Skip to Content

பகுதி 2

நண்பர் - மனத்திற்கு முழுமையில்லை.

அன்பர் - அது சரி.

நண்பர் - ஸ்ரீ அரவிந்தம் என்பதை "முழுமை'' என்றே கூறலாம். சிருஷ்டி ஆரம்பிக்கும் முன் முழுமை, சிருஷ்டி முழுமை, பரிணாமம் முழுமை.

அன்பர் - எல்லாமே முழுமை.

நண்பர் - மனத்திற்கு முழுமையில்லை என்பதால் மனத்தால் சிருஷ்டிக்க முடியாது என்று மனத்தைவிட்டு சத்தியஜீவியத்திற்குப் போகிறார்.

அன்பர் - சத்தியஜீவியத்திற்கு முழுமையுண்டு. அதனால் அது சிருஷ்டிக்கலாமன்றோ?

நண்பர் - சச்சிதானந்தத்திற்குள்ள முழுமை (unitarian) பிரிக்க முடியாத முழுமை. அதனால் சச்சிதானந்தம் சிருஷ்டிக்க முடியாது.

அன்பர் - சத்தியஜீவியத்திற்கு?

நண்பர் - இதற்குள்ள முழுமை, முழுமையை விடாமல் பிரிந்து நிற்கும் தன்மையுடையது. சிருஷ்டிக்கு முழுமை வேண்டும். பிரிய வேண்டும். இவையிரண்டும் சத்தியஜீவியத்திற்குண்டு.

அன்பர் - நாட்டில் வேலை செய்வது நிர்வாகம், அதிகாரிகள், பார்மெண்ட்டிலில்லை, கலெக்டரும், தாசில்தாருமில்லை என்பது போலவா?

நண்பர் - நல்ல உதாரணம். பார்லிமெண்ட்தான் எல்லாம் என்பது சரி. பார்லிமெண்ட்டோ மந்திரி சபையோ நடைமுறையில் செயல்படவில்லை. நிர்வாகம் செயல்படுகிறது.

அன்பர் - உதாரணம் எதைக் கூறுகிறது?

நண்பர் - அதற்குமுன் நாம் எதை சிருஷ்டி என்று நினைக்கிறோம் என்று தெளிவுபட வேண்டும்.

அன்பர் - சிருஷ்டி என்றால் உலகம் உற்பத்தியான வகைதானே.

நண்பர் - சமூகம், சர்க்கார், மார்க்கட், மழை, இயற்கை செயல் படுவதை நாம் அறிவோம்.

அன்பர் - சரி. எலக்ட்ரிக் பில் கட்டாவிட்டால் கரண்ட் போய்விடும். லைசென்ஸ் இல்லாமல் பிசினஸ் செய்தால் அபராதம் வரும். சப்ளை அதிகமானால் விலை குறையும். மழை?

நண்பர் - புரிந்தால் சரி. புரியாவிட்டால் மூட நம்பிக்கை வரும்.

அன்பர் -Social determinism, market determinism என்று கூறுகிறோம். மழை nature's determinismமா?

நண்பர் - இப்படிச் செய்தால் அப்படி நடக்கும் என்பது சட்டம். அதற்கு determinism என்று பெயர். வேலை செய்தால் கூலி வரும். பள்ளம் நோக்கி நீர் ஓடுவது, காந்தம் ஈர்ப்பது, மின்னலுக்குப் பின் இடி இடிப்பது இயல்பு. Nature's determinism என்பது என்ன? அதுவே சிருஷ்டி.

அன்பர் - மழையில் நனைந்தால் ஜுரம் வருவது உடலுக்குரியது. மரம் பழுத்துப் பலன் தருவது இயற்கைக்குரியது.

நண்பர் - சமூகம், சர்க்கார், ஊர், மார்க்கட் போக மழை, இடி மின்னல், உடல்நலம், பிறப்பு, இறப்பு, ஜீவராசிகள் வளர்வது சிருஷ்டி.

அன்பர் - அதை determine நிர்ணயிப்பது சத்தியஜீவன் என பகவானும், மாயை என ரிஷிகளும் கூறுகிறார்களா?

நண்பர் - நம்மூரில் பாலம் கட்டுகிறார்கள். அதை இன்ஜீனீயர் கட்டுகிறார், எல்லாம் சர்க்கார் செய்வது, நாமே நமக்குச் செய்து கொள்வது, எனப் பலவகைகளாகக் கூறினாலும், 10ஆம் திட்டத்தில் பாலங்கள் கட்டப் பணம் ஒதுக்கினர். அதன் மூலம் நம்மூருக்குப் பாலம் வருகிறது. இந்தப் பாலத்தைக் கட்ட முடிவு செய்தது யார்? யாருக்கு அந்த அதிகாரம் உண்டு என்பது முக்கியம்.

அன்பர் - எல்லாக் கலைக்டரும் பாலங்கள் கட்ட முயன்றால் 10ஆம் திட்டப் பணம் மாநிலச் சர்க்காருக்கு வந்தபொழுது சீப் இன்ஜீனியரை எந்த எந்தப் பாலங்கள் கட்டவேண்டும் என்று நிர்ணயிக்கச் சொல்வார்கள்.

நண்பர் - சிருஷ்டியில் அந்த இடம் சத்தியஜீவியத்திற்குண்டு.

அன்பர் - மாயைக்கில்லை, மாயை பார்லிமெண்ட் போலவா?

நண்பர் - சர்க்காரில் எந்த வேலையையும் நிர்ணயிக்க அதிகாரி குறிப்பிடப்படுவதுபோல் சத்தியஜீவியம் சிருஷ்டியில் செயல்படுகிறது.

அன்பர் - அப்படித்தான் மழை பெய்கிறதா?

நண்பர் - ஆம். மழை Nature's determinism. அது சத்தியஜீவியத்திற்கு உட்பட்டது. நாம் வாழ்க்கைக்கு உட்பட்டால், மழை அதன் இஷ்டத்திற்குப் பெய்யும். நமக்கு சத்தியஜீவியமிருந்தால் நம் இஷ்டத்திற்குப் பெய்யும்.

அன்பர் - ஏன் இதை விஞ்ஞானிகள், ரிஷிகள் கூறவில்லை.

நண்பர் - யாரும் பல விஷயங்களை விளக்கலாம். எல்லா விஷயங்களையும் விளக்க முடியாது என்பதால் விட்டுப் போகிறது. சத்தியஜீவியம் எல்லாவற்றையும் விளக்கும்.

அன்பர் - விபரமாகச் சொல்லவேண்டும்.

நண்பர் - முக்கியமாக மனிதன் எப்படி சிருஷ்டிக்கப்பட்டான் என்று கூற முடியவில்லை என்பவர்கள் எதுவும் சொல்வதில்லை. ஸ்ரீ அரவிந்தம் அதையும் கூறும். நாம் ஊரிலிருந்து வீட்டுக்கு வருகிறோம். நாம் வந்த 5 நிமிஷம் கழித்து தற்செயலாக மாமாவின் நண்பர் வருகிறார். ஒரு பெரிய நல்லது நடக்கிறது. இதை chance என்கிறோம்.

அன்பர் - வேறெப்படிக் கூறமுடியும்.

நண்பர் - இதை Cosmic determinism இறைவன் நிர்ணயித்த செயல் என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார், விளக்குகிறார். அதனுள் மனிதன் பிறந்த வரலாறு உள்ளது. சிருஷ்டி விளங்கும்.

அன்பர் - கேட்க ஆவலாக இருக்கிறேன்.

நண்பர் - நாம் வாழ்விலிருந்தால் வாழ்வு நம் வாழ்வை நிர்ணயிக்கும். ஆத்மாவிலிருந்தால் நாம் வாழ்வை நிர்ணயிப்போம் என்பதை முதல் பலனாகக் கண்டுவிட்டால், விளக்கம் பிறகு எளிதில் புரியும்.

அன்பர் - அது அன்பர்கட்குத் தெரியும்.

நண்பர் - பெரும்பாலும் தெரிவது 100% தெரிந்தால் நல்லது.

அன்பர் - விளக்கத்தை முதலில் கேட்போம்.

நண்பர் - இந்த அவசரம் Nature's determinism. அன்னை புதிய ஞானத்தை நமக்குப் பலனாகக் கொடுக்கிறார்கள்.The Life Divineஇல் P.288 முதல் 321 வரை சிருஷ்டியின் இரகஸ்யத்தை விவரிக்கிறார். 303, 304, 305இல் முக்கியக் கருத்து வருகிறது. இதைப் புரிந்து கொள்வது எளிதன்று. செயல் இதைக் கண்டவர்க்குப் புரிய வாய்ப்புண்டு.

அன்பர் - அன்பர்கள் அனைவரும் செயல் கண்டவர்கள் தானே.

நண்பர் - ஒரு முறை தவறாமல் பலித்தால்தான் செயல் கண்டதாகும்.

அன்பர் - அது முடியுமா?

நண்பர் - அது அவசியம். அது இல்லாமல் புரிய அதிகப் படிப்பு தேவை.

அன்பர் - ஒன்று தவறாமல் என்றால் என்ன?

நண்பர் - நமக்கு உலகம் என்பது நம் உலகம். நம் உலகில் பலருக்கு நடக்காதது நமக்கு நடக்கிறது. நமக்கு நடக்க வேண்டியது எதுவும் பிரார்த்தனைக்குத் தவறக் கூடாது.

அன்பர் - அது சரி. ஒன்று படிப்பு வேண்டும் அல்லது பக்குவம் வேண்டும். அதன்பிறகு புரியுமா?

நண்பர் - அதுவே உலகில் கடைசி இரகஸ்யம். அதன்பிறகு புத்தகம் புரியும். இரகஸ்யம் விளங்கும். விளங்காவிட்டால் எவரும் உங்களுக்கு விளக்க முடியும். மேலும் ஒன்று, இதுவரை சொன்னது உள்ளது. இனி சொல்லப் போவது இல்லாதது. நமக்கு எந்த வகையிலும் கட்டுப்படாதது கட்டுப்பட்டால், அது cosmic determinism சத்தியஜீவியம் செய்தது எனக் கொள்ளலாம்.

அன்பர் - அது பெரிய விஷயமன்றோ!

நண்பர் - ஒரு வகையில் பெரிய விஷயம். மற்றொரு வகையில் இல்லை. நம் நண்பர் நாட்டைவிட்டு 10 ஆண்டுகட்கு முன் போனார். போனவுடன் கடிதம் எழுதினார். 10 ஆண்டாகத் தொடர்பில்லை. இவர் நம் உணர்ச்சிக்கு

உட்பட்டவர் என்பதால் இவரிடம் செய்யும் சோதனை பெரியதாகாது. தொடர்புவிட்டுப் போனதால் பெரியது.

அன்பர் - என்ன சோதனை?

நண்பர் - இவர் இன்று நம்மிடம் தானே தொடர்பு கொள்வது சோதனை.

அன்பர் - பிரார்த்தனை செய்தால் நடக்கும்.

நண்பர் - அது இல்லை. பிரார்த்தனை நமக்காக. நமக்காகவோ, அவருக்காகவோ நடப்பது human action in our plane நமக்காக நடப்பது. அது இல்லை.

அன்பர் - Human action இல்லாத சோதனையா?

நண்பர் -Cosmic determinism சத்தியஜீவியச் செயலைக் காணவேண்டுமானால், நம் விருப்பம் விலக வேண்டும்.

அன்பர் - எப்படிச் செய்வது?

நண்பர் - நான் சத்தியஜீவிய செயலைக் காண வேண்டும். அது எனக்காகவோ, நண்பருக்காகவோ கூடாது. சத்தியஜீவியச் செயலாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் ஒரு தேதி குறிப்பிட்டு அன்று நண்பரிடமிருந்து செய்தி வரவேண்டும் என்று முடிவு செய்து, முடிவிலிருந்து மனத்தையும், அகந்தையையும், காலத்தையும் விலக்கினால் அது நடக்கும்.

அன்பர் - மனத்தை விலக்குவது எனில் நினைக்கக் கூடாது. காலத்தை எப்படி விலக்குவது?

நண்பர் - எதிர்பார்க்கக் கூடாது.

அன்பர் - அது எப்படிக் காலத்தை விலக்கும்?

நண்பர் - கடந்ததும், வருவதும் காலத்திற்குரியன. நிகழ்காலம் காலத்தைக் கடந்தது.

அன்பர் - நாம் விலகினால் மனம் சத்தியஜீவியமாகும்.

நண்பர் - ஆம்.

அன்பர் - அன்று நண்பரிடமிருந்து செய்தி வந்தால் சத்தியஜீவியம் செயல்படுவதாகப் பொருள்.

நண்பர் - இதைப் பார்த்தபின் புத்தகம் புரியும்.

அன்பர் - அதற்கப்புறம் சொல்வீர்களா?

நண்பர் - உங்களுக்கே புரியும். இப்பொழுதே சொல்கிறேன்.

அன்பர் - சரி.

நண்பர் - பிரம்மம் ஜடமாக மாற முடிவு செய்தது.

பிரம்மம் ஆனந்தம் தேடி மறைந்தது.

ஆனந்தம் தேட மறைய வேண்டும்.

தலைகீழே மாறி ஜடமாக மறைந்தது.

ஜடத்திலிருந்து பிரம்மம் வெளிவந்தது.

ஜடம் சிறியது, பிரம்மம் பெரியது.

சிறியதிலிருந்து பெரியது வெளிவரும்பொழுது,

இடையில் ஏராளமான நிலைகள் உண்டு. அது infinite in number .

அவற்றிற்கு ரூபம் உண்டு. ரூபத்தை ஒருவர் நிர்ணயிக்க வேண்டும். அந்த நிர்ணயம் சிருஷ்டி. ஜடம், வாழ்வு, மனிதன், தெய்வம் என்ற வளரும் நிலைகளில் ரூபம் வெளிப்படுகிறது. ரூபங்கள் அனந்தம். அதை யார் நிர்ணயிப்பது. அதுவே cosmic determinism சத்தியஜீவிய சிருஷ்டி, ஜடமாக மாற முடிவு செய்தது பிரம்மம்.

அவனே மாற முடிவு செய்தது பிரம்மம்.

அவனே ரூபத்தையும் முடிவு செய்கிறான்.

ரூபத்தை முடிவு செய்தவன் ரூபத்தின் வளர்ச்சி, மாறுதல்களையும் முடிவு செய்கிறான்.

அந்த முடிவின் விளைவாக ஏற்பட்டது உலகம்.

அன்பர் - எளிதாக இருக்கிறதே. இதேபோல் மாயை மூலம் விளக்க முடியாதா?

நண்பர் - புரிவது எளிது என்பது ஏற்கனவே சக்தியை அனுபவித்ததால் புரிகிறது. இதற்கு மேலும் விஷயம் உண்டு. புரிந்தால் செய்ய வேண்டும். மாயையை இப்படிக் கூற நாம் பிறரைக் காவியம் எழுதச் சொல்ல முடியாது. எனக்கு எழுத வாராது. அமெரிக்கா நண்பரிடம் என்னைப் போனில் கூப்பிடச் சொல்ல முடியும் என்பதால் இதை விளக்க முடியும், புரிந்து கொள்ள முடியும்.

அன்பர் - காவியத்தைப் பற்றி இன்னும் சொல்லவில்லையே.

நண்பர் - அதற்குமுன், அமெரிக்க நண்பரைப் போனில் கூப்பிடச் சொல்வதை அதிகபட்சத்திற்குக் கொண்டு போவது என்பது உண்டு.

அன்பர் - அதைத்தான் Token act என்று சொல்கிறீர்களா?

நண்பர் - Token actஐப் பெரியதாகச் செய்தால் சிருஷ்டியின் இரகஸ்யம் விளங்கும், The Life Divine புரியும். அன்பர் - கவி, ஷேக்ஸ்பியர் பற்றிக் கூறுங்கள்.

நண்பர் - நாம் வாயால் பேசுவது நிற்காது. மனதால் பேசுவது கொஞ்ச நாள் நிற்கும். நம்முள் உள்ள பரப்பிரம்மம் பேசுவது அழியாது. ஷேக்ஸ்பியர் அப்படிப் பேசுகிறார். ஷேக்ஸ்பியர் பேசுவதை நம்முள் உள்ள பரப்பிரம்மம் கேட்பதால் அது நமக்கு நன்றாக உள்ளது.

அன்பர் - நமக்குள் உள்ள பரம்பொருள் மேல் வந்து பேசாதா?

நண்பர் - பெரிய ஆத்மாவுக்குப் பேசும். ஆவி உலகம் என்பது நம் நாட்டில் அனைவரும் அறிவது. மேல்நாட்டிலும் உண்டு. இவ்வளவு இல்லை. நம் நாட்டுச் சூழலில் சைத்தியப்புருஷன் இருப்பதால் ஆவியை நாம் பார்க்க முடிகிறது. ரிஷிகள் ஆவியை அறிவார்கள். இறக்கும் சமயம் தற்கொலை செய்து கொள்பவனுக்கு உயிரோடு இருக்க அளவு கடந்த ஆர்வம் எழும். கவியின் ஆர்வம் அவனுள் உள்ள பரம்பொருளைத் தொட்டு எழுப்புவதுபோல் தற்கொலை செய்பவன் மனம்

துடிக்கும். அத்துடிப்பு அவன் உருவத்தை உயிர்பெறச் செய்வது ஆவி.

அன்பர் - பரப்பிரம்மமா, பரம்பொருளா?

நண்பர் - பகவான் பரப்பிரம்மம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். நாம் அதைப் பரம்பொருள் எனவும் கூறுவோம். சூன்யம் என்று ஒன்றில்லை.

அன்பர் - இது புதியதாக இருக்கிறதே!

நண்பர் - காற்று வீசுவதை நாம் அறிவோம். காற்று அசையாமலும் இருப்பதுண்டு. நாம் அப்பொழுது காற்று அசையவே இல்லை என்கிறோம். காற்றேயில்லை என்று கூறுவதில்லை. அப்படிக் கூறினால் அது தவறாகும். காற்றில்லாத இடமில்லை.

அன்பர் - அப்படிச் சொன்னால் தவறு பெரியதாகுமே.

நண்பர் - நாம் மயக்கமாக இருந்தால் unconscious எனக் கூறுகிறோம். மயக்கமருந்து சாப்பிட்டபொழுதும், மந்திரம் செய்தபொழுதும் (hypnotic), நாம் unconsciousஆக இருப்பதாகக் கூறுகிறோம். இதை ஸ்ரீ அரவிந்தர் சுட்டிக்காட்டுகிறார். Unconscious என்பது ஜடம், கல், மரம் போன்றது, உயிரற்றது. மயக்கம், தூக்கம், hypnosis, குளோரபாம் மயக்கத்தில் உயிர் போவதில்லை. இதற்குரிய சொல் subconscious என்கிறார். எதிர்வீடு என்பதை எதிர் என்ற சொல்லை முக்கியமாகக் கருதி எதிரி வீடு என்றால் விபரீதமாகும். விஷயம் முக்கியம்,

சொல்லில்லை. மனம் சொல்லைக் கருதும். சங்கரருக்குச் சொல்லே முக்கியம் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

அன்பர் - இது சரி, சிருஷ்டிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

நண்பர் - Non-existence என்பது சொல்லைக் கருதினால் சூன்யமாகிறது. விஷயம் தடம் மாறுகிறது. இது மனத்தின் குறுகிய நோக்கால் எழுவது. அதனால் ரிஷிகள் தடம் மாறி உலகை மனம் சிருஷ்டித்தது என்றனர். வேறு ரிஷிகள் அகந்தையே உலகை சிருஷ்டித்தது என்றனர்.

அன்பர் - சத்தியஜீவியம் உலகை சிருஷ்டித்தது என்பது ரிஷிகள் கூறுவதைவிட சரி என நிரூபிக்க வழியுண்டா?

நண்பர் - இதற்குப் பதில் கூறுமுன் ரிஷிகளை ஏன் நாம் வணங்குகிறோம், போற்றுகிறோம், தெய்வங்களைவிட உயர்ந்தவர்கள் என புராணங்கள் கூறுகின்றன எனப் பார்ப்போம்.

அன்பர் - அவர்கட்கு சக்தியுண்டு, வரம் தருவார்கள், கோபம் வந்தால் சபித்துவிடுவார்கள்.

நண்பர் - ஒருவர் ஞானத்தை அவருடைய power சக்தி மூலம் தெரிந்து கொள்கிறோம்.

அன்பர் - பிரார்த்தனை பலித்தால் கோயில் பிரபலமாகும், மகான் மகா புருஷராவார்.

நண்பர் - அதே காரணத்தால்தான் Science பிரபலமாகி விட்டது.

அன்பர் - பணம் பிரபலமானதன் காரணமும் அதுவே.

நண்பர் - அதே சட்டப்படி சத்தியஜீவியம் சிருஷ்டித்ததை நிரூபிக்கலாம். ஒரு கடையில் எந்த பொருளும் கிடைக்குமென்றால் கிடைப்பது வாங்குபவருடைய பணவசதியைப் பொருத்தது.

அன்பர் - கடையின் தகுதி, திறனை எப்படி நிர்ணயிப்பது?

நண்பர் - ஜவுளிக்கடையில் பேப்பர் கிடைக்காது. ஏனெனில் அவர்கள் விற்பதில்லை, விற்க முடியாது என்பதில்லை. உலகில் இல்லாத பொருளை ஒரு கடை விற்க முடியாது. உலகில் இருந்தாலும் ஜவுளிக்கடையில் கார் வாங்க முடியாது. அவர்கள் முயன்றாலும் அவர்களால் கார் விற்க முடியாது. அது முடியும் என்றாலும் plane விற்க முடியாது.

அன்பர் - கடைக்கு லிமிட் உண்டு. வாடிக்கைக்காரருக்கு லிமிட் உண்டு. உலகில் பொருள்கள் உற்பத்தியாவதற்கு லிமிட் உண்டு. T.V,cell phone, சிறு அளவில் வந்தாலும் ஜலதோஷத்திற்கு மருந்தில்லை. பொம்மை பேசாது. வெள்ளைக் காக்காயில்லை.

நண்பர் - இன்று உலகில் உள்ள எந்தப் பொருளையும் சிருஷ்டித்தது சத்தியஜீவியம் என்பதை நாம் அறியவேண்டுமானால், முதல் நம் உலகில் இதுவரை வாராத பொருள்களை சத்தியஜீவியம் கொண்டு

வருவதைப் பார்க்க வேண்டும். உலகில் உள்ளவை, நமக்கில்லை என்ற நிலை சத்தியஜீவியம் மாற்றும் என்பதை நாம் காணலாம்.

அன்பர் - ரிடையரான பின்னும் சொந்த வீடில்லாதவருக்குச் சொந்த வீடு வருவது போன்றது.

நண்பர் - ஆம். நீங்கள் சொல்வதை வருமானம் என்று புரிந்து கொள்வார்கள். அது இல்லை. நடக்காதது நடப்பதாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

அன்பர் - அது எல்லா அன்பர்கட்கும் நடந்துவிட்டதே!

நண்பர் - If a devotee exhausts his potential he can create fresh potential endlessly.அன்பர் பெற்றது போக, தனக்குள்ள தகுதிக்குள்ளதை எல்லாம் பெற்றுக் கொண்டால், புதிய தகுதிகளைத் தொடர்ந்து முடிவில்லாமல் ஏற்படுத்தலாம்.

அன்பர் - இதை வருமானம், அதிர்ஷ்டம் என்று கருதுவார்கள்.

நண்பர் - அப்படிப் போனால் தத்துவம் புரியாது, விட்டுப் போகும். நடக்காதது நடப்பதை வெளியில் காண்பதைவிட, நம் வாழ்வில் காண்பது சுலபம். நடக்காதது நடப்பதைக் கண்ணுற்றபின் நடப்பது எப்படி நடக்கிறது என அறிய முடியும்.

அன்பர் - அது சிருஷ்டியின் இரகஸ்யத்தை அறிவதாகும்.

நண்பர் - நாம் சிருஷ்டியை அறிய முயன்றால், அன்னை நமக்கு சிருஷ்டிக்கும் சக்தியை அளிக்கிறார். அதன்பின்

சிருஷ்டியின் தத்துவம், இரகஸ்யம் தெரியும். The Life Divineஇல் p.303 முதல் 305 வரை எளிதாகப் புரியும். அன்பர் - சொல்வனவெல்லாம் புரிகிறது. புரிவது போலிருக்கிறது. கொஞ்ச நாழிக்குப் பின் மனதில் நிற்பதில்லை.

நண்பர் - பையன் பொய் சொல்வதை நம்பி வம்பில் மாட்டிக் கொள்கிறோம். பிறகு இவன் பொய் சொல்கிறான் என்று புரிகிறது. அடுத்த முறை அவன் சொல்லும் பொய்யை மறுபடியும் நம்புகிறோம். பிறகுதான் புரிகிறது. முதலிலேயே பொய் என அறிபவர்கள் உண்டு. இரண்டு பேருக்கும் வித்தியாசம் உண்டு.

அன்பர் - அவர் புத்திசாலி. நமக்குப் புத்தியில்லை அதுவே வித்தியாசம்.

நண்பர் - அப்படிச் சொல்லலாம். அது சரி. வேறு வகையாகச் சொன்னால் பையன் மனம் வேலை செய்வதை அவர் அறிவார். நாம் அறியவில்லை.

அன்பர் - அதுபோல் நாம் சிருஷ்டியை அறிய முடியுமா?

நண்பர் - அறியமுடியும். அதற்கு உலகம் புரிந்து கொள்ளாதவற்றை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

அன்பர் - சைனா 1962இல் படையெடுத்தது நேருவுக்குப் புரியவில்லை. மற்றவர்க்குப் புரிந்தது. 1965இல் பஞ்சம் வரும் என இந்தியருக்குப் புரியவில்லை. FAOக்குப் புரிந்தது. எவருக்குமே புரியாததுண்டா?

நண்பர் - 1919இல் சத்தியாக்கிரஹம் பலிக்கும் என்பதை இந்தியரோ சர்க்காரோ அறியவில்லை. 1947இல் ஹிந்து முஸ்லீம் கலகம் அடங்கும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. Tom Peters புத்தகம் விற்கும் என Tom உள்பட எவரும் அறியவில்லை. Harry Potter பிரபலம் அதுபோல். அன்பர் - இவையெல்லாம் நமக்கு அப்பாற்பட்ட விஷயம். எப்படிப் புரியும்?

நண்பர் - நம் உலகில் இது போன்று எவருக்கும் புரியாததே நடக்கிறது. அது புரிய வேண்டும்.

அன்பர் - பெரிய மகசூல் வருகிறது. எவரும் எதிர்பாராமல் 23ஆம் rank பையன் gold medal வாங்குகிறான். நல்ல வரன் வருகிறது. எதிர்பாராமல் நடப்பவை பல.

நண்பர் - இவை Mother's Grace என்பது உண்மை. அப்படிச் சொன்னால் புரியாது. புரிந்து கொள்ள புத்தி, பரந்த மனம், பொறுமை, நல்லெண்ணம் தேவை.

அன்பர் - நான் நல்லதை மட்டும் நினைக்கிறேன். மற்றதைப் பேச எனக்கு மனம் இல்லை.

நண்பர் - இரண்டிற்கும் சட்டம் ஒன்றே.

அன்பர் - நான் ஒரு ஏக்கர் நிலம் வாங்கப் போய் 100 ஏக்கர் வாங்கியதெப்படி என நான் புரிந்து கொள்ளமுடியும். அதிர்ஷ்டம் Mother's Grace.

என் திறமை என்பது புரிய உதவாது. பின் எப்படிப் புரிந்து கொள்வது?

நண்பர் - எதையும் நிர்ணயிப்பவன் ஒருவன் உண்டு என்று நாம் அறிவோம். இதை நிர்ணயித்தது அவன். எப்படி நிர்ணயித்தான் எனக் கண்டு கொள்வது முடியுமா?

அன்பர் - நமக்கு ஒருவர் நல்லது செய்தால் அதைக் கவனமாக விலக்கி அன்னை பேரால், அதிர்ஷ்டத்தின் பேரால், நம் திறமையின் பெயரால் புரிந்து கொள்கிறோம்.

நண்பர் - அடுத்தவரின் பெருந்தன்மையை ஏற்க முடியாதவன் ஆண்டவனின் அருளைப் புரிந்துகொள்ள முடியாது.

அன்பர் - மட்டமாக, அற்பமாக நினைக்கக் கூடாதா?

நண்பர் - அவை அறிவுக்குத் தடை. நம் தவற்றை ஏற்பதே தைரியத்தில் பெரிய தைரியம். உள்ளபடி நம் குறையை ஏற்பது அவசியம்.

அன்பர் - சிருஷ்டியிலிருந்து அற்பத்திற்கும், கொடுமைக்கும் வந்துவிட்டோமே.

நண்பர் - சிருஷ்டி முழுவதும் புரிய இங்குதான் ஆரம்பிக்க வேண்டும். இங்கு ஆரம்பிக்காவிட்டால் தத்துவம் புரியும்.

அன்பர் - அது அறிவாளிக்கு.

நண்பர் - நமக்கு தத்துவமும் புரியாது, நடைமுறையும் புரியாது.

அன்பர் - மனம் உண்மையானால் - நமது குணத்தில் ஆரம்பித்தால் - நடைமுறையும், தத்துவமும் புரியுமா? 303-305இன் விளக்கம் அதன்பின்.

நண்பர் - அதன்பின் உள்ளங்கை நெல்க்கனிபோல் புரியும். உலகில் நடப்பவை chance,order என்று இரு கொள்கைகள் உண்டு. இரண்டும் சரி என்றாலும், பூரணமானவையல்ல. சான்ஸ், தற்செயல் என எதையும் புரிந்து கொள்ளலாம். Order சட்டம் எனவும் பலவற்றைப் புரிந்து கொள்ளலாம். திட்டவட்டமாக, தீர்க்கதரிசனமாக விஷயங்கள் புரிவது சிருஷ்டி புரிவது.

அன்பர் - ரோடில் போகும்பொழுது வேண்டியவரைப் பார்ப்பது தற்செயல். 10 நாள் ஒரு நாய்க்கு பகல் சாப்பாடு போட்டால், பதினோராம் நாள் அதே நேரத்திற்கு அந்த நாய் வருவது சட்டம். நீங்கள் சொல்வது எப்படி?

நண்பர் - நமக்குத் தெரிந்தவர்கள், நம் வீட்டு மனிதர் எந்த நேரம், என்ன செய்வார்கள், என்ன சொல்வார்கள், என்ன செய்யமாட்டார்கள், என்ன செய்கிறேன் என்று சொல்லி

 செய்யாமல் விட்டு விடுவார்கள் என்று அறிந்தவர் ஒரு சிலர் உண்டு. ஒரு இன்ஜீனியருக்கு மெஷினைப்பற்றி அதுபோல் தெரியும். அது முழுமையான ஞானம்.

அன்பர் - நாம் அதுபோல் சிருஷ்டியை அறிய முடியுமா?

நண்பர் - நம் உலகை அறிந்தால், உலகை அறியலாம்.

அன்பர் - ஜோஸ்யம் அப்படிக் கூறுகிறதே.

நண்பர் - ஜோஸ்யத்திற்கு அந்த முழுஞானம் உண்டு.

அன்பர் - அவர்கட்கு சிருஷ்டி ஞானம் உண்டா?

நண்பர் - அனுபவப்பட்ட ஜோஸ்யன் சிருஷ்டியின் இரகஸ்யத்தை அறியமுடியும்.

அன்பர் - சிருஷ்டியின் இரகஸ்யம் என்பது ஜோஸ்யனுடைய ஞானமா?

நண்பர் - ஜோஸ்யருக்கு ஜோஸ்யம் சொல்லத் தெரியும். எப்படி ஜோஸ்யம் என்ற சாஸ்திரம் எழுதப்பட்டது என்று தெரியாது.

அன்பர் - ஜோஸ்யம் எழுதியவர்க்கு ஸ்ரீ அரவிந்தம் தெரிந்திருக்குமா?

நண்பர் - ஜோஸ்யம் எழுதியவர் ரிஷி. அவருக்கு என்ன நடக்கப் போகிறது என்ற சாஸ்திரம் கணிக்கத் தெரியும். இன்று அப்படிப்பட்டவர் The Life Divine படித்தால் புரியும்.

அன்பர் - அவர்கள் தங்கள் சாஸ்திரம் தவிர மற்றதைத் தொட மாட்டார்கள். கேட்டுக்கொள்ள மாட்டார்கள்.

நண்பர் - அவர்கள் அறியப் பிரியப்பட்டால், புரியும்.

அன்பர் - சிருஷ்டியின் இரகஸ்யம் இதுவரை உலகிலில்லாதது என்று கூறுகிறீர்கள். ஜோஸ்யம் 1000 வருஷத்திற்கு முன் எழுதியது. அவர்கட்குப் புரியும் என்கிறீர்கள். புரியவில்லை.

நண்பர் - ஜோஸ்யம் நடக்கப் போவதைச் சொல்லும். அது பெரிய விஷயம். எது நடக்க வேண்டும் என்று நிர்ணயிக்க அதனால் முடியாது.

அன்பர் - ஜோஸ்யம் ஞானம். நீங்கள் சொல்வது சித்தி.

நண்பர் - சத்தியஜீவிய ஞானம் சித்தி. இங்கு ஞானமும், சக்தியும் இயல்பாக இணைந்துள்ளது.

அன்பர் - இன்னும் சற்று விளக்கமாகக் கூற முடியுமா?

நண்பர் - அதற்கு நேரடியாகத் தத்துவத்தில் ஆரம்பிக்க வேண்டும். உலகில் உள்ள சிருஷ்டியைப் பற்றித் தத்துவங்களை இதுவரை பல இடங்களில் குறிப்பிட்டேன்.

அன்பர் - மற்ற தத்துவங்களைவிட நேரடியாக ஸ்ரீ அரவிந்தம் தேவை.

நண்பர் - ஆண்டவன் உலகுக்கு அப்பாற்பட்டவன். வெளியிலிருந்து உலகை சிருஷ்டித்தான் என்பது ஒரு தத்துவம்.

அன்பர் - அதை நாம் ஏற்க முடியாதா?

நண்பர் - சிருஷ்டியை விளக்கத் தடையாக இருப்பது தீமை, துன்பம். உலகைப் படைத்தவன் ஏன் வலியைப் படைத்தான் என்பதற்குப் பதில்லை. ரிஷிகள் ஏன் தீமையிருக்கிறது எனக் கூறவில்லை. எப்படி தீமையிலிருந்து விலகுவது என்று கூறுகிறார்கள்.

அன்பர் - ஸ்ரீ அரவிந்தம் தீமையை விளக்குகிறதா?

நண்பர் - ஆம்.

அன்பர் - என்ன சொல்கிறது?

நண்பர் - ஆண்டவன் வெளியேயில்லை. ஆண்டவனே உலகமாக மாறினான் என்று (hypothesis) வைத்துக் கொண்டு, அது சரி என நிரூபிக்கிறார்.

அன்பர் - அதில் தீமை என்னாகிறது?

நண்பர் - தீமை என்பது தீமையில்லை. முன்னுக்கு வரும் சந்தர்ப்பம் என்கிறார். பரீட்சை தண்டனையில்லை, படித்ததற்கு அடையாளம் என்பதைப் போன்றது.

அன்பர் - வலி படவேண்டியது, படவேண்டியதுதானே.

நண்பர் - தேவையில்லை. வலி என்பது ஆனந்தம். உலகை இறைவன் நோக்கில் விளக்காமல் கேள்வி நிற்காது என்கிறார்.

அன்பர் - தத்துவம், நடைமுறை எல்லாம் கூறுங்கள்.

நண்பர் - ஆண்டவனே உலகமாக மாறினான் என்பது ஆரம்பம். ஏற்கனவே சொல்லியதை மீண்டும் கூறி ஆரம்பிக்கின்றேன்.

ஆண்டவன் ஆனந்தம் தேடினான். கண்டுபிடிப்பதே முடிவான ஆனந்தம் என்று கண்டான்.

கண்டுபிடிப்பது கடினமானால் ஆனந்தம் பெரியது. அதற்கு மறைய வேண்டும். மறைவதில் பெரியது தன்னுள்ளே மறைவது. எல்லாம் ஆண்டவன் என்பதால் வேறெங்கும் மறைய முடியாது.

மறைந்ததை மறந்தால் கண்டுபிடிப்பது அதிகச் சிரமம் என்பதால் மறைந்தது மறக்கும்வரை ஆண்டவன் தன்னுள் மறந்தான்.

ஜீவனான ஆண்டவன் ஜீவனைக் கடந்து சக்தியுள் மறைந்தான்.

சக்தி என்பதால் உலகம் ஏற்பட்டது.

அதனுள் ஆண்டவன் மறைந்துள்ளான் என்பது சக்திக்குத் தெரியாது; தெரிய முடியாது.

ஆண்டவனும் தான் மறைந்ததை மறந்துவிட்டான்.

இதுவரை சிருஷ்டி.

மறந்தது நினைவு வந்து, மறைவிலிருந்து எழுவது பரிணாமம்.

பரிணாமம் தருவது இன்பம், பேரின்பத்தைவிடப் பெரிய இன்பம்.

இந்த இன்பத்தை நாடி ஆண்டவன் உலகை சிருஷ்டித்தான்.

பரிணாமத்தால் சச்சிதானந்தத்திலில்லாத பெரிய இன்பத்தை க்ஷணம்தோறும் அனுபவிக்கிறான்.

சிருஷ்டியில் ஒரு துளி வலியுமில்லை, வலி சிருஷ்டிக்கப் படவில்லை.

அன்பர் - நாம் படும் வலியெல்லாம் வலியில்லையா?

நண்பர் - வலியை நாடிப் போகும் உரிமை நமக்குண்டு. அதை ஆண்டவன் தடுப்பதில்லை. இதன் விளக்கத்தை முடிவில் கேளுங்கள். இனி சிருஷ்டி என்பதைக் காண்போம். அனந்தமான ஆண்டவன் ஜடமான உலகமாகத் தானே மாறினான்.

ஜடத்திலிருந்து. மீண்டும் பரிணாமத்தால் வெளிவருகிறான்

ஜடம் துளி, சிறியது. அனந்தம் பெரியது.

ஒரு துளி பெருகி உலகமாகும்பொழுது ஓராயிரம் இடைப்பட்ட நிலைகள் ஏற்படும்.

அவை ஒரு இலட்சம் வகைகளாக இருக்கும்.

ஏன் உலகில் இலட்சக்கணக்கான ரகங்கள் உள்ளன என்பது விளங்குகிறது.

அனந்தன் ஜீவன். ஜீவனுக்கு சக்தியுண்டு.

ஜீவன் மறைந்தது வெளிவந்தால் சக்தி வெளிப்படும்.

அது ரூபம் பெறும்.

அது ரூபம் பெறுவதை சிருஷ்டி என்கிறோம்.

அன்பர் - இதுவரை புரிந்தது. இது புரியவில்லை.

நண்பர் - பிறக்கும் குழந்தையை ஆண் என நிர்ணயிப்பது யார்? சுண்ணாம்பில் மஞ்சள் கலந்தால் சிவப்பு நிறம் எழ உத்திரவிட்டது யார்?

குளத்தில் கல்லைப் போட்டால் எழும் அலையை வட்டமாக இருக்கவேண்டும் என்பது என்ன சட்டம்?

பூமியில் ஏன் புல், பூண்டு, மரம் முளைக்கிறது?

மலையை எழுப்பியது, நதியை ஓட வைப்பது எங்ஙனம்?

ஏன் மனிதன் பிறந்தான்? அரசு ஏன் ஏற்படவேண்டும்? போர் எதற்காக?

அன்பர் - புரிகிறது. இவைகளை ஆண்டவன் நிர்ணயிக்கிறான் என்று கூறப் போகிறீர்களா?

நண்பர் - மணியார்டர் அனுப்பினால் ரசீது வரும்.

மணியடித்தால் சத்தம் கேட்கும்.

காலை 10 மணிக்கு எல்லா ஆபீஸ்களும் திறப்பார்கள்.

தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற சட்டங்களை நாம் அறிவோம், ஏற்கிறோம். மணியார்டர் ரசீது வரும்; சட்டம் புரிகிறது. பல புரிகின்றன. பல புரியவில்லை.

அன்பர் - என்ன சொல்லப் போகிறீர்கள்?

நண்பர் - மறைந்த ஆண்டவனுக்கு 6 அம்சங்கள் உண்டு.

ஐக்கியம்

சத்தியம் என்பவை சத்திற்குரிய அம்சங்கள்

நன்மை

ஞானம் - சித்துக்குரியவை

சக்தி

அன்பு - ஆனந்தம்.

சிருஷ்டியில் ஆறாகப் பிரிந்த ஆண்டவன் தனித்தனியே வளர்கிறான். ஆறு அம்சங்கள் தனித்து முழுவளர்ச்சி பெற்றால் பரிணாமம் பூர்த்தியாகிறது. வெளிப்படும் அம்சங்கள் பரிணாமம் பூர்த்தியாகும் வகையாக வெளிப்படுவது Cosmic determinism பிரபஞ்ச சிருஷ்டி.

அன்பர் - தத்துவத்திலிருந்து நடைமுறைக்கு வந்தால் நல்லது.

நண்பர் - ரோட்டில் wrong sideஇல் போனால் கான்ஸ்டபிள் தடுக்கிறான். Insurance policy முடிந்துவிட்டால் பணம் பெற்றுக் கொள்ளச் சொல்லி தபால் வருவது சட்டம் என்பதுபோல ஞானம் வளருமுன் சக்தி வளர்ந்தால் சக்திக்குத் தடை எழுவது cosmic determinism சிருஷ்டியின் சட்டம்.

அன்பர் - நமக்குப் புரியும்படிச் சொல்ல வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.



book | by Dr. Radut