Skip to Content

2. இரஸவாதம்

செம்பைப் பொன்னாக்குவதை இரஸவாதம் என்பார்கள். அதற்குரிய தத்துவத்தைப் பகவான் ஸ்ரீ அரவிந்தர் வேறோர் இடத்தில், வேறு ஓர் உதாரணம் மூலம் குறிப்பிடுகிறார். அதைச் செய்யும் முறையையும் சுட்டிக் காட்டுகிறார். இரஸவாதம் யோக சித்தியாகும். என்னுடைய கட்டுரைகள் வாழ்க்கை அம்சங்களைப் பற்றி மட்டும் இருப்பதால், வாழ்க்கையில் இந்தத் தத்துவம் எப்படிச் செயல்படுகிறது என்பதை விளக்குகிறேன்.

ஒரு பொருளுக்குத் தனித் தன்மை, பொதுத் தன்மை, சாரம் (individuality, commonalty, essentiality) என்ற மூன்று குணங்களுண்டு. தனித்தன்மை தெரிந்தால் பயன்படுத்தலாம், சாரம் தெரிந்தால் ஒன்றை மற்றதாக மாற்றலாம் என்பது தத்துவம். முத்து, வைரம் என்பவை நாம் பயன்படுத்துவன. நாகரிகம் வருமுன் மனிதன் கண்ணில் இவை பட்டால், அவை என்ன என்று தெரியாததால், அவன் அவற்றைப் பயன்படுத்தவில்லை. இன்னும் விலங்குகளுக்கு அவற்றின் தன்மை தெரியாததால், விலங்குகள் அவற்றை நாடுவதில்லை. காகிதப் பூவை நாம் ஒரு பூ எனக் கருதுவதில்லை. அதன் தனித் தன்மையை அன்னை விளக்கியபொழுது, பக்தர்களிடையே காகிதப் பூவுக்கு மகத்துவம் வந்து விட்டது. அதன் மகத்துவம் தனித்தன்மை தெரியாத வர்கள் இன்னும் அதைப் பயன்படுத்துவதில்லை.

முத்தும், வைரமும் அடிப்படையில் ஒன்றே என்பது விஞ்ஞானம். விஞ்ஞானம் அவை எப்படிச் செய்யப் பட்டன (process) என அறிந்து கொண்டது. அதனால் இன்று செயற்கையாக முத்தையும் விஞ்ஞானத்தால் செய்ய முடிகிறது. வைரத்தையும் அதுபோல் செய்ய முடிகிறது.

இவை இரண்டிற்கும் (essence) சாரமாக அமைவது பிரம்மம் என்ற ஞானமிருந்தால் அது யோக ஞானம். அந்த ஞானமுடையவர்கள் முத்தை வைரமாக மாற்றலாம், வைரத்தை முத்தாக மாற்றலாம். அது இரஸவாதம், யோக சித்தி பெற்றவர்கள் செய்யக் கூடியது.

எல்லா யோக சித்தியையும் வேறு முறையிலும் பெறலாம். ஓர் அட்மிஷன் பெற மார்க் மூலமாகவும் பெறலாம். தவறாகவும் பெறலாம். பலனை மட்டும் கருதுபவர்களுக்கு இரண்டும் சம்மதம். ஆரம்பத்திலேயே பணம் கொடுத்துச் சேர்ந்தால், பிறகு உத்தியோகத்திற்கு வந்தபின் தவறாகச் சம்பாதிப்பது சரி என மனம் நினைக்கும். முறைக்குத் தகுந்த பலன் கிடைக்கும். சென்னை மவுண்ட் ரோடில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு மந்திரவாதி கண்களை scotch tape போட்டு ஒட்டியபின் கார் ஓட்டினார். யோகிக்குரிய சூட்சுமப் பார்வையை அவர் தன் மந்திர சக்தியால் பெற்றார். ஆனால் அவர் மந்திரவாதி. யோகம் பயில அவரைக் குருவாக யாரும் விரும்ப மாட்டார்கள். அதேபோல் யோக சித்திக்குரியவற்றைச் சித்து என்ற அளவில் பலர் பெற்றிருக்கிறார்கள். சித்து விளையாடுபவரையும்,

யோகியையும் பிரித்துப் பார்க்கும் பாகுபாடு நமக்குத் தேவை.

வாழ்வில் வறுமை, செல்வம் என்பவை உண்டு. செல்வம் அனைவராலும் விரும்பப்படுவது. வறுமை வெறுக்கப்படுவது. இவை எப்படி நம் வாழ்வில் உற்பத்தியாகின்றன (process) என்பது தெரிந்தால் வறுமையைச் செல்வமாக மாற்ற முடியும் என்ற "இரஸவாதமே'' நமக்குத் தேவையானது.

இந்தத் தத்துவஞானம், வறுமையைச் செல்வமாக மாற்றப் பயன்படும். அது முடிந்தால் நமக்குத் தேவையில்லாத எதையும் தேவையுள்ளதாக மாற்ற முடியும். சோகத்தைச் சந்தோஷமாகவும், இடையூற்றை வாய்ப்பாகவும், சண்டையைச் சமாதானமாகவும், நஷ்டத்தை இலாபமாகவும், சந்தேகத்தை நம்பிக்கை யாகவும், தொந்தரவை உதவியாகவும், திருட்டைக் காவலாகவும், குறையை நிறையாகவும் மாற்ற உதவும் தத்துவம் இது.

விஞ்ஞான அறிவுப்படி, முத்தும், வைரமும் செய்யப்பட்ட அடிப்படை முறை ஒன்றே. அடிப்படை யான முறை தெரிந்தால், அவற்றை நம்மால் செய்ய முடியும். இன்று உலகில் ஏற்பட்டுள்ள விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அனைத்தும், அதன் முறை தெரிவதால் நாம் கண்டுபிடித்ததாகும். பறவை பறக்கும் முறை என்ன என்று தெரிந்ததால், விமானத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. ஓடும் ஆற்றில் தண்ணீர் குடிக்கும் மாட்டுக்கு ஏன் நீர் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஓடுகிறது என்று தெரியாது. மேட்டிலிருந்து

பள்ளத்திற்கு நீர் ஓடுகிறது என்ற முறையை மனிதன் கண்டுகொண்டான். அதனால் வாய்க்கால் என்பதை அவனால் உற்பத்தி செய்ய முடிந்தது.

அறிவு எப்படி மனத்தில் சேருகிறது என்ற முறையை மனிதன் கண்டுபிடித்ததால் அறிவு வளர்க்கும் கல்வித்திட்டத்தை அவனால் ஏற்படுத்த முடிந்தது. மனிதன் தானே நூறு ஆண்டில் கற்கக் கூடியதைக் கல்வி 10 ஆண்டில் போதிக்கிறது. மனத்தில் அறிவு சேரும்முறையை அதிகமாகக் கிளென் டோமான் கண்டுகொண்டதால், 15 வயதில் கற்பதை 5 வயதில் போதிக்கிறார். முறை தெரிந்தால் பலன் பெற முடியும் என்பது தத்துவம். கடைசியாக இருபொருள்களுடைய அடிப்படையான சாரம் தெரிந்தால் ஒன்றை மற்றதாக மாற்ற முடியும் என்றும் யோகிகள் கண்டார்கள்.

சோகம், சந்தோஷம் ஆகியவை எதிரான உணர்வுகள். சோகம் ஏற்படுவது தீவிரமான குறையால். தீவிரமான நிறைவால் சந்தோஷம் ஏற்படுகிறது. சோகத்திற்கும், சந்தோஷத்திற்கும் அடிப்படையான பொதுவான சாரம் "தீவிரம்''. ஒன்று தீவிரமான குறை, அடுத்தது தீவிரமான நிறைவு. இதைக் கண்டுகொண்டவரால் சோகத்தைச் சந்தோஷமாக மாற்ற முடியும். ஒரு குழந்தை சுமார் பத்து வருஷமாகச் சோர்ந்து விழுந்து, சோகத்தில் திளைத்துக் கொண்டிருந்ததால், அதை அவ்வீட்டார் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று அதன் போக்குக்கு விட்டுவிட்டார்கள் என்றால், மேற்சொன்ன ஞானம் சோகத்திற்கும், சந்தோஷத்திற்கும் பொதுவான

சாரம். "தீவிரம்'' உள்ளவர் அந்தக் குழந்தையுடன் உட்கார்ந்து கொண்டு மெதுவாகப் பேச்சுக் கொடுத்தால், "ஏன் இப்படி இருக்கிறாய்?'' என்றால் குழந்தை மேலும் அழும். அதன் மனத்திலுள்ள ஓர் எண்ணத்தைக் கண்டு சொன்னால், "அம்மாவுக்கு உன்னைப் பிடிக்கவில்லையா?'' என்றால், குழந்தை காது கொடுத்துக் கேட்கும், ஆமாம் என்று தலையாட்டும். அதன் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு, அதன் மனத்திலுள்ளவற்றை நாம் சொல்ல ஆரம்பித்தால், அதன் மனத்திலுள்ள குறைகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே வந்தால், குழந்தை தலை நிமிர்ந்து உட்காரும், பேச ஆரம்பிக்கும், நாம் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டால் வீட்டிலுள்ள அத்தனை பேர் மீதும் ஒரு குறையை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும். சொல்வதில் தீவிரம் ஏற்படுவது தெரியும். தீவிரம் அதிகமானால், வேகம் அதிகரிக்கும், சோகம் குறையும். சொல்லியதையே திரும்பத் திரும்பச் சொல்லும். இதற்குள் குழந்தை சுறுசுறுப்பாவது தெரியும். வேகம் கோபமாக மாறும். திடீரெனத் துள்ளி எழுந்து விளையாட ஓடும். 10 வருஷச் சோகம் ஒரு மணி நேரத்தில் கரையும். இது நிரந்தரமாக மறைய இந்த முறையைப் பலமுறை தொடர்ந்து செய்ய வேண்டும். அதனால் சோகம் மறைந்து கொஞ்ச நாளில் மற்ற குழந்தைகளைப் போலாகிவிடும். சோகத்தை, சந்தோஷமாக மாற்ற, குறை சொன்ன தீவிரத்தை, நிறைவு காணும் தீவிரமாக மாற்ற வேண்டும்.

அதற்குரிய முறையும் இதுவே என்றாலும், அது அடுத்த பகுதியாகும். அதையும் செய்வது நல்லது.

முதல் சொன்ன இந்த இரண்டையும் ஒன்றை மற்றதாக இம்முறைப்படி மாற்றலாம். வறுமையைச் செல்வமாக மாற்றுதல் அனைவருக்கும் பயன்படக் கூடியது. இவை இரண்டிற்கும் பொதுவான சாரம் அனுபவிப்பதாகும். செல்வமுள்ளவன், செல்வத்தைப் பலவகைகளிலும் அனுபவிப்பான். வசதியாகவும், பிரயாணமாகவும், பொருளாகவும், வெற்றியாகவும், பெருமையாகவும் செல்வத்தை அனுபவிப்பதில் குறியாக இருப்பான். அவற்றைப் பெறுவது மட்டுமே அவன் குறிக்கோளாக இருக்கும். அதில் முழுத் தீவிரமாயி ருக்கும். பொருள்களை வாங்க, பிரயாணத்தை ஏற்பாடு செய்ய, பதவியைப் பெற, செல்வாக்கைப் பெறத் தன்னாலான அனைத்தையும் செய்வான், செய்த படியிருப்பான். வறுமை நிறைந்தவர், எதுவும் செய்யக் கூடாது, சோம்பேறித்தனத்தை அனுபவிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார்கள். எந்த வேலையையும் யார் மூலமாவது செய்து கொள்வதில் தீவிரமாக இருப்பார்கள், கடன் எப்படி வாங்கலாம் என்பதில் தம் முழுத் திறமையையும் காண்பிப்பார்கள். தனக்குச் சிரமமில்லாமல் வருமானம் வருவதெப்படி என்பதில் அறிவு அதிதீவிரமாக வேலை செய்யும். ஒரு செல்வரையும், ஒரு வறுமையில் வாடுபவரையும் கூர்ந்து கவனித்தால், "தீவிரம்'' இருவருக்கும் பொது. எதில் தீவிரம் என்பதுதான் வேறு என்று தெரியவரும். தீவிரம் இருப்பதால், திசையை மாற்றிக் கொண்டால்,

ஏழை செல்வனாகி விடுவான். அவன் மனம் மாறியபின், வாழ்வு அவனுக்குச் சாதகமான சூழ்நிலையை உற்பத்தி செய்யும்.

ஆறுமுறை திவாலான மாப்பிள்ளையை, மாமனார் வீட்டை விட்டு வெளியேறச் சொன்னார். வெளியே வந்தவருக்கு இந்த முறையைச் சொல்லிக் கொடுக்க ஒருவர் முன் வந்தார். அவரும் இசைந்து மனத்தை மாற்றிக் கொண்டார். மூன்றாம் மாதம் மாப்பிள்ளை வீட்டில் ஃபோன் வந்துவிட்டது, அவருக்கு நல்ல வருமானமுள்ள தொழில் ஏற்பட்டுவிட்டது. எப்பொழுது பார்த்தாலும், எங்காவது யாருடனாவது காரில் போகிறார். மாமனார், "நம் வீட்டிலிருக்கும் பொழுது இப்படி வேலை செய்திருந்தால், நான் அனுப்பியிருக்க மாட்டேன்'' என்றார். அவர் வீட்டிலிருக்கும் பொழுதும் இதே போல்தான் வேலை செய்தார். ஆனால் திசை வேறு.

இம்முறையால் பயன் பெற்றவர் பலர். ஒருவரைக் கண்டு பேசப்பயப்படுபவர், மேடை ஏறிப் பேசினார். 1000 பேரை வைத்து வேலை வாங்கினார். அரசியல் தலைவருக்குச் சந்தேகம் வந்து ஒருவர் மீது அரெஸ்ட் வாரண்ட் போட்டார். சந்தேகத்தை நம்பிக்கையாக மாற்ற முயன்று வெற்றி பெற்றதால் வாரண்ட் ரத்தாயிற்று. தலைவருக்கு அந்தரங்க நண்பரானார். சந்தேகம், நம்பிக்கை இரண்டும் ஒன்று போன்றவை. நம்மீது மட்டுமுள்ள நம்பிக்கை, பிறர் மீது சந்தேக மாகும். நம்பக் கூடியதை நம்புவது நம்பிக்கையாகும். அடிப்படை உறுதியானது நம்பிக்கையே. நம்பிக்கையின் இடம் மாறுகிறது.

கம்பெனியைப் புறக்கணித்து, வீடு, சந்தோஷத்தை அனுபவிக்க முடிவு செய்தவருக்கு நஷ்டம் வருகிறது. கம்பெனி, வேலை, கடமையை அனுபவிக்க முடிவு செய்தவருக்கு இலாபம் வருகிறது. இருவருடைய போக்கும் ஒன்றே. திசை வேறு. மாற்றிக் கொண்டால், நஷ்டம் இலாபமாகும்.

தாழ்ந்த அம்சங்களை, உயர்ந்த அம்சங்களாக மாற்றும் சக்தியுடையவர் அன்னை. அன்னையை வணங்குவதால், நம் வாழ்வு முறைப்படுத்தப்பட்ட (organised) இடங்களில் தானே இந்த மாற்றம் ஏற்படும். மேலும் அன்னை சக்தியால் பெரும்பலன் பெற வேண்டுமானால் நாம் நம் வாழ்க்கை முறைகளை உயர்த்திக் கொள்ள வேண்டும், (must organise our life better).

  • தொட்டனவெல்லாம் தோல்வியான எனக்கு அன்னையை வணங்க ஆரம்பித்தபின், தொட்டன வெல்லாம் துலங்க ஆரம்பித்துவிட்டன.
  • எதற்கும் லாயக்கில்லை என்று என்னை வீட்டில் அனைவரும் ஒதுக்கியபின் அன்னையை வணங்கியதால், எல்லாரும் என் உதவியை நாடுகின்றனர்.
  • பயந்து பயந்து செத்த நான் அடுத்த வீட்டிற்குக் கூடப் போக முடியாமலாகிவிட்டபின் அன்னை என்னை நியூயார்க்வரை போகும்படி மாற்றினார்.
  • கஷ்டத்திற்கும், அவமானத்திற்கும், ஏளனத்திற்கும் ஆளான நான் இங்கு வந்தபின் அவையெல்லாம் மறைந்துபோய் எப்பொழுதும் சந்தோஷத்திற்கு ஆளாகி ஆனந்தம் நிரந்தரமாகிவிட்டது,

என்பவை அன்பர்கள் வாழ்வில் ஏராளமாக நிகழ்பவை. நான் முதல் கூறிய பகவானுடைய தத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால், முறை தெரியும். எதையும் உற்பத்தி செய்யலாம், சாரம் தெரியும் எதையும் ஒன்றை அடுத்ததாக மாற்றலாம். அவற்றுள் நமக்கு முக்கியமானவை இரண்டு தலைப்புகள்.

  1. வெற்றி, அதிர்ஷ்டம், இலாபம், செல்வம், சந்தோஷம் ஆகியவற்றின் process முறையை அறிந்து கொண்டால் அவற்றை நம் வாழ்வில் உற்பத்தி செய்ய முடியும்.
  2. தோல்வி, தரித்திரம், நஷ்டம், வறுமை, சோகம் போன்றவற்றின் சாரம் தெரிந்து கொண்டால் அவற்றை வெற்றி, அதிர்ஷ்டம், செல்வம், இலாபம், சந்தோஷம் ஆகியவையாக மாற்றலாம். இந்த ஞானம் வாழ்க்கைக்குரிய இரஸவாதமாகும்.

*******book | by Dr. Radut