Skip to Content

5. உலகச் சமாதானம்

ஒரு காரியம் வெற்றிகரமாக முடிய வேண்டி அதன் ஆரம்பத்தில் அடையாளமாக நாம் ஒன்றைச் செய்வதுண்டு. வீடு கட்டுமுன் அஸ்திவாரக் கல் நட ஒரு சிறு விழாவை நடத்துகிறோம். குலதெய்வத்திற்குப் பிரார்த்தனை செய்கிறோம். ஒரு காணிக்கை செலுத்துகிறோம். திருமணத்தில் மாங்கல்யத்திற்கு அதுபோன்ற முக்கியத்துவம் உண்டு. இதுபோன்ற சின்னங்கள் பிற்காலத்தில் ஒரு சிரமம் ஏற்படும்பொழுது அதைத் தடுக்கும் விதத்தை வாழ்க்கை அனுபவமாக நாம் காண்பதுண்டு.

நல்லதைப் பூர்த்தி செய்பவை சில சின்னங்கள். கெட்டதைத் தடுப்பவை மற்ற சின்னங்கள். மூன்றாம் உலகப் போர் மூள்வதை நிறுத்த அன்னை தாம் செய்த தொடர்ந்த முயற்சியின் சின்னமாக ஆரோவில் நகரத்தை நிர்மாணித்தார். ஆரோவில் உள்ளவரை உலகப்போர் வாராது என்றார் அன்னை.

மனித மனத்திலுள்ள பிணக்குகளின் புறவடிவமே உலகப் போர் என்பது. உலகச் சமாதானத்தை நாடும் மனிதர்கள் ஓரிடத்தில் கூடித் தங்கள் மனத்திலெழும் பிணக்குகளை அழிக்க முயன்றால், உலகத்தில் போர் மூள முடியாது என்று கருதி ஆரோவில் நகரத்தை அன்னை ஏற்படுத்தினார்.

நம் வாழ்வில் நாம் அறியாமல் பல நல்லவற்றைச் செய்கிறோம். பல நாள்களுக்குப் பின் நமக்கு ஒரு பெரிய

நல்ல காரியம் நடந்தால், இது நமக்கு நடப்பதற்கு வழியேயில்லை. எப்படி நடந்தது?' என்று யோசனை செய்தால், அதற்குப் பலவிதமான விடைகள் கிடைப்பதுண்டு. அவற்றுள் நாம் ஏற்கனவே செய்த நல்ல காரியம் இதற்குக் காரணம் என்று புரிவது ஒருவகை. திரௌபதிக்குத் துரியோதனன் சபையில் கஷ்டம் வந்தபொழுது அதிலிருந்து அவளை மீட்கப் பரமாத்மாவுக்கு இதுபோன்ற ஒரு காரியம் தேவைப்பட்ட பொழுது, ஒரு சன்யாசியின் மானத்தைக் காக்கத் தான் உதவியதைக் கூறி திரௌபதி வரம் பெற்றாள்.

தற்செயலாக நடந்தவை பின்னால் உதவுகின்றன. இதையே ஒரு முறையாகப் பின்பற்றி, பின்னால் உதவக்கூடியவற்றை இன்று நாம் விரும்பிச் செய்தால், அச்செயல்கள் "ஆரோவில்'' என நம் எதிர்காலத்தைக் காக்கக் கூடியவை. அன்னைக்குச் செய்யும் பிரார்த் தனைகள் பலிக்க எந்த நிபந்தனையும் தேவையில்லை. என்றாலும் இதுபோன்ற முறையில் செயல்பட்டால், பிரார்த்தனைக்கே அவசியமில்லாமல் போகும். எந்த வியாதிக்கும் இன்று மருந்துள்ளது என்றாலும், நல்ல ஆரோக்கியத்திற்குரிய அடிப்படைப் பழக்கங்கள் எந்த வியாதியும் வாராமல் தடுக்கக் கூடியவை.

ஒரு ஸ்தாபனத்தின் எல்லையில் பாதுகாப்பு மலர்கள் வளர்ந்தால், அவை இதுபோல் பாதுகாப்பளிக்கும்; வருமுன் தடை செய்யும் திறனுடையவை. மகனை எம்.ஏ., படிக்க வேண்டும் என்று தகப்பனார், அவன் பி.ஏ., முடித்து 5 ஆண்டுகட்குப்பின் வற்புறுத்தினார். படிப்பே கசப்பானது மகனுக்கு. அதுவும் தகப்பனார் சொல்லும்

படிப்பை முடிக்கவே முடியாது என்ற ஆழ்ந்த பயம். மூன்று மணிநேரம் அவர் பரீட்சையில் தவிர வேறு சமயத்தில் எழுதியதே இல்லை. வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு சேர்ந்தார். சக மாணவர்களுக்குத் தான் படித்ததைச் சொல்லும் பழக்கம் உண்டு என்பதால், அனைவரும் இவரை அடிக்கடி சந்தித்தனர். பாடத்தைப் பலமுறை நண்பர்களுக்குச் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டதால் பாடம் முழுவதும் இவருக்கு மனப்பாடமாயிற்று. பேராசிரியர்கடம் மாணவர்கள் சென்றால், இவரிடம் மாணவர்களை அனுப்பும் பழக்கமும் ஏற்பட்டது. இருப்பினும் முடிவான பரீட்சையில் பயம் இவரைப் பற்றிக் கொண்டது. எழுதக் கை வரவில்லை. இரண்டு மணி நேரத்தில் ஒரு பக்கமும் எழுத முடியவில்லை. சுமார் 40 முதல் 60 பக்கங்கள் எழுத வேண்டிய பரீட்சைகள் எட்டு. பலவந்தமாக கடைசி 1 மணி நேரத்தில் எல்லாக் கேள்விகளுக்குமான பதிலைச் சுருக்கமாக 10 வரிகளில் எழுதி, இரண்டு பக்கங்களை நிரப்பினார்.

பின்னர் பரீட்சை முடிந்தவுடன் அடுத்த பரீட்சைக்குப் படிக்க ஆரம்பித்தார். பயமின்றி எழுத என்ன செய்யலாம் என அனைவரையும் கேட்டார். பொதுவாக இந்தப் பரீட்சைகளில் ஒரு கேள்விக்குப் பதில் எழுத அரைமணி நேரமும், அதைப் படித்துப் பார்க்க 5 நிமிஷமும் இருக்கும். வீட்டில் உட்கார்ந்து ஒரு கேள்விக்குப் பதில் எழுதிப் பார்த்தால் 3 மணி நேரமாகிறது என்று கண்டார். பயிற்சியால் அதைக் குறைக்க வேண்டும் என்றனர். பயம், வருத்தம், விரக்தி,

தன்மீது படிப்பைத் திணித்த தகப்பனார் மீது கோபம் ஆகியவற்றால் இவர் குழம்பியுள்ள நேரத்தில் ரிஸல்ட் வந்து இவர் பாஸாகிவிட்டார். இவருக்கு விளங்கவே யில்லை. தம் பேராசிரியரிடம் சென்று சான்றிதழ் வாங்கப் போனார். "இந்த மாணவர் மிகச் சிறந்த அறிவாளி. பல்கலைக்கழகத்தில் முதலாவதாகத் தேற வேண்டியவர். முதல் வகுப்பில் தேறுவார் என அனைவரும் எதிர் பார்த்தோம். ஏனோ தெரியவில்லை இவர் இரண்டாம் வகுப்பில் பாஸ் செய்துள்ளார்'' எனப் பேராசிரியர் சான்றிதழ் வழங்கினார். அத்துடன் "இப்பல்கலைக்கழகத்தில் இதுவரை இத்துறையில் வந்த சிறப்பான நால்வரில் நீ ஒருவன். நீ எல்லா மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுத்ததை நான் அறிவேன். பரீட்சையில் எழுதாவிட்டால், எப்படி முதல் மார்க் கொடுப்பது? உன்னைப் பெயிலாக்க மனமில்லாமல், பாஸ் கொடுத்து விட்டோம்'' என்றும் அவரிடம் பேராசிரியர் சொன்னார். எதையும் நினைக்காமல் செய்த நல்ல பெரிய காரியம், இதுவரை அங்கு நிகழாத வகையில் ஆச்சரியமாக இவருக்கு ஒரு நல்ல பலனைக் கொடுத்துவிட்டது.

ஒரு சிறு தொழில் பெரும்பலன் அடையும் ஒருவர் பல ஆண்டுகள் கழித்துத் தம் தொழிலின் சரித்திரத்தை நினைத்துப் பார்த்தார். சரக்கு, மார்க்கட், நிர்வாகம், மேனேஜர், நண்பர்கள், நடந்தவை, சிரமங்கள், சௌகரியங்கள் அனைத்தையும் நினைவுக்குக் கொண்டு வந்த பொழுது, கடந்தவற்றை நினைக்கப் பயமாக இருந்தது. நிர்வாகத்திலிருந்தவர்கள் செய்தவற்றை

யெல்லாம் விவரிக்க அட்டூழியம் என்ற சொல் போதாது. எப்படித் தொழில் இன்றும் உயிரோடு இருக்கிறது? இவ்வளவு பெரிய இலாபம் இந்தச் சிறுதொழிலில் எப்படி வருகிறது என்பதை நினைத்த பொழுது, இவருடைய பொருள்களை அன்னை பயன்படுத்தியது, ஸ்ரீ அரவிந்தர் அறையில் பயன்படுத்தியது, சமாதியில் தொடர்ந்த சேவையை மற்றொரு பொருள் செய்தது நினைவுக்கு வந்தது. பக்தி மேலீட்டால் அன்னைக்கு ஒருமுறை செய்த சிறு சேவையும், அதே போன்ற மற்ற சேவைகளை அவர்களைச் சார்ந்த இடங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்வத்துடன் அன்று செயல்பட்டதும் நினைவுக்கு வந்தன. இவரைப் பொருத்தவரை அச்செயல்கள் "ஆரோவில்'' என மாறி இவருக்கு வந்த பல ஆபத்துகளைத் தடுத்து, மேலும் பலனைக் கொடுப்பதை இன்று இவரால் உணர முடிந்தது.

ஒரு பெரிய ஸ்தாபனம். அதில் தலையாய முக்கியஸ்தர்கள் 25 பேர். அவற்றுள் இருவரிடம் ஒரே சமயத்தில் வேலை செய்யும் சந்தர்ப்பம் வெளியூரிலிருந்த ஒருவருக்கு அமைந்தது. ஸ்தாபனம் பெரியதானதாலும், இவர் வெளியூரிலிருப்பதாலும் உள் விவகாரங்கள் இவர்வரை எட்டுவதில்லை. இவருக்கு மேலேயுள்ள இருவரில் ஒருவர் நிர்வாகத்திற்கு நிதி திரட்டும் பொறுப்புள்ளவர். இவர் முக்கிய மூவரில் ஒருவர். நிதி விஷயத்திற்கு முதன்மையானவர். அடுத்தவர் சுமார் 15 ஆம் நிலையிலுள்ள முக்கியஸ்தர். வெளி விவகாரங் களைக் கவனிப்பவர். அங்கு இரண்டாம் நிலையிலிருந்து,

முதல் ஸ்தானத்தின் பொறுப்பை நிறைவேற்றுபவர். இவர்கள் பரம எதிரிகள் என்பது வெளியூர்க்காரருக்குத் தெரியாது. தாம் இருவரிடமும் வேலை செய்வதால், இருவரையும் சேர்ந்து செயல்படும் சந்தர்ப்பங்களை விரும்பி ஏற்றுக் கொள்வார்கள். வெளியூர்க்காரர் பிரபலமானவர் என்பதாலும், மேலேயுள்ளவர்கள் பொறுப்பில் அமைந்தவர்கள் என்பதாலும், மேலேயுள்ள வர்கள் தங்கள் வெறுப்பை வெளியிடவில்லை. செய்த வேலைகள் சேவையாக மாறி ஸ்தாபனம் முழுவதும் பாராட்டும் நிலை வெளியூர்க்காரருக்கு அடிக்கடி வர ஆரம்பித்தது. மேலேயுள்ளவர்களின் மனநிலையை அறியாததால் அவர்களில் ஒருவர் மற்றவரைப் பாராட்டும் காரியங்களைச் செய்ய வெளியூர்க்காரர் ஏற்பாடு செய்தார். ஒருவர் மற்றவரைப் பற்றிப் பாராட்டி எழுதி போட்டோவை வெளியிடும் செயல் ஒன்று. மற்றவர், இவர் செய்யும் வேலைக்குப் பெரும் நன்கொடை கொடுப்பது மற்றொன்று. வெளியூர்க்காரரின் அறியாமை முக்கியஸ்தர் களைத் திகைக்க வைத்தது. நிலைமை உயர்ந்திருப்பதால் அதை மீறமுடியாமல், எதிரிக்கு வாகைமாலை சூடும் வகையான செயலை இருவரும் வெறுப்பைக் காட்டாமல், அந்தஸ்திற்கேற்ற பெருந்தன்மையை வெளிப்படுத்துதவும் வகையில் ஏற்றுக் கொண்டனர். அவர்கடையே வெளிப்படையான சுமுகம் ஏற்பட்டது.

ஒரு முக்கியஸ்தருடைய வாழ்வைச் சிறக்கச் செய்யும் செயல்கள் தொடர்ந்து நடந்தன. அதில் வெளியூர்க்காரர் பங்கு பெரியது. முக்கியஸ்தர் ஸ்தாபனத்தைத் தனக்குப் பயன்படுத்துவதாக பேர் எதிர்ப்பு திரைமறைவில் பெரிய

அளவில் உருவாயிற்று. நிலைமை இன்னும் ஒரு கட்டம் தாண்டினால் ஸ்தாபனத்தின் பெயர் கெட்டுப் போகும். உடைந்தாலும் உடையும் என்ற நிலை. ஸ்தாபனத் திலுள்ளவர் அனைவரும், நிதி திரட்டுபவர் முக்கியஸ்தரின் முதல் எதிரி என அறிவார்கள். ஆனால் அவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டு இன்னும் வெளியில் வாராத செய்திகளை அறியார்கள். பெரிய கூட்டம் சேர்ந்துவிட்டது. முக்கியஸ்தரை அழிப்பது என்று முடிவு செய்துவிட்டது. அவர் பிரபலமாவதற்குக் காரணமான வெளியூர்க்காரரை அழிப்பதென முடிவு செய்து விட்டார்கள். முக்கியஸ்தருக்கு முக்கியமான விழா ஏற்பாடாகியிருந்தது. நாள் குறித்தாயிற்று. இதுவரை ஸ்தாபனம் கண்டறியாதது அது. எதிர்ப்பை அனைவரும் மறைமுகமாக ஆதரிக்கின்றனர் என்று தெரிந்ததும், முக்கியஸ்தர் விழாவை ரத்து செய்ய முடிவு செய்துவிட்டார். இன்னும் 4 நாள்களில் நடக்க இருக்கும் விழா அது. வெளியூர்க்காரருக்கு நடப்பது எதுவும் தெரியாது. விழாவை ஏன் ரத்து செய்கிறார் என்று தெரியவில்லை. ரத்து செய்த மறுநாள் வெளியூர்க் காரரை அழைத்து விழாவை நடத்தலாம் என்றார். விழா சிறப்பாக நடந்தது. எல்லாம் முடிந்த 10 மாதம் கழித்து, "நீங்கள் நிதி திரட்டுபவர் விஷயமாகச் செய்தவையெல்லாம் நான் ஏற்றுக் கொண்டேனே தவிர, அவை எனக்குச் சம்மதமில்லை. அதன் முக்கியத்துவம் நம் விழாவுக்கு 4 நாளுக்கு முன்தான் எனக்குத் தெரிய வந்தது. It is a stroke of genius. மிகவும் விவேகமான செயல். எதிர்ப்பு ஏற்பட்டு நான் அந்த விழாவை ரத்து

செய்தேன். என் எதிரிகளால் தங்கள் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. உங்கள் உயிருக்கே ஆபத்து வந்தது. நிதி திரட்டுபவரிடம் சென்று அவருடைய ஆதரவை என் எதிரிகள் கேட்டார்கள். அவர் அதை ஆதரிக்க மறுத்தார். அதனால் நான் விழாவை நடத்தச் சம்மதித்தேன். அன்று செய்த நல்ல காரியம் விழாவின்போது பிரம்மாண்டமாக நம்மைக் காப்பாற்றியது'' என்று முக்கியஸ்தர் வெளியூர்க்காரரிடம் கூறினார்.

பொதுவாகக் காணிக்கை இந்த நல்ல காரியத்தைச் செய்யும். எதிராளியின் விருப்பத்தை அவரே நினைக்க முடியாத அளவுக்குப் பூர்த்தி செய்யும் காரியங்கள் இதுபோன்று ஆரோவில்' என அமையும். நமக்குத் தேவையான ஆரோவில்' போன்ற செயல்களை நாம் தேர்ந்தெடுத்துச் செய்வது நல்ல பலனைத் தரும். எதிர்கால வெற்றிக்குரிய அஸ்திவாரமாக அமையும்.

பையன் அடிக்கடி வெளியூர் போகிறான். கெட்ட பழக்கம் எதுவும் வரக்கூடாது என்று நாம் கவலைப் படுவோம். அவன் பொருள்கள் இருக்கும் அலமாரி, அறையை அதிக அளவு சுத்தமாக வைத்துக் கொண்டால், பளிச்சென்றிருக்கும்படி வெள்ளையடித்து வைத்தால், இருண்ட இடமாக இருந்தால் ஒரு விளக்கை எப்பொழுதும் எரியவிட்டால், அங்குள்ள சுத்தம், ஒளி அவன் போகுமிடமெல்லாம் அவனைச் சூட்சுமமாகச் சூழ்ந்து தவறு செய்யும் வாய்ப்பிலிருந்து தடுக்கும். "எனக்குத் தவறு செய்யும் சந்தர்ப்பம் பல வந்தும், தெய்வம் என்னைக் காப்பாற்றிவிட்டது'' என்று

சொல்வதை நாம் கேட்டிருக்கின்றோம். அவர்கள் வாழ்வில் மேற்சொன்னது போன்ற அம்சம் ஏதாவது ஒன்றிருக்கும்.

பையன் ஊருக்குப் போய் நல்லபடியாகத் திரும்பி வரவேண்டும் என்றபொழுது அவனது படத்தை அன்னை படத்தின் முன் வைத்தால் அதே பலனுண்டு.

"படிப்பை முடித்துவிட்டு நான் அமெரிக்கா போக இருக்கின்றேன். நான் போவது நிச்சயம். ஆனால் எனக்கு எதையும் மறந்துவிடும் குணம் உண்டு. அமெரிக்கா போகும் பொழுது பாஸ்போர்ட், பர்ஸ் ஆகியவற்றைக் கடைசிவரை நினைவோடு எடுத்துப் போய்ச் சேர்வது நிலையில்லை'' என்றவருக்கு ஓர் உபாயம் சொல்லலாம். மற்றவர்கள் மறந்துவிட்ட பொருள்களை அவர்களுக்கு இவர் நினைவுபடுத்தும் பழக்கத்தை ஏற்றுக் கொண்டால், இதன் பலனாக அவர் பாஸ்போர்ட்டை மறக்காமல் எடுத்துக் கொண்டு போய்ச் சேர்வார்.

நிலத்திலிருந்து வரும் தான்யத்தை நாம் லக்ஷ்மி எனக் கருதுகிறோம். சிலர் அலட்சியமாக நினைப்பார்கள். லக்ஷ்மி எனக் கருதுவதால் நிலம் அதிகமாக விளையும், நிலத்தில் பிரச்னை வாராது. தான்யத்திற்கு நாம் செலுத்தும் கவனத்தை நிலம் பெற்றுக்கொண்டு பதிலாக நம்மிடம் அன்பாக ஒட்டிக் கொண்டிருக்கும்.

ஊரில் குடிப்பழக்கம் பரவுகிறது. எங்கள் உறவில் பலர் குடிக்கின்றார்கள். என் பையன் சிறுவன். இவன் எதிர்காலம் எப்படியோ என்ற எண்ணம் சிலருக்குண்டு. தாம் விரும்பிச் சாப்பிடும் காப்பி அல்லது சுவைத்து

ரசிக்கும் வெற்றிலை பாக்கைத் தியாகம் செய்தால், எதிர்காலத்தில் பையனைக் கெட்ட பழக்கத்திலிருந்து அது காப்பாற்றும்.

"வெளியில் போய் திரும்பும்வரை விபத்து நேருமோ என்ற கவலை ஏற்படுகிறது'' என்றவர், தம் வாகனத்திற்கு அதிக கவனம் செலுத்திச் சுத்தம் செய்து எண்ணெய் போட்டு பெயிண்ட் அடித்து வைத்திருந்தால் அவர் வாகனத்திற்கு அளிக்கும் கவனம், வாகனத்தை விபத்தி லிருந்து காப்பாற்றும். வாகனத்திற்கு விபத்திலிருந்து விலகும் திறன் ஏற்படும்.

கணக்கு எழுதுவதால் பணத்தட்டுப்பாடு வாராது என்பது அன்னை கொள்கை. வீடு அதிகச் சுத்தமாக இருந்தால் சண்டை சச்சரவுகள் விலகும் என்பது அன்னை அடிக்கடி சொல்வது, பக்தர்களுடைய அனுபவம். உன் துணிமணிகளை உதாசீனம் செய்யாமருந்தால், துணிப்பஞ்சம் வாராது. தொழிலாகளுக்குக் கடன் வசதிகளைச் செய்ய முன்வரும் கம்பெனிக்குப் பணத்தட்டுப்பாடிருக்காது. வாடகை, எலக்டிரிக் பில் குறித்த நேரத்தில் செலுத்துபவருக்குச் சம்பளம், மற்ற பணங்கள் தடையின்றி வரும்.

உண்மையானவரை சந்தர்ப்பத்தால் பலரும் சந்தேகிக்கும்பொழுது அவர் உண்மையை நம் மனம் ஏற்றுக் கொண்டால், எதிர்காலத்தில் நம் உண்மையை உலகம் ஏற்றுக் கொள்ளும். பொதுவாக நம் சூழ்நிலையில் நல்லது விரும்பிச் செய்துவிட்டால், நமக்கு நல்லது தானே நடக்க முடியும்.

******book | by Dr. Radut