Skip to Content

Chapter 05 வீட்டிற்குத் திரும்பும் எலிசபெத்.

எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும் பொழுது, எலிசபெத், தீவிரமான யோசனைக்குப் பிறகு, எனக்கும் உன்னுடைய மூத்த சகோதரியைப்போல்தான் நினைக்கத் தோன்றுகிறது. நண்பர்களும், பாதுகாப்பதற்கு மனிதர்களும் இருக்கும் ஒரு பெண்ணிடம், கர்னல் குடும்பத்தினருடன் தங்கியிருந்த ஒரு பெண்ணிடம் இம்மாதிரி ஒரு திட்டம் தீட்ட ஒரு இளைஞனால் முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால் நல்லபடியாகத்தான் முடியும் என்றுதான் நம்புகிறேன். அவனுடைய நண்பர்கள் முன்வந்து அவனைத் தடுப்பார்கள் என எதிர்பார்த்திருக்க மாட்டானா? கர்னல் பார்ஸ்டரை எதிர்த்து இவ்வாறு நடந்து கொண்டதற்கு, மீண்டும் அவன் படைப்பிரிவுக்கு வந்தால் அவனை எல்லோரும் சேர்த்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியுமா? இவ்வளவு துணிச்சலான காரியம் செய்வதற்கு அவனது இந்த ஆசை மட்டும் போதுமானதாக இருக்க முடியாதுஎன திரு. கார்டினர் எலிசபெத்திடம் கூறினார்.

 
சிறிது தெம்பு கிடைத்தவளாக நீங்கள் உண்மையிலேயே அவ்வாறு நினைக்கிறீர்களா?‘ என்று எலிசபெத் கேட்டாள்.
 
என்னைக் கேட்டால்,‘ என்ற திருமதி. கார்டினர் எனக்கும் உனது மாமாவின் அபிப்பிராயம்தான். அவன் இவ்வாறு தவறு செய்திருக்கிறான் எனில் அது கண்ணியம், கட்டுப்பாடு, மரியாதை இவை எல்லாவற்றையும் பெருமளவில் மீறி இருக்கிறான் என்றாகிறது. நான் அவனைப்பற்றி இவ்வளவு மோசமாக நினைக்க முடியாது. அவனால் இவ்வாறு செய்ய முடியும் என உனக்குத் தோன்றுகிறதா லிசி?‘ என்று கேட்டாள்.
 
அவனுடைய சொந்த நன்மைகளை அவனால் புறக்கணிக்க முடியாது. மற்ற எதைப்பற்றியும் அவன் கவலைப்படமாட்டான். இது உண்மையாக இருக்கும் எனில்! ஆனால் அப்படி இருக்கக் கூடாது என்று நான் வேண்டுகிறேன். அப்படியெனில் அவர்கள் ஏன் ஸ்காட்லாண்டிற்குப் போகவில்லை?‘
 
முதலில் அவர்கள் ஸ்காட்லாண்டிற்குப் போகவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாதுஎன்றார் திரு. கார்டினர்.
 
ஓ! குதிரை வண்டியிலிருந்து, வாடகை வண்டிக்கு மாறியது ஒரு வெறும் ஒரு ஊகம்தான்! மேலும் பார்னெட் ரோடில் அவர்கள் இருந்ததற்கு எந்த ஒரு அடையாளமும் இல்லை.
 
சரி--லண்டனில் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் அங்கு தங்கியிருக்கலாம், அதைத் தவிர வேறு ஒரு குறிப்பிட்ட காரணமும் இருக்காது. இருவரிடமும் பணம் கிடையாது. ஸ்காட்லாண்டில் திருமணம் செய்து கொள்வதைவிட நேரம் ஆனாலும் லண்டனில் நடப்பது செலவைக் குறைக்கும் என்றுகூட நினைத்திருக்கலாம்.
 
ஆனால் ஏன் இந்த இரகசியம்? யாராவது பார்த்துவிடப் போகிறார்களோ என எதற்காகப் பயப்பட வேண்டும்? ஏன் யாரையும் கூப்பிடாமல் தனியாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? ஓ! இல்லை, இப்படி இருக்க முடியாது. ஜேன் எழுதியிருந்ததிலிருந்து, அவனுடைய நண்பன் மூலம், அவளை அவனுக்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லை என்று தெரிகிறது. பணம் இல்லாமல் விக்காம் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளவே மாட்டான். அவனால் சமாளிக்க முடியாது. லிடியாவிடம் என்ன இருக்கிறது, இளமை, ஆரோக்கியம், கலகலப்பாக இருக்கும் தன்மை, இவைதவிர வேறு என்ன இருக்கிறது? இதற்காகவா அவன் நல்ல பணமுள்ள இடத்தில் திருமணம் செய்து கொள்வதை விட்டுக் கொடுத்திருப்பான்? இராணுவத்தில் இருப்பவனுக்கு, இம்மாதிரியான வெட்கக்கேடான செயல், எவ்வளவு பெரிய அவமானத்தைத் தரும். அங்கு அவனுடைய நிலை எவ்வாறு இருக்கும். என்னால் மதிப்பிட முடியவில்லை. ஏனெனில் இதற்கு என்ன பின்விளைவுகள் ஏற்படும் எனத் தெரியவில்லை. தாங்கள் முன்பு கூறியவை சரியில்லை. முன்வந்து காப்பாற்றுவதற்கு லிடியாவிற்கு சகோதரர்கள் இல்லை எனத் தெரியும். என்னுடைய தந்தையின் சுபாவத்தை அறிந்திருந்த அவனுக்கு, வீட்டில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி சிறிதும் அக்கறை எடுத்துக் கொள்ளாத அவரால் இதுபோன்ற விஷயத்தில் சிறிதளவே உதவ முடியும், சிறிதளவே நினைக்க முடியும் என்பதும் தெரியும்.
 
ஆனால் அவன் மேலுள்ள காதலினால், லிடியா எல்லாவற்றையும் மறந்து, திருமணம் செய்து கொள்ளாமல், அவன்கூட வாழ்வதற்கு மட்டும் ஒத்துக் கொண்டிருப்பாளா?‘
 
அப்படி என்றுதான் தோன்றுகிறது. இந்த விஷயத்தில் அவளுடைய நல்லொழுக்கத்தையும், சீரிய பண்பைப்பற்றியும் எனக்கு சந்தேகம்தான். இதை நினைக்கும் பொழுது எனக்கே அதிர்ச்சியாகவும் இருக்கிறது. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒருவேளை நான் அவளுக்கு நியாயமாக நடந்து கொள்ளவில்லை போலுள்ளது. ஆனால் அவள் மிகவும் சிறியவள், அவளுக்கு நல்ல விஷயங்களைப்பற்றி எதுவும் சொல்லிக் கொடுக்கப்படவில்லை, கடந்த அரைவருடமாக, இல்லை பன்னிரெண்டு மாதங்களாக கேளிக்கைகளையும், வீண்பெருமையையும் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை. சோம்பலாக காலத்தைக் கழித்திருக்கிறாள். முக்கியமில்லாத விஷயத்திற்காக நேரத்தை செலவழித்திருக்கிறாள். தனிப்பட்ட அபிப்பிராயம் என்பதே இல்லாமல் யார் எதைச் சொன்னாலும் அதை அவள் கடைப்பிடிப்பாள். இராணுவம் முதலில் மெரிடனில் முகாமிட்டிருந்ததிலிருந்து அவளுக்கு காதல், காதல் பேச்சுகள், அதிகாரிகள் இவை தவிர வேறெதுவும் மனதில் இல்லை. எப்பொழுதுமே அவள் கலகலப்பானவள், மேலும் இதைப்பற்றியே பேசி, நினைத்து தன்னுடைய உணர்ச்சிகளுக்கு மேலும் இடம் கொடுத்தாள். நமக்குத் தெரியும், ஒரு பெண்மணியைக் கவரக் கூடிய அத்தனை வசீகரமும், பேச்சும் விக்காமிடம் இருக்கிறது என்றுஎன்று எலிசபெத் பதிலளித்தாள்.
 
ஆனால் ஜேன் விக்காமைப்பற்றி மோசமாக நினைக்கவில்லை, அவனால் இவ்வாறு செய்ய முடியும் என அவள் நினைக்கவில்லைஎன்று அவளது அத்தை கூறினாள்.
 
யாரைப்பற்றி ஜேனால் கெடுதலாக நினைக்க முடியும்? யாராக இருந்தாலும், அவர்களுடைய நடத்தை எப்படிப்பட்டதாக இருந்தாலும், தவறு செய்ததை உறுதிப்படுத்திய பிறகுதான் அவள் அதை நம்புவாள். விக்காம் உண்மையில் எப்படிப்பட்டவன் என எனக்கும், ஜேனிற்கும் தெரியும். அவன் தீயொழுக்கத்தின் மொத்த உருவம் என எங்கள் இருவருக்கும் தெரியும். அவனிடம் நேர்மை, நற்பெயர் இரண்டும் கிடையாது. எவ்வளவிற்கு எவ்வளவு அவன் நல்லவனாக நம்மிடம் நெருங்கி உள்ளானோ அவ்வளவிற்கு அவ்வளவு பொய்யும், ஏமாற்றும் அவனிடம் இருக்கிறது.
 
உனக்கு உண்மையிலேயே இவை எல்லாம் தெரியுமா?‘ என்ற திருமதி. கார்டினர், இது இவளுக்கு எப்படித் தெரிந்தது என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினாள்.
 
எனக்குத் தெரியும்என்றாள் எலிசபெத் முகம் சிவந்தவாறு.அவன் எவ்வளவு மோசமாக திரு. டார்சியிடம் நடந்து கொண்டுள்ளான் என்று நான் உங்களுக்கு முன் ஒருநாள் கூறினேன். ஆனால் இவ்வளவு பெருந்தன்மையாகவும், பொறுமையாகவும் நடந்து கொண்டிருக்கும் டார்சியைப்பற்றி லாங்க்பர்னில் நம்மிடம் அவன் எவ்வாறு பேசினான் என நீங்களே பார்த்தீர்கள். மற்ற சில சந்தர்ப்பங்களைப்பற்றிக் கூற எனக்கு உரிமையில்லை, பிம்பெர்லி குடும்பத்தைப்பற்றி கூறிய அனைத்துமே பொய்தான். மிஸ். டார்சியைப்பற்றிக் கூறியது அனைத்தும் பொய். அவன் விவரித்ததிலிருந்து அவள் கர்வம் மிகுந்தவள், பழகத் தெரியாதவள், ஏற்றுக் கொள்ள முடியாதவள் என நினைத்திருந்தேன். ஆனால் அவள் அப்படியல்ல என அவனுக்குத் தெரியும். நாம் பார்த்ததுபோல் அவள் பழகுவதற்கு இனிமையானவள், அடக்கமானவள் என அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
 
ஆனால் லிடியாவிற்கு இவை எதுவுமே தெரியாதா? உனக்கும், ஜேனிற்கும் இவ்வளவு நன்றாகத் தெரிந்திருப்பது அவளுக்குத் தெரியாமல் இருக்குமா?‘
 
ஓ! ஆம், அவளுக்குத் தெரியாது. அதனால்தான் தவறு ஏற்பட்டுள்ளது. நான் கென்டில் இருக்கும் பொழுது டார்சியையும், பிட்ஸ்வில்லியமையும் சந்திக்கும்வரை எனக்கும் உண்மை தெரியாது. நான் வீடு திரும்பும் பொழுது இராணுவம் ஒரு வாரத்திலோ, இரண்டு வாரங்களிலோ மெரிடனைவிட்டு கிளம்புவதாக இருந்தது. ஜேனிடம் மட்டும் இவ்விஷயத்தைக் கூறினேன். எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கியுள்ள அவனைப்பற்றி எல்லோரிடமும் சொல்வதால், அவனுக்குக் கெட்ட பெயர் கிடைப்பதில் யாருக்கு என்ன லாபம் என்பதால் யாரிடமும் சொல்ல வேண்டாம் எனத் தீர்மானித்தேன். லிடியா திரு. கர்னல் பார்ஸ்டருடன் கிளம்புவதாகச் சொன்ன பொழுதிலும் அவனுடைய நடத்தையைப்பற்றி அவளிடம் சொல்ல வேண்டும் எனத் தோன்றவில்லை. அவளுக்கு ஏதாவது ஆபத்து வரும் என்று எனக்குத் தோன்றவேயில்லை. இந்த மாதிரி ஒரு சம்பவம் நடக்கும் என நான் நினைத்திருக்கவே முடியாது என நீங்கள் சுலபமாக நம்பலாம்.
 
பிரைட்டனில் இருந்த பொழுது அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினார்கள் என நம்புவதற்கு ஒரு காரணமும் இல்லை, அப்படித்தானே.
 
எந்த ஒரு காரணமும் இல்லை. பரஸ்பரம் அன்பு இருந்ததற்கு ஒரு அறிகுறியும் எனக்கு ஞாபகமில்லை, அப்படி ஏதாவது இருந்திருந்தால் என் குடும்பத்தினருக்குத் தெரியாமல் போகாது. அவன் முதலில் இராணுவத்தில் சேர்ந்த பொழுது, அவள் அவனை மிகவும் ரசித்தாள். ஏன் நாங்கள் எல்லோருமே பார்த்து வியந்தோம். மெரிடனில் இருக்கும் எல்லாப் பெண்களும் அவனைப்பற்றிய நினைப்பில் சுயநினைவு இல்லாமல்தான் முதல் இரண்டு மாதங்கள் இருந்தனர். அவன் அவளுக்குத் தனிப்பட்ட கவனிப்பு எதுவும் கொடுக்கவில்லை. சில நாட்களுக்குப் பிறகு அவளுடைய வியப்பு குறைந்து போனது, அவனைப்பற்றிய கற்பனை மறைந்து போனது, படைப்பிரிவில் இருக்கும் மற்றவர்கள், யார் அவளை அதிக அக்கறையுடன் கவனித்தனரோ, அவர்கள் அவளுக்குப் பிரியமானவர்களாக ஆனார்கள்.
 
பிரயாணம் முழுவதும் நடந்த சம்பவத்தைத் தவிர வேறு எதைப்பற்றியும் அவர்களால் பேச முடியவில்லை. பேசுவதினால் அவர்களுடைய பயம், எதிர்பார்ப்பு, கவலை இவைகளுக்கு புதிதாக எதுவும் நடக்கப் போவதில்லை. ஆனாலும் எலிசபெத்தால் இதைப்பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. மனவேதனையும், தன்மீது தானே குற்றம்சாட்டிக் கொள்வதுமே மேலோங்கி இருந்தது. அவளால் அமைதியாகவும் இருக்க முடியவில்லை, மறக்கவும் முடியவில்லை.
 
எவ்வளவு வேகமாகப் பிரயாணம் செய்ய முடியுமோ, அவ்வளவு வேகமாக பிரயாணம் செய்து ஒரு இரவு முழுவதும் வண்டியிலேயே உறங்கி மறுநாள் இரவு உணவு உண்ணும் சமயத்தில் லாங்க்பர்னுக்கு வந்து சேர்ந்தனர். தங்களை எதிர்பார்த்து, ஜேன் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைத்து எலிசபெத் ஆறுதலடைந்தாள்.
 
திரு. கார்டினரின் குழந்தைகள் வண்டியைப் பார்த்தவுடன் வீட்டின் வாசற்படியில் நின்று கொண்டு, அவர்களைக் கண்டவுடன் சந்தோஷத்தில் குதித்து, கும்மாளமிட்டு வரவேற்றது, இனிமையாக இருந்தது.
 
எலிசபெத், குழந்தைகளுக்கு அவசரமாக முத்தம் அளித்துவிட்டு, தாயாரின் அறையிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த ஜேனை வழியில் எதிர்கொண்டாள்.
 
அன்புடன் அவளை தழுவிய எலிசபெத், அவர்களைப்பற்றி ஏதேனும் செய்தி கிடைத்ததா என்று கேட்டாள். இருவரின் கண்களிலும் நீர் மல்கியது.
 
இதுவரை எந்த செய்தியும் கிடைக்கவில்லை. ஆனால் மாமா இப்பொழுது வந்துவிட்டபடியால் இனிமேல் எல்லாம் நல்லபடியாக முடியும் என நம்புகிறேன்என்றாள் ஜேன்.
 
தகப்பனார் லண்டனில் இருக்கிறாரா?‘
 
ஆமாம், நான் உனக்கு எழுதியிருந்தபடி அவர் செவ்வாயன்று கிளம்பினார்.
 
அவரிடமிருந்து அடிக்கடி செய்தி வருகிறதா?‘
 
ஒரே ஒரு தடவைதான் செய்தி கிடைத்தது. சௌகரியமாகப் போய் சேர்ந்தேன் என எழுதியிருந்தார். ஏதாவது முக்கியமான செய்தி கிடைத்தால் மீண்டும் எழுதுவதாகக் கூறியுள்ளார்.
 
தாயார் எப்படியிருக்கிறார்? நீங்கள் எல்லோரும் எவ்வாறு இருக்கிறீர்கள்?‘
 
தாயார் பரவாயில்லை, மிகவும் ஆடிப் போயிருக்கிறார். மாடியில் உள்ள தனது அறையைவிட்டு வெளியே வரவில்லை. உங்களைப் பார்த்தால் மிகவும் சந்தோஷமடைவார். நல்லவேளை மேரியும், கிட்டியும் நன்றாக உள்ளனர்.
 
ஆனால், நீ எவ்வாறு இருக்கிறாய். மிகவும் களையிழந்து இருக்கிறாய். தனியாக எல்லா கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டிருக்கிறாய்.
 
தான் நன்றாக இருப்பதாகக் கூறி, இவ்வாறு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த ஜேன், தங்கள் குழந்தைகளுடன் இருந்த தனது மாமாவிடமும், அத்தையிடமும் சென்று அவர்களை வரவேற்று, அவர்கள் வந்ததற்காக சந்தோஷத்துடனும் கண்களில் நீர்மல்க நன்றி கூறினாள்.
 
எல்லோரும் வரவேற்பறைக்குச் சென்றனர். எலிசபெத் ஜேனிடம் கேட்ட கேள்விகளை எல்லாம் மற்றவர்கள் மீண்டும் கேட்டனர். பதில் எதுவும் தெரியாததால் அவளால் சரியாக விவரம் கொடுக்க முடியவில்லை எனக் கண்டனர். அவளுடைய நல்ல உள்ளம் நல்லதையே நினைத்ததால், லிடியாவிடமிருந்து அல்லது தகப்பனாரிடமிருந்தாவது விவரம் வரும், திருமணத்தைப்பற்றிய செய்தி வரும் என தினம் காலை கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
 
திருமதி. பென்னட்டின் அறைக்குள் நுழைந்த அவர்களை, அவர்கள் எதிர்பார்த்தது போலவே அழுகையும், புலம்பலுமாக அவள் வரவேற்றாள். விக்காமின் வில்லத்தனமான செய்கையை கண்டித்தாள். தான் படும் துன்பங்கள், தன்னை எவ்வாறு எல்லோரும் மோசமாக உபயோகப்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதைப்பற்றி குற்றம் சாட்டினாள், பெண்ணின் தவற்றிற்கு தான் கொடுத்த இடம்தான் காரணம் என்பதை மறந்து மற்றவர்களைக் குற்றம்சாட்டிக் கொண்டிருந்தாள்.
 
நான் கூறியபடி எல்லோரும் பிரைட்டனுக்குப் போயிருந்தால் இது நடந்திருக்காது; பாவம், லிடியாவை கவனித்துக் கொள்ள அங்கு யாருமில்லை. பார்ஸ்டர் தம்பதிகள் இவளை ஏன் தங்கள் கண்பார்வையிலிருந்து வெளியேற அனுமதித்தனர். அவர்கள் பக்கத்திலிருந்து ஏதோ ஒரு பெரிய கவனமின்மை இருந்திருக்கிறது, அவளை நன்றாக கவனித்துக் கொண்டிருந்தால், லிடியா இவ்வாறு செய்யக் கூடிய பெண்ணே அல்ல. அவளைப் பார்த்து கொள்ளும் திறமை அவர்களுக்குக் கிடையாது என எனக்குத் தெரியும். எப்பொழுதும்போல் என் பேச்சை யாரும் கேட்கவில்லை. இப்பொழுது திரு. பென்னட், விக்காமை தேடிப் போயுள்ளார், அவனுடன் சண்டை போடுவார், அவன் அவரைக் கொன்று விடுவான், பிறகு நம்முடைய கதி என்ன? காலின்ஸ் குடும்பத்தினர் நம்மை துரத்திவிடுவார்கள். எனது சகோதரனே, நீ உதவி செய்யவில்லை என்றால், நாங்கள் என்ன செய்ய வேண்டும் எனப் புரியவில்லை.
 
இந்த கற்பனையான எண்ணத்தைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். திரு. கார்டினர், அவளிடமும், அவள் குடும்பத்தினரிடமும் தனக்குள்ள அன்பை உறுதிப்படுத்தி மறுநாளே லண்டனுக்குச் சென்று, லிடியாவைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டுவர திரு. பென்னட்டிற்கு எல்லா விதங்களிலும் உதவி செய்வதாகச் சொன்னார்.
 
வேண்டாத கவலைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்என்ற திரு. கார்டினர் மோசமான முடிவுக்குத் தயாராக இருந்தாலும், அதுதான் தீர்மானமாக நடக்கும் என எதிர்பார்ப்பதற்கு அவசியமில்லை. பிரைட்டனை விட்டுக் கிளம்பி ஒரு வாரம்கூட ஆகவில்லை. இன்னும் சில நாட்களில் ஏதாவது செய்தி கிடைக்கும். அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை, திருமணம் செய்து கொள்ள உத்தேசமும் இல்லை என்பது தெரியாமல் விஷயமே முடிந்துவிட்டதாக, இனி செய்வதற்கொன்றுமில்லை என நினைக்க வேண்டாம். நான் ஊருக்குச் சென்றவுடன், சகோதரனைப் பார்த்து, கிரேஸ் சர்ச் தெருவிலுள்ள எனது வீட்டிற்கு அவரை அழைத்து வந்து, என்ன செய்யலாம் என்பதைப்பற்றி கலந்து ஆலோசித்துத் தீர்மானிப்போம்என்றார்.
 
ஓ! எனதருமை சகோதரனே, இதைத்தான் நான் விரும்பினேன். நீ ஊருக்கு சென்றவுடனேயே அவர்கள் எங்கிருந்தாலும், தேடிக் கண்டுபிடித்து, இதுவரை அவர்கள் திருமணம் செய்து கொண்டிராவிட்டால், திருமணம் செய்து கொள்ள வை. திருமண உடைகளுக்காக அவர்களைக் காத்திருக்க வைக்காதே, திருமணம் ஆனபின், உடைகள் வாங்க எவ்வளவு பணம் வேண்டுமோ, அவ்வளவு பணம் லிடியாவிற்குக் கிடைக்கும் என்று சொல். திரு. பென்னட்டை சண்டைபோட சொல்லாதே. நான் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறேன், என் உடல்நிலை எவ்வளவு மோசமாக உள்ளது என அவரிடம் சொல். லிடியாவிடம், அவளது உடைகளைப்பற்றி கவலைப்படாமல் இருக்கச் சொல். என்னைப் பார்க்கும்வரை அவள் உடைகள் எதுவும் வாங்க வேண்டாம். அவளுக்கு எங்கு வாங்குவது என்பது தெரியாது. நீ எவ்வளவு அன்பாக நடந்து கொள்கிறாய். எனது சகோதரனே, நீ எல்லாவற்றையும் செய்து முடித்து விடுவாய் என நினைக்கிறேன்என்று கூறினாள்.
 
திரு. கார்டினர், எல்லாவிதங்களிலும் உதவி செய்வதாகக் கூறினாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம், எல்லாவற்றிற்கும் தயாராக இருக்க வேண்டும் எனக் கூறி, இரவு உணவு உண்ணும்வரை தனது சகோதரியிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு, பிறகு எந்த பணிப்பெண், பெண்கள் இல்லாத பொழுது அவளை கவனித்துக் கொள்வாளோ அப்பெண்மணியிடம் அவளுடைய உணர்ச்சிகளை எல்லாம் வெளியிட்டுக் கொள்ளட்டும் என்று விட்டுச் சென்றார்.
 
திருமதி. பென்னட், இவ்வாறு தனியாக அறையிலேயே அமர்ந்திருப்பதற்கு அர்த்தமில்லை என கார்டினர் தம்பதியினர் நினைத்தாலும், அதனை எதிர்க்கவும் இல்லை. ஏனெனில் அவளுக்கு இரகசியத்தைக் காப்பாற்ற முடியாது எனத் தெரியும். மற்ற பணிப்பெண்கள் எதிரே ஏதாவது பேசிவிடுவாள் எனத் தெரியும். எந்த ஒரு பணிப்பெண்மணியிடம் மட்டும் அவர்களுக்கு நம்பிக்கை இருந்ததோ, அவளுக்கு மட்டும், திருமதி. பென்னட்டின் பயம் தெரிந்தால் போதும் என்று அவளிடம் விட்டுச் சென்றனர்.
 
தத்தம் வேலைகளில் மும்முரமாக இருந்த மேரியும், கிட்டியும் அவர்களை முதலில் சந்திக்க முடியாமல் போனதால், ஒருத்தி புத்தகத்திலிருந்தும், மற்றொருத்தி தனது ஒப்பனையிலிருந்தும் வெளியேறி, உணவு உண்ணும் அறைக்கு வந்தனர். இருவரும் அமைதியாகத் தென்பட்டனர். கிட்டிக்கு தன்னுடைய விருப்பமான சகோதரியின் இழப்பினாலும், எல்லோருக்கும் இவ்விஷயத்தில் அவள்மேல் இருந்த கோபத்தினாலும், அவளுக்கு முன்பே இருக்கும் எரிச்சலான சுபாவம் மேலும் அதிகமாயிற்று. மேரி, தீவிரமாக எலிசபெத்தை நோக்கி ஏதோ பேசிவிட்டு, மேஜைமுன் அமர்ந்து--இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம், நாம் இப்பொழுது குரோதத்தை விட்டுவிட்டு, புண்பட்ட மனதிற்கு ஆறுதல் சொல்லிக் கொள்ள வேண்டும்என்றாள்.
 
எலிசபெத்திற்கு பதில் சொல்லும் எண்ணம் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட மேரி, மேலும் கூறலானாள், ‘லிடியாவிற்கு இது ஒரு சந்தோஷமில்லாத விஷயமாக இருக்கும், நாம் இதிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொள்ளலாம்; ஒரு பெண் நல்லொழுக்கத்தை இழந்து விட்டால் அதனை மீட்க முடியாது--ஒரு தவறான செயல் முடிவில்லாத அழிவைத் தரும்--நற்பெயர் சுக்குநூறாகிவிடும்--நம்முடைய நற்பெயர் எவ்வளவு அழகாக இருக்கிறதோ அவ்வளவு சுலபமாக உடையும் தன்மையும் உடையது. மோசமான இளைஞர்களிடம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் அது போதாது.
 
எலிசபெத் அவளை பிரமிப்புடன் பார்த்தாள், மிக்க வருத்தத்தில் இருந்த அவளால் பதிலேதும் கூற முடியவில்லை. ஆனால் மேரியோ, தீமையிலிருந்து என்னென்ன நீதி கிடைக்கும் என்பதுபற்றிக் கூறி தன்னை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.
 
இரண்டு சகோதரிகளுக்கும் பிற்பகல் வேளையில் தனியாக இருக்க சந்தர்ப்பம் கிடைத்தது. எலிசபெத்திற்கு கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருந்தன. ஜேனும் பதில் சொல்வதற்குத் தயாராக இருந்தாள். இருவரும் நடந்த விஷயத்தின் விளைவுகளைப்பற்றி புலம்பிக் கொண்டிருந்தனர். எலிசபெத் தீர்மானமாக, அதுதான் நடக்கும் என நம்பினாள், இம்மாதிரி நடக்கவே முடியாது என மிஸ். பென்னட்டாலும் தீர்மானிக்க முடியவில்லை. எலிசபெத் தொடர்ந்து பேசலானாள், ‘நான் தெரிந்து கொள்ளாததைப்பற்றி எல்லாம் எனக்குச் சொல், வேறு விவரங்களைப்பற்றி எனக்குத் தெரிவி. கர்னல் பார்ஸ்டர் என்ன சொன்னார்? இச்சம்பவம் நடப்பதற்குமுன் அவர்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லையா? இருவரும் ஒன்றாக இருந்ததை அவர்கள் பார்த்திருக்க வேண்டும்.
 
கர்னல் பார்ஸ்டருக்கு லிடியாவைப்பற்றி சந்தேகம் வந்திருக்கிறது, ஆனால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று தோன்றியிருக்கிறது, எனக்கு அவரை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது, அவர் மிகவும் அன்பாகவும், கவனமாகவும்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் ஸ்காட்லாண்டிற்குப் போகவில்லை என்பது தெரிவதற்குமுன், நம்மை வந்து பார்த்து நமக்கு தைரியம் கொடுப்பதற்கு வருவதாக இருந்தார், ஆனால் அவர்கள் வேறு எங்கோ சென்றிருக்கிறார்கள் எனத் தெரிந்த பிறகு உடனே நம்மிடம் வந்துவிட்டார்.
 
விக்காம் திருமணம் செய்து கொள்ள மாட்டான் என்று டென்னி நம்புகிறாரா? அவர்கள் ஓடிப்போகப் போவது அவருக்குத் தெரியுமா? கர்னல் பார்ஸ்டர் டென்னியை சந்தித்தாரா?‘
 
ஆம். சந்தித்தார். கேட்டதற்கு, தனக்கு அவர்களுடைய திட்டத்தைப்பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லியிருக்கிறார், தன்னுடைய உண்மையான அபிப்பிராயம் கூறவும் மறுத்து விட்டார். அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்ற தன்னுடைய நம்பிக்கையை மறுபடியும் கூறவில்லை -- இதிலிருந்து அவர் முதலில் அவர்களை தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம் என நம்புகிறேன்.
 
கர்னல் பார்ஸ்டர் இங்கு வரும்வரை, அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகியிருக்கும் என்ற சந்தேகம் யாருக்கும் வரவில்லையா?‘
 
அப்படி எவ்வாறு நம்மால் நினைக்க முடியும். அவனுடைய நடத்தை எப்பொழுதுமே சரியாக இருந்ததில்லை என்பதால், அவனுடன் எனது சகோதரியினால் சந்தோஷமாக வாழ முடியுமா என்ற பயம் இருந்தது. எனது பெற்றோர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாததால், இது எவ்வளவு விவேகமில்லாத ஜோடிப் பொருத்தமாக இருக்கும் என நினைத்தார்கள். தனது கடைசி கடிதத்தில் லிடியா, தான் இந்த திட்டத்திற்கு தன்னை எவ்வாறு தயார் செய்து கொண்டிருக்கிறாள் என்பதைப்பற்றி எழுதியிருந்ததாக, தனக்கு மட்டும் தெரிந்த விஷயம் என்ற பெருமையில் கிட்டி ஒத்துக் கொண்டாள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர் என்ற விஷயம் பல வாரங்களாகக் கிட்டிக்குத் தெரிந்திருக்கிறது.
 
அவர்கள் பிரைட்டனுக்குப் போவதற்கு முன்பே தெரிந்திருக்கிறதா?‘
 
இல்லை என நினைக்கிறேன்.
 
விக்காமைப்பற்றி கர்னல் பார்ஸ்டர் தவறாக நினைத்திருந்தாரா? அவனுடைய உண்மையான சுபாவம் அவருக்குத் தெரியுமா?‘
 
முன்போல், அவர் விக்காமைப்பற்றி நல்ல கருத்து சொல்லவில்லை. அவசரக்காரன், செலவாளி என்று கூறினார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவன் மெரிடனில் நிறைய கடன் வைத்துவிட்டுச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது பொய்யாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
 
ஓ! ஜேன் நாம் இவ்வளவு இரகசியமாக வைத்திருக்காமல், அவனைப்பற்றி தெரிந்ததைச் சொல்லியிருந்தால், இது நடந்திருக்காது!
 
ஒருவேளை அப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்என்றாள் அவளது சகோதரி.
 
தற்பொழுது எப்படி இருக்கிறார்கள் எனத் தெரியாமல், பழைய தவறுகளை வெளி உலகுக்கு சொல்வது நியாயமாகாது, நாம் நல்லெண்ணத்துடன்தான் நடந்து கொண்டோம்.
 
தன்னுடைய மனைவிக்கு லிடியா எழுதிய கடிதத்தை கர்னல் பார்ஸ்டர் தெரிவித்தாரா?‘
 
நாம் பார்ப்பதற்காக, அதனை தான் வரும்பொழுது கொண்டு வந்தார்.
 
ஜேன் அதனை எலிசபெத்திடம் கொடுத்தாள். அதில் எழுதியிருந்தது இவைதாம்,
 
எனதருமை ஹாரியட்,
 
நான் எங்கு சென்றிருக்கிறேன் என உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் சிரிப்பீர்கள், நான் நாளை இங்கு இல்லை என்று தெரிந்தவுடன் உங்களுடைய ஆச்சரியத்தை நினைத்து என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. நான் கிரேட்னா கிரீனுக்குச் செல்கிறேன். யாருடன் என்று உங்களால் ஊகிக்க முடியவில்லை எனில் நீங்கள் சாமர்த்தியசாலி அல்ல என்றுதான் நான் நினைக்க வேண்டும். ஏனெனில் இந்த உலகத்திலேயே ஒரே ஒருவன்தான் இருக்கிறான், அவனை நான் காதலிக்கிறேன். அவன் மிகவும் நல்லவன், அவனில்லாமல் என்னால் சந்தோஷமாக இருக்க முடியாது, அதனால் நான் போவதால் ஒரு தீங்கும் வராது. உங்களுக்கு இஷ்டம் இல்லை எனில், நான் போவதைப்பற்றி லாங்க்பர்னில் எதுவும் சொல்ல வேண்டாம். நானே அவர்களுக்குக் கடிதம் எழுதி, லிடியா விக்காம் என்று கையெழுத்திடும் பொழுது அவர்களுடைய ஆச்சரியம் இன்னும் அதிகமாக இருக்கும். எவ்வளவு பெரிய தமாஷாக இருக்கும்! என்னால் எழுதவே முடியவில்லை. அவ்வளவு சிரிப்பு வருகிறது. ப்ராட்டுடன் நான் இன்று இரவு நடனமாட முடியாமல் போனதற்கு எனது மன்னிப்பைத் தெரிவித்து விடுங்கள். விஷயம் தெரிந்தவுடன் அவன் என்னை மன்னித்துவிடுவான் என நம்புகிறேன், அடுத்த முறை அவனுடன் நடனமாடுவேன் எனக் கூறவும். நான் லாங்க்பர்னுக்கு சென்ற பிறகு என்னுடைய துணிகளை கொடுத்து அனுப்பவும். கொடுப்பதற்கு முன்னால் என்னுடைய மஸ்லின் உடையை ஸாலியை தைத்துவிடச் சொல்லவும். என்னுடைய அன்பினை கர்னல் பார்ஸ்டருக்குத் தெரிவிக்கவும், எங்களுடைய சந்தோஷமான பிரயாணத்தைக் கொண்டாடவும்.
 
                                                                                    ‘தங்கள் அன்புள்ள தோழி
 
                                                                                           ‘லிடியா பென்னட்
 
மூளையில்லாத லிடியாஎனக் கூவிய எலிசபெத் அம்மாதிரி ஒரு சமயத்தில் எழுதப்பட்ட இந்த கடிதம், ஒரு கடிதமா? ஆனால் அவள் தான் போவதின் நோக்கத்தைக் குறித்து தீவிரமாக இருந்தாள் எனத் தெரிகிறது. அவன், பிறகு அவளை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். ஆனால் இவள் பக்கத்திலிருந்து இப்படி ஒரு அவமானகரமான திட்டத்தைத் தீட்டவில்லை. பாவம் தகப்பனார்! என்ன நினைத்திருப்பார்!
 
யாரும் இவ்வளவு அதிர்ச்சி அடைந்து நான் பார்த்ததில்லை. அவரால் பத்து நிமிடத்திற்குப் பேசவே முடியவில்லை. தாயாருக்கு உடனே உடல் நலம் குன்றியது. வீடு முழுவதும் ஒரே குழப்பத்தில் இருந்தது!
 
ஓ! ஜேன், வேலைக்காரர்கள் யாருக்காவது இந்த விஷயம் தெரியாமல் இருந்திருக்குமா?‘
 
எனக்குத் தெரியவில்லை. யாரேனும் ஒருவருக்காவது தெரியாமல் இருக்கலாம். இதுபோன்ற சமயத்தில் விஷயத்தை யாருக்கும் தெரியாமல் காப்பாற்றுவது கஷ்டம். அம்மா கத்த ஆரம்பித்துவிட்டார், என்னால் முடிந்ததை செய்தேன், ஆனால் என்னால் எவ்வளவு செய்திருக்க வேண்டுமோ அதைச் செய்ய முடியவில்லை. நடந்த சம்பவத்தின் பயங்கரம் என் மூளையை மழுங்கச் செய்துவிட்டது.
 
உன்னுடைய சக்திக்கு மீறி தாயாரை கவனித்துக் கொண்டிருக்கிறாய். உனக்கு உடம்பு சரியில்லை என நினைக்கிறேன். நீ தனியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும்படி ஆகிவிட்டது, ஓ! நான் உன்கூட இருந்திருக்க வேண்டும்.
 
மேரியும், கிட்டியும் மிகவும் உதவியாக இருந்தனர். அவர்கள் என்கூடவே இருந்திருப்பார்கள். ஆனால் அது சரியாக இருந்திருக்காது என நான் நினைத்தேன். கிட்டி மிகவும் மென்மையானவள், மேரி அதிகம் படிப்பதால், அவளுடைய ஓய்வு நேரத்திற்கு இடையூறு வரக்கூடாது என நினைத்தேன். சித்தி லாங்க்பர்னுக்கு வந்து, வியாழன்வரை என்னுடன் தங்கினாள். மிக ஆறுதலாக இருந்தது. லேடி லூகாஸும் புதனன்று காலை வந்து தனது வருத்தத்தைத் தெரிவித்தாள். தனது பெண்களின் உதவி வேண்டுமா எனக் கேட்டாள்.
 
அவள் வீட்டிலேயே தங்கி இருந்திருக்கலாம். நல்ல எண்ணத்துடன்தான் வந்திருக்கலாம், ஆனால் இம்மாதிரி அசம்பாவிதம் நடக்கும் பொழுது, நமது அருகாமையில் வசிப்பவர்களிடமிருந்து நாம் எவ்வளவு குறைவாக உதவி எதிர்பார்க்கிறோமோ அவ்வளவு நல்லது. உதவி என்பது முடியாத காரியம், அனுதாபம் சகிக்க முடியாதது. தொலைவில் இருந்து கொண்டே நம்மைப் பார்த்து சந்தோஷப்படட்டும், திருப்தி அடையட்டும்.
 
தன்னுடைய மகளைத் தேடுவதில், தனது தகப்பனார் என்ன முயற்சிகள் எடுக்க உத்தேசித்திருக்கிறார் என விசாரிக்க ஆரம்பித்தாள்.
 
எப்ஸன் சென்று, எங்கு இறுதியாக குதிரைகளை மாற்றினார்களோ அங்கு சென்று, அங்கிருப்பவர்களிடம் ஏதாவது தகவல் கிடைக்குமா எனத் தெரிந்துக் கொள்ள எண்ணியிருந்தார் என நினைக்கிறேன். க்லாப்ஹாமிலிருந்து அவர்கள் வந்த குதிரை வண்டியின் எண்ணை தெரிந்து கொள்வதுதான் முக்கியமான நோக்கமாக இருந்திருக்க வேண்டும். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒரு வண்டியிலிருந்து மற்றொரு வண்டிக்கு மாறியது, குறிப்பிட்டுச் சொல்லும் படியாக இருக்கும் என்று அதனைப்பற்றி க்லாப்ஹாமில் விசாரிக்க எண்ணியிருந்தார். வண்டியை ஒட்டுபவர் அவர்களை எந்த இடத்தில் இறக்கிவிட்டார் எனக் கண்டுபிடித்தால், அவர்கள் மீண்டும் எந்த வண்டியில் கிளம்பினார்கள் எனக் கண்டுபிடித்து விடலாம். வேறு ஏதாவது திட்டம் இருந்ததா எனத் தெரியவில்லை. அவர் அவசரமாகக் கிளம்பினார், மிகவும் வருத்தமான மன நிலையில் இருந்ததால், இதைக் கண்டுபிடிக்கவே எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

 



book | by Dr. Radut