Skip to Content

கடன்

வாங்கிய பணத்தைத் திருப்பித் தருமுன் அது கடனாகிறது. எப்பொருளை வாங்கினாலும் அது கடன் பட்டதாகும் என்றாலும், கடன் என்ற சொல் வழக்கில் வாங்கிய பணத்திற்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுகிறது. நான் எவருக்கும் கடன் பட்டதில்லை என்று பெருமைப்படுவது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற சொல்லி கடன் ஏற்படுத்தும் மனச்சுமையைக் குறிக்கிறது. சாக்ரடீஸ் மரணப் படுக்கையிலிருக்கும் பொழுது அருகிலிருந்த நண்பரிடம், தம் சார்பில் அண்டை வீட்டாருக்கு ஒரு கோழியை திருப்பித் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கடன் உள்ளவரை உயிர் போகாது. மானத்தைக் காப்பாற்றுவது கடனைத் திருப்பித் தரும் செயலாகும். அன்றாடச் செயலாக வாங்கும் கடனைக் கைமாற்று எனவும், நீண்ட காலத் தவணைக்கு வாங்கும் பெருந்தொகையை, பொதுவாக ஈட்டின்பேரில் வாங்குவதைக் கடன் என்பதும் வழக்கு. கடன் பெற்றவருக்கு ஒரு காலகட்டத்தில் கடனைத் திருப்பித்தர இயலாது என்று புரியும்பொழுது, அது சுமையாகிறது. கடன்சுமை பொதுவாக, தீராதகடனாக மாறி, நாளாவட்டத்தில் கடன்காரன், திவாலாகிறான். அசலும், வட்டியும் சேர்ந்து ஈடு வைத்த சொத்தின் மதிப்பைத் தாண்டும் நிலையில், இனி செய்வதற்கு ஒன்றில்லை என்ற நிலை ஏற்படுகிறது. அந்த நிலை ஏற்பட்டுவிட்டால், இனி ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்பதுண்டு. அந்த நிலையும் ஒரு கட்டத்தைத் தாண்டிவிட்டால் இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்பது தெளிவாகும். ஆண்டவனாலும் முடியாது என்று மனிதன் தொன்றுதொட்டு உணர்ந்த விஷயங்களையும் முடியும் என்ற ஒரு புது நிலையை, அன்னை உலகில் ஏற்படுத்தியிருக்கிறார்.

தீராத வியாதிக்குப் புதுமருந்து வந்திருக்கிறது என்றால் அந்த மருந்தின் பலனைப் பெற ஒரு மனித முயற்சி தேவை. உனக்கு வேண்டிய முதலை நீயேதான் சேகரம் செய்ய வேண்டும் என்ற உலகில் முதலில் கொடுத்துதவ ஒரு திட்டம் வந்தாலும், திட்டத்தின் பயனைப் பெற ஒரு முயற்சி வேண்டும். ஹைஸ்கூல் படிப்புக்கு வெளியூர் செல்ல வேண்டும் என்ற நிலையுள்ள ஊரில் கல்லூரிப் படிப்பு வாயிற்படிக்கு வந்தாலும், அந்தப் படிப்பையும், பட்டத்தையும் பெற மாணவனுக்கு முயற்சி வேண்டும். உலகில் இல்லாத ஒரு சக்தி மனித முயற்சியை நிறைவுபடுத்த வந்துள்ளது என்றாலும், முயற்சியே இல்லாத மனிதனுக்கு அது பயன்படாது. இந்தப் புதுசக்தியை பயன்படுத்துபவர்களுக்கு தீராக்கடன் என்பதில்லை. கடனுடைய நிலை என்ன, அளவு என்ன, வரலாறு என்ன, அதிலுள்ள சிக்கல்கள் எவ்வளவு என்பவை பெரிதல்ல. விஸ்வரூபம் எடுத்துள்ள கடனைத் தீர்க்க ஒரு வழியுண்டு, புது அருளுண்டு என்றால், அதைப் பெற முழுமுயற்சி செய்யத் தயாரான அனைவருக்கும் அதனால் பலனுண்டு. இலட்ச ரூபாய்க்கு வாங்கிய சொத்தின்மீது 2, 3, 4 இலட்சம் கடன் ஏற்பட்ட நிலையில் கடன் பெற்றவர், விழித்துக்கொண்டு புது வழியை மேற்கொண்டு முழுக் கடனையும் திருப்பி அடைத்ததுடன், அந்த சொத்தின் மதிப்பு அடுத்த 10 ஆண்டுகளில் 21 மடங்கு உயர வழி செய்தார். உலகத் தொழில்சரித்திரத்திலேயே (Industrial History) அதிகபட்ச (Record) கடன் பெற்றது ஒரு கம்பெனி. அப்படி அது பெற்ற ரூ.1,700 கோடி கடனை அந்தக் கம்பெனி எடுத்துக்கொண்ட முறையான முயற்சிகளால் 3 வருஷத்தில் அடைத்துவிட்டு ரூ.1,700 கோடி இலாபமும் எடுத்தது. நடைமுறையில் சிறிய அளவிலும், பெரிய அளவிலும் பலன் தந்த இந்த முறையையும், அன்னையின் அருளின் சிறப்பையும் மனித மனப்பாங்கின் அடிப்படையில் விளக்க முற்படும் கட்டுரை இது. மனிதனுடைய குறையால் ஒரு காரியம் கெட்டுப்போனால், கெட்டுப்போன காரியத்தைத் தடுத்து நிறுத்தி, ஆபத்தை விலக்க முற்பட்டால் அதற்கு ஒரு வரையறையுண்டு. அந்த வரையறையைக் காரியம் தாண்டிச்

செல்லுமுன் எடுக்கும் அசுர முயற்சிகள் பலன் அளிக்கும். அந்த நிலையைத் தாண்டிவிட்டால், அக்காரியத்தை காப்பாற்ற உலகில் இன்று ஒரு சக்தி இல்லை, ஆண்டவனாலும் முடியாது என்ற நிலை ஏற்படுகிறது. அதன்பின் செய்யும் பரிகாரம் கண் கெட்டபின் செய்யும் சூரிய நமஸ்காரமாகும். அதன்பின்னும், இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்ட பின்னும் மனிதன் முன்வந்து செயலால் கெட்டுப் போனவற்றை மனதால் சீர்படுத்த முன்வந்தால், கண் கெட்டபிறகு செய்யும் சூரிய நமஸ்காரம் கண் பார்வையை அளிக்கும் என்பதற்கொப்ப, நிலைமை சீர்திருந்தும், கடன் கரையும் என்பது இம்முறையின் சிறப்பு. அன்னையின் அருளுக்குரியது.

கடனைக் கரைக்கும் வழியை விளக்குமுன், ஒரு மனப்பான்மையை நாம் சிறிது விவரமாகக் கருத வேண்டும். கடன்பட்டு ஒருவர் கஷ்டப்படுவதைப் பார்க்கும்பொழுது ஏற்படும் எண்ணங்கள் பல. அவற்றுள் தலையானது, "கடன் பெறுதல் தவறு. அந்தத் தவற்றைச் செய்தவன் அதற்குரியதை அனுபவிக்கின்றான். உயிர் போனாலும் நான் கடன் வாங்க மாட்டேன்'' என்ற நினைவு பலருக்கு வருவதுண்டு. இது சிறந்த எண்ணம். கடன் வாங்கி ஊதாரிச் செலவு செய்தவர்களே அதிகம் என்பதால் கடன் தவறு என்று நினைப்பவர்களுக்கு இதுபோன்ற ஊதாரிகளே நினைவுக்கு வருவதால், கடனையும், ஊதாரித்தனத்தையும் சேர்த்து பார்ப்பது இயல்பு. கடமைகளை நிறைவேற்றக் கடன் வாங்கிப் பின் சிரமப்படுபவர்களும், கடன் என்று வாங்கிவிட்டால் பிறகு தொல்லை வரத்தானே செய்யும் என்றுகருதி கடன் பெறுவதே தவறு என்ற முடிவுக்கும் வந்துவிடுகின்றனர். எனவே, இந்தக் கருத்தில் எந்த அளவு உண்மையிருக்கிறது என்று சோதனை செய்யவேண்டும். ஊதாரித்தனம் தவறு என்பதையும், கடன் பெற்று அதை நிறைவேற்றுவது பாவம் என்பதையும் மறுக்க முடியாது. கடன் பெற்றுக் கடமைகளை நிறைவேற்றுவது தவறா என்ற கேள்வி எழுந்தால் கடன் தவறு என்று நினைப்பவர்கள், "கடமையை நிறைவேற்றக் கடன் வாங்கியபின், நீங்கள் அதை மறந்துவிடுகிறீர்கள். திருமணத்திற்காகக்

கடன் வாங்கினால் இரண்டு குழந்தைகள் பிறக்கும்வரை அது நினைவுக்கு வாராது. வட்டி வளர்ந்து வரும், வட்டி கட்டும் நினைவேயிருக்காது. கடனையே கொடுக்கமுடியாது என்பவருக்கு வட்டியும் சேர்த்து எப்படிக் கொடுக்கமுடியப்போகிறது? எனவே, அசலும் வட்டியும் இருக்கும் சொத்தை அபகரித்துவிடும். அப்படியானால் எது கடமை? திருமணம் செய்வது கடமையா? சொத்தைக் காப்பாற்ற வேண்டியது கடமையா? கடன் வாங்கியவர்களில் பெரும்பாலோர் நெறியாக இருந்து காலத்தில் வட்டியைக் கட்டி, வருடா வருடம் அசல் ஒரு பகுதியைக் கட்டுவதில்லையா? அப்படி ஒருவர் இருந்தால் ஏன் அந்தச் செலவை அதேபோல் பணம் சேர்த்து செய்யக்கூடாது? கடன் என்று வாங்கினால், சொத்துக்கு ஆபத்து. எனவே கடனே தவறு'' என்று சொல்வார்கள். அவர்கள் கூற்றின் உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளலாம். முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், கடன் என்ற தத்துவம் சமூகத்தில் ஏற்பட்டிராவிட்டால், இன்றுள்ள சமூகமும், நாகரீகமும், நகர வாழ்க்கையும், அரசியல் அமைப்பும் ஏற்பட்டிருக்க முடியாது. உலகத்தில் செல்வர் நாடாக விளங்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை இன்றுள்ள நிலைக்குக் கொண்டுவந்தது அயல்நாட்டுப் பணம், கடனாக வந்ததால்தான். முதல் மகாயுத்தம்வரை அமெரிக்கா கடனாளியாக இருந்தது. இன்றும் உலகத்திலேயே அதிகமாக கடன்பட்டநாடு அமெரிக்காதான். இதில் உள்ள இரகசியம் எளிதானது. செல்வம் உள்ளவனுக்கே கடன்கொடுக்க பலர் பிரியப்படுகின்றனர். ஏழைக்குக் கடன் கிடைக்காது. சொத்துள்ளவனுக்கே கடன் எளிதில் கிடைக்கும். எதற்காகக் கடன் வாங்குகிறோம், எப்படிச் செலவு செய்தோம் என்ற மனநிலை சிறப்பாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம். தவறு மனநிலையில் இருக்கிறதேதவிர நம் செயல் இல்லை. செயல் கருவி, மனநிலை கர்த்தா. எல்லா நல்ல கருவிகளையும் தவறாகப் பயன்படுத்தலாம். அது மனிதனைப் பொருத்தது. நல்லதும், கெட்டதும் மனப்பாங்கைப் பொருத்தது, செயல் இல்லை. எல்லோரும்

சொல்வதைப்போல் கருவிக்கும் ஒரு குணம் உண்டு. இரும்பு பிடித்தவன் கை சும்மா இருக்குமா? அதுபோல் கடன் என்ற கருவிக்கும் ஒரு குணம் உண்டு. வாங்கியபின் கொடுக்க முயற்சியிருக்காது. அதனாலேயே கேட்காத கடன் கெட்டது, பார்க்காத பயிர் கெட்டது என்ற மொழி. கருவியே ஆனாலும் கடனுடைய குணம் மனிதனைத் தவறு செய்யச் சொல்லும் என்பது உண்மை. கல்லூரிப் படிப்பு உயர்ந்தது. கல்லூரிக்குப் போய்ப் புதிய பழக்கங்களைப் பெறாதவர் குறைவு. புதியவை, இவையெல்லாம் வரத்தான் செய்யும் என்பதால் கல்லூரியே தவறு என்று நாம் முடிவு செய்வதில்லை. கடனுடைய தவறான குணத்தைச் சொல்வதுபோல், கடன் சமூகத்திற்குச் செய்யும் சேவையையும் கொஞ்சம் நாம் கருத வேண்டும்.

நாகரீகம் என்று நாம் சொல்வது பல அம்சங்களைக் கொண்டது. ஆதிமனிதன் உடுக்கவில்லை. அவனுக்குப் பேச்சு கிடையாது. மிருகங்கள்போல் சத்தமிடுவான். இருக்க இடமில்லை; உறவு என்பதில்லை; உழைப்பு மிகுதி. கால் குத்திய முள் புரையோடினால் சாவதைத் தவிர வேறு வழியில்லை. புயலாலும், வெள்ளத்தாலும் அவன் ஆயிரக்கணக்காக, புழுப்போல் அழிக்கப்பட்டான். அவனைக் காட்டுமிராண்டி என்றோம். நாகரீகம் வந்தபின், இருக்க இடம், உடுக்க உடை, கருத்துகளை வெளியிடப் பேச்சு, பாஷை, குடும்பம், அதற்குள்ள உறவு என்பவை ஏற்பட்டன. கடின உழைப்பை மாற்றி, கல்வியால், அறிவால், வாழ்க்கையை எளிதாக்கிக் கொண்டான். எந்த வியாதி வந்தாலும், அதிலிருந்து தப்பிக்கும் உபாயங்களைக் கண்டுகொண்டான். புயலாலும், பூகம்பத்தாலும், வெள்ளத்தாலும் பாதிப்பதிலிருந்து பேரளவுக்குத் தப்பித்துக்கொண்டான். எனவே சுத்தம், சுகம், திறன், சுமுகம், உறவு, இனிமை, ஆகியவை நாகரீகம் எனப்படுகின்றன.

குடும்பம் என்று ஏற்பட்டது சமூகத்தின் உயர்வைக் காட்டுகிறது. தனி மனிதனுடைய சுயநலம் குடும்பத்தின்

சுயநலமாகும்பொழுது, மனிதன் ஓரளவு சுயநலத்தைவிட்டுத் தன்னலமற்ற மனத்தைப் பெறுகிறான். எந்த அளவுக்கு மனிதன் சுயநலத்தை விட்டுக்கொடுக்கின்றானோ அந்த அளவுக்கு நாகரீகம் வளர்ந்ததாகக் கருதுகிறோம். அதற்கடுத்த கட்டத்தில் நாகரீகம் வளர ஊர் முழுவதும் ஒரே குடும்பமாகக் கருதப்பட வேண்டும். அந்தக் கட்டத்தை நாகரீகம் எட்ட உதவியது கடன் என்னும் கருவி; அதுவே அதன் சமூக நாகரீகச் சிறப்புள்ள முக்கியத்துவம்.

இன்று ஒருவர் அறிவை மற்றொருவருக்குக் கொடுக்க முடியாது. அதற்கான வழிவகையில்லை. பணம் என்பது ஏற்படும்முன் ஒருவர் உழைப்பின் பலனை அடுத்தவர்க்குக் கொடுக்க முடிந்ததில்லை. உழைப்பால் உற்பத்தியான பொருள்கள் பெரும்பாலும் உணவுப் பொருள்கள். அவை பெரும்பாலும் அழியக்கூடியவை. காய்கறி, பழவகைகள், தான்யம், ஆகியவற்றை உற்பத்திசெய்து சாப்பிடலாம். உபரியானவற்றை அடுத்தவர்க்கு அப்பொழுது கொடுக்கலாம். உழைப்பின் பலனான பொருளைப் பல ஆண்டுகள் சேமித்து வைக்க இயலாது. அதனால் உபரியானவற்றிற்கு நெடுநாளைய பலன் கிடைக்காது. பணம் ஏற்பட்டபின் பொருளைப் பணமாக மாற்ற முடிந்தது. பொருள் உழைப்பின் பலன். அதைப் பணமாக்கினால் பல ஆண்டுகள் சேமித்து வைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.

ஒரு குடும்பத்தாருடைய பயிர் ஒரு மகசூல் பலனில்லாமல் போய்விட்டால், அடுத்த மகசூல் கைக்கு வரும்வரை அவர்களால் உயிர் பிழைத்திருக்க முடியாது, குடும்பம் அழிந்துவிடும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. அதைத் தடுக்க சமூகத்தில் ஒரு சக்தியில்லை அன்று. பணம் ஏற்பட்டபின், ஒருவர் மற்றொருவருக்கு இதுபோன்ற நிலையில் கொடுத்து, அவர் குடும்பம் அழிவதைத் தடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஒரு முறை தவறியதால், ஒரு குடும்பம் அழியத்தான் வேண்டும் என்ற நிலை மாறி, சமூகத்தின் கருவியாகப் பணமும், கடனும் முன்வந்து, அழிவை நோக்கியுள்ள

குடும்பத்தை அழிவிலிருந்து காப்பாற்றும் அளவுக்கு சமூகத்திற்குத் திறன் ஏற்பட்டுவிட்டது. தன்னலமற்ற குணம் வந்துவிட்டது என்ற உயர்ந்த நிலை ஏற்பட்டது. இதுவே கடன் எனப்படுவது. தனி மனிதனுடைய குறை அவனை முழுவதுமாக அழிப்பதை, கடன் என்ற கருவிமூலம் சமூகம் காப்பாற்றும் திறன் பெற்று சமூகத்தின் தன்னலமற்ற கருணையால் அவனைக் கரையேற்ற முடியும் என்ற நிலை உண்டாயிற்று. எனவே ஆதியில் கடன் ஒரு சமூகக் கருவி. சமூகத்தின் உதவியைத் தனி மனிதனுக்குப் பெற்றுத்தரும் கருவி என உற்பத்தியாயிற்று எனலாம். நாகரீகத்தை உயர்த்தும் திறன் கடன் என்பதற்குண்டு.

ஊனமுற்றவனைக் கேலியாகப் பேசி, ஒதுக்கி, சீரழித்தது ஒரு நிலை. ஊனமுற்றவனுக்குச் சமூகம் அவன் குறையை மீறி நல்வாழ்வு அளிக்கும் நிலை அடுத்தகட்ட உயர்ந்த நாகரீக நிலை. ஒருவர் உடல் நலத்தை மற்றொருவருக்குக் கொடுக்க முடியாது என்பது சென்ற நூற்றாண்டின் நிலை. இன்று ஒருவர் உடலுறுப்பையே மற்றொருவருக்குக் கொடுத்து மரணத்திலிருந்து அவரைக் காப்பாற்ற முடியும். இது நாகரீகம் வளர்ந்த நிலை. அதுபோல் கடன் எனும் அமைப்பு நாகரீகம் வளர உதவிய கருவியாகும். கருவியை எப்படியும் பயன்படுத்தலாம். கருவிக்குத் தவறான இராசியும், குணமும் இருக்கலாம். எனினும், கடன் என்பது சமூகத்தை உயர்த்தும் ஒரு கருவியே. கடந்த எட்டு, ஐந்து ஆண்டு திட்டங்களுடைய முழுமுதல் மக்களிடமிருந்து வாங்கிய கடன்தொகையே. கடன் என்று ஒன்றில்லாமல் திட்டங்களில்லை. அவையில்லாவிட்டால் இன்று இந்தியா இல்லை.

நான் கடனே வாங்கியதில்லை என்பது உயர்ந்த நிலையானாலும், கடனே வாங்க முடியாதவனும் இப்பெருமைக்கு உரியவனாவான். நான் கோர்ட் ஏறியறியேன் என்று ஒரு பத்திரம் எழுதுபவர் வக்கீலிடம் பெருமையாகப் பல முறை சொல்லியபின், வக்கீல் அவரிடம், "உனக்கு எங்கு சொந்த நிலமிருக்கிறது, சொந்த

வீடு எந்தத் தெருவிலிருக்கிறது?'' என்று கேட்டார். தான் வாடகை வீட்டிலிருப்பதாகவும், நிலம் என்று தனக்கில்லை எனவும் பதில் வந்தது. வக்கீல் அவருக்கு விளக்கம் கொடுக்கும்வாயிலாக, "சொத்துள்ளவனுக்கே உரிமைப் பிரச்சினை வரும், கடன் ஏற்படும், சொத்துப் பிரச்சினை ஏற்படும், சொத்தில்லாதவனுக்கு அவையில்லை. அவனால் கோர்ட்டுக்குப் போக முடியாது. எனவே உன்னால் கோர்ட் படி ஏற முடியாது'' என்றார். நான் வம்படி வழக்கனில்லை, வழக்கை தூக்கிக்கொண்டு கோர்ட்டுக்குப் போகவில்லை என்ற நல்ல கருத்தை, சொத்தில்லாதவன் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம். அதில் சாரமில்லை. அதேபோல், "கடன் வாங்கி ஊதாரியாகச் செலவுசெய்யும் கெட்ட பழக்கம் எனக்கில்லை'' என்ற நல்ல கருத்தை வலியுறுத்த, "நான் கடனே வாங்க மாட்டேன்'' என்பது, "கத்தியால் காயம் படும், கொலைக்குரிய கருவி என்பதால், கத்தியைப் பயன்படுத்தமாட்டேன்'' என்பதற்கு ஒப்பாகும்.

கடன் என்ற அமைப்பு இன்று இல்லை என்றால் இலட்சக்கணக்கான மத்தியதரக் குடும்பங்கள் வீடு கட்டியிருக்க முடியாது. ரோட்டில் ஓடும் லாரி, பஸ், கார், ஆகியவை மறைந்துபோகும்.

நல்லவன் கோர்ட்டுக்குப் போகமாட்டான் என்பது உண்மை. ஆனால் கோர்ட் என்பது இல்லை என்றால் நல்லவர்கள் நடுத்தெருவில்தான் நிற்கவேண்டும். கோர்ட்டே இல்லையென்றால் வம்படி வழக்கனுக்கு மற்றவர்கள் சொத்தின்மீது ஏற்படும் ஆசையைத் தடுக்க ஒரு வழியில்லை. ஆண்பிள்ளை ஆதரவில்லாத பெண் ஒருவருக்கு ஒரு வீடு இருந்தது. அவர் வெளியூரில் வக்கீலாக வேலை செய்கிறார் என்று தெரிந்து உள்ளூர் அரசியல்வாதி அந்த வீட்டில் வாடகைக்கு வருதல் நலம் எனக் கருதி வந்துவிட்டார். மூன்று வருஷமாக வாடகை கொடுக்கவில்லை. ஊரில் உள்ள எந்தப் பெரிய மனிதரும் அரசியல்வாதியிடம் நெருங்கிப் பேச முன்வரவில்லை. வக்கீல் கோர்ட்டில் கேஸ் போட்டார். வீட்டைக் காலிசெய்ய உத்தரவு

வாங்கிவிட்டார். அரசியல்வாதி எந்த அமீனா என் வீட்டுக்கு வருவான், பார்க்கலாம் என்று அசையாமல் இருந்தார். இந்தப் பெண்மணி வீட்டின் ஆதரவில் வளர்ந்த மற்றொரு அரசியல்வாதி அன்று மந்திரியாக இருந்தார். அந்த மந்திரியின் அறிவுரையும், அரசியல்வாதியிடம் பலிக்கவில்லை. உள்ளூர் பெரிய மனிதர்களும், மந்திரி போன்றவர்களும் அஞ்சி ஒதுங்கும் பேர்வழிகள் உலகில் நடமாடினால், ஆதரவற்ற பெண்மணி என்ன செய்ய முடியும்? கோர்ட் என்று ஒன்று இல்லை என்றால் அவர் போகும் வழிதான் என்ன? கோர்ட்டில் வாங்கிய உத்தரவுக்கு உயிர் வரும் நிலையில் அரசியல்வாதி வீட்டைக் காலி செய்தார். கோர்ட் நல்லவர்கள் போகும் இடமில்லைதான். கோர்ட் இல்லாவிட்டால் நல்லவர்கள் உலகில் நடமாட முடியாது. நல்லவர்கள் நல்லவர்களாகவே இருப்பதற்குக் கோர்ட் அவசியம். அதேபோல் கடன் என்ற அமைப்புக்கு எந்தக் கெட்ட இராசி இருந்தாலும், கடன் இன்று உலகில் ஓர் உயர்ந்த சேவையைச் செய்கிறது. நாம் விலக்க வேண்டியது கடனில்லை. கடனைத் தவறாகப் பயன்படுத்தும் மனப்பான்மையையே விலக்க வேண்டும். மேலும் கூர்ந்து நோக்கினால் கடன் வாங்கியறியேன் என்பவர்களில் பெரும்பாலோர் பரோபகாரியாக இருப்பதில்லை. சுயநலமிகளாகவே இருப்பார்கள். அவர்களில் தன்னலமற்றவர்கள் குறைவு.

பரோபகாரம் உயர்ந்தது. அதன் வகைகள் பல. ஒருவர் பணத்தை மற்றவர்க்குக் கொடுத்து உதவுவது பரோபகாரத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். ஒருவர் மற்றவர்க்கு உபகாரம் செய்வதில் பல சமயம் சிரமம் இருப்பதில்லை. சில சமயங்களில் சிரமப்பட்டு உபகாரம் செய்ய வேண்டியிருக்கும். உபகாரம் பெற்றவர் பெற்றதைத் திருப்பிக் கொடுத்துத் தமக்கு ஏற்பட்ட சிக்கலைச் செலவில்லாமல் அவிழ்த்துக்கொள்ளும் நிலையும் உண்டு.

தாம் பெற்ற 17 யானைகளைத் தம் மூன்று மகன்களுக்கு கொடுக்க விரும்பிய தகப்பனார் பிறருடைய உத்தியும், உதவியும்

இல்லாமல் கொடுத்திருக்க முடியாது. தம் சொத்தை முதல் மகனுக்குப் பாதியும், அடுத்தவனுக்கு மூன்றில் ஒரு பங்கும், கடைசி மகனுக்கு ஒன்பதில் ஒரு பங்குமாக விகிதம் செய்து இறந்துவிட்டார். எல்லாச் சொத்துகளையும், அதே விகிதத்தில் பிரிக்க முடிந்தது. அவர் பெற்ற 17 யானைகளை அப்படிப் பிரிக்க முடியவில்லை. விவேகி ஒருவர் மேலும் ஒரு யானையைக் கொடுங்கள், சிக்கலை அவிழ்க்கலாம் என்றார். வந்த புது யானையுடன், 18 யானைகளில் 9ஐ முதலாமவனுக்கும், 6 யானைகளை அடுத்தவனுக்கும், 2ஐ கடைசிப் பையனுக்குமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டு கடன் வாங்கிய யானையை திருப்பிக் கொடுத்ததாகக் கதை. கடன் ஒரு சிக்கலை அவிழ்க்கிறது என்பதற்கு ஓர் உதாரணமிது.

கடன் பல வகைகளில் ஏற்படும். செயல் குறையிருந்தாலும், அறிவில் குறையிருந்தாலும், உணர்வில் குறையிருந்தாலும் கடன் ஏற்படும். குறை எந்த வகையைச் சேர்ந்ததானாலும், அன்று ஏற்பட்ட குறையை இன்று விலக்க முடியுமானால் கடன் விலகும்.

ஒரு ஸ்தாபனம் அல்லது ஒரு குடும்பம் எந்தக் குறையால் கடனாளியாகின்றதோ, அதே குறை பல காரணங்களால், மற்றொரு குடும்பத்தைக் கடனுக்கு உட்படுத்துவதில்லை. இந்தக் கட்டுரை கடன் பட்டோருக்குப் பயன்பட வேண்டுமானால், கடன் பட்டவர் தமக்குக் கடன் ஏற்பட்ட வழிகளை ஆராய்ந்து அறிய வேண்டும். அறிந்து அவற்றை இன்று விலக்க முயல வேண்டும். அம்முயற்சியில் அவர் தம்மாலான அனைத்தையும் பூர்த்தி செய்துவிட்டால், அதன்பின் அன்னையின் அருள் பிரார்த்தனை மூலமாகக் கடனை அழிக்கும். தனிப்பட்டவருடைய பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்தோடு மட்டும் எழுதப்படும் கட்டுரை இது. ஒருவருக்குக் கடன் ஏற்படுத்தும் குறை மற்றவர்க்கு ஏன் கடன் ஏற்படுத்தவில்லை என்ற அம்சத்தை நான் விரிவாகக் கருதவில்லை. கடன் ஏற்படும் காரணங்களில் பலவற்றைக் கீழே தருகிறேன்.

  1. குடும்பத்திற்குப் பணம் முக்கியம். நிர்வாகம் இரண்டாம்பட்சம் என்று நிர்வாகத்தைப் புறக்கணித்தால் நாளாவட்டத்தில் அது கடனில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது.
  2. அடிப்படை பலவீனமாக இருக்கும்பொழுது மேல்மட்ட நடவடிக்கைகளை அதிகமாக்கினால் அது கடனில் முடிவதுண்டு.
  3. வரவையும், செலவையும் கணக்கெழுதாமல் செலவு செய்த ஸ்தாபனங்கள் அக்காரணத்தாலேயே கடனாளி ஆகும்.
  4. "கவனக்குறைவால் எங்கள் ஸ்தாபனத்திற்கு ஒரு கோடி ரூபாயை வசூலிக்காமல் விட்டுவிட்டார்கள்'' என்றவருண்டு.
  5. முதலாளி தம் அதிகாரத்தை மானேஜரிடம் கொடுத்து அசிரத்தையாக இருந்தால் கடன் ஏற்பட்டு திவால் நிலைமையை அடைய நேரும்.
  6. உடலும், மனதிலும் தெம்பில்லை ( Energyless) அதனால் எவரும் சொல்பேச்சைக் கேட்பதில்லை. நஷ்டம் வர ஆரம்பித்துக் கடன் குவிகிறது.
  7. எதையும் குறித்த நேரத்தில் செய்து பழக்கமில்லை. கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற முடிவதில்லை. நிர்வாகம் சிதைந்து நஷ்டமேற்பட்டு, கடன் வளருகிறது.
  8. வந்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் பூர்த்தி செய்வதில்லை என்ற ஒரே காரணத்தால் கம்பெனி கடனுக்கு அடிமையாயிற்று.

இவைபோன்ற வேறு பல காரணங்களையும் செயலில் உள்ள குறைகளாக விவரிக்கலாம். எல்லாக் குறைகளுக்கும் நிவாரணம் அளிக்கும் முறை ஒன்றேயாதலால், அதைச் சொல்லுமுன் அறிவால் ஏற்பட்ட குறைகளில் சிலவற்றையும் பார்ப்போம்.

  1. நண்பர்களே கூட்டாளிகளாகச் சிறந்தவர்கள் என்று நம்பி, நண்பர்களை இழந்து, முதலையும் இழந்து, கடனை மட்டுமே நிரந்தரக் கூட்டாளியாகப் பெறுதல் உண்டு.

  1. வியாபார விஷயங்களில், நம் வீட்டுப் பழக்கங்களை முழுவதும் பின்பற்ற வேண்டுமென்று முனைந்து வியாபாரத்தை முழுவதும் அழித்துக் கடனை மட்டும் கையில் கொண்டவர்கள் உண்டு.
  2. வேலை செய்யாவிட்டாலும், சோம்பேறியாக இருப்பவனுக்கும் சம்பளம் கொடுத்தல் அவசியம் என்ற நம்பிக்கை முதல்தொகைக்கு ஈடான கடனை ஏற்படுத்துகிறது.
  3. நான் என் கடமைகளைச் செய்யாவிட்டாலும், எதுவும் தவறாகப் போகாது என்று தீர்க்கமாக நம்பியவர்களுண்டு.
  4. நம் கடமையையும், பொறுப்பையும் நம்மிடம் வேலை செய்யும் மேஸ்திரி முழுமையாக நிறைவேற்றுவான் என்று நம்புதலும் வழக்கம்.
  5. "எவரும் உழைத்தல் கூடாது'' என்பதே என்இலட்சியம் என்று நம்பி, அதையே அறிவுடைமையாகக் கொண்டவர் ஒருவர்.  
  1. மனப்பாங்கு ( Attitude) என்பது உணர்வு விரும்புவதை அறிவு ஏற்றுக்கொள்வதாகும். கடன் ஏற்பட அஸ்திவாரமாக இருந்த மனப்பாங்குகளில் பலவற்றைக் குறிப்பிடுகிறேன்.
  2. என் சொத்து பெரியது. 3 தலைமுறைகளுக்கு உட்கார்ந்து சாப்பிடலாம் என்று பறையறைவித்த கார் உற்பத்தி செய்யும் முதலாளி தொழிற்சாலையை விற்க நேர்ந்தது. உட்கார்ந்து சாப்பிடலாம் என்ற மனநிலை தோல்வியையும், கடனையும், அவமானத்தையும் உற்பத்தி செய்யக்கூடியது.
  3. நான் வேலை செய்யப் பிறந்தவனில்லை. நான் முதலாளி, மற்றவர்களே வேலை செய்ய வேண்டும் என்பது ஒரு மனப்பான்மை.
  4. நம்முடைய நிலையைவிட உயர்ந்த நிலை இருப்பதாகத் தோற்றம் அவசியம் என்று கருதுபவருண்டு.
  5. நான் அன்பான குடும்பத்தில் பிறந்தவன். நான் எது செய்தாலும் குடும்பம் என்னைக் கைவிடாது என்று நம்பி நடுத்தெருவில் நின்றவரொருவர்.

  1. வாழ்க்கை அனுபவிப்பதற்காகவே ஏற்பட்டது. அனுபவிப்பதே முக்கியம் என்று பறைசாற்றி, அதை நிறைவேற்றி அல்பாயுளாக போனவர் ஒருவர்.
  2. கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற சொரணையே இல்லாதவர், அதற்காக வெட்கப்படாதவர் ஒரு வகையினர்.
  3. இப்படித்தான் வரவேண்டும் என்பதில்லை. எப்படி வந்தாலும் பணம் வருமானமாகும் என்பதைக் கொள்கையாக உடையவர் சிலர்.
  4. குடும்பம் கொடுத்துக்கொண்டேயிருக்கும், என்றும் இன்றுபோலவே இருக்கும், நான் வாங்கிக்கொண்டே இருந்தாலும், குடும்பம் கொடுப்பதைக் குறைக்காது, அவர்கள்மனம் மாறாது என்று அர்த்தமற்ற மனப்பான்மையை ஆணித்தரமாக நம்புபவர் சிலர்.
  5. இலாபமோ, வசதியோ கிடைத்தால் அதுவே முக்கியம், வெட்கப்பட்டால் முடியாது என்ற அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவருண்டு.
  6. எப்படியும் வாங்கியகடனை ஏமாற்றிவிடலாம், இது இல்லை என்றால் என்னால் எப்பொழுதும் இன்னொரு வழி கண்டுபிடிக்க முடியும் என்று ஏமாற்றுவதில் தன் சாமர்த்தியத்தை மெச்சிக்கொள்பவருண்டு.  
  1. நான் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், கொடுத்தவர் கேட்கமாட்டார், மறந்துவிடுவார் என்பது மற்றொரு கணக்கு.
  2. ஆணித்தரமாக, "கொடுத்துவிடுவேன்'' என்று சொல்லிவிட்டால் விட்டுவிடுவார்கள். சொன்னால் சரி செய்ய வேண்டுமென்பதில்லை.
  3. ஒரு காரியத்தைச் சாதிக்கப் பொருத்தமான கதையைச் சொல்வதில் எனக்குரிய சாமர்த்தியம் பெரியது என்று தன்னை வியந்துகொள்வது ஒரு வகை.

  1. குடும்பம் நடத்த வேண்டும், அதற்காக வேலை செய்ய வேண்டும் என்பதெல்லாம் அப்புறம். பிரயாணம், விசேஷம், பகட்டான ஆடம்பரம் முக்கியம் சிலருக்கு.
  2. யார் எதை நினைத்துக்கொள்கிறார் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. கேட்டதைக் கொடுப்பார்கள் என்றால் நான் கேட்கத் தயார்.
  3. உயர்ந்த அறிவுரைகளை நான் சொல்லிய வண்ணம் இருப்பேன். அவையெல்லாம் மற்றவர்க்கு, எனக்கில்லை.
  4. இளமையில் ஏற்பட்ட என் குறைகளை என் புதல்வர்கள் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்?
  5. எல்லோரும் நான் கேட்பதைக் கொடுக்க வேண்டும். இல்லை எனில் அவர்களைப் பண்புடையவராக நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
  6. டூர் செய்ய வேண்டிய செலவுக்குச் சொத்தையும் விற்கலாம்.
  7. இன்றைக்கு நடக்கவேண்டியதைப் பார். ஏன் வருங்காலத்தைப் பற்றி நினைக்கிறாய்?
  8. உரிமைக்கு உரியவன் நான். கடமைகளைப் பற்றிப் பேசாதே.
  9. வேலை செய்து பலன் வரும்வரை என்னால் காத்திருக்க முடியாது. இப்பொழுதே அனுபவிக்க வேண்டும்.
  10. மனைவிக்குத் தேள் கொட்டிய செய்தி வந்தாலும், டென்னிஸ் செட்டை முடித்துவிட்டுத்தான் போவேன். உன்வலியைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என் சௌகரியம் குறையக் கூடாது.
  11. கடன் வாங்கி மனை வாங்கிவிட்டால் போதும். வீடு தானே கட்டிக்கொள்ளும் ; விஷயத்தைவிட தோற்றமே முக்கியம்.
  12. சொத்து முக்கியமில்லை, எப்படியாவது பிரபலமாக வேண்டும்.
  13. வருகின்ற வருமானத்தைக்கொண்டு ஆசையைப் பூர்த்தி செய்ய செலவு செய்ய வேண்டும் ; அவசியமான காரியங்களுக்கு அவசரமில்லை.

  1. செலவு செய்யவேண்டும், செய்துகொண்டேயிருக்க வேண்டும். எப்படியும் நிறுத்தக்கூடாது. சம்பாதிப்பது என் பங்கில்லை.
  2. என் தேவைகளைப் பூர்த்திசெய்ய, வசதியான ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
  3. ஆண்டவனுக்குச் செலுத்தும் காணிக்கையானாலும், என் சார்பில் எவராவது செய்தால் சரி.
  4. என் மகள் திருமணத்தை மாமனார் செய்தால் தேவலை.
  5. கிராமத்திலுள்ள பண்ணை நிலம் தானே பயிராகும். நான் சென்னையில் அனுபவிப்பது குறையக்கூடாது.

பல வகையான மனப்பான்மையால் ஏற்படும் கடன், அந்த . மனப்பான்மையை மாற்றும் முயற்சியால் கரையும் என்பதை விளக்க மேலே சொன்ன மனப்பான்மைகளைக் குறிப்பிட்டேன். இனி, கடனைக் கரைக்கும் வழிகளையும், அவற்றின் அடிப்படையான தத்துவ உண்மைகளையும், அவற்றால் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளையும் பார்ப்போம்.

அமெரிக்காவில் 3 பெரிய கார் உற்பத்தியாளர்கள் உண்டு. அவற்றுள் மூன்றாம் நிலையிலுள்ள கம்பனி கிரைஸ்லர் கார்ப்பரேஷன் என்பது. 1979-இல் அதன் செலாவணி 11 ஆயிரம் கோடி ரூபாய். அங்கு தினமும் 80 கோடி செலவாகிறது. அப்படிப்பட்ட கம்பனியில் பாங்கில் உள்ள பணம் ஒரு கோடி என்ற நிலைமையில் கம்பனி திவாலாவதைத் தடுக்க முடியாது என்று பொருளாதார வல்லுனர்கள் ஏகமனதாகத் தீர்மானித்து நாடு முழுவதும் செய்தி அபரிமிதமாகப் பரவி ஷேர் விலை 4 டாலர் ஆன நிலையில், அந்தக் கம்பனியின் தலைவரை நீக்கி, புதுத்தலைவரை வருஷத்திற்கு 1 கோடி ரூபாய் சம்பளத்தில் நியமித்தார்கள். பாங்குகளிலும், சப்ளைகளுக்கும் அன்றைய தினம் கடனாக 1700 கோடி பாக்கி. உலகத் தொழில் சரித்திரத்திலேயே அது அதிகபட்சக் கடன்.

லீ அயா கோக்கா என்பவர் புதிய தலைமைப் பதவியை ஏற்றார். முதல் நாள், அவர் ஆபீஸ் வழியாக காப்பி கோப்பையை எடுத்துக்கொண்டு உயர் அதிகாரிகள் வரிசையாகப் போவதைப் பார்த்து பிரமித்துவிட்டார். இந்தக் கம்பனியில் அடிப்படையான ஒழுங்கில்லை என்பது தெரிந்துவிட்டது. கம்பனி (Treasurer) நிதி ஆபீசரைக் கூப்பிட்டு நிதி நிலைமையைக் கேட்டால், அவருக்கு எந்த விவரத்தையும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. பெட்ரோல் நெருக்கடி உலகத்தில் உச்சகட்ட நிலையில் இருக்கும்பொழுது இந்தக் கம்பனி என்ஜீனியர்கள் அதிகபட்சம் பெட்ரோல் செலவாகும் மோட்டாரைத் தயார் செய்து அதன் அழகில் தங்களை மறந்திருக்கிறார்கள் என்ற செய்தியும் வந்தது. பாக்டரியில் கொலை, சூது, களவு, விபசாரம் நெடுநாளாகத் திட்டமிட்டு நடக்கிறது என்றறிந்தார். "என் தலை சுற்றியது. உள்ள நிலைமை தெரிந்திருந்தால், தலைமைப் பதவியை ஏற்றிருக்கமாட்டேன். மயக்கம் வருகிறது. எதிரில் வருபவர்கள் இரட்டை மனிதர்களாகத் தெரிகின்றார்கள்'' என்றார். மயக்கம் உச்சகட்டத்திற்கும் போனால் பார்வை நலிந்து காணும் பொருட்கள் இரண்டாகத் தெரியும்.

அடிப்படையில் கோளாறு, ஒழுங்கில்லை, பொறுப்பில்லை, அறிவில்லை, ஆபத்தான நிலைமை என்பதைக் கண்ட அயா கோக்கா, செயல்பட ஆரம்பித்தார். 35 வைஸ் பிரசிடெண்ட்களில் 34 பேரை டிஸ்மிஸ் செய்தார். வருஷத்திற்குத் தம் ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை இரண்டு டாலர் சம்பளமாக்கினார். கம்பனி இலாபம் எடுக்கும்வரை சம்பளம் தேவையில்லை என்றார். தொழிலாளர்களைப் பார்க்கப் போனார். அவர்கள் கோஷமிட்டுக் கேலி செய்தனர். தலைவர் அசையவில்லை. உங்கள் சம்பளத்தை நீங்களே குறைத்துக்கொள்ள வேண்டும். அதிகபட்ச வேலை செய்ய வேண்டுமெனக் கேட்டார். பெரிய போராட்டத்திற்குபின் இசைந்தனர். தாம் கடன் வாங்கிய நூறு பாங்குகளைக் கூப்பிட்டார். யாரும் கடனைத் திருப்பிக் கேட்காதீர்கள், வட்டியைத் தள்ளிக் கொடுங்கள், வேலை செய்து இலாபம் வரும்வரை மேலும் கடன் கொடுங்கள்

என்றார். பாங்குகாரர்கள் அவரைக் கேலி செய்தனர். நீண்ட போராட்டத்தின்பின் இசைவு தந்தனர். புதிய கார் ஒன்றைச் செய்தார். T.V.இல் என் கார் சிறந்தது, வாங்குங்கள், ஓட்டிப்பாருங்கள், திருப்தியில்லாவிட்டால் திருப்பிக்கொடுங்கள், பணத்தைத் திருப்பித் தருகிறேன் என்று தாமே விளம்பரம் செய்தார். கார் விற்றது, களேபரம் அடங்கிற்று. 4 டாலர் ஷேர் 36 டாலராயிற்று. 1700 கோடி சம்பாதித்துக் கடனை அடைத்தார். மேலும் 1700 கோடி இலாபம் சம்பாதித்தார். எல்லாம் 3 ஆண்டுகளில், கம்பனியின் செலாவணி 11 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 23 ஆயிரம் கோடியாயிற்று. அமெரிக்கக் கம்பனிப் பட்டியல் 23-ஆம் இடத்திலிருந்து 11-ஆம் இடத்திற்குக் கம்பனி வந்துவிட்டது. அமெரிக்காவிலேயே அதிகப் புகழ் பெற்றவரானார் அயா கோக்கா. அனைவரும் அவரை ஜனாதிபதி பதவிக்கு நிற்கும்படி விழைந்தனர்.

அவர் செய்ததென்ன? அறிவில்லாத காரியங்களை மாற்றி, அறிவுடையதாகச் செய்தார். கட்டுப்பாட்டை நிலைநாட்டினார். பழைய பெருச்சாளிகளை விலக்கினார். வேலைக்கு வந்தால் சூதாடலாம் என்பதை மாற்றி, வந்தால் வேலை செய்ய வேண்டும் என்றார். தியாகத்திற்கு தாமே எடுத்துக்காட்டாகி சம்பளத்தைத் துறந்தார். தம்மால் முடிந்ததை எல்லாம் அவர் செய்வதைப் பார்த்த பாங்குகளும், பாக்கிதாரர்களும் பொறுமையைக் கைக்கொண்டனர். கடன் கரைந்தது. அத்துடனில்லாமல் இலாபம் வந்தது. கம்பனியின் செலாவணி இரட்டிப்பாயிற்று. நிலைமை 23-இல் இருந்து 11-ஆம் இடத்தை அடைந்தது. 1986-இல் அயா கோக்கா, சம்பளமாகவும், போனஸாகவும், ஷேராகவும், ஷேருக்குரிய இலாபமாகவும் ரூ.20 கோடியை வீட்டுக்கு எடுத்துச்சென்றார் என்று செய்தி வெளிவந்தது. கடனைக் கரைக்கும் வழி இதுவேயாகும்.

அயா கோக்கா (Iacocca) தம் கம்பனி திவாலின் விளிம்பிற்கு வந்த நிலையில் அதைக் காப்பாற்றினார். ஏகமனதாக அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள் இந்தக் கம்பனியை இனி காப்பாற்ற

முடியாது என்ற முடிவுக்கு வந்தபின், அயா கோக்கா, "அது முடியும்'' என்று சாதித்தார். பெருமுயற்சி செய்து கடனைத் தீர்க்க முடிவு செய்தவர்கள் வெற்றி பெறுவார்கள். வெற்றி பெற்றால், பழைய நிலையை அடைவது மட்டுமின்றி, புதிய உயர்வுக்குப் போவார்கள் என்பதை விளக்கும் வகையில் இங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. இது உலகத் தொழில் சரித்திரத்திலேயே இதுவரை நடக்காத ஒன்று. இதைவிடப் பெரிய உதாரணம், "முயன்றால் முடியாதது இல்லை'' என்ற கொள்கைக்கில்லை. இது உயர் மட்டத்திலுள்ள உதாரணம். இதேபோல் எளிய உதாரணங்கள் பலவற்றைச் சொல்லலாம்.

மனிதனால் முடியாத ஒரு பெருமுயற்சி தேவை என்று இவற்றைப் புரிந்துகொள்ளக் கூடாது. நம்முடைய சொந்த வாழ்க்கையையும், நாம் அறிந்தவர்கள் வாழ்க்கையையும் ஆராய்ச்சிக் கண்ணுடன் பார்த்தால், ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குப் போகும் எவரும் செய்யும் முயற்சி இது என்பது தெரியவரும். நிலைமை சீர்கெட்டுக் குடும்பம் படிப்படியாக இறங்கிவரும் நேரங்களில் மேலும் கடனை வாங்க முயன்று வெற்றிபெறுபவர் அனைவரும் இதேபோன்ற முழு முயற்சியைக் கைக்கொண்டனர் என்பதும் தெரியவரும். அன்று கடன் அதிகமாகப் போனபின் சாதுரியத்தை அதிகமாக்கி, முடியாது என்ற நிலைமையிலும், மேலும் கடன் வாங்க உபயோகப்படுத்திய யுத்திகளை இன்று கடனைக் கரைக்க எதிரான நல்ல முறைகளில் பயன்படுத்த வேண்டும் என்பதே இம்முறையாகும்.

வருஷக்கணக்காக வகுப்பிற்கு லேட்டாகப் போய்க் கொண்டிருந்தேன். ஒரு நாள் நான் லேட்டாக போனபொழுது வகுப்பில் அனைவரும் ஏளனமாகச் சிரித்தார்கள். அத்துடன் லேட்டாகப் போவதை மறந்துவிட்டேன் என்பவர் எடுத்த முயற்சி பெருமுயற்சி. ஒரு அகில இந்திய ஸ்தாபனத் தலைவர், அபாரத் திறமைசாலி, ஜனாதிபதி முதல் கவர்னரிலிருந்து உள்ளூர் தலைமை ஆசிரியர்வரை தம் பிடிக்குள் வைத்துக்கொள்ளும் திறமைசாலி. ஓர் அமெரிக்கரைச் சந்திக்கப்போனார். அவரைச் சந்திக்கும் முதல் நாள்

அந்த அமெரிக்கரைத் தம் ஸ்தாபனமொன்றில் ஒரு சொற்பொழிவு செய்ய ஏற்பாடு செய்திருந்தார். மறுநாள் அந்த அமெரிக்கரைச் சந்தித்துப் பேச ஆரம்பிக்குமுன், "நேற்றைய உங்கள் சொற்பொழிவைப் பற்றிப் பலரும் என்னிடம் பாராட்டிப் பேசினார்கள்'' என்று ஆரம்பித்தார். அமெரிக்கர் இடைமறித்து, "நேற்று திடீர் என்று உடல்நலம் குன்றியதால் கூட்டத்திற்குப் போக முடியவில்லை'' என்றார். தலைவர் சொல்லியது அபாண்டப் பொய். கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். அதுபோல் மாட்டிக்கொண்ட ஒருவர், அன்றிலிருந்து நான் பொய் சொல்வதை விட்டுவிட்டேன் என்றார். சரளமாகக் கடன் வாங்குபவர் உற்ற நண்பர் செய்த கேலியால் மனம் புண்பட்டுக் கடன் வாங்குவதையே நிறுத்தினார். என்னுடைய தலைவரே நான் சொல்லிய இரகஸ்யத்தை வெளியில் சொன்னபின், இரகஸ்யத்தை மற்றவரிடம் சொல்லும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்றார் ஒருவர்.

கடன் வாங்கிவிட்டோம், சுமை அதிகமாயிற்று, செய்தது தவறு என்று இன்று தெரிகிறது. வழியே இல்லை என்று புரிகிறது. வாழவே முடியாது என்பது தெளிவாக இருக்கிறது. எதையும் செய்ய நான் தயார், என்ன செய்வது என்று தெரியவில்லை என்று இன்று நினைப்பவர்கள் உண்டு. அவர்களுக்கு வழியுண்டு. நான் சொல்லும் முறை உதவும்.

பல முறைகள் திவாலானபின், நிர்த்தாட்சண்யமாகத் தகப்பனார் வீட்டைவிட்டு வெளியே போ என அனுப்பியபின், 250 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்தவுடன், மேலும் கடன் வாங்கி, போன் வைப்பவர் ஒருவர்; நரகத்தின் வாயிலிருந்து மீண்டு ஆயிரம் ரூபாய் மாத வருமானம் வந்தவுடன், 600 ரூபாய் கொடுத்து டாக்ஸி எடுத்துக்கொண்டு போகும் மனமுடையவர் மற்றொருவர்; மாதம் ரூ.10 வருமானமில்லாத குடும்பத்துப் பையனை மாதம் ரூ.10 பீஸ் கட்டி நர்ஸரி பள்ளியில் சேர்ப்பவர்; உறவினர் உதவியால் ஒரு வேளை சாப்பிடுவதை மறந்துவிட்டு செயல்படுகிறார்; கடன்பட்டாலும், திவாலானாலும், ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டவராக ஆனாலும்,

கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் அடிநாள் கெட்ட பழக்கத்தை அவசரமாகச் செயல்படுத்தத் துடிக்கும் மனமுடையவர் சிலருண்டு. அவர்களுக்கு இம்முறை பயன்படாது. இம்முறையால் பயன்பட வேண்டுமானால், அதற்கு முன்னால் அவர்கள் செய்ய வேண்டியது ஒன்று உண்டு. இக்கட்டுரை அக்கருத்தை விளக்க முற்படவில்லை.

தீராக் கடனில்லை, தீர்க்காத கடனுண்டு என்பது இக்கொள்கை. இந்தச் செயல் இரு பங்குகளுண்டு. முதல் மனித முயற்சி. அடுத்தது அன்னை அருள். மனிதன் செய்யக்கூடிய முயற்சி எது? 15, 20 வருஷங்களாகக் கைமாற்று வாங்கி, அதை மறந்துவிட்டு வாழ்க்கையை நடத்தும் ஒருவர் மேற்கூறிய முறையைக் கடைப்பிடிக்க முன்வந்த பொழுது முதல் காரியமாகப் பழைய கடன் எவ்வளவு சிறியதானாலும் 10 வருஷத்திற்குமுன் வாங்கிய 10 ரூபாய் கடனானாலும் திருப்பிக்கொடுக்க வேண்டியது அவசியம் என்று கேள்விப்பட்டு, "எப்படிக் கொடுப்பது, எதிலிருந்து கொடுப்பது'' என்று கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வி நியாயமாகத் தோன்றினாலும், அந்தக் கேள்வியைக் கேட்டவருக்கு இந்த முறை பயன்படாது. அந்தக் கேள்விக்குப் பதிலாக, "இன்று நான் என்ன செய்ய முடியும்? என்ன செய்யவேண்டும் என்று சொன்னால், என்னால் முடிந்த அனைத்தையும் ஓரிழை பாக்கியில்லாமல் செய்வேன்'' என்று கூறினால் அவருக்கு விளக்கம் அளிக்கலாம். சர்க்கரையைச் சாப்பிட்டுச் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்தும் மருத்துவமில்லை உலகில். இன்சுலின் வந்தபின், வாயைக் கட்டி, முறையாக வைத்தியத்தைச் செய்துகொள்பவர் மரணத்தை வென்று வாழ்நாளை நீட்டிக்கலாம்.

வாழ்க்கை என்பதையும், பெருங்கடன் ஏற்பட்டபின், வாழ்க்கை நியதி என்பதையும் நாமறிவோம். பட்ட கடனை அடைக்க அதிக வருமானத்தை உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு அதிக மூலதனம் தேவை. மூலதனமிருந்தால் அதிக வருமானம் ஏற்பட வழியிருக்கிறதா எனக் கண்டறிய வேண்டும். அப்படி ஒரு நிலையிருந்தால் அதிக

மூலதனத்தால், பெருங்கடனைச் சம்பாதித்து அடைத்து விடலாம். அதிக மூலதனத்தை அந்த நிலையிலும் பெற ஒரு வழி இருந்தால் அது பலிக்கும். இல்லையெனில் வாழ்க்கையில் ஒரு வழியில்லை. புதிய அறிவு ஏற்பட்டுவிட்டால் அறிவுக்குப் பதிலாக வாழ்க்கை அளிக்கக்கூடியது தெளிவு. அறிவுக்குப் பிரதியாக வருமானத்தைக் கொடுக்கும் திறன் வாழ்க்கைக்குக் கிடையாது. செய்த தவறுகளை எல்லாம் உணர்ந்து, மனம் மாறி, நெகிழ்ந்து உருகினால் போகின்ற கதிக்கு நல்லது; அந்தப் பாவம் தொடராது. மனம் மாறியதற்குப் பலனாக வாழ்க்கை வருமானத்தைக் கொடுக்கும் திறனுடையதன்று. வாழ்க்கைக்கு அதுபோன்ற திறன் இதுவரை ஏற்படவில்லை. இதுவரை உலகத்திலில்லாத ஒரு சக்தியை அன்னை கொண்டு வந்திருக்கிறார். அதனால் வாழ்க்கைக்கு அன்னையால் புதிய திறனை அளிக்க முடிகிறது. அதிக மூலதனத்தால் மட்டும் வாழ்க்கையில் சாதிக்கக்கூடியதை அதிக அறிவு, புதிய உணர்வுமூலம் சாத்தியமாக்குகிறார். வாழ்க்கையைப் புது வழியில் செயல்பட வைக்கின்றார். வாழ்க்கைக்கு அன்னையின் திறன் வருகிறது.

ஒருவர் 30 ஆண்டுகள் உழைத்து 30 இலட்சம் சம்பாதிக்கின்றார். அந்த உழைப்பின்மூலம் அவருக்கு அதற்குரிய அறிவும், தெளிவும் வருகிறது. அவருடன் உள்ள ஒருவருக்கு அதே அறிவும், தெளிவும் நட்புமூலம் வருவதும் உண்டு. ஆனால் அதேபொருள் வருவதில்லை. 30 ஆண்டுகளில் ஒருவர் பெற்ற அறிவையும், தெளிவையும் இன்னொருவர் அதேபோல் அதே சிறப்போடு பெற முடியும். அவர் அன்னை பக்தரானால் அந்த அறிவுக்குப் பலனாக அன்னையால் அதேபொருளைக் கொடுக்க முடியும். வாழ்க்கையை, அவருக்கு அப்பொருளை அன்னையால் கொடுக்க வைக்க முடியும். இதுவே இன்றைய புதுநிலை; சத்தியஜீவியம் உலகில் செயல்படுவதால் ஏற்பட்ட நிலை. அன்னையிடமிருந்து ஒருவர் பெறக்கூடியது அனைவரும் பெறக்கூடியது. பக்தருடைய பங்கு அறிவைப் பெறுதல், அதற்குரிய

மனப்பாங்கைப் பெறுதல், பெற்றதைப் பூரணப் படுத்துதல். பெற்ற அறிவு சத்தியமானால், பலன் நிச்சயமாக வரும்.

அறிவும், திறமையும் உடைய ஒருவன், மற்றவன் ஒரு மூலதனத்தால் சாதிப்பதைவிட அதிகமாகச் சாதிக்கின்றான். சாதாரண மனிதன் மூலதனத்தால் பெறுவதை அறிவுடைய ஒருவன் ஒரு புதிய யுக்தியால் சாதிக்கின்றான். மனிதன் கெட்டிக்காரன். ஒரு வார்த்தை சொன்னால் போதும், பிடித்துக்கொள்வான், பணமாக்கிவிடுவான் என்பார்கள்.

அதேபோல் அதிக அந்தஸ்து, திறமை, பெருந்தன்மை உடையவர் பெறுபவரின் நிலைக்கு அதிகமாக உதவ முடியும். வட்டிக் கடைக்குப் போனால், நகை பேரில்தான் அதிக வட்டிக்குப் பணம் தருவான். வட்டிக் கடைக்காரன் சிறிய அளவில் செயல்படுபவன். அவனுக்கு இலாபமே குறி, இலட்சியமில்லை. பாங்குக்குப் போனால் அங்கு ஓர் இலட்சியம் செயல்படுகிறது. நாடு முன்னேற வேண்டும் என்ற இலட்சியமுண்டு. எந்த இன்ஜீனியர் ஆரம்பிக்கும் தொழிலுக்கும், வட்டிக்கடை பணம் தாராது. மூலதனமில்லாத இன்ஜீனியரின் திறமை கருதி பாங்கு அவருக்குத் தொழில் செய்ய மூலதனம் கொடுக்கிறது. உயர்ந்தவர்களால் அதிகம் கொடுக்க முடியும். உனக்குள்ள திறமை எது என்று கண்டு, அதை மெச்சி அதற்குப் பிரதிபலனாகப் பொருளுதவி செய்ய முடியும். அன்று அரசர்கள் சேனாபலத்தால் சாதித்ததை இன்று அரசியல்வாதிகள் கொள்கை பலத்தால் சாதிக்கின்றார்கள். நாடு முன்னேறியுள்ளது. நாகரீகம் முன்னேறியுள்ளது. அன்றைய பணபலம் இன்று ஸ்தாபனங்களுக்கு உண்டு. ஒரு தொழிலைச் சார்ந்தவர், ஒரு சங்கத்தை நிறுவினால், அந்தச் சங்கத்தால், பணத்தால் சாதிக்கக்கூடியதை இன்று சாதிக்கலாம்.

அன்னை ஒரு படி மேலே போகிறார். உனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டு இன்று அதற்குத் தீர்வில்லை என்றால், அந்தப் பிரச்சினை

ஏற்படக் காரணமான மனநிலை என்ன என்று ஆய்ந்து, அதை இன்று மாற்றிக்கொண்டால், மாற்றிக்கொண்டது உண்மையானால், பூரணமானால், அந்த மனமாற்றத்தின் சத்தியத்திற்குப் பலனாக பிரச்சினையைத் தீர்வு செய்கிறார். தீர்வு செய்யும் திறனை வாழ்க்கைக்கு உன் விஷயத்தில் அளிக்கின்றார்.

எந்தப் பாத்திரத்திலும் அதன் பரிமாணத்திற்கு மேற்பட்டதை வைக்க முடியாது. 10 லிட்டர் டின்னில் 10 1/2 லிட்டர் ஊற்ற முடியாது. மனிதன் ஒரு பாத்திரம். அவன் பிரச்சினை அவனுள் இருப்பது. அவனுள் உள்ள எந்தப் பிரச்சினையும் அவனுடைய சக்திக்கு மீறியதில்லை என்பது பகவான் ஸ்ரீ அரவிந்தர் வாக்கு. அதிலுள்ள உண்மையை, அன்னை உன் வாழ்வுப் பிரச்சினையான கடனில் வாழ்க்கைமூலம் தீர்க்கிறார். உன் பங்கு மனமாற்றம்.

நாகர்கோயிலில் ஒரு பெண்மணி தம் மகன் 4-ஆம் வகுப்பில் பெயிலாகிவிட்டான் என்று வேதனைப்பட்டார். அடுத்த வருஷம் பள்ளிக்கூடம் திறந்து பையனை அதே வகுப்பில் உட்காரவைத்தார்கள். பெண்மணி அன்னைக்குப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். இரண்டே நாளில் பள்ளியில் பெயிலான மாணவர்க்கு மீண்டும் பரீட்சை வைத்தார்கள். அவர் மகன் இப்பரீட்சையில் பாஸ் செய்தான். 5-ஆம் வகுப்பு போனான். ஒரு செயல் முடிந்துவிட்டதென்றாலும், என்ன மனநிலையால் அந்தச் செயல் உருவாயிற்றோ, அதை இன்று மாற்றிக் கொண்டால், இன்றைய புதுமனநிலைக்குரிய முழுப்பலனை அன்னையால் கொடுக்க முடியும். அந்தத் திறன் வாழ்க்கைக்கு இல்லை.

கடன் ஏற்படுவதற்குரிய செயல்கள், நினைவுகள், மனப்பாங்குகள் பலவற்றை முன்னரே குறிப்பிட்டேன். கடந்த காலத்து நிகழ்ச்சியை அன்னை இன்று மாற்றிப் பலனை அளிக்க முடியும். ஏனெனில் அன்னையின் சக்தி காலத்தைக் கடந்தது. அளிக்க முடியும் என்றாலும் 50 வருஷத்தில் இழந்ததைப் பெற 50 வருஷங்களாகும்

அல்லவா? அல்லது 25 வருஷங்களாவது ஆகுமல்லவா என்பது ஒரு கேள்வி. ஆயிரம் ஆண்டுகளாக இருண்ட குகையினுள் உள்ள இருட்டைப் போக்க எவ்வளவு நாழியாகும்? க்ஷணத்தில் விலக்க முடிவது எதனால்? இருளும், ஒளியும் திடப்பொருள்களல்ல, சூட்சுமப் பொருள்கள். அன்னையின் சக்தி மனமாற்றத்தின்மூலம் செயல்படுகிறது. மனம் சூட்சுமமானது; அதனால் விரைந்து செயல்பட முடிகிறது. வாழ்க்கைக்கும், தன் சூட்சுமத்தை அன்னை ஓரளவு உன் விஷயத்தில் அளிக்க முடிகிறது. அதனால் வாழ்க்கையில் உன் மனமாறுதல் பலிக்க முடிகிறது.

இதெல்லாம் அன்னை பக்தர்களுக்கு நடைபெறும் என்றால், ஏன் எல்லோர் வாழ்விலும், பெருவாரியாகத் தவறாமல், இதுபோன்று நடைபெறவில்லை என்று கேட்கலாம். அதற்குரிய காரணங்கள் பல:

  1. பெரும்பான்மையான பக்தர்களுக்கு, அன்னைக்கு இந்த வாழ்வுச் சிறப்பு இருப்பது தெரியாது.
  2. இதுபோன்ற ஒரு காரியம், அதாவது முழுவதும் தவறிப்போன காரியம் இனியும் கூடிவரலாம் என்ற நம்பிக்கையுள்ளவர் அரிது.
  3. நம் வாழ்வைப் பாழ் செய்து கடனை மலைபோல் குவித்த நம் குணங்கள் அனைத்தும் இன்றும் நம்மைவிட்டுப் போகாமல் இருக்கும்.
  4. சொத்தை இழந்ததாலும், கடனை வளர்த்ததாலும், இது போகவேண்டிய சொத்து, போய்விட்டது என்ற நம்பிக்கை ஊன்றிவிட்டிருக்கும்.
  5. ஜாதகப்படி இந்த துர்அதிர்ஷ்டம் நடந்திருந்தால் மனம் அதை ஏற்றுக்கொள்ளும்.
  6. அதிர்ஷ்டம் வந்து ஆகாயத்திலிருந்து விழுந்தால்தான் இதுபோன்ற கடன் தீரும் என்ற நம்பிக்கை தெளிவாக இருப்பதைப்போல, உழைப்பின் வெற்றியில் நம்பிக்கை இருப்பதில்லை. எனவே, இது நடக்காது என்று மனம் அடங்கும்.

  1. மனத்தால் மாற்றம் ஏற்பட்டபின், வாழ்வு மாறுவதில்லை என்று தெரியுமாதலால், மனமாற்றத்திற்குண்டான முயற்சியில் சிரத்தை இருப்பதில்லை.
  2. ஒரு தலைமுறையில் ஏற்பட்ட செல்வம் அதே தலைமுறையில் கடனுக்குட்பட்டால், பொருளைத் திறமையுடன் சம்பாதித்தவனுக்குக் கடனை அழிக்கும் திறனும் இருக்கும். பொதுவாக அடுத்த தலைமுறையிலேயே கடன் ஏற்படுவது வழக்கம். அந்தத் தலைமுறையினர்க்கு முதல் தலைமுறையினரின் திறமை இருப்பதில்லை.
  3. கடன் பெற்றவர் பொருளை அழிப்பதில் திறன் உடையவராக இருப்பார்கள். அதற்கும், மீண்டும் பொருளைப் பெறவேண்டிய திறனுக்கும் உள்ள தூரம் அதிகம்.

கடன் கரைந்து முழுப் பலன் பெற அன்னைக்கு இத்திறன் இருப்பதை அறிந்து, கூடிவரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு, கடனை உற்பத்தி செய்த குணங்களை மாற்றிக்கொள்ள முன்வந்து, இது திரும்பி வரவேண்டிய சொத்து என்று நம்பி, ஜாதகத்தை நம் மனமாற்றத்தின் மூலம் அன்னை பொய்யாக்கிவிடுவார் என உணர்ந்து, உழைப்புக்கு முழுப்பலனுண்டு என்று அறிந்து, மனமாற்றத்தின் ஆன்மீகத் திறனையறிந்து, முழு முயற்சி செய்ய முன்வர வேண்டும்.

நாம் பின்பற்ற வேண்டிய முறை:

  1. இதில் மிகக்கடினமான பகுதி ஒன்றுண்டு. அதாவது நடந்தவை அனைத்துக்கும் நாமே பொறுப்பு என்று மனம் ஏற்றுக்கொள்ள வேண்டும். முழுப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் மனத்திற்கே, முழுக்கடனை அடைக்கும் திறன் வரும். மற்றவர்களோ, மார்க்கட் நிலவரமோ, சந்தர்ப்பமோ காரணம் என்று மனம் அறியும்வரை பொறுப்பை மனம் ஏற்றுக்கொள்ள முடியாது. முழுத் தெளிவுடன் கடன் ஏற்பட்டதற்கு நானே பொறுப்பாளி என்று அறிய வேண்டும். மனம் அறிந்ததை உணர்வு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜீவனின் ஆழத்திலும் அதை ஏற்று, கடன் ஏற்பட்டபொழுது வாழ்க்கை ஓடிய திசைக்கு எதிர்த் திசையில் வாழ்க்கையை நடத்த இன்று முன்வர வேண்டும்.

  1. கடனை ஏற்படுத்திய நடைமுறைகளில் ஒன்றை எடுத்து அதை இன்று நேர் எதிராக மாற்றிச் சோதனை செய்ய வேண்டும். சுபாவத்தில் புரட்சியும், மனமாற்றத்திற்கு முயல்வதால் ஏற்படும் மனப்போராட்டத்தையும் தெளிவாகக் காணலாம். தன்னால் முடியுமா, முடியாதா என்று தெளிவாக மனதிற்குத் தெரியும். இங்கு வெற்றி கிடைக்காவிட்டால் முயற்சி முடிவடைந்து விடுகிறது. வெற்றி கிடைத்தால், இதேபோல் கடனை ஏற்படுத்திய மற்ற எல்லா மனப்பான்மைகளையும் மாற்ற விருப்பம் இருக்கிறதா, இல்லையா என்பது ஐயம் திரிபுஅறத் தெரிந்துவிடும். விருப்பம் இருந்தால், அவை எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.
  2. மாற்றம் தேவைப்பட்ட எல்லா எண்ணங்கள், மனப்பான்மைகள், செயல்கள் ஆகியவற்றின் முழுப்பட்டியலைத் தயார் செய்ய வேண்டும்.
  3. மாற்றும் முறையை அறிந்து, மாற்றத்தால் ஏற்படும் சந்தோஷத்தை உணரும்வகையில் எல்லா மனப்பான்மைகளையும் நேர் எதிரானதாக மாற்றி, அதில் பாக்கியில்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். நாம் பின்பற்றும் முறை சரியானதொன்றானால் உணர்வு பளபளக்கும். புற நிகழ்ச்சிகளின் போக்கு நாம் எதிர்பார்க்கும் வகையாக இருக்கும்.
  4. Past consecration கடந்தகால நிகழ்ச்சிகளை மாற்றும். மேலும் மனமாற்றத்திற்குத் தகுந்தாற்போன்ற புற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியம்.

மேற்சொல்லிய முறைகள் பொதுவாக விளங்கும். முழுத்தெளிவு ஏற்படவேண்டுமானால் மேலே சொல்லிய 44 மனப்பான்மைகளையும் தனித்தனியாக எடுத்து, அவற்றை எப்படி மாற்ற வேண்டும் என்று ஓர் உதாரணத்தின்மூலம் விளக்கினால், அந்தத் தெளிவு வரும். முடிந்தவரை சொல்கிறேன்.

ஒரு பெரிய ஸ்தாபனத்தில் முக்கிய அதிகாரி. பதவியில் இருப்பதால் தம்மிடம் வருபவர்களைத் திட்ட வேண்டும் என்று நம்பினார். எவராயிருந்தாலும் அவர் ஆபீஸுக்கு ஒரு முறைக்கு மேல் போகமாட்டார்கள். அறையில் நுழைந்தவுடன் கடுப்பாகப் பேசுவார். அடுத்த வார்த்தை திட்டாக இருக்கும். அதற்குள் வந்தவர் போய்விடுவார். இதே ஸ்தாபனத்தில் மிக எளிய பதவியில் உள்ள ஒருவர் பிரபலமாவதை இவர் பார்த்தார். எளியவருடைய இனிமை அவருக்கு பிரபலத்தைக் கொடுப்பதைக் கண்டார். அவர்போல் தாமும் பிரபலமாக வேண்டும் என்று விரும்பினார். சுபாவம் கடுமையாக இருந்தும், வெளிப் பழக்கத்தை மாற்ற முயன்றார். என்றாலும், கடுகடுப்பும், எரிந்துவிழுவதும் நின்றுவிட்டன. பெரும்பாலும் பேசுவதை நிறுத்திக்கொண்டார். ஏராளமான பேர் இவரைத் தேடி வந்தனர். பெரும்பிரபலம் அடைந்தார். இரு வருஷங்களில் அவருக்கு அதற்கு முந்தைய 35 வருஷங்களில் இல்லாத பிரபலம் வந்தது. உள்ளுறை சுபாவம் சும்மா இல்லை. மீண்டும் திட்ட ஆரம்பித்தார். எல்லாம் ஒரே நாளில் மறைந்துவிட்டன. இவர் அரைக்கிணறு தாண்டியவர். செயலை மாற்றியவுடன், உள்ளுறை உணர்வையும் மாற்றிக்கொண்டு, உள்ளபடி இனிமையாகப் பேசியிருந்தால் அவர் உயர்ந்திருப்பார். அவர் செய்யாததை கடனைக் கரைக்க முயலும் அன்பர் செய்ய வேண்டும்.

"என்னுடைய நிலையைவிட உயர்ந்த தோற்றம் இருப்பதுபோல் நான் வாழ வேண்டும்'' என்ற மனநிலையை எடுத்துக்கொள்வோம். சொற்ப சம்பளத்தில் போகும் இடத்திற்கெல்லாம் ஆட்டோ ரிக்ஷாவில் போகும் மனநிலை அது. வீட்டில் பஞ்சம், வெளியில் தோற்றம். இதுபோன்ற மனநிலை ஒருவருக்கிருந்து, அதனால் கடன்வந்து இப்பொழுது அதைத் தீர்க்க முடியவில்லை என்றால், முதல் அவர் தம் மனத்தைச் சோதனை செய்யவேண்டும். வீட்டு நிலைமைக்குள்ள வெளித்தோற்றம் பொருத்தமானது, பலனளிக்கக்கூடியது. அவர் என்ன நினைக்கின்றார்? கடன் ஏற்பட்ட காலத்தில் என்ன நினைத்தார்? நாலு பேர் எதிரில் மரியாதையான தோற்றம் அவசியம். அதற்காக வீட்டின் அத்தியாவசியங்களையும் தியாகம் செய்தல் அவசியம் என்று

நினைக்கின்றார். இதுபோன்ற எண்ணம் அவர் வாழ்க்கையில் செய்தது என்ன? சொத்தை அழித்துக் கடனை உற்பத்தி செய்திருக்கிறது. கடன் அப்புறமிருக்கட்டும். இந்த மனப்பான்மையில் உண்மையில்லை; எனவே சாரமில்லை; சக்தியில்லை. எத்தனைக் கோணங்களில் இதை அலசிப்பார்த்தாலும், எந்தப் பெரிய உண்மையையும் இதனுள் கண்டுகொள்ள முடியாது. அது தெளிவானபின், இதற்கெதிரான மனப்பான்மையில் உண்மையிருக்கிறதா என்று கருதவேண்டும். விதிவிலக்காக உள்ள சில நிலைகளைப் பார்த்து, அதை நம் வாழ்வில் விதியாகப் பின்பற்ற வேண்டுமென்பது தவறு. ஒருவருடைய (Initial) தலையெழுத்து M.A. அவர் B.A. படித்தவர். M.A. பட்டம் பெற ஆசை. முடியவில்லை, செய்யவில்லை. Initialஐப் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளும் பழக்கமும் உண்டு. த. மணி என்பதை மணி த. என்றும் எழுதுவதுண்டு. அதேபோல் இவர் தம் பெயருக்குப் பின்னால் M.A என்று போட்டுக்கொண்டார். தெரியாதவன். தாம் M.A. படித்ததாக நினைத்துக்கொள்ளட்டுமே என்று சொல்வார். அவர் நினைத்ததைப்போல் எவரும் அவரை M.A. படித்தவராகக் கொள்ளவில்லை. அவர் செய்வதைக் கேலியாக நினைத்தனர், பேசினர். நாளாவட்டத்தில் அவருக்கு ஒரு ( Knick name) பட்டப்பெயரிட்டனர். ஒரு கூட்டத்தில் அவருடைய பட்டப்பெயரைச் சொல்லி அவர் எதிரே அனைவரும் எக்காளமாகச் சிரிக்கும் நிலை ஏற்பட்டதுதான் மிச்சம். இல்லாத ஒன்றை இருப்பதாக நடித்தல் பொய். பொய்யால் விளைந்தது கடன். இனியாவது நம் மனம் இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லாத ஒன்றை நாடக்கூடாது. இந்த உண்மையை அவர் மனம் ஏற்றுக்கொண்டதாகக்கொள்வோம். எனினும் உணர்வும், மனப்பான்மையும் ஏற்றுக்கொள்ளா.

இந்த அளவு மனமாற்றம் ஏற்பட்டபின், ஒரு சந்தர்ப்பத்தில் இவரை, உங்கள் தகப்பனாருடைய உத்தியோகம் என்ன? என்று மற்றொருவர் கேட்கும் காலத்து, பழைய உணர்வு தலைதூக்கி டெபுடி கலெக்டராக ரிடையர் ஆன தகப்பனாரைக் கலெக்டராக

ரிடையரானார் என்று சொல்ல மனம் துடிக்கும். அந்த மனப்போராட்டத்தில் அத்துடிப்புக்குத்தான் வெற்றி கிடைக்குமே தவிர, இவருக்கு வெற்றி கிடைக்காது. இதைச் சொல்லலாமா, வேண்டாமா என்று அவர் மனம் சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது தன்னையறியாமல் வாய் "கலெக்டர்'' என்று சொல்லும். மனமும், அறிவும் மாறியிருக்கலாம். அது உண்மையாகவும் இருக்கலாம். அந்த மனமாற்றத்தை உணர்வு ஏற்றுக்கொள்ளாது, ஏற்றுக்கொண்டு செயல்படாது. உணர்வையும் அதை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டுமானால், ஒரு விரதத்தை மேற்கொள்ள வேண்டும். ஓர் உறுதியைக் கடைப்பிடிக்க வேண்டும். எல்லாக் காரியங்களிலும், செயல்களிலும் அந்த உறுதியை நிறைவேற்ற முன்வரவேண்டும். அப்படி எல்லாம் செய்தால்தான், உணர்வை நம் கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியும். இதைச் செய்யக் கங்கணம் கட்டிக்கொண்டால் படபடப்பு (Tension) வந்துவிடும். செய்து முடிப்பவர் செயல்வீரர், சிறப்பானவர். ஓர் உணர்வை அதுபோல் முழுவதுமாக மாற்றினால் அது பெருவெற்றி. அதேபோல் எல்லா உணர்வுகளையும் மாற்றுவதே இம்முறை.

பணம் பெறுவதைக் கடன் என்று சொல்கிறோம். என்றாலும், எதைப் பிறரிடமிருந்து பெற்றாலும் கடனாகும். ஒருவகையில்லாவிட்டால், மற்றொரு வகையில் நாம் அதைத் திருப்பித் தரவேண்டும். இது வாழ்க்கையின் அடிப்படை நியதி. அந்தந்த நாட்டு கலாச்சாரப்படி இவை கடமை என்றும், கர்மம் என்றும், காரண-காரியம் (cause&effect) என்றும், (Irony of fate) விதியின் விளையாட்டு என்றும், சென்றது திரும்பி வருகிறது என்றும், (History repeats itself) ஒரு நாட்டை வென்றவன் அந்நாட்டின் கலாச்சாரத்திற்கு அடிமையாகின்றான் என்றும், (Today's friends are tomorrow's enemies and today's enemies are tomorrow's friends ) இன்றைய நண்பர்கள் நாளைய எதிரிகள், இன்றைய விரோதிகள் நாளைய நண்பர்கள் என்றும், இறைவனுடைய தண்டனை என்றும் பேசப்படுகிறது.

இங்கிலாந்து அன்று ஆசியாவில் ஆட்சி செலுத்தியது. இன்று லண்டனில் பிரிட்டிஷாரைப் பார்ப்பது அரிது. லண்டன் இந்தியராலும், ஆப்பிரிக்கராலும், பிற தேசத்தினராலும் நிரம்பியுள்ளது. ஆசியரே லண்டனை, "ஆட்சி'' செய்கின்றனர் இன்று என்று பேசும் அளவுக்கு லண்டன் நம்மவரால் நிரப்பப்பட்டுள்ளது.

சுமார் நூறு ஆண்டுகளுக்குமுன் அமெரிக்க கர்னல் பெரி தம் போர்க்கப்பல்களுடன் ஜப்பானுக்குச் சென்று ஜப்பானிய மார்க்கட்டைப் போர்முரசம் கொட்டிப் பிடித்தார். ஜப்பான் அடிபணிந்தது. இன்று அமெரிக்க முதலாளிகள் ஜப்பான் என்று சொன்னால் நடுநடுங்கும் அளவுக்குப் பீதியடைந்துள்ளனர்.

அகிம்சை என்ற தத்துவத்தை, காந்திஜி உலகில் முதல் அரசியல் அமுல்நடத்தினார். 1931-32இல் நடந்த ஒத்துழையாமை இயக்கம் இந்தியா எங்கும் வெற்றிவாகை சூடிக்கொண்டுள்ள நேரத்தில் சௌரி சௌரா என்ற குஜராத் கிராமத்தில் மக்கள் இரு போலீஸ்காரர்களைக் கொலை செய்தனர் என்பதால் அந்த அளவும் வன்முறை கூடாது என்று தாம் ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்திஜி ரத்து செய்தார். 1947-இல் சுதந்திரம் வந்தது. பஞ்சாபிலும், நவகாளியிலும், பீகாரிலும், இந்தியா எங்கும் 50 இலட்சம் இந்து-முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டனர். "அன்று இயற்கையான சுதந்திரப் போராட்டத்தின் வீர உணர்ச்சியை நான் அகிம்சையின் பெயரால் புறக்கணித்தேன். வட்டியும் முதலுமாகச் சேர்ந்து இன்று ஹிம்சை தலைவிரித்தாடுகிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'' என்றார் காந்திஜி.

ஒரு கொலை வழக்கில் 4 பேருக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. 3 பேரைத் தூக்கு போடும் நாள் நெருங்கும் பொழுது தவிதவித்தனர்; படபடத்தனர். ஒருவர் நிதானமாக இருந்தார். அவர்களுடனிருந்த அரசியல் கைதிகள் இந்த விநோதம் புரியாமல் அவரை அணுகி விசாரித்தனர். இந்தக் கொலை நடந்ததே எனக்குத்

தெரியாது. அந்தச் சமயம் நான் ஊரிலில்லை என்று அவர் சொன்னது அவர்களுக்கு மேலும் வியப்பாக இருந்தது. இதற்குமுன் 12 கொலை செய்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் என்மீது வழக்குக்கூடப் போடவில்லை. இப்பொழுது செய்யாத குற்றத்திற்கு தூக்கு வருகிறது. அப்பொழுது செய்த கொலைக்கு இப்பொழுது தூக்கு. அதனால் என் மனம் அதை ஏற்றுக்கொள்கிறது என்று விளக்கமளித்தார்.

பணமும், பணக்காரனும் எதிரி என்ற கொள்கையைப் பறைசாற்றி வாழ்க்கையை அதற்கே அர்ப்பணித்தவர் வயதான நாட்களில் பணக்கார நண்பர்களுடைய தாட்சண்யத்தால் மட்டுமே வாழவேண்டிவந்தது. சீர்திருத்தத் திருமணத்தைச் சிறப்பான கொள்கையாகக்கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்தவர் பிள்ளை அமெரிக்கா போய்வந்து சாஸ்த்ரோக்தமான திருமணத்தை இலட்சியமாக நினைப்பதை நிறைவேற்ற வேண்டியவராக இருக்கின்றார்.

ஓர் இளம் பட்டதாரி. சர்க்காரில் ஆபீஸராக இருந்தார். சொரணையுள்ள மனிதன் சர்க்கார் உத்யோகத்திற்கு வரமாட்டான் என்று சொல்லி அதை ராஜிநாமா செய்தார். மேற்படிப்புக்குப் போனார். இலட்சியமான நண்பனைப் பிழைக்கத் தெரியாதவன் என்று கேலி செய்வார். தகப்பனாரைப் புறக்கணித்தார். கடைசி காலத்தில் தகப்பனாரை வந்து பார்க்க மறுத்தார். மனைவியே கண்கண்ட தெய்வம், வழிபாட்டுக்குரிய நடமாடும் தெய்வம் என்ற நடைமுறையைக் கைக்கொண்டார். உடன் பிறந்தவர்களைத் திரும்பிப் பார்ப்பதில்லை. அவர் வாழ்க்கையே அவருக்குப் பின்னர் சில அனுபவங்களைக் கொடுக்க ஆரம்பித்தது.

இராஜிநாமா செய்த வேலையைப் பிறகு சிபாரிசு வைத்துத் தேட வேண்டியதாயிற்று. மேற்படிப்பை முடித்துவிட்டு வந்து பழைய வேலையே கிடைத்தால் போதும் என்று பரதேசிகளுக்கு வணக்கம்

சொல்லி வாங்க வேண்டியதாய்விட்டது. பிழைக்கத் தெரியாது என்று கேலி செய்தவனிடம் சென்று வாழ்வதெப்படி என்று ஆலோசனை கேட்க வேண்டியதாயிற்று. புறக்கணித்த தகப்பனார் இறந்தார் என்ற செய்தி கேட்டு ஓடிவந்தார். அவர் வருவதற்குள் தகப்பனார் அவர் கண்ணில் படக்கூடாது என்று தம் உடலையும் தகனம் செய்துகொண்டார். இவருடைய பிள்ளை உலகத்திலேயே இதுபோன்ற பிள்ளை ஒருவருக்கும் பிறக்கக்கூடாது என்பதுபோல் வளர்ந்து அதற்குரிய இலட்சணங்களை முறையாக நிறைவேற்றிவருகிறான். எந்த மனைவியைத் தெய்வமாக நினைத்தாரோ அவள் இரு ஆண்டுகளில் இவருக்கு அளித்த வரங்களால், வீட்டை விட்டு ஓடி எந்த ஆசிரமத்திலாவது சேர்த்துக்கொள்வார்களா என்று அலைய வைத்தாள். எவரும் சேர்த்துக்கொள்ளவில்லை என்பதால் அவளிடமே புகலிடம் தேடி அடைக்கலமானார். அவர் பெறுவதைப்போல் 3 மடங்கு சம்பளம் உள்ள உத்தியோகம் கிடைத்து அதில் அவர் சேர்ந்தபின், அந்த உத்தியோகம் வேண்டாம் என்று அவள் செய்த ஆர்ப்பாட்டம் பெரியது. அவரும் பழைய வேலைக்கே வரவேண்டியதாயிற்று. எந்த உடன் பிறந்தவர்களைத் திரும்பிப் பார்க்க மறுத்தாரோ அவர்களிடம் சிபாரிசுமூலம் உதவி கேட்க வேண்டியதாயிற்று. வாய் ஓயாமல் எந்த அரசியல் தலைவரைத் திட்டினாரோ, அவரிடம் சென்று வேலை கேட்டு நிற்க வேண்டியதாயிற்று.

கர்மம், தலைவிதி, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று நாம் அளிக்கும் விளக்கங்கள் ஒரு பேருண்மையைத் தாங்கிவருகின்றன. அவற்றையெல்லாம் வேறுவிதமாகவும் விளக்கலாம்.

ஒவ்வொரு நேரத்திலும் செய்ய வேண்டியது, செய்யக்கூடியது என்றுண்டு. அவற்றை அப்பொழுது புறக்கணித்தால், பிறகு அதற்கேற்ற முறையில் நிறைவேற்ற வேண்டியது வரும். அப்பொழுதும் நாம் நிறைவேற்றாவிட்டால், அவை தாமே தம்மைப் பூர்த்தி

செய்துகொள்ளும். பூர்த்தியாகும் விதம் நாம் புறக்கணித்ததற்குப் பொருத்தமாக அமையும்.

கடன் என்பதை மேலே சொன்ன பொது உண்மையின் அடிப்படையில் பார்த்தால், அக்கருத்துப்படி தெளிவுற விளங்கிக்கொண்டால், கடன் ஏற்பட்ட சூழ்நிலை, மனநிலை, வழி, வகை, முறை, செயல், போக்கு ஆகியவற்றை முழுவதுமாகப் புரிந்துகொண்டால், இன்று அவற்றிற்கு என்ன மாற்று செய்ய வேண்டும்? அதில் அறிவின் பங்கென்ன, உணர்வால் எப்படியிருக்க வேண்டும், செயலின் கடமை என்ன என்பவை விளங்கும். விளங்கியவற்றை ஏற்று, உணர்ந்து, செயல்பட்டு, ஆத்ம சமர்ப்பணம் செய்து, கடன் நீங்கப் பிரார்த்தனை செய்தால், அந்தக் கடன் விலகுவது மட்டுமன்று, அதே அளவிற்குக் கையில் பொருள் சேரும். அதாவது, கடன் திருவுருமாற்றமடைந்து, சேமிப்பாகும். அதுவே அன்னையின் இரஸவாதம் (Mother's Alchemy).

******

 



book | by Dr. Radut