Skip to Content

10. அடுத்த கட்டம் – II

 

 1. வாழ்வின் நியதிகள் (சட்டங்கள்) செயல்படும் விதத்தையும், எங்கு அவை முடிவடைகின்றன, அருள் எங்கு ஆரம்பிக்கின்றது என்பதையும் நாம் கண்டுகொள்ள வேண்டும். யோகத்திற்கும், யோக வாழ்க்கைக்கும் உரிய கட்டங்கள் அவை.

  ஒரு சிறுவனை ஒரு போக்கிரி மிரட்டினால், அதைப் பார்த்துக் கொண்டு ‘நமக்கென்ன’ என்று போவதுண்டு. சட்டப்படி அவர்கள் செய்வது தவறில்லை. ஆனால் சிறுவனுக்கு உதவ முன்வருபவர்கள் சட்டப்படி செயல்படவில்லை; கருணையால், மனிதாபிமானத்தால் செயல்படுகிறார்கள்.

  வாழ்க்கையில் அஸ்திவாரம் தேவை. அதைப் பூர்த்தி செய்ய முனைவது சுயநலம். தேவையில்லாத இடத்தில் சுயநலம் செயல்படாது; பிரியம் செயல்படும்; தன்னலமற்ற தன்மை செயல்படும். வயோதிகக் காலத்தில் தம்மைக் காப்பாற்றுவான் என்று குழந்தையை வளர்ப்பவர் சுயநலத்தால் செய்கின்றார். குழந்தை மீது பிரியமாக இருப்பவர் பிரியத்திற்காகவும், குழந்தையின் நலனுக்காகவும் அவனைப் பேணி வளர்க்கின்றார். “குழந்தை மேதையாக இருக்கின்றான். இவன் அறிவு வீணாகப் போகக்கூடாது. நாட்டில் ஒரு மேதை பிறக்க வேண்டும்”என்று குழந்தையின் அறிவைப் பல வகைகளிலும் வளர்க்க முயலும் தகப்பனாரும், ஆசிரியரும் தேசபக்தியால் செயல்படுகின்றனர். தங்கள் தேவை, சுயநலம், பிரியம்; தன்னலமற்ற குணம் அங்கு இரண்டாம் பட்சமாகச் செயல்படுகிறது. “குழந்தையின் தலை மீது ஜோதி தெரிகிறது. இதைக் கவனிக்காவிட்டால் மறைந்துவிடும். இந்த ஜோதி அவன் மீது இருப்பதால், தக்க குருவிடம் இவனைச் சேர்ப்பது அவசியம்” என்றொருவர் செய்தால், அது தகப்பனாராக இருந்தாலும், அது ஆண்டவனுக்குச் செய்யும் சேவை; அருள் உலகில் செயல்பட ஒரு கருவியை ஏற்படுத்தும் காரியம். அங்கு தன்னலம், வாழ்க்கைச் சட்டம் ஆகியவைகளுக்கு இடம் இல்லை.

  ஒரு செயலைப் பல காரணங்களுக்காக நாம் செய்யலாம். பல காரணங்களால் அச்செயல் முடிவு பெறலாம். அது முடிவு பெற்ற பின், முடிவு பெற்ற காரணத்தைக் கண்டறிய முயல வேண்டும். திறமையால் பூர்த்தியாயிற்றா, சமூகத்தின் ஒற்றுமையால் நடந்த காரியமா அல்லது சட்டத்தை இப்படி நிறைவேற்றினார்களா, கர்மம் தன்னைப் பூர்த்தி செய்துகொண்டதா, இவையெல்லாம் இன்றி அருள் செயல்பட்டதா என ஆராய்ந்து தெரிய வேண்டும்.

  மனிதனும், வாழ்வும் முடிந்த பின் காரியம் முடிந்துவிட வேண்டும் என்ற நியதி இல்லை. தெய்வம் இருக்கிறது; அருள் செயல்படுகிறது; மனிதனாலும், வாழ்வாலும் முடியாதவற்றை அருள் முடிக்கிறது. அவற்றைப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

  அன்னையை ஏற்றுக்கொண்ட பின் அருள் அதிகமாகச் செயல்படும். “இனி நம் திறமையால் இக்காரியம் பூர்த்தியாவதைவிட அருளால் பூர்த்தியாகட்டும்” என்ற மனநிலை ஏற்பட வேண்டும். அருள் செயல்பட வேண்டி நம் திறமையை நாம் (withdraw) இரண்டாம் பட்சமாகக் கருத வேண்டும். எந்த அளவில் நாம் நம் திறமையை நம்ப மறுக்கின்றோமோ, சமூகத்தை எதிர்பார்ப்பதைத் தவிர்க்கின்றோமோ, அந்த அளவில் அருள் செயல்பட அனுமதிக்கின்றோம்.

  நாம் முழுவதும் மனதால் தன்னம்பிக்கையிலிருந்து விலகினால், அருள் தெய்வ நம்பிக்கை மூலம் முழுவதுமாகச் செயல்படும்.
   
 2. ஏதாவது ஒரு விஷயத்திலாவது நடக்க முடியாததை உன் மனம் நாடும். அதை உணர்ந்த பின், உன் மனத்தின் தன்மையே அதுதான் என்று தெரியும்.

  கட்சிக்காகப் பல ஆண்டுகள் உழைத்த பலர் MLA பதவிக்கு ஆசைப்படுவதுண்டு. அது நியாயம் என்று பலரும் அறிவர். அவர்களில் ஒருவருக்கு அப்பதவி கிடைக்கும். இது நியாயமான, பொருத்தமான ஆசை. திறமையாலும், உழைப்பாலும், தகுதியாலும் மனம் விழைவது. வாழ்வில் இது 99 பங்கு பலிப்பதில்லை. அன்னையிடம் 100 பங்கும் பலிக்கும். இக்கருத்தை நான் அடிக்கடி வலியுறுத்துவேன்.

  இதற்கு நேர் எதிரான மனப்பான்மையுண்டு. அது அனைவரிடமும் பல அளவுகளில் காணப்படும். ஆசிரமம் வந்த ஒரு வாரத்தில் “தாம் ஆசிரமத்தின் தலைவராக வேண்டும்” என விரும்பியவர்கள் 100க்கு மேற்பட்டவர். சுமார் 10 பேர் அக்கருத்தை அன்னையிடமே வெளியிட்டார்கள். ஒருவர் ஆசிரம வாயிலில் சத்தியாக்கிரகமும் செய்தார். அன்னையை நாடி வந்த லட்சக்கணக்கானவர்களில், இந்த எண்ணம் மனதில் தோன்றாதவர் 100 பேருக்கும் குறைவு.

  இது மனித சுபாவத்தின் தன்மை; செயல்படுத்த முனைந்தால் விபரீதமாகும். இக்கருத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழில் கதைகளும், பழமொழிகளும் உள்ளன. இது போன்ற எண்ணம் எனக்கு இல்லை என்று நினைப்பவரும் உண்டு. அவர் தம்மை அறியாதவர்; தம் மனத்தை ஆராய்ந்தால், நடக்கவே முடியாததை தம் மனம் நாடுவதைக் காண்பார். அதை உணர்வது நல்லது. அதைக் கண்ட பின் எளிதில் அழிக்க முடியாது. இருப்பதை உணர்வது அவசியம்.

  கல்லூரியில் பாஸ் செய்தவுடன் சர்க்கார் உத்தியோகம் NGOவாகக் கிடைப்பது அரிது. அதுவும், குமாஸ்தாவாக இல்லாமல் (NGO) ஆபீசராகக் கிடைப்பது அரிது; அதற்கு மேல் கெஜட் பதவி; அதற்கு மேல் இரு பதவிகள்; முடிவில் டைரக்டர் பதவி. ஓர் இலாக்காவில் அந்த நாளில் டைரக்டர் பதவிக்கு IAS ஆபீசர்களை மட்டும் போடுவதால் ஜாயிண்ட் டைரக்டர் பதவியே இலாகாவில் உள்ளவர்கட்கு முடிவான பதவி. ஒரு வருஷம் 60 பேர் பாஸ் செய்தால், அந்த 60 பேரில் ஒருவருக்கு இந்தப் பதவி கிடைக்கும்; அல்லது இருவருக்கு ரிடையராகும் முன் கொஞ்ச நாள் கிடைக்கும். “பாஸ் செய்தவுடன் இப்பதவி கிடைத்தால்தான் உத்தியோகத்திற்குப் போவேன்; இல்லையென்றால் உத்தியோகம் வேண்டாம்” என்றார் ஒருவர். அவர் I classஇல் பாஸ் செய்யவில்லை. II class கூட கிடைக்கவில்லை. அவர் தகப்பனார் படிக்காதவர். கடைப் பையனாக ஆரம்பித்து, தெரு மூலையில் ஒரு சிறு கடை நடத்துபவர். தம் குடும்பத்தில் இவரே முதல் பட்டதாரி. மனம் இந்த நிலையை நினைக்கிறது. அது கிடைக்காது என்று தெரிந்தவுடன், “என்னைப் பிரதம மந்திரிக்கு அந்தரங்கக் காரியதரிசியாக நியமித்தால் நல்லது” என்று நண்பர்களிடையே பிரகடனப்படுத்தினார்.

  இது இவருடைய பேராசை மட்டுமன்று; பொதுவான மனித சுபாவம். நம் மனத்தில் இது போன்றுள்ள எண்ணம் பெருந்தடையாக இருக்கிறது என்றறிவது ஞானம்.
   
 3. அன்னையை முழுமையாகப் பெற பூரண நன்றியறிதல் மட்டும் போதும்.

  மனித சுபாவத்தில் பிறப்பில் இல்லாத குணம் நன்றியறிதல். ஆன்மா விழிப்படைந்து, அதனால் மனிதன் பெற்ற உயர்ந்த பண்புகள் பல. அவன் பெற்ற உயர்ந்த பண்புகள் எல்லாம் ஆன்மாவினுடையது; மனித சுபாவத்திலில்லாதது என்கிறார் அன்னை.

  உடலுக்குள்ள முக்கிய குணங்கள் இரண்டு: பசி, உறக்கம். உணர்வுக்குள்ள குணம் தீவிரமாகச் செயல்படுதல், புத்தியறிய முயல்கிறது. இவை மனித சுபாவத்திற்குரியவை. நன்றியறிதலுடைய பிறப்பிடம் ஆன்மா.

  அன்னையின் vision காட்சியில் தெய்வங்கள் கூடியிருப்பதைக் கண்டார். அவர் அறியாத வெண்மையான இளைய உருவத்தையும் அங்குக் கண்டார். ‘யார் அது?’ என விசாரித்தார். தன் பெயர் நன்றி எனவும், தெய்வங்களிடையே புதியதாகப் பிறந்தவள் என்றும் அவர் அன்னைக்குப் பதில் சொன்னார்.

  நாம் நன்றியுள்ளவர்கள், நல்லவர்கள் என்பது நம் எண்ணம். எந்த அளவுக்கு நம் எண்ணம் உண்மையானது என்று கண்டறிவது நல்லது. நல்லது நடந்தபொழுது உடனே அன்னை நினைவு ஏற்பட்டால், அது நன்றியறிதலுக்கு அடையாளம். நம்மைக் கவனித்தால் 100 செயல்களில் எத்தனை முறை உடன், தவறாது அன்னை நினைவு வருகிறது என்பதைக் கணக்கிடுவது பயன் தரும். 100 செயல்களில் 5 முறை அன்னை நினைவு வந்தால் உயர்வு. அதற்கு மேலிருந்தால் சிறப்பு. எல்லாச் செயல்களும் அன்னை செயல்கள் என்பதால், “எல்லாமே நல்ல செயல்கள்”எனக் கொண்டு, செயலுடன் அன்னை நினைவு இணைந்து வருவதைக் கண்டு, பயின்றால், முழு நினைவு ஏற்படும்பொழுது அன்னையை முழுமையாகப் பெறுவோம்.

  ஆன்மா வாழ்வில் ஒரு முறை விழிப்படைவதில்லை. எந்நேரமும் விழிப்பாக இருந்தால்தான் முழு நினைவு வரும். இது எல்லாவித முறைகளையும் தன்னுள் அடக்கியது; எல்லாவற்றையும்விட உயர்ந்தது. ஆன்மீக முறை என்பதால், முறைகளில் சிறந்தது.
   
 4. மனம், ஜீவியம் போன்ற சொற்களை ஆராய்ந்து தெரிந்துகொள்.

  பூரண யோகத்திற்குரிய முக்கியமான சொற்கள் பல. சமர்ப்பணம், சரணாகதி, விழிப்பு, ஆர்வம், தியாகம், தியானம், நிஷ்டை, ஆத்மானுபவம், சித்தி, வழிபாடு போன்ற சொற்கள் முக்கியமானவை.

  வழக்கில் இச்சொற்களுக்குப் பொதுவான அர்த்தமுண்டு. யோகத்தில் அதே பொருள் வழங்குவதும் உண்டு; சற்று மாறி இருப்பதும் உண்டு; எதிராக அமைவதும் உண்டு. சரணாகதி என்பது வழக்கில் தோற்றவன், வென்றவனுக்குப் பணிவதே. யோகத்தில் அதன் பொருள் சற்று மாறிவிடும். அது முக்கியமான மாற்றம். தான் இறைவனின் பகுதி என்றுணர்ந்த ஜீவாத்மா, தன் பிறப்பிடத்தை அடைந்து, இறைவனுடன் இரண்டறக் கலந்து, பேரின்ப நிலை எய்த முடிவு செய்த பின், வாழ்வில் தன் மீது சுமையாக ஏற்றுக் கொண்டுள்ள பற்றுகளை விட்டொழித்து, இறைவனை நோக்கிச் செல்வதே சரணாகதியாகும். இது ஜீவாத்மாவின் ஆன்மீக வெற்றி. சொல்லுக்குரிய சிறப்பான அல்லது குறிப்பான பொருளை அறிவது முக்கியம். அதை அறிந்த பின்னரே அன்னை எழுதியவை புரியும்.

  சித்து என்றால் அற்புதங்களை நிகழ்த்துவது என்பது வழக்கு. மௌனம் போன்ற ஆன்மீக அனுபவம் ஏதோ ஒரு சமயம் வந்தது, நிலையாக அமைவதே சித்தி என்பதன் சரியான பொருள்.

  தியாகம் என்றால் தனக்குள்ள உரிமையைப் பிறர் நலனுக்காக விட்டுக் கொடுப்பது என்பது. ஆசையினால் மனிதன் ஆரம்பிக்கும் காரியங்களை, ஆசையை அழித்து ஆரம்பித்தால் ஆசையைத் தியாகம் செய்கிறான். அதுவே இங்கு தியாகம் எனப்படும்.

  தூங்காமலிருப்பது வழக்கில் விழிப்பாகும். ஆன்மா தூங்காமல் இருப்பதை அன்னை விழிப்பு என்கிறார்.

  நல்ல சாப்பாடு, உயர்ந்த உடை, சிறந்த பொழுதுபோக்கு ஆகியவற்றை மனிதன் அனுபவிக்கின்றான். அதாவது ஆசைகளைப் பூர்த்தி செய்வதை, அனுபவிப்பது என்று நாம் அழைக்கின்றோம். ஆன்மீகப் பாஷையில் அனுபவம் என்றால், மனிதன் ஆன்மாவை ஒரு செயலில் உணர்வது என்றாகும். அறிவின் ஆன்மீக உருவம் ஜோதி. அறிவு ஜோதியாக மாறுவதை, மனத்தில் ஒளியாகப் பார்ப்பதை அனுபவம் என்கிறோம். அந்த ஜோதி மனதில் நிலைத்துவிட்டால், ஜோதி சித்தியாகிவிட்டது என்போம். ஆன்மீக நிலைகளை வாழ்வில் உணர்வது அனுபவம் எனப்படும்.

  ஆசையுடன் ஒரு காரியத்தைச் செய்தால், ஆர்வமாகச் செய்வதாகச் சொல்கிறோம். இறைவனை நோக்கிச் செல்ல விழைவதை அன்னை ஆர்வம் என்கிறார்.

  அன்னை எழுதியவற்றைப் படிக்கும் முன், இவை போன்ற சொற்களுக்கு அவர் அளித்துள்ள பொருளைத் தெளிவாக அறிவது அவசியம்.
   
 5. உன் மனத்தின் உயர்வை நீ அறிந்துகொள்வது அவசியம். உயர்வுடன், தாழ்வையும் புரிந்துகொள்ள வேண்டும். எது உன் மனத்தைத் தவிர்க்க முடியாதபடி கவருகிறதோ, அதுவே உன் மனத்தின் (minimum level) கீழ் எல்லை. எது உன்னைக் கவரவில்லையோ, அதுவே (maximum level) உயர்ந்தபட்ச எல்லை.
   
 6. தன்னுடைய குடும்பம், ஊர், ஜாதி, படிப்பு, தொழில் ஆகியவற்றால் மனிதன் தான் பெற்ற பலனைப் போற்றுகிறான்; பெருமையடைகிறான். உண்மையில் இன்று அவை அனைத்தும் அவன் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன. அவை அவனுடைய குறைகளாகவே விளங்குகின்றன.

  முதலில் தலைகீழாகப் பேசுவது போல் இது தோன்றும். இதில் ஓர் அடிப்படை உண்மையுண்டு. எவ்வளவு பெருமையுடையதானாலும் ஒரு நிலையைக் கடந்தவுடன், அந்நிலைக்குரிய பழக்கங்கள் விலங்காக மாறிவிடுகின்றன என்பது உலகப் பொது உண்மை. விவசாயத்தைவிட உயர்ந்த தொழில் இல்லை. ஆனால் (industry) ஒரு தொழிலை ஆரம்பித்த பின் விவசாயத்தால் வந்த பழக்கங்கள் அனைத்தும் தடையாக இருப்பதைக் காணலாம். வீடு உயர்ந்தது. அதைக் கோயில் என்றே கூற வேண்டும். ஆனால் வீட்டிலிருந்த பையன் ஹாஸ்டலுக்குப் போனபின், அல்லது ஆபீஸ் சேர்ந்தபின், வீட்டுப் பழக்கங்களை அங்குக் கடைப்பிடித்தால் தொந்தரவாகப் போகும்.
   
 7. நீ எதை ஆர்வமாக நாடுகிறாயோ, அதை நீ முனைந்து அழித்ததை அறிந்துகொள். இன்றும் அதை நீ செய்கிறாய் என்பதை அறிதல் அவசியம்.

  தலைகீழாகப் பேசுவது போலவும், குதர்க்கமாக இருப்பதாகவும் இச்சொல் நம்மை நினைக்க வைக்கும். ஆனால், உண்மை வேறு. நமக்குத் தெரிந்த சிலர் வாழ்வில் இச்சொல் பொருந்துகிறதா என்று ஆராய்ந்தால் இதன் உண்மை விளங்கும்.

  1. இரவும், பகலுமாக பிரபலமடைய வேண்டும் என்று மனத்தால் கதறுபவர் ஒருவர். அவர் தவறாது செய்யும் செயல், யாரைச் சந்தித்தாலும் முதல் இரண்டு, மூன்று நிமிஷங்களில் தவறான சொல்லையும், அடுத்த 5 நிமிஷத்தில் கடுமையான சொல்லையும், மேலும் அசம்பாவிதமான பேச்சையும் தவறாது சொல்வார்.
  2. எல்லோரும் தம்மிடம் அளவு கடந்து பிரியமாகவும், மரியாதையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்ற குறிக்கோளை மட்டும் உடையவர், கடுமையாகப் பேசுவதே முறை என்று கொண்டுள்ளார். மனிதர்களை மனதால் விலக்க முழு முயற்சி செய்து, செயலில் அதிக தூரம் விலகிப் போய்விட்டார்.
  3. “ஏராளமாகச் சம்பாதிக்க வேண்டும். உலகில் பணத்திற்கு மட்டுமே மதிப்பு” என்று தீவிரமாக நம்புபவர், தம் தொழிலை வருஷத்தில் 10 நாட்கள்கூட போய்ப் பார்ப்பதில்லை.


  மற்றவர்களை கவனிக்கும்பொழுது இது விபரீதமாகத் தோன்றுகிறது. பிரபலத்தை நாடுபவர் தவறாகப் பேசுவதும், பிரியத்தை வேண்டுபவர் மனிதர்களை விட்டு விலகுவதும், செல்வம் தேடுபவர் தொழிலைப் புறக்கணிப்பதும் மனித சுபாவத்திற்குள்ளவை.

  மேலும் நம்மையே கவனித்தால், இது ஓர் இடத்தில் இருப்பது தெரியும். மேலும் கவனித்தால், பல இடங்களிலும் தெரியும். பூரணமாகக் கவனித்தால், எல்லா இடங்களிலும் இந்த முரண்பாடு நம் சுபாவத்திலிருப்பது தெரியும். இருப்பதை உணர்வது ஞானம்.
   
 8. அன்னை அளித்த அரிய வாய்ப்பையும், உன் மனத்தின் தடையையும் நீ அறிய வேண்டும்.

  வாய்ப்பை எவரும் எதிர்பார்ப்பதில்லை; எதிர்பார்ப்பவர்கள் குறைவு. அப்படி எதிர்பார்ப்பவர்கள் அர்த்தமற்றவர்களாக இருப்பார்கள்; இல்லாததை மனம் நாடும் தன்மையுடையவர்களாக இருப்பார்கள்.

  ஒரு வாய்ப்பு கிடைத்தால், முதலில் ஆச்சரியமாக இருக்கும். பிறகு வாய்ப்பென்பது மடிந்துபோகும். உன் மனம் உன்னை அறியாமல் நெடுநாளாக மௌனமாக விழைவதைப் பெறும் சந்தர்ப்பத்தை அன்னை அனைவருக்கும் தவறாது அளிக்கின்றார். பொதுவாக 90 பேர் அதைப் புறக்கணித்துவிடுவார்கள். ஏற்றுக்கொள்பவர்கள் அதில் ஒரு பகுதியையே ஏற்றுக்கொள்வதுண்டு. நமக்கு இதுவரை கொடுத்த வாய்ப்பை பரிசோதனை செய்தால் இது விளங்கும்.

  ஒரு பல்கலைக்கழகத்தில் புரபசராக முடியாது என்று நிச்சயமாகத் தெரிந்தவருண்டு. அன்னை வைஸ்-சான்ஸ்லர் ஆகும் வாய்ப்பை அளித்தார். அவருடைய குணவிசேஷம் அதைப் புறக்கணித்தது; அவரருகிலிருந்தவர் தம் நல்ல குணத்தால் அதைப் பெற்றார். இழந்தவர்க்கு தாம் இழந்தோம் என்பதே தெரியாது.

  ஒரு மாநிலத்தில் MLA ஆக முடியாதவர்க்கு அன்னை முதன் மந்திரியாகும் வாய்ப்பை அளித்தார்; ஆச்சரியப்பட்டார். கொஞ்ச நாளில் இழந்துவிட்டார். தினமும் நமக்கு நூறு வாய்ப்புகளை அன்னை அளிப்பதையும், நம் ‘விசேஷ குணங்கள்’ அவற்றை அழிப்பதையும் காண முயல்வது ஒரு யோகப் பயிற்சி.
   
 9. தன்னலம், கயமை, கண்மூடித்தனம் நம்முள் நிறைந்துள்ள வகையை நாம் கண்டுகொள்ள வேண்டும்.

  மனிதன் (unconscious) தன்னையறியாதவன்; கண்மூடித்தனமானவன். அவன் (conscious) தன்னையறிந்து, பிறகு இறைவனை அறிய வேண்டும் என்பதே இந்த யோகத்திற்குரிய அடிப்படை. சிலர் காலையிலிருந்து மாலை வரை பல முறை இடறி விழுவார்கள். பேனாவுக்கு இங்க் போடத் தரையெல்லாம் இங்க் ஆக்கிவிடுவார்கள். ஒரு டம்ளர் எடுக்கப் போனால், பல டம்ளர்களை உருள விடுவார்கள். இவர்களுக்கு, தமக்கு வேண்டுமென்பது மட்டும் தெரியும். எந்த டம்ளர் வேண்டுமோ, அது மட்டும் கண்ணில் படும். அதை எடுத்தால், மற்ற இரண்டு சாமான்களுடன் அது தொட்டுக் கொண்டிருப்பதால், அவையிரண்டும் உருளும் என்று தெரியாது. “பார்த்து நடக்கக்கூடாதா, கண்ணாயில்லை” என்று பிறர் கேட்பது போல் நடக்கும்போது பொருள் மீது காலை வைப்பார்கள்.

  அன்னைக்கு முக்கியமானது consciousness ஜீவியம்; விழிப்பாக இருத்தல். எனவே நாம் எந்த அளவு விழிப்பாக இல்லை என்று கவனமாகப் பார்த்தால்தான் தெரியும். பார்த்து, நம்மை conscious விழிப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். நான் எதையும் உருட்டுவதில்லை, உடைப்பதில்லையே என நினைக்கலாம். நம் அறையிலிருந்து வெளியே போனவுடன், அடுத்த நிமிஷம் திரும்பி உள்ளே வந்தால், புத்தகம் திறந்தபடியிருக்கும். நினைத்துப் பார்த்தால், மூடாமல் போனது நினைவிருக்காது. இது கண்மூடித்தனம். நம் கண்மூடித்தனம் நமக்குத் தெரிய வேண்டுமானால் நம் மேஜை, பெட்டி, அலமாரி, நாம் வேலை செய்யும் இடங்களிலுள்ள பொருள்களைப் பார்த்தால் தெரியும். சமையல் அறையில் எத்தனை பாட்டில் சரியாக மூடாமலிருக்கிறது, பெட்டியுள் எத்தனைப் பொருள்கள் அலங்கோலமாகக் கிடக்கின்றன என்பது இதை விளக்கும்.

  10 பனியன் வைத்திருப்பவர் தினம் ஒன்றை அவிழ்த்துப் போட்டால், அதை வெளுத்து, அடுக்கில் வைக்கின்றார்கள். சுமார் 1 மாதத்திற்குப் பின் பார்த்தால், மேலேயுள்ள 3, 4 பனியன்களே மாறி மாறி பயன்படுகின்றன. அடியிலுள்ளவற்றைத் தொடவில்லை என்று தெரியும். இத்தனை நாள் இதைக் கவனிக்காததும் தெரியும்.

  நாம் பேசும்பொழுது டேப் ரெக்கார்டரைப் போட்டு, அதில் சுமார் 20 நிமிஷப் பேச்சை ரெகார்ட் செய்து மீண்டும் கேட்டால், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது தெரியும். திரும்பத் திரும்பப் பேசினால், ஒரே விஷயத்தைப் பேசினால், அது unconsciousness நம்மை நாம் அறியாததாகும். நமக்கு ஒரு விஷயம் பிடிக்கும் என்றால், சுமார் 50 அல்லது 100 பேரிடம் அதை 3, 4 நாட்களில் சொல்லும் வழக்கம் நமக்குள்ளது என்று நமக்கே தெரியாது. அடுத்த முறை ஒரு விஷயம் மனதில் வந்தவுடன் - உதாரணமாகக் கின்னஸ் புத்தகத்தில் ஒன்றைப் படித்து அறிந்தபோது - நாம் அதைப் பிறரிடம் சொல்லும்பொழுதெல்லாம் குறித்துப் பார்த்தால், நம் பழக்கம் தெரியும்.

  மனிதன் சுமார் 98 பங்கு unconscious தன்னையறியாமல் இருக்கின்றான் என்கிறார் அன்னை. நாம் எந்த விஷயங்களில் நம்மை அறியாமலிருக்கின்றோம் என்று உணருவது அவசியம்.

  உலகில் சுயநலமும், கயமையும் மலிந்துள்ளன. அதற்கு நாம் செய்யக்கூடியது ஒன்றுதான். நம்மிடமிருந்து அவற்றை விலக்க வேண்டும் என்கிறார் பகவான். சுயநலத்திற்கும், கயமைக்கும் விளக்கம் தேவையில்லை. எல்லோரிடமும் நிறைந்துள்ளது என்றால், நம்மிடம் நிறைய இருக்க வேண்டும். அதைக் கவனித்துப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
   
 10. எதைக் கற்றாலும், அவை நடைமுறையில் பலன் தரும் வகையில் கற்க வேண்டும். குறைந்தபட்சம் நாம் செய்வது பலிக்க வேண்டும்.

  எலக்ட்ரிக் இன்ஜினீயருக்குப் பியூஸ் போடத் தெரியவில்லை; ஆட்டோமொபைல் இன்ஜினீயருக்குக் கார் ஓட்டத் தெரியவில்லை என்பது நம் நாட்டின் நிலை. வாழ்வைப் புறக்கணிக்கும் யோகத்தை, வாழ்வை ஏற்றுக்கொள்ளும்படிச் செய்தது அன்னை. வாழ்வு என்றால் செயல். நாம் ஆயிரம் விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். அதனால் பயனில்லை என்றால், அது அன்னைக்குச் சரி வாராது. யோகத்தை நடைமுறையில் பயன் தரும்படிச் செய்ய வேண்டும் என்பது அவர்கள் கொள்கை. இன்று நாம் பட்டம் பெறுகிறோம். கெமிஸ்ட்ரி, B.Sc. அல்லது M.Sc. படித்தவர் ஒரு லெபாரடரியில் வேலை செய்தால்தான் அவர் படிப்புப் பிறருக்குப் பயன்படும். சர்க்கார் ஆபீஸில் வேலை செய்தால் கெமிஸ்ட்ரி யாருக்கும் பயன்படாது. ஆனால், எந்தப் பட்டமாக இருந்தாலும் சர்க்காரில் வேலை கிடைக்கின்றது. கெமிஸ்ட்ரி யாருக்கும் பயன்படாவிட்டாலும், பட்டம் அவருக்கு வேலை கிடைக்கப் பயன்படுகிறது. அளவு கடந்து தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு படித்தவர் படிப்புப் பிறருக்கும் பயன்படுவது இல்லை. அவர்களுக்கே வருமானத்திற்கும் பயன்படுவதில்லை. கல்வி உயர்ந்தது. ஆனால், எதற்கும் பயன்படாத வகையில் அதைக் கற்பதைவிட ஏதாவது ஒரு வகையில் பயன்படும்படி நாம் அதை அமைத்துக்கொள்ள வேண்டும்.

  பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படித்திருக்கின்றேன். பிரசங்கம் செய்வேன். ஆனால் நான் செக்ரடரியாக இருக்கும் கிளப்பை (club) எனக்கு நிர்வாகம் செய்யத் தெரியவில்லை என்றால் கற்றது - ஏட்டுச் சுரைக்காய் - உதவாத படிப்பு.

  நான் பிரம்மத்தை உணர்ந்தவன் என்றால், அது உயர்ந்த ஞானம். ஆனால் என் குழந்தையை நையப் புடைப்பேன் என்றால், நீ உணர்ந்தது பிரம்மம் அன்று. எதையும் உணராதவனுக்கும், எவர்க்கும் “குழந்தை தெய்வம்” எனத் தெரியும். மரத்தையும், கல்லையும் பிரம்மமாக நீ உணர்ந்தது உண்மையானால், உன் குழந்தை உனக்குத் தெய்வமாகவே காட்சியளிக்க வேண்டும். அதுவே உன் ஞானம் உனக்குப் பயன்படும் முறை.

  அன்னை அளிக்கும் ஞானம் அனைத்தும் practical அன்றாட வாழ்வில் நேரடியாகப் பலன் தரக்கூடியவை. அன்னையின் எந்தக் கோட்பாட்டையும் செயல்படுத்த முடியும். அதனால் நாம் எதை ஏற்றுக்கொண்டாலும், அதன் practical aspect பயன் தரும் விளக்கம் எது என்று அறிய வேண்டும்.

  குறைந்தபட்சம் நம் கையால் செய்யும் காரியங்கள் அனைத்தும் பழுதின்றிக் கூடிவர வேண்டும்.
   
 11. மனம் அன்னையை நாடுவது உண்மையானால், அன்னை உன் வாழ்வில் பலிப்பார்.
   
 12. நிபந்தனையின்றி அன்னையை மட்டும் நாடும் மனநிலையே உண்மை sincerity எனப்படும்.

  Sincerity என்ற ஆங்கிலச் சொல்லை நாம் உண்மை என்று குறிக்கின்றோம். அன்னை ஆங்கில மொழியில் அச்சொல்லுக்கு இல்லாத ஒரு பெரிய அர்த்தத்தைப் புகட்டியுள்ளார். சுமார் 500, 600 இடங்களில் அதைப் பற்றிப் பேசுகிறார். “யோகத்திற்கு எந்தப் பயிற்சியும் தேவையில்லை; sincerity இருந்தால் போதும்” என்கிறார். யோகத்தை முழுமையாகப் பலிக்க வைக்கும் அப்படிப்பட்ட கருவி எது, அதன் முழு அர்த்தம் என்ன என்று நாம் அறிய விரும்புகிறோம். Sincerity உண்மைக்கு அத்தகைய சக்தியுண்டு. Sincerity உள்ளவர் பிரார்த்தனையும் செய்ய வேண்டாம்; தானே பலிக்கும். உலகில் sincerity உண்மையுள்ளவர் 100 பேர் இருக்கலாம் என்கிறார் அன்னை.

  நம் சொந்த அனுபவத்தில் ஒரு விஷயத்திற்காக 10 நாள் பிரார்த்தனை செய்கிறோம். அது பலிக்கிறது; நாம் சந்தோஷப்படுகிறோம். வேறொரு விஷயத்தில் அப்பொருளை நினைத்தமாத்திரத்தில் கிடைக்கிறது; நாம் ஆச்சரியப்படுகிறோம். இதை அனைவரும் பார்த்திருக்கின்றார்கள். முதல் விஷயம் டிரான்ஸ்பராக இருக்கும். அடுத்த விஷயம் நண்பனுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று இருக்கும். நம் டிரான்ஸ்பரை நாம் தீவிரமாக விரும்பினாலும், வேறு பல சிந்தனைகள் குறுக்கிடும். அவற்றை மீறிப் பிரார்த்தனை பலிக்க வேண்டுமானால், நீண்ட பிரார்த்தனை தேவை. நண்பன் ‘வேலை இல்லை’ என்று சொன்னவுடன், மனம் திகில் அடைகிறது. ஒரு மணி நேரத்தில் புதிய சந்தர்ப்பம் ஏற்பட்டு அவருக்கு வேலை கிடைக்கிறது. அவர் விஷயத்தில் மனம் (sincere) உண்மையாக இருக்கிறது என்று பொருள்.

  அன்னையை நெகிழ்ந்து விரும்புபவர்களில் பலருக்கு “இது பலித்துவிடப் போகிறதே” என்று உள்ளூரப் பயம் இருப்பதுண்டு. “இது பலித்தால் நான் அன்னையை முழுவதுமாக ஏற்றுக்கொண்டால், மற்றவையெல்லாம் என்னவாகிறது” என்ற பயம் சிலருக்குண்டு.

  அது போன்ற பயம் அன்னை பலிப்பதைத் தடை செய்யும். நமக்கு உண்மையான பக்தி உயர்ந்த அளவில் இருக்கும்பொழுதும், சாப்பாட்டில் ருசி இருக்கும்; நல்ல டிரஸ் செய்ய ஆசைப்படுவார்கள்; குழந்தைகள் மீது அளவிறந்த பாசம் இருக்கும்; சில்லறையான ஆசைகளும் இருக்கும்; தினமும் மாலையில் உலாவப் போவது ஒருவருக்கு முக்கியமாக இருக்கும்; வாய் ஓயாமல் பேசுவது இனிமை தரும். பக்தி சிறப்பானதானாலும், மற்ற நிலைகள் நிபந்தனைகளை விதிக்கும். அன்னையை unconditional நிபந்தனையின்றித் தேடினால், உடனே பலித்துவிடுவார். அந்த நிபந்தனையற்ற மனத்தை அன்னை sincerity உண்மையான மனம் எனக் கூறுகிறார்.

  உண்மை பூரணமானால், தரிசனம் நிதரிசனம்.
   
 13. மனத்தின் அறிவு வாழ்வில் பண்பாக வெளிப்படுகிறது. உணர்வின் சிறப்பும், உழைப்பின் அம்சங்களும் வாழ்வில் பயன் அளிக்கும் பண்புகளாக விளங்குகின்றன. அதே போல் ஆன்மா தழைத்து, வாழ்வில் மலர்வதால் ஆன்மீகப் பண்புகள் உருவாகின்றன. ஆன்மீகப் பண்புகளை மட்டும் ஏற்று, மற்றவற்றை விலக்கும் மனப்பான்மை தேவை.

  நேர்மை மனத்தின் பண்பு; நியாயம் அதன் அம்சம். இனிமை உணர்வின் பண்பு; உறவு அதன் அம்சம். அடுத்தவர் பிரம்மம் என்பது ஆன்மீகப் பண்பு. நேர்மையையும், இனிமையையும் புறக்கணித்து, அவற்றைவிட உயர்ந்த ஆன்மீகப் பண்பைப் பின்பற்றுவது எப்படி?

  சாதாரண மனிதன் மனத்தின் பண்புகளையும், உணர்வின் பண்புகளையும் பின்பற்றினால் போதும். தவற்றைப் புறக்கணித்து, சரியானவற்றைப் பின்பற்றினால் போதும். உயர்ந்தவர் சரியானவற்றையும் புறக்கணித்து, ஆன்மீகத்தைப் பின்பற்ற வேண்டும்.

  வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுப்பது நேர்மை. இனிமையாகப் பழகுவது நல்லது. ஆன்மீகத்தைப் பின்பற்றுபவர் ஒருவர், தாம் பெற்ற கடனைத் திருப்பித் தர முயலும்பொழுது சமர்ப்பணம் செய்தால், ‘தாராதே’ என்ற குரல் உள்ளிருந்து எழுந்தால், “நேர்மையைப் புறக்கணித்துச் சமர்ப்பணத்தைப் பின்பற்றுவதா?” என்ற கேள்வியை எழுப்பாமலிருந்தால், தாம் அன்று அப்பணத்தை அவரிடம் திருப்பித் தாராவிட்டால், மறுநாள் அவர் வீட்டில் களவு போனது தெரியவருகிறது. முதல் நாள் நாம் பணத்தைக் கொடுத்திருந்தால், அதுவும் களவு போயிருக்கும் என்று பின்னால் தெரிகிறது.

  மட்டமான பழக்கத்தை விட்டு, உயர்ந்த பழக்கத்தை ஏற்றுக் கொள்வது போல மனத்தின் பண்புகளை விட்டு, ஆன்மீகப் பண்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
   
 14. நம்மைச் சார்ந்தவர்கள் செய்யும் காரியங்களுக்கும் பொறுப்பை ஏற்காவிட்டால், பொறுப்பேற்றதாகாது.

  “நாம் செய்யும் காரியங்களுக்கு மட்டும் நாம் பொறுப்பு; பிறர் செய்வதற்கு நாம் பொறுப்பல்ல” என்பது நாம் பின்பற்றுவது. “நம்மைச் சார்ந்தவர்கள் அனைவர் செய்வதற்கும் நாமே பொறுப்பு” என்பது அன்னையின் யோக வாழ்க்கைக்குரிய நியதி.

  மனித வாழ்வில் மனிதன் சுயநலம் பாராட்டுகிறான். தன் நலத்தை நாடுகிறான்; மற்றவர் நலத்தை நாடுவதில்லை. அதனால் மற்றவர்கள் அவனுடைய பொறுப்பல்லர். ஒருவர் வருமானம் மற்றவர்க்குப் போவதில்லை. ஒருவர் புத்திசாலித்தனம் அடுத்தவர்க்கு உதவாது. ஒருவர் உடல்நலம் பிறருக்குப் பயன்படாது. ஏனென்றால், ஒவ்வொருவரும் தனியாக அமைந்துள்ளார்கள்.

  ஆன்மீக வாழ்வில் ஒருவர் சித்தி பெற்றால், அவருக்கு முன்னுள்ள 21 தலைமுறையில் உள்ள ஆத்மாக்கள் அதன் பயனைப் பெறும். அவர் வழி வந்தவர் அனைவருக்கும் அந்த ஆன்மீகப் பலன் ஓரளவு இருக்கும்; இருக்காமலிருக்காது. கணவன் செய்யும் புண்ணியம் மனைவிக்குண்டு. குருவின் யோகானுபவம் சிஷ்யனுக்கு அவன் அளவில் உண்டு. ஓர் உயர்ந்த ஆத்மா பிறந்தால், அதைச் சுற்றியுள்ள இடங்கள் செழிப்புப் பெறும். ஆன்மீக வாழ்வு அனைவரையும் ஒன்று சேர்க்கும் தன்மையுடையது என்பதால், ஒருவருடைய யோகப் பலன் அவரைச் சார்ந்த அனைவருக்கும் உண்டு. அதே போல் அனைவர் செய்யும் காரியங்களின் பொறுப்பு அவரைச் சாரும். அப்பொறுப்பை உணர்ந்து ஏற்கும் மனப்பான்மை உயர்ந்த வாழ்க்கைக்கு ஒருவரைத் தகுதியடையவராக்கும்.

  ஒரு காரியத்தில் 10 பேர் சம்பந்தப்பட்டிருந்தால், அது கெட்டுப் போனால், ஒவ்வொருவரும் ஒரு வகையில் கெட்டுப்போனதற்குக் காரணமாக இருப்பார்கள். அவருள் ஒருவர் அன்னை பக்தரானால், அவர் தம் பங்கு என்ன என்று கண்டு அதை மட்டும் மாற்றிக் கொண்டால், அக்காரியம் அவர் ஒருவர் மனம் மாறியதாலேயே மீண்டும் கூடிவரும். இது யோக உண்மை; நடைமுறையில் பார்க்கலாம்.book | by Dr. Radut