Skip to Content

நிதானம்

மனிதனுக்குப் பல்வேறு திறமைகளுண்டு. பொதுவாக ஒருவருக்கு எல்லாத் திறமைகளும் அமைவதில்லை. ஏதாவது ஒன்று இருப்பதே பெரிய காரியம். ஒன்றுக்கு மேற்பட்ட திறமை ஒருவருக்கு அமைவது அபூர்வம். அப்படியிருந்தால் அவர்கள் அதிகமான உயர்வைப் பெறுவார்கள். உலகப் புகழ்பெற்ற பெரியவர்களைத் தவிர்த்து, வாழ்க்கையில் சிறப்புப்பெற்ற எவரையும் கவனித்தால், பெரும்பாலும் அவர்களிடம் ஒரு திறமையே சிறந்து இருப்பது வழக்கம். அது திறமையாகவும் இருக்கும்; சிறந்த குணம், உயர்ந்த பண்பாகவும் இருப்பது வழக்கம். அறிவு, சிந்தனை, ஆர்வம், தேசபக்தி, உழைப்பு, ஞாபகசக்தி, கற்பனை, எழுத்துத்திறன், பேச்சுத்திறன், தலைவராகும் தகுதி, விவாதம் செய்யும் திறமை, கலை, பாசம், பற்று, நாணயம், நேர்மை, நிதானம், பகுத்தறிவு, சூட்சுமம், தெய்வபக்தி, பெருந்தன்மை, தைரியம், விடாமுயற்சி, இவையெல்லாம் மனிதனை உயர்ந்தக்கூடியவை. நிதானம் என்று குறிப்பிடுவது (equality) மனத்தில் சாந்தியும், அறிவில் பொறுமையும் கலந்த பண்பாகும். அதுவே நிதானம் எனப்படும். நிதானத்தில் பல நிலைகள் இருக்கின்றன. உழைப்பு, அறிவு ஆகியவற்றில் பல நிலைகள் இருப்பதைப்போல் நிதானத்தில் பல நிலைகள் உள்ளன. அவற்றுள், கடைசி நிலையிலுள்ள ஓர் அம்சத்தையே நான் இங்கு குறிப்பிடுகிறேன். எதையும் செய்வதற்கு ஓர் அளவுண்டு. குழந்தைக்கும் அளவுக்குமேல் செல்லம் கொடுத்தால், குழந்தை கெட்டுப்போகும். சுத்தம் நல்லது என்பதால் தினமும் மூன்று வேளை குளித்து, மூன்று முறை புதுத்துணி உடுத்துவது நல்லதேயானாலும், பல சந்தர்ப்பங்களில் அது அர்த்தமற்றதாகிவிடும். எதற்கும் ஒரு வரம்புண்டு, வரையறையுண்டு. அளவு தேவை; சமையல் உப்புக்கு அளவு தேவை என்பதைப்போல் தேவைப்பட்ட வரையறை, வரம்பு

அளவு என்பதைக் கடைப்பிடிக்கும் பண்பை இங்கு நிதானம் எனக் குறிப்பிடுகின்றேன்.

எப்படி உயர்ந்த அறிவும், தைரியமும், மனிதனை அளவுகடந்து உயர்த்த முடியுமோ அதேபோல், இந்த வரையறை மனித வாழ்வை அளவுகடந்து வளப்படுத்த முடியும் என்ற கருத்தை விளக்கும் கட்டுரை இது. மேலும் வரம்புக்குள் செயல்படும்பொழுது வாழ்க்கை மனிதனை உயர்த்துவது போலவே, அன்னையும் அவனை உயர்த்த முன்வருவார்கள் என்பதும் இக்கட்டுரைக்குரிய கருத்தாகும். அன்னையின் முறைகள் வாழ்க்கை முறைகளிலிருந்து வேறுபட்டவை. அவற்றைப் பக்தர்கள் ஆர்வமாகப் பின்பற்றும்பொழுது, வரம்புக்கு மேல் சென்று அதிகமாகப் பின்பற்றப் பிரியப்படுவதுண்டு. சிலரால் முழுவதும் பின்பற்ற முடியவில்லை என்று குறையை உணர்வதுண்டு. அன்னையின் பக்தர்களான பின், அன்னையின் முறைகளைப் பின்பற்ற வரையறையுண்டா? அளவுக்கு மீறி ஆர்வத்துடன் பின்பற்றினால், அதன் விளைவு என்ன? அதைப்பற்றி அன்னையின் நியதி எது? என்பவை கட்டுரைக்குரிய கருத்துகள். இதுபோன்ற விஷயங்களில், மனதில் தெளிவு அடிக்கடி குறைந்து, குழப்பத்தை விளைவிப்பதுண்டு. அதை நீக்கி, தெளிவை உற்பத்தி செய்வதையே நோக்கமாகக்கொண்டு இதை எழுதுகிறேன்.

அறியாமையாலும், பேராசையாலும், பொறாமையாலும் மனிதன் வரம்பு மீறிய செயல்களில் ஈடுபட்டு, அதன் விளைவுகளால் பாதிக்கப்பட்டவற்றை விளக்கும் கதைகள் அநேகம். தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று வரம் கேட்ட மைதாஸ், அதே வரம் சாப்பிட முடியாமல் செய்துவிடும் என்று அறியவில்லை. எதையும் இசையோடு செய்வதே நல்லது என்று பணித்த குருவிடம் சிஷ்யன் அவருடைய வீடு தீப்பற்றியதை ஆற அமர இசையுடன் பாடி வர்ணித்த கதையொன்றுண்டு. இதுபோன்ற கதைகள் அறிவிலிகளுக்குத்தான் பயன்படும் என்று நினைப்பதுண்டு. உலகத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சிகளிலும், உலகத்து மேதைகளின்

வாழ்க்கையிலும் இதுபோன்ற தவறுகள் சில சமயங்களில் நடப்பதுண்டு என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

டாக்டர் சென் என்பவர் பிரபலப் பொருளாதார அறிஞர். 1943-இல் வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டு 30 இலட்சம் பேர்கள் மடிந்தார்கள். அது பிரிட்டிஷார் ஆண்ட காலம். பஞ்சம் பற்றாக்குறையால் ஏற்பட்டது. அதற்கு, சர்க்கார் என்ன செய்ய முடியும்? அதுவும் ஆண்டவன் செயல் என்று அன்று பிரிட்டிஷ் வைஸ்ராய் சொன்னார். இந்தியத் தலைவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சர்க்கார் பொறுப்புடன் நடக்கவில்லை. பொறுப்பை, சர்க்கார் சரிவர நிறைவேற்றியிருந்தால், பஞ்சம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று இந்தியத் தலைவர்கள் கூறினார்கள். டாக்டர் சென் வங்காளப் பஞ்சம், எகிப்தில் ஏற்பட்ட பஞ்சம், ஆப்பிரிக்காப் பஞ்சம், பங்களாதேஷ் பஞ்சம், ஆகியவற்றை ஆராய்ச்சி செய்து ஒரு நூல் எழுதியுள்ளார். இத்தனைப் பஞ்சங்களும் தான்யம் பற்றாக்குறையால் ஏற்படவில்லை. விநியோகம் முறையாக இல்லை. விநியோகம் முறையாக இருந்திருந்தால், இந்தப் பஞ்சங்கள் அனைத்தையும் தவிர்த்திருக்கலாம் என்கிறார். இந்தக் கருத்தை உலகம் ஏற்றுக்கொண்டது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் அவரை அழைத்தது. அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து இன்று பரவலாக உள்ளது.

இருக்கும் நிலைமையில், விநியோகம் என்பதை மட்டும் கவனமாகச் செய்திருந்தால், 30 இலட்சம் பேர் சாவைத் தடுத்திருக்க முடியும் என்பது முக்கியமானது. 1900-இல் பிரிட்டிஷ் பார்லிமெண்ட்டில் எதிர்கால உலகம் ஜனத்தொகைப் பெருக்கத்தால் உணவின்றி அழியும் என்று பேசப்பட்டது. டாக்டர் சென் ஆராய்ச்சியை ஏற்றுக்கொண்ட உலகம் ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்ததின் பலனாக விநியோகம் சரியாக இருந்தால் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது என்ற முடிவுக்கு வந்துவிட்டது. உணவு உற்பத்தி சம்பந்தமாக 10, 15 அம்சங்கள் உள்ளன. அவற்றுள் விநியோகம் ஒன்று. ஓர் அம்சத்தை

பயன்படுத்துவதில் வரையறையை முழுவதுமாகப் பின்பற்றினால் ஏற்படக்கூடியது பெரிய பலன். அதனால் வரம்புக்குட்பட்டுச் செயல்படுவது முக்கியமானதாகிறது என்று தெரிகிறது. வரம்புக்குட்பட்டுச் செயல்பட நிதானம் தேவை.

தொழில் சிறப்படைய உதவும் அம்சங்கள் சுமார் 20 சொல்லலாம். தொழிலில் வெற்றி பெற்றவர்களைப் பார்த்தால், கோடீஸ்வரர்களுடன் பேசினால், அவர்களிடம் இந்த 20 அம்சங்களில் பொதுவாக ஓர் அம்சம் மட்டும் இருப்பது தெரியும். யாரோ சிலருக்கு இரண்டு இருப்பது வழக்கம். அதேபோல் வாழ்க்கையில் ஒருவர் சிறப்புடன் உயர எந்த அம்சமும் பயன்படும். வரம்புக்குள் செயல்படுவது அவற்றுள் ஒன்று.

இறைவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட வேலை, தியானத்தைவிட உயர்ந்தது என்று அன்னை கூறுகிறார். இதைப் பின்பற்றவேண்டி ஒரு பக்தர் தியானம் தேவையில்லை என்று சொல்வதா என்று திகைப்படைகிறார். அன்னை ஆசிரமத்தில் தியானம் ஏற்பாடு செய்திருக்கின்றார். எப்படிப் புரிந்துகொள்வது? எதைச் செய்வது? எதைச் செய்யாமலிருப்பது? என்று குழப்பம் ஏற்படுகிறது. ஒரு பக்தரால் வேலைகளைச் சமர்ப்பணம் செய்ய முடிந்து, அதன்மூலம் தியானத்தைவிட அதிகப் பலனைப் பெற முடிந்தால், அவருக்குத் தியானம் தேவையில்லை. செயலை அர்ப்பணம் செய்ய முடியவில்லை என்பவருக்குத் தியானம் உதவும். மேலும், செயலை அர்ப்பணம் செய்பவருக்கும், அர்ப்பணத்தை மேற்கொள்ளத் தேவையான திறனைத் தியானம் தரும். தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்து அதன்மூலம் கிடைக்கும் யோக சக்தியைச் செயல் வெளிப்படுத்துவது நல்லது என்று ஆசிரமச் சாதகர்களுக்கு அன்னை சொல்லியிருக்கிறார். எனவே தியானத்தை மேற்கொள்ளும் பக்தர் தமக்குத் தியானம் அமைவதால் தினமும் 4 மணி, 5 மணி நேரம் தியானத்தை மேற்கொண்டு ஆபீஸுக்குப் போகாமலிருந்தால் என்ன செய்வது? ஓர் அன்பருக்கு தியானம் தானே அமைகிறது. எந்த

நேரமும் அவரைத் தேடிவருகிறது. அவர் பெண்மணி. தம் வேலைகள் முடிந்தவுடன் இயல்பாகத் தியானத்தில் அமர்ந்துவிடுவார். ஆசிரமம் வந்து ஒரு முறை தாம் தங்கிய 48 மணி நேரத்தில் 20 மணிக்குமேல் தியானத்திலிருந்தார். தியானம் அவரைத் தேடிவருகிறது. அது அவருக்குச் சரி. ஆபீசிற்குச் செல்பவர் ஆரம்பித்தால் அல்லது லீவு எடுத்துக்கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தால் அது சரியாகாது. தியானம் நம்மைத் தேடிவந்தால் மற்ற கடமைகளைப் புறக்கணிக்காமல் எவ்வளவு ஏற்றுக்கொள்ள முடியுமோ அவ்வளவு ஏற்றுக்கொள்ளுதல் நலம். வலிய அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. தினமும் நமக்கு அமையும் நேரம்வரை தியானத்தை ஏற்றுக்கொள்ளுதல் நலம். காலையில் அரை மணி தியானம் செய்ய முடிவு செய்து உட்கார்ந்து, தியானம் வாராமல் மனம் அலையும்பொழுது சாஸ்திரத்திற்காக அரை மணி உட்காருவதைவிட, தியானம் அமைந்த 6, 7 நிமிஷம் வரைக்கும் அமர்ந்திருந்து, அதைத் தினமும் கொஞ்சம், கொஞ்சமாக அதிகப்படுத்தி 30 நிமிஷமாக மாற்ற முயல்வது நல்லது.

தியானத்திற்குரிய லக்ஷ்ணம் இருக்கும்வரை அதை ஏற்பதே வரையறையோடு செயல்படுவதாகும். அதை வந்து நீட்டுவது பயன் தாராது. அளவோடு பயிலும் தியானம் அதிகபட்சத் தியானப் பலனைத் தரவல்லது. வந்து முறைமைக்காக மனம் அலைபாயும்பொழுது தியானம் என்ற பெயரில் சில நாட்கள் உட்கார்ந்தால், தானே அமையும் தியானமும் குறைய ஆரம்பிக்கும்.

எதையும் நான் கேட்கமாட்டேன், யாரிடமும் கேட்கமாட்டேன், தெய்வத்திடம் எதையுமே கேட்கமாட்டேன் என்ற கொள்கை அடிப்படையில் உயர்ந்தது. அளவுக்கு மீறி அதைச் செயல்படுத்த முற்பட்டால், தடம் மாறிப் போகும். யோகம் பயிலும் சாதகர்களுக்கே அது ஒத்து வாராது. இறைவனிடம் எதையும் சாதகன் கேட்கலாம் என்று அன்னை கூறியதற்கு எதிராகப் போகும். கேட்பது தவறா? கேட்காமலிருப்பது தவறா? என்ற குழப்பம் இயல்பு. தவறு கேட்பதில்லை. கேட்கும் மனநிலையிருக்கிறது. மனநிலை

தாழ்ந்ததானால் கேட்பது தவறு. மனநிலை உயர்ந்ததானால் கேட்பது சிறந்தது. கண்ணப்ப நாயனாருடைய எச்சிலும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுமே ஆண்டவனுக்கு உகந்தது. அதனால் எச்சில் உயர்ந்ததாகாது.

எதற்காகவும் நான் பிரார்த்தனை செய்யமாட்டேன் என்ற கொள்கை, கடமையுணர்வு, பொறுப்புணர்ச்சி, திறமை உள்ளவர்க்குப் பொருந்தும். ஏனெனில் அவர்கள் பிரார்த்தனை செய்யாமல் காரியங்கள் பூர்த்தியாகும். அவர்கள் ஆசையினால் உந்தப்பட்டவர்களில்லை. அவர்களுக்கும் கேட்கமாட்டேன் என்பது வேறு, கேட்பது தவறு என்பது வேறு. இறைவனை நாம் ஒன்று கேட்பது, கேட்டுப் பெறுவது என்பது நாம் இறைவனை எவ்வளவு நெருங்கியிருக்கின்றோம் என்பதைக் காட்டுகிறது. கேட்கக்கூடாது என்பது இறைவனைவிட்டு ஒதுங்கியிருக்கின்றோம் என்பதாகிறது. கடமைகளைச் செய்யாமல் பிரார்த்தனை செய்வது உயர்ந்த மனப்பான்மை ஆகாது. ஆனால் கடமைகளில் தவறியவர், பிரார்த்தனையிலும் தவறவேண்டும் என்பது சரியாகாது.

இறைவனை எதுவும் கேட்கமாட்டேன் என்பவர், எவரையும் எதுவும் கேட்பதில்லை என்றால் அவர் உயர்ந்த மனிதர் எனலாம். இது உயர்ந்த உள்ளத்தில் ஏற்பட்ட தவறான வறட்டுப் பிடிவாதம் எனலாம். நடைமுறையில் இறைவனை எதுவும் கேட்கமாட்டேன் என்பவர்கள், உறவினர்களை உதவி கேட்பார்கள்; தமக்குரிமை இல்லாததைக் கேட்பார்கள். உரிமையில்லாத பொருள்கள் கிடைக்குமிடங்களிலெல்லாம் கேட்பார்கள். கிடைக்காத இடத்தில் கேட்கமாட்டேன் என்பார்கள். எந்த உதவியை ஒரு முறை மட்டும் பெறலாமோ, அதை 50 முறைகள் பெறுவார்கள். இப்படிப் பேசுவதும், அப்படி மாறி நடப்பதும் நடைமுறையாக உள்ளவர்களை நாம் கருதவேண்டாம். உண்மையிலேயே இறைவனை எதுவும் கேட்கக்கூடாது என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள்

இறைவனின் தன்மையை முழுவதுமாக உணரவில்லை. உரிமையுடன் கேட்பதை இறைவன் பெரிதும் விரும்புகிறான்.

எனக்குக் கேட்பது தவறாகப்படுகிறது. இறைவனிடம் என் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும் என்று கேட்கத் தயக்கமாக இருக்கிறது. அளவோடு நடக்க வேண்டுமானால் நான் எப்படிச் செயல்படவேண்டும் என்று கேட்பவருக்கு என்ன பதில்?

முதலாக இந்தக் கொள்கை தவறா, சரியா என்று பார்த்தால், கேட்கும் மனநிலை பக்தி நிறைந்ததாக இருக்குமானால், கேட்பது சரி; உயர்ந்ததும்கூட. அடுத்தபடியாக கேட்பது சரியானாலும், எனக்குத் தயக்கமாக இருக்கிறது என்றால், தயக்கம் இருக்கும்வரை கேட்காமலிருப்பது சரி. தயக்கம் தவறு என்றுணர்ந்து, அதை விட்டுவிட்டுக் கேட்டால் துன்பம் எளிதில் விலகும். தயக்கம் இருக்கும்வரை கடமைகளை முழுவதுமாகச் செய்துவிட்டு கேட்காமலிருந்தால், பிரச்சினை தானே விலகும். நம் கடமை பூர்த்தியான இடத்தில் அன்னை பிரார்த்தனையை எதிர்பார்ப்பதில்லை. மனத்தின் தயக்கத்தை ஏற்று, அதை மதித்து நடப்பதே வரையறையுடன் நடப்பதாகும்.

ஒரு பக்தருக்கு அன்னை மீது அபார பக்தி. சமாதி அருகில் வந்தால் நெஞ்சு நிறைந்து, அகன்று, விம்மும்; தெய்வீக அன்பு ஊறும். அன்னை பக்தர்களைக் கண்டாலேயே அது போருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு யோகம் பலிக்கும். கிடைத்தற்கரிய பக்தி இயற்கையில் அமைந்துள்ளது. "கிடைக்காதது......... முக்கியமானது......... அற்புதமானது'' என்று மஹான்கள் போற்றக்கூடிய அம்சம் அவருக்குப் பிறப்பில் அமைந்துள்ளது. அன்னை அப்படிப்பட்டவரைப் பார்த்தால், திரும்ப அனுப்பவேமாட்டார்கள். எப்படியும் அவர்கள் சீக்கிரம் அன்னைக் காலடியில் வந்துசேர்ந்துவிடுவார்கள். இவையெல்லாம் உண்மை; உயர்வு. இவ்வளவு உயர்ந்த அம்சம் இருப்பதால் அவர் தம் சூழ்நிலையிலிருந்து தம்மை வலுக்கட்டாயமாகப் பிரித்து உடனே ஆசிரமம் வந்து சேர முயன்றால், அது சரியாகுமா? யோகம்

உயர்ந்தது; அதை ஏற்றுக்கொள்ளும் அம்சம் உயர்ந்தது என்றாலும், அதை ஏற்றுக்கொண்டு கடைசிவரை நிறைவேற்றக் கடும்தவத்தை இனிமையாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வேண்டும். எல்லாப் புத்திசாலிப் பிள்ளைகளுக்கும் கடுமையாக உழைத்துப் படிக்கும் பக்குவம் இருப்பதில்லை. இந்த அன்பர் தம் அம்சத்தை உணராமல் போய்விட்டாலோ, அல்லது தவறான குரு ஒருவரை அறிவில்லாமல் அடைந்துவிட்டாலோ அது துர்அதிர்ஷ்டம். அல்லது தம் ஆழ்ந்த அபிப்பிராயத்திற்கும், மற்ற சந்தர்ப்பங்களுக்கும் எதிராக வந்து தம்மைப் பிரித்து யோகத்தை மேற்கொண்டாலோ இது நீடிக்காது. அம்சம் பெரியது; அதை அளவுடன், அதிகபட்ச யோகப்பலன் கிடைக்குமளவுக்குப் பயன்படுத்தும் நிதானம் தேவை; அதுவே சிறந்தது.

பேங்க் ஏஜெண்ட் ஒருவர் அன்னையைத் தரிசித்தவுடன், அன்னைமீது அபார பக்தி ஏற்பட்டு தம் வேலையை ராஜினாமா செய்து, தம் மனைவியிடம் கல்லூரி ஆசிரியை வேலையை ராஜினாமா செய்யச்சொல்லி இருவரும் அன்னையின் பாதங்களில் சரண் அடையத் துடித்தனர். அன்னை, அது சரியாகாது என்றும், அவர் இருக்குமிடத்திலிருந்தே யோகப் பயிற்சியை மேற்கொள்வதே சிறப்பு என்றும் சொன்னதைப் புறக்கணித்தார். அடுத்தபடியாக அன்னை, அவர் 6 மாத லீவு எடுத்துக்கொண்டு வரவேண்டும்; அதுவே சரியான முதற்படி என்றார். ஏஜெண்ட் துடிக்கிறார்; பறக்கின்றார். என் ஆர்வத்தைத் துரோகம் செய்வது போலிருக்கிறது என்றார். ராஜிநாமா செய்வதே என் ஆர்வத்திற்குச் சரி. லீவு எடுத்துக்கொண்டு வந்தால் பாங்குடன் தொடர்பிருக்கும். அப்படியிருப்பதை என்னால் பொறுக்கமுடியாது என்று ராஜிநாமா செய்து, ஆசிரமம் வந்தார். வந்த 10 நாட்களுக்குள் யோகம் புளித்துவிட்டது. எதைப் பார்த்தாலும் குறை; எவரைப் பார்த்தாலும் குறை. 3-ஆம் மாதத்தில் திரும்பப் போய்விட்டார். இதுபோன்று அதிக ஆர்வத்துடன் அவசரமாகச் செயல்பட்டு, அவசரமாகப் பாதையைத் திருப்புபவருண்டு. அதுவும் அன்னையின் சொற்களை மீறிச் செய்வது

உண்டு. இவற்றிற்கெல்லாம் ஆர்வம் என்று பெயரில்லை; அவசரம் என்று பெயர். அவசரத்தைவிட அளவோடு செயல்படும் நிதானம் உயர்ந்தது. அளவை மீறியவுடன் நாம் அறிவில்லாமல் செயல்படுகிறோம் அல்லது ஆசைக்கு அடிமைப்படுகிறோம் என்ற நிலை உருவாகும். அறியாமை, அவசரம், ஆசை ஆகியவற்றிற்குப் பலியாவதற்கு அளவை மீறி செயல்படுவது ஒரு வழி.

குறை கூறக்கூடாது என்பது உயர்ந்தது. குறை கூறுவதையும் அளவோடு செய்ய வேண்டும் என்பதும் முக்கியமானது. அளவுக்கு மீறிக் குறை கூறும்பொழுது, மனிதன் தன்னையறியாமல், தன்னிடம் உள்ள குறைகளைப் பிறரிடம் காணும்போது வேகமாகப் பேசுவான். ஒருவர் தம் நண்பரின் நன்றிகெட்ட குணத்தைக் கண்டித்து மூன்றாம் நபருடன் பேச ஆரம்பித்தவர், வேகம் ஏற்பட்டு, பல நிகழ்ச்சிகளைக் கூறி, நண்பரின் தாழ்ந்த மனப்பான்மையைக் கண்டித்து ஆவேசமாகப் பேசி, உச்சக்கட்டத்தை அடைந்த நிலைமையில் ஒரு கணம் தாமதித்து, அதுபோன்ற கீழ்த்தரமான செயலை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று மேஜையைத் தட்டிப் பேசியவர் நிதானித்தார். மீண்டும் பேச ஆரம்பித்து, நானும் சமீபத்தில் அதேபோல் நடந்துகொண்டேன் என்று கூறி, பேச்சை நிறுத்தினார். வரம்பு மீறிச் செயல்படும்பொழுது, அது நம் அறியாமையின் விளக்கமாகவே அமையும்.

அன்னை குழந்தைகளை அடிக்கக்கூடாது என்று சொல்கிறார். அதை அப்படியே பின்பற்றுதல் சிறந்தது. விலக்காக உள்ள சில நேரங்களில் என்ன செய்வது என்று குழப்பம் ஏற்படும். அது குழந்தையின் சுபாவத்தாலோ, நம் சந்தர்ப்பத்தாலோ ஏற்படலாம். அன்னையின் சொற்களை அப்படியே பின்பற்ற நாம் எடுக்கும் முயற்சிகள் சிறந்தவை; உயர்ந்த பலன் தரும். கண்டிப்பாக இதுவரை இருந்த தாயார், தகப்பனார், இப்பொழுது கண்டிப்பது இல்லை என்பதைக் குழந்தைகள் சீக்கிரம் தெரிந்துகொள்ளும். நல்ல குழந்தைகள் அதைக் கண்டவுடன், பெற்றோரிடம் நெருங்கி

வருவதுடன் ஏற்கனவே செய்த விஷமங்களைக் குறைத்துவிடும். ஏற்கெனவே அடித்தால்தான் அடங்கும் என்பது இப்பொழுது சொன்னால் அடங்கும். குழந்தைகளை அடிக்காமல், சுதந்திரமாக வளர்ப்பதால் ஏற்படும் நன்மை இது. கவனமாகப் பார்த்தால், குழந்தைகள் சிணுங்குவது, படிக்கமாட்டேன் என்று அடம்பிடிப்பது, அடிக்கடி ஜுரம் வருவது போன்றவை குறையும். கொஞ்ச நாளைக்குப்பின் பையனுக்குப் புத்திசாலித்தனம் வந்துவிட்டதாகத் தோன்றும் அளவுக்கு மாறுதல் இருக்கும். உடல்நலம் பெருகியதாகவும் தோன்றும். இதுமட்டும் ஏற்படும் மாறுதலாயிருந்தால் நல்லது. குழந்தைகள் பல விதத்தினர். உத்தமம், மத்திமம், அதமம் என்ற பாகுபாடுகளில் வரக்கூடியவர். உத்தமமான குழந்தைகளில் இந்த நல்ல மாறுதல் தெரிந்தால், மத்திமமான குழந்தைகளில் நல்ல மாறுதல்கள் குறைவாகவும், கெட்ட மாறுதல்கள் சிலவும் தெரியும். அதமமான குழந்தைகள் புதிய நிலையைக் கண்டுகொண்டவுடன், அட்டகாசம் செய்யும். ஏற்கனவே சத்தம் போட்ட குழந்தை, இப்பொழுது பொருள்களைப் போட்டு உடைக்கும். வீட்டுப்பாடம் எழுதாத குழந்தை, பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கும். இந்த நிலைமையில் அன்னையை எப்படிப் பின்பற்றுவது? குழந்தை கண்டிப்புக்கு அடங்கவில்லை; அடித்தால் அடங்கும். அன்னையின் சட்டம் அடிக்கக்கூடாது. குழந்தை அடம் செய்தால் கோபம் வந்து அடிப்பது வழக்கம். மாறாக, கோபம் வாராமல் இந்தக் குழந்தையை அடிக்க வேண்டும். ஏற்கனவே 10 அடிகள் வாங்கும் குழந்தை, இப்பொழுது 1 அடி வாங்கியவுடன் பள்ளிக்கூடம் போகும். அன்னையையும், அவர் முறைகளையும் ஏற்றுக்கொள்ளுதல் சிறப்பு. ஆனால் சந்தர்ப்பத்தையொட்டி, அவற்றின் உள்ளுறை உண்மைக்கு ஏற்றவாறு மாற்றிப் பின்பற்றுதல் அவசியம். அர்த்தமில்லாமல் ஒரு முறையைப் பின்பற்றி பழைய பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல், புதிய பிரச்சினைகளையும் உற்பத்தி செய்வது சரியாகாது. அன்னையின் நியதியை நம் சுபாவத்திற்கேற்றபடி

நியாயமாக மாற்றி அமைப்பது, குழந்தையின் சுபாவத்திற்கேற்றபடி மாற்றி அமைப்பது முக்கியம். அந்த மாற்றம் அன்னையின் அடிப்படைக் கருத்தை ஒட்டியே இருத்தல் அவசியம். குழந்தையிடம் கடுமை கூடாது என்பதே அன்னையின் கருத்து. வளர்ப்பில் கடுமை கூடாது. கடுமையான குழந்தையை முறையாக வளர்க்க கடுமையில்லாவிட்டாலும் கண்டிப்பு அவசியம்.

ஒளரங்கசீப் முகலாயச் சக்ரவர்த்தி. அவர் மகன் அவருக்கு எதிராகச் சேனையைச் சேர்த்துப் புரட்சி செய்கிறான். படைகளை அனுப்பிய ஒளரங்கசீப் தம் மகனைப் பிடித்துவரச் சொன்னார். அவன் உடல் எந்தக் காயமும் படக்கூடாது, அடிபடாமல் அவனைப் பிடித்துவரும்படி உத்தரவிட்டார். நாட்டில் புரட்சியை ஏற்படுத்தியது மகன். அவனைத் தோற்கடித்து கைது செய்யவேண்டியது அவசியம். அவன்மேல் அடிபடாமலிருக்க வேண்டும் என்று பெற்ற மனம் நினைக்கிறது. இதுபோன்ற முரணான நிகழ்ச்சிகள் சக்ரவர்த்திக்கும் ஏற்படுவதுண்டு என்பதை இந்நிகழ்ச்சி குறிக்கிறது.

சாவித்திரியை எப்படிப் படிப்பது என்ற சொற்பொழிவில், புரிந்துகொள்ள முயலாமல், மனப்பாடம் செய்யாமல், மனத்தையும், ஜீவனையும் அமைதியாக வைத்துக்கொண்டு படித்தால், சாவித்திரியில் உள்ள யோக சக்தி நம் ஜீவனை வந்தடையும் என்று அன்னை எழுதியிருக்கிறார். நமக்கு மனமும் அமைதி பெறுவதில்லை. ஜீவனும் சாந்தத்தில் மூழ்குவதில்லை. சாவித்திரியை எப்படிப் படிப்பது? இப்படி எழுதிய அன்னை, ஸ்ரீ அரவிந்தர் எழுதியவை புரியவில்லை என்றால் கையில் பேப்பர், பென்சில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பாராவிலும் என்ன கருத்திருக்கிறது என்று குறித்துப் படிப்பது நல்லது என்று எழுதியிருக்கிறார். அதாவது படிக்கும் நிலைகள் பல உள. நாம் எந்த நிலையில் இருக்கின்றோமோ அதற்குரிய முறையைப் பின்பற்றுவது முக்கியம் என்றாகிறது. புரியாதவனுக்குப் புரிவது முக்கியம். யோக சக்தி நம்முள் வந்தடைய ஜீவனில் அமைதி முக்கியம். நம் அறிவு நிலைக்கேற்ப, நம் முறையைத் தேர்ந்தெடுத்தால் அதிகபட்சப் பலன் கிடைக்கும். Life Divine படிக்கும்பொழுது கருத்துத்

தெளிவாகவேண்டும் என்றால் ஒவ்வொரு கருத்தையும் தேடிக் குறிக்க வேண்டும். ஒரு பிரச்சினை தீர Life Divineஐ படித்தால், பொதுவாகப் படிக்கலாம். வாய்விட்டுப் படிப்பது இதற்கு நல்லது. The Synthesis of Yoga யோக சக்தி பெற பொதுவாக படிக்கலாம். யோக முறைகளை அறிய, விளக்கமாக, பாரா, பாராவாக முறைகளை குறித்துக்கொண்டு படிக்கலாம். ஒரு பிரச்சினை தீர ஏதாவது ஓர் இடத்தில் எடுத்துப் படிக்கலாம். இரவில் தூங்கப் போகுமுன் ஓரிரு பக்கங்கள் படிப்பவர், மனத்தை அமைதியாக வைத்துக்கொண்டு படிப்பது நலம். புத்தகத்தின் உயர்வுக்கும், நம் அறிவு நிலைக்கும், எதற்காகப் படிக்கின்றோம் என்பதையும் மனதில்கொண்டு அதற்கேற்பப் படித்தல் நல்லது.

ஏதாவது ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டு அதை எல்லா இடங்களிலும் அர்த்தமற்ற வகையில் அதிகமாகப் பின்பற்றுதல் ஆங்கிலத்தில் fad எனப்படும். கூட்டங்களில் கலந்துகொள்ளுதல் நல்லதன்று என்பதைப் பின்பற்ற ஆரம்பித்து, தரிசன நாட்களில் ஆசிரமத்தில் கூட்டம் இருப்பதால் அங்கு வாராமலிருப்பவரும் உண்டு. தரிசனம் விசேஷ நாள். அன்று ஆசிரமத்தில் அன்னை, ஸ்ரீ அரவிந்தரை விசேஷமாகக் காணலாம். 1962 ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமக் கட்டிடத்தின்மீது உட்கார்ந்திருந்ததைத் தாம் கண்டதாக அன்னை கூறுகிறார். ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் என்றும் சமாதியில் இருந்தாலும், தினமும் சமாதிக்குச் செல்லும் பக்தருக்குத் தரிசனத்தன்று இருவரும் பொன்னிறமாகக் கொஞ்ச நாழிகையும், வெள்ளொளியில் அரை மணி நேரமும் தத்ரூபமாய்க் காட்சியளித்தனர். மற்றொருவர் இன்று தரிசனம் சிறப்பாகவும், நிறைவாகவுமிருந்ததென்றார். மற்றொருவர் ஸ்ரீ அரவிந்தர் சமாதி மீது பொன்னொளியுடன் துயில்வதாக எனக்குப்பட்டது என்றார். இதுபோன்ற சிறப்புவாய்ந்த நாளையும், ஏதோ ஒரு காரணம் காண்பித்துத் தவிர்க்கும் அளவுக்கு அன்பர்கள் வருவதுண்டு. எதற்கும் அளவுண்டு; அளவோடு பழகுவது நல்லது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். நான் சொல்வது உண்மையான

அன்பர்களைப் பற்றி; ஆசிரமத்தின் மீது வெறுப்புள்ளவர்கள், அன்னைமீது நம்பிக்கை இல்லாதவர்கள், வேறு பல சந்தர்ப்பங்களுக்காகத் தங்களை அன்பர்களென்றும், தீவிர பக்தர்களென்றும் பறைசாற்றவேண்டிய நிர்ப்பந்தமுடையவர்களாக இருப்பார்கள். தவறாது மற்ற விசேஷங்களுக்கும், வேறு கோயில்களுக்கும் போவார்கள். அவர்களும் இதுபோன்ற காரணத்தைக் கூறுவதுண்டு. அவர்களை நான் குறிப்பிடவில்லை. ஒரு விவரத்தை அதன் உட்கருத்துக்கு மாறாகப் புரிந்துகொண்டு அதிகமாகப் பின்பற்றும்பொழுது அது தலைகீழாக மாறுகிறது. அதனால் அளவோடு நியதிகளைப் பின்பற்றினால், அந்நியதியால் அதிகபட்சப் பலன் அடையலாம் என்பதை மட்டும் குறிப்பிடுகிறேன்.

ஸ்ரீ அரவிந்தர் அறையைத் தரிசனம் செய்ய, தினமும் சில பக்தர்கள் போவதைப் பார்த்து, புதியதாய் வந்த ஓர் இளைஞர் தாமும் தினசரி செல்லத் தொடங்கினார். அவர் ஒரு காண்டிராக்டர். அன்னையைப் பற்றி அறியாதவர். நண்பர்களுக்காக முதல் வந்தவர். ஈடுபாடுடைய அன்பர்கள் தினமும் அறையைத் தரிசனம் செய்தால், அதற்கு யோகப் பலன் உண்டு. புதியவருக்கு அது ஒத்துவாராது. இந்த விஷயம் என்னிடம் வந்ததும், அவருக்கு நான் விளக்கம் சொன்னேன். அவர் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. தம் பக்தியின் சிறப்பை நான் உணரவில்லை என நினைத்தார். என் பேச்சை ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து தரிசனத்திற்காக அறைக்குப் போனார். சில நாட்கள் கழித்து என்னிடம் வந்து இன்று அறைக்கு வெளியிலிருக்கும்பொழுது என் தலையில் பாறாங்கல்லால் அடிப்பது போன்றிருந்தது; மயக்கம் வந்தது. திரும்பி வந்துவிட்டேன் என்றார். அளவை மீறாமலிருப்பது நல்லது.

சிலர் ஆசிரமம் வந்து இதன் உயர்வைப் பார்த்தபின், தம் நண்பர்கள், உறவினர்கள், அனைவரும் வரவேண்டும் என்று முயல்வதுண்டு. இது சரிவாராது. தெரியாதவர்களுக்குச் சொல்லலாம்; வற்புறுத்தக்கூடாது. ஒரு மிராசுதார் தம் மாமாவை வற்புறுத்தி

அழைத்துவந்தார். வந்தவர் சமாதி அருகில் நிற்க முடியவில்லை. இனி என்னை இங்கு வரக் கூப்பிடாதே என்று வற்புறுத்திச் சொல்லிவிட்டார்.

காணிக்கையில் சிலர் அளவு மீறி தங்கள் ஆர்வத்தைக் காட்டுவதுண்டு. கடன் வாங்கி காணிக்கையைப் பெருந்தொகையாக அனுப்பியவருக்கு, பெருங்கடன் ஏற்பட்டது. வெளிநாட்டு பக்தர் ஒருவர். தம் வருமானத்தில் தமக்குச் செலவு போக அனைத்தையும் காணிக்கையாகச் செலுத்துவார். அவர் தனி மனிதர்; குடும்பமில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் நண்பர் ஒருவருக்கு 3 நாட்கள் செய்த உதவிக்காக ஒரு வருஷச் சம்பளம் கமிஷனாக எதிர்பாராமல் கிடைத்தது. முழுவதுமாகக் காணிக்கை செலுத்தியவருக்கு ழுச்சம்பளம் எதிர்பாராமல் வந்தது. அதையும் முழுவதுமாகக் காணிக்கையாகக் கொடுத்துவிட்டார். இது அவருக்குச் சரி. 160 ரூபாய் சம்பளம் பெறுபவர் அதிகபட்சக் காணிக்கை கொடுக்க விரும்பி 300 ரூபாய் அன்னைக்கு அனுப்பினார். அவர் குடும்பம் இரண்டு மாதம் பட்டினி கிடந்தது. அன்னை விஷயத்தில் மனத்தில் குறையில்லாமல், அறிவில்லாமல் நடந்துகொண்டாலும், பின்னர் இவருக்கும், இவர் குடும்பத்தாருக்கும் எதிர்பாராத உயர்வுகள் ஏராளமாக வந்தன. தனி மனிதனுக்குள்ள வசதி, குடும்பத்திலுள்ளவருக்குக் கிடையாது. அளவை மீறிப்போனால் பட்டினி கிடக்க வேண்டும். இது தேவையில்லாத சிரமம்.

யோகத்திற்குத் திருமணம் நேர் எதிர் என்றாலும், ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் சில சமயங்களில் சாதகர்களைத் திருமணம் செய்துகொள்ளச் சொன்னதுண்டு. சாதகர்களுடைய சுபாவத்தை ஒட்டிப்போவதே முக்கியம் என்பதை இது காட்டுகிறது.

அதிகமாக ஒன்றைப் பின்பற்றினால் அதற்கு எதிர்மாறான பலன் ஏற்படும். குறைவாகப் பின்பற்றினால் வாய்ப்புகளை இழக்க நேரிடும். அளவோடு பின்பற்றினால் அதிகபட்சப் பலன் உண்டு. உதாரணமாக, தினமும் 6 மணி, 8 மணித் தியானம் செய்ய

முடிந்தால் அது எல்லோருக்கும் ஒத்துவாராது. பலருக்கு உடம்பில் படபடப்பு வந்துவிடும்; தலைவலி வரும்.

அன்னையின் அடிப்படையான சட்டம் (balance&rhythm) அளவு, நிதானமாகும். அன்னையின் சட்டங்களை நம் சுபாவத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாற்றிப் பின்பற்றுதல் அன்னையின் அடிப்படையான சட்டத்தைப் பின்பற்றுவதாகும்.

40 ஆண்டுகளுக்குமுன் பல்கலைக்கழக ஆசிரியரானவர், திருமணத்தால் தாம் பொருளையோ, அந்தஸ்தையோ பெறக்கூடாது என்ற இலட்சியம் உடையவர். அதனால் ஒரு முன்பின் தெரியாத ஏழை வீட்டில், பெண் B.A. படித்திருப்பதால், திருமணம் செய்துகொண்டார். வந்த மனைவி அவருடைய இலட்சியத்திற்கு அர்த்தமில்லை என்று விளக்குவதற்கு அதிக நாட்கள் தேவைப்படவில்லை. அடுத்தாற்போல் தம்பிக்குக் கல்யாணம். எல்லோரைப் போலவும், எல்லாச் சீர்வரிசைகளையும் பெற்றுப் பெரிய இடத்தில் திருமணம் செய்துவைத்தார். அதன்பின் மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும்பொழுது வசதியான இடத்தில் திருமணம் செய்துகொள்வது சரி என்று சொல்வார். அவருடைய இலட்சியம் உயர்ந்தது. ஆனால் அவர் வாழ்க்கைக்கு அது முரணானது என்று சீக்கிரம் புரிந்து கொண்டு, தலைகீழாக மாற வேண்டியதாயிற்று. இலட்சியம் உயர்ந்ததென்றாலும், நம்மால் கடைசிவரைக்கும் இலட்சியத்தைக் காப்பாற்ற முடியுமா என்று கருதி, கடைசிவரைக்கும் காப்பாற்றக்கூடியதையே பின்பற்றுவது அளவோடு செயல்படுவதாகும்.

பரம்பரையாக நாம் இராகுகாலத்தை அறிந்தவர்கள். நம் நாட்டில் மற்ற மதத்தினரில் சிலர் அதைப் பின்பற்றுவதுண்டு. அன்னையிடம் வந்தபின் அதைக் கருதவேண்டியதில்லை. என்றாலும், பழக்கம் விடமாட்டேன் என்கிறது. மனதில் நம்பிக்கை இருக்கும்வரை அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. நம்பிக்கை விட்டுப்போனபின், பழக்கத்தை விட்டுவிடலாம். மனம் நம்புவதை வாய்

மறுத்தால், மனத்தின் நம்பிக்கை வாய்ச்சொல்லை மீறிச் செயல்படும். அது தவிர்க்கப்படவேண்டியது.

எனக்கு எதையும் அளவுக்குமீறிக் கடைப்பிடிக்க வேண்டும். அரைகுறையாக எதையும் பின்பற்ற என் சுபாவம் இடம்கொடுக்காது என்பவர்களுண்டு. அவர்கள் தங்கள் வாழ்க்கையைச் சோதனை செய்தால், எதை ஆரம்பித்தாலும் சீக்கிரத்தில் விட்டுவிடுவார்கள் என்பது தெரியவரும்.

1920-இல் அன்னை சாதகர்களைத் தம்மிடம் சொல்லாமல் ஆசிரமத்தைவிட்டுப் போகவேண்டாம் என்று சொல்லியிருந்தார். குறிப்பாகக் கடைத்தெருவுக்குப் போகக்கூடாது என்றிருந்தார். ஒருவர் போனார். கடையில் நிற்கும்பொழுது கால்களைக் காணோம். ஓடிவந்து அன்னையிடம் சொன்னார். ஏன் போனாய்? ஏன் சொல்லாமல் போனாய்? என்று கேட்டார்கள். ஆசிரமத்தில் நுழைந்தவுடன் கால்கள் இருப்பது தெரிந்தது.

தியான மையங்களில் மாதந்தோறும் கூடுகின்றனர். சில இடங்களில் மாதம் இரு முறையும் கூடுகின்றனர். ஓரிரு இடங்களில் 4 வாரமும் கூடுகின்றனர். தினமும் தியானம் ஏற்படுத்தலாம். எல்லாம் சரி, மையத்தை நடத்துபவர் 20 மணி தியானம் செய்பவரானால், வருபவர்களுக்கு ஆர்வமும், வசதியும், தியானமும் அமையுமானால் செய்யலாம். எது முடியுமோ அது சரி.

வாரணாசியில் ஒரு கல்லூரி ஆசிரியர் 17 M.A. பட்டம் தொடர்ந்து பெற்றார். இரண்டு M.A. பெறுவதுண்டு M.A.க்குப் பின் அடுத்த உயர்ந்த பட்டம் பெறுவது முறை. இவர் கல்லூரி ஆசிரியர். பட்டத்தில் பிரியம் உள்ளவர். 17வரை எடுத்திருக்கின்றார். இதையே வேறொருவர் பின்பற்ற முயன்றால், செய்தால் சரி வருமா?

தியானம் வரவில்லை, பக்தியிருக்கிறது என்றால் பக்தி போதும்; அதுவே தியானத்தின் பலனைக் கொடுக்கும். இருந்தாலும் தியானம்

வரவில்லையே என்ற ஏக்கம் சிலருக்கு இருப்பதுண்டு. இல்லாததை விட்டு இருப்பதைப் பாராட்டினால், உயர்ந்த ஆனந்தம் ஏற்படுகிறது என்பது ஒருவருடைய அனுபவம்.

சீதனம் கேட்கக்கூடாது என்று முடிவு செய்த வரனுக்குப் புகழ்மாலைகள் வரவில்லை. பெண் கேட்ட இடத்திலெல்லாம் சந்தேகம் ஏற்பட்டு, பெண் கொடுக்க மறுத்தார்கள். சீதனம் கேட்க ஆரம்பித்த பின்னரே, பெண் கிடைத்தது. நமக்கு உயர்ந்த உள்ளம் இருக்கலாம். நாம் வாழும் சமூகத்தை ஒட்டிப்போகவேண்டும். சமூகத்திற்குப் பொருத்தமில்லாத இலட்சியத்தைப் பின்பற்றச் சாதாரண மனிதனால் முடியாது. அதற்குரிய இலட்சியத்தைச் சாதாரணமானவன் பின்பற்றினால் பலன் வாராது என்பது மட்டுமன்று; தலைகீழான பலன் ஏற்படும்.

இராமபிரான் தம் தர்மத்தைவிட்டு வாலியைக் கொன்றார். கிருஷ்ண பரமாத்மா தர்மயுத்தத்தை வெல்வதற்காகப் பல முறைகள் தர்மத்தை மீறினார். ஸ்ரீ அரவிந்தர் 24 ஆண்டுகள் மௌனத்திலிருந்த பொழுது ஒரு சாதகர் அவரைச் சந்தித்துப் பேசவேண்டும் என்று வலியுறுத்தினார். பகவானும் தம் மௌனத்தைவிட்டு அவருடைய பிடிவாதத்தை ஏற்று அவரிடம் பேசினார். ஜவஹர்லால் நேருவின் உயர்வை அறிந்த மகாத்மா காந்தி, நேரு வரும்பொழுது அவருக்குப் பிடித்தமான சிகரெட்டை வாங்கிவைத்திருந்து அவரிடம் கொடுப்பதுண்டு. தங்களுடைய உன்னதமான கொள்கைகளை உயர்ந்தவர் விட்டுக்கொடுப்பது, அளவோடு பழகவேண்டும் என்பதால்தான்.

தாலுக்கா ஆபீஸ் தலைமை குமாஸ்தா இருவர். ஒருவர் மாற்றலாகிப் போன இடத்திற்கு, மற்றவர் வந்தார். முதலாமவர் நிதானம் என்று நான் விளக்குவதை முழுமையாக விரதம்போல் கடைப்பிடிப்பவர். அடுத்தவர் எது முடியுமோ அதைச் செய்துவிடுவார். ஆதாயம் இருந்தால் அளவுகடந்து செயல்படுவார். முதலாமவர் பையன் M.A. படித்து, கல்லூரி ஆசிரியராகி, கெஜட் பதவிக்கு நேரடியாகத்

தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் I.A.S பெற்று செக்ரடரியாக ரிடையர் ஆனார். அடுத்தவர் மகன் B.A. சிரமப்பட்டு பாஸ் செய்து குமாஸ்தாவாகி, பெரிய குடும்பத்தை வறுமையில் நடத்தி, ரிடையராவதற்குமுன் இறந்துவிட்டார். நிதானம் நீடித்த பலனைக் கொடுக்கும். அளவுமீறிச் செயல்பட்டால் அடிமட்டத்திலேயே வாழ்க்கை முடிந்துவிடும்.

நிதானத்தை உலகம் கடைப்பிடித்ததற்குப் பல உதாரணங்கள் உண்டு. கடைப்பிடிக்காமல் புறக்கணித்ததற்கும் பல உதாரணங்கள் உண்டு. அரசர்கள் பிச்சைக்காரியை அழகுக்காக ராணியாக்கிய நிகழ்ச்சிகள் உண்டு. மாடு மேய்த்த காளிதாஸனைக் கண்ணிறைந்தவனாக இருப்பதால் ராஜகுமாரி திருமணம் செய்து கொண்டாள். 150 கோடி நிறுவனத்தின் தலைவர் ஒருவர் தம் கம்பெனிக்கு முக்கிய ஆபீஸரை நியமிக்க நினைத்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு நாள் தம் ஹோட்டல் பாத்ரூமிலிருந்து வெளிவரும் பொழுது, நின்றுகொண்டிருந்தவரை, இனிமையாகப் பேசினார் என்பதற்காக அவரையே அந்தப் பெரிய பதவிக்கு நியமித்தார். ஹாலந்தில் ஒரு பெரிய கம்பெனி தலைமை ஆபீஸுக்குத் தினமும் 17,000 டெலக்ஸ் செய்திகள் வருகின்றன. ஒருவரும் அதைப் படிப்பதில்லை. சென்னை கவர்னர் தமக்கு வாத்து முட்டை சப்ளை செய்த வியாபாரியை பல்கலைக்கழகச் செனட் மெம்பராக நியமித்தார். தம் செயலுக்கும், அதற்குத் தேவையானது எது என்பதற்கும் தொடர்பில்லை என்பது தெரிந்தும், கவர்னர்களும், அரசர்களும் செயல்படுவதுண்டு; அது முறையாகாது; பலன் தாராது.

எஸபெத் ராணியின் மாளிகையில் ஒரு பச்சை பெஞ்ச் இருக்கிறது. அதனருகே ஒரு வீரன் துப்பாக்கி ஏந்தி நிற்கிறான். இது வெகுநாளாக இருக்கிற ஏற்பாடு. ஒரு சமயம் இந்த பெஞ்ச் ஏன் அங்கிருக்கிறது என்று ஆராய்ச்சி நடந்தது. அதன் விளைவாக உண்மை வெளிவந்தது. பச்சை பெயிண்ட் அடிக்கும்பொழுது, ஈர பெயிண்ட்டில் யாரும் உட்கார்ந்துவிடக் கூடாது என்று ஒரு

சிப்பாயைக் காவலுக்குப் போட்டார்கள். பெயிண்ட் காய்ந்தபின், வீரனை அப்புறப்படுத்தாமல் விட்டுப்போயிற்று. சில நாட்கள் கழித்து, சிப்பாயை அப்புறப்படுத்துவது தவறு என்று கருதி வருஷக்கணக்காகப் பெஞ்சும், சிப்பாயும் அங்கிருக்கிறார்கள். அதில் எவரும் உட்கார சிப்பாய் அனுமதிப்பதில்லை!

சாக்ரடீஸ் உலகத்தில் மேதை என்ற சொல்லுக்கு இலக்கணமாய் அமைந்தவர். ஏதென்ஸ் நகரில் 12 முக்கியஸ்தர்கள் உண்டு. அவர்கள் சாதாரணமானவர்கள். அந்தஸ்து கருதி அவர்களை முக்கியஸ்தர்களாக நியமிப்பது வழக்கம். அவர்களை (wise men of Athens) ஏதென்ஸ் அறிஞர்கள் எனக் குறிப்பிடுவதுண்டு. சாக்ரடீஸ் அவர்களில் ஒருவரைச் சந்தித்தார். "ஏன் உங்களை அறிஞர் என்று அழைக்கின்றார்கள்?'' என்று கேட்டார். பதிலைக் கேட்டபின் சாக்ரடீஸ் அவரிடமே, "இதுவே உங்கள் விளக்கமானால், உங்களைவிட நான் அறிவாளி'' என்று கூறினார். ஆராய்ச்சியைத் தொடர்ந்து மற்ற 11 பேரையும் பார்த்தார். அதே கேள்வியைக் கேட்டார். அதே பதிலை அவர்களிடம் சொன்னார். பன்னிருவருக்கும் கோபம் வந்தது. சாக்ரடீஸுக்கு அதன் விளைவாக உயிர் போயிற்று. சாக்ரடீஸைவிட உயர்ந்த ஞானி இல்லை. இதுபோன்ற ஒரு காரியத்தைப் பெரிய ஞானியும் சில சமயங்களில் செய்து, ஆபத்தை விளைவிப்பதுண்டு.

பெரும்பாலும் இதுபோன்ற தவறுகள் நடப்பதற்குரிய சில காரணங்கள் கீழ்க்கண்டவை:

  1. தோற்றத்தையே பெரிதாகக்கொண்டு உள்ளடங்கிய உண்மையை இரண்டாம்பட்சமாகக் கருதுவது (உ.ம். பட்டம் அதிகமாகப் பெற்றால்போதும் ; உண்மையில் அறிவு முக்கியமில்லை).
  2. பிரியத்தால் வரம்பு மீறுதல் (உ.ம். மனைவி மீதுள்ள பாசத்தால் முக்கியமான இரகஸ்யத்தை அவரிடம் சொல்லுதல்).

  1. பகுத்தறிவைப் புறக்கணித்தல் (உ.ம். தரிசனத்தை, கூட்டம் எனக் கருதித் தவிர்த்தல்).
  2. ஓரிடத்திலுள்ள முறையைத் தவறாக மற்றோர் இடத்தில் பின்பற்றுதல் (உ.ம். வீட்டுப் பழக்கத்தை ஆபீஸில் செயல்படுத்துவது).
  3. நம் அறிவு நிலைக்குப் பொருந்தாதவற்றைப் பின்பற்றுதல் (உ.ம். 17M.A .. பட்டம் பெறுதல்).
  4. அவசியத்தால் நேர்ந்ததை இலட்சியமாகப் பேசுதல் (உ.ம். வறுமையின் எளிமையை உயர்வாகப் பாராட்டுதல்).
  5. தெரிந்ததையே திருப்பித் திருப்பிச் சிந்தனையின்றி செய்தல்.
  6. தவறான அனுதாபம்.
  7. பொதுவான விதியை குறிப்பான இடத்தில் பின்பற்றுதல்.
  8. விட்டுக்கொடுப்பதின் முக்கியத்துவத்தை அறியாதது.
  9. புரிந்துகொள்ளுமுன் செயல்பட விரும்புதல்.
  10. அறிவும், ஆசையும் முரண்பட்டிருத்தல்.

அளவுக்கு மீறி ஒன்றைப் பிடித்துக்கொள்வது

பரமசிவனிடம் பார்வதி, காட்டுவழியாகப்போகும் ஏழைக்கு உதவச்சொல்லி, அவன்முன் தங்கக் கட்டியைப் போட்டபொழுது, குருடன் எப்படி நடப்பான் என்று அவன் நினைத்து, கண்ணை மூடி நடந்து, தங்கத்தைத் தவறவிட்ட கதையை நாம் அறிவோம். ஒரு மனிதனை நோக்கி அருள் செயல்பட விரைந்து வரும்பொழுது, அவனுக்கு அர்த்தமற்ற காரியம் ஒன்றில் ஆர்வம் ஏற்பட்டு அருளிலிருந்து விலகுவது மனித இயல்பு என்று அன்னை கூறுகிறார். நிதானத்துடன் நடப்பவருக்கு அந்தத் தவறு ஏற்படாது. அதுவே நிதானத்தின் பெருமை.

ஆசிரமம் வந்து வியாதிக்கு மருந்து சாப்பிடக்கூடாது என்று தெரிந்துகொண்ட மேல்நாட்டுப் பெண்மணி ஒருவருக்கு வியாதி வந்தபொழுது, அன்னை அவரை மருந்து சாப்பிடச் சொன்னார். அவர் மறுத்துவிட்டார். உன் உடல் மருந்து சாப்பிட்டுப் பழகியது, மருந்தில்லாமல் என் அருள் உன் உடல் செயல்படாது என்று அன்னை விளக்கியதையும் அவர் புறக்கணித்தார். மருந்து சாப்பிடாவிட்டால் நீ இறந்துவிடுவாய் என்று அன்னை சொல்லியபொழுது, நான் இறக்கமாட்டேன், மருந்தும் சாப்பிடமாட்டேன், உங்கள் அருள் என்னை குணப்படுத்தும் என்று அவர் அன்னையிடம் சொன்னார்.

மருந்து சாப்பிடாமலே அருளால் குணம் பெற உயர்ந்த முழு நம்பிக்கை வேண்டும். மருந்தைச் சாப்பிட்டால் 10 வேளைகளில் குணமாவது ஓரிரு வேளைகளில் அருளால் குணமாகும். அன்னையிடம் கற்ற நியதியை அவரிடமே சொல்வது பொருத்தமாகாது. மனித சுபாவம் அந்த அளவுக்குப் போய்ச் செயல்படக்கூடியது.

பழைய முறைகளைக் கைவிட்டு, அன்னை முறைகளை ஏற்றுக்கொள்ளும்பொழுது, மனமும், சுபாவமும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்குச் செயல்படுவதே முறை. மனம் தயங்கினால், சுபாவம் முரண்டு செய்தால், அவை ஒத்துவரும்வரை காத்திருப்பதே சரி.

பைத்தியக்காரனுடைய மனநிலைக்கும், சாதாரணமானவன் மனநிலைக்கும் உள்ள வித்தியாசம் ஓர் இழைதான் என்று சொல்வார்கள். நிதானமாகச் செயல்படும்பொழுது, இந்த ஓர் இழையைத் தாண்டி நாமிருக்கும் சிறுமையிலிருந்து பெருமைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

30, 40 வருஷங்கள் தொடர்ந்து நண்பர்களாக இருப்பவர்களையும், அடிக்கடி தம் நண்பர்களை இழந்துவிடுபவர்களையும் கவனித்தால், இருவருக்கும் ஒரே மாதிரியான குணமே இருக்கும். வரம்புக்குள் செயல்படுவது போன்ற ஒரே வித்தியாசம் மட்டும் காணப்படும். வியாபாரக் கூட்டாளிகளிடமும் இதே நிலையைப் பார்க்கலாம். அரசியல் தலைவர்கள் அடிக்கடி பிரிவதும், சில சமயங்களில் மீண்டும் ஒன்றுசேர்வதும் சகஜம். விஷயம் பெரியதானால் விட்டுக் கொடுக்க மனம் வாராது. அதனால் சிறு விஷயம் பெரியதாகி பிளவு ஏற்படும். ஏற்பட்ட சில நாட்கள் கழித்து விஷயம் புரியும். மீண்டும் சேர முடியாது.

நாய் மீது ஆசையேற்பட்டு ஒரு நாய் வளர்க்க ஆரம்பித்த பெண், 40 நாய்வரைக்கும் சேர்த்துவிட்டார். ஒரு நாள் அவர் எடுத்துப்போன மாமிசத்தைப் போடுவதற்குள் அவசரப்பட்ட நாய் அவரைக் கடித்துவிட்டது. சிந்திய இரத்தத்தை ருசித்த மற்ற நாய்கள் தம் நிலையிழந்தன. அவரை எல்லா நாய்களும் கடித்துத் தின்ன ஆரம்பித்துக் கொலை செய்துவிட்டன. நாய் வளர்த்த செல்வர், அதற்குப் பாத்ரூம், டாய்லட் கட்டி, அங்குள்ள (tap) குழாயைப் பொன்னால் செய்துவைத்தார். அளவுமீறிச் செயல்படுவதால் பாதிக்கப்படாதவர்களுண்டு. பாதிக்கப்படாததால், அது சரியாகாது.

அன்னையின் அருளும், சக்தியும் உயர்ந்தவை. அவை செயல்படும் வகைகள் அற்புதம். மனநிலையில், மாற்றம் ஓர் இழை சரியாக மாறினால் பலன் முழுதாக இருக்கும். ஓர் இழை எதிர்பக்கமிருந்தால் பலன் ஏற்படாது. 80 கோடி கம்பெனிக்குத் தலைவர் ஒருவர்; செல்வாக்கு அதிகம் உள்ளவர்; ஏராளமாகப்

படித்தவர். அவருக்கு ஒரு வினோதமான சிரமம். பகலெல்லாம் கம்பெனியில் வேலை செய்வார். மாலை வீட்டிற்குப் போனபின், 9 மணிக்குமேல் ஒரு சிறுபிள்ளைத்தனம் அவரைக் கவ்விக்கொள்ளும். அதன் பிடியிலிருந்து அவரால் பல மணி நேரங்கள் விடுபட முடிவதில்லை. அர்த்தமற்ற செயல்களை ஆர்வமாக அளவுமீறிச் செய்வார். அதனால் மறுநாள் களைப்பு ஏற்படும். 10, 15 வருஷங்களாக இது இருக்கிறது. டாக்டர், மனநல வல்லுனர், டெல்லி, லண்டன், சிகாகோ என்றெல்லாம் சென்று பரிகாரம் தேடினார்; கிடைக்கவில்லை. அன்னையை, சுமார் 20 வருஷங்களுக்குமுன் வந்து தரிசனம் செய்திருக்கிறார். இப்பொழுது அன்னையின் சமாதியைத் தேடிவந்தார். லேசான பலன் தெரிந்தது. அன்னையை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் மனமும், சிரமமும் ஏற்றுக் கொள்ளவில்லை. அன்பர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதால் மற்ற பல நன்மைகள் ஏற்படுவதைப் பார்த்தார். சில வருஷங்கள் ஓடின. மீண்டும் அன்பரைச் சந்திக்க நேரிட்டது. பிரச்சினையை மீண்டும் துவக்கினார். அன்பர் சுருக்கமாகச் சொன்னார், "உங்கள் பிரச்சினை உங்களுக்குப் பெரியது. அருளுக்குச் சிறியது. அருளை நீங்கள் அறிவீர்கள். ஆனால் உங்கள் மனம் செய்யும் முடிவு தீவிரமானால், அருள் க்ஷணத்தில் செயல்படும். அறிவால் ஏற்பதற்கும், உணர்வால் ஏற்பதற்கும் உள்ள வித்தியாசம் ஓரிழைதான். உணர்வு ஏற்றுக்கொண்டால் உடனே பலன் தெரியும்''. அத்துடன் அன்பர் புதுவை வந்துவிட்டார். மறுநாள் அன்பரைப் போனில் கூப்பிட்டு, "இன்று எனக்கு விடுதலை கிடைத்தது. பூரண விடுதலை கிடைத்தது. நான் புது மனிதன். இதுபற்றி நீங்கள் ஒரு புத்தகம் எழுதினால் என்போன்ற பலருக்கு உதவியாகயிருக்கும். 10, 15 ஆண்டுகள் வாழ்க்கை சிம்மசொப்பனமாக இருந்தது. இன்று சொர்க்கமாக மாறிவிட்டது. பங்களாதேஷில் என் உறவினர் ஒருவருக்குக் கான்ஸர். அவரையும் நான் அன்னையை ஏற்றுக்கொள்ளச் சொல்லப்போகிறேன்'' என்றார். பூரண குணம் ஏற்பட மனம் மயிரிழை மாறவேண்டும். நிதானமாகச் செயல்படும்பொழுது வாழ்வில் இந்த இழை எப்பொழுதும்

சரியான பக்கத்தில் செயல்படும். மனித வாழ்வும், அன்னை அருளும் கடற்கரை போலிருக்கின்றன. நீரும், நிலமும் பிரியும் இடம் அது. ஓர் அடி இந்தப் பக்கம் சென்றால் நிலம்; ஓர் அடி அந்தப் பக்கம் சென்றால் கடல். அருளும், வாழ்வும் அருகருகே இதேபோல் அமைந்துள்ளன. சாதாரண வாழ்விலிருந்து மனிதனை அருள் நிறைந்த வாழ்வுக்கு அழைத்துச்செல்பவை பல விஷயங்கள். சமர்ப்பணம், தியானம், நன்றியறிதல், நம்பிக்கை, பக்தி போன்றவை அவை. வரம்புக்குள் செயல்படும் நிதானத்திற்கும், மனிதனை எளிய வாழ்விலிருந்து அன்னையின் அருள் வாழ்வுக்கு அழைத்துச்செல்லும் திறன் உண்டு. அதுவே நான் சொல்லும் நிதானத்தின் சிறப்பு. பார்வைக்கு எளிமையானதாகத் தோன்றினாலும், பின்பற்றும்போது, இது நிதானத்தின் உயர்நிலை; நிதானத்தின் உச்சகட்டம்; கீதை சொல்லும் சமத்துவம். நிதானத்தை 10 நிலைகளாகப் பிரித்தால் 10வது நிலை சமத்துவமாகும். நான் சொல்லும் வரம்புக்குள் செயல்படுவது முதல் நிலையாகும்.

********

 



book | by Dr. Radut