Skip to Content

Chapter 03 டார்சி இல்லத்திற்கு வரும் எலிசபெத்

மிஸ். பிங்கிலிக்கு தன்னை பிடிக்காமல் போனதற்குக் காரணம் பொறாமைதான் எனப் புரிந்து கொண்ட எலிசபெத், தன்னை பிம்பெர்லியில் பார்ப்பதை அவள் வரவேற்கமாட்டாள் என்பது தெரிந்தது. மேலும் எவ்வளவு மரியாதையாக தன்னுடைய தொடர்பை மீண்டும் புதுப்பிக்கப் போகிறாள் என்பதனைத் தெரிந்து கொள்ளவும் ஆவலாக இருந்தாள். 

வீட்டிற்குள் நுழைந்த அவர்களை, நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு விசாலமான அறைக்கு அழைத்துச் சென்றனர். கோடைகாலத்திற்கு ஏற்றவாறு இருந்த அவ்வறையின் ஜன்னல் வழியாக, மரங்கள் அடர்ந்த குன்றுகளும், ஓக் மரங்களும், கஷ் கொட்டை மரங்களும் ஆங்காங்கே பரவியிருந்ததைப் பார்க்க முடிந்தது.
 
மிஸ். டார்சி அங்கு அவர்களை வரவேற்றாள். திருமதி. ஹர்ஸ்ட், மிஸ். பிங்கிலி, லண்டனில் அவளுடன் இருக்கும் பெண்மணி, இவர்கள் மூவரும் உடன் இருந்தனர். ஜார்ஜியானாவின் நடத்தை மிகவும் மரியாதையாக இருந்தது. எங்காவது தவறு செய்து விடுவோமோ என்ற பயம் இருந்ததினால் அவள் சற்று நாணத்துடனும், தயக்கத்துடனும் காணப்பட்டாள். அவளைவிட தாழ்ந்த நிலையில் இருப்பதாக நினைப்பவர்களுக்கு, அவள் ஒரு கர்வமான பெண்ணாகவும், அதிகம் பழகத் தெரியாத பெண்ணாகவும் தோன்றுவாள். திருமதி. கார்டினரும், எலிசபெத்தும், அவளிடம் பரிவு காட்டியதன் மூலம் அவளை நியாயமாக நடத்தினர்.
 
திருமதி. ஹர்ஸ்டும், மிஸ் பிங்கிலியும், அவர்களை ஒரு சிறிய வணக்கத்துடன் வரவேற்றனர். எல்லோரும் இருக்கையில் அமர்ந்தவுடன் அங்கு ஒரு தர்மசங்கடமான மௌனம் நிலவியது. இம்மௌனத்தை, திருமதி. ஆன்ஸிலி கலைத்துப் பேச ஆரம்பித்தாள். மென்மையானவளாகவும், ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருந்த அவளிடம், மற்ற இருவர்களைவிட மேன்மையான வளர்ப்பு தெரிந்தது. திருமதி. கார்டினருடனும், அவ்வப்போது கலந்து கொண்ட எலிசபெத்துடனும் அவளது உரையாடல் தொடர்ந்தது. அவர்களுடன் பேசுவதற்கு தைரியம் வேண்டும்போல் இருந்தது மிஸ். டார்சியின் தோற்றம். ஆனால் கண்டிப்பாக யாரும் கேட்க மாட்டார்கள் எனும்பொழுது சிறிய வாக்கியம் பேச முயற்சி செய்தாள்.
 
மிஸ். பிங்கிலி தன்னையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதை எலிசபெத் கவனித்தாள். அவளுக்குத் தெரியாமல் மிஸ். டார்சியிடம் ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை. ஆனால் அதனாலொன்றும் அவளால் பேச முடியாமல் போகவில்லை. மிஸ். டார்சி அசௌகரியமான தூரத்தில் அமர்ந்திருந்தாள். தன்னுடைய சுய சிந்தனையிலேயே எலிசபெத் மூழ்கி இருந்ததால் பேச முடியாமல் போனதற்கும் அவள் வருத்தப்படவில்லை. ஆண்களில் சிலர் அங்கு வரலாம் என எந்நேரமும் அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் அவ்வீட்டு எஜமானனும் ஒருவனாக இருப்பான் என விரும்பினாள், பயப்படவும் செய்தாள். பயமா அல்லது விருப்பமா எது அதிகமாக இருந்தது என அவளால் நிர்ணயிக்க முடியவில்லை. இவ்வாறு ஒரு கால் மணிநேரம் அமர்ந்திருந்த எலிசபெத்தை நோக்கி, அவள் குடும்பத்தினரின் சௌக்கியத்தைப்பற்றி மிஸ். பிங்கிலியின் உணர்ச்சியற்ற கேள்விக்கு, அவளும் அசிரத்தையாக பதிலளித்தாள், அதற்குப் பிறகு மற்றவள் வேறு எதுவும் பேசவில்லை.
 
அப்பொழுது உள்ளே நுழைந்த வேலைக்காரர்கள், அவர்களுக்காக தின்பண்டங்களும், பருவத்தில் விளையும் பழவகைகளையும் கொண்டு வந்தனர். திருமதி. ஆன்ஸிலி, மிஸ். டார்சிக்கு விருந்தாளிகளை உபசரிக்க வேண்டும் என்பதைக் குறிப்பாக உணர்த்தியபின், இவைகளெல்லாம் கொண்டுவரப்பட்டன. எல்லோருக்கும் சாப்பிடும் வேலை வந்து விட்டதால், யாரும் பேசவில்லை. எல்லோரும் பழவகைகள் வைக்கப்பட்டிருந்த மேஜையை சுற்றி நின்று சாப்பிட ஆரம்பித்தனர்.
 
டார்சி உள்ளே நுழைந்த பொழுது, தனக்கு ஏற்பட்ட உணர்வுகளிலிருந்து, அவன் வர வேண்டும் என விரும்பினோமா அல்லது பயப்பட்டோமா எனத் தீர்மானம் செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. விருப்பம்தான் மேலோங்கி இருந்தது என முதல் விநாடிவரை நினைத்திருந்த அவளுக்கு அவன் வந்தது வருத்தத்தை அளித்தது.
 
இரண்டு, மூன்று நண்பர்களுடன், ஆற்றின் அருகே மீன்பிடிப்பதில் ஈடுபட்டிருந்த திரு. கார்டினருடன் சிறிது நேரமாக இருந்த டார்சி, ஜார்ஜியானாவை சந்திக்க இவர்கள் வருவது தெரிந்த பிறகுதான், அவர்களை விட்டு வந்தான். அவன் உள்ளே நுழைந்தவுடன், தான் மிகவும் இயல்பாகவும், எந்தவித சங்கடமும் இல்லாததுபோல் நடந்து கொள்ள தீர்மானித்தாள். ஆனால் அதை நிறைவேற்றுவது அவ்வளவு சுலபமாக இல்லை, ஏனெனில் அங்கு கூடியிருந்த அனைவரது கவனமும் இவர்கள் இருவரதுமேல்தான் இருந்தது. அவன் உள்ளே நுழைந்தவுடன் அவன் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்றுதான் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர். சிரித்தபடியே மிஸ். பிங்கிலி பேசினாலும், மற்றவர்களைக் காட்டிலும் அவள் முகத்தில்தான் தீவிர ஆர்வம் இருந்தது. டார்சிக்குக் கொடுக்கும் கவனம் அவளிடம் இன்னும் குறையவில்லை. பொறாமை, அவளை இன்னும் கவலைக்கு உள்ளாக்கவில்லை. தனது சகோதரனைப் பார்த்தவுடன் மிஸ்.டார்சி பேசுவதற்கு சிறிது முயற்சி எடுத்தாள். அவனும் அவர்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் அறிமுகமாகிக் கொள்வதற்கும், பேசிக் கொள்வதற்கும் தன்னால் இயன்ற அத்தனையையும் செய்தான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மிஸ். பிங்கிலி கோபத்தின் வேகத்தில், கிடைத்த முதல் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அலட்சியமாக,
 
எலிசா, இராணுவம் மெரிடனிலிருந்து கிளம்பி விட்டது இல்லையா? இது உங்கள் குடும்பத்திற்கு பெருத்த நஷ்டமாக இருக்கும்என்றாள்.
 
டார்சி முன்னால், விக்காமின் பெயரை சொல்ல அவளுக்கு தைரியமில்லை, ஆனால் அந்த எண்ணம்தான் அவளிடத்து மேலோங்கியிருந்தது என எலிசபெத்திற்குப் புரிந்தது. பழைய ஞாபகங்கள் அவளுக்குப் பெரும் துன்பத்தையளித்தது, இந்த மோசமான தாக்குதலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு யதார்த்தமாக பதிலளித்தாள். அவள் பேசும் பொழுது தற்செயலாக டார்சியைப் பார்த்ததில் அவன் அதிர்ச்சியில் முகம் சிவந்து, சிரத்தையாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான். மிஸ். டார்சியோ மிகுந்த குழப்பத்துடன் ஏறெடுத்தும் பார்க்காமல் நின்று கொண்டிருந்தாள். தன்னுடைய தோழிக்கு எவ்வளவு பெரிய வலியைத் தருகிறோம் எனத் தெரிந்திருந்தால் மிஸ். பிங்கிலி இவ்வாறு பேசியிருக்க மாட்டாள். ஆனால் அவளது நோக்கமே, எலிசபெத்தின் அமைதியைக் குலைக்க வேண்டும் என்பதுதான். எலிசபெத்தை, விக்காமைப்பற்றி ஏதாவது பேச வைத்து அதன் மூலம் டார்சியிடம் அவளுக்கு இருக்கும் நன்மதிப்பைக் குறைக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், அவள் பாரபட்சம் காண்பித்த ஒரு மனிதனைப்பற்றி பேசி, இராணுவ வீரர்களுடன் அவள் குடும்பத்தில் சிலர் முட்டாள்தனமாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் சம்பந்தம் வைத்துக் கொண்டிருந்ததையும் டார்சிக்கு ஞாபகப்படுத்த முயன்றாள். மிஸ். டார்சியின் ஓடிப்போகும் சம்பவம் குறித்து ஒரு வார்த்தைகூட அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. எலிசபெத்தைத் தவிர மற்றவர்களிடமிருந்து இந்த இரகசியம் காப்பாற்றப்பட்டது. டார்சிக்கு, பிங்கிலியுடன் தனது சகோதரியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததினால்தான், இந்த விஷயத்தை அக்குடும்பத்தினரிடமிருந்து மறைத்தான் என எலிசபெத் நம்பினாள்.ஜேனையும், பிங்கிலியையும் பிரிப்பதற்கு இந்த எண்ணம் ஒரு முக்கிய காரணம் என்பதில்லை என்றாலும் நண்பனின் மேலுள்ள அக்கறைக்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.
 
எலிசபெத்தின் கட்டுக்கோப்பான நடத்தை, அவனுடைய உணர்ச்சியை அமைதிப்படுத்தியது. மிஸ். பிங்கிலி கோபமும், ஏமாற்றமும் அடைந்திருந்தாள். விக்காமைப்பற்றி பேச தைரியம் வரவில்லை. ஜார்ஜியானாவும் தன்னை சுதாகரித்துக் கொண்டாள், ஆனால் மேற்கொண்டு அவளால் எதுவும் பேச முடியவில்லை. ஜார்ஜியானாவிற்கு தனது சகோதரனைப் பார்ப்பதற்கே மிகவும் பயமாக இருந்தது, ஆனால் அவனோ அச்சம்பவத்தைப்பற்றி முற்றிலும் மறந்துவிட்டிருந்தான். எலிசபெத் மீதிருந்த கவனத்தை திசை திருப்பும் பொருட்டு, கரோலின் தீட்டிய திட்டம் அவனை அவள்மீது அதிக சந்தோஷமாக கவனம் செலுத்த வைத்தது.
 
மேற்படி நடந்த கேள்வி பதில் எல்லாம் முடிந்த பிறகு, வெகுநேரம் அவர்கள் அங்கிருக்கவில்லை. டார்சி அவர்களுடன் சேர்ந்து வண்டிவரை சென்ற பொழுது, மிஸ். பிங்கிலி, எலிசபெத்தைப்பற்றியும், அவளுடைய நடத்தை, அவளது உடை இவைகளைப் பற்றியும் குறை கூறிக் கொண்டிருந்தாள். ஆனால் ஜார்ஜியானா அவளுடன் சேர்ந்து கொள்ளவில்லை. அவளுக்கு அவள் சகோதரன் சொல்வதுதான் வேதவாக்கு. அவன் எலிசபெத்தைப்பற்றி உயர்வாக சொல்லியிருந்தபடியால், ஜார்ஜியானாவிற்கு அவள் அழகாகவும் தெரிந்தாள், இனிமையாகவும் தெரிந்தாள். டார்சி மீண்டும் அறைக்குள் நுழைந்தவுடன், மிஸ். பிங்கிலி, தான் பேசியவற்றிலிருந்து சிலவற்றை அவனுடைய சகோதரியிடமும், அவனிடமும் மீண்டும் கூறலானாள்.
 
எலிஸா பென்னட் இன்று காலை எவ்வளவு மோசமாகத் காணப்பட்டாள். போன குளிர்காலம் முதல் அவள் எவ்வளவு மாறிவிட்டாள், நிறமும், மாறிவிட்டது, முகமும் சொரசொரப்பாகி விட்டது. யாரும் இம்மாதிரி மாறி நான் பார்த்ததில்லை. லுயிஸாவுக்கும், எனக்கும் அவளை அடையாளமே தெரியவில்லை என சொல்லிக் கொண்டிருந்தோம்.
 
டார்சிக்கு இப்பேச்சு சிறிதளவுகூட பிடிக்கவில்லை, ஆனால், இவ்வளவு தூரம் பிரயாணம் செய்ததினால் நிறம் சற்று மாறியிருப்பதைத் தவிர வேறு எந்த மாற்றமும் தெரியவில்லை என அமைதியாக பதிலளித்தான்.
 
என்னைக் கேட்டால், அவள் அழகே இல்லை என்றுதான் சொல்வேன். முகம் மிகவும் மெலிந்து இருக்கிறது, மேனியில் ஒரு பொலிவும் இல்லை, பார்ப்பதற்கும் அழகாக இல்லை. அவளது மூக்கும், சரியாக இல்லை, பல்வரிசைகள் சுமாராக உள்ளன. கண்கள் அழகு என்று சொல்லப்பட்டது. ஆனால் அதில் சொல்லும்படியாக பெரிதாக ஒன்றும் இல்லை, அவள் கண்கள் கபடமாக இருக்கிறது, மொத்தத்தில் நாகரீகமும் இல்லை, இதனை சகித்துக் கொள்ளவே முடியாது.
 
டார்சி, எலிசபெத்தை விரும்புகிறான் என்று நம்பிய மிஸ். பிங்கிலி, தன்னை அவனுக்குப் பிடித்தமானவளாகக் காட்ட இது ஒரு நல்ல முறையாகாது. ஆனால் கோபம் வந்தால் மூளை வேலை செய்யாது. அவனை இறுதியில் பார்த்த பொழுது ஒருவாறாக அவன் சிக்கிக் கொண்டதுபோல் தோன்றியது, அவள் எதிர்பார்த்த வெற்றி கிடைத்ததுபோல் தோன்றியது. அவனை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று எண்ணி அவள் மீண்டும் பேசலானாள்,
 
நாம் அவளை முதலில் நெதர்பீல்டில் தெரிந்து கொண்ட பொழுது அவள் அழகைப் பார்த்து நாமெல்லாம் எவ்வளவு ஆச்சரியப்பட்டோம், குறிப்பாக இது எனக்கு ஞாபகம் இருக்கிறது, நெதர்பீல்டில் விருந்துண்ணும் பொழுது நீ அவளைப் பார்த்து அவள் அழகா! --அப்படியானால் அவள் அம்மாவையும் நான் புத்திசாலி என்று அழைக்க வேண்டும்!என்றாய். ஆனால் பிறகு அவள் உன்னுடைய பார்வையில் முன்னேற்றமடைந்தாள், நீ அவளை ஒரு சமயம் அழகாக இருப்பதாகவும் நினைத்தாய்.
 
ஆமாம்என்றான் டார்சி, தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல். ஆனால் அது அவளை முதலில் தெரிந்து கொண்ட பொழுது சொன்னதுதான், ஆனால் சில மாதங்களாகவே எனக்குத் தெரிந்த அழகான பெண்மணிகளில் இவளும் ஒருத்தி என நான் கருதுகிறேன்.
 
அவன் பிறகு அங்கிருந்து அகன்றான். தனக்கு மட்டும் வருத்தம் நேரும்படி அவனை வலுக்கட்டாயமாகப் பேச வைத்த திருப்தி மட்டும்தான் அவளுக்குக் கிடைத்தது.
 
திருமதி. கார்டினரும், எலிசபெத்தும் அன்று நடந்த விஷயங்களைப்பற்றி வீடு திரும்பி வரும் பொழுது பேசிக் கொண்டு வந்தனர். தங்களின் கவனத்தைக் கவர்ந்த ஒருவரைத் தவிர மற்றவர்களுடைய தோற்றம், நடத்தை இவைகளைப்பற்றி விவாதித்தனர். அவனைத் தவிர அவனுடைய தங்கையைப்பற்றியும், நண்பர்களைப் பற்றியும் அவனது வீடு, அவனளித்த பழங்கள், மற்ற எல்லாவற்றைப்பற்றியும் பேசினர். ஆனாலும் திரு. கார்டினர் அவனைப்பற்றி என்ன நினைக்கிறார் எனத் தெரிந்து கொள்ள எலிசபெத்திற்கு ஆவலாக இருந்தது, திருமதி. கார்டினரோ இந்த விஷயத்தைப்பற்றி பேச தன்னுடைய மருமகள் ஆரம்பித்திருந்தால் அதிக சந்தோஷப்பட்டிருப்பாள்.
 



book | by Dr. Radut