Skip to Content

மனிதனுடைய உயர்ந்த குணங்கள்

உயர்ந்த குணமுடையவனை உயர்ந்தவன் என்கிறோம். உயர்ந்த குணம் உடையவர் பலர் இருப்பதால்தான் உலகம் இருக்கிறது. இல்லை எனில், உலகம் இயங்காது, காட்டு மனிதனுடைய வாழ்வாக மக்கள் சமுதாயம் மாறிவிடும். பரம்பொருளை எல்லாக் குணங்களையுமுடையவன் என்றும், எந்தக் குணமுமில்லாதவன் என்றும், குணங்களைக் கடந்தவனென்றும் விவரிப்பதுண்டு. அறிவுக்கும், குணத்திற்கும் வேறுபாடுண்டு. நடத்தை, மனப்பான்மை, சுபாவம் என்ற மற்றவைகளுமுண்டு.

உயர்ந்த குணங்களைப் பெற முயல்வதே நல்லது என நாம் அறிவோம். குணங்கள் பொதுவாக மாறுவதில்லை என்றும் சொல்வதுண்டு. மனிதனுடைய குணத்திற்கும், அன்னையின் அருளைப் பெறுவதற்கும் என்ன தொடர்பு? உயர்ந்த குணங்களைப் பற்றி அன்னை என்ன சொல்கிறார்? நாம் சில குணங்களுடன் பிறந்துவிட்டோம்; இனி என்ன செய்வது? செய்வதற்கு ஏதும் இல்லை என்ற நிலையை அன்னை எதிலுமே ஏற்றுக்கொள்வதில்லை என்பதால், நம் குணங்களைப்பற்றி அன்னையின் கருத்துகள் என்ன என்பதே நம் கட்டுரை.

எந்த நிலையிலுள்ள எந்த மனிதனும் அருளைப் பெற முடியும். எவரும் அருளுக்கு விலக்கல்லர் என்பது உண்மையானாலும், உயர்ந்த குணம் உள்ளவர்க்கு அருள் அதிகமாகக் கிடைக்கும் என்றாலும், உயர்ந்த குணங்களையும் முழுமையாகக் கடந்தபின்னரே அருள் இடையறாது செயல்படும் என்பது அன்னையின் அடிப்படை உண்மை. பூரணயோகம் மனிதனை உயர்த்தி சத்தியஜீவனாகச் செய்ய முயலுவதால், அந்நிலை தெய்வத்தின் நிலையைவிட உயர்ந்தது என்பதால், குணம் எவ்வளவு உயர்ந்ததானாலும், அது மனிதனை

உயர்ந்த மனிதனாக்குமேயன்றி, மனித நிலையைக் கடந்து செல்ல உதவாது என்பதாலும், குணங்களை மனிதன் தாண்டி வரவேண்டியது இன்றியமையாதது.

இது பூரணயோகத்தின் முடிவான நிலையானால், இன்று பல்வேறு நல்ல குணங்கள், கெட்ட குணங்கள், சிறிய குணங்கள், உயர்ந்த குணங்களுடைய எளிய பக்தன் ஆனவனுடைய நிலை என்ன? மனிதன் அன்னையை நோக்கித் திரும்பியவுடன், பக்தனாகிறான். பக்தனை அன்னை ஏற்றுக்கொள்கிறார். அவன் பக்தியை ஏற்று, அவனை ஏற்றுக்கொள்கிறார். அவனது குணங்களை அன்னை புறக்கணிக்கிறார். குணங்களை மட்டுமன்றி, அவனது கடந்தகாலக் கர்மங்களையும், பாபங்களையும், செயல்களையும், சுபாவத்தையும் அன்னை புறக்கணித்து, அவனை ஏற்றுக்கொள்கிறார். அன்னை புறக்கணித்தவற்றை, பக்தனும் முழுவதும் புறக்கணித்தால், அவனது கர்மம், சுபாவம் முதலானவை கரைந்து பக்தன், அன்னையின் குழந்தையாகின்றான். பூரண அருளுக்குப் பாத்திரமாகிறான். நடைமுறையில் அன்னை நம்மை ஏற்று, நம் குறைகளைப் புறக்கணித்தாலும், நம்மால் நம் குறைகளைப் புறக்கணிக்க முடிவதில்லை. முடியாதவருடைய நிலை என்ன? எந்த அளவுக்கு அவற்றை விலக்க முடிகிறதோ, அந்த அளவுக்கு அருள் நாம் தேடாமல் வாழ்வில் செயல்படும்.

நடைமுறையில் பல்வேறு குணங்களைக் குறிப்பிட்டு, அவற்றை நாம் என்ன செய்ய முடியும் என்று முடிந்தவரை உதாரணங்களால் விளக்க முயல்கிறேன்.

அறிவு படிப்பால் ஏற்படுவது. பிறவியிலுள்ள புத்திசாலித்தனம் படிப்பால் அறிவைப் பெருக்கிக்கொடுக்கிறது. அறிவு நம் வாழ்க்கையில் நேரடியாகச் செயல்படுவதில்லை. வாழ்க்கையின் வேகம் குணத்தின் பிடியிலுள்ளது. குணமே வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடியது. அறிவு குணத்தின் போக்குக்கு வழிகாட்டியாகிறது. படித்த கணிதமோ, சரித்திரமோ, பண்பை வளர்க்க நேரடியாக உதவுவதில்லை.

ஆசையைக் கட்டுப்படுத்த உதவாது. குணத்தின் போக்கு வாழ்க்கையை நடத்தும். படிப்பு வாழ்க்கைக்குக் கலங்கரைவிளக்கமாகும். விளக்கொளியை ஏற்றுக்கொள்வதும், புறக்கணிப்பதும் குணத்தைப் பொருத்தது.

மனிதனுடைய ஆர்வம் வேகமாகச் செயல்படும். அது பொதுவாக, குணமாக வெளிப்படும். பற்று, பாசம், விஸ்வாசம், பிரியம் போன்ற நல்ல குணங்களாகவும்; வெறுப்பு, துரோகம், பழிவாங்குதல் போன்ற கெட்ட குணங்களாகவும் வெளிப்படும். பொதுவாகச் சொன்னால் குணமே மனிதன், குணமே வாழ்க்கை எனலாம். குணங்களை மாற்றுதல் எளிதன்று. இருந்தாலும், முயன்று ஓரளவு மாற்றலாம். அறிவைப் படிப்பு அதிகரிக்கும். குணத்தை பழக்கம் பக்குவப்படுத்தும்.

நடத்தை என்பது நம்மைப் பற்றி பிறர் அறிவது. நம் குணம், சுபாவம் உள்ளே எப்படியிருந்தாலும், வெளியே பிறருக்காக நாம் ஏற்றுக்கொள்வது நடத்தை. பெரும்பாலும் நடத்தை, ஒருவருடைய சுபாவம், குணம், அறிவு ஆகியவற்றை ஒட்டியேயிருந்தாலும், நடத்தையை அவசியத்தையொட்டி நம் விருப்பப்படி நம் உள்ளுறைச் சுபாவங்களுக்கு மாறாக அமைத்துக்கொள்ள முடியும். பிறர் கண்ணுக்குத் தெரிவது நடத்தை.

சுபாவம் என்பது பிறப்பில் பெற்றோரிடமிருந்தும், முன்ஜன்மப் பலனாகவும் ஒருவர் பெறுவது. பொதுவாக, குணம் சுபாவத்தை ஒட்டியே அமையும். அரிபொருளாக இருப்பதும் உண்டு. மனிதன் சுபாவத்திற்குக் கட்டுப்பட்டவன். அவனால் தன் சுபாவத்தை மீறிச் செயல்பட முடியாது. அறிவு சுபாவத்தை மென்மைப்படுத்தலாம். அடிப்படையில் மாற்ற முடியாது. சுபாவத்தை அடிப்படையில் மாற்றும் திறன் ஆன்மாவுக்கேயுண்டு.

மனப்பான்மை என்ற மற்றதொன்றுண்டு. குணத்தின் போக்கு அறிவுக்கு எதிராகவும் இருக்கலாம். அறிவையொட்டியும் இருக்கலாம்.

அறிவு ஒரு குணத்தை ஏற்றுக்கொண்டு ஆமோதித்தால், அதன் விளைவாக ஏற்படுவது மனப்பான்மை. அறிவின் துணையோடு வெளிப்படும் குணநலம் மனப்பான்மை எனப்படும். அறிவை மாற்றி, அதனுதவியால் மனப்பான்மையை ஓரளவு மாற்ற முடியும்; முழுவதும் மாற்றுவது எளிதன்று.

ஒருவனது வாழ்க்கையை நடத்துவது குணம். விளக்கமளிப்பது அறிவு. வழிவகுத்துக்கொடுப்பது மனப்பான்மை. பிறர் காண்பது நடத்தை. அவனது வாழ்வின் வெற்றி, தோல்விகளின் அளவை நிர்ணயிப்பது அவனது சுபாவம்.

நாம் அனுபவத்தில் பார்ப்பது என்னவென்றால், தாழ்ந்த குணமுடையவன் வாழ்வின் அடிமட்டத்திலும், உயர்ந்த குணமுடையவன் உயர்ந்த நிலையிலும் இருப்பதாகும். இது மட்டுமே உண்மையானால், நம் அறிவு தெளிவு பெற்றுவிடும். இத்துடன், தாழ்ந்த குணம் உடையவன் உயர்ந்த நிலையிலும், உயர்ந்த குணம் உடையவன் தாழ்ந்த நிலையிலும் இருப்பதையும் காண்கிறோம். இது நம் தெளிவைக் குலைக்கிறது; குழப்பத்தை விளைவிக்கிறது. எனவே குணத்தின் உயர்வுக்கும், வாழ்க்கை உயர்வுக்கும் நேரடியான தொடர்பு உண்டு என்று வலியுறுத்தி, மனம் திட்டவட்டமாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. மேற்கூறிய கூற்றில் உள்ள உண்மையை ஆராய்ந்து விளக்கம் அளித்தால் கட்டுரை வேறு கோணத்தில் உருவாகும். அது குணத்திற்கும், வாழ்க்கை உயர்வுக்கும் உள்ள தொடர்பை ஆராய்வதாகும். அது என் குறிக்கோள் அன்று. குணத்தின் உயர்வால், வாழ்வில் உயர முடியும் என்ற உண்மையை மட்டும் நிலைநிறுத்துவதே இக்கட்டுரையின் இலக்கு. குணத்தை ஓரளவு மாற்ற முடியும், உயர்த்த முடியும். உயர்ந்த குணத்தால் அன்னையை நெருங்கி வரமுடியும், வாழ்க்கையிலும் சிறப்புற முடியும் என்ற கருத்துகளை மட்டும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்கிறேன்.

ஒரு தியேட்டர் முதலாளி, பொதுவாக எந்தத் தப்பையும் விரும்பிச் செய்யும் பாங்குடையவர்; பொதுத் தொண்டில் ஈடுபட்டார்.

அளவுகடந்த வெற்றி கிடைத்தது. அவரை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அவரிடம் பழக விருப்பப்படுவதில்லை; முயன்று விலகுவார்கள். எல்லா மாநிலங்களிலும் அவருக்கு செல்வாக்கு அதிகரித்தது. அவருக்கு மெய் சொல்லவே தெரியாது. இந்தியாவில் உள்ள எந்தப் பெரிய மனிதருக்கும் அவருடைய பெயர் தெரியும் அளவுக்குப் பிரபலம் அடைந்தார். அவருடைய வெற்றி, அவரை அறிந்தவர்களுக்கு ஒரு புதிராக இருந்தது. வெற்றிக்குக் காரணத்தை ஆராய்ந்தனர். எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது அமோக வெற்றி மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. ஒரு சில நெருங்கிய நண்பர்கள் மட்டும் அதைக் கண்டுகொண்டனர். யாருடன் பேசினாலும், குறுக்கே பேசமாட்டார். அவர்கள் முடிக்கும்வரை பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருப்பார். இது ஒரு அசாதாரணமான குணம். இவருக்கு இது முதலிலிருந்து இல்லை. இக்குணத்தின் திறனையறிந்து, முயன்று அதையடைந்தார். முழுமையாக இதைப் பெற்றபின், வெற்றி இவரைத் தொடர்ந்தது. இது எவ்வளவு உயர்ந்த குணம் என்று தெரியவேண்டுமானால், இதை ஒரு நாள் கடைப்பிடித்துப் பார்க்கலாம். அதனுடைய சிரமம் தெரியும். எத்தனைப் பெரிய குறைகளிருந்தும், ஒரு நல்ல குணத்தைச் சிரமப்பட்டுப் பெற்றுவிட்டால், அது மாபெரும் வெற்றியை வாழ்க்கையில் கொடுக்கிறது. அவர் குறைகள் நிறைந்தவராக இருக்கலாம். இந்த ஒரு குணத்தை முழுமையாகப் பெற அவர் எடுத்துக்கொண்ட முயற்சி பெரியது. பெரிய முயற்சிக்குப் பெரிய பலன் உண்டு. குணம் வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடியது. எனவே குணத்தில் ஏற்படும் சிறு மாறுதலும் பெரிய பலனைக் கொடுக்க முடியும். மற்றவர்கள் பேசும்பொழுது இடைவிடாமல் குறுக்கே பேசும் பழக்கம் உள்ளவர்கள், இந்த முயற்சியை மேற்கொண்டு வெற்றி கண்டால் வாழ்க்கை பெரிய பரிசைக் கொடுக்கும். முயற்சி தெய்வீகமானது என்பதால், அன்னை தாமும் ஒரு பரிசைக் கொடுப்பார். இந்த முயற்சியை எடுப்பவர்கள் மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்க முடியும். அநேகமாக எவரும் இவர் சொல்லவந்ததைச் சொல்ல விடமாட்டார்கள். வேலை

நடக்காது. மற்றவர்கள் பேசுவதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும் என்று தோன்றும். இவையெல்லாம் உண்மைகள். அவற்றையெல்லாம் தாண்டிவந்தால்தான் வெற்றி. இது ஒரு சிறு பயிற்சி என்றாலும் பெருமுயற்சி தேவை என்பது விளங்கும். விளங்கியதை ஏற்றுச் செயல்படுத்துவதே முன்னேற்றப் பாதையாகும்.

அபிப்பிராயம் என்பதற்கு மரியாதையுண்டு. சௌகரியத்திற்குத் தகுந்தாற்போல் அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்பவர்களை உலகம் போற்றாது. அவர்களைக் காரியவாதி என்று சொல்லும். என்றும்போல் இருப்பவர்களை உயர்ந்தவர்கள் என்றும், இலட்சியவாதிகள் என்றும் சொல்லும். என்றாலும் அபிப்பிராயம் என்பது தனி மனிதனுடையது. எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும், சில சமயங்களில் அபிப்பிராயம் சரியானதாகவே இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. ராஜாஜி சிறந்த சிந்தனையாளர், உயர்ந்த மனிதர். சொந்தமாகச் சிந்திக்கும் திறனை நம் நாட்டில் பெற்றுள்ள அரசியல் தலைவர். இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் திரு. காசா. சுப்பாராவ் என்று ஓர் ஆசிரியர் இருந்தார். இவர் சாட்டையடி வாங்கி, அந்நியத்துணி பகிஷ்காரம் செய்த பழம்பெருந்தியாகி; தேச பக்தர். சுயராஜ்யா பத்திரிகை ஆசிரியராக இருக்கும்பொழுது தினமும் ராஜாஜியைச் சந்திப்பவர். அனந்தராம தீட்சிதர் காலக்ஷேபங்களைக் கேட்டு மகிழ்ந்து, ராஜாஜியிடம் அவரைப் பற்றிச் சொன்னார். ராஜாஜி அப்பிரசங்கங்களை வந்து ஒரு முறையாவது கேட்க வேண்டும் என்று சொன்னார். ஒவ்வொரு முறையும் இந்த வேண்டுகோளை ராவ், ராஜாஜியிடம் வைக்கும்பொழுது, "நீ போய்க் கேள்'' என்று ராஜாஜி சொல்வார். கொஞ்ச நாளைக்குப்பின் ஒரு நாள் ராஜாஜி பிரசங்கத்திற்கு வர இசைந்தார்; கேட்டு ரசித்தார். அதிலிருந்து அந்தப் பிரசங்கங்களை ராஜாஜி தவறாமல் வந்து கேட்டார். எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், நடைமுறை யதார்த்தம் அவர் அறிவைக் கடந்துநிற்கும் நேரம் உண்டு. தன் அபிப்பிராயத்தை மாற்றி, பிறர் அபிப்பிராயத்தில் உண்மையுண்டா என்று சோதனை செய்வது நல்லது. அதனால் ஒரு பெரிய நல்லது நடக்க வாய்ப்புண்டு.

அனுபவித்து மட்டும் அறியவேண்டிய விஷயங்களை, அறிவால் எட்டிவிட முடியாது.

அன்னையை வணங்கும் பக்தர் ஒருவர் தமக்குள்ள உயர்ந்த அபிப்பிராயங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்து, அவற்றைவிட உயர்ந்த ஒன்று இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள முன்வந்தால், அம்முயற்சிக்குப் பெரும்பலன் கிடைக்கும். அன்னை அதைப் பெரிதும் வரவேற்பார். அரசியலில் நுழைந்தபின், பெருஞ்செல்வம் பெற்றபின், அனுபவம் வந்தபின், நண்பர்களால் கைவிடப்பட்டபின், நெடுநாளைய அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்வதைப் பார்க்கிறோம். நாமே ஒவ்வொன்றையும் அனுபவித்து அறிய வாழ்நாள் போதாது. பிறர் அனுபவத்தால் பயன் பெற முன்வருவதே உயர்வு. அல்லது நம் அபிப்பிராயங்களைப் பரிசீலனை செய்யவாவது முன்வர வேண்டும். உயர்ந்த அபிப்பிராயங்கள் சிலவற்றை மற்றவர்கள் அறிவற்றது என்று கருதினால், முதல் அவற்றையெல்லாம் பகுத்தறிவுக்கு உட்படுத்தி பரிசீலனை செய்ய முன்வர வேண்டும். அந்த ஒரு காரியம் மட்டுமே மனிதனை உயர்த்தக்கூடியது. B.A. பட்டதாரிக்கு M.A. மீது அமோக விருப்பம். ஆனால், தான் B./A. பாஸ் செய்ததே அதிர்ஷ்டத்தால்தான்; தமக்குப் படிக்க முடியாது, படிப்பு வாராது என்று முடிவாக நம்பினார். நண்பர் அவரை M.A. படிக்கச் சொன்னார். 5 நிமிஷம் படித்தால் தூக்கம் வருகிறது, M.Aஎப்படிப் படிப்பது என்றார். படிப்பு ஒரு பழக்கமே' என்ற நண்பருடைய கருத்தை 5 ஆண்டுகளாகக் கேலி செய்து மறுத்தார். பின்னர், M.A. படிக்கவேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலை ஏற்பட்டது; படித்தார்; பாஸ் செய்தார்; பட்டம் பெற்றார். ஏதாவது புத்தகமிருந்தால் கொடுங்கள், இப்பொழுதெல்லாம் 1 மணி நேரமாவது படிக்காவிட்டால் தூக்கம் வரமாட்டேன் என்கிறது என்று அதே நண்பரைக் கேட்பார். கேட்டதுடன், செய்துபார்த்தால்தான் தெரிகிறது. ஏற்கனவே படித்தால் தூக்கம் வந்தது; இப்பொழுது படிக்காவிட்டால் தூக்கம் வரமாட்டேன் என்கிறது என்றார்.

அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ள முன்வந்தால், B.A. மாறி M.A. ஆகிறது என்பது மட்டுமன்று, விமான பைலட் பிரதம மந்திரியாகவும் மாறலாம் என்பது நாட்டின் அனுபவம். நிர்ப்பந்தம் வந்து மாறுவதைவிட, அறிவால் மாற முயல்வது உயர்ந்தது. பிறர் சொல்லி திருந்துவதைவிட நாமே திருந்த முன்வருவது நல்லது; உயர்ந்தது.

சண்டை, பூசல், சச்சரவு, கூச்சல், எரிச்சல், மந்த வீடுகளிலும் சில சமயங்களில் ஒரு விசேஷத்தை முன்னிட்டு, அனைவரும் சமாதானமாகச் செயல்படுவதுண்டு. அந்த ஒரு நாள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் நாளாக இருக்கும். "இது நம்ம வீடு போலில்லையே'' என்றும், "இப்படியிருந்தால் நல்லது'' என்றும் சொல்லும்படியாக இருக்கும். விசேஷம் வந்து கட்டுப்பாட்டைக் கொடுக்கிறது. வேறு கோணத்தில் பார்த்தால், கட்டுப்பாடு வந்தால், தினமும் விசேஷம் வந்துவிடும். அன்னை அதிகமாக நம்மில் செயல்படுவார். மனிதனால் முடியாத ஒன்றை அவனைச் செய்யும்படிச் சொல்வது சரியாகாது. அவனால் முடியும், ஆனால் செய்வதில்லை என்ற நிலையில் முயலவேண்டும் என்பது தவறாகாது. விசேஷத்தின் நிர்பந்தத்தால், தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் குடும்பம் அந்த நிர்பந்தமில்லாமல் தன் அறிவுக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். விசேஷத்தில் அனைவரும் சுமுகமாகப் பழகுவது எதைக் காட்டுகிறது? அது தங்களால் முடியும் என்பதைக் காட்டுகிறது. ஒரு நேரத்தில் முடியும் என்பதால், மற்ற நேரத்திலும் அதை அடைய முயலவேண்டும் என்பதே கொள்கை.

மரத்தடியில் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரனிடம் ஒரு பிச்சைக்காரன் வந்து பிச்சை கேட்டான். தன் பையிலிருந்து ஒரு மணி அரிசியை எடுத்துக்கொடுத்தான். நாள் முடிந்து, இருப்பிடம் வந்து, தன் பையிலிருந்த அரிசியை தரையில் கொட்டியபோது, அதில் ஒரு மணி மட்டும் தங்கமாக இருந்தது. பிச்சைக்காரன் மனிதன்; தன்னிடம் பிச்சை கேட்டது இறைவன் என்பதை மனிதன் அறிந்து

கவலைப்பட்டான். வந்தது இறைவன் என்று தெரிந்திருந்தால், முழுப் பையையும் அவனிடம் கொடுத்திருப்பேன் என்று புலம்பினான் என்பது தாகூர் கீதாஞ்சயில் வரும் ஒரு கதை. அன்னை இந்தக் கதையைக் கேட்டு அளவுகடந்து சந்தோஷப்பட்டார். எந்த நேரமும், எந்தச் செயலும், நம்மிடம் வருவது இறைவனே என்பது அன்னையின் கொள்கை. நாம் சந்திக்கும் மனிதர்கள் அனைவரும் இறைவரே என்று நாம் உணரவேண்டும் என்பது பூரணயோகச் சித்தாந்தம். ஒரு மணி அரிசிக்குப் பதிலாக ஒரு பிடி அரிசி கொடுக்க முன்வந்தால், மனிதன் இறைவனை நோக்கி ஒரு படி முன்னேறுகிறான் என்று பொருள். இறைவனை நோக்கிச் செல்லும் பாதைகள் அநேகம், அனந்தம். அவற்றுள் ஒன்று நம் குணங்களின் தரத்தை உயர்த்த நாம் எடுக்கும் முயற்சி.

மூன்று சகோதரர்கள். இருவருக்கு ஏராளமான நண்பர்கள். மூன்றாம் சகோதரருக்கு நண்பர்கள் கிடையாது. யார், எதைச் சொன்னாலும் மறுத்துப் பேசுவார். மற்றவர்களுடைய எல்லாக் குணங்களும், திறமையும், பாங்கும் இருந்தபொழுதிலும், இந்த ஒரு குணம் எவரையும் அணுகவிடுவதில்லை.

இரண்டு பெரிய உத்தியோகஸ்தர்கள். இருவரும் பெரிய படிப்புடையவர்கள்; நல்ல திறமைசாலிகள். தொழில் இருவருக்கும் நல்ல, உயர்ந்த மரியாதை. ஒரே காலனியில் குடியிருந்தார்கள். ஒருவரைத் தேடி தொடர்ந்து பலர் வந்தபடியிருப்பார்கள். மற்றவர் வீட்டுக்கு எவரும், எப்பொழுதும் வருவதில்லை. தம் காரியத்தில் மட்டும் அக்கரையுள்ளவர். தம் காரியம் முடிந்தவுடன் மேற்கொண்டு பேசக்கூடப் பிரியப்பட மாட்டார். சுயநலமான இந்தக் குணம் பெரிய உத்தியோகம், பெரிய படிப்பு, நல்ல திறமை, நல்ல பெயர், அனைத்தையும் தாண்டி இவரைத் தனி மனிதனாக்கிவிட்டது. எவரும் இவரை நாடி வருவதில்லை. அந்த ஒரு குணத்தை மட்டும் மாற்ற முயன்றால், அந்த முயற்சியின் வெற்றிக்குரிய பலன் அபரிமிதமானது.

ஒரு நெசவாளி குடும்பம். மூத்தவர் 5 ரூபாய் மாதச் சம்பளத்தைத் தேடி சிங்கப்பூர் சென்றார். அடுத்தவர், வித்துவான் படித்து ஆசிரியரானார். கடைசி பையன் வீட்டிலேயே தறி நெய்து காலம் கழித்தான். வீடு, கூரை வீடு. வேறு சொத்தில்லை. 30 வருஷமாயிற்று. சிங்கப்பூரிலிருந்து பெருந்தொகையுடன் மூத்தவர் வந்து இரண்டு வீடு வாங்கினார்; நிலம் வாங்கினார். பாங்கில் மீதியைப் போட்டு, அங்கேயே ஒரு வேலையையும் ஏற்றுக்கொண்டு, ஊரில் முக்கியப்புள்ளி ஆனார். இரு தம்பிகளுக்கும் ஓரளவு உதவினார். சில வருஷங்கள் கழித்து, கடைசி பையன் குடும்பத்தில் பாகப்பிரிவினை செய்ய வேண்டுமென்று ஆசிரியர் அண்ணனிடம் சொன்னான். "பாகம் பிரிக்க என்ன இருக்கு? இந்தக் கூரை வீட்டைத்தவிர ஒன்றுமில்லையே. இதை உன்னிடமிருந்து எடுக்க அண்ணனோ, நானோ சம்மதப்பட மாட்டோம். நீயே இதை வைத்துக்கொள்'' என்றார். தம்பி பதிலாகச் சொல்லியது வேறு; "மூத்தவர் சொத்து உள்பட எல்லாச் சொத்தையும் 3 பாகங்களாகப் பிரிக்க வேண்டும்'' என்றார். ஆசிரியருக்கோ வெட்கமாயிற்று. தன்னால் அப்படி நினைத்துப்பார்க்கவும் முடியாது என்றார். மனப்பான்மைக்குத் தகுந்த வாழ்க்கை நிலை அமைந்துள்ளது. நிலைமைக்கேற்ற மனப்பான்மையுள்ளது என்றும் புரிந்து கொள்வதுண்டு. மனப்பான்மையே வாழ்வு நிலையை நிர்ணயிக்கிறது என்பதே உண்மை.

நல்ல குணங்களும், மற்ற குணங்களும் கலந்தே இருக்கும். பிறருக்கு உதவி செய்யும் குணம் ஒரு விஷயத்திலும், சுயநலம் மற்றொரு விஷயத்திலும் ஒருவரிடமே காணப்படுவது உண்டு. சிறு குழந்தைப்பருவம்முதல் சொல்வதற்கெதிராக செய்யும் பழக்கம் வளர்வதுண்டு. பொதுவாக இப்படிப்பட்டவர்கள் எதையும் இடக்கையால் செய்வார்கள். அவர்களிடம் சில விஷயங்களில் சொன்னதைச் சொன்னபடி செய்யும் நல்ல பழக்கமும் காணப்படும். பேசும்பொழுது குறுக்கே பேசுவது ஒரு குணம். எதைக் கேள்விப்பட்டாலும் நம்பிவிடுவது உண்டு. வாய் ஓயாமல் பேசும்

பழக்கம் ஒன்று. எதைச் செய்தாலும், சுலபமாகக் களைத்துவிடுவதைத் தெம்பில்லை என்று நாம் அறிவோம். அது உடலுடைய குணம் என்று புரிந்துகொள்வதில்லை. அப்படிப்பட்டவர்கள் ஒரு காரியத்தில் உண்மையான அக்கறை எடுத்துக்கொண்டால், உடல் களைப்பதே இல்லை என்று காண்பார்கள். களைப்பு என்பது உண்மையில் உள்ளே புதைந்துள்ள வெறுப்பு ஆகும். 5 பேர்கள் உள்ள குடும்பத்தில் எல்லா வசதிகளையும் தாம் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று ஒருவர் நினைத்து, வெளிப்படையாகச் சொல்வதும் உண்டு. இவர் வேலை செய்யுமிடத்தில் அனைவரும் இவரை ஒதுக்கிவிடுவார்கள். இந்த மனப்பான்மையை மாற்றும்வரை இவருக்குக் கதி மோட்சம் கிடையாது. தாம் செய்வது தவறு என்றறியாமலேயே நடப்பார்கள். இதே குடும்பத்தில் தாம் சொந்தமாகச் சம்பாதிப்பது முழுவதையும் மற்றவர்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்றும் ஒருவர் இருப்பதுண்டு. சுயநலம் படைத்தவரால் இலட்சக்கணக்காகச் சம்பாதிக்க முடியாத பொழுது, தன்னலமில்லாதவர் கோடிக்கணக்காய்ச் சம்பாதித்தார். ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள்; ஒரே வகையான சந்தர்ப்பம்; ஒரு மனநிலை வேறுபட்டுள்ளது. அதற்குரிய மாற்றம் அவ்வளவு பெரியது. சிலர் கேட்பவற்றை எல்லாம் நம்பிவிடுவார்கள், சிலர் எதையுமே நம்பமாட்டார்கள். எதையும் நம்புபவர்கள் அதன்மூலம் எல்லாவற்றையும் இழந்ததுண்டு. எதையும் நம்பாதவர்கள் வலிய வந்த அதிர்ஷ்டத்தையும் நம்பாமல் திருப்பி அனுப்பியதுண்டு. சிலர் அதிகாரத்தோரணையுடன் பேசுவதையே பழக்கமாகக் கொண்டு செயல்படுவார்கள். ஓரளவுவரை அது பலன் தரும். முக்கியமான இடத்தில், இதுபோன்ற தோரணை காரியத்தைக் கெடுத்துவிடும். பணிந்துபோவது நல்ல குணம். பல சமயங்களில் உயர்ந்த குணமாகவுமிருக்கும். ஆனால் பணிந்துபோவதாலேயே உரிமை, வசதி, சொத்து பறிபோவதும் உண்டு. மரியாதையும், மானமும் பறிபோவதுண்டு. விடாமுயற்சியைப்போல உயர்ந்த குணமில்லை. அறிவு இல்லாமல், விடாமுயற்சியை மேற்கொண்டால், அது முட்டாள்தனமான பிடிவாதமாகித் தொந்தரவில் கொண்டுவிடும். ஒரு

தமிழாசிரியர்; சிறப்பான குணம் உடையவர்; இலட்சிய மனப்பான்மை உடையவர்; எடுத்துக்காட்டாக வாழவேண்டும் என்று முயல்பவர். பெற்றோரிடம் இலட்சியமாக நடக்கவேண்டும் என்பது வேறு; திருப்திப்படுத்துவது என்பது வேறு. இலட்சியமாக நடக்கும்பொழுது கடமைகளைப் பூர்த்தி செய்கிறோம். அது சரி. திருப்திப்படுத்தும் பொழுது, ஆசைகளை நிறைவேற்றுகிறோம். இது சரியாக வாராது. ஏனென்றால், ஆசை பூர்த்தியாகும் தன்மையுடையதன்று. மனைவிக்கும், பெற்றோருக்கும் பேதம் ஏற்பட்டால், என்ன செய்வது என்பதை விட்டுவிட்டு, தாயாருக்கும், தந்தைக்கும் பேதம் ஏற்பட்டால் மகன் எந்த வழி சென்று இருவரையும் திருப்திப்படுத்த முடியும்? உயர்ந்த குணங்கள் செயல்படும்பொழுது மனதில் குறையோ, முரண்பாடோ சிறப்பானவர்க்கு இருக்காது. தாழ்ந்த குணங்கள் செயல்பட்டால், மனத்திலும், செயலும் முரண்பாடிருக்கும். ஆசையைப் பூர்த்தி செய்ய முனைந்து கலவரப்படுவதைவிட கடமையைப் பூர்த்தி செய்ய முனைந்தால் கலவரம் தோன்றாது; தோன்றினாலும் அடங்கும். அதுவே முறை. இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வதே நம் குணங்களை உயர்த்தும் முறை. அதனால் நம் மனம் தெளிவுபடும்; செயல் சிறப்புறும்; அன்னை செயல்பட முடியும். தனித்துச் செயல்பட்டே பழக்கம்; மற்றவர்களுடன் கலந்து செயல்பட முடியாது என்பது குணம். ஒரு சந்தர்ப்பத்தில் சேர்ந்து செயல்பட வேண்டிவந்தால், அதன் பலன் பெரியதாக இருக்கும். இப்படியும் இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லையே என்பதுண்டு. அதனால் அதை அன்றுமுதல் ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்க முடியாது. ஏற்றுக்கொண்டால் வாழ்வு புதிய பாதையில் திரும்பும்.

அமெரிக்கர் ஒருவருக்குச் சமீபத்தில் நோபல் பரிசு கொடுத்தார்கள். சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயம் அதைக் கொண்டாட விரும்பியது. ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களைச் சேர்த்து, அவர் எழுதிய புத்தகத்தைப் பற்றி உரையாற்ற ஏற்பாடு செய்தது. மற்றோர் அமெரிக்கரைச் சிறப்புச் சொற்பொழிவாளராக அழைத்திருந்தது. சுமார் 20 பேராசிரியர்கள்

வந்திருந்தனர். விவசாயம் செழித்தால், உபரி வருமானத்தால், நாடு தொழில்மயமாகும் என்பது புத்தகத்தின் மையக்கருத்து. எழுதியவர் West Indies என்ற இடத்திலுள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர். அவர் அமெரிக்க நீக்ரோ. புத்தகம் எந்த நாட்டைப் பற்றியதும் இல்லை; பொதுவான தத்துவம். பேராசிரியர்கள் சேர்ந்தனர். தூதுவராலய அதிகாரி கூட்டத்தைத் துவக்கிவைத்தார். அடுத்து அமெரிக்கரைப் பேச அழைத்தார். அவர் பேச ஆரம்பித்தவுடன், ஒரு பேராசிரியர் எழுந்து, ஆங்கிலேயர் இந்தியாவைச் சுரண்டியதைப் பற்றிப் பேசினார். அதைப் பற்றிக் கேள்வி ஒன்று எழுப்பினார். அவருக்கு என்ன பதில் சொல்வது என்று யோசனை செய்வதற்குள் மற்றொரு பேராசிரியர் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அமெரிக்கப் பல்கலைக்கழகத்தைப் பற்றி ஒரு கேள்வி கேட்டார். கேள்விகளைக் கேட்ட இருவரும் சொற்பொழிவாளரைப் புறக்கணித்து, ஒரு விவாதத்தை ஆரம்பித்தனர். மற்ற பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். பேச்சு நிறத் திமிர், அடிமைப் போராட்டம், இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கம், இந்தியக் கலாச்சாரத்தின் உயர்வு, ஆகியவற்றைப் பற்றித் தொடர்ந்தது. ஒரே சமயத்தில் இருவர் பேச ஆரம்பித்து, முடிவில் பலரும் ஒரே சமயத்தில் பேசிக்கொண்டிருந்தனர். சொற்பொழிவு நடக்கவில்லை. தூதுவராலய அதிகாரி, பேராசிரியர்கள் நடத்தையைக்கண்டு பிரமித்தார். 10 வயதுப் பிள்ளைகள் இதுபோல் நடந்துகொண்டால், அது மன்னிக்க முடியாது. வந்த காரியம் என்ன? நடப்பதென்ன? கூட்டம் முடிந்தது. விருந்து நடந்தது. அனைவரும் கலைந்தனர். தூதுவராலய அமெரிக்க அதிகாரி மற்ற அமெரிக்கரைத் திரும்பிப் பார்த்தார். "ஏன் இவ்வளவு படித்தவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள்?'' என்று கேட்டுவிட்டு, "இனி இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒரு கூட்டம் நடத்த நான் நினைக்கக்கூட மாட்டேன்'' என்றார். பேராசிரியர் வெளியில் குழுமி கூட்டத்தில் தங்களுக்குக் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும்வகையில் பெருமிதமாகப் பேசினார்கள். தங்கள் நடத்தையிலுள்ள குறையை அறியும் நிலையில் பேராசிரியர்கள் இல்லை. பேராசிரியர்கள் நிலை

இதுவானால், சாதாரண மனிதன் எப்படியிருப்பான்? நாம் நமது அன்றாட வாழ்க்கையைக் கவனித்தால், நம் மனம் இதுபோல் இருப்பது தெரியும். செய்யவேண்டிய வேலை என்ன என்பதை விட்டுவிட்டு, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசும் பழக்கத்தைப்போல், நம் மனம் செல்லும் திசைகளைப் பார்த்தால், ஏன் என் மனம் இப்படியிருக்கிறது எனத் திகைப்பேற்படும். அதை முறைப்படுத்த முயன்றால், அம்முயற்சியில் வெற்றி கிட்டினால், வாழ்க்கை முறை பெறும். மனம் தெளிவு அடையும்.

எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படும் குணமுடையவர் சிலர். யாரையும் சந்தேகப்படுவார்கள். தமக்கு மனதில் சந்தேகம் இருக்கிறது என்று வெளிப்படுத்த கூச்சப்படுவதுண்டு. கூச்சமே இல்லாமல் வெளிப்படையாகப் பேசுபவரும் உண்டு. இப்படிப்பட்டவருடன் எவரும் பணம், சொத்து சம்பந்தமான விஷயங்களில் தொடர்புகொள்ள மாட்டார்கள். அவை சம்பந்தமான வாய்ப்பே அவருக்கு ஏற்படாது; ஏற்பட்டாலும் நீடிக்காது. இந்தக் குணத்தை விடாமல் இவர்களுக்கு முன்னேற்றம் என்பது கிடையாது. பகட்டான தோற்றத்தை விரும்புபவர் பலர். செல்வருக்கும் உண்டு; ஏழைக்கும் உண்டு. 50, 60 வயதில் இக்குணம் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கை ஏடுகளைப் புரட்டிப்பார்த்தால், பகட்டால் தாம் பெற்றது ஏதுமில்லை; துன்பம் மட்டுமே என்று தெரியும். 50 வயதிலும் மனம் மாறினால், அதிலிருந்து வாழ்க்கை சிறக்கும். பொதுவாக இம்மாற்றங்கள் அறிவால் ஏற்படுவதில்லை. ஏற்பட்டால் வாழ்க்கை ஏற்படுத்தும் நெருக்கடிகளால் மட்டுமே ஏற்படுகிறது. வாழ்க்கையில் சிரமம் வந்தபின், மனம் ஏற்றுக்கொள்ளும் புது நிலையை அறிவால், சிறு வயதிலேயே, தானே உவந்து ஏற்றுக்கொள்ளுதல் சிறப்பு. அப்படி ஏற்படும் மாறுதல் மிகச்சிறியதானாலும், பலன் மிகப்பெரியது. தாம் செய்யும் காரியங்களை மற்றவர்கள் பாராட்டவேண்டுமென விரும்புபவர் ஒரு வகையினர். தங்கள் வாழ்க்கையில் அநேகமாக எல்லாக் காரியங்களையும் மற்றவர்களுடைய பாராட்டுதலுக்காகவே இவர்கள் செய்திருப்பார்கள். தம் குணத்தை மாற்றி, காரியத்தை அதற்காகவே

செய்யவேண்டும், கடமைக்காகச் செய்யவேண்டும், ஆர்வத்திற்காகச் செய்யவேண்டும் என்றால், இவர்களுடைய திறன் அதிகமாகும்; பலன் பெருகும்; அதுவே உயர்ந்த முறை.

நன்றியறிதல் ஓர் உயர்ந்த குணம். இது இல்லாதவர்களும் உண்டு. இல்லாதவர்கள் இதை ஏற்றுக்கொள்ள முயன்றால், அது வெற்றியானால், அது யோகச் சாதனையாகும். இருப்பவர்கள் சில விஷயங்களில் நன்றியறிதல் இல்லை என்பதைக் காணலாம். எந்த விஷயத்தில் இது இல்லையோ, அங்கும் இதை ஏற்றுக்கொள்ள யன்றால் ஜீவன் மலர்வது தெரியும். ஜீவன் மலர்ந்தால், அதில் அருள் சுரக்கும்.

ஞாபக மறதியுள்ளவர்கள் செய்யக்கூடியது ஒன்றில்லை. மறதியை அழித்து, நினைவை ஏற்படுத்துவது சாதாரண காரியமன்று; அதுவே நாம் ஏற்றுக்கொண்டது. ஆனால், அதுவே முடிவானதில்லை. நினைவை அதிகப்படுத்த சில நல்ல வழிகளுண்டு. அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால், ஒளியை மனதில் நிறுத்த முயன்றால், நினைவு அதிகமாகும். ஒருவனுடைய வாழ்வின் நிலை, நினைவின் தரம் அதிகமானவுடன் உயரும். மனித முயற்சிக்கு ஒரு பலனுண்டு. பிரார்த்தனைக்கு அதிகப் பலனுண்டு. ஞாபக மறதியை ஆன்மீகப் பாஷையில் ஒரு வகை அஞ்ஞானமென்பார்கள். ஞானம் வந்தால் மறதி போய் நினைவு அதிகமாகும். அன்னையை நினைப்பது ஞானத்தைப் பெறுவதாகும். நினைவு அதிகமானால் ஞானம் வர உதவி செய்யும்.

3 நண்பர்கள் தினமும் ஹோட்டலில் டிபன் சாப்பிடுவார்கள். முதலாமவரும், இரண்டாமவரும் போட்டியிட்டுக்கொண்டு பில்லைக் கொடுப்பார்கள். மூன்றாம் நபர் அதிக வசதி படைத்தவர். ஆனால் சிக்கனப் பேர்வழி. 4, 5 வருஷங்களுக்குப்பின் ஒரு நாள் பில் வர நேரமாய்விட்டது. பில் வந்ததும் முதலாமவர் தம்மிடம் கொடுக்கும்படிக் கேட்டார். இரண்டாம் நபர் எழுந்து பில்லை தாமே வாங்கப்போனார்.

சர்வர் பில்லை இருவரிடமும் கொடுக்க மறுத்தான். அத்துடன், "நீங்கள் இருவரும்தான் எப்பொழுதும் கொடுக்கிறீர்கள்'', மூன்றாம் பேர்வழியைப் பார்த்து, "இவர்தான் எப்பொழுதும் கொடுப்பது இல்லை. இன்று பில்லை அவரிடம் கொடுக்கப்போகிறேன்'' என்று சொல்லி அவரிடமே கொடுத்தான். அதன்பின்னும் அவருக்கு வெட்கம் வரவில்லை. சிக்கனத்தைப் பாதுகாத்தார். வெட்கமில்லாமருந்தால், சில சமயங்களில் அதிக இலாபம் உண்டு; ஆனால் வாழ்க்கையில் பெருத்த நஷ்டமுண்டு. முக்கியமான விஷயங்களில் சிறு தொகைக்குச் சிக்கனத்தைக் கடைப்பிடித்து, பெரிய இலாபத்தை இழந்துவிட வேண்டி இருக்கும். இந்த மூன்றாம் பேர்வழி ஒரு நல்ல தொழிலையே ஒரு வருஷத்தில் தம் "சிக்கனக்'' குணத்தாலும், வெட்கமற்ற செய்கையாலும் இழந்தார். அவசியமேற்பட்டால், இவர்களும் மாறிக்கொள்வார்கள். அவசியத்தாலும், மற்றவர்களுடைய நிர்ப்பந்தத்தாலும் மாற்றிக்கொள்ளும் குணத்தை, தானே முன்வந்து, தெளிவாலும், அறிவாலும் மாற்றிக்கொண்டால் நல்லது. நல்ல மனிதனுக்கு வெட்கம் அவசியம் என்றுணர்ந்தால் உணர்ச்சி உயர்வடைகிறது. அதற்கு வாழ்க்கையில் பலன் உண்டு. வாரக்கணக்காக, மாதக்கணக்காக வீட்டுப்பக்கம் வாராமல் சீட்டாடியவரை, தாயாருக்கு உயிர் போகும் நிலையில் பிடித்துக்கொண்டு வந்தார்கள். உயிர் பிரியும் தருணம், வீடு நிறைய கூட்டம். உயிர் பிரிந்தது. அவரைக் காணோம். கொல்லைப்புறமாகச் சீட்டாட ஓடிவிட்டார். அப்படிப்பட்டவரும் இனி சீட்டாடுவதில்லை, தவறு செய்வதில்லை என முடிவெடுத்து வாழ்க்கையை மாற்றிக்கொண்டார். தினமும் வீட்டுக்கு வந்தார். எங்கும் அனாவசியமாகப் போவதில்லை. தினமும் புருஷனைப் பார்ப்பதையே அவர் மனைவி ஒரு ஆச்சரியமாக, வரப்பிரசாதமாகச் சொல்லுவார். அவருக்குச் சேவை கிடைத்தது; பெரிய சந்தர்ப்பங்கள் வந்தன; பிரபலமானார்; வாழ்க்கையில் பெரிய பிரசாதங்கள் கிடைத்தன. மனம் உவந்து மாறினால் வாழ்க்கை பரிசளிக்கும் மாரியாக மாறும்.

ஒரு பேராசிரியர்; முழுவதும் சொரணையில்லாதவர். யார், எது சொன்னாலும் உடம்பில் உரைக்காது. ஸ்தாபனத் தலைவருக்கு எந்த வேலையானாலும் கேட்காமல் செய்வார். கொஞ்ச நாளில் அவர்கள் நம்பிக்கைக்குப்பாத்திரமாவார். புதிய தலைவர் ஒருவர் வந்தார். அவர் தம் ஆபீசர்களுடன் பல இடங்களைப் பார்வையிட்டார். இவரைக் கூப்பிடவில்லை. ஆனால் பின்னாலேயே போய்க்கொண்டிருந்தார். நாளும் முடிந்தது; அனைவரும் கலைந்தனர். பேராசிரியர் அழைப்பு இல்லாமல், தலைவர் பின்னாலேயே நின்றுகொண்டிருந்ததைப் பார்த்து, "நீ ஏன் பின்னாலேயே வருகிறாய்?'' என்றும் கேட்டார். அதற்கும் பேராசிரியர் அசையவில்லை. தம் சேவகத்தை, வெட்கத்தைவிட்டுத் தொடர்ந்தார். கொஞ்ச நாளைக்குப்பின் தலைவருடைய அந்தரங்கக் காரியதரிசியாய்விட்டார். சொரணையே முழுவதும் இல்லாமல் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு எடுத்துக்காட்டாய் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். மானேஜ்மெண்டிடம் இருந்து விலகி நின்ற நல்ல உணர்வுள்ள பலருக்குக் கிடைத்தது எதுவும் இவருக்குக் கிடைக்கவில்லை. வெட்கம் கெட்டவர் என்ற பட்டமே மிஞ்சியது. அவருடைய குழந்தைகள், அவர் மனம் ஆழ்ந்து புண்படும் காரியங்களைச் செய்தனர். சொரணையில்லாமல் இருப்பது இலாபம் எனக் கருதினால், இந்த உலகத்திலும் சொரணையோடு செயல்படுவது அதிக இலாபம் என்ற நிலையும் உண்டு என்பது எதிரில் வந்து நிற்கும். இலாபம் இல்லாவிட்டால், நஷ்டமே ஏற்பட்டாலும், சொரணையோடு வாழ்வதே மேல் என்பதை இவர் போன்றவர் ஏற்றுக்கொண்டால், இவரது மனம் வளம் பெறும். குழந்தைகள் தவறிழைக்கமாட்டார்கள். உயர்ந்த குணங்களை அவற்றிற்காகவே ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஆதாயத்தைக் கருதக்கூடாது.

பத்மாசூரன் கதையைப் படித்துப் பிரமிப்பவர் பலர். பிறருக்கு மனமுவந்து உதவியவர்களைக் கேட்டால் பத்மாசூரன் விதிவிலக்கில்லை. அதுவே விதி என்பார்கள். ஐரோப்பாவில் பழைய நம்பிக்கையொன்றுண்டு. ஒருவருக்கு உதவி செய்தால், பலனாக

அவர் திரும்பத் தவறு செய்வார், முடியாவிட்டால் வெறுப்பார் என்பது அந்த நம்பிக்கை. அதை விளக்கும் வகையில் ஒரு வாக்கியம் உண்டு. "அவருக்கு நான் எந்த உதவியுமே செய்யவில்லை. ஏன் என்னை வெறுக்கிறார் என்று தெரியவில்லை'' என்பதே அது. கல்கத்தா மேதை வித்யாசாகர் அடிக்கடி தம் பிரசங்கங்களில் அதைச் சொல்வார். இக்கருத்தின் சூட்சுமத்தை ஸ்ரீ அரவிந்தர் விளக்குகிறார். மனிதன் உதவி பெற ஆசைப்படுகிறான். ஆனால், உண்மையிலேயே தான் கொடுத்துப் பிறர் பெறவேண்டும் என்ற நிலையையே அவன் மனம் விரும்புகிறது. பிறர் கொடுத்துத் தான் பெற்றுக்கொள்ளும் நிலைமையில் தான் இருப்பதை அவன் வெறுக்கிறான். அந்த வெறுப்பை உதவி செய்பவர்மேல் காண்பிக்கின்றான் என்றார். ஒரு சிறுதொழில் முதலாளி லேபர் ஆபீஸர் கூப்பிட்டனுப்பியதால் போனார். "நான் என் தொழிலாளிகளுக்கு அதிகக் கூலி தருகிறேன். என்போன்ற மற்ற கம்பனியில்லாத வசதிகளைக் கொடுக்கிறேன். ஒரு வேளை சாப்பாடு போடுகிறேன். இரண்டு வேளை டீ கொடுக்கிறேன். ஏன் என்னை நிந்திக்கின்றார்கள் எனத் தெரியவில்லை'' எனக் கேட்டார். "அவ்வளவும் தொழிலாளிகள் கேட்காமலேயே கொடுத்தீர்களா?'' என்று கேட்டார். "அதிக வசதிகளை நிறுத்திவிடுங்கள். எல்லோரும் கொடுக்கும் கூலியைக் கொடுங்கள்'' எனச் சொன்னார். அதிக வசதிகளை நிறுத்தியவுடன் குறை கூறுவதும் நின்றுவிட்டது. இதுவே மனிதச் சுபாவம். மற்றவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை. நம் வாழ்க்கையை அலசிப்பார்த்து, இதுபோல் நாம் நடந்துகொண்டிருக்கிறோமா எனச் சோதிக்க வேண்டும். இருந்தால், அதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

வடநாட்டுக் கதையொன்று. மனிதன் மாம்பழத்தைப் பார்த்தறியாத காலத்துக் கதை. காட்டில், மாம்பழத் தோப்பில் ஏராளமான குரங்குகள் இருந்தன. ஒரு நாள் அரசனின் பரிவாரம் அதை நோக்கி வந்தது. தலைமைக் குரங்கு வேவு பார்த்ததில், அரசனுக்கு யாரோ ஒருவர் ஒரு மாம்பழம் கொடுத்ததாகவும், அதை ருசித்தபின் அவன் புறப்பட்டு வந்ததாகவும் அறிந்தது. அந்த இடம்

ஆற்றின் கரையிலிருந்தது. தன் இனத்திற்கு ஆபத்து வந்ததை தலைமைக் குரங்கு உணர்ந்து, கொடியால் இருகரையிலுள்ள மரங்களை சேர்த்துக் கட்டி, அனைவரையும் எதிர்கரைக்குக் கொண்டுசேர்க்க முடிவு செய்து கொடிப்பாலம் கட்டியதில் நீளம் ஒரு முழம் குறைந்தது. குரங்கு தானே அந்த ஒரு முழத்தைப் பூர்த்திசெய்ய முடிவு செய்தது. தன் கையில் கொடியைப் பிடித்துக்கொண்டு எதிர்க்கரையிலுள்ள தன் பரிவாரத்தை அழைத்தது. அனைத்தும் கொடி மீது நடந்து மறுகரையை அடைந்தன. ஒரு குரங்குக்கு தலைவனைப் பழிவாங்கும் எண்ணம் உண்டு. அது கடைசியாக வந்தது. வந்த குரங்கு, "நான் தாண்டிப்போய் என்னைக் காப்பாற்றிக்கொண்டபின் தலைவனைப் பழிவாங்குவேன்'' என்று தனக்குள் நினைத்தது. தன்னைக் காப்பாற்றிக்கொண்டது. பிறகு தலைவனைப் பிடித்துத் தள்ளியது. மரத்திலிருந்து கீழே விழுந்தது தலைமைக் குரங்கு, தலை உடைந்தது. இத்தனையையும் எதிர்க்கரையிலிருந்து அரசன் பார்த்து, வியந்து, ஆற்றைக் கடந்துவந்து காயம்பட்ட குரங்கை மடியில் போட்டு தடவிக் கொடுத்தான். "என் கடமையை முடித்துவிட்டேன். இனி நிம்மதியாக இறப்பேன்'' என்றது தலைமைக் குரங்கு. மனிதர்களுள் பழிவாங்கும் மனப்பான்மையுடையவர்கள் இதுபோல் நடப்பதுண்டு. கடமையுணர்வு நிறைந்த தலைவனுடைய குணமும், பழிவாங்கும் குணமும் மனிதர்களிடம் காணப்படும். இரண்டும் சேர்ந்தும் காணப்படும். தாழ்ந்த குணத்தை முயன்று உயர்ந்த குணமாக மாற்றிக்கொள்ளும் திறனும் மனிதனுக்குண்டு.

ஒரு ஸ்தாபனம் நீண்ட நாட்களாக நடந்துவரும். இன்று ஒருவர் வந்து சேருவார். சேர்ந்தவுடன் தாம் தலைவராக வேண்டும் என்று முயலுவார். 40 வருடங்களாக நடந்துவரும் பாங்க், கல்லூரி, ஆசிரமம், சொசைட்டி, சபா போன்ற இடங்களில் வந்த முதல் வருஷம் தானே தலைவனாக வேண்டும் என்று சகா சேர்த்து, தனக்கு மட்டுமே அறிவுண்டு, திறமையுண்டு, படிப்புண்டு, சிறப்புண்டு, இந்த ஸ்தாபனத்தை ஆரம்பித்தவர்கள், வளர்த்தவர்கள், கட்டிக்காப்பவர்கள்

அனைவரும் அர்த்தமற்றவர்கள் என்று செயல்படுவது வழக்கம். அன்னையிடம் அதுபோல் கேட்டவர்கள் பலர். சத்தியாக்கிரஹம் செய்ததும் உண்டு. எதிர்ப்பார்த்தவர்கள் அநேகர். ஒரு குடும்பத்தில் இன்று வரும் மருமகன் அல்லது மருமகள் அதுபோல் நடப்பதுண்டு. இந்த முயற்சியில் சிலருக்கு வெற்றியும், பலருக்குத் தோல்வியும் கிடைக்கின்றன. அவர்கள் மனநிலை என்ன? வயது 20 ஆனாலும், தனக்கு எல்லாம் தெரியும்; மற்றவர்களுக்குத் தெரியாது என்பது. நம்மையும், நம் வாழ்வையும் பார்த்தால், பல விஷயங்களில், பல அளவுகளில் இதுபோன்ற மனப்பான்மை நமக்கு இருப்பது தெரியும். ஆராய்ச்சிக்கு அது புலப்படும். அப்படிப்பட்ட ஆராய்ச்சி பயன்படும். ஆசையின் வேகத்தை அறிவின் நிதானத்திற்கு உட்படுத்திச் செயல்பட முன்வர வேண்டும். மனித குணத்தின் முக்கிய அம்சங்களில் இது ஒன்று. தமக்கு ஒரு விஷயம் புரிந்துவிட்டால் உலகத்தில் அது ஒன்றே உண்மை என நினைப்பது சாதாரண மனித இயல்பு. புரிந்தாலும், புரியாவிட்டாலும் தாம் செய்வது மட்டுமே உயர்ந்தது. உலகம் தனக்கு அடங்கவேண்டும் என்பது பலரிடமும் காணப்படும் மனநிலை. தலையிருக்க வால் ஆடலாமா என்பது நம் நாட்டுப் பழமொழி. வால் வளர்ந்து பருத்து உடலைவிட அதிக வலுவைப் பெற்று, தான் ஆடுவதால் உடலை ஆட்டுவிக்கின்றது என்று பம்பாய்ப் பத்திரிகை ஒரு சமயம் எழுதியது. எஸ்டேட் மேஸ்திரி, முதலாளியைத் தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது; டைப்பிஸ்ட் முதலாளிக்கு எஜமானனாக ஆவது; எடுபிடி ஆள் கம்பெனியை எடுத்துக்கொண்டுபோக ஆசைப்படுவது ஆகிய நிகழ்ச்சிகளை அனைவரும் அறிவோம். இவற்றைப் பிறருக்குரிய குறை என அறிகிறோம். உண்மையில் இவை மனிதச் சுபாவத்தின் குறைகள். அப்படியானால், அவை நம்மிடமும் இருக்கும். இருக்கிறதா என சோதனை செய்யும் மனப்பான்மை வேண்டும். இருக்கிறது என்று கண்டு கொண்டால், அதை விலக்க முன்வர வேண்டும். முழுவதுமாக விலக்க முடியாவிட்டாலும், முடிந்தவரை விலக்க வேண்டும்.

சமூகம் என்பது கடல். மனிதன் கடலுள்ள மீனைப்போல் அதில் வாழ்கிறான். சமூகமே அவனுக்கு உயிர், மூச்சு எல்லாம். சமூகத்தை ஒட்டியே அவன் தன் வாழ்வை நிர்ணயித்துக் கொள்கிறான். சமூகம் ஏற்றுக்கொள்ளாததை அவன் சரியா, தவறா என யோசனை செய்யாமல், விலக்குவான். அதேபோல் சமூகம் ஏற்றுக்கொண்டதை அவனும் சிந்தனை செய்யாமல் ஏற்றுக்கொள்வான். சமூகம் பிரம்மாண்டமானது. அதை எப்படி எதிர்க்க முடியும் என்பது கேள்வி. சமூகம் தன்னை எதிர்த்துப்போக தனி மனிதனை அனுமதிக்காது என்பது உண்மை. ஆனால் தனி மனிதன் தன் வாழ்வில் உண்மையைக் கடைப்பிடிப்பதை சமூகம் அழிக்க முன்வாராது. மனிதனுக்கு தனக்கென்று ஒரு குணம், திறமை இருப்பது அரிது. பெரும்பாலும் மனிதர்களுக்கு உள்ள திறமை சமூகத்தில் ஏற்பட்டதேயாகும். சமூகத்தின் திறமையை அவர்கள் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். சமூகம் ஒரு பக்கம் இருந்தாலும், மனிதனுக்கு நல்லது, கெட்டது என்ற பாகுபாடு உண்டு. அது தெரியாதவர்கள் குறைவு; அநேகமாக இருக்கமாட்டார்கள். மனம் நல்லது என்று அறிந்ததைச் செய்யத் தயங்கும். அதுவும் சமூகத்தை எதிர்த்துச் செய்யத் தயங்கும். இவையெல்லாம் சமூகத்தின் கூறுகள். உண்மையில் அர்த்தமில்லாத ஒன்றை சமூகத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்வதால், அர்த்தமுள்ள மனிதன் ஒருவன் சிந்திக்காமல், தானும் அதை நம்புவான். அதனால் தனக்கு இருக்கும் திறமையைப் பயன்படுத்த முன்வர மாட்டான். பெரிய வாய்ப்புகள் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும். தன்னையறியாமலேயே நாட்களைக் கடத்தி விடுவான். இதுபோன்ற மனப்பான்மைகள் அநேகம். மனிதனுடைய குணத்திற்கும், சமூகத்தின் அறியாமைக்கும் உள்ள தொடர்பை எடுத்துக் கவனித்துப்பார்த்தால், பல இடங்களில் நாம் அதுபோன்ற அறியாமையிலிருந்து மீண்டு புதுவாழ்வு பெற முடியும் என்பது தெரியும். ஒரு விஷயத்தில் நம் அறிவுக்கு விடுதலை கிடைத்துவிட்டால், மற்ற விஷயங்களில் விடுதலையைத் தேட வாய்ப்புண்டு. அன்னையின் அருளை அதிகமாகப் பெற எந்தவிதமான

அறிவும் உதவும். எந்த அறியாமையைப் போக்குவதும் உதவும். இந்தத் தலைப்பில் 40 பழக்கங்களைக் குறிப்பில் எழுதினேன். அத்தனையையும் விளக்க முடியாது. சிலவற்றை மட்டும் விளக்கமாகச் சொல்லிவிட்டு, சுபாவத்தின் பங்கு என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.

ஏராளமாகச் சம்பாதிப்பதென்றால் தவறாகச் சம்பாதிக்க வேண்டும் என்று ஒரு பொது நம்பிக்கையுண்டு. 10 விளக்குகள் அணைந்தால்தான் ஒரு விளக்கு பிரகாசம் பெறும் என்று மேலும் விளக்கம் கொடுப்பார்கள். பெரும்பாலோர் இதை நம்புவார்கள். திறமைசாலிகளும், நல்லவர்களும் பெருஞ்செல்வம் பெறத் தகுதியுடையவர்களும் இதை நம்பி, நம்பியதால் தங்கள் திறமையைப் புறக்கணித்து, வரும் வாய்ப்புகளை ஒதுக்கி, வெறும் மனிதர்களாக வாழ்க்கையை முடித்துவிடுவார்கள். அப்படிப்பட்ட ஒருவருக்கு நான் சொல்லும் விளக்கம் பயன்படும். பலருக்குச் சொல்வது இருக்கட்டும். உங்கள் அனுபவத்தில் இக்கூற்று நூற்றுக்கு நூறு உண்மையா என்று பார்த்தால், விலக்காகச் சிலர் காணப்படுவார்கள். உழைப்பால் உயர்ந்த உத்தமர் சிலர் நினைவுக்கு வருவார்கள். நாட்டின் பெருஞ்செல்வர்களில் பலர் இந்தச் சட்டப்படி சம்பாதித்தவர்களானால், சிலர் விலக்காக உயர்ந்தவர்கள். அடுத்தாற்போல், உங்களுக்குச் சொந்தமாகத் திறமையும், நேர்மையும் இருக்கின்றன. அவை சிறப்பாகச் செயல்பட்டபொழுது, பலன்கள் எப்படியிருந்தன என்று யோசனை செய்தால், திறமை பலமுறை பலன் அளித்துள்ளது என்பது விளங்கும். ஆராய்ச்சியைத் தொடர்ந்தால், சமூகத்திலுள்ள இந்த வழக்கை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என விளங்கும். உள்ளுறை உண்மை விளங்கும். புறத்தோற்றத்தைச் சமூகம் வர்ணிக்கிறது எனத் தெரியும். தோற்றத்திற்குப் பலன் கிடையாது. அடிப்படை உண்மைக்குத் தவறாது பலன் உண்டு. மனத்திற்குத் தெளிவாக இது புரிந்தபின், செயல்படத் தயக்கமே கூடாது. உள்ளுறை உண்மையை அறிந்து தெளிந்து, புறத்தோற்றத்தை விலக்கி, தயக்கமின்றிச் செயல்பட

ஆரம்பித்தவுடன், நம் முடிவை வாழ்க்கை அறிந்துகொண்டதுபோல் எதிரொலியாக வாய்ப்புக்களைக் காட்டும். பேராசையின்றி, நிதானமாக வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு, அறிவில் தெளிவும், உணர்வில் உற்சாகமும், செயல் சிறப்பும் நிறையும்படிக் காரியங்களைச் செய்தால், பலன் பிரார்த்தனையின்றி கிடைக்கும். அங்கு அன்னை அழைப்பின்றி வருவார். அன்னையை அழைத்தால் அப்படிப்பட்ட நிலையில் முதற்கட்டத்திலேயே முடிவான பலனைக் கொடுப்பார். அடுத்த உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்வார்.

நம் அறிவில் தெளிவிருந்தாலும், சமூகத்தில் இதுவரை எவரும் செய்யாதது என்பதால், ஏதாவது காரணம் கற்பித்து, சமூகத்தின் எண்ணத்தையே நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மனம் ஏங்கும், துடிக்கும். அந்த ஏக்கத்திற்கு நம் குணம் துணைநிற்கும். நம் குணம், நம் உயர்வுக்கு எதிராக சமூக நியதிகளை ஏற்றுக்கொண்டால், அதன்பிறகு முயற்சிக்கு வேலையில்லை; அங்கு முன்னேற்றமில்லை. அந்நிலையில் அன்பருக்குத் தெளிவு ஏற்படுத்த முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம். பட்டியலாக இதுபோன்ற எண்ணங்களை எழுதினால், அவற்றைப் படித்துவிட்டு, புரியவில்லை என்று சொல்வார்கள். எல்லாவற்றிற்கும் விளக்கம் எழுத இடம் கொடுக்காது. ஓரிரு விளக்கத்தைக்கொண்டு பட்டியலுள்ள மற்றவற்றைப் புரிந்துகொள்ள முயன்றால் நல்லது.

வாழ்க்கையில் பொதுவாக உள்ள நம்பிக்கைகள் எவை என 40, 50ஐ பட்டியலாகத் தயார் செய்யலாம். அவற்றுள் நாம் ஏற்றுக்கொண்டவை எவை என்பதே நமக்கு முக்கியம். நம் நம்பிக்கைகளைப் பற்றி அன்னையின் கருத்தென்ன? வாழ்க்கைப் பட்டியலில் உள்ளவற்றிற்கு அன்னையின் பட்டியலில் என்ன இருக்கிறது என்று பார்த்து, வாழ்க்கைமூலமாக நாம் ஏற்றுக்கொண்டவைகளை விட்டு, அன்னைமூலமாக அவற்றை எப்படி நிறைவேற்றுவது என்று விளங்கிக்கொண்டு, இந்த நிலையிலிருந்து அந்த நிலைக்கு மனத்தை எப்படி மாற்றுவது? அதில் நம் குணம் எப்படித் துணையாக இருக்கும்?

எப்படித் தடையாக இருக்கும் என்று கருதி, குணத்தின் குறையை நிறையாக மாற்றி, வாழ்க்கையின் வறண்ட நிலையிலிருந்து அன்னையின் வளம் நிறைந்த நிலைக்கு நம்மைக் கொண்டு வரவேண்டும்.

நமக்கு நல்ல திறமை இருப்பதால், நிறைய சம்பாதிக்க நினைத்தால், பணத்தைச் சம்பாதிப்பது என்றால் தவறு செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. பலர் வாழ்க்கையைச் சோதித்து, தவறில்லாமல் சம்பாதிக்கலாம் என்று முடிவுக்கு வந்தால், பணத்தின்மீது ஆசை வருவது தவறல்லவா என்ற எண்ணம் தோன்றுகின்றது. முதல் நிலையைத் தாண்டி வந்தபின், இந்நிலையில் குழப்பம் ஏற்பட்டு, இந்த ஆசை வேண்டாம் என்று முடிவு செய்கிறோம். அப்படிப்பட்ட முடிவை எடுத்துப் பரிசீலனை செய்தால், திறமையை வெளிப்படுத்துவது முக்கியமா? பணம் சேர்ப்பது முக்கியமா என்று கேட்டால், ஆசை பணத்தின் மீதிருந்தால், அது குறை; திறமையைச் செயல்படுத்த விரும்பினால், அது நல்லது. நம் மனநிலை உயர்ந்ததாக இருந்தாலும், மேலும் தயக்கம் இருந்தால், தயக்கத்தை விண்டு பார்த்தால், நம் மற்றொரு குணம் தெரியும். பெரிய வேலை செய்ய வேண்டுமானால் ஓடி, ஆடி, அலைச்சல்பட வேண்டும். அலைச்சல்பட வேண்டாம் என்பதால் சம்பாதிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதைக் கண்டால், அது அடிப்படையில் சோம்பேறித்தனமாகும். இந்த ஆராய்ச்சியின் பலன் நாம் நல்லவர்களாக இருந்தாலும், நம் சோம்பேறித்தனத்தை நிலைநிறுத்த சமூகத்தின் வழக்கமான, "பணத்தை அநியாயமாக மட்டுமே சம்பாதிக்கலாம்'' என்பதை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பது புரியும். மனம் இதை அறிந்தால், சோம்பேறித்தனத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது என்று முதல் முடிவை மாற்றிச் சம்பாதிக்கும் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பொதுவாக நாம் நம்பும் சில விஷயங்களையும், அவற்றைப் பற்றி அன்னை சொல்லியிருப்பதையும் எழுதுகிறேன்.

  1. உடலை வருத்தினால்தான் பக்திக்குச் சிறப்பு. அதனால் நோன்பு, விரதம் உயர்ந்தவை என்பது நம் வழக்கு.

பக்தி, உள்ளத்தின் மலர்ச்சியால் ஏற்படுவது. அதனால் அது மணம் கமழ்வது. உடலை வருத்துவதற்கு அங்கு இடமில்லை. அசுர குணம் உடையவருக்கே உடலை வருத்தி பக்தி செலுத்த வேண்டும் என்று அன்னை கூறுகிறார்.

  1. நமக்கு வரும் கஷ்டங்களைப் பொறுமையாக ஏற்றுக்கொள்ளுதல் சிறப்பானது என்பது நம் மரபு.

கஷ்டம் உலகில் இருப்பதை அழிக்க வந்துள்ளது அருள். கஷ்டத்தின் பிறப்புரிமையை வேருடன் அழிப்பதே அன்னையின் கடமை. சந்தோஷம் மனிதனின் பிறப்புரிமை. அதை நிலைநிறுத்துவதையே அன்னை தம் கடமையாகக் கொள்கிறார்.

  1. எளிமை உயர்வு ; அதனால் உயர்வை நாடுபவர் எளிமையாக இருக்க வேண்டும்.

உயர்வு எளிமையாகவும் இருக்கும், செழிப்பு நிறைந்த சிறப்பாகவுமிருக்கும். எளிமையாக மட்டும் இருக்கவேண்டிய நிர்ப்பந்தமில்லை. மனம் தூய்மையாக இருப்பதே முக்கியம். புறத்தோற்றம் முக்கியமில்லை.

  1. பிறருக்கு உதவி செய்தல் நல்ல குணம்.

உதவி செய்யும் மனப்பான்மை உயர்ந்தது. உதவி செய்யும் மனப்பான்மை உண்மையிருந்தால், உதவி செய்ய வேண்டிய நிர்ப்பந்தமில்லை. சந்தர்ப்பம் ஏற்பட்டால் உதவலாம். யாருக்கு உதவி செய்யலாம் என்று தேடிப் போகவேண்டாம். பெற்றுக்கொள்பவருக்கு ஒரு வரையறையுண்டு. ஓர் அளவு வரை நாம் செய்யும் உதவி அவருக்குப் பலன் அளிக்கும். அவருடைய அளவை மீறி உதவி செய்தால் அவருக்கு அது நல்லது செய்யாது. அவர் நமக்குத் தீங்கிழைக்க முயல்வார்.

  1. நம்மவரிடம் நேர்மையாக இருக்க வேண்டும். அனைவரிடமும் நேர்மையாக இருக்கக்கூடாது.

நேர்மை மற்றவர்களைப் பொருத்ததன்று. நம்மை மட்டும் பொருத்தது. எல்லா நேரங்களிலும் நேர்மையாக இல்லாவிட்டால் அது நேர்மையாகாது.

  1. எளியவர்க்கு ஒன்று ஈவது ஈகை.

ஈகை கொடுப்பவரின் மனத்தைப் பொருத்தது. பெறுபவரின் நிலையை மட்டும் பொருத்ததன்று.

  1. அதிகமாக உயர்ந்ததாக இருக்கிறது, அதனால் நீடிக்காது.

நீடிப்பது நம் மனநிலையைப் பொருத்தது.

  1. என்னுடைய குணத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன். அதை மாற்றாமல் வருவது போதும்.

குணத்தை மாற்றி உயர்ந்ததாகச் செய்வதே கடமை.

  1. என்னுடைய முயற்சியில்லாமல் வருவது சிறந்தது அது போதும்.

.முயற்சியே முக்கியம். பலன் முக்கியமில்லை.

  1. பொறுப்பு வேண்டாம். பலன் வேண்டாம். எனக்கு பொறுப்பில்லாமல் வரும் பலன்தான் அதிர்ஷ்டம் எனப்படும்.

பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் சம்பந்தப்பட்ட இடங்களில் நடக்கும் அனைத்துக்கும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

  1. இதெல்லாம் பெரியது, நமக்கில்லை, இருப்பது போதும்.

முன்னேற்றத்திற்கு முடிவில்லை.

  1. எனக்கு எதுவும் கூடிவரவில்லை. எனவே இனி கூடிவாராது.

கடமையை முடித்தபிறகு, அன்னையை அழைத்தால் எதுவும் கூடிவரும்.

  1. எல்லோரும் பொய் சர்ட்டிபிகேட் வாங்குகிறார்கள். அதனால் நானும் வாங்குகிறேன்.

மெய்யின் அடிப்படையில் வந்தவர்களுக்குப் பொய் சர்ட்டிபிகேட் பொய்த்துவிடும்.

  1. கஷ்டம் வந்தால்தான் மனிதன் சிந்தனை செய்வான்.

அறியாமையிலிருக்கும்வரைதான் மனிதன் சிந்திக்க, கஷ்டம் வரும்வரை காத்திருப்பான்.

  1. அடித்து வளர்த்தால்தான் குழந்தைகள் நன்றாக வளர்வார்கள்.

குழந்தைகளை அடிக்கக்கூடாது.

  1. வந்தால் வெள்ளமாக வரும், இல்லையென்றால் இல்லை.

வருவது வெள்ளமாகவும் வரும், சீராகவும் வரும். வருவதும், வரும் அளவும் நம் மனத்தைப் பொருத்தது.

  1. தனக்கு இலாபமில்லாத காரியத்தை ஒருவன் செய்யமாட்டான்.

தனக்கு மனதில் காரியவாதம் இருக்கும்வரைதான் மனிதன் தன் இலாபத்தைக் கருதுவான். தன் மனத்தில் காரியவாதம் இல்லாவிட்டால் மனிதன் உயர்ந்த முறையில் செயல்படுவான்.

  1. அது அவருடைய சுபாவம், மாறாது.

பிறர் சுபாவம் மாறாது என்பது உண்மை. நம் சுபாவம் மாறாது என்பதும் உண்மை. அன்னையை மட்டும் கருதிச் செயல்படும்பொழுது மனிதன் தன் சுபாவத்தினின்று மாறி செயல்படுவான் என்பதும் உண்மை.

  1. கடன் கேட்காமல் வாராது.

கடன் கொடுத்த விவரங்கள், அந்தப் பணத்தைச் சம்பாதித்தது சரியாக இருந்தால், பணம் கேட்காமல் தானே வரும்.

  1. வயது 50 ஆகிறது. எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். இனிமேல்தானா புதியதாக நடக்கப்போகிறது.

வயது 50 ஆனாலும், 80 ஆனாலும் அறியாமையில் ஏற்பட்ட அனுபவம் அறிவுடை செயல்களுக்குப் பொருந்தாது. அறிவுடை அனுபவத்திற்குப் பயன் உண்டு.

  1. கூலிக்காரன் கண்டிப்பு இல்லாமல் வேலை செய்ய மாட்டான்.

அவன் செய்யும் வேலையில் அவனுக்குத் திறமையை ஏற்படுத்தினால், ஆர்வம் ஏற்பட்டு கண்டிப்பில்லாமல் தானே அதிக வேலை செய்வான்.

  1. இது சீசன் இல்லை. அதனால் கிடைக்காது.

மனதில் ஆர்வம் இருந்தால் கிடைக்கும், சீசன் தேவையில்லை.

  1. கண்டிக்காவிட்டால் எவரும் அதுபோல்தான் இருப்பார்கள்.

கண்டிப்பு இருந்து நடக்கும் வேலைகள் அன்றாடக் காரியங்கள். கடமையுணர்வு இருந்தால்தான் இலட்சிய வேலைகள் நடக்கும்.

  1. வருமானம் உபரியாக வருகிறது. நம் காதில் எதுவும் ஏறாது.

உபரியாக வருவது அருளால். அந்த நேரம்தான் ஏற்கனவே கவனிக்காததையும் கவனிக்க வேண்டும்.

  1. புறங்கையைச் சுவைக்காத மனிதனுண்டா?

புறவாழ்க்கையில் நெறியில்லாத மனிதனும், அகவாழ்க்கையில் மாசில்லாமலிருப்பான். புறம் இயற்கைக்கு உரியது. அகம் ஆன்மாவுடையது.

 

  1. எனக்கு இலாபமானதெல்லாம் சரியானதே.

நம் காரியத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இலாபமானதே சரியானது.

  1. சாப்பாடு போட்டுவிட்டால், பிறகு வேலை நடக்காது.

ஆர்வம் உள்ள இடத்தில் சாப்பாடு போட்டபின் அதிக வேலை நடக்கும்.

  1. அவர்கள் நிலை அவர்களை அப்படிப் பேசச் சொல்கிறது.

அவர்கள் பேச்சு உன் மனநிலையால் நிர்ணயிக்கப்படுகிறது.

  1. பணம் பாதாளம்வரை பாயும்.

பொய்யின் பணம் மெய்யை நிலைநிறுத்த உதவாது.

  1. வருவதெல்லாம் வருமானம்.

நமக்குரியதே வருமானம். மற்ற வருமானம் திருப்பித் தரவேண்டிய கடனாகும்.

குணத்தை மட்டும் விவரமாகவும், மனப்பான்மை, நடத்தை, அறிவு ஆகியவற்றை சுருக்கமாகவும் குறிப்பிட்டேன். சுபாவம் என்பது நம்முடன் பிறந்தது. நம் வாழ்க்கை வெற்றியை நிர்ணயிப்பது என்றேன்.

நிதானம், பொறுமை, பொறுத்துக்கொள்ளும் தன்மை, விடாமுயற்சி, சாந்தம், இலட்சியம், நம்பிக்கை, நாணயம், விஸ்வாசம், சோம்பேறித்தனம், தைரியம், உஷார், பிடிவாதம், நிர்ணயம் ஆகியவையும், அவற்றின் எதிரானவையும் சுபாவத்தைச் சேர்ந்தவை.

நிதானமுள்ளவன் ஜெயிக்கும் இடத்தில் அவசரம் உள்ளவன் தோற்பான். மற்ற எல்லாத் திறமைகளும் இருவருக்கும் ஒன்று

போலிருந்தாலும், நிதானம் ஜெயித்துக் கொடுக்கும். அவசரம் தோல்வியைப் பெற்றுத் தரும்.

ஒரு முறை தோற்றபின், அந்த வேலையை மறந்துவிடுபவர் விடாமுயற்சியுடையவருடைய வெற்றியை எதிர்பார்க்க முடியாது. நடத்தை மேலெழுந்தவாரியாக உள்ளது. அதனால் அடிப்படையான காரியங்களைச் சாதிக்க முடியாது. குணம் அவசியம். என்றாலும் அஸ்திவாரம் போட குணம் போதாது. மற்றவர் அஸ்திவாரம் போட்டு எழுப்பிய காரியங்களை நிர்வாகம் செய்ய குணம் உதவும். தன்னிலையிலிருந்து அடுத்த நிலைக்குயர சுபாவத்தில் திறன் இருக்க வேண்டும்.

ஒரு ஸ்தாபனத்தை ஆரம்பிக்க நல்ல மனப்பான்மை, அழகான நடத்தை, உயர்ந்த குணம் போதாது. உயர்ந்த சுபாவமுள்ளவராலேயே புதியதாக ஒரு ஸ்தாபனத்தை ஆரம்பிக்க முடியும். அதேபோல் ஸ்தாபனத்தை அடுத்த அளவுக்கு உயர்த்தவும் சுபாவத்தின் துணை தேவை. சுபாவத்தின் இருப்பிடம் உடல். உடல் அஸ்திவாரம்போல் அமைவதால், நல்ல சுபாவம் அஸ்திவாரக் கல் நாட்டும். அதேபோல் நடத்தையில் குறையிருந்தால், அழிவு குறைவு. குணத்தில், மனப்பான்மையில் குறையிருந்தால் அழிவு அதிகம். ஆனால் பொறுத்துக் கொள்ளலாம். சுபாவத்தில் குறையிருந்தால், அழிவு முழுமையாக இருக்கும். அடிப்படையே கோளாறு என்றாகும்.

இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, நாம் மற்றவர் எவரையும் ஆராய்ந்து பார்க்காமல், நம் வாழ்க்கையை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்வோம். முதலில் நல்லது, கெட்டது பிரிந்து தெரியும். கெட்டது விலக்கப்பட வேண்டியது என்பதில் கருத்து வேற்றுமையில்லை. க்ஷணம் தாமதிக்காமல் கெட்டதை விலக்க முன்வர வேண்டும். அடுத்தாற்போல் முரண்பாடுகளைக் குறைத்து சுமுகமான வாழ்க்கையை ஏற்படுத்த வேண்டும். இந்த நிலையில் மற்றவர் அனைவரும் நாம் எதிர்பார்ப்பதுபோல் நடக்க வேண்டும்

என்று எதிர்பார்ப்பது தெரியும். அதை விட்டுவிட்டு நியாயமானது, சரியானதை மட்டும் செய்ய முன்வர வேண்டும். முக்கியமாக மற்றவர் எதிர்பார்ப்பதுபோல் நாம் நடக்க நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும். இதுவே முன்னேற்றப் பாதை.

இதையே வேறு வகையாகவும் சொல்லலாம்.

  1. கெட்டதை முழுவதும் விலக்கு.
  2. உன் குணம், சுபாவம், நடத்தை ஆகியவற்றைப் பரிசீலனை செய்து, உன் நிலையை அறிந்து கொள்.
  3. அவற்றுள் உன் நிலையை உயர்த்த முயற்சி செய்.
  4. அதிகபட்ச முயற்சியைப் பூரணமாகச் செய்.
  5. கடைசிக் கட்டத்தில் மனித குணத்தைத் தாண்டும் வாயிலாக அன்னை குணங்களை ஏற்றுக்கொள்.

மனிதனுடைய உயர்ந்த குணங்கள் போற்றப்பட வேண்டியவை. தாழ்ந்த குணமுள்ளவர் உயர்ந்த குணங்களை நாடுதல் நல்லது. அதனால் அருளும் பெருகும். என்றாலும் உயர்ந்த குணங்களைப் பெற்றபொழுது, அவற்றைக் கடந்து சென்று அன்னை குணங்களான அன்னை முறைகளை ஏற்றுக்கொண்டால், அருள் பூரணமாக, இடைவிடாது, எல்லா அளவிலும் செயல்படும்.

*******



book | by Dr. Radut