Skip to Content

1. மலர்ப் பிரசாதம்

அன்னை புஷ்பங்களுக்கு அளித்துள்ள விசேஷத்தை அறிந்த பின், பலரும் தங்கள் பிரச்னைகளைக் கூறி அதற்குரிய புஷ்பம் எது என்று அறிய விரும்புகின்றனர். அடிக்கடி எழுகின்ற பிரச்னைகளில் குறிப்பாக பத்து பிரச்னைகளை எடுத்து புஷ்பங்களால் அவற்றைத் தீர்க்கும் முறையைக் கூறுவதற்காக இக் கட்டுரையை எழுதுகின்றேன். இக்கட்டுரையில் கீழ்க்காணும் பிரச்னைகள் இடம் பெறுகின்றன.

 1. வீட்டிற்கு அடங்காத பிள்ளை
 2. அடைக்க முடியாத கடன்
 3. சோகம் நிறைந்த வாழ்வு
 4. பரிட்சைக்குப் போக பயம்
 5. கணவன் மனைவி பூசல்
 6. வக்கிரமான புருஷன் அல்லது மனைவி
 7. அன்பில்லாத நபர் (தாயார், தகப்பனார், கணவன், மனைவி, குழந்தை)
 8. பொறுப்பில்லாத குடும்பத் தலைவர்
 9. கணவனால் கைவிடப்பட்ட மனைவி
 10. வேலை கிடைக்காத இளைஞன்

மலர்களின் தன்மையைப் பற்றிப் பேசுமுன் அதைவிட உயர்ந்த முறை ஒன்று உண்டு என்றால் அதைப் பரிசீலனை செய்வோம். மலர்கள் சக்தி வாய்ந்தவை. பிரச்னையைத் தீர்க்கும் திறன் உடையவை.

மனம் எனும் மலருக்கு அதைவிட அதிக சக்தியுண்டு. பிரார்த்தனையால் மனம் மலரும் என்றால் அதன் திறன் அதிகம். அது பலித்தால் மலர் தேவையில்லை. மனம் மலர்ந்து பிரச்னையைத் தீர்க்கும் முறை எது? இம் முறையை இருவகைகளில் விவரிக்கலாம்.

 1. தம் பிரச்னைக்குரிய காரணத்தை அறிந்தவ ருண்டு. காரணம் புரியுமானால், அதை மாற்றிக்கொள்ள மனம் சம்மதித்தால் மனம் மலரும். அது சிறப்பு. அதன்பின் அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனை மலரைக் கொண்டு வருமுன் பலித்துவிடும்.
 2. காரணம் பலசமயங்களில் தெரியாமற் போவதுண்டு. காரணம் தெரியாவிட்டால், பிரச்னையின் வரலாற்றை அன்னையிடம் தினமும் கூறிப் பிறகு பிரார்த்தனையை மேற்கொண்டால் தீர்வு காணுவோம். அது நிரந்தரமான தீர்வாக இருக்கும்.

காரணத்தை அறிய முடியாதவர்களுக்கும், முறையாகத் தொடர்ந்து அன்னையிடம் முறையிட்டுப் பிரார்த்தனை செய்ய முடியாதவர்களுக்கும் மலர்கள் அவர்கள் பிரச்னையைத் தீர்த்து வைக்கும். காரணம் தெரிந்து, மனதை மாற்றிக் கொண்டு, அன்னையிடம் முறையிட்டு, பிரார்த்தனை செய்ய அதற்குரிய மலர்களைச் சார்த்தி வணங்குவது உயர்ந்தது. மலர்களால் கிடைக்கும் பலனை மட்டும் வலி யுறுத்தி எழுதும் கட்டுரை என்றாலும், மற்ற

விவரங்களையும் சந்தர்ப்பம் வரும்பொழுது குறிப்பிடு கிறேன்.

ஒரு பிரச்னை தீர முக்கியமாக மூன்று மலர்களைப் பற்றியும், மேலும் சில மலர்களைப்பற்றியும் எழுதுகிறேன். இந்த எல்லா மலர்களையும் தேடி அன்னைக்குச் சார்த்துவதே முறை. ஆனால் முதல் மூன்று மலர்களே பிரச்னையைத் தீர்க்கவல்லவை. மலர்கள் கிடைக்காத சமயம் ஒரு மலர் சார்த்தினாலும் அதனாலும் பிரச்னை தீர்வதுண்டு.

புஷ்பாஞ்சலி' என்ற என் புத்தகத்தில் எல்லாக் குடும்பங்களுக்கும் நன்மை விளைவிக்கக் கூடிய 34 மலர்களைப்பற்றி விவரமாக எழுதி, மேலும் 160 மலர்களுடைய அன்னை பெயர்களைப்பற்றியும்' (name given by Mother) வெளியிட்டுள்ளேன்.

சுமார் 23 மலர்களுக்கு மட்டும் தமிழ்ப் பெயர்கள் கிடைத்ததால், மற்ற மலர்களுக்கு ஆங்கிலப் பெயர்களையும், அடையாளம் கண்டுபிடிக்க உதவும் தாவர இயல் (botnay) பெயர்களையும் இறுதியில் பட்டியலாக இணைத்துள்ளதால் அன்னையிட்ட பெயர்களை மட்டும் கட்டுரைப் பகுதியில் குறிப்பிட்டிருக்கின்றேன்.

மேற்சொன்ன 10 பிரச்னைகள் வாழ்க்கையில் பொதுவானவை என்பதால் வாழ்வு சிறக்க உதவும் 10 மலர்களை அனைவரும் தங்களுக்குரிய குறிப்பிட்ட மலர்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

அவையாவன:

 • 1. செல்வவளம் எனப்படும் நாகலிங்க மலர்.

 • 2. இறை அருள் எனப்படும் பருத்தி ரோஜா,
 • 3. வெற்றி எனப்படும் குவளைப் பூ,
 • 4. பாதுகாப்பு எனப்படும் காகிதப் பூ,
 • 5. சந்தோஷம்,
 • 6. தெய்விக உதவி எனப்படும் சிறிய செம்பருத்தி,
 • 7. திருவுருமாற்றம் எனப்படும் மர மல்லிகை,
 • 8. முன்னேற்றம் எனப்படும் பட்டிப் பூ அல்லது நித்யகல்யாணி,
 • 9. பிரார்த்தனை,
 • 10. கட்டுப்பாடு.

வீட்டிற்கு அடங்காத பிள்ளை: "பையன் வீட்டிற்கு வருவதில்லை, எப்பொழுது வருவான் என்று தெரியாது, அப்படி வந்தால் வரும் பொழுதே அடிக்க வருகிறான். நிறையப் பொய் சொல்கிறான், முரட்டுத்தனம் செய்கிறான், தாயார் தகப்பனாரால்தாம் கெட்டுவிட்டதாகச் சொல்கிறான். இவனால் எங்கள் வாழ்க்கையே நரகமாகிவிட்டது, நாலு பேர் எதிரில் தலை குனிய வேண்டியிருக்கிறது'' என்பன போன்ற நிலையுள்ள வீட்டில் என்ன செய்யலாம்? இவையெல்லாம் எந்தக் குணத்தால் ஏற்படுகின்றனவோ அதற்கெதிரான தன்மையுடைய மலரை அன்னைக்குச் சார்த்தி மகன் குணம் மாற வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும். அதற்குரிய முக்கியமான முதல் மூன்று மலர்கள் 1. மனத்தின் விழிப்பு 2. கட்டுப்பாடு 3. மனமாற்றம். மேலும் சில மலர்களையும்

பயன்படுத்தலாம். அவை 1. ஒளி 2. ஒருபொழுதும் பொய் சொல்லாதே 3. முன்யோசனை.

முரட்டுத்தனமான பிள்ளையும் சில சமயங்களில் திருந்தவிரும்புவதுண்டு.அதுபோன்றநேரம்வரும்பொழுது, மகனே இம் மலர்களைக் கொண்டு வந்து அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால் அதிகப் பலனிருக்கும். என் மனம் விழிப்படைய வேண்டும், எனக்கும் கட்டுப்பாடு தேவை, மனத்தை மாற்ற நான் செய்யும் முயற்சி பலிக்க வேண்டும்' என்று மகனே பிரார்த்தனை செய்வது உயர்ந்தது.

மேலும், பெற்றோருக்கு ஏன் பிள்ளை இந்த நிலைக்கு வந்தான் என்று தெரியும் நேரங்களுண்டு. அதிகமாகச் செல்லம் கொடுத்ததால்தான் இப்படி நேர்ந்தது; இனி என்ன செய்வதென்று தெரியவில்லை என்று இன்று பெற்றோர்கள் உணர்ந்தால் நிதானம் என்ற மலரைப் பெரியவர்கள் அன்னைக்கு அர்ப்பணம் செய்வது நல்லது. "சிறுவயதில் பையனை அளவு கடந்து கண்டித்து, அதிகமாக அடித்து வளர்த்தேன், இப்பொழுது முரடனாகிவிட்டான்'' என்றால் மென்மை என்ற மலரை நாடிப் பலன் பெறலாம். இது பரம்பரையாக வரும் அடங்காப்பிடாரித்தனம் என்று உணர்ந்தால் பரம்பரையைத் தாங்கிவரும் உள்மனத்திற் குரிய மலர் பலன் தரும் (subconscious).

பொதுவான மலர்கள் பொதுவான பலனையும், குறிப்பானவை, குறிப்பிட்ட பலனையும் தவறாது தருவதைக் காணலாம். பிரச்னை தீரும் வரை மலர்களை நிறுத்தக் கூடாது.

அடைக்க முடியாத கடன்:

இதற்குரிய முக்கியமான மலர்கள் 1. முன் யோசனை 2. விடுதலை 3. கட்டுப்பாடு. பயன்படக்கூடிய மற்ற மலர்கள். 1. நிதானம். 2. அற்புதம் 3. நாணயம் 4. அடக்கம் 5. முறையான செயல் 6. செல்வம் 7. எளிமை. நம் குடும்பத்தில் கடன் ஏற்பட்ட வகை எது என அறிந்து, அது எந்தக் குணத்தால் அல்லது பழக்கத்தால் வந்தது என்று எல்லாரும் எளிமையாகக் கண்டறியலாம். அதற்கு நேர் எதிரான குணத்திற்குரிய மலரைச் சமர்ப்பிப்பது குறிப்பான பலனை, கூடிய விரைவில் அளிக்கும்.

பொதுவாக கடன் ஏற்படுவதற்குரிய காரணங்கள் திருமணம், வீடு கட்டுவது, வேலையில்லாமலிருப்பது போன்றவை. ஏதோ ஒரு நிலையில் நிலைமை நம் கட்டுக்கு மீறி விடுவதால், இனி கடனை அடைக்க முடியாது என்று நாம் உணருகிறோம், அன்னை control என்று ஒரு மலருக்குப் பெயரிட்டிருக்கிறார்கள். கன்ட்ரோல் என்ற மலரைக் கண்டுபிடித்துவிட்டால் நம் கன்ட்ரோலுக்கு மீறிய சந்தர்ப்பங்கள் இனி நமக்குக் கட்டுப்படும். அடைக்கமுடியாத கடன் அடைபடும்.

நாமே நிதானமின்றிச் செயல்பட்டதால் இன்று கடன் வளர்ந்து விட்டதென்றால் நிதானம் என்ற மலர் பலன் தரும். வீண் பெருமை, கர்வம், கட்டுப்பாடின்மை, சோம்பேறித்தனம், தவறானவர்களை நம்பியது, கவனக்குறைவு, ஆசையை அதிகமாகப் பூர்த்தி செய்ய முனைதல், தவறான பழக்கம், பொறுப்பின்மை,

அவசரம் போன்றவற்றால் கடன் ஏற்பட்டிருந்தால் அதற்கெதிரான குணங்களை உடைய மலர்களைச் சமர்ப்பிப்பது பலன் தரும். அவற்றின் பட்டியல் பின் வருமாறு:

குணம்

மலரின் பெயர்

வீண் பெருமை

ளிமை

கர்வம்

அடக்கம்

கட்டுப்பாடின்மை

கட்டுப்பாடு

சோம்பேறித்தனம்

வேலை

முறையாகச் செயல்பட முடியாத நிலை

முறையான செயல்

தவறானவர்களை நம்பும் குணம்

(நெறியான) நம்பிக்கை

கவனக்குறைவு

கவனம்

ஆசையில் உழல்வது

ஆசையை அழித்தல்

தவறான பழக்கம்

இலட்சியம்

பொறுப்பின்மை

கவனம்

அவசரம்

பொறுமை

 

(இந்த 10 மலர்களும் கடைசிப் பட்டியலில் இடம் பெறுகின்றன).

சோகம் நிறைந்த வாழ்வு: இவர்களுடைய முகம் வாடி, வதங்கி, சுருங்கிக் கறுத்திருக்கும். சிலருக்கு நடக்கக்கூடத் தெம்பிருக்காது.

மோசமான நிலையிலுள்ளவர் சிலர் பாய் போட்டுப் படுத்துவிடுவார்கள். ஏன் பொழுது விடிகின்றது என்றிருக்கும். பொழுதுபோனால் இரவில் பயம் கவ்விக் கொள்ளும். கனவு பயமுறுத்தும். பரிதாபமான நிலையிலுள்ளவர்கள் இவர்கள். ஆனால் இவர்கள் அன்னையை ஏற்றுக்கொண்டு பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தால் வாழ்வில் கண்டறியா தைரியம் ஒரு நிமிஷம் தெரியும். ஏதோ ஒரு சமயம் இதுவரை இல்லாத புன்னகை வெளிப்படும். நமக்கும் வாழ்வுண்டு என்ற எண்ணமும் அடிக்கடி வரும்.

இவர்களுக்குரிய முக்கிய மலர்கள் ஆனந்தம், பிராணனுடைய விழிப்பு, சந்தோஷம். மற்றவை சக்தி, பேரானந்தம், விடுதலை, சாந்தம், மனத்திறன் ஆகியவை.

இவர்களுடைய சோகவாழ்வுக்குச் சில சமயங்களில் வீட்டிலுள்ளவர்களே காரணமாக இருப்பார்கள். ஓயாமல் குறை கூறும் வீட்டில், தெம்பில்லாதவர்கள் பிறந்தால் அவர்களுக்கு இந்நிலை ஏற்படும். அப்படிக் குறை சொல்பவர்கள் இவர்களுடைய சந்தோஷத்திற்கு எதிரியாகி விடுவார்கள். எதிரிகளை வெல்லும் மலர் ஒன்றுண்டு. அம் மலர் இவர்களுக்கு முழு விடுதலையை அளிக்கும். சுமுகமும் பெரிதும் உதவி செய்யும். பிறரிடம் சொல்லாமல் தாமே மனத்தில் மறைத்து வைத்துள்ள மூடநம்பிக்கைகள் தொடர்ந்து உள்ளூர பயமுறுத்தி வாழ்வை, சோகம் நிறைந்ததாகச் செய்வதுண்டு. தெளிவு என்ற மலர் மனத்தைத் தவறான நம்பிக்கைகளிலிருந்து விடுதலை செய்யும்.

உடலில் தெம்பில்லாததால், ஏற்கனவே வந்த சோகம் அதன் வழியே நிலைத்து விடுவதுண்டு. சாமந்தி மலரை அன்னை சக்தி என்றழைக்கிறார்கள். அதைக் கையில் எடுத்தவுடன் மாற்றம் தெரியும். ஏதோ ஒரு காரணத்திற்காகப் பயம் ஏற்பட்டு அது நிலைத்து, பின்னர் அதன் வழியே சோகம் ஏற்பட்டிருந்தால், தைரியம் என்ற பெயருள்ள எருக்கம் பூ பயத்தை அழித்து அதன் மூலம் சோகத்தை விலக்கும். 5'' நீளமும் வெண்மை நிறமும் உடைய புனல் போன்ற மலரில் கருநீலக் கோடுகள் தெரியும். அதை அன்னை சந்தோஷம் என்று பெயரிட்டுள்ளார். எளிதில் எங்கும் கிடைக்கக் கூடிய மலர். சமாதியில் அடிக்கடி காணலாம். ஆசிரமத்திற்குள் சமாதி அருகே சிமெண்ட் திண்ணைக்கு எதிரில் இச்செடி இருப்பதைப் பார்த்திருக்கலாம். மலரைக் கையில் வைத்திருந்தால் முகம்தானே மலர்வதைக் காணலாம்.

பரீட்சைக்குப் போகப் பயம்: பரீட்சை என்றால் அனைவருக்கும் பயம் ஏற்படுவதுண்டு. இலண்டனில் ஓர் உயர் பதவியிலுள்ள டாக்டர் தம் 50 ஆம் வயதில் ஒரு பரீட்சை எழுதினார். அந்நாட்டு முறைப்படி ஒவ்வொரு கட்டத்தைத் தாண்டவும் ஒரு பரீட்சை எழுதவேண்டும். வாழ்க்கையில் பல உயர்ந்த பரீட்சைகளைத் தலைமை வகித்து நடத்திய இவருக்கு (examination fever) பரீட்சைக்குரிய பயம் வந்துவிட்டது. அதனால் மாணவர்களுக்குப் பயம் ஏற்படுவது சகஜம்.

இந்தப் பயத்திலிருந்து விடுதலை பெற தைரியம், நம்பிக்கை, சாந்தி ஆகியவை முதன்மையான மலர்கள். ஒளி, செயல் பயமின்மை, வெற்றி, செயல்திறன், நிஷ்டை ஆகிய மலர்களும் பெரிதும் பயன்படும்.

பரீட்சை என்றால் உடலே நடுங்கும் கெட்டிக்கார மாணவர்களும் உண்டு. குறிப்பாக அவர்களுக்கும், பொதுவாக மற்ற மாணவர்களுக்கும் பயன்படும் முறை ஒன்றுண்டு. வகுப்பில் பாடம் நடந்தால் ஒழுங்கான மாணவர்கள் தினமும் வீட்டில் வந்ததும் அதைப் படிப்பது வழக்கம். படிப்பது புரிந்துவிட்டால் மனம் திருப்திப்படும். அத்துடனில்லாமல் படித்த பாடத்தை மனப்பாடம் செய்யாமல் அப் பாடத்தில் வரக்கூடிய கேள்விக்குப் பதிலை ஒரு முறை எழுத முயன்றால், புரிந்தால் மட்டும் எழுத முடியாது என்பது விளங்கும். எனவே பரீட்சை சமயத்தில் மாணவர்கள் பதிலை மனப்பாடம் செய்வார்கள். பயத்தை அழிக்க படித்த பாடத்தை மீண்டும் எழுதினால், தெளிவாக எழுதும் வகையில் புரிந்து கொண்டால், பாடம் மனதில் பதியும். தினமும் அன்றாடப் பாடங்களை அதுபோல் எழுதிப் பழக்கம் செய்து கொண்டால், பரீட்சைக்குப் போகுமுன் பயம் மறைந்துவிட்டதைக் காணலாம். மனப்பாடம் செய்தாலோ, அல்லது படித்துவிட்டுப் போனாலோ, பதில் நினைவு வருமா என்ற சந்தேகம் உள்ளூர இருப்பதால் பயம் ஏற்படுகிறது. எழுதிப் பார்த்தவுடன், பாடம் மனதில் பதிவதுடன் எழுதிய கை உடலின் பகுதியான கை பாடத்தை நினைவு வைத்திருப்பதால், உடலிலிருந்து பயம் விலகி விடுகிறது. இனி, பரீட்சை

என்றால் பயமில்லை என்ற நிலை ஏற்படும். அத்துடன் உடலில் உள்ள மனம் (subconscious) விழிப்படைய உதவும் மலர் ஒன்றுண்டு. அம் மலரை அன்னைக்குச் சமர்ப்பித்து அதில் ஒன்றைத் தன்னுடன் பரீட்சைக்கு எடுத்துச் சென்றால் பயம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

பயம் மாறி தைரியம் வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் தைரியத்தைக் கொடுக்க எருக்கம் பூவும், மாற்றத்தை ஏற்படுத்த மரமல்லிகையும் பயன்படும். அருளில் நம்பிக்கை உள்ளவர்க்கு அருள் எனும் பருத்தி ரோஜா, அருளால் பயத்தை அழித்து விடும்.

கணவன் மனைவி பூசல்: நல்நோக்கம், சுமுகம், சண்டையின்மை, பூசலை அழிக்கும். மேலும் கட்டுப்பாடு, அற்புதம், விட்டுக் கொடுக்கும் குணம் ஆகிய மலர்கள் பூசலை அறவே அழிக்க உதவும்.

ஒருவர் மற்றவரைத் தம் ஆதிக்கத்திற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயலும்பொழுது எழும் பூசல்களே நிரந்தரமாக நிற்பவை. கணவனுக்கு இக் குணம் இருப்பதாகத் தெரிந்து அதை மாற்ற அவன் மனம் இடம் கொடுத்தால், மலர்களின் உதவி தேவைப்படாமல், பிரார்த்தனையும் இல்லாமல் அன்னை அந்த வீட்டில் சுமுகத்தை ஏற்படுத்தி விடுவார். மாறிய மனம் மணம் வீசும் மலர். மனைவிக்கு இதுபோன்ற நோக்கம் இருப்பது தனக்கே தெரிய வந்து, மனத்தளவில்

வெட்கம் ஏற்பட்டுத் திருந்த விரும்பினால் வீட்டில் சுமுகம் ஏற்படுவதோடல்லாமல், சந்தோஷம் நிறையும். அடக்கம் என்ற மலர் இந்த சந்தோஷத்தை அபரிமிதமாக்கிக் கொடுக்கும்.

இது தவிர, தன் அபிப்பிராயத்தை வலியுறுத்திப் பேசும் பழக்கம் இருந்தால் அது பூசலை விளைவிக்கும். அது சந்தோஷத்தைக் கலைக்குமே தவிர பூகம்பத்தைக் கிளப்பாது. பழக்கத்தை விட்டுவிட முன்வந்தால் நிலைமை மாறும். பகுத்தறிவு என்ற மலர் இங்கு பயன்படும்.

கணவனுக்கும் மனைவிக்கும் பூசல் ஏற்படும் முக்கியமான இடங்களில் ஒன்று, ஒருவருடைய குடும்பத்தைப் பற்றி மற்றவர் தெரிவிக்கும் அபிப்பி ராயம். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. இதற்காக இம் முயற்சியை எடுப்பவர்களுக்கு மென்மை என்ற மலர் பயன்படும். இதைத் தவிர்க்க முயலும் பொழுது பேச்சின் தரம் உயர்வாக இல்லாவிட்டால், தவிர்க்க முயல்வதை மீண்டும் உயிர்ப்பிக்க நேரும். இதற்கு மேலும் ஒரு சிறப்பான வழியுண்டு. முற்றிலும் எதிர்மறையான ஒரு கருத்தை உடன்பாடாகப் பேசும் பழக்கம் ஆங்கிலத்தில் உண்டு. பிறர் மனம் புண்படவே கூடாது என்ற பண்பில் வளர்ந்த மொழி ஆங்கிலம். இடித்துரைக்கும் பழக்கம் நிறைந்த இடத்தில் நம் அன்றாடப் பேச்சு உருவாகியிருப்பதால் ஒருவர் பேசுவது மற்றவரின் தலையில் அடிப்பதுபோல் இருப்பது நம் நாட்டுப் பழக்கம். உதாரணமாக "நீ சொல்வது முட்டாள்தனம்'' என்று நாம் பேசுமிடத்தில், ஆங்கிலேயர்கள் "பல அபிப்பிராயங்களில் இது ஒன்று''

என்பார்கள். அப்படிச் சொல்லும் பொழுது வேகம் குறைந்துவிடும். மனம் புண்பட வழியிருக்காது. அதைவிடச் சிறந்த முறை அவர்கள் சொல்வதில் நாம் ஏற்றுக்கொள்ள ஏதும் கருத்திருந்தால் அதை மட்டும் பாராட்டிப் பேசுவது நல்ல பண்பாகும். கணவனும் மனைவியும் மற்றவர் இனிக்கப் பேசவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டால் பூசல்கள் மறைந்து போகும். (No Quarrels) சண்டையின்மை என்ற மலர் நாம் செய்யத் தவறுவதைத் சரிசெய்து நேராக்கித் தந்துவிடும்.

வக்கிரமான புத்தியுள்ளவர்: இவர்களால் ஏற்படும் தொந்தரவு அழிய முக்கியமான மலர்களாக உண்மை ( Sincerity) நல்நோக்கம், அன்பு, மேலும் ஒளி, இனிமை, திருவுருமாற்றம் ஆகியவை பயன்படும். ஒரு நேரம் வக்கிரபுத்தியிருந்தாலும் மற்ற நேரங்களில் அவர்கள் தம் குணத்தை விட்டுவிட முயலுவதுண்டு. அவர்களே இம் மலர்களை அர்ப்பணித்து, தம் வக்கிரமான குணம் அழிய வேண்டும், நல்ல குணங்கள் உற்பத்தியாக வேண்டும் என்று செய்யும் பிரார்த்தனை மனத்தின் உண்மையை வெளிப்படுத்துவதால் செயல்படுவார்கள்.

அன்னை விரைந்து கோபத்தில் குழந்தையை அடித்துவிட்டு, பிறகு வருத்தப்படுவதுண்டு. அவசரத்தில் பிறர் மனம் புண்படும்படிப் பேசிவிட்டு, பின்னர் என்ன செய்வது என்று தவிப்பவருண்டு.

மற்றவரை மட்டமாக நினைப்பது, சந்தேகப்படுவது, பிறர் சொல்வதை ஏற்றுக்கொள்ள மறுப்பது, எவரும் தம் ஆதாயத்திற்காக மட்டுமே பிரியப்படுவார்கள் என நினைப்பது, மற்றவர் கோபத்தைக் குத்திக் கிளறுவது, அவர்களுடைய குறையைச் சுட்டிக்காட்டுவது, அவர் பின்னால் கேலியாகப் பேசுவது, மற்றவரெல்லாரும் அறிவில்லாதவரென நினைப்பது, முக்கியமானவரிடம் விஷயத்தை மறைப்பது, பிறர் செய்வனவற்றிற்கெல்லாம் பின்னணியாக ஒரு மறைபொருள் இருப்பதாக நினைப்பது, பேசுவது, அவர்களையே கேட்பது, அவர் என்று பேசவேண்டிய இடத்தில் அவன் என்று பேசுவது, உலகமே தம்மை ஏமாற்ற முனைகிறது என்று கற்பனை செய்வது, எதையும் பணத்தால் நிர்ணயிப்பது, மரியாதைக் குறைவாகப் பேச மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது போன்ற பழக்கங்கள் உள்ளவர்கள் குடும்பத்தில் இருந்துவிட்டால், ஆபீசில் உடன் வேலை செய்பவராகவோ, மேலதிகாரியாகவோ அமைந்து விட்டால் நம் வாழ்வு இருளடைந்து விடும். மனம் தொடர்ந்து புண்படும்.

அவர்களுக்குரிய குணத்திற்கு எதிரான தன்மை யுடைய மலர்கள் அவர்கள் போக்கை மாற்றிக் கொடுக்க உதவும். நம்மிடமுள்ள எந்தக் குணம் நம்மை அவருக்குப் பலியாக்குகிறது என்று கண்டு அந்தக் குணத்தையும் அதற்குரிய மலர் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.

மேற்சொன்ன குணங்களையும், அவற்றால் நாம் பாதிக்கப்படாமலிருக்கும் வகையில் உதவும் மலருக்கு அன்னையிட்ட பெயரையும் கீழே தருகிறேன்.

குணம்

மலரின் பெயர்

பிறரை மட்டமாக நினைப்பது

பெருந்தன்மை

சந்தேகம்

நம்பிக்கை

பிறர் சொல்வதை ஏற்றுக் கொள்ள மறுப்பது

விட்டுக் கொடுக்கும் குணம்

ஆதாய மனப்பான்மை

பெருந்தன்மை

கோபத்தைக் கிளறுவது

இனிமை

பின்னால் கேலியாகப் பேசுவது

உண்மை (sincerity)

மற்றவர்கட்கு அறிவில்லை என நினைப்பது

விவேகம்

விஷயத்தை மறைப்பது

வெளிப்படையாகப் பேசுதல்

பிறர் செயலில் பின்னணியைக் காண்பது

நேர்மையாகச் செயல்படுதல்

மரியாதையில்லாமல் பேசுவது

கீழ்ப்படிதல்

எதையும் பணத்தால்

நிர்ணயிப்பது

மேன்மக்களுடைய பெருந்தன்மை

பிறருக்கு மரியாதைக்

குறைவாகப் பேசக்

கற்றுக் கொடுத்தல்

தன்னலமற்ற தன்மை

 

அன்பில்லாதவர்: அன்பைச் செலுத்தவோ, பெற்றுக்கொள்ளவோ முடியாதவர் பெற்றோராகவோ, உடன் பிறந்த வராகவோ, கணவனாகவோ, மனைவியாகவோ

அமைந்து விட்டதால் வாழ்க்கை நரகமாகிவிட்டாலும், வெறிச்சென்று ஜீவனற்று களையிழந்து' பொட்டல் காடாகவோ பாலைவனமாகவோ, மாறிவிடும்.

இவர்களால் நம் வாழ்வு சீரழியாமலிருக்க உதவும் மலர்கள் பிரியம், பாசம், புன்னகை ஆகும். மேலும் தீவிரம், ஆறுதல், அர்ப்பணம் ஆகியவையும் உதவும். அவர்களே மாறப் பிரியப்பட்டால் இம் மலர்களுடன் மாற்றம் என்ற மலரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

உணர்ச்சி பொங்கும் சுபாவமுள்ள தாயாருக்குப் பாராமுகமான மகள் பிறந்துவிட்டால், தாயாருக்கு வேதனையால் தலை வெடித்துவிடும் போலிருக்கும். தாயார் மடியில் படுத்துக் கொள்ள பிள்ளைகள் 15 வயது வரை பிரியப்படுவர். அவர்களுடைய தாயாருக்குக் குழந்தை உள்பட எவரும் தம்மைத் தொடுவது பிடிக்காவிட்டால் குழந்தை மனம் சுருங்கிவிடும். ஆரோவில் நகரத்தில் 21 வயது அமெரிக்கப் பெண்ணுக்கு உடல்நலம் குன்றிய பொழுது மற்றொரு பெண்மணி தம் மடியில் அவரைப் போட்டுக் கொண்டு மருந்து கொடுக்க முன் வந்தார். அவர் மடியில் படுத்தவுடன் அப் பெண்ணுக்கு எல்லாம் சரியாகி விட்டது. மருந்து கூடத் தேவையில்லை. "இதுபோல் என் தாய் மடியில் படுக்க நான் இதுநாள் வரை ஏங்கினேன். ஒரு நாள்கூட என் தாய் அனுமதித்ததில்லை'' என்று கதறி அழுதார்.

மரம் போன்ற கணவனுக்கு நெகிழ்ந்த நெஞ்ச முள்ள மனைவி வாய்த்தால், எதிரே மனைவியைக்

கண்டால் அவனுக்கு எரிச்சல் வரும். ஏன் சும்மா வந்து தொந்தரவு செய்கிறாய் என்பான்.

கெஜட் பதவி அதிகாரி ஒருவர். திறமையும், நேர்மையும் மிக்கவர். அவரால் எவருக்கும் தொந்தரவு வாராது. பிறர் கேட்காமலேயே மற்றவர்களுக்குத் தம்மால் செய்யக்கூடிய உதவியைத் தாமே முன்வந்து கேட்டுச் செய்யும் பழக்கமுள்ளவர். செல்லுமிடங் களிலெல்லாம் சிறந்த பெயர் எடுத்தவர். ஆனால் அவர் சிரித்து எவரும் பார்த்ததில்லை. இவரால் சிரிக்கவே முடியாதோ என்று மற்றவர்கள் வியந்ததுண்டு. பண்பு நிறைந்த உள்ளத்திலிருந்து புன்னகை புறப்படாத நிலை. இவருடைய மனைவி, மக்களுடைய நிலை என்ன? புன்னகை என்று ஒரு மலருக்கு அன்னை பெயரிட்டுள்ளார். அம்மலர் இவரையும் சிரிக்க வைக்கும் திறனுடையது.

இளமையில் கொடுமை, வறுமைக்கு ஆளானவர் களுக்குப் பொதுவாகப் பாசமிருக்காது, வளர்த்தவர்கள் பாசமாக இருந்தாலும், இறக்கும் தருவாயிலும் அவர்கள் அழைப்பை ஏற்றுக் கொஞ்ச நாழிகை அவர்களைப் போய்ப் பார்க்கத் தயங்கி, அவர்கள் மனம் புண்படச் செய்தவருண்டு. பாசம் என்ற மலர் இவ்வுள்ளங்களிலும் பாசத்தை உற்பத்தி செய்யும்.

உடல்நலம் குன்றி நெடுநேரம் படுக்கையில் இருப்பவருக்கு அருகில் ஒருவர் இருந்தால் தேவலை என்றிருக்கும். ஒருவர் மாறி ஒருவர் தவறாது அருகில் இருந்த குடும்பத்தில் பிறந்தவர் வாழ்க்கைப்பட்ட இடத்தில் அருகில் எவரும் வாராவிட்டால் அவருக்கு நோயைவிட, மனம்தான் புழுங்கித் துடிக்கும்.

அர்ப்பணம், ஆறுதல் என்ற மலர்கள் அவர் குறையைப் போக்கும்.

இவை பொதுவான பரிகாரங்கள், ஏன் ஒருவர் பாசமற்றிருக்கிறார் என அறிந்து அதை மலர்களால் மாற்றினால் நிரந்தரமாக நல்வாழ்வு அமையும். கொடுமைப்பட்டவருக்கு நம்பிக்கை போய் விட்டிருக்கும். அவருக்கு நம்பிக்கை என்ற மலர் அடிப்படையை மாற்றிக் கொடுக்கும். அதனால் ஏற்பட்ட வறண்ட சூழ்நிலைகள் மாறி சுமுகமான நிலை அமையப் பெறும்.

பொறுப்பற்றவர்: குடும்பத் தலைவர் பொறுப்பற்றவராகிவிட்டால், அக் குடும்பம் நாசமாகி விடும். பிள்ளை சிறு வயதிலேயே பொறுப்பில்லாமலிருந்தால், பெற்றோருக்கு மனம் கிலேசமடையும். கணவன் பொறுப்பாக இருந்து மனைவி பொறுப்பில்லாமருந்தால், குழந்தைகளின் எதிர்காலம் இருள் அடையும்.

கட்டுப்பாடு, மனமாற்றம், கவனம் இவர்களுக்குரிய மலர்கள். உண்மை, நெறியாகச் செயல்படுதல், அற்புதம், சத்தியவாக்கு ஆகியவையும் பயன்தரும். பல குடும்பங்களில் இது போன்ற நிலை ஏற்படுவதுண்டு. அவரே முன்வந்து தம்மை மாற்றிக்கொள்ள முயலவில்லை என்றால், மேற் சொன்ன மலர்களை அன்னைக்குச் சூட்டி அவருடைய பொறுப்பின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் பிரார்த்தனை செய்தால் பலன் தெரியும். தகப்பனார் பொறுப்பில்லாததால் மகளுக்குத் திருமணம் தடைப்படுகிறது, மகன் கட்டுப்பட மாட்டேன்

என்கிறான், வேலை செய்யும் ஆட்களால் விரயம் ஏற்படுகிறது, உறவினர்களின் எதிரில் மரியாதை இல்லாமருக்கிறது என்று ஒவ்வொரு காரியத்திலும் யார் பாதிக்கப்படுகிறார்களோ, எந்த வகையில் பாதிக்கப்படுகிறார்களோ, அதற்குரிய மலர்களைத் தெரிந்து பயன்படுத்தினால் பலன் தெரியும். வீட்டில் ஒருவர் பொறுப்பில்லாமலிருந்தால், மற்றவர்கள் அதைத் தங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டு தாங்கள் பாதிக்கப்படும் இடத்தை மட்டும் சுட்டிக் காட்டுவார்கள். தகப்பனார் அடிக்கடி வேலையை விட்டு மாறுகிறார். அதனால் குடும்பம் பாதிக்கப்படுகிறது என்றால், அதே காரணத்தால் அவர் வீட்டில் அதிகம் தங்குவதில்லை என்பதால் காலேஜ் படிக்கும் பையன் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஊர் சுற்றுகிறான். தகப்பனாருக்குப் பொறுப்பில்லை எனும்பொழுது பையனிடம் நாம் எதை எதிர்பார்க்கலாம் என்பதற்கு மாறாக, பையன் பொறுப்பாகப் படிக்க ஆரம்பித்து தகப்பனாரால் ஏற்பட்ட குறையை நிவர்த்தி செய்ய முற்பட்டால், அவனுடைய பிரார்த்தனை அன்னைக்கு உடன் கேட்கும். மலர்கள் அபரிமிதமான பலன் தரும்.

மகன் இந்த வயதிலேயே பொறுப்பில்லாம லிருப்பதால் அவன் எதிர்காலத்தைக் கட்டிக் காக்க முற்படும் பெற்றோர் உண்டு. இரு அண்ணன், தம்பிகள். 120 ஏக்கர் நிலம். அண்ணன் இறந்துவிட்டார். அவருக்கு ஒரே பையன்; ஊதாரி, தம்பிக்கு ஒரே பெண். தம்பி அண்ணன் மகனைப் பற்றிக் கவலைப்பட்டார். அவன்

வயதுக்கு வந்தவுடன் அவனை அழைத்து "உன் பங்குக்கு 60 ஏக்கரைப் பிரித்துக் கொடுத்து விடுகிறேன்'' என்றார். பெருந்தன்மையான குடும்பம் என்பதால் பையன் பிரிவினை தேவையில்லை என்றான். "என் பெண்ணுக் குரிய 60 ஏக்கரை அவளுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக அவளுக்கு 30 ஏக்கரும், உனக்கு 90 ஏக்கரும் கொடுக்கப் பிரியப்படுகிறேன். ஆனால் உன் ஆயுசுக்கும் உனக்குச் சொத்தை விற்க உரிமை கிடையாது என்று எழுதி உன் பிள்ளைகள் மட்டும் உரிமையை அனுபவிக்க நீ சம்மதிக்க வேண்டும்'' என்று ஏற்பாடு செய்தார். பெருந்தன்மையால் 40 வருஷங்களாக அந்தச் சொத்து இன்றும்கூட அழியாமலிருக்கிறது.

இதுபோன்ற பெற்றோர்கள் அநேகர். பிள்ளையின் பொறுப்பற்ற தன்மையை ஈடுகட்ட மற்றவர் ஒருவர் நல்லெண்ணத்தால் செய்யும் முயற்சிக்கு மலர்கள் தரும் பலன் அபரிமிதம்.

கணவனால் கைவிடப்பட்ட மனைவி: பாசம், ஆசீர்வாதம், பக்கபலமான துணை ஆகிய மலர்கள் கணவனை மனைவியுடன் சேர்க்கும். நம்பிக்கை, சத்தியவாக்கு, அற்புதம், நட்பு, பிரார்த்தனை, ஆறுதல் ஆகியவை மேலும் பலன்தரும்.

மலர்கள் தத்தமது பங்குகளுக்குரியவற்றைத் தவறாது செய்யும். இப்பிரச்னையில் வேறு பல அம்சங்களும் உள்ளன. மனைவியால் கைவிடப்பட்ட கணவன்மார்களும் உண்டு. ஆனால் குறைவு. இருவருக்கும் பிரச்னை ஒன்றுதான்.

கணவன் கைவிட்ட காரணம் மனைவியின் குறைகளாக இருக்கும். கணவனுடைய குறையாக இருக்கும். அல்லது வேறு பிரச்னைகளாகவும் இருக்கும். குறை தன் மீதிருந்தாலும், கணவன் மீதிருந்தாலும் அவற்றிற்குரிய குறிப்பிட்ட மலர்கள் பிரச்னையை எளிதில் உடனடியாகத் தீர்க்கும்.

பொறுப்பில்லாத கணவன் ஊர் சுற்றுவதை மனைவி கண்டித்தாலும், கணவனுடைய வாழ்விலுள்ள குறைகளை மனைவி கண்டு கொண்டதாலும், தாயார் பேச்சுக்கு இணங்கி கணவன் கொடுமைப்படுத்து வதாலும், திருமணம் ஆனபிறகு அதிக நகையை மனைவி கொண்டு வர வேண்டுமென்பதாலும், சொன்னபடி நகைகளைப் போடவில்லை என்பதாலும், வறட்டுப் பிடிவாதத்தாலும் இவைபோன்ற பல காரணங்களுக்காக கணவன் மனைவியைத் தள்ளி வைப்பதுண்டு.

மனைவி வாயாடி என்பதாலும், கணவன் வீட்டாரைக் குறைத்துப் பேசி அவமானப்படுத்துகிறாள் என்பதாலும், எப்படியும் கணவனை அவன் வீட்டி லிருந்து பிரிக்க வேண்டும் என்று முயலுவதாலும், அடம் பிடித்துக் காரியத்தைச் சாதிக்கலாம் எனத் தாயார் சொல்லிக் கொடுத்ததை நம்புவதாலும், தனக்குள்ள குறைகளை மறைக்க வேறு பிரச்னைகளைக் கிளப்புவதாலும், எப்படியாவது தன் கட்சி ஜெயிக்க வேண்டும் என்று படாதபாடுபடுவதாலும் கணவனும் மனைவியும் பிரிந்ததுண்டு.

இருவரில் ஒருவர் தம் தவற்றை உணர்ந்து திருந்துவதே சிறப்பு. மனம் மாறிப் பின், நிலைமை

மாறாமலிருந்தால், மலர்கள் அதைப் பூர்த்தி செய்யும்.

கணவனை விட்டுப் பிரிந்தது ஒருவகையில் சௌகரியமாகப் போய்விட்டது என்ற எண்ணமுடைய பெண்ணும் இருப்பதுண்டு. அந்த எண்ணத்தை அடிமனத்தில் வைத்துக் கொண்டு. வெளியில் அவருடன் சேர முயற்சி செய்யும் பெண் தன் உள்மனத்தை மாற்றிக் கொண்டால் பிரார்த்தனை பலிக்கும். மலர்களால் அற்புதம் நிகழ்வதைக் காணலாம்.

அடக்கம், கீழ்ப்படிதல், தன்னலமற்ற தன்மை, ஆசையை விட்டொழித்தல், விட்டுக் கொடுக்கும் குணம், ஆன்மிகப் பேச்சு, சுமுகம், பெருந்தன்மை, வெளிப் படையாகப் பேசுதல் ஆகிய மலர்கள் இச்சூழ்நிலையி லுள்ளவர்க்குப் பயன்படும்.

வேலையில்லாதவர்: நம்பிக்கை, தொழில், அதிர்ஷ்டம் என்பவை பலன் கொடுக்கும். உற்சாகம், நிரந்தரம், முறைப்படுத்திய செயல், பூர்த்தி, எதிர்காலம், வீரச் செயல், விடுதலை, சத்தியவாக்கு, செயல்திறன் ஆகிய மலர்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

வேலை இல்லாத ஆண்கள், பெண்கள் அன்னைக்குப் பிரார்த்தனை செய்வதால் உடன் வேலை கிடைப்பது பெரும்பாலோர் அனுபவம். வேலை கிடைக்காததற்குச் சில காரணங்கள் இருப்பதுண்டு. சோம்பேறிக்கு வேலை செய்யப் பிடிக்காது. வேலைக்கு முயல்வான். கிடைத்தால் வேலை செய்ய வேண்டுமே எனப் பயமிருக்கும்.

ளிமையான வேலையும், பெரிய சம்பளமும் வேண்டும் என்று வேலைக்குப் போவதற்கு முன்பே மனம் நாடும். அவர்களுக்கு 8, 10 வருஷங்களாக வேலை கிடைக்காது. மனம் மாறும்வரை நிச்சயமாகக் கிடைக்காது. வேலைக்குப் போக விருப்பமாகப் பாடுபடுவான். ஆனால் 24 வயதிலும் தம் பொருள்களை ஒழுங்காகவோ, பத்திரமாகவோ வைத்துக்கொள்ளத் தெரியாது. எந்தத் திறமையுமில்லை என்ற நிலையில் பலர் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் தம் உண்மை நிலையை அறிந்து, ஏற்றுக் கொண்டால், பிரார்த்தனையால் உடனே பலன் அடைவார்கள். மனம் மாறிய பின், மலர்கள் அதிகப் பலன் தருவதைக் காணலாம். மனம் மாறவும் மலர்கள் பயன்படும்.

பக்திக்கும், நம்பிக்கைக்கும் பலன் ஏராளம். குறிப்பான மனநிலை தடையாக இருந்தால், அதை மாற்றிக் கொண்டால் பலன் உடனடியாகக் கிடைக்கும். மலர்கள் பலன் தருவதுடன், நம் மனநிலையை, சூழ்நிலையை மாற்றவும் பயன்படும்.

பட்டியல் கிடைத்தவரை தமிழ்ப் பெயர்களையும், தேவைப்பட்ட இடத்தில் மட்டும் தாவரயியல் பெயரையும் குறிப்பிட்டுள்ளேன். தியான மையம் உள்ள ஊர்களில் அங்குள்ளவர்களிடம் Flowers and their Messages என்ற புத்தகம் சில சமயங்களில் இருக்கும். அவர்களிடம் சில பெயர்களைக் கேட்டறியலாம். தரிசனச் சமயங்களில் சமாதி அருகேயுள்ள சாதகர்கள் சில பெயர்களைச் சொல்ல முடியும். Botnay படித்த மாணவர்களிடமிருந்தும் கேட்டுக் கொள்ளலாம்.

மலர்களைத் தேட ஆரம்பித்தால் நம்மை நாடி வருவது தெரியும். எல்லா மலர்களுக்கும் சீசன் உண்டு. சில சமயங்களில் சீசனிலே மலர் கிடைக்காது. சில சமயங்களில் சீசன் இல்லாவிட்டாலும் கிடைக்கும். தேடும் மனப்பான்மையைப் பொருத்தது. தீவிரமாகத் தன் பிரச்னைக்குரிய மலர்களைத் தேடுபவனுக்கு மலர்கள் கிடைத்துவிடும். தேடும் தீவிரத்தாலேயே பிரச்னை, மலர் கிடைக்குமுன் தீர்வதுண்டு.

நம்பிக்கை வீண் போவதில்லை என்ற வாக்கை அதிக அளவில் நிதர்சனப்படுத்துபவை மலர்கள்.

1. Flowers and their Message என்ற புத்தகம் SABDA, Sri Aurobindo Ashram என்ற இடத்தில் கிடைக்கும்.

2. புஷ்பாஞ்சலி' என்ற மற்றொரு புத்தகம் மதர் சர்வீஸ் சொஸைட்டியிலும், சென்னை தியான மையத்திலும் கிடைக்கும்.

*******

Sl. No.

1

Mother's Name in Tamil

2

Mother's Name in English

3

English Name

4

Botanical Name

5

Tamil Name

6

1.

செல்வ வளம்

Prosperity

Cannon ball Tree

 

நாகலிங்கமலர்

2.

இறை அருள்

Grace

Changeable Rose

 

பருத்தி ரோஜா

3.

வெற்றி

Victory

 

Allamanda

Cathartica

குவளைப்பூ

4.

பாதுகாப்பு

Protection

Bougainvillea

 

காகிதப்பூ

5.

சந்தோஷம்

Joy

 

Crinum

 

6.

தெய்வீக உதவி

Divine Help

 

Malvaviscus

Drummondii

சிறிய செம்பருத்தி

7.

திருவுருமாற்றம்

Transformation

Indian Cork Tree

 

மரமல்லிகை

8.

முன்னேற்றம்

Progress

Catharanthus Roseus

 

நித்யகல்யாணி

9.

பிரார்த்தனை

Prayer

Zephyranthes

Fairy Lily

 

10.

கட்டுப்பாடு

Discipline

Basil

 

திருநீற்றுப்பச்சை

 

11.

மனத்தின் விழிப்பு

Awakening of the Physical Mind

 

Turnera ulmifolia

elegans

 

12.

மனமாற்றம்

Repentence

Finger-grass

 

 

 

13.

ஒளி

Light

Queen of the Day,

Day Jessamine

 

பகல் ராணி

14.

ஒரு பொழுதும் பொய் சொல்லாதே

Never tell a lie

 

 

Pereskia

 

 

15.

முன்யோசனை

Foresight

 

Sanchezia

speciosa

 

16.

விடுதலை

Liberation

 

Pachira rosea

 

 

17.

நிதானம்

Balance

 

Begonia

 

 

18.

அற்புதம்

Miracle

Ironwood

 

 

காயாம்பூ

19.

நாணயம்

Honesty

 

 

 

20.

அடக்கம்

Humility

Dropseed

 

 

 

21.

முறையான செயல்

Organisation

 

Combretum

gloriosum

 

22.

செல்வம்

Wealth

Water Lily

 

 

அல்லி

23.

எளிமை

Simplicity

Dahlberg, Daisy

 

 

24.

வேலை (நெறியான)

Work

 

 

Acacia

auriculifomis

 

 

25.

நம்பிக்கை

Trust

 

Asystasia

 

 

26.

கவனம்

Attention

Spider Plant

 

 

 

27.

ஆசையை

அழித்தல்

Renunciation

 

Angelonia

 

 

28.

இலட்சியம்

Idealism

Cornflower,

Bachelor's button

 

 

29.

பொறுமை

Patience

Spanish Cherry

 

 

மகிழம்பூ

30.

ஆனந்தம்

Ananda

 

Hibiscus

 

31.

பிராணனுடைய

விழிப்பு

Vital opening

 

 

Barleria

 

டிசம்பர் பூ

32.

சக்தி

Life energy

Florists's Chrysanthemum

 

சாமந்தி

33.

பேரானந்தம்

Felicity

Wine Grape,

Cultivated grape

 

 

34.

சாந்தம்

Peace

 

Guettarda

speciosa

விருட்சிப் பூ

35.

மனத்திறன்

Will

 

Clerodendrum

minahassae

 

36.

தைரியம்

Courage

Mudar

 

எருக்கம்பூ

37.

செயலில் பயமின்மை

Fearless action

 

Love-lies-

bleeding,

Tassel Flower

 

 

38.

செயல்திறன்

Skill Works

 

Phlox

 

39.

நிஷ்டை

Concentration

Crown of thorns,

 

 

40.

நல்நோக்கம்

Goodwill

Sweet alyssum

 

 

41.

சுமுகம்

Harmony

Coral vine

 

கொடி ரோஸ்

42.

சண்டை யின்மை

No Quarrels

 

Glory lily,

Climbing lily,

Flame lily

 

செங்காந்தள்

43.

விட்டுக் கொடுக்கும் குணம்

Plasticity

 

Marigold

 

 

துலுக்க சாமந்தி

44.

அன்பு

Love

Rosa,

Red Roses

 

சிவந்த ரோஜா

45.

உண்மை

Sincerity

 

Melampodium

 

46.

இனிமை

Sweetness

Balsam-pear,

Bittergourd

 

பாகல் பூ

47.

பெருந்தன்மை

Nobility

 

Dahlia

 

48.

விவேகம்

Wisdom

Rain Tree

 

 

தூங்குமூஞ்சி மரப் பூ

49.

வெளிப்படையாகப் பேசுதல்

Frankness

 

Transvaal daisy

 

 

 

50.

கீழ்ப்படிதல்

Obedience

Chinese Pink,

Rainbow Pink

 

 

51.

மேன் மக்களுடைய பெருந்தன்மை

Aristocracy

 

 

Dahlia

 

 

52.

தன்னலமற்ற

தன்மை

Unselfishness

Easter Lily Herald's trumpet

 

 

53.

பிரியம்

Affection

Rosa

 

 

54.

பாசம்

Attachment

 

Eranthem um hypocrateriforme

 

55.

தீவிரம்

Intensity

 

Orthosiphon

 

56.

புன்னகை

Smile

 

Michelia Champaca Alba

 

57.

அர்ப்பணம்

Self-giving

Moonflower

 

 

58.

ஆறுதல்

Solace

Marvel of Peru, Four O'Clock

 

 

59.

சத்தியவாக்கு

Promise

Flowering Maple

 

 

60.

மாற்றம்

Conversion

Amaryllis

 

 

61.

நெறியாகச்

செயல்படுதல்

Steadfastness

Guava

 

 

 

62.

தொழில்

Enterprise

White Silk Cotton tree

 

 

63.

அதிர்ஷ்டம்

Fortune

Cactus night flower, hedge cactus

 

 

64.

பூர்த்தி

Accomplishment

 

Mimusops elengi

 

65.

எதிர்காலம்

Future

Pussy - willow

 

 

66.

வீரச்செயல்

Heroic Action

 

Ipomeoea Horsfalliae

 

67.

நிரந்தரம்

Stability

 

Bauhinia purpurea

 

68.

மென்மை

Delicacy

Coriander

 

கொத்தமல்லி

69.

உள்மனம்

Subconscient

Tube flower, Turk's turban

 

 

70.

கன்ட்ரோல்

Control

 

Billbergia

 

71.

எதிரிகளை

வெல்வது

Conquest over the enemies

 

Verbena

 

72.

தெளிவு

Clarity

 

Gazania

 

73.

பகுத்தறிவு

Common Sense

Sweet-scented Tobacco

 

புகையிலைப் பூ

74.

ஆசீர்வாதம்

Blessings

Sweet scabious

 

 

75.

நட்பு

Friendship

Indian Shot

 

 

76.

ஆன்மிகப் பேச்சு

Spiritual speech

Sprenger asparagus

 

 

77.

உற்சாகம்

Enthusiasm

 

Petunia

பெட்டூனியா

78.

பக்கபலமான

துணை

Support

 

Solanum Seaforthianum

 

79.

நேர்மையாகச்

செயல்படுதல்

Steadfastness (solid)

Red silk-cotton tree

 

 

80.

நம்பிக்கை

Hope

 

Jacquemontia pentantha

 book | by Dr. Radut