Skip to Content

02. அழைப்பும் அன்னையின் அருளும்

பூரணயோக இலட்சியம்:
 
பூரணயோக இலட்சியம் பரிபூரணனுடைய இலட்சியம். சிருஷ்டியின் அடுத்த கட்டத்தை எட்டி, மனிதனுக்கடுத்த ஜீவனாகிய சத்தியஜீவனை உலகில் சிருஷ்டிப்பதே அந்த இலட்சியம். இது மனித முயற்சியாலோ, மனிதனுள் உறையும் ஆன்மாவாலேயோ சாதிக்கக் கூடிய ஒன்று இல்லை. அதிகக் கடினமானதும், உன்னதமானதுமான குறிக்கோள் இது. இதைச் சாதிக்கவல்ல சக்திகள் இரண்டுள. அவை இணைந்து செயல்படும்பொழுதே, இந்த இலட்சியத்தை எட்டலாம்.
 
தெய்வ லோகத்திற்கும் மேலேயுள்ள சச்சிதானந்தத்திற்கும் அப்பாலுள்ள இறைவனை பரம்பொருள், பரமன் என்பர். அவனுடைய செயலுக்கு அருள் எனப் பெயர். சிருஷ்டியின் உச்சிக்கு அப்பாலுள்ள இப்பரம்பொருள், சிருஷ்டியின் அஸ்திவாரத்திற்குக் கீழேயும் உள்ளது. பாமரனின் உடல் இருளின் எல்லையைத் தாண்டிச் சென்றால் அங்கும் பரமன் உறைகிறான். மனித மனம் தெய்வ அனுக்கிரஹத்தால் பெறுவது ஞானம். மனிதவுள்ளம் கசிந்துருகி உணர்வது பக்தி. மனித உடல் வணங்கி உழைப்பது சேவை. மனமும், உள்ளமும், உடலும், ஆன்மாவும் சேர்ந்தது ஜீவன். ஜீவன் பரமனை நோக்கிச் செல்லும் (ஜீவனின்) உணர்வை ஆர்வம் (Aspiration) என்கிறோம். பாமரனின் அஸ்திவாரத்திற்கடியில் உள்ள பரமனின் அழைப்பு தவறாது பரம்பொருளின் காதில் விழும். அதுவே மனித ஜீவன் மூலம் சிருஷ்டி தன் மூலத்தை நோக்கி எழுப்பும் குரல்.
 
அக்குரலை எழுப்பும் ஜீவனின் அஸ்திவாரமும், சிருஷ்டிக்கு அப்பாலுள்ள பரம்பொருளின் பதிலாக எழும் செயலாகிய அருளும் ஒன்று சேர்ந்து பூரண யோக இலட்சியத்தைப் பூர்த்தி செய்யும் திறனுடையவை.
 
ஆர்வக் குரலும், ஆதியின் அருளும் சேர்ந்து சாதிக்கக்கூடியதே கடுமை நிறைந்த உன்னதமான பூரண யோக இலட்சியமாகிய சத்தியஜீவிய சிருஷ்டி (creation of the supramental being).
 
அருள் செயல்படும் முறை:
 
சத்தியமும், ஜோதியுள்ள உள்ள இடத்தில் மட்டுமே பரமனின் அருள் செயல்படும். பொய்யும், அறியாமையும் விதிக்கும் நிபந்தனைகட்குட்பட்டு அருள் செயல்படாது. தன் செயலைப் பொய்மையை ஒட்டி அமைத்துக்கொண்டால், அருள் தன் இலட்சியத்தை இழந்துவிடும். பொய்யை அழித்து, மெய்யை நிலைநாட்ட வேண்டிய அருள், பொய்யின் அழைப்பை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அருளின் செயலை அழிப்பது பொய்மை. அருளைத் தடுப்பது அறியாமை. அவற்றின் நிபந்தனைக்குட்பட்டு, அருள் செய்யக்கூடியது என்ன? பொய்மையை வலுப்படுத்தலாம்; நிலைநிறுத்தப் பாடுபடலாம். பொய்க்குச் சேவை செய்ய அருளை அழைப்பது, எரியும் நெருப்புக்குச் சேவை செய்யத் தண்ணீரை வருந்தியழைப்பது போலாகும்.
 
மனத்தில் மருளாக உறையும் இருள், உடல் காரிருளாக இருக்கிறது. காயத்தின் பொய், கரிய இருளின் பிறப்பிடம். இதைக் கண்டு வேத கால ரிஷிகளும் அஞ்சி ஒதுங்கினர். ‘பொய்யடா' என்றனர். ‘காயமே இது பொய்யடா' என்றனர். அதை மெய்யாக்குவதே பூரண யோகம். மருளை ஞானம் மாற்றலாம். மனத்தின் பற்றையும், பாசத்தையும் பக்தி புனிதப்படுத்தலாம். நிஷ்காம்யமாகச் செய்தால், செயலும் புனர்ஜென்மமெடுத்து, மோட்சம் வழங்கும். காயத்தின் பொய்யை அழிக்க இதுவரை ஒரு யோகம் ஏற்படவில்லை. அதற்குரிய சக்தியை ரிஷிகள் கண்டுகொள்ளவில்லை. அதனாலேயே அஞ்சி ஒதுங்கினர். சத்தியஜீவ சக்தி காயத்தின் அஸ்திவாரத்திற்குக் கீழேயும் இருக்கிறது. தெய்வ லோகத்திற்கு அடுத்த நிலையிலும் இருக்கின்றது. இவையிரண்டும் தங்களிடத்தை விட்டுப் பெயர்ந்து, காயத்தில் வந்து நிரம்பி, அங்கு உறையும் பொய்மையைக் கண்டு கொண்டால், அச்சக்திகளின் கூட்டு பொய்யை முறியடிக்க வல்லது. பொய்யை ஒழிக்க ஏற்பட்ட சத்திய ஆயுதம், சத்தியத்தின் கட்டளைப்படி மட்டுமே செயல்படக்கூடியது. மற்ற நிபந்தனைகள் அதற்குப் புறம்பானவை.
சரணாகதி ஓர் உயர்ந்த தத்துவம். ஓரளவுக்குப் பின்பற்றினாலும் அதற்குரிய பலன் உண்டு. ஆனால் யோக இலட்சியம் பூர்த்தியாக வேண்டுமானால் சரணாகதி முழுமையாகவும், பவித்திரமாகவும் இருத்தல் அவசியம். மனித ஜீவன் பல பகுதிகளைக் கொண்டது. மனம் உயர்ந்தது; ஆனால் ஒரு பகுதி. உள்ளம் சக்தி உடையது; ஆனால் அதுவும் ஒரு பகுதியே. உடல் அஸ்திவாரம் எனினும் ஜீவனின் ஒரு பகுதியே. ஆன்மா உயர் தனிச் சிறப்புடையது; அழிவு இல்லாதது; இறைவனைப் போன்றது; என்றாலும் நம்மைப் பொருத்தவரை ஆன்மா ஒரு பகுதியே. பூரண யோகத்தைப் பொருத்தவரை ‘ஆன்மா' என்று நாம் குறிப்பிடுவது சைத்திய புருஷனையே. சரணாகதி முழுமை பெற வேண்டுமானால், இப்பகுதிகள் ஒவ்வொன்றிலும் சரணாகதியை ஏற்றுக்கொண்ட நிலை ஏற்பட வேண்டும். சரணாகதி முழுமை பெறுமுன் நம்முள் விரைந்து வரும் தெய்வ சக்தியை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். தெய்வ சக்தி நம்முள் வர, நாம் நம் ஜீவன் மலர்ந்து உள்ளே நுழையும் சக்தியை முழுமையாக வரவேற்க வேண்டும். அதற்கும் ஒரு நிபந்தனை உண்டு. நம்முடைய ஜீவன் தெய்வ சக்தியை மட்டுமே நம்முள் அனுமதிக்க வேண்டும். அதைக் கண்டு மட்டுமே மலர வேண்டும். தெய்வ சக்தி நம்முள் நுழையும் தருணத்தில் அத்துடன் இணைந்து, அல்லது அதனருகில் சூழ்ந்து வந்து மாறுபட்ட சக்திகளும் நம்முள் நுழைய முயலும். கவனமாக இருந்து, சத்திய சக்திகளை மட்டும் அனுமதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சத்திய சக்திகளை அனுமதிப்பதிலும் ஒரு நிபந்தனையுண்டு. அதாவது, அதில் பூரணம் இருக்க வேண்டும். பூரணமாக சத்திய சக்திகளை நம்முள் அனுமதிக்கும் திறன் ஒரு யோகப் பயிற்சியாகும். அத்துடன் அது நிற்காது. நாம் பொய்யின் சக்திகளை மறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றையும் பூரணமாக விலக்கப் பயில வேண்டும். இதுவும் அதே போன்ற உயர்ந்த யோகப் பயிற்சியாகும். புத்தியையும், உணர்ச்சியையும், உடலையும் இன்று ஆளும் சக்திகள், பொய்யின் சக்திகளாகும். அவை, தெய்வீகச் சக்தியை அனுமதிக்க நம் ஜீவன் மலர்ந்து விரியும் தருணத்திற்காக காத்துக்கொண்டிருந்து, தக்க சமயத்தில் ஜீவனுள் நுழைய முயலும். புத்தியையும், உணர்ச்சியையும், உடலையும் கருவியாகவும், வாயிலாகவும் கொண்டு நுழைய முயலும். அவற்றை எல்லாம் தடுப்பது எளிதன்று. ஆனால் தடுப்பது அவசியம்.
 
சரணாகதி முழுமையாக இருக்க வேண்டுமென்றோம். எல்லாப் பகுதிகளையும் சரணாகதி ஆட்கொள்ள வேண்டும். சைத்திய புருஷன் சரணாகதியை ஏற்றுக்கொண்டால் போதாது; மனம் சரணாகதிக்கு இசைவு அளித்தால் மட்டும் போதாது; பிராணனின் அந்தரங்கங்கள் சரணாகதிக்கு உட்பட்டாலும், அதுவும் போதாது; இருளாகிய உடலின் சூட்சுமப் பகுதிகள் சரணாகதியின் பெருமையை உணர்ந்தாலும் போதாது; ஜீவனின் எந்தப் பகுதியும் சரணாகதியின் ஆட்சிக்குப் புறம்பாக இருக்கக்கூடாது. எப்பகுதியும் சற்று விலகி இருந்தால் முழுமையைப் பாதிக்கும். குழப்பமும், ஐயமும், தந்திர யுக்திகளும் இதற்குப் புறம்பானவை. மறுப்பைத் தெரிவிக்கும் பகுதியும், புரட்சி செய்யும் புலனும் சரணாகதி முழுமை பெறுவதற்குத் தடைகளாக இருக்கும்.
 
ஜீவனின் அழைப்பு:
 
மனிதன் பல பகுதிகளைக் கொண்டவன். எந்த ஒரு பகுதியும் தான் மட்டும் உயர்ந்து முன்னேறும் திறனுடையது. எல்லாப் பகுதிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் மனிதனுக்கில்லை. உடல் நம்மில் ஒரு பகுதி. உடற்பயிற்சியால் உடலை அபார சக்தி பெற்றதாகச் செய்ய விரும்பினால், அது முடியும். உடல் வளரும்பொழுது, மனமும் இணைந்து வளர வேண்டுமென்ற கட்டாயமில்லை. மனம் வளராவிட்டால், உடல் வளர்ச்சியுறாது என்பதில்லை. எனவே சரணாகதி தத்துவத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றால், எல்லாப் பகுதிகளும் ஏற்றுக்கொண்டதாகப் பொருளில்லை. ஒரு பகுதி சரண் அடையலாம். மற்றது தன் வழியே செல்லலாம். தன் விருப்பத்தையே மற்ற பகுதி வலியுறுத்தலாம். ஒவ்வொரு முறையும் இந்தப் பிணக்கு ஏற்படும்பொழுது அருளை விலக்குவது நாமே என்றறிய வேண்டும்.
 
மனிதன் உயர்ந்தவன், பக்தி செலுத்தக்கூடியவன், சரணாகதியை ஏற்றுக்கொள்ளக்கூடியவன். ஆனால் தொன்றுதொட்டு அவன் ஆசையாலும், அகந்தையாலும், பிடிவாதத்தாலும், கொடுத்தாக வேண்டும் என்ற நிபந்தனைகளால் வாழ்ந்தவன். ஒரு காலத்தில் ஆசையால் உந்தப்பட்டவர்கள் முன்னேறினார்கள். அதனால் ஆசையின் திறன் தெரிய வந்தது. ஆசைப்பட முடியாதவன் கேலிக்கு உரியவனானான். அதனால் ஆசைப்படுவது உயர்ந்தது என்று மனிதன் கைக்கொண்டான். ஏன், இன்றும் அந்நிலை உள்ளது. ஸ்கூட்டர் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், TV, VCR, fridge வாங்க வேண்டும் என்று அளவுகடந்த ஆசையால் உந்தப்பட்டு, வெற்றி அடைந்தவர்கள், அந்த ஆசையில்லாமல், அந்தப் பொருள்களும் இல்லாமலிருப்பவர்களை ‘ஆசையை வென்ற உத்தமர்கள்' என்று போற்றுவதில்லை. ‘திறமையில்லாதவர்கள்' என்று கேலி செய்கிறார்கள். ஒரு நிலையில் உள்ள மனிதனுக்கு, அதாவது வாழ்க்கையின் ஆரம்ப நிலையில் உள்ளவனுக்கு ஆசையும் ஒரு கருவி. அதே போல ego அகந்தையும் முன்னேற உதவும். பிடிவாதமும் ஜெயிக்க உதவும். இவை எல்லாம் வாழ்க்கை, மனித வாழ்க்கையாக இருக்கும்பொழுது உண்மையானவை. மனித வாழ்வை, தெய்வீக வாழ்க்கையாக மாற்றும் பொழுது உதவியாயிருந்த கருவிகள், தடையாக மாறும். வீடு கட்ட உதவிய ஆசை, மௌனத்தை அடைய உதவாது; தடையாக இருக்கும். ஆசை ஒழிந்தால்தான் மௌனம் சித்திக்கும். தன் திறமையையும், பெருமையையும் உணர்ந்து, அதையே முன்வைத்து வேலை செய்த அலெக்ஸாண்டர், சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தினான். ஆன்மீக ராஜ்யத்தை அகத்தில் நிலைநிறுத்த அகந்தையும், ஆணவமும் தடையாக இருக்குமே தவிர, உதவி செய்யா. பிடிவாதம் நல்லது என்று எவரும் சொல்லமாட்டார்கள். ஆனால் பிடிவாதம் பிடித்தே வாழ்நாள் முழுவதும் காரியத்தைச் சாதிப்பவர்களை நாமெல்லோரும் அறிவோம். அப்படிப்பட்டவர்களும் ஆன்மீக வாழ்க்கையை ஏற்றுக் கொண்டால், ‘ஆண்டவனை அடைந்தே தீருவேன்’ என்று பிடிவாதம் செய்தால், முதல் அடிகூட எடுத்துவைக்க முடியாது. பிடிவாதம் போன பிறகே முதல் படியைத் தாண்ட முடியும். உண்மையான ஆர்வம் தேவை. பவித்திரமான ஆர்வம், பக்குவமான ஜீவன் வழியாக, சலனம் இல்லாத உணர்வு வழியாகச் சென்றால் மட்டுமே இறைவனைச் சென்றடையும். அங்கு மனிதனுக்கே குறையான ஆசையும், அகந்தையும் வந்தால், பரமனின் அருளை அழைப்பதில் என்ன பொருள் இருக்கிறது? தேர்தலில் ஓட்டு கேட்பவர், வாக்காளர்களை அறிவிலி என்றும், ஆட்டுமந்தை என்றும் வர்ணித்து ஓட்டு கேட்பது போலாகும்.
 
ஜீவனுள்ள பிரதிஷ்டை:
 
நாடெல்லாம் செழிப்பாக்கும் ஆற்றுப்பாய்ச்சல்தான் வெள்ளமாக வரும்பொழுது நம்மையெல்லாம் அடித்துக்கொண்டுபோகிறது. ஆற்று வெள்ளத்தை கட்டுப்படுத்திப் பயன்படுத்தினால் காடும், கரம்பும் கழனியாகிறது. காட்டை வளம் நிறைந்த கழனியாக்க வேண்டுமானால் கட்டுமீறிய ஆற்றுவெள்ளம், கட்டுக்கடங்கிய ஆற்றுப்பாய்ச்சலாக வேண்டும்.
 
ஆலகால விஷத்தைக் கட்டுப்படுத்தினால்தான், அமிர்தம் கிடைக்கும். சாஸ்த்ரோக்தமாக பூஜிக்கப்பட்டால் கல்லும் விக்கிரஹம் ஆகும்; சக்தி வாய்ந்த தெய்வமாகும். விக்கினமில்லாத வரைதான் விக்கிரஹம். விக்கிரஹம் விக்கினமானால் வெறும் கல்லாகும்.
 
மனிதன் தேவரினும் உயர்ந்தவன். இறைவனுடன் நேரடியாகத் தொடர்புள்ளவன். அவன் உள்ளம் திருக்கோயில். திருக்கோயிலுக்குப் பொற்கதவம் உண்டு. பொன்னாலான கதவைத் திறந்து பரமனை பிரதிஷ்டை செய்தால் பொன்னொளி உற்பத்தியாகி, உலகம் உயரும். ஆனால் பொற்கதவம் தாள் திறந்தால், பின்னால் ஒரு கதவும் திறந்து கொள்ளும். அது அசுரனுடைய வாயில். மனிதன் திறமையுடையவன். தெய்வத்தை நேரடியாக அடையும் திறன் அவனுக்கு உண்டு; அத்துடன் தெளிவில்லாதவன். தெய்வத்தின் மீது பக்தியுள்ள மனிதனுக்கு அசுரன் மீதும் ஆவல் உண்டு. அசுரனைத் தெய்வமாகக் கருதும் திறனும் மனிதனுக்குண்டு. அசுரன் ஜகஜ்ஜோதியாகவே காணப்படுவான். மனிதனுக்குத் தெளிவில்லை என்பதுடன், அசுரனைப் போற்றும் திறனும் அவனுக்குண்டு. அசுரனை வழிபடும் மனப்பாங்கும்.மனிதனுடையது. எனவே பொற்கதவைத் தாள் திறந்து, பொன் ஒளியைப் போற்றி அழைக்கும் அதே தருணத்தில், பின் கதவைத் திறந்து அசுரனை ஆர்வமாக அழைப்பது மனித சுபாவம். அசுரனை அழைத்தபின், பரமனும் அவனது பொன்னொளியும் அங்கு நின்று நிலைக்கும் என்று எதிர்பார்த்தால் அது நடக்காது.
நெஞ்சில் பரமாத்மாவை ஜீவனோடு பிரதிஷ்டை செய்ய வேண்டுமானால், பரமனுக்குரிய பவித்திரம் முதற்கட்டம். பரமாத்மா, அசுரனுடன் இணைந்து இருக்கச் சம்மதப்படமாட்டார். பவித்திரமான இடத்தை, பரமனுக்காக மட்டும் பத்திரப்படுத்தினாலன்றி உள்ளக் கோயிலில் உயர்ந்த தெய்வம் பிரதிஷ்டை பெறாது.
 
அசுரன் உள்ளே வந்தவுடன் பரமன் இடத்தைக் காலி செய்து விடுவான் என்பது உண்மையானாலும், பக்தனை பரமன் அத்துடன் மறந்துவிடுவதில்லை. அசுர வழிபாட்டிலிருந்து பக்தனை மீட்க மீண்டும் ஒரு முறை பரமன் பாடுபடுவதுண்டு. மனிதனுக்குப் பரம்பொருளும், அசுரனுடைய பொய்மையும் வேறுபட்டுத் தோன்றுவதில்லை. பல சமயங்களில் இரண்டையும் ஒன்றாகக் கருதுவான். இரண்டும் அவசியம் என்றும் நினைப்பான். நல்லது, தீயது என்ற பாகுபாடு அவனுக்கிருப்பதில்லை. என்றாலும், மீண்டும் பரமன் பக்தனுடைய வாழ்வில் குறுக்கிட்டு சத்தியத்தை அவனிடம் கொணர்ந்தால், விரட்டப்பட்ட பொய்மையை மீண்டும் விரைந்து நாடும் குணம் மனிதனிடம் செயல்படும். அதற்கு வழியில்லை. தன் மனத்தின் பொய்மை தனக்கிழைத்த தீங்கையே மனிதன் நொந்துகொள்ள வேண்டுமேயன்றி, பேரருளைக் குறை கூறிப் பயனில்லை. சரணாகதி முழுமை பெற்ற பின்னும், புனிதப்படும் வரை மனிதனுக்கு இந்நிலை ஏற்படுவது உண்டு. சரணாகதியை மன, மொழி, மெய்யால் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக்கொண்ட சரணாகதியை, இறைவனுக்கு ஏற்புடையதாகச் செய்ய வேண்டும். செய்தபின் அதை முழுமைப்படுத்த வேண்டும். முழுமையானது, பூரணம் பெற வேண்டும். பூரணம், புனிதம் அடைய வேண்டும். தானேற்று, தன் தலைவன் ஏற்று, முழுமைப்படுத்தி (total), பூரணப்படுத்தி (integral), புனிதமடையும் வரை மனிதன் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
 
நம்முள் முக்கியமான 3 பகுதிகள் - மனம், உடல், நாதம் - இருந்தாலும், அவை நூறு சிறு பாகங்களாகப் பிரிந்து செயல் படுகின்றன. சுபாவம் என்பது இந்த நூறு சிறு பாகங்கள் மூலமாக வெளிப்படும்பொழுது, ஆயிரம் வகையான செயல்கள் ஏற்படுகின்றன. நாம் அவற்றை ஆயிரம் குணமென உணர்கிறோம். பிராணன் பல பகுதிகளாகப் பிரிந்து நிற்கும்பொழுது, அவசரம் என்ற ஒரு சுபாவத்தைப் பார்ப்போம். ஒவ்வொரு பகுதியும் செயல்படும்பொழுது, அவசரம் அதன் வழியே வெளிப்படும். அவசரம் உடைய ஒருவரைத் திறன் உடையவராகக் கருதி, "அவர் எதையும் ஒத்திப்போடமாட்டார்” என்பதுண்டு. அதே அவசரத்தை வேறோர் இடத்தில் அவரிடம் காணும் பொழுது, ‘சுயநலம் அதிகம். தன் காரியம் என்றால் பறப்பார்’ என்பார்கள். அவருடைய அதிகாரம் செல்லுமிடத்தில், அதே அவசரத்திற்கு வேறொரு விளக்கம் உண்டு: ‘பெரிய அதிகாரி, நிமிஷம் தாமதிக்கக்கூடாது’ என்பார்கள். நல்ல குணமாகவும், மட்ட பழக்கமாகவும், திறமையாகவும், சுயநலமாகவும், அதிகாரமாகவும் பிறரால் உணரப்படுவது இவர் விஷயத்தில் அவசரமே.
 
நாம் வேறு, நம் குணங்கள் வேறு என்று பிரிந்த நிலையில் சிலர் இருப்பார்கள். குணங்களுடன் ஒன்றிப் பலரிருப்பார்கள். நாம், பரமன் நம்முள் வந்தவுடன் பக்தியோடு வரவேற்றாலும், நம்மிலிருந்து பிரிந்து நம் கட்டுப்பாட்டில் இல்லாத அவசரம், அவசரமாக அசுரனை உள்ளே வரவேற்கும். அந்தப் பொய்மைக்கு அழைப்பு அனுப்பும். அந்நிலை ஏற்பட்டால், அருள் விரைந்து விலகும்; ஆபத்து வரும். அதனால் பரமனுக்குப் பவித்திரமான பீடத்தை நெஞ்சில் எழுப்புமுன் நம்முள் உள்ள பொய்மையும், அதற்குத் துணையான குணநலன்களையும் ஆய்ந்து பார்த்து, களைந்தெறிதல் அவசியம். இருளையும், பொய்மையையும் தொடர்ந்து விலக்க இடையறாத முயற்சி செய்த பின்னரே பரமன் உள்ளுறைந்து திருவுருமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.
 
மனித சுபாவம்:
 
பாவத்தைச் செய்தவன் மூலம் புண்ணியத்தைச் சேகரம் செய்ய மனிதன் முனைகிறான் என்றொரு வாக்குண்டு. புண்ணியத்தைத் தேடும் பாதையில் பாவத்தின் சுவடே வரக்கூடாது என்ற அறிவு மனிதனுக்குண்டு. ஆனால் அவன் சுபாவம் வேறு. தேடுவது புண்ணியமானாலும், செய்வது பாவமே என்ற இயல்பு மனித சுபாவத்திற்கேயுரியது.
 
விஸ்வாசத்தைக் காட்டும் செயலில் துரோகம் இழையாகக்கூட இருக்கக்கூடாதன்றோ? பண்பான நட்பில் அகராதி எப்படி கலந்து வர முடியும்? ஒரு சொட்டானாலும் விஷத்தைச் சாப்பாட்டில் அனுமதிக்க முடியாதன்றோ? நறுமணம் பரப்பும் முயற்சிக்கு துர்நாற்றம் எப்படி உதவி செய்யும்? சுபகாரியங்களில் எந்த அளவு அபசகுனம் இருக்கலாம் என்று பேசுவதுண்டா?
முக்கியமான செயலிலும் மனித இயல்பு, சுபாவம் அத்தகைய நினைவை ஏற்றுக்கொள்ளும். சத்தியத்துடன், பொய்யைக் கலக்க முயல்வதும், ஒளியுடன் இருளைச் சேர்க்க பிரியப்படுவதும், சரணாகதியை ஏற்றுக்கொண்டபின் சுயநலம் பாராட்டுவதும் மனித சுபாவத்திற்கே உரிய செயல்.
 
தெய்வத்திற்குச் சமர்ப்பணம் செய்யப்பட்ட மனதில் களங்கத்திற்கு உறைவிடமில்லை. பூரண யோகத்தில் எதிர்பார்க்கும் திருவுருமாற்றம் மனிதனைத் தாண்டி, தெய்வ நிலையையும் தாண்டி, அடைய வேண்டிய சத்தியஜீவ நிலை. பூரண யோகத்தின் பாதையான ஆத்ம சமர்ப்பணம் மனிதனுடைய குறைகளை விலக்குவதுடன், தெய்வங்களால் தாண்டி வர முடியாத குறைகளையும் விலக்கவேண்டும். பூரணமான திருவுருமாற்றத்தை நாடுபவன் பூரணமான பவித்திரத்தைக் கைக்கொள்ள வேண்டும்.
 
சேராத கல்லூரியிலிருந்து பட்டத்தை எதிர்பார்ப்பதில்லை. காசு கொடுக்காமல் கடைக்காரனிடம் பொருள் கேட்பதில்லை. பயிரிடாத நிலத்திலிருந்து விளைச்சலை நினைப்பதில்லை. ஆனால் இதே போன்ற விஷயங்களை மனிதன் எதிர்பார்ப்பதுண்டு. அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் இடம் கொடுத்தால் ஸ்காலர்ஷிப் கேட்பதுண்டு. ஸ்காலர்ஷிப் கொடுத்தால், போக-வர செலவுக்கு கேட்பதுண்டு. அதுவும் கொடுத்தால், வீட்டுச் செலவுக்கு அனுப்ப பணம் கொடுப்பார்களா என்று கேட்டவர் பலர். சரணாகதியை ஏற்றுக் கொண்டால், இறைவன் உன்னை மாற்றி சத்தியஜீவனாகச் செய்வான் என்றால், இறைவனே எனக்காக சரணாகதியையும் செய்ய வேண்டுமென மனிதன் எதிர்பார்க்கின்றான். அந்த எண்ணம் தவறு. இறைவன் உனக்காக எல்லாவற்றையும் செய்வான் என்று எதிர்பார்க்காதே. நினைத்தவை எல்லாம் நடக்கும், நடக்க வேண்டும் என்று கருதாதே என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். ஆண்டவன் விதித்த நிபந்தனைகளை நாம் பூர்த்தி செய்யாவிட்டாலும், நம் நினைவுகளை எல்லாம் ஆண்டவன் பூர்த்தி செய்வான் என்பது அர்த்தமற்ற எண்ணம். அதை அடியோடு மறக்க வேண்டும் என்று சொல்கிறார் பகவான். உன் சரணாகதியை உளமாறச் செய். முழுமையாக்க முயல். அது பலித்தால், மற்றவையெல்லாம் நடக்கும்.
 
சமர்ப்பணத்தின் பூரணம்:
 
உலகமும், சிருஷ்டியும் ஆண்டவனுடையது. அவை அனைத்தும் ஆண்டவனே. நம் உடலும், உயிரும், எண்ணமும், செயலும் அவனுடையனவே. நம் சரணாகதியும் நம் செயலின் பகுதியே. அதுவும் அவனுக்கே உரியது. தனக்கே உரியது உன் சரணாகதி என்று இறைவன் கூறுகிறான். என்றாலும் வற்புறுத்தி உன் மீது அதைத் திணிப்பதில்லை. எந்த நிமிஷமும் உனக்குப் பூரண சுதந்திரம் உண்டு. அதற்கும் ஓர் எல்லையுண்டு. அருள் இருந்து, எல்லையைக் கடந்து விட்டால், அந்தச் சுதந்திரமும் பறிபோகும். உன்னை நாடிவரும் இறைவனை அதுவரை நீ ஏற்றுக்கொள்ளலாம்; மனமில்லாவிட்டால் மறுக்கலாம். மறுப்பின் விளைவுகளுக்கு நீயே பொறுப்பு. அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டால், உனக்கு மறுக்க சுதந்திரம் உண்டு. இறைவனின் நிலை அறிந்து, அதன் அளப்பரிய பெருமையுணர்ந்து, மனம் நிறைந்து, உணர்வு பூரித்து, தானே விழைந்து செய்யும் சரணாகதியே சிறப்பானது. ஊருக்காகவோ, சாஸ்திரத்திற்காகவோ, ஒப்புக்காகச் செய்யும் சமர்ப்பணம் ஜடத்திற்கொப்பாகும்; ஜீவனுள்ள சமர்ப்பணம் ஆகாது. கரணங்கள் நிறைந்து, ஜீவன் மலர்ந்து, ஆர்வம் பெருக்கெடுத்து, தன்னையே இழந்து, தன் நிலையையும் இழந்து, இனி ஒரு கணம் தனித்திருக்க இயலாது என்று செய்யும் சமர்ப்பணம், பூரணச் சமர்ப்பணம்.
 
வெளித் தோற்றத்தைப் பார்த்து, அதை மட்டும் ஏற்றுக் கொண்டு, உட்கரு அதுவே என நினைப்பது இயல்பு. பக்தியில்லாமல் அர்ச்சனை மட்டும் செய்துவிட்டு கடமை முடிந்ததாகக் கருதுவது வழக்கம். மகோன்னதமான நூல் கீதை. பகவத் கீதை வேதத்திற்குச் சமமாகக் கருதப்படுகிறது. அதைப் பயின்று, அதன் சாரத்தையறிந்து, யோக ரகஸ்யங்களை அறிய முற்படுபவர், கீதையை மனப்பாடம் செய்கிறார். செய்தபின் தம் வேலை முடிந்ததாகக் கருதுகிறார். மனப்பாடம் செய்வதால், உள்ளுறை ரகஸ்யங்கள் விளங்காது. மேலும் மனப்பாடம் அந்த ரகஸ்யங்களை அறிய தடையாகவும் உதவும் தன்மை உடையது. சரணாகதியை மேற்கொண்ட சாதகன், செயலற்றுப் போய், சும்மா இருப்பதே சரணாகதி என்று நினைப்பதுண்டு. செயலைச் சரணம் செய்து, பின் செய்வது உயர்ந்த யோக முயற்சி. அதனால் ‘தான்' விலகுகிறது. தன்னை குறித்து விலக்க முயல்வதற்குப் பதிலாக, தான் முயன்று செயல்படுவதை நிறுத்தினால், உயிருள்ள மனிதன் உயிரற்ற ஜடமாகிறான். முயன்று முனைப்பை விலக்குவதையும், முயற்சியைக் கைவிட்டுச் சும்மா இருப்பதையும் ஒன்றாகக் கருதினால், அது தவறு. அத்துடன் சும்மா இருப்பவன் கரிய சக்திகளுக்கு உரிய இருப்பிடம் ஆவான். அவை அவனை நாடி வரும். அவனுடைய நிலை அவர்களுக்குப் புகலிடம் அளிக்கும். அது யோகப் பாதைக்குத் தீங்கு விளைவிக்கும்.
 
இறைவனுடைய செயல் உலகை முழுவதும் தழுவிய போராட்டம் ஆகும். சிருஷ்டியில் அருளும், இருளும் போர் முனையிலிருக்கின்றன. ஒளியும், இருளும் கணம் தவறாமல் போரிடுகின்றன. நம் அகந்தை இருளுக்குத் துணை நிற்கிறது. சரணாகதியை ஏற்றுக்கொண்ட சாதகன், அகந்தையின் பிடியினின்று அகன்றவன். அதனால் இருளுக்குத் துணைவனாயிருப்பதை விட்டு, இருளுக்கு இடர் செய்ய முற்படுகிறான். அவன் இறைவனின் தூதன்; ஒளியின் ஒப்புயர்வற்ற சேவகன்; உள்ளொளியின் வீரன்; தன் சேவையை விரும்பி ஏற்றுக் கொண்டவன்; சேவை செய்ய பெருமைப்படும் சூரன். இறைவன், தன் அடிமையிடமிருந்து அவற்றை நிர்பந்தித்துக் கேட்கிறான். எள்ளளவு பவித்திரம் குறைந்தாலும், அரை மனதுடன் அர்ப்பணம் செய்தாலும், சேவையின் பெருமையை உணர மறுத்தாலும், இறைவன் சரணாகதியை ஏற்க மறுத்துவிடுவான். சேவகம் சிறப்பானது ஒன்றானாலும், முழு அடிமையையே இறைவன் விரும்பி ஏற்றுக் கொள்வான். ஏழேழ் பிறவிக்கும் அடிமையாக இருப்பதை நினைத்து, வியந்து பூரிக்கும் பக்தனே இறைவனுக்கு இனியவன்.
 
யோக இரஸவாதம்:
 
பூரண யோகம் பெற முனைந்துள்ள இலட்சியம் யோக இரஸவாதம். செம்பைப் பொன்னாக்குவது இரஸவாதம். பொய்யாலும், கர்மத்திலும், இருளாலும் ஏற்பட்ட மனிதப் பிறவியை சத்தியத்தாலும், கர்மத்தைக் கடந்தும், காலத்தைக் கடந்தும் உள்ள பொன்னொளியின் ஜீவனாக மாற்ற முயலுவது யோக ரஸவாதம். அதையே பகவான் ஸ்ரீ அரவிந்தர் திருவுருமாற்றம் என்கிறார்.
 
தோல்வியை வெற்றியாகக் கருதும் மனப்பான்மை:
 
அப்பாதையில் அடி எடுத்து வைத்தவனுக்குத் தவறாது கிடைக்கும் பரிசு முழுத் தோல்வி. நம்பிக்கையின் அடித்தளத்தைத் தகர்க்கக்கூடிய தோல்வி, எதிர்பாராத இடர்களும், மனித வாழ்வுக்குப் புதியதான கஷ்டங்களும் அடுக்கடுக்காக வரும். தோல்வியைப் பெற்று, நம்பிக்கையைப் புதுப்பிக்கும் மனப்பான்மையே ஜீவனுள்ள சரணாகதியின் பெருமையை உணர்ந்து, பெறற்கரிய பரிசாகக் கருதும். உலகைக் கடந்து நிற்கும் உயரிய நிலையில் உள்ள வெற்றியைப் பெறும் யோகப் பாதையிது. தெய்வங்களைத் தாண்டிச் சென்று சாதிக்க வேண்டிய ஒன்று. இப்படிப்பட்ட மனப்பாங்கை ஏற்று, அது கிடைத்ததைப் பெருந்தெய்வீக வாய்ப்பாக அறிந்து, அப்பாதையில் பெறும் தோல்விகளை வெற்றியின் முன்னேற்றமாகக் கருதும் சாதகன் இறைவனுக்குரிய மனித ஜீவ கருவி.



book | by Dr. Radut