Skip to Content

Chapter 17 பென்னட் குடும்பத்தினரின் ஆச்சரியம்

எலிசபெத் உள்ளே நுழைந்ததும், நீ எங்கு சென்றுவிட்டு வருகிறாய்? என்ற கேள்விதான் முதலில் ஜேனிடமிருந்தும், பிறகு எல்லோரிடமிருந்தும் அவர்கள் மேஜையின் அருகே அமரும் பொழுது எழுந்தது. தனக்கே தெரியாத அளவிற்கு வெகு தூரம் அவர்கள் சுற்றிவிட்டு வந்ததாக மட்டுமே அவளால் கூற முடிந்தது. இதைக் கூறும் பொழுது அவள் முகம் சிவந்தது. ஆனால் அதுவோ, வேறு எதுவுமோ உண்மையான காரணத்தைப்பற்றி சந்தேகத்தை எழுப்பவில்லை.

எந்த அசாதாரண நிகழ்வுமின்றி அன்றைய மாலைப் பொழுது அமைதியாகக் கழிந்தது. ஊரறிய காதலை வெளிப்படுத்தியிருந்த காதலர்கள் சிரித்தும், பேசிக் கொண்டும் இருந்தனர். பிறருக்கு அறிவித்திராத காதலர்கள் மௌனமாக, அமைதியாக இருந்தனர். டார்சியின் இயல்பான சுபாவம், அவனுடைய அளவிலா மகிழ்ச்சியை வெளிப்படுத்த முட்டுக்கட்டைப் போட்டது. எலிசபெத் குழப்பத்திலும், பதற்றத்திலும் இருந்ததால், மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று நினைத்தாளே தவிர, அதை அவளால் பூரணமாக உணர முடியவில்லை. ஏனெனில் உடனே அடையப் போகும் தர்மசங்கடமான நிலைமையைத் தவிர, மேலும் பல பிரச்சினைகள் அவளுக்காகக் காத்திருந்தன. இந்த விஷயத்தை குடும்பத்திலுள்ள அனைவரும் அறிந்தால் என்ன நினைப்பார்களோ என்று எதிர்நோக்கினாள்; ஜேனைத் தவிர மற்ற எவருக்கும் அவனைப் பிடிக்காது என்பது அவள் அறிந்ததே; அவனிடம் பணமும், புகழும் இருந்தும், அது அவர்கள் அவன்மேல் கொண்ட வெறுப்பை மாற்றக் கூடியதாக இருக்காது என பயந்தாள்.
 
அன்று இரவு, ஜேனிடம் அவள் தன் மனதைத் திறந்தாள். சாதாரணமாக மிஸ். பென்னட் யாரையும் சந்தேகிக்கும் குணம் கொண்டவள் இல்லை என்றபோதிலும், அவளால் இதை நம்பவே முடியவில்லை.
 
நீ விளையாடுகிறாய் லிசி. இப்படி இருக்கவே முடியாது!--டார்சியுடன் திருமணமா! இல்லை, என்னை நீ ஏமாற்றாதே. இது நடக்கவே முடியாது என்பதை நான் அறிவேன்.
 
இந்த ஆரம்பமே சரியில்லாமல் ஆகிவிட்டதே! நான் உன்னை மட்டும்தான் நம்பியிருந்தேன், நான் சொல்வதை நீயே நம்பாவிட்டால், வேறுயாருமே நம்ப மாட்டார்கள். ஆனால் நான் உண்மையைத்தான் கூறுகிறேன். அவன் என்னை இன்னமும் காதலிக்கிறான், நாங்கள் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்திருக்கிறோம்.
 
ஜேன், அவளை சந்தேகத்துடன் பார்த்தாள். ஓ லிசி! அப்படி இருக்க முடியாது. நீ அவனை எவ்வளவு வெறுக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.
 
உனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. அவையெல்லாம் மறக்கப்பட வேண்டியவை. ஒருவேளை, இப்பொழுது நான் அவனை விரும்பும் அளவிற்கு முன்பு விரும்பவில்லை போலும். அதனால் இதுபோன்ற விஷயங்களில், நல்ல ஞாபக சக்தியை மன்னிக்க முடியாது. நானும் அதை, என் நினைவுகளில் வைத்துக் கொள்வது, இதுவே கடைசி தடவையாக இருக்கும்.
 
மிஸ். பென்னட் இன்னும் ஆச்சரியமே உருவாகக் காணப்பட்டாள். எலிசபெத் மறுபடியும், மேலும் தீவிரமாக விஷயத்தின் உண்மைக்கு உத்திரவாதம் அளித்தாள்.
 
கடவுளே! இது உண்மையாக இருக்குமா! ஆனாலும், இப்பொழுது நான் உன்னை நம்பியாக வேண்டும். எனதருமை லிசி, நான் உன்னை வாழ்த்துவேன்--நான் உன்னைக் கண்டிப்பாக வாழ்த்துகிறேன்--ஆனால் இது நிச்சயம்தானா? நான் இவ்வாறு கேட்பதற்கு என்னை மன்னித்துவிடு--நீ அவனுடன் சந்தோஷமாக இருக்க முடியும் என நிச்சயமாக நம்புகிறாயா?‘
 
அதைப்பற்றி சந்தேகமே கிடையாது. இந்த உலகத்திலேயே நாங்கள்தான் மிகவும் சந்தோஷமான தம்பதிகளாக இருக்கப் போகிறோம் என்று எங்கள் இருவரிடையே ஏற்கனவே முடிவாகி விட்டது. ஆனால் இதில் உனக்கு மகிழ்ச்சிதானா, ஜேன்? அவனைப்போல் ஒரு சகோதரன் கிடைப்பது உனக்குப் பிடிக்குமா?‘
 
மிகவும் பிடிக்கும். எனக்கும், பிங்கிலிக்கும் இதைவிட சந்தோஷம் கொடுக்கக் கூடியது வேறு ஒன்றும் இருக்காது. நாங்கள் இதைப்பற்றிப் பேசினோம், இது நடக்கக் கூடிய விஷயமே இல்லை என்று நினைத்தோம். நீ அவனை உண்மையிலேயே காதலிக்கிறாயா? , லிசி! எதை வேண்டுமானாலும் செய், ஆனால் அன்பில்லாமல் மட்டும் திருமணம் செய்து கொள்ளாதே. நீ என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாயோ அதில் தெளிவாக இருக்கிறாயா?‘
 
ஆம், இருக்கிறேன்! நான் உன்னிடம் எல்லாவற்றையும் கூறும் பொழுது, செய்ய வேண்டியதற்குமேல் செய்ய வேண்டும் என்று நான் நினைப்பதை நீ புரிந்து கொள்வாய்.
 
நீ என்ன சொல்கிறாய்?‘
 
எனக்கு பிங்கிலியின் மேலிருக்கும் அன்பைவிட அதிகமாக அவன்மேல் அன்பு இருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். உனக்கு இதைக் கேட்டு கோபம் வருமோ என்று எனக்கு பயமாக உள்ளது.
 
எனதருமை சகோதரியே, இப்பொழுது விளையாட்டை விட்டுவிடு. நான் உன்னுடன் தீவிரமாகப் பேச விரும்புகிறேன். எனக்கு என்னவெல்லாம் தெரிய வேண்டுமோ அதை தாமதமின்றி தெரிவித்துவிடு. எத்தனை நாட்களாக அவனை, நீ காதலிக்கிறாய் என்று என்னிடம் சொல்வாயா?‘
 
அது நாளடைவில் உருவானதால், எப்பொழுது ஆரம்பமாயிற்று என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவனுக்குச் சொந்தமான அழகான பிம்பெர்லியை முதலில் பார்த்ததிலிருந்து என்று நினைக்கிறேன்.
 
விளையாட்டைவிட்டு இனிமேல் தான் தீவிரமாக இருப்பதாகக் கூறியது ஜேனிடம் எதிர்பார்த்த விளைவினை ஏற்படுத்தியது. தான் அவனை விரும்புவதாக உறுதியளித்து, ஜேனை திருப்தியடையச் செய்தாள். அந்த விஷயத்தில் நம்பிக்கையடைந்த ஜேன், வேறு எதையும் விரும்பவில்லை.
 
நீயும் என்னைப்போல் மகிழ்ச்சியாக இருப்பாய் என்று எனக்கு இப்பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அவன்மேல் எனக்கு எப்பொழுதுமே ஒரு மதிப்பு இருந்திருக்கிறது. வேறு எதற்காக இல்லாவிட்டாலும் உன்னை அவன் காதலிக்கிறான் என்பதாலேயே அவனை நான் உயர்வாக மதித்திருப்பேன். ஆனால் இப்பொழுது, உன் கணவனாகவும், பிங்கிலியின் நண்பனாகவும் இருப்பதால், உனக்கும், பிங்கிலிக்கும் பிறகு எனக்கு அவனையும் பிடிக்கும். ஆனால் லிசி, நீ என்னிடம் மிகவும் இரகசியமாக இருந்திருக்கிறாய், என்னிடம் எல்லாவற்றையும் கூறவில்லை. பிம்பெர்லியிலும், லாம்ப்டனிலும் நடந்த அனேக விஷயங்களை என்னிடம் நீ கூறாமல் இருந்து விட்டாய்! எனக்கு என்னவெல்லாம் அதைப்பற்றித் தெரியுமோ, அது உன் மூலம் அல்லாமல் வேறொருவர் மூலமாகத்தான் தெரிந்தது.
 
எலிசபெத், இரகசியமாக இருந்ததின் நோக்கத்தை எடுத்துரைத்தாள். பிங்கிலியைப்பற்றிப் பேசுவதைத் தவிர்க்க விரும்பினாள்; அவளும் குழப்பமான மனநிலையில் இருந்ததால், அவனுடைய சிநேகிதனின் பெயரையும் தவிர்க்க நினைத்தாள். லிடியாவின் திருமணத்தில் அவனுடைய பங்கை இனி அவள், ஜேனிடமிருந்து எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா விஷயங்களும் வெளிப்படையாகப் பேசப்பட்டன, பாதி இரவுப் பொழுது பேசுவதிலேயே கழிந்தது.
 
மறுநாள் காலை, ஜன்னல் அருகே நின்றிருந்த திருமதி. பென்னட் கடவுளே, நம் பிரிய பிங்கிலியுடன் இங்கு மீண்டும் வருவது அந்த வேண்டாத டார்சியாகத்தான் இருக்க வேண்டும்! அவன் அடிக்கடி இங்கு வந்து தொந்தரவு கொடுப்பதின் அர்த்தம் என்னவாக இருக்கும்? எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவன் வேட்டையாடவோ அல்லது வேறு எதற்காகவோ சென்று விடுவான், இங்கு வந்து நம்மை தொந்தரவு செய்ய மாட்டான் என்று நினைத்தேன். அவனை, நாம் என்ன செய்யலாம்? லிசி, நீ மீண்டும் அவனுடன் வெளியே செல்ல வேண்டும். அவ்வாறெனில் பிங்கிலியின் வழியில் அவனை வராமல் தடுக்கலாம்.
 
தனக்குச் சாதகமாக அமைந்த இந்த திட்டத்தை நினைத்து எலிசபெத்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ஆனால் அவளது தாய், அவனை எப்பொழுதும் பட்டப் பெயருடன் கூறுவது அவளைக் கோபப்படுத்தியது.
 
அவர்கள் உள்ளே நுழைந்தவுடன், பிங்கிலி அவளை அர்த்தத்துடன் பார்த்து கை குலுக்கியதும், அவனுக்கு விஷயம் தெரிந்து விட்டது என்பது சந்தேகமில்லாமல் தெரிந்தது. பிறகு அவன் உரத்த குரலில் திருமதி. பென்னட், லிசி மீண்டும் இங்கு தொலைந்து போவதற்கு வேறு ஏதேனும் தெருக்கள் இருக்கின்றனவா?‘ என்று கேட்டான்.
 
திரு. டார்சியும், லிசியும் மற்றும் கிட்டியும் மவுண்ட் ஓக்ஹாம்வரை நடக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அது ஒரு நீண்ட அழகிய பாதை. டார்சி இந்த காட்சியைப் பார்த்திருக்கவே முடியாது.
 
அதற்கு பிங்கிலி மற்றவர்களுக்கு இந்த நடைப் பயணம் மிகவும் ஏற்றதாக இருக்கும். ஆனால் கிட்டிக்கு நடப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன், இல்லையா கிட்டி?‘ என்றான்.
 
கிட்டி, தான் வீட்டிலேயே இருக்க விரும்புவதாகக் கூறினாள். மவுண்டிலிருந்து தெரியும் காட்சியைப் பார்ப்பதற்கு தான் மிகவும் ஆவலாக இருப்பதாக டார்சி ஒப்புக் கொண்டான். லிசி மௌனமாக தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். தயாராவதற்கு அவள் மாடிக்குச் சென்ற பொழுது திருமதி. பென்னட் அவளைப் பின்தொடர்ந்து வந்து,
 
விருப்பமில்லாத மனிதனுடன் உன்னை அனுப்புவதற்கு என்னை மன்னித்துவிடு, லிசி. ஆனால் எல்லாம் ஜேனுக்காகத்தான், அதனால் நீ அதை பொருட்படுத்த மாட்டாய் என நினைக்கிறேன். அவ்வப்பொழுது ஓரிரு வார்த்தைகள் பேசுவதைத்தவிர, அவனுடன் பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பமும் ஏற்படாது. அதனால் உன்னை நீ சிரமப்படுத்திக் கொள்ளாதேஎன்றாள்.
 
அவர்கள் நடந்து செல்கையில், அன்று மாலைக்குள் திரு. பென்னட்டின் சம்மதத்தைப் பெற வேண்டும் என்பது முடிவானது. எலிசபெத், தன் தாயிடம் விஷயத்தை வெளியிடும் பொறுப்பை தானே மேற்கொள்ள நினைத்தாள். அவள் தாய் அதை எப்படி ஏற்றுக் கொள்வாள் எனத் தீர்மானிக்க முடியவில்லை. அவனிடமிருக்கும் பணமும், புகழும், அவன் மேலிருக்கும் வெறுப்பை சகித்துக் கொள்ள போதுமா என சில சமயம் சந்தேகம் எழுந்தது. ஆக்ரோஷத்துடன் அவர்கள் இணைவதை எதிர்த்தாலும், அதே மூச்சில் அவள் ஆமோதித்தாலும், இரண்டையுமே அவள் ஒழுங்காகச் செய்வாளா எனத் தெரியவில்லை. அவளுடைய உக்கிரமான கண்டனத்தையோ அவளுடைய சந்தோஷமான குரலையோ டார்சி கேட்க நேரிடுமோ என்று நினைக்கும் பொழுது எலிசபெத்தால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
 
அன்று மாலை, திரு. பென்னட், நூலகத்திற்கு ஓய்வு எடுக்கச் செல்லும் பொழுது, டார்சி எழுந்து அவரைப் பின்தொடர்கையில் அவளது பதட்டம் அதிகமானது. அவளுடைய தந்தை எதிர்ப்பாரோ என அவள் பயப்படவில்லை. ஆனால் அவருக்கு சந்தோஷம் கிடைக்கப் போவதில்லை என நினைத்தாள். மேலும் அந்த நிலைக்குக் காரணம் தன்னால், அவரது செல்ல மகளால், தான் எடுத்த முடிவால், அவருக்கு வருத்தத்தை அளிக்கப் போகிறோமோ, தான் எடுத்த முடிவு சரியா, தவறா என்ற கவலையும், பயமும் அளிக்கப் போகிறோமோ எனப் பலவாறாகப் பரிதாபமாக யோசித்துக் கொண்டு கவலையில் அமர்ந்திருந்த அவள், புன்சிரிப்புடன் டார்சி மீண்டும் திரும்பி வருவதைப் பார்த்து சற்று ஆறுதலடைந்தாள். சில நிமிடங்களில், அவள் கிட்டியுடன் அமர்ந்திருந்த மேஜையை நோக்கி வந்து, அவளுடைய கைவேலையை ரசிப்பதுபோல் பாவனை செய்த வண்ணம், ‘உன் தந்தையிடம் செல். உன்னை அவர் நூலகத்தில் பார்க்க விரும்புகிறார்என்று இரகசியமான குரலில் கூறினான். நேராக அவள் அங்கு சென்றாள்.
 
கவலையுடனும், யோசனையுடனும் அறைக்குள் நடந்து கொண்டிருந்த அவளது தந்தை லிசி, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? இவனை ஏற்றுக் கொள்ள உனக்கு என்ன அறிவு கெட்டுப் போய் விட்டதா? நீ எப்பொழுதுமே அவனை வெறுக்கத்தானே செய்திருக்கிறாய்?‘ என்றார்.
 
முன்பு, தன் கருத்துக்களை வெளிப்படுத்திய பொழுது, இன்னமுமே நிதானத்துடன் இருந்திருக்கலாமோ, இன்னமுமே நியாயமாக இருந்திருக்கலாமோ என ஏங்கினாள். அது இப்பொழுது தேவையில்லாத விளக்கங்களையும், சமாதானங்களையும் தர வேண்டிய தர்மசங்கடமான நிலையைத் தடுத்திருக்கும்; எனினும் இப்பொழுது அதன் அவசியத்தை உணர்ந்த அவள், தான் டார்சியை விரும்புவதைப்பற்றி சற்றே குழப்பத்துடன் அவருக்கு உறுதியளித்தாள்.
 
இதற்கு என்ன அர்த்தம் என்றால், நீ அவனை ஏற்றுக் கொள்ள தீர்மானித்து விட்டாய். அவன் பணக்காரன், அதில் சந்தேகமில்லை. ஜேனைவிட உனக்கு அதிகமாக நல்ல உடைகளும், வண்டிகளும் கிடைக்கக் கூடும். ஆனால் அவை உனக்கு சந்தோஷத்தைக் கொடுக்குமா?‘
 
நான் அவனை விரும்பவில்லை என்ற அவநம்பிக்கையைவிட உங்களுக்கு வேறு ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?‘ என்றாள் எலிசபெத்.
 
கிடையவே கிடையாது. அவன் கர்வம் படைத்தவன், பழகுவதற்கு இனிமையற்றவன் என நமக்கு எல்லோருக்கும் தெரியும்; ஆனால் நீ அவனை உண்மையாகவே விரும்பினால், இது ஒரு பொருட்டே அல்ல.
 
நான் அவனை விரும்புகிறேன். கண்டிப்பாக நான் அவனை விரும்புகிறேன்என்று கண்ணீருடன் பதிலளித்த அவள், ‘நான் அவனைக் காதலிக்கிறேன். அவனுடைய கர்வம் தகுதியற்றதல்ல. அவன் மிகவும் இனிமையானவன். உண்மையிலேயே அவன் எப்படிப்பட்டவன் என்று உங்களுக்குத் தெரியாது; அதனால் அவனைப்பற்றி அப்படிப் பேசி என்னைக் காயப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்என்றாள்.
 
லிசி, நான் அவனுக்கு என் ஒப்புதலைக் கொடுத்து விட்டேன். அவன் அப்பேற்பட்டவன், அவன் கேட்பதை என்னால் மறுக்கவே முடியாது. அவன் இறங்கி வந்து கேட்டிருக்கிறான். உனக்கு அவன்தான் வேண்டும் என்று தீர்மானத்தில் இருந்தால், என் ஒப்புதலை உனக்கு இப்பொழுது அளிக்கிறேன். ஆனால் மீண்டும் நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வா. உன்னைப்பற்றி நான் நன்கு அறிவேன், லிசி. உனக்கு கணவனாக வரப் போகிறவனை நீ உண்மையாகவே மதித்தால்தான், மேம்பட்டவனாகப் பார்த்தால்தான் நீ, சந்தோஷமாகவும், கௌரவமாகவும் இருக்க முடியும். உற்சாகமும், கலகலப்பாக இருக்கும் நீ பொருந்தாதவனுடன் திருமணம் செய்து கொண்டால் அதனால் கஷ்டப்பட வேண்டி வரும். கெட்ட பெயரிலிருந்தும் துன்பத்திலிருந்தும் உன்னால் தப்ப முடியாது. நீ உன் துணைவனை மதிக்க முடியாமல் தவிக்கும் அந்த துயரத்தை நான் காண நேரிடக் கூடாது. நீ எதில் இறங்கி இருக்கிறாய் என்று உனக்குத் தெரியவில்லைஎன்றார் அவளது தந்தை.
 
மேலும் பாதிக்கப்பட்ட எலிசபெத், நிதானத்துடன் ஆனால் உறுதியுடன் பதிலளித்தாள். டார்சியை உண்மையாக காதலிப்பதாகவும், படிப்படியாக அவளுக்கு அவன்மேல் மாற்றம் உண்டானதையும், அவனுக்கு அவள்மேல் இருக்கும் விருப்பம் ஒரே நாளில் முடிவெடுக்கப்படவில்லை என்றும், பல மாதங்களின் பரீட்சைக்குப்பின் எடுத்த முடிவு என்றும், அவனுடைய நற்குணங்களைத் தீவிரமாகப் பட்டியலிட்டும், அவருக்கு அதனை விளக்கியும், அவர் சந்தேகத்தைப் போக்கி, அவருடைய ஒப்புதலைப் பெற்றாள்.
 
அவள் பேசி முடித்தவுடன் எனதருமை பெண்ணேஎன்ற அவர் எனக்கு இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதுதான் விஷயம் என்றால் அவன் உனக்குத் தகுதியானவன்தான். தகுதியில்லாதவனுக்கு உன்னைக் கொடுக்க எனக்கு மனமிருந்திருக்காதுஎன்றார்.
 
அவனுடைய நற்குணங்களுக்கு மேலும் மெருகூட்டி காண்பிக்க அவன் லிடியாவிற்காகச் செய்ததைக் கூறினாள். அதை அவர் ஆச்சரியத்துடன் கேட்டார்.
 
அற்புதங்கள் இன்றைய மாலைப் பொழுதாயின! அது சரி, டார்சிதான் எல்லாவற்றையும் செய்திருக்கிறானா; அவர்களை ஒன்று சேர்த்து, பணம் கொடுத்து, அவனுடைய கடனைத் தீர்த்து, அவனுக்கு வேலையும் வாங்கிக் கொடுத்திருக்கிறான்! நல்லதாயிற்று. இதனால் எனக்கு கஷ்டமும், பணமும் மிச்சமாகும். இதையே உன் மாமா செய்திருந்தால் நான் அவருக்குக் கட்டாயம் பணம் கொடுக்க வேண்டும், பணம் கொடுத்திருப்பேன்; ஆனால் இந்த ஆழ்ந்த காதல் கொண்டவர்கள் எல்லோரும் தங்கள் போக்கில் எல்லாவற்றையும் நடத்திச் செல்வார்கள். நான் நாளை அவனுக்கு திருப்பிக் கொடுப்பதைப்பற்றி பேசுகிறேன்; அவன் சத்தமாக, புயல்போல் உன்மேலுள்ள காதலைப்பற்றி பேசுவான், அத்துடன் அந்த விஷயம் முடிந்துவிடும்.
 
சில நாட்களுக்கு முன்பு, காலின்ஸிடமிருந்து வந்த கடிதத்தைப் படிக்கையில் எலிசபெத்திற்குண்டான சங்கடத்தை நினைவு கூர்ந்து சிரித்துவிட்டு, அவள் கிளம்புவதற்கு அனுமதி அளித்தார். அவள் அறையைவிட்டு வெளியே செல்லுகையில் மேரியையும், கிட்டியையும் தேடி யாராவது இளைஞர்கள் வந்தால் அவர்களை உள்ளே அனுப்பு, ஏனெனில் நான் ஓய்வாகத்தான் இருக்கிறேன்என்று கூறினார்.
 
எலிசபெத்தின் மனதில் இருந்த பெரிய பாரம் குறைந்தது. ஓர் அரைமணி நேரம் தனது அறையில் உட்கார்ந்து கொண்டு, எல்லாவற்றையும்பற்றி நினைத்துப் பார்த்த பிறகு அவளால் மற்றவர்களுடன் சற்று அமைதியாகக் கலந்து கொள்ள முடிந்தது. அவளுடைய குதூகலத்திற்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது, அம்மாலைப் பொழுது அமைதியாகக் கழிந்தது. இனி எலிசபெத் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். சகஜமும், பரிச்சயமும் அதனால் வரும் சுகமும் விரைவில் ஏற்பட்டுவிடும்.
 
திருமதி. பென்னட் இரவு தன் அறைக்குச் சென்ற பொழுது, எலிசபெத் அவளை பின்தொடர்ந்து சென்று, அந்த முக்கியமான விஷயத்தைத் தெரிவித்தாள். அதன் விளைவு அசாதாரணமாக இருந்தது; அதை முதலில் கேட்ட திருமதி பென்னட், சிலைபோல் அமர்ந்திருந்தாள், ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை. அவள் கேட்டதை புரிந்து கொள்ள அவளுக்கு பல நிமிடங்கள் ஆயிற்று. இதன் மூலம் தன்னுடைய குடும்பத்திற்கு ஆதாயமாக வருகின்ற செய்திகளையும், வரன் ரூபத்தில் வரக் கூடிய செய்திகளையும் புரிந்து கொள்ள முடியாதவள் இல்லை என்றாலும், இவ்வளவு நேரம் தேவைப்பட்டது. ஒரு வழியாக தன்னிலைக்கு வந்த அவள், நிலை கொள்ளாமல் இருக்கையில் அமர்வதும், எழுவதுமாக இருந்தாள். ஆச்சரியப்பட்டாள். தன்னைத்தானே வாழ்த்திக் கொண்டாள்.
 
கடவுளே! என்னை ஆசீர்வாதிப்பாயாக! நினைப்பதற்கே ஆச்சரியமாக உள்ளது! திரு. டார்சி! யார் இதை நினைத்திருப்பார்கள்! உண்மையிலேயே இது நிஜமா. ஓ! எனதருமை லிசி! எவ்வளவு பெரிய பணக்காரியாகவும், பெரிய மனுஷியாகவும் இருப்பாய்! எத்தனை பணம், எவ்வளவு நகைகள் என்னென்ன வண்டிகள் உனக்கு இருக்கும்! இதைப் பார்க்கும் பொழுது ஜேன் ஒன்றுமே இல்லை--ஒன்றுமே இல்லை. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எத்தனை அழகு! -- எத்தனை கம்பீரம்! எவ்வளவு உயரம்!--ஓ! எனதருமை லிசி! நான் முன்பு அவனை வெறுத்ததற்கு என்னை மன்னித்துவிடு. அவன் அதைப் பொருட்படுத்தமாட்டான் என நம்புகிறேன். எனதருமை லிசி! லண்டனில் ஒரு வீடு! உனக்குக் கிடைக்கப் போவது எல்லாமே அழகானது! மூன்று பெண்களுக்கு திருமணம் முடிந்தது! வருடத்திற்கு பத்தாயிரம்! ஓ! கடவுளே! எனக்கு என்ன ஆகும். எனக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கிறதுஎன்று கூவினாள்.
 
அவளுடைய சம்மதத்தைப்பற்றிய சந்தேகத்தை அகற்ற இதுவே போதுமானதாக இருந்தது. தடங்கலின்றி அவளுடைய உணர்ச்சிகளை வெளியில் காண்பித்ததை தான் மட்டும் கேட்க நேர்ந்ததற்கு எலிசபெத் சந்தோஷப்பட்டுக் கொண்டே அங்கிருந்து அகன்றாள். அவள் தனது அறைக்குச் சென்று மூன்று நிமிடங்கள்கூட ஆகியிருக்காது. அவளது தாயார் அவளை பின்தொடர்ந்து வந்து,
 
எனதருமை குழந்தாய்! வேறு எதைப்பற்றியும் என்னால் சிந்திக்க முடியவில்லை! வருடத்திற்கு பத்தாயிரமோ, ஒருவேளை இன்னும் அதிகமோ! லார்ட்என்ற பதவிக்கு சமமாக இருக்கும். உன்னுடைய திருமணம் விசேஷமாக நடக்கும். எனதருமை லிசி, டார்சிக்கு என்ன உணவுவகை மிகவும் பிடிக்கும் என்று சொல், நான் நாளை அதை தயார் செய்வேன்.
 
அவனிடம் அவள் நடந்து கொள்ளப் போவதைப்பற்றிய வேதனையான அறிகுறியாக இது தோன்றியது. அவனுடைய முழு அன்பைப் பெற்றிருந்தாலும், தன் உறவினர்களின் ஒப்புதலைப் பெற்றிருந்த போதிலும், இன்னமும் ஏதோ ஒன்று வேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஆனால் மறுநாள், அவள் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே கழிந்தது. தன் வருங்கால மருமகனிடமிருந்த பிரமிப்பில் திருமதி. பென்னட் அதிகம் பேச முன்வரவில்லை. அவனுக்கு ஏதாவது கவனம் கொடுக்க வேண்டி வந்தபொழுதும் அல்லது அவனது கருத்திற்கு மதிப்பு தெரிவிக்க வேண்டி வந்தபொழுதும் மட்டுமே வாயைத் திறந்தாள்.
 
அவனுடன் மேலும் பழகுவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருந்த அவளுடைய தந்தையைப் பார்த்து எலிசபெத்திற்கு திருப்தி உண்டாயிற்று; ஒவ்வொரு மணி நேரத்திற்கும், அவன் தன்னுடைய மதிப்பில் உயர்ந்து கொண்டே போகிறான் என்பதை திரு. பென்னட் அவளுக்கு விரைவில் உணர்த்தினார்.
 
நான் எனது மூன்று மருமகன்களையும் கண்டு மிகவும் பெருமைப்படுகிறேன். விக்காம் எனக்கு மிகவும் பிடித்தமானவனாக ஒருக்கால் இருக்கலாம், ஜேனுடைய கணவனைப் பிடிப்பதுபோல் உன்னுடைய கணவனையும் எனக்குப் பிடிக்கும் என நினைக்கிறேன்என்றார்.­­­­­­­­



book | by Dr. Radut