Skip to Content

Chapter 04 வீட்டிலிருந்து வரும் செய்தி

லாம்ப்டனுக்கு வந்து சேர்ந்த முதல் நாளன்று, ஜேனிடமிருந்து கடிதம் வராதது எலிசபெத்திற்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இரண்டாம் நாளும் வரவில்லை, மூன்றாம் நாள் இரண்டு கடிதங்கள் வந்தன. அதில் ஒன்று, ஜேன் முகவரி சரியாக எழுதாததால் எங்கேயோ சுற்றிவிட்டு வந்திருந்தது.

 
உலாவச் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த பொழுது கடிதம் வந்ததால், அதனை அவள் தனியாகப் படித்து அனுபவித்துக் கொள்ளட்டும் என்று எண்ணி அவளது மாமாவும், அத்தையும் தாங்கள் மட்டும் வெளியே கிளம்பினர். சுற்றிவிட்டு வந்த கடிதம் ஐந்து நாட்களுக்கு முன்பு எழுதப்பட்டிருந்ததால் அதனை முதலில் படிக்க ஆரம்பித்தாள். அதில் அங்கு நடந்த விருந்து மற்றும் கேளிக்கைகளைப்பற்றிய விவரங்கள் இருந்தன. ஆனால் அக்கடிதத்தின் பிற்பகுதி அடுத்தநாள் தேதியிட்டு மிக்க கவலையுடன் எழுதப்பட்டிருந்தது என்பது தெளிவாக இருந்ததால் அதனை உடனே படிக்கலானாள். அது இவ்வாறு இருந்தது:
 
எனதருமை லிசி! நடக்கக் கூடாதது நடந்து இருக்கிறது, உன்னை பயமுறுத்தவில்லை, நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம், நான் சொல்ல வருவது லிடியாவைப்பற்றித்தான். நேற்று இரவு பன்னிரெண்டு மணிக்கு, நாங்கள் எல்லோரும் உறங்கப் போன பிறகு கர்னல் பார்ஸ்டரிடமிருந்து, லிடியா, விக்காமுடன் ஸ்காட்லாண்ட் போயிருப்பதாகத் தந்தி வந்தது. கிட்டிக்கு இது மிகவும் எதிர்பாராத விஷயமாக இல்லை. இரு பக்கத்திலிருந்தும் புத்தியற்ற ஜோடிப் பொருத்தம் இது!--நல்லதே நினைக்க ஆசைப்படுகிறேன், அவனைப்பற்றி தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோமோ என நினைக்க வேண்டும் போலுள்ளது. அவன் முன்யோசனையில்லாமல், எதைப்பற்றியும் யோசிக்காமல் நடந்து கொண்டிருக்கிறான் என என்னால் சுலபமாக நம்ப முடிகிறது, தவறாக எதுவும் நினைத்திருக்க மாட்டான். நமது தகப்பனாரால் எதுவும் கொடுக்க முடியாது என அவனுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் வேறு எந்த எண்ணமும் இருக்க முடியாது. அம்மா மிகவும் வருத்தத்தில் இருக்கிறாள். அப்பா சற்று பரவாயில்லை. அவன் எப்படிப்பட்டவன் என்று யாரிடமும் நல்லவேளை நாம் சொல்லவில்லை. நாமும் அதை மறக்க வேண்டும். சனிக்கிழமை இரவு பன்னிரெண்டு மணிக்கு கிளம்பினர், ஆனால் நேற்று காலை எட்டுமணிவரை அவர்கள் இல்லாதது யாருக்கும் தெரியவில்லை. நம் இடத்திலிருந்து பத்து மைல் தூரத்தில் இருக்கும் வழியாகத்தான் சென்றிருப்பார்கள். இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கலாம் என்று கர்னல் பார்ஸ்டர் சொல்கிறார். அவர்களுடைய நோக்கத்தை லிடியா சில வரிகளில் திருமதி. பார்ஸ்டருக்கு எழுதியிருக்கிறாள். இத்துடன் இக்கடிதத்தை முடிக்கிறேன். ஏனெனில் அம்மாவை வெகு நேரத்திற்குத் தனியாகவிட முடியாது. இதிலிருந்து உன்னால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியாது என நினைக்கிறேன், நான் என்ன எழுதியிருக்கிறேன் என எனக்கே தெரியவில்லை.
 
எதைப்பற்றியும் நினைக்காமல், தான் என்ன நினைக்கிறோம் என்பதைப்பற்றியும் கவலைப்படாமல், மறுநாள் எழுதப்பட்ட அடுத்த கடிதத்தை பொறுமையின்றி பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள்.
 
அவசரமாக எழுதிய முதல் கடிதம் கிடைத்திருக்கும், இது தெளிவாக இருக்கும் என விரும்புகிறேன், நேரம் கிடைக்கவில்லை என்பதால் அல்ல, என்மனம் அவ்வளவு தடுமாறுவதால் தெளிவாக சேர்ந்தாற்போல் எழுத முடியவில்லை. அருமை லிசி, நான் என்ன எழுதப் போகிறேன் என்பதே எனக்குத் தெரியவில்லை. ஆனால் உனக்கு ஒரு கெட்ட செய்தி காத்திருக்கிறது. விக்காமுக்கும், லிடியாவுக்கும் திருமணம் என்பதே ஒரு விவேகமில்லாத செயலாக இருக்கும். ஆனால் இப்பொழுது திருமணம் நடந்திருக்க வேண்டுமே என நினைக்கிறோம். ஏனெனில் அவர்கள் ஸ்காட்லாண்டிற்குப் போகவில்லை என்ற செய்திதான் பயத்தைத் தருகிறது. பிரைட்டனைவிட்டு நேற்றைக்கு முந்தைய தினம் கிளம்பிய திரு. பார்ஸ்டர், , தந்தி கிடைத்த சில மணி நேரத்திற்குப்பின், நேற்று இங்கு வந்து சேர்ந்தார். திருமதி. பார்ஸ்டருக்கு, கிரெட்னா கிரீனுக்குப் போகப் போவதாக லிடியா கடிதம் எழுதியிருந்தாலும், விக்காமிற்கு அங்கு போக வேண்டும் என்ற எண்ணம் இல்லையென்றும், அல்லது லிடியாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இல்லையென்றும், டென்னி, தான் நம்புவதாக கர்னல் பார்ஸடரிடம் கூறியதால், அவர் பயந்துபோய் அவர்களைத் தேட பிரைட்டனை விட்டுக் கிளம்பி இருக்கிறார். க்லாப்ஹாம் சென்றதுவரை கண்டுபிடிக்க முடிந்தது, பிறகு எங்கு சென்றனர் எனத் தெரியவில்லை, ஏனெனில் எப்ஸமிலிருந்து சாரட்டு வண்டியில் வந்த அவர்கள், வாடகை குதிரை வண்டியில் ஏறிச் சென்றிருந்தனர். இதற்குப் பிறகு அவர்கள் லண்டன் ரோடில் பிரயாணம் செய்வதை சிலர் பார்த்தனர். என்ன நினைப்பது எனப் புரியவில்லை. லண்டனில் அவர்கள் போன திசையில், எல்லா இடங்களிலும் தேடிய திரு. பார்ஸ்டர், வழியில் உள்ள பார்னெட், ஹாட்பீல்டில் இருக்கும் விடுதிகளில் எல்லாம் தேடி, எங்கும் கிடைக்காததால் ஹர்ட்போர்ட்ஷயருக்குத் திரும்பி விட்டார். மிகவும் அக்கறையுடன் லாங்க்பர்னுக்கு வந்த கர்னல் பார்ஸ்டர் உண்மையாகவே வருத்தப்பட்டு தன்னுடைய பயத்தை வெளியிட்டார். அவரையும், திருமதி. பார்ஸ்டரையும் பார்த்தால் பாவமாக இருக்கிறது, அவர்கள் மீது யாராலும் எந்த பழியும் சுமத்த முடியாது. நம்முடைய துன்பம் மிகவும் பெரியது, லிசி. அம்மாவும், அப்பாவும் மோசமாக ஏதாவது நடந்திருக்கும் என்று நம்புகின்றனர். ஆனால் என்னால் அவனைப்பற்றி கெட்டதாக நினைக்க முடியவில்லை. முதல் திட்டப்படி ஸ்காட்லாண்ட் போகாமல், ஊரிலேயே இரகசியமாகத் திருமணம் செய்து கொள்ள சந்தர்ப்பம் அமைந்திருக்கலாம், லிடியாவிற்கு இருக்கும் அந்தஸ்திற்கே அவன் இப்படி ஒரு திட்டம் தீட்டி இருக்கிறான் என்றால், இவளும் இவ்வளவு கீழ்தரமாக இறங்கி இருக்கிறாளா?--முடியவே முடியாது. கர்னல் பார்ஸ்டர், அவர்கள் திருமணம் செய்து கொண்டிருப்பார்கள் என நம்பவில்லை. அவர்கள் ஒருவேளை அப்படி செய்து கொண்டிருப்பார்களோ என்ற எனது நம்பிக்கையை அவர் ஏற்கவில்லை, ஏனெனில் விக்காமை நம்ப முடியாது என்றார். அம்மா அறையை விட்டே வெளியே வரவில்லை. இதிலிருந்து அவள் சற்று முயன்று வெளியே வரலாம். ஆனால் நாம் இதை எதிர்பார்க்க முடியாது. அப்பாவும் இவ்வளவு ஒடிந்து போய் நான் பார்த்ததில்லை. கிட்டிக்கு இவ்விஷயம் தன்னிடமிருந்து மறைக்கப்பட்டு விட்டது என்று கோபம். ஆனால் இது இரகசியமாக வைக்கப்பட வேண்டிய விஷயம்தான். அதனால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நல்லவேளை லிசி, நீ இந்த கஷ்டமான காட்சிகளைப் பார்க்க இங்கு இல்லை. ஆனால் இப்பொழுது முதல் கட்ட அதிர்ச்சி எல்லாம் முடிந்து போனதால், நீ இங்கு வரவேண்டும் என்று நான் மிகவும் ஏங்குகிறேன். உன்னால் முடியாவிட்டாலும் வரவேண்டும் என்று கேட்கும் அளவிற்கு நான் சுயநலம் பிடித்தவள் அல்ல. சரி விடை பெறுகிறேன். என்னால் மறுபடியும் எழுதாமல் இருக்க முடியவில்லை. நான் என்ன கேட்க மாட்டேன் என்று கூறினேனோ அதைத்தான் இப்பொழுது கேட்கப் போகிறேன். சந்தர்ப்ப சூழ்நிலை இவ்வாறாக இருப்பதால் நீங்கள் எல்லோரும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்கு வர வேண்டும் என உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய மாமாவைப்பற்றியும், அத்தையைப்பற்றியும் எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும் என்பதால், உங்களை வரச் சொல்லி கேட்பதற்கு எனக்கு பயம் ஒன்றும் இல்லை. எனக்கு அவரிடம் மேலும் ஒன்று கேட்க வேண்டும். நாளை அப்பா, கர்னல் பார்ஸ்டருடன் அவர்களைக் கண்டுபிடிக்க லண்டன் கிளம்பப் போகிறார். ஆனால் அவருடைய மனத்துயரம் அவரை திறமையாகவும், நிதானமாகவும் செயல்பட அனுமதியளிக்காது, கர்னல் பார்ஸ்டருக்கும் நாளை மீண்டும் பிரைட்டனில் இருக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இந்த சமயத்தில் மாமாவின் அறிவுரையும், உதவியும் மிகவும் அவசியமாக இருக்கும், நான் என்ன நினைக்கிறேன் என்பதை அவர் உடனே புரிந்து கொள்வார். நான் அவரைதான் நம்பியிருக்கிறேன்.
 
ஓ! எங்கே, எங்கே எனது மாமாஎன்று கேட்டவாறு கதவை நோக்கி எலிசபெத் சென்ற பொழுது, அக்கதவு ஒரு வேலைக்காரனால் திறக்கப்பட்டு, டார்சி உள்ளே நுழைந்தான். அவளுடைய முகத்தைப் பார்த்து மிரண்ட அவன், தன்னை சுதாகரித்துக் கொண்டு பேசுவதற்குள், லிடியாவைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்த அவள், அவசரமாக என்னை மன்னிக்கவும், நான் உங்களைவிட்டு இப்பொழுது போக வேண்டும். திரு. கார்டினரை ஒரு விஷயத்திற்காக தாமதமின்றி உடனே பார்க்க வேண்டும்; ஒரு வினாடிகூட தாமதிக்க முடியாதுஎன்றாள்.
 
கடவுளே! என்ன விஷயம்?‘ என்று உண்மையான கவலையுடன் அவன் கேட்டான். மீண்டும் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு நான் உன்னை ஒரு நிமிடம்கூட தடுத்து நிறுத்த மாட்டேன். ஆனால் உனக்கு உடம்பு சரியில்லை. நீ தனியாகப் போக முடியாது, நானோ, வேலைக்காரனோ போய் கார்டினர் தம்பதிகளை அழைத்து வருகிறோம்என்றான்.
 
அவள் சற்று தயங்கினாள். அவளுடைய கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. அதனால் தன்னால் முடியாது எனப் புரிந்தது. வேலைக்காரனைக் கூப்பிட்டு, அவர்களை அழைத்து வரச் சொன்னான்.
 
வேலைக்காரன் சென்றவுடன், அவள் நிற்க முடியாமல் உட்கார்ந்தாள். பார்ப்பதற்கு மிகவும் மோசமாக இருந்தாள். டார்சியால் அவளைவிட்டுப் போக முடியவில்லை. அவளிடம் அன்பாகவும், கரிசனமாகவும் நான் உன் பணிப்பெண்ணைக் கூப்பிடுகிறேன். உனக்கு தற்பொழுது ஏதாவது கொடுக்க இங்கு ஒன்றும் இல்லையா?--ஒரு கோப்பை மது;-- உன் உடல் நலம் மிகவும் நன்றாக இல்லை--நான் உனக்கு கொண்டு வந்து தரட்டுமா?‘
 
இல்லை. நன்றி, எனக்கு ஒன்றுமில்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். லாங்க்பர்னிலிருந்து இப்பொழுது வந்த ஒரு கெட்ட செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறதுஎன்று பதிலளித்தாள்.
 
இதைக் கூறியவுடன், அவள் அழ ஆரம்பித்தாள், சிறிது நேரத்திற்கு ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை. டார்சிக்கு ஒன்றும் புரியவில்லை, அவனது அக்கறையின் காரணமாக ஏதோ பேசி சமாதானப்படுத்த முயன்றான், அனுதாபத்துடன் அவளை மௌனமாகப் பார்த்துக் கொண்டு இருந்தான். வெகு நேரத்திற்குப் பிறகு அவள் மீண்டும் பேச ஆரம்பித்தாள். இப்பொழுதுதான் ஜேனிடமிருந்து மிகவும் கெட்ட செய்தியை தாங்கிக் கொண்டு ஒரு கடிதம் வந்துள்ளது. யாரிடமிருந்தும் இதனை மறைக்க முடியாது. என்னுடைய கடைசி தங்கை, எல்லோரையும் விட்டுவிட்டு விக்காமுடன் ஓடிப் போய் விட்டாள். அவர்கள் பிரைட்டனை விட்டு கிளம்பி விட்டனர். உனக்கு மீதியைப் புரிந்து கொள்ள அவனைப்பற்றி நன்கு தெரியும். அவளிடம் பணம் கிடையாது, பெரிய அந்தஸ்தும் இல்லை. அவனைத் தூண்டுவதற்கு எதுவும் இல்லை--அவளது வாழ்க்கை நிரந்தரமாக நாசமாகிவிட்டது.
 
டார்சி திகைத்து நின்றான். நான் இதனை தவிர்த்திருக்கலாம்என்று அமைதியில்லாமல் தவித்த எலிசபெத் அவன் எப்படிப்பட்டவன் என எனக்குத் தெரியும். அவனைப்பற்றி ஒரு சில விஷயங்களை மட்டுமே என்னுடைய குடும்பத்தினருக்குச் சொல்லியிருந்தால்! அவனுடைய நடத்தை தெரிந்திருந்தால் இது நடந்திருக்காது. ஆனால் இப்பொழுது எல்லாமே, எல்லாவற்றிற்குமே தாமதமாகிவிட்டதுஎன்றாள்.
 
மிகவும் வருத்தமாக இருக்கிறதுஎன்ற டார்சி வருத்தமாக உள்ளது--அதிர்ச்சியாகவும் உள்ளது. ஆனால் இது நிஜமா, உண்மையிலுமே நிஜமா?‘ என்றான்.
 
ஓ! ஆமாம்!--இருவருமாக சேர்ந்து, ஞாயிறு இரவு பிரைட்டனைவிட்டு கிளம்பினர், லண்டன்வரை அவர்கள் சென்றதைக் கண்டுபிடித்தாகிவிட்டது, ஆனால் அதற்குப் பிறகு எங்கு போனார்கள் எனத் தெரியவில்லை; கண்டிப்பாக அவர்கள் ஸ்காட்லாண்டிற்குப் போகவில்லை.
 
அவளை மீட்க, என்ன செய்தீர்கள், என்ன முயற்சி எடுக்கப்பட்டு இருக்கிறது?‘
 
எனது தகப்பனார் லண்டனிற்குச் சென்றிருக்கிறார். எங்களது மாமாவை உதவிக்கு வரச் சொல்லி ஜேன் கடிதம் எழுதியிருக்கிறாள், இன்னும் அரைமணி நேரத்தில் நாங்கள் கிளம்பிவிடுவோம் என நம்புகிறேன். எதுவும் செய்ய முடியாது. அவனை என்ன செய்ய முடியும்? அவர்களை எப்படி கண்டுபிடிக்க முடியும்? எனக்கு நம்பிக்கையே இல்லை. எப்படிப் பார்த்தாலும் பயங்கரமாக இருக்கிறது.
 
இதை மௌனமாக ஒத்துக் கொள்வதுபோல் டார்சி தலையசைத்தான்.
 
அவனைப்பற்றிய உண்மைகள் தெரிந்த பிறகு-- ஓ! என்ன செய்ய வேண்டும், என்ன செய்திருக்க வேண்டும் எனத் தெரிந்திருந்தால்! எனக்குத் தெரியவில்லை-- அதிகமாக ஏதாவது செய்து விடுவேனோ என பயந்தேன். மிகவும் மோசமான தவறு!
 
டார்சி பதிலேதும் கூறவில்லை. தீவிரமாக யோசனை செய்து அவ்வறையில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தான். எலிசபெத் அவனைப் பார்த்து, அவன் என்ன நினைப்பான் எனப் புரிந்து கொண்டாள். அவளுடைய சக்தி குறைந்து கொண்டே வந்தது. தன் குடும்பத்தினரின் பலவீனத்தாலும், இவ்வளவு பெரிய அவமானத்தாலும், எல்லாமே இனி மூழ்கித்தான் போகும். இந்த அதிர்ச்சியான செய்தியைக் கேட்டு, தன்மேல் உள்ள விருப்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள நினைக்கிறானோ என்பதை கவனித்த அவளுக்கு அது ஆறுதலையும் தரவில்லை, மன வருத்தத்தையும் குறைக்கவில்லை. மாறாக தன்னுடைய சுய விருப்பம் என்ன என்று புரிந்து கொள்ள முடிந்தது. தான் அவனை காதலித்திருக்கலாம் என்று இப்பொழுது உண்மையாக நினைத்தாள், ஆனால் அவையெல்லாமே தற்பொழுது வீண்தான்.
 
தன்னைப்பற்றிய நினைப்பு வந்தாலும், அது அவளை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்ளவில்லை. தன்னைப்பற்றிய கவலைகளையெல்லாம் லிடியா கொண்டு வரப்போகும் அவமானமும், துன்பமும், விழுங்கின. கைக்குட்டையால் முகத்தை மூடிக் கொண்ட எலிசபெத் எல்லாவற்றையும் மறந்தாள். சில நிமிடங்கள் கழித்து பரிவாக, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசிய டார்சியின் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தாள். நான் கிளம்ப வேண்டும் என்று நீ விரும்புவாய் என எனக்குத் தெரியும். உன்மேல் உள்ள உண்மையான அக்கறைதான் நான் இங்கு தங்குவதற்குக் காரணமாக இருக்கும். ஆனால் அதனால் இப்பொழுது ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆனால் கவலையாக இருக்கிறது. உன்னை சமாதானம் செய்ய ஏதாவது செய்ய முடியும் என்றால், ஏதாவது பேச முடியும் என்றால் நன்றாக இருக்கும். ஆனால் அதனால் எந்த உபயோகமும் இல்லை. உபயோகமில்லாததைக் கூறி உன்னை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அப்படி நான் ஏதாவது கூறினாலும், அது உன்னிடமிருந்து நன்றி உணர்ச்சியை எதிர்பார்த்து செய்த செயலாக இருக்கும். இந்த துரதிர்ஷ்டமான சம்பவத்தினால் என்னுடைய தங்கை உன்னை பிம்பெர்லியில் சந்திக்கும் சந்தோஷம் தடைபடும் என நம்புகிறேன்என்றான்.
 
, ஆமாம். நாங்கள் வரமுடியாமல் போவதற்கு எங்களை மன்னிக்குமாறு மிஸ். டார்சியிடம் சொல்ல வேண்டுகிறேன். அவசர வேலையாக வீட்டிற்குப் போக வேண்டி வந்தது என்று சொல். இந்த விஷயத்தை எவ்வளவு நாட்கள் மறைக்க முடியுமோ அவ்வளவு நாட்கள் மறைத்துவிடு-- வெகு நாட்களுக்கு மறைக்க முடியாது என எனக்குத் தெரியும்.
 
இரகசியத்தைக் காப்பாற்றுவதாக வாக்களித்து அவளுடைய துயரத்திற்கு தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்து, எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் என வாழ்த்தி, அவளுடைய உறவினர்களை விசாரித்ததாகக் கூறச் சொல்லி ஒரே ஒரு தீவிரமான, விடைபெறும் பார்வை பார்த்தபின், அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
 
அவன் அறையை விட்டுச் சென்றவுடன், டெர்பிஷயரில் பல முறை உள்ளன்போடு சந்தித்துக் கொண்டதுபோல் மீண்டும் அவனை சந்திப்போம் என்பதே நடக்காது என அவளுக்குத் தோன்றியது. அவன் அறிமுகமானதிலிருந்து எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும் பொழுது எவ்வளவு முரண்பாடான விஷயங்கள் நடந்திருக்கின்றன. அவனுடன் இருந்த தொடர்பு விட்டுப் போகக் கூடாதா என நினைத்திருந்த அவளுக்கு இப்பொழுது அத்தொடர்பு நீடிக்காதா என நினைக்கத் தோன்றியது குறித்து ஒரு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.
 
நன்றி உணர்வும், மதிப்பும்தான் அன்புக்கு ஒரு நல்ல அஸ்திவாரம் என்றால், எலிசபெத்தின் மனோபாவத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் நடக்கவே முடியாததும் அல்ல, தவறும் அல்ல. கண்டவுடன் எழும் காதலுடனும், இரண்டு வார்த்தைகள் பேசியவுடன் எழும் காதலுடனும், நன்றி உணர்வாலும், மதிப்பினாலும் எழும் காதல் நியாயமற்றதாகவும், செயற்கையாகவும் இருந்தால், எலிசபெத்திற்கு ஆதரவாக எதுவும் சொல்ல முடியாது. கண்டவுடன் காதல் விக்காமிடம் எழுந்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆதலால் இந்த தோல்வி அவளை மற்றொரு விதத்தில் காதலிக்க முயற்சி செய்ய வைக்கலாம். எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அவன் செல்வதை அவள் வருத்தத்துடன் பார்த்தாள். லிடியா செய்த தவற்றின் முதல் பலன் டார்சி விட்டுப் போவதுதான். அதனால் லிடியாவின் செய்கையை நினைத்து மிகவும் வருத்தமடைந்தாள். ஜேனின் இரண்டாவது கடிதம் படித்தபின், விக்காம், லிடியாவை திருமணம் செய்து கொள்வான் என்ற நம்பிக்கையும் போய்விட்டது. ஜேனைத் தவிர வேறு யாருக்கும் இந்த எதிர்பார்ப்பு இருப்பதாகக் கூற மாட்டார்கள். நடந்த விஷயங்களை நினைத்த பொழுது எழுந்த உணர்ச்சிகளில் ஆச்சரியம் குறைவாகவே இருந்தது. முதல் கடிதத்தில் எழுதியவை எல்லாம் ஞாபகத்தில் இருந்ததால், பணத்திற்காக என்றால் எப்படி லிடியாவைப்போல ஒரு பெண்ணை விக்காம் திருமணம் செய்து கொள்வான், லிடியாவும் எப்படி அவனுடன் சேர முடிந்தது என்பது அவளுக்குப் புரியாமல் இருந்தது. இப்பொழுது எல்லாம் தெளிவாகவே இருந்தது. இம்மாதிரியான காதலுக்கு, லிடியாவிற்குப் போதுமான வசீகரம் இருக்கிறது. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் லிடியா திட்டமிட்டு ஓடிப்போவதற்கு சம்மதித்திருக்கமாட்டாள், என எலிதபெத் நினைத்தாலும், வெகு விரைவில் மற்றவரது சூழ்ச்சிக்கு பலியாவதற்கு அவளுடைய குணங்களும், அறிவும் சுலபமாக இடம் கொடுக்கும் என்பதும் தெரிந்திருந்தது.
 
இராணுவம், ஹர்ட்போர்ட்ஷயரில் இருந்தவரை, லிடியாவிற்கு இவனிடம் தனிப்பட்ட நாட்டம் எதுவும் இருந்ததில்லை. யாராவது ஒருவருடன் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவளுடைய விருப்பமாக இருந்திருக்கிறது. யார் தன்னை அதிகம் கவனிக்கிறார்களோ அவருடன் சேர்ந்து கொள்வாள். அவளுடைய விருப்பம் மாறிக் கொண்டே இருந்தது. அவளை கவனிக்காமல் விட்டதும், வேண்டாத செயல்களை செய்வதற்கு இடம் கொடுத்ததும்தான் அவளை இந்நிலைக்கு கொண்டு வந்துள்ளது. ஓ! அதற்காக எலிசபெத் இப்பொழுது மிகவும் வருத்தப்பட்டாள்.
 
அவள் வீட்டிற்குப் போக வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருந்தாள். தகப்பனார் ஊரில் இல்லாததாலும், தாயார் முயன்று எதையும் செய்யமாட்டாள் என்பதினாலும், அவளுக்குத் தொடர்ந்த கவனிப்பு தேவை என்பதினாலும் எல்லாவற்றையும் ஜேன் தனியாக சமாளிக்க வேண்டியிருக்குமே என்ற கவலையில் எலிசபெத், இவ்விஷயத்தைப்பற்றிக் கேட்க, அவர்களைப் பார்க்கத் துடித்தாள். லிடியாவிற்காக இனி செய்வதற்கு ஒன்றும் இல்லையெனினும், தனது மாமாவின் உதவி நிச்சயம் தேவை என்று அவருக்காகப் பொறுமையின்றி காத்திருந்தாள். திரு. கார்டினர் தம்பதிகள், எலிசபெத்திற்கு உடம்பு சரியில்லையோ என பயந்து, உள்ளே நுழைந்த பொழுது, அவர்களுக்கு ஜேனிடமிருந்து வந்திருந்த இரண்டு கடிதங்களையும், மிகுந்த கலக்கத்துடன் படித்துக் காண்பித்தாள். அவர்களுக்கு லிடியா எப்பொழுதுமே அவ்வளவு விருப்பப்பட்ட மருமகள் கிடையாது ஆனாலும் அவர்கள் மிகவும் வருத்தப்பட்டனர். இதனால் லிடியா மட்டும் அல்லாமல் எல்லோரும் பாதிக்கப்பட்டிருந்தனர். அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த திரு. கார்டினர் தன்னால் இயன்ற அத்தனை உதவிகளையும் செய்வதாகச் சொன்னார். எலிசபெத் கண்ணீர் மல்க நன்றி கூறினாள். பிறகு மூவரும் சேர்ந்து தங்கள் பிரயாணத்தைத் தீர்மானித்தனர். வெகு சீக்கிரமே கிளம்புவதாக இருந்தனர். பிம்பெர்லிக்குப் போவது குறித்து என்ன செய்வது? டார்சி இங்கிருந்தான் என எங்களை அழைக்க வரும் பொழுது ஜான் சொன்னான், அப்படியா?‘ என்று திருமதி. கார்டினர் கேட்டாள்.
 
ஆமாம் நாங்கள் அங்கு வருவதற்கில்லை என சொல்லி விட்டேன். அந்த விஷயம் முடிந்தது.
 
சரி, அந்த விஷயம் முடிந்ததா!என்று திரும்பவும் கூறிய திருமதி. கார்டினர், கிளம்புவதற்குத் தயார் செய்வதற்காக உள்ளே சென்றாள். உண்மையை அவனிடம் சொல்லும் அளவிற்கு அவர்களுக்கு அவ்வளவு   நெருக்கம் இருக்கிறதா! எப்படி இது ஏற்பட்டது எனத் தெரிந்து கொள்ள வேண்டும் போலுள்ளதே!
 
ஆனால் அவள் ஆசை நிராசையானது. அடுத்த ஒரு மணி நேரமாக இருந்த அவசரத்திலும், குழப்பத்திலும் இதைப்பற்றியேதான் நினைத்துக் கொண்டிருந்தாள். எலிசபெத்தும் வேலை இல்லாமல் உட்கார்ந்து கொண்டு இருந்த பொழுது, இந்தச் சூழ்நிலையில் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று நினைத்தாள். ஆனால் அவளுக்கும், அவளது அத்தைக்கும் செய்வதற்கு நிறைய வேலைகள் இருந்தன. லாம்ப்டனில் உள்ள தங்களது நண்பர்களுக்குத் தாங்கள் திடீரென கிளம்புவதற்கு, சில பொய்யான காரணங்களை எழுதி கடிதம் அனுப்ப வேண்டியிருந்தது. ஒரு மணி நேரத்தில் எல்லாம் முடிந்தது. திரு. கார்டினர், இதற்கிடையில் விடுதிக்குத் தர வேண்டிய வாடகைப் பணத்தைக் கொடுத்து முடித்தார். எல்லோரும் கிளம்புவதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை. காலையில் பட்ட அத்தனை மன துயரங்களுக்குப் பிறகு, எலிசபெத்திற்கு அவள் எதிர்பார்த்ததைவிட விரைவாகவே, வண்டியில் அமர்ந்து லாங்க்பர்னுக்குப் புறப்பட முடிந்தது.  
 



book | by Dr. Radut