Skip to Content

Chapter 04 ஹன்ஸ்போர்டுக்கு எலிசபெத் செல்லுதல்

 

இதைத்தவிர வேறு எந்த பெரிய சம்பவங்களும் லாங்பர்ன் குடும்பத்தில் நடக்கவில்லை. மெரிடன்வரை நடப்பது மட்டுமே சிறிது மாற்றத்தைத் தந்தது. சில நாட்கள் வழியெல்லாம் சேறாகவும், சில நாட்கள் குளிராகவும் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் கழிந்தன. மார்ச் மாதம் எலிசபெத் ஹன்ஸ்போர்டுக்கு கிளம்புவதாக இருந்தது. அங்கு போவதற்கு, முதலில் அவள் அவ்வளவு தீவிரமாக நினைக்கவில்லை. ஆனால் சார்லெட் மிகவும் எதிர்பார்க்கிறாள் என்பதை அறிந்து, தானும் மெதுவாக இப்பிரயாணத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாள், தீர்மானமாகவும் இருந்தாள். பிரிவு, அவளுக்கு சார்லெட்டை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையை அதிகரித்தது. காலின்ஸ் மீதுள்ள வெறுப்பையும் குறைத்தது. தோழமையில்லாத சகோதரிகள் மற்றும் இப்படிப்பட்ட ஒரு தாய் இருக்கும் இல்லத்தில் குறைகள் இல்லாமல் இருக்க முடியாது. அதனால் ஒரு சிறிய மாறுதல் வரவேற்கத்தக்கதாக இருந்தது. இந்த திட்டமும் அருமையான ஒரு திட்டமாகத் தெரிந்தது. மேலும் இப்பயணத்தில் ஜேனையும் எட்டிப் பார்க்கலாம். நாள் நெருங்க நெருங்க எந்தவித தாமதமும் இல்லாமல் இருக்க வேண்டும் என விரும்பினாள். எல்லாம் சுமுகமாக நடந்தேறியது, இறுதியாக சார்லெட் முதலில் திட்டமிட்டபடி பிரயாணம் தீர்மானிக்கப்பட்டது. சர் வில்லியமுடனும், அவரது இரண்டாவது மகளுடனும் அவள் செல்ல முடிவாயிற்று. லண்டனில் ஓர் இரவு தங்க முடிவெடுக்கப்பட்டது. இவ்வாறு இத்திட்டம் சிறந்த ஒரு திட்டமாக விளங்கியது.
 
தனது தந்தையை பிரிந்து செல்வது மட்டுமே அவளுக்கு வேதனையை அளித்தது. போவது எனத் தீர்மானிக்கப்பட்டபின், அவருக்கு அவள் செல்வது பிடிக்கவில்லை. அவர் கண்டிப்பாக அவள் இல்லாததை உணர்வார். தனக்கு கடிதம் எழுதும்படி கேட்டுக் கொண்டார், தானும் அவள் கடிதத்திற்கு பதிலளிப்பதாக ஏறக்குறைய வாக்களித்தார்.
 
அவளுக்கும் விக்காமுக்கும் இடையே நடந்த விடைபெறுதல் மிகுந்த நட்புடன் சிறப்பாக நடந்தது. அவன் அதிக தோழமையுடன் விடை கொடுத்தான். அவனை உணர்ச்சிவசப்படவைத்தவளும், அவனுடைய கவனத்தை கவர்ந்த முதல் பெண்ணும் எலிசபெத்தான். அவன் கூறியவற்றை எல்லாம் செவிமடுத்தவளும் அவள்தான், பரிதாபப்பட்டவளும் அவள்தான், மிகவும் ரசித்த பெண்ணும் அவள்தான் என்பதை தற்பொழுது அவன் இருக்கும் நிலைமை அவனுக்கு ஞாபகப்படுத்திய வண்ணம் இருந்தது. அவளுக்கு விடை கொடுக்கும் பொழுது சந்தோஷமாக எல்லாவற்றையும் அனுபவிக்க வாழ்த்தினான். லேடி காதரின், டீ பர்க் பற்றிய தங்களுடைய அபிப்பிராயமும் மற்ற எல்லோரைப் பற்றிய தங்களுடைய அபிப்பிராயமும் எப்பொழுதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்பது அவனுக்குத் தெரியும் என்பதால் லேடி டீ பர்க்-இடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும் என்பதை ஞாபகப்படுத்தினான். இவ்வாறாக அவன் காட்டிய அக்கறையும் கவனமும் அவளை மிகவும் பாதித்ததால் அவனிடம் மிகுந்த மரியாதையுடன் தான் என்றும் இருக்க வேண்டும் என நினைத்தாள். அவனுக்கு திருமணம் ஆனாலும்சரி, தனியாளாக இருந்தாலும் சரி அவன்தான் இனிமைக்கும், விரும்பத்தக்கவனாக இருப்பதற்கும் முன் உதாரணமாக இருப்பான் என்ற நம்பிக்கையில் அவனை விட்டு பிரிந்தாள்.
 
மறுதினம் அவளுடன் பயணம் செய்தவர்கள், விக்காமையே ஏற்றுக் கொள்ளக் கூடியவனாக நினைக்கவைக்கும் தன்மையுடையவர்கள். சர் வில்லியம் லூகாஸிற்கும், நல்ல பெண்ணாக இருந்தாலும் அவளுடைய தந்தையைப் போலவே முட்டாளாக இருந்த மரியாவிற்கும், சொல்வதற்கு ஒன்றும் இருக்கவில்லை, அவர்களுடைய பேச்சு, குதிரை வண்டியின் சத்தம் என்ன சந்தோஷத்தைக் கொடுத்ததோ அதே சந்தோஷத்தைதான் அளித்தது. அர்த்தமில்லாத பேச்சு பிடிக்கும் என்றாலும் சர் வில்லியம்மை அவளுக்கு நீண்ட காலமாகத் தெரியும் என்பதால் அவருக்கு அவளிடம் தன்னுடைய செயல்பாட்டுத் திறமைபற்றியும் சர் பட்டம் வாங்கியது குறித்தும் புதிதாக சொல்வதற்கு ஒன்றும் இருக்கவில்லை. அவருடைய மரியாதைகளும் அவர் தரும் பழைய தகவல்களைப்போல் தேய்ந்து போயிருந்தன.
 
இருபத்தி நான்கு மைல் பிரயாணம் செய்ய வேண்டி இருந்ததால், கிரேஸ்சர்ச் தெருவை மதியத்திற்குள் அடைந்துவிட வேண்டும் என்பதால் வெகு சீக்கிரமாகவே அவர்கள் கிளம்பினர். திரு. கார்டினர் வீட்டை நோக்கி அவர்கள் வந்து கொண்டிருப்பதை ஜேன் வரவேற்பறையின் ஜன்னலிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் பாதையில் நுழைந்தவுடன், அங்கு அவர்களை சென்று வரவேற்றாள். அவளை ஆவலுடன் பார்த்த எலிசபெத், எப்பொழுதும்போல் அவள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தாள். தங்களுடைய சகோதரியை சந்திக்கும் ஆவலில் வரவேற்பறையில் காத்திருக்க முடியாத சிறுவர் பட்டாளம், மாடிப்படியில் நின்று கொண்டிருந்தனர். பன்னிரெண்டு மாதங்களாக அவளைப் பார்க்காததால் எழுந்த சங்கோஜம் அவர்களை கீழே வரவிடாமல் தடுத்தது. எங்கும் சந்தோஷமும், இன்பமுமாக இருந்தது. காலையில் அவசரமும், கடைக்குப் போவதிலும், மாலை வேளையில் ஒரு அரங்கத்திலுமாக அன்றைய தினம் மிகவும் இனிமையாகக் கழிந்தது.
 
பிறகு அரங்கத்தில் தன்னுடைய அத்தையின் பக்கத்தில் அமர எலிசபெத் முயற்சி செய்தாள். அவளுடைய சகோதரியைப்பற்றி முதலில் பேச ஆரம்பித்தனர். ஜேன், தன்னை உற்சாகமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்தாலும், அவ்வப்போது வருத்தத்திலும் ஆழ்ந்தாள் என்று தன்னுடைய மிக நுணுக்கமான கேள்விகளுக்கு பதில் கிடைத்ததைக் கண்டு ஆச்சரியப்படுவதைவிட மிகவும் வருத்தம்தான் உண்டாயிற்று. ஆனாலும் இது வெகு நாட்களுக்குத் தொடராது என நம்புவது நியாயமாக இருந்தது. மிஸ். பிங்கிலி, கிரேஸ்சர்ச் தெருவிற்கு வந்த விவரங்களைப்பற்றியும் தனக்கும் ஜேனிற்கும் இடையே வெவ்வேறு சமயத்தில் நடக்கும் தொடர்ந்த உரையாடலிலிருந்து ஜேன் இந்த அறிமுகத்தை கைவிட்டு விட்டாள் என்பதை உறுதி செய்கிறது எனவும் திருமதி. கார்டினர் எலிசபெத்திடம் கூறினாள்.
 
ஆனால் எனதருமை எலிசபெத், மிஸ். கிங் எப்படிப்பட்ட பெண்? நமது நண்பன் பணத்திற்கு அலைபவனாக இருந்தால், அதை நினைத்தாலே மனதிற்கு வருத்தமாக இருக்கிறதுஎன்றாள்.
 
எனதருமை அத்தையே, திருமண விஷயங்களில் பணமே குறி என இருப்பதிலும் விவேகமாக நடந்து கொள்வதிலும் என்ன வித்தியாசம் இருக்கிறது என சொல்லுங்கள் பார்க்கலாம். எங்கே பேராசை ஆரம்பிக்கின்றது? போன கிருஸ்துமஸ் சமயத்தில், அவன் என்னை திருமணம் செய்து கொண்டு விடுவானோ அது விவேகமற்ற செயலாக இருக்குமோ என பயந்தீர்கள், இப்பொழுது பத்தாயிரம் பவுன் வருமானமுள்ள பெண்ணை அடைய விரும்பும் பொழுது, அவன் பணத்தாசை பிடித்தவன் என்கிறீர்கள்.
 
மிஸ். கிங் எப்படிப்பட்ட பெண் என்று நீ சொன்னால் மட்டுமே இதைப்பற்றி என்ன நினைக்கலாம் என எனக்குப் புரியும்.
 
அவள் மிகவும் நல்ல பெண் என்று நான் நம்புகிறேன். அவளைப்பற்றி கெடுதலாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
 
அவளுடைய பாட்டனார் இறந்த பிறகு அவருடைய சொத்துக்கு அவள் வாரிசாகும்வரை அவளை, அவன் ஒரு சிறிதும் கவனிக்கவே இல்லையே.
 
இல்லை--ஏன் அவன் அவளை கவனிக்க வேண்டும்என்னிடம் பணம் இல்லை என்பதால், என்னை விரும்புவதற்கு அவனுக்குத் தடை இருந்த பொழுது, அவன் சிறிதும் இலட்சியம் செய்யாத ஒரு பெண்ணை அதுவும் எனக்கு சரியாக ஏழையாக இருந்த ஒரு பெண்ணை காதலிக்க என்ன சந்தர்ப்பம் இருந்திருக்க முடியும்?‘
 
ஆனால் இந்த சம்பவம் முடிந்த பிறகு, உடனே தன்னுடைய கவனத்தை அவள்மேல் திருப்பியதில் ஒரு மிருதுத்தன்மை இல்லை என்றே தோன்றுகிறது.
 
பணம் இல்லாத நிலையில் ஒருவனுக்கு, மற்றவர்களால் கடைப்பிடிக்கப் படலாம் என்கிற இந்த நேர்த்தியான நல்லொழுக்கங்களுக்கு நேரம் இருக்காது. மேலும் அவளுக்கு அதில் எந்த விதமான எதிர்ப்பும் இல்லாத பொழுது நாம் ஏன் அதனை ஆட்சேபிக்க வேண்டும்.
 
அவள் எதிர்க்கவில்லையென்பதால் அவன் செய்வதை நியாயப்படுத்த முடியாது. அறிவிலோ அல்லது உணர்விலோ--அவளிடம் ஏதோ ஒன்றில் குறையிருக்கிறது என்பதை காண்பிக்கின்றது.
 
நல்லதுஎன்ற எலிசபெத் அவன் பொருளாசை உள்ளவன், அவள் ஒரு முட்டாள் என்று எப்படி வேண்டுமானாலும் நீங்கள் நினைத்துக் கொள்ளலாம்.
 
இல்லை, லிசி. நான் அவ்வாறு நினைக்க விரும்பவில்லை. டெர்பிஷயரில் வெகு நாட்களாக வாழ்ந்த ஒரு இளைஞனைப்பற்றி தவறாக நினைக்க எனக்கு வருத்தமாக இருக்கும்.
 
ஓ! அதுதான் விஷயம் என்றால், டெர்பிஷயரில் வசிக்கும் இளைஞர்களைப்பற்றி எனக்கு மோசமான அபிப்பிராயமே உள்ளது. ஹர்ட்போர்ட்ஷயரில் இருக்கும் அவர்களுடைய நெருங்கிய நண்பர்களும் மேம்பட்டவர்கள் இல்லை. எனக்கு எல்லோரையும் நினைத்தாலே வெறுப்பாக இருக்கிறது. நல்ல வேளை! நான் நாளை போகுமிடத்தில், ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நல்ல பண்பும் இல்லாத ஒரு மனிதனை சந்திக்கப் போகிறேன். அவனைப்பற்றி பரிந்துரைப்பதற்கு நன்னடத்தையும் இல்லை, அறிவும் இல்லை. புத்தியில்லாத ஆண்களை அறிந்திருப்பதே நல்லதுதான்.
 
ஜாக்கிரதை லிசி, உன் பேச்சில் ஏமாற்றம் அதிகம் தெரிகிறது.
 
நாடகம் முடிவடைந்து அவர்கள் பிரிவதற்குமுன், கோடையில் ஒரு இன்பச் சுற்றுலா செல்வதற்காக திட்டமிட்டிருந்த அவளது மாமாவுடனும், அத்தையுடனும் செல்ல எதிர்பாராமல் கிடைத்த அழைப்பு அவளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
 
எதுவரை பயணம் செய்வோம் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஒருவேளை லேக்ஸ்வரை செல்வோம்என்றாள் திருமதி. கார்டினர்.
 
வேறெந்த திட்டமும் எலிசபெத்திற்கு இந்த அளவிற்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்காது. அதனால் அவள் உடனேயே அழைப்பினை நன்றியுடன் ஏற்றுக் கொண்டாள். எனதருமை அத்தையேஎன்று சந்தோஷத்துடன் கூவிய அவள் என்ன ஒரு சந்தோஷம்! என்ன ஒரு ஆனந்தம்! நீங்கள் எனக்கு புத்துணர்ச்சியும் உற்சாகமும் அளிக்கின்றீர்கள். ஏமாற்றத்திற்கும், வெறுப்புக்கும் விடை கொடுக்கலாம். பாறைகளுக்கும், மலைகளுக்கும் முன் மனிதன் ஒரு விஷயமே அல்ல. ஓ! எவ்வளவு மணிநேரம் இந்த சந்தோஷப் பிரயாணம்! நாம் திரும்பி வந்த பிறகு, எதைப்பற்றியும் ஒரு சரியான விவரமும் சொல்லத் தெரியாத மற்றவர்களைப்போல் இருக்க மாட்டோம். நாம் எங்கு சென்றோம் என்று நமக்குத் தெரிந்திருக்கும்--நாம் என்னென்ன பார்த்தோம் என்பதனை நினைவுகூற முடியும். ஏரிகள், மலைகள், ஆறுகள்--இவை எல்லாம் நமது கற்பனைகளில் ஒன்றோடு ஒன்று கலந்துவிட முடியாது. குறிப்பாக ஏதாவது ஒரு காட்சியை விவரிக்க முயலும் பொழுது, அது சம்பந்தப்பட்ட நிலையை குறித்து எந்த விவாதமும் நம்முள் எழாது. மற்ற பயணிகளின் பயணக் குறிப்புகள் சகிக்க முடியாததாக இருக்கும். அதில் காணும் பொதுத்தன்மையைவிட நம்முடைய முதல் உணர்ச்சி வெளிப்பாடுகள் நேர்த்தியாக இருக்கட்டும்.
---

 



book | by Dr. Radut