Skip to Content

முன்னுரை

Life Divine நூலின் விசேஷ அம்சங்கள்

நூல் கடினமானது எனப் பெயர் பெற்றதற்குப் பல காரணங்களுண்டு. கடினமான அம்சங்களின் விசேஷமறிந்தால் கடினம் குறையலாம் என்ற கருத்துடன் எழுதப்பட்ட சில குறிப்புகள் அடங்கியது இச்சிறு நூல். கடினம் என்பதன் காரணங்கள்:

1. ஆங்கில நடை சென்ற நூற்றாண்டிற்குரியது. மிக நீண்ட வாக்கியங்களுள்ளது.

2. உலகத் தத்துவ மரபிலுள்ள சிக்கல்களை அவிழ்க்க ஸ்ரீ அரவிந்தர் முனைகிறார்.

3. ஞானத்திற்குரிய கருத்தை அறிவுக்குக் கூற ஸ்ரீ அரவிந்தர் முனைகிறார்.

4. நம் மனதிலுள்ள கேள்விகளுக்குப் பதில் நமக்குப் புரியும். ஸ்ரீ அரவிந்தர் கூறும் விளக்கங்களுக்குள்ள கேள்விகளும் இன்று நம் மனதிலில்லை. கேள்வியே மனதிலில்லாதபொழுது பதில் விளங்காதது ஆச்சரியமில்லை.

முதல் தடை மொழியைப் பற்றியது. நூலைத் தமிழில் எழுதினால் அத்தடை எழாது. இரண்டாம் தடை தத்துவமானது. தத்துவச் சிக்கல் எளியவர்க்கு எப்படிப் புரியும்? அச்சிக்கல் வாழ்வில் எழும்பொழுது அன்னை தத்துவத்தை விலக்கிச் சிக்கலை அவிழ்க்கிறார். நம் பிரச்சனை தீருகிறது. நம் வாழ்வில் அது பிரார்த்தனை பலிக்கும்தொறும் நடைபெறுகிறது. Life Divine புரிய வேண்டும் என்பவர் அவிழும் சிக்கலை ஆரம்பமாக்கி, அதன் நுணுக்கத்தை அறிய முற்பட்டால், நுணுக்கம் புரியும்பொழுது தத்துவம் விளங்கும். நம் அறிவுக்கு ஞானம் எப்படி எட்டும் என்பது அடுத்தது. அன்னையை அறிவது ஞானம். அன்னையை பலனாக அறிவது சௌகரியம். தெளிவாக அறிவது ஞானம். அன்பாக அறிவது ஆனந்தம். அன்னையாக அறிவது யோகம்.

பிரார்த்தனை பலிக்கும்பொழுது பலிக்கும் பாணியை அறிவது தெளிவு. அந்தத் தெளிவுக்குரியது ஞானம். கடைசியானது மனதிலுள்ள கேள்வி. நூல் புரிய வேண்டுமானால் மனதில் கேள்வியிருக்க வேண்டும். உலகம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டது என்ற கேள்வி மனதிலிருந்தால் நூல் புரியும். என் மனதில் அது தோன்றியதேயில்லையே, எப்படி எனக்குப் புரியும் என்பது பிரச்சினை. ரிஷிகள் எந்தக் கேள்வியைக் கேட்க நமக்கு உரிமையில்லை என்றனரோ அக்கேள்வியல்லவா இது? நான் எப்படி இக்கேள்வியை எழுப்ப முடியும்?

இன்று உலகில் இலட்சக்கணக்கான விஞ்ஞானிகள் கேட்கும் கேள்வி இது. அவ்வகையில் இது உங்கள் மனதிலிருக்கலாம். இல்லாவிட்டால் இலட்சக்கணக்கானவர் எழுப்பும் கேள்வியை நீங்களும் எழுப்பலாம். அவர்கள் மனநிலையை ஆராயலாம். அது நூலை அறிய உதவும். ஸ்ரீ அரவிந்தர் அக்கேள்விகளை எழுப்புகிறார். அவற்றிற்குப் பதில் தேட மனம் விழைந்தால் நூல் புரியும். அக்கேள்விகளை விஞ்ஞானியும், பகுத்தறிவுவாதியும், யதார்த்தவாதிகளும் வெவ்வேறாகக் கேட்கின்றனர்.

அவை,

1. உலகம் இயற்கை, அதை ஏற்கலாம், விளக்க முடியாது.

2. உலகம் மாயை, ஞானம் வந்தால் மாயை விலகும்.

ஸ்ரீ அரவிந்தர் கூறும் பதில் வேறு. உலகம் இறைவன் ஆனந்தம் அனுபவிக்க ஏற்பட்டது. ஞானமான இறைவன் தன்னை ஞானத்துள் மறைத்து அஞ்ஞானமாகி, மறைந்த இறைவன் தான் மறைந்ததை மறந்தபின், நினைவுபெறுவதில் ஆனந்தம் கண்டு, ஞானமாக மீண்டும் எழுவதால் பேரானந்தம் பெறுகிறான். அக்காரணத்திற்காக ஏற்பட்டதே சிருஷ்டி என்பது பகவான் விளக்கம்.

தான் தன்னுள் மறைவது சிருஷ்டி. தன்னை இறைவன் மறைக்கும் விதம் நூல் முதற் புத்தகத்தில் 28 அத்தியாயங்களாக எழுதப்பட்டுள்ளது. மறையும் நிலைகளாவன:

1. எதுவுமே இல்லாத பிரம்மம் சத் எனும் புருஷனாவது.

2. புருஷனான பிரம்மம் ஜீவியமாவது.

3. ஜீவியம் தன்னை ஆனந்தமாக அறிந்து உணர்வது.

4. தன்னை அறிந்து சத்திய ஜீவியமாவது.

5. சத்திய ஜீவியம் இரண்டாகப் பிரிந்து மனம் உண்டாவது.

6. மனத்தின் உறுதி ஞானத்தால் சக்தியாகி, வாழ்வாவது.

8. வாழ்வு சலனமிழந்து ஜடமாவது.

சத்புருஷன் என்ற ஆன்மா தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து ஜடமாகி பின்னர் வந்த வழியே தலைகீழே மாறி தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து அதாவது ஆன்மா பரிணாம வளர்ச்சி பெற்று மீண்டும் ஆன்மாவாகவும், சத் புருஷனாகவும் மாறி பிரம்மத்தை அடைவது பரிணாமம். ஜடத்திலாரம்பித்து முடிவதாகும்.

நூலில் சிக்கல்கள் என எழுபவை மறையும் பாணி, மீண்டும் எழும் பாங்கு, அவற்றை இக்கட்டுரையில் சில முக்கிய இடங்களைக் குறித்துக் காட்டுகிறேன். வாசகர் பகவான் ஸ்ரீ அரவிந்தருடன் மனத்தால் ஒன்றியபொழுதும், அன்னை அருள் செயல்பட்ட வகையை அறியும்பொழுதும், நெஞ்சம் பக்தியால் நெகிழ்ந்தபொழுதும், உலகமும் உற்றார் பாசமும் உகந்ததன்று என்ற தெளிவு பெறும்பொழுதும், இறைவன் வரும் தருணத்தை இம்மையில் நமக்குணர்த்த வந்த நூல் என்ற இங்கிதம் எழும்பொழுதும், சிக்கல்கள் தாமே அவிழ்ந்து, கடினம் என்ற பகுதிகள் இனிமை எனும்படி நூலின் வண்ணம் மாறுவதைக் காணலாம். கொடுமையான வாழ்வை இனிமையாக மாற்றவந்த பகவான் எழுதிய நூல் எவர்க்குக் கடினமாக இருந்தாலும் பக்தர்கட்குக் கனிவானது எனக் காணலாம், கண்டது வாழ்வில் பலிக்கும். இந்நூல் எனக்கு எழுந்த ஐயங்களையும், தடைகளையும், குழப்பங்களையும் உதாரணமாக எழுதியுள்ளேன்.

சொற்களைப் பற்றிய குறிப்பு

இந்நூல் அன்பர்கள்  Life Divine ஐப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள எழுதப்பட்டது. நூலின் அமைப்பு, கருத்து, முக்கியம் ஆகியவற்றைப் பற்றி எழுதியதுடன், நூலில் சிக்கலான பல பகுதிகளை எடுத்து சிக்கல் அவிழும் வகையான விவரங்களை எழுதியுள்ளேன். Life Divineஐ பலமுறை படித்தவர்க்குப் பயன்படுவது இந்நூல். எனினும் முதல் முறை படிப்பவர்க்கும் இந்நூல் ஓரளவு உதவும். இதே நூலை ஆங்கிலத்திலும் Sri Aravindam என வெளியிட்டுள்ளோம். நேரடியான மொழிபெயர்ப்பில்லை. இரண்டும் பொதுவாக ஒரே கருத்துக்களைக் கூறும் நூல்கள்.

Life Divineஐ படித்து அறிய விரும்பும் அன்பர்கட்கும், அதைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்ள முயல்பவர்கட்கும் தெளிவாக இருக்கும். இவற்றைக் கடந்த நிலையில் சில அன்பர்கள் Life Divine தத்துவத்தை நுணுக்கமாக அறிய முற்படலாம். அவர்கள் மூலத்தைப் படித்துவிட்டு, இந்த நூலைப் படித்தால் சொற்கள் பயன்படுத்தப்பட்ட வகையால் சில இடங்களில் தெளிவு குறைவாக இருக்கலாம். குழப்பமும் வரலாம். அவர்களுடைய குழப்பத்தை ஆங்கில நூல் Sri Aravindam விளக்கும். இரண்டையும் இணைத்துப் பார்ப்பது அவ்வகையான அன்பர்கட்கு உதவும். இப்படியொரு சந்தர்ப்பம் எழக் காரணமானவை,

1. ஸ்ரீ அரவிந்தம் கூறும் தத்துவம் புதியது.

2. புதிய தத்துவத்திற்குப் புதிய சொற்கள் தேவை.

3. ஸ்ரீ அரவிந்தர் Life Divineஐ சமஸ்கிருதத்திலோ, வங்காளியிலோ எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

4. அவருடைய கருத்துக்களை சமஸ்கிருதச் சொற்கள் முழுமையாகப் பிரதிபலிக்கா. ஜீவாத்மா என்பது அப்படிப்பட்ட சொல். Life Divineஇல் பகவான் இதை ஜீவாத்மா எனக் கூறாமல் Individual என்கிறார். இதற்கு தமிழில் சொல் இல்லை. பகவான் கூறும் ஜீவாத்மா பரமாத்மா,

சமஸ்கிருத சொல் ஜீவாத்மா மோட்சம் தேடுவது. அன்பர்கட்கு இரண்டும் ஒன்றே. தத்துவம் பயில்பவர்கட்கு இது முக்கியமான வேறுபாடு.

5.Life Divineஇல் சமஸ்கிருத சொற்கள் பல வருகின்றன. எல்லா முக்கியமான கருத்துகட்கும் பகவான் ஆங்கில சொற்களையே பயன்படுத்துகிறார். ஆங்கிலம் ஆன்மீகத்திற்குரிய மொழியல்ல. Intution,Soul,Consciousness என்ற சொற்கள் நான் பயன்படுத்துவதிலிருந்து வேறுபட்டவை, வேறு வழியில்லாமல் உள்ள சொற்களைப் பயன்படுத்துகிறேன் என்கிறார்.

6. ஸ்ரீ அரவிந்தம் ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் சொற்களுக்கு அகப்படாது.

ஆசிரியர்

 



book | by Dr. Radut