Skip to Content

2. வாழ்க்கை நிகழ்ச்சிகள் - II

சித்தியால் பெறுவதைப் பக்தியாலும் பெறுவ துண்டு. ஞானாநந்தரிடம் வந்த பிரெஞ்சுக்காரப் பெண் ஆங்கிலத்தில் பேசியதை அவரிடம் தமிழில் மொழி பெயர்த்துச் சொன்ன பொழுது, ஞானாநந்தர் தமிழில் சொன்ன பதில், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்ப தற்கு முன்னமே தமக்கு விளங்கியதாக அப்பெண்மணி சொன்னார். இது சித்தி பெற்றவர் பெறும் பேறு. பக்தியால் இப்பெண்மணி இத்திறனைப் பெற்றிருந்தார்.

அன்னையிடம் தம் தாய்மொழியில் எப்படிப் பேசுவது என்று திகைத்தவர் பேசியதை அன்னை புரிந்துகொண்டு அவருக்குத் தேவையானதைக் கொடுத்தார். ஒரு முறை தம்மையறியாமல் ஒரு தமிழ் வார்த்தையும் பேசினார். எந்த மொழியில் பேசினாலும் அதன் சாரத்தை அன்னை புரிந்து கொள்வதுண்டு.

தம் வீட்டில் ஒருவருக்கு உடல்நிலை மோசமாக இருப்பதை நள்ளிரவில் அன்னையிடம் சொல்ல வேண்டும் எனத் தோன்றி, ஜன்னலைத் தட்டி ஆசிரமச் சாதகர் ஒருவரை எழுப்பி, உடனே இந்தச் செய்தியை அன்னையிடம் சொல்ல வேண்டும் என்று கேட்டார். சாதகர் செய்வது அறியாமல் சரி என்று சொல்லிவிட்டு சமாதியருகே சென்று தம் மனத்திலிருந்ததைச் சொல்லி விட்டார். மறுநாள் காலையில் அன்னையிடம் சென்று தம் குடும்பத்தினருடைய உடல் நிலையை அவர் பேச ஆரம்பித்தவுடன் அன்னை "இரவே அந்தச் செய்தியை என்னிடம் சொல்விட்டார்'' என்று பதிலத்தார்.

ஆசிரமத்திலுள்ள பசுக்களைக் கொண்டு வந்து நிறுத்தினால் அன்னை அவற்றைப் பார்வையிட பால்கனிக்கு வருவதைப் பசு தரிசனம் என்றும், காய்கறிகளை விநியோகம் செய்வதன் முன் அன்னை யின் பார்வைக்குக் கொண்டு வருவதைக் காய்கறி தரிசனம் என்றும் வழங்கினார்கள்.

அன்னை வளர்த்த பூனையைப் பிறகு வேறிடத்திற்கு அனுப்பிவிட்டார். ஒருநாள் அப்பூனை அன்னையின் அறைக்கெதிரில் எதிர்க்கட்டடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு நகராமல் இருந்தது. அன்னை தம் அறையிலிருந்து அதைப் பார்க்க வந்தார். அன்னையைப் பார்த்துக் கொண்டே அது தன் உயிரை விட்டது. இறக்கும் தருவாயில் அன்னையைக் காண வந்ததாக அன்னை கூறினார்.

பணத்தை அன்னை எடுக்கும்பொழுது தமக்குத் தேவையான தொகை சரியாக வருவதை ஒவ்வொரு முறையும் சாதகர்கள் கண்டுள்ளார்கள். மணிலாப் பயற்றை அவர்கள் விநியோகம் செய்வதுண்டு. ஒவ்வொரு வருக்கும் இத்தனை பயறு என்று மனத்தில் கணக்கு வைத்திருப்பார் அன்னை. அவர் கை அவரையறியாமல் அந்த எண்ணிக்கையைச் சரியாக எடுப்பதுண்டு.

கங்கையில் உள்ள அணையில் ஓர் அஸ்திவாரமான கட்டட அமைப்பு சேதமாகிவிட்ட பொழுது அதை மீண்டும் கட்ட முயன்று பலமுறை தோல்வியடைந்தார்கள். அங்குள்ள இன்ஜினீயர் அன்னையிடம் வந்து அதைப் பற்றிக் கேட்ட பொழுது, "கங்கை சக்தி வாய்ந்த தெய்வமாயிற்றே. கங்கா தேவிக்குப் பிரார்த்தனை

செய்யும் பழக்கம் உண்டல்லவா? அதுபோல் பிரார்த்தனை செய்'' என்றார். அத்துடன் ஒரு சிறு கல்லை அவரிடம் கொடுத்து அதைக் கட்டடம் கட்ட வேண்டிய இடத்தில் நீரில் போடச் சொன்னார். கட்டடம் பழுதின்றி முடிந்தது.

ஸ்ரீ அரவிந்தரின் அறையைச் சுத்தம் செய்யும் சாதகர் அறைக் கதவை நகர்த்திய பொழுது அதன் மீது உட்கார்ந்திருந்த பறவை பறந்து சென்றதைக் கண்ட பகவான் அன்னையிடம், "இனி கதவை ஜாக்கிரதையாக நகர்த்தச் சொல். அப்பறவைக்குச் சிரமம் கூடாது'' என்றார்.

ஒரு பக்தர் வீட்டில் பொருள்கள் திடீரென்று காணாமல் போவதும், சில நாள் கழித்துத் திடீரென வருவதுமாக இருந்தன. ஏதோ மந்திரச் சக்தி என்று அறிந்தனர். ஒரு சமயம் அதிகப் பணம் மறைந்துவிட்டது. இதைப் பகவானிடம் சொன்ன பொழுது, "ஸ்ரீ அரவிந்தர் பெயரால் சொல்கிறேன். நீ இந்த இடத்தை விட்டுப்போ'' என்று அந்தச் சக்தியிடம் உத்தரவிடச் சொன்னார். உடனே அது விலகிவிட்டது.

அறையில் விரித்திருந்த கம்பளத்தின்மீது நடந்து கொண்டிருந்த அன்னை திடீரென நின்றார். பிறகு தொடர்ந்து நடந்தார். "ஏன் இப்படி?'' என்று கேட்டதற்கு, "கம்பளம் என்னிடம் பேசியது. நான் எப்படியிருக்கின்றேன் என்று கேட்டது, நீ அழகாக இருக்கிறாய்'' என்று பதில் சொன்னேன்'' என்றார் அன்னை. கிழிந்த சட்டையுடன் தரிசனத்திற்கு வந்த சாதகரை டெய்லரிடம் அனுப்பி உடனே அதைத் தைக்கச்

சொன்னார் அன்னை. கிழிந்த புடைவைகளையும் தைத்து அன்னை அணிவதுண்டு. தைக்காமல் கிழிசலுடன் இருப்பதை அன்னை அனுமதிப்பதில்லை. விளையாட்டு மைதானத்தில் ஒருநாள் அன்னை பிள்ளைகளை நோக்கி, "விஷமம் செய்தவர்களெல்லாம் ஓர் அடி முன்னே வரவும்'' என்றார். பலர் முன்னே வந்தார்கள். விளையாட்டு முடிந்தவுடன் ஒருபிடி மணிலா கொடுக்கும் வழக்கம் உண்டு. தவறு செய்தவர்களுக்கெல்லாம் அன்னை இரண்டு பிடி கொடுத்தார்கள். "தவறு உணர்ந்தவனைப் பெருந்தன்மையுடன் மன்னிக்க வேண்டும்'' என்று விளக்கமளித்தார்.

ஸ்ரீ அரவிந்தர் வரலாற்றை எழுதப் பலர் பிரியப்பட்டு அவருக்கு எழுதிக் கேட்டனர். "என்னுடைய வரலாறு பிறர் கண்ணில்படும் வகையில் அமைய வில்லை என்பதால் அதை மற்றவர் எழுத முடியாது'' என்று பொருள்படும்படிப் பதிலிறுத்தார்.

ஸ்ரீ அரவிந்தர் ஆங்கில மேதை. அவருடைய கடிதங்களில் சில சமயங்களில் அது வெளிப்படுவ துண்டு. ஒரு சாதகர் தம் அறையில் வைத்துக்கொள்ள ஒரு கடிகாரம் timepiece வேண்டும் என்று எழுதினார். அதற்குப் பதிலாக ஸ்ரீ அரவிந்தர், "timepiece  வைத்துக் கொள். ஆனால் அதனால் (Timeless peace) காலத்தைக் கடந்த சாந்தியை உனக்குத் தரமுடியுமா?'' என்று கேட்டிருந்தார். யோகம் சாந்தியை நாடுவதால், நேரத்தைக் காட்டும் கடிகாரம் அதற்குதவாது என்ற பொருளில் சுட்டிக் காட்டினார்.

நெருக்கடி நிறைந்த பஸ்ஸில் ஏற முயன்ற பக்தர் வழுக்கி விழுந்தார். விழுந்தவர் சக்கரம் மேலேறும்படி விழுந்து விட்டார். "அம்மா இதுவே என்னுடைய கடைசிப் பிரார்த்தனை. என்னைக் காப்பாற்றுங்கள்'' என்று கதறினார். எல்லாம் அரை க்ஷணத்தில். எப்படி நடந்தது? என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஏதோ காரணத்தால் சக்கரம் திடீரெனத் திரும்பியதால், அவர் மீது ஏறவில்லை. குதிகால் மீது ஏறியது. காலில் இரத்த வெள்ளம், கூட்டம் கூடியது. ஆச்சரியத்துடன் அனைவரும் அவரைப் பார்த்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர் இல்லை. நர்ஸ் காலில் கட்டுப் போட்டார். நன்றியுடன் இந்தச் செய்தியை அன்னைக்குப் பக்தர் தந்தி மூலம் தெரிவித்தார். உணர்வு தாழ்ந்த நிலையிலிருந்தால் விபத்து ஏற்படும் என்று அன்னை கூறினார்.

ஷியாம் குமாரி எழுதி ஆசிரமம் வெளியிட்ட புத்தகத்தை விமர்சனம் செய்ய ஆரம்பித்தபோது, அச்செய்திகளில் சிலவற்றை எழுத ஆரம்பித்தேன். அவற்றுக்கு விமர்சனம் தேவையில்லை என்றுணர்ந்து அவற்றை அப்படியே எழுதிவிட்டேன். (Vignettes of Sri Aurobindo and The Mother by Shyam Kumari (in English) published by Sri Aurobindo Ashram in two parts price part I 35/- part II 40/-)

*******book | by Dr. Radut