Skip to Content

Chapter 06 ரோஸிங்ஸ் பார்கிற்கு விடுக்கும் அழைப்பு

 

இந்த அழைப்பின் விளைவாக காலின்ஸின் வெற்றிப் பெருமிதம் முழுமை அடைந்தது. தன்னை ஆதரிக்கும் பெண்மணியின் கம்பீரியத்தை, மலைத்து நிற்கும் தன்னுடைய விருந்தினர்களுக்கு எடுத்துக்காட்டவும், தன்னிடமும் தன் மனைவியிடமும் அவள் காண்பிக்கும் மரியாதையை அவர்கள் பார்க்கவும், இதைத்தான் அவன் விரும்பினான், அதற்கு இவ்வளவு விரைவில் சந்தர்ப்பம் கிடைப்பது லேடி காதரினுடைய இரக்க குணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் அதற்கு அவளை எந்த அளவுக்குப் புகழ்ந்தால் போதுமானது என்றும் அவனுக்குத் தெரியவில்லை.
 
நான் ஒப்புக் கொள்கிறேன்என்ற அவன் மதிப்பிற்குரிய அம்மையார் நம்மை, ஞாயிறன்று ரோஸிங்ஸில் தேநீர் அருந்தி, மாலைப் பொழுதைக் கழிப்பதற்கு அழைத்திருந்தால் எனக்கு எந்தவித ஆச்சரியமும் இருந்திருக்காது. சொல்லப்போனால், அவள் எளிதில் அணுகக் கூடிய குணம் உள்ளவர் என்பதை அறிந்திருப்பதால் இது நடக்கும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் இம்மாதிரியான ஒரு அக்கறையை யார் எதிர்பார்த்திருக்க முடியும்? உங்கள் வருகைக்குப் பிறகு உடனேயே (மேலும் அனைவருக்கும் விடுத்துள்ள அழைப்பு) அங்கு விருந்துண்ண அழைப்பு வரும் என்று யார்தான் நினைத்திருக்க முடியும்!
 
நடந்ததை நினைத்தால் எனக்கு ஒன்றும் அவ்வளவு ஆச்சரியம் ஏற்படவில்லை. உயர்ந்தோரின் நடத்தை எப்படியிருக்கும் என்பதை வாழ்க்கையில் நான் இருக்கும் நிலை எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. கோர்ட்டைப் பொறுத்த வரையில் சிறந்த வளர்ப்பைக் காட்டும் இத்தகைய நிகழ்ச்சிகள் சகஜம்தான்என்று சர் வில்லியம் கூறினார்.
 
அன்றைய தினமும், மறுநாள் காலையும் ரோஸிங்ஸிற்கு அவர்கள் போக இருப்பதைத் தவிர வேறு எதுவும் பேசப்படவில்லை. அங்குள்ள அறைகளின் பிரம்மாண்டமும், அங்குள்ள வேலையாட்களின் எண்ணிக்கையும், அவ்வளவு அற்புதமான விருந்தும் அவர்களை முழுமையாக ஆட்கொள்ளாமல் இருக்க, காலின்ஸ் அவர்களிடம் அங்கு என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று மிகவும் கவனமாக சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
 
பெண்மணிகள் புறப்பட தயார் செய்து கொள்ள எழுந்த பொழுது, அவன் எலிசபெத்திடம்,
 
என்ன உடை அணிய வேண்டும் என நீ உன்னை வருத்திக் கொள்ளாதே, எனதருமை சகோதரியே. எந்த உடை அவளுக்கும் அவளது பெண்ணிற்கும் அழகாக இருக்குமோ அம்மாதிரி நேர்த்தியாக உடை அணிய வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவள் லேடி காதரின். உன்னிடம் இருப்பதில் சிறந்த ஒன்றினை நீ அணிந்து கொண்டால் போதும் என நான் உனக்கு அறிவுறுத்துகிறேன். இதற்குமேல் எதுவும் வேண்டாம். நீ எளிமையாக இருந்தால் லேடி காதரின் உன்னைப்பற்றி தவறாக நினைக்க மாட்டாள். அந்தஸ்தின் வேறுபாட்டை அவள் பாதுகாக்க விரும்புவாள்.
 
இரவு விருந்துக்கு தன்னை காக்க வைத்தால் அதற்கு லேடி காதரின் மிகவும் ஆட்சேபிப்பாள் என்பதற்காக அவர்கள் உடை அணியும் பொழுது இரண்டு மூன்று முறை, வெவ்வேறு அறையின் கதவருகே சென்று அவர்களை விரைவாக கிளம்பும்படி அழைத்தான். லேடி காதரினைப்பற்றியும், அவளுடைய வாழ்க்கை முறைகளைப் பற்றியும் அச்சமூட்டுகின்ற வகையில் சொல்லப்பட்டது மரியா லூகாஸிற்கு பயத்தைக் கொடுத்தது. ஏனெனில் அவள் அதிகம் எல்லோருடனும் பழகியிருக்கவில்லை. அவளுடைய தகப்பனார், செயின்ட் ஜேம்ஸில் தன்னுடைய உரையை நிகழ்த்தும் பொழுது எந்த அளவிற்கு பயந்தாரோ அதே அளவு பயம், ரோஸிங்ஸில் அறிமுகம் ஆவதைப்பற்றி நினைக்கும் பொழுதும் எழுந்தது.
 
கால நிலையும் அருமையாக இருந்ததால், பூங்காவைத் தாண்டிச் சென்ற அரை மைல் தூரம் நடைப் பயணம் இனிமையாக இருந்தது. ஒவ்வொரு தோட்டமும் அதற்கேயுரிய அழகுடன் இருந்தது, எலிசபெத் பார்த்து ரசிக்க அங்கு அதிக அளவில் அழகான காட்சிகள் இருந்தன. ஆனால் அக்காட்சிகளைப் பார்த்து ரசிக்க வேண்டும் என காலின்ஸ் எதிர்பார்த்த அளவிற்கு அவளால் சந்தோஷப்பட முடியவில்லை. அவ்வீட்டிற்குமுன் இருந்த ஜன்னல்களைப்பற்றியும், அதனை மெருகூட்ட சர் லூயி டீ பர்க் முதன்முதலாக எவ்வளவு செலவு செய்தார் என்பதைப்பற்றியும் கூறும் பொழுது அது அவளுக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை.
 
வரவேற்பறைக்குச் செல்லும் படியில் ஏறிக் கொண்டிருந்த பொழுது மரியாவின் பயம் ஒவ்வொரு நொடிக்கும் அதிகரித்துக் கொண்டே போயிற்று. சர் வில்லியமும் அமைதியாகக் காணப்படவில்லை--எலிசபெத் தைரியத்துடன் இருந்தாள். லேடி காதரினுடைய அசாதாரண திறமைகளைப்பற்றியோ அல்லது அற்புதமான குணங்களைப்பற்றியோ அவள் எதுவும் கேள்விப்படாததால், அவளுடைய வெறும் பதவி மற்றும் பணத்தினால் ஏற்பட்டிருந்த அந்தஸ்தினை அவளால் எந்தவித நடுக்கமும் இல்லாமல் பார்க்க முடியும் என நினைத்தாள்.
 
வரவேற்பறையிலிருந்து, நேர்த்தியான அளவுடன் முடிக்கப்பட்ட அலங்காரங்களையும், மிகவும் உற்சாகத்துடன் காலின்ஸ் சுட்டிக் காண்பித்தான். பணியாட்களை பின் தொடர்ந்து முன் அறை வழியாக லேடி காதரின், அவளது மகள், திருமதி. ஜென்கின்ஸன் அமர்ந்திருந்த அறைக்குச் சென்றனர். அந்த அம்மையார் மிகுந்த பரிவுடன் அவர்களை வரவேற்க எழுந்தாள்; அவர்களை அறிமுகப்படுத்தும் வேலை தன்னுடையது என திருமதி. காலின்ஸ் தனது கணவனிடம் பேசித் தீர்மானித்து இருந்தாள். எந்தவித மன்னிப்புக் கோராமலும், நன்றி தெரிவிக்காமலும், எவையெல்லாம் அவசியம் என அவன் நினைத்திருப்பானோ அவை எதுவுமின்றி சரியான முறையில் அவர்களை அறிமுகப்படுத்தினாள்.
 
செயின்ட் ஜேம்ஸில் சர் வில்லியம் பார்த்திருந்தாலும், இங்கு தன்னைச் சூழ்ந்துள்ள கம்பீரியத்தைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார். ஒரு சிறிய வணக்கம் கூறுவதற்கு மட்டுமே அவருக்கு தைரியம் இருந்தது. பிறகு ஒரு வார்த்தை கூட பேசாமல் தன் இருக்கையில் அமர்ந்தார். அவரது மகளோ, அளவுக்கு மிஞ்சிய பயத்துடன் இருந்ததால் இருக்கையின் விளிம்பில் அமர்ந்து எந்தப் பக்கம் பார்ப்பது எனத் தெரியாமல் விழித்தாள். எலிசபெத் அங்கிருந்த சூழ்நிலைக்கு சமமாக இருந்தாள். அவளால் தன்முன் இருந்த மூன்று பெண்மணிகளையும் நிதானத்துடன் கவனிக்க முடிந்தது. ஒரு காலத்தில் அழகாக இருந்திருக்கக்க கூடிய லேடி காதரின், தீர்க்கமான அங்க லட்சணத்துடன், உயரமான, பெரிய உருவமுள்ள பெண்மணியாக இருந்தாள். அவளுடைய நடத்தையும் முகத் தோற்றமும் அவ்வளவு இனிமையாக இல்லை, மேலும் அவள் அவர்களை வரவேற்ற விதம் அவர்களுடைய தாழ்ந்த நிலையை ஞாபகப்படுத்தும் வண்ணம் இருந்தது. அவளுடைய மௌனம் மற்றவர்களை அச்சுறுத்தவில்லை. ஆனால் என்ன கூறினாலும் அதை ஒரு அதிகாரத் தோரணையுடனும், தனக்குத்தானே முக்கியத்துவம் கொடுத்துப் பேசியதும், விக்காமினுடைய ஞாபகத்தைதான் உடனடியாக எலிசபெத்திற்கு வரவழைத்தது. அன்று முழுவதும் அவளை கவனித்ததிலிருந்து, லேடி காதரின் விக்காம் கூறியது போலவே இருக்கிறாள் என நினைத்தாள்.
 
முக ஜாடையிலும், நடந்து கொள்ளும் விதத்திலும் தாயார், டார்சியை ஒத்து இருந்தாள் என்பதை கண்டுபிடித்த எலிசபெத், மகளின் பக்கம் தன் பார்வையை திருப்பினாள். மிகவும் மெலிந்தும், உருவத்தில் சிறியவளுமாக இருந்த அவளைப் பார்த்து, மரியாவைப் போலவே தானும் ஆச்சரியப்பட்டாள். உருவத்திலும், முக சாயலிலிலும் இரு பெண்மணிகளிடையே எந்தவித ஒற்றுமையும் இல்லை. மிஸ். டீ பர்க் வெளுத்து, உடல் நலம் குன்றியவள்போல் தோற்றமளித்தாள்; அவளுடைய முக அமைப்பு சாதாரணமாக இல்லை என்றாலும், குறிப்பிடும்படியாக ஒன்றுமில்லை; மிகவும் குறைவாகவே பேசினாள், அதுவும் திருமதி. ஜென்கின்ஸனிடம் மட்டுமே தாழ்ந்த குரலில் பேசினாள். திருமதி. ஜென்கின்ஸனின் தோற்றத்திலும் விசேஷமாக ஒன்றுமில்லை, மகள் பேசுவதையே முற்றிலுமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள், அவள் கண்களில் வெளிச்சம் படாதவாறு திரைச்சீலையை சரி செய்து கொண்டிருந்தாள்.
 
சிறிது நேரம் அமர்ந்தபின், ஜன்னல் வழியாக தெரியும் காட்சிகளைக் காண அழைக்கப்பட்டனர். காலின்ஸ் அதனுடைய அழகினை சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தான். கோடையில் பார்த்தால்தான் அவை இன்னமும் அழகாக இருக்கும் என லேடி காதரின் தெரிவித்தாள்.
 
விருந்து மிகப் பிரமாதமாக இருந்தது. காலின்ஸ் உறுதியாக சொன்னதைப்போலவே, முன்னறிவித்ததைப்போலவே, எல்லா பணியாட்களும் இருந்தனர், எல்லா வகையான தட்டுகளும் இருந்தன. அவன் முன்பே கூறியது போல, அம்மையார் ஆசைப்பட்டது போலவே மேசையின் எதிர்ப்புறத்தில் அவன் அமர்ந்தான். இதைவிட சிறப்பாக வாழ்க்கை வேறெதையும் கொடுக்க முடியாது என்பதுபோல் அவன் காணப்பட்டான்--அவன் உணவு பண்டத்தை வெட்டி எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். எல்லாவற்றையும் சந்தோஷத்துடன் உடனுக்குடன் புகழ்ந்தான். முதலில் காலின்ஸாலும் அடுத்து சற்றே பயம் தெளிந்து, தன் மருமகன் சொல்வதையெல்லாம் எதிரொலித்துக் கொண்டிருந்த சர் வில்லியமினாலும் ஒவ்வொரு உணவு வகையும் புகழப்பட்டது. இவற்றை எல்லாம் லேடி காதரின் எப்படி தாங்கிக் கொள்வாள் என எலிசபெத் நினைத்தாள். ஆனால் லேடி காதரினோ அவர்களுடைய அதீத புகழ்ச்சியில் மிகவும் சந்தோஷமடைந்தாள் எனத் தோன்றியது. அதுவும் குறிப்பாக ஏதாவது ஒரு உணவு வகை வித்தியாசமாக புதுவிதமாக இருந்தது என அவர்கள் கூறுவதைக் கேட்கும் பொழுது தன்னுடைய மிகவும் அழகான புன்னகையால் அதனை ஏற்றுக் கொண்டாள். அங்கு இருந்தோர் எல்லோரும் அதிகம் பேசவில்லை. எலிசபெத் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் பேச தயாராக இருந்தாள். ஆனால் மிஸ். டீ பர்கிற்கும், சார்லெட்டிற்கும் இடையே அமர்ந்திருந்ததால், சார்லெட்டோ லேடி காதரின் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்ததால், பெண்ணோ விருந்தின் முழு நேரத்தில் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் இருந்ததால், அவளாலும் அதிகம் பேச இயலவில்லை. மிஸ். டீ பர்க் எவ்வளவு குறைவாக சாப்பிடுகிறாள் என்று கவனிப்பதிலேயே திருமதி. ஜென்கின்ஸன் குறியாக இருந்தாள். வேறு ஏதாவது உணவு வகையை சாப்பிடும்படி வற்புறுத்தினாள், உடல் நலம் சரியில்லையோ என பயந்தாள். பேசுவது என்பதே தன்னால் முடியாது என மரியா நினைத்தாள், ஆண்கள் சாப்பிடுவதும், புகழ்வதும் தவிர வேறொன்றும் செய்யவில்லை.
 
பெண்மணிகள் யாவரும் வரவேற்பறைக்குத் திரும்பினர். அவர்களுக்கு வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. அதனால் காபி வரும்வரை இடைவிடாமல் பேசிக் கொண்டிருந்த லேடி காதரினுடைய பேச்சைக் கேட்க வேண்டியதாயிற்று. எல்லாவற்றையும்பற்றி தன்னுடைய கருத்துக்களை அழுத்தந்திருத்தமாகக் கூறிக் கொண்டிருந்தது, அவளுடைய கருத்தினை யாரும் இதுவரை எதிர்த்திருக்க மாட்டார்கள் என்பதை நிரூபித்தது, சார்லெட்டின் வீட்டு விஷயங்களைப்பற்றி, அந்தரங்கமாகவும், விலாவாரியாகவும் விசாரித்தாள், எல்லாவற்றையும் எப்படி நிர்வாகம் செய்வது என்பதுபற்றி நிறைய அறிவுரைகள் வழங்கினாள், சிறிய குடும்பமாக இருக்கும் அவளது குடும்பத்தில் எல்லாவற்றையும் எப்படி ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதைபற்றி கூறினாள், மாடுகளையும், கோழிப்பண்ணையையும் எப்படி பராமரிக்க வேண்டும் என்பதைபற்றி சொல்லிக் கொடுத்தாள். மற்றவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக உபதேசம் வழங்கக் கூடிய எதுவுமே இப்பெண்மணியின் கவனத்திலிருந்து தப்பாது என்பதை எலிசபெத் கண்டாள். திருமதி. காலின்ஸுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இடையில் மரியாவிடமும், எலிசபெத்திடமும் பலவிதமான கேள்விகளைக் கேட்டாள். குறிப்பாக, எலிசபெத்தின் குடும்பத்தினரைப்பற்றி எதுவும் தெரியாததால், அவளிடம் அதிகக் கேள்விகள் கேட்டாள். அவள் மிகவும் நற்பண்புகளையுடைய அழகான பெண் என திருமதி. காலின்ஸிடம் கூறினாள். அவளுக்கு எவ்வளவு சகோதரிகள், அவளைவிட வயதில் பெரியவர்களா, சிறியவர்களா, யாருக்கேனும் திருமணம் நடக்கப் போகிறதா, அவர்கள் அழகானவர்களா, அவர்கள் படித்தவர்களா, அவளது தந்தையிடம் என்ன வண்டியிருக்கிறது, அவளுடைய தாயாரின் முதற்பெயர் என்ன, என்று பலவாறு வெவ்வேறு சமயங்களில், கேள்விகள் கேட்டாள். தேவையில்லாத கேள்விகள் என நினைத்த எலிசபெத் மிகவும் அமைதியாக பதிலளித்தாள்--லேடி காதரின் பிறகு,
 
உன்னுடைய தகப்பனாரின் எஸ்டேட் திரு. காலின்ஸுக்கு உயில் மூலம் அளிக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்சார்லெட்டை நோக்கி உனக்காக நான் சந்தோஷப்படுகிறேன். ஆனால் பெண் வழியாக சொத்து வருவதற்கு எந்த ஒரு சந்தர்ப்பமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை--சர் லூயிஸ் டீ பர்க் குடும்பத்தில் அது அவசியம் என நினைக்கப்படவில்லை--மிஸ். பென்னட், உனக்கு பாடத் தெரியுமா, பியானோ வாசிக்கத் தெரியுமா?‘ என்று கேட்டாள்.
 
ஓரளவிற்கு.
 
ஓ! அப்படியெனில்--ஏதாவது ஒரு தருணத்தில், நீ பாடி கேட்க, நாங்கள் சந்தோஷப்படுவோம். எங்களுடைய இசைக் கருவி விலை மதிப்பற்றது, எல்லாவற்றையும்விட மிகச் சிறந்தது--வேறு ஒரு நாள் நீ முயற்சி செய்து பார்--உன்னுடைய சகோதரிகள் பியானோ வாசிப்பார்களா, பாடுவார்களா?‘
 
ஒருத்திக்குத் தெரியும்.
 
ஏன் எல்லோரும் கற்றுக் கொள்ளவில்லை?--நீங்கள் எல்லோரும் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். வெப்ஸ் சகோதரிகள் எல்லோரும் வாசிப்பார்கள், உன்னுடைய தந்தையைப்போல் அவர்களுடைய தந்தைக்கு அவ்வளவு வருமானம் கிடையாது--உனக்கு வரையத் தெரியுமா?‘
 
இல்லை, தெரியவே தெரியாது.
 
என்ன, யாருக்குமே தெரியாதா?‘
 
ஒருவருக்கும் தெரியாது.
 
இது மிகவும் விநோதமாக இருக்கிறதே. உங்களுக்குக் கற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என நினைக்கிறேன். ஒவ்வொரு வசந்த காலத்திலும் உங்களுடைய தாயார், இவை எல்லாம் கற்றுக் கொள்வதற்கு ஆசிரியர்களைத் தேடி லண்டனுக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.
 
என்னுடைய தாயாருக்கு எவ்வித ஆட்சேபணையும் இருந்திருக்காது, ஆனால் எனது தகப்பனாருக்கு லண்டனைக் கண்டாலே பிடிக்காது.
 
உங்களை கவனித்துக் கொள்ளும் கவர்னஸ் உங்களை விட்டு சென்று விட்டாளா?‘
 
எங்களை கவனித்துக் கொள்ள எந்த கவர்னஸ்ஸும் இருந்தது கிடையாது.
 
கிடையாதா! அது எப்படி முடியும்? ஐந்து பெண்களும் கவனித்துக் கொள்ள பெண்மணி இல்லாமல் வளர்க்கப்பட்டீர்களா! இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட்டதேயில்லை. உங்களைப் படிக்க வைக்க, உங்களுடைய தாயார் ஓர் அடிமைபோல் நடந்து கொண்டிருக்க வேண்டுமே.
 
எலிசபெத்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை, அவ்வாறு இல்லை என அவளுக்கு உறுதியளித்தாள்.
 
பின் யார் உங்களுக்குக் கற்பித்தது? உங்களை யார் கவனித்துக் கொண்டனர்கவர்னஸ் இல்லாமல் நீங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பீர்கள்.
 
சில குடும்பங்களோடு ஒப்பிடும் பொழுது, ஆம். ஆனால் நாங்கள் யார் யார் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினோமோ அவர்களுக்கு வசதிகளுக்கு ஒன்றும் குறையிருந்ததில்லை நாங்கள் எப்பொழுதுமே படிப்பதற்கு ஊக்குவிக்கப்பட்டோம், தேவைப்பட்ட ஆசிரியர்கள் இருந்தனர். சோம்பேறித்தனமாக இருக்க விருப்பப்பட்டவர்கள், அவர்கள் இஷ்டப்படி இருந்தனர்.
 
ஆமாம், சந்தேகமில்லாமல், உங்களை கவனித்துக் கொள்ள கவர்னஸ் இருந்திருந்தால் இதை அனுமதித்திருக்கமாட்டார், எனக்கு உனது தாயாரை தெரிந்திருந்தால், உடனே ஒரு பெண்மணியை அமர்த்திக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தி அறிவுரை வழங்கியிருப்பேன்.உறுதியாக ஒழுங்காக பாடம் நடத்தினால்தான் கல்வி கற்க முடியும். இதை இந்த கவர்னஸை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. நான் பல குடும்பங்களுக்கு இம்மாதிரி பெண்மணிகளை வேலைக்கு அமர்த்தியிருக்கிறேன். ஒரு இளம் வயதுள்ள நல்ல நபரை நல்ல இடத்தில் நல்ல வருமானத்தில் வேலையில் இருத்தி வைப்பது எனக்கு மிக்க சந்தோஷத்தைக் கொடுக்கும். திருமதி. ஜென்கின்ஸனின் நாலு மருமகள்கள் என் மூலமாக மிக சந்தோஷமான இடம் கிடைத்து வேலையில் உள்ளனர், மற்றொரு நாள், என்னிடம் எதேச்சையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு இளம் பெண்ணை நான் சிபாரிசு செய்தேன், அந்த குடும்பம் இப்பொழுது அவளால் மிகவும் சந்தோஷமாக உள்ளனர். திருமதி. காலின்ஸ், நேற்று லேடி மெட்கால்பே நன்றி கூறுவதற்காக என்னைப் பார்க்க வந்தாள் என்று உன்னிடம் சொன்னேனா? மிஸ். போப் ஒரு பொக்கிஷம் என்றாள். லேடி காதரின், நீ எனக்கு ஒரு பொக்கிஷத்தைத் தந்திருக்கிறாய்என்றாள். மிஸ். பென்னட் உன்னுடைய இளைய சகோதரிகளில் எவரேனும் சமூகத்துடன் பழக வெளியே வந்து விட்டனரா? ‘
 
ஆமாம் மேடம், எல்லோருமே
 
எல்லோருமா!--என்ன, ஐந்து பேர்களும் உடனேயே வெளியே வந்து விட்டீர்களா? விநோதமாக இருக்கிறது!--நீ இரண்டாமவள்தான்--மூத்த சகோதரிகளுக்கு திருமணம் நடப்பதற்கு முன்பாகவே இளைய சகோதரிகள் வெளியே வந்துவிட்டனரா!--உன்னுடைய இளைய சகோதரிகள் வயதில் சிறியவர்களாக இருக்க வேண்டுமே?‘
 
ஆமாம், சிறியவளுக்கு பதினாறு வயதாகிறது. ஒருவேளை, அவள் வெளியில் வந்து பழகுவதற்கு வயதில் சிறியவளாக இருக்கலாம். மூத்த சகோதரிகளுக்கு சீக்கிரமாக திருமணம் செய்து கொள்வதற்கு வசதியும் அல்லது மனமும் இல்லாமல் இருக்கலாம், அதற்காக இளையவர்கள் சமூகத்தில் அவர்களுடைய பங்கினையும், சந்தோஷங்களையும் அனுபவிக்கக் கூடாது என்று சொல்வது நியாயமாகாது. இளவயதின் சந்தோஷங்களை அனுபவிக்க முதலில் பிறந்தவருக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை கடைசியாகப் பிறந்தவருக்கும் உண்டு. இதற்காக அவர்களை வீட்டிலேயே தங்க வைத்துக் கொண்டால்!--இது, சகோதரிகள் ஒருவர்மேல் ஒருவருக்கு இருக்கும் பாசத்தையும், மனதின் மென்மையான உணர்வுகளையும் வளர விடாது என நான் நினைக்கிறேன்.
 
அடடா இவ்வளவு சிறியவளாக இருந்து கொண்டு உன்னுடைய அபிப்பிராயங்களை மிக தீர்மானமாகக் கூறுகிறாயே--உன் வயது என்ன?‘
 
மூன்று வளர்ந்த இளைய சகோதரிகள் இருக்கும் பொழுது, நான் அதைச் சொல்வேன் என நீங்கள் எதிர்பார்க்கக் கூடாதுஎன்றாள் எலிசபெத் சிரித்தவாறு.
 
நேரான பதில் கிடைக்காதது லேடி காதரினிற்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்ததுபோல் தோன்றியது; கம்பீரமாக, துடுக்காக, தைரியத்துடன் பரிகாசம் செய்த முதல் நபர் தானாகத்தான் இருக்கும் என எலிசபெத் சந்தேகப்பட்டாள்.
 
உனக்கு வயது இருபதிற்குமேல் இருக்காது என்று எனக்குத் தெரியும்--ஆதலால் நீ உன் வயதை மறைக்க வேண்டாம்.
 
எனக்கு வயது இருபத்தொன்று முடியவில்லை.
 
 தேநீர் விருந்து முடிந்த பிறகு, ஆண்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர், சீட்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. லேடி காதரின், சர் வில்லியம், காலின்ஸ், திருமதி. காலின்ஸ் அனைவரும் சீட்டாட உட்கார்ந்தனர், மிஸ். டீ பர்க் பியானோ வாசிக்க முற்பட்டாள், இரண்டு பெண்களுக்கும் திருமதி. ஜென்கின்ஸனுடன் விளையாடும் பெருமை கிடைத்தது. அவர்கள் மூவரும் அமர்ந்து ஆடியதில் ஒரு முட்டாள்தனம் தெரிந்தது. விளையாட்டைப்பற்றிய பேச்சை தவிர வேறு ஒரு வார்த்தையும் அங்கு பேசப்படவில்லை. மிஸ். டீ பர்கிற்கு மிகவும் சூடாக இருக்கும் என்றோ, அல்லது மிகவும் குளிராக இருக்கும் என்றோ, அல்லது வெளிச்சம் குறைவாகவோ, அதிகமாக இருக்கிறதோ என்ற கவலையை மட்டும் திருமதி. ஜென்கின்ஸன் வெளிப்படுத்தினாள். மற்ற மேசையில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன. மற்ற மூன்று பேர்களுடைய தவற்றை சுட்டிக் காட்டியும், தன்னைப்பற்றிய ஏதோ கதைகளையும் லேடி காதரின் கூறிய வண்ணம் இருந்தாள். லேடி காதரின் கூறிய ஒவ்வொன்றையும் காலின்ஸ் ஆமோதித்த வண்ணம் இருந்தான், ஒவ்வொரு முறை ஜெயிக்கும் பொழுதும் நன்றி கூறினான், அதிகமாக ஜெயித்ததாக நினைத்தால், அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டான். சர் வில்லியம் அதிகம் பேசவில்லை. லேடி காதரின் கூறிய நிகழ்ச்சிகளையும், உயர்ந்தோரின் பெயர்களையும் தன்னுடைய ஞாபகத்தில் இருத்திக் கொண்டிருந்தார்.
 
லேடி காதரினும், அவளது மகளும் தங்களுக்கு திருப்தியளிக்கும்வரை விளையாடி முடித்த பின்பு, சீட்டாட்டம் கலைக்கப்பட்டது. திருமதி. காலின்ஸிற்கு, வீட்டிற்குக் கிளம்ப வண்டி கொடுப்பதாகக் கூறப்பட்டது, அது மிக்க நன்றியுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது, பிறகு உடனே வண்டி வரவழைக்கப்பட்டது. பிறகு அவர்கள், நாளை வானிலை எப்படி இருக்கும் என லேடி காதரின் தீர்மானம் செய்வதைக் கேட்க அடுப்பின் அருகில் குழுமினர். இந்த விவரங்கள் எல்லாம் கூறி முடித்த பிறகு, வண்டி வந்ததினால் எல்லோரும் அதனருகில் அழைக்கப்பட்டனர். காலின்ஸ் பல தடவைகள் தனது நன்றியுரையினை கூற, சர் வில்லியம் பல முறை வணங்க, அவர்கள் கிளம்பினர். வாசலைத் தாண்டிச் சென்றவுடன், ரோஸிங்ஸில் பார்த்தவைகளைப்பற்றிய எலிசபெத்தின் அபிப்பிராயத்தை அவளது சகோதரன் கேட்க, சார்லெட்டிற்காக அவள் உண்மையைவிட சற்று அதிகப்படியாகவே உயர்வாகச் சொன்னாள். ஆனால் அவ்வாறு புகழ்ந்து பேசுவது அவளுக்கு சற்று சங்கடத்தைத் தந்த போதிலும், அது காலின்ஸை எந்த விதத்திலும் திருப்திபடுத்த முடியவில்லை, விரைவிலேயே லேடி காதரினைப் புகழும் பணியினை தன் கையில் எடுத்துக் கொண்டான்.
 
 -----

 



book | by Dr. Radut