Skip to Content

அன்னையை ஏற்றுக்கொள்ளுதல் என்றால் என்ன?

மனிதன் உற்பத்தியானது முதல் ஏராளமான விஷயங்களை அறிந்து அவற்றை மேலும் மேலும் ஏற்றுக்கொண்டு உயர்வடைந்துள்ளான். இந்தியர்கள் கடைசியாக அதுபோல் ஏற்றுக்கொண்டது ஜனநாயகம். ஆயிரக்கணக்கான வருஷங்களாக முடிஆட்சியை மட்டுமே அறிந்த இந்த நாடு, சுதந்திரமடைந்தபின், மக்களாட்சியை அல்லது மன்னராட்சியைத் தேர்ந்தெடுக்கும் நிலையில், மக்களாட்சியை ஏற்றுக்கொண்டது. மன்னர் ஆட்சியைவிட மக்களாட்சி மக்களுக்குச் சிறந்தது என அறிந்து அதை ஏற்றுக்கொண்ட நாடுகள் அநேகம். இலங்கை, பர்மா, சிங்கப்பூர், ஜாவா, சுமத்ரா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் அவை. மக்கள் ஆட்சியைப் பெயருக்கு ஏற்றுக்கொண்டு அதை இராணுவ ஆட்சியாக நடத்தும் நாடும் உண்டு. மக்கள் ஆட்சியை மக்களுக்குப் பலனில்லாமல் நடத்துவதுமுண்டு. மக்கள் வாழ்வை முன்னேற்றமடையச் செய்ய விரதம் பூண்டு அதை நிறைவேற்ற மக்களாட்சியை ஏற்றுக்கொள்வதுமுண்டு. ஒரு நாடு மக்களாட்சியைப் பல நிலைகளில் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தலாம். முதற்கட்டத்தில் வெறும் ஜனநாயகமாக நாட்டை நடத்தி வாழ்க்கையை முன்போலவே அமைக்கலாம். அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம் பெற்ற நாடு, அதுபோன்ற நிலையிலும் ஓரளவு முன்னேறும். அடுத்த கட்டத்தில் நீதிமன்றங்களுக்குச் சட்டசபைகளை உட்படுத்தி மக்களாட்சியை நிறுவினால், ஜனநாயகம் ஆணிவேர்விட்டு நிலைத்துவிடும். மேலும் உயர்ந்த கட்டத்தில் மக்களுக்குக் கல்வி அளிப்பதைக் கடமையாகக்கொண்டு ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டால் கல்வியால் விளக்கம் பெற்ற மக்கள் அடுத்த தலைமுறையில் ஏற்றம் பெற வழியுண்டு. இதற்கடுத்த கட்டத்தில் மக்கள் உடல்நலம் பேணுவதையும், தொழில்வளம் பெருகுவதையும் குறிக்கோளாகக்

கொண்டு ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டால், அதிக முன்னேற்றத்தைப் பெறலாம். இதற்கடுத்த கட்டமும் உண்டு. இன்று பிற்பட்டவரை அரசே முன்வந்து உயர்த்தி, உயர்வு, தாழ்வை நீக்க முற்பட்டால் முன்னேற்றம் விரைவாக ஏற்படும். உலகிலுள்ள உயர்ந்த ஆராய்ச்சியின் பலனை நம் நாட்டுக்குக் கொண்டுவருவதையும், மேலை நாடுகளை எட்டிப்பிடிப்பதையும், எல்லோரும் இந்நாட்டு மன்னராக வேண்டும் என்பதையும் இலட்சியமாகக்கொண்டு ஜனநாயகத்தை ஒரு நாடு ஏற்றுக்கொண்டால், அந்நாடு ஜனநாயகத்தில் முழுப்பலனையும் பெறலாம். அடிமையாக இருந்தவரை ஜனநாயகத்தைப் பற்றிப் பேச்சில்லை. அன்னியனுடைய அரசியலமைப்பும் ஜனநாயகமே என்பது சிறப்பில்லை. ஏனெனில் அது அடிமை வாழ்வாகும். அடிமை நிலையிலிருந்து விடுபட்டு ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளும் நாடு, ஜனநாயகத்தைப் பல நிலைகளில் ஏற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ற பலன் உண்டு. ஜனநாயகம் வந்ததாலேயே அடிப்படை உரிமைகள் கிடைக்கின்றன. அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகின்றன. என்றாலும், ஏற்றுக்கொண்ட அரசியல் முறையை எந்த அளவில் செயல்படுத்துகிறோம் என்பது நம்மைப்பொருத்தது.

மனித வாழ்வு பொய்மைக்கும், இருளுக்கும் அடிமைப்பட்டுள்ளது. மனிதன் இவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டும். அந்த விடுதலையை உலகத்திற்கு அன்னை கொண்டு வந்திருக்கிறார். அன்னையைத் தெய்வமாக உணர்ந்தால், உணர்ந்து வழிபட்டால், பொய்யிலிருந்து விடுதலை பெற வழியுண்டு. பூரணமாக ஏற்றுக்கொண்டால், பூரண விடுதலையுண்டு. 1930, 1940-இல் ஆங்கிலேயர் இந்நாட்டை விட்டுப் போகக்கூடாது, அவர்களால் நாடு பெருநன்மையை அடைந்துள்ளது என்றவர் பலருண்டு. அதுபோல் மனிதனுக்குப் பொய் அவசியம், அதனால் பல சௌகரியங்களுண்டு என்பவரும் உண்டு. பொய்ம்மையிலிருந்து விடுதலையை விழைபவருண்டு. அவர்களுக்கு உதவியான சக்தி இன்று உலகில் இல்லை. பொய்யிலிருந்து முழு விடுதலை பெற விழைபவர்க்கு

உறுதுணையாக அன்னை உலகுக்கு வந்துள்ளார். அவரை ஏற்றுக்கொண்டால், பொய்யை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் வெற்றியுண்டு. ஜனநாயகத்தைப் பல உயர்ந்த கட்டங்களில் ஏற்றுக்கொள்வதைப்போல் அன்னையையும் பல கட்டங்களில் ஏற்றுக்கொள்ளலாம். எத்தனை நிலைகளில் ஏற்றுக்கொள்ளலாம் என்பதைப் பல வழிகளில் குறிப்பிடலாம்.

  1. மனத்தாலும், அடுத்தாற்போல் உணர்வாலும், அடுத்த கட்டத்தில் உயிராலும், கடைசி கட்டத்தில் உடலாலும் ஏற்றுக்கொள்வது ஒரு வகை.
  2. வழிபடும் தெய்வமாகவும், வாழ்க்கை விளக்கமாகவும், பிறப்பின் சிறப்பாகவும், ஆன்ம ஜோதியாகவும் ஏற்றுக்கொள்ளுதல் மற்றொரு வகை.
  3. ஏதோ ஒரு சமயம் நினைப்பவர், வேலைகளை அன்னையை நம்பிச் செய்பவர்; இடையறாது நினைப்பவர், சாதகர்; அன்னைக்குப் பிடிக்கும் என்பதால் ஒரு காரியத்தைச் செய்பவர், அன்னைக்குப் பிடிக்காது என்பதால் ஒரு காரியத்தை விலக்குபவர். அன்னைக்காகத் தம் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முன்வருபவர், அன்னைக்காகத் தம் சுபாவத்தை மாற்றிக்கொள்பவர், அன்னைக்காகத் தம்மைப் பூரணமாக மாற்றிக்கொள்பவர், அன்னையின் குழந்தையாகி, பிரார்த்தனையும் தேவையில்லாத புனிதராக மாறுபவர்.

மனிதன் எதை ஏற்றுக்கொண்டிருக்கின்றான்? அவன் ஏற்றுக்கொண்டவை அவனுக்கு இதுவரை அளித்தது என்ன? ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்வது என்றால் என்ன? அதிலிருந்து மாறி அன்னையை ஏற்றுக்கொள்வது எப்படி என்பவற்றை ஓரளவு விளக்க முயல்கிறேன்.

மனிதர்களைக் கவனித்துப் பார்த்தால், அவர்கள் செயல்கள் பொதுவாக சமூகத்தை ஒட்டி அமைந்திருக்கும். சமூகம் ஏற்றுக்கொள்பவற்றை மனிதன் விரும்பி ஏற்றுக்கொள்வான். சமூகம் புறக்கணிப்பதைத் தானும் புறக்கணிப்பான். உடை, உணவு, அரசியல்

ஆகியவற்றில் பொதுவாக மனிதன் தானுள்ள சமூகத்தை அனுசரித்துப் போவதுண்டு. மேலும் அவனை நன்றாகக் கவனித்தால், சமூகத்தை ஒட்டிப்போகும்பொழுதும், தன் குடும்பப்பாணியிலேயே மனிதன் சமூகத்தைப் பின்பற்றுவது தெரியும். குடும்பமானாலும், தான் பிறந்த ஜாதியானாலும், மனிதனிடம் அக்குணங்கள் மிகுந்திருக்கும். நாலு பேர் செய்யும் காரியங்களை மனிதன் விரும்பிச் செய்யும்பொழுது தான் பிறந்து, வளர்ந்த பாணியிலேயே செய்வதைக் காணலாம். சமூகத்தைப் பின்பற்றும் நல்ல மனிதன், குடும்பத்தை ஏற்றுக்கொள்ளும் சிறப்பான மனிதன் ஆகியவர்களைக் கூர்ந்து நோக்கினால், தன்னுடைய சொந்த நலனுக்கு ஒத்துவரும் அளவுக்கே சமூகத்தையும், குடும்பத்தையும் மனிதன் ஏற்றுக்கொள்கிறான் என்பது தெளிவாக விளங்கும். ஒரு பெரிய இலட்சியத்தை ஏற்றுக்கொண்டாலும், ஓர் அரசியல் இயக்கத்தில் சேர்ந்தாலும், ஒரு பொதுக்காரியத்தைச் செய்தாலும், ஒரு கருத்தை விரும்பினாலும், ஒரு கட்சியை ஆதரித்தாலும், தன் சொந்த நலனுக்கு அவை ஏற்றுக்கொள்ளும் வகையில்தான் மனிதன் செயல்படுகிறான். பொதுவான உண்மையிது. விதிவிலக்காக உள்ள இலட்சிய புருஷர்கள் உண்டு. அவர்கள் சர்வபரித்தியாகிகள். பொதுவாக மனிதன் சுயநலம் பாராட்டுவான் என்றாகிறது. அதுவே அடிப்படை உண்மை என்றாலும், தன் சுயநலம் பாதிக்கப்படாத அளவுக்கே மனிதனால் எதையும் ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் சொல்லலாம். பிரார்த்தனை செய்தால் பலிக்கும் என்றால், பிரார்த்தனை செய்ய முன்வருபவர்கள் பலர். நாகூர் தர்காவுக்கும், வேளாங்கண்ணி மாதாவுக்கும் இந்துக்கள் பிரார்த்தனை செய்வதுண்டு. இதைத் தன்னலம் என்று புரிந்துகொள்பவருண்டு. இந்து மதம் உயர்ந்த சனாதன தர்மத்தின் அடிப்படையைக் கொண்டதால், மதவேற்றுமையின்றி, எந்த தெய்வத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை எனப் புரிந்துகொள்வதும் உண்டு. மனிதன் செயல்படும் வகை எது என்று கருதினால், அன்னைக்கு பிரார்த்தனை செய்ய முன்வருபவர்கள் முதல் நிலையிலுள்ள அன்பர்கள் எனலாம். பிரார்த்தனையை

மேற்கொண்டு அன்னையிடம் வருபவர்களுடைய பிரார்த்தனைகள் பூர்த்தியாகும். இதில் உள்ள விசேஷம் ஒன்று. பல ஆண்டுகள், பல வழிகளில், பல தெய்வங்களுக்குப் பிரார்த்தனை செய்து பலிக்காமல் போன எந்தப் பிரார்த்தனையும் அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனையால் பலிக்கும். மனிதனையும், மனித வாழ்வையும் ஏற்றுக்கொண்டு அன்னை செயல்படுவதால் மனிதனுக்குக் கிடைக்கும் பலன் இது.

அன்னையின் அருள் சத்தியத்தை மட்டுமே ஆதரிக்கும்; பொய்யை அழிக்கும். அதனால் அன்னையை வேண்டி ஒரு பிரார்த்தனை பூர்த்தியானால், அது சத்தியத்தின் வெற்றி. அப்பிரார்த்தனையைச் செய்தவன், சத்தியத்தின் வீரன். தன்னலத்திற்காக அவன் பிரார்த்தனை செய்தான் என்பதைவிட, தன் ஜீவனில் உள்ள சத்தியம் வளர மனிதன் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்தான் என்பதே பொருந்தும். அவன் மனதிலுள்ள சத்தியமே அவனை அன்னையிடம் அழைத்து வந்தது. அவனால் அன்னையின் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது என்பதால் அவனுடைய பிரார்த்தனை பலித்தது.

மனிதன் அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனை சத்திய ஒளிவிளக்கை ஏற்றும் செயலாகும். அதனால் அம்மனிதன் உயர்ந்தவன். மனிதன் பிரார்த்தனையால் சத்தியசீலனாகிறான். இந்த நிலையை அன்னையை ஏற்றுக்கொள்வதில் முதல் நிலையாகக் கூறலாம். இதனால் இதுவரை பலிக்காத பிரார்த்தனைகள் இன்று பலிக்கும். எனினும், அது அவனுடைய நம்பிக்கையைப் பொருத்துள்ளது. நம்பிக்கை அதிகமானால் பலிதம் அதிகமாகும். நம்பிக்கை எங்கு முடிவடைகிறதோ, அங்கு பலிப்பது நின்றுவிடும். எனவே நம்பிக்கை எப்படி வளர்கிறது, எந்தக் கட்டத்தில் முடிகிறது என்று கவனிப்போம்.

மனிதனுக்குத் திறமை, சுபாவம், முயற்சியுண்டு. நம்பிக்கை இவற்றைப் பொருத்து வளரும். அதற்கும் சமூகம் ஒரு எல்லையை

ஏற்படுத்துவதுண்டு. திறமையுள்ளவனுக்குத் தன் திறமையில் நம்பிக்கையிருப்பதால், திறமையில்லாதவனைவிட, அதிகம் சாதிக்க முடியும். உயர்ந்த சுபாவமுள்ளவனும் அப்படியே. தாழ்ந்த சுபாவமுள்ளவனைவிட அதிகமாக அவனால் சாதிக்க முடியும். இவற்றுக்கெல்லாம் சமூகம் ஒரு வரையறையை ஏற்படுத்துகிறது. அதிகத் திறமையுடையவன் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவனானால் சமூகம் குறுக்கிட்டு, அவனுக்குச் சேரவேண்டிய பலனைத் தடுக்கும். அதைப் பிடுங்கித் திறமையில்லாத ஒருவனுக்கு, அவன் உயர்ந்த ஜாதியில் பிறந்தவன் என்ற காரணத்தால் கொடுக்கும். அதேபோல், உயர்ந்த சுபாவமுள்ளவன், அதிக முயற்சியுள்ளவன், நேர்மையுடையவன் ஆகியவர் சாதிப்பதை அவர்கள் பெறுவதற்குச் சமூகம் பெருந்தடையாக இருக்கும். தனி மனிதன் சமூகத்தை எதிர்த்து நிற்க முடிவதில்லை. எனவே நேர்மை, திறமை, முயற்சி, சுபாவம் ஆகியவை ஒருவனுக்குப் பலன் அளிப்பது அவற்றைப் பொருத்ததன்று, சமூகத்தைப் பொருத்தது. சமூகம் பொய்யின் பிடியிலும், கொடுமையின் ஆட்சியிலும், தில்லுமுல்லாலும் நிறைந்துள்ளது. உயர்ந்த மனிதர்களான நாயன்மார்களும், ஞானதேவ் போன்றவர்களும், உத்தமிகளான பெண்மணிகளும் சமூகத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்டார்கள் எனில், சாதாரண மனிதன் சமூகத்தை எதிர்த்து நிற்க முடியாது. திரௌபதியின் மானத்தைக் காக்க பீஷ்மாச்சாரியாரோ, விதுரரோ, துரோணச்சாரியாரோ முன்வரவில்லை. செஞ்சோற்றுக் கடன் என்ற பெயரில் துரியோதனனுக்கு அடங்கிவிட்டார்கள். உலகத்தில் ஒரு சக்தியில்லை, திரௌபதியின் கற்பை மதித்து, அதைக் காப்பாற்ற. அதையும் தாண்டிய கட்டத்தில் கண்ணகியைக் காப்பாற்ற அவள் உத்தம குணத்தால் முடியவில்லை. பாண்டிய மன்னனின் நீதியும் துணை நிற்கவில்லை. சமூகத்தில் செயல்படும் பொய்யின் வடிவங்கள், தீய சக்திகள் கண்ணகியை அழிக்கவே துணைநின்றன. கர்மம் தன்னைப் பூர்த்தி செய்துகொள்ள சமூகத்தின் துணையை நாடிற்று. சமூகம் கர்மத்தின் கருவியாயிற்று. கற்புக்கரசியைக் கைவிட்டது.

அன்னையை நாடி வந்து அன்னையைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டவர்களுக்குச் சமூகத்தில் எதிர்ப்பு ஏற்படுவதுண்டு. சமூகம் அவர்களைச் சுட்டெரிக்கத் தயாராவதுண்டு. அந்நிலையில் அவர்கள் தங்கள் மனதில் சமூகத்திற்கு அளித்துள்ள இடத்தை அழித்து, அங்கு அன்னையைப் பிரதிஷ்டை செய்தால், சமூகத்தை நம்பாமல் அன்னையை நம்பினால் அன்னையின் அருள் புயலாக வீசி சமூகத்தின் கடும் எதிர்ப்பைக் கணநேரத்தில் துவம்சம் ஆக்குவதைக் காணலாம். மாணிக்கவாசகருக்கும், ஞானதேவருக்கும், மதர் தெரசாவுக்கும், கண்ணகிக்கும், திரௌபதிக்கும், அரிச்சந்திரனுக்கும், சமூகம் துரோகம் செய்தது. சமூகம் இருளின் கருவி. இன்று சத்தியத்தை நாடும் அன்பர்களைச் சமூகம் போற்றாது. இன்று சமூகத்துடன் ஒன்றி நிற்கவேண்டுமானால், அதன் இலட்சியத் தேவதைகளான லஞ்சம், ஊழல், ஆடம்பரம், சிபாரிசு, பகட்டு, ஏமாற்று, தில்லுமுல்லு ஆகியவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை எதிர்த்து ஒருவன் நின்றால், சமூகத்தின் எல்லாச் சக்திகளும் திரண்டு அவனை அழிக்கும். அவன் அன்னையை நம்பினால், அன்னையை மட்டும் நம்பினால், சமூகத்தை மனத்தாலும், செயலாலும், உணர்வாலும் புறக்கணித்து, அன்னையை மனத்தாலும், செயலாலும், உணர்வாலும் நம்பினால் அவன் கண் முன்னரே அத்தீய சக்திகள் அன்னையால் அழிக்கப்படுவதைப் பார்க்கலாம். இது அழிக்கும் சக்தி. இதைவிட்டு அன்னையின் ஆக்கல் திறனைப் பார்ப்போம். பல கோடி முதலிட்டு, வெளிநாட்டுத் தொழில்நுணுக்கத்தைக் கொணர்ந்து, நாட்டுக்கு அத்தியாவசியமான தொழில் பல ஆயிரம் தொழிலாளிகளை நியமித்து, ஒரு தொழிலை நடத்த முன்வந்தால், சர்க்கார் லஞ்சத்தின் பாஷைகளைப் பேசும், உறவினர் பொறாமையின் வடிவங்களாவார்கள். பலனைப் பெறவேண்டிய ஊரார், எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள். பெரும் பலனை அடையவேண்டிய தொழிலாளிகள் தடையாக மட்டுமிருப்பார்கள். அனைவரும் சமூகத்தின் அங்கங்கள். சமூகம் பொய்யின் பிறப்பிடம். ஒருவரும் நம் பக்கம் இருக்கமாட்டார்கள். அன்னையை நம்பினால், அதாவது பொய்யைப் புறக்கணித்து, மெய்யை ஏற்றுக்கொண்டு

அன்னையை நம்பினால், நல்லவர்கள் நம்மைக் கைவிட்டபொழுதும், நாணயஸ்தர்கள் ஒதுங்கிக் கொண்டபொழுதும், சட்டம் ஊழலுக்குத் துணைபோன நேரத்திலும், பொறாமை ஊரில் ஜெயித்த காலத்திலும், அன்னை நம் பக்கம் நிற்பது தெரியும். எல்லா சக்திகளும் தோற்பதைக் காணலாம். அன்னையின் வெற்றியை அனுதினமும் பார்க்கலாம். அன்னையை ஏற்றுக்கொள்வதில் இது அடுத்த கட்டம். பொய்யையும், பொய்யின் வடிவங்களையும் நண்பர்கள் என்ற உருவில், பாசத்தின் பெயரில், பண்பு என்று சொல்லிக் கொள்வதின் பெயரில் ஏற்றுக்கொள்ளாமல் விலக்கி, மெய்யை மட்டும் மனதிலும், செயலும் ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் அன்னையை ஏற்றுக்கொள்வது, அவரை ஏற்றுக்கொள்வதில் அடுத்த நிலை எனலாம்.

பொதுவாகச் சொல்லப்போனால், அன்னையை ஏற்றுக்கொள்வதென்றால் பிரச்சினையில்லாத வாழ்வை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். ஒரு பிரச்சினை தீராது என்று நாம் கொண்டால், பிரச்சினைக்குரிய திறனை ஏற்றுக் கொண்டதாகப் பொருள். அன்னை அப்பிரச்சினையைத் தீர்ப்பார் எனில், பிரச்சினையின் வலுவை ஏற்றுக்கொள்வதைவிட அன்னையின் திறனை மனம் ஏற்றுக்கொண்டது என்றாகிறது. அதுபோல், அன்னையை முழுமையாக ஏற்றுக்கொண்டால், பிரச்சினையற்ற வாழ்வை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். மனத்தில் அன்னைமீது நம்பிக்கை ஏற்பட்டு, மனம் அன்னையை ஏற்றுக்கொண்டால், எதை மனிதனுக்குக் கொடுக்கக்கூடாது என்று இறைவன் நிறுத்திவைத்தானோ, அந்த மனநிம்மதி மனத்தில் உதித்து, வளர்ந்து, நிலைத்து, சிறந்து நிற்கும். அன்னையை மனம் ஏற்றுக்கொள்கிறது என்றால், மனநிம்மதியை மனிதன் ஏற்றுக்கொள்கிறான் என்று பொருள்.

சந்தோஷம் எல்லோருக்கும் எப்பொழுதும் கிடைக்கக் கூடியதன்று. ஏழை, எளியவர்க்கும் சில சமயங்களில் ஏராளமாகக்

கிடைக்கும். அறிஞர்களுக்கும், இலட்சியவாதிகளுக்கும் பல சமயங்களில் கிடைக்காமற் போகும். இளம் குழந்தைகளுக்கே அது எப்பொழுதும் உரியது. தேடிப்போனால் எட்டிப் போகும். சும்மா இருந்தால் தேடி வரும். எல்லோரும் விழைவது சந்தோஷம். எவர் கையிலும் நிலையாக இல்லாத ஒன்று. அன்னையை உணர்வால் ஏற்றுக்கொண்டால், சந்தோஷத்தை நிலையாக ஏற்றுக்கொண்டதாகும். அன்னை சந்தோஷத்தின் பிறப்பிடம். உணர்ச்சி வழியாகவே வெளிப்படும் குணம் இது. வாழ்க்கையில் சந்தோஷத்தை அறியாதவர்களும், அன்னையை ஏற்றுக்கொண்டபின், அவர்களை நாடி சந்தோஷம் வருவதைக் காண்பார்கள். ஆசிரமத்தைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது அனைவரும் குறிப்பாகச் சொல்வது ஒன்றுண்டு. இங்கு அனைவரும் சந்தோஷமாகக் காணப்படுகிறார்கள் என்பார்கள். இங்கு வந்தபின் சந்தோஷமில்லாமலிருக்க முடியாது என்பது அன்னையின் கருத்து. ஒருவரால் ஆசிரமத்திலிருந்தும் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்றால் அவரால் உலகத்தில் எங்குச் சென்றாலும் சந்தோஷப்பட முடியாது என்று அன்னை கூறுகிறார். மனத்தில் மனநிம்மதியை நிலைநாட்டும் அன்னை, உள்ளத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுகிறார்.

வாழ்க்கை என்று நாம் பேசுவது வெற்றி, தோல்விகளுக்கு உறைவிடம். தோல்வியை அதிகமாகவும், வெற்றியைக் குறைவாகவும் வழங்கக்கூடியது வாழ்க்கை. மனிதனைத் தன் முழுப்பிடியில் வாழ்க்கை வைத்துள்ளது. மனித வாழ்வு உலக வாழ்வில் ஒரு பகுதி. உலக வாழ்வு பூவுலக வாழ்வில் (In the life of earth ) ஒரு பகுதி. பூமியின் வாழ்வு அசுரனின் பிடியிலும், பொய்ம்மையால் ஆட்கொள்ளப்பட்டும், இருளால் நிரப்பப்பட்டும் உள்ளது என்று பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். அதன் பகுதியான மனித வாழ்வும் அவற்றின் பிடியில் உள்ளது. சத்தியத்தைக் கடைப்பிடித்த அரிச்சந்திரனின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியது மனித வாழ்வு. கண்ணனை இஷ்ட தெய்வமாக வரித்த மீராவுக்கு விஷம் அளித்தது; சாக்ரடீஸுக்கு ஹெம்லாக் என்ற விஷத்தை கோப்பையில் இட்டு

வழங்கியது; பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியன் பூமியைச் சுற்றவில்லை என்ற விஞ்ஞானப் பேருண்மையை முதல் கண்டுகொண்ட கோபர்னிகஸ்ஸை ஜெயிலில் அடைத்தது; ஏசுபிரானை சிலுவையில் அறைந்தது; மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றது; வாழ்க்கை தன் ஆதிக்கத்தை மனிதன்மீது முழுவதும் செலுத்தி, அவனைத் தன் காலடியில் போட்டு மிதிக்கக்கூடியது. எனவே, மனிதன் வாழ்க்கையிடம் பக்குவமாகவும், பயபக்தியுடனும் செயல்படுவான்.

அன்னையை ஏற்றுக்கொள்ளுதல் எனில், குறிப்பாக வாழ்க்கையில் அன்னையை ஏற்றுக்கொள்ளுதல் என்றால், தோல்வியை அறியாத வாழ்வை ஏற்றுக்கொள்ளுதல் என்று பொருள். மனிதன் வாழ்வின் பிடியில் இருக்கிறான். அதனால் வாழ்க்கை அவன் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். வாழ்க்கை அன்னையின் பிடியில் இருப்பதால், அன்னையை ஏற்றுக்கொண்ட மனிதனுடைய பிடியில் வாழ்வு வந்துவிடும். அவனிஷ்டப்படி வாழ்வு செயல்படும்.

வாழ்க்கையில் அன்னையை ஏற்றுக்கொள்ள மனிதன் அன்னையின் வழிமுறைகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். வாழ்க்கையின் விதிகளைப் பின்பற்றும் மனிதன் வாழ்க்கையின் பிடியில் வந்துவிடுகிறான். அன்னையின் முறைகளைப் பின்பற்றும் மனிதனுடைய பிடியில் வாழ்க்கை வந்துவிடும். வாழ்க்கையை ஒட்டிச்செல்லும் மனிதன் எவ்வளவு உயர்ந்த நிலையிலிருந்தாலும், தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த வாழ்க்கை ஒரு சமயம் இல்லாவிட்டாலும், ஒரு சமயம் அவனுக்குத் தோல்வியை அளிக்கிறது. அன்னைக்குத் தோல்வி தெரியாது. அன்னையைப் பிரதிஷ்டை செய்த வாழ்வில் தோல்வியில்லை. கோர்ட்டுக்குப் போகும் கட்சிக்காரனுக்கும், அவனுடைய வக்கீலுக்கும் வெற்றியா, தோல்வியா என்ற நிலையுண்டு. ஜட்ஜுக்குக் கடமையுண்டு. அவருக்கு வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. அவருடைய நிலை உயர்ந்தது. வெற்றி, தோல்விகளைக் கடந்தது.

ஒருவனுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது அவனுடைய தொழிலைப் பொருத்தது, படித்த பட்டத்தைப் பொருத்தது. பிறந்த குடும்பத்தைப் பொருத்தது. அவனுடைய சூழ்நிலையைப் பொருத்தது. எந்தச் சூழ்நிலையிலிருந்தாலும், ஒருவன் அன்னையைத் தன் வாழ்வில் ஏற்றுக்கொண்டவுடன், அவன் எதிர்காலத்தையும், அவன் முன்னேற்றத்தையும் அன்னை நிர்ணயித்துவிடுகிறார். அதன்பின் மனிதன் எந்தச் சூழ்நிலையிலிருந்தாலும், எந்தப் படிப்பைப் படித்தாலும், எந்தத் தொழிலைச் செய்தாலும், அதை ஒரு கருவியாக்கி, அன்னை வழங்குகிறார். நிர்ணயிப்பது அன்னை. படிப்பு, தொழில் ஆகியவை மார்க்கங்கள், கருவிகள். அன்னையை ஏற்றுக்கொண்டபின், நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் திறனுடையவை எல்லாம் கருவிகளாக மாறி அன்னையின் ஆணையை நிறைவேற்றுகின்றன.

ஒருவனுடைய புத்தி பிறப்பால் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்பிறகு அது மாறுவதில்லை. அன்னையை அறிவு ஏற்றுக் கொண்டால், பிறப்பில் நிர்ணயிக்கப்பட்ட புத்தியும் வளர்கிறது. அளவுகடந்து வளரும்.

பண்பு குறைவான சூழ்நிலையில் உடற்குறை உள்ளவனுக்குப் பட்டப்பெயரிட்டு, அவமானப்படுத்தி அழைப்பார்கள். வலுவுள்ளவன், வலிமையில்லாதவனை அழிப்பதை ஓர் உரிமையாகக் கொண்டாடுகிறான். ஒருவனுக்கு ஒரு சிரமம் வந்துவிட்டால், சொத்தை இழந்துவிட்டால், உத்தியோகம் போய்விட்டால், அவனைப் பார்த்துக் கை தட்டிச் சிரிப்பார்கள். அவனைக் கீழே தள்ளி மிதிக்க, பலரும் ஒன்று கூடுவார்கள். பண்பான சூழ்நிலையில் ஒருவருடைய குறையைக் கண்டுகொள்வதைத் தங்கள் குறையாகக் கருதுவார்கள். ஒருவருக்குச் சிரமம் வந்தால் அனைவரும் சேர்ந்து அதை விலக்க முயல்வார்கள். தெய்வங்கள் தெய்வலோகத்தில் இருக்கின்றன. உதவி கேட்டு மனிதன் குரலெழுப்பினால், அவர்கள் காதில் அவன் வேண்டுகோள் விழுந்த நேரம் அவன் கேட்டதைக் கொடுப்பார்கள். கேட்ட அளவுக்கே

கொடுப்பார்கள். அன்னை தெய்வலோகத்திற்கு மேலேயுள்ள சத்தியலோக அவதாரம். அவர் சக்தி அந்த லோகத்திலிருந்து வருகிறது. எங்கெல்லாம் மனிதன் சத்தியத்தைத் தேடிக் கொண்டிருக்கிறானோ, அங்கெல்லாம் அவனைத் தேடி அன்னை வருகிறார். பல ஆண்டுகளாக அவன் மனதில் மண்டிக்கிடக்கும் அபிலாஷைகளை அவன் கேட்காமலேயே பூர்த்தி செய்கிறார். அவன் கேட்டதைவிட அதிகமாகக் கொடுக்கின்றார். கேட்காததையும் அளிக்கின்றார். கேட்கத் தெரியாததையும் தாமே கொடுக்கின்றார். அன்னையின் அவதார நோக்கமே இதுபோல் செயல்படுவதுதான். மனிதனுடைய ஆத்மாமூலமாக செயல்படுகிறார். வாழ்க்கையின் இருளுக்குள் புதைந்துள்ள சத்தியத்தின் விதைகளைக் கண்டு, அதன்மூலம் அவன் வாழ்வில் செயல்பட அன்னை விழைகிறார். பொய்ம்மையாலும், இருளாலும் அமைந்த அவன் பிறப்பின் அஸ்திவாரத்தில் சத்திய வித்துகள் உள்ளன. மனிதன் அவற்றைப் பாராட்டினால், அவன் வாழ்வில் அருள் செயல்பட அன்னை, வாழ்வின் சத்திய வித்துகள்மூலம் அவனை நாடி வருகிறார். அவன் வாழ்வு மலர்கிறது. தோல்வியை நிரந்தரமாக அழித்துவிடுகிறது.

தான் வணங்கும் கடவுள்களில் ஒன்றாக அன்னையை மனிதன் வழிபட ஆரம்பித்தவுடன், தனக்குச் சகலவித வரங்களையும் அளிக்கக் காத்திருக்கும் தெய்வம் அன்னை என்பதை மனிதன் கண்டுகொள்கிறான். தானும், தன் மனமும், சுபாவமும் எந்த வகையிலும் மாறவில்லை என்றாலும், தன் பிரச்சினைகள் அனைத்தும் கரைவதை அவன் காண்கிறான். மனம் நிம்மதியால் நிரம்பும் அதிசயத்தையும், உள்ளம் உவகையால் பூரிப்படையும் புனிதத்தையும் தன் வாழ்வில் நிதர்சனமாகக் காண்கிறான். உடல் ஆரோக்கியத்தாலும், திறனாலும் நிரம்புகிறது. அன்னையை நினைத்தால் சிர்க்கிறது. வாழ்க்கை தன் குதர்க்கப்போக்கை மாற்றி, அவன் தொட்டனவெல்லாம் பலிக்கும் அளவுக்கு அவனுக்குக் கட்டுப்படுகிறது. அவனறிந்த வக்ரபாவங்கள் இப்பொழுது வாழ்வில் காணவில்லை. எங்குச் சென்றாலும் அன்னை தன்னை

எதிர்கொள்வதைக் காண்கிறான். அன்னையைத் தன் வாழ்வில் வரவேற்கத் தான் கதவுகளைத் திறக்காத காலத்தும், அங்கும் இங்குமுள்ள சந்துபொந்துகள் வழியாக அன்னை அவன் வாழ்வில் நுழைந்து செயல்படுவதையும் பார்க்கிறான். கோணல்கள் நிறைந்த அவன் குடும்ப வாழ்க்கை நிறைவுகளுள்ள புதிய வாழ்க்கையாக மாறுகிறது. இதுவே முதற்படி எனலாம்; முதற்பலன் எனவும் கூறலாம்.

இந்த எல்லைக்கும் அப்பால் பெரிய சந்தர்ப்பங்கள் காத்திருக்கின்றன. தான் உள்ள சூழ்நிலையிலிருந்துகொண்டும், தன் இன்றைய மனநிலையிலிருந்து செயல்பட்டும், அப்பெரும் சந்தர்ப்பங்களைப் பெறமுடியாது. தன் மனநிலையை அன்னையின் வாழ்வு முறைகளுக்கேற்ப அவன் மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். வாழ்க்கையில் ஒரு காரியத்தை முடிக்க பொய் கலந்த வழிமுறைகளை மனிதன் பின்பற்றுகிறான். அவ்வழியின்மூலம் அன்னை அவன் வாழ்வில் புகுந்து செயல்பட முடியாது. அன்னையின் வரப்பிரசாதங்களை வாழ்க்கையில் மனிதன் பெற, மனிதன் தன் வாழ்வின் அஸ்திவாரங்களை அன்னைக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். தனக்குப் பிடித்ததைச் செய்யவே மனிதன் விரும்புகிறான். அன்னையின் புதிய சக்தி அவன் செயல் வெளிப்பட வேண்டுமானால், அவன் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும். தனக்குப் பிடித்ததை நாடக்கூடாது. தனக்கமைந்த கடமைகளை ஆர்வத்துடன் நிறைவேற்ற முன்வர வேண்டும். அந்த மனப்பான்மைகளைக் கைக்கொண்டால், அன்னையின் அற்புதம் மலர ஆரம்பிக்கும்.

சௌகரியங்களை நாடுவது மனித இயல்பு. பழக்கமான காரியங்கள் செய்வதை நாம் சௌகரியமாகக் கொள்கிறோம். பழக்கமில்லாத மார்க்கமாக ஒரு காரியத்தைச் செய்ய அதிக முயற்சி தேவை. அது சிரமம். அதை விலக்குகிறோம். பழக்கத்தையும், சௌகரியத்தையும் கருதினால், தனக்கேயுரிய கோணல்களுடன் மனித வாழ்வு நம்மை எதிர்கொள்ளும். கடமையை நிறைவேற்ற

முனைதல் வேண்டும். சௌகரியத்தையும், பழக்கத்தையும் புறக்கணிக்க வேண்டும். அப்படிச் செய்தால், அன்னை நம் வாழ்வில் புது வேகத்துடன் நுழைவதைக் காணலாம். புது மணம் வீசுவது நிலையாகும். பிறரைக் குறை கூறுவது நம் பழக்கம். நாம் சொல்லும் குறை மற்றவரைத் திருத்தாது; மாற்றாது. பிறரைக் குறை கூறாமலிருப்பது அன்னை வழி. அதை மேற்கொண்டால், புதியது பிறக்கும். யாருடைய குறையை வாயால் சொல்வதில்லை என்ற முடிவை ஏற்றுக்கொண்டோமோ, அவர் தம் குறையை விட்டுவிட்டு மாறுவதைக் கண்ணால் பார்க்கலாம். மனிதன் சுபாவத்தின் பிடியிலிருப்பவன். ஒன்றை விரும்பினால் உடனே செய்யப் பிரியப்படுவான். நிதானித்து, ஆராய்ந்து செயல்படுவது மனித இயல்பன்று. நினைத்தவுடன் செயல்படுவது மனித இயல்பானால் வாழ்வு ஜீவனற்று, சடலம்போல் அங்குலம், அங்குலமாக நகர்கிறது; முடிவு தொலைவுக்குப் போகிறது. அது நம் கையிலிருப்பதில்லை. அன்னை வழி அதுவன்று. ஒரு காரியத்தை மனிதன் ஆரம்பிக்குமுன் அன்னையை நினைக்க வேண்டும். அப்படிச் செய்தால், அங்குச் செயல்படுவது அன்னை சக்தி. அதன் விளைவாகக் கிடைக்கும் பலன் அதற்குரிய பலன். வாழ்க்கைக்கு அன்னையின் ஒளி நிறைந்த திறன் ஏற்பட்டுவிடும். பலன் நிறைந்த முடிவு பலர் வியக்கும் அளவில் கிடைக்கின்றது.

மேற்சொன்ன விதிமுறைகளை அனுஷ்டிப்பதன்மூலம் மனிதன் அன்னையைத் தன் வாழ்வில் ஏற்றுக்கொள்கிறான். அப்படிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி என்பதில்லை. செயல்கள் விரைவாக நிகழ்கின்றன. பதவியுயர்வு உரிய காலத்திற்காகக் காத்திருப்பதில்லை. திறமையைத் தேடி அடுக்கடுக்காக விரைந்துவருகிறது. திட்டத்தின் பலன் திட்டம் முடியும்வரை காத்திருப்பதில்லை. திட்டம் ஆரம்பித்தவுடன் பலன் கைக்கு வந்துவிடுகிறது. வாழ்க்கை வினோதமானது; வக்ரமானதும்கூட. உன் உழைப்பின் பலனைப் பிறருக்கு அளிக்கவல்லது. எதிரிக்கும் கொடுக்கும் இயல்புடையது. அன்னையின் சக்தி சிருஷ்டிக்கும் திறனுடையது; எதிர்பார்த்ததைவிட

அதிகப் பலனைக் கொடுக்கக்கூடியது. ஒரு சந்தர்ப்பத்தில் கிடைக்கும் அதிகபட்சப் பலனை மேலும் அதிகரிக்கும் திறனுடையது. மனித வாழ்வு, அன்னை வாழ்வாக மாறி, தன் வக்ரபாவங்களை இழந்து, அமுதசுரபியாகித் தன் வாழ்க்கையில் ஒளிச் சிறப்பை நிலைநாட்ட வேண்டுமானால், அன்னையின் முறைகளைத் தன் வாழ்வில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சாதாரண மனிதர்கள் அன்னையிடம் வந்து மகத்தான காரியங்களைத் தங்கள் வாழ்வில் சாதிப்பதை நாம் பார்க்கிறோம். நமக்கு இது வியப்பளிக்கிறது. அன்னையை ஏற்றுக்கொண்டு, அதிகப் பலனடைந்தவர்கள், பல ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லாமலிருப்பதையும் நாம் காண்கிறோம். அன்னைக்கு அருகில் இருப்பவர்களுக்கும் இதுபோன்ற நிலையிருப்பதுண்டு. தன் ஜீவனைத் திறந்து, அது மலர்ந்த நிலையில், அதன் உச்சியில் அன்னையைப் பிரதிஷ்டை செய்தவனுக்கு அளவுகடந்த பெரும்பலன் அதிசயிக்கத்தக்க வகையில் கிடைக்கிறது. தாம் "சாஸ்த்ரோக்தமாகக்'' கடமைக்கு வணங்கும் பல தெய்வங்களின் வரிசையில் அன்னையையும் வைத்தவர்களுக்கும் முதல் பெரும்பலன் கிடைத்தாலும், அடுத்தாற்போல எதுவுமில்லாமல் என்றும்போல் இருந்து விடுகிறார்கள். மனிதர்கள் பலத்தரப்பட்டவர்கள். அவர்களைச் சுமார் 10 அல்லது 20 நிலைகளில் அறிவுக்கும், பண்புக்கும் ஏற்ப வரிசைப்படுத்தலாம். அதேபோல் ஒருவனுடைய ஜீவனும் 10 அல்லது 20 நிலைகளில் அமைகிறது. எளிய காரியங்களை முதல் நிலையிலிருந்து செய்யும் மனிதன், முக்கியமான காரியங்களைத் தன் ஜீவனின் முடிவான நிலையிலிருந்து செய்கிறான். அன்னையை ஒருவர் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளலாம். முடிவான நிலையிலிருந்து செய்யும் காரியங்களை அன்னை முறைப்படி செய்பவர், அன்னையைத் தம் ஜீவனின் சிகரத்தில் ஏற்றுக்கொள்கிறார் என்று பொருள். தம் வீட்டில் 1000 ரூபாய் களவுபோனபின், அறை முழுவதிலும் தேடிவிட்டு, போலீஸில் புகார் செய்துவிட்டு, இரண்டு நாள் கழித்து ஆசிரமத்திற்குத் தெரிவிப்பவர் ஒரு வகையினர்.

ஊரிலிருந்து திரும்பிவந்து ஒன்றரை இலட்ச ரூபாய் நகை களவுபோனதாகக் கண்டு போலீஸில் புகார் செய்வதற்குமுன் ஆசிரமத்திற்குச் செய்தி அனுப்புபவர் மற்றொரு வகையினர். தம் பார்ட்னர் தம்மைக் கலக்காமல் 5 கோடி பெறும் தொழிலை விற்று, பத்திரத்தில் கையெழுத்துப்போட்டு, தாம் ஊரில் இல்லாத சமயம் கிரயத்தை முடித்துவிட்டார் என்று கேள்விப்பட்டவுடன் பதறி, அவரைத் தேடி ஓடி, என்ன நடந்தது என்று கேட்டு, பல ஆயிரம் வகைகளில் மனத்தை அலையவிட்டு, நிலையிழந்தபின் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, அதைப்போன்ற பல காரியங்களைச் செய்துவிட்டு, 10 நாள் கழித்து அன்னைக்குப் பிரார்த்தனை செய்வார். தம் ஜீவனில் முதல் நிலைமையில் அன்னையை ஏற்றுக்கொண்டவர், அந்த செய்தியைக் கேட்டவுடன், பார்ட்னரைத் தேடிப் போகாமல், தம் தியான அறைக்குச் சென்று, நடந்ததையும், கேட்டதையும், நடக்கப்போவதையும் அன்னையிடம் சொல்லி, பொறுப்பையும், பாரத்தையும் அன்னையிடம் கொடுத்துவிட்டுப் பதட்டமில்லாமலும், மலர்ந்த உள்ளத்துடனும், நடக்கவேண்டிய காரியங்களை அது சம்பந்தமாகக் கவனிப்பவர் தம் ஜீவனின் சிகரத்தில் அன்னையை ஏற்றுக்கொண்டவராகும்.

நமக்குத் தேவைப்படும் பொருள் உடனே கிடைக்கவில்லை என்றால் அதற்கு உரியவரைக் கேட்பது நம் பழக்கம். குழந்தைகள் பெற்றோரைக் கேட்கிறார்கள். மனைவி கணவனைக் கேட்கிறாள். தொழிலாளி முதலாளியைக் கேட்கிறான். கேட்பது கிடைத்துவிட்டால் பிரச்சினை முடிந்துவிடுகிறது. கிடைக்காவிட்டால் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. குழந்தைகள் கேட்பதைத் தகப்பனார் சில சமயம் கொடுக்கப் பிரியப்படுவது இல்லை; மனைவி கேட்ட புடவையை கணவன் வாங்கி வரவில்லை; சிப்பந்தி கேட்கும் கடன் தொகையை முதலாளி கொடுக்கவில்லை; அப்படிப்பட்ட நிலையில் மனம் தன் உரிமையைக் கருதும். உரிமையைக் கேட்பதே மனித இயல்பு. அன்னை வழி அது அன்று. அன்னையிடம் சட்டம் வேறு. கொடுக்காத மனிதனைக் கேட்காதே, கொடுக்கும் தெய்வத்தைக் கேள் என்பது

அன்னை வழி. கிடைக்காத பொருளை அன்னையிடம் கேட்டால் கொடுப்பார். தகப்பனார் கொடுக்காத பேனாவை அன்னையிடம் கேட்டால் கொடுப்பார். அதனினும் சிறப்புள்ள மற்றொரு வழியுண்டு. தகப்பனாரைக் கேட்காமல், பேனா வேண்டும்பொழுது அன்னையை மட்டும் கேட்கப் பழகிக்கொள்வது அம்முறை. கேட்பது கிடைக்கும். தேவைப்பட்ட அளவில் வாராது. ஒரு பேனா கேட்டால் 5 பேனாக்கள் கிடைக்கும். மனிதனுடைய தேவையைப் பொருத்த பலனில்லை அது. அன்னைக்கு ஒரு தேவையுண்டு. தன்னை மனித வாழ்வில் வெளிப்படுத்தவேண்டிய தேவை அது. அதற்குரிய பலன் கிடைக்கும். ஓர் அச்சகம் குறித்த நேரத்தில் அச்சிட்டுக் கொடுக்காவிட்டால், அக்கௌண்டண்ட் கணக்கை உரிய நேரத்தில் முடிக்காவிட்டால், எடுத்துப்போன புத்தகத்தை நண்பர் நீண்டநாளாகக் கொடுக்காவிட்டால், சர்க்காரிலிருந்து ஒரு லைசென்ஸ் கிடைக்காவிட்டால், அன்னையைக் கேட்கும் முறையைக் கைக்கொண்டால், காரியம் நேரத்தில் பூர்த்தியாகும். அபரிமிதமாகவும் பூர்த்தியடையும். இதைச் சாதிக்கத் தேவைப்பட்டவை இரண்டு. அன்னையால் நாம் கேட்பதைக் கொடுக்க முடியும் என்று பூரணமாக நம்புவது ஒன்று. பிறவியிலிருந்து கேட்டுப் பழகிய பழக்கத்தை மனம் உவந்து மாற்றுவது மற்றது. இது கடினம். கடினமாக இருந்தாலும், முயன்று வெற்றி பெறுதல் நலம்.

மேலும், அன்னையை எந்த நிலையில் ஏற்றுக் கொள்கிறோம் என்பதும் முக்கியம். எந்த நிலையில் அன்னையை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோமோ, அந்த நிலை வரைக்கும் இந்தச் சட்டம் பலிக்கும். கேட்பதைக் கொடுக்கும் முதல் நிலையிலும் அன்னையை ஏற்றுக்கொள்ளலாம். சுபாவத்தையே பூரணமாக மாற்றும் முடிவான நிலையிலும் அன்னையை ஏற்றுக்கொள்ளலாம். இடையேயுள்ள 10 அல்லது 12 நிலைகளில் ஒன்றிலும் அன்னையை ஏற்றுக்கொள்ளலாம்.

நம்பிக்கை பலத்திறப்பட்டது. அறிவுக்குரியது, உணர்விற்குரியது, செயலுக்குரியது என அவற்றைப் பாகுபாடு செய்யலாம். பகவான்

ஸ்ரீ அரவிந்தர் கல்யாணச் சிரத்தை என்ற ஒரு வகை நம்பிக்கையைக் குறிப்பிடுகிறார். ஒருவகையான உயர்ந்த நம்பிக்கை அது. ஒரு கெடுதல் நடந்த காலத்தில், அதன் பின்னணியில் மறைந்துள்ள தெய்வீக அருளை உணர்ந்து, கண்ணெதிரில் உள்ள நஷ்டத்தைப் பொருட்படுத்தாமல், கண்ணுக்குத் தெரியாத எதிர்காலத்துப் பலனை அறியும் நம்பிக்கையை ஸ்ரீ அரவிந்தர் கல்யாணச் சிரத்தை என்றழைக்கிறார்; வியாக்கியானத்தைக் கேட்டுக் கொள்வது சுலபம். பையன் பரீட்சையில் தவறிவிட்டான்; அற்புதமான மகள் அடிமடையனை உயிர்போல் விரும்புகிறாள்; பார்ட்னர் சாமர்த்தியமாகப் பல இலட்சங்களை ஏமாற்றிவிட்டார்; தீராத வியாதி வீட்டுக்குள் வந்துவிட்டது என்றால், வியாக்கியானம் வந்தவழியே போய்விடும். கல்யாணச் சிரத்தை மறந்துவிடும். இதுபோன்ற சமயங்களில் கல்யாணச் சிரத்தையை மனம் நினைத்து, தம்மைத் தேற்றிக்கொள்பவர் சிறந்தவர். தவம் பலித்தவர்களில் எத்தனை பேர் இந்தப் பரீட்சையில் தேறுவார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. பல முறை நம்மிடம் உதவி பெற்ற நண்பர், ஒரு முறை நமக்கு உதவ நேரும்பொழுது தயக்கப்படுகிறார் என்ற எண்ணம் தவறாமல் எரிச்சலை உற்பத்தி செய்யும். கல்யாணச் சிரத்தை காற்றில் போய்விடும். பல ஆண்டுகள் மனதை உறுத்தும். நமக்கு நேர்ந்த பாதகத்தைச் சொல் ஆறுதல் பெற நண்பரை அணுகியவுடன், நண்பர் நமக்கு நடந்தது சரி என்று நினைப்பதைப் புரிந்துகொண்டால், நம் மனம் நண்பரை மன்னிக்க ஒரு தவம் செய்யவேண்டும். வாய் ஓயாது அவரைத் திட்டும். வாயால் திட்டாவிட்டால், மனம் தவறாமல் அவரைக் கரித்துக்கொட்டும். அன்னையை ஏற்றுக்கொள்ளுதல் என்றால், அவர் சட்டங்களை ஏற்றுக்கொள்ளுதல் என்றாகும். அன்னையின் சட்டங்கள் அனைத்தும் கல்யாணச் சிரத்தைபோலவே இருக்கும்.

அருள் செயல்படுவதுண்டு. தனக்கேயுரிய பெருமையால் மனிதன் அன்னையைத் தன் ஜீவனின் சிகரத்தில் அனுமதிப்பதுண்டு. அது ஒரு க்ஷணமானாலும், அன்னை தாமதிக்காமல்

செயல்பட்டுவிடுவார். நடந்த காரியம் முடிந்தபின்னும் அதை நம் மனம் ஏற்றுக்கொள்ளத் திணறும். ஒரு பொதுத் தொண்டர் 25,000 ரூபாயில் ஒரு திட்டத்தை மேற்கொள்ள முயன்று வெற்றி பெற்றார். திட்டம் 63,000 ரூபாயில் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு 8 இலட்சத்திற்கு விரிவுபடுத்தப்பட்டது. பணத்தைப் புறக்கணித்துவிட்டு, திட்டத்தின் எல்லா அம்சங்களையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டுமானால், என்ன செய்ய வேண்டும் என்று விளக்கமாகக் கருதியபொழுது, ஒரு கோடி ரூபாய் தேவைப்படும் என்று புரிந்துகொண்டார். இந்தத் திட்டத்தின் எல்லாச் சிறப்பு அம்சங்களும் நாடு முழுவதும் பெறவேண்டுமானால் சுமார் 100 இடங்களில் இதை நிறைவேற்ற வேண்டும். அதற்கு ரூ.100 கோடி தேவைப்படும் என்று தெளிவாயிற்று. தெளிவே பலன் என்று ஊழியர் தெளிந்துவிட்டார். கொஞ்ச நாள் கழித்து உலகத்தில் ஒரு பெரிய நிறுவனம் இதுபோன்ற திட்டங்களை நாடிவருகிறது. அது பொது ஸ்தாபனமானதால், பொதுநல ஊழியர்களைத் தேடுகிறது என்ற நிலை ஏற்பட்டு, அந்த நிறுவனத்தில் பணத்தை வழங்கும் அதிகாரி ஒருவர் இந்த ஊழியரைத் தேடிவந்தார். இவரது திட்டங்களைப் பரிசீலனை செய்தார்; திருப்தி அடைந்தார். "உங்கள் திட்டங்களை 300 அல்லது 400 கோடி அளவுக்கு விரிவுபடுத்துங்கள். தேவையான பணம் முழுவதையும் கொடுக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்'' என்றார். ஊழியர் அன்னையின் வெளிப்பாட்டை ஆயிரம் இடங்களில் பார்த்தவர். உடனே இது அன்னையின் செயல் என உணர்ந்தார். ஊழியரின் ஸ்தாபனத் தலைவரும் அன்னையின் அன்பரே. ஆனால் அன்னையின் வெளிப்பாட்டைப் பார்த்தறியாதவர். ஊழியருடைய சிறப்பால் வெளிவந்த அன்னையின் சக்தி, தலைவருடைய அவநம்பிக்கையால் செயல் திறனிழந்தது.

24 வயதில் தான் பெற்ற பெரிய பட்டம் தன் பிற்பட்ட வகுப்பில் தன் திருமணத்திற்குத் தடையாக இருப்பதை உணர்ந்த பெண் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள். தடையான பட்டம் நிலைமை மாறித் தகுதியாகிவிட்டது. அந்தத் தகுதியை நாடியே சில உயர்ந்த

வரன்கள் அவளைத் தேடிவந்தனர். நூறு கோடி சொத்துள்ள குடும்பத்திலிருந்து ஒரு வரன் வந்தது. சர்க்கார் வேலையில், வேறு சொத்தில்லாத நிலையில், தனக்கு வந்துள்ள சம்பந்தத்தின் உயர்வால் மனம் சுலபமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அன்னை செயல்பட்டு அரியது நடந்தது. மனத்தின் தயக்கம் தடையாகிவிட்டது.

நெகிழ்ந்த மனமுடைய தொழில் அதிபர் அன்னையைத் தரிசித்தார். அவர் மனத்தின் நெகிழ்ச்சி அன்னைக்குப் பூரிப்பைக் கொடுத்தது. அன்னை அரை நிமிஷம் மலர்ந்தார். அதிபரின் வாழ்வு அளவுகடந்து மலர்ந்துவிட்டது. அரை கோடி செலாவணியுள்ள அவரைத் தேடி 800 கோடி திட்டம் வந்து, தானே அடுத்த, அடுத்த கட்டத்தில் பூர்த்தி செய்துகொண்டது. கண்ணுக்கு நேரே காரியம் பூர்த்தியாவதைப் பார்த்தாலும், "பகுத்தறிவு'' இது எப்படி நடக்க முடியும்? என்ற பல கேள்விகளை எழுப்பி, அத்துடன் முடித்துவிட்டது.

இராமபிரான் மணல் ஊன்றிய பாணத்தால் பாதிக்கப்பட்ட தேரையை, "ஏன் என்னிடம் சொல்லவில்லை?'' என்று கேட்டதற்கு, "சகலமும் இராமனே என்ற வாழ்க்கையை மேற்கொண்ட எனக்குச் சிரமம் இராமனிடத்தே இருந்து வந்தபொழுது, என்ன செய்வது என்று தெரியவில்லை'' என்று தேரை பதிலளித்ததாகப் புராணம். பணமும், பதவியும் தேவையில்லை, மக்களே தேவை என்று தொண்டு செய்த காமராஜர், மக்கள் கைவிட்ட சமயத்தில் அடுத்தாற்போல் என்ன செய்வது என்று தெரியாமல் இராமபாணத்தால் வதைபட்ட தேரை போலிருப்பதாகச் சொன்னார். பவித்தரமான தொண்டு செய்த தலைவரையும் மக்கள் கைவிடுவார்கள். குடும்பத்திற்கே சர்வபரித்தியாகம் செய்தவரைக் குடும்பம் சுயநலத்தாலும், துரோகமான மனப்பான்மையாலும், காரியவாதத்தாலும் கைவிடுவதுண்டு. கடமையைச் சிறப்பாகப் பூர்த்தி செய்த வாலிபனைப் பற்றிய ஆங்கிலச் செய்யுள் உண்டு. தீயினால் சூழப்பட்ட நிலையிலும், கடமையை மட்டும் கருதிய இளைஞன் அவன், தீக்கிரையானான். கடமையுயர்ந்தது; அதை நிறைவேற்றுவது சிறந்தது; ஆனால் அதுவும் ஒரு காலத்தில்

கைவிடுவதுண்டு. இரண்டாம் உலக மகாயுத்தத்தில் எல்லா நாடுகளும் ஹிட்லருக்குச் சரணடைந்தபின்னும் சர்ச்சில் தன் அபாரத் தைரியத்தாலும், நாவன்மையாலும், தனி மனிதராக நின்று, இங்கிலாந்தையும், உலகத்தையும் காப்பாற்றினார். 1945-இல் யுத்தம் முடிந்தது. அடுத்து உடன் வந்த தேர்தல் சர்ச்சில் தோற்கடிக்கப்பட்டார். தேசபக்தி, கடமையுணர்ச்சி, வீரம் ஆகியவற்றைவிடச் சிறந்தவை உலகிலில்லை. ஆனால், அவையும் கை விரிக்கும் நிலையுண்டு. தருமபுத்திரனைத் தருமம் கை நழுவவிட்டது. அன்பிற்காக அனைத்தையும் துறந்தவரை அன்பைப் பெற்றவர் துறந்ததுண்டு. அந்த நிலையில் அவர் விரக்தியடைந்தார். போகும் வழி தெரியவில்லை. இவையெல்லாம் வாழ்க்கையில் நாம் காண்பவை. அவர்களுக்கு வந்த ஏமாற்றம் பெரியது.

அன்னையின் அன்பர்கள் அதுபோன்ற நிலையிலிருந்தால், அதாவது கடமையைப் பூர்த்திசெய்து கடமையால் கைவிடப்பட்டால் அன்னை அவர்களுக்குப் புகலிடம் அளிக்கின்றார். கடமை கைவிட்டாலும், அன்னை கைவிடமாட்டார். கடமையை நிறைவேற்றிப் பூர்த்தி செய்ய முடியாத ஒன்றை, அன்னையை ஏற்றுக்கொண்டு பூர்த்தி செய்யலாம். தகப்பனாரைத் தெய்வமாக நடத்திய மகனை உதறித் தள்ளிவிட்டு, எவளோ ஒருத்தியின் பின்னால் போனவருண்டு. மகனின் தெய்வீக அன்பைப் பாராட்டாமல், ரேஸுக்குப் போனவருண்டு. மகளுடைய உயர்ந்த பாசத்தை, ஆதாயமாகக் கருதிய தகப்பனார் உண்டு. தகப்பனாரிடம் கிடைக்காத பரிசு, அந்த மகனுக்கு அன்னையிடம் கிடைக்கும். தகப்பனாரை வைத்த இடத்தில் அன்னையை வைத்தவர், "இத்தனை ஆண்டுகளாகத் தகப்பனார் கொடுக்காத மனநிம்மதியையும், சந்தோஷத்தையும், ஆதரவையும் அன்னை இன்று கொடுக்கிறார். மனித அன்பு தகப்பனாரிடமிருந்து அன்று கிடைக்கவில்லை. தெய்வீக அன்பு அன்னையிடமிருந்து இன்று கிடைக்கிறது'' என்றார்.

கடமை, பொறுப்பு, பாசம், அன்பு, நாணயம், நல்லொழுக்கம் ஆகியவை உயர்ந்தவை. இவற்றைப் பிரதானமாக வாழ்க்கையில் ஏற்றுக்கொள்பவர்கள் நடமாடும் தெய்வம். அன்னையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு அதைவிட உயர்ந்த வழிமுறையை அன்னை காண்பிக்கின்றார். கடமை போன்ற உயர்ந்த பண்புகளை முடிவாகக் கருதாமல், அன்னையை மட்டுமே முடிவாகக் கருதி, அன்னையின் அருளை வெளிப்படுத்தும் கருவிகளாகக் கடமை ஆகியவற்றைக் கருதினால், கடமை அன்னை வழியில் தெய்வீகமாகப் பூர்த்தியாகும். தருமபுத்திரனுக்கும், மீராவுக்கும் ஏற்பட்ட அவலநிலை நமக்கு ஏற்படாது. அவற்றால் நம்மைக் கைவிட முடியாது. ஏனென்றால், அவற்றை நாம் முடிவாகக் கொள்ளவில்லை. அன்னை எனும் முடிவை எட்டும் கருவிகளாகக் கொண்டுள்ளோம்.

திட்டமிட்டுக் காரியங்களை முறையாகவும், ஒழுங்காகவும், வெற்றிகரமாகவும் பூர்த்தி செய்வதை வாழ்க்கைப்பாணியாகக் கொண்டவரை அன்னை பெரிதும் பாராட்டுவார். அவரும் அன்னையை ஏற்றுக்கொண்டபின், தம் உயர்ந்த திறமையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக அன்னையைப் பின்பற்றினால், அவரது அடுத்த திட்டத்தை இதுவரை செய்த முறைகளை ஒதுக்கி ஆத்ம சமர்ப்பணத்தால் மட்டும் பூர்த்தி செய்தால், பள்ளிக்கூடம் கட்டப்போய், பல்கலைக்கழகம் உருவானதுபோல காரியம் நடக்கும். திட்டமிட்டுச் செயல்படுதல் உயர்ந்தது. அன்னைக்குப் பிரியமானது. ஆத்ம சமர்ப்பணம் அதைவிட உயர்ந்தது. திட்டத்தின் திறனைத் தன்னுள் கொண்டது.

கஷ்டம் வந்த காலத்தில், மற்றவை கைவிட்ட பின்னர், அன்னையை ஏற்றுக்கொள்வது ஒரு வகை. பிரச்சினையே இல்லாத நேரம், பகுத்தறிவைப் புறக்கணித்து அன்னையை ஏற்றுக்கொள்ள முன்வருதல் மற்றொரு வகை சிறப்புடையது. அன்பர் ஒருவருடைய பிறந்தநாள், தரிசனத்திற்கு இரண்டு நாள் முன்னதாக இருந்தது. வெகு தூரத்திலிருந்து வரும் அந்த அன்பர் ஒரு நாள் ஆசிரமத்தில்

தங்க 3 நாட்கள் விடுமுறை பெற வேண்டும். தரிசனத்திற்கு அல்லது பிறந்தநாளைக்கு மட்டுமே ஆசிரமம் வர முடியும். இரண்டுக்குமாகச் சேர்ந்துவர லீவு எடுக்க முடியாது. பகுத்தறிவின் விளக்கம் தெளிவானது. அன்பர் அன்னையை ஏற்றுக்கொள்ள விரும்புகிறார். என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவில்லை. அன்னையை ஏற்றுக்கொள்ளுதல் என்றால், இதை அன்னையால் செய்ய முடியும் என்று நம்புவதுடன், பிரச்சினை நினைவுக்கு வரும்பொழுதெல்லாம், பிரச்சினையை ஒதுக்கி, அன்னையை மட்டுமே நினைக்க வேண்டும். அன்பர் அம்முறையை ஏற்றுக்கொண்டார்.

அவர் பிறந்தநாளன்று, நாட்டில் தேர்தல் வந்தது. தேர்தலுக்குப் பணி செய்ய இவர்கள் ஸ்தாபனத்திலுள்ள அனைவரையும் அழைத்திருந்தார்கள். அன்பர் நம்பிக்கையை இழக்கவில்லை. தம் முறையைத் தொடர்ந்தார். அவரது பிறந்த நாளைக்கு முன் 2 நாட்களையும், தரிசனத்திற்குப் பின் 2 நாட்களையும் தேர்தல் வேலைக்காக ஸ்தாபனத்தில் விடுமுறை நாட்களாக்கிவிட்டார்கள். தேர்தல் பணி பட்டியல் வந்தது. ஒருவர் தவறாமல் அழைக்கப் பட்டிருந்தனர். இவருக்கு உத்தரவு வரவில்லை. ஆபீஸுக்குப் போய் தாம் எங்கு போகவேண்டும் என்று கேட்டார். அவருடைய பெயர் விடுபட்டதாக அறிந்தார். பகுத்தறிவு பொய்த்தது. பூரண நம்பிக்கை பிறந்தது. அத்துடனில்லை, அந்த ஆண்டிலிருந்து தொடர்ந்து எல்லா வருஷங்களுக்கும் அவரால் பிறந்த நாளைக்கும், தரிசனத்திற்கும் தவறாமல் வர முடிந்தது.

அன்னையும், பகவான் ஸ்ரீ அரவிந்தரும் செய்த யோகம், அவர்களுக்காகவோ, உலகத்திற்காகவோ அன்று. இறைவனின் திருவுள்ளத்தைப் பிரபஞ்சத்தில் பூர்த்தி செய்யவே அவர்கள் முனைந்தார்கள். பூரண யோகம் இறைவனது யோகம். மனிதன் செய்யக்கூடியதன்று. மனிதனால் செய்யக்கூடியது சரணாகதி மட்டுமே. வாழ்வனைத்தும் யோகம் என்ற இலட்சியத்தை ஏற்றுக்கொண்டு ஓர் ஆசிரமம் நிறுவி நம்மிடையே சுமார் ஒரு நூற்றாண்டு வாழ்ந்து

ஆன்மீகப் பணியாற்றினாரெனினும், அவர்களது யோகப் பணிக்கு மனித உதவியை அவர்கள் நாடவில்லை. எந்த நிபந்தனையுமின்றி உலகில் வந்து, எந்தச் செய்தியையும் சொல்லாமல் உலகை விட்டுப் போய்விட்டனர். அவரது பொன்னொளியை மனிதன் விரும்பி ஏற்றுக் கொண்டிருந்தால், அவரது யோக இலட்சியம் பூர்த்தியாயிருக்கும் என்பது உண்மை. ஆனால் அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை. மனிதன் அன்னையிடம் எதைக் கேட்கலாம் என்ற கேள்விக்கு, அன்னை எதையும் கேட்கலாம் என்றார். மனிதனிடம் அன்னை எதை எதிர்பார்க்கின்றார் என்ற கேள்விக்குப் பதிலாக எதையும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

இருப்பினும், அன்னை மனிதனை இடைவிடாது தேடிவருகிறார். அவனுடைய இருளை அன்னை பொருட்படுத்துவதில்லை. கடந்த காலப் பாவங்களை அன்னை கருதுவதில்லை. கர்மத்தையே அன்னை புறக்கணிக்கின்றார். இன்று மனிதன் சத்தியத்தை நாடினால் அன்னை மனிதனை நாடுகிறார். இருளையும், பாவத்தையும், கர்மத்தையும் புறக்கணித்து சத்தியத்தை நாடும் ஒரே காரணத்தால் அன்னை மனிதனை ஏற்றுக்கொள்கிறார். அன்னை நம்மில் பொருட்படுத்தாத குறைகளை, நாம் விலக்க முன்வர வேண்டும். அன்னை நம்மை ஏற்றுக்கொண்டதுபோல், நாம் அன்னையை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் நம் குறைகளைப் புறக்கணித்து, அன்னையை ஏற்றுக்கொண்டால், நம்மால் சமாளிக்க முடியாத குறைகளை அன்னை நம்மிடமிருந்து விலக்குகிறார். தம் தவயோகப் பணிக்கு மனித ஒத்துழைப்பு தேவையில்லை என்றாலும், மனிதனை நாடி, அவன் சத்திய தாகத்தைப் போற்றி, அவனுள் எழும் ஆர்வக் கனலை ஏற்று, அவனை இறைவனாக்கும் பணிக்கு அழைத்துச் செல்ல அன்னை விழைவதால், நம் குறைகளையும், இருளையும், பாவத்தையும், கர்மத்தையும், குணக்கேடுகளையும், சுபாவத்தையும், தர்மத்தையும் புறக்கணித்து நாம் அன்னையை ஏற்றுக்கொள்ள முன்வருதல் சிறப்பு.

******



book | by Dr. Radut