Skip to Content

4. நான்

மனித சுபாவத்தைப் பற்றியும், வாழ்வின் இரகசியங்களைப் பற்றியும் மனிதன் அறியாததில்லை என்ற கருத்தை, "எவ்வளவு உயர்ந்த கருத்தை ஒருவர் இன்று ஞானோதயத்தால் கண்டுபிடித்தாலும், பழைய ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால், எங்காவது அதை யாராவது, எப்பொழுதாவது சொல்லியிருப்பார்கள்'' என்று மேதைகள் சொல்வது வழக்கம். அது உண்மை. மகாவிஷ்ணு மீது கொண்டுள்ள பக்தியில் தன்னை மிஞ்சியவரிலர் என்று நாரதர் நினைத்ததையறிந்து, பூவுலகில் ஏர் ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு குடியானவனைக் காட்டி, அவனே தனக்குச் சிறந்த பக்தன் என்று நாரதரிடம் சொல்லி, அதையும் ஒரு சோதனை மூலம் நிரூபித்தார் என்று ஒரு கதையுண்டு. பக்தியுயர்ந்தது என்பதைப் பயன்படுத்தி, நான் சிறந்த பக்தன் என்று தன்னையும், தன்னில் நிறைந்துள்ள அகங்காரம் என்பதையும் உயர்த்துவது மனித குணம். இது மனிதனில் ஊறிப் போனது. மாற்ற முடியாது. மனிதன் வேறு, அவன் அகந்தை வேறில்லை. அகந்தையுடன் அவன் ஒன்றிவிட்டான் என்பது தொன்று தொட்டு நாமறிந்தது.

யோகம், தவம், பக்தி, பூஜை, சிஷ்ய பாவம், ஞானம், சேவை ஆகியவற்றை நாடினால், "நான் அழிய வேண்டும்'', அது அழியும் அளவுக்கே நமக்குப் பலனுண்டு என்பது அஸ்திவாரமான தத்துவம். இவற்றை

மேற்கொண்டவரும் நான் சிறந்த யோகி, என் தவம் பெரியது, என் பக்தி சிறந்தது. பூஜையில் வல்லவன் நான், எனக்கு மிஞ்சிய சிறப்பான சிஷ்யரிலர், ஞானமே பக்தியைவிட உயர்ந்தது. அதனால் நான் அதை மேற்கொண்டேன். எனவே நான் சிறந்தவன், என்னைப் போல் சேவை செய்ய யாரிருக்கிறார்கள் என்ற உயர்ந்த தத்துவங்களைப் பாராட்டுவதன் மூலம், நான்' முந்திக் கொண்டு வரும். நான்' வந்தால், அது எந்த உருவத்தில் வந்தாலும், அங்கு இறைவனுக்குரிய சிறப்பு எதுவுமிருக்காது.

நான்' வரும் ரூபங்களை அறிய ஆன்மாவில் உண்மையிருக்க வேண்டும். உண்மையிருந்தால் நான்' மேலே வருகிறதா எனத் தெரியும் என்கிறார் அன்னை. பூரண யோகத்தின் முதல் நிபந்தனை நான்' அழிவது.

அன்னையை வழிபட, வழிபடுவதால் பலன் பெற முக்கியமாகத் தேவைப்படுவது அடக்கம். நான்' என்பது பின்னணிக்குப் போய், அழிந்து, மறைய வேண்டும். அதன் மற்ற ரூபங்களும் அழிய வேண்டும்.

அன்னையை வழிபட ஆரம்பித்தபின் காரியங்கள் தடையின்றி நடக்கும். ஏற்கனவே தடையாக இருந்தவை இப்பொழுது தானே நடக்கும். அப்படியும் குறையாகியுள்ள காரியங்களுக்காகப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தால், முதற் பிரார்த்தனையிலேயே அது பூர்த்தியாகும், தொடர்ந்த பிரார்த்தனையால் பூர்த்தியாகாதவை இல்லை என்பது அனுபவத்தில் கண்டவுடன், நான்' வீரியம் கொண்டு, எழுந்து, தன்னை அலங்கரித்துக் கொண்டு,

ஆர்ப்பாட்டமாக மனதில் பறைசாற்றுவது என்ன வென்றால், என் பிரார்த்தனை தவறாது என்பதாகும். அடுத்த நிமிஷம் நிலைமை தலைகீழே மாறும். பிரார்த்தனை பலிக்கும். முக்கியமான பிரார்த்தனை கிணற்றில் கல் போட்டாற் போலிருக்கும்.

பிரார்த்தனையை ஓரளவுக்கு அதிகப்படுத்தினால், உள்ள சிக்கல் அதிகமாகும். இதுவரை எல்லாம் பலித்தது, இப்பொழுது இப்படி ஒரே அடம் செய்வது போல் காரியம் நகரவில்லையே, அன்னைமீது என் நம்பிக்கையே ஆட்டம் கண்டுவிடும் போலிருக்கிறதே என்று மீண்டும் தியானம், பிரார்த்தனை, சமர்ப்பணம் ஆகியவற்றை மேற்கொண்டால், பிரச்னை அசையாது. மேலும் கடினமாகும். இதுபோல் நடந்தால் நான்' தீவிரமாக முன்னுக்கு வருகிறது எனப் பொருள்.

வெற்றியும், தோல்வியும் நமக்குரியது, மனித வாழ்வுக்குரியது. மனிதன் ஒரு காரியத்தை மேற் கொண்டால், நிச்சயமாக வெற்றி பெறுவான் என்று சொல்லமுடியாது. அது அவன் கையில் இல்லை. அன்னைக்குத் தோல்வியில்லை. அன்னையை வாழ்வில் ஏற்றுக் கொண்டவருக்குத் தோல்வி என்பதே கிடையாது என்பது ஒருவர் தன் வாழ்வில் கண்டவுடன், அன்னைக்குத் தோல்வியில்லை என்பதை மாற்றி, என் பிரார்த்தனைக்குத் தோல்வியில்லை, எனவே எனக்குத் தோல்வியில்லை என்கிறார். இதனால் நான்' முன்வருகிறது. அதன்பின் தோல்வி ஆரம்பமாகும்.

நானெனும் அகந்தையும், மனிதனும் இரண்டறக் கலந்துவிட்டதால், எங்கு நான்' முனைப்போடு கிளம்பி

வருகிறது என்பதைக் காண்பது சிரமம். இதில் பல நிலைகள் உள்ளன. அவையாவன:

  1. தன் அகந்தை, நான்' என்ற உருவில் நம் செயல் வெளிவருவதை அறிய முடியாதவர்.
  2. வாயால் பேசும்வரை தன்னையறியாமல் பேசி, காரியம் என வரும்பொழுது சுயநலம் வெளிப்பட்டு, வெளிப்படுவது தெரிந்து, அதையே விரும்பிப் பின்பற்றுபவர்.
  3. நான்' என்பதே சரி, அதுவே நிலைபெற வேண்டும் என்று நம்புபவர்கள்.
  4. இலட்சியமாகப் பல ஆண்டுகள் பேசி, பேச்சு செயல்பட வேண்டிய நேரம் வந்த பொழுது, தானும் மற்றவர்களைப் போல இருப்பதை முதன் முறையாகக் காண்பவர்கள்.
  5. நான்' என்பதை வலியுறுத்திப் பலன் பெறுவதை, சாமர்த்தியம் என நினைப்பவர்கள். நினைத்ததை வெளியிட்டுப் பெருமைப்படுபவர்கள்.

நண்பர்கள் இருவர். இருவரும் சுயநலமானவர்கள். இரகசியமானவர்கள். ஒருவர் இரகசியம் 100% அடுத்தவர் இரகசியம் 60%. இருவரும் சேர்ந்து செய்யும் வேலையில் அடுத்தவருக்கு ஒரு வேலையைப் பற்றியும் சொல்லாத முதல்வர் அடுத்தவர் 5, 6 விஷயங்களைச் சொல்லி, 7ஆவது விஷயத்தை மறைத்த பொழுது, "என்ன மனிதன் இதைக்கூடச் சொல்லவில்லை?'' என்றார். குழந்தைகளை வற்புறுத்தி உடம்புக்கு நல்லது என்று

சொல்லி ஐந்தாறு பேர்களைச் சாப்பிட வைத்த பொருளை, தான் சாப்பிட ஆரம்பித்தபொழுது, "இப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியாது, எப்படி இதைச் சாப்பிட முடியும்?'' என்று சொல்லிச் சாப்பிடாமலிருந்தார் ஒருவர். அகந்தையை அழிப்பதை அடிப்படையாகக் கொண்ட ஸ்தாபனத்தின் முக்கியஸ்தர், பிறர் சொல்வதைத் தாம் ஏற்க வேண்டிய ஸ்தாபன நிலைமை ஏற்பட்டவுடன், "என்னால் ஒருவர்க்குக் கீழ்ப்படிந்து செயல்படமுடியாது'' என்றார். எச்சில் என்பது மூடநம்பிக்கை என்று பலநாள் பேசியவர், ஒரு சந்தர்ப்பத்தில் மற்றொருவர் எச்சிட்ட டம்ளரில் குடிக்க நேரிட்டபொழுது, "அட சனியனே, இதை மனிதன் சாப்பிட முடியுமா?'' என்றார். திருட்டுக் கூட்டத்தில் ஒருவர் பிறரை அணுகிக் காரியங்களை மேற்கொள்ளும் பொழுது தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, "எங்கள் கூட்டத்தில், என்னைத் தவிர அனைவரும் திருட்டுப் பசங்கள்'' என்று கூறி நம்பிக்கை ஏற்படுத்த முயன்றார். மானேஜராக வேலைக்குச் சேர வந்தவர் முதலாளியைப் பார்த்து, "இந்த பாக்டரியை ஐந்து வருடங்களுக்குப் பின் எனக்கே கொடுத்துவிடுங்கள்'' என்று கேட்டார்.

நாட்டின் ஊழலைப் பற்றி நாலு பேர் பேச ஆரம்பித்தபொழுது, இனி தலைவராக வர லஞ்சம் வாங்காத ஒருவரைக் கண்டுபிடிக்க முடியுமா என ஒருவர் கேட்டார். பதிலுக்கு, "அப்படிப்பட்ட ஒருவரை நான் அறிவேன்'' என்று அதில் ஒருவர் சொல்லிய பொழுது யாரை நாட்டில் அவர் குறிப்பிட விரும்புகிறார் என அனைவரும் தெரிந்து கொள்ள விரும்பினர். அவர்

தம்மைப் பற்றி மிக அதிகமான நினைப்புடையவர் என அறிந்த மற்றொருவர், "உங்களைத்தானே அப்படிக் குறிப்பிடுகிறீர்கள்'' எனக் கேட்டார். தன் உயர்வின் சிறப்பை அதிகமாக நினைப்பது மனித இயல்பு.

கூலிக்காரனுடைய மகன் படித்து, பட்டம் பெற்று, தொழில் நடத்தி, செல்வம் பெற்றபொழுது தம் தகப்பனாருக்கு அவருடைய முதலாளி செய்த உதவியை மிக ஆர்வமாக விவரித்தார்.

"என் தகப்பனாருடைய முதலாளிக்கு நிறைய நிலமுண்டு. ஒரு ரைஸ்மில் உண்டு. அவருக்கு நாலு பிள்ளைகள். பாகம் பிரித்தபொழுது எல்லாப் பிள்ளைகளும் ரைஸ் மில் யாருக்கு என்று நினைத்தனர். நிலத்தைப் பிரித்துக் கொடுத்த முதலாளி, என் தகப்பனாரிடம், "ரைஸ் மில்லை உனக்குக் கொடுக்க விருப்பப்படுகிறேன். இன்று முதல் நீயே அதற்கு முதலாளி. அதற்கு ஒரு விலை நிர்ணயம் செய்து, அதி லிருந்து வரும் வருமானத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அதை நாளடைவில் கொடுத்துவிடு'' என்றார். அவருடைய பிள்ளைகள் ஆட்சேபித்த பொழுது, "அவனும் எனக்கு ஒரு பிள்ளை'' என்று பதில் சொன்னார்.''

தம் தகப்பனாரின் சேவை, விசுவாசம், அவருடைய முதலாளியின் பெருந்தன்மை ஆகியவற்றை ஆர்வமாக விவரித்தவர், தம் தம்பிப் படிப்பில்லாமலிருப்பதையும் தம் அண்ணன் முன்னுக்கு வரச் சிரமப்படுவதையும், அவர்களுக்கு தாம் ஒரு சிறிதும் உதவ முன் வராததும் தவறாகப்படவில்லை. இது அவர் மனப்பான்மை.

என் தகப்பனாருக்கு அவர் முதலாளி உதவியது சரி.

நான் அண்ணன் தம்பிக்கு உதவாதது சரி என்பதாகும். எல்லாரும் எனக்கு உதவ வேண்டும், நான் யாருக்கும் உதவக் கூடாது என்ற தம் நிலையைக் கண்டு அவர் வெட்கப்படும் நிலையிலும் அவர் மனம் இல்லை. "அடிக்கடி உன் பழைய கல்லூரி நண்பன் வீட்டுக்குப் போகிறாய். அவனுக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறாய், இது என்ன விஷயம்? ஒருவேளை அவன் உனக்கு உறவா?'' என்று கேட்டவருக்கு, "அவன் எனக்குப் பண உதவி செய்கிறான். அதனால் போகிறேன். என்னை மடையன் என்று நினைத்தாயா? அந்த இலாபம் இல்லாவிட்டால் நான் ஏன் அங்கு போகிறேன்?'' என்று பதில் சொன்னார். ஆதாயத்திற்காக நட்பைப் பாராட்டுவது அவருக்கு வெட்கமான காரியமாகத் தோன்றவில்லை. வேறு பல ரூபங்களில் இந்த நான்' ஒளிவு மறைவு இல்லாமல், இது வெட்கப்பட வேண்டியது என்பதையும் அறியாமல் கீழ்க்காண்பது போல் வரும்.

"நான் ஒரு புள்ளி போட்டேன். அது எப்படி நடக்காமல் போகும்?

"என்னை யாரென்று நினைத்தாய், நானா கொக்கா?''

"உங்கள் வீட்டில் நான் சாப்பிட்டால், அது உனக்கு ஆசீர்வாதம்''.

"நான் வந்து போனால், உனக்கு நல்லது நடக்கின்றதா இல்லையா பாரு''.

"என்ன மனிதர்கள் இவர்கள்? நல்லெண்ணம் வேண்டாமா?''

இதுபோன்ற சுயநலம் மிகுந்த மனப்பான்மையை நான்' என்பதன் மூலமாக வெளியிடுவதை, சிறுவர்கள் படம்பிடித்துக் காட்டுவது போல் கேலியாக, "கடவுளே! என்னை மட்டும் காப்பாற்று''. "புலிக்குப் பயந்தவர்கள் என்மீது படுத்துக் கொள்ளுங்கள்'' என்ற வாசகங்களால் குறிக்கின்றார்கள்.

ஒரு வீட்டில் டிரைவர் மாதத்தில் 5 நாள் லீவு எடுத்துக் கொள்கிறான். வண்ணான் அடிக்கடி துணிகளைத் தொலைத்து விடுகிறான். போட்ட மின் விசிறி, மின் விளக்கை வீட்டிலுள்ளவர்களும், வருபவர்களும் நிறுத்துவதில்லை. இது போன்ற அநேக காரியங்கள் தொடர்ந்து நடப்பதை அந்த வீட்டில் ஏற்கனவே வேலை செய்தவன் பார்த்துவிட்டு, "இந்த வீட்டில் நடக்கும் அநியாயம்; எந்த வீட்டிலும் நடக்காது. அநியாயம், பெரிய அநியாயம்'' என்று சொன்னான். இவன் வேலையிலிருந்தபொழுது, மாதத்தில் 10 நாள் லீவு எடுப்பது வழக்கம். பிறகு அதுவும் அதிகமாக, மாதத்தில் பத்து நாள் வேலைக்கு வந்த பொழுதும் சம்பளம் முழுமையாகக் கொடுத்தார்கள் என்பது இவனுக்கு மறந்து போகிறது. மனித இயல்பின் சட்டம். "நான் செய்யலாம். அது எப்படி மற்றவர்கள் செய்யலாம்?'' என்பதே.

ரயில்வே ஸ்டேஷனில் நின்றபொழுது இறங்கிக் கீழே போய் டிபன் சாப்பிட்டுவிட்டு வந்து திரும்பி வந்தபொழுது தாங்கள் உட்கார்ந்த இடத்தில் மற்றவர்

ளிருப்பதைக் கண்டு, சண்டை போட்டு, எழுப்பி, திரும்பவும் உட்கார்ந்து கொண்டார்கள். எதிரிலிருந்தவர் இவர்களை யார் என விசாரித்தார். பூதான இயக்கத்தின் தொண்டர்கள் என்றார்கள். "ரயிலில் உட்கார்ந்த இடத்தை விட்டுக் கொடுக்க முடியாத நீங்கள் மற்றவரைத் தங்கள் நிலத்தைப் பிறருக்குத் தானம் செய்யச் சொல்கிறீர்களா?'' எனக் கேட்டார்.

ஒருவன், தான் இலட்சியவாதி எனவும், பிறர் பொருளுக்கு ஆசைப்படாதவன் எனவும், எவருக்கும் கடன்பட்டதில்லை எனவும் தினமும் பறைசாற்றி வந்தபொழுது, மனைவி அவனை உட்காரவைத்து, அவன் கடன்பட்டவர் பட்டியலை ஒவ்வொன்றாய் அவன் வாய் மூலம் சொல்லச் சொன்னாள். பதினைந்து பேருக்குத்தான் பாக்கி என்று சொல்லிய பிறகும், "இதெல்லாம் வேறே. கணக்கில் சேராது. என் இலட்சியம் இது. குறையாது'' என்று வீராப்பாகப் பேசியதாக ஒரு கதை.

ஒரு திட்டம் நாட்டில் பிரபலமானால், அரசியல் வாதி அதைத் தன் திட்டம் என்பார். ஐ.ஏ.எஸ்., அதிகாரி தம் திட்டம் என்பார். அங்குள்ள வல்லுநர் "நான் போட்டது அது'' என்பார், சுமார் பதினைந்து பேர் அதைத் தம் திட்டம் என்பார்கள். உண்மையைக் கண்டுபிடிக்க முடியாது. ஒரு நல்ல விஷயத்தில் ஏதோ ஒரு பங்கிருந்தால் அதன் முழுப்பலனையும் நான்' தனக்கே நாடும்.

நண்பரின் சுயநலத்தை மறைமுகமாகச் சுட்டிக் காட்ட சுயநலம், குறைவு, மாற்றமுடியாத சுபாவம் இவற்றைப் பற்றிய அன்னை கதை ஒன்றை அனுப்பியிருந்தார்.

பெற்றவர் கதையை ரசித்தார். பார்த்தவரிடமெல்லாம் அந்தக் கதையைச் சொன்னார். பல வருஷங்களுக்குப் பின் அனுப்பியவருடன் தம்மைப் பற்றிப் பேசும்பொழுது, அந்தக் கதையைப் பிரஸ்தாபம் செய்தார்கள். "உங்கள் மனநிலை அந்தக் கதை முழுவதும் பிரதிபலிப்பதால், பயன்படும் என அனுப்பினேன்'' என்றார். அடுத்தவர் அதிர்ச்சியடைந்தார். தாம் அப்பொழுது பேசியதெல்லாம் தம் நிலையைத் தமக்குணர்த்தியதால் கதை பொருத்தமானது என்று தெளிந்தார். "எத்தனையோ பேரிடம் சொன்னேன். அதுவே என் நிலை என எனக்கு இன்றுவரை புரியவில்லை'' என்றார்.

நம் வாழ்வு முழுவதும் நான்' என்பதால் நிறைந்தது. அதை உணருவதே கடினம். அது விலக்கப்பட வேண்டியது என்று உணருவது அதைவிடக் கடினம். விலக்குவது என்பது எளிதன்று.தன்னை உணர்ந்து, தன் குறைகளையறிந்து,

அவை விலக்கப்பட வேண்டியவை என விரும்பி, விலக்கும் முயற்சியை மேற்கொள்வது தவ முயற்சி. அதை மேற்கொண்டு, அது பலித்தால் பலித்த அளவுக்கு நாம் அழைக்காமல் அன்னை நம்மை நாடி வருவார். நான்' விலகிய இடங்களில் பிரச்னை வாராது. பிரார்த்தனை தேவையில்லை.

நான்' என் வாழ்வில் நிரம்பியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்வதே உயர்ந்த அடக்க மனப்பான்மை. அது அன்னை போற்றும் மனப்பாங்கு.

******book | by Dr. Radut