Skip to Content

05. சாவித்திரி

 
பகவான் ஸ்ரீ அரவிந்தர் பிறவியிலேயே ஒரு கவி. ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழியையும் அவர் தீவிரமாகப் பயின்றதில்லை. தாய்மொழியான வங்காளத்தையும் பிற்காலத்திலேயே கற்றுக் கொண்டார் என்பதால் ஆங்கிலமே அவருக்குத் தாய்மொழி போல் அமைந்தது. எனவே சிறு வயது முதல் அவர் இயற்றிய செய்யுள்கள், காவியங்கள், நாடகங்கள், அனைத்தும் ஆங்கிலத்திலேயே உருவம் பெற்றன. “இருளை விழுங்கும் ஒளி” என்ற கருத்து ஆரம்ப காலத்தில் இருந்தே அவரைக் கவர்ந்த கருத்து. மனித ஹிருதயத்திலிருந்து எழும் தெய்வீக அன்பு மரணத்தை வெல்லக்கூடியது என்ற கருத்தை அவர் பாராட்டினார். பகவான் மேற்கொண்ட பூரண யோகம், உலகில் மரணத்தை அழிக்கும் இலட்சியத்தைக் கொண்டது. ஒருவருடைய உயர்வு உலகைக் காப்பாற்றும் என்பது அவர் கொள்கை. பூரண யோகத்தை மேற்கொண்டு சத்தியஜீவ லோகத்தை அடைந்து மரணத்தை வெல்லும் சக்தியை அங்கிருந்து உலகுக்குக் கொண்டு வர முடியும். அது போல் சில யோகிகள் சாதித்தால், அதன் மூலம் உலகத்திலேயே மரணத்தை அழித்துவிட முடியும் என்பது அவர் கொள்கை.

இந்தத் தத்துவத்தை விளக்கிப் பெருநூலாக Life Divine என்ற புத்தகத்தை 1920இல் எழுதி முடித்தார். ஆன்மீகத் தத்துவத்தை அறிவு ஏற்கும் வாயிலாக எழுதப்பட்ட நூல் இது. யோகமாக இதை மேற்கொண்டு சாதனையாக ஒருவர் இத்தத்துவத்தைப் பின்பற்றுவது எப்படி என்று Synthesis of Yoga என்ற நூலையும் 1920இல் எழுதி முடித்தார். இரு நூல்களும் சொல்வது ஒன்றே. ஒன்று, தத்துவ வியாக்கியானம். மற்றது, யோகப் பயிற்சி முறை. இந்நூல்களில் உள்ள தத்துவம், யோகம், ஆகியவற்றை மந்திரங்களாக மாற்றி காவிய வடிவில் "சாவித்திரி" என்ற பேரிலக்கியத்தை நெடுங்காவியமாக இயற்றினார். தத்துவம் விளங்கினால்தான் புரியும்; விளங்காவிட்டாலும் அவர் எழுத்திலுள்ள மந்திர சக்திக்கு மற்ற பலன்கள் உண்டு. யோகம் பயின்றால்தான் பலன் தரும்; பயிலாவிடினும் படித்தால் தியானம் வரும். அவர் எழுத்துகளுக்குள்ள ஆன்மீக சக்தி, மந்திர சக்தியை விட உயர்ந்தது என்பதால் அவர் யோக நூலைப் படித்தால், யோகம் பயிலாவிட்டாலும் மற்ற பல ஆன்மீக உயர்வுகளான மௌனம், சாந்தி, ஜோதி, ஆனந்தம் ஆகியவை கிடைக்கும். சாவித்திரி காவியம் முறையாகப் பயின்றால் யோகம் பூர்த்தியாகும். சாதாரணமாகப் படித்தாலும் பகவானுடன் ஜீவனுள்ள தொடர்பைப் பெறலாம்.

1914இல் எழுதத் தொடங்கிய பகவான் 1920இல் எழுதுவதை முடித்துவிட்டார். அவருடைய பெரிய படைப்புகள் அனைத்தும் அதற்குள் “ஆர்யா” என்ற பத்திரிகையில் தொடராக வெளிவந்துவிட்டன. சாவித்திரியை மட்டும் 1950 வரை எழுதிக்கொண்டேயிருந்தார். 1900இல் முதல் வடிவம் பெற்ற இக்காவியம் பல நூறு மாற்றங்களைக் கடந்து 1950இல் முடிவு பெற்றது. தொடர்ந்து, இடையறாது பகவான் எழுதிய நூல் சாவித்திரி மட்டுமே. தம்முடைய பூரண யோகத்தில் அடுத்த அடுத்த கட்டங்களுக்குப் போக காவிய உருவத்திலுள்ள சாவித்திரியை ஒரு கருவியாகக் கொண்டதாக அவர் கூறுகிறார். பிரபலமடைந்த பேராசிரியர்கள் ஏராளமான புத்தகங்களை எழுதுவது உண்டு. பெர்னாட்ஷா போன்ற அறிஞர்கள் எண்ணிறந்த நூல்களை வெளியிடுவதுண்டு. ஆனால் அவற்றுள் ஒரு புத்தகமே முக்கியமாகக் கருதப்படும். இந்தப் பல புத்தகங்களை எல்லாம் தம் எண்ணத்தை உருவாக்குவதற்கு கருவியாகக் கொண்டேன் என்று அது போன்ற அறிஞர்கள் கூறுவதுண்டு. பகவான் தம் யோகம் சித்தி பெற சாவித்திரியைக் கருவியாகக் கொண்டேன் என்கிறார். 

மஹாபாரதத்திலில்லாதது உலகத்தில் இல்லை என்பது வழக்கு. சாவித்திரியில் இல்லாதது இனி உலகத்தில் சிருஷ்டியாகப்போவது இல்லை என்பது அன்னையின் அபிப்பிராயம். சத்தியவான்-சாவித்திரி கதை மஹாபாரதத்திலுள்ளது. அதை நேரடியாக அதே கருத்தையும், கொள்கையையும் ஏற்றுக்கொண்டு பகவான் எழுதவில்லை. தம் பூரண யோகத்தின் கருவை விளக்க மூலக்கதையைத் தகுந்தவாறு பகவான் மாற்றிக்கொண்டிருக்கிறார். சுருக்கமாக, பாரதத்தில் உள்ளவற்றை அளவு கடந்த நீளத்தில் மாற்றிய உருவத்தில் எழுதியிருக்கின்றார். சுமார் 1000 மடங்கு நீளத்தை வளர்த்திருக்கின்றார். பாரதத்தில், அஸ்வபதி உன்னதமான அரசன். புத்திரபாக்கியத்திற்காக 18 ஆண்டுகள் தவமிருந்து சாவித்திரி எனும் தெய்வத்தைத் தரிசித்துச் சந்தானபாக்கியம் பெறுகிறான். சுமார் 10 வரிகளில் இது பாரதத்தில் சொல்லப்படுகிறது. பகவானுடைய காவியத்தில் அஸ்வபதி மனித குலத்தின் ஆன்மீகப் பிரதிநிதி. உலகம் இதுவரை மேற்கொள்ளாத இலட்சியங்களை மேற்கொண்டு, அவற்றைப் பெற யோகத்தை மேற்கொள்கிறார்.

ஸ்ரீ அரவிந்தர் சத்தியவான்-சாவித்திரி கதையை ஆன்மீக நோக்குடன் பார்த்து, வேத இரகஸ்யம் பொதிந்துள்ள கதை இது எனக் கருதினார். ஜீவனின் ஆன்மீகச் சத்தியத்தைத் தாங்கிவரும் ஆன்மாவாக அவர் சத்தியவானைக் கணித்தார். சாவித்திரி சூர்ய புத்ரி; பரம்பொருளின் தேவி அம்சம்; உலகை இரட்சிக்க அவதாரம் எடுத்தவர். தூமத்சேனா சத்தியவானின் தகப்பனார். ஒளிமயமான மனம் ஒளியை இழந்து, அதன் பிரதிபலிப்பாகப் பார்வையை இழந்து, இராஜ்யத்தைப் பறிகொடுத்து, நிற்கிறார். ஒளியின் உற்பத்தி ஸ்தானம் ஒளியை இழந்து, அதனால் வலிமை இழந்ததன் அறிகுறி சத்தியவானின் தகப்பனார். அஸ்வபதி அஸ்வத்திற்கு அரசன் (Lord of the Horse). இவர் தவத்தின் தலைவன். ஆன்மீகக் கனலாக எழுந்து மேலுலகங்களை எட்ட முயலும் தபஸ்வி இவர். 

இவை பூவுலகத்தின் ஆன்மீக நிலை. அதை வர்ணிக்கும் வகையில் பாத்திரங்களை ஸ்ரீ அரவிந்தர் உருவாக்கியுள்ளார். கரு பாரதத்திலுள்ளது. பாரதத்தில் கொடியாக இருந்த ஒன்றை சாவித்திரியில் அகண்ட ஆலமரமாக பகவான் சிருஷ்டித்திருக்கிறார். தபஸ்விகள் நெடுநாட்களாக மோட்சத்தைப் பெற்று, மோட்ச லோக வெற்றியை அடைந்துள்ளனர். பூமாதேவியையும், தம் அடையாளமான மனித உடலையும் அவர்களால் தொட முடியவில்லை. சொர்க்கமும், பூவுலகமும் ஒன்றே. பூவுலகிலேயே சொர்க்கத்தை அனுபவிக்க முடியும். உடல் ஆன்மீகத்திற்கு விலக்கன்று. உண்மையில் “உடல் ஆன்மீகத்திற்கு விளக்கு” என்பன போன்ற பூரண யோக இலட்சியங்களை நிறைவேற்ற பகவான் சாவித்திரி எனும் காவியத்தை ஒரு வாயிலாகக் கொண்டார். “இவையெல்லாம் நடக்காது” என்று முடிவாகத் தெரிந்த மனிதனுக்கு, “இவை நடக்கும்” என்ற நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கை ஒளியை அளிக்கவே ஸ்ரீ அரவிந்தர் முனைந்தார். “இவை நடக்கலாம்” என்று அவர் அறிவிக்க முன் வரவில்லை. "இவை நடந்தே தீரும்' என்பதை தம்மை நாடிய சாதகர்களுக்கு ஆன்மீக உள்ளுணர்வில் அறிவுறுத்தினார். உலகத்தின் சூட்சுமச் சூழலில் அப்பெருநம்பிக்கையை நிலை நாட்டினார்.
 
எதிர்காலம் சொர்க்க லோக எழில் நிறைந்தது என்பதை விழிப்படைந்த ஆன்மாவின் சூட்சுமப் பார்வைக்குக் காட்டினார்.
 
“முதல் நாள், தாம் ஆன்மீக அனுபவமாகப் பெற்றதை, மறுநாள் பகவான் சாவித்திரியின் பாகமாக எழுதியிருக்கின்றார்” என்று அன்னை ஒரு சமயம் கூறுகிறார். “ஒவ்வொரு முறை சாவித்திரியைப் படிக்கும்பொழுதும் புதியதாக ஒன்றைக் காணலாம்” என்றும் கூறுகிறார். “மனத்தைத் தெளிவாக வைத்துக்கொண்டு படித்தால் சாவித்திரியின் முழுப் பலனை அடையலாம். எண்ணங்கள் அற்ற மனமே தெளிவான மனமாகும். யோகம் செய்பவர்கள் மனத்தைச் சாவித்திரியில் பதித்துப் படித்தால், யோகத்தின் அடுத்த கட்டத்திற்குச் சாதகனை அழைத்துப் போவது தெரியும்” என்கிறார் அன்னை.
 
மேல்நாட்டு மரபுப்படி இதிகாசங்கள் கதையின் நடுவில்தான் ஆரம்பிக்கும். அதையொட்டி ஸ்ரீ அரவிந்தருடைய காவியமும் சத்தியவானுடைய மரணத்துடன் தொடங்குகிறது. அன்றாடம் உதிக்கும் சூரியனை அன்று உலகத்திற்கு ஒரு புது சூர்யோதயமாகக் கருதி, முதற்காண்டத்தை ஆரம்பிக்கின்றார். அதிலிருந்து சாவித்திரியின் தகப்பனாரான அஸ்வபதியின் யோகத்திற்குப் போகிறது காவியம். உலகம் இருளிலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுபட அஸ்வபதி யோகம் செய்கிறார். முதற்கட்டத்தில் கரணங்களின் தளைகளிலிருந்து அஸ்வபதி விடுபடுகிறார்.
 
ஜடத்திலிருந்து எழுந்து மேல்நோக்கிச் சென்று பிராணன், மனம், ஆகியவற்றை எட்டி, மேலும் தொடர்ந்து தம் யோகப் பாதையின் பிரயாணத்தை அஸ்வபதி தொடர்கின்றார். தமக்காக மேற்கொண்ட யோகமில்லை இது. உலகத்தின் பிரதிநிதியாகத் தாம் மேற்கொண்ட தவம் இது என்பதும், வாழ்க்கையை உதறித் தள்ளிச் செய்யும் யோகம் இல்லை என்பதும் அவருக்குப் புரிகிறது. வாழ்க்கையின் சிக்கலும், உடலின் இருளும் அழிய மனித மனம் சத்தியஜீவியமாக மாறி, இறைவனின் சுபாவத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிந்து, நம்பிக்கையுடன் அஸ்வபதி யோகத்தை மேலும் தொடர்கிறார்.
 
முடிவில் அன்னை தரிசனம் கிடைக்கின்றது. “கிடைத்த பெறும் பேற்றை ஏற்று மனம் நிம்மதியடைய வேண்டும்” என தரிசனம் தந்த அன்னை (Divine Mother) அஸ்வபதிக்கு உபதேசம் செய்கிறார். மனிதனும், பூவுலகமும் அனந்தனையும், சத்தியத்தையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்று அன்னை விளக்கம் அளிக்கின்றார். “சத்தியம் பூவுலகில் இன்று வந்துவிட்டால் பூவுலகம் தாங்காது; நொறுங்கிப்போகும்” என்றும் கூறுகிறார்.
 
தெய்வீக அன்னையின் அசரீரி வாக்கு அமுதம் அஸ்வபதிக்கு ஏற்றுக்கொள்வதாக இல்லை. யுக யுகமாக உழன்ற மனிதப் பிறவியின் பிரதிநிதியல்லவோ அஸ்வபதி! தான் பெற்ற பேறு அஸ்வபதிக்கு திருப்தியளிக்கவில்லை. “மனிதனால் பெற முடியாத ஒன்றை, தெய்வமே மனம் உவந்து கொடுத்தாலும், பெற்று அனுபவிக்கத் திறனில்லாத மனிதனை, அன்னை புறக்கணிக்கக்கூடாது; தம் அருளால் அவனை அணைத்துக்கொள்ள வேண்டும். அவனை அணைத்துக்கொள்ள அன்னை அருள் வடிவமாகப் புவிக்கு வர வேண்டும்” என்று அஸ்வபதி உருக்கமாகச் செய்த பிரார்த்தனை அன்னைக்கு ஏற்புடையதாக இருந்தது. “அருள் அவதாரம் எடுக்கும்” என ஆசீர்வதிக்கின்றார்.
 
“உன் குரலைக் கேட்டேன். பரம்பொருள் உன்னை நாடி வரும்; இறுகிய தளைகள் உடையும்; மனம் விரிந்து உலகை தன்னுள் கொள்ளும்; தெய்வம் திருநடனம் புரிந்து மண்ணில் உலவும்; மரணத்தைத் தாண்டி மனிதன் செல்வான்; விதியை வெல்லும் வரம் பிறக்கும்”, என்றார் அன்னை.
 
மேல்நாட்டு இலக்கியச் சட்டப்படி இதிகாசம் 12 புத்தகங்களை உடையது. பகவான் சாவித்திரியை முதலில் எழுதியபொழுது 14 வரிகளில் முடித்துவிட்டார். காலப்போக்கிலும், யோக எழுச்சியாலும் 1950இல் அவர் முடிக்கும்பொழுது 12 புத்தகங்களாகக் காவியம் நிறைந்தது. மேற்சொன்ன சட்டத்துடன் முதல் இரு புத்தகங்கள் முடிகின்றன.
 
மூன்றாம் புத்தகம் அஸ்வபதியின் யோகத்தை மேலும் வர்ணிக்கின்றது. இதில் மூன்றாம் காண்டம் (Adoration of the Divine Mother) அன்னைக்குரியது. அடுத்த புத்தகம் சாவித்திரியின் பிறப்பையும், குழவிப் பருவத்தையும் விளக்குவதாகும்.
 
வளர்ந்தபின் பருவம் எய்தி, தகப்பனாருடைய ஆசியுடன் கணவனைத் தேடி சாவித்திரி பரிவாரங்களுடன் புறப்படுகிறாள். சத்தியவானைக் காட்டில் சந்திக்கின்றாள். இந்த 3 காண்டங்களும் இலக்கிய நயத்தில் உலக இலக்கியங்களின் சிகரத்தைத் தாண்டியவை. அன்பின் மென்மை, உணர்வின் பவித்திரம், உடலையும் உள்ளத்தையும் உயிரையும் கடந்த உன்னத இலட்சியம், அது தனக்கேயுரியதைப் பெற்று பூரணத்தில் பூர்த்தி பெறுவது ஆகியவை பரம்பொருள் உலகில் மனித உருக்கொண்டு தன் சிருஷ்டியை அடுத்த கட்டத்திற்கு வெற்றிகரமாக எடுத்துச் சென்று, தன்னை தன் சிருஷ்டியில் அடுத்த உயர்ந்த கட்டத்தில் பூர்த்தி செய்து பெறும் நிறைவாகும். சத்தியவானுக்கு மாலை இட்டு, அவன் பாதங்களைத் தொட்டு சாவித்திரி நிறைகிறாள்.
 
அடுத்தது விதி. இரு காண்டங்களையுடையது இந்த ஆறாம் புத்தகம். துன்பத்தின் நிலைகளை விளக்கும் பகுதியிது. தீமையின் பிறப்பு, இருப்பு இங்கு பேசப்படுகின்றன. சாவித்திரி தனக்கென விதிக்கப்பட்ட கணவனைத் தேர்ந்தெடுத்துவிட்டாள். அவள் வாழ்வு பூரணம் பெற்றது. அரண்மனைக்கு வந்து பெற்றோருக்கு நடந்ததை அறிவிக்கின்றாள். என் பிராணன், பிராணபதியைக் கண்டது. என் மனம் ஏற்றுக்கொண்டது. தெய்வத் திருவுள்ளம் என்னில் பூர்த்தியாகி விட்டது. முடிவான முத்திரை விழுந்து முடிந்துவிட்டது என்று அறிவிக்கிறாள் சாவித்திரி. அஸ்வபதியின் திருஷ்டியில் சத்தியவான் தோன்றுகிறான். அவனுருவத்தின் மீது கரிய இருள் படந்துள்ளது. பேரொளி ஒன்று தோன்றி கரிய இருளை விரட்டுகிறது. தளர்ந்த மனம் அஸ்வபதிக்கு மலர்ச்சி அடைகிறது. சாவித்திரியின் தாயார் கிலேசம் அடைகிறாள். நாரதர் அங்கு வருகிறார்.
 
உங்கள் ஞான திருஷ்டியால் என் மகளின் எதிர்காலத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என இறைஞ்சுகிறாள் ராணி. “சத்தியவானும் சாவித்திரியும் சந்தித்தது சொர்க்கமும் உலகமும் சந்தித்ததாகும்” என்று நாரதர் விளக்குகிறார். அத்துடன் சத்தியவானுக்கு ஆயுள் ஒரு வருஷ காலத்தில் முடிவதையும் கூறுகிறார். தாயார் கலங்கிவிட்டாள். சாவித்திரியின் மனதை மாற்ற முயல்கிறாள். மலையிலிருந்து எழுந்த நதி தன் கதியை மாற்றி மீண்டும் மலையை நோக்கிப் போகப்போவதில்லை; சாவித்திரி தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இறைவனின் இதயத்தில் எழுதப்பட்ட ஒப்பந்தம் இது என்பதை சாவித்திரி அறிவிக்கின்றாள். மனித முகத்தில் இறைவன் மலர்ந்ததைத் தான் சத்தியவான் திருமுகத்தில் கண்டது சத்தியம் என்கிறாள் தெய்வத்தாயின் அவதாரமான சாவித்திரி. “இன்றைய உலகம் இருக்கும் நிலையில் கல்லிலிருந்து சிலை செய்ய அதைச் செதுக்கியே செப்பனிட வேண்டும் என்பது போல் துன்பம் மனித வாழ்வில் தவிர்க்க முடியாது” என்று நாரதர் ராஜமாதாவிடம் கூறுகிறார். “உலகத்தைத் துன்பத்திலிருந்து விடுவிக்க வந்த அவதாரங்களும் அத்துன்பத்திலிருந்து தப்ப முடியாது” என்பதை நாரதர் விளக்குகின்றார்.
 
சாவித்திரியின் தாயார், “விதியிலிருந்து மகள் தப்புவது எப்படி?” என்று கவலையுறுகிறாள். “விதியை மாற்ற சாவித்திரியால் முடியுமா?” என அஸ்வபதி நாரதரைக் கேட்கிறார். “தன்னுடைய விதியையும், அதன் மூலம் உலகத்தின் துன்பத்தையும் மாற்றும் ஆன்மீக ஆற்றல் சாவித்திரிக்குண்டு” என்று நாரதர் பதில் இறுக்கின்றார். “அது சாவித்திரியால் மட்டுமே முடியும்” என்றும் கூறுகிறார். இதுவரை 24 காண்டங்கள் முடிகின்றன. அஸ்வபதியின் தவத்தின் நிலைகளை விளக்குபவை அவை. இனி வரும் 25 காண்டங்களும் அஸ்வபதியின் தவத்தை மனித வாழ்வில் சாவித்திரி பூர்த்தி செய்ததை விளக்குபவை ஆகும். அஸ்வபதியின் தவமும், சாவித்திரியின் வெற்றியும் பகவான் ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தின் வர்ணனைகளாகும். இந்த இரண்டாம் பகுதி அன்னையின் யோகம் பூர்த்தியடைந்த பல நிலைகளை விளக்குவதாகும். அன்னை-ஸ்ரீ அரவிந்தரின் யோகப் பாதையை விளக்கும் நூல் சாவித்திரியாகும். சாவித்திரியின் அடிகள் காவியத்தின் வரிகள் மட்டுமல்ல. அவை அன்னாரின் யோக அடிச்சுவடுகளாகும். அதனுள் மனிதன் தன் உள்ளுணர்வின் பிம்பத்தைத் தவறாது காணலாம். அதனால்தான் மனம் கலங்கிய பொழுது சாவித்திரியை எடுத்து, சில நிமிஷம் தியானித்து, திறந்து பார்த்தால், நம் மனநிலையைப் பிரதிபலிக்கும் வரிகளை நாம் காண்பது. ஒரு தொழிலதிபர் இக்கட்டான நிலையில் சாவித்திரியைப் பிரித்தபொழுது தம் கண்ணில் பட்ட வரியில் தம் தொழிலின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதைக் கண்டு பிரமித்தார். சாவித்திரியை இது போல் திறந்து பார்த்தால், எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக அமையும். அது சத்தியவாக்கு. அத்துடன் அருளைக் கொடுத்து, நம் அபிலாஷையைப் பூர்த்தி செய்யும்.
 
சாவித்திரிக் பெற்றோர்கள் ஆசீர்வாதத்துடன் புதுவாழ்வு ஏற்பட்டு, சத்தியவானுடைய மனைவியாக அவள் வாழும் வாழ்வு, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் புனிதம் பவித்திரமடைந்ததாகச் செய்கிறது. விதிக்கப்பட்ட நாள் நெருங்குகிறது. தெய்வ அவதாரமானாலும், மனித உடலைத் தாங்கியிருப்பதால் விதிக்கு விலக்கன்று. மனம் தளர்ந்து, சோர்ந்து நிற்கிறாள் சாவித்திரி. அது சமயம் அவளது ஜீவனின் சிகரத்திலிருந்து ஒரு குரல் எழுந்து, அவளுடைய அவதார நோக்கத்தை நினைவுபடுத்தி, “மனித குலத்தைச் சாவித்திரி கைவிடக்கூடாது” என்றும், “முழுமூச்சோடு முயன்றால் சாவித்திரியால் விதியை வெல்ல முடியும்” என்றும் கூறுகிறது.
 
தளர்ந்த மனித மனம், தயக்கமிழந்து, தாயின் சொல்லை ஏற்றுத் தன் புனித யாத்திரையை உள்ளுறை லோகங்களில் ஆரம்பிக்கின்றது. அவையெல்லாம் அனந்தனின் இடம் என நாம் அறிந்துள்ளோம். அங்கிருந்து எழும் குரலைத் தெய்வத்தின் ஆணையாக ஏற்கும் பாங்கு நம்மிடையேயுள்ளது. மனித உலகம், உள்ளுறை உலகமானாலும் நம் இலட்சிய எண்ணத்தை ஏற்பதாக இருப்பதில்லை. அவற்றுக்கேயுரிய அமைப்புகள் அங்குள்ளன. உள்ளுறை இராஜ்யங்களிலும் நல்லதும், கெட்டதும் கலந்தேயிருக்கும். பகுத்துணரும் தெளிவு மனிதனுக்குத் தேவை. அது இல்லாதவன் தீய சக்திகளுக்குப் பலியாவான் என்பது திண்ணம். மகாத்மா காந்தியை நினைத்து இன்றைய காங்கிரஸை நாடினால் ஏமாற்றமடைவோம். பிரதம மந்திரியின் அலுவலகத்திற்கு உயர் தனிச் சிறப்புண்டு. எனினும் அங்குள்ள ஆபீஸர்களிலும் நல்லவர் யார், கெட்டவர் யார் என நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். ஸ்தாபனம், தோற்றம், இலட்சியம் வேறு; மனநிலை, உண்மை நிலை, ஸ்தாபனம் வேறு. எந்த உயர்ந்த ஸ்தாபனத்திலும் எந்த மட்டமான மனிதனும் இடம் பிடித்துக்கொள்வதுண்டு. பெரிய இடமாயிற்றே என்று நினைத்தவன் வெகுளியாக ஏமாற்றப்படுவான். இது உலகத்து நிலை. இதில் ஏமாந்தவர் அநேகர்; தப்பித்தவர் சிலர். பூவுலகத்திலுள்ள இந்நிலைக்கு நிகரான ஆன்மீக நிலை உள்ளுறை லோகங்களிலும் உண்டு. சாவித்திரியின் யாத்திரை நீண்டது. முதல் நிலையில் 3 தேவிகள் எழுந்து சாவித்திரியுடன் உரையாடுகிறார்கள். அவை பிரபஞ்சத்தின் தெய்வங்கள். மனித வாழ்வை இன்று நிர்ணயித்துக் கொண்டுள்ள ஆன்மீக ஜீவன்கள். அன்புக்குரிய தெய்வம் ஒன்று; வலிமைக்குரியது அடுத்தது; ஞானச்சுடர் மூன்றாவது. ஒளிப்பழம்பாக அவை காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு தேவியும் சாவித்திரியின் ஆத்மா எனக் கூறுகிறது.
 
“சாவித்திரியின் எண்ணம் பலிக்காது. (Divine Mother) அன்னையின் அருளைச் சாவித்திரி பெற முடியாது. அது உலகில் நடக்காது. உலகம் அதற்குத் தயாராக இல்லை” என்று இந்த மூன்று தேவிகளும் சாவித்திரிக்கு அறிவுறுத்துகின்றன. ஒவ்வொன்றும் தாமே முழுமுதற் கடவுள் எனவும் கூறுகின்றன. உலகத்தின் இன்றைய நிலையை அவை விவரித்து, “இலட்சியம் பலிக்காது” எனத் தெளிவு படுத்துகின்றன. சாவித்திரி அசையவில்லை. “நீ என் ஆத்மாதான். ஆனால் என் ஆத்மாவின் ஒரு பகுதியே” என ஒவ்வொரு தேவியிடமும் சொல்லிவிட்டு, சாவித்திரி மேலே செல்கிறாள்.
 
அதன் பிறகும் சிருஷ்டியின் இருள் அவளைத் தொடர்கிறது. சூன்யமான கரிய இருளில் சாவித்திரி நுழைய வேண்டியிருக்கிறது. “ஆன்மீக ஒளி முன், சூரியன் கருப்பாகத் தெரிவான். ஆன்மீக இருள் முன், நள்ளிரவு ஒளி நிறைந்ததாக இருக்கும்” என்பது அன்னையின் விளக்கம். சூன்யமும், இருளும் சேர்ந்த உலகை சாவித்திரி அடைகிறாள். அவள் வலுவிழந்து, தெம்பிழந்து, சோர்ந்து, சருகாக மாறுகிறாள். இந்நிலையில் ஒரு புது உணர்வு சாவித்திரியைத் தீண்டுகிறது. இலட்சியத்தை எட்டிவிட்டதாக ஓர் உணர்வு; அதனால் ஒரு நிறைவு. அது ஆனந்தமயமான நிறைவாக இருக்கின்றது. இந்நிலையில் அவளது சைத்திய புருஷன் (Psychic Being) வெளிப்பட்டு, அத்துடன் சாவித்திரி கலந்துவிடுகிறாள். “அசையாத அழிவற்ற ஆன்மாவும், போராடும் மனித ஜீவனும் சந்தித்து இரண்டறக் கலந்தன” என்கிறது காவியம். அடுத்தாற்போல் குந்தளினி எழுகிறது. பூரண யோகத்தில் சக்தி மேலிருந்து கீழ் நோக்கி வந்து, ஆறு சக்கரங்களையும் ஒன்றன்பின் ஒன்றாகத் திறந்து, புதுப்பிக்கின்றது. பொதுவாக, யோகத்தில் குந்தளினி மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு நாபி, இதயம், தொண்டை, புருவம், தலை, ஆகிய இடங்களிலுள்ள சக்கரங்களை எழுப்பி, கடைசியில் சகஸ்ரதளத்தில் இறைவனுடன் கலந்துவிடும்.
 
“சாவித்திரியின் அனுபவம் பூரண யோக சித்தி என்பதால் சக்தி மேலிருந்து கீழ் நோக்கி வருகிறது; சொர்க்கத்தை நம்முள்ளே அமைத்தோம்; உடலை ஆனந்தமயமாக்கினோம். வேறென்ன வேண்டும்? மேலும் வேண்டுமா?” என கவி அந்நிலையை வர்ணிக்கிறார்.
 
உயர்ந்த தெய்வம் உறையும் இடம் ஒன்று ஏற்பட்டது. ஒருவர் சிறப்பு உலகை உய்விக்கும். வானத்தை எட்டிப் பிடித்துவிட்டோம்; காலத்தின் அடிமை கடவுளுக்கு இடம் அளித்துவிட்டான்.
 
என்ற கருத்துப்பட பகவான் இந்த வெற்றியை விளக்கியுள்ளார். சாவித்திரியினுள் திருவுருமாற்றம் தொடங்குகிறது. உலகை உய்விக்கும் கருவியாக அவள் உருவாகிவிட்டாள். சிருஷ்டி இதைக் கண்டு கொண்டு ஆனந்தக் கூத்தாடுகிறது. சாவித்திரியின் அன்றாடச் செயல்களில் தெய்வீகப் பொலிவு மிளிருகின்றது. சத்தியவான் மீதுள்ள மனைவியின் அன்பு, தெய்வச் சாயல் பெறுகிறது. எனினும் இதுவே முடிவன்று.
 
இத்தனையும் நடந்தபின் ஒரு நாள் ஒரு பயங்கரக் குரல் எழுந்து, “நானே மிருத்யு; நானே காளி; நானே மாயை; என் மூச்சுப் பட்டால் மனிதன் கருகிவிடுவான்” என்று எக்காளமிட்டது.
 
வேறொரு குரலும் எழுந்து ஒலித்தது. “மனித ஜீவன் பரம்பொருளினின்று விலகியுள்ளவரை மரணத்திலிருந்து தப்ப முடியாது. “தான்” எனும் அகந்தையை அழித்து, பரம்பொருளுடன் ஐக்கியமானால் மரணம் அழியும்; மேலும் தொடராது” என்று அக்குரல் உபதேசிக்கின்றது. சாவித்திரி அதை ஏற்றுக்கொள்கிறாள். தன்னுள் உள்ள அனைத்தும் தன்னை விட்டுப் போகின்றன. விடுதலை நாடி வருகிறது. உருவமும் தன்னை விட்டகல்கிறது. நிர்வாண அனுபவம் என்றழைக்கப்படும் இந்த யோக சித்தி சாவித்திரிக்குக் கிட்டியது.
 
விதிக்கப்பட்ட வேளை நெருங்குகிறது. பழைய பயம் இல்லை. ஆழ்ந்த நிலையில் மனம் அமைதியாக இருக்கின்றது. பெண்மை நிறைந்த மனைவி, சக்தியாக மாறி ஆன்மீகப் பொக்கிஷமாகிவிட்டாள். பெரிய யோக சித்தி எனினும், இது சூன்ய நிலையேயாகும். அதனால் இதுவே முடிவான நிலையில்லை. ஒரு நாள் இது மாறி, பரம்பொருளின் பூரணம் சாவித்திரியை ஆட்கொள்கிறது.
 
மாயை மறைந்தது. மனத்தைக் கடந்து மனிதன் வந்துவிட்டான். ரூபத்தாலும், அரூபத்தாலும் ஆனந்தம் உற்பத்தியாகிறது. உலகமே பரமனின் உடல்.
 
“அனைத்தும் அவனே” என்று உணரும் நிலை ஏற்பட்டு, அனந்தனுடன் தான் கலந்ததைச் சாவித்திரி அறிகின்றாள். பூரண ஆனந்தமும், ஞான திருஷ்டிக் காட்சிகளும் மின்னலாகத் தோன்றி மின்சாரமாக அவளுள் பாய்கின்றன. இனி மரணத்தைக் கண்டு மலைப்புத் தோன்றாது என்ற நிலையை அடைகின்றாள்.
 
எட்டாவது புத்தகம் “மரணம்” என்ற தலைப்புடையது; சுருக்கமானது. சத்தியவானும், சாவித்திரியும் காட்டிலிருக்கிறார்கள். விறகு வெட்டும்பொழுது சத்தியவானை ஓர் உணர்வு சூழ்ந்துகொண்டு மரணத்தை அறிவிக்கின்றது. கூக்குரலிட்டு சாவித்திரியை அழைத்துத் தன்னை அணைத்துக்கொள்ளும்படிக் கேட்கிறான். சோகமோ, பயமோ அவளை அண்டவில்லை. பேரமைதி அவளை நாடி வந்து உள்ளே புகுகின்றது. கரிய உருவம் அருகே தென்படுகிறது. அது காலன் என அறிகிறாள். சத்தியவானுடைய உயிரைத் தாங்கி காலன் நிரந்தர இருளுக்குள் நுழைகிறான். சாவித்திரி பின்தொடர்கிறாள். கரிய இருள் பயங்கர இருளாக மாறுகிறது.
 
மூலக்கதையான பாரதத்தில் சாவித்திரி மனித உருவம். காலன் கடுந்தெய்வம். தெய்வத்திடம் வரம் கேட்கும் வகையில் சாதுரியமாகச் சாவித்திரி பேசுகிறாள். காலன் கருணைகொண்டு வரமளிக்கின்றான். ஸ்ரீ அரவிந்தர் சாவித்திரியை ஒளியின் தெய்வமாகவும், காலனை இருளின் தெய்வமாகவும் உருவகப்படுத்தியுள்ளார். காலனும், சாவித்திரியும் நடத்தும் உரையாடல் நீண்டது. 100 பக்கங்களுக்கு மேல் 3 புத்தகங்களை நிரப்பிக்கொண்டுள்ளது. உரையாடல் கடுமை நிறைந்த ஒன்று. வரம் கேட்கும் மனப்பான்மையிங்கில்லை; கேட்டுப் பெறும் நிலையிலில்லை சாவித்திரி. காலனை அழித்து, காரிருளை அழித்து, உலகத்தை இருளிலிருந்து விடுவித்து, இனி எமன் என்ற தெய்வம் இல்லை என்று நிலைநிறுத்தி, அதற்கடையாளமாகச் சத்தியவானுக்கு விடுதலை கொடுக்க முயல்வதே சாவித்திரியின் பூரண யோகம். சத்தியவான் மரணத்தை வென்று பூவுலகம் திரும்பி வந்து, பூவுலகத்தைத் தெய்வத்தின் சாம்ராஜ்யமாக்கும் திருப்பணியை முடிப்பது சாவித்திரியின் அவதார நோக்கம். அதைத் தடை செய்வது காலனின் கடமை. இதுவரை உலகத்தில் மரணத்தை தவிர்க்க முடியாது என்று நம்பியவர்கள் கொள்கைகள் அனைத்தும் விவாதத்திற்கு வருகின்றன. காலன் இடிஇடிப்பது போல் கர்ஜனை செய்கிறான். சாவித்திரி கலங்கவில்லை. அதற்குப் பதிலாக அவன் வாதத்தில் உண்மையில்லை என்று நிதானமாக விளக்குகிறாள். காலன் கலங்குகின்றான். அவன் நிலை, குலையத் தொடங்கிற்று. காலனின் அறிவுரையை சாவித்திரி ஏற்றுக்கொள்ளவில்லை. காலன் அவளைக் கேலி செய்கிறான்.
 
அன்பு என்பது அறியாமையில் எழுந்தது என்கிறான் காலன். “மனிதனுக்கு இலட்சியமில்லை. மனித இலட்சியங்கள் மண்ணுக்குச் சமம். அவை அனைத்தும் மடமையின் உருவங்கள்” என்பது காலனின் அறிவுரை.
 
“உன்னுடைய சத்தியம் அழிக்கவல்லது. என்னுடைய சத்தியம் ஆக்கவல்லது” என்று சாவித்திரி மறுமொழி கூறுகிறாள். அன்பு எப்படி உலகத்தை உய்விக்கும் என்றும், தன் அவதார நோக்கம் எது என்றும் சாவித்திரி நிதானமாக, நிதானத்தை இழந்துகொண்டிருக்கும் எமனிடம் கூறுகிறாள்.
 
“எதுவுமே மனிதனால் முடியாது' என்ற எமதர்மன் இப்பொழுது, “எப்படி மனிதனால் முடியும்?” என்று தன் வாதத்தை மாற்றிக் கொள்கிறான். “மரணமே நிலையானது; மனிதன் நிலையற்றவன்” என்று கொக்கரிக்கின்றான் எமன். ஸ்ரீ அரவிந்தருடைய பூரண யோகத் தத்துவங்கள் அனைத்தும் சாவித்திரியின் வாதங்களாக அமைகின்றன. மேலும், செல்ல வழி தெரியாமல் பிரமித்த எமனுக்கு “சாவித்திரி யார்?” என்ற ஐயம் ஏற்படுகிறது. ஒருவேளை சாவித்திரி தெய்வீக அன்னையோ என்று தோன்றுகிறது. “நீ யார், தெய்வமா? தெய்வம் என்றால், உன் திருமுகத்தை நான் பார்க்க வேண்டும்”என்கிறான்.
 
சாவித்திரியிடம் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது. மனிதச் சூழல் விலகி ஒளி படர ஆரம்பித்தது. அவதாரம் திரையை விலக்கி, முன் வருகிறது. பிரபஞ்சமே அவளுடல்; பூவுலகமே அவள் வீடு; பரவெளி அவள் ஆடை; ஆனந்தம் அவள் கண்கள் மூலம் பார்வையாக வெளி வந்தது என்ற மாற்றங்கள் தோன்றின. இருளும், ஒளியின் தெய்வமும் எதிரெதிரே நின்றனர். ஒளி பட்ட இடங்களிலெல்லாம் காலனின் உருவம் கரைய ஆரம்பித்தது. கரைய ஆரம்பித்த உடல் கடைசி துளி வரையில் கரைந்து மறைந்துவிட்டது. இருளின் தெய்வமான காலன் அன்பின் தெய்வமாகத் திருவுருமாற்றம் அடைகின்றான்.
 
இத்தனை தோல்விகளுக்குப் பின்னும், மாற்றங்களுக்குப் பின்னும் மீண்டும் ஒரு முறை எமன் தன் பழைய முயற்சியைச் செய்கிறான். சாவித்திரியின் முயற்சி வீண் என்று வாதிடுகிறான். அவள் எதிர்பார்க்கும் மாற்றங்களை உலகில் ஏற்படுத்த முடியாது; ஆகவே சத்தியவானுடன் சாவித்திரியைச் சொர்க்கத்திற்கு வரும்படிக் காலன் அழைக்கின்றான். முடிவாகத் தன் முயற்சி வீண் முயற்சி என்று காலன் உணரும் வகையில் சாவித்திரி தன் நோக்கத்தை விவரிக்கின்றாள். தனக்காகவோ, சத்தியவானுக்காகவோ அவள் அவதாரம் எடுக்கவில்லை. பூவுலகத்தில் தெய்வீக வாழ்வை நிலைநாட்டவே தான் அவதரித்திருப்பதாகச் சொல்கிறாள்.
 
திருவுருமாற்றம் அடைந்த பின் இப்புதுவுருவில் தெய்வம் சாவித்திரிக்கு அனுதாபம் தெரிவிக்கிறது. ஆனால் அத்தெய்வத்தால் பூவுலகம் எப்படித் தெய்வீக வாழ்வை மேற்கொள்ள முடியும் என்று அறிந்துகொள்ள முடியவில்லை. காலத்தால் உலகம் கட்டுண்டு வாழ்கிறது. காலத்தின் பிடியில் உள்ளவரை பூவுலகம் மாறாது. அதனால் காலத்தின் பிடி தளரும்வரை சாவித்திரி காத்திருக்க வேண்டும் என்று அது கருதியது.
 
சாவித்திரி தன் உரையாடலைத் தொடர்கிறாள். திருவுருமாற்றம் அடைந்த காலன் சொல்வதில் உள்ள உண்மையை ஏற்றுக் கொள்கிறாள். தெய்வம் உலகைச் சிருஷ்டித்தது போல் உலகம் தெய்வத்தை வாழ்வில் சிருஷ்டித்தால்தான் மனிதன் காலத்தின் பிடியில் இருந்து மீள முடியும் என்பதை நான் அறிவேன் என்று சாவித்திரி கூறுகிறாள். மனத்தின் பிடியில் உள்ள மனிதன் காலத்தினால் கட்டுண்டுள்ளான். மனத்தைத் தாண்டி (Supermind) சத்தியஜீவியத்தை அடைய காலத்தின் பிடியிலிருந்து அவன் மீள வேண்டும். அதை மனிதன் சாதிக்க வேண்டுமானால் சாவித்திரி சத்தியஜீவியத்தை அடைய வேண்டும். மனித குலத்தின் பிரதிநிதியாகச் சாவித்திரி அதைச் செய்தால் உலகம் உய்யும். சாவித்திரி அதையும் சாதிக்கின்றாள். அதைச் சாவித்திரி சாதித்த பின், திருவுருமாற்றம் அடைந்த காலன் தன் புது உருவத்தையும் காப்பாற்ற முடியவில்லை; மறைந்துவிடுகிறான். காலன் கரைந்தவுடன் பூமி நடுங்குகிறது. கம்பீரமான குரல் ஒன்று எழும்பி, சாவித்திரியை "கேள், கேள், கேள், கேள்' என நான்கு முறை ஒலிக்கிறது. சாந்தம், ஒருமை, சக்தி, சந்தோஷம் ஆகியவற்றைச் சாவித்திரி கேட்கிறாள். கேட்டவள் அவற்றை உலகுக்காகக் கேட்கிறாள்.
 
சாவித்திரியின் அவதாரம் தன்னைப் பூர்த்தி செய்துகொண்டது. இப்புதிய குரலும் அத்துடன் மறைந்துவிடுகிறது. சத்தியவானும், சாவித்திரியும் தனியே ஒருவர் அருகில் மற்றவர் இருக்கின்றனர். சாவித்திரியை அக்குரல் போற்றி உலகை ஆசீர்வதிக்கின்றது.
 
ஸ்ரீ அரவிந்தர் தம் வாழ்நாள் முழுவதும் எழுதிய காவியம் சாவித்திரி. அன்னையின் ஆன்மீக அனுபவங்கள் நிறைந்த காவியம் சாவித்திரி. யோகத்தை மேற்கொள்ள விரும்புபவர்களின் தவ முயற்சியை யோக சித்தியாக மாற்ற உதவும் கருவி இக்காவியம். அன்னை நம் இதயத்தில் எந்நேரமும் இருப்பது போல் நம்மிடம் எப்பொழுதும் இருக்க வேண்டிய ஆன்மீகப் பொக்கிஷம் இந்நூல்.book | by Dr. Radut