Skip to Content

Chapter 01 பிம்பெர்லி சந்திப்பு

 

வண்டியில் போய் கொண்டிருந்த பொழுது வழியில் வந்த பிம்பெர்லியின் தோட்டத்தை முதல் தடவையாக ஒருவித மனக்குழப்பத்துடன் பார்த்த எலிசபெத், விடுதிக்குப் போய் சேர்கையில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவளாக இருந்தாள்.
 
அங்கிருந்த பூங்கா மிகவும் பெரியதாக இருந்தது, பலவிதமான புல்வெளிகளுடன் அமைந்திருந்தது. அருகில் இருந்த பாதை வழியாக உள்ளே நுழைந்த அவர்கள் அகன்று விரிந்திருந்த தோப்பின் ஊடே சிறிது நேரம் குதிரை வண்டியில் பிரயாணம் செய்தனர்.
 
அவளால் பேசவும் முடியாதபடி மனம் அங்கிருந்த காட்சிகளில் லயித்திருந்தது. ஒவ்வொரு அழகான இடத்தையும், காட்சியையும் பார்த்து ரசித்து வந்தாள். அரை மைல் பிரயாணத்திற்குப் பிறகு, குன்றின் உச்சிக்குப் போய் சேர்ந்தனர். அத்துடன் தோப்பு முடிந்து, பள்ளத்தாக்கின் மறுபக்கத்தில் இருந்த பிம்பெர்லி இல்லம் சட்டென காட்சி அளித்தது. அங்கு செல்வதற்கு ஒரு பாதையும் வளைந்து சென்றது. அழகான பெரிய கற்கட்டடம், உயரமான பூமியில் மரங்கள் அடர்ந்த குன்றுகளால் சூழப்பட்டு, வாயிலில் இயற்கையான தோற்றத்துடன் அமைந்திருந்த நீர்தேக்கத்துடன் அழகாக காட்சியளித்தது. கரைகளும் இயற்கையாக அமைந்திருந்தன. எலிசபெத் சந்தோஷம் அடைந்தாள். அப்பழுக்கில்லாத இயற்கை அழகுடன் அமைந்திருந்த இதுபோன்ற ஒரு இடத்தை அவள் பார்த்ததே இல்லை. எல்லோரும் அதை பிரமிப்புடன் ரசித்துக் கொண்டிருந்தனர், அச்சமயம் பிம்பெர்லிக்கு எஜமானியாக ஆவது என்பதே ஒரு பெரிய விஷயம்தான் என எலிசபெத் உணர்ந்தாள்.
 
குன்றிலிருந்து கீழே இறங்கி வந்து, பாலத்தைத் தாண்டி, வாயிற்கதவை நோக்கிச் சென்று அவ்வீட்டை அருகாமையிலிருந்து ரசித்துக் கொண்டிருந்த அவளுக்கு இந்த வீட்டின் எஜமானனை சந்தித்து விடுவோமோ என்ற பயம் திரும்பியது. விடுதியில் இருந்த பெண்மணி தவறான செய்தி கொடுத்திருப்பாளோ என அஞ்சினாள். உள்ளே வரவேற்பறைக்குள் நுழைந்து, வீட்டை பராமரிப்பவருக்காகக் காத்திருந்த பொழுது தான் எங்கிருக்கிறோம் என நினைத்து ஆச்சரியப்பட்டாள்.
 
பார்ப்பதற்கு மரியாதையுடன் விளங்கிய வயதான பெண்மணி அவர்களை நோக்கி வந்தாள். எலிசபெத் எதிர்பார்த்ததுபோல் அவ்வளவு நாகரீகமாக இல்லை. ஆனால் எதிர்பார்த்ததைவிட மிக்க மரியாதையாக இருந்தாள். அவளைப் பின்தொடர்ந்து உணவு உண்ணும் அறைக்கு வந்தனர். அவ்வறை நேர்த்தியாகவும், அழகாகவும், பெரியதாகவும் இருந்தது. அவ்வறையை சற்று சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே தெரியும் காட்சியைப் பார்ப்பதற்காக, எலிசபெத் ஜன்னல் அருகே சென்றாள். குன்றுகளும், கீரிடம்போல் அமைந்திருந்த காடுகளும், கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மூலைமுடுக்குகளில் இருந்த அழகு, நதி, நதிக்கரையோரம் இருந்த புதர்கள், வளைந்து வளைந்து சென்ற பள்ளத்தாக்கு எல்லாவற்றையும் மிக்க பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அடுத்தடுத்த அறைகளுக்குச் சென்று பார்க்கும் பொழுது வெளியே தெரியும் காட்சிகள் வெவ்வேறு கோணங்களில் இருந்தனவே தவிர, ஒவ்வொரு ஜன்னலிலிருந்தும் அழகான காட்சிகளே தெரிந்தன. அங்கிருந்த பெரிய அறைகளும், அதிலிருந்த மரச் சாமான்களும், இவ்வீட்டின் சொந்தக்காரரின் செல்வ வளத்தைப் பறைசாற்றின. மரச்சாமான்கள், ரோஸிங்க்ஸில் இருந்ததுபோல அலங்காரமாக இல்லாவிட்டாலும், பார்ப்பதற்கு உயர்ந்த ரசனையுடன் கூடியதாக இருந்தன.
 
இந்த இடத்திற்கு நான் எஜமானி ஆகியிருக்கலாம்என்று நினைத்த அவள் இந்த அறைகள் எல்லாம் எனக்குப் பழகியிருக்கும்! அந்நியர்போல் பார்த்துக் கொண்டிருக்காமல் என்னுடைய சொந்த வீடுபோல் அனுபவித்துக் கொண்டு என்னுடைய மாமாவையும், அத்தையையும் விருந்தாளியாக வரவேற்றிருப்பேன்.‘--தன்னை சுதாகரித்துக் கொண்டு ஆனால்--இல்லை--அது நடக்கவே முடியாது. நான் எனது மாமாவையும், அத்தையையும் இழந்திருப்பேன். அவர்களை அழைக்க எனக்கு அனுமதி கிடைத்திருக்காதுஎன்று நினைத்தாள்.
 
இப்படி நினைத்ததால் மட்டுமே அவளால் வருத்தப்படாமல் இருக்க முடிந்தது.
 
அவளுடைய எஜமானன், வீட்டில் இல்லையா என இப்பெண்மணியிடம் கேட்க வேண்டும் என எலிசபெத் ஆசைப்பட்டாள். ஆனால் அதனை கேட்க அவளுக்கு தைரியம் வரவில்லை. வெகு நேரத்திற்குப் பிறகு அவளுடைய மாமா இக்கேள்வியை எழுப்பினார். ஒருவித பயத்துடன் திரும்பிய எலிசபெத், தற்சமயம் இங்கு இல்லை என அப்பெண்மணி பதிலளித்ததைக் கேட்டாள். ஆனால் நாளை அவருடைய நண்பர்கள் நிறைய பேர்களுடன் இங்கு வருவார் என எதிர்பார்க்கிறோம்என்று கூறியதைக் கேட்டு நல்லவேளை தங்களது பிரயாணம் ஒரு நாள் தாமதமாகாததற்கு மிகவும் சந்தோஷப்பட்டாள்.
 
அங்கு மாட்டப்பட்டிருக்கும் உருவப்படத்தைப் பார்த்த அவளது அத்தை, எலிசபெத்தை அழைத்தாள். அருகே சென்று பார்த்த எலிசபெத் அது விக்காம்போல் இருப்பதைக் கண்டாள். அது அவளுக்கு எவ்வாறு பிடித்திருக்கிறது என அவளது அத்தை சிரித்த வண்ணம் கேட்டாள். அதற்கு அப்பணிப்பெண், காலம் சென்ற என் எஜமானரின் சொத்தை கவனித்து வந்தவரின் மகன் அவன் என்றும், அவனை அவர் தன் செலவிலேயே வளர்த்து வந்தார் எனவும் கூறினாள். அவன் இராணுவத்தில் சேர்ந்து விட்டான், மோசமானவனாக மாறி விட்டான் என பயப்படுகிறேன்என்றும் கூறினாள்.
 
திருமதி. கார்டினர், எலிசபெத்தை ஒரு சிரிப்புடன் பார்த்தாள், ஆனால் அவளால் சிரிக்க முடியவில்லை.
 
மற்றொரு உருவப்படத்தைக் காண்பித்த திருமதி. ரெனால்ட்ஸ் அது என்னுடைய எஜமானர். அச்சாக அவரைப்போலவே இருக்கிறது. மற்ற உருவப் படங்களைப் போலவே இதுவும் எட்டு வருடத்திற்குமுன் வரையப்பட்டதுஎன்றாள்.
 
உன்னுடைய எஜமானன் அழகைப்பற்றி நான் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். அழகான முகம், ஆனால் லிசி, அவனைப்போலவே இருக்கிறதா என நீதான் சொல்ல வேண்டும்என்றாள் திருமதி. கார்டினர்.
 
தன்னுடைய எஜமானரை எலிசபெத்திற்குத் தெரியும் என்பது தெரிந்தவுடன் அவள்மேல் திருமதி. ரெனால்ட்ஸிற்கு மரியாதை அதிகரித்தது.
 
இந்த இளம்பெண்ணிற்கு திரு. டார்சியைத் தெரியுமா? ‘
 
நிறம் மாறிய எலிசபெத் சிறிதளவு தெரியும்என்றாள்.
 
அவர் அழகானவர் என நீங்கள் நினைக்கவில்லையா மேடம்?‘
 
ஆமாம், மிகவும் அழகானவன்.
 
இவ்வளவு அழகாக இருக்கும் மற்ற யாரையும் எனக்குத் தெரியாது. மேல்மாடி காட்சியகத்தில் இதைவிட அழகான பெரிய படம் இருக்கிறது. இந்த இடம் என்னுடைய காலஞ்சென்ற எஜமானருக்குப் பிடித்தமான இடம். இந்த சிறிய அளவு உருவப்படங்கள், அப்பொழுது இருந்தது போலவே இருக்கிறது. அவருக்கு இவைகளை மிகவும் பிடிக்கும்.
 
இவ்விவரம் விக்காமின் உருவப்படம் அங்கு இருப்பதின் காரணத்தை எலிசபெத்திற்கு விளக்கியது.
 
எட்டு வயதாக இருக்கும் பொழுது வரையப்பட்ட மிஸ். டார்சியின் உருவப் படத்தை திருமதி. ரெனால்ட்ஸ் அவர்களுக்குக் காண்பித்தாள்.
 
தனது சகோதரனைப்போல் மிஸ். டார்சியும் அழகாக இருப்பாளாஎன திரு. கார்டினர் கேட்டார்.
 
ஓ! ஆமாம். அவளைப்போல் ஒரு அழகியைப் பார்த்திருக்க முடியாது. நாள் முழுவதும் பியானோ வாசிப்பாள், பாட்டும் பாடுவாள். மிகவும் திறமைசாலி! அடுத்த அறையில் உள்ள இசைக்கருவி இப்பொழுதுதான் வந்திறங்கியுள்ளது. அவளுடைய சகோதரனின் பரிசு. அவளும் நாளை இங்கு வருகிறாள்.
 
இனிமையான சுபாவம் கொண்ட திரு. கார்டினர் தன்னுடைய கேள்விகளாலும், விமரிசனங்களாலும் அவளை பேசுவதற்கு ஊக்கமூட்டினார். தன்னுடைய எஜமானரைப்பற்றியும், அவருடைய தங்கையைப்பற்றியும் அவர்கள் மேலுள்ள அன்பின் காரணத்தாலேயோ அல்லது அவர்களைப்பற்றிய பெருமையினாலோ திருமதி. ரெனால்ட்ஸ் மிக உற்சாகமாக பதிலளித்துக் கொண்டிருந்தாள்.
 
உன்னுடைய எஜமானர் ஒரு வருடத்தில் அதிக நாட்கள் பிம்பெர்லியில் இருப்பாரா?‘
 
அதிக நாட்கள் இருக்க மாட்டார், ஐயா. வருடத்தில் பாதி நாட்கள் இங்கு இருப்பார் எனச் சொல்லலாம், மிஸ். டார்சி கோடைகாலத்தில் எப்பொழுதும் இங்கிருப்பாள்.
 
ராம்ஸ்கேட்டுக்குப் போகும் நேரம் தவிரஎன எலிசபெத் நினைத்தாள்.
 
உன்னுடைய எஜமானருக்குத் திருமணம் ஆகிவிட்டால், இங்கு அதிக நாட்கள் தங்கலாம்.
 
ஆமாம் ஐயா, அது எப்பொழுது என எனக்குத் தெரியவில்லை. யார் அவருக்குப் பொருத்தமானவளாக இருப்பாள் எனத் தெரியவில்லை.
 
திரு. கார்டினரும், திருமதி. கார்டினரும் சிரித்தனர். நீ இவ்வாறு நினைப்பது அவனுக்கு மிகுந்த பெருமையைச் சேர்க்கும் என நினைக்கிறேன்என்றாள் எலிசபெத்.
 
நான் உண்மையைத்தான் சொல்கிறேன், அவரை அறிந்த எல்லோருமே அப்படித்தான் சொல்வார்கள்என்றாள் பணிப்பெண்மணி. மிகவும் சுவாரசியமாக மாறுகிறதே என நினைத்த எலிசபெத், ஆச்சரியத்துடன் அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். என்னுடைய வாழ்நாளில் ஒரு முறைகூட என்னைக் கடிந்து ஒரு வார்த்தை பேசியதில்லை. அவருக்கு நான்கு வயதாக இருந்த பொழுதிலிருந்தே எனக்கு அவரைத் தெரியும்என்றும் கூறினாள்.
 
அவளுடைய எண்ணத்திற்கு மாறாக இருந்தது அவனைப்பற்றிய புகழுரைகள். அவன் கோபக்காரன் எனத் தீர்மானமாக நினைத்திருந்தாள். அவனைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாள். அதனால் அவளது மாமா மீண்டும் அவனைப்பற்றி பேச ஆரம்பித்த பொழுது அவருக்கு மிகவும் நன்றி கடன்பட்டிருப்பதாக நினைத்தாள்.
 
மிகச் சிலரைப்பற்றியே இவ்வாறு நல்லபடியாகப் பேச முடியும். இம்மாதிரி எஜமானன் கிடைத்தது நீ செய்த அதிர்ஷ்டம்என்றார் அவர்.
 
ஆமாம் ஐயா, நான் அதிர்ஷ்டசாலிதான். தேடினாலும் இந்த உலகத்தில் இவரைவிட நல்ல முதலாளி எனக்கு கிடைத்திருக்க மாட்டார். நல்ல குழந்தைகள் பெரியவர்களான பிறகும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள் என நான் பார்த்திருக்கிறேன். இவர் எப்பொழுதுமே இனிமையான சுபாவமும், தாராள மனப்பான்மையும் கொண்ட பையனாக இருந்திருக்கிறார்.
 
எலிசபெத் அவளைப் பார்த்தவாறே--இது டார்சியாக இருக்குமா!என நினைத்தாள்.
 
அவருடைய தகப்பனார் அருமையான மனிதர்என்றாள் திருமதி கார்டினர்.
 
ஆமாம், அம்மா. அவர் அப்படித்தான் இருந்தார், அவருடைய மகனும் அவரைப்போலவே இருக்கிறார்--ஏழைக்கு பங்காளியாக
 
எலிசபெத்திற்கு மேலும் அவனைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பொறுமையின்றி இருந்தாள். திருமதி. ரெனால்ட்ஸிற்கு அவளைத் திருப்திபடுத்தும் வகையில் வேறெதையும் கூற முடியவில்லை. ஆனால் திருமதி. ரெனால்ட்ஸ் புகைப்படங்களைப்பற்றியும், அறையின் அளவு, மரச்சாமான்களின் விலை இவற்றைப்பற்றியும் விவரித்துக் கொண்டிருந்தது எந்த சுவாரசியத்தையும் எலிசபெத்திற்கு ஏற்படுத்தவில்லை. குடும்பப் பெருமையின் காரணமாகத்தான் அவள் அக்குடும்பத்தின் பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்த திரு. கார்டினருக்கு சிரிப்பு வந்தது. அதனால் மீண்டும் அதே விஷயத்தைப்பற்றி அவர் பேச ஆரம்பித்ததால, பணிப்பெண்ணும் மிக உற்சாகமாக அவருடைய பெருமைகளை சொல்லிக் கொண்டே வந்தாள்.
 
அவர் ஒரு சிறந்த நிலக்கிழார், சிறந்த முதலாளி, இதுவரை யாரும் இவ்வாறு இருந்ததில்லை. சுயநலம் படைத்த தற்கால இளைஞர்கள் போலல்ல அவர். அவர் கீழ் குடியிருக்கும் மக்களும் வேலைக்காரர்களும் அவர் நல்லவர் என்றுதான் சொல்வார்கள். சிலர் அவரை கர்வம் மிகுந்தவர் என்பார்கள். ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. மற்ற இளைஞர்கள்போல் அவர் அரட்டை அடிக்காமல் இருப்பதால், அவர் கர்வம் மிகுந்தவர் என்று சிலருக்குத் தோன்றலாம்என்றாள் அவள்.
 
அவனை எவ்வளவு நல்லவனாகக் காண்பிக்கிறது இதுஎன எலிசபெத் நினைத்தாள்.
 
இவனைப்பற்றி நமக்குக் கிடைத்த நல்ல செய்திகள், நம்முடைய நண்பனிடம் நடந்து கொண்ட விதத்திற்கு மாறாக இருக்கிறதேஎனக் கிசுகிசுத்தாள் அவளது அத்தை.
 
ஒருவேளை நாம் ஏமாற்றப்பட்டிருக்கலாம்.
 
அப்படி இருக்க முடியாது, சரியான நபரிடமிருந்துதானே நமக்குத் தகவல் கிடைத்தது.
 
மேலே ஒரு விஸ்தாரமான தாழ்வாரத்திற்குச் சென்ற பொழுது அங்கு இருந்த ஒரு அழகான வரவேற்பறை அவர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. கடைசியாக மிஸ். டார்சி பிம்பெர்லிக்கு வந்திருந்த பொழுது அவ்வறை அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டதால், கீழே உள்ள இடங்களைவிட சமீபத்தில்தான் அது நேர்த்தியாகவும், பளிச்சென்றும், சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
 
மிகவும் நல்ல சகோதரன்என்ற எலிசபெத், ஜன்னலை நோக்கிச் சென்றாள்.
 
அவ்வறைக்குள் நுழைந்தவுடன் மிஸ்.டார்சி, மிகவும் சந்தோஷப்படுவாள் என திருமதி. ரெனால்ட்ஸ் எதிர்பார்த்தாள். தங்கைக்கு சந்தோஷம் தரும் எனில் அதை ஒரு க்ஷணத்தில் செய்து முடிப்பார், அவளுக்காக எதையும் செய்வார், அவர் தன் தங்கையிடம் நடந்து கொள்ளும் முறையே இப்படித்தான்எனக் கூறினாள்.
 
ஓவியக் கூடம், இரண்டு, மூன்று படுக்கை அறைகளே பார்ப்பதற்கு மீதம் இருந்தன. ஒவியக் கூடத்தில் நிறைய நல்ல வண்ணச் சித்திரங்கள் இருந்தன. ஆனால் எலிசபெத்திற்கு அதைப்பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. சுவாரசியமான கருத்தும், புத்திசாலித்தனமும் நிறைந்த மிஸ். டார்சியின் ஓவியங்களை விருப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
காட்சியகத்தில் குடும்பத்தினர் பலரின் உருவப்படங்கள் இருந்தன. அதில் அந்நியர்களுக்கு எந்த சுவாரசியமும் ஏற்படாது. எலிசபெத், தெரிந்தவர் ஒருவரது படம் இருக்குமா எனப் பார்த்தவாறு நடந்து கொண்டிருக்கும் பொழுது திரு. டார்சியைப் போலவே தோற்றமளித்த ஒரு ஓவியத்தின்முன் வந்து நின்றாள். அதிலிருந்த சிரிப்பு, தன்னை டார்சி பார்க்கும் பொழுது எழும் சிரிப்பினை ஞாபகப்படுத்துவது போலிருந்தது. அவனுடைய தகப்பனார் இருந்த பொழுது வரைந்த ஓவியம் என திருமதி. ரெனால்ட்ஸ் கூறினாள். அவ்விடத்தைவிட்டு செல்வதற்குமுன் மீண்டும் ஒருமுறை வந்து அப்படத்தைப் பார்த்துச் சென்றாள்.
 
இதையெல்லாம் கேட்ட எலிசபெத், அந்த க்ஷணத்தில், டார்சியைப்பற்றி தான் இதுவரை உணராத ஒரு இனிமையான உணர்வினை உணர ஆரம்பித்தாள். திருமதி. ரெனால்ட்ஸ் கூறிய புகழுரைகள் எல்லாம் சாதாரணமானவையல்ல. ஒரு புத்திசாலியான பணிப்பெண்ணின் புகழுரைகளைத் தவிர வேறு எந்த புகழுரைக்கு மதிப்பு உண்டு? சகோதரனாகவும், நிலச்சுவான்தாரனாகவும், எஜமானனாகவும் எவ்வளவு பேர்களுடைய சந்தோஷம் அவனுடைய பாதுகாப்பில் இருக்கிறது. சந்தோஷம், துக்கம், நல்லது, கெட்டது எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு அளிக்கக் கூடிய அதிகாரம் அவனிடம் உள்ளது. பணிப்பெண்மணி கூறியவைகள் எல்லாம் அவனுக்குச் சாதகமாகவே இருந்தன. அவனது படத்தின்முன் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்ததால் எலிசபெத்தின் மனதிற்குள் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. அவனுடைய அன்பை நினைக்கும் பொழுது, அவளுக்கு இதுவரை ஏற்படாத நன்றியுணர்ச்சி மேலோங்கியது, அவனுடைய பரிவை அவள் நினைவு கூர்ந்தாள், மேலும் முரட்டுத்தனமாகப் பேசியதெல்லாம் இப்பொழுது அவளுக்கு சற்று மென்மையாகவும் தோன்றியது.
 
பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் பார்த்து முடித்தபின், கீழே இறங்கி வந்து, பணிப்பெண்மணியிடம் விடைபெற்று, வரவேற்பறையின் வாசலில் சந்தித்த தோட்டக்காரனுடன் சேர்ந்து வெளியே வந்தனர்.
 
புல்வெளியை கடந்து ஆற்றினை நோக்கி நடந்து வந்த எலிசபெத் மீண்டும் அதனைப் பார்க்கத் திரும்பினாள், அவளது மாமாவும், அத்தையும் கூட நின்றனர். அப்பொழுது அக்கட்டடத்தின் வயதினை நிர்ணயிக்கும் வகையில் அவளது மாமா அதனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்து பொழுது, அதன் எஜமானன், குதிரை லாயத்திற்குச் செல்லும் பாதையிலிருந்து திடீரென்று அங்கு வந்து நின்றான்.
 
இருவரும் இருபது அடி இடைவெளியில் நின்று கொண்டிருந்தானர். அவன் திடீரென்று தன்முன் தோன்றியதால் அவனைப் பார்ப்பதை எலிசபெத்தால் தவிர்க்க முடியவில்லை. இருவரது கண்களும் சந்தித்தன. இருவரது முகமும் சிவந்தன. ஆச்சரியத்தால், இடத்தைவிட்டு நகராமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவன், தன்னை விரைவில் சுதாகரித்துக் கொண்டு, அவளிடம் சென்று அமைதியாக பேசாவிடினும் மிக்க மரியாதையுடன் பேசினான்.
 
அவள் வேகமாக திரும்பிச் செல்ல முயன்ற பொழுது, தன்னை நோக்கி அவன் வருவதைக் கண்டு, அவன் தன்னை வரவேற்றதைத் தவிர்க்க முடியாமல் தர்மசங்கடமாக ஏற்றுக் கொண்டாள். அவனுடைய முதல் சந்திப்பும், சற்று முன்புதான் ஆராய்ந்த அவனது உருவப்படமும், உள்ளே வந்தவன் டார்சிதான் என்பதைப் புரிந்து கொள்ள மற்ற இருவருக்கும் போதுமானதாக இல்லாதபோதிலும், தன்னுடைய எஜமானரைக் கண்டதும் தோட்டக்காரனிடம் எழுந்த ஆச்சரியம் அவர்களுக்குத் தெளிவாக விளக்கியது. ஒருவிதமான திகைப்புடனும், குழப்பத்துடனும் அவனை ஏறிட்டுப் பார்ப்பதற்கும் தயங்கியவளாக, அவன் கேட்ட கேள்விகளுக்கு என்ன பதில் கூறினோம் என்று புரியாதவளாக நின்றிருந்த எலிசபெத்துடன் அவன் பேசிக் கொண்டிருந்ததை தள்ளி நின்று அவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். இதுவரை பார்த்திராத டார்சியைப் பார்ப்பதாகத் தோன்றிய எலிசபெத்திற்கு அவன் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் மிகவும் சங்கடத்தை உண்டாக்கியது. தன்னை அங்கு அவன் கண்டது, தான் செய்தது சரியில்லையோ என்ற உணர்வினை அவளுக்கு அளித்ததால், அது மீண்டும் மீண்டும் அவள் மனதில் தோன்றிய வண்ணம் இருந்தது. சில நிமிடங்களுக்கு அவர்கள் இருவரும் சேர்ந்து இருந்தது, வாழ்க்கையிலேயே மிகவும் சங்கடமான சூழ்நிலைகளில் ஒன்றாக இருந்தது. எப்பொழுது லாங்க்பர்னிலிருந்து கிளம்பினாள், எவ்வளவு நாட்கள் டெர்பிஷயரில் தங்குவாள் என்று அவன் கேள்வி கேட்ட விதம் அவனுடைய குரலில் வழக்கமாக இருக்கும் அமைதி இல்லை என்பதையும், மேலும் அவசரமாகப் பேசியது, அவன் எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டவனாக இருக்கிறான், எவ்வளவு மன சஞ்சலத்தில் இருக்கிறான் என்பதையும் உணர்த்தியது.
 
என்ன செய்வது எனப் புரியாமல் சிறிது நேரம் நின்றிருந்த அவன், தன்னை சுதாகரித்துக் கொண்டு ஒரு வார்த்தையும் பேசாமல், அவ்விடத்தை விட்டகன்றான்.
 
மற்ற இருவரும் அவளருகே வந்து, அவனை தாங்கள் எவ்வளவு ரசித்தனர் எனக் கூறியது எதுவும் எலிசபெத்தின் காதில் விழவில்லை. தன்னுடைய உணர்ச்சிகளிலேயே மூழ்கி இருந்த அவள், மௌனமாக அவர்களைப்பின் தொடர்ந்தாள். அவளுக்கு அவமானமும், எரிச்சலும்தான் மேலோங்கியது. தான் அங்கு வந்ததே மிகவும் துரதிர்ஷ்டவசமானது, மிகப் பெரிய தவறான திட்டம், எவ்வளவு விநோதமாக அவனுக்கு இருந்திருக்கும், தான் வேண்டும் என்றே அவன் வழியில் மீண்டும் குறுக்கிட்டிருக்கிறோம் என நினைப்பானோ எனப் பலவாறாக நினைத்து மருகினாள். தான் ஏன் இங்கு வந்தோம்? அல்லது அவன் எதற்காக ஒருநாள் முன்னதாக ஊர் திரும்பினான்? ஒரு பத்து நிமிடங்கள் முன்னதாக கிளம்பியிருந்தால் அவனை அவர்கள் சந்தித்திருக்க வேண்டாம், ஏனெனில் அவன் சரியாக அதே சமயம் அங்கு வந்து சேர்ந்தான், குதிரையிலிருந்து கீழே இறங்கினான். எதற்காக தாங்கள் சந்தித்துக் கொள்ள நேரிட்டது என நினைத்து நினைத்து முகம் சிவந்தாள். அவனுடைய நடத்தையிலும் தெளிவாக மாற்றம் இருந்தது--இதற்கு அர்த்தம் என்னவாக இருக்கும்? அவளுடன் பேசியதே ஆச்சரியமாக இருந்தது. அதுவும் இவ்வளவு மரியாதையாக அவள் குடும்பத்தைப்பற்றி விசாரித்து பேசியதும், இவ்வளவு கண்ணியமாக, இவ்வளவு அன்பாகப் பேசியதும் அவள் இதுவரை பார்த்திராத ஒன்று. ரோஸிங்ஸ் பார்க்கில் கடைசியாகப் பேசிய பொழுது அவளுடைய கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்து பேசிய பேச்சிற்கும் இப்பொழுது பேசியதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருந்தது. என்ன நினைப்பது என அவளுக்குப் புரியவில்லை, இதனை எப்படி கணக்கிடுவது என்றும் புரியவில்லை.
 
நீர் தேக்கத்தின் பக்கத்தில் அமைந்திருந்த பாதை வழியாக நடந்த அவர்கள், அழகான புல்வெளி, காடு இவற்றை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். ஆனால் எலிசபெத்திற்கோ இவையாவும் கண்ணில் படவில்லை, அவளது அத்தையும், மாமாவும் கேட்ட கேள்விகளுக்கு இயந்திரமாக பதில் கூறி அவர்கள் காண்பித்த காட்சிகளைப் பார்ப்பதுபோல் பாவித்து எதிலும் மனது ஒட்டாமல் நடந்து வந்தாள். அவள் எண்ணம் முழுவதும், டார்சி அந்த வீட்டில் எங்கிருப்பான், என்ன நினைத்துக் கொண்டிருப்பான், தன்னைப்பற்றி எவ்வாறு நினைத்துக் கொண்டிருப்பான், எல்லாவற்றையும் மீறி இன்னமும் தன்மேல் காதல் இருக்கிறதா என்று யோசிப்பதிலேயே இருந்தது. அவன் மிகவும் சகஜமாக இருந்ததினால் மட்டுமே மரியாதையாக நடந்து கொண்டிருக்கிறான், இருப்பினும் அவன் குரலில் அமைதி இல்லை. ஆனால் தன்னைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்தானா, வேதனை அடைந்தானா எனத் தெரியவில்லை. ஆனால் மன அமைதியின்றி இருந்தது தெரிந்தது. வெகுநேரம் கழித்து தன்னை மறந்து இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டியதால் தன்னை சகஜ நிலைக்குக் கொண்டு வர வேண்டிய அவசியத்தை உணர்ந்தாள்.
 
அடர்ந்த காட்டினுள் நுழைந்து, சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கு ஓடிக் கொண்டிருந்த நதியிடமிருந்து விடைபெற்றபின், மேடான பகுதிக்கு ஏறிச் சென்று, மரத்தினூடே தெரிந்த பள்ளத்தாக்குகளையும் பரந்து விரிந்திருந்த காடுகளையும், ஓடையின் சில பகுதிகளையும் கண்டு ரசித்தனர்.
 
திரு. கார்டினருக்கு அப்பூங்கா முழுவதையும் சுற்றிப் பார்க்க ஆசையாக இருந்தது, ஆனால் தன்னால் முடியாது என நம்பினார். முழுவதும் சுற்றிவர பத்து மைல்கள் ஆகும் என்று சொன்னதைக் கேட்டு, தெரிந்த வழியாகவே திரும்பி வந்தனர். காட்டிலிருந்து கீழிறங்கி, நீர்ப்பகுதியின் விளிம்பிற்கு வந்து, அதை ஒரு எளிய பாலம் மூலம் தாண்டி, இதுவரை வந்திராத இயற்கையான தோற்றத்துடன் காட்சியளித்த பகுதிக்கு வந்தனர். குறுகிய பள்ளத்தாக்காக மாறியிருந்த இடத்தில் ஒரு சிறிய நீரோடைக்கு இடம் இருந்தது மற்றும் ஒரு குறுகிய பாதையும் இருந்தது. எலிசபெத்திற்கு இன்னும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் இருந்தது. ஆனால் பாலத்தைத் தாண்டிய பிறகு, வெகுதூரம் வந்து விட்டதை உணர்ந்து, அதிகம் நடந்து பழக்கமில்லாத திருமதி. கார்டினருக்கு மேலும் நடக்க முடியாமல் போனதால் எவ்வளவு விரைவாக வண்டி இருந்த இடத்திற்குத் திரும்ப முடியுமோ அவ்வளவு விரைவாகத் திரும்பத் தீர்மானித்தனர். திரு. கார்டினருக்கு மீன் பிடிப்பதில் நாட்டம் இருந்ததால் ஆங்காங்கே நின்று மீன்களைப் பார்த்து அதனைப்பற்றி அங்கிருப்பவரிடம் பேசி மெதுவாக வருவதற்கு சிறிது நேரம் ஆயிற்று. இவ்வாறு மெதுவாக வண்டியை நோக்கி நடந்து கொண்டிருந்த அவர்களுக்கு டார்சி தங்களை நோக்கி வந்ததைப் பார்த்து மீண்டும் ஆச்சரியம் எழுந்தது. இவர்கள் இருந்த பகுதி, எதிர்புறத்தைவிட மரங்களால் அடர்ந்து இருந்ததால் தொலைவிலிருந்தே அவனை முதலில் பார்த்துவிட்ட எலிசபெத் அவன் மீண்டும் தன்னிடம் பேசினால் அமைதியாக பதிலளிக்க வேண்டும் எனத் தீர்மானித்தாள். சில வினாடிகளுக்கு கண்பார்வையிலிருந்து அவன் மறைந்து போனதால் வேறு வழியாக சென்று விட்டானோ என எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே அவன் அவர்கள்முன் வந்து நின்றான். அவன் அதே மரியாதையுடன் காட்சியளித்ததால், தானும் அதே பணிவுடன் அவனிடம் அழகாக‘, ‘வசீகரமாகஎன்று பிம்பெர்லியின் அழகினைப்பற்றி இரண்டு வார்த்தைகள் கூறுவதற்குள் எங்கு அவன் தன்னுடைய இப்பேச்சைத் தவறாகப் புரிந்து கொண்டு விடுவானோ என நினைத்து அத்துடன் தன் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.
 
திருமதி. கார்டினர் சற்று தள்ளி நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, அவர்களை தனக்கு அறிமுகப்படுத்துமாறு கேட்டான். இதனை எதிர்பார்க்காத எலிசபெத், யாரைப்பற்றி அவன் தன்னுடைய தற்பெருமையின் காரணமாக மட்டமாகப் பேசினானோ, அவர்களைத் தெரிந்து கொள்ள விரும்புவதைக் கண்டு எழுந்த சிரிப்பினை அடக்க முடியவில்லை. அவர்கள் யார் எனத் தெரிந்தால், அவனுடைய ஆச்சரியம் எப்படிப்பட்டதாக இருக்கும்! அவர்கள் நாகரீகத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் எனப் புரிந்து கொண்டிருக்கிறான் போலிருக்கிறதுஎன்று எண்ணினாள்.
 
அவர்களை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். தனக்கும் அவர்களுக்கும் இருக்கும் உறவினை அறிந்து, எங்கே அது பிடிக்காமல் தன்னைவிட்டு சென்று விடுவானோ என்கிற எண்ணத்தில் அவன் அதை எவ்வாறு எடுத்துக் கொண்டுள்ளான் என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு, அவனை இரகசியமாகப் பார்த்தாள். அவன் அதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தது வெளிப்படையாகத் தெரிந்தது, இருப்பினும் அதனை பொறுமையாக அடக்கிக் கொண்டு அவர்களை நோக்கிச் சென்று, திரு. கார்டினருடன் பேசலானான். எலிசபெத்திற்கு சந்தோஷமாக இருந்தது, வெற்றி கிடைத்ததுபோல் பெருமிதம் கொண்டாள். தனக்கும், வெட்கப்பட வேண்டிய அவசியமில்லாத நிலையில் உள்ள சொந்தங்களும் உண்டு என்று, அவனுக்குத் தெரிய வந்தது சற்று ஆறுதலாக இருந்தது. அவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடலை கவனித்து வந்த அவள் அவர்களது உரையாடலில் தன்னுடைய மாமாவின் புத்திசாலித்தனம், உயர்ந்த ரசனை, நற்பண்புகள் ஆகியவை வெளி வந்தது குறித்து சந்தோஷமடைந்தாள்.
 
அவருக்கு மீன் பிடிப்பதில் விருப்பம் உண்டு என்று தெரிய வந்ததும், அருகில் இருக்கும்வரை அங்கு வந்து மீன் பிடிக்குமாறு கேட்டுக் கொண்டு அதனைப்பற்றிய விவரங்களையும், மீன் பிடிக்க உதவும் தூண்டில் தந்து உதவுவதாகவும் டார்சி கூறினான். எலிசபெத்துடன் நடந்து வந்து கொண்டிருந்த திருமதி. கார்டினருக்கும் ஆச்சரியமாக இருந்தது. எலிசபெத்தும் மிக்க சந்தோஷமடைந்தாள். ஆனால் அவளால் தன் பிரமிப்பினை அடக்க முடியவில்லை. ஏன் அவன் இவ்வளவு மாறிவிட்டான்? எதனால் இருக்கும்? எனக்காக அவனுடைய நடத்தை இவ்வளவு மாறியிருக்காது, ஹன்ஸ்போர்டில் நான் அவனை பழித்தது அவனை இவ்வளவு மாற்றியிருக்காது, அவன் இன்னமும் என்னை காதலிக்கிறான் என்பது சாத்தியமேயில்லைஎன்ற எண்ணம் எழுந்தபடி இருந்தது.
 
பெண்மணிகள் இருவரும் முன்னாலும், ஆண்கள் இருவரும் பின்னாலும்; இதுபோன்று சிறிது நேரத்திற்கு நடந்தபின், நீரில் இருந்த ஒரு விநோதமான செடியைப் பார்ப்பதற்காக நதியின் கரைக்கு இறங்கிச் சென்ற பிறகு, சேர்ந்து நடப்பதில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டது. திருமதி. கார்டினர் அன்று முழுவதும் அதிகம் நடந்து மிகவும் களைப்படைந்து இருந்ததால், எலிசபெத்தின் உதவி போதாது என நினைத்து, திரு. கார்டினரின் உதவியுடன் அவர் கையைப்பிடித்து நடக்கலானாள். அதனால் டார்சி தன் இடத்தை மாற்றி எலிசபெத்துடன் நடக்க ஆரம்பித்தான். சிறிது மௌனத்திற்குப் பிறகு எலிசபெத் பேசலானாள். தான் இங்கு வருவதற்குமுன், அவன் இங்கு ஊரிலில்லை என்ற செய்தி தனக்குத் தீர்மானமாகத் தெரிவிக்கப்பட்டது என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்பினாள். நாளைதான் நீ இங்கு வருவாய் என உனது வீட்டு பணிப்பெண் கூறினாள். நாங்கள் பேக்வெல்-ற்கு கிளம்புவதற்குள் நீ வருவாய் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.அவள் கூறிய செய்தி உண்மை என்றும், தனக்கு இங்கு சொத்து குறித்து, அதனை மேற்பார்வையிடுபவரோடு சிறிது வேலை இருந்ததால் ஒருநாள் முன்னதாக கிளம்பி வந்துவிட்டதாகவும், மற்றவர்கள் நாளை வருவார்கள் என்றும், அதில் அவளுக்கு தெரிந்த நபர்கள், திரு. பிங்கிலியும், அவளது சகோதரிகளும் இருக்கிறார்கள் என்றும் பதிலளித்தான்.
 
லேசான தலையசைப்புடன் அப்பதிலை ஏற்றுக் கொண்ட எலிசபெத்திற்கு பிங்கிலியின் பெயரைக் கேட்டவுடன் அவள் எண்ணங்கள் பின்நோக்கி நகர்ந்தன. அவர்கள் இருவருக்கும் இடையே பிங்கிலியைப்பற்றிய பேச்சு நடந்தது ஞாபகத்திற்கு வந்தது. டார்சியின் முகபாவத்தைக் கண்ட எலிசபெத் அவனும் அதையேதான் எண்ணிப் பார்க்கிறான் எனப் புரிந்து கொண்டாள்.
 
அந்த நண்பர்களில் மற்றொரு நபரும் இருக்கிறாள், உன்னை சந்திக்க ஆவலாக இருக்கிறாள்.--நீ லாம்படனில் தங்கும் பொழுது எனது தங்கையை உனக்கு அறிமுகப்படுத்த அனுமதிப்பாயா அல்லது நான் உன்னிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறேனா?‘
 
இந்த கேள்வி எலிசபெத்திற்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. எவ்வாறு அவனுக்கு அதற்கு சம்மதித்தோம் என அவளுக்குப் புரியவில்லை. மிஸ். டார்சிக்கு, தன்னை பார்க்க விரும்புவதற்கு காரணம் எதுவாக இருந்தாலும் சரி, இது கண்டிப்பாக டார்சியின் வேலையாகத்தான் இருக்கும் என நினைத்தாள். தன் மேலுள்ள கோபம், தன்னைப்பற்றி உண்மையிலேயே தவறாக நினைக்க வைக்கவில்லை என்பதில் அவளுக்கு சந்தோஷமும், திருப்தியும் ஏற்பட்டது.
 
இருவரும், தத்தம் எண்ணங்களில் மூழ்கி அமைதியாக நடந்தனர். எலிசபெத்திற்கு தர்மசங்கடமாக இருந்த போதிலும், சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருந்தது. தனது தங்கையை அவளுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற அவனுடைய விருப்பம், அவளுக்குக் கிடைத்த மிக உயர்ந்த பாராட்டாகும். விரைவில் அவர்கள் வண்டியின் அருகே வந்து சேர்ந்த பொழுது திரு. கார்டினரும், அவரது மனைவியும் கால் மைல் தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
 
வீட்டிற்குள் வரும்படி அழைத்ததற்கு தான் களைப்படையவில்லை என்று அவள் பதிலளித்ததால், வெளியில் புல்வெளியில் நின்றனர். அவளுக்குப் பேச வேண்டும் போலிருந்தது, நிறைய விஷயங்கள் பேசியிருக்கலாம், ஆனால் எல்லாவற்றையும் பேச முடியாதபடி ஒரு தடையிருந்தது. தாங்கள் பிரயாணம் செய்து கொண்டிருப்பது ஞாபகத்திற்கு வந்ததால், மேட்லாக்பற்றியும், டௌவ்டேல்பற்றியும் மிகவும் தீவிரமாகப் பேசலானாள். திரு. கார்டினரும், திருமதி. கார்டினரும் அருகில் வந்தவுடன் வீட்டிற்குள் வந்து சற்று இளைப்பாறி செல்லலாம் என்று அவன் சொன்னதைப் பணிவுடன் மறுத்து, அவரவர் திசை நோக்கி கிளம்பினர். வண்டியில் ஏறுவதற்கு பெண்மணிகளுக்கு உதவி செய்த டார்சி, வீடு நோக்கி மெதுவாக செல்வதை எலிசபெத் பார்த்தாள்.
 
அவனை அவளுடைய அத்தையும், மாமாவும் வெகுவாகப் புகழ்ந்தனர். அவன் மிகவும் அடக்கமானவன், பணிவுமிக்கவன், நன்னடத்தை உள்ளவனாக இருக்கிறான்என்றார் அவளது மாமா.
 
அவனிடத்தில் நிச்சயமாக ஒருவித கம்பீரம் இருக்கிறது. இயற்கையாகவே அவன் அப்படித்தான் போலும், பொருத்தமில்லாதது போலில்லை. வீட்டின் பணிப்பெண் கூறியதுபோல், சிலர் கர்வமுடையவன் என்று கூறினாலும், நான் அதை அவனிடத்து ஒரு துளியும் பார்க்கவில்லைஎன்று அவளது அத்தை கூறினாள்.
 
நம்மிடம் அவன் நடந்து கொண்ட முறை மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மரியாதையுடன்அக்கறையும் தெரிந்தது, இவ்வளவு அக்கறை செலுத்த வேண்டிய அவசியமேயில்லை. எலிசபெத்துடன் அவனுக்கு இருந்த தொடர்பு குறைவாகவே இருப்பதால், அவன் நடந்து கொண்டது ஆச்சரியமாக இருந்தது.
 
விக்காமைப்போல் அழகானவனாக இல்லாவிடினும், அவனுடைய அங்கலட்சணங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன. ஆனால் நீ எப்படி அவன் ஏற்றுக் கொள்ளவே முடியாதபடி இருக்கிறான் என்று கூறினாய்?‘ என அவளது அத்தை வினவினாள்.
 
தான் அவ்வாறு நினைத்ததற்கு ஏதோ காரணங்களைக் கூறிய எலிசபெத், கென்ட்டில் அவனை சந்தித்த பொழுது முன்பைக் காட்டிலும் அதிகம் பிடித்திருந்தது என்றும், இன்று காலை அவ்வளவு இனிமையாக நடந்து கொண்டதுபோல் அவனை தான் பார்த்ததே இல்லை என்றும் கூறினாள்.
 
ஆனால் அவன் மரியாதையாகப் பேசியது அவன் ஒரு விசித்திரமானவனாக இருக்கலாமோஎன்ற அவளது மாமா, ‘பெரிய மனிதர்கள் பல சமயம் இப்படித்தான் இருப்பார்கள். அதனால் மீன் பிடிக்க அழைத்ததை நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன், ஏனெனில் நாளை அவனது மனம் மாறலாம், என்னை இங்கிருந்து துரத்தியும் விடலாம்என்றார்.
 
அவனைப்பற்றி முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என நினைத்த எலிசபெத் பதிலேதும் சொல்லவில்லை.
 
இன்று அவனை பார்த்ததிலிருந்து அவன் விக்காமிடம் கடுமையாக நடந்து கொண்டிருப்பதுபோல் யாரிடமும் நடந்து கொண்டிருக்க முடியாது எனத் தோன்றியது. அவனைப் பார்த்தால் மோசமான குணம் உள்ளவன்போல் தெரியவில்லை. மாறாக அவனது பேச்சிலேயே இனிமை இருக்கிறது. பார்ப்பதற்கும் கம்பீரமாக இருக்கிறான். யாரும் அவனைப்பற்றி, குறை சொல்ல மாட்டார்கள் எனத் தெரிகிறது. இன்று காலை பணிப்பெண்மணியும் அவனைப்பற்றி வெகுவாகப் புகழ்ந்தாள். அதனைக் கேட்டு எனக்கு மிகவும் சிரிப்பு வந்தது. அவன் தாராள மனப்பான்மையுடன் வேலைக்காரர்களிடம் இருந்திருக்கிறான். இக்குணம் அவனை மிகவும் நல்லவனாக அவர்களை உணர வைக்கும்என்று அவளது அத்தை கூறினாள்.
 
எலிசபெத்திற்கு இப்பொழுது டார்சி, விக்காமிடம் நடந்து கொண்டதை நியாயப்படுத்த வேண்டும் எனத் தோன்றியதால், அதே சமயம் வெகு ஜாக்கிரதையாக, எவ்வாறு கென்டில் தங்கியிருந்த பொழுது டார்சியின் உறவினர் மூலம் கேள்விப்பட்டதிலிருந்து, டார்சி மோசமான குணம் உள்ளவனேயல்ல, அவன் நடந்து கொண்டதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது, ஹர்ட்போர்ட்ஷயரில் தங்கியிருந்த பொழுது தாங்கள் நினைத்திருந்ததுபோல் விக்காம் அவ்வளவு விரும்பத்தக்கவன் அல்ல எனப் புரிய வைக்க முயற்சி செய்தாள். இதை உறுதிப்படுத்துவதுபோல் அவர்களுக்குள் நடந்த கொடுக்கல் வாங்கல்களைப்பற்றி எடுத்துரைத்து, குறிப்பாக யார் கொடுத்த தகவல் என்று கூறாமல், ஆனால் இவ்விவரங்களை முழுவதுமாக நம்பலாம் என்றும் சொன்னாள்.
 
திருமதி. கார்டினருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது, அக்கறையாகக் கேட்டுக் கொண்டாள். ஆனால், வண்டியில் பிரயாணம் செய்தவாறே தன்னுடைய பழைய இனிமையான இடங்களைப் பார்த்து மெய்மறந்து, பழைய ஞாபகங்களால் ஈர்க்கப்பட்டு, ஒவ்வொரு இடத்தையும் தன்னுடைய கணவருக்குக் காண்பித்துக் கொண்டு வந்ததில் மற்ற எல்லாவற்றையும் மறந்தாள். களைப்பு தீர உணவருந்தி விட்டு மீண்டும் தன்னுடைய பழைய நண்பர்களை சந்தித்துப் பேசி திருப்தி அடைந்தாள்பல வருடங்கள் கழித்து மீண்டும் நண்பர்களை சந்தித்ததில் அன்று மாலை முழுவதும் திருமதி. கார்டினர் திருப்தியாக இருந்தாள்.
 
அன்று நடந்த சம்பவங்களில் மூழ்கி இருந்த எலிசபெத்திற்கு புதிய நண்பர்களிடம் கவனம் போகவில்லை. டார்சியின் மரியாதையான நடத்தையை ஆச்சரியத்துடன் எண்ணிப் பார்த்த அவளுக்கு அவனுடைய தங்கையை அறிமுகப்படுத்தப் போவதுதான் மிக்க ஆச்சரியத்தை அளித்தது.



book | by Dr. Radut