Skip to Content

1. சிறுதொழில் செய்த பெரிய பிரார்த்தனை

1960ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 10 வருடங்கள் உலகெங்கும் ஹிப்பி என்ற சொல் பிரபலமாயிற்று. கல்லூரி மாணவர்கள் பட்டத்தை உதறி எறிந்து உலகை உய்விக்க இளம் மாணவர்கள் சமூகத்தின் எதிர் காலத்தைத் தங்கள் உள்ளங்களில் தாங்கி, புரட்சி கரமாகச் செயல்பட்டனர். சமூகம் அழுகிவிட்டது. அதன் சட்டங்கள் மக்கள் வாழ்வைச் சிதைக்கின்றன, பெருந் தொழில் முதலைகள் மக்களைச் சுரண்டுகின்றனர். அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு ஆதரவு. அரசியல் அமைப்பே இதை வலியுறுத்துகிறது. சமூகத்தின் எல்லா அமைப்புகளும் இந்தப் பழைய போக்குக்கு உறுதுணைகளாகியிருக்கின்றன. அத்துணையையும் எதிர்க்க வேண்டும், அனைத்தையும் உடைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் கல்லூரியை விட்டு வெளியேறி காட்டில் குடி புகுந்தனர். சமூகம் வகுத்த உடையை உதறித் தள்ளினர். அழகாகத் தலை வாரினாலும் சமூகத்திற்குப் பணிவதாகும் என்பதால் முடியும், தாடியும் வளர்த்தனர். திருமணம் என்பது சமூக அமைப்பு என்பதால் அதை எதிர்க்க விவாகரத்தைப் பிரபலப்படுத்தினர். வியட்நாம் போரை எதிர்த்தனர். வியாபாரத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது தவறு என்று வியாபாரம் செய்ய மறுத்தனர்.

அவர்களுக்கெல்லாம் இன்று 40 முதல் 45 வரை வயதாகிறது. இலட்சியம் பெரியது, அதைக் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் சிறியன. சிறிய மனத்துடன், சின்ன வழிகளால் பெரிய இலட்சியத்தைப் பின்பற்றினால், இலட்சியம் நிறைவேறாது. நமக்கு அஸ்திவாரமான வாழ்வும் சீர்குலையும். அப்படி வெளிவந்த இலட்சக்கணக்கானவர்கள், மீண்டும் படிப்பைப் பூர்த்தி செய்து, தொழிலை மேற்கொண்டனர். தீவிரவாதிகள் படிப்பை முடிக்கவில்லை. புத்த மதம், சூபி, இந்துமதம், T.M., மகரிஷி, கிருஷ்ணார்ப்பணம் என்பவற்றை நாடினர். வருமானத்திற்காக metaphysical books, handicrafts, கீழ்நாட்டு மதங்களைப் பற்றிய புத்தகங்கள், ஊதுவர்த்தி, கையால் செய்த பொருள்கள் ஆகியவற்றை விற்கும் கடைகளை ஆரம்பித்தனர். அப்படிப்பட்டவர்கள் பல ஆயிரம் பேர் அன்னையிடம் வந்தனர். ஆரோவில் நகரத்தில் சேர்ந்தனர். நம்முடைய சொஸைட்டிக்கும் ஏராளமான பேர் வந்தனர். மூவர் நம்முடன் தங்கி விட்டார்கள். இவர்கள் மானேஜ்மெண்ட் பற்றிப் புத்தகங்கள் எழுதினர். தங்கள் நாட்டில் மேற்சொன்னதுபோல் சிறு வியாபாரம் ஆரம்பித்தனர். இதுபோன்ற நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட சமயம் பிரார்த்தனை செய்த நிகழ்ச்சியை எழுதவே இக்கட்டுரையில் முற்படுகிறேன்.

இந்தக் கம்பெனி 1975இல் சிறு முதலுடன் ஆரம்பிக்கப்பட்டு, பெருமுதல் பெற்று, பெரு நஷ்டமடைந்து, சிறு அளவில் ஆரம்பித்த மூவருடைய செலவைச் சமாளிக்கும் வகை, சில வருஷங்களில் சிறு

இலாபமும், மற்ற வருஷங்களில் சிறு நஷ்டமும் வரும் வகையாகச் செயல்பட்டு வருகிறது. இருவர் திருமணமாகாதவர், ஒருவர் திருமணம் செய்து கொண்டும் சாதனையை மேற்கொண்டதால் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவர். அமெரிக்காவில் இன்று 1 மில்லியன் டாலர் செலாவணிக் கம்பெனி களுக்கு இலாபம் என்று கையில் நிற்காது. இலாபத்தைப் பார்க்க 3 அல்லது 4 மில்லியன் டாலர் வியாபாரம் செய்ய வேண்டும். இவர் இந்த 15 ஆண்டுகளில் அரை மில்லியனை எட்டவில்லை. Soapstone மாக்கல்லால் செய்த பொருள்கள், ஊதுவர்த்தி, Tapestry சுவரில் மாட்டும் கம்பளம் இவர்கள் விற்கும் பொருள்கள், இவர்களுக்கு வரும் ஆர்டர்' 40 டாலர், 100 டாலர், என்றிருக்கும். 1000 டாலர் ஆர்டர் பெரிய ஆர்டராகும். இதை நடத்த இரண்டு சேல்ஸ்மென், ஆபீஸ் மானேஜர், முதலாளி. ஆபீஸ் மானேஜர் சம்பளம் வருஷத்திற்கு 20,000 டாலர். மூன்று மாத வியாபாரம் அதை மட்டுமே சம்பாதிக்கும். இவர்களுடைய சேல்ஸ்மென் ஒரு மாதத்தில் 10,000 மைல்கள் காரில் செல்வார். கொஞ்சம் ஊதுவர்த்தியும், கொஞ்சம் மாக்கல்லும் விற்கும், Tapestry ஒன்று விற்பார். வருஷத்தில் மொத்தமாக 1000 கம்பளங்கள் விற்க முடிவதில்லை. இப்படியே இருக்கும் பொழுது, Metaphysical book stores இந்திய ஆன்மிகப் புத்தகங்களை விற்கும் முதலாளிகள் சங்கம், ஒரு மகாநாடு நடத்த முயன்றது. இந்தச் சிறு கம்பெனி முதலாளியை அங்கு பேச அழைத்தனர். இவர் மானேஜ்மெண்ட் புத்தகம் எழுதியவர். ஆனால் 15 வருஷங்களுக்கு முன்

அன்னையைத் தீவிரமாக ஏற்றுக் கொண்டவர், ஓரிரு வருஷங்களில் அதைப் பின்பற்ற மறுத்தார். மானேஜ்மெண்ட் புத்தகத்தை அன்னை தத்துவப்படி எழுதினார். அதனால் தம் (clients) வாடிக்கைக் காரர்கள் பயன் அடைவதைப் பார்த்து முழுவதும் நம்ப மறுத்தார். இந்த மகாநாடு அமெரிக்காவில் 5 இடங்களில் நடந்தது. 10 முதல் 50 பேர் வந்திருந்தனர். இவர்களெல் லாரும் ஹிப்பியாக ஆரம்பித்து இப்பொழுது வியாபாரம் செய்பவர்கள். சாதகர், அன்னையைப் பற்றியும், மானேஜ்மெண்ட் பற்றியும் நீண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியபின் மறுநாளிலிருந்து தொடர்ந்து செய்திகள் வர ஆரம்பித்தன.

"என் வியாபாரம் இந்த மாதம் இரண்டரை மடங்காயிற்று. இதுவரை இல்லாத தெளிவு எனக்கு ஏற்பட்டது. அத்துடன் அதிக வருமானம் வருகிறது''.

"மகாநாடு முடிந்த அடுத்த நாள் வியாபாரம் 80% உயர்ந்தது''.

"என் வாழ்நாளில் அறியாதவற்றை உங்கடளிமிருந்து அறிந்தேன்''.

"வருகின்ற ஆர்டர்களைப் பூர்த்தி செய்யவே முடியவில்லை''.

"என் கணவன் வாழ்வில் உங்கள் சொற்பொழிவு அடிப்படையான மாறுதலை ஏற்படுத்தியது''.

10 நாள்களில் செய்த 30 சொற்பொழிவின் விளைவாகச் சுமார் நூறு பேர் வாழ்க்கையில் தாம் எழுதிய புத்தகமும், அன்னைக்குச் செய்த பிரார்த் தனையும், பெரு மாறுதலை ஏற்படுத்தியபின், இனியும்

பிரார்த்திக்க மாட்டேன் என்ற பிடிவாதத்தை வைத்திருக்கக் கூடாது என்று முடிவு செய்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்.

டேப்பிஸ்ட்ரிக்கு ஓர் எக்ஸிபிஷன் வந்தது. இதுவரை எக்ஸிபிஷனில் நம் செலவு திரும்பி வருவதில்லை. ஐந்து நாள்களில் ஆயிரம் டாலர் விற்றதில்லை. பிரார்த்தனையுடன் இதை ஆரம்பித்தார். எக்ஸிபிஷனுக்குப் போய் வந்தால், அதைத் தொடர்ந்து ஆர்டர் வருவதில்லை. நாமே கடைகளுக்குப் போய் ஆர்டர் வாங்க வேண்டும். இந்த எக்ஸிபிஷனில் 6500 டாலருக்கு விற்றது. தொடர்ந்து பலரும் போனில் கூப்பிடுகிறார்கள். ஒருவர் 100 டேப்பிஸ்ட்ரி வேண்டுமென்றார். அடுத்தவர் 550 சப்ளை செய்ய முடியுமா எனக் கேட்டார். எல்லாமாக 1050 டேப்பிஸ்டரிக்கு வழி புறப்பட்டது. உடனே இவர் இந்தியாவுக்கு வந்தார். சப்ளையைத் தயார் செய்வதே இனி வேலை. சோப்ஸ்டோன் (soapstone) ஆர்டர்கள் 100 டாலருக்குக் குறைவாகவே வரும். 1000 டாலர் என்பது வருஷத்தில் ஒருமுறை கிடைக்கும். இப்பொழுது 20,000 டாலருக்கு ஆர்டர் கிடைத்தது. சப்ளைக்காக இவர் இந்தியாவுக்கு ஆர்டர் கொடுத்தபின், ஆர்டரை ரத்து செய்து விட்டார்கள். இந்த நிலையில் பிரார்த்தனையை மட்டுமே நம்புவது என்று முடிவு செய்தார். ஆர்டர் அசையவில்லை. ஏழு நாள்கள் கழித்து மீண்டும் ஆர்டர் 10,000 டாலர் அளவில் உயர்வு பெற்றது. முப்பது நாள்களுக்குப் பின் முழு ஆர்டரும் திரும்பக் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது. எதுவும்

எழுத்தில் இல்லை. பிரார்த்தனையைத் தொடர்ந்தார். ஆர்டர் 10,000 டாலர் அளவில் பூர்த்தியாயிற்று. மீதிக்கு எழுத்தில் ஆர்டர் கிடைத்தது. இந்த இருபது ஆயிரம் டாலர் ஆர்டர் மீண்டும், மீண்டும் வரலாம் என்ற சூசகம் ஏற்பட்டது. இதற்குள் இவர் இந்தியாவிலிருந்து திரும்பி வந்தார். கனடாவிலிருந்து இவர் நண்பர் ஒருவர் 1200 கோடி லிட்டர் சென்ட் செய்யும் ஸ்பிரிட் இந்தியாவி லிருந்து வாங்கித் தர முடியுமா எனக் கேட்டார். வாங்கித் தருபவருக்கு லிட்டருக்கு 1 சென்ட் (அமெரிக்க பைசா) கமிஷன் வந்தாலும், 125,000 டாலர் வரும். பிரார்த்தனையின் பலனைக் கண்டு பிரமித்து நிற்கும் பொழுது கண்ணாடி ஒட்டிய கல்லுக்கு அதே போன்ற செய்தி ஒன்று வந்தது. இதுநாள்வரை தாம் பிரார்த்தனையைப் புறக்கணித்ததன் தவற்றையும், இன்று அதன் பலனையும் கண்டு மகிழ்ந்தார்.

*******book | by Dr. Radut