Skip to Content

07. Synthesis of Yoga - சின்த்தஸிஸ் ஆப் யோகா

 
யோகங்களின் சாரம் என்ற பொருள்படும் இத்தலைப்பு பகவான் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய யோக நூலின் பெயர். அவருடைய 30 வால்யூம்களில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன. அவற்றுள் தலையாய மூன்றில் இந்நூல் ஒன்று.

பரிபூரண யோகத்தின் தத்துவத்தை Life Divine என்ற நூலில் எழுதினார். அத்தத்துவத்தை நடைமுறையில் பயின்று யோகப் பலன் பெறுவது எப்படி என்பதை விளக்கும் நூல் இது. “இடுக்கண் வருங்கால் நகுக”என்பது பேருண்மை. இந்த உண்மையைப் பயின்று வாழ்வில் பயனடையும் முறையை விளக்கும் நூல் ஒன்றை நாம் கண்டதில்லை. அது போன்ற நூல் அன்றாட வாழ்வுக்குப் பயன்படும். பரிபூரண யோகத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் ஏராளம். அகந்தையை அழிப்பது, பிரபஞ்சத்தின் ஆத்மாவாக மாறுவது, சச்சிதானந்தத்தை எட்டுவது, பரம்பொருளை வாழ்வில் பிரதிபலிப்பது, ஆசையை வெல்வது, குணங்களைக் கடந்து செல்வது, சமத்துவத்தை அடைவது, சக்திக்குச் சரண் அடைவது, உலகை அற்புதக் காட்சியாகக் காண்பது, சத்தியஜீவனாக மாறுவது என்பன போன்ற கோட்பாடுகளையுடையது பூரண யோகம். ஒவ்வொரு கோட்பாட்டையும் தனித்தனியே ஓர் அத்தியாயமாக எடுத்து நடைமுறையில் பயில்வது எப்படி, பயிற்சிக்கு உரிய நிபந்தனைகள் என்ன, யார் பயில முடியும், எத்தனை கட்டங்களாக பயிற்சியைப் பிரிப்பது, ஒவ்வொரு கட்டத்திற்குரிய ஞானம் எது, முறை என்ன, பலன் என்ன, எந்தத் தவறுகள் செய்யக் கூடாது என்பதை விவரமாகவும், விளக்கமாகவும், குருவின் அனுக்கிரஹத்தால் மட்டும் பெறக்கூடியவற்றையும், அதற்குரிய நுட்பங்களையும் 74 அத்தியாயங்களில் எழுதியுள்ளார்.

நூலை 4 பகுதிகளாகப் பிரித்து, கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், பூரண யோகம் என்று 4 புத்தகங்களை உருவாக்கி உள்ளார்.

முதற்பகுதியில் இடம் பெறுபவை: யோக சாதனங்கள், ஆத்ம சமர்ப்பணம், கீதை வழியான சரணாகதி, திருவுள்ளம், இறைவன் என் தலைவன், வாழ்வில் இறைவனுடைய செயல் ஆகிய தலைப்புகள்.

ஞான யோகப் பகுதியில்: ஞானம், நிஷ்டை, ஆசையை அறுத்தல், அகந்தை, உடல், அறிவு, உணர்வு, பிரபஞ்சம், திரிகுணங்கள், சச்சிதானந்தம், மனோமயப் புருஷன், பிரம்மம், சத்தியஜீவியம், சமாதி, ஹட யோகம், ராஜ யோகம் ஆகியவை இடம் பெறுகின்றன.

அடுத்தது பக்தி யோகப் பகுதி. இது சுருக்கமான பகுதி. ஆனந்த பிரம்மம், அன்பின் இரகஸ்யம், இஷ்ட தேவதை, பக்தி, பக்தியின் இலட்சியம் ஆகியவை இதற்குரியவை.

கடைசியில் இந்த மூன்று மார்க்கங்களும் சேர்ந்து பூரணம் பெறுவதை எழுதுகின்றார். அதன் சாரம்: “ஞானம் முதிர்ந்த நிலையில் பக்தியையும், கர்மத்தையும் தன்னுட்கொள்கிறது. அதேபோல் பக்தியும், கர்மமும் மற்ற இரண்டையும் தன்னுட்கொள்ள வேண்டுமானால் அவை முதிர்ந்து முழுமை பெற வேண்டும். அந்நிலையில் சத்தியஜீவியத்தை சாதகன் எட்டுகிறான்” என்பது இதன் கரு. இதை அடையும் முறையாவது, சமத்துவம் ஏற்பட்டு, அதன் அடிப்படையில் நம்பிக்கையால் செயல்பட்டால், தூய்மைப்படுத்தப்பட்ட மனம் சத்தியஜீவனாகும் என்கிறார். அவர் கூறும் முறைகளைப் பிரித்துக் கூறுகிறேன். 

 • ஜீவாத்மா தான் எண்ணியதை எய்தக்கூடியது என்று ஏற்றுக்கொள்.
 • மனத்தை மௌனத்தால் தூய்மைப்படுத்து.
 • ஆத்மாவை அகந்தையினின்று விலக்கி, விடுவிக்க வேண்டும்.
 • வாழ்வை ஆசையிலிருந்து விடுவிக்க வேண்டும்.
 • சமத்துவத்தை நிலைநிறுத்து.
 • வாழ்வை நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படுத்து.
 • சத்தியஜீவன் பிறப்பான்.

சத்தியஜீவனை 7 அத்தியாயங்களிலும், நம்பிக்கையை 3 அத்தியாயங்களிலும், சமத்துவத்தை 3 அத்தியாயங்களிலும், மனத்தை 3 அத்தியாயங்களிலும், தத்துவத்தை 3 அத்தியாயங்களிலும் விளக்குவதுடன், நம்பிக்கையை எப்படி ஏற்படுத்துவது, எப்படி மனதைத் தூய்மைப்படுத்துவது என்பனவற்றையும் கூறுகிறார். ஓரிரு உதாரணங்கள் மட்டும் எழுதுகிறேன்.

1. நம்பிக்கை ஏற்பட சக்தியை அடைய வேண்டும் என்ற கருத்தை விளக்கும்பொழுது சாதகன் முறையாக சக்தியை அடைந்து விட்டால், அதிலுள்ள ஆபத்தைச் சுட்டிக்காட்டுகிறார். உயர்ந்த யோகப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து சக்தியைச் சாதகன் அடைந்தவுடன் அங்கு அவன் காண்பது சக்தி மட்டுமன்று, தன் அகந்தையையும் காண்பான். அகந்தை அவன் கட்டுக்குள் இருக்காது. அது சக்தியைத் தன் இஷ்டத்தைப் பூர்த்தி செய்யச் சொல்லும். இது ஆபத்து. இந்த ஆபத்தை விலக்கும் முறையை பகவான் குறிப்பிடுகிறார். சக்தியைச் சாதகன் நாடுவதற்குப் பதில், அகந்தையை அழிக்க முற்பட்டால், அகந்தை அழிந்தவுடன் சக்தி அவனை நாடிவரும். சாதகனை ஆட்டிப்படைக்க அவன் அகந்தை இருக்காது. தன்னை நாடி வந்த சக்தியை அவன் சரண் அடைந்தவுடன், அடுத்த கட்டங்களான அம்ச சநாதனம், அவதாரம் ஆகியவற்றை எட்ட முடியும் என்பது பகவான் விளக்கம்.

2. சர்வம் பிரம்மம் என்ற தத்துவத்தை நம் யோகத்தால் சித்திப்பது எப்படி என்பதை ஆத்மச் சமர்ப்பணத்தை விளக்கும் இடத்தில் எழுதுகிறார். அதைப் பல கட்டங்களாக அவர் பிரித்ததை எழுதுகிறேன். 

 • இந்த யோகத்தைச் செய்ய இறைவனின் அழைப்பு உனக்கு உண்டா என்ற வினாவை எழுப்பி, உண்டு என்ற முடிவுக்கு வந்தால் இதை ஏற்றுக்கொள்.
 • எண்ணங்களையும், செயல்களையும் உள்ளுறை இறைவனுக்குச் சமர்ப்பிக்க முடிவு செய்.
 • உள்ளுறை இறைவனைக் கண்டுகொள். முடியாவிட்டால் அவன் இருப்பதாகக் கொள்.
 • சமர்ப்பணத்தால் மட்டுமே செயல்படு.
 • ஜீவனின் சக்திகளை ஒருங்கே சேர்த்து (all inclusive concentration) செயலைச் சிறப்பிக்கச் செய்.
 • ஜீவனின் 4 பகுதிகளும் பூரண விழிப்படையும்.
 • அறிவைச் சோதனை செய்து ஞானத்தின் நிலையை உயர்த்து.
 • அவனன்றி எதுவுமில்லை என்ற ஞானத்தை உயர்த்தி, அவனே அனைத்தும் என்று கொள்.
 • சமர்ப்பணத்தின் தீவிரத்தை சக்தியின் முழுமையால் பூரணப்படுத்து.
 • இறைவன் வெளிப்படுவான்.

தன்னை இறைவனாகக் காண்பாய்.

உலகத்தை இறைவனாகக் காண்பாய்.

இறைவன் இவை இரண்டையும் கடந்த நிலையில் இருப்பதையும் காண்பாய்.

 • சர்வம் பிரம்மம் என்பது மூன்று நிலைகளிலும் சித்திக்கும். 

மேல்நாட்டினர் இங்கு வந்தவுடன் பகவானுடைய எல்லாப் புத்தகங்களையும் படித்துவிடுவார்கள். அவர்கள் அனைவரையும் கவர்ந்த நூல் Human Cycle (ஹுயூமன் சைக்கிள்). சமுதாய வளர்ச்சியை விவரிக்கும் நூல் இது. பிரான்சில் ஸ்ரீ அரவிந்தருடைய ஒரு புத்தகத்தை வெளியிட வாய்ப்பு ஏற்பட்டது. ஒரு பிரெஞ்சுக்காரர் அதை அன்னையிடம் தெரிவித்து, அத்துடன் “ஹுயூமன் சைக்கிள்” என்ற நூலை வெளியிடலாம் என்றும் தெரிவித்தார். அனைத்து மேலைநாட்டாரும் அவர் கருத்தை ஆமோதித்தார்கள். அன்னை மாறுபட்ட கருத்தை வெளியிட்டார்.

ஹுயூமன் சைக்கிள் உயர்ந்த நூல் என்றாலும், சின்த்தஸிஸ் ஆப் யோகா என்ற நூல் போல் ஆன்ம விளக்கம் கொடுக்கக்கூடியது அன்று. அது அறிவைச் சிறக்கச் செய்யும்; மற்றது ஆன்மாவைத் துலங்கச் செய்யும். எனக்கே அந்த அனுபவம் உண்டு. படிப்பவர்கள் ஆன்மாவைத் தொடும் திறன் சின்த்தஸிஸ்ஸுக்கு உண்டு என்று அன்னை கூறி, அதையே வெளியிட அனுமதி கொடுத்தார். மேலும் ஆயிரம் பேர் அறிவை விளக்கம் செய்வதைவிட ஒருவருடைய ஆன்மாவைத் துலங்கச் செய்வது மேல் என்றார் அன்னை.

பக்தி யோகத்தைச் சுருக்கமாகவும், ஞான யோகத்தை நீளமாகவும் எழுதியது பகவானுக்குத் திருப்தியில்லை. மீண்டும் அதை மாற்றி எழுதப்போவதாகக் கூறியிருந்தார். பிற்காலத்தில் அதை அவருக்கு நினைவூட்டியபொழுது, அவரது யோகம் உயர்ந்த கட்டங்களை எட்டிவிட்டபடியால், மீண்டும் எழுத்துப் பணியை மேற்கொள்ள இந்த யோக நிலை இடம் அளிக்காது என்று கூறினார்.

Mystery of Love என்ற பகுதியில் வரும் கடைசிப் பகுதிகள் ஆங்கில இலக்கியத்தில் தலைசிறந்த உரைநடைப் பகுதிகளை மொழிநயத்தில் தாண்டிவிடுகின்றன. தலைசிறந்த ஆங்கில எழுத்தாளர்களின் சிறந்த பகுதிகளை இப்பகுதியோடு ஒப்பிட்டுப் பார்த்தால், உரைநடை இலக்கியம், காவிய நயத்தைக் கடந்து சென்று, ஆன்மீக வாயிலைத் தட்டி, அருள் வெள்ளத்தை எழுப்புவது தெரியும். அன்னை சொல்லியது போல் ஆன்மாவைத் தொடும் இடம் இது.

Life Divine மிக உயர்ந்த நூல் என்றபின் Synthesis of Yogaவின் உயர்வை எப்படி விவரிப்பது? Life Divine பால் என்றால், Synthesis of Yoga வெண்ணையாகும். வாழ்வில் நாம் அமிர்தமாகக் கருதுவது பால், என்றாலும் அதனுடைய சாரமாக வெண்ணெய் திரள்வதுபோல் இந்நூல்கள் அமைந்துள்ளன.

ஸ்ரீ அரவிந்தருடைய நூல்களிலிருந்த மேற்கோள்களை அன்னை பரிசோதனை செய்த சமயம், “மேலேயிருந்து ஞானம் மழையாகப் பொழிந்து, எழுதியிருக்கிறார்” என்று கூறினார்கள். அடுத்த தரிசனம் வரப்போகிறது. அதற்குள் அச்சுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் 3, 4 சாதகர்கள், செய்ய வேண்டிய வேலையைப் பற்றி அன்னையுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். ஸ்ரீ அரவிந்தருடைய மேற்கோள் ஒன்றை ஒருவர் எடுத்து, “இதைப் போடலாமா?” எனக் கேட்க வேண்டி, அதை அன்னைக்குப் படித்துக் காண்பித்தார். இந்த மூன்று வாக்கியங்களைப் படித்தவுடன் சூழல் எப்படி உயருகிறது என்று அன்னை வியந்தார்.

ஸ்ரீ அரவிந்தர் சம்பந்தப்பட்ட அனைத்துக்கும் குறிப்பான சிறப்பு உண்டு. (Blessing Packet) அன்னையின் பிரசாதம் சக்தி வாய்ந்தது. மகளுக்குப் பிரசவ நேரம். ஆஸ்பத்திரியில் ஆப்பரேஷன் தியேட்டரில் சிக்கலான நேரம். டாக்டர்கள் முயன்று பார்த்து, “இனி முடியாது. பிரசவம் தானே நடைபெறாது. ஆப்பரேஷன் செய்ய வேண்டும்” என்று முடிவு செய்தபொழுது, பெண்ணின் தாயார் கையில் பிரசாதமில்லாமல் தவித்துப்போனார். பிரசாதம் இல்லாவிட்டாலும் அன்னையைப் பற்றிய புத்தகம் வைத்திருந்தார். பெண்ணின் மார்பில் புத்தகத்தை வைத்துப் பிரார்த்தனை செய்தார். வெளியில் போய் ஆப்பரேஷனுக்குத் தயாராக டாக்டர்கள் திரும்பி வருவதற்குள் பிரசவம் ஆகிவிட்டது. ஸ்ரீ அரவிந்தர், அன்னை சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் முக்கியத்துவம் உண்டு.

தாத்தாச்சாரி என்ற பக்தர் ஒருவர் நியூயார்க்கிலிருக்கும் பொழுது ஸ்ரீ அரவிந்தருடைய புத்தகங்களை வெளியிட்டார். அமெரிக்க வெளியீடு என்பதால், அதன் கடைசியில் index இருக்கும். அது படிப்பதற்கு எளிமையாக இருப்பதால், Life Divine படிப்பதற்கு நான் அந்த அமெரிக்க வெளியீட்டையே பயன்படுத்தி வந்தேன். தொடர்ந்து 10 பக்கங்களுக்கு மேல் Life Divine படிக்க முடியாது. குறிப்பு எடுப்பதானால் 2, 3 பக்கங்களுக்கு மேல் ஒரே சமயத்தில் என்னால் செய்ய முடிவதில்லை. இதுபோல் பல வருஷங்கள் கடந்தன. இந்த வெளியீட்டில் எழுத்து மிகவும் சிறியது. சென்ற ஆண்டு அந்தச் சிறிய எழுத்தைப் படிக்க நான் மிகவும் சிரமப்பட்டதால், ஆசிரம வெளியீட்டை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து 50, 60 பக்கம் ஒரு சமயத்தில் படிக்க முடிந்தது. ஒரே விஷயமானாலும், வெளியிட்ட இடத்திற்கு உரிய சிறப்பு எனக்குப் புரிந்தது. 1960இல் Synthesis of Yoga புத்தகம் வாங்கினேன். அதைப் படித்து 400 பக்கங்களுக்கு மேல் குறிப்பு எடுத்திருந்தேன். இதுவரை Synthesis of Yoga 20 பிரதிகள் நான் வாங்கியிருக்கின்றேன். அதைப் பலரும் பயன்படுத்தி இருக்கின்றனர். நான் குறிப்பெடுத்த புத்தகம் 1962இல் என்னை விட்டுப் போயிற்று. சென்ற ஆண்டு அந்தப் புத்தகம் மீண்டும் தானே என்னைத் தேடி வந்தது. அதில் என் குறிப்புகள் இருந்ததால் நான் ஆவலுடன் அதை வாங்கிக்கொண்டேன். ஒரு நாள் என் குறிப்புகளை மீண்டும் படிக்கும்பொழுது புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து 250 பக்கங்கள் படித்தேன்! எனக்கே வியப்பாக இருந்தது. வெளியிட்டவரைப் பற்றி ஒரு மாற்றம் தெரிவதைப் போல், நாம் பயன்படுத்தியதில் உள்ள சிறப்பை இதில் கண்டேன்.

அன்னை, பக்தர்கள் மனதில் ஒரு பொறியாக வாசம் செய்கிறார்கள் என அறிவேன். பக்தர்கள் செயலிலும் ஒரு பொறியாக (emanation) அன்னை வாசம் செய்கிறார்கள். பக்தியுடன் செய்த காரியங்களில் அன்னை இருக்கின்றார்கள். அதனால் எளிதில் படிக்க முடிகிறது, அதிகமாகப் படிக்க முடிகின்றது, அளவுகடந்து தொடர்ந்து படிக்க முடிகிறது என்பதை இந்நிகழ்ச்சியில் கண்டேன்.

ஆசிரமத்திற்கு வந்த புதிதில் படிக்க விரும்புபவர்கள் ஸ்ரீ அரவிந்தருடைய புத்தகங்கள் 1000 பக்கம் இருப்பதால், படிக்கத் தயங்குவார்கள். அதனால் 1930ஆம் ஆண்டுவாக்கில் ஒரு சிறிய புத்தகம் வெளியிட விரும்பினார்கள். யோகத்தைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் எழுதிய முக்கிய கருத்துகள் சேர்ந்த புத்தகம் ஒன்றைத் தயார் செய்து, Bases of Yoga என்று தலைப்பிட்டு (யோக அஸ்திவாரம் என்ற பொருள்படும்) வெளியிட்டனர். அளவு கருதி அப்புத்தகம் பிரபலமாகிவிட்டது.

முனைந்து படிக்க விரும்புபவர்களுண்டு. அவர்கள் எந்தப் புத்தகத்தைப் படிக்கலாம் என்று கேட்டால், Life Divine வேண்டாம், Synthesis of Yoga படிக்கலாம் என்று அனைவரும் சொல்வதுண்டு. எனக்கும் முதலில் கிடைத்த சொல் அதுவே. பல ஆண்டுகள் கழித்து என் அனுபவத்தைப் பரிசீலனை செய்ய ஒரு சந்தர்ப்பம் வந்தபொழுது நான் கவனிக்க ஆரம்பித்தேன். படித்தபின் படிப்பின் ஆன்மீகப் பயனை வெளியிடும் முத்திரைகளுண்டு. Life Divine படித்தாலும், Synthesis of Yoga படித்தாலும் பயன் ஒன்றாக இருப்பதைக் கண்டேன். பிறகு ஸ்ரீ அரவிந்தர் உடற்பயிற்சியைப் பற்றி எழுதியதைப் படித்தபோது Life Divine படித்த அதே பலனிருப்பதையும் கண்டேன். அவர் எழுதியவை எதைப் படித்தாலும் ஆன்மீகப் பலன் ஒன்றாய் இருப்பது தெரியவந்தது. பலனை அளிப்பவர் பகவான்; எதைப் பற்றி எழுதுகிறார் என்பது இரண்டாம்பட்சம் என்பது தெரிந்தது.

Life Divine கடினமான நூல், Synthesis of Yoga கடினமாக இருக்காது என்பது பொதுவான அபிப்பிராயம். அது ஓரளவு உண்மை. Life Divine தத்துவத்தை விளக்குவதால், ஒவ்வொரு கருத்தும் கடினமாக இருக்கும். தத்துவ ஆராய்ச்சி மனம் உள்ளவர்க்கே அது பிடிக்கும். Synthesis of Yoga பயிற்சி முறைகளைக் கூறுவதால், அங்கு தத்துவத்தை முதன்மையாகக் கருதுவதில்லை. அதனால் அது எளிமையில் புரியும் என்பது உண்மை. இறைவன் என் தலைவன் என்ற அத்தியாயத்தில், ஆரம்பத்தில் காணப்படும் சில முறைகளைக் கூறி, அது எப்படி எளியது - எளியதன்று என்பதை விளக்க முற்படுகிறேன். 

 1. சக்தியைச் சரண் அடைய வேண்டும்.
 2. சரணாகதியை மேற்கொண்டாலும், சுபாவத்தை ஒட்டியே செயல்பட வேண்டும்.
 3. சமர்ப்பணம் முதற் கட்டம்.
 4. ஆசையை அழிப்பது அடுத்தது.
 5. அகந்தையை ஒழிப்பது மூன்றாம் கட்டம்.
 6. அகந்தை எளிதில் அழியாது.
 7. உன்னைக் கருவியாக்கு.
 8. அகந்தை தானே கருவியாகும்.
 9. விழிப்புண்டு.
 10. அகந்தை ஒழியும் முன் தானே, இறைவன் உருவில் ஜோதிமயமாகத் தீய சக்திகள் தோன்றும். 

சக்தியைச் சரண் அடைய வேண்டும் என்ற கட்டளையை பகவான் அளித்ததால், அதைச் சிரமேற்கொண்டு நடைமுறையில் கடைப்பிடிக்கின்றோம். இதில் புரியாதது ஒன்றும் இல்லை. எளிமையாகத் தோன்றுகிறது. ஏன் சக்தியைச் சரண் அடைய வேண்டும், ஏன் சரணாகதியை ஈஸ்வரனுக்குச் சமர்ப்பிக்கக்கூடாது என்ற கேள்வி எழுந்தால், அதற்குரிய பதில் அங்கில்லை. அது Life Divine படித்தால்தான் புரியும். Synthesis of Yoga எளிமையானது என்பது உண்மையானாலும், வேறொரு நோக்கில் எளிமையில்லை என்று விளங்கும். ஈஸ்வரனைச் சரண் அடைந்தால் மோட்சம் கிடைக்கும். பூரண யோகத்திற்கு மோட்சம் இலட்சியமில்லை. அதனால் ஈஸ்வரனுக்குச் சரணாகதியைச் சமர்ப்பிக்கக்கூடாது. சக்திக்குச் சரணாகதியைச் சமர்ப்பித்தால் பூரண யோகம் எப்படிப் பலிக்கும் என்ற கேள்விக்கும் அங்கு விடையில்லை. Life Divine முதல் புத்தகத்தில் கடைசி அத்தியாயத்தில் சக்தியின் செயலை வர்ணிக்கின்றார். சக்தி சிருஷ்டிக்கப்பட்டதையும் விவரிக்கின்றார். திருவுருமாற்றத்தை உலகில் செயல்படுத்துவது சக்தியே என்பதைக் கூறுகிறார். எனவே சமர்ப்பணத்தைச் சக்திக்கு அளித்தால், அவள் இலட்சியமான திருவுருமாற்றம் பூர்த்தி பெறும். அதன் மூலம் பூரண யோகம் பூர்த்தியாகும்.

என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் அறிந்துகொள்ள வேண்டுமென்றால் Synthesis of Yoga எளிதில் புரியும். ஏன் அப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிய வேண்டுமானால், Life Divine தான் உதவும். Synthesis of Yoga, Life Divineஐப் போன்ற நூலாகும்; எளிது என்று கொள்ள முடியாது.

5 ஆண்டுகள் ஆர்யா என்ற பத்திரிகை நடந்தது. அத்துடன் அது முடிந்துவிட்டது. முடிந்துவிட்ட காரணத்தின் கூறுகளை ஆராய சாதகர்கள் முற்பட்டபொழுது ஸ்ரீ அரவிந்தர் சொல்லியது அவர்களைத் திகைக்கச் செய்தது. 5 ஆண்டுகள் எழுதியவற்றுடன் யோக விஷயங்கள் முடிந்துவிடவில்லை. தேவைப்பட்டால் 70 ஆண்டுகள் தொடர்ந்து எழுதத் தேவையான விஷயங்கள் இருக்கின்றன என்றார்.

நூலைப் படித்து முடித்தபின் அதன் முழுச் சாரமும் மனதில் ஒருங்கே சேர்ந்து நிற்குமானால், படித்ததின் யோகப் பலன் உண்டு. ஒன்றன்பின் ஒன்றாய் கருத்துகளை நினைவுகூர்வது முதல் நிலை. அனைத்துக் கருத்துகளும் திரண்டு ஒரே சமயத்தில் மனத்தை ஆட்கொண்டால், ஞானம் சித்திக்கும். 

*****book | by Dr. Radut