Skip to Content

பகுதி 1

அன்பர் - பழைய (1972) நூற்றாண்டு செட்டில் 12ஆம் வால்யூம் உபநிஷதம் படிக்கச் சொன்னீர்கள். படித்தேன். எதுவும் புரியவில்லை. முதல் 60 பக்கம்தான் கூறினீர்கள் என நினைக்கிறேன். கொஞ்சநாள் கழித்து மீண்டும் படித்தேன். படிக்கும்பொழுது புரிகிறது. பிறகு எதுவும் மனதில் நிற்பதில்லை.

நண்பர் - நான் அந்நூலை 15ஆம் முறையாகப் படிக்கிறேன். முதலில் நீங்கள் பெற்றதே எனது அனுபவமும். மனதில் எதுவும் நிற்பதில்லை என்றால், நமக்கு அவற்றில் அக்கறையில்லை என்று பொருள்.

அன்பர் - உலகம் எப்படி உற்பத்தியாயிற்று என்ற கேள்வி எனக்கு உதயமானதேயில்லை.

நண்பர் - பொதுவாக எதுவும் புரியாமல் படித்தாலும் மனம் ஆழ்ந்த மௌனம் பெறுகிறது.

அன்பர் - எந்தத் தியானமும் அதைத் தருவதில்லை.

நண்பர் - உலகம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டது என்ற கேள்வி மனதில் எழுந்தால் The Life Divine  புரிய ஆரம்பிக்கும். பிரம்மம் அதற்கு முன்னுள்ள நிலை. அது எது என்ற கேள்வி உதயமான பின், இந்நூலில் இரண்டு பக்கம் படித்தவுடன் நாம் பெறுவது பெரியது. அமைதியைக் கடந்த மௌனம், மௌனத்தைக் கடந்த அமைதி என்பது அது.

அன்பர் - தரிசனத்தில் ஓர் அமைதியுண்டு. அது பிரகாசமான அமைதி. அதுவே நானறிவேன்.

நண்பர் - மௌனம், பேச்சுக்குப் பின்னாலும், எண்ணத்திற்குப் பின்னாலும், ஜீவியத்திற்குப் பின்னாலும், சத்துக்குப் பின்னாலும் உள்ளது. ஆனந்தத்திற்குப் பின்னாலும் அமைதியுள்ளது.

அன்பர் - Silence behind Silence மௌனத்திற்குப் பின் மௌனம் என்பதா?

நண்பர் - மௌனம் எண்ணமற்றிருப்பது பெரிது. சிந்திக்க முடியாத மௌனம் மனத்தின் பின்னுள்ளது. மௌனம் பிரகாசமானால், ஜோதிக்குப் பின்னாலுள்ள மௌனம்.

அன்பர் - ஜோதிதானே முடிவானது?

நண்பர் - ஜோதி ஆன்மாவின் 12 அம்சங்களில் ஒன்று. ஆன்மாவைக் கடந்தது சத். பிரம்மம் அதையும் கடந்தது.

அன்பர் - மௌனம் எல்லா நிலைகளுக்கும் உள்ளதா?

நண்பர் - உண்டு. நாம் நூலில் முதல் பக்கத்திற்கு வருவோம். எது உலகில் நிரந்தரமானது என்பது ஆரம்பம்.

அன்பர் - ஐக்கியம், ஒருமை நிரந்தரம் என்பது முதல் வரி.

நண்பர் - நிரந்தரத்தை அடிப்படையாக உபநிஷதம் கொள்கிறது. ஏன் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை.

அன்பர் - அப்படியும் ஒரு கேள்வியுண்டு என நினைக்கவில்லை.

நண்பர் - கேள்விகள் மனத்திற்குரியவை. ஆராய்ச்சி மனத்தின் கருவி. இவைகட்கு முடிவில்லை. மனத்தைக் கடந்தால் முடிவுண்டு. அது அனுபவம், கேள்வி பதிலில்லை.

அன்பர் - ஏதாவது ஒரு முடிவு வேண்டுமன்றோ!

நண்பர் - நிலையாக இல்லாவிட்டால், பார்ப்பது அழியும். துண்டு என்று பார்க்கிறோம். அது நீர்க்குமிழிபோல் அழியவில்லை. அழியாமலிருக்கிறது. 1 வருஷம் கூட இருக்கும். ஓரிரு வருஷத்தில் அழியும் துண்டிற்கு ஓரிரு வருஷம் அழியாத நிலையைத் தருவது எது என்பது கேள்வி.

அன்பர் - துண்டு சில வருஷம் உள்ளது. கல் சில நூறாண்டுகள் உள்ளது. எதுவும் ஒரு நாள் அழியும். அழியும் பொருளுக்கு அழியாத தன்மையை அளிப்பது எது? என்பது கேள்வியா? இதைப் படித்த பின்னும் அக்கேள்வி என் மனதில் தானே எழவில்லை.

நண்பர் - தானே அக்கேள்வி எழுந்தால் அவர் ரிஷி. அக்கேள்விக்குப் பதிலுண்டு. பதிலுக்குப் பலன் உண்டு.

அன்பர் - என்ன பலன்?

நண்பர் - மனத்தில் ஒரு பலன் உண்டு. ஞானம் சக்தியானால் வாழ்விலும், செயலிலும் ஒரு பலன் உண்டு. நமக்குப் பிரார்த்தனை பலிக்கும்பொழுது அன்னை நம்மை ரிஷியாக்கிப் பலனைத் தருகிறார்.

அன்பர் - புரியவில்லை.

நண்பர் - ஆங்கிலேயர் கிளப்பில் இந்தியர் போய் சீட்டாட முடியாது. இந்தியர்களும், நாய்களும் உள்ளே வரக்கூடாது என போர்டு போட்டிருக்கும்.

அன்பர் - அங்குப் போய் சீட்டாடினால், நம்மை அவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள் எனப் பொருள்.

நண்பர் - காபி 5 ஸ்டார் ஹோட்டலில் ரூ.100 எனில் அந்த ஒரு கப் காபியைத் தயாரிக்க அவன் வரவு செலவுக்கு ரூ. 50 ஆகிறது. அன்னை நமக்கு ஒன்று செய்ய, நம்மை முதலில் அவர்கள் ஏற்றுக் கொண்டு பிறகு செய்ய வேண்டும். அன்னை நம்மை ஏற்பது ரிஷிகள் பெறாத நிலை.

அன்பர் - அப்படித் தெரியவில்லையே.

நண்பர் - M.A. பாஸ் செய்தால் I.A.S. பரீட்சை எழுதும் தகுதியுண்டு. தகுதியிருப்பதால் I.A.S ஆகாது. இந்தத் தகுதி யாருக்கு 1940க்கு முன்னிருந்தது?

அன்பர் - அன்பர் என்பதின் பாக்கியம் புரியவில்லை.

நண்பர் - இந்நூல் 300 பக்கங்கள். நாம் முதல் 60 பக்கங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டோம். முதல் பக்கத்திலிருக்கிறோம். 60 பக்கங்களும் அற்புதமான ஆன்மீக ஞானம்.

அன்பர் - கடினமாக இருக்கிறது.

நண்பர் - 60 பக்கங்களும் புரிந்தபின், அன்னை நம்மை அன்பராக ஏற்றது, அந்த ஞானத்தைக் கடந்தது என்று புரியாது.

நண்பர் - 1500 பக்கங்களில் பகவான் வரலாற்றை எழுதிய பேராசிரியர் "ஸ்ரீ அரவிந்தர் தம் ஆன்மீக அனுபவங்களுக்கு நம் ஆன்மீக இலக்கிய ஆதரவு தேடுகிறார்'' என்று எழுதியிருக்கிறார்.

அன்பர் - இது போர்ட் மோட்டர் கார் நம்மூர் கருமானிடம் டெக்னாலஜி கற்றுக் கொள்ள வருகிறான் என்பது போலிருக்கிறது. முதற் கேள்வியாக உபநிஷதம் எழுப்புவது, எது நிலையானது?

அன்பர் - கேள்வியே புரியவில்லை.

நண்பர் - ரிஷிகள் இதற்குக் கண்ட பதில் நியூடன், கலீலியோ கண்டவற்றை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது என்கிறார்.

அன்பர் - விஞ்ஞானமும் இதையே தேடுகிறது என்கிறாரே. விஞ்ஞானம் தான் கண்டத்தின் சிறப்பை அறியவில்லை என்கிறார். விஞ்ஞானம் இப்பாதையை மேற்கொண்டதால் இனி திரும்ப முடியாது என்றும் கூறுகிறார்.

நண்பர் - ரிஷிகள் அன்று கண்டதை, விஞ்ஞானிகள் இனி காண வேண்டும்.

அன்பர் - ரிஷிகள் என்ன கண்டார்கள்? அது எப்படி இவ்வளவு விஞ்ஞானத்தைக் கடந்தது?

நண்பர் - விஞ்ஞானிகள் புவிஈர்ப்பு, மின்சாரம், சப்தம் கம்பி மூலம் போகும், கம்பியில்லாமலும் போகும் என்று ஆயிரம், இலட்சக்கணக்கானவற்றைக் கண்டனர். இவை அனைத்தும் சக்தியன்றோ? சக்தியின் ரூபமன்றோ?

அன்பர் - ரிஷிகள் கண்டது. . . . . . . . . . . .

நண்பர் - சக்தியின் ஆதியான ஜீவியம்.

ஜீவியத்தின் பிறப்பிடம் சத்.

சத் உற்பத்தியானது பிரம்மம்.

சக்தியும், அதன் ரூபங்களும் அநித்தியம், பிரம்மம் நித்தியம். அநித்தியமான அனைத்தின் பின்னுள்ள நித்தியத்தை ரிஷிகள் கண்டனர்.

அன்பர் - விஞ்ஞானம் வாழ்க்கை வசதிகளைக் கண்டது.

நண்பர் - ரிஷிகள் கண்டது தத்துவம். விஞ்ஞானிகள் கண்டது வசதி. வசதி கருவியால் வருகிறது. முறை தெரிந்தால் கருவி உற்பத்தியாகும்.

அன்பர் - நித்தியம், அநித்தியம் பிரித்துச் சொல்லவேண்டும்.

நண்பர் - 1. ரூபம் - களிமண் நித்தியம், அதிருந்து எழும் பானை, சட்டி ஆகிய ரூபங்கள் அநித்தியம்.

- வாய் பேசுகிறது. பேச்சு பலவகைகளானது. பேச்சு ரூபம், அழியக் கூடியது. வாய் நித்தியம், அதிலிருந்து எழும் செயல்கள் அநித்தியம்.

2. சக்தி - சக்தி நித்தியம், அதன் ரூபங்கள் பல. மின்சாரம், காந்தம் எனவும், மனோ சக்தி, கிரியா சக்தி எனவும் எழும் சக்திகள் பல. அவை சக்தியின் ரூபங்கள். அவை அநித்தியம்.

பானை, சட்டிக்குப் பின்னால் களி மண்ணிருப்பதைப் போல் மின்சாரம், காந்தத்திற்குப் பின்னால் சக்தியிருப்பதைப்போல களிமண், சக்திக்குப் பின்னால் ஒன்றுள்ளது. அது நித்தியம். ரூபமிழந்து, சக்தியிழந்து, ஜீவியம் மாறி, ஜீவனும் அற்றுப் போனநிலையில் உள்ளது பிரம்மம் - அதுவே நித்தியம்.

நித்யோ நித்யோனாம்

என்பது உபநிஷத மந்திரம். அநித்தியமான அனைத்தின் பின்னுள்ள நித்தியம் பிரம்மம் என்று இதற்கு பொருள்.

அன்பர் - ஆரிய முன்னோர்கள் அனைவரும் ரிஷிகளா?

நண்பர் - ரிஷிகட்கு முன் அறிஞர்கள், சிந்தனையாளர் இருந்திருக்கின்றனர். அவர்கள் தடுமாறியிருக்கிறார்கள். கண் காணும் ஆயிரம் காட்சிகளும் ஓர்

ஐக்கியத்திலிருந்து எழுகிறது - ஓர் ஒருமையுண்டு - என்ற உணர்வு இருந்திருக்கிறது.

அன்பர் - வேதம் எதுவும் கூறவில்லையா?

நண்பர் - "அவனுக்கு மட்டுமே தெரியும், ஒரு வேளை அவனேயறியானோ?'' என்கிறது ரிக் வேதம். இங்கிருந்து எழும் கேள்விகள் பல. காலம், இடம், காரண காரியமில்லாமல் உலகமில்லை. இடமும் காரண காரியமும் காலத்திற்குட்பட்டவை. காலம் அவற்றிற்குட்பட்டதில்லை என்பதால் காலமே மூலமா என்பது கேள்வி. காலம் மூலமில்லாவிட்டால் சுபாவமா? இல்லையெனில் ஏதோ நடக்கிறது chance எனலாமா? விதி என்று கூறலாமா?

பஞ்சபூதங்களினின்று அனைத்தும் வருகின்றனவா? ஏதோ ஓர் ஆரம்பம் - கரு - வேண்டுமல்லவா?

அன்பர் - மனம், எண்ணம் இங்கு இடம் பெறாதா?

நண்பர் - பார்ப்பவன் ஒருவனில்லையெனில் பார்வையில்லையே. பார்ப்பது எண்ணம், அறிவு, மனம், அகந்தையன்றோ! கபிலர் அறிஞர். அவர் கூறியது சாங்கியம். சாங்கியம் என்றால் எண்ணுவது. உண்டா, இல்லையா என ஒவ்வொன்றாய்க் கருதி விலக்க வேண்டியவற்றை விலக்கி, சேர்க்க வேண்டியவற்றைச் சேர்ப்பது சாங்கியம்.

அன்பர் - நீங்கள் கூறுவது தத்துவமாகயிருக்கிறதே. தவமில்லையா?

நண்பர் - கபிலர் ரிஷியில்லை, அறிஞர். காண்பவற்றை அழியக் கூடியதாக விலக்கி அடிப்படையில் பஞ்சபூதங்களைக் அவர்கள் கண்டனர். அதன்பின் அகந்தை, அறிவு உள்ளன என்றனர். பஞ்சபூதங்களைப் பிரகிருதி என்றனர். அவர் ஆராய்ச்சி பிரகிருதி - இயற்கையில் முடியவிருந்தது.

அன்பர் - இவையெல்லாம் எதற்காக?

நண்பர் - இவையெல்லாம் அகந்தைக்காக என்று முடிவு செய்தனர்.

அகந்தை என்பதை புருஷன் - ஆத்மா - எனவும் கூறினர்.

இவ்வளவும் சிந்தனையின் பலன். மற்றவர்கள் - ரிஷிகள் - தவம் செய்தனர்.

அன்பர் - தவம் என்ன கண்டது?

நண்பர் - கபிலர் போன்றவர் அறிவால் எட்டியதை மற்ற ரிஷிகள் ஆத்மாவால் கண்டனர். அவர் கண்டதை 4 மந்திரங்களாகக் கூறினர்.

  • 1. நிலையற்றவற்றின் பின்னால் நிலையானது ஒன்றுண்டு. நித்யோனித்யானாம்.
  • 2. நிலையான அதற்கு (self) ஜீவன் உண்டு. நிலையற்றவற்றிற்கெல்லாம் (self) ஜீவனுண்டு. இவையிரண்டும் ஒன்றே. சேதனாஸ் சேதனானாம்.
  • 3. நிலையானதும், நானும் ஒன்றே. ஸோஹம்.

  • 4. நானும் உலகமும் ஒன்றே. அகம் பிரம்மாஸ்மி.

அன்பர் - இவை உபநிஷதச் சாரம்.

நண்பர் - முதல் அத்தியாயம் முடிகிறது.

The Nature of the Absolute Brahman.

பிரம்மம் வெளிப்பட்ட வகை.

இது இரண்டாம் அத்தியாயம்.

அன்பர் - வெளிப்படுவது என்றால் என்ன?

நண்பர் - பிரம்மத்தின் வெளிப்பாடு சிருஷ்டி. பிரம்மம் சிருஷ்டித்த வகை, இது வேதம் கூறுவது, உபநிஷதம் கூறுவது, மேல் நாட்டாரும், விஞ்ஞானியும், மேல்நாட்டு ரிஷிகளும் (saints) என்ன கூறுகின்றனர் என்பது இந்த அத்தியாயம்.

அன்பர் - வேதத்தைப் பற்றி மேல் நாட்டார் என்ன கூறுகிறார்கள்?

நண்பர் - ரேடியோ வந்தபொழுது அதனுள் மனிதன் பேசுகிறான் என்றார்கள்.

அன்பர் - நம் நாட்டில் படிக்காதவர் அப்படிப் பேசினார்கள்.

நண்பர் - எல்லா மேல்நாட்டிலும் அப்படியே கூறினார்கள்.

அன்பர் - லண்டனிலும் அப்படி நினைத்தார்களா?

நண்பர் - தெரியாததைப் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் அபத்தமாக இருக்கும். புதியதாக எது வந்தாலும்

எல்லா நாடுகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தவறாகப் பேசுவார்கள்.

அன்பர் - மாக்ஸ் முல்லர் பெரிய scholar பண்டிதராயிற்றே? நண்பர் - இது எல்லோருக்கும் பொதுவான சட்டம். அவரும் அதுபோல் அர்த்தமற்று உளறினார். "வேதம் ஒரு உளறல்'' என்றார்.

அன்பர் - தாம் உளறுவதை ரிஷிகள் உளறுவதாகக் கண்டார் போலிருக்கிறது. விஞ்ஞானிகள்?

நண்பர் - விஞ்ஞானிகளுடைய ஆராய்ச்சி ஜடப்பொருளில் - ஜடஉலகில் - ஏராளமாகக் கண்டுபிடித்துள்ளனர்.

அன்பர் - இன்று விஞ்ஞானி உலகத்தலைவனல்லவா?

நண்பர் - அத்துடன் நிறுத்திக் கொண்டிருக்கலாம். அதற்கு மேல் ஒன்றுமில்லை என்று கூறுகின்றனர்.

அன்பர் - கடவுளில்லை, சூட்சும லோகமில்லை என்கின்றனர்.

நண்பர் - அதைக் கடந்த காரண லோகமும் உண்டு என்று ரிஷிகள் கண்டனர். Sheldrake ஷெல்டிரேக் என்ற விஞ்ஞானி சூட்சும உலகத்தின் உண்மையைக் கண்டுபிடிக்க முனைந்திருக்கிறார். அதையாவது நிரூபிக்கலாம். காரண லோகத்தை விளக்கமுடியாது. விளக்கினால் மூட நம்பிக்கையாகத் தெரியும்.

அன்பர் - ஓரளவு விளக்க முடியாதா?

நண்பர் - ஜட உலகிலும் ஒருவன் திருடினான் என்று ஒருவேளை நிரூபிக்கலாம். திருடவில்லை என நிரூபிக்க முடியுமா? நிரூபணம் பொருந்தாத விஷயத்திற்கு நிரூபணம் தரமுயல்வது மூடநம்பிக்கை. அதற்கு நிரூபணம் கேட்பதும் மூடநம்பிக்கை.

அன்பர் - அப்படிச் சொல்லிவிட்டால். . . . . . . . .

நண்பர் - Mathematics கணிதம் தெரியாமல் புதிய விஞ்ஞானம் புரியாது. புரிய வேண்டுமென வற்புறுத்தினால், சோதனை செய்யாமல் விஞ்ஞானமில்லை. சோதனை செய்யமாட்டேன் என்பவருக்கு விளக்க வேண்டும் என்று முயல்வது அறிவுடைமையாகாது. அறிவை எந்தத் துறையில் தேடும் முன், மூடநம்பிக்கை என்பது என்ன என்று முடிவுசெய்ய வேண்டும். மூட நம்பிக்கையில் மூழ்கவேண்டும் என்பவன் அவனிஷ்டப்படி செய்யட்டும்.

அன்பர் - 90 பங்கு விஞ்ஞானிகளும், அறிஞர்களும் அப்படி இருக்கின்றனர்.

நண்பர் - அவர்கள் விஞ்ஞானத்திற்கும் பயன்படமாட்டார்கள்.. அறிவும் அவர்களை நாடப் போவதில்லை. உள்ளத்தில் அறிய வேண்டியதை உருவகத்தால் அறியலாம். அதைத் தொடர்ந்து பேச முடியாது. குவளை மலர் போன்ற கண் என்றால் கண் இமை இலையாகுமா என்று பேசுபவர்க்குப் புலவரிடம் பதிலில்லை.

அன்பர் - அப்படி உருவகமாக ரிஷிகள் என்ன கூறியிருக்கிறார்கள்?

நண்பர் - பிரம்மம் சிருஷ்டியாக 5 வகைகளாக வெளிப்படுகிறது என்று கூறுகின்றார்கள்.

அன்பர் - அவை எவை? நண்பர் -

1. நாம் வாழும் உலகம் - விராட புருஷன்

2. சிருஷ்டிகர்த்தா - ஹிருண்யகர்ப்பம்

3. சிருஷ்டியைக் கடந்த சத்தியஜீவியம் - பிரக்ஞா

4. நாம் அறியக் கூடிய பிரம்மம் - சச்சிதானந்தம் பரப்பிரம்மம்

5. நாம் அறியமுடியாத பிரம்மம் - பிரம்மம்

அடுத்த அத்தியாயத்தில் பரப்பிரம்மம் சிருஷ்டிக்கு உட்பட்டதைக் கூறுகிறார்.

பிரம்மம் சிருஷ்டிக்க வேண்டி பரப்பிரம்மத்தைச் சிருஷ்டித்தது. இதை இரு வகைகளாக அறியலாம். முதல்வகை அகம், அடுத்தது புறம்.

அகம் - சத்து, சித்து, ஆனந்தம். புறம் - சத்தியம், ஞானம், அனந்தம்.

நான்காம் அத்தியாயம் மாயை

அன்பர் - ஸ்ரீ அரவிந்தர் மாயை என்பதை ஏற்கவில்லை என அறிவேன்.

நண்பர் - மாயாவாதிகள் கூறுவது, "உலகம் மாயை''. அதை உபநிஷதமும் கூறவில்லை. வேதமும் கூறவில்லை.

அன்பர் - உபநிஷதம் மாயையைப் பற்றி என்ன கூறுகிறது?

நண்பர் - வேதம் மாயை என்ற சொல்லுக்கு விவேகம் என்று பொருள் கூறுகிறது. ரிஷிகள் மாயையின் உண்மையை அறிந்தவர்.

அன்பர் - பின் ஏன் மோட்சத்தை நாடினர்?

நண்பர் - ஆன்மீக வாழ்வுக்கு தத்துவம் உண்டு என்பதுபோல் சிருஷ்டிக்குத் தத்துவம் தேவை. அது மாயை.

அன்பர் - மாயை என்றால் சங்கரர் கூறுவதுதான் கண் முன் வருகிறது.

நண்பர் - பிரம்மம் சச்சிதானந்தத்தை சிருஷ்டித்ததுபோல் மாயையையும் சிருஷ்டித்தது.

அன்பர் - என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.

நண்பர் - பிரம்மம் சிருஷ்டித்தபொழுது சச்சிதானந்தத்தை மட்டும் சிருஷ்டிக்கவில்லை. மாயையையும் உடன் சிருஷ்டித்தது.

அன்பர் - ஏன்?

நண்பர் - சிருஷ்டி காலத்தில் தோற்றமானது. சச்சிதானந்தம் ஜோதிமயமானது. அதனால் சிருஷ்டியை ஆதரிக்க முடியாது. சிருஷ்டியை ஆதரிக்கும் சக்தி - தத்துவம் - மாயை.

அன்பர் - இதுவரை கேள்விப்படாததாக இருக்கிறதே.

நண்பர் - இது ஸ்ரீ அரவிந்தமில்லை. உபநிஷதம். பகவான் உபநிஷதம் உள்ளபடி கூறுகிறார்.

அன்பர் - தத்துவம் என் மனதில்படும்படிக் கூற முடியாதா?

நண்பர் - பிரம்மம் ஜோதியைக் கடந்தது. அதன் சிருஷ்டி அதுபோல் எதுவுமில்லாமல் இருக்கமுடியாது.

அன்பர் - சிருஷ்டி இரட்டையாக - சத், அசத் - இருக்கும் என்று கூறுகிறார்களே?

நண்பர் - சிருஷ்டியை நிழலாக வர்ணித்து ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

அன்பர் - உபநிஷதம் அப்படிக் கூறுகிறதா?

நண்பர் - இப்புத்தகத்தில் பகவான் தன் கொள்கைகளைக் கூறவேயில்லை. உபநிஷதம் கூறுவதைத் தன் விளக்கம் மூலம் சொல்கிறார். அப்படிச் சொல்லும்பொழுது பிரம்மம் இரு shadow நிழல்களை உற்பத்தி செய்ததாகக் கூறுகிறார். ஒன்று - சச்சிதானந்தம் ஒளிமயமான நிழல் அடுத்தது மாயை - இருள்மயமான நிழல்.

அன்பர் - இரண்டும் நிழல் என்பதில் ஒற்றுமை, இருள் ஒளி என்பதில் வேற்றுமையா?

நண்பர் - ஒற்றுமை unity பிரம்மத்திற்கு. அதைக் கடந்து வந்தால் சத்திற்கு ஒற்றுமையுண்டு. அதைக் கடந்தால் ஒற்றுமையில்லை. எதிரெதிரான இரட்டை எழும்.

அன்பர் - நூலின் முதல் வரி ஒற்றுமையை நாடினார்கள் என்று கூறினீர்களே.

நண்பர் - ரிஷிகள் மனத்தில் ஒற்றுமையைக் கண்டதால் ஒற்றுமையைத் தேடி - பிரம்மம் - தவமிருந்து நித்தியமானதைக் கண்டனர்.

அன்பர் - நித்தியம் ஒற்றுமையில்லையா?

நண்பர் - ஸ்ரீ அரவிந்தம் ஒற்றுமை பிரம்மத்திருந்து ஜடம்வரை உண்டு என்கிறது. ரிஷிகள் ஒற்றுமையை நாடினார்கள். கண்டார்கள். கண்டவர் மனத்தால் கண்டார்கள்.

அன்பர் - வேறு எதனால் காண்பது?

நண்பர் - மனத்தால்தான் காண முடியும். மனம் ஐக்கியத்தைக் காணாது, பகுதியைக் காணும். மனத்தால் கண்டாலும், காண்பதன் பின் உள்ள ஒற்றுமை ரிஷிகட்குத் தெரிந்ததால், மாயை என்பது சச்சிதானந்தத்தின் பகுதி - இருளான பகுதி - என்று கண்டனர்.

அன்பர் - ஸ்ரீ அரவிந்தம் என்ன கூறுகிறது?

நண்பர் - ஒருவர் ஆபீசராகவும், தகப்பனாராகவும் இருந்தால் மனம் அங்கு இருவரைக் காணும்.

அன்பர் - அது எப்படி?

நண்பர் - நபர் ஒருவர், அம்சம் இரண்டு.

அன்பர் - தெளிவாக இருக்கிறதே.

நண்பர் - பிரம்மம் ஒன்று. அம்சம் இரண்டு. பிரம்மம் சத் முதல் ஜடம்வரை பகுதிகளாகப் பிரியவேயில்லை. மனம் பிரித்துப் பார்க்கிறது. அம்சம் இரண்டு என்கிறது. அப்படித்தான் மனத்தால் பார்க்கமுடியும்.

அன்பர் - அடுத்தாற்போல்,

நண்பர் - மாயை வித்யா, அவித்யா எனப் பிரிகிறது.

அன்பர் - ஐக்கியம் என்ன ஆயிற்று?

நண்பர் - ஒரு மனிதன் அரசியல்வாதி, தகப்பனார், அண்ணன், புருஷன் என 15 அம்சமிருந்தால் மனிதன் ஒருவர் தானே.

அன்பர் - ஐக்கியம் குந்தகப்படாமல் அம்சங்கள் பெருகுகின்றனவா?

நண்பர் - ஆம். அம்சங்கள் ஆயிரமானாலும் ஆள் ஒருவரே என்பதில் நமக்கு ஐயமில்லை. அதுவே பிரம்மத்திலும் உண்மை என்பது தத்துவம்.

அன்பர் - தெளிவாகத் தத்துவம் புரிகிறது.

நண்பர் - விஷயம் பிடிபடவில்லை.

அன்பர் - ஆம்.

நண்பர் - பிள்ளைக்கு ஜுரம் என்று கேள்விப்பட்டு ஆபீசிலிருந்து பதறி ஓடிவந்தவர் வீட்டிற்கு வந்தவுடன் அண்ணன் பிள்ளை என அறிந்து இப்படித் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேனே' என்று கூறி ஜுரமான குழந்தையைப் பார்க்காமலே போய்விட்டார் என்று ஒரு செய்தியை நான் சொல்வது வழக்கம். தன் குழந்தையும் அண்ணன் குழந்தையும் ஒன்று என்ற மனப்பான்மை பிரம்மம் புரிய அவசியம்.

அன்பர் - சுயநலம் போனால் புரியும் என்கிறீர்களா?

நண்பர் - ஆபீசில் ஒருவர் மூச்சடைந்து விழுந்துவிட்டார் என்றால் ஆபீசே கதிகலங்குகிறது. இது சுயநலம் போய் பரநலம் வருவது.

அன்பர் - பிறருக்குக் கஷ்டம் வந்தால் சந்தோஷம் வருகிறது.

நண்பர் - பிறருக்குக் கஷ்டம் கொடுக்க மனம் விழைகிறது.

அன்பர் - இதெல்லாம் தவறு, அற்பமான மனம் பரநலமானால் அதிர்ஷ்டம் வரும், பிரம்மம் புரியுமா?

நண்பர் - ரிஷிகட்கு ஐக்கியம் புரிகிறது. மாயை மாயையில்லை எனப் புரிகிறது.

அன்பர் - அதைத் தொடர்ந்து பின்பற்ற மனம் போதாது.

நண்பர் - அடுத்த அத்தியாயத்தில் மாயை சிருஷ்டிகர்த்தா மாயையில்லை என்பது, ஷேக்ஸ்பியர் மூலம் எழுதுகிறார்.

அன்பர் - இவையெல்லாம் ஸ்ரீ அரவிந்தர் கூறுவதா?

நண்பர் - இந்த 44 பக்கங்களில் நான் முன்பே சொன்னதுபோல் ஸ்ரீ அரவிந்தர் கருத்து எதுவுமில்லை. உபநிஷதத்திற்கு அவர் தரும் விளக்கங்கள். விஷயம் உபநிஷதத்திற்குரியது. விளக்கம் பகவானுடையது.

அன்பர் - புரிவது போலிருக்கிறது. கேட்க ஆசையாக இருக்கிறது.

நண்பர் - பாம்பு, பழுது - பழுதைப் பாம்பாக நினைப்பது மாயை என்பது மாயாவாதம். சச்சிதானந்தத்தை பிரம்மம் சிருஷ்டித்தது. உடன் மாயையை சிருஷ்டித்தது. மாயை உலகை சிருஷ்டித்தது என்பது உபநிஷதம். மயன் என்பவன் சிற்பி என்ற கருத்து ஓரளவு விளக்குகிறது.

அன்பர் - உபநிஷதம் இதைக் கூறுவதும், ஸ்ரீ அரவிந்தம் கூறுவதும் ஒன்று தானே?

நண்பர் - உலகை சத்தியஜீவியம் சிருஷ்டித்தது என்பது ஸ்ரீ அரவிந்தம்.

அன்பர் - அப்படியானால் உபநிஷதம் கூறுவது சரியா?

நண்பர் - உபநிஷதம் கூறுவது கவியின் படைப்புவரை சரிவரும். உலகுக்குச் சரிவாராது.

அன்பர் - கொஞ்சநஞ்சம் புரிவது போலிருந்ததும் போய்விட்டது.

நண்பர் - உபநிஷதமோ, புத்தரோ சொல்லமுடியாததை, சங்கரர் சொல்ல முயன்றார்.

அன்பர் - அப்படியானால் சங்கரர்தான் சரி.

நண்பர் - வேதம் இயற்கையோடு ஒன்றி வாழ்வதைக் கடைப்பிடித்தது. உபநிஷதம் அடுத்த கட்டத்திற்குப் போய் பிரம்மத்தை அதிகம் தெரிந்து கொண்டது.

அன்பர் - வேதத்தைவிட உபநிஷதம் பெரியதா?

நண்பர் - சச்சிதானந்தத்தையடைய வேதம் கடவுள்களை நாடியது. கடவுள்கள் நம் மோட்சத்தைத் தடுப்பார்கள், எதிர்ப்பார்கள் எனவும் உபநிஷதம் கூறுகிறது.

அன்பர் - சிவன், விஷ்ணுவை வழிபட்டு மோட்சம் பெற்றவர்கள் ஏராளமாயிற்றே.

நண்பர் - தெய்வம் சந்தோஷப்பட்டால் மோட்சம் தரும்.

அன்பர் - பணக்காரன் பிரியப்பட்டால், பிறரைத் தூக்கிவிடுவான். இல்லை என்றால் எதிர்ப்பான் என்பது போலவா?

நண்பர் - உபநிஷதம் நேரடியாக மோட்சம் போகும் வழியைக் கண்டது. பிரம்மத்தை வழிபடும் பிராமணன் கோயிலுக்கும் போகமாட்டான்.

அன்பர் - குருக்கள் பிராமணன்தானே.

நண்பர் - வழிபாடு மக்களுக்கு, பிரம்மம் சன்னியாசிக்கு.

அன்பர் - நடைமுறையில் குடும்பம் செய்பவன் பிரம்மத்தை வழிபட மாட்டான். அது சன்னியாச ஆசிரமத்திற்குரியது. இப்பொழுது புரிகிறது.

நண்பர் - மாயை உலகை சிருஷ்டித்தது என்ற ரிஷிகள் மனத்தால் விளக்கும்பொழுது விளக்கம் பாதியில் நின்று விடுகிறது.

அன்பர் - மனத்திற்கு முழுவதும் சொல்லத் திறமையில்லையா?

நண்பர் - அடிப்படையில் தடம் மாறிவிட்டதே. சத்தியஜீவியம் சிருஷ்டித்தது என்பதை மாயை சிருஷ்டித்தது என்று மாற்ற வேண்டியிருக்கிறது.

அன்பர் - மாயை சிருஷ்டிக்கவில்லையா?

நண்பர் - ஒரு கம்பனியில் முதலாளி சம்பாதிக்கிறார் என்பது உண்மை. அதை விளக்கலாம். தொழிலாளி சம்பாதிக்கிறான் என்று ஆரம்பித்தால் கடைசிவரை விளக்கம் சரி வாராது.

அன்பர் - தொழிலாளி சம்பாதிப்பது உண்மையில்லையா?

நண்பர் - ஓரளவு உண்மை. மாயையை சிருஷ்டிக்கர்த்தா எனக் கூறினால் விளக்கம் கடைசிவரை வாராது. ரிஷிகள் அதைக் கூற முயலவில்லை. ரிஷிகள் புரிந்துகொண்டு விளக்காமல் விட்டுவிட்டதை ஸ்ரீ அரவிந்தர் அவர்கள் சார்பாகக் கூற முயல்கிறார். பாதிவரை சரியாக வருகிறது.

அன்பர் - முழுவதும் ரிஷிகளைப் பின்பற்றி சரியாகக் கூற முடியாதா?

நண்பர் - ஏன் முடியாது என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். அசத் நிர்வாணம் என்பதை மனம் சூன்யமாகக் கருதுகிறது. அவை சூன்யமில்லை என்று மனம் புரிந்து கொள்ள முடியவில்லை. முடியாது.

அன்பர் - சரி கவியைப் பற்றி என்ன சொல்கிறார்?

நண்பர் - நாம் கற்பனை செய்கிறோம். அது கற்பனையாக இருக்கலாம், அல்லது கற்பனைக் கோட்டையாக இருக்கலாம். கவியின் கற்பனைக்குச் சிருஷ்டித் திறனுண்டு. உலகம் இராமன், கிருஷ்ணனை மறக்கப் போவதில்லை. அவர்கள் உயிருடைய பாத்திரங்கள்.

அன்பர் - பாத்திரங்களை சிருஷ்டிக்கலாம்.

நண்பர் - அதையே உபநிஷதம் கூறுகிறது. மாயை மனத்தால் பாத்திரங்களை சிருஷ்டிக்கலாம். அதுவே வரையறை, ஜடப்பொருள்களை சிருஷ்டிக்கமுடியாது.

அன்பர் - அது சத்தியஜீவியத்திற்கே முடியுமா?

நண்பர் - ரிஷிகள் சத்தியஜீவியத்தைப் பற்றிப் பேசவில்லை.

அன்பர் - கவியின் பாத்திரங்கள்வரை ரிஷிகள் கூறுகிறார்களா?

நண்பர் - இந்த உதாரணம் பகவான் எழுதுவது. ரிஷிகள் மாயை சிருஷ்டிப்பதைக் கூறுகிறார்கள்.

அன்பர் - உபநிஷதம் என்ற நூலில் உள்ள 44 பக்கக் கருத்துகள் அனைத்தையும் கூறிவிட்டீர்களா?

நண்பர் - கூற விட்டுப்போனவை,

  1. நிரானந்தம்.
  2. கவிக்கும், பரம்பிரம்மத்திற்கும் உள்ள ஒற்றுமை.
  3. ஆவியின் பிறப்பு.

முக்கியமாக விட்டுப் போனவை இம்மூன்றுதான். ஆனால் பகவான் 44 பக்கங்களில் கூறியதை நான் சுருக்கமாக 13 பக்கங்களில் கூறியிருப்பதால் விஷயம் சுருக்கமாகும்.

அன்பர் - புரிந்தால் சுருக்கமாக இருந்தாலும் பரவாயில்லை. நான் மீண்டும் ஒரு முறை நூலைப் படித்தால் விபரம் தெரியும். சரி விட்டுப்போனவற்றைப் பற்றிக் கூறுங்கள்.

நண்பர் - அதற்கு முன் சொல்லக் கூடியது என்பது ஒன்றுண்டு. பிரபஞ்ச சிருஷ்டி என்ற அத்தியாயத்தில் பகவான் சிருஷ்டியின் சாராம்சத்தைக் கூறுகிறார். மனம் உலகை சிருஷ்டித்தது என்ற கொள்கை நிலவுவதாய், முதல் அதற்குப் பதில் கூறவேண்டும். மனம் இரண்டுபட்டது.

அன்பர் - இரண்டுபட்டது என்றால்,

நண்பர் - நல்லது என்றால் உடனே கெட்டது வரும்.

அன்பர் - மனம் பகுதி என்பதைக் கூறுகிறீர்களா?



book | by Dr. Radut