Skip to Content

8. அன்னைக்குகந்த உயர்ந்த முறை

ஒரு காரியத்திற்குப் பல நிலைகளில் பலன் உண்டு. சாதாரணமான பலன், அதிகப் பலன், எதிர்பாராத பெரும்பலன், உலகத்திலில்லாத அற்புதமான அதிர்ஷ்டம் பலனாக வருவது போன்றவை உண்டு. அன்னையை ஏற்றுக் கொண்ட பின் வழக்கமாக வாழ்வில் தாங்கள் கண்டதைவிட அதிகமான பலனைப் பெறுவதை அனைவரும் கண்டுள்ளனர். ஒரு சிலருக்குத் தொடர்ந்து உச்சகட்டப் பலன்கள் வாழ்வில் எல்லாப் பகுதிகளிலிருந்தும் கிடைப்பதைப் பார்த்திருக்கின்றனர்.

பலனுக்குப் பல நிலைகள் இருப்பதைப் போல் மனிதச் செயலுக்கும் பல நிலைகள் உண்டு. சாதாரணச் செயல், முயற்சியுடைய செயல், உயர்ந்த முயற்சி, அறிவும் உழைப்பும் நிறைந்த முயற்சி, அசாதாரணமான உழைப்பு, அற்புதமான சேவையுணர்வுடன் கூடிய காரியம் போன்ற நிலைகளில் மனிதச் செயலும் முயற்சியும் இருக்கும். வாழ்வில் பலன் செயலிலும் திறத்தை ஒட்டியுமிருக்கும். அன்னை பக்தர்களுக்குப் பலன் ஒருபடி உயர்ந்திருக்கும். முதல் நிலை முயற்சிக்கு இரண்டாம் நிலை பலன் உண்டு. சாதாரணச் செயலுக்கு வாழ்வளிக்கும் சாதாரணப் பலனுக்குப் பதிலாக அடுத்த கட்டமான அதிகப் பலனை அன்னை வழங்கு கிறார்கள்.

தொடர்ந்து அதிகப் பலன் பெறும் அன்பர்கள் பொதுவாக வாழ்க்கையை நெறியாக நடத்துபவர்களாக இருப்பார்கள். அன்னையிடம் வந்தபின் அதிக வாழ்க்கைப் பலனைத் தொடர்ந்து பெறுவதைக் கண்டபின், இவர்களுக்கு ஒரு வாய்ப்புண்டு. அந்த வாய்ப்பைப் பெற ஒரு நிபந்தனையுண்டு. பலனையும், முயற்சியின் தரத்தையும் 6 படிகளாகப் பிரித்தேன். ஆறாவது படியில் உள்ள பலனை நிரந்தரமாக இவர்கள் பெற முடியும் என்பதே வாய்ப்பு. அதற்குரிய நிபந்தனையை இருவிதமாக விளக்கலாம். (1) ஐந்தாம் நிலை முயற்சியை மேற்கொள்ள வேண்டும் அல்லது (2) தான் இன்றிருக்கும் நிலை எதுவானாலும் அந்நிலைக்குரிய முயற்சியை (with total sincerity and perfection) முழு உண்மை உணர்வுடனும், பவித்திரமான அடக்கவுணர்வுடனும் மேற்கொள்ள வேண்டும். பக்தன் இருக்கும் நிலை எதுவானாலும் அவன் முயற்சி அந்நிலைக்குரிய பூரணம் பெறுமானால் அத்துடன் அவன் மனம் பவித்திரமாக இருக்குமானால், அவன் பெறும் பலன் உச்சகட்டப் பலனாகும்.

யோகத்தை மேற்கொண்ட சாதகர்களைப் பற்றிப் பேசும் பொழுது பகவான் ஸ்ரீ அரவிந்தர், ஆன்மிகக் குருவுக்கு லஞ்சம் கொடுத்து, பாஸ் செய்யவே சாதகர்கள் விரும்புகின்றார்களேயன்றி, முறையாக யோகத்தை மேற்கொள்ள முன்வரமாட்டேன் என்கிறார்கள் என்று கூறுகிறார். வாழ்வையும், குடும்பத்தையும், செல்வத்தையும் உதறி விட்டு யோகத்தை மேற்கொண்டவர்களுக்கே குறுக்கு வழியில்

போக மனம் நாடுகிறது என்றால் சாதாரண மனிதன் குறுக்கு வழியையே லட்சியமாகக் கொள்ள விரும்புவான் போலிருக்கிறது.

நடைமுறையில் நாம் எளிய மனிதர்களாகிய நம் போன்றவரிடையே நெறியைத் தவறாது விழைந்து ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையுடைய பலரைக் காண்கிறோம். அவர்கள் அன்னையிடம் பெறுவது அபரிமிதம்.

டிபார்ட்மெண்ட் டைரக்டரிடம் அந்யோந்நியமாக நாள் முழுவதும் நெருங்கிப் பழகிய என்.ஜி.ஒ. தனக்குரிய பிரமோஷனைக்கூடக் கேட்க முடியாத மனநிலையில் இருந்ததுண்டு. தனக்குப் பரம எதிரியாகப் பல ஆண்டுகளாகக் கருதிய குழந்தையின் சிறப்பை வாய்விட்டு நேரடியாகப் போற்றும் 15 வயதுக் குழந்தையுண்டு. செலக்ஷன் கமிட்டி முடிவாக இல்லை என்று சொன்ன பிறகும் அன்னை மீதுள்ள நம்பிக்கையால் கமிட்டியின் சொல் முடிவன்று, அன்னையிடம் முடிவிருக்கிறது என்று அழுத்தமாக நினைத்து அடுத்த மூன்று மணி நேரத்தில் நல்ல பலனைக் கண்டவர் உண்டு. எளிய நண்பரை விட்டுப் பிரிந்து தம்முடன் வந்து சேர்ந்துகொள்ள கோடீச்வர முதலாளி விடுத்த அழைப்பை மறுத்து எளிய நண்பனுக்கே என் விசுவாசம் உரியது என்று சொல்லிய எளியவர் உண்டு.

அன்னைக்குக் காணிக்கையாக ஒரு பொருளைச் சமர்ப்பித்தால் அதேபொருள் பல திசைகளிலிருந்து நம்மை நாடிவரும். நண்பர் கொடுக்கும் பிரியமான

பரிசை அன்னையின் பவித்திரத்தோடு வயதான பக்தை பெற்றுக் கொண்டதால், பரிசைக் கொடுத்த நண்பருக்கு அதே பொருள் மூன்று திசைகளிலிருந்து வந்தது. 6 நாள்கள் லீவு எடுத்தால்தான் பிறந்த நாளைக்கு ஆசிரமம் வரமுடியும் என்ற நிலையிருந்த ஆபீசர், சட்டங்களை நம்ப மறுத்து நம்பிக்கையை அன்னை மீது வைத்ததால் ஏழு நாள்கள் தொடர்ந்து சர்க்கார் விடுமுறையில் பிறந்த நாள் தரிசனத்திற்கு வந்தார். முதலாளியோடு மனத்தாங்கலுடன் வேலையிலிருந்து நின்றுவிட்ட காவல்காரனைத் தன் கெட்ட எண்ணத்தைப் பூர்த்தி செய்வான் என்று நம்பி முதலாளியின் எதிரி அவனை நாடிய பொழுது அவன் "உங்கள் கெட்ட எண்ணத்திற்கு நான் துணை செய்ய மாட்டேன்'' என்றதுடன் "என் பழைய முதலாளிக்கு நீங்கள் செய்ய இருக்கும் தீங்கை உறுதியாகத் தடுப்பேன்'' என்றும் அவருக்கு எச்சரிக்கை செய்தான். சிறந்த தொழிலதிபர் என்று நாட்டின் முதன்மையான பரிசைப் பெற்று அடுத்த வாரம், தம் தொழிலை அபிவிருத்தி செய்ய அடுத்தவர் சொன்ன கருத்தை அடக்கமாக ஏற்றுக்கொண்ட செல்வர் ஒருவர்.

கேட்டுப் பெற முடியாத மனநிலை, எதிரியைப் போற்றும் நேர்மை, தெய்வ நம்பிக்கை, பணத்தைவிட நட்பை உயர்வாகக் கருதும் நிலை, பவித்திரமான பக்தி, அசைக்க முடியாத நம்பிக்கை, மனத்தாங்கலை மீறிய நேர்மையான விசுவாசம், செல்வத்தைத் தாண்டிய அடக்கம் போன்றவை இன்றும் நம் நாட்டில் பரவலாகப் பலரிடம் காணக்கூடியன.

இதற்கு நேர் எதிரான உதாரணங்கள் பல உண்டு. அவற்றைக் குறிப்பிடத் தேவையில்லை. விளக்காமல் விளங்கும் நிலைகள் அவை.

உயர்ந்த குணம் உடையவர் ஒருவர் அன்னையிடம் வந்தபின் தமக்கிருப்பது ஒரே உயர்ந்த குணமானாலும், அதற்குக் கிடைக்கும் பலன் உச்சகட்டப் பலனாக இருக்கிறது என்று கண்டபின், அதனால் உற்சாகம் ஏற்பட்டு தம் நிலைக்கு அளவு கடந்து மீறிய ஒரு திட்டத்தை ஏற்றுச் செயல்பட்டால் பலிக்கும் என்று உணருகிறார். சைக்கிள் மட்டுமே சொந்த வாகனமாக உள்ள ஒருவருக்கு இருதய நோயால் சைக்கிளும் விடக்கூடாது என்று சொல்லிவிட்டபின், அன்னையிடம் வந்து மலர்களின் சிறப்பை அறிந்து தினமும் புஷ்பங்களைச் சேகரம் செய்து 150க்கு மேற்பட்ட புஷ்பங்களையும் சேர்க்க 4 மணி நேரம் சைக்கிளில் போக முடிகிறது என்று கண்டும், கோர்ட்டில் உள்ள கேஸ் தானாகச் சமரசம் ஆவதைக் கண்டும், தாம் கோடிக்கணக்கில் இட்ட திட்டம் மீண்டும் கூடிவருவதைக் கண்டும், பக்தியை அதிகப்படுத்திக் கொண்டதால், அவர் திட்டம் பலநூறு கோடிகளில் பூர்த்தியாகப் போகிறது என்ற செய்தி இவரை உற்சாகப்படுத்தியது. உற்சாகம் பலன் தரும் முதற்கட்டமே பிரமிக்கும் அளவில் இருந்தது. உடனே அவருடைய பழைய வேண்டாத குணங்கள் தலையெடுத்தன. அவற்றை முனைந்து விலக்குவதற்குப் பதிலாக "எல்லாரும் இப்படித்தானே இருக்கிறார்கள்? நாமும் அப்படியிருந்தால் என்ன தவறு?'' என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டார். வந்த வாய்ப்பு மறைந்துவிட்டது.

எல்லாருக்கும் கிடைக்காத பலனை நாம் நாடும்பொழுது நாம் எல்லாரையும் போல இல்லாததால், எவரும் நினைத்துப் பார்க்க முடியாத பலன் நம்மை நாடி வருகிறது. இந்நிலையில் நாமும் மற்றவரைப் போலிருக்க விரும்பினால், பலன் மற்றவர்களுக்குக் கிடைப்பதைப் போலவே கிடைக்கும். அன்னை பக்தர்களுக்குரிய அரிய வாய்ப்பு இது. இதைப் பெற்றவர்களும் உண்டு. இழந்தவர்களும் உண்டு.

15 லட்சம் ரூபாயில் வருஷச் செலாவணியுள்ளவர் உதவியை நாடினார். அவர் தொழிலை அபிவிருத்தி செய்ய மற்றொருவர் முன்வந்தார். 20 லட்சம் அளவுக்கு உயர்த்தலாம் என்றவுடன் தாம் என்ன பீஸ் கொடுக்க முடியும் என்று தொழில் அதிபர் கூறினார். சில மாதங்களில் 60 லட்ச ரூபாய்க்கும், அடுத்த மாதம் இரண்டரைக் கோடிக்கும் செலாவணி சென்றது. தொழில் அதிபர் கார் வாங்கினார். புதிய வியாபாரம் தொடங்கினார், உதவி செய்தவரை மறந்துவிட்டார். அவருக்குத் தாம் கொடுப்பதாகச் சொன்னதையும் கொடுக்கவில்லை. வாரம் ஒருமுறை வீடு தேடிப் போய்ப் பார்த்தவரை 3 மாதங்களாகப் போனில் கூடக் கூப்பிட்டுப் பேசவில்லை.

அட்மிஷன் வேண்டும், வேலை வேண்டும், கடன் வேண்டும் என்று நடையாக நடந்தவருக்கு மற்றொருவர் முன்வந்து உதவிய பொழுது அட்மிஷன் கிடைத்தபின், வாங்கிக் கொடுத்தவருக்கு நன்றி சொல்லக்கூட நினைவில்லை.

நேற்றுவரை யாருடைய பெயரைச் சொல்லத் தயங்கினாரோ, அவரையே இன்று சற்று நிலைமை

சாதகமாக மாறியபின் அந்தஸ்து உயர்வால் அவன் என்று பேசும் மனப்பான்மை வந்துவிடுகிறது.

300 பக்கமுள்ள புத்தகத்தை அச்சிடும் வெயீட்டாளர் அதில் 600 அச்சுப் பிழைசெய்து அத்துடன் தங்கள் நிறுவனத்தையும் மூடிவிடுகின்றனர். 60 வயது வரை நாணயத்திற்குப் பெயர் எடுத்தவர் ரசீது கொடுக்காமல் ரூ.7000 பெற்றபின் வாங்கிய பணத்தை இல்லை என்று சொல்லி அதன் அடிப்படையில் பொய்க் கேஸ் போடும் அளவுக்கு மனத்தை மாற்றிக் கொள்கிறார்.

பேச்சை மாற்றிப் பேசுவது, பெற்ற உதவியை அன்றே மறந்து விடுவது, அடக்கத்தைவிட்டுக் கர்வமாகப் பேசி ஆபத்தை விலைக்கு வாங்குவது, அளவு கடந்து பிழை செய்து நிறுவனத்தை இழப்பது, நாணயத்தை இழந்து கோர்ட்டுக்குப் போவது இவை உலகில் மலிந் துள்ளன. ஆனால் நல்லவர்களாக இருந்து பிறகு கெட்டவர்களாக மாறும் உதாரணங்களையே நான் மேலே எழுதினேன். உலகில் தவறு நடக்கலாம். நல்லவர்கள் நல்ல குணங்களை விட்டுத் தவற்றை நாடக்கூடாது. அதைச் செய்யும் பொழுது மற்றவர்களைத் தங்களுக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அப்படிச் செய்பவர்களுக்கு அன்னையின் உச்சகட்டமான பலன் கிடைக்காது.

நான் வலியுறுத்துவது இலட்சத்தில் ஒருவர் செய்யக் கூடியதன்று. கட்டுரையின் தொடக்கத்தில் கூறிய நல்லவர் பலர் செய்யக்கூடியதையே அன்பர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என நான் கூறுகிறேன்.

பொறுப்பு வந்தபின் அடக்கம் அதிகமாக வேண்டும். புத்தகம் அச்சிட்டால் அதில் பிழையிருக்கக்கூடாது. உதவி செய்த நல்லவர்களுக்கு உடனே செய்தி சொல்ல வேண்டும். பதவி உயர்ந்தவுடன் கர்வம் நீங்கி அடக்கம் வரவேண்டும். பக்தர் என்ற நிலையில் நம்பிக்கை அன்னை மீதிருக்க வேண்டும். இவைபோன்ற உயர்ந்தவற்றைப் பின்பற்றினால் நம் அளவில் நாம் எடுக்கும் பூரணமான முயற்சிக்கு உச்சகட்டப் பலனை அன்னை தவறாது அளிப்பார்.

*******book | by Dr. Radut