்சிதானந்தமாகக் கருதிய ரிஷிகள் உலகைப் பிரகிருதியாகக் கண்டனர். ஆனந்தத்தை மட்டும் கண்டு அதையே முழுச் சச்சிதானந்தமாகக் கொண்டவர் உலகை லீலையாகக் கொண்டனர். ஒருவர் மற்றவர் தரிசனத்தை ஏற்கவில்லை.

மனிதனுடைய கருவி மனம். இது பகுதியான கருவி. இதனால் பகுதியை மட்டும் பார்க்க முடியும். அத்துடன் பார்ப்பவரின் நிலைக்குரிய அளவே சத் புருஷன் தென்படும். க்ஷரப் பிரம்மம், அக்ஷரப் பிரம்மம், புருஷன், புருஷோத்தமன், ஆகிய நிலைகளில் சத் புருஷன் ரிஷியின் நிலைக்கேற்ப வெளிப்படுத்தும். உபநிஷத ரிஷிகள் கண்டனவெல்லாம் அக்ஷரப் பிரம்மத்துடன் முடிந்துவிடுகிறது என்கிறார் பகவான். கீதை புருஷோத்தமனைக் கண்டு, அதை வேதமோ, உபநிஷதமோ காண்பிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறுகிறது. புருஷோத்தமனும் சத் புருஷனில் ஓர் அம்சம்தான். அதையும் மனம் சமாதியில்தான் காண முடியும்.

  • மனத்திற்கு முழுப் பார்வையில்லை.
  • முழுப் பார்வைக்கே விழிப்பில் தரிசனம் உண்டு.

  • முழுப் பார்வையில்லாதபொழுது சமாதியில்தான் பிரம்ம தரிசனம் பெற முடியும்.
  • சமாதி நாம் நம்மை அறியாத நிலை (unconscious).
  • மனத்தைக் கடந்து சத்திய ஜீவியத்திற்கே முழுப் பார்வை விழிப்பில் உண்டு.

இறைவன் வரும் தருணம்

இறைவன் ஆனந்தத்தை நாடி, அதை ஒளிந்து கண்டுபிடிப்பதில் தேட லீலையை சிருஷ்டியாக ஆரம்பித்தான். உலகில் இறைவன் தவிர வேறெதுவுமில்லாததால் ஆண்டவன் ஒளிய இடமில்லை. தன்னுள்ளேதான் ஒளிய வேண்டும். மறைந்தபின் மறைந்ததை மறந்துவிட்டால் பிறகு நினைவு வருவதே சிரமம். நினைவு வருவது ஆனந்தம். நினைவு வந்து மறைவிலிருந்து வெளிவருவது பேரானந்தம். இந்த லீலையை ஆடுபவன் இறைவன். ஆட்டமும் அவனே. அரங்கமும் அவனே. இந்த நினைவுக்குரியது ஆன்மா. ஜீவாத்மாவோ, அதன் பகுதிகளான மனோமயப் புருஷன், பிராணமயப் புருஷன், அன்னமயப் புருஷனோ இல்லை. அவற்றின் பிரநிதியான சைத்தியப் புருஷனே இந்த நினைவுக்குரிய ஆன்மா. இவன் மோட்சமும் தரவல்லவன். சைத்தியப் புருஷன் பக்தியோகத்தில் சித்திப்பது. நாம் மோட்சத்தை நாடினால் மோட்சமும், திருவுருமாற்றத்தை நாடினால் திருவுருமாற்றமும் தரவல்லது சைத்தியப் புருஷன்.

மனித ஆன்மாவை மற்ற கரணங்களிலிருந்து பிரித்து விடுதலையளிப்பது மோட்சம். வாழ்வும், உடலும் மோட்சத்தால் பலன் பெற முடியாது. வாழ்வும், உடலும் பிரகிருதி, பிரகிருதிக்குள்ள ஆத்மா சைத்தியப் புருஷன். பிரகிருதி பெறும் அனுபவச் சாரம் சைத்தியப் புருஷனால் சேர்கிறது.

  • மனித ஆத்மாவுக்கு விடுதலையளிப்பது மோட்சம்
  • மனிதனுடைய எல்லாக் கரணங்களுக்கும் ஆன்மீகப் பூரணமளிப்பது திருவுருமாற்றம்.

ஸ்ரீ அரவிந்தர் பிரம்மத்தை பூமாதேவிக்காக வரம் கேட்டார். அவ்வரம் பூமாதேவியின் எல்லா அம்சங்களும் இறைவனாக வேண்டும் என்பது. வரம் கிடைத்துவிட்டது. அதை மனிதன் சரணாகதியால் பெறவேண்டும். பெற வேண்டிய நேரம்,

இறைவன் வரும் தருணம்.

பல்லாயிரம் ஆண்டுகளில் முடிவது க்ஷணத்தில் முடியும் நேரம் இறைவன் வரும் தருணம்.

அதை அறிவிக்க வந்தது ஸ்ரீ அரவிந்த அவதாரம்.

ஸ்ரீ அரவிந்த அவதாரம் அன்னையின் வேண்டுகோளின்படி நமக்களித்த வேதம்

Life Divine என்ற நூல்.

நூல் கூற வேண்டியவை :

1. உலகம் ஆனந்தமயமான இறைவனின் திருவுடல்.

2. மனிதன் உட்பட அனைத்தும் பிரம்மமே, பிரம்மத்தின் சக்தி ரூபம்.

3. முழுமையான பிரம்மம் ஆனந்தமயமான சக்தி வடிவம் தாங்கி ஆன்மீகப் பரிணாமத்தில் பேரானந்தத்தைச் சேருமிடம் உலகம்.

4. இங்கு வலிக்கோ, நோய்க்கோ, துன்பத்திற்கோ வழியில்லை.

5. சத்திய ஜீவியம் இவ்வுலகை சிருஷ்டித்தது.

6. மனிதன் தன்னை மறந்த இறைவன்.

7. அவன் ஆன்மா சிருஷ்டியிலும், பரிணாமத்திலும் வளரும் இடம் பூலோகம்.

8. மனத்தைக் கடந்து சத்திய ஜீவியத்தில் இதை அவன் அறிய வேண்டும்.

இதைக் கூறுமுன் இன்று மனித மனத்தை ஆக்ரமித்துள்ள கருத்துகளுக்கு ஸ்ரீ அரவிந்தர் பதில் அளிக்க வேண்டும். அவை,

1. உலகத்தை பிரம்மா - மனம் - சிருஷ்டித்தார்.

2. கர்மத்தின் பிடியில் உள்ளது உலகம்.

3. துன்பம் தவிர்க்க முடியாதது.

4. ஆன்மா சாட்சியாகவே இருக்கும்.

மேற்சொன்னவை மனிதன் மனத்தை ஆட்கொள்ளக் காரணம் அவன் மனம் பகுக்கும் கருவி. பகுதியைக் காணக் கூடியது. அது அறியாமையின் கருவி. அதனால் மனத்தால் பிரம்மத்தை முழுமையாக அறிய முடியவில்லை. எப்படி உலகம் சிருஷ்டிக்கப்பட்டது என இதுவரை உலகம் அறியவில்லை. ஸ்ரீ அரவிந்தர் தாம் கண்ட முழுப் பிரம்மத்தின் காட்சியால் தானறிந்த சிருஷ்டியின் இரகஸ்யத்தைக் கூற எழுதிய நூல் Life Divine. இறைவன் தன்னுள்ளே தான் மறைந்த வகையை முரண்பாடே உடன்பாடு என்று நூல் பகவான் எடுத்துக் கூறுகிறார். முழுப் பார்வைக்குத் தெரிவது, பகுதியான பார்வைக்குத் தெரியாது. பகுதியான பார்வையின் தவறுகளை முழுப் பார்வை செய்யாது.

நூலை இரு புத்தகங்களாகவும், இரண்டாம் புத்தகத்தை இரு பகுதிகளாகவும் பகவான் எழுதினார்.

  • முதற் புத்தகம் சச்சிதானந்தம் தன்னை இழந்து பூலோகமாக மாறியதைக் கூறுகிறது.
  • தீமை என்பது அறியாமையே என்றும், அறியாமை ஆரம்பத்தில் ஞானம் எனவும், இரண்டாம் புத்தகத்தின் முதற் பகுதி விளக்குகிறது.
  • இவற்றைத் தெளிவுபடுத்த உலகம் மனத்தால் சிருஷ்டிக்கப்பட்டதன்று, சத்திய ஜீவியத்தால் சிருஷ்டிக்கபட்ட முழுமை என்பதுடன் இப்பகுதி ஆரம்பிக்கின்றது.
  • அஞ்ஞானத்திலிருந்து விடுபட்ட ஞானம் வளர்ந்து ஆன்மீகப் பரிணாமத்தால் ஆன்மீகப் பூரணம் பெறுவது இரண்டாம் புத்தகத்தின் இரண்டாம் பகுதி.

இறைவன் சிருஷ்டியில் மறைந்தது என்பது ஸ்ரீ அரவிந்தம் கூறும் சிருஷ்டியின் இரகஸ்யம். இதன் சில முக்கிய அம்சங்கள்:

  • இறைவன் பிரம்மம் சுதந்திரமானவன். காலத்தாலோ, கர்மத்தாலோ, சட்டத்தாலோ, எந்த வகையான நிர்ப்பந்தத்தாலோ கட்டுப்படாதவன்.
  • அவனது சுதந்திரம் பூரணமான சுதந்திரம். சுதந்திரத்தை இழக்கும் சுதந்திரமும் உடைய சுதந்திரம் பிரம்மத்தின் சுதந்திரம்.
  • சுதந்திரத்தை இழந்து, ஐக்கியத்தை இழந்து, தன்னுள் மறைகிறான்.
  • ஒன்றை இரண்டான எதிரிடையான அம்சங்களாகப் பிரித்து அவை இணைந்து உயர்ந்த பூரணத்தை அடைவது இயற்கையின் பெருநெறி என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். முதற் படியில் பிரம்மம் சத், அசத் என தன்னை சிருஷ்டியில் வெளிப்படுத்துகிறது.
  • தன்னிச்சையாக, தன்னை அளவுபடுத்தி, தன்னுள் தன்னைக் கிரகித்து, அகத்தை புறமாக்கி, சக்தியை வெளிப்படுத்தி, ரூபத்தை சிருஷ்டித்து சத் என்ற இறைவன் ஜடமாக மறைகிறான். இதுவே முதற் புத்தகம்.
  • முரண்பாட்டின் வகைகள் பல. ஜடமும், ஆன்மாவும்; பிரபஞ்சமும், மனிதனும்; அகந்தையும், சச்சிதானந்தமும்; பாதாளமும், பரமாத்மாவும்; உடலும், உணர்வும்; உணர்வும், மனமும்; மனமும், சத்தியஜீவியமும் என முரண்பாடுகளை ஏற்படுத்தி சிருஷ்டித்து, அவற்றைப் பரிணாமத்தால் உடன்பாடாக்கி ஆன்மீகப் பரிணாமம் பூர்த்தியாவதை நூல் 56 அத்தியாயங்களில் விளக்குகிறது.

வேதம் இயற்கையுடன் உடலால் ஒன்றி வாழ்ந்து, இறைவனை கடவுள்கள் மூலம் அடைந்து ஆன்மாவுக்கு அமரத்வம் (divine universality and supreme infinity) பெற்றது. உபநிஷதம் சர்வம் பிரம்மம், மனிதன் பிரம்மம், பிரம்மம் தவிர உலகில் வேறெதுவுமில்லை என்ற ஞானம் பெற்று பிரம்மத்தை பூலோகத்தின் இருளில் தேடுவது சாத்தியமில்லை என மேல்

லோகத்தில் தேட மோட்சத்தை நாடியது. பக்குவமான ஆத்மா தவத்தால் மோட்சம் பெறவிழையும் நேரத்தில் ஸ்ரீமத் பகவத் கீதை தவம் அக்ஷரப் புருஷனை அடையும், அதற்கு மேலுள்ள புருஷோத்தமனை வேதம், உபநிஷதம் அடைய உதவாது, மனம் தன் நம்பிக்கைகளுடன் சரணடைந்தால் புருஷோத்தமனை அடையலாம் என அழைத்தது. ஸ்ரீ அரவிந்தம் மனித குலத்தில் இறைவனின் யோகம். உடலுள்ள வளரும் ஆன்மா, சைத்தியப் புருஷன் வேதம் ஆன்மாவுக்குப் பெற்றவற்றை உடலுக்கு அமரத்துவமாகப் பெற தவம், ஆசனம் போன்றவற்றை விடுத்து கீதையின் சரணாகதியை மனத்திலிருந்து உயர்த்தி உடல் பூரணம் செய்ய அழைக்கிறது.

வேதம் ஆன்மாவுக்குப் பெற்றதை ஸ்ரீ அரவிந்தம் உடலுக்கும் பெறும் வழி சரணாகதி.



book | by Dr. Radut