Skip to Content

முன்னுரை

வலிமை சரணாகதியால் முழுமையான எளிமையாகிறது

எளியவன் பலஹீனத்தால் வலியவனுக்கு அடங்குவது அடிமைக்குரிய தோல்வி. வலிமை மிகுதியால் முழுமையை நாடும் பொழுது தன் அதிகாரத்தைக் கைவிட்டு அன்பை மேற்கொண்டு எளிமையாவது சரணாகதி.

ராஜயோகம் ஞானயோகத்தின் முழுமை. மனத்தின் பகுதியான எண்ணம் யோகத்தின் கருவியாவது ஞானயோகம். முழுமனமும் யோகத்தை மேற்கொள்வது ராஜயோகம். கீதையின் யோகம் ராஜயோகத்தைக் கடந்தது. அது தேடுவது மோட்சம். அதன் கருவி சரணாகதி. மனம் ஏற்ற தர்மங்களைக் கைவிடுவது கீதையின் சரணாகதி.

தந்திரயோகம் நம் நாட்டில் உயர்ந்த நிலையை எட்டியது. அது எல்லா யோகங்களின் சாரத்தைத் தன்னுட் கொண்டது. யோக வரிசையில் தந்திரம் பூரணயோகத்திற்கு முன்னுள்ளதாக ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். மனித ஜீவனின் பகுதிகளான ஆன்மா, மனம், உயிர், உடல் ஆகியவற்றிற்கு ஜீவாத்மாவின் பகுதிகளான அன்னமயப்புருஷன், பிராணமயப்புருஷன், மனோமயப்புருஷன், சைத்தியப்புருஷனுண்டு. அவை வளராத ஆன்மா. வளரும் ஆன்மாவை சைத்தியப்புருஷன் என்கிறார். சைத்தியப்புருஷன் ஜீவனின் எல்லாப் பகுதிகட்கும் உண்டு. மனம் ஏற்பட்ட பின்னரே சைத்தியப்புருஷன் வெளிவருகிறான். இவன் வளர்ச்சிக்கு இரு திசைகள் உள்ளன. மேலே வளர்ந்து ஈஸ்வரன் என்ற சத்திய ஜீவனாகிறான். அதே சமயம் கீழே போய் உடலில், உடலின் சைத்தியப்புருஷனாகிறான்.

தந்திரயோகம் மனிதனை உடலில் உள்ள ஆத்மாவாக, அன்னமயப்புருஷனாகக் கருதி உடலுக்குரிய ஆசனங்களாலும், உயிருக்குரிய பிராணாயாமத்தாலும், அறிவுக்குரிய ஜபத்தாலும் குந்தளினியை எழுப்பி, சகஸ்ரதளம் வழியாக மோட்சம் பெறுகிறது. மனம் ஏற்பட்டு விட்டதால், மனத்திற்குரிய வளரும் ஆன்மாவான சைத்தியப்புருஷன் வெளிவரமுடியும் என்பதால், யோகத்தைப் பாதாளத்தில் ஆரம்பிக்க வேண்டியதில்லை. மனத்தில் ஆரம்பிக்கலாம் என்பது ஸ்ரீ அரவிந்தம். நமது இலட்சியம் மோட்சமில்லை என்பதால் நாம் மனோமயப் புருஷனை நாடாமல் மனத்தின் சைத்தியப்புருஷனை நாடலாம். மனத்தின் சைத்தியப்புருஷன் இருபுறமும் வளர்கிறான். மேல் நோக்கி வளரும்பொழுது தந்திரயோகத்தின் முடிவான சக்கரமான சகஸ்ரதளத்தைத் திறக்கிறான். அதன் வழி சத்தியஜீவிய சக்தி, ஜோதி, மற்ற எல்லா சக்கரங்களையும் அடைந்து முடிவாகக் குந்தளினியையும் அடைந்து ஜீவனின் பகுதிகளைத் திருவுரு மாற்றுகிறது. இது பூரணயோகம். இதன் கருவி சரணாகதி. ஜீவனின் வலிமை மனத்தில் மிகுதியானபொழுது, மோட்சம் பெறும் தகுதியைச் சரணடைந்து சத்தியஜீவனாகத் திருவுருமாற முயல்வது ஸ்ரீ அரவிந்தம் எனப்படும் பூரணயோகம்.

ஆன்மா, மனம், உயிர், உடல் ஆகியவை பகுதிகள் என்பதுபோல் சத்து, சித்து, ஆனந்தம் ஆகியவையும் பகுதிகளே. முழுமைக்குரியது பிரம்மம். அது அசைவற்ற பிரம்மம். அசைவு முழுமையைக் குலைக்கும், கலைக்கும். அசைவற்ற பிரம்மம் அசைவில் தானிழந்த முழுமையை மீண்டும் பெறுவது பிரம்மத்தின் முழுமை சிறப்புப் பெறுவதாகும். பிரச்சினையில்லாத பொழுதுள்ள சாந்தம் பிரச்சினையால் கலைகிறது. பிரச்சினையின் பொழுது கலைந்த சாந்தம் மீண்டும் வருவது சாந்தம் சிறப்புற்று, முழுமை பெறுவதை முழுமையின் சிறப்பு எனலாம்.

  • முழுமையான பிரம்மத்தை அறிவது பிரம்ம ஞானம்.
  • அந்த ஞானம் சமர்ப்பணமாவது பிரம்மார்ப்பணம்.
  • பிரம்ம ஞானம், பிரம்மார்ப்பணத்தால் தரும் பலம் பிரம்ம ஜனனம்.
  • சிருஷ்டி சரணாகதியால் திருவுருமாறி அசைவற்ற முழுப் பிரம்மம் அசைவில் தன் முழுமையைச் சிறப்பாகப் பெறும் ஆனந்தம் பிரம்மம் தேடும் ஆனந்தம். 

மனத்தின் அகந்தை, கர்வமாகத், திமிராக செலுத்தும் அதிகாரம் சைத்தியப்புருஷனால் இறைவனின் கருணையான அன்பாக மாறுவது திருவுருமாற்றம். இதைப் பூர்த்தி செய்யும் நிபந்தனை சத்தியம், மெய். கருவி சரணாகதி.

நம்மால் முடியாததைப் பிறரைச் செய்யச் சொல்வது கயமை என்கிறார் அன்னை. பிறரால் முடியாததை நாம் நம் முயற்சியால் அவருக்குப் பெற்றுத் தருவது பெருந்தன்மை. கயமை பெருந்தன்மையாகும் மார்க்கம் சரணாகதி.

இறைவன் தன் வலிமையைப் பொருட்படுத்தாது எளிமையான மனிதனின் பார்வைக்காக அவனைப் பின்தொடர்வது வலிமையின் சிகரம் கருணையால் இனிமையாவதாகும். அப்பாதையைச் சரணாகதி என யோகம் கூறுகிறது.

அஞ்ஞானத்துள் அமிழ்ந்துள்ள அசைவற்ற பிரம்மம் தான் மறைந்ததை நினைவு கூறி அஞ்ஞானத்தினின்று வெளிவந்து ஞானம்பெற முயலும்பொழுது தன் வலிமையைப் பயன்படுத்தாமல், எளிய அடக்கத்தைக் கைக்கொண்டு அஞ்ஞானத்துள் ஒளிந்துள்ள ஞானமான ஒளியை வெளிக்கொணர பயன்படுத்தும் நோக்கமான கருவி சரணாகதி. அதன் வழி அஞ்ஞானத்தின் ஞானம் அடிப்படையான மறைந்துள்ள பிரம்மத்தை நாடுவதால் சரணாகதியால் பூரண யோகம் பூர்த்தியாகிறது.

டிசம்பர் 20, 2002                                                                                                            கர்மயோகி



book | by Dr. Radut