Skip to Content

Chapter 19 திருமணங்கள்

திருமதி. பென்னட்டின் இரு பெண்களின் திருமணம் முடிந்த நாள்தான், அவளுடைய தாய்மை உணர்வுகள் பூரித்து மகிழ்ச்சியாக இருந்த நாளாகும். எவ்வளவு பெருமிதத்துடன் அவள் பிறகு திருமதி. பிங்கிலியைப் பார்க்கச் சென்றிருப்பாள், திருமதி. டார்சியைப்பற்றி எவ்வளவு பெருமையாகப் பேசியிருப்பாள் என்பதை ஊகிக்கலாம். தன்னுடைய குழந்தைகளின் வாழ்க்கை சந்தோஷமாக அமைந்து, அவளுடைய மனப்பூர்வமான ஆசை நிறைவேறியதில் கிடைத்த சந்தோஷம் எஞ்சியுள்ள வாழ்நாளிற்கு அவளை மேலும் அர்த்தமுள்ளவளாகவும், பழகுவதற்கு ஏற்றவளாகவும், அறிவுள்ளவளாகவும் மாற்றியிருக்கிறது என்று எனக்குச் சொல்ல ஆசையாகத்தான் இருக்கிறது; ஆனால் குடும்ப சுகத்தை இப்படி வழக்கமில்லாத விதத்தில் அனுபவிப்பதை விரும்பியிருக்காத அவளது கணவரது அதிர்ஷ்டம், அவள் இன்னமும் சில சமயங்களில் படபடப்பாகவும், பல சமயங்களில் முட்டாள்தனமாகவும் நடந்து கொண்டாள்.

திரு. பென்னட், தனது இரண்டாவது மகளின் பிரிவை மிகவும் உணர்ந்தார். அவள் மேலுள்ள அன்பு அவரை அடிக்கடி அவள் வீட்டின் பக்கம் இழுத்தது. வேறு எந்த காரணமும் அவரை எங்கும் செல்லத் தூண்டவில்லை. அவர்கள் எதிர்பார்க்காத பொழுது, பிம்பெர்லி செல்வதில் மகிழ்வுற்றார்.
 
திரு.பிங்கிலியும், ஜேனும் நெதர்பீல்டில் பன்னிரண்டு மாதங்களே இருந்தனர். அவனுடைய எளிமைக்கும், பொறுமைக்கும், ஜேனின் பிரியமான நெஞ்சத்திற்கும், அவளது தாயாரின் அருகாமையும், மெரிடன் உறவினர்களின் அருகாமையும் விருப்பமில்லாமல்தான் இருந்தது. டெர்பிஷயருக்கு அருகிலுள்ள இடத்தில் ஒரு எஸ்டேட் வாங்கி, அவனுடைய அன்பு சகோதரிகளின் வெகு நாளைய ஆசையையும் பூர்த்தி செய்தான். ஜேனிற்கும், எலிசபெத்திற்கும் தாங்கள் முப்பது மைல் இடைவெளியில் இருப்பது, மற்ற மகிழ்ச்சிகளுடன் இதுவும் ஒன்றாக சேர்ந்து கொண்டது.
 
கிட்டி பெரும்பாலான நேரத்தை தன் இரு சகோதரிகளுடன் செலவழித்தாள், அது அவளுக்கு நன்மையையே அளித்தது. அவள் பழகியிருந்த சமூகத்தைவிட உயர்வான இடத்தில் பழகுவதினால் அது அவளிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. லிடியாவைவிட அடக்கமான சுபாவம் கொண்ட அவள், லிடியாவிடம் இருந்து பிரிக்கப்பட்டதாலும், ஒழுக்கமான வழி காட்டுதலாலும், தன்னுடைய அறிவை வளர்த்துக் கொண்டு, எரிச்சலைக் கட்டுப்படுத்திக் கொண்டு, கலகலப்பான பெண்ணாக மாறினாள். மேலும் லிடியாவிடம் பழகுவதினால் ஏற்படும் கெடுதல்களிலிருந்து அவள் கவனமாகப் பாதுகாக்கப்பட்டாள். நடனங்களும், இளைஞர்களும் இருப்பதாகக் கூறி, திரு. விக்காம் அவளுக்கு அடிக்கடி விடுத்த அழைப்பிற்கு, அவளது தந்தை அனுமதி அளிக்கவே மறுத்தார்.
 
மேரி மாத்திரம் வீட்டிலேயே இருந்தாள்; தனியாக இருந்த அவள், தாயுடன் இருக்க வேண்டிய நிர்பந்தத்தினால், அவளால் அவளுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபடுவது கடினமாயிற்று. அவ்வப்போது நிகழும் சந்திப்புகளால் பலருடன் பழகும்படி ஆயிற்று. ஆனால் இன்னமும், ஒவ்வொரு காலையும் எங்காவது சென்றுவிட்டு வந்தால், அதைப்பற்றி பிறகு தத்துவமாகப் பேசுவாள். அவளுடைய அழகை, அவளது சகோதரிகளின் அழகோடு ஒப்பிட்டு அவளைக் கஷ்டப்படுத்துவது நின்றபடியால், எந்தவித எதிர்ப்பும் இன்றி, இந்த மாற்றத்தை சுலபமாக ஏற்றுக் கொண்டு விட்டாள் என்று அவளது தந்தைக்குத் தோன்றியது.
 
அவளது இரு சகோதரிகளின் திருமணமும் லிடியாவிடமும், விக்காமிடமும் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எலிசபெத்திற்கு, அவனைப்பற்றிய முன்பு தெரியாத உண்மைகள், பொய்மை, நன்றியின்மை இவைகள் தற்சமயம் தெரிந்திருக்கக் கூடும் என்பதை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டான், ஆனாலும் டார்சியை மீண்டும் தன்னுடைய எதிர்காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் அவன் இருந்தான். எலிசபெத்தை வாழ்த்தி லிடியா அனுப்பியிருந்த கடிதத்தின் மூலம், உதவி கிடைப்பதில் அவளுடைய கணவனுக்கு நம்பிக்கையில்லா விட்டாலும், அவளுக்கு நம்பிக்கை இருந்தது என்பது எலிசபெத்திற்குப் புரிய வந்தது. அக்கடிதம் இவ்வாறாக இருந்தது.
 
எனதருமை எலிசபெத்,
 
            ‘என்னுடைய வாழ்த்துக்கள். நான் விக்காமை விரும்பும் அளவில் பாதியளவாவது, நீ டார்சியை விரும்பினாய் எனில், நீ சந்தோஷமாக இருப்பாய். நீ இவ்வளவு பணக்காரியாக இருப்பது ஆறுதலான விஷயம். செய்வதற்கு ஒன்றும் இல்லாத பொழுது நீ எங்களைப்பற்றி நினைப்பாய் என நம்புகிறேன். கோர்ட்டில் வேலை கிடைத்தால் விக்காமிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் என நினைக்கிறேன். ஏதாவது உதவி இல்லாமல் வாழ்க்கை நடத்துவது சற்று கடினமாக இருக்கும். எந்த இடமானாலும் பரவாயில்லை, வருடத்திற்கு முன்னூறு அல்லது நானூறு கிடைப்பதுபோல், ஆனால் உனக்கு விருப்பம் இல்லை எனில் டார்சியிடம் இதுபற்றி பேச வேண்டாம்.
 
உனது லிடியா
 
இதைப்பற்றி டார்சியிடம் பேச நினைக்காதலால், இந்த வேண்டுகோளுக்கும், எதிர்பார்ப்பிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்படி பதிலளித்தாள். தன்னுடைய சக்திக்கு உட்பட்டு, தன்னுடைய செலவிற்கு என்ற பணத்திலிருந்து, தான் சேமித்ததை அவ்வப்பொழுது அனுப்பி வைத்து, அவர்களுக்கு உதவி செய்தாள். எதிர்காலத்தைப்பற்றி கவலையின்றி, அத்துமீறி செலவழிக்கும் இருவருக்கும், அவர்களுடைய அந்த வருமானம் போதவே போதாது என்பது எலிசபெத்திற்குத் தெரியும். எப்பொழுதெல்லாம் அவர்கள் வீட்டை மாற்றுகிறார்களோ அப்பொழுதெல்லாம் சிறு செலவுகளுக்காக அவளிடமோ, ஜேனிடமோ வருவார்கள் என்பதை அவர்கள் எதிர்பார்க்கலானார்கள். அமைதி திரும்பியபின், இராணுவத்திலிருந்து திரும்பி வந்து ஓர் இடமாக தங்க நேர்ந்தபொழுதும், அவர்களால் அவ்வாறு இருக்க முடியவில்லை. மலிவான வீடு தேடி, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறிய வண்ணம் இருந்தனர். வரவுக்கு மீறிய செலவு செய்தவாறு இருந்தனர். அவள்மேல் அவனுக்கிருந்த அன்பு வலுவிழந்துக் கொண்டே சென்றது; அவளுடைய அன்பு சற்று அதிகம் நீடித்தது; அவள் இளமையாகவும், நல்ல நடத்தையுடையவளாகவும் தற்சமயம் இருந்தாலும், அவளுடைய திருமணத்தால் ஏற்பட்ட பெயர் இன்னமும் நீடித்தது.
 
டார்சியால் அவர்களை பிம்பெர்லிக்கு அழைப்பது என்பது முடியாத ஒன்றாக இருந்தாலும், எலிசபெத்திற்காக அவனுடைய வேலை விஷயத்தில் உதவினான். லிடியா, தன்னுடைய கணவன் பொழுதைப் போக்க லண்டன் அல்லது பாத்திற்குச் செல்லும் பொழுது எப்பொழுதாவது அங்கு வந்து தங்கினாள். இருவரும் பிங்கிலியின் இல்லத்திற்கு அடிக்கடி சென்று வெகு நாட்களுக்கும் தங்கியதால், பிங்கிலி பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டு அவர்களை கிளம்புமாறு, குறிப்பாகப் பேச வேண்டியதாயிற்று.
 
மிஸ். பிங்கிலி, டார்சியின் திருமணத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தாள். ஆனால் பிம்பெர்லிக்குப் போகும் உரிமையை தக்க வைத்துக் கொள்வது நல்லது என்று நினைத்தாள். தனது வெறுப்பையும், நிராசையையும் ஒதுக்கி வைத்து விட்டு, ஜார்ஜியானாவிடம் முன்பைவிட அதிக அன்பைப் பொழிந்து, பழையபடி டார்சியின்மேல் கவனம் செலுத்தி, எலிசபெத்திற்கு இதுவரை அளித்திராத மரியாதைகளையெல்லாம் சேர்த்து கொடுத்தாள்.
 
பிம்பெர்லி இனி ஜார்ஜியானாவின் வீடாக இருந்தது. டார்சி எதிர்பார்த்த அன்பும், பாசமும் இருவரிடையே இருந்தது. அவர்கள் நினைத்தது போலவே இருவருக்கும், பரஸ்பரம் அன்பு செலுத்த முடிந்தது. எலிசபெத்தைப்பற்றி ஜார்ஜியானாவிற்கு மிக உயர்வான கருத்து இருந்தது. எலிசபெத், டார்சியுடன் கலகலப்பாகவும், விளையாட்டாகவும் பழகுவது அவளுக்கு முதலில் ஆச்சரியத்தையும், ஓரளவு பயத்தையும் அளித்தது. அவனை, பாசத்தைவிட அதிக மரியாதையுடன் பார்த்த அவளுக்கு, அவனை வைத்து எலிசபெத் கேலி செய்வதையும் பார்க்க நேரிடுகிறது. அவள் இதுவரை அறியாத விஷயங்களை இப்பொழுது அறிந்து கொண்டாள். எவ்வாறு, தன்னைவிட பத்து வயது சிறியவளான ஒரு சகோதரியிடம் ஒரு சகோதரன், சில சலுகைகளை எடுத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டானோ, அதை ஒரு பெண்ணால், தன் கணவனிடம் எடுத்துக் கொள்ள முடியும் என்பதை எலிசபெத்தின் விளக்கத்தால் புரிந்து கொண்டாள்.
 
தன் மருமகனின் திருமண விஷயத்தில் லேடி காதரின் அதிக கோபம் அடைந்திருந்தாள். திருமணத்தின் ஏற்பாடுகளைப்பற்றி எழுதிய கடிதத்திற்கு, எப்பொழுதும்போல் வெளிப்படையாக மிகவும் மோசமான வார்த்தைகளால் பதிலளித்திருந்தாள், முக்கியமாக எலிசபெத்தைப்பற்றி அவதூறாக எழுதியது, அவர்களிடையே தற்காலிகமாக எல்லா பேச்சு வார்த்தைகளையும் துண்டித்தது. நாளடைவில் அதைப் பொருட்படுத்தாமல், மீண்டும் தொடர்பு கொள்ள வேண்டி எலிசபெத் வற்புறுத்தியதால், அவள் செய்த தவற்றை அவன் பாராட்டாது சமாதானத்தை நிறுவ முயன்றான். முதலில் அவனது சித்தி அதை எதிர்த்தாலும், மெதுவாக அவளுடைய கோபம் மறைந்தது. அவன் மேலுள்ள பாசத்தாலும் அல்லது அவனுடைய மனைவி எவ்வாறு நடந்து கொள்கிறாள் என்பதைப் பார்க்கும் ஆவலினாலும், பிம்பெர்லிக்கு வருவதற்கு ஒப்புக் கொண்டாள். எலிசபெத்தாலும், அவளது, மாமா மற்றும் அத்தையின் வரவாலும் அங்கிருக்கும் தோட்டங்கள் கறைபடிந்திருக்கும் என்று அவள் நினைத்தும், அது அவள் வரவை தடுக்கவில்லை.
 
கார்டினர் தம்பதியுடன் அவர்கள் எப்பொழுதும் நெருக்கமாகவே இருந்தனர். டார்சியும், எலிசபெத்தும் அவர்களை உண்மையிலேயே மிகவும் நேசித்தனர். அவளை, டெர்பிஷயருக்கு வரவழைத்து, அவர்கள் இருவரும் இணைய காரணமாக இருந்த அவர்களை, என்றும் நன்றியுடனும், பாசத்துடனும் நடத்தினர்.
 



book | by Dr. Radut