Skip to Content

Chapter 08 லிடியா காப்பாற்றப்படுகிறாள்

வாழ்க்கையில் இந்த கட்டத்திற்கு முன்பே, தன்னுடைய எல்லா வருமானத்தையும் செலவழிப்பதற்கு பதிலாக, தனக்குப் பிறகு தன்னுடைய மனைவி இருந்தாள் எனில், அவளுக்காகவும், குழந்தைகளுக்காகவும் ஒரு கணிசமான தொகையை சேமித்து வைத்திருக்க வேண்டும் என திரு. பென்னட் அடிக்கடி நினைத்திருக்கிறார். இப்பொழுது அவர் மேலும் அதிகமாக அவ்வாறு செய்திருக்கலாமே என நினைத்தார். அவர் அவ்வாறு செய்திருந்தால், லிடியா தன்னுடைய மாமாவிற்கு கடன்பட்டவளாக ஆகியிருக்க வேண்டாம், அவளுடைய கௌரவத்தை அவரே காப்பாற்றியிருக்கலாம். இங்கிலாந்திலேயே ஒரு பிரயோசனமில்லாத இளைஞனை அவளுடைய கணவனாக மாற்றும் முயற்சி அவரிடத்தே வந்திருக்கும்.

 
யாருக்குமே, சந்தோஷமளிக்காத ஒரு சம்பவத்திற்காக தன்னுடைய சகோதரர் மட்டுமே செலவழித்ததைப்பற்றி மிக்க அக்கறை கொண்ட திரு. பென்னட், அவர் எவ்வளவு செலவழித்திருக்கிறார் எனக் கண்டுபிடிக்க முடியுமானால், அதைக் கண்டுபிடித்து, அதை எவ்வளவு விரைவாகத் தீர்க்க முடியுமோ அவ்வளவு விரைவாகத் தீர்க்க வேண்டும் எனத் தீர்மானித்தார்.
 
முதலில் திரு.பென்னட் திருமணம் செய்து கொண்டவுடன், சேமிப்பு என்பதே ஒரு உபயோகமற்ற விஷயமாக இருந்தது, ஏனெனில் அவர்களுக்கு ஒரு மகன் பிறப்பான் என்றிருந்தனர். வயதிற்கு வந்தவுடன், இந்த மகனுக்கு சொத்து வந்து சேரும், தனக்குப் பிறகு தன் மனைவியையும், மற்ற குழந்தைகளையும் அவன் காப்பாற்றுவான் என நினைத்தார். ஐந்து பெண்கள் வரிசையாகப் பிறந்தனர், மகன் பிறக்கவில்லை, லிடியா பிறந்த பிறகும் மகன் பிறப்பான் என திருமதி. பென்னட் தீர்மானமாக இருந்தாள். இறுதியாக இது நிகழும் என்ற நம்பிக்கை போனது. ஆனால் அப்பொழுது சேமிக்க வேண்டும் என்பதற்குரிய காலம் தாண்டிவிட்டது. திருமதி. பென்னட்டிற்கு சிக்கனமாக இருப்பது என்பதே தெரியாத விஷயம். திரு. பென்னட் எந்த இக்கட்டிலும் மாட்டிக் கொள்ளாமல் சுதந்திரமாக இருக்க விரும்பியதால், வரவுக்கு மீறிய செலவை தவிர்க்க முடிந்தது.
 
திருமதி. பென்னட்டிற்காகவும், குழந்தைகளுக்காகவும் ஐந்தாயிரம் பவுன், செலவிற்கு என்று தீர்மானிக்கப்பட்டது. குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பங்கு என்பது பெற்றோர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. தற்சமயம் லிடியாவிற்கு எவ்வளவு பங்கு தர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு விட்டது. தன்முன் வைத்துள்ள வேண்டுகோளுக்கு சம்மதிக்க எந்தவித தயக்கமும் திரு. பென்னட்டிற்கு இருக்க முடியாது. தன்னுடைய சகோதரர் செய்தவைகளுக்கு மனமார்ந்த நன்றியினை சுருக்கமாகத் தெரிவித்தபின், அவர் செய்திருந்த எல்லா ஏற்பாடுகளுக்கும் சம்மதம் தெரிவித்து, தனக்குத் தெரிவித்திருந்த வேலைகளையெல்லாம் முழுமனதோடு முடித்துத் தருவதாக கடிதம் எழுதினார். விக்காமை, தன்னுடைய மகளுக்கு, திருமணம் செய்து கொள்ள பணிய வைக்க முடியும் என்றால் தற்போதைய ஏற்பாட்டின்படி இவ்வளவு குறைந்த அசௌகரியங்களுடன் அது நடக்கும் என்பதை அவர் நினைத்தும் பார்த்ததில்லை. லிடியாவின் சாப்பாடு மற்றும் இதர செலவிற்காகவும், அவளுடைய தாயார் மூலம் அவளுக்கு அவ்வப்பொழுது கிடைத்த பணம் என எல்லாம் சேர்ந்து ஏறக்குறைய, வருடத்திற்கு அவளுக்காக அவர் செய்த செலவு நூறு பவுனிற்கும் சற்று குறைவுதான். இனி அவருக்குக் கூடுதலாக பத்து பவுன்தான் நஷ்டமாகும். இதனால் லிடியாவிற்காக அவர் செலவழிப்பது குறைவாகத்தான் உள்ளது.
 
மிகச் சுலபமாக அவர் இதை செய்வதற்கு ஒத்துக் கொண்டது என்பது மற்றொரு வரவேற்கத்தக்க ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் இவ்விஷயத்தை முடிக்க வேண்டும் என்பதுதான் அவரது முக்கிய விருப்பமாக இருந்தது. முதலில் அவருக்கு ஏற்பட்ட கோபத்தினால் அவளைத் தேட வேண்டும் என்று தீவிரமாக, சுறுசுறுப்பாக இறங்கிய அவர், இயல்பாக தன்னுடைய பழைய சோம்பலுக்கு மாறினார். அவருடைய கடிதம் தபாலில் அனுப்பப்பட்டது, காரியத்தை எடுத்துக் கொள்வதில் தாமதம் காண்பித்தாலும், அதை விரைவாக நிறைவேற்றினார். மற்ற எந்த விதத்தில் தனது சகோதரருக்கு கடன்பட்டிருக்கிறார் என்ற விவரத்தைத் தெரிவிக்குமாறு கூறிய அவர், லிடியாவின் மீது மிகக் கோபமாக இருந்ததால், அவளுக்கு ஒரு செய்தியும் அனுப்பவில்லை.
 
அந்த நல்ல செய்தி விரைவில் வீடு முழுவதும் பரவியது. அதே வேகத்தில் அக்கம் பக்கத்திலும் பரவியது. சுற்றியிருப்பவர்களால் அது நல்லவிதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. திருமணமாகாமல் லிடியா, ஊருக்குத் திரும்பி வந்திருந்தாலோ அல்லது மாறுதலாக அவளை, அனைவரிடமிருந்தும் தனிமைப்படுத்தித் தொலைவில் ஒரு பண்ணை வீட்டில் வைத்திருந்தாலோ அங்கிருக்கும் வம்பு பேசும் வயதான பெண்மணிகளுக்கு இதைப்பற்றி பேச நிறைய விஷயங்கள் இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது இதுபோன்ற ஒரு கணவனிடம், அவள் துயரப்படப் போவது நிச்சயம் என்பதால், இப்பொழுதும் அவர்களுக்குப் பேச விஷயம் இருக்கும்.
 
திருமதி. பென்னட், வீட்டின் கீழ்தளத்திற்கு வந்து பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்த மகிழ்ச்சியான நாளில், மிகவும் மகிழ்ச்சியான மனநிலையுடன், மேஜையின் அவளது வழக்கமான தலைமை இடத்தில் வந்தமர்ந்தாள். அவளது வெற்றிப் பெருமிதத்தை எந்த அவமானகரமான எண்ணமும் குறைக்கவில்லை. ஜேனுடைய பதினாறாவது வயது முதல் அவளுக்கிருந்து வந்த, தலையாய விருப்பமான மகளது திருமணம் என்பது நிறைவேறும் தருணம் வந்துவிட்டது. அவளது எண்ணங்களும், பேச்சும், திருமண ஏற்பாடுகள் குறித்தே இருந்தன. தன்னுடைய மகளுக்காக, அவர்களுடைய வருமானம் என்ன என்று தெரியாமலேயே, அதைப்பற்றி யோசிக்காமலும், சுற்று வட்டாரத்தில் ஒரு நல்ல வீடாக வெகுமும்முரமாகத் தேடிக் கொண்டிருந்தாள். அளவில் சிறியதாக இருக்கிறது என்பதற்காகவும், பார்ப்பதற்கு நன்றாக இல்லை என்பதற்காகவும் பலவற்றை நிராகரித்து வந்தாள்.
 
கோல்டிங்ஸ் குடும்பத்தினர் வெளியேறினால், ஹேபார்க் சரியாக இருக்கும் அல்லது வரவேற்பறை பெரியதாக இருந்தால் ஸ்டோக்-ல் உள்ள பெரிய வீடு பொருத்தமாக இருக்கும். ஆனால் ஆஷ்வொர்த் மிகவும் தொலைவில் உள்ளது. பத்துமைல் தொலைவில் அவள் இருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. பூர்விஸ் லாட்ஜைப் பொருத்தவரை, மேல் மாடியில் உள்ள அறை பயங்கரமாக இருக்கும்என்றாள்.
 
வேலைக்காரர்கள் அங்கு இருக்கும்வரை அவளது கணவர் அவளை தடங்கலின்றி பேச அனுமதித்தார். அவர்கள் வெளியேறியதும், ‘திருமதி பென்னட், உனது மருமகனுக்கும், மகளுக்கும் இவற்றில் எல்லா வீடுகளையோ, சில வீடுகளையோ எடுப்பதற்குள், நாம் ஒரு சரியான முடிவுக்கு வந்து விடுவோம். இந்த இடத்திலுள்ள ஒரு வீட்டிற்குள் வருவதற்கு அவர்களுக்கு அனுமதி கிடைக்காது. லாங்க்பர்னில் அவர்களை வரவேற்று, அவர்களுடைய வெட்கங்கெட்ட தன்மையை நான் ஊக்குவிக்க மாட்டேன்என்றார்.
 
இந்த பேச்சைத் தொடர்ந்து நீண்ட வாக்குவாதம் நடைபெற்றது. ஆனால் திரு. பென்னட் தீர்மானமாக இருந்தார். அது இன்னொரு வாக்குவாதத்தில் முடிந்தது. தன்னுடைய கணவர், அவர்களது மகளுக்கு ஆடைகள் வாங்குவதற்குப் பணம் எதுவும் தரமாட்டார் என்பதை ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் அறிந்து கொண்டாள். இந்த சமயத்தில் தன்னிடமிருந்து அவளுக்கு எந்த அன்பும் கிடைக்காது என்றார். திருமதி. பென்னட்டால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மகளது திருமணத்தை அங்கீகரிக்கும் அந்த செயலைக்கூட செய்ய மறுக்கும் அளவிற்கு அவரது கோபம் இருக்கிறது என்பதை அவளால் நம்ப முடியவில்லை. விக்காமுடன் ஓடிப்போய் திருமணத்திற்கு முன்பே இரண்டு வாரங்களாக அவனுடன் வாழ்க்கை நடத்தியதில் ஏற்பட்ட அவமானத்தைவிட, மகளின் திருமணத்திற்குப் புத்தாடை கிடைக்காத அவமானம் அவளுக்குப் பெரியதாக இருந்தது.
 
எலிசபெத்திற்கு, அந்தத் தருணத்தில் ஏற்பட்ட துயரத்தினால், தன்னுடைய சகோதரியைப்பற்றிய அவர்களுடைய பயங்களை டார்சியிடம் விளக்கியது குறித்து இப்பொழுது மேலும் வருத்தம் உண்டாயிற்று. ஏனெனில் சகோதரியின் திருமணம் விரைவில் முடிந்துவிட்டால், அவள் ஓடிப்போன விஷயத்திற்கு அது ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடும். அச்சமயத்தில் அங்கிருந்தவர்களைத் தவிர மற்றவர்களிடம் இருந்து இந்த திருமணம் ஆரம்பித்த விதத்தை மறைத்து விடலாம் என்று அவர்கள் நம்பினார்கள்.
 
அவன் மூலமாக அந்த விஷயம் மேலும் பரவும் என்று அவள் பயப்படவில்லை. இரகசியத்தைக் காப்பாற்றுவதில் அவன்மேல் ஏற்பட்ட நம்பிக்கையைப்போல், அவளுக்கு வேறு யார் மேலும் ஏற்படவில்லை. அதேசமயத்தில் அவளது சகோதரி செய்த தவறு வேறு யாருக்குத் தெரிந்திருந்தாலும் அவள் இவ்வளவு வருத்தம் அடைந்திருக்க மாட்டாள். தனக்கும், அவனுக்கும் இடையே ஏற்கனவே மிகுந்த இடைவெளி ஏற்பட்டுவிட்டதால், தனிப்பட்ட முறையில் அவளுக்கு இதனால் எந்த நஷ்டமும் ஏற்படும் என்று அவள் பயப்படவில்லை. லிடியாவின் திருமணம் கௌரவமான முறையில் நடந்து முடிந்திருந்தாலும், தான் மிகவும் வெறுத்த ஒரு நபருடன் சம்பந்தமும், உறவும் வைத்துக் கொண்டிருக்கும் இக்குடும்பத்துடன், வேறு பல ஆட்சேபணைகளுடன் இதுவும் சேர்ந்து கொண்டதால், அவன் தன்னை இணைத்துக் கொள்வான் என்று எதிர்பார்க்க முடியாது.
 
இதுபோன்ற சம்பந்தத்திலிருந்து அவன் பின்வாங்குவான் என்பதில் அவளுக்கு எந்தவித சந்தேகமுமில்லை. தன்னுடைய அன்பை அவன் கைப்பற்ற வேண்டும் என்று விரும்புகிறான் என்பது டெர்பிஷயரிலேயே அவளுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. ஆனால் அந்த விருப்பம் இம்மாதிரி ஒரு அடியை தாங்கிக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. அவள் அவமானமும், வருத்தமும் அடைந்தாள். காரணம் தெரியாமலேயே வருந்தினாள். தான் இனி பயன்பெற முடியாத அவனது கண்ணியத்தைப் பார்த்து பொறாமைப்பட்டாள். அவனைப்பற்றிய விஷயம் ஒன்றும் தெரிந்து கொள்ள முடியாத இந்த தருணத்தில், அவனைப்பற்றி தகவல் அறிந்து கொள்ள விரும்பினாள். அவனைச் சந்திக்கும் சாத்தியம் இல்லாவிட்டாலும்கூட, அவனுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று தீர்மானமாக நம்பினாள்.
 
நான்கு மாதங்களுக்குமுன், அவள் மிகுந்த கர்வத்துடன் மறுத்த சம்பந்தத்தை, இப்பொழுது மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் அவள் ஏற்றுக் கொள்வாள் என அவனுக்குத் தெரிந்தால், அது எப்படிப்பட்ட வெற்றியாக அவனுக்கு இருக்கும் என அவள் அடிக்கடி நினைத்தாள். தாராளமனப்பான்மையுடைய ஆண்களில் இவனைப்போல் தாராள மனம் கொண்ட ஆண்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதில் அவளுக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் அவனும் ஒரு சாதாரண மனிதன்தான் என்பதால் தனது வெற்றியைக் கொண்டாடுவான்.
 
திறமையிலும், குணாதிசயத்திலும், தனக்கு அவன் மிகவும் பொருத்தமானவன் என்று இப்பொழுது அவள் நினைக்க ஆரம்பித்தாள். புரிந்து கொள்ளும் தன்மையிலும், சுபாவத்திலும், அவன் அவளிடமிருந்து மாறுபட்டிருந்தாலும், அவளுடைய விருப்பங்களை எல்லாம் பூர்த்தி செய்திருப்பான். அவர்கள் இணைவது அவர்கள் இருவருக்கும் சாதகமாக இருந்திருக்கும். அவளுடைய இயல்பான சுபாவமும், கலகலப்பான தன்மையும் அவனுடைய மனதை மென்மையாக்கியிருக்கும், நடத்தையை நல்ல விதமாக மாற்றியிருக்கும். அவனுடைய மதிப்பீட்டுத் திறனாலும், விஷய ஞானத்தாலும், உலக அறிவாலும்அவள் பெரும் நன்மை அடைந்திருப்பாள்.
 
அவர்களுக்குத் திருமணம் நடந்திருந்தால், அது ஒரு சந்தோஷமான திருமணமாக இருந்திருக்கும். அதைப் பார்த்து எல்லோரும் வியந்திருப்பர். ஆனால் அத்திருமணம் நடக்கவில்லை. அதனால் சந்தோஷமான திருமணம் என்றால் எப்படி இருக்கும் என்று யாரும் இப்பொழுது கற்றுக் கொள்ள முடியாது. வித்தியாசமான மனோபாவத்தினால் நடக்கப் போகும் ஒரு திருமணம், இக்குடும்பத்தில் மற்றொரு திருமணம் நடப்பதற்கு சாத்தியமில்லை என்றாக்கிவிடப் போகிறது.
 
லிடியாவும், விக்காமும் எப்படி மற்றவர்களைச் சார்ந்து இருக்காமல், சிறிதளவாவது தங்களது சொந்தக் காலில் நிற்பார்கள் என்று அவளால் கற்பனைக்கூட செய்து பார்க்க முடியவில்லை. குணத்தினால் இணைபவர்களது வாழ்க்கையைவிட உணர்ச்சிகளால் மட்டுமே இணைபவரது வாழ்க்கையில் நிரந்தரமான மகிழ்ச்சி என்பது எவ்வளவு குறைவாக இருக்க முடியும் என்று அவளால் ஊகிக்க முடிந்தது.
 
திரு. கார்டினர், மீண்டும் அவருடைய சகோதரருக்கு விரைவில் ஒரு கடிதம் எழுதினார். அவர் குடும்பத்திலுள்ள எல்லோருடைய நலனையும் பாதுகாப்பதற்கு ஆவலாக இருப்பதாக திரு. பென்னட்டிற்குச் சுருக்கமாக பதிலளித்தார். இந்த விஷயத்தைப்பற்றி மீண்டும் அவரிடம் பேச வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டு கடிதத்தை முடித்தார். விக்காம் இராணுவத்திலிருந்து விலக முடிவு செய்ததுபற்றி அவர்களிடம் தெரிவிப்பதுதான் அந்த கடிதம் எழுதுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
 
அவனது திருமணம் நிச்சயமானவுடன், அவன் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது. அவனுக்கும், எனது மருமகளுக்கும் அவன் இராணுவத்திலிருந்து விலகுவதுதான் நல்லது என்ற என்னுடைய கருத்தை, நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். நிரந்தர இராணுவப் பணியில் சேர வேண்டும் என்பது விக்காமின் நோக்கம். அவனுடைய முன்னாள் நண்பர்களிடையே, அவனுக்கு, இராணுவத்தில் சேர, உதவி செய்யும் திறமை கொண்டவர்களும், உதவி செய்ய விருப்பமுள்ளவர்களும் இன்னும் சிலர் இருக்கின்றனர். இப்பொழுது வடக்கேயுள்ள ஜெனரல் --------ன் படைப்பிரிவில் ஒரு பதவி கொடுப்பதாக அவனுக்கு உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்து வெகு தூரத்தில் இருப்பது சாதகமான விஷயம்தான். இனிமேல் அவன் சற்று ஒழுங்காக நடந்து கொள்வான் என்று தோன்றுகிறது. புதுமனிதர்களிடத்தில் இனி அவன் இருக்கப்போவதால் இன்னும் சற்று விவேகமாக நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்கலாம். நமது தற்போதைய ஏற்பாடுகளைப்பற்றி கர்னல் பார்ஸ்டருக்கு எழுதியிருக்கிறேன். பிரைட்டனிலும், அதற்கு அருகிலுள்ள இடங்களிலும், விக்காம் பணம்தர வேண்டியவர்களுக்கு விரைவில் பணம் தரப்படும் என்று உறுதி அளிக்கச் சொல்லியிருக்கிறேன். அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். மெரிடனில் அவன் பணம் தரவேண்டியவர்களுக்கு, நீங்கள் பொறுப்பை எடுத்துக் கொள்ளவும். அதற்கான பட்டியலை நான் அனுப்புகிறேன். அவனது எல்லா கடன்களைப்பற்றி அவன் தெரிவித்து விட்டான். நம்மை அவன் ஏமாற்றவில்லை என்று நம்புகிறேன். ஹாகெர்ஸ்டன்னிற்கு நமது வழிமுறைகள் சொல்லப்பட்டு விட்டன. அனைத்தும் ஒரு வாரத்தில் முடிந்துவிடும். லாங்க்பர்னிற்கு முதலில் அவர்கள் அழைக்கப்படாவிட்டால், அவர்கள் அவனுடைய படைப்பிரிவில் சேருவார்கள். தென்பகுதியிலிருந்து புறப்படும் முன்பு, எனது மருமகள் உங்கள் அனைவரையும் காண விரும்புகிறாள் என்று திருமதி. கார்டினரிடமிருந்து அறிந்து கொண்டேன். அவள் நலமாக இருக்கிறாள். உங்களையும், அவள் தாயாரையும் விசாரித்ததாகத் தெரிவிக்கச் சொன்னாள்.
 
         இப்படிக்கு,
 
எட்வர்டு கார்டினர்.
           
திரு. கார்டினரைப் போலவே திரு. பென்னட்டும் அவரது பெண்களும், விக்காம் --------ஷயரிலிருந்து விலகுவதால் ஏற்படும் நன்மைகளைப்பற்றித் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். ஆனால் திருமதி. பென்னட் இந்த விஷயத்தில் அதிக மகிழ்ச்சி அடையவில்லை. லிடியாவும்விக்காமும் ஹர்ட்போர்ட்ஷயரில் வசிக்கப் போகும் திட்டத்தை திருமதி. பென்னட் கைவிடாததாலும், லிடியாவுடன் சேர்ந்து இருப்பது அதிக மகிழ்ச்சியையும், பெருமையையும் தரும் என்று எதிர்பார்த்து இருந்ததாலும், லிடியா வடக்கே சென்று குடியேறுவது அவளுக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. அந்த படைப்பிரிவில் அனைவரிடமும் பழகியிருந்தும், அங்கு அவளுக்குப் பிரியமானவர்கள் பலர் இருந்தும், அங்கிருந்து அவள் வெளியேறுவது பரிதாபமானது.
 
திருமதி. பார்ஸ்டரை அவளுக்கு மிகவும் பிடிக்கும்என்ற திருமதி. பென்னட் அவளை வெளியே அனுப்புவது மிகவும் அதிர்ச்சியாக இருக்கும். அங்குள்ள பல இளைஞர்களை அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஜெனரல்-------ன் படைப்பிரிவில் இருக்கும் அதிகாரிகள் மனதிற்கு அத்தனை இனிமையானவர்களாக இல்லாமல் இருக்கலாம்என்றாள்.
 
அவள் வடக்கே செல்வதற்குமுன், தன் குடும்பத்தினருடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற அவளது வேண்டுகோள் முதலில் எதிர்ப்பை சந்தித்தது. ஆனால் ஜேனும், எலிசபெத்தும் தங்களது சகோதரியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவளது திருமணத்தை பெற்றோர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால் அவர்கள் மனப்பூர்வமாகவும், சாந்தமாகவும், நியாயமாகவும், தங்களது தகப்பனாரிடம், திருமணம் முடிந்தவுடன், அவளையும், அவள் கணவரையும் லாங்க்பர்னில் வரவேற்க வேண்டும் என்று வேண்டினார்கள். தன்னுடைய பெண்கள் கூறுவது சரி என்று தோன்றியதால் அவர்களது வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொண்டார். மகள் வடக்கே செல்லும்முன், திருமணமான அவளை, அக்கம் பக்கத்தினரிடம் காண்பிக்க முடியும் என்று தெரிந்து கொண்ட அவளது தாயார், திருப்தியடைந்தாள். திரு. பென்னட் தனது சகோதரருக்கு மீண்டும் கடிதம் எழுதும் பொழுது, அவர்கள் அங்கு வர சம்மதம் தெரிவித்து எழுதினார். திருமணம் முடிந்தவுடன் அவர்கள் லாங்க்பர்னுக்கு செல்ல வேண்டும் என்பது முடிவாயிற்று. இம்மாதிரி ஒரு திட்டத்திற்கு விக்காம் ஒத்துக் கொண்டது எலிசபெத்திற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவளது விருப்பத்தை மட்டும் அவள் கலந்தாலோசித்திருந்தால் அவனை சந்திக்கவே விருப்பப்பட்டிருக்க மாட்டாள்.



book | by Dr. Radut