Skip to Content

Chapter 02 எலிசபெத்தை சந்திக்கும் டார்சி.

பிம்பெர்லிக்கு வந்து சேர்ந்த அன்றே டார்சி தனது தங்கையை அழைத்து வருவான் என எலிசபெத் நினைத்ததால், விடுதியிலிருந்து அன்று காலை முழுவதும் எங்கும் வெளியே போக வேண்டாம் எனத் தீர்மானித்தாள். ஆனால் இவள் நினைத்ததற்கு மாறாக லாம்ப்டனிற்கு வந்து சேர்ந்த அன்று காலையே டார்சியும், அவனது தங்கையும் வந்தனர். நண்பர்களுடன் உலாவச் சென்று திரும்பியிருந்த இவர்கள், உணவு உண்ணும்முன் தங்களை தயார் செய்து கொள்வதற்காக விடுதிக்கு வந்து பொழுது குதிரை வண்டியின் சத்தம் கேட்டு ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தனர். ஒரு நபரும் அவனுடன் ஒரு பெண்மணியும் வருவதைக் கண்டனர். எலிசபெத்திற்கு அவர்கள் யார் எனத் தெரிந்ததால், தனது மாமாவிற்கும், அத்தைக்கும் விஷயத்தைக் கூறினாள். அவர்கள் இருவருக்கும் விஷயத்தைக் கேட்டதும் பிரமிப்பாக இருந்தது. எலிசபெத் பேசிய விதமும், அவன் இப்பொழுது இங்கு வருவதும், முதல் நாள் நடந்தவைகளும், இவையெல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு இது ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுத்தது. அவனுடைய பக்கத்திலிருந்து இப்படிப்பட்ட கவனம் கிடைப்பதற்கு ஒரே ஒரு காரணம் அவள்மேல் கொண்ட விருப்பம்தான். வேறு ஒரு காரணமும் இருக்க முடியாது எனத் தெரிந்தது. மருமகளுக்கு அவன் கொடுக்கும் கவனமும், அக்கறையும் புதிய பரிமாணத்தை அவர்களுக்கு உணர்த்தியது. அவர்கள் இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது எலிசபெத்தின் உணர்ச்சி வினாடிக்கு வினாடி அதிகரித்துக் கொண்டே சென்றது. தன்னுடைய பதட்டத்தை நினைத்து அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவளுடைய அமைதியின்மைக்கு மற்றொரு காரணம், தன்னைப்பற்றி மிஸ். டார்சியின் சகோதரன் அவளிடம் வெகுவாகப் புகழ்ந்து கூறியிருக்கலாம். அவர்களை திருப்திப்படுத்த ஆவலாக இருந்த போதிலும் தன்னால் திருப்திப்படுத்த முடியாமல் போய்விடுமோ எனத் தவித்தாள்.

 
தன்னைப் பார்த்து விடுவார்களோ என பயந்த அவள், ஜன்னலிலிருந்து பின்வாங்கி, அந்த இடத்தில் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டே, தன்னை அமைதிப்படுத்திக் கொள்ள முயன்றாள். ஆனால் அவளுடைய மாமாவும், அத்தையும் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தது அவளை மேலும் தவிக்க வைத்தது.
 
மிஸ். டார்சியும், அவளுடைய சகோதரனும் உள்ளே வந்தனர். எந்த அறிமுகத்தை நினைத்து அவள் கவலைப்பட்டாளோ அந்த அறிமுகம் முடிந்தது. தன்னைப்போலவே மிஸ். டார்சியும் சங்கடமான நிலையில் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். அவள் லாம்ப்டனிற்கு வந்ததிலிருந்து, மிஸ். டார்சி மிகவும் கர்வம் உடையவள் எனக் கேள்விப்பட்டிருந்தாள். ஆனால் அவளை பார்த்த சில நிமிடங்களிலேயே அவள் அப்படியல்ல, மிகவும் கூச்ச சுபாவமுள்ளவள் எனத் தெரிந்தது. ஒரு வார்த்தையிலேயே பதில் சொல்லி வந்த மிஸ். டார்சியை பேச வைப்பதற்கு எலிசபெத்திற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
 
உயரமாகவும், எலிசபெத்தைவிட பெரியவளாகக் காட்சி அளித்த மிஸ். டார்சிக்கு வயது பதினாறுக்கு சற்று கூடுதலாகத்தான் ஆகியிருந்தது. ஆனாலும் பக்குவப்பட்ட பெண்மணிபோல் இருந்தாள்; அழகாகவும் இருந்தாள். தனது சகோதரனைவிட அழகில் சற்று குறைவாக இருந்தாலும், நல்ல புத்திசாலியாகவும், கலகலப்பாகவும் இருப்பது அவள் முகத்தில் தெரிந்தது. டார்சியைப்போல் அவளும், எதனையும் எந்தவித உணர்ச்சியும் இன்றி கூர்ந்து கவனிப்பவளாக இருப்பாள் என்று நினைத்த எலிசபெத்திற்கு, அவளுடைய நடத்தை மிகவும் எளிமையாகவும், இதமாகவும் இருந்தது பெருத்த நிம்மதியை அளித்தது.
 
இருவரும் சேர்ந்து இருந்த சிறிது நேரத்திலேயே, டார்சி அவளிடம் வந்து பிங்கிலியும் அவளை சந்திக்க வருவான் என்று கூறியதைக் கேட்டு, தன்னை அதற்கு தயார்படுத்திக் கொண்டு, தன்னுடைய சந்தோஷத்தைத் தெரிவிப்பதற்குள் பிங்கிலி உள்ளே நுழைந்தான். அவன்மேல் இருந்த அத்தனை கோபமும் அவளைவிட்டுப் போயிருந்தன, ஏதாவது சிறிது மீதி இருந்திருக்குமேயானால், உள்ளன்போடு அவன், அவளிடம் பேசியது அதையும் விலக்கியிருக்கும். அவளுடைய குடும்பத்தினர் நலனைப்பற்றி பொதுவாக, நட்புடன் விசாரித்தான், எப்பொழுதும் போலவே மிகவும் நல்லவிதமாக நடந்து கொண்டான்.
 
திரு. கார்டினர் தம்பதிகளுக்கு அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருந்தது. எதிரில் இருந்த அனைவரையும், அவர்கள் சுவாரசியமாகக் கவனித்தனர். டார்சியைப்பற்றியும், தங்களுடைய மருமகளைப்பற்றியும் எழுந்த சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு வெகு ஜாக்கிரதையாக அவர்கள் கண்டுபிடிக்க முயன்றதிலிருந்து அதில் ஒருவர் மட்டும் காதலிக்கிறார் எனப் புரிந்தது. எலிசபெத் என்ன நினைக்கிறாள் என்பது சந்தேகமாக இருந்தது, ஆனால் அவனுக்கு அவள்மீது இருக்கும் காதல் தெளிவாகத் தெரிந்தது.
 
எலிசபெத் தன் பங்கிற்கு செய்ய வேண்டியது அதிகம் இருந்தது. வந்திருக்கும் ஒவ்வொருவரும் எவ்வாறு நினைக்கிறார்கள், எப்படி உணருகிறார்கள் எனத் தெரிந்து கொள்ள நினைத்த எலிசபெத், தானும் தன்னை அமைதிபடுத்திக் கொண்டு அவர்களிடம் இனிமையாகப் பழகுவதற்குப் பிரயத்தனப்பட்டாள். அவர்களைத் திருப்திபடுத்த முடியாமல் போய்விடுவோமோ என பயந்த அவள், அவர்கள் மூவரும் தனக்கு ஆதரவாகவே நடந்து கொண்டு திருப்தியாக இருக்க தாங்களாகவே முன்வருவதைக் கண்டாள். எலிசபெத்தால் மகிழ்ச்சியடைய பிங்கிலி தயாராக இருந்தான், ஜார்ஜியானா ஆவலாக இருந்தாள், டார்சி தீர்மானமாக இருந்தான்.
 
 
பிங்கிலியைப் பார்த்தவுடன் எலிசபெத்திற்கு தன்னையறியாமல் ஜேனுடைய ஞாபகம் வந்தது. அவனுக்கும் அதேபோல் அவளுடைய ஞாபகம் வந்திருக்குமா எனத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாள். முன்மாதிரி பேசவில்லையோ என அவளுக்குத் தோன்றியது. குறைவாகப் பேசுகிறானோ என நினைத்தாள். தன்னை அவன் பார்க்கும் பொழுது, ‘ஜேனை ஒத்தாற்போல் இருக்கிறாள்என்று அவனுக்குத் தோன்றியிருக்கலாம் என்று நினைத்து சந்தோஷப்பட்டாள். இது வெறும் கற்பனையாகக்கூட இருக்கலாம், ஆனால் ஜேனிற்குப் போட்டியாக சித்தரிக்கப்பட்டிருந்த மிஸ். டார்சியிடம் அவன் இயல்பாகப் பழகிக் கொண்டிருந்ததைப் பார்த்த எலிசபெத்திற்கு எந்த சந்தேகமும் எழவில்லை. அவர்களிடையே குறிப்பாகச் சொல்லும்படி எதுவும் தெரியவில்லை. அவனது சகோதரி எதிர்பார்த்ததை, உறுதிப்படுத்துவதுபோல் எதுவும் அவர்களிடையே இருக்கவில்லை. இதனால் எலிசபெத் சற்று திருப்தியடைந்தாள். அவன் மிகவும் அன்பாக ஜேனைப்பற்றி நினைக்கிறான் என்பதும், மேலும் சற்று தைரியம் இருந்தால் இன்னமும் அதிகமாக அவளைப்பற்றி ஏதாவது சொல்வான் என்றும் அவளுக்குத் தோன்றியது. மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, பிங்கிலி எலிசபெத் அருகே வந்து மிகவும் வருத்தமான குரலில் அவளைப் பார்த்து வெகு நாட்களாகி விட்டனஎன்றான். அவள் பதிலளிப்பதற்குள் எட்டு மாதத்திற்கும்மேல் ஆகிவிட்டது, நவம்பர் 26 அன்று நெதர்பீல்டில் சேர்ந்து நடனமாடும் பொழுதுதான் அவளைக் கடைசியாகப் பார்த்ததுஎன்றான்.
 
அவனுடைய ஞாபக சக்தியைப் பார்த்து எலிசபெத் சந்தோஷமடைந்தாள். எல்லா சகோதரிகளும் லாங்க்பர்னில்தான் இருக்கிறார்களா என்று அவன் யாரும் இல்லாத சமயமாகப் பார்த்துக் கேட்டதில் ஒரு புதிய அர்த்தம் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. இந்தக் கேள்வியிலேயோ அல்லது இதற்கு முன்பு அவன் கூறியதிலேயோ விசேஷமாக எதுவும் இல்லை, ஆனால் அவனுடைய பார்வையும், நடத்தையும்தான் தனி அர்த்தத்தை ஏற்படுத்தியது.
 
டார்சியை அவளால் அடிக்கடி பார்க்க முடியவில்லை என்றாலும் எப்பொழுதெல்லாம் அவனைப் பார்த்தாளோ அவன் முகத்தில் ஒரு திருப்தி நிலவுவதைக் கண்டாள். அவன் பேசிய அனைத்திலும் மற்றவர்களைப்பற்றி குறையாக எதுவும் அவன் உணரவில்லை என்பது தெரிந்தது. நேற்று அவனுடைய நடத்தையில் இருந்த மாற்றம் தற்காலிகமாக இருக்கலாம். ஆனால் இன்னொரு நாளும் நீடித்திருக்கிறது என்பதை கவனித்தாள். சில மாதங்கள் முன்பு அவளைப்பற்றி மட்டுமல்லாமல், யாரைப்பற்றியெல்லாம் அவதூறாகப் பேசினானோ, யாருடன் பேசினால் அவமானம் எனக் கருதினானோ, அவர்களுடன் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டாள். ஹன்ஸ்போர்ட் இல்லத்தில் நடந்த சம்பவங்கள் ஞாபகத்திற்கு வந்தன, அப்பொழுது இருந்ததற்கும், இப்பொழுது இருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்து அதனால் எழுந்த பிரமிப்பை அவளால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. தன்னுடைய நண்பர்களுடன் நெதர்பீல்டில் இருந்த பொழுதோ அல்லது ரோஸிங்ஸில் இருக்கும் மதிப்பிற்குரிய அவனது உறவினர்களையோ இந்த அளவிற்கு, தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு விலகிப் போகாமல் மகிழ்விக்கும் நோக்கத்தில் பேசி அவள் பார்க்கவில்லை. அப்படி அவர்களை மகிழ்விப்பதில் வெற்றியடைந்தான் என்றாலும் அதனால் அவனுக்கு எந்தவித லாபமும் இருக்காது. மேலும் யாருடன் பேசிக் கொண்டிருந்தானோ, அவர்களுடன் அவனுக்கு பழக்கமும் உண்டு என்று தெரிந்தால், ரோஸிங்ஸில் இருக்கும் பெண்மணிகளும், நெதர்பீல்டில் இருக்கும் பெண்மணிகளும் கேலியும், கண்டனமும் தெரிவிப்பார்கள்.
 
அரைமணி நேரம் அவர்களுடன் இருந்துவிட்டு, பிறகு கிளம்ப ஆயத்தமான பொழுது, திரு. கார்டினர் தம்பதிகளையும், எலிசபெத்தையும் பிம்பெர்லிக்கு விருந்துண்ண அழைக்க தன்னுடைய சகோதரியையும் தன்கூட சேர்ந்து அழைக்கக் கோரினான். மிஸ். டார்சிக்கு இவ்வாறாக நடந்து கொண்டு பழக்கமில்லை என்றாலும் நாணத்துடன் உடனே அதற்கு இணங்கினாள். தன்னுடைய மருமகளை உத்தேசித்துத்தான் இந்த அழைப்பு என்பதை புரிந்து கொண்ட திருமதி. கார்டினர் அவளுடைய சம்மதத்தை எதிர்பார்த்து அவளைப் பார்த்தாள். எலிசபெத் தலையை உடனே திருப்பிக் கொண்டாள். தர்ம சங்கடமாக நினைத்ததாலேயே அவள் அவ்வாறு நின்றிருப்பதாகத் தோன்றியது. ஏனெனில் அவளது தோற்றத்தில் மறுப்பேதும் தெரியவில்லை. நண்பர்களுடன் பழகுவதில் மிகுந்த விருப்பம் கொண்ட தனது கணவரின் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அவள் தானே தங்களது ஒப்புதலை அளித்தாள், நாளை மறுநாள் என விருந்துக்குத் தேதியும் குறிக்கப்பட்டது.
 
மீண்டும் எலிசபெத்தை சந்திப்போம் என்பதில் பிங்கிலிக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. அவனுக்கு அவளிடம் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. ஹர்ட்போர்ட்ஷயரில் இருக்கும் தன்னுடைய நண்பர்களைப்பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. தன்னுடைய சகோதரியைப்பற்றி தான் பேசி கேட்க வேண்டும் என்பதுதான் அவனது விருப்பமாக இருக்கிறது எனத் தெரிந்து, எலிசபெத் சந்தோஷப்பட்டாள். அவர்களுடன் இருந்த கடைசி அரைமணி நேரத்தில் எழுந்த சந்தோஷத்தைவிட பிறகு அதைப்பற்றி நினைத்துப் பார்த்த பொழுது எழுந்த திருப்தி அதிகமாக இருந்தது. தனியாக இருக்க வேண்டும் என்று விரும்பியதாலும், தனது மாமாவும், அத்தையும் ஏதாவது கேட்டுவிடப் போகிறார்களோ என பயந்ததினாலும், பிங்கிலியைப்பற்றி பாராட்டிப் பேசியதை மட்டும் கேட்டுவிட்டு, உடைமாற்றிக் கொள்ள அவசரமாக உள்ளே சென்றாள்.
 
அவள் திரு. கார்டினர் தம்பதிகளைப் பார்த்து பயப்பட வேண்டியதற்கு அவசியமே இல்லை. அவர்களுக்கு அவளை வற்புறுத்திப் பேச வைக்க வேண்டிய விருப்பமே இல்லை. அவளுக்கு, டார்சியுடன் எவ்வளவு தூரம் பழக்கம் இருக்கிறது என அவர்கள் நினைத்தார்களோ, அதனைக்காட்டிலும் அதிகம் இருக்கிறது என்பதை இப்பொழுது புரிந்து கொண்டனர். அவன், அவளை காதலிப்பது கண்கூடாகத் தெரிந்தது. அதனை சுவாரசியத்தோடு கவனித்தனரே தவிர, அதைப்பற்றி கேள்வி கேட்க விருப்பப்படவில்லை.
 
இப்பொழுது அவர்கள் டார்சியைப்பற்றி நல்லபடியாக மட்டுமே நினைக்க வேண்டும். அவர்கள் பார்த்தவரை அவனிடம் எந்த குறையும் தென்படவில்லை. அவனுடைய பணிவு அவர்களை மிகவும் நெகிழச் செய்தது. மற்ற எந்த வழியாகவுமின்றி தாங்கள் உணர்ந்ததிலிருந்தும், அவனுடைய வேலைக்காரன் கூறியவற்றிலிருந்தும், அவனுடைய குணத்தைப்பற்றி அவர்கள் ஒரு முடிவுக்கு வந்திருந்தால், அவனைப்பற்றி அறிந்திருந்த ஹர்ட்போர்ட்ஷயர் வட்டத்தில் அதுதான் டார்சி எனப் புரிந்து கொண்டிருந்திருக்க மாட்டார்கள். இப்பொழுது அவ்வீட்டை பராமரிப்பவரின் கூற்றை நம்ப வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. நான்கு வயது முதல் அவனைத் தெரிந்திருந்த ஒரு பெண்மணி, மிக்க மரியாதையுடன் விளங்கிய அப்பெண்மணியின் நல்ல அபிப்பிராயத்தை விலக்கக் கூடாது எனப் புரிந்து கொண்டனர். லாம்ப்டனில் இருந்த நண்பர்களும் அவனுடைய நல்ல குணத்தை உறுதிப்படுத்தினர். அவனிடம் பெருமிதத்தை தவிர வேறெதையும் அவர்கள் காணவில்லை. பெருமிதம் இல்லாவிட்டாலும்கூட அக்குடும்பத்தினர் சென்றிராத வியாபார ஸ்தலமான அச்சிறிய ஊரில் வசிப்பவர்கள், அவனுக்குப் பெருமிதம் இருப்பதாக, அவன்மேல் குற்றம் சாட்டிவிடுவார்கள். அவனுடைய தாராள மனப்பான்மை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது, ஏழைகளுக்கு நிறைய உதவிகள் செய்து வந்தான்.
 
விக்காமைப் பொறுத்த வரையில் அவனுக்கு அவ்வூரில் நல்ல பெயர் இல்லை என்பதை இவர்கள் கண்டுபிடித்தனர். டார்சியுடன் அவனுக்கிருந்த விவகாரங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. இதைவிட தெரிந்த விஷயம் என்னவென்றால் டெர்பிஷயரை விட்டுப் போனவுடன் அவன் நிறைய கடன்கள் வைத்துவிட்டுப் போயிருந்ததை, டார்சி அடைக்க நேரிட்டது, என்பதுதான்.
 
அன்று மாலை முழுவதும் எலிசபெத்தின் எண்ணம் பிம்பெர்லியில் இருந்தது. நேரம் செல்வதே யுகமாக இருந்தது. அவ்வீட்டில் இருக்கும் ஒருவனிடம் தனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளைப்பற்றி அவளால் சரியாக நிர்ணயிக்க நேரம் போதவில்லை. இரவு இரண்டு மணி நேரம் தூங்காமல் அதனைப்பற்றி யோசனை செய்த வண்ணம் இருந்தாள். அவள், அவனை நிச்சயமாக வெறுக்கவில்லை. வெறுப்பு மறைந்து வெகு நாட்களாகிவிட்டன. அவனைப் பிடிக்காமல் போவது குறித்து அவள் வெட்கப்பட்டாள். அவனைப்பற்றிய நல்ல அபிப்பிராயங்களை முதலில் இஷ்டமில்லாமல் ஏற்றுக் கொண்டாலும், நேற்று அவன் இனிமையாக நடந்து கொண்டதிலிருந்து அவனுடைய உயர்வான குணங்களைத் தெரிந்து கொண்டதிலிருந்து, அவனைப்பற்றி மற்றவர்களது அபிப்பிராயத்தைத் தெரிந்து கொண்டதிலிருந்து, அவனை நட்புடன் மதிக்க ஆரம்பித்தாள். மதிப்பு, மரியாதையையும் மீறி ஏதோ ஒரு காரணம் அவளுடைய நல்லெண்ணத்தில் இருந்தது. அக்காரணம் எது என்று கேட்டால், அது நன்றி உணர்ச்சி. தன்னை அவன் காதலித்ததற்கும், இப்பொழுதும் காதலித்துக் கொண்டிருப்பதற்கும், அவனை நிராகரித்த பொழுது கடுமையாகவும், துடுக்காகவும் பேசி, நியாயமற்ற குற்றச்சாட்டுக்களை அவன்மேல் சுமத்தியதை அவன் மன்னித்ததற்கும் அவள் நன்றிவயப்பட்டிருந்தாள். அவள் நடந்து கொண்ட விதத்திற்கு அவளை தன்னுடைய மிகப் பெரிய எதிரியாகக்கூட நினைத்து ஒதுக்கியிருக்கலாம். ஆனால் அவர்கள் ஏதேச்சையாக சந்தித்த பொழுது, அவன் இந்த நட்பை தொடர ஆவலாக இருக்கிறான் என்பதும், அவர்கள் இருவரின் விஷயத்தில், அவனது உணர்ச்சிகளை அநாகரீகமாக வெளியில் காண்பித்துக் கொள்ளாமலும், வித்தியாசமாக நடந்து கொள்ளாமலும், அவளுடைய நண்பர்களின் நல்லெண்ணத்தையும் பெற்று, தங்கையையும் அவளுக்கு அறிமுகப்படுத்த விரும்பினான். பெருமிதம் உள்ள மனிதன் இவ்வாறு மாறுவதென்றால், அது அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது, மேலும் நன்றி உணர்ச்சியையும் அதிகப்படுத்தியது. இவையெல்லாம் அவன், அவள்மேல் கொண்டிருந்த ஆழமான காதலினால் மட்டுமே என்று தோன்றியது. அவனுடைய ஆழமான காதலை ஊக்குவிக்க வேண்டும் என நினைத்தாள். சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் அவளால் அதை நிர்ணயம் செய்ய முடியவில்லை. அவனை மிகவும் மரியாதையாக நினைத்தாள், அவனுடைய நலனில் உண்மையான அக்கறை காட்டினாள். அவனுடைய நலன் தன் கையில்தான் உள்ளது என தான் எவ்வளவு தூரம் விரும்புகிறோம் என்பதனைத் தெரிந்து கொள்ள நினைத்தாள். தன்னுடன் முதலில் பேசியதைப் புதுப்பிக்கும் திறன் தன்னிடம்தான் உள்ளது எனப் புரிந்து கொண்ட அவள், அதனால் தங்கள் இருவருக்கும் எவ்வளவு தூரம் சந்தோஷம் கிடைக்கும் என்று எண்ணிப் பார்த்தாள்.
 
அன்று காலை பிம்பெர்லியில், காலைச் சிற்றுண்டிக்காக தாமதமாக வந்திறங்கியும், உடனேயே மிஸ். டார்சி தங்களை சந்திக்க வந்ததைப்போல் தாங்களும், அவளுக்கு அதே விதமாக மரியாதை தர வேண்டும் என்று நினைத்த அத்தையும், மருமகளும், ஆனால் அதுபோல் தங்களால் நடந்து கொள்ள முடியாமல் போனதால், மறுநாள் காலையிலேயே அவளை சென்று சந்திக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். எலிசபெத்திற்கு சந்தோஷம் உண்டாயிற்று. இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என தன்னையே கேட்டுக் கொண்டதற்கு, அவளால் பதில் ஏதும் கூற முடியவில்லை.
 
திரு. கார்டினர் காலை உணவை முடித்துக் கொண்டு, முதல் நாளே மீன் பிடிக்கும் பொழுதுபோக்கினை தொடங்கி விட்டதால், மீன் பிடிக்கவும், மதியம் பிம்பெர்லியில் இருக்கும் நண்பரை சந்திக்க ஏற்பாடு ஆகியிருந்ததினால், அங்கு செல்வதற்கும் கிளம்பினார். 



book | by Dr. Radut