Skip to Content

Chapter 10 டார்சியின் பங்கு வெளிப்படுதல்.

எவ்வளவு விரைவில் அவளுக்கு பதில் கிடைக்க முடியுமோ அவ்வளவு விரைவில் அவளுடைய கடிதத்திற்கு பதில் வந்தது, எலிசபெத்திற்குத் திருப்தியாக இருந்தது. அக்கடிதம் கைக்குக் கிடைத்தவுடன், கடிதத்தின் நீளம், அவளுக்கு மறுப்பு தெரிவித்து எழுதப்படவில்லை என்ற நம்பிக்கையை அளித்ததால், சந்தோஷத்துடன், யாருடைய குறுக்கீடும் இல்லாத புதர் அடர்ந்த ஒரு சிறிய காட்டினுள் அவசரமாகச் சென்று அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.

கிரேஸ்சர்ச் தெரு, செப்டம்பர், 6
 
எனதருமை மருமகளே,
 
            ‘உன்னுடைய கடிதம் இப்பொழுதுதான் கிடைத்தது. சுருக்கமாக எழுதினால் நான் உனக்குச் சொல்ல வேண்டியவைகள் அனைத்தும் எழுத முடியாது என்பதால் உனக்கு பதிலளிக்க இந்தக் காலை நேரம் முழுவதையும் எடுத்துக் கொள்வேன். உன்னுடைய கோரிக்கையைக் கேட்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும், இதை உன்னிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. என்னைக் கோபித்துக் கொள்ளாதே, ஏனெனில் உன்னிடமிருந்து இம்மாதிரி ஒரு விசாரிப்பு அவசியம் இல்லை என்று நான் நினைத்தேன். என்னைப் புரிந்து கொள்ள விருப்பமில்லை என்றால் என்னுடைய அதிகப் பிரசங்கித்தனத்திற்கு மன்னிக்கவும். என்னைப்போலவே உனது மாமாவும் மிகவும் ஆச்சரியப்பட்டார்--நீ சம்பந்தப்பட்டு இருப்பதால் மட்டுமே அவன் அவ்வாறு நடந்து கொள்ள அவனை அனுமதித்திருக்கிறது. ஆனால் உனக்கு உண்மையிலேயே எதுவும் தெரியாது என்றால் நான் தெளிவாகவும், விளக்கமாகவும் கூற வேண்டும். லாங்க்பர்னிலிருந்து வீடு திரும்பிய அன்றே, உனது மாமாவிற்கு எதிர்பாராத ஒரு விருந்தினராக டார்சி வந்தான், அவருடன் பல மணிநேரம் உள்ளே தாழிட்டு இருந்தான். நான் வருவதற்குள் எல்லாம் முடிந்து விட்டது, அதனால் விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உன்னைப்போல் அவ்வளவு தீவிரமாக எனக்கு இருக்கவில்லை. உன்னுடைய சகோதரியையும், விக்காமையும் கண்டுபிடித்து விட்டதைப்பற்றியும், அவர்களை சந்தித்ததைப்பற்றியும், விக்காமிடம் பல தடவைகளும், லிடியாவிடம் ஒரு முறை பேசியதைப்பற்றியும், திரு. கார்டினரிடம் கூறுவதற்காக வந்தான். அவன் கூறியவைகளிலிருந்து நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால், டர்பிஷயரைவிட்டு நாம் கிளம்பிய மறுநாள் அவனும் கிளம்பி, அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில், லண்டன் வந்திருக்கிறான். எதற்கும் லாயக்கில்லாத விக்காமுடைய குணம் வெளியே தெரிந்தால், நல்ல பண்புள்ள எந்தப் பெண்ணும் அவனைக் காதலித்திருக்க மாட்டாள், அவனை நம்பியிருக்க மாட்டாள், இதற்குக் காரணம் தான்தான் என்பதினால்தான், உதவி புரிவதாகக் கூறினான். தன்னுடைய தவறான கர்வம்தான் இதற்குக் காரணம் என்பதை தாராளமாக ஒத்துக் கொண்டான். அவனுடைய தனிப்பட்ட நடவடிக்கைகளை உலகத்தின்முன் எடுத்துச் சொல்வது என்பது தன்னுடைய தகுதிக்குகீழ் என்று முன்பு நினைத்திருந்ததாகக் கூறினான். அவனுடைய குணமே இதை உண்மை என்று நிரூபிக்கப் போதுமானது. தன்னால் நிகழ்ந்துள்ள இத்தீமைக்குப் பரிகாரம் செய்ய முன்வருவது தன்னுடைய கடமை எனச் சொன்னான். வேறு ஏதாவது ஒன்று காரணமாக இருந்தாலும், அது அவனுக்கு அவமானத்தைத் தேடித் தராது என்பது உறுதி. அவர்களைக் கண்டுபிடிப்பதற்குமுன் அவன் சில நாட்களாக லண்டனில் இருந்திருக்கிறான்; அவனுடைய தேடுதலை வழிநடத்திச் செல்வதற்கு நம்மைவிட அதிகமாக ஏதோ ஒன்று அவனுக்கு உதவி செய்வதற்கு இருந்தது. நம்மைப் பின்தொடர்ந்து வர அவன் தீர்மானித்ததற்கும் இந்த தெரிதலும் ஒரு காரணம். முன்பு மிஸ். டார்சிக்கு கவர்னஸ்ஸாக இருந்த, என்ன காரணம் என்று கூறவில்லை, ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்ட திருமதி. யங் என்கிற ஒரு பெண்மணி இருக்கிறாள் போலுள்ளது. அவள் பிறகு எட்வார்ட் தெருவில் ஒரு பெரிய வீடு எடுத்து, அதனை வாடகைக்கு விட்டு தன்னைப் பராமரித்துக் கொண்டு வருகிறாள். டார்சி லண்டனுக்கு வந்த உடனேயே, இந்த யங் என்கிற பெண்மணி, விக்காமுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்திருந்ததால், அவனைப்பற்றி விசாரிக்க அவளிடம் சென்றிருக்கிறான். ஆனால் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்புதான் அவனுக்கு என்ன தேவையாக இருந்ததோ அதை அவளிடமிருந்து பெற முடிந்தது. லஞ்சம் வாங்காமலும், நேர்மையான முறையிலும் நம்பிக்கை துரோகம் செய்ய அவள் தயாராக இல்லை. ஏனெனில் அவளுடைய நண்பனை எங்கு கண்டுபிடிக்க முடியும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. லண்டனுக்கு முதலில் வந்து சேர்ந்தவுடன், விக்காம் அவளிடம்தான் சென்றிருக்கிறான். தன்னுடைய இல்லத்திற்கு வரவேற்க அவளால் முடிந்திருந்தால், அவன் அவளிடத்தைத்தான் தன்னுடைய இருப்பிடமாக வைத்துக் கொண்டு இருந்திருப்பான். இறுதியில், எப்படியிருப்பினும் நமது நண்பன் எங்கு போக வேண்டுமோ அவ்விடத்தைக் கண்டுபிடித்தான். அவர்கள் ------- தெருவில் இருந்தனர். அவன் விக்காமைச் சந்தித்தான், பிறகு லிடியாவையும் சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தினான். அவளிடம், அவனுடைய முதல் நோக்கமே, அவளை இந்த ஒரு அவமானகரமான நிலைமையிலிருந்து வெளியேற்றி எவ்வளவு விரைவாக அவளுடைய நண்பர்கள் அவளை வரவேற்கத் தயாராக இருக்கின்றனரோ அவ்வளவு விரைவாக அவர்களிடம் செல்ல தன்னாலான உதவியை செய்வதாகச் சொல்லி அவளை இசைய வைப்பதுதான். ஆனால் லிடியாவோ தான் எங்கிருக்கிறாளோ அங்கேயே இருப்பதில் உறுதியாக இருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டான். அவளுடைய நண்பர்கள் யாரைப்பற்றியும் அவள் சிறிதும் கவலைப்படவில்லை, அவனுடைய உதவியையும் அவள் விரும்பவில்லை, விக்காமை விட்டுச் செல்வது என்பதைப்பற்றி கேட்கவும் விருப்பப்படவில்லை. அவர்கள் இருவரும் எப்பொழுதாவது திருமணம் செய்து கொள்வார்கள் என்பதில் உறுதியாக இருந்தாள், எப்பொழுது என்பதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவளுடைய எண்ணம் இவ்வாறாக இருந்ததினால், திருமணத்தை நடத்த வேண்டியதுதான் பாக்கி என அவன் நினைத்தான். விக்காமுடன் பேசிய முதல் உரையாடலிலேயே அவனுக்கு இதுபோன்ற ஒரு எண்ணமே இல்லை என்பதை சுலபமாகப் புரிந்து கொண்டான். படைப்பிரிவில், அவன் கடனாளி ஆகிவிட்டதால் அது அவனை, அதைவிட்டு வெளியேற மிகவும் நெருக்கியது என்பதை அவனே ஒத்துக் கொண்டான். லிடியா ஓடி வந்ததினால் நிகழ்ந்த எல்லா கெடுதல்களுக்கும் அவளுடைய முட்டாள்தனம்தான் காரணம் என்று கூறுவதற்கு அவன் தயங்கவில்லை. தன்னுடைய வேலையை உடனே ராஜினாமா செய்யப் போவதாகவும், எதிர்காலத்தைப்பற்றி எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை என்பதும் தெரிந்தது. எங்கேயாவது போக வேண்டும், எங்கு போவது என்று அவனுக்குப் புரியவில்லை, தனக்கு வாழ பணம் எதுவும் இல்லை என்பதும் அவனுக்குத் தெரிந்தது. ஏன் உனது சகோதரியை உடனே திருமணம் செய்து கொள்ளவில்லை என டார்சி கேட்டான். திரு. பென்னட் மிகவும் பணக்காரர் என்பது இல்லை என்றாலும், அவனுக்கு ஏதாவது செய்திருக்க முடிந்திருக்கும். அதனால் திருமணத்தால் அவனுடைய நிலை முன்னேறியிருக்கும். ஆனால் வேறு ஒரு ஊரில், இன்னும் சாதகமாக, தன்னுடைய செல்வ வளத்தைத் திருமணம் மூலம் ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இன்னும் இருந்தான் என்று இந்தக் கேள்விக்கு பதில் அவனுக்குக் கிடைத்தது. அம்மாதிரி ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில், உடனேயே ஒரு உதவி கிடைக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இல்லை. அவர்களுக்கு விவாதிக்க நிறைய விஷயங்கள் இருந்ததினால், அவர்கள் பல தடவைகள் சந்தித்துக் கொண்டனர். விக்காம் எதிர்பார்த்தது என்னவோ அதிகமாகத்தான் இருந்தது. ஆனால் இறுதியில் நியாயமாக இருக்க வற்புறுத்தப்பட்டது. இருவரிடையே எல்லாம் பேசி முடிக்கப்பட்டது. டார்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை உனது மாமாவிற்கு இதைப்பற்றி தெரிவிப்பதுதான். நான் வீடு திரும்பிய நாளுக்கு முதல்நாள் மாலை கிரேஸ்சர்ச் இல்லத்திற்கு முதலில் வந்திருந்தான். திரு. கார்டினரை அங்கு பார்க்க முடியவில்லை. மேலும் விசாரித்ததற்கு உனது தகப்பனார் இன்னும் அவருடன்தான் இருக்கிறார், ஆனால் மறுநாள் காலை ஊரைவிட்டுக் கிளம்ப இருக்கிறார் என்ற செய்தி அவனுக்குத் தெரிய வந்தது. உனது மாமாவிடம் ஆலோசனை கேட்பதுபோல், உனது தகப்பனாரிடம் கேட்க முடியாது என்று அவன் மதிப்பிட்டதால், உனது தகப்பனார் கிளம்பும்வரை, மாமாவை சந்திப்பதை தள்ளிப் போட்டான். மறுநாள்வரை, யார் வந்தார் என்பது தெரியவில்லை, அவன் தன் பெயரைக் கூறாமல் சென்றிருந்தான். வேலை விஷயமாக ஒரு நபர் வந்திருந்தார் என்பது மட்டுமே தெரிந்தது. சனிக்கிழமையன்று அவன் மீண்டும் வந்தான். உனது தகப்பனார் கிளம்பி விட்டார், மாமா வீட்டில் இருந்தார். நான் முன்பு கூறியதுபோல் இருவரும் நிறைய பேசினர். மறுபடியும் ஞாயிறு அன்று இருவரும் சந்தித்தனர், நானும் அவனைப் பார்த்தேன். திங்கள் கிழமைக்குமுன் எதுவும் தீர்மானம் செய்யப்படவில்லை, தீர்மானித்த விரைவிலேயே, லாங்க்பர்னுக்குத் தந்தி அனுப்பப்பட்டது. ஆனால் நமது விருந்தினரோ மிகவும் பிடிவாதமாக இருந்தார். பிடிவாதம்தான் அவனுடைய மிகப் பெரிய குறை என்று நான் நினைக்கிறேன், லிசி. வெவ்வேறு சமயத்தில் அவனிடம் நிறைய குறைகள் இருக்கின்றன என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது, ஆனால் இதுதான் நிஜமான குறை. செய்வதற்கும் எதுவுமில்லை, எல்லாவற்றையும் அவனே செய்து முடித்தான், உன்னுடைய மாமா (நன்றி சொல்வதற்காக நான் இதைக் கூறவில்லை, ஆகையால் இதைப்பற்றி ஒன்றும் சொல்லாதே) முழுவதையும், தானே முழுமனதுடன் தீர்த்து வைத்திருப்பார் என்பது நிச்சயம். இருவருமாகச் சேர்ந்து இதைப்பற்றி வெகு நேரத்திற்கு விவாதித்து, சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்கள் இவ்வாறு செய்தது, இதில் சம்பந்தப்பட்டிருக்கும் நபருடைய தகுதிக்கும், பெண்மணியுடைய தகுதிக்கும் மீறியதாக இருந்தது. இறுதியில் உனது மாமா அவனுக்கு இணங்க வேண்டியதாயிற்று. தன்னுடைய மருமகளுக்கு உதவியாக இருக்க அனுமதி கொடுக்காமல், உதவியதாக பெருமையை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. இது அவருக்கு முற்றிலும் பிடிக்கவில்லை. அதனால் உன்னுடைய கடிதம் இன்று காலையில் கிடைத்தவுடன் அவருக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. செய்யாத உதவிக்குப் பெருமை கிடைத்ததைத் தெரிவித்து, யார் இதற்கு உண்மையிலேயே நன்றிக்குரியவர் என்பதனையும் கூறுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த விஷயம் உன்னைத்தாண்டி யாரிடமும் போக வேண்டாம், அப்படி சொல்வதாக இருந்தால் ஜேனிடம் மட்டும் சொல்லலாம். இந்த இளம் நபர்களுக்கு என்ன செய்யப்பட்டது என்று உனக்கு நன்றாகத் தெரியும் என்று நான் நினைக்கிறேன். அவனுடைய கடன்கள் எல்லாம் அடைக்கப்பட வேண்டும், ஓராயிரம் பவுனிற்கும் மிக அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், மேலும் அவளுக்கு என்று இருக்கும் பவுனைத் தவிர மேலும் ஓராயிரமும் மற்றும் அவனுக்கு வேலையும் வாங்கித் தரப்பட வேண்டும். ஏன் அவன் மட்டும் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்குக் காரணம், நான் மேலே கூறியவாறாக இருக்க வேண்டும். விக்காமை எல்லோரும் தவறாகப் புரிந்து கொண்டும், ஏற்றுக் கொண்டிருப்பதற்கு டார்சியும் அவனுடைய சங்கோஜமான சுபாவமும், யோசிக்காமல் நடந்து கொண்டதும் ஒரு காரணம்தான். இதில் ஒருவேளை உண்மை இருக்கலாம். இருந்தாலும் அவனோ அல்லது வேறு எவரேனுமோ இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். இவ்வாறாகப் பேசுவதெல்லாம் சரி லிசி, ஆனால் இவையெல்லாவற்றையும் மீறி அவனுக்கு இந்த விவகாரத்தில் வேறு ஏதோ ஒரு அக்கறை இருக்கிறது என்று உனது மாமா நினைத்ததனால்தான் இதற்கு சம்மதித்தார். இவையெல்லாம் தீர்மானம் செய்த பிறகு, பிம்பெர்லியில் இன்னமும் தங்கியிருந்த தன் நண்பர்களிடம் மீண்டும் திரும்பினான். ஆனால் திருமணம் நடக்கும் பொழுது அவன் மீண்டும் ஒரு முறை லண்டனுக்கு வர வேண்டும் என்று ஒத்துக் கொள்ளப்பட்டது, அங்கு எல்லா பணவிவகாரங்களும் இறுதியாகத் தீர்மானிக்கப்படுவதாக இருந்தது. இப்பொழுது நான் உனக்கு எல்லாவற்றையும் கூறி விட்டேன் என்று நினைக்கிறேன். நான் கூறுவது உனக்கு ஆச்சரியத்தை அளிக்கப் போகிறது என்று நீ சொல்கிறாய். இதனால் உனக்கு எந்த வருத்தமும் ஏற்படாது என்று நினைக்கிறேன். லிடியா இங்கு வந்தாள், விக்காமும் இந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தான். ஹர்ட்போர்ட்ஷயரில் அவன் எப்படி இருந்தானோ அச்சாக அதேபோல்தான் இருந்தான். ஆனால் லிடியா இங்கு எங்களுடன் தங்கியிருந்த பொழுது அவளுடைய நடத்தை எவ்வளவு திருப்தியாக இருந்தது என்று என்னால் உனக்குச் சொல்ல முடியாது. போன புதனன்று கிடைத்த ஜேனுடைய கடிதத்தின் மூலம், அவள் அங்கு வீட்டிலும், எவ்வாறு நடந்து கொண்டாள் என்று தெரிந்து கொண்டதிலிருந்து, நான் லிடியாவைப்பற்றி இப்பொழுது கூறுவது, புதிதாக உனக்கு எந்த வருத்தத்தையும் அளிக்காது. எவ்வளவு தவறு செய்திருக்கிறாள், எவ்வளவு வருத்தத்தை அவளது குடும்பத்தினருக்கு அளித்திருக்கிறாள் என்பதை மறுபடியும் மறுபடியும் கடுமையாக அவளிடம் விளக்கிக் கொண்டிருந்தேன். அவள் நான் பேசுவதைக் கேட்டிருந்தால் அது அதிர்ஷ்டம்தான், ஏனெனில் அவள் கேட்டுக் கொள்ளவேயில்லை என்பது நிச்சயமாக எனக்குத் தெரியும். சில சமயம் எனக்கு மிகவும் எரிச்சல் உண்டாயிற்று, ஆனால் பிறகு எனதருமை எலிசபெத்தையும், ஜேனையும் ஞாபகப்படுத்திக் கொண்டேன், அவர்களுக்காக நான் அவளிடம் பொறுமையாக இருந்தேன். டார்சி சரியான நேரத்திற்குத் திரும்பினான். லிடியா உன்னிடம் சொன்னதுபோல் திருமணத்தில் பங்கேற்றுக் கொண்டான். மறுநாள் இங்கு எங்களுடன் உணவு உண்டான், புதன் அல்லது வியாழனன்று லண்டன் திரும்புவதாக இருந்தான். அவனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது (இதற்கு முன்பு இதைச் சொல்ல எனக்கு தைரியம் இருக்கவில்லை) என்று உன்னிடம் சொல்ல இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதினால் உனக்கு என்மேல் கோபம் வருமா லிசி? டெர்பிஷயரில் இருந்த பொழுது அவன் நம்மிடம் எவ்வளவு இனிமையாக நடந்து கொண்டானோ அதேபோல் இப்பொழுது எங்களிடம் எல்லாவிதத்திலும் இனிமையாக நடந்து கொண்டான். அவனுடைய அறிவும், கருத்துக்களும் எல்லாம் எனக்கு பிடித்திருந்தது, இன்னும் சற்று கலகலப்பாக இருக்கலாம். வேறெதுவும் அவனுக்குத் தேவையில்லை. அவன் புத்திசாலித்தனமாகத் திருமணம் செய்து கொண்டால், அவனுடைய மனைவி அவனுக்கு கற்றுத் தரலாம். அவன் மிகவும் இரகசியமானவனாக இருக்கிறான் என நினைத்தேன், உன்னுடைய பெயரை ஒரு தடவை கூட உச்சரிக்கவில்லை. ஆனால் இரகசியமாக இருப்பதுதான் நாகரீகம் போலும். என்னை மன்னித்துவிடு, நான் ஒருவேளை அப்படி அளவுக்குமீறி, அவ்வாறு நினைக்கிறேன் போலுள்ளது அல்லது என்னை பிம்பெர்லியில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்குமளவிற்கு என்னை தண்டித்துவிடாதே. அங்கு இருக்கும் பூங்காவை முழுவதுமாக சுற்றிப் பார்த்தபின்தான் நான் சந்தோஷமடைவேன். இரண்டு அழகான குதிரை குட்டிகளுடன் ஒரு தாழ்வான வண்டி, மிகவும் ஏற்றதாக இருக்கும். இதற்குமேல் எதுவும் எழுத முடியாது. இந்த அரைமணி நேரமாக குழந்தைகள் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அக்கறையுடன் உனது,
 
ம. கார்டினர்.
 
கடிதத்தில் எழுதியிருந்தது எலிசபெத்தின் உற்சாகத்தை சிறகடித்து பறக்க வைத்தது. அதில் சந்தோஷம் அதிகம் இருந்ததா அல்லது மனக்கஷ்டம் அதிகம் இருந்ததா என்பதை நிர்ணயிக்க முடியவில்லை. டார்சி திருமணத்திற்கு வந்திருக்கிறான் என்று தெரிந்தவுடன், எதற்காக அவளுடைய சகோதரியின் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறான் என்பதற்குரிய காரணம் புரியவில்லை. ஒருவேளை அவளுக்காகத்தான் இவ்வாறு உதவி செய்திருக்கிறானோ என்ற எண்ணம் அவளுக்கு எழுந்தது. ஆனால் இந்த எண்ணத்தை அவளுக்கு நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருந்தது. அவன் மிகவும் நல்லவனாக இருந்தால் மட்டுமே இவ்வாறு நடந்து கொள்ள முடியும், இவர்கள் அவனுக்குக் கடமைப்பட்டவர்களாக மாறியிருப்பர். ஆனால் எதனை நினைத்து கவலைப்பட்டாளோ, அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டு, இவளுக்காகத்தான் அவன் உதவி செய்தான் என்று தெரியவந்து, இவர்கள் உண்மையிலேயே அவனுக்குக் கடனாளி ஆகிவிட்டனர். வேண்டும் என்றேதான், அவர்கள் பின்னாடியே அவன் லண்டனுக்கு வந்திருக்கிறான், அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டிய கஷ்டங்களை அவனே எடுத்துக் கொண்டிருக்கிறான். எந்தப் பெண்மணியை அவன் வெறுத்தானோ அவளிடம் கெஞ்சியிருக்கிறான், எந்த மனிதனைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தானோ, எந்த மனிதனின் பெயரைக்கூட கூற விருப்பமில்லையோ அவனை அடிக்கடி சந்திக்க வேண்டி வந்தது, அவனை எல்லாவற்றிற்கும் ஒத்துக் கொள்ள வைக்கும்படி ஆயிற்று, அவனை வற்புறுத்தும்படியும், அவனுக்கு லஞ்சம் கொடுக்கும்படியும் ஆயிற்று.
 
அவனுக்கு எந்தவித பாசமும், மதிப்பும் இல்லாத ஒரு பெண்ணிற்காக அவன் இவ்வளவு செய்திருக்கிறான். தனக்காகத்தான் செய்திருக்கிறான் என்று அவளது உள்மனம் கூறிற்று. ஆனால் மற்ற பலவற்றைக் கருத்தில் எடுத்துக் கொண்டு பார்க்கும் பொழுது அவளது நம்பிக்கை விரைவில் ஆட்டம் கண்டது. அவனை நிராகரித்த ஒரு பெண்ணிற்காக, விக்காம் மேலிருக்கும் வெறுப்பையும் மீறி அவன் இவ்வாறு நடந்து கொண்டிருப்பான் என்று நினைப்பதற்கு அவளுடைய தற்பெருமையும் போதவில்லை. விக்காம் அவனுடைய ஒன்றுவிட்ட சகோதரன்! எந்த ஒரு கர்வமான மனிதனும் இப்படிப்பட்ட தொடர்பை கண்டிப்பாக எதிர்ப்பான். அவன் அதிகம் செய்திருக்கிறான். இது நிச்சயம். எவ்வளவு செய்திருப்பான் என்று நினைப்பதற்கு அவளுக்கு வெட்கமாக இருந்தது. தன்னுடைய குறுக்கீட்டிற்கு அவன் ஒரு காரணத்தைக் கூறியிருக்கிறான், அதை நம்புவது கஷ்டமாக இல்லை. தன்னுடைய தவறுதான் இதற்குக் காரணம் என்று அவன் நம்பியது அர்த்தமுள்ளதாக இருந்தது, அவனுக்கு தாராள மனம் இருந்தது, அதனை செயல்படுத்துவதற்கும் அவனுக்கு வழி இருந்தது. இதனை செய்யத் தூண்டியதற்கு, தான் முக்கிய காரணமில்லை என்று நினைத்தாள். தன்னிடத்து இன்னும் சிறிது அன்பு மீதி இருந்திருக்குமேயானால், தன் மனது கஷ்டப்படக் கூடாது என்பதற்காக அவன் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம். இதற்கு பதில் உதவி கிடைக்கக் கூடிய வாய்ப்பு இல்லாத ஒருவனுக்கு, அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று நினைத்து, அவளுக்கு மிகவும் வேதனையாகவும், வலியாகவும் இருந்தது. லிடியாவின் நடத்தையையும், லிடியாவையும், எல்லாவற்றையும் அவன் திருப்பி கொடுத்ததற்கு அவனுக்கு மிகவும் கடன்பட்டவர்களாக மாறினர். அவனைப்பற்றி மோசமாக நினைத்ததற்கும், அவனிடத்து பேசிய கடுமையான வார்த்தைகளுக்கும் இப்பொழுது மனதார வருந்தினாள். அவனை நினைத்து அவளுக்குப் பெருமையாக இருந்தது. தன்னை நினைத்து அவளுக்கு ஒரு பணிவும் எழுந்தது. அவர்களது குடும்பத்திற்குக் காட்டிய பரிவும், குடும்பத்தின் மரியாதையைக் காப்பாற்றும் பணியில் அவன் தன்னுடைய சுபாவத்தையும் தாண்டி வந்து செயல்பட்டிருக்கிறான் என்பதில் அவளுக்குப் பெருமை உண்டாயிற்று. அவனைப்பற்றி தனது அத்தை எழுதியதை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தாள். அது அவளுக்குப் போதுமானதாக இல்லை, ஆனால் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியது. தனக்கும், டார்சிக்கும் இடையே அன்பும், பரஸ்பர நம்பிக்கையும் இருக்கிறது என்று அவளது அத்தையும், மாமாவும் நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட எலிசபெத்திற்கு சந்தோஷம் கிடைத்த போதிலும் வருத்தமும் உண்டாயிற்று.
 
யாரோ ஒருவர் வருவதைக் கண்டு தன்னுடைய இருக்கையிலிருந்தும், நினைவுகளிலிருந்தும் வெளியே எழுந்து வந்தாள், மற்றொரு பாதையில் அவள் செல்வதற்குள், விக்காமினால் எதிர்கொள்ளப்பட்டாள்.
 
அவளுடன் சேர்ந்து கொண்ட அவன் நீ தனியாகச் சுற்றிக் கொண்டிருந்ததை இடைமறிக்கிறேன் என்று நினைக்கிறேன், எனதருமை சகோதரி?‘ என்றான்.
 
ஆம். நிச்சயமாக இடைமறிக்கிறாய்,‘ என்று சிரிப்புடன் பதிலளித்த எலிசபெத், ‘ஆனால் இந்த இடைமறிப்பு வரவேற்கத்தக்கதல்ல என்று அர்த்தமாகாதுஎன்றாள்.
 
அப்படி இருந்தால் எனக்கு வருத்தமாக இருந்திருக்கும். நாம் எப்பொழுதுமே நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறோம்; இப்பொழுது மேலும் நெருங்கி விட்டோம்என்றான் அவன்.
 
உண்மைதான். மற்றவர்களும் வெளியே வருகிறார்களா?‘
 
எனக்குத் தெரியாது. திருமதி. பென்னட்டும், லிடியாவும் வண்டியில் மெரிடனிற்குச் செல்கிறார்கள். சரி, எனதருமை சகோதரியே, நமது அத்தை, மாமாவிடமிருந்து, நீ உண்மையாகவே பிம்பெர்லியைப் பார்த்து விட்டாய் என்று தெரிந்து கொண்டேன்.
 
ஆம் என்று பதலளித்தாள்.
 
அந்த சந்தோஷம் உனக்குக் கிடைத்தது எனக்குப் பொறாமையாக இருக்கிறது, எனக்கு அது அதிகமாகத்தான் இருக்கும். இல்லையெனில் நியுகேஸிலிற்குப் போகும் வழியில் நான் அங்கும் சென்றுவிட்டுப் போவேன். அந்த வீட்டைப் பராமரிக்கும் வயதான பெண்மணியை சந்தித்தாய், அப்படித்தானே? பாவம் ரெனால்ட்ஸ், அவளுக்கு எப்பொழுதுமே என்னைக் கண்டால் மிகவும் பிடிக்கும். ஆனால் என் பெயரை அவள் பிரஸ்தாபிக்கவில்லை போலிருக்கிறது.
 
ஆம். அவள் உன் பெயரைக் குறிப்பிட்டாள்.
 
அவள் என்ன கூறினாள்?‘
 
நீ இராணுவத்தில் சேர்ந்து விட்டாய் என்றாள், அது சரியாக அமையவில்லை என்று பயந்து கொண்டிருந்தாள். அதுபோன்று, அவ்வளவு தூரத்தில் இருப்பதால், விஷயங்கள் மாறிப் போய்விடுகின்றன.
 
நிச்சயமாகஎன்று உதட்டைக் கடித்தவாறு பதிலளித்தான். அவனைப் பேச முடியாதபடி ஆக்கிவிட்டதாக எலிசபெத் நினைத்தாள்; ஆனால் விரைவிலேயே அவன்,
 
போன மாதம் லண்டனில் டார்சியைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். அவன் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
 
ஒருவேளை மிஸ். டி பர்க்குடன், அவனுடைய திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்திருப்பான்என்ற எலிசபெத் வருடத்தின் இந்த சமயத்தில் அவனை அங்கு வரச் செய்ததற்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட காரணம் இருக்கும்என்றாள்.
 
சந்தேகமில்லாமல். லாம்ப்டனில் இருக்கும் பொழுது அவனைப் பார்த்தாயா? கார்டினர் தம்பதிகள் மூலம் நீ அவனை சந்தித்ததை நான் தெரிந்து கொண்டேன்.
 
ஆமாம்; எங்களை அவனது சகோதரிக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.
 
உனக்கு அவளைப் பிடித்திருக்கிறதா?‘
 
மிகவும் பிடித்துள்ளது.
 
இந்த ஓரிரு வருடத்தில் அவளிடம் அசாதாரண முன்னேற்றம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நான் கடைசியாகப் பார்த்த பொழுது அவள் அவ்வளவு சிறப்பாக வருவாள் என்று எனக்குத் தோன்றவில்லை. அவளை உனக்குப் பிடித்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். அவள் நல்லபடியாக மாறிவிடுவாள் என நினைக்கிறேன்.
 
நிச்சயமாக மாறிவிடுவாள், ஆபத்தான வயதை அவள் சமாளித்து விட்டாள்.
 
கிம்ப்டென் வழியாகச் சென்றீர்களா?‘
           
நாங்கள் போனதாக எனக்கு ஞாபகம் இல்லை.
 
அந்த இடத்தில்தான் நான் வேலையில் இருந்திருக்க வேண்டும், அதனால்தான் கூறினேன். வெகு அழகான இடம்! பாதிரியார் தங்குவதற்கான வீடு பிரமாதமாக இருக்கும்! எல்லாவிதத்திலும் எனக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்.
 
மதபோதனை செய்வது உனக்குப் பிடித்திருக்குமா?‘
 
பிரமாதமாக இருந்திருக்கும். என்னுடைய கடமைகளில் ஒரு பகுதியாக நான் நினைத்திருக்க வேண்டும், முதலில் அதற்கு நான் ஒரு முயற்சி எடுத்திருப்பேன், விரைவில் போதனை செய்வது என்பது எனக்கு சுலபமாக இருக்கும். ஒருவர் அதற்காக வருத்தப்படக் கூடாது, ஆனால் கண்டிப்பாக அது ஒரு பெரிய விஷயமாக எனக்கு இருந்திருக்கும். அமைதியாக இருக்கும் அதுபோன்ற ஒரு வாழ்க்கை, சந்தோஷத்தைப்பற்றிய என்னுடைய எண்ணங்கள் அனைத்திற்கும் பதிலளித்திருக்கும்! ஆனால் அப்படி நடக்கவில்லை. நீ கென்டில் இருக்கும் பொழுது டார்சி இந்த சந்தர்ப்பத்தைப்பற்றி ஏதாவது உன்னிடம் கூறினானா?‘
 
தற்பொழுது இருக்கும் போஷகரின் விருப்பத்துடன், ஒரு நிபந்தனையின் பேரில்தான் உனக்கு அது வழங்கப்பட இருந்தது என்று தகுந்த இடத்திலிருந்து நான் கேள்விப்பட்டேன்.
 
ஆமாம், அதில் ஏதோ ஒன்று இருந்திருக்கிறது, ஆரம்பத்திலிருந்தே உனக்குச் சொல்லி வருகிறேன், உனக்கு ஞாபகம் இருக்கலாம்.
 
சமய உரை நிகழ்த்துவது என்பது, இப்பொழுது உனக்குப் பிடித்திருப்பதுபோல் அப்பொழுது அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று நான் கேள்விப்பட்டேன், பார்க்கப் போனால் நீ அதை ஏற்றுக் கொள்ளவே தயாராக இல்லை என்றும் அதற்கு ஈடாக உனக்கு ஒரு தொகை கொடுக்கப்பட்டது என்றும் கேள்விப்பட்டேன்.
 
அப்படியா! ஆம். நீ கேள்விப்பட்டதில் ஒரு உண்மை இருக்கிறது. நாம் முதலில் அதைப்பற்றி பேசிய பொழுது, என்ன கூறினேன் என்று உனக்கு ஞாபகம் இருக்கலாம்.
 
அவர்கள் வீட்டின் கதவருகே ஏறக்குறைய வந்துவிட்டனர். அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக வேகமாக நடந்து வந்த எலிசபெத், தன்னுடைய சகோதரியின் பொருட்டு அவனைக் கிளப்ப வேண்டாம் எனத் தீர்மானித்து, ஒரு சந்தோஷமான சிரிப்புடன்,
 
சரி, விக்காம், நாம் இப்பொழுது சகோதரனும், சகோதரியும் ஆவோம். கடந்த காலத்தில் நடந்ததை வைத்து சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம். எதிர்காலத்தில் நாம் இருவரும் ஒருமனதாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்என்று மட்டும் கூறினாள்.
 
தன் கையை நீட்டினாள், எப்படி பார்ப்பது என்று தெரியாவிட்டாலும், தைரியமாக, அன்புடன் அவள் கையில் முத்தமிட்டான், பிறகு வீட்டினுள் நுழைந்தனர்.
 



book | by Dr. Radut