Skip to Content

Chapter 08 ரோஸிங்ஸ் பார்கில் டார்சியும், எலிசபெத்தும்

 

கர்னல் பிட்ஸ்வில்லியம், நடந்து கொள்ளும் விதம் பார்ஸனேஜில் உள்ளவர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. ரோஸிங்ஸில் அவர்கள் மேற்கொள்ளும் நிகழ்ச்சிகளின் சந்தோஷங்களுக்கு அவர் மேலும் மகிழ்வூட்டுவார் என பெண்மணிகள் அனைவரும் நினைத்தனர். ரோஸிங்ஸில் விருந்தினர் இருந்ததினால், இவர்களது வருகை அங்கு தேவைப்படவில்லை, ஆதலால் சிறிது நாட்களுக்கு அவர்களுக்கு அழைப்பு ஏதும் வரவில்லை. ஆடவர் இருவரும் வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிந்த பிறகு, ஈஸ்டர் தினத்தன்று, அவர்களுக்கு அந்தப் பெருமை கிடைத்தது. சர்ச்சிலிருந்து கிளம்பிக் கொண்டிருக்கும் பொழுது, மாலையில் வருமாறு அவர்களுக்கு வாயால் வெறும் ஒரு அழைப்பு விடுக்கப்பட்டது. லேடி காதரினையும், அவளுடைய மகளையும் கடந்த ஒரு வாரமாக அவர்கள் அதிகம் சந்திக்கவில்லை. கர்னல் பிட்ஸ்வில்லியம், அங்கிருந்த சமயத்தில் ஒரு தடவைக்குமேல் அவர்களைச் சென்று பார்த்தார். ஆனால் டார்சியையோ சர்ச்சில் மட்டும்தான் பார்க்க முடிந்தது.
 
அழைப்பு என்னவோ ஏற்றுக் கொள்ளப்பட்டது, மற்றவர்களுடன், அவர்கள் சரியான நேரத்திற்கு லேடி காதரினுடைய வரவேற்பறையில் சேர்ந்து கொண்டனர். தகுந்த மரியாதையுடன் அவள் அவர்களை வரவேற்றாள். ஆனால் யாருமில்லாத பொழுது அவர்களுடைய துணை தேவையாக இருந்த அளவு தற்சமயம் அது அவ்வளவாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது. அவள் தன் மருமகன்களுடன் முற்றிலுமாக ஐக்கியமாகியிருந்தாள். அவ்வறையில் இருக்கும் மற்ற நபர்களிடம் பேசியதைவிட குறிப்பாக டார்சியுடன் மட்டுமே பேசிக் கொண்டிருந்தாள்.
 
கர்னல் பிட்ஸ்வில்லியம் அவர்களைக் கண்டதில் உண்மையிலேயே அதிக மகிழ்ச்சியடைந்தார், மேலும் ரோஸிங்ஸில் எது ஒன்றும் அவருக்கு வரவேற்கத்தக்க விடுதலையை அளித்தது. மேலும் திருமதி. காலின்ஸின் அழகான தோழி அவருடைய கவனத்தை அதிகம் ஈர்த்திருந்தாள். அவள் அருகில் வந்து அமர்ந்த அவர், கென்டைப்பற்றியும், ஹர்ட்போர்ட்ஷயரைப்பற்றியும், பயணம் செய்வதைப் பற்றியும், வீட்டில் இருப்பதைப்பற்றியும், புதிய புத்தகங்கள், இசையைப்பற்றியும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் அழகாக பேசியது, எலிசபெத்திற்கு அவ்வறையில், இதுபோன்று பாதியளவுகூட இதற்கு முன்பு பொழுது போனதில்லை. அவர்கள் உற்சாகமாகவும், சரளமாகவும் பேசியது லேடி காதரினுடைய கவனத்தையும், டார்சியின் கவனத்தையும்கூட ஈர்த்தது. என்ன பேசுகிறார்கள் எனத் தெரிந்து கொள்ளும் ஆவலில், உடனடியாக அவன் அவர்களை திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான். இதே உணர்ச்சியுடன் இருந்த லேடி காதரின் அவர்களை நோக்கி விவஸ்தை இல்லாமல்,
 
பிட்ஸ்வில்லியம், நீ என்ன பேசிக் கொண்டிருக்கிறாய்? எதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறாய்? மிஸ். பென்னட்டிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறாய்? என்ன என்று நானும் கேட்கிறேன்என்று கேட்டாள்.
 
பதில் சொல்வதை இனி தவிர்க்க முடியாது எனும் பொழுது, ‘நாங்கள் இசையைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்என்றார்.
 
இசையைப்பற்றியா! அவ்வாறெனில் உரக்க பேசலாமே. எல்லாவற்றையும்விட எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இதுதான். நீங்கள் இருவரும் இசையைப்பற்றி பேசுகிறீர்கள் என்றால் நானும் உரையாடலில் பங்கு கொள்ள வேண்டும். என்னைவிட இசையை உண்மையாகவே ரசிப்பவர்களும், என்னைக் காட்டிலும் இயற்கையான ரசனையுள்ளவர்களும் இங்கிலாந்தில் மிகக் குறைவு. நான் மட்டும் இசையை கற்றிருந்தால், பெரிய வல்லுநர் ஆகியிருப்பேன். ஆனியின் உடல்நிலை சம்மதித்திருந்தால், அவளும் அவ்வாறு ஆகியிருப்பாள். அவள் மிக அழகாக வாசித்திருப்பாள் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமுமில்லை. ஜார்ஜியானா இசையில் எப்படி, டார்சி?‘
 
தன்னுடைய தங்கையின் திறமையைப்பற்றி டார்சி, பாசத்துடன் புகழ்ந்து பேசினான்.
 
அவளைப்பற்றி நல்ல விஷயமாகக் கேட்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம். அதிக நேரம் சாதகம் செய்தால்தான் நன்றாக வாசிக்க முடியும் என்று நான் கூறியதாகச் சொல்என்றாள் லேடி காதரின்.
 
இந்த அறிவுரைக்கு அவசியமேயில்லை, அம்மா, என்னை நம்புங்கள், அவள் இடைவிடாது பயிற்சி செய்த வண்ணம் இருப்பாள்என்றான்.   
 
அப்படியெனில் நல்லது. பயிற்சி என்பது அதிகமே ஆக முடியாது. எக்காரணம் கொண்டும் இதைப் புறக்கணிக்கக் கூடாது என அடுத்த கடிதம் எழுதும் பொழுது உத்தரவிட போகிறேன். ஓயாத பயிற்சியின்றி, இசையில் எவ்வித தேர்ச்சியும் அடைய முடியாது என நான் இளம்பெண்களிடம் அடிக்கடி கூறுவேன். மேலும், பயிற்சியை கடைப்பிடித்தால்தான், உண்மையாகவே நன்கு வாசிக்க முடியும் என்று மிஸ். பென்னட்டிடம் பல முறை கூறியிருக்கிறேன். திருமதி. காலின்ஸிடம் பியானோ இல்லையென்றாலும், அவள் ரோஸிங்ஸிற்கு தினமும் வந்து திருமதி. ஜென்கின்ஸன் அறையில் உள்ள பியானோவில் வாசிக்கலாம் என பல முறை கூறியிருக்கிறேன். வரவேற்பு அவளுக்கு நிச்சயம் உண்டு. வீட்டின் அப்பகுதியில் அவளால் எந்த இடைஞ்சலும் இருக்காது.
 
தன்னுடைய சித்தியின் பண்பற்ற செய்கையை கண்டு டார்சி சற்றே அவமானமடைந்தாற்போல் தோன்றியது, பதிலேதும் கூறவில்லை.
 
காபி அருந்தியதும், தனக்கு வாசித்துக் காட்டுவதாக வாக்களித்ததை கர்னல் பிட்ஸ்வில்லியம், எலிசபெத்திற்கு ஞாபகப்படுத்தினார், அவள் நேரடியாக இசைக் கருவியின் முன் அமர்ந்தாள். அவரும், அவளருகே ஓர் நாற்காலியை இழுத்து அதில் அமர்ந்தார். பாதி பாட்டையே கேட்ட லேடி காதரின் அவளுடைய மற்றொரு மருமகனிடம், அவன் அவளிடமிருந்து விலகிச் செல்லும்வரை பேசிக் கொண்டிருந்தாள். தன்னுடைய வழக்கமான ஆழ்ந்த யோசனையுடன் பியானோவை நோக்கிச் சென்று வாசிப்பவளின் அழகிய முகம் முழுவதுமாகக் காணக்கூடிய இடத்தில் டார்சி தன்னை நிறுத்திக் கொண்டான். அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று கவனித்த எலிசபெத், ஏதுவாக கிடைத்த முதல் இடைவெளியில் ஒரு புன்னகையுடன் அவனை நோக்கிக் கூறலானாள்,
 
இம்மாதிரி நான் வாசிப்பதைக் கேட்க வந்து என்னை பயமுறுத்தலாம் என நினைக்கிறாயா, டார்சி? உன்னுடைய சகோதரி நன்றாக வாசிப்பவளாக இருந்தாலும், நான் பயந்து போய் விடமாட்டேன். மற்றவர்கள் என்னை பயமுறுத்த நினைத்தாலும் என்னிடம் உள்ள ஒரு பிடிவாதம் அதனை பொறுத்துக் கொள்ளாது. என்னை பயமுறுத்தச் செய்யும் ஒவ்வொரு முயற்சியிலும், என்னுடைய தைரியம் எப்பொழுதும் அதிகரிக்கும்.
 
நீ சொல்வது தவறு என்று நான் சொல்ல மாட்டேன். உன்னை பயப்பட வைக்கும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை என உன்னால் நம்ப முடியாது. அவ்வப்போது உனக்கு சொந்தமில்லாத கருத்துக்களை சொல்வதில் உனக்கு அதிக சந்தோஷம் கிடைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு உன்னிடம் எனக்கு பழக்கம் உண்டு.
 
தன்னைப்பற்றிய இந்த அபிப்பிராயத்தைக் கேட்டு எலிசபெத் மனதார சிரித்தாள். கர்னல் பிட்ஸ்வில்லியமிடம் உங்களுடைய சகோதரன் உங்களிடம் என்னைப்பற்றி மிகவும் அழகான ஒரு கருத்தைக் கூறுவார், நான் சொல்லும் ஒரு வார்த்தையைகூட நம்ப வேண்டாம் என்று சொல்லிக் கொடுப்பார். ஏதோ ஒரு அளவு மரியாதையுடன் இருந்து விட்டுப் போகலாம் என்று நான் நினைத்திருந்த உலகத்தின் இப்பகுதியில் என்னுடைய உண்மையான குணத்தை மிக நன்றாக வெளிச்சமாக்கும் ஒருவரை நான் சந்தித்ததில் நான் துரதிர்ஷ்டசாலிதான். டார்சி, ஹர்ட்போர்ட்ஷயரில் எனக்கு பாதகமாக நடந்த உனக்குத் தெரிந்த விஷயங்களைப்பற்றி கூறியது உன்னுடைய குறுகிய மனப்பான்மையை காண்பிக்கிறது. என்னைச் சொல்ல அனுமதி கொடுத்தால்--பண்பற்றதாகத்தான் இருக்கும்--ஏனெனில் என்னைத் திருப்பிப் பேச வைக்கிறது, நான் ஏதாவது பேசும்படி ஆகிவிடும். இதனால் இதைக் கேட்கும் உன் உறவினர்களுக்கு அதிர்ச்சி உண்டாகும்.
 
நான் உனக்கு பயப்படவில்லைஎன்றான் டார்சி சிரித்தவாறு.
 
அவன்மேல் என்ன குற்றம் சாட்டப் போகிறாய் எனக் கேட்க நான் ஆவலுடன் இருக்கிறேன். முன்பின் தெரியாதவர்களிடம் அவன் எப்படி நடந்து கொள்கிறான் என அறிய விரும்புகிறேன்என்றார் கர்னல் பிட்ஸ்வில்லியம்.
 
அப்படியெனில் கேட்டுக் கொள்ளுங்கள்--ஆனால் மிக மோசமான சில தகவல்களுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். முதன் முதலில் நான் அவனை சந்தித்தது ஹர்ட்போர்ட்ஷயரில் ஒரு நடனத்தில்--அந்த நடனத்தில் இவன் என்ன செய்தான் என்று நினைக்கிறீர்கள்! நான்கே நான்கு நடனங்கள்தான் ஆடினான்! எனக்கு உங்களை கஷ்டப்படுத்த வருத்தமாகத்தான் உள்ளது--ஆனால் அதுதான் உண்மை. அவன் நான்கு நடனங்கள் மட்டும்தான் ஆடினான், ஆண்களே அங்கு குறைவாக இருந்தாலும்; எனக்குத் தெரிந்தவரை சேர்ந்து ஆடுவதற்கு துணையை தேடி ஒன்றுக்கும் அதிகமாகப் பெண்கள் அங்கு அமர்ந்திருந்தனர். டார்சி நீ இதை மறுக்க முடியாது.
 
என்னுடன் வந்தவர்களைத் தவிர, அங்கு கூடியிருந்தவர்களில் வேறு எவரையும் அச்சமயம் எனக்குத் தெரியாது. ‘.
 
‘.உண்மைதான்; நடன அறையில் யாரையும் அறிமுகப்படுத்தக்கூட முடியாது. சரி கர்னல் பிட்ஸ்வில்லியம் அடுத்தது நான் என்ன வாசிப்பது? என்னுடைய விரல்கள் உங்களுடைய உத்தரவுக்காகக் காத்திருக்கின்றன‘.
 
ஒருவேளை அறிமுகப்படுத்தச் சொல்லி நான் கேட்டிருந்தால், எனக்கு இன்னும் சரியாக மதிப்பிட முடிந்திருக்கும். அறிமுகமில்லாதவர்களிடம் நான் என்னையே சிபாரிசு செய்து கொள்வதில் அவ்வளவு சிறந்தவன் அல்லஎன்று டார்சி கூறினான்.
 
உன் சகோதரனிடமே இதற்கான காரணத்தை நாம் கேட்கலாமா? பகுத்தறிவும், கல்வியறிவும் உள்ள ஒருவன், இவ்வுலகில் வாழ்ந்த ஒருவன், ஏன் முன்பின் அறியாதவர்களிடம் தன்னை பரிந்துரைக்க தகுதியில்லாமல் இருக்கிறான் என்று நாம் கேட்கலாமா?‘ என்று எலிசபெத் கர்னல் பிட்ஸ்வில்லியமைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
 
அவனைக் கேட்காமலேயே எனக்கு இதற்கு பதிலளிக்க முடியும். ஏனெனில் அவன் தன்னைத்தானே வருத்திக் கொள்ள மாட்டான்என்று பிட்ஸ்வில்லியம் பதிலளித்தார்.
 
முன்பின் பார்த்திராத மனிதர்களுடன் சில பேருக்கு இருப்பதைப்போல், சரளமாகப் பேசும் திறமை, நிச்சயம் என்னிடம் இல்லை. நான் அவர்களைப்போல் பேசவும் முடியாது அல்லது அவர்களுடைய விவகாரங்களில் அக்கறை இருப்பதுபோல் காண்பித்துக் கொள்ளவும் முடியாது. இதைத்தான் எல்லோரும் அடிக்கடி செய்வதை நான் பார்க்கிறேன்என்று டார்சி கூறினான்.
 
நிறைய பெண்மணிகள் நன்றாக வாசிப்பதைப் பார்த்திருக்கிறேன், என்னுடைய விரல்கள் இந்த பியானோவின்மேல் அவ்வளவு திறமையாக நகரமாட்டேன் என்கிறது. அவர்களுடையதுபோல் அவ்வளவு வலிமையும், வேகமும் இல்லை. அதைப்போன்ற நயத்தையும் கொண்டு வர முடிவதில்லை. நான் பயிற்சி செய்ய முயற்சி எடுப்பதில்லை, அதனால் இது என்னுடைய தவறு என்றே எண்ணுகிறேன். அதிக திறமை வாய்ந்த பெண்மணிகளின் வாசிப்பைப்போல் நானும் வாசிக்க முடியாது என நான் நினைக்கவில்லை.
 
நீ கூறுவது மிக சரிஎன்று சிரித்தவாறே கூறிய டார்சி, ‘நீ உன் நேரத்தை இன்னமும் சிறந்த முறையில் பயன்படுத்தியிருக்கிறாய். நீ வாசிப்பதைக் கேட்கும் பாக்கியம் உள்ளவர்கள் அதில் எந்த குறையும் உள்ளதாக நினைக்க மாட்டார்கள். நாம் இருவருமே அந்நியர்களுக்கு எதுவும் செய்து காண்பிக்க மாட்டோம்.
 
அப்பொழுது லேடி காதரின் அவர்களை குறுக்கிட்டு என்ன பேசுகிறார்கள் என வினவினாள். எலிசபெத் உடனே மீண்டும் வாசிக்க ஆரம்பித்தாள். லேடி காதரின் அருகில் வந்து சில நிமிடங்கள் அவள் வாசிப்பதைக் கேட்டபின் டார்சியிடம்,
 
மிஸ். பென்னட் இன்னும் அதிக பயிற்சி செய்து, ஒரு லண்டன் ஆசிரியரிடம் கற்றுக் கொண்டால், வாசிப்பதில் எந்த தவறும் இருக்காது. அவள் விரல் அசைவுகள் திறமையாக இருந்தாலும், ஆன் அளவிற்கு அவ்வளவு ரசனை இல்லை. ஆன்னுடைய உடல் நிலை மட்டும் அவளை கற்றுக் கொள்ள அனுமதித்திருந்தால், அவள் ஒரு சிறந்த இசைக் கலைஞர் ஆகியிருப்பாள்.
 
டார்சி எந்த அளவிற்கு டீ பர்கினுடைய புகழைக் கேட்டு மனப்பூர்வமாக அதை ஆமோதித்தான் என்பதை அறிய எலிசபெத் அவனைப் பார்த்தாள். ஆனால் அந்த சமயத்தில் மட்டுமல்லாது எச்சமயத்திலும் காதலுக்கான எந்த அடையாளமும் அவனிடம், அவளுக்குத் தெரியவில்லை. மிஸ். பிங்கிலி மட்டும் அவனுடைய உறவினளாக இருந்திருந்தால்; அவளை திருமணம் செய்து கொள்ள இதே அளவு வாய்ப்பு இருந்திருக்கும் என்று அவன் மிஸ். டீ பர்க்-இடம் நடந்து கொண்ட விதத்திலிருந்து புரிந்து கொண்டாள்.
 
எலிசபெத்தின் வாசிப்பை விமரிசனம் செய்த வண்ணம் இருந்த லேடி காதரின் எவ்வாறு நேர்த்தியாக வாசிப்பது, ரசனையுடன் வாசிப்பது என்பது பற்றிய குறிப்புகள் கொடுத்துக் கொண்டிருந்தாள். மரியாதைக் காரணமாக அவைகளை எலிசபெத் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள். அவ்வம்மையாரின் வண்டி, அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல தயாராக வரும்வரை ஆடவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி பியானோவில் வாசித்துக் கொண்டிருந்தாள்.
 ------
 

 



book | by Dr. Radut