Skip to Content

6. இரண்டாம் கட்டம்

ஆசிரமம் வந்து, சமாதி தரிசனம் செய்து, ஆன்மீக விளக்கம் பெற்று, இதுநாள்வரை கண்டறியாத மனநிம்மதி பெற்று, அதனால் பக்தி மேலிட்டு, அன்னையை அன்றாட வாழ்வில் நிதர்சனமாகக் கண்டு, ஒவ்வொரு முறையும் நெஞ்சு நெகிழ்ந்து, கண்கள் கலங்கிய அன்பர்களுடைய பொதுவான உணர்வை விவரிக்கும் சொற்கள் சில:

  • இனி அன்னையில்லாமல் வாழ முடியாது.
  • பிரார்த்தனையால் நடக்காததே இல்லை என்றாலும், மனம் பிரார்த்தனையைவிட அன்னையையே நாடுகிறது. அன்னையை மட்டும் நினைக்கின்றது. பிரச்னைகள்கூட நினைவு வருவதில்லை. அன்னையின்றி நான் இல்லை.
  • இத்தனை நாள் அன்னையை அறிந்து கொள்ளாமல் நாள் வீணாகிப் போய்விட்டது.
  • இவ்வளவு அண்மையிலிருந்தும் உயிருடன் அன்னையைக் காணக் கொடுத்து வைக்க வில்லையே.
  • இனி தேவை ஒன்றுதான். மீதிநாள் நான் அன்னையை விட்டுப் போகக்கூடாது.

பக்தியினாலும், மனம் தெய்வ வழிபாட்டின் இனிமையைக் கண்டதாலும், இனிய அன்னை இதயத்தில்

இனிமையாக இருப்பதாலும், மேற்சொன்னபடி பக்தர்கள் கூறுகிறார்கள். இதைவிட உயர்ந்த பக்தியில்லை என்பதுபோல் அன்பர்கள் சமாதியருகே நடந்து கொள்வதை அனைவரும் கண்டிருக்கிறார்கள்.

அன்னை அதிகமாகக் கொடுக்கின்றார். நாம் அதில் ஒரு சிறிதே பெறுகிறோம். அதிகமாகப் பெற்றுக் கொள்வது நல்லது என்ற கருத்தை நான் நெடுநாள் களாக வலியுறுத்தி வருகிறேன். உதாரணமாக அன்னை நமக்கு அளிக்க விரும்புவது கல்வி போன்றது. பட்டங்கள் பி.ஏ.யில் ஆரம்பித்து, எம்.ஏ., எம்.எஸ்ஸி., பிஹெச்.டி., டி.லிட், வரை இருக்கின்றன. படிப்பு மேலும் தொடர்கிறது. பட்டம் அளிப்பது கல்லூரி, அதற்கு முந்தைய நிலை உயர்நிலைப் பள்ளி, அதன் முன் நடுநிலைப் பள்ளியும், ஆரம்பப் பள்ளியும் உள்ளன. எனவே பள்ளிப்படிப்பும், கல்லூரிப் படிப்பும் எட்டு நிலைகளில் அமைந்துள்ளன. இன்றைய இந்தியாவில் எழுத்தறிவு 60 சதவிகிதத்துக்கு உயர்ந்துள்ளது. முன்பு 27 சதவிகிதம்தான் இருந்தது என்று நாம் பெருமைப்படும்பொழுது குறிப்பாக ஆரம்பப்பள்ளிப் படிப்பையே (literacy, எழுத்தறிவு) நாம் மனத்தில் கொண்டு பேசுகிறோம்.

அன்னையிடம் வந்து அருள் பெறுவதும் இதே போன்று பல நிலைகளில் இருக்கின்றது. பலன் பெறுதல் என்றால் அருள் பெறுதல் என்றே பொருள். அன்னை மூலம் நாம் பெறும் பொருள் அவர் அருளைத் தாங்கி வருதலால், ஒருவகையில் அருளுக்கும், பொருளுக்கும் வித்தியாசமில்லை. அருள் பெற்றால் அதன் விளக்க

மாகப் பொருள் வரும். பொருள் பெற்றால் அதன் உள்ளுறை அம்சமாக அருளும் வரும். அதனால் அருளும், பொருளும் அன்னையைப் பொருத்தவரை ஒன்றே.

ஒரு பிரச்னையாக அன்னையிடம் வந்து, பிரச்னை தீர்ந்து, அருள் பெற்ற அன்பர்கள் தாங்கள் பெற்றதைப் பூர்த்தி செய்துகொண்டு, அடுத்த நிலைக்கு வரவேண்டும் என்று நான் விரும்புவதுண்டு. உண்மையான பக்தியிருக்கும் பொழுதே அடுத்த நிலையான இரண்டாம் கட்டத்திற்கு வந்து அருள் பெற்றவர் இதுவரை என் அனுபவத்தில் இல்லை. கல்வித் திட்டத்தோடு ஒப்பிட்டால் அன்பர்கள் பெற்ற பெரும்பேறெல்லாம் பள்ளிப்படிப்பின் பல நிலைகளை ஒக்கும். அதைத் தாண்டிவர எவருக்கும் தோன்றுவதில்லை. முடிவ தில்லை. அடுத்த நிலையைப் பற்றி மறந்துவிடுவதே இதுவரை என் வாழ்வில் இயற்கையாகக் காணக்கூடிய தாக இருக்கிறது.

முதல் நிலையே பலருக்கு அதிகமாகத் தோன்றும். சிலருக்கு அதைத் தாண்டி இரண்டாம் கட்டம் ஒன்றுண்டு என்று சிந்திக்கத் தெரிவதில்லை. அளவில் இல்லையென்றாலும், தரத்தில் இரண்டாம் கட்டம் உண்டு என்பதை இதுவரை எவரும் ஏற்றுக்கொள்ளத் தயங்கியதில்லை. ஆனால் நடைமுறையில் பெற்றுக் கொள்ளும் முயற்சியை எடுக்க முன்வந்ததில்லை.

பிஹெச்.டி. பட்டம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு இனி இப்பட்டத்தை எடுக்க முடியுமா, அப்படி எடுத்தாலும் (age limit) வயது வரையறையைத் தாண்டும்

முன் எடுக்க முடியுமா என்ற ஐயம் ஏற்பட்டவருக்கு அந்தச் சிக்கல் ஒரே நாளில் பிரார்த்தனையால் தீர்ந்தது. அதன் விளைவாகப் பதவி உயர்வு மூன்று முறை பெற்று பல்கலைக்கழக டீன் ( Dean) ஆனவருக்குத் தம் பக்திக்குரிய பலன் அடுத்த கட்டமான துணைவேந்தர் பதவியாகக் காத்திருக்கிறது என்பது தெரிந்து கொள்ள முடியவில்லை. எடுத்துச் சொன்னதை நம்ப முடிய வில்லை. நம்பிக்கையில்லாமல் பலிக்காது. அவருக்காக உருவான அந்தப் பதவி அன்னை பக்தரல்லாத, ஆனால் சரியான மனப்பக்குவம் உள்ள ஒருவருக்கு எதிர்பாராமல் கிடைத்தது. அன்னைக்குக் கல்வித் துறையில் சேவை செய்ய முடிந்த சந்தர்ப்பத்தில் உரிய அன்பர் ஒதுங்கிப் போனார். பக்குவம் உள்ள மற்றொருவர் சேவையின் சிறப்பைப் பாராட்டினார். பலன் அவரைத் தேடி வந்தது.

வருட வருமானம் 10 மடங்குகள் அருளால் உயர்ந்தது அதிகம் என நினைத்த மக்களுக்கு பின்னர் 100 மடங்கு உயர்ந்த பின்னர், அவர்களால் அடுத்த கட்டமும் உண்டு என்று நினைக்க முடியவில்லை. இதுவும் உயர்நிலைப் பள்ளியேதான் எனப் புரியவில்லை.

ஒன்றரை ஆண்டில் முதலீடு 12 மடங்குகள் உயர்ந்ததே அதிகம் என்று நினைத்த அன்பர், அந்த உயர்ந்த முதலீட்டில் தரத்தை 50 மடங்குகள் உயர்த்த வாழ்க்கை மூலம் அன்னை 4 முறை நெருங்கியும் அவர் விலகிப் போனார். விலகியவர் இருந்ததைவிட்டே விலகிப் போனார்.

நிலையில்லாமலிருந்தவர்க்கு உயர்ந்த நிலை ஒன்றரை மாத காலத்தில் அருள் பெற்றுத் தந்தது. அதற்குரிய அத்தனை மாற்றுகளையும் அடுத்த ஒன்றரை வருடத்திற்குள்ளேயே உற்பத்தி செய்து கொண்டார் மற்றொருவர்.

இலட்சம் கோடியாக ஒரு வருஷத்தில் மாறியவுடன், இலட்சியத்தை விட்டுத் தடம் புரண்டு போனார் மற்றொருவர். பல ஆண்டுகளாக இருந்த தீராத வியாதி, அன்னையின் அருள் மூலம் தீர்த்துக் கொள்கிறேன் என்று கூறி நாள் குறிப்பிட்டவுடன், அந்த நாள் வருமுன் முழுவதும் மறைந்தது. அப்படி முழுவதும் மறைந்தாலும் 95 சதவிகித குணம்தான் கிடைத்துள்ளது. மீதி 5 சதவிகிதத்தையும் முயன்று அகற்ற வேண்டும். அப்படி அகற்றினால் பூரண சௌக்கியம் நிரந்தரமாகக் கிடைக்கும் என்பதை நன்றியுடன் ஏற்றுக் கொண்டாரே தவிர, அந்த 5 சதவிகிதக் குறையை விலக்க முன்வரவில்லை. 95 சதவிகிதக் குணத்தால் பெற்றதை அனுபவிக்கப் போய்விட்டார்.

இரண்டாம் கட்டத்திற்கு வரமுடியாத காரணங்கள் பல. அப்படியொன்று இருப்பதாகத் தெரிவதில்லை. தெரிந்தால் முயலுவதில்லை. முயன்றால் தொடர்வ தில்லை. எந்த நல்ல முறைகளால் முதற்கட்டம் பூர்த்தியாயிற்றோ அதை மறந்து விடுவது, எவரால் முதற்கட்டம் முடிந்ததோ அவருக்கு எதிராகச் செயல்படுவது, தெரியாமல் அன்னையிடம் வந்து பலன் பெற்றதைப் போல், அறியாமல் அன்னை முறைகளை

விட்டகல்வது. முதற்கட்டப் பலனின் அளவு தம் நிலைக்கு அதிகமாக இருப்பதால் நிலையிழந்து செயல்படுவது போன்ற பல காரணங்களுண்டு.

அன்னையிடம் வந்து அன்பையும், அருளையும் பெற்றவர் தொடர்ந்து அருள் பெற்று கடைசிக் கட்டம் வரை வந்து தாமும் உயர்ந்து, ஆனந்தமடைந்து, தாம் பெற்றதை மற்றவர்க்கும் கொடுக்க வேண்டும் என்ற இலட்சியம் இன்றுவரை இலட்சியமாகவே இருக்கிறது. யதார்த்தமாகவில்லை.

******book | by Dr. Radut