Skip to Content

அன்னை வரும் தருணம்

 

நாய் வாலை நிமிர்த்த முடியாது, மனித  சுபாவம்  மாறாது,  நம்மையும் ஒரு   மனிதனாகக்   கருதி   உலகம் நமக்கு   விருது   வழங்கப்   போவதில்லை,   உலகில்   பணம்   பேசும், நல்லவனுக்குக்  காலமில்லை,  பத்து விளக்கு   அணைந்தால்தான்   ஓர் விளக்கு  பிரகாசமாகும்  என்ற  நம் வாழ்வில்,

 • நாய் வாலும் நிமிரும்.
 • மனித சுபாவம் மாறும்.
 • நம்மை அனைவரும் மனிதனாக நடத்தி ஏற்றுப் போற்றுவார்கள்.
 • நமக்கும் விருதுண்டு.
 • பணத்தைக் கடந்து மனமும் மனித  நியாயமும்  பேசும்.
 • நல்லவனுக்கு மட்டுமே இது காலம்.
 • பத்து விளக்கை ஏற்றி வைத்தவன்   வாழ்வு   அவற்றை விடப்  பிரகாசமாகும்,

என்று    ஓர்    அன்பர்    காண விரும்பினால்,    அவரால்    அவர் மனத்தை  சந்தித்து  உரையாடி  ஒரு நாள்   (24   மணிநேரம்)   மனதை அன்னை  பக்கம் திருப்ப முடியுமானால்.

 • இதை   நான்   பெற   வேண்டும் என்று   நினைப்பவர்   எவர்க்கும் இது  முடியும்.
 • நம்மால்   முடியுமா?   என்பவர் மனம்   மாறி   இது   வேண்டும் என்று          நினைக்கும்வரை காத்திருக்க  வேண்டும்.
 • வேண்டும்  என்பவர்  தன்  நிலை, தன்    மனநிலையை,    அறிய வேண்டும்.
 • அவற்றுள்    உள்ள    நல்லதை எடுத்துக்   கொண்டு,   மற்றதை விலக்க  முன்வர  வேண்டும்.
 • இம்முயற்சி பலித்தால் நாம் ஒரு நாளைப்   பொழுதிற்கு நல்லவர்களாக  மாறிவிடுவோம்.
 • நல்லவர் என்பதற்கு எது அடையாளம்?
 • தானே மனம் சந்தோஷமாக இருக்க  வேண்டும்.
 • ஒரு  எண்ணம் மனதில் தோன்றினால் அது  நல்லதாக மட்டுமிருக்க         வேண்டும். (எண்ணமே கெட்டது  என்கிறார் அன்னை).
 • எண்ணமற்ற சந்தோஷமான சலனமற்ற அமைதி தூக்கம் தெளிந்தவுடன் மனதைத்  தழுவ  வேண்டும்.
 • ஒருவரைக்    கண்டால்-அது எவரானாலும்   -   மனம்   மலர வேண்டும்.
 • ஒருவருக்கு   நல்லது   நடந்தது என   காதில்   விழுந்தால்   மனம் பூரிக்க  வேண்டும்.
 • சொல் அமைதியாக  வாயிலிருந்து  வர  வேண்டும்.
 • குழந்தைகளைக்    கண்டால் மனம்    மலர்ந்து    புன்னகை எழுவதுபோல்      ஒருவரைக் கண்டால்  உள்ளம்  உவகையால் நிரம்ப   வேண்டும்.
 • பொதுவாக   பிறருக்கு   எரிச்சல் மூட்டும்  செய்தி  நமக்கு  எரிச்சல் மூட்டக்   கூடாது.   அச்செய்தி மனத்தை    சந்தோஷமாக்க வேண்டும்.
 • சில்லரைப் பேச்சில்  கலந்து கொள்ள முடியாத மனப் பக்குவம்  வேண்டும்.

பொய் சொல்ல மனம் மறுக்க வேண்டும்.

 

 

அது அன்னை வரும் தருணம்

இவையனைத்தும் அன்பர்கள் வாழ்வில் தனித்தனியே நிகழ்ந்து உள்ளன.  அவ்வளவும் ஒரு நாளில் நடக்க வேண்டும் என்பது யோக முயற்சி. அம்முயற்சி ஓர் யோகானு பவம். வாழ்வை யோகமாக 24 மணி நேரம் மாற்ற வல்லது. நாம் என்ன செய்யவேண்டும்? செய்தால் என்ன பலன்  எழும்? நம்மால்  முடியுமா?

 இது    தெய்வீக    நிலையல்ல. நமக்கு  பல  நேரங்களில்  இதுபோல் மனம்  இருந்ததுண்டு.  ஆனால்  ஒரு நாள்  முழுவதும்  இதற்கு விலக்கில்லாமல்   இருந்ததில்லை. இது   மனித   மனநிலை. ஆனால் உயர்ந்த  மனநிலை.  இதை  மனிதன் நிரந்தரமாகப்  பெறுவது  பேறு.  ஒரு 24 மணி நேரமாவது  மேற் சொன்னதுபோல்  மனம்  வழுவாமலிருக்க நாம் முயன்றால் அது முடியும். அம்முயற்சியை மேற்கொள்பவருக்கு அன்னை எழுதிய புத்தகங்கள் விளங்கும்.

 • ஆசிரமம் வருமுன் "சமாதி தரிசனம்''  கிடைக்கும்.
 • அன்னையை நாம் அழைக்கும் முன்  மனதில் அன்னை தரிசனம்  தருவார்.
 • ஆன்மீகம் என்ன என்பதை அறிவும், உணர்வும்,  உள்ளமும் தத்ரூபமாக   அனுபவிக்கும்.
 •  எது தவறு,   எது சரி என்ற கேள்வி மனதில் எழாது.
 •  "சில்''    என்ற    உணர்வுடன் ஆன்மா குகையிலிருந்து  சற்று வெளியே தலை நீட்டிப் பார்க்கும்.
 • முடிவான யோகப்பலன் முதலிலேயே நம்மை தேடி வந்ததை நாம் அறியா விட்டாலும்,   நம் கரணங்கள் அறிந்து  உள்ளே  மலரும்.
 • நாம் நாடிப் போய் சாதிக்க வேண்டிய காரியங்களை நம்மவர் பலர் நம்மைத்   தேடி வந்து  பூர்த்தி  செய்வார்கள்.
 • பாக்கியான  ஓரிரு  காரியங்கள் எதிர்பாராமல் தானே பூர்த்தி யாகும்.
 • குதர்க்கமான மனிதன் வீடு தேடி வந்து பழைய நிகழ்ச்சிக்கு வருத்தம்  தெரிவிப்பான்.
 • காணாமற் போன பொருள் கண்ணில்படும்.
 • போக்கிரி குழந்தை  அமைதியாக  ஆர்ப்பாட்டமின்றி  விளையாடும்.
 • நெடுநாளாக பேசும் பழக்கமேயில்லாத கணவன் அன்பாக பேச நினைப்பார்.
 • அடங்காப்பிடாரி மனைவி அன்பைச் சொரிவாள்.
 • இந்நிலையில் அன்னையை மனம் அழைக்க ஆரம்பித்தால் நிகழ்ச்சிகளின் தரம்  அளவு  கடந்து  உயரும்.
 • தூக்கம் தியானம் போலிருக்கும்.
 • ஒரு 24 மணி நேரம் இடைவிடாது  மனத்தை  இந்த நல்ல நிலையில்      நிறுத்தி மகிழ்ந்து  அன்னையை  நினைப்பவருக்கு அன்னை யார் என்பது எதையும்   படிக்காமல் விளங்கும். இது   புது   உலகம்   எனப் புரியும். இதை அறிவது அன்னையின் திருக்கோயில் வாயிலுக்கு வருவது. இம் மனநிலையை நிரந்தரமாக்குவது  யோகம்  பயில்வதாகும். அடிக்கடி இம் மனநிலைக்கு வருவது  கொஞ்சம்  கொஞ்சமாக வாழ்வில் அதிர்ஷ்டத்தை உற்பத்தி  செய்வதாகும்.

இலட்சியமான  பக்தி

பிரார்த்தனையை  நாள்  முழுவதும்  மனம்  விரும்பி,  அது  வரும் நேரத்திற்காக காத்திருந்து, பிரார்த்தனை செய்யும்பொழுது மனம் சந்தோஷத்தால்   பொங்கி   வழிந்தால்,   பிரார்த்தனை   உடனே பலிக்கும்.  அது  பிரார்த்தனையின்  சிறிய  பலன்.  அதன்  பெரிய பலன்  அன்னை  நம்  மனத்தை  நாடி  வந்து  தங்குவார்.

மனத்தில் அன்னையை பிரதிஷ்டை செய்ய சிறந்த முறை இதுவேbook | by Dr. Radut