Skip to Content

04. அன்னை பராசக்தியின் அவதாரம்

பணம்:
 
உலகை ஆளும் சக்திகள் பல. அவை அனைத்தும் இறைவனுடைய சக்திகளாகும். பிரபஞ்சத்தில் நிலவும் எல்லாச் சக்திகளின் பிறப்பிடம் இறைவனே. உலகை ஆட்டிப்படைக்கும் சக்திகளும் பல உண்டு. அவற்றைக் கூர்ந்து நோக்கினால், அவையும் பிரபஞ்சத்திற்குரிய சக்திகளாகும். அவற்றின் பூர்வோத்தரம் நாடிப் போனால் அவை இறைவனில் வந்து முடியும். பணம் அவற்றுள் ஒன்று. நம் புறவாழ்வுக்கு அவசியமானதும், புறவாழ்வைப் பொலிவுபடுத்தி பூர்த்தி செய்யும் திறனுடையதும் பணம். உடலின் வாழ்வுக்கு இன்றியமையாதது பணம் என்றால், உயிருக்கு உயிர் போன்றுள்ளது பணம். இதன் பெயரைக் கேட்டுப் பிணமும் வாய் திறக்கும் என்பது வாக்கு. மனிதன் பணத்தை எப்படிப் பயன்படுத்தினாலும், பணத்தின் பயனை ஆராய்ந்து பார்த்து, உமியை விலக்கி அவலை மட்டும் எடுக்கும் காரியத்தில் ஈடுபட்டால், பணத்தின் செயல், அச்செயலின் கரு இறைவனுடையது என்பது விளங்கும். ஆராய்ச்சியைத் தொடர்ந்தால், பணம் என்ற சக்தி இறைவனிடமிருந்து பிறந்தது என்பது தெளிவாகத் தெரியும். எல்லாச் சக்திகளும் இறைவனிடம் பிறப்பெடுத்தாலும், பூவுலகில் செயல்பட வருவது போல் பணமும் இங்குள்ளது. மனிதனுடைய அகந்தையும், அசுரனுடைய பார்வையும் பணத்தின் மீது விழுந்தபின் பணம் அவர்கள் பிடியில் வந்து, தன் தெய்வத் தன்மையை இழந்து, அசுரகுணம் பெற்று, ஆணவத்திற்குப் பணியாளாகி, உரு இழந்து, கரு இழந்து, கரிய நிறம் பெற்று, மணக்கோலத்திற்கு உரியவன் பிணக்கோலம் கொண்டதுபோல் இன்று காட்சி அளிக்கிறது.
 
பொன்னாசையும், பெண்ணாசையும், மண்ணாசையும் மனிதனுக்கும், அசுரனுக்கும் அவர்களது ஆணவத்திற்குப் பேரார்வம் அளிக்கும் திறன் வாய்ந்தவை. இவற்றைப் பெற்றவர்கள் பொதுவாக இவற்றை நல்ல முறையில் பயன்படுத்துவதில்லை. பணத்தை நாடுபவர்களும், அதைப் பெரிய அளவில் பெற்றவர்களும் பணத்தின் பிடியில் இருப்பதே வழக்கம். பணம் இவர்களைப் பெற்றுள்ளது என்பது, பணத்தை இவர்கள் பெற்றவர்கள் என்பதைவிடப் பொருந்தும். நெடுநாள் அசுரனுடைய பிடியில், அவனுடைய வக்ர பாவங்களுக்குச் சேவை செய்தால், இன்று ஒருவர் பணத்தைப் பெற்றால், இதுநாள் வரை பணத்தில் வளர்ந்த தன்மை அவர்களை ஆட்கொள்கிறது. ஏதோ ஒரு வகையில் பணத்தின் கோணல் குணங்களை அவர்கள் பெறுகிறார்கள்; அதிலிருந்து தப்புவது சிரமம்.
 
ஆன்மீக வாழ்க்கையில் உலகெங்கும் காணப்படும் போக்கு பணத்தைப் பொருத்தவரை பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கும். பண விஷயத்தில் கட்டுப்பாட்டை நிர்ப்பந்தமாக அனுஷ்டிக்க வேண்டும். பற்றற்ற நிலை என்பது பணத்தைப் பொருத்தவரையில் அவசியம். ஒதுக்கியும் விலக்க வேண்டும் என்றெல்லாம் ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டவர் கருதுகின்றனர். சொந்த உபயோகத்திற்காகவோ, ஆசைக்காகவோ பணத்தைத் தொடக்கூடாது என்பதே அடிப்படை. சிலர் தடையுத்தரவே போட்டுவிடுகிறார்கள். பணமானாலும், செல்வமானாலும், அவை விலக்கப்பட வேண்டும். ஆன்மீகம் என்றால் வறுமையும், வெறுமையும் உடையதே தவிர, செல்வமும், செழிப்பும் உடையதன்று என்பதே அன்னார் கோட்பாடு. ஆனால் இது தவறு. உலக மாந்தருள் மாணிக்கம் போன்றவர்கள் ஆன்ம விளக்கம் பெற்றவர்கள். மற்றவர்கள் வெறும் மனிதர்களே. உலகம் தீய சக்திகள் நடமாடும் இடம். இறைவனுடைய உரிமைக்குரிய பணத்தைப் புனிதமான ஆன்மாக்கள் கையாலும் தீண்டுவதில்லை என்றவுடன், அந்த உரிமையை நாடி கரிய சக்திகள் விரைந்து வரும். வெறும் மனிதன் அவர்கள் முன்னிலையில் திறனற்றவன்.
 
உயர்ந்தவர் உரிமையைக் கொண்டாடவில்லை என்றால், தீமையின் தலைவர்கள் அவ்வுரிமையைப் பெற முயல்வார்கள்; வெற்றி பெறுவார்கள். பூரண யோகிக்கு உரிய முறை அதாகாது. சத்தியஜீவனைச் சிருஷ்டிக்கும் பூரண யோகத்துக்குரிய முறை வேறு. இறைவனுக்குரிய பணம் என்னும் சக்தியை இறைவனுக்காக, அவன் சார்பில் பெற்று, பணம் இறைவனுடைய எதிரியின் கையில் சேராமல் காத்து, இறைவன் சேவைக்கு அதை அர்ப்பணம் செய்வதே பூரண யோகத்திற்குரிய முறையாகும். செல்வம் செல்வாக்கைப் பெற்றுத் தரும். செல்வம் செல்லாத இடமில்லை. செல்வத்தால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை என்ற அளவில் சிறப்புடையது. வாழ்க்கையைத் துறந்தவர் சன்யாசி. வாழ்க்கை வளங்களினின்ற விலகுவதே சிறப்பான கொள்கை எனக் கொண்டு, செல்வத்தையும், அதன் சிறப்புகளையும், செல்வாக்கையும், செல்வ வளத்தையும் செயலில் ஒதுக்கி, மனத்தால் புறக்கணிப்பது துறவியின் இயல்பு. இந்த நாணயத்தின் மறுபுறம் அதை நாடுபவரின் இயல்பு. இரவு-பகலாகப் பணத்தை மனப்பீடத்தில் இருத்தி, ‘கலகல’ எனக் காசு ஒலிக்கும்பொழுது உடலெல்லாம் பூரிக்கும். மனிதனுக்கு உயிரில் உயர்வானது பொருள். அது பணமானால் சிறப்பு. அதுவும் காசு, பவுனானால் அதிகச் சிறப்பு. அசுர வழிபாட்டின் வகை இது. பணத்தின் பெருமையையும், பணத்தால் வரும் இன்பங்களையும், பணம் சமூகத்தில் அளிக்கும் அந்தஸ்தையும், பட்டு, பவுன், பணம், பதக்கம் தரும் நினைப்பின் சிறப்பையும் உணர்ந்து, போற்றி, மகிழ்ந்து, திளைத்து, தன்னை இழந்துள்ள மனிதன் பணத்திற்கு அடிமையாவான். பணத்தின் மீது பற்றற்று இருப்பவர் துறவி. பவுனின் மீது உயிரை வைத்திருப்பவன் பாமரன். ஆன்மீக நோக்கில் இவை இரண்டும் ஒரே நிலையில் உள்ள மனப்பான்மையே. துறவறத்தைப் போற்றும் சமூகம், செல்வத்தின் மீது இச்சையுள்ளவனை இழிவாகக் கருதுகிறது. அவை எதிரெதிரான மனப்பான்மையாகும். ஆனால் மனநிலையைப் பொருத்தவரை ஒன்றே ஆகும். தான் செய்யும் விபசாரத்தின் பாவத்தை அனுதினமும் உணர்ந்து மனம் பதறியவள் மனநிலையின் சிறப்பால் சொர்க்கத்தை அடைந்ததாகவும், அவளுடைய செய்கைகளைக் கூர்ந்து கவனித்த சன்யாசி நரகத்திற்குப் போனதாகவும் ஒரு கதை உண்டு. விபசாரியின் உடலை நாயும், நரியும் கடித்துச் சாப்பிட, சன்யாசியின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிஷ்யர்களால் பூஜிக்கப்பட்டது. உடலின் தூய்மைக்குரிய பெருமையையும், மனத்தின் தூய்மைக்குரிய பலனையும் வாழ்க்கை தவறாது அளிக்கும். பற்று மனதில் இருப்பதால்தான் அதை விலக்க முற்பட வேண்டியிருக்கிறது; பற்றை அறுக்க வேண்டியிருக்கிறது. பற்று இருந்து அதை அறுப்பதும், இச்சையுடன் ஈடுபடுவதும் ஆன்மீகத்தைப் பொருத்தவரை ஒரே மன நிலையாகும். பூரண யோகிக்குச் செல்வத்தைப் பற்றிய மனநிலை ஒன்றுதான். உலகத்து ஏனைய சக்திகளைப் போல், மின்சாரம், மழை, செல்வம் ஆகியவற்றையும் தெய்வீக சக்திகள் என உணர்ந்து, அவற்றை அசுரனுடைய பிடியிலிருந்து மீட்டு, அன்னையின் பாதத்தில் சமர்ப்பிப்பதே சாதகனின் கடமை. மின்சாரம் அதிகத் திறன் வாய்ந்த சக்தி. மழையே உலகச் செழிப்பின் அஸ்திவாரம். மனிதன் அவற்றின் திறனை அறிவான். ஆனால், அவற்றை மனதால் வழிபடுவது இல்லை. மின்சாரத்தைப் பெற மனம் ஏங்குவதில்லை. மின்சாரத்தின் மீது பற்று ஏற்படுவதில்லை. பெருஞ்செல்வத்தைத் திரட்டியே தீருவேன் என்ற வைராக்கியமும், பணத்தைக் கையால் தீண்டுவதில்லை என்ற வைராக்கியமும் ஒரே வைராக்கியமே. மனம் அதைத் தீவிரமாக, நம்மை அறியாத ஆழத்தில் நாடுவதால்தான் ‘தொடமாட்டேன்’ என்ற வைராக்கியம் எழுகிறது. ‘மதுவைத் தொடமாட்டேன்' என்று சாதாரண மனிதன் சபதம் செய்வதில்லை. மதுவின் மீது ஆர்வம் இருப்பவருக்கே அந்தச் சபதம் தேவை. வாழ்க்கையைத் துறந்தவர் மனத்தால் செல்வத்தைத் துறக்கவில்லை என்பதால் ஏற்படும் வைராக்கியமே சபதம். மனம் செல்வத்தை நாடவில்லை என்றால் சபதம் தேவைப்படாது. வைராக்கியத்திற்குத் தேவையில்லை.
 
உலகம் வளத்தால் நிரம்பியது. ஓடும் நதிகளும், வீசும் தென்றலும், பரந்த வானும், விரிந்த கடலும் மனித வாழ்வுக்கும், ஜீவராசிகளுக்கும் இடையறாது சேவை செய்கின்றன. மனிதன் தன் அறிவு நிலைக்கேற்ப உணர்வு பெறுகிறான். காடு தனக்குச் செய்யும் சேவையை மனிதன் கடந்த ஓரிரு நூற்றாண்டுகளாகத்தான் அறிவான். காடில்லை என்றால் மழையில்லை. மழையில்லை என்றால் மனிதன் இல்லை. மனித வாழ்வுக்கு இன்றியமையாத இயற்கை வளங்கள் ஏராளம். பூமிக்கு மேலே 20 மைலுக்கு மேலே உள்ள தூய்மையும், பூமியில் வாழும் மனிதனுக்குத் தேவை என்பதை இந்த நூற்றாண்டில்தான் அவன் அறிவான். மனிதன் அறிந்து கொள்ளவில்லை என்பதால் தேவையில்லை என்றாகாது. ஆயிரம் வகையான வளங்களும், அவற்றின் தேவைகளும் இருந்தாலும், மனிதன் போற்றுவது சிலவற்றையே. அவற்றுள் பிரதானமானது செல்வம்.
 
காற்றைவிட இன்றியமையாதது மனிதனுக்கில்லை; என்றாலும் காற்று தனி மனிதன் சொத்தாக முடியாது. செல்வம் காற்றைப் போன்றது. தனி மனிதன் செல்வத்தைத் தன் சொத்து என்று கருதுவதால், அதற்கு நாட்டின் அரசும், சமூகமும் இசைவு தெரிவிப்பதால், செல்வம் ஒருவனுடைய சொத்தாகிவிட முடியாது. செல்வம், காற்றைப்போல் அசைந்துகொண்டேயிருக்கும். அது நம்மிடம் இருக்கும்வரை செல்வத்தை நல்ல முறையில் உபயோகப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். மனிதன் எதையும் தன்னுடையது என்று கருதும் மனப்பான்மையுடையவன். சென்னையிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் செல்லும் 50 இலட்ச ரூபாய் பெறுமான இரயிலில் செங்கல்பட்டில் ஏறி விழுப்புரத்தில் இறங்க இவன் செலுத்தும் கட்டணம் ரூ.10; இரயி-ல் இருக்கும் நேரம் இரண்டு மணி நேரம். "நம்ம இரயில் எப்பொழுது வருகிறது'' என்று உரிமை பாராட்டும் மனப்பான்மை மனித இயல்பு. இன்று நம்மிடம் உள்ள செல்வம் நாளை வேறிடம் செல்லும். அந்தக் குறுகிய நேரத்தில் உரிமை பாராட்டாமல், கடமையை மட்டும் செய்வது நல்ல மனப்பான்மையாகும். என்ன மனநிலையுடன் செல்வத்தைக் கையாள்கிறோம், எந்த உளநிலையுடன் அதைப் பெற்று இருக்கின்றோம் என்பதே முக்கியம். என்ன காரியத்திற்காகச் செலவிடுகிறோம், எந்த மனப்பான்மையுடன் செலவு செய்கிறோம் என்பது கருதப்பட வேண்டிய ஒன்றாகும்.
 
உலகத்தின் செல்வத்திற்கெல்லாம் உரிமையுடையவர் அன்னையே. உன் சொந்த உபயோகத்திற்காக, வரும் பணத்தை அன்னையின் செல்வமாகக் கருது. உன்னிடம் உள்ளது பணமானாலும், மற்றதானாலும், அவை உனக்கு உரிமையுடையதாகா; அன்னைக்கே உரியவை அவை. உன்னையும், உன் உரிமைகளையும், உடைமை அனைத்தையும், உணர்ச்சிகளையும், உறவையும் அன்னையின் உடைமை என உணர்ந்தபின், செல்வத்திற்கு மட்டும் வேறு நிலையில்லையன்றோ? உன் தேவைகளுக்காக எதையும் கேட்காதே; கேட்க வேண்டுமென நினைக்காதே. நினைவிலும் உரிமையைப் பாராட்டாதே. அன்னை கொடுப்பதை அருள் என அறிந்து ஆர்வமுடன் ஏற்றுக்கொள். கொடுத்த காரியத்திற்காக அதைப் பயன்படுத்து.
 
முழுமையான தன்னலம் கருதாத மனப்பான்மையை ஏற்றுக்கொள். நெறியாகச் செயல்பட சிறப்பாக முனைந்து நில். சிறிய விஷயங்களையும் கவனமாகச் செய். இழை பிசகாமல் செயலாற்று. பொறுப்பையுணர்ந்து, தர்மத்தின்படி கர்மத்தைக் கர்த்தாவாகச் செய். அனைத்தும் அன்னையின் உடைமை என்பதை அனுதினமும் நினைவு கொள். பொருள்களும், செயல்களும், பலன்களும் உனக்குரியவை அல்ல; அன்னைக்கேயுரியவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அன்னைக்காக உன்னிடம் வரும் பொருளை பக்தியுடன் அவர் பாதங்களில் சமர்ப்பித்திடு. எதையும், எள்ளளவையும் உனக்காகவோ, மற்றவர்க்காகவோ செலவிட நினைக்காதே.
 
செல்வத்தால் ஒருவன் உயர்ந்தவன் எனக் கருதாதே. செல்வ நிலையால் உன் உள்ளம் பாதிக்கப்படக்கூடாது. செல்வாக்கும், அந்தஸ்தும், பகட்டும் மனிதனை நிலைகலங்க வைக்கக்கூடியவை. அந்நிலை உனக்கில்லை. அன்னைக்காக ஒருவரிடம் பணம் கேட்க நேர்ந்தால், உன் மூலமாக அன்னையே அவரிடம் கேட்பதாக உணர வேண்டும். அவருடைய முழுச் செல்வமும் அன்னையுடையது. தமக்கு உரியதில் ஒரு சிறியதை அன்னை அவரிடம் கேட்பதாக அறிய வேண்டும். அவர் கொடுப்பதின் அளவு அவருடைய உண்மை நிலைக்கு ஓர் அளவுகோல்.
 
விரைந்து விலகும் துறவியின் போக்கின்றி, பணத்தின் கறை உன் மீது படியவில்லை என்றால், இறைவனின் சேவைக்குப் பெரும் பணம் உன்னை நாடி வரும். பணத்தின் போக்கு உன் கட்டுப்பாட்டில் இருக்கும். பணத்தாசையில்லாமலிருப்பது உண்மையான சுதந்திரம். மனத்தளவில் பணத்தின் மீது பற்றிருந்தால், இருந்து விலக்க முயன்றாலும், அது அடிமை மனப்பான்மைக்கு அறிகுறியாகும். பற்று இருந்து விலக்க முயல்வதைவிட, பணத்தின் மீது பற்றேயில்லாமல் இருப்பதே சுதந்திரம். இறைவனின் சேவைக்குத் தன் உடைமை அனைத்தையும் உவந்தளிக்கும் மனநிலை இந்தச் சுதந்திரத்திற்கு ஓர் அறிகுறி. உவந்தளிக்கும் உடைமையையும் சமர்ப்பணமாகச் செய்தல் சிறப்பு. மனம் பக்குவமாக இருந்தால், எதையும் கேட்டுப் பெற முடியாத நிலையிலிருந்தால், இருப்பதை இறைவனுக்கு அளிக்க ஆர்வமிருந்தால், அளிப்பதை அர்ப்பணம் ஆக்கினால், செயலைச் சேவையாக்கினால், இருப்பினும், இல்லையெனினும் மனம் ஒன்றுபோல் இருந்தால், மனநிலை பணநிலையால் நிர்ணயிக்கப்படாவிட்டால் சுதந்திரம் வந்ததாக அர்த்தம். பணம் சம்பந்தப்பட்ட விஷயம் மனத்தைப் பாதித்தால், தயக்கம் ஏற்பட்டால், பணத்தின் மீது பந்தம் இன்னும் இருக்கிறது என்று தெரிகிறது.
 
தெய்வீக உணர்வு வாழ்வில் வெளிப்பட்டு மிளிர்தலும், வாழ்க்கை வசதிகளுக்குரிய சுகமும் வேறு வேறு நிலைப்பட்டவை. வசதியும் சுகமும் இருந்தால்தான் தெய்வ உணர்வு ஏற்படும் என்றால், அது தெய்வ உணர்வில்லை; சுகத்தை நாடும் மனமே அது. இலட்சிய சாதகனுக்குப் புறவாழ்வின் வசதி அகவாழ்வின் சிறப்பை நிர்ணயிக்கும் ஒன்றாக இருக்கக்கூடாது. இலட்சியச் சாதகனை வறுமையில் இருக்கச் சொன்னாலும், வசதியுடனிருக்கச் சொன்னாலும், செழிப்பும், வறுமையும் அவனைப் பாதிக்கப்படாத நிலையில் அவன் இருக்க வேண்டும். செல்வம் கொழிக்கும் இடத்தில் சாதகனை இருக்கச் சொன்னால், அதன் செல்வாக்குக்கு அவன் அடிமையாகமாட்டான். இன்று அனுபவித்த வசதிகள் நாளைக்குக் கட்டாயமாக அவனுக்குத் தேவைப்படக்கூடாது. தாமரை இலைத் தண்ணீர் போலிருக்க வேண்டியது அவனுடைய கடமை. இருப்பதால், இருந்து அனுபவிப்பதால், ஆசையோ, பற்றோ ஏற்பட்டுவிட்டால், சாதனை சிறப்பானதொன்று ஆகாது. செல்வச் சிறப்பால் ஏற்படும் சௌகரியம், அதிகாரம், வசதி, வளம் மனத்தைத் தொடக்கூடாது. நேற்றிருந்த சௌகரியம் இன்று இல்லை என்பதால் பாதிக்கப்படும் தியானம், பக்தி ஆகியவை பவித்திரமானவையல்ல. அந்த பக்தியை பரமன் ஏற்றுக்கொள்வது இல்லை; வசதியின் மீதுள்ள பக்தி வலிமையுள்ளதன்று.
 
இறைவனின் திருவுள்ளமும், பரமனின் ஆனந்தமும், பக்தனுக்கு உரிய உலகமாகும். அந்த எல்லையைக் கடந்து பக்தனுக்கு எதுவும் இல்லை.
 
சத்தியஜீவன் உதித்தபின் ஏற்படும் உலகில் சத்தியம் ஆட்சி செய்யும். செல்வம் எனும் சக்தி அங்கு சத்தியத்திற்கே உரியதாகும்; இறைவனுக்கு மட்டும் உரிமையுடையதாகும். பூவுலகில் பணம் புனித காரியங்களுக்கு மட்டும் பயன்படுவதில்லை. எல்லாக் காரியங்களுக்கும் உபயோகிக்கப்படும். கடவுளுடைய பணம் கள்ளனுக்கும் தேவை. கலையை வளர்க்கும் நிதி, கடுமையான செயலை நிறைவேற்றவும் பயன்படும்; கொடுமை இழைக்கவும் உதவும். எந்தப் புதிய திறனை உருவாக்கவும் தன்னைப் பணம் கருவியாக்கிக்கொள்ளும். கடத்தல் காரியங்களை உலகம் முழுவதும் ஏற்பாடு செய்ய உதவுவது பணமே. அணுகுண்டு வெடிப்பதைச் சாத்தியமாக்குவது பணம். ஆயிரக்கணக்கானவரை அழிக்க உதவும் கருவியாகச் செயல்படுவது பணத்திற்கு சாத்தியம். சத்திய ஆட்சியில், சத்தியஜீவனுடைய வாழ்வில், மனித வாழ்வு தெய்வீக வாழ்வாக மாறிய நிலையில், பணம் இது போன்ற காரியங்களைச் சாதிக்கப் பயன்படாது. உண்மையை நிலைநிறுத்தவும், எழிலை ஏற்படுத்தவும், அக அழகை உற்பத்தி செய்யவும், ஒழுங்கை நிலைநாட்டவும், சுமுகத்தை எங்கெங்கும் பரப்பவும் பயன்படும் கருவியாகப் பணம் செயல்படும். அன்னையின் சிருஷ்டி அனுமதிக்கும் செயல்கள் உயர்ந்த நிகழ்ச்சிகள். அவற்றின் கருவியாகச் செயல்படுவது பணம் எனும் சக்தி. முதற்காரியமாக அன்னை சார்பில் போர் தொடுத்து, அசுரனிடமிருந்து பணத்தை மீட்டு அன்னையிடம் சமர்ப்பிக்க வேண்டும். வலிமையும், திறமையும் மலர்ந்து, அதனால் அகவாழ்வு விரிந்துள்ள சாதகன் இதற்கேற்ற கருவியாவான். ஆணவத்தை இழந்து, கேட்கும் தன்மையை விட்டு, தயக்கமின்றி, தான் எனும் உணர்விழந்து, பவித்திரமாக உள்ள சாதகன் தெய்வம் செயல்படும் சிறந்த கருவி.தெய்வத்தைத் தாண்டிய நிலையில் உள்ள சத்தியஜீவ சிருஷ்டியை நிலைப்படுத்தும் சாதனம் அவன்.
 
பழக்கத்தால் தன்னையறியாமல் தானே நடக்கும் காரியங்கள் தவிர மற்ற காரியங்களைக் கவனித்தால், அவை எப்படிப்பட்டவை என்று விளங்கும். உபயோகத்திற்குப் பேனா வாங்கினால், "ரொம்ப நாளாக நல்ல பேனா ஒன்று வாங்க வேண்டும் என்ற ஆசை இன்றுதான் பூர்த்தியாயிற்று" என்று நினைக்கும் அளவில் ஆசை அதில் கலந்திருக்கும். சாமான்ய காரியங்களிலும் ஆசை ஒரு ரூபத்தில் இல்லாவிட்டால், இன்னொரு ரூபத்தில் வந்துவிடும். ஆசையில்லை என்றால் மரியாதை முன்வந்துவிடும். அன்பினால் செய்யும் காரியங்களிலும் "என் மரியாதை என்ன ஆகிறது" என்ற தலைப்பில் மரியாதை உள்ளே வந்து செயல்படும். கல்யாணப் பேச்சில் வரதட்சிணையிலிருந்து குழந்தைக்கு ஐஸ்கிரீம் கொடுப்பது வரை மரியாதைக்கு இடம் கண்டுபிடித்துவிடுகிறோம்.
 
இறைவனுடைய பணியை ஏற்றுத் திருப்பணியாகச் செய்ய நீ விரும்பினால், ஆசையின் வாடை, மரியாதையின் சுவடு, இரண்டும் அறவே நீங்கிய பின்னரே அது முடியும்.
 
வழிபாடு பல நிலைகளிலுள்ளது. மாரியம்மன் கோவில் திருவிழாவிலிருந்து, அவதாரப் புருஷர்களான இராம, கிருஷ்ண வழிபாட்டில் ஆரம்பித்து விநாயகர், முருகன், லக்ஷ்மி, சரஸ்வதி, அதன் பின்னர் சிவன், விஷ்ணு வரை வழிபாடுண்டு. வழிபாட்டின் நிலையுயர்ந்தால், வழிபடுபவர்களின் எண்ணிக்கை குறையும். வழிபாட்டு முறைகளிலும் பஜனை, பூஜை, விரதம், உத்சவம், மந்திர ஜபம், தியானம் எனப் பல நிலைகள் உண்டு. முறை உயர்ந்தால் வழிபடுபவர்களுடைய எண்ணிக்கை குறையும். 1940ஆம் ஆண்டில் ஒரு தர்மப் பள்ளிக்கூடம் நிறுவினார்கள். ஊரில் பலர் முன்வந்து நன்கொடை கொடுக்க, பள்ளிக்கூடம் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக உருவாகியது. சொந்தக் கட்டடமாக, ஊரிலுள்ள பெரிய கட்டடங்களில் ஒன்று, அமைந்தது. தொட்டனவெல்லாம் வெற்றியடைந்ததால், நிர்வாகம் ‘மேலும் என்ன செய்யலாம்’ எனக் கருதி, பாரதப் பிரசங்கம் ஏற்பாடு செய்தனர். கட்டடம் கொள்ளாக் கூட்டம். பிரசங்கிக்கு நிறைவு. பலரும் பிரசங்கம் வெகு நேர்த்தியாக நடப்பதைப் பார்த்து, கீதைப் பிரசங்கம் தனியாக ஏற்பாடு செய்யப் பிரியப்பட்டனர். அமோக வரவேற்பு. பிரசங்கிக்குச் சந்தோஷம். சனிக்கிழமை பாரதமும், ஞாயிறு கீதையும் என அமைத்தார்கள். முதல் கீதைப் பிரசங்கத்திற்கு ஒருவர் மட்டுமே வந்தார். அதுவே கடைசிப் பிரசங்கம்.
 
சாதகனுக்குரியது வழிபாட்டைவிடச் சமர்ப்பணமே. தெய்வங்களை சிருஷ்டித்தவன் இறைவன் (Supreme); அவன் சமர்ப்பணத்திற்கு உரியவன். சமர்ப்பணம் முறைகளில் சிறந்தது என்பதால் கடினமும்கூட. சமர்ப்பணத்தை ஏற்பவன் இறைவன் என்பதால் சமர்ப்பணம் அக்காரணத்தாலும் கடினமாகிறது. முறையைக் கருதியும், சமர்ப்பணத்தை ஏற்கும் தெய்வ நிலையைக் கருதியும் பூரண யோகப் பாதை கடுமையை அடைகின்றது. சாதகனுக்கு எந்த இலட்சியமும் பயன்படாது. இறைவனுக்குச் சேவை செய்வது மட்டுமே அவன் இலட்சியமாக இருக்க முடியும். இறை அருளை மட்டுமே அவன் பெற விரும்ப வேண்டும். சக்தியின் வெளிப்பாடாக இருப்பது மட்டுமே அவன் முயற்சி.
 
குழந்தையை வளர்க்கும்பொழுது, குடும்பப் பெயருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று பிரியப்பட்டு, நம் குடும்பத்திற்கே உரிய பாணியில் வளர்க்கின்றோம். 25 வயதில் அப்படி வளர்ந்த பிள்ளையைப் பார்த்து, ‘பையன் தகப்பனார் அச்சில் வார்த்த மாதிரியிருக்கிறான். பேச்சு, பாணி, எல்லாம் அவரே' என்று சொல்லும்போது குடும்பம் பெரிய வெற்றியை சாதித்ததை உணர்கிறது. பையன் குடும்பத்துடன் உடலாலும், உணர்வாலும், லட்சியத்தாலும் ஒன்றிப்போய்விட்டான். மனிதன் தன் வளர்ச்சிப் பாதையில் குடும்பத்துடன் ஒன்றுவதுபோல தன் கலாச்சாரத்துடன் ஒன்றிவிடுவது உண்டு. "இவர் சரியான தெலுங்கர், அசல் மலையாளி, அப்பட்டமான தமிழர்” என்று நாம் அப்படிப்பட்டவர்களைக் குறிக்கின்றோம். தன் மதக் கோட்பாட்டுடனும், தன் கட்சியுடனும், தன் நாட்டின் கலாச்சாரத்துடனும், தன் கம்பனியுடனும் மனிதன் அதுபோல் இரண்டறக் கலப்பதுண்டு. சாதகன் அதுபோல் அன்னையின் அச்சில் வார்த்தவனாகி, சத்தியமான சாதகனுக்குரிய இலட்சணத்துடன், உச்சம் தலையிலிருந்து உள்ளங்கால் வரை அன்னையுடன் கலந்தவனாகி, அன்னையின் திருவுள்ளமே அவன் மனித உள்ளமாகி, அன்னையின் ஜீவியம் அவன் ஜீவியமாகி, அன்னையின் அசைவாலே அவனுணர்வு உருப்பெறும் நிலையை அடைந்து, அன்னை ஆரம்பிக்காத எந்தச் செயலும் அவனுடைய ஜீவனில் உருவாகாத பக்குவம் அடைந்து, உள்ளும் புறமும் அன்னையேயாகி, சரணாகதியின் பூரணத்தை எட்ட வேண்டும்.
 
இது ஒரு நாளில் அடையக்கூடியதில்லை. எண்ணத்தில் இணைந்து, உணர்ச்சியில் சேர்ந்து, புறச் செயலைப் புனிதமாக்கி, உள்ளுணர்வில் அதே பூரணத்தையடைந்து, தியானத்தில் அடைந்த ஒற்றுமை செயலில் வெளிப்படும் இரண்டறக் கலந்த நிலையாக பல ஆண்டுகளாகும். அதுவரை நாம் நம்மை உடலாகக் கருதாமல், உணர்வாகப் புரிந்துகொள்ளாமல், அறிவால் செயல்படும் மனிதனாக அறியாமல், அன்னையின் சேவைக்காகச் சிருஷ்டிக்கப்பட்ட ஆன்மாவைத் தாங்கி உலவும் உடல் எனக் கொள்ள வேண்டும். நம்மை அன்னை என்று உணராதவரை, எவ்வளவுதான் நாம் அன்னையின் கருவி என நமக்கு நாமே சொல்லிக்கொண்டாலும், நாம் அன்னையிலிருந்து வேறுபட்ட தனி நபர் என்பதும், ஊழியம் செய்யும் ஒருவரே என்பதும் நிலைத்து நிற்கும். அப்படியிருந்தாலும், தான் என்பதைத் தாண்டி வர முடியாவிட்டாலும், செய்யும் காரியங்களை நமக்காகச் செய்யாமல், அன்னைக்கே அர்ப்பணம் செய்து பின்னர் செய்ய வேண்டும். நம்முடைய விருப்பம் களையப்பட வேண்டும். சொந்தப் பலன் கருதும் மனப்பாங்கை அழிக்க வேண்டும். தனக்குரிய பலன் என்ற ஆசையைக் கரைக்க வேண்டும். பலனைக் கேட்கும் குணநலனுக்கு இடமில்லை. பரிசை நாடும் பாங்குக்கு இது அரங்கமில்லை. அன்னையின் திருப்தியே உனக்குரிய பலன். அன்னையின் இலட்சியம் பூர்த்தியாவதே, அதனால் அன்னை பெறும் நிறைவே உனக்குரிய பரிசு. மனித ஜீவியம், தெய்வ ஜீவியமாக மாறுவதே உனக்குக் கிடைத்த கைம்மாறு. அமைதியும், ஆனந்தமும், அவற்றிற்குரிய திறனும் உன் சொத்து. சேவையின் ஆனந்தமும், அகவாழ்வின் மலர்ச்சியில் பூரணமும், தன்னலமற்ற சாதகனுக்குப் போதுமான நிறைவு. பக்தனாயிருந்து, கருவியாக மாறி, அன்னையுடன் ஒன்றி, நாம் வேறு - அன்னை வேறு என்ற நிலையில்லை எனும்வரை மாறுதல்கள் ஏற்படும்.
 
"நான் அன்னையின் பக்தன்; பூரண யோகச் சாதகன். அன்னையின் விருப்பத்தை அருள் கட்டளையாக ஏற்றுக் கொள்கிறேன். அதை நிறைவேற்றுவதே என் வாழ்வில் யோக இலட்சியம்” என்ற நிலை முதற்கட்டம். "நான் வேறு, அன்னை வேறு. அன்னையின் திருவுள்ளத்தை அறிந்து, அதை என் வாழ்வில் நிறைவேற்றும் சாதகன் நான்” என்பதில் நாம் வேறு, அன்னை வேறு. ஆனால் அன்னையின் கட்டளையை நிறைவேற்ற ஆர்வம் கொண்டு உள்ளது என் நெஞ்சம் என்பதே நிலை.
 
அடுத்த கட்டத்தில் நாம் கருவியாகிறோம். வெளியிலிருந்து வரும் உத்தரவுக்குப் பதிலாக, கட்டளை உள்ளே எழும் அளவுக்கு அன்னையுடன் ஒன்றிவிடுகிறோம். கட்டளை அன்னையினுடையது. ஆனால் அது என்னுள் எழுகிறது; என் கருத்தாக எழுகிறது. அதை நிறைவேற்றாமலிருக்கும் தகுதி எனக்கில்லை. தானே நிறைவேற்றிக் கொள்கிறது. என்னைக் கருவியாகப் பயன்படுத்தி தன்னைப் பூரணப்படுத்துகிறார் அன்னை. முன்கட்டத்தில் உற்சாகமூட்டி, வழிகாட்டிய அன்னை இப்பொழுது கட்டளையை எழுப்பி, காரியத்தை நடத்திவிடுகிறார். நம் செயலெல்லாம் அன்னை எழுப்பிய செயலென அறிகிறோம். அன்னையின் சக்தியே நம் சக்தி. மனமும், பிராணனும், உடலும் உவந்து தம்மை உட்படுத்திக்கொள்ளும் அளவு அன்னையின் கரணங்களாகிவிட்டன எனத் தெரியும். அன்னையின் லீலைக்கு நம் வாழ்வு ஒரு மேடை. நம் வாழ்வு எனும் அச்சில் அன்னை தம் செயலை வார்த்தெடுக்கிறார் என்று உணர்வோம். பூவுலகம் புளகாங்கிதமடைய, அன்னையின் அருள் வெளிப்பட, நாமும், நம் வாழ்வும், நம் கரணங்களும், நம் ஜீவனும் வலிந்து வழங்கி, சேவை செய்யும் நிலை நமக்கேற்படுகிறது. இதுபோல் அன்னையுடன் ஒன்றி, அவரையே நம்பி வாழும் பேறு பெரும்பேறாகும். ஆன்மீகச் சிறப்புள்ள அற்புதப் பேறு எனலாம். அறியாமையால் ஆளப்படும் மனித வாழ்வு துன்பத்திற்கு உரிய இடம். மீளா வேதனை அதன் லௌகீக முத்திரை. நிலையிழந்து நிற்பதே நம் வாழ்வுக்குரிய சிறப்பு. இந்த எல்லையைத் தாண்டி ஆன்மீக உண்மை ஆட்சி செலுத்துகிறது. ஆனந்தம் செறிந்த அவ்வாழ்வின் சிறப்பான சின்னம் ஆழ்ந்த அமைதி. அன்னையை நம்பி வாழும் பேறு மனித வாழ்க்கையின் எல்லைக்கோட்டைத் தாண்டி சாந்தத்தின் சந்நிதியில் நம்மை இட்டுச் செல்கிறது.
 
யோக இரஸவாதமெனப்படும் இத்திருவுருமாற்றம் மனித ஜீவனை, சத்தியஜீவனாகச் செய்யும் அற்புத வேளையில் ஆணவத்தின் இழையோ, அகங்காரத்தின் சாயலோ அணுவளவும் இருத்தலாகாது. ஜீவன் மலர்ந்து, சர்வ பரித்தியாகத்தை இலட்சியமாகக் கொண்டு, தன்னையும் தன் அந்தரங்கங்களையும் இறைவனுக்கு அளித்து மகிழும் வேளை திருவுள்ளம் பூரணமாகும் தருணம். ‘இது வேண்டும், அது அவசியம் வேண்டும்' என்ற சொல்லோ, அதன் எதிரொலியோ இந்தத் தெய்வத் திருநடனத் திருவிழாவை களங்கப்படுத்துதல் கூடாது.
செய்யும் காரியத்தில் பற்று கூடாது. அதன் பலனில் உரிமை கூடாது. நிபந்தனைகள் விலக்கப்பட வேண்டியவை. நீ இறைவனுடைய உடைமை. அவனை உன் உடைமையாக்கி, உரிமையைக் கருதும் மனப்பான்மையை விடு. ‘சிறந்த கருவி நான்' என்ற நினைவு இத்தனைச் சாதனையையும் சிதறடிக்கும். வீண் பெருமையும், திமிரான சொல்லும் உனக்குப் புறம்பானவை.
 
அருள் நெறியின் அற்புத சக்தி உன்னில் செயல்படுகிறது. மனம் அதைத் தன் கருத்துக்கு இசைய வைக்க முயல்கிறது. உள்ளம் தன் வயம் இழக்கத் தயாராகிறது. சொந்தத் திருப்திக்கு எந்த அளவில் இந்தச் சக்தி உதவும் என உடல் கருதுகிறது. எதற்கும் எள்ளளவும் இடமில்லை. இம்மியளவு இடம் கொடுத்தாலும் புனிதம் புரையோடிப்போகும்.
 
உனது நம்பிக்கையும், உண்மையும், தூய்மையான ஆர்வமும் பூரணமாகி, ஜீவனில் எல்லா நிலைகளையும் எட்டி, நிரம்பி, நிலைபெற வேண்டும். அது நடந்தால் வக்ரபாவங்களும், வலிந்து நம்மை வழி தடுமாறவைக்கும் சக்திகளும் கொஞ்சம் கொஞ்சமாக நம் சுபாவத்தில் இருந்து காய்ந்த சருகு உதிர்வதுபோல் விழுந்துவிடும்.
 
பொங்கிவரும் இப்பூரணம், பூரண யோகச் சாதனம். நெருங்கி வரும் அன்னை நம்முள் நிலைபெற்று, உயிர் பெற்று, பிரதிஷ்டை பெறுவார். நம் ஜீவன் அன்னையுடன் இணைந்து இரண்டறக் கலக்கும். நாம் தனியான ஜீவன் என்பதிருக்காது. நாம் வேறில்லை; கருவியும் இல்லை; சேவகனும் இல்லை; அன்னையின் ஜீவியத்தின் பகுதியான பிறவியாகிய குழந்தை என அறிவோம். இடையறாது அன்னை நம்முள் வதியப் பிரார்த்தித்த நாம், இடையறாது அன்னையுள் ஒடுங்கி ஒன்றிப் போயிருப்பதைக் காண்போம். நம்முள் அன்னை நின்று நிலைபெறுதல் போல் அன்னையுள் நாம் அன்பால் கலந்திருப்போம்.
 
நம் எண்ணங்கள், காட்சிகள், செயல்கள், மூச்சு, அசைவு அன்னையிடமிருந்து வருவது தெரியும். அவை அன்னையுடையதே என்பது தெளிவுறும். தம் பகுதியாகத் தம்முள்ளிருந்து அன்னை நம்மை உருவு செய்து தம் லீலையைப் பூர்த்தி செய்ய உலகுக்கு அளித்த உடலும், ஜீவனும் நாம் என்று தெரியும். எங்குச் சென்றாலும் நம்முடைய மூலம் (origin) அன்னையே என்பதைச் சிந்தனை செய்யாமல் தெரிந்துகொள்ள முடியும். நாம் அன்னாரின் ஜீவனில் உதித்த ஜீவன்; அவருடைய ஜீவியம். நம்முடைய சக்தி, அன்னையின் சக்தியே. பரந்துள்ள ஆனந்தமெனும் வானாகிய அன்னையின் அற்புத இழையே நாம் என அறிவோம்.
 
இந்நிலை வளர்ந்து, நிறைந்து, பூரணம் பெற்று, சிறப்பின் சிகரத்தை எட்டி, நிலைபெற்றபின் அன்னையின் சத்தியஜீவிய சக்தி உன்னை முழுவதும் ஆட்கொள்ளும். இறைவனின் திருப்பணியைத் திருவுள்ளச் சிறப்புடன் செய்ய உன்னால் அதன்பின் இயலும். பரம்பொருளின் பரவெளி எழுச்சியாகச் செயல் வெளிப்படும். ஞானம் தன்னை உணர்ந்த நிலையை, தன்னைத் தான் பூர்த்தி செய்து கொள்ளும். செயல் மின்னலாகத் தோன்றி, இயல்பாகப் பரவி, ஆற்றொழுக்கான தன் பயணத்தை ஆண்டவனின் அருளாட்சியாக்கும்.

அம்சங்கள் நான்கு:
 
முனிசிபாலிட்டி என்பது உள்ளூர் அரசியல் அமைப்பு. பஞ்சாயத்தும் உள்ளூர் தேர்தலால் ஏற்பட்ட அமைப்பே. ஆனால் அவற்றினுடைய அதிகாரம் மாநிலச் சர்க்காரின் சட்டத்தினால் ஏற்பட்டது. பஞ்சாயத்து யூனியன், முனிசிபாலிட்டி, கிராமக் கூட்டுறவு பாங்க் போன்று பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் உள்ளூர் மக்களால் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால் சட்டபூர்வமாக அவற்றிற்குள்ள அதிகாரத்தைக் கொடுத்தது மாநிலச் சர்க்கார். மாநிலச் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ் செயல்படும் ஸ்தாபனங்கள் இவை. மாநிலச் சர்க்காரின் அதிகாரம் அரசியல் சட்டத்திலிருந்து (consititution) வந்தது. அரசியல் சட்டத்திற்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது மக்கள் ஆட்சி. மக்களுக்கு எல்லா அதிகாரங்களும் இருந்தாலும், செயல்படுவதற்கு பார்லிமெண்ட், சட்டசபைகள் மூலமாகவே மக்களாட்சி செயல்படுகிறது. சட்டசபைகள் அவற்றிற்குக் கீழேயுள்ள ஸ்தாபனங்களை ஏற்படுத்தி, அவை மூலமாகச் செயல்படுகின்றன.
 
அன்னை என்பது ஒரு சக்தி. அது ஒரே சக்தி என்றாலும் உலகில் செயல்படுவதற்கு தம் அம்சங்கள் பலவற்றை ஏற்படுத்தி, அவை மூலமாகவே செயல்படுகின்றார். அன்னையின் தெய்வீகத்தைத் தாங்கி வரும் அம்சங்கள் குறிப்பாக நான்கு உள்ளன. அவை தெய்வ சக்தியின் திருஉருவங்கள்; செயலாற்றும் சிறப்புடையவை. அவை அன்னையின் அவதாரத்தின் பகுதிகளாகும். தன் சிருஷ்டியிலுள்ள பல்லாயிரக்கணக்கான ஜீவராசிகளின் வாழ்வை வழிப்படுத்தவும், வளம் நிரப்பவும், அவை அனைத்தும் அமைதியாக அன்றாடம் செயல்படவும் அன்னை ஆயிரக்கணக்கான சிற்றூற்றுக்கான சிறு சக்திகளைப் பயன்படுத்தி பூவுலக வாழ்வைச் சிறக்கச் செய்கிறார்.
 
மனித வாழ்க்கை சிறப்புறத் தேவையானவை பல. அரசியல் அமைப்பு, செல்வ வளம், பயிர்த் தொழில், கல்வி, கலை போன்ற பல்வேறு சாதனங்கள் தேவை. அவற்றிற்கு உயிர் போன்று அறிஞர்களும், கலைஞர்களும், அதிபர்களும், வீரர்களும், மேதைகளும், விவேகிகளும் பலர் தேவை. தெய்வ அம்சத்தைத் தாங்கி சங்கரர் போல் ஆன்மீகம் பரப்புபவர் உண்டு. விவேகானந்தரைப் போல் மக்களைத் தட்டி எழுப்புபவருண்டு. நெப்போலியனைப் போல, சிவாஜியைப் போன்ற வீரர்களுண்டு. இந்நிலையிலுள்ளவரை விபூதிகள் என அழைப்பர். தெய்வத்தின் முழு அம்சம் உடையவரை அவதாரமெனவும், ஓர் அம்சம் உடையவரை விபூதி எனவும் சொல்வார்கள். இராமன், கிருஷ்ணன், புத்தர், ஏசுவை அவதாரம் எனவும், சங்கரர், விவேகானந்தர், சிவாஜி போன்றவரை விபூதி எனவும் சொல்வார்கள். அன்னை நேரடியாகவும், தன் அம்சங்கள் மூலமாகவும், அவதாரங்கள் மூலமாகவும், விபூதிகள் மூலமாகவும் உலகை நடத்துகிறார்.
 
சகல ஜீவராசிகளையும் தழுவி தன்னுள் கொண்டது அன்னை எனும் சக்தி. பூவுலகில் அனைத்துச் செயல்களையும் தன் உத்தரவால் நிர்ணயிப்பது இந்தத் தெய்வீகச் செயல்; அவருடைய முகங்கள் பதினாயிரம், கைகள் பல இலட்சம். அறிவின் வீச்சால் அறியக்கூடியது அல்ல அன்னையின் அசைவுகள். மேதாவிலாசமுடைய அறிஞனும் அன்னையைப் புரிந்துகொள்ள முயன்றால் விமானத்தின் பின்னோடும் குதிரைவண்டி போலிருப்பான். கப்பல் தன்னுள் ஓர் ஊர் முழுவதும் அடங்கும் பெருங்கலமானாலும், கடலின் பரப்பில் கப்பல் ஒரு துளியே ஆகும். விசால புத்தியுடையவனுக்கும் அன்னையின் செயற்கூறுகள் அறிவில் அடங்கா. அன்னை எனும் கடலில் அவனறிவு ஒரு பெருங் கப்பலாகும்.
பரம்பொருள் சிருஷ்டியில் செயல்படும் முதல் நிலையில் உள்ளன அன்னையின் சக்தியும், அன்னையின் ஜீவியமும். அன்னை சிருஷ்டித்த உலகு அவரது ஜீவியத்தில் ஒரு சிறு பகுதியே. சிருஷ்டியைக் கடந்தவர் அன்னை. மரமெனும் அன்னையில் சிருஷ்டி என்பது ஒரு பழம். வியாச பாரதமான அன்னையில் சிருஷ்டி ஒரு கிளைக்கதை. பள்ளிப் பாடத்தைத் தன்னுள் கொண்டுள்ள கல்வி கரையற்றது; வரையற்றது. பள்ளிப் பாடத்தின் நிலையைப் பலகாலும் கடந்த நிலையிலுள்ளதுபோல் அன்னை தம் சிருஷ்டியான உலகைப் பல நிலைகளிலும் கடந்து நிற்கின்றார். எனினும் அன்னை அம்சங்கள் மூலமாகவும், அவருடைய விபூதிகளின் செயலிலும் அன்னையின் சிறப்பையும், இனிமையையும் நம்மால் ஓரளவு உணர முடியும்.
 
அரசியல் சட்டம் மனித வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்றால், அதை ரேடியோ ஒலிபரப்பில் காதால் கேட்கும்பொழுது அதன் உட்கருத்து விளங்குவதில்லை. அரசியல் சட்டம், பார்லிமெண்ட் சட்டமாகி, அதுவும் சர்க்காருடைய திட்டமாக வடிவெடுத்து, ஒரு பாங்க் மூலமாக உன் ஊருக்கு வந்து, நீ செய்யக்கூடிய தொழிலுக்கு மூலதனமாக வரும்பொழுது, அரசியல் சட்டம் இந்தியப் பிரஜைக்கு அளித்துள்ள உரிமை புரிகிறது. அன்னை, உலகைச் சிருஷ்டித்தவர். அவருடைய செயல் அறிவுக்குப் புலப்படாது என்றால் நமக்கு எதுவுமே புலப்படுவதில்லை. நல்ல துணியில்லை, போதுமான சாப்பிடில்லை என்ற வறுமையில் உள்ள பெண்ணொருத்தி அன்னையை வழிபட ஆரம்பித்து, அன்னைக்கு அவள் அபயக்குரல் கேட்டு, வானுலகத்தில் கருணை உற்பத்தியாகி, அவள் மனதைத் தொட்டு மென்மையாக்கிய பொழுது மென்மையை உணர்ந்த சிறுமி, மென்மையின் முழு வடிவத்தையும் புரிந்துகொள்ளவில்லை. வானில் உதித்த கருணை ஐரோப்பாவுக்குச் சென்று தனக்குரிய கருவியாக அவள் அத்தை மகனைக் கண்டு, அவன் மனதில் மென்மையாக உதித்து, வறுமையில் வாடும் தன் மாமன் மகளை மணப்பது நல்லது என்று தோன்றி, தன் பெற்றோரிடம் சொல்-, அவர்கள் மனத்தில் பெருந்தன்மையாகத் தோன்றி, அன்னையால் ஏற்கப்பட்டு, அவர்கள் மனம் உவந்து அப்பெண்ணின் குடும்பத்திற்கு, ‘உங்கள் பெண்ணை எங்கள் மகனுக்குத் திருமணம் முடிக்க விழைகிறோம்’ என்று எழுதியபோது, அன்னையின் அளப்பரிய கருணையை அச்சிறுமை அறிய முடிகிறது. தெய்வங்களாகவும், தெய்வீகச் செயல்களாகவும், தெய்வ அருளாகவும், கருணையாகவும், தெய்வ தரிசனமாகவும் அன்னை உலக வாழ்வில் வெளிப்பட்டு அருள் வெள்ளமாகப் பரவுவதை நாம் உணரலாம்.
 
அன்னை என்று வணங்கும் அவதாரம் சிருஷ்டிகர்த்தாவான சித்-சக்தி. உலகத்தையும், சிருஷ்டியையும் தன்னுள் அடக்கிய பெருமையான ஆன்மீக ஒருமையுடையது இவ்வவதாரம். ஒருமை என்னும் பல கோணங்களைத் தன்னுள் கொண்ட ஒருமை அது. பரந்த ஞானத்தாலும், மனத்தின் வேகத்தாலும் அறிய ஒண்ணாத பெருமையுடையது இந்த ஆன்மீக ஒருமை.
 
ஒரு கவி பல காவியங்களியற்றினாலும், அவை உலகப் புகழ் வாய்ந்தவையானாலும், கவி தன் எல்லாப் படைப்புகளையும்விட உயர்ந்தவன். பரமனின் சக்தியான அன்னை உலகையும், பிரபஞ்சத்தையும் சிருஷ்டித்திருந்தாலும், தன் சிருஷ்டியைக் கடந்தவர்; தன் சிருஷ்டியைவிட உயர்ந்தவர். இந்நிலையில் அவரை அறிவது கடினம். அவரை நாம் அதிகமாக உணர வேண்டுமானால், தெய்வங்களாக அவர் நம் முன் காட்சி அளிப்பதைக் கண்டு, அத்தெய்வங்களின் செயலை நாம் அறிய முற்பட்டால், அவரை நாம் அறிய முடியும். பார்லிமெண்ட் இயற்றும் சட்டங்கள் நமக்குப் புரிவது இல்லை. அதுவே நடைமுறையில் சர்க்கார் திட்டங்களாக நம்மை நாடி வரும்பொழுது நாம் அவற்றை விளங்கிக்கொள்ள முடியும்.
 
நாட்டின் அரசியல் அமைப்பை எளிதாகக் கூற வேண்டுமானால், சிகரமாக ஜனாதிபதியும், அகில இந்திய அளவில் பார்லிமெண்டும், மாநிலங்களில் சட்டசபைகளும் சேர்ந்து நாட்டுக்கு, சர்க்கார் என்று அமைந்துள்ளன எனலாம். அன்னை மூன்று நிலைகளில் இருந்து செயல்படுகிறார்கள். சிருஷ்டிக்கு அப்பால் நின்று, அப்பாலுக்கப்பாலாய் இருப்பவனுடன் சிருஷ்டியைத் தொடர்புகொள்ளச் செய்யும் நிலை ஆதிசக்தி என்ற முதல் நிலை. இதையே பராசக்தி என்போம்.
உலகையும், பிரபஞ்சத்தையும் சிருஷ்டி செய்து, அவற்றைக் காக்கும் கடமையும் ஏற்றுக்கொண்ட நிலை அடுத்த நிலை. இதைப் பிரபஞ்சத்தின் மஹாசக்தி என்கிறார் பகவான். அடுத்த நிலை அவதாரம். மனிதனிடம் தொடர்பு கொண்டு, மனிதனைத் தெய்வீக வாழ்வில் ஈடுபடுத்த மனிதரிடையே மனித உருவில் அவதாரமாக வந்து, தம் பராசக்தி அம்சத்தையும், மஹாசக்தி அம்சத்தையும் தன்னுட் கொண்டு செயல்பட்ட அவதார நிலை மூன்றாம் நிலை.
 
பரம்பொருளையே தம்முட் கொண்ட நிலை முதல் நிலை. பரம்பொருளின் இரகஸ்யங்களைச் சிருஷ்டியில் கொண்டுவர புதிய சத்திய நிலைகளைச் சிருஷ்டியில் ஏற்படுத்தும் சக்தி பராசக்தியினுடையது. சச்சிதானந்தமாகப் பரம்பொருள் பராசக்தியில் வெளிப்படுகிறது.
 
ஞானிகள் உலகத்தை மாயையாகவும், ஆன்மாவைப் பிரம்மமாகவும் கண்டார்கள். பிரம்மம்-மாயை என்பது தத்துவம். ஞான யோகம் சித்தித்த காலத்தில் ஞானி மாயையாகத் தான் கண்ட உலகத்தை பிரகிருதி என அறிகிறான். முதலில் பிரம்மமாகக் காட்சியளித்தது இப்பொழுது புருஷனாகத் தென்படுகிறது. இதைப் புருஷப்பிரகிருதி என்பார்கள். சிருஷ்டியின் ஆதியில் பிரகிருதி, சக்தியாக இருக்கின்றாள். புருஷன் அவளை ஆளும் ஈஸ்வரனாக இருக்கின்றான். ஈஸ்வர-சக்தி என்பது தத்துவம். நம்மிடையே அவதரித்த அன்னை என நாம் அறிந்த அந்தத் தெய்வமே ஈஸ்வரன் உடனுள்ள சக்தி; புருஷனோடு உறையும் பிரகிருதி என்கிறார் பகவான். பிரபஞ்சத்தின்கண் நாம் செயல்களாக அறிபவை அனைத்தும் பரமனுடன் அவள் புரியும் லீலைகளே என்கிறார். நம் வாழ்வில் பல புதிர்களை நாம் காண்பதுண்டு. கால் கட்டைவிரலால் படம் எழுதுபவருண்டு. கண்பார்வையற்றும், காது கேட்காமலுள்ளவர் உலகப் பிரசித்தி பெற்று, உலகம் சுற்றி வந்து உபதேசம் செய்வதுண்டு. 13 இலக்கமுள்ள எண்ணை, பத்து இலக்கமுள்ள மற்றொரு எண்ணால் பெருக்கி உடனே விடை சொல்பவருண்டு. இது போன்று நடக்கும் புதிர்களனைத்தும் அன்னையால் வெளிப்படுத்தப்பட்டவை என நாம் அறிய வேண்டும். அனந்த ஜீவியத்திலுறையும் அன்னை நிகழ்த்தும் அற்புதங்களே அவை. இலட்சக்கணக்கான செயல்கள் சிருஷ்டியில் புறப்பட்டு பரமனை அணுகி பதம் பணிந்து நிற்கின்றன. அவற்றுள் சிலவற்றை பரமன் அனுமதிக்கின்றான். அவை அன்னை உள்ளத்தின் ஆனந்த ஊற்றில் தோன்றிச் செயலாக வெளிப்படுகின்றன. அவையன்றி வேறு செயலில்லை. அன்னைக்குப் புறம்பாக அசைவது ஒன்றில்லை.
பிரபஞ்சம் செயல்பட சக்தி தேவை. அதை இயக்குவது மஹாசக்தி என்கிறார். பராசக்தி பிரபஞ்சத்தால் மஹாசக்தி மூலமே இயங்குகிறாள். இது அன்னையின் சக்தி அடுத்த நிலையில் செயல்படுவதாகும். சிருஷ்டியில் அன்னைக்குரிய கடமை இதுவன்று. எனினும் சிருஷ்டியின் இலட்சியத்தைப் பூர்த்தி செய்ய தாம் பிரபஞ்சத்தில் மனித உருவில் அவதரித்து, மனித வாழ்வின் கோரங்களுக்குத் தம்மை உட்படுத்திக்கொண்டு, சிருஷ்டிக்காகத் தம்மை அழித்துக்கொண்டு, சர்வ பரித்தியாகத்தின் சிகரமாக இருப்பது என அன்னை முடிவெடுத்துச் செயல்படுகிறார். உலகத்தை உய்விக்க, தெய்வம் தன்னை நிர்மூலமாக்கிக் கொள்ளும் கருணை வெளிப்பாடு என்று இதனை சொல்வார்கள். தாமே அவதாரமாகியும், தெய்வங்கள் மூலமாகவும், விபூதிகள் மூலமாகவும் அன்னை, மனித வாழ்வை தெய்வ வாழ்வை நோக்கி நடத்துகிறார் என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.
 
இடையறாத சூரிய ஜோதி நிறைந்த உலகம் முனிவருடைய மனம் என்பது வேதத்தில் காணும் வர்ணனை. தழல் நிறைந்த பெருமின்னல் பிரவாகம் போன்றது ரிஷியின் மனம். முனிவர் சிந்தனை செய்ய எண்ணங்கள் தேவையில்லை. எண்ணமற்ற கருத்து அவர் மனத்தில் இயல்பாகத் தோன்றும். ரிஷியின் நிலை அதைவிட உயர்ந்தது. எண்ணங்களைத் திருஷ்டியிலே காண்பவர் ரிஷி. அடுத்த உயர்ந்த நிலை யோகிக்குரியது. (Supramental) சத்தியஜீவியத்துடன் ஓரளவு நேரடியான தொடர்புள்ள லோகம் யோகிக்கு உரிய லோகம்.
சத்தியம் சக்தியுடன் செயல்படும் இடம் அது. சத்தியமே நேரடித் திருஷ்டியாகக் கிடைக்கும் இடம் அது. சத்தியம் எண்ணமாகவும், உணர்வாகவும், செயலாகவும் உற்பத்தியாகும் நிலை யோகியின் மனநிலை. தெய்வ லோகம் அதற்கு மேல் உள்ளது. உலகைச் சிருஷ்டித்து, காத்து, அழிக்கும் திறனுடைய தெய்வங்களாகிய பிரம்மா, சிவன், விஷ்ணு உறையும் லோகம். அதற்கும் அடுத்த உலகமாகிய சத்தியஜீவியத்திற்கும் இடையில் பொன்னாலான மூடி ஒன்றுளது. மூடியைத் தாண்டிச் சென்றால் சத்தியஜீவ லோகம். தெய்வ லோகம் வரை தொடரும் இருட்டு, இந்த லோகத்திலில்லை. பொன்னொளிக்குரிய உலகம் இது. இதுவே அன்னையின் பிறப்பிடம். அறியாமை, துன்பம், இருள், மரணம், மூப்பு, நோய் மண்டியது மனிதனுடைய வாழ்வு. பொன்னொளியை விட்டு, மனிதனை நாடி, அவனுடைய வாழ்வின் இருளை விரும்பி ஏற்று, மனித அவதாரம் எடுத்தவர் அன்னை. தெய்வத் தாய்மையின் பாங்கு இது. அரசிளங்குமரன் நாடகத்தில் பிச்சைக்காரனாக நடிப்பது போன்றது அன்னையின் அவதாரம்.
 
தாம் சிருஷ்டித்த உலகத்தை அன்னை தெய்வங்கள் மூலமாகவும், விபூதிகள் மூலமாகவும் நடத்துகின்றார். அத்துடன் உலகச் சுபீட்சத்திற்குத் தேவையான ஞானம், வீரம், எழில், திறமை என்ற தம்முடைய நான்கு அம்சங்களை உலகத்தின் சூழலில் இருத்தி, அதன் மூலமாக உலகை நடத்துகிறார்.
 
சமூகம் தான் பெற்ற அனுபவத்தை அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க பள்ளிக்கூடங்களை ஆரம்பிக்கின்றது. மேலும் உயர்ந்த சமூகத்தில் பள்ளியில் சொல்லிக் கொடுப்பதைப் பெற்றோரே வீட்டில் குழந்தைகட்குப் போதிக்கின்றனர். சமூகம் தொடர்ந்து உயர்வு பெற்றால் கல்விச் சாதனங்களான TV, ரேடியோ வீட்டிற்கே வந்துவிடுகின்றன. பெருநகரங்களில் வாழ்வோர்க்கு நகர வாழ்க்கையே இழை இழையாகக் கல்வியை அனுதினமும் அளிக்கின்றது. நகரத்தின் சூழலில் கல்வி கரைந்து கலந்துள்ளது. நகரம் ஒரு சர்வகலாசாலையாகச் செயல்படுகிறது. அன்னை தம் நான்கு அம்சங்களான ஞானம், வீரம், எழில், திறமை ஆகியவற்றைப் பிரபஞ்சத்தின் சூழலில் பொருத்தி, உலகை அதன் மூலம் நடத்துகிறார். அதனால் திருப்தி அடையாத அன்னை தாமே உலகில் அவதரித்து சுமார் 100 ஆண்டு காலம் அந்த நான்கு அம்சங்களை நேரடியாக மனித வாழ்வில் செயல்படுத்தினார். அவர் சமாதியடைந்த பின்னரும் அந்நான்கு அம்சங்கள் சூட்சும உலகிலிருந்து முழுமையாகச் செயல்படுவதைக் காணலாம். பயத்திற்கே சொந்தமான பெண் ஒருத்திக்கு அடிக்கடி பயம் பெருகி பீதியாவதுண்டு. அவர் ஒரு சமயம் சமாதிக்கு வந்தார். அன்னையை அடக்கம் செய்த இடத்தை தரிசனம் செய்யும் நோக்கோடு அவர் வரவில்லை. தம் தங்கையைச் சந்திக்க சமாதியை இடம் குறிப்பிட்டு, அதற்காக அங்கு வந்தார். வந்த நேரம் சமாதி தரிசனம் செய்தார். எப்பொழுதும் தன்னைத் திரையாக சூழ்ந்துள்ள பயத்தைக் காணாமல் திகைத்தார். பயம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. சற்று நேரத்தில் பயம் அழிந்தது; ஓரளவு தைரியம் பிறந்தது. தைரியம் என்பது அவருக்குப் பழக்கமில்லாத உணர்வு. தைரியம் சிறந்து சந்தோஷமாக மலர்ந்தது; அவர் அனுபவித்தறியாத உணர்வு. அதை அன்னை கொடுப்பார் என்றும் அறியாதவர். அதற்காகப் பிரார்த்தனை செய்யவும் இல்லை. உலகத்தின் சூழலில் அன்னை தன் நான்கு அம்சங்களையும் இதுபோல் செயல்படுத்துகிறார்.
 
வாழ்வின் அடிப்படை உடலும், அது செய்யும் காரியங்களும் ஆகும். திறமையோடு காரியங்களைச் செய்யும் உணர்வின் அம்சம் மஹாசரஸ்வதி. அமைதியும், சுமுகமும் நிறைந்து, அழகை வளர்க்கும் நிலைக்குத் தலைவியாக அமையும் அம்சம் மஹாலக்ஷ்மி. வீரம் நிறைந்த வெற்றிச் செயலைக் குவிப்பது மஹாகாளி. இவற்றுக்கெல்லாம் சிகரமாக அமைவது ஞானம். ஞானம் தேஜஸ் நிறைந்தது. கருணைவாதியின் ஞானமே கடவுளின் ஞானம். சாந்தம் திளைக்கும் ஞானம் உலகம் உய்விக்கப் பாடுபடும் என்பதால், அத்தகைய விவேகத்திற்கு அளவுகடந்த சாந்தம் தேவை. அளவுகடந்த கருணையும், அனைவரும் வணங்கும் தேஜஸும், சாந்தம் நிறைந்த கடாட்சமும், உலகை உணரும் விவேகமும், சிருஷ்டியைக் கடந்த நிதானமும் உள்ள முதல் அம்சத்தை மஹேஸ்வரி எனவும், பட்டமகிஷி மஹேஸ்வரி எனவும் பகவான் விவரிக்கின்றார்.
 
ஒளியால் மிளிரும் வலிமையும், அடக்க முடியாத ஆர்வம் செறிந்த வீரமும், உலகை ஆட்டிவைக்கும் சக்தியும், தன்னிச்சையாக எழுந்து தானே தன்னைப் பூர்த்தி செய்துகொள்ளும் வீரமும், பார்த்தமாத்திரத்தில் பணியும் பார்வையும், க்ஷணத்தில் செயல்படும் ஆவேசமும் மஹாகாளிக்குரியது.
 
செல்வத்தின் தெய்வமாக உலகம் போற்றும் மஹாலக்ஷ்மி அம்சம் மூன்றாவது. ஆன்மீக அடிப்படையில் மஹாலக்ஷ்மியை பகவான் வர்ணிக்கும் முறை சற்று மாறியுள்ளது. இனிமையும், அற்புதமும், சுமுகம் செறிந்த ஆழ்ந்த எழிலின் இரகஸ்யமும், சூட்சும வளமும், கலைநுணுக்கமும், மனித ஜீவனின் இருதயத்தைக் கொள்ளை கொள்ளும் ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.
 
சரஸ்வதியை உலகம் கலைமகளாக அறியும். வழக்கம்போல் பகவான் அதையும் சற்று மாற்றி விவரிக்கின்றார். ஆழ்ந்த நுண்ணறிவு அமைதியாகச் செயல்பட்டு, குறைவற்ற நிறைவை பூரணச் சிறப்புடன், செய்யும் தொழிலில் நிறைவேற்றும் அன்னையின் அம்சம் மஹாசரஸ்வதி என்பது பகவான் வர்ணனையாகும்.
 
மஹேஸ்வரி:
 
சர்க்கார், சட்டத்தின் மூலம் ஒழுங்கை நிலைநிறுத்துகிறது. சட்டத்திற்கு எல்லையுண்டு. நியாயம் அதைவிட உயர்ந்தது. குடும்பத்தைக் கவனிக்காத மனிதனைச் சட்டம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் சமூகம் செயல்பட முடியும். சமூகம் சர்க்காரைவிட இவ்விஷயத்தில் உயர்ந்தது. நாலு பேர் திரண்டு வந்து குடும்பத்தைப் புறக்கணிப்பவரை நியாயம் எடுத்துச் சொல்லி கட்டுப்படுத்த முடியும். அவர்களை மீறி அவரால் செயல்பட முடியாது. சட்டம் செயலற்ற இடத்தில் நியாயம் செயல்படும். தன் குழந்தை மீது பிரியமில்லாத தாயார், தகப்பனார் உண்டு. சட்டத்திற்கோ, நியாயத்திற்கோ இவர்கள் கட்டுப்படமாட்டார்கள். நியாயத்தை எடுத்துச் சொன்னால் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள். குழந்தையின் தேவைகளைத் தவறாமல் பூர்த்தி செய்வார்கள். ஆனால் குழந்தை அன்பிற்கு ஏங்குகிறது. தாயின் மடியில் இருக்க விழைகிறது. கருணையுள்ளம் உள்ளவர் ஒருவர் அத்தாயின் இதயத்தில் அன்பை உற்பத்தி செய்ய முடிவதுண்டு. தாயிடம் பெறாத அன்பை அக்குழந்தை கருணை வடிவான மற்றவரிடம் பெற வாய்ப்புண்டு. உலகம் சட்டத்திற்கும், நியாயத்திற்கும், கருணைக்கும் கட்டுப்பட்டு இயங்குவது. இதற்கடுத்த நிலைகளும் உலகத்திற்குண்டு. அவை அருளால் மட்டும் இயங்குபவை. அன்னை அந்நிலையில் செயல்படுகிறார். மற்ற அம்சங்களைக் காட்டிலும் அதிகத் தாய்மையுணர்வையுடையவர் மஹேஸ்வரி. அறிவிலிகளும், ராட்சசர்களும், பிசாசுகளும், தீய சக்திகளும் நிரம்பியது உலகம். அவரைக் கண்டு அஞ்சி நாம் ஒதுங்குகிறோம். மஹேஸ்வரி "அவர்களும் என் குழந்தைகள் அல்லவா?"என நினைத்து, அவர்களுக்கும் தம் தாய்மைப் பரிவை அளிக்கின்றார்.
காரிலிருந்து அன்னை இறங்கியபொழுது ஒரு கருநாகம் அவரை நோக்கி தாழம்பூச் செடிகளிலிருந்து புறப்பட்டு விரைந்து வந்தது. அன்னை நாகத்தைப் பாம்பாகக் கருதவில்லை; அஞ்சி ஒதுங்கவில்லை; எதிர்கொண்டார்; புன்முறுவல் செய்தார்; "என்ன வேண்டும்?" என்று நாகத்தைப் பரிவுடன் கேட்டார். நாகம் படம் எடுத்து, தரையில் தன் தலையால் அடித்து வணக்கம் செய்து, அடங்கி, சில நிமிஷம் அயர்ந்து நின்று, வேகமாகத் திரும்பிச் சென்றது.
 
மஹேஸ்வரியின் ஞானம், பரமனின் ஞானம். புத்திக்குச் சிகரம் உண்டு. சிகரத்தின் எல்லையைக் கடந்தால், எல்லையற்ற பரவெளி உண்டு. அவருக்கும் மேலேயுள்ள லோகங்களும் உண்டு. அங்கு உறையும் ஞானம் அற்புதம் நிறைந்தது. குறுகிய உலகத்திற்கு எதிரான உலகம் அது. அனந்தத்தின் இருப்பிடம் அது. காலத்தைக் கடந்த உலகம் அவ்வுலகம். அதனால் அளவிறந்த சக்தியுறையும் இடம் அது. மஹேஸ்வரி விவேகத்தின் உற்பத்தி ஸ்தானம். உலகின் சர்வ ஜீவராசிகளின் சுபாவங்களை அவர் அறிவார். சுபாவம் என்பது மனிதனுடன் பிறந்தது. சுபாவமே அவனுடைய சூட்சும உருவம். இறைவன் மனிதனிடம் செயல்படும்பொழுது அவனுடைய சுபாவத்தை ஒட்டியே செல்கிறார். சுபாவத்தை மீறிச் செயல்படுவது மஹேஸ்வரிக்கு உரிய பாணியில்லை. ஞானம் உயர்ந்தது என்பதால், அறிவற்றவர்களுக்கு ஞானத்தை வலியுறுத்திக் கொடுப்பது அவர் வழக்கமன்று.
நிதானமாகச் செயல்படுபவரை அவசரமாகச் செயல்படும்படி நிர்ப்பந்தப்படுத்தினால் அவர் செயலற்றுவிடுவார். அவசரக்காரனை நிதானமாகச் செயல்படும்படிச் சொன்னால் அவனுக்கு உயிர் போகும். அவரவர் சுபாவத்திற்கு ஏற்ற அளவில் ஞானத்தை அளிப்பதே மஹேஸ்வரியின் பாங்கு. மனிதனுக்குச் சுபாவம் இருப்பதுபோல் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு சக்தியுண்டு. அந்நிகழ்ச்சி உருப்பெற்ற வரலாற்றைப் பொருத்தது அது. அதன் சக்தியை நிர்ணயிப்பது அதன் வரலாறு ஆகும். மனித சுபாவத்தை ஏற்றுக்கொள்ளும் மஹேஸ்வரி, நிகழ்ச்சிகளில் பொதிந்துள்ள சக்தியையும் ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப செயல்படுகிறார். அதனால் அவர் செயல்கள் அமைதியாகவும், நிதானமாகவும், சமத்துவத்துடனும் அமைகின்றன.
 
பரமனின் இஷ்டமே அவரது சட்டம். அதனால், பாரபட்சத்திற்கு அங்கு இடம் இல்லை. தம்மை நாடும் மனிதர்களின் நிலைக்கேற்ப, சுபாவத்திற்கேற்ப, பரமனின் இஷ்டப்படி அவர்களை ஏற்றுக் கருணை செய்வது மஹேஸ்வரியின் வழக்கம். பலரை இதுபோல் உயர்த்துவது உண்டு. சிலரை இருளில் தள்ளுவதும் உண்டு. தண்டனையாக இதை அவர் செய்வதில்லை. அவரவர் ஆன்மாவின் விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்கிறார். விவேகிகள் அவரை நாடி அனுக்கிரஹம் பெற வந்தால், ஜோதிமயமான விவேகத்தைப் பரிசாக அவர்களுக்கு மஹேஸ்வரி அளிக்கிறார். ஞானதிருஷ்டியுள்ளவரைத் தம் ஞானத்தோடு ஐக்கியப் படுத்திக்கொள்கிறார். தீய சக்திகள் அவரை நாடி வந்தால், அவர்களுடைய செயலின் பலனை அவரே அனுபவிக்க அனுமதிப்பார். மடமையும், இருளும் நிரம்பியவர்களை அவரவர் நிலைக்கேற்ப வழிகாட்டுவார்.
 
மஹேஸ்வரியின் இலட்சியம் சத்தியம். ஞானமே அவளுக்குத் திறனளிக்கிறது. மனித ஆன்மாவையும், சுபாவத்தையும் தெய்வீகச் சத்தியத்தின் கருவிகளாக்குவதே மஹேஸ்வரியின் இலட்சியம்.

மஹாகாளி:
 
ஆக்கல், அழித்தல், காத்தல் தொழில்களை அன்னை பூவுலகத்தில் நடத்த தெய்வங்களைத் துணை கொண்டு செயல்படுகின்றார். ஞானமும், அமைதியும், திறமையும் ஆக்கல் தொழிலுக்குத் தேவை என்பதை நாம் அறிவோம். வீரமும், வீராவேசமும் ஆக்கலுக்குத் தேவை என்பதை நாம் அதுபோல் உணருவதில்லை. அழித்தலும், ஆக்கலுக்குத் தேவையானதே. பல காரியங்களை புதியதாகச் செய்யும்பொழுது அவை நிறைவேறுகின்றன. ஆனால் சில காரியங்களைப் புதியதாகச் செய்யும்பொழுது வேறு சிலவற்றை அழிக்க வேண்டும். அப்படி அழிபவை எதிர்ப்பில்லாமல் அழிவதுண்டு. கடும் எதிர்ப்புக் காண்பிப்பதும் உண்டு. மேல்நாட்டுப் படிப்பு நம் நாட்டில் ஏற்பட்டபொழுது நம் நாட்டுப் பாடமுறை குரல் கொடுத்து அழத் தெம்பில்லாமல் அழிந்துவிட்டது. படிப்பும், நாகரிகமும், அரசியலும் வளரும்பொழுது, ஜாதி, மதம் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றது. எதிர்ப்பை அழிப்பது ஆக்கலுக்கு அவசியம். தானே எதிர்ப்பு அழிய நூறு ஆண்டுகளாகும். முனைந்து நின்று ஆவேசமாக அழித்தால் குறுகிய காலத்தில் அழிக்கலாம். உலகில் புது சிருஷ்டி ஏற்படும்பொழுது எதிர்ப்புத் தெரிவிக்கும் பழைய அமைப்பை அழிக்க ஆவேசமான சக்தி தேவை. எதிர்ப்பு இல்லாத காலத்தும் ஒரு பெரிய காரியத்தை நிர்மாணிக்க அதிக அளவு சக்தி தேவை. அது ஆவேசம் நிறைந்ததானால் காரியம் எளிதில் முடியும். ஆவேசம் பொருந்திய சக்தியை அளவுகடந்து கொடுத்து ஆயிரம் ஆண்டுகளில் பூர்த்தி செய்வதை க்ஷணத்தில் முடிப்பது மஹாகாளியின் அருள் நிறைந்த செயலாகும். ஆனந்தத்திற்கு ஜீவனளித்து, செறிவையும், நிறைவையும் அளிப்பது அவ்வீரம். ஞானத்திற்குத் தேவையான வலிமையை அளிப்பதும் அதுவே. அழகுக்கு உயர்வை அளித்து, அதன் சக்தியைப் பெருக்குவதும் அவ்வாவேசமே.
 
ஞானம் நிதானமாகச் செயல்படுவது. அதன் தன்மை பரந்து விரிவதாகும். ஆவேசத்தின் தன்மை வேகம், எழுச்சியாகும். வேகமும், செறிவும் நிறைந்திருப்பதால்தான் வீரம் க்ஷணத்தில் செயல்படுகிறது. ரௌத்திரத்தின் வேகம் அழிக்கமட்டும் வல்லது. காளியின் வேகம் அழிப்பதன் மூலம் ஆக்க வல்லது என்பதால் அதன் செறிவு ஆனந்த மயமானது. ஆனந்தம் சிருஷ்டியின் உற்பத்தி ஸ்தானம். மஹாகாளியின் வீராவேசம் புதியவற்றைச் சிருஷ்டிப்பதால் வெறும் உயர்வை மட்டும் நாடினால் அதற்குப் போதாது. உயர்வில் உயர்ந்தவற்றையும், உன்னதத்தில் சிறந்தவற்றையும் ஏற்று, அகன்ற குறிக்கோளை அடைய முற்படுதல் மஹாகாளியின் இலட்சணம்.
 
இத்திறமைகள் மஹாகாளியிடம் முயன்று பெறும் முக்திகளாகக் காணப்படவில்லை. பிறப்பில் அமைந்த சுபாவமாகவே இருக்கின்றன. செயல் முன்னும், இடைவெளிவிட்டு, பலன் பின்னும் அமைந்துள்ளது உலக இயல்பு. மஹாகாளியின் செயல்களுக்கும், பலனுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவு. காலத்தின் வேகத்தைக் கடந்து மனோ வேகத்தைத் தாண்டும் தன்மையுடையவை அவள் செயல்கள் என்பதால் இடைவெளியின்றி பலன் ஏற்படுகிறது. செயலும், பலனும் சேர்ந்துள்ள விரைவு மஹாகாளிக்குச் சொந்தமானது. காமிராவில் படம் எடுத்து, அதை ஸ்டூடியோவில் கொடுத்து போட்டோவாக மாற்றுவது பழைய வழக்கம். புதிய காமிராக்கள் சிலவற்றில் படம் எடுத்தால் போட்டோவாகவே விழும். தடைகளை அழிப்பது வலிமை. செயல்களை முடிப்பது திறமை. வ-மையும், திறமையும் தனித்தனியே செயல்படும்பொழுது முதலில் தடைகளை அழித்து, பிறகு செயலைப் பூர்த்தி செய்கிறோம். மஹாகாளியின் வலிமை, திறமை நிறைந்தது என்பதால் ஒரே மூச்சில் அழித்து, பலனை உற்பத்தி செய்கிறது அவள் தன்மை. பெருகிவரும் காளியின் வலிமை முதிர்ச்சியடையுமுன் தடைகளை அழிக்கிறது. முதிர்ச்சி அடைந்த நேரம் திறமையை வெளிப்படுத்துகிறது. அந்நேரம் பலனைக் கொடுக்கிறது. பலன் ஏற்பட்ட நேரம் அழகு வெளிப்படுகிறது. எனவேதான் அவள் வேகம் சூறாவளியின் தன்மையுடையதாகிறது. அழிக்க வேண்டியவற்றை மஹாகாளி இயல்பாக அழிப்பதும் அதனால்தான். அவளது வேகம் பேரிடியாக மேலே விழுந்து தடைகளை வேருடன் களைகிறது. சேனை முழுவதும் ஒரே சமயத்தில் தாக்குவது போன்றது அவளது எதிர்ப்பு.
 
அசுரன் எவரையும் ஏமாற்றுபவன். பரமசிவனைப் பல முறை ஏமாற்றிய அசுரன் மஹாகாளி முன்பு பீதி கொண்டு நிற்கிறான். எந்தச் சிறு அளவில் அஞ்ஞானமிருந்தாலும் அசுரனுக்கு அடிபணிய வேண்டி வரும். மஹாகாளி அஞ்ஞானம் சிறிதும் இல்லாத சத்தியஜீவ லோகத்தைச் சேர்ந்தவள் என்பதால், அசுரனுக்கு அவள் பார்வை அடிவயிற்றைக் கலக்கும். இறைவனின் எதிரிகள் இவளுக்கு எதிரி. ஈவு, இரக்கமின்றி அவர்களை நிர்மூலமாக்குவதில் மஹாகாளிக்கு நிகரில்லை.
 
உலக அரங்கில் போர் புரியும் தெய்வம் அவள். கொட்டும் போர் முரசும் மஹாகாளியைக் கொக்கரிக்கச் செய்யும். நிறைவிலுள்ள குறை, மஹாகாளியின் சொந்தச் சுபாவத்தைச் செயல்படுத்தச் செய்யும். விருப்பமில்லாதவர்க்கு விபரீதப் பலனை அளிப்பதும், கண்மூடித்தனமாகக் காலம் காலமாகச் செயல்படுபவரை கசக்கிப் பிழிவதும் தன் கடமையாக மஹாகாளி ஏற்றுக்கொண்டவையாகும். துரோகிகளை க்ஷணத்தில் சுட்டெரிப்பது அவள் கோபம். பொய்மையும், கெட்ட எண்ணமும் அவளிடம் பூரண அழிவைப் பரிசாகப் பெறுகின்றன. கெட்ட எண்ணம் என்ற நாகப்பாம்பிற்கு மஹாகாளி கருடனாகும்.
 
அன்னையின் நான்கு அம்சங்களுக்கும் தாய்மை உணர்வுண்டு. மஹாகாளியின் தாய்மை தீவிரமான உச்சக்கட்டத்தை எட்டியதாகும். மென்மையான கருணையை அவள் வெளிப்படுத்தினாலும், அதுவும் அவள் சுபாவத்தால் ஆவேசமடையும். அர்த்தமற்றவை அனந்தம். யோகத்தை மேற்கொண்டால் உலகமே அவனுக்கு எதிரி. அவனைச் சுற்றியுள்ள தடைகள் அவனை ஜடமாக்குகின்றன. அவனுக்கேற்ற சக்தி மஹாகாளியே. யுகாந்தர முயற்சியை இன்றே பூர்த்தி செய்பவள் அவள். சாதகன் காளியை அழைத்தால், தன்னுள் மஹாகாளிக்கு அனுமதியளித்தால், சிருஷ்டியின் தடைகளும், இறைவனின் எதிரிகளும் புயலில் சிக்கிய சருகுபோல் பறப்பார்கள்.
 
இன்றைய அரசியலில் ஜனாதிபதி பதவி சிகரமானது. ஆனால் உண்மையான அதிகாரம் பிரதமர் கையில்தான் இருக்கின்றது. அது போன்ற நிலைகள் வாழ்வில் பல உள்ளன. பெரிய சொத்து, வருமானம் இல்லை; பெரிய பதவி, அனைவரும் அடிபணிகின்றனர், ஆனால் அதற்குரிய அறிவில்லை. அதே போல் யோகி தன் தவப்பயனாகப் பலவற்றை அடையலாம்; சித்தி பரந்து விரிந்ததாகவும் இருக்கலாம்; தீவிரமானதாகவும் இருக்கும்; ஆனால் அவையனைத்தும் காளியின் கடாட்சமில்லை என்றால் வானுயரும் அக்னியின் பூரணச் செறிவையும், நிறைவையும் தன்னுட் கொண்ட ஆன்மீகம் ஆனந்தமாக இருக்காது. தவப்பயனையும் ஆனந்தத்தால் நிரப்புவது மஹாகாளியேயாகும்.
மஹாகாளியின் இலட்சியம் உயர்ந்தது. க்ஷணமும் தாமதமின்றி பூர்த்தியாவது. அவளுடைய பாதையில் சோம்பேறிகளுக்கு இடம் இல்லை. பொறுப்பற்றவர் அவரை அணுக முடியாது. கடமையைப் புறக்கணிப்பவரை மஹாகாளி புறக்கணிப்பாள். அன்னார் அவள் பாதையில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், அவர் மணிக்கட்டில் கொட்டு கொட்டென்று கொட்டி எழுப்புவாள். சோம்பித் திரிபவனையும், ஊர் சுற்றுபவனையும் வலிந்தணைந்து, வலியைப் பூரணமாக உணரச் செய்து, விழிப்புறச் செய்வது மஹாகாளியின் திருவிளையாடல்.
அவள் செயல்படும்பொழுது வெற்றி, தோல்வி என்ற இரு நிலைகள் இல்லை. வெற்றி அவள் பிறப்புரிமை. அவளருள் அனந்தத்தின் எல்லையை நம்மருகில் கொணரவல்லதாகும்.
 
வலிமையின் முழுமையில் ஆனந்தத்தின் நிறைவையும், அற்புதத்தின் எளிமையையும் கண்டு, தாய்மையின் கனிவில் தலைசிறந்த வன்மையைப் புகுத்தி, காலத்தின் முடிவை கையில் கொடுக்கும் அம்சம் மஹாகாளியின் அம்சமாகும்.
 
மஹாலக்ஷ்மி:
 
அன்னையின் மூன்றாம் அம்சம் மஹாலக்ஷ்மி. உயர்ந்த ஞானம் வழிகாட்டும். திறன் சேர்ந்த பிறகே பலன் தரும். வீரம் கம்பீரமானது; ஆவேசமானது; தடைகளை உடைத்து வழி ஏற்படுத்தும்; உயர்ந்த காரியங்களைப் பூர்த்தி செய்யும் சக்தியையும் அளிக்கும். ஆனால் ஞானமோ, வீரமோ தனித்தோ, இணைந்தோ சிருஷ்டியைப் பூர்த்தி செய்ய முடியாது. அப்பூர்த்தியை அடைய அமைதியும், சுமுகமும் தேவை. அமைதி நிலவி, சுமுகம் ஆட்சி செய்தால்தான் வீரத்திற்கும், ஞானத்திற்கும் பலன் ஏற்படும். சுமுகத்தின் உறைவிடமான அன்னை அம்சம் மஹாலக்ஷ்மி. ஞானம் உயர்ந்து நிற்பதால் பெரும்பாலோர் மஹேஸ்வரியை நாடுவது இல்லை. காளியின் கம்பீரத்தைக் கடுமையாக உணர்ந்து விலகுபவர்கள் அதிகம். மஹாலக்ஷ்மி அமைதியான அன்னை அம்சமாதலால் அனைவரும் அவளால் கவரப்படுகிறார்கள். பூர்த்தி பெற்ற காரியம் எழிலுடையதாக இருப்பதால் இவளை அன்னையின் எழில் அம்சமாகக் கருதுகிறார்கள். புற எழில் செழித்துப் பூரித்து, அக அழகான லாவண்யமாக மிளிருகிறது. மஹாலக்ஷ்மி அக அழகான லாவண்யத்தை தன் புற எழிலாகப் பெற்றிருக்கின்றாள். இதுவே அவளை நோக்கி உலகம் விரைந்து வரும் காரணம். மஹாலக்ஷ்மியின் அழகு ஆன்மீக அழகு என்பதால் மனிதர்கள் ஈர்க்கப்படுவது போல் மற்ற பொருள்களும், ஜீவராசிகளும் அவளால் கவரப்படுகின்றன.
 
மஹாகாளியின் ஆவேசம் நிறைந்த ஆனந்தம் மஹாலக்ஷ்மியால் அற்புதமாக மாற்றப்படுகிறது. அவளுடைய இனிமை மந்தஹாசம் பொருந்தியதால் மனித இதயம் அவளைக் கண்டு, தன்னை இழந்து, மயக்கமுறுகிறது. மஹாகாளியின் பிரகாசம் சூரிய வெப்பம் போன்றது. மஹாலக்ஷ்மியின் பொலிவு தண்ணிலவு சூரிய பிரகாசத்தையுடையது போன்றது. இனிமையும், மென்மையும் அளவிறந்து பெருக்கெடுக்கும் அற்புத ஊற்று மஹாலக்ஷ்மி.
 
ஆனந்தம் சிருஷ்டியின் அஸ்திவாரம். ஆனந்தத்தில் உற்பத்தி ஆகும் உலகம் தான் பூர்த்தியடையும் நேரத்தில் ஆனந்தத்தை அமைதியாக வெளிப்படுத்துவதை நாம் அழகு என அறிகிறோம். அதற்குரிய அன்னை அம்சம் மஹாலக்ஷ்மி. உச்சி முதல் உள்ளந்தாள் வரை அவள் ஆனந்தத்தின் பூரணச் செறிவாகும். அதனால் அவள் பாதங்கள் பதிந்த இடத்தில் ஆனந்தம் பெருக்கெடுக்கின்றது. ஆழங்காண முடியாத ஆனந்த அனுபவத்தை அவளருகில் வந்து, அவளைக் கண்டு, அவள் பார்வையின் பவித்திரத்தால் சூழப்பட்டு, புன்முறுவலின் இனிமையில் மலர்ந்து, ஆன்மா பெற்றுத் திளைக்கின்றது. காந்தமே அவள் கைகள். அவளுடைய மென்மையான சூட்சும உணர்வு மனதைப் புனிதப்படுத்துகிறது.
 
மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் இருந்தால் மற்றவைகளைப் பற்றி கவலையில்லை. சுத்தம் குறைவாக இருந்து சௌகரியம் இருந்தால், அசுத்தத்தைப் பொருட்படுத்தமாட்டான். சச்சரவு இருந்தாலும் எந்தக் காரியமும் தடையாகவில்லை எனில் சச்சரவை அழிக்க முயலமாட்டான். அடிப்படைத் தேவைகளான உணவு, வீடு, உடை போன்றவை குறைந்தால், குறையை நீக்க உடனடியாகச் செயல்படுவான். பொதுவாக இதுவே மனித சுபாவம்.
மஹாலக்ஷ்மி ஓரிடத்திற்கு வர அடிப்படைத் தேவைகள் இரண்டு: சுமுகம், சௌஜன்யம். அவையில்லாத இடத்திற்கு மஹாலக்ஷ்மி வருவது இல்லை; வந்தால் தங்குவதில்லை. வாழ்வும், மனமும், செயலும், சூழலும், ஆன்மாவும், அது அரவணைக்கும் அனைத்தும் சுமுகமாக உள்ள இடம் அவள் இயல்பாக விரும்பும் இடம். ஆகர்ஷண சக்தி உலகெங்கும் பரவியுள்ளது போல் அவள் சக்தி வியாபித்துள்ளது. மென்மையானது அவள் சூழல். தன்பால் மஹாலக்ஷ்மியை ஈர்க்க மனிதனால் எளிதில் முடியாது.
 
பெரிய உற்பத்தி சாலைகள் சிருஷ்டியின் ஆனந்தத்தின் பிரதிபலிப்பாகும். நளினமான நாட்டியமும், இனிமையான இசையும், அழகின் குரலை எதிரொலிப்பவையாகும். ஜனகரும், அசோகரும், நேருவும் உயர்ந்த ஆன்மா படைத்தவர்கள். அவர்களுடைய ஆன்மாக்கள் ஆற்றொழுக்காக அனந்தனை நோக்கிச் செல்லும் தன்மை உடையன. இத்தகைய சூழ்நிலைகளில் மஹாலக்ஷ்மி வலிய வந்து தன்னை முழுமையாகப் பகிர்ந்துகொள்வாள்.
 
வறுமையும், சிறுமையும், வறண்ட உள்ளங்களும், தங்கள் கடுமையை பரவிடும் பாழடைந்த மனித வாழ்வும் உலகில் உண்டு. அவள் வாராத இடங்கள் இவை. அவள் உள்ளே வர முடியாத வாழ்வு இது. உயர்ந்தவை விலக்கும் இடங்கள் இவை. அமைதி, அன்பு, சுமுகம், எழில் இத்தகைய இடங்களுக்கு வரத் தயங்கும். அவற்றின் உறைவிடமான மஹாலக்ஷ்மி எங்ஙனம் அங்கு வர முடியும். உயர்ந்த அன்பை நாடி வரும் மஹாலக்ஷ்மி, வருமுன் ‘அதனுள் கலப்பு உண்டா?’ என்று கணிப்பாள். உயர்ந்த அன்பு கோரத்தோடு கலந்து இருப்பதுண்டு. சிறுமையின் நிழலில் அது இருப்பதுண்டு. அது போன்ற சூழ்நிலையை அவள் அறவே ஒதுக்குவாள். தன் பொக்கிஷத்தை அங்கெல்லாம் அவள் திறப்பதே இல்லை. விரைந்து விலகும் நேரத்திற்காகக் காத்திருப்பாள்.
 
துரோகத்தாலும், பேராசையாலும் மனிதன் வெற்றி பெறுவது உண்டு. அவற்றால் தோல்வியடைபவருண்டு. தோல்வி பெற்று பொறாமையடைபவருண்டு; வெறுப்புக்கு ஆளாவதுண்டு. சுயநலத்தில் தோய்ந்துள்ள மனிதருண்டு. வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் இத்தகைய குணங்கள் செயல்படும் இடம் மஹாலக்ஷ்மிக்கு விலக்கு.
 
உயர்ந்த பக்தி ரஜோ குணத்துடன் கலந்திருப்பதுண்டு. பவித்திரம் தமோ குணத்தின் அணைப்பில் வளர்வதுண்டு; நன்றி மறந்த நிலை மலிந்திருப்பதுண்டு. அவளுக்கு இவை கொடிய விஷம் போன்றவை. வலிந்து செயல்பட்டு இந்நிலையை மாற்ற முயல்வது அவளியல்பு அன்று. கொடியவற்றை விலக்கும்வரை தன் கண்மூடி காத்திருப்பாள். அவை விலகவில்லை என்றால்தான் விலகுவாள். அவற்றை விலக்கினால், விலக்கிய இடத்தை அமிர்தத்தால் நிரப்புவாள். விரதமும், நோன்பும் அவளுக்கு விலக்கு. இதயத்தின் எழுச்சியையும், ஆன்மாவின் ஆர்வத்தையும், வாழ்வின் அழகையும் அழிப்பவை கடுமையான விரதங்கள். அவள் அரவணைப்பு அன்பாலும், அழகாலும் நிறைந்தது.
 
வாழ்வு நம் நிலையிலும், கலை தெய்வ நிலையிலும் உள்ளன. வாழ்வின் வளங்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்தி, கலையாக மாற்றும் சிருஷ்டித் திறன் அவளுக்குரியது. நம் அன்றாட வாழ்வு ஜீவனற்றது. புனித காவியமான செயல்கள் அநேகர் வாழ்வில் ஒரு முறையும் உதயமாகாமல் போவதுண்டு. அவள் வரும் நேரம் வந்தால், அதற்குரிய சூழ்நிலை இருந்தால், ஜீவனற்ற சிறு காரியங்களும் கவியின் காவியப் பெருக்காகும். அது அன்றாடம் நடக்கும் அனைத்துச் செயல்களிலும் விரவியிருக்கும். செல்வங்களும், செல்வ வளங்களும் அவளருகே குவியும். எளியவை அவளால் எழில் நிறைந்ததாக மாறும். பரம்பொருளின் வரப்பிரசாதத்தைப் பாமரனுக்கும் வழங்குபவள் அவள்.
 
பக்தனின் இதயம் அவளுக்குரியது. அவளை அங்குப் பிரதிஷ்டை செய்தால், அங்குள்ள ஞானத்தை அற்புதச் சிகரத்திற்கு அழைத்துச் செல்வாள். உயர்ந்த புதிர்களை விண்டுரைப்பாள். ஞானத்தைக் கடந்த பேரானந்தப் பெருக்கை உற்பத்தி செய்வாள். பக்தியின் சிறப்புக்கு அவள் காந்தம். வலிமைக்கும், திறமைக்கும் முறைமை அளிப்பவள் அவள். சிறப்புக்கே உரிய கவர்ச்சியை அளிப்பவளும் அவளே.

மஹாசரஸ்வதி:
 
ஞானத்தால் மலர்ந்து, ஆவேசத்தால் உயர்ந்து, அமைதியான சுமுகத்தால் பூர்த்தி பெற்ற சிருஷ்டி, பூரணம் பெற மேலும் ஓர் அம்சம் தேவை. அது செயலாற்றும் திறன். ஆயிரம் சிறு காரியங்களில் காணும் நுணுக்கம், விளக்கமாகத் தேவைப்பட்ட விவரங்கள் தவறாது சேர்ந்து அந்தப் பூரணத்தை அளிக்கின்றது. ஆயிரம் கோடியில் தீட்டப்பட்ட நெய்வேலி திட்டத்திற்கு ஞானமான அடிப்படையாக இருப்பது தொழில் நுணுக்கம். பிரம்மாண்டமான பள்ளங்களை அசுர வேகத்தில் தோண்டி, அலை அலையாக எழுந்து வரும் எதிர்ப்புகளைத் தகர்த்து, திட்டத்தை நிர்மாணிக்கும் திறன் அடுத்து தேவைப்படுகிறது.எழில் நிறைந்த நகர்ப்புறமும், தொழில் அமைதியும், சுமுக உறவுமே செயலைப் பூர்த்தி செய்கிறது. இத்தனையும் முடித்தபின், ஒரு நாள் வேலை பூரணமடைய டவுன் பஸ் குறித்த நேரத்தில் வர வேண்டும்; டைப் செய்த கடிதங்கள் தவறின்றி இருக்க வேண்டும்; குடியிருப்பில் பைப்பில் நீர் வர வேண்டும்; ஊழியரின் குழந்தைகளுக்குக் கட்டிய பள்ளியில் கல்வியின் தரம் சிறப்பாக இருக்க வேண்டும்; பள்ளியில் இருந்து வந்த குழந்தை பாடும் பாட்டு கேட்போர் மனதை நிறைவு செய்ய வேண்டும்; லீக்கோ விற்கும் டெப்போவில் தாமதமின்றி சப்ளை வேண்டும்; இந்த ஆயிரம் சிறு விஷயங்கள் பூரணமடைந்த பின்னரே திட்டம் முழுமை பெறுகிறது. அதற்குத் தேவையானது செயலாற்றும் திறனாகும்.
 
ஒழுங்குணர்ச்சி உச்சக்கட்டத்திற்கு உயர வேண்டும். ஞானத்திற்கு உரியவர் மஹேஸ்வரி. ஆவேசம் காளியினுடையது. அமைதியை நிலைநிறுத்துவது மஹாலக்ஷ்மி. ஒழுங்குணர்ச்சியையும், செயலாற்றும் திறனையும் அளிப்பது மஹாசரஸ்வதி. நால்வரில் இளையவள் சரஸ்வதி. இயற்கையின் எழில் பலனாக மாற இன்றியமையாதது சரஸ்வதியின் அம்சம். உலகச் சக்திக்கு உருவம் அளிப்பது மஹேஸ்வரியின் ஞானம். அதற்குத் திறனையும், வேகத்தையும் அளிப்பது மஹாகாளி. அவற்றுக்கு நயத்தையும், இனிமையையும் சேர்ப்பது மஹாலக்ஷ்மி. நடைமுறைக் காரியங்களை நயம்படச் சிறக்க அவற்றைச் சேர்த்துக் கோத்து, முறைப்படுத்தி, நெறிபடுத்துபவள் மஹாசரஸ்வதி. சிறியது என்று அவள் விலக்கியது எதுவுமில்லை. முடியாதது என்று எதையும் ஒதுக்குவதில்லை. தளராது, அயராது, விழிப்புடன், ஒவ்வொரு சிறு செயலையும் கூர்ந்து நோக்கி, பொக்கைகளை நிரப்பி, வளைவுகளை நிமிர்த்தி, எங்கும் எதுவும் குறைவற இருக்கும்படிச் செய்வது அவள் கடமை. அவள் பொறுமைக்கு முடிவில்லாதது போல், அவள் பொறுப்புக்கும் முடிவு இல்லை.
 
மனித சுபாவத்தைத் தெய்வச் சுபாவமாக்கும் கடமையை ஏற்றுக் கொண்டவள் மஹாசரஸ்வதி. அதுவே அவசரம், பொறுமையாக மாறும் திருவுருமாற்றம். காட்டைத் திருத்தி கழனியாக்குவதும், கடலை நிரப்பி மேடாக்குவதும் இவள் கடமை. ஏற்ற வேலையை ஏற்றமிகும்படிச் செய்ய யுகாந்தரக் காலப் பொறுமையை இயல்பாக அவள் மேற்கொள்வது மனித சுபாவத்திற்கு விளங்காத ஒன்று.
 
கலையும், தொழிலும் கலைமகளின் இராஜ்யம். செய்யும் தொழிலின் சிறப்பறியும் உணர்வும், அவற்றின் உள்ளுறை இரகஸ்யங்களும், அவள் விரும்பிக் கொடுப்பன; அவள் பார்வையில் பட்டு, அவள் கவனத்திற்குரியவர்க்கு அவள் அளிக்கும் அன்புப்பிரசாதம். கலையறிவுக்குரிய பொறுமையும், சிறந்த சிறப்புக்குரிய உணர்வுபூர்வமான விரல்களும் அவள் கடாட்சத்தால் உற்பத்தி ஆகுபவை. அயராது உழைப்பவனுக்கும், நுணுக்கமாகச் செயல்படுபவனுக்கும், நீண்ட நெடிய பிரயாணத்தை இலட்சியமாகக் கொண்ட தலைவனுக்கும், புதிய சகாப்தத்தை நிர்மாணிக்கும் விபூதிக்கும் மஹாசரஸ்வதி குலதெய்வமாகும்.
 
மனிதனுடைய திறமைகள் ஆயிரம். அனைத்தும் நிறைவால் நிரம்பியிருந்தால் மட்டுமே பரமனின் செயல் பூர்த்தியடையும். ஆயிரம் திறமைகளைப் பெற்றுள்ள மனிதன், அனைத்தையும் குறையுடன் பெற்றிருக்கிறான். அவனை நிறைவின் கருவியாக்குவது அவள் செயல். நிறைவுடன் செயல்பட்டு, நிறைவை நிலைநிறுத்த, அவனை வழிநடத்த அவள் படும்பாடு பெரும்பாடு. அதற்காக அவள் நெடுங்காலம் உழைக்கின்றாள். எல்லையற்ற பொறுப்பை, வரையறையின்றி நிறைவேற்ற அவள் முன்வருகிறாள். முழுமையாக, பூரணமாக, சிறப்பாக, உயர்வாக, தெளிவாக முடிப்பதே அவள் செயல்படும் முறை. இழை பிசகாத பூரணச் சிறப்புத் தவிர வேறெதையும் மஹாசரஸ்வதி ஏற்றுக்கொள்வதில்லை. அவளால் முடிந்த செயல் முழுமையாக முடிவு பெற்றிருக்கும். அவளால் பூர்த்தி செய்யப்பட்ட காரியங்களில் குறை என்பது இருப்பதில்லை.
 
மனிதன் செயல்படும்பொழுது அவனருகிலிருந்து, அவன் செயலுக்குத் துணை செய்து, புன்முறுவல் பூத்து, இனிமையாக நடந்து, எதனாலும் மனம் தளராமல் செயல்பட்டு, தோல்வியைக் கண்டு மனம் தளராமல், உண்மையான உழைப்பின் ஒவ்வோர் அம்சத்தையும் உயர்த்திவிடும் மஹாசரஸ்வதி, நடிப்பவரையும், ஏமாற்றுபவரையும், உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவரையும் இரக்கமின்றி ஒதுக்கிவிடுவாள். தாயாக நம் தேவையைப் பூர்த்தி செய்து, நண்பனாக நலிந்த சமயத்தில் உதவி செய்து, அமைதியான ஆலோசனையை விடாமல் வழங்கும் தலைவியாகி, சோர்ந்த காலத்துத் தன் புன்முறுவலால் ஆதரவு அளித்து, நிலையாகவுள்ள தெய்வத் திருக்கரத்தைச் சுட்டிக்காட்டி, உயர்ந்த மனோபாவத்தை நாடும் இலட்சிய மனப்பான்மையை இடையறாது ஊக்குவிப்பது அவள் இயல்பு. அன்னையின் மற்ற மூன்று அம்சங்களும் தங்கள் செயல் பூர்த்தியாக மஹாசரஸ்வதியையே எதிர்பார்க்கின்றார்கள். ஆழ்ந்த அஸ்திவாரத்தைப் போட்டு, வலுவான கட்டடத்தை எழுப்பி, எல்லாச் சிறு காரியங்களையும் தவறாமல் கவனிப்பதால், மஹாசரஸ்வதியால் மற்ற அம்சங்களின் இலட்சியத்தைப் பூர்த்தி செய்ய முடிகிறது.
 
நாடு முன்னேற கல்வி அவசியம். கட்டாயக் கல்வி 5 வகுப்பு வரை சட்டத்திலுள்ளது. மற்ற நாடுகளைப் போல் 16 வயது வரை குழந்தை கட்டாயமாகப் பள்ளிக்குப் போக வேண்டும் என்ற சட்டத்தை இயற்றும் உரிமை பார்லிமெண்டுக்கு இருந்தாலும், இதுவரை அந்தச் சட்டம் இயற்றப்படவில்லை. அது வந்த பின்னரே நாட்டில் வளம் பெருகும். அன்னையின் நான்கு அம்சங்களைக் கண்டோம். சத்தியஜீவன் உலகில் உதிக்க இன்னும் ஓர் அன்னை அம்சம் அவதரிக்க வேண்டும். இவற்றுக்கு மேலாக அன்னைக்கு வேறு பெரிய அம்சங்கள் பல உள. பிரபஞ்சத்திலுள்ள அனைத்துச் சக்திகளையும் சத்தியஜீவனுடன் சேர்ப்பது ஆனந்தமும், தெய்வீக அன்புமாகும். ஆனந்தமே பூவுலகை, சத்தியஜீவனாக மாற்றும் இரகஸ்யம். ஆனந்தத்தைத் தாங்கி வரும் அன்னை அம்சம் ஒன்றுண்டு. இதுவரை அது பூவுலகில் அவதரிக்கவில்லை. அகந்தையாலும், சிறுமையாலும், இருளாலும் சூழப்பட்ட மனித சுபாவம் இப்பெரிய அம்சங்களின் பிரம்மாண்டமான சக்தியைத் தாங்கும் நிலையில் இல்லை. இந்த நான்கு அம்சங்களும் வேரூன்றிய பின்னரே மற்ற உயர்ந்த அம்சங்கள் இங்கு வர முடியும். அதன் பிறகே சத்தியஜீவன் தோன்றுவான். அதன் பிறகே அன்னையின் சத்தியஜீவிய மஹாசக்தி தோன்றுவாள். அவள் அவதரித்தபின் தன் ஒளிமயமான உயர்வுகளை விவரிக்க ஒண்ணாத வெளியில் பரப்புவாள். அதன் பலனாக மனித சுபாவம் தெய்வ சுபாவமாகும். சத்தியஜீவன் எனும் வீணையின் நரம்புகளாக மனித சுபாவம் அமைந்து, அதிலிருந்து தெய்வீக கானம் புறப்படும்.
 
இத்திருவுருமாற்றம் பரமனின் இலட்சியம். அதுவே பூரண யோகம். மனிதனுடைய அளவில் இது பூர்த்தியாகக்கூடியதன்று. பரமனே உலகில் மனிதனுள் இதைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்குரிய கருவியாக அன்னை பூவுலகில் அவதரித்துள்ளார். நீ இத்திருவுருமாற்றத்தை நாடினால், இது பலிக்கும். ஆனால் இதை உன்னால் பூர்த்தி செய்ய முடியாது. உன் பங்கு சரணாகதியேயாகும். அன்னையை நீ சரண் அடைந்தால், அவர் பரமனின் சார்பில் உன்னில் இதைப் பூர்த்தி செய்வார். உன் சமர்ப்பணம் பூரணச் சரணாகதியானால்தான், அன்னை தம்மை உன்னுள் பூர்த்தி செய்துகொள்வார். பூரணச் சரணாகதியும், எல்லாக் கரணங்களின் நெகிழ்ந்த உள்ளுணர்வுமே உனக்குத் தேவை. மனத்தாலும், உணர்வாலும், ஆன்மாவாலும் அன்னையை அறிந்து நீ உணர வேண்டும். அன்னையின் சக்தி உன்னுள் செயல்படுவதை நீ உணர வேண்டும். பொதுவாக மனிதன் கண்மூடித்தனமாகத் தூங்கிய நிலையில் இருக்கிறான். என்றாலும், ஓரளவு அன்னையால் அவனுள் செயல்பட முடியும். அன்னையின் பூரண அருள் பெற மனிதன் பூரண உள்ளுணர்வோடும், அக விழிப்புடனும் இருத்தல் அவசியம்.
மனித மனம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பியபடியிருக்கும். மனம் கேட்கும் கேள்வி இறைவன் உள்ளே வரும் கதவை அடைக்கும். கேள்வி கேட்க முடியாத இடத்தில் ஐயத்தை எழுப்பும். ஐயம் அறியாமையின் அறிகுறி; கண்மூடி செயல்படுவதற்கு அடையாளம். அன்னை தொட்ட இடம் துலங்கும். கேள்வியும், ஐயமும் அன்னையின் ஸ்பர்சத்திற்கு எதிரானவை. பிராணன் ஆசை நிறைந்தது; ஆணவம் பொருந்தியது. ஆசையின் கடைசிச் சாயல் அழிந்த பின்னரே ஆனந்தம் உதயமாகும். அன்னையின் ஸ்பர்சம் அரவணைப்பாக மாறிய பின்னரே திருவுருமாற்றம் ஏற்படும். ஆசையும், ஆணவமும் ஸ்பர்சத்தையே ரத்து செய்பவை. தெய்வத்தின் தீண்டுதலை விலக்கக்கூடியவை. உடல் தன் சிறு பழக்கங்களை பற்றுக்கோடாகக் கொண்டது. சிறு சிறு பழக்கங்களும், சிறு சிறு ஆசைகளும் வலைகளாக உடலைப் பின்னிக்கொண்டிருக்கின்றன. இது உடலின் தமோ குணத்தின் அமைப்பு. ஜீவனற்ற அந்தப் பின்னலை அகற்ற முயன்றால் உடல் ஓலமிடும்.
 
மனத்தின் கேள்வி, பிராணனின் ஆசை, உடலின் தமோ குணம் ஆகியவற்றை அழித்து, சத்தியஜீவனை நாடினால் ஜோதி, ஞானம், அழகு, சுமுகம், சக்தி உன்னுள் வர முயல்கின்றன. அவற்றை பூர்த்தி செய்ய உதவுவது பூரண சரணாகதி. சரணாகதி உடலின் பகுதிகளையும் நெகிழ்வால் நிரம்பும் ஆன்மீக அம்சங்களை உணரச் செய்யும். பூரணன் மேலேயிருக்கின்றான். அருள், கங்கையாக அவனிடமுள்ளது. பூரணத்தை உனக்கு வழங்க அவன் விழைகிறான். சரணாகதியால் உன்னை நீ புனிதப்படுத்திக்கொண்டால், அருள் பிரவாகமாக உன்னுள் நுழையும். ஜடமான உடலும் விழிப்புறும். சத்தியஜீவ சக்தியை உணர முடியாத உடலும், உன் விழிப்பால் தன்னுள் அச்சக்தி பாய்வதை அறியும். அன்பும், ஆனந்தமும் நாலு பக்கங்களிலும் உன்னைச் சூழ்ந்து, உன்னுள் விரைந்து பாய்ந்து மெய்சிலிர்க்கச் செய்யும்.
 
அறிவு மடமை நிறைந்தது. தான் அறிந்ததைக் கொண்டு மட்டும் புதியவற்றைப் புரிந்துகொள்ள முயலும். அது எப்பொழுதும் தலைகீழாக முடியும். தன் மீது அறிவுக்கு அளவுகடந்த நம்பிக்கையுண்டு. ரோஜா பயிரிட்டவன் நெல் பயிரிட்டால் செடியைக் கத்தரித்துவிடுவான். அவன் செடியை கத்தரிப்பதை மட்டுமே அறிந்தவன். மனம் அத்தன்மையது. அன்னை உலகுக்குப் புதியவர். தம் அனுபவத்தின் மூலம் அறிவு அதை அளக்க முயன்றால் சித்திரத்தின் உயர்வை நீள, அகலத்தால் அளப்பது போல் முடியும். குறுகிய சிந்தனையும், தவறான செய்திகளும் அதன் அளவுகோல்களாகும். தான் அறியாதவற்றையும் அளக்க முன்வரும் குணம் உடையது அறிவு. அறிவை விலக்கிய பின்னரே, ஆன்மாவின் வளர்ச்சிக்கு வழியுண்டு.
 
அன்னையின் சக்தி ஆகாயத்தில் செல்லும் தேர் போன்றது. மனித மனம் காட்டு வழியே செல்லும் கொடிப்பாதையாகும். இதன் வழியே அந்த ஆகாய ரதத்தைச் செலுத்த முற்படுவதே மனத்தின் இயல்பு. அன்னையின் பார்வை ஞானதிருஷ்டி. அது திரிகாலத் திருஷ்டியுமாகும். அவள் ரூபம் விஸ்வரூபத்தைக் கடந்த சக்தி வடிவம். குட்டை மனிதனுக்கு உள்ள கண் ஊனக்கண். அவன் பார்வையில் அகப்படாதவை அன்னையின் திருஷ்டியும், ரூபமுமாகும். அன்னை எனும் அருட்புயல் மனிதன் எனும் மண்சட்டிக்குள் வீச முடியாது. ஆயிரம் அம்சங்களைக் கொண்டவர் அன்னை. அம்சங்களை க்ஷணத்தில் மாற்றும் திறன் உடையவர் அன்னை. மனோவேகத்தைத் தாண்டிய தம் வேகத்தை கணத்தில், அமைதியாக மாற்றுபவர். எதை வேண்டுமானாலும் அன்னை எடுத்து அணைத்துச் செயல்படுவார். நினைத்தமாத்திரத்தில் ஒன்றை விட்டு மற்றதற்குச் செல்வார். அறியாமையை தன் பொக்கிஷமாக அறியும் மனத்தால் அன்னையின் வியாப்தியை அறிய முடியாது.
 
அறிவு தீட்சண்யம் பெற்று, உணர்வினால் ஆர்வமடைந்து அன்னையை அணுகினால், சுக்கலாக உடைந்த கண்ணாடியில் தெரியும் உருவம் போலிருக்கும் அன்னை தரிசனம். ஆன்ம விளக்கமுற்று, சைத்திய புருஷனை முன்கொண்டுவந்து அன்னையை அணுகினால், சத்தியம் பதில் பேசும்; தரிசனம் கிடைக்கும். அதன் மூலம் அன்னை உன் மனதிலும், உணர்விலும், உடலிலும், சைத்திய புருஷனிலும் தம் அந்தரங்க இரகஸ்யத்தைப் பேசுவார்.
 
"எல்லாம் வல்ல இறைவன், எல்லாம் அறிந்தவன்; அனைத்தும் அவன் செயல்; அவனால் முடியாதது என்று ஒன்று இல்லை என்பது உண்மை" என்பதை மனிதன் வேறு விதமாகப் புரிந்துகொள்கிறான். "தான் இறைவனின் அன்பன் என்பதால், இறைவன் தன் அபிலாஷைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வான்; பூர்த்தி செய்ய வேண்டும்” என்று கொள்கிறான். ‘இறைவன் எல்லாம் வல்லவன்' என்பதற்குப் பொருள் ‘அவன் எதை விரும்பினாலும் அதைச் செய்ய வல்லவன்' என்பதே. உன் விருப்பத்தை அவன் அப்படியே பூர்த்தி செய்வான் என்று எந்த சாஸ்திரமும் எந்த நாட்டிலும் சொல்லவில்லை. உன் பிரார்த்தனைகளை இறைவன் ஏற்றுக்கொண்டால், பூர்த்தி செய்வான் என்றே சாத்திரங்கள் சொல்கின்றன. உன் ஆன்மாவின் அபிலாஷைகளை இறைவன் பூர்த்தி செய்வான் என்பது உண்மை. ஏனெனில் ஆன்மா இறைவனுடைய பகுதி. உன் அபிலாஷைகள் உன் ஆசையிலிருந்தும், அறியாமையிலிருந்தும், ஆணவத்திலிருந்தும் தோன்றுபவை. ஆசையையும், அறியாமையையும், ஆணவத்தையும் அழித்த பின்னரே நீ இறைவனையடைய முடியும். அப்படியிருக்க உன் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்தால், இறைவன் தன் இலட்சியத்திற்கு எதிராகச் செயல்படுவான். உன் பிரார்த்தனை நியாயமானதானால் இறைவன் அதை ஏற்றுப் பூர்த்தி செய்வான் என்பது உண்மை. அதை மாற்றி, எதையும் நாம் நினைத்ததைப் போல் இறைவன் செய்வான் என எதிர்பார்ப்பது அறிவுக்குப் பொருந்தாது என்கிறார் பகவான். இறைவனின் அற்புதங்களை உணர முடியாத எளிய மனிதன் ஆச்சரியம், அற்புதம், ஜோதியைக் கண்டபொழுது இறைவனை ஏற்றுக்கொள்கிறான். அதனால் இறைவன் அனுதினமும் அற்புதங்களை நிகழ்த்த வேண்டும் என நினைப்பது உயர்ந்த குறிக்கோள் ஆகாது.
 
பூவுலகம் அறியாமையின் இருப்பிடம். சத்தியஜீவிய லோகம் அன்னைக்குரிய இடம். தம் இடம் விட்டுப் பெயர்ந்து, அறியாமையின் இருப்பிடத்தை அடைந்து, அதைச் செப்பனிட முனைகிறார் அன்னை. இங்கு, இன்று, நம்மிடையே இருக்கின்றார். நம் உள்ளத்திலும், ஜீவியத்திலும் செயல்படுகிறார். ஆனால் தம்மை முழுவதும் பூவுலகில் வெளிப்படுத்திக்கொள்வதில்லை. சத்தியஜீவிய லோகத்திலுள்ள தன் ரூபத்தை இங்கு அன்னை முழுவதுமாக வெளிப்படுத்துவதில்லை. அன்னையின் தெய்வீக உருவத்தை, பார்த்தவுடன் ஒருவர் கண்டுகொள்ள வேண்டுமானால் அவருக்குச் சூட்சுமப் பார்வையின் சிகரமான திருஷ்டி ஏற்பட வேண்டும் என்கிறார் பகவான். யோகம் முதிர்ந்த நிலையில் ஏற்படுவது அது.
 
அன்னையை ‘அன்னை' என்று ஸ்ரீ அரவிந்தர் பிரதிஷ்டை செய்யும் முன் அவரையும் ஒரு சாதகராகக் கருதிய நாட்களில், பகவான் தரிசனத்திற்காக ஒருவர் வந்து சில நாள் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அவர் அடுத்த முறை வடநாட்டிலிருந்து வருவதற்குள் ‘அன்னை' பிரதிஷ்டை செய்யப்பட்டுவிட்டார். பகவான் தனிமை நாடிப் போய்விட்டார். வடநாட்டிலிருந்து வந்த பக்தருக்கு இங்குள்ள மாறிய நிலை தெரியாது. பகவான் தரிசனத்திற்குப் போகுமுன் அன்னையைத் தரிசனம் செய்யும் ஏற்பாடு இருந்தது. பக்தரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. அன்னையைத் தாண்டி பகவான் தரிசனம் செய்ய முடியாது என்பதால் ஒருவாறு மனதைத் தேற்றிக்கொண்டு க்யூ வரிசைக்கு வந்தார். வரிசையில் அன்னைக்கும், இவருக்கும் இடையே 10 பேர் இருக்கும்பொழுது தற்செயலாக அன்னையின் பாதங்கள் இவர் கண்ணில் பட்டன. அவை பொற்பாதங்களாக காட்சியளித்தன. 10 பேர் நமஸ்காரம் முடிக்கும் வரை பக்தரால் பொறுக்க முடியவில்லை. தொடர்ந்து பாதங்களில் பொன்னொளி வீசியது. அவர் பாதங்களில் வீழ்ந்து அவற்றை இறுகப் பற்றிக்கொண்டார்; கண்ணீரால் நனைத்தார்; நெடுநேரம் காலடியில் கிடந்தார்; எழுந்தார். பகவான் தரிசனத்தையும் அவர் நினைவு வைத்திருக்கவில்லை. பகவானைச் சாதாரணமாக நமஸ்காரம் செய்து வெளியே வந்தார்.
 
அன்னை தம்மை மனிதனிடமிருந்து மறைப்பதுண்டு. தேவையானால் அவன் பக்திப்பார்வைக்கு வெளிப்படுத்துவதுண்டு. மனத்தை ஒட்டியும், உணர்வையறிந்தும், உடலின் தன்மையை ஏற்றும், அதற்கேற்ப செயல்பட அன்னை விழைகிறார்.
 
பரமன் பூவுலக வாழ்வைச் சிக்கலாகக் காண்கிறான். பக்தனுக்குப் பரமன் காணும் சிக்கலைக் கண்டு, களையும் திறன் வேண்டும். அவசரப்பட்டு அறுத்தெறிவது பரமனின் வழியன்று. உலகம் அசுரன் பிடியிலுள்ளது. அசுரனை அவனுடைய பாசறையிலேயே சந்தித்து, அவனுடன் போரிட்டு முறியடிக்க வேண்டும் என்பது பரமன் இட்ட கட்டளை. மனித ஜீவன் இதற்குத் தயாராக வேண்டும். மெலிந்த மனிதனை வலிந்து உயர்த்த முடியாது. இன்று பூவுலகம் உள்ள நிலையையும், மனிதன் உள்ள நிலையையும் கருதி, அதற்குள் தெய்வ சக்தி எவ்வளவு அதிகம் செயல்பட முடியுமோ அதை மட்டும் திட்டமாகச் செய்கிறது. குறையினுள் நிறைவை உற்பத்தி செய்ய சத்தியஜீவியம் பாடுபடுகிறது. சத்தியஜீவியம் இன்று மனிதனுள்ளிருந்து செயல்படவில்லை. அப்படிச் செயல்பட்டால், மனிதனால் இதை நேரடியாகச் சாதிக்க முடியும். அன்னை நம் எதிரிலேயே இருந்தாலும், நாமிருக்கும் மனநிலையில் அன்னை நம் கண்ணுக்குப் புலப்படுவது இல்லை. ஆனால் ஆன்மா அது போலிருப்பதில்லை.
 
மனிதன் ஆன்மாவை நாடினால், ஆன்மா துலங்கும். அதற்கு அன்னை விளங்கும். மனம் ஊனக்கண்ணால் கண்டதைப் பற்றிக் கொள்ளும். அதற்கு ஆன்மீக விவரம் தெரியாது. அன்னை சக்தியை நம்பினால் அது உன்னைத் தெய்வீக வாழ்வுக்கு அழைத்துச் செல்லும்.
 
சத்தியஜீவன் பிறப்பது இறைவன் ஆணை. அதுவே மனிதப் பிறப்புக்கு அடுத்த சிருஷ்டி. அதற்குப் பரமன் இசைவு தேவை. பரமனுக்கும், மனிதனுக்கும் இடையே அன்னை நிற்கின்றார். அறியாமையையும், இருளையும் அகற்ற அன்னையால் மட்டுமே முடியும். மனித யத்தனத்தால் என்றும் அது முடியாது. இருளை அகற்றி, ஜோதிமயமாக்கி, ஆனந்தத்தை நிலைநிறுத்துவது அன்னையே.



book | by Dr. Radut