Skip to Content

Chapter 16 டார்சி மீண்டும் விடுக்கும் திருமண வேண்டுகோள்

தான் வர முடியாததற்கு ஏதாவது காரணம் சொல்லி பிங்கிலிக்கு அவனுடைய நண்பனிடமிருந்து கடிதம் வரும் என எலிசபெத் எதிர்பார்த்தாள். ஆனால் அதற்கு பதிலாக, லேடி காதரின் வந்துபோன சில நாட்களுக்குள் அவன் டார்சியை அழைத்துக் கொண்டு லாங்க்பர்னுக்கு வந்தான். இருவரும் சீக்கிரம் வந்து சேர்ந்தனர். எதைப்பற்றி நினைத்து எலிசபெத் பயந்து நடுங்கியவாறு அமர்ந்திருந்தாளோ அதைப்பற்றியே திருமதி. பென்னட் ஆரம்பித்தாள். அவனது சித்தியை அவர்கள் பார்த்த விவரத்தை அவள் கூறுவதற்குள், ஜேனுடன், தனியாக இருக்க வேண்டும் என்று பிங்கிலி விரும்பியதால் வெளியே நடந்து செல்லலாம் என்று அவன் கூறினான். அது ஒத்துக் கொள்ளப்பட்டது. திருமதி. பென்னட்டிற்கு நடந்து பழக்கமில்லை என்பதாலும், மேரிக்கு நேரம் ஒதுக்கவே முடியாததாலும், மீதி ஐவரும் ஒன்றாகப் புறப்பட்டனர். பிங்கிலியும், ஜேனும் விரைவில் மற்றவர்களை முன்னுக்குச் செல்ல அனுமதித்தனர். அதனால் அவர்கள் பின்தங்கினர். எலிசபெத், கிட்டி, டார்சி மூவரும் ஒன்றாக நடக்கலானார்கள். யாரும் எதுவும் பேசவில்லை. அவனுடன் பேசுவதற்கே கிட்டிக்கு மிகவும் பயமாக இருந்தது; எலிசபெத் மனதிற்குள் இரகசியமாக ஒரு தீர்மானத்தை உருவாக்கிக் கொண்டிருந்தாள், அவனும் ஒருவேளை அதையே செய்து கொண்டிருந்தான் போலிருந்தது.

அவர்கள் லூகாஸ் இல்லத்தை நோக்கி நடந்தனர், ஏனெனில் கிட்டி மரியாவை சந்திக்க விரும்பினாள். எலிசபெத்திற்கு அது அவசியமாகத் தெரியவில்லை. அதனால் கிட்டி அவர்களை விட்டுச் சென்ற பொழுது, அவனுடன், அவள் தைரியமாகத் தனியாகச் சென்றாள். அவளுடைய தீர்மானத்தை நிறைவேற்ற இதுதான் சரியான தருணம் என்பதால், அவளுடைய தைரியம் அதிகமாக இருக்கும் பொழுதே, அவள் உடனேயே,
 
டார்சி, நான் மிகவும் சுயநலமானவள். என்னுடைய உணர்வுகளுக்கு வடிகால் தேட உன்னுடைய உணர்வுகளை எவ்வளவு காயப்படுத்தப் போகிறேன் எனத் தெரியவில்லை. என்னுடைய சகோதரிக்கு நீ செய்த உதவிக்கு நான் இனியும் நன்றி கூறாமல் இருக்க முடியாது. நீ செய்த உதவியைப்பற்றி தெரிந்ததிலிருந்து, நான் உனக்கு எவ்வளவு கடமைப்பட்டுள்ளேன் என்பதை உனக்குத் தெரிவிக்க ஆவலாக உள்ளேன். என்னுடைய குடும்பத்தில் மற்றவர்களுக்கும் தெரிய வந்திருந்தால், அவர்கள் சார்பிலும் நான் நன்றி கூற வேண்டியிருந்திருக்கும்என்று கூறினாள்.
 
மன்னிக்கவும், மிகவும் மன்னிக்க வேண்டுகிறேன்என்று பதிலளித்த டார்சியின் குரலில் ஆச்சரியமும், மனவெழுச்சியும் கலந்திருந்தது. உனக்குக் கிடைத்திருக்கும் தகவலை நீ தவறான கோணத்தில் பார்த்தால், உனக்கு மனவருத்தம்தான் கிடைக்கும். திருமதி. கார்டினர் இவ்வளவு நம்பத் தகுந்தவரல்லர் என்று நான் நினைக்கவில்லைஎன்றான்.
 
நீ என்னுடைய அத்தையை குறை கூறக் கூடாது. லிடியாவிடம் முன்யோசனை இல்லாததால், நீயும், இதில் ஈடுபட்டிருந்தாய் என்பதை முதலில் அவள் எனக்குத் தெரிவித்து விட்டாள். ஆனால் முழு விவரமும் தெரியும்வரை என்னால், என்னவோ அமைதியாக இருக்க முடியவில்லைதான். உன்னுடைய பெரிய மனதின் காரணமாக, அவர்களைக் கண்டுபிடிக்க நீ எடுத்துக் கொண்ட கஷ்டங்களுக்கும், பட்ட துன்பங்களுக்கும், நான் மீண்டும் மீண்டும் என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நீ எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தால், அது உன் சார்பில் மட்டும் இருக்கட்டும். மற்ற காரணங்களைவிட, உன்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதுதான் நான் இந்த உதவியை செய்வதற்குரிய முக்கிய காரணமாக இருந்திருக்கிறது, இதை நான் மறுக்கவில்லை. உன் குடும்பத்தினர் எனக்கு எந்தவிதத்திலும் கடன்படவில்லை. நான் அவர்களை மதிக்கிறேன் என்றாலும், உன்னை மட்டும்தான் நினைத்து செய்தேன்.
 
ஒரு வார்த்தை பேசுவதற்குக்கூட எலிசபெத்திற்கு மிகவும் வெட்கமாக இருந்தது. சிறிது இடைவெளிக்குப் பிறகு அவன் மீண்டும், ‘நீ விசாலமான மனது படைத்தவள், அதனால் என்னை கேலி செய்ய மாட்டாய். கடந்த ஏப்ரல் மாதம் உனக்கு என்ன உணர்ச்சிகள் இருந்தனவோ, அவை இன்னும் இருந்தால், உடனே என்னிடம் சொல்லிவிடு. என்னுடைய விருப்பங்களும், அன்பும் மாறவில்லை, உன்னிடமிருந்து வரும் ஒரு வார்த்தை, என்னை இந்த விஷயத்தில் நிரந்தரமாக மௌனமாக்கிவிடும்என்றான்.
 
சங்கடமாகவும், கவலையாகவும் இருந்த அவனுடைய நிலையை உணர்ந்த எலிசபெத், தான் பேசியே ஆக வேண்டும் என முயன்றாள்; அவனுடைய வேண்டுகோளை மகிழ்ச்சியாகவும், நன்றியுடனும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு, தன்னுடைய உணர்வுகள், அவன் குறிப்பிட்டிருந்த காலத்திற்குப் பிறகு மாறியுள்ளன என்று, சரளமாக அவனிடம் பேச முடியாவிட்டாலும், உடனடியாக பதிலளித்தாள். இந்த பதில் ஏற்படுத்திய மகிழ்ச்சி அவன் இதுவரை உணராததாக இருந்தது. தீவிரமாக காதல் வயப்பட்டிருக்கும் ஒருவன் எவ்வளவு அறிவுபூர்வமாகவும், அன்பாகவும் பேச முடியுமோ அவ்வளவு அறிவுபூர்வமாகவும், அன்பாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். எலிசபெத் அவனுடைய கண்களை நேருக்கு நேர் பார்த்திருந்தால், டார்சி தெரிவித்த இதயபூர்வமான உணர்வுகள் எப்படி அவன் முகத்தில் பிரதிபலித்து, காண்பதற்கு அழகாக இருந்தது என்பதை அவள் பார்த்திருப்பாள். அவளால் பார்க்க முடியாவிட்டாலும், கேட்க முடிந்தது. அவனுடைய உணர்வுகளைப்பற்றிக் கூறியது, அவள், அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது. மேலும் அவனுடைய அன்பின் மதிப்பு ஒவ்வொரு க்ஷணத்திற்கும் விலை மதிக்க முடியாதபடி கூடிக் கொண்டே சென்றது.
 
எந்த திசையில் செல்கிறோம் என்பதே தெரியாமல் அவர்கள் நடந்தனர். நினைப்பதற்கும், உணர்வதற்கும், பேசுவதற்கும் நிறைய இருந்தன, அதனால் வேறு எதற்கும் கவனம் கொடுக்க முடியவில்லை. தற்பொழுது ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டிருப்பதற்கு அவனுடைய சித்திக்குத்தான் நன்றி கூற வேண்டும் என்று எலிசபெத்திற்குப் புரிந்தது. லேடி காதரின் லண்டன் வழியாகச் செல்லும் பொழுது டார்சியை சந்தித்து அவள் எதற்காக லாங்க்பர்னுக்குச் சென்றாள், அதன் நோக்கம், எலிசபெத்துடன் என்ன பேசினாள், அவள் கூறிய ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கி, தன்னுடைய பயங்களான இத்திருமணம் நடக்க வேண்டும் என்ற எலிசபெத்தின் பிடிவாதம் மற்றும் தவறான ஆசை இவைகளைப்பற்றி டார்சிக்கு விளக்கி, இதனால் எலிசபெத் தராத வாக்குறுதியை அவனிடமிருந்து பெறலாம் என்று நம்பியிருந்தாள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவளுக்கு நேர்மாறான பலனே கிடைத்தது.
 
இதுவரை எந்தவித நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள என்னையே நான் அனுமதித்துக் கொண்டதில்லை, இப்பொழுது இது என் நம்பிக்கையை வளர்த்தது. உன்னைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். உன்னுடைய விருப்பம் நிச்சயம் என்பது தெரிந்து விட்டது. எனக்கு எதிராக முடிவெடுத்திருந்தால் லேடி காதரினிடம் வெளிப்படையாகச் சொல்லியிருப்பாய்என்றான் அவன்.
 
நிறம் மாறிய எலிசபெத் சிரித்தவாறே நான் அவ்வாறு செய்யக் கூடியவள்தான் என்று நீ நம்பும் அளவிற்கு என்னுடைய வெளிப்படையான சுபாவம் உனக்குத் தெரியும். உன் முகத்திற்கெதிராகவே உன்னை வசைபாடியபின், உன்னுடைய உறவினர்களை வசைபாடுவதற்கு எனக்கு எந்தவித தயக்கமும் இருக்க முடியாதுஎன்று பதிலளித்தாள்.
 
எனக்குப் பொருத்தமில்லாத வார்த்தைகளை எதை நீ கூறினாய்? உன்னுடைய குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவைகளாகவும், தவறான காரணங்களின் அடிப்படையிலும் இருந்தன என்றாலும், உன்னிடம் நான் நடந்து கொண்டது மிகவும் கண்டனத்திற்குரியது. அது மன்னிக்க முடியாதது. வெறுப்பில்லாமல் அதை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது.
 
அன்று மாலை யார் அதிகம் தவறு செய்தோம் என்று நாம் சண்டையிட்டுக் கொள்ள வேண்டாம். நம் இருவருடைய நடத்தையையும் மிகச் சரியாக ஆராய்ந்தால், அது தவறே அல்ல; அதன் பிறகு, நாம் இருவரும் மரியாதையாக நடந்து கொள்வதில் சற்று தேறிவிட்டோம் என்று நான் நினைக்கிறேன்.
 
நான் அவ்வளவு சுலபமாக சமாதானமாக முடியாது. அப்பொழுது நான் பேசியது, என்னுடைய நடத்தை, என்னுடைய பண்பற்ற செயல், என்னை வெளிப்படுத்திய விதம் எல்லாமும், இப்பவும் சரி, பல மாதங்களாகவும், எனக்குச் சொல்லொண்ணா வேதனையை அளித்திருக்கிறது. மிகச் சரியாக கூறிய உன்னுடைய கண்டனங்களை, நான் மறக்கவே மாட்டேன். நீ சீரிய குணங்கள் உடையவனாக நடந்து கொண்டிருந்தால்என்பதுதான் உன்னுடைய வார்த்தைகள். உனக்குத் தெரியாது, அந்த வார்த்தைகள் என்னை எவ்வாறு துன்புறுத்தின என்பதை நீ நினைத்தும் பார்க்க முடியாது. நீ கூறியது சரிதான் என்பதை உணர்ந்து நான் நியாயமாக நடந்து கொள்வதற்கு சில நாட்கள் ஆயிற்று.
 
அந்த வார்த்தைகள் இவ்வளவு அழுத்தமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதுபோன்று அவை உணரப்படும் என்று நான் கொஞ்சம்கூட எண்ணிப் பார்க்கவில்லை.
 
என்னால் சுலபமாக இதை நம்ப முடியும். எனக்கு உணர்ச்சிகளே இல்லை என்றுதான் நீ நினைத்துக் கொண்டிருந்தாய், அப்படித்தானே. உன்னை ஏற்றுக் கொள்ளத் தூண்டும் வகையில் நான் பேசியிருக்கவே முடியாது என்று நீ கூறி முகத்தைத் திருப்பிக் கொண்டதை என்னால் மறக்கவே முடியாது.
 
ஓ! நான் அப்பொழுது சொன்னவற்றையெல்லாம் திருப்பிச் சொல்லாதே. இந்த பழைய ஞாபகங்களால் எந்தவித பிரயோஜனமும் இல்லை. இதற்காக நான் வெகுநாட்களுக்கு, மனப்பூர்வமாக வெட்கப்பட்டேன் என்று நிச்சயமாகக் கூற முடியும்.
 
டார்சி அவனுடைய கடிதத்ததைப்பற்றிக் கூறினான். என்னைப்பற்றி விரைவாக, நல்லபடியாக நினைக்க அது உதவியதா? அதைப் படித்ததும் அதில் எழுதியவற்றில் ஏதேனும் உண்மை இருக்கும் என்று நீ நினைத்தாயா?‘
 
அதனால் ஏற்பட்ட விளைவுகளைப்பற்றி அவள் விவரித்தாள். மேலும் எவ்வாறு பழைய தவறான அபிப்பிராயங்கள் மெதுவாக அகன்றன என்பதையும் விளக்கினாள்.
 
எனக்குத் தெரியும். நான் எழுதியவை உனக்கு வருத்தம் அளித்திருக்கும். ஆனால் அது அவசியமாக இருந்தது. நீ அக்கடிதத்தை அழித்திருப்பாய் என்று நினைக்கிறேன். முக்கியமாக அக்கடிதத்தின் முதல் பகுதியை நீ மீண்டும் படிப்பாயோ என்று நினைத்தாலே எனக்குப் பயமாக இருக்கிறது. அதில் சில பகுதிகள் எனக்கு ஞாபகம் இருக்கிறது, அதைப் படித்தால் உனக்கு என்மேல் கண்டிப்பாக வெறுப்பு வரும்.
 
உன்மேல் நான் வைத்திருக்கும் மதிப்பு நீடிப்பதற்கு, அக்கடிதத்தை எரிப்பது என்பது அவசியம் என்று நீ நினைத்தால் அதனை அழித்து விடுகிறேன். என்னுடைய அபிப்பிராயங்கள் மாறும் என்று நாம் இருவரும் நினைப்பதற்கு ஒரு காரணம் இருந்தாலும், அவ்வளவு சுலபத்தில் மாறாது என்றுதான் தோன்றுகிறது.
 
அந்தக் கடிதத்தை எழுதும் பொழுது நான் மிகவும் அமைதியாக இருப்பதாகத்தான் நினைத்தேன். கடிதம் எழுதி முடித்த பிறகுதான், அது மிகவும் கசப்பான உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டேன்என்றான்.
 
அக்கடிதம் ஒருக்கால் மிகுந்த கசப்போடுதான் ஆரம்பித்தது, ஆனால் அவ்வாறு முடிக்கப்படவில்லை. விடைகொடுத்து எழுதிய இடம் மிகுந்த பரிவுடன் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் இனி ஒரு பொழுதும் அதைப்பற்றி நினைக்காதே. அதை எழுதியவரின் மனநிலையும், பெற்றுக் கொண்டவரின் மனநிலையும் அப்பொழுது இருந்ததற்கு இப்பொழுது மிகவும் மாறுபட்டு இருக்கிறது. அதைப்பற்றிய ஒவ்வொரு வருத்தமான சூழ்நிலையும் மறக்கப்பட வேண்டும். என்னுடைய தத்துவத்தை நீ கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் நடந்த எந்தெந்த விஷயங்கள் சந்தோஷத்தை அளிக்கிறதோ அதை மட்டும் நினைத்துப்பார்.
 
எந்த தத்துவத்தின் அடிப்படையிலும் நீ இவ்வாறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. நீ கடந்தவைகளைப்பற்றி நினைக்கும் பொழுது எந்தவித கோபமும் இல்லாமல் நினைத்துப் பார்க்கிறாய், அதனால் எழும் உன்னுடைய மனத்திருப்தி எந்த தத்துவத்தினாலும் அல்ல, அது உன்னுடைய அப்பாவித்தனம்தான். ஆனால் என்னுடையவை அப்படியல்ல. வலிதரும் கடந்த கால நினைவுகள் குறுக்கிடும், அதை துரத்தக் கூடாது. என் வாழ்நாள் முழுவதும் நான் சுயநலவாதியாக வாழ்ந்துள்ளேன். ஆனால் சுபாவமாக நான் சுயநலவாதி இல்லை. குழந்தைப் பருவத்தில் எது சரி என்று மட்டும் கற்றுக் கொண்டேன். ஆனால் என்னுடைய குணத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள கற்கவில்லை. நல்ல கொள்கைகளை எனக்குத் தந்தார்கள். ஆனால் அவற்றை பெருமிதத்தோடும், கர்வத்தோடும் பின்பற்ற ஆரம்பித்தேன். துரதிர்ஷ்டவசமாக நான் ஒரே பையனாக இருந்ததால் (வெகு நாட்களாக ஒரே குழந்தை) என்னுடைய தாய் தந்தையரால் செல்லம் கொடுத்துக் கெடுக்கப்பட்டேன். அவர்கள் நல்லவர்கள் (குறிப்பாக என் தந்தை தர்ம சிந்தனையும், இளகிய மனமும் உடையவர்) என்னை சுயநலவாதியாகவும், மற்றவர்களை வாதத்தில் அடக்குபவனாகவும் மாற்றினர். என்னுடைய குடும்பத்தை விட்டு வெளியில் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதற்கும், உலகத்தில் உள்ளவர்களைப்பற்றி மட்டமாக நினைப்பதற்கும், என்னுடன் ஒப்பிடும் பொழுது மற்றவர்களுடைய அறிவும், திறனும் குறைவாக இருப்பதாக நினைப்பதற்கும் எனக்கு இடம் கொடுத்தார்கள், உற்சாகப்படுத்தினார்கள், ஏறக்குறைய அவ்வாறு கற்றும் கொடுத்தார்கள். எட்டு வயது முதல் இருபத்தி எட்டு வயதுவரை நான் அப்படியே இருந்தேன். உனக்காக மட்டும் இல்லையெனில் நான் இன்னும் அவ்வாறே இருந்திருப்பேன், எனதருமை எலிசபெத்! நான் உனக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்! நீ எனக்கு ஒரு பாடம் புகட்டினாய். முதலில் கஷ்டமாக இருந்தாலும் பின்னால் மிகவும் உபயோகமாக இருந்தது. உன்னால்தான் என்னிடம் பணிவு எழுந்தது. நான் ஏற்றுக் கொள்ளப்படுவேனா என்று சந்தேகமில்லாமல்தான் உன்னிடம் வந்தேன். சந்தோஷப்பட வைக்க எல்லாத் தகுதியும் உள்ள உன்னை, சந்தோஷப்படுத்த என்னிடம் எல்லாம் இருக்கிறது என்று நினைத்தேன், ஆனால் அவையெல்லாம் போதாது என்று எனக்கு நீ உணர்த்திவிட்டாய்.
 
என்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக நீ உன்னை வருத்திக் கொண்டாயா?‘
 
ஆமாம். என்னுடைய தற்பெருமையைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்? நான் வந்து உன்னிடம் கேட்க வேண்டும் என்று நீ ஆசைப்பட்டிருப்பாய், எதிர்பார்த்திருப்பாய் என்று நான் நம்பினேன்.
 
என் நடத்தையில் குறையிருந்திருக்கலாம், ஆனால் வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை என்று உறுதியாகக் கூறுகிறேன். உன்னை ஏமாற்றுவது என் எண்ணமில்லை, ஆனால் என்னுடைய ஆர்வம் அடிக்கடி என்னை தவறாக வழி நடத்திச் சென்றது. அன்று மாலை நீ எப்படி என்னை வெறுத்திருக்க வேண்டும்?‘
 
உன்னை வெறுப்பதா! ஒருவேளை முதலில் கோபப்பட்டிருக்கலாம், ஆனால் பிறகு என்னுடைய கோபங்கள் சரியான திசையில் திரும்பின.
 
நாம் பிம்பெர்லியில் சந்தித்த பொழுது, நீ என்னைப்பற்றி என்ன நினைத்தாய் என்று கேட்கவே பயமாக இருக்கிறது. நான் வந்ததற்கு நீ என்மீது குற்றம் சாட்டினாயா?‘
 
இல்லை, ஆச்சரியத்தைத் தவிர வேறெதுவும் ஏற்படவில்லை.
 
நீ என்னைக் கவனித்ததில், எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தைவிட அதிகமாக, உனக்கு ஆச்சரியம் ஏற்பட்டிருக்காது. இவ்வளவு அதிகமாக எனக்கு மரியாதை தருவதற்கு நான் தகுதியற்றவள் என்று என்னுடைய மனசாட்சி கூறியது. எனக்கு எவ்வளவு மரியாதை கிடைக்க வேண்டுமோ அதற்கும் அதிகமாக கிடைக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
 
என்னால் முடிந்தவரை மரியாதையாக நடந்து கொண்டு, கடந்த காலத்தை நினைத்து கோபித்துக் கொள்ளும் அளவிற்கு அல்பமானவன் இல்லை நான், என்பதைக் காண்பிப்பதே எனது நோக்கமாக இருந்தது. உன்னுடைய கண்டனங்களை எல்லாம் கருத்தில் எடுத்துக் கொண்டு என்னை சரி செய்து கொண்டு விட்டேன் என்று காண்பித்து, உன்னிடம் மன்னிப்புக் கேட்கலாம் என்று நினைத்தேன், என் மேலுள்ள தவறான அபிப்பிராயங்களைக் குறைக்கலாம் என்றும் முயற்சி செய்தேன். மற்ற விருப்பங்கள் எல்லாம் எவ்வளவு சீக்கிரம் அறிமுகமாயின என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் உன்னைப் பார்த்த அரைமணி நேரத்திற்குள் இருக்கும் என்று நம்புகிறேன்.
 
அவளை சந்தித்ததினால் ஜார்ஜியானவிற்கு ஏற்பட்ட சந்தோஷத்தையும், திடீரென்று ஏற்பட்ட தடங்கலினால் அவளுக்கு ஏற்பட்ட வருத்தத்தையும் கூறினான். தடங்கல் ஏற்பட்ட விஷயத்திற்கு இவர்களது உரையாடல் திரும்பியது. அந்த விடுதியிலிருந்து அவள் கிளம்புவதற்கு முன்பே, அவளுடைய சகோதரியைத் தேடுவதற்காக, அவளைத் தொடர்ந்து இவனும் டர்பிஷயரிலிருந்து கிளம்ப வேண்டும் என்று தீர்மானித்திருந்தான் என்பது எலிசபெத்திற்கு விரைவில் தெரிய வந்தது. அவன் மிகவும் தீவிரமாகவும், ஆழ்ந்த யோசனையிலும் அப்பொழுது காணப்பட்டது வேறு எந்த காரணத்தினாலும் அல்ல, இந்த விஷயத்தைக் கேட்ட பிறகுதான் என்பதும் புரிந்தது.
 
அவள் மீண்டும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்தாள். ஆனால் மீண்டும் மீண்டும் பேசுவதற்கு அந்த விஷயம் அவர்கள் இருவருக்கும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.
 
பல மைல்கள் நிதானமாக நடந்த பிறகு, அதை அறியாத அளவிற்கு அவர்கள் வேறு விஷயங்களில் மும்முரமாக இருந்ததினால், இறுதியாக அவர்கள் தங்களது கடிகாரத்தைப் பார்த்த பொழுது, அது வீட்டில் இருக்க வேண்டிய நேரம் என்பது நினைவிற்கு வந்தது.
 
பிங்கிலியும், ஜேனும் என்ன ஆனார்கள்!என்ற கேள்வி அவர்களைப்பற்றிய பேச்சை தொடக்கி வைத்தது. அவர்களுடைய திருமணம் நிச்சயம் ஆனது குறித்து டார்சிக்கு சந்தோஷம் உண்டாயிற்று; அவனுடைய நண்பன் எவ்வளவு சீக்கிரமாக செய்தியை கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக செய்தியைத் தெரிவித்திருந்தான்.
 
உனக்கு இது ஆச்சரியத்தை அளித்ததா என்று நான் கேட்க வேண்டும்?‘ என்றாள் எலிசபெத்.
 
இல்லவே இல்லை. நான் கிளம்பிச் சென்றபின், விரைவில் இது நடக்கும் என எதிர்பார்த்தேன்.
 
அப்படியெனில், நீ உன் அனுமதியைக் கொடுத்திருக்கிறாய் என்றாகிறது. நான் அவ்வாறு இருக்கும் என ஊகித்தேன்.அதைக் கேட்டு அவன் ஆச்சரியமாகக் கூவிய பொழுதும், அது அப்படித்தான் இருக்கும் என அவள் நினைத்தாள்.
 
நான் லண்டனுக்குச் செல்லும் முதல்நாள் மாலை, அவனிடம் உண்மையை ஒப்புக் கொண்டேன். இதை நான் முன்பே செய்திருக்க வேண்டியது. என்னுடைய குறுக்கீடு எவ்வளவு அபத்தம், அதிகப்பிரசங்கித்தனம் என்று நிரூபிப்பதுபோல் பிறகு என்னவெல்லாம் நடந்தது என்று நான் அவனுக்கு விளக்கினேன். அவனுடைய ஆச்சரியம் அதிகமாக இருந்தது. ஆனால் சிறிதளவுகூட அவனுக்கு சந்தேகம் இருக்கவில்லை. உன்னுடைய சகோதரி அவனிடம் அவ்வளவு ஈடுபாட்டுடன் இல்லை என்று தவறாக நான் எண்ணியதை அவனிடம் கூறினேன். அவள்மீது அவனுக்கு, அன்பு தடையின்றி இருப்பதை சுலபமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் இருவரும் சந்தோஷமாக இருப்பார்கள் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமுமில்லை.
 
அவனுடைய நண்பனை வழிநடத்த, அவனுடைய சுலபமான முறையைக் கண்டு அவளால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
 
என்னுடைய சகோதரி அவனைக் காதலிக்கிறாள் என்று கடந்த வசந்த காலத்தில் நான் கூறியதை வைத்துப் பேசினாயா அல்லது உன்னுடைய கணிப்பிலிருந்து தெரிவித்தாயாஎன்று கேட்டாள்.
 
என்னுடைய கணிப்பிலிருந்துதான். நான் கடைசியாக இருமுறை இங்கு வந்த பொழுது அவளை நெருங்கி கவனித்தேன். அவளுடைய அன்பைப்பற்றி எனக்கு சந்தேகமே ஏற்படவில்லை.
 
நீ கூறியதை அவன் உடனே நம்பிவிட்டான் என்று நினைக்கிறேன்.
 
ஆம். பிங்கிலி மிகவும் எளிமையானவன். இவ்வளவு முக்கியமான விஷயத்தில், அவனுடைய அதைரியம் அவனுடைய மதிப்பீட்டை, அவனே நம்புவதற்குத் தடை செய்தது. என்னுடைய தீர்மானத்தில் அவன் பெரும் நம்பிக்கை வைத்தது, எல்லாவற்றையும் சுலபமாக்கியது. நான் ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று, அது அவனை நியாயமாக சிறிது நேரத்திற்கு பாதித்தது. உன்னுடைய சகோதரி மூன்று மாதங்கள் லண்டனில்தான் இருந்தாள் என்றும், எனக்கு அது தெரியும், வேண்டுமென்றேதான் அவனுக்குத் தெரிவிக்கவில்லை என்றும் கூறினேன். அவனுக்கு கோபம் வந்தது. உன்னுடைய சகோதரி அவனை காதலிக்கிறாள் என்று கூறியதை எவ்வளவு சீக்கிரம் நம்பினானோ, அவ்வளவு விரைவில் அவன் கோபமும் விலகியது. அவன் என்னை இப்பொழுது மனப்பூர்வமாக மன்னித்து விட்டான்.
 
பிங்கிலியைப்போல் ஒரு நல்ல நண்பன் இருப்பது மிகவும் சௌகரியம், ஏனெனில் அவனை வெகு சுலபமாக வழி நடத்திச் செல்லலாம், அந்த விதத்தில் அதுபோல் ஒரு நண்பன் இருப்பது விலை மதிப்பற்றது என்று டார்சியிடம் கூற வேண்டும்போல் தோன்றியது. ஆனால் அவ்வாறு கூறாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். மற்றவர்கள் தன்னைப் பார்த்து கேலியாகச் சிரிக்கலாம் என்பது அவனுக்கு இன்னும் தெரியாமல் உள்ளது என்பதும் அவளுக்கு ஞாபகம் வந்தது. ஆனால் இப்பொழுது அவனுக்கு நகைச்சுவையை ரசிப்பதற்கு நேரம் இல்லை என்பதால் எதுவும் கூறவில்லை. தன்னுடைய சந்தோஷத்தைவிட குறைவாகவே இருக்கப் போகும் பிங்கிலியின் சந்தோஷத்தினை எதிர்பார்த்தவாறே, அவர்கள் வீடு செல்லும்வரை, அவன் பேசிக் கொண்டே வந்தான். ஹாலுக்கு வந்து சேர்ந்தவுடன் இருவரும் பிரிந்தனர்.

 



book | by Dr. Radut